Pages

Sunday, September 19, 2021

ஃபிரான்சிஸ் கிருபா.


https://www.facebook.com/kaliya.murthy.92/posts/1765934730333445
தெரிந்தோ தெரியாமலோ உன் காலடி மண்ணெடுத்து ஒரு பூமி செய்துவிட்டேன்
உன் ஈரக்கூந்தலை கடலாகச் செய்யுமுன்னே கடந்து போய்விட்டாய்
உயரத்திலிருந்து சூரியனாய் வருத்துகிறது ஒற்றைப்பார்வை
வெப்பத்தில் வறள்கிறது எனது சின்னஞ்சிறிய பூமி
நீரூற்று தேடிக் கிணறுகள் தோண்டினால்
பீறிட்டடிக்கிறது ரத்தம். கண்ணே,
இரண்டொரு தீர்த்தமணிகளைத் தானமிடு.


- "கன்னி "நாவலில், ஃபிரான்சிஸ்கிருபா.


இருள் வெடித்து அடிவானில் வெளிச்சம் பட்டை பட்டையாக உரிய ஆரம்பித்த போது கடலின் குணம் முற்றிலும் மாறிவிட்டது. அது விரோதியைப் கண்டதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டது. நீர்ப்பரப்பு மீது பொன்பட்டு தகதகத்தது. இரவெல்லாம் கூடிக் குடித்துவிட்டு விடிந்ததும் யார் நீ என்று விசாரிக்கிற தடுமாற்றமான குடிகாரனின் நடவடிக்கைக்கும் அதற்கும் பேதமொன்றும் பெரிதாக இல்லை. கண்ணுக்கெட்டும் தொலைவில் கட்டிடங்களோ மனிதர்களோ தென்பபடவில்லை. கடலைத் தவிர மற்றதெல்லாம் பொட்டல் வெளியாகப் பட்டிருந்தது. கடலின் திடீர் செருக்குக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறதோ என்னவோ!


24 May · 


'மழை வந்திருக்குமோ, மழை வருகிறதே என்று அவள் வானத்தை முகம் நிமிர்த்தி பார்த்திருப்பாளோ, அப்போது மழையின் முதற் துளி நெற்றிப் பொட்டில் விழுந்திருக்குமோ, 'ஐயோ இவள் நனைந்து போவாளே, துளிகளின் தொடர் தெரிப்பில் உடல் கன்றிப் போவாளே என்று இந்த முதற் துளி அலறிக் குரல் கொடுத்திருக்குமோ, அதைக் கேட்டு வானம் இரக்கப்பட்டு ஒரு துளியோடு மழை பொழிவதை நிறுத்தியிருக்குமோ, ஒரு முழு மழையின் ஏக்கத்தை இந்தத் தனித்துளி தாங்கி நிற்கிறதோ...'


26 April · 


கண்ணீர் துளிகளும் அவனை விட்டு விலகி ஓடுவதில் அவசரம் காட்டியதும் அழுவதை சட்டென்று நிறுத்தி விட்டான்.





19 April · 


எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் எல்லாம் அந்த ஸ்டுடியோவில் ஃபோட்டோ எடுத்திருந்தார்கள். நிறைய அக்காக்களின் அழகழகான படங்களும் இருந்தன. இவர்களும் சினிமாவில் நடிப்பார்களாயிருக்கும். பெயர் தெரியவில்லை. எடுத்த ஃபோட்டோவை எதற்காக வந்து வாங்கிக் கொண்டு போகவில்லை என்று யோசித்தான். காசு தட்டுப்பாடோ என்னவோ.

ஏசு சாமி ஃபோட்டோ எடுத்தபோது அவர் நெஞ்சுக்குள் பந்தாக திரண்டு எறிந்து கொண்டிருந்த பரிசுத்த ஆவி நெருப்பாக ஃபோட்டோவில் வந்துவிட்டது. அதுபோல பாண்டி வயிற்றுக்குள் குழைந்திருந்த பூரி கிழங்கும் வடையும் ஃபோட்டோவில் வந்து விடுமோ என்று அஞ்சினான். அவன் அஞ்சியபடி நடக்கவில்லை. அது ஒருவகையில் ஆறுதலாக இருந்தது.


15 April · 


சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சியின் செயல் தான் மீண்டும் கோபமூட்டியது. அது தன் வண்ணச் சிறகுகளைக் குவித்து வானத்தைப் பார்த்து கடவுளை நோக்கி கள்ளத் தனமாக பிராத்தனையில் ஈடுபட்டது, 'என் தேவனே, சர்வ வல்லமை படைத்தவறே! எந்த மனிதன் என்னை எங்கிருந்து துரத்தியடித்தானோ, அவனை நீர் அங்கிருந்து துரத்தியடிக்க வேண்டுகிறேன். அந்த வலிய மிருகத்திடமிருந்து இந்த எளிய ஜீவனைக் காப்பீராக' என்று அது மனசுக்குள் ரகசியமாக மீண்டும் மீண்டும் ஜெபித்துக்கொண்டிருந்தது. அதன் சிறகுகள் பயபக்தியோடு குவிவது வெளிப்படையாகத் தெரிந்து, அவனுக்குள் வெறி பற்றிக்கொண்டது. கோபத்தில் எரித்து விடுவது போல பூச்சியை உக்கிரமாகப் பார்த்தான். அது பிராத்தனையை நிறுத்தவே இல்லை. கடைசியில் அவன் கொலை வெறியோடு பூச்சியை நோக்கிப் பாய்ந்தான். அது தப்பித்தெழுந்து அங்குமிங்கும் பறந்தது. விடுவதாக இல்லை அவன். பூச்சியைத் துரத்திக்கொண்டு ஓடினான்.



சிறகுகளை விரித்து மிதக்கும்போது பறவைகளுக்கு வாய்க்கிறது வில்வடிவம். அம்புகளுக்கு பதில் வில்லே பாய்ந்து செல்லும் அற்புதம்.

11 April · 

கலைந்து பறக்கும் கூந்தலுக்கு ஒரு கிளிப் வாங்கி மாட்டி காற்றை ஏமாற்றினாள்.

10 April · 

அக்காவின் அருகில் சென்று அவள் முறை வருவதற்கு சற்று முன்பு காதோரம் நெருங்கி தாழ்ந்த குரலில் கேட்டான். "எக்கா, உங் கூட போட்டாவுல நானும் நிக்கட்டா?"

"ம்ஹூம். நான் மட்டும்தான் நிக்கனும்" தணிந்த குரலில் கறாராக மறுத்துவிட்டாள்.

தேவாலயத்தின் கூரையிடிந்து பாண்டி தலையில் மட்டும் விழுந்தது. வலியில் துடித்தான். நெஞ்சு விம்மி கனத்தது. அங்கேயே முழந்தாளிட்டு 'கடவுளே இந்த போட்டோ மிஷின் இப்போதே பணாலாகிப் போக வேண்டுமென்று' பிராத்தனை செய்ய ஒரு வேகம் பொங்கி வந்தது. ஆனால் பாண்டியால் அப்படி நினைக்க முடியவில்லை. அக்காவைப் படமெடுக்க வேண்டுமே.


10 April · 

திண்ணமாகத் தேர் வடம் போல் பிசிறின்றிப் பின்னப்பட்ட கரிய சடையை எடுத்து வானத்தில் வீசினாள். அது 'ம்கூம் நான் போகமாட்டேன்' என்று அவள் முதுகில் போய் அணைந்தது.

9 April · 

ப்யூரிட்டிக்கு ஒரு பவர் இருக்கு, எல்லா விதத்திலயும். வணங்கித் தான் ஆகணும். வேற வழியேயில்லை - குறிப்பா ஆண்களுக்கு.
- அமலா அக்கா


Saturday, 11 October 2014

கன்னி - ஜெ.பிரான்சிஸ் கிருபா

யாரேனும் நீ படித்த நாவல்களில் பிடித்த நாவல்  சிலவற்றை சொல் என்றால் நாலைந்து நாவல் பெயர்களைச் சொல்லுவேன். இனி யாரேனும் என்னிடம் கேட்டால் முதலில் சொல்வது ‘பிரான்சிஸ் கிருபாவின் கன்னி’ நாவலாகத் தான் இருக்கும். வேறு எவரின் எந்த வித சாயலும் இல்லாமல் கிருபாவுக்கென்றே  பிரத்யேகமான நடையில் கன்னி நாவலை குழந்தையைப் பத்து மாதம் ஒரு தாய் கருவில் சுமப்பது போல சுமந்து பெற்றெடுத்திருக்கிறார். இந்த நாவலைப் பற்றிய வாசிப்பு அனுபவம் எழுதுவது அவ்வளவு சுலபமாக எனக்குப் படவில்லை. குறைந்தது நூறு பக்கமாவது எழுத வேண்டி வரும். அது போக வார்த்தைகளில் எழுதிச் சொல்வதை விட அதை நீங்கள் படித்து உணர்வதே சரியாக இருக்கும் என்று தோன்றியதால், இந்த நாவலில் நான் ரசித்த பல வரிகளில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறேன். இதைப் படித்ததும் இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்ற ஆசை உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் இனி நான் வாசிப்பதையே நிறுத்திக் கொள்கிறேன்.



தன் ஆசை நாயகின் மீது விழும் முதற் மழைத் துளியினை வர்ணிக்கிறார்.

'மழை வந்திருக்குமோ, மழை வருகிறதே என்று அவள் வானத்தை முகம் நிமிர்த்தி பார்த்திருப்பாளோ, அப்போது மழையின் முதற் துளி நெற்றிப் பொட்டில் விழுந்திருக்குமோ, 'ஐயோ இவள் நனைந்து போவாளே, துளிகளின் தொடர் தெரிப்பில் உடல் கன்றிப் போவாளே என்று இந்த முதற் துளி அலறிக் குரல் கொடுத்திருக்குமோ, அதைக் கேட்டு வானம் இரக்கப்பட்டு ஒரு துளியோடு மழை பொழிவதை நிறுத்தியிருக்குமோ, ஒரு முழு மழையின் ஏக்கத்தை இந்தத் தனித்துளி தாங்கி நிற்கிறதோ...'

காதலியின் மீது அமர்ந்த வண்ணத்துப்பூச்சியின் துரத்திவிடுகிறான் பாண்டி. அந்த வண்ணத்துப்ப்பூச்சியின் செய்கையை இதை விட அழகாக யாரேனும் சொல்ல முடியுமா என்ன?!

சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த வண்ணத்துப்பூச்சியின் செயல் தான் மீண்டும் கோபமூட்டியது. அது தன் வண்ணச் சிறகுகளைக் குவித்து வானத்தைப் பார்த்து கடவுளை நோக்கி கள்ளத் தனமாக பிராத்தனையில் ஈடுபட்டது, 'என் தேவனே, சர்வ வல்லமை படைத்தவறே! எந்த மனிதன் என்னை எங்கிருந்து துரத்தியடித்தானோ, அவனை நீர் அங்கிருந்து துரத்தியடிக்க வேண்டுகிறேன். அந்த வலிய மிருகத்திடமிருந்து இந்த எளிய ஜீவனைக் காப்பீராக' என்று அது மனசுக்குள் ரகசியமாக மீண்டும் மீண்டும் ஜெபித்துக்கொண்டிருந்தது. அதன் சிறகுகள் பயபக்தியோடு குவிவது வெளிப்படையாகத் தெரிந்து, அவனுக்குள் வெறி பற்றிக்கொண்டது. கோபத்தில் எரித்து விடுவது போல பூச்சியை உக்கிரமாகப் பார்த்தான். அது பிராத்தனையை நிறுத்தவே இல்லை. கடைசியில் அவன் கொலை வெறியோடு பூச்சியை நோக்கிப் பாய்ந்தான். அது தப்பித்தெழுந்து அங்குமிங்கும் பறந்தது. விடுவதாக இல்லை அவன். பூச்சியைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

கடலைப் பற்றி…!

இருள் வெடித்து அடிவானில் வெளிச்சம் பட்டை பட்டையாக உரிய ஆரம்பித்த போது கடலின் குணம் முற்றிலும் மாறிவிட்டது. அது விரோதியைப் கண்டதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டது. நீர்ப்பரப்பு மீது பொன்பட்டு தகதகத்தது. இரவெல்லாம் கூடிக் குடித்துவிட்டு விடிந்ததும் யார் நீ என்று விசாரிக்கிற தடுமாற்றமான குடிகாரனின் நடவடிக்கைக்கும் அதற்கும் பேதமொன்றும் பெரிதாக இல்லை. கண்ணுக்கெட்டும் தொலைவில் கட்டிடங்களோ மனிதர்களோ தென்பபடவில்லை. கடலைத் தவிர மற்றதெல்லாம் பொட்டல் வெளியாகப் பட்டிருந்தது. கடலின் திடீர் செருக்குக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறதோ என்னவோ!

மனநலம் பாதிக்கப் பட்ட பாண்டி மண்ணுக்குள் புதைந்து போவது போல கற்பனை செய்கிறான்.

முதலில் சுவாசிக்க காற்றில்லாமல் திணறல் ஏற்பட்டது. பிறகு சிறுகச் சிறுக மண்ணை சுவாசிக்கப் பழகிக் கொண்டான். மண்துகள்கள் நுரையீரலில் நிரம்பி நாசி வழியே வெளியேறின. மேகங்களை விளக்கிக்கொண்டு சூரியன் நம்ப முடியாத இக்காட்சியை எட்டிப்பார்த்தது. முற்றிலும் புதைய ஒரே ஒரு கணம் மீதமிருந்தபோது அவன் உள்ளங்கால்களில் மஞ்சள் வெயில் கடைசி முத்தத்தைப் பதித்தது. அவனையே வியப்போடு பார்த்துக்கொண்டு போனது சூரியன். அஸ்தமான விளிம்புக் கோட்டில் அவசரத்தில் முட்டி தலை பிளந்து தொடுவானில் சூரியனின் ரத்தம் பரவிப் பெருகி வந்தது.

சிறுவயதில் புகைப்படம் எடுக்க செல்லும் பாண்டியின் மனவோட்டம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் எல்லாம் அந்த ஸ்டுடியோவில் ஃபோட்டோ எடுத்திருந்தார்கள். நிறைய அக்காக்களின் அழகழகான படங்களும் இருந்தன. இவர்களும் சினிமாவில் நடிப்பார்களாயிருக்கும். பெயர் தெரியவில்லை. எடுத்த ஃபோட்டோவை எதற்காக வந்து வாங்கிக் கொண்டு போகவில்லை என்று யோசித்தான். காசு தட்டுப்பாடோ என்னவோ.

ஏசு சாமி ஃபோட்டோ எடுத்தபோது அவர் நெஞ்சுக்குள் பந்தாக திரண்டு எறிந்து கொண்டிருந்த பரிசுத்த ஆவி நெருப்பாக ஃபோட்டோவில் வந்துவிட்டது. அதுபோல பாண்டி வயிற்றுக்குள் குழைந்திருந்த பூரி கிழங்கும் வடையும் ஃபோட்டோவில் வந்து விடுமோ என்று அஞ்சினான். அவன் அஞ்சியபடி நடக்கவில்லை. அது ஒருவகையில் ஆறுதலாக இருந்தது.

குட்டி குட்டியா ரசிச்ச பல இடங்களில் சில.

காப்பியும் அம்மாவும் பாண்டிக்காகக் காத்திருந்தார்கள்.

விஷயம் வெளித்தெறிந்ததும் மக்களில் ஊமைகளைத் தவிர மற்றெல்லோரும் வாய் நோக சபித்தார்கள்.

வேப்பிலைச் சாந்தில் சிறு நெல்லியளவு உருட்டி கையில் எடுத்த பாட்டி ‘ஆ...’ காட்டச் சொன்னாள். அவள் வாயிலும் ‘ஆ’ இருந்தது.

கண்ணீர் துளிகளும் அவனை விட்டு விலகி ஓடுவதில் அவசரம் காட்டியதும் அழுவதை சட்டென்று நிறுத்தி விட்டான்.

சின்னப் பொன்னான அவளும் குட்டி சுடிதார் போட்டிருக்கிறாள். அது சுமாராகத் தான் இருந்தது. ஏன்னா, அவளுக்கு நக்கல் ஜாஸ்தி.

கபடி, கள்ளன் போலீஸ், ஐஸ் ஃபால் ரெடி, பிள்ளையார் பந்து, கிளியான் தட்டு, பாண்டி, தட்டாமாலை எல்லாம் கிரிக்கெட் வந்ததும் பெண்கள் விளையாட்டாகிவிட்டது.

ரேடியோ பாடினால் எஸ்.பி.பி, ஜானகி, ஏசுதாஸ் என்று யாரையும் விடாது. குறைத்து விரட்டிவிடும்.

யாராவது பாசத்தோடு ‘ஜிம்மி ஜிம்மி’ என்றழைத்தால் ‘ஆமா… அம்மியும்… ஆட்டு உரலும்…’’ என்று பாட்டி முணுமுணுக்கத் தவரமாட்டாள்.

அவன் சோகமடைந்ததும்  ஜிம்மியும் சோகமாகிவிட்டது. அதன் கண்கள் ‘என்ன என்ன’வென்றன. கட்டளையிட்டால் ஸ்கூலுக்குப் போய் ஜிம்மியே பரிட்சை எழுதி அவனை பாசாக்கி விடுவது போல் பாசத்துடன் சுற்றிவந்தது.

நேரடி சந்திப்புகளில் அவள் வாய் தான் பேசியது, எழுத்தில் அவள் இதயம் ஒலித்தது.

கலைந்து பறக்கும் கூந்தளுக்கு ஒரு க்ளிப் வாங்கி மாட்டி காற்றை ஏமாற்றினாள்.

ரத்தபந்தகளுக்கு ஒரு அர்த்தமும் இல்லை. அன்பு தன்னியல்பா வரணும்.

சற்றேறக்குறைய அது ஒரு காதல் கடிதத்தின் குறை பிரசவம் போலிருந்தது. சிசுக் கொலை போல அதை கிழித்துப் போட்டுவிட்டு தெளிவடைய நாட்கள் பிடித்தன.

இதில் குறிப்பிட்டிருந்த வரிகள் அனைத்தும் மொத்த நாவலில் ஒரு 30% தான். பிடித்த வரிகளை அடிக்கோடிடுவது என் வழக்கம். இந்த நாவலில் அடிக்கோடிடாத வரிகளைத் தான் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. கவித்துவமான நடை! உணர்ச்சிகளைத் திணிக்காமல் கதையின் போக்கிலேயே நம்மால் எளிதாக உணர முடியும். ஆனால் புதிதாக வாசிப்பவர்களுக்கு இந்த நாவல் உகந்ததா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. என்னை மிகவும் கவர்ந்தது மனநலம் பாதிக்கப்பட்டவனின் உலகத்தைக் காட்டியிருப்பது. அது கற்பனையின் உச்சம்!

தீக்குள் 
விரலை வைத்த 
காதல் இன்பம் 
இப்புதினம்

கன்னி
ஜெ.பிரான்சிஸ் கிருபா
தமிழினி பதிப்பகம்
விலை ரூ 250/-



-த.ராஜன்

Karthigai Pandian M reacted to this.

Add Friend


த.ராஜன் shared Elangovan Muthiah's photo.
Yesterday at 09:04 ·



~ நேசத்திற்குத் தன் மனதை முழுதாக ஒப்புக் கொடுத்துவிட்டு பின் மீண்டெழும் வழியையும் தொலைத்துவிட்ட ஒருவனைப் பற்றிய கதைதான் பிரான்சிஸ் கிருபாவின் 'கன்னி' ~


Elangovan Muthiah with த.ராஜன்.
Yesterday at 08:16 ·



மழை கொட்டித் தீர்த்த ஒரு விடுமுறை நாளின் மதியத்தில் அறை வாசலின் படிக்களில் அமர்ந்திருந்தேன். அலை பேசி வழி முடிவின்றி நீண்டு கொண்டிருந்தது ஒரு உரையாடல். அரை மணிக்கொரு முறை அறைக்குள்ளிருந்து வெளிவந்து என் முகம் பார்த்துக் கண்களால் கேள்வி கேட்ட நண்பனுக்கு உதடுகளைப் பிதுக்கி, இன்னும் இல்லை எனப் பதிலளித்துக் கொண்டிருந்தேன். ஒரு உறவு செல்லும் பாதையைத் தீர்மானித்துக் கொண்டிருந்தது அந்த அழைப்பு.


பேசி முடித்து அலைபேசியை அணைத்து வைத்த போது, என் முகம் பார்த்து, தோல்வியா? என்பது போல ஆறுதலாய் அணைத்துக் கொள்ள வந்தவனிடம், ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பின், அந்த உறவு நான் எதிர்பார்த்த திசையிலேயே நகர்வதைக் கூறினேன். பிறகு ஏன்? என்பதுபோல ஆச்சரியமாய்ப் பார்த்தவனிடம், உறவுகளின் ஆரம்பத்தில் இருக்கும் உச்ச கட்ட மகிழ்ச்சி, அடுத்தடுத்து கொண்டு சென்று நிறுத்தும் முட்டுச் சந்துகளையும், அதனால் விளையும் மன, உறவுச் சிக்கல்களையும் விவரித்த போது, ”அப்ப, நீ வேணாம்னு சொல்லிட்டியா?” என்றான் வேகமாக.

“வேணாம்னு சொல்ல எனக்கு என்ன லூஸாடா பிடிச்சிருக்கு?” என்றபோது, வித்தியாசமாய்ப் பார்த்துக்கொண்டே தலையிலடித்துக் கொண்டான். நான் எப்பொழுதுமே அப்படித்தான்....

உறவுகளின் ஆரம்பக் கட்ட கிளர்ச்சிகள் மனதின் அடியாழத்திற்குச் சென்று மகிழ்ச்சியைப் பெருக்கெடுக்க வைத்தாலும், எப்பொழுதும் அடுத்த கட்டத்தை நோக்கியே சிந்தித்துக் கொண்டிருக்கும் மனவார்ப்பை வளர்த்துக் கொண்டிருந்ததால், எதையும், யாரையும் எப்பொழுதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடியதில்லை. ஒரு வகையில் உறவுகள் பிரிந்து செல்லும் போதும் இதே மன வார்ப்புதான் நான் முற்றிலும் உடைந்து போகாமல், என் மனதையும், என்னைப் பிரிந்து செல்ல விழையும் மனதையும் புண்படுத்திப் பார்க்காமல், அதே நேரம் சுயத்தையும் இழக்காமல் நிகழ்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் கொடுத்திருக்கிறது. இம்மனநிலையே என் வரமும் சாபமுமாய் இன்றுவரை கூடவே இருக்கிறது.

விதிகள் எழுதப்படும்போதே விலக்குகளும் எழுதப்பட்டுவிடுவதுதான் வாழ்வெனும் விளையாட்டின் சுவாரசியம் இல்லையா? வாழ்வின் எதேச்சையான ஒரு திருப்பத்தில் சட்டென்று தோன்றி, எதிர்பாரா உயரங்களுக்கு கைப் பிடித்துக் கூட்டிச் சென்று, உறவுகளின் உச்ச உயரத்தின் மகிழ்வில் மனம் மூழ்கித் திளைத்திருந்த போது, திடீரெனத் தரையில் இறக்கிவிட்டுப் பிரிந்து சென்றது.... நான் வாசிக்கக் கிடைத்த தேவதைக் கதையில் நடந்ததாக இருந்திருக்கலாம்.

ஆனால் ரத்தமும் சதையுமாக, கண்முன்னால் வழியனுப்பவது ஒன்றைத் தவிர வேறு வழியில்லாமல் நின்றிருந்த ஒரு அதிகாலைப் பொழுது, மொத்தமாய் அதுவரை சேர்த்து வைத்திருந்த அகங்காரம் மொத்தத்தையும் அழித்து விட்டே விடிந்தது.

மீண்டெழுவது என்றெல்லாம் ஒன்றுமில்லை. நேசிக்கும் மனதிற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தபின், வீழ்வதும், வீழ்த்தப்படுவதும் தோல்வியா என்ன?

அப்படி, நேசத்திற்குத் தன் மனதை முழுதாக ஒப்புக் கொடுத்தவிட்டுப் பின் மீண்டெழும் வழியையும் தொலைத்துவிட்ட ஒருவனைப் பற்றிய கதைதான் பிரான்சிஸ் கிருபாவின் கன்னி.

அதிர்ஷ்டவசமாய், பிரான்சிஸ் சந்தன பாண்டியிடமிருந்து ஒரு சிறு புள்ளியில் மட்டுமே வேறு பட்டுத் தப்பிப் பிழைத்ததால் இதை இங்கு எழுதிக் கொண்டிருக்கும் நபர் நானாகவும் வாசிப்பது நீங்களாகவும் இருக்கிறோம். இல்லையேல் இங்கு எல்லாருமே சந்தன பாண்டிகள் தான்.

மனம் மயங்கி, பின் மதி மயங்கிய சந்தனப் பாண்டி சுற்றிச் சுழற்றிவிட்டிருக்கும் சுழலுக்குள்ளிருந்து வெளிவரவே பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும் போல. செய்யவும் வேண்டுமா? எனக் கேட்க வைப்பதுதான் கன்னியின் சாதனை.

என்னைப் பொருத்த வரை, தமிழின் முக்கியமான, கொண்டாடப்பட வேண்டிய, ஆனால் அதிகம் கவனிக்கப் படாத ஒரு நாவலெனக் கன்னியைச் சொல்லுவேன். ஆழ்ந்த வாசிப்பும், மீள் வாசிப்பும் தேவைப்படும் அளவிற்குச் செறிவான எழுத்தில் அசரடிக்கிறது கன்னி.

A mesmerizing story. Don't miss it.


http://www.kalachuvadu.com/issue-83/special02.asp

தமிழ் வாழ்வில் காதல்: நவீனத் தமிழ்க் கவிதைகள்
அறுபதாயிரம் காதல் கவிதைகளும்
உதிரியான சில குறிப்புகளும்
சுகுமாரன்

பின்வரும் கணக்கெடுப்பு தோராயமானது; ஆனால் ஓரளவுக்கு நம்பகமானது - நதியின் நீரோட்டத்தை வைத்து எங்கோ கன மழை பெய்திருக்கிறது என்று முடிவுசெய்வதைப் போல.
தமிழில் வெளியாகும் புத்தகங்களில் கணிசமானவை கவிதைத் தொகுப்புகளே. சிறு, நடு, பெரும் பத்திரிகைகளின் மதிப்புரை, புதிய புத்தகங்கள் அறிமுகம், வரப்பெற்றோம் என்னும் ஒற்றை வரித் தகவல்கள், விளம்பரம் ஆகிய பகுதிகளை அடிப்படையாக வைத்துக் கணக்கிட்டால் மாதத்துக்குச் சராசரி இருபது கவிதை நூல்கள் வெளியாகின்றன. ஒரு தொகுப்பில் குறைந்தபட்சம் ஐந்து கவிதைகளாவது காதலைப் பற்றிப் பேசுவனவாக இருக்கின்றன. இவை தவிரக் காதலில் கசிந்துருகுவதையே கவிப் பொருளாகக் கொண்டிருக்கும் தனித் தொகுப்புகள் வேறு. தற்காலிகமாக அவற்றை விலக்கிவைத்துப் பார்த்தால் ஒரு மாதத்துக்குச் சுமார் நூறு காதல் கவிதைகள். ஆண்டுக்கு ஆயிரத்து இருநூறு கவிதைகளாகின்றன. இன்று கவிதை பெற்றிருக்கும் ஜனநாயக வடிவமே இந்த அமோக மலர்ச்சிக்கான சுதந்திரத்தைத் தந்திருக்கிறது என்பதும் கவனத்துக்குரியது.
1934இல் வெளிவந்த ந. பிச்சமூர்த்தியின் கவிதையிலிருந்தே புதுக்கவிதை வரலாறு தொடங்குவதாக விமர்சன மரபு வரையறுக்கிறது. அதை ஏற்றுக்கொள்வோமெனில் நவீனக் கவிதை எழுபதாண்டுகளைக் கடந்திருக்கிறது என்பது உறுதி. இந்த எழுபது ஆண்டுகளில் புதுக்கவிதைமீதுள்ள ஒவ்வாமை காரணமாக இருபது ஆண்டுகள் கணிசமான எண்ணிக்கையில் கவிதைகள் வெளிவரவில்லை என்று ஊகிக்கலாம். ஆக, ஐம்பது ஆண்டுகள். ஆண்டுக்கு ஆயிரத்து இருநூறு மேனியில் கிட்டத்தட்ட அறுபதாயிரம் காதல் கவிதைகள் வெளி வந்திருக்கின்றன என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதுக்கவிதை வடிவில் பிச்சமூர்த்தி அச்சியற்றிய முதல் கவிதையின் தலைப்பு 'காதல்' என்பது தற்செயலானதல்ல என்றும் வரலாறு நிர்ணயித்த போக்கு என்றும் நம்புவது வியப்புக்குரியதாகாது. இந்த அடிப்படையில் இன்று கவிதையெழுதும், குறிப்பாகக் காதல் கவிதை எழுதும், இளங்கவிஞன் மாபெரும் வரலாற்றுக்கு உடமையாளனாகவும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுபவனாகவும் ஆகிறான்.

இன்னொரு கோணத்திலும் இதை வியாக்கியானம் செய்யலாம். வாழ்க்கையின் நடைமுறைகளை அகம், புறம் என்று பகுத்துவைத்திருக்கும் மரபில் இந்த அபாரப் பெருக்கம் நீர்போல அநாதியானது; சரளமானது. ஆனால், சமகாலத் தமிழ் வாழ்க்கையில் காதல் இந்த அளவுக்கு எளிமையானதா என்னும் கேள்விக்குப் பதில் காண்பது சிக்கலானது. ஓர் அர்த்தத்தில் உலகியல் தளத்தில் நிறை வேற்றிக்கொள்ள முடியாத உணர்வை உளவியல் தளத்தில் பூர்த்திசெய்துகொள்ள மனித மனத்தை அனுமதிப்பதும் இலக்கியத்தின் கடமைகளில் ஒன்றுதானே?

இந்தச் சுய நிறைவேற்றம்தான் எல்லா மொழிகளிலும் காதல் கவிதைகளின் அதீதப் பெருக்கத்தைச் சாதாரணமாக்குகிறது என்று கருதுகிறேன். இந்த மனநிறைவு இல்லாத வாழ்க்கை கற்பனைக்கு அப்பாற்பட்டது. சக உயிருடன் உறவில்லாத நடவடிக்கை இயற்கைக்கு முரணானது. வாழ்க்கையில் காதல் வகிக்கும் பங்கு இதுவாகலாம். நேரடி அனுபவம் இல்லாமலே கைகூடக் கூடிய சிறப்புத் தன்மை பொருந்திய உணர்வு காதல் மட்டுமே. பசியுணர்வை உணவைத் தவிர வேறு எதனாலும் ஆற்ற முடியாது. ஆனால், காதல் பற்றிய கற்பனையை மென்றுகொண்டே அந்த உணர்வின் ஏகதேச நிலையை அடைந்துவிட முடியும். வாழ்நிலை அனுமதிக்கும் சலுகை இது என்று கொள்ளலாம். அதே சலுகையை இலக்கியமும் அனுமதிக்கிறது. குறிப்பாகத் தமிழ்க் கவிதை மரபு. அகத் துறை முன்னுதாரணங்களை அடியொற்றியே கூடப் புதிய கவிதையை எழுதிவிட முடியும். துறவிகளும் பெண்ணை உதாசீனப்படுத்திய சித்தர்களும் காதல் ததும்பி வழியும் கவிதைகளை எழுத இந்த விரிவான மரபுதான் இடமளித்திருக்கிறது. இது தொடர்பான மேலதிக விவாதத்தைக் கவிதையை ஆழமாகவும் அகலமாகவும் அலசும் திறனாய்வாளர்களிடம் விட்டு விடுவதே நல்லது.

எத்தனை முறை எழுதினாலும் எத்தனை விதமாக வெளிப்படுத்தினாலும் அலுப்புத் தட்டாத உணர்வாகக் கருதப்படுகிறது காதல். காதலையும் கவிதையையும் பற்றி யோசிக்கும்போது உடனடியாக நினைவில் படரும் குறுந்தொகைப் பாடல் ஒன்று உண்டு. பரணர் இயற்றியது. 'ஊர் மக்கள் நீரெடுக்கும் குளத்திலுள்ள பாசி போன்றது பசலை. காதலன் தொடும்போதெல்லாம் விலகி, விடும்போதெல்லாம் பரவிக்கொண்டிருக்கிறது' என்ற பொருளில் வரும் பாடலின் சில சொற்களை மாற்றினால் காதல், கவிதை இரண்டின் காலாதீதத் தன்மையை (நன்றி - பிரமிள்) விளக்கிவிடமுடியும்.

n
காலப் புழக்கத்தில் ஒற்றைப் பொருள் கொண்டனவாக மாறிய சொற்களில் காதலும் ஒன்று. வெவ்வேறு அர்த்தங்களைத் தருவதாக இருந்த இந்தச் சொல்லுக்கு இன்றைய பயன்பாட்டில் ஆண்-பெண் விழைவு என்பதாக மட்டுமே பொருள் காண முடிகிறது. தமிழில் புதுக்கவிதை பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய சென்ற நூற்றாண்டின் எழுபதுகளின் நடுப் பகுதியில் இந்தக் கருத்தமைவின் பிடிவாதம் நிலவியதாக இப்போது என்னால் அவதானிக்க முடிகிறது.

பேராசிரியர் நா. வானமாமலை எழுதிய 'புதுக்கவிதை: முற்போக்கும் பிற்போக்கும்' என்ற விமர்சன நூலில், சார்புநிலை மேற்கொண்டிராத எழுத்து, நடை போன்ற இதழ்களில் வெளியான கவிதைகளை ஃபிராய்டிய பாதிப்பில் உருவான நசிவு எழுத்துக்கள் என்று வகைப்படுத்தியிருந்தார். காதல் கவிதைகள் என இன்று நாம் அடையாளம் காணும் கவிதைகளைக் குறிப்பிட 'இணைவிழைச்சு' என்ற சொற்சேர்க்கையையும் முன் வைத்திருந்தார். முன் சொன்ன சிற்றிதழ்களில் வெளியான கவிதைகளை அவர் இரண்டே பெட்டிகளில் போட்டிருந்தார். ஒன்று - அழுகுணித்தனமானவை, இரண்டாவது - இணைவிழைச்சு வேட்கையைத் தூண்டி விடுபவை. இரண்டு பெட்டிகளில் இருந்தவற்றைக் குவித்துப்போட்டுப் பரிசீலனை செய்தே இவையெல்லாம் பிற்போக்குத்தனமான கவிதைகள் என்ற விமர்சன முடிவுக்கு வந்திருந்தார். பிச்சமூர்த்தி மட்டும் அந்தக் கண்டனத்திலிருந்து விலக்கப்பட்டதன் காரணம் அவரது நீண்ட தாடியென்று நம்புகிறேன். அவரது இலக்கியத் தோழரான கு.ப.ரா.வின் கவிதை ஒன்றும் இத்தகைய கண்டனத்துக்கு இலக்காயிற்று என்று நினைவு.

இத்தனைக்கும் காதல் பற்றிய எதார்த்தமான மன நிலையைத்தான் அந்தக் கவிதை பதிவுசெய்திருந்தது. காதலைச் சந்தேகமாக உணரும் பெண்ணிடம் அந்த உணர்வு அவளிடமே ஊடுருவியிருப்பதைக் காதலன் சுட்டிக்காட்டுவதாக அமைந்த கவிதை அது.
"காதலென்றால் கேலிசெய்கிறாயே, எதற்காக?
கவிதையைக் கள்ளச்சொல் என்கிறாயே வேண்டுமென்றுதானே?
நான் துதிக்கிறேன் என்றுதானே?
இருக்கட்டும்,
நமது இன்பத்து ஏகாந்த இரவின் இறுதியில்
பிறைவெளுத்த பின்மாலையில்,
இருள்வெள்ளம் வடிந்த வைகறையில்,
ஓவியமூட்டும் உன் ஒளிக்கரங்களைவிட்டு
நான் பிரிவினைகொள்ளும் போர்வேளையில்,
உன் கண்களைக் கலக்குவதென்ன, காதலல்லாமல்?
அந்தக் கனவழியும் பொழுதில்
உன் வாயின் வார்த்தைவனப்புத் தானென்ன, கவிதையல்லாமல்?"

ரொமான்டிக்கான உணர்வை ரொமான்டிசிசப் பகட்டில்லாமல் வெளிப்படுத்திய கவிதை இது என்று இப்போது வாசிக்கும்போதும் தோன்றுகிறது. ஓர் அர்த்தத்தில் தமிழில் இதுவரை வெளிவந்துள்ள ஆயிரக் கணக்கான காதல் கவிதைகளுக்கும் ஆதாரமான மனத் தளம் இதுதான் என்றும் நம்புகிறேன். இந்த மனத் தளத்தின் பரிமாணங்கள் வெவ்வேறு கவிஞர்களிடம் வெவ்வேறு வடிவம் பெற்றிருந்தாலும் அடிப்படை இலக்கணம் இதுவாகத்தான் இருக்கிறது. காதல் என்ற உணர்வு தீண்டியதும் ஆவேசமடைந்து 'காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம்' என்ற அதீத உணர்வுடன் காதலனோ கவிஞனோ துள்ளிக் குதிக்க முடியாது என்பதை நவீன வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது. அதையே நவீனக் கவிதை நடைமுறைப்படுத்துகிறது. அப்படி விண்ணைச் சாடுகிற காதல் கவிதைகளை, புரட்சிகரமான கவிதைகள் எழுதி அறைகூவல் விடுத்த கவிஞர்கள்தாம் எழுதிக் குவித்தார்கள் என்பது வரலாற்றின் விநோதம். அப்படி எழுதப்பட்ட கவிதைகள் பிற்போக்கானவை என்னும் விமர்சனத்துக்கு இலக்காகக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வில் காதலியின் புன்னகையைப் புரட்சியில் அடைந்த வெற்றியுடனும் காதலியின் புருவத்தைச் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் கொய்யும் அரிவாளுடனும் ஒப்பிட்டுக் காதலை முற்போக்கான சங்கதியாக மாற்றிய இலக்கிய வித்தைகள் நடத்தப்பட்டதும் உண்டு. எல்லாப் புரட்சிகளும் தோற்கடிக்கப்படும் இன்றைய காலப் பகுதியில் இது போன்ற கவிதைகள் கால வழுவாயின; அல்லது வெகுசன ஊடகத்தின் பகுதியாயின. அன்று முற்போக்குக் கவிதைகளுக்கான வகை மாதிரிகளாக இருந்த பிற நாட்டுக் கவிஞர்கள் பலரும் (உதாரணம்: விளாதிமிர் மயாகாவ்ஸ்கி, பாப்லோ நெரூதா, பெர்டோ ல்ட் பிரெக்ட்) காதலுக்காகக் கசிந்து உருகிக் கரைந்தவர்கள் என்பதும் அது போன்ற கவிதைகள் எழுதுவது புரட்சிக்கு விரோதமானது என்னும் மூட நம்பிக்கை அற்றவர்களாக இருந்தவர்கள் என்பதும் நமது கவிதைச் சூழலில் கவனிக்கப்படவில்லை. எத்தனை சுவாரசியமான முரண்!

அன்றாட நடவடிக்கைகளில் உள்ளோடும் மனச் சஞ்சாரம்தான் நவீனக் காதல் கவிதைகளில் வெளிப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஓர் அர்த்தத்தில் இதைத் தமிழ்க் கவிதையில் தொடர்ந்து வரும் மரபின் குணங்களில் ஒன்றாக வகுக்கலாம். சங்கக் கவிதை இயலில் அன்றாட நடவடிக்கையின் பின்புலத்திலேயே கவிதையின் சாத்தியங்கள் கண்டறியப்படுவதைச் சான்றாகக் குறிப்பிடலாம்.

'காணாமற்போன அணிகலனைக் கண்டுபிடித்தவளைப் போல, ஓடிச் சென்று அவனுடைய துடிக்கும் மார்பில் சேர்வாயாக', 'பானை வனையும் சக்கரத்தில் ஒட்டிக்கொண்ட சிறு பல்லிபோல இவனுடன் பல பாதைகள் கடந்தேன்' என்பன போன்ற வரிகளை இந்தக் குணத்துக்கான எடுத்துக்காட்டுகளாக முன்வைக்கலாம்.

நவீனக் கவிதைகளில் இந்தக் குணம் மேலோங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. இதன் விளைவு கவிதைகளில் காட்சிப் படிமங்களின் பிரயோகம் அதிகம் என்பதே. 'சிணுக்கம்' என்ற பிச்சமூர்த்தியின் கவிதை முதலே இந்த இயல்பு தொடர்கிறது. தமிழில் வெளியான மென்மையான காதல் கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒன்று இந்தக் கவிதை.
காதலி, பெரும்பாலும் மனைவியின் செல்லச் சிணுங்கல்தான் கவிதை மையம். ஒரு விநோதமான ஊடல். பிரியும் வேளையில் எல்லாரும் விடைபெற்றுக்கொள்கிறார்கள்; தன் காதலன் அல்லது கணவன் மட்டும் சொல்லிக்கொண்டு போவதில்லை என்ற மனத்தாங்கல் அந்தப் பெண்ணுக்கு. அதை அவனிடமே சொல்லவும் செய்கிறாள். ரயிலேறும் உறவினர்கள் மதகின் திறப்பருகே நீர்ச் சுழல் தயங்குவதுபோல நின்று விடைபெறுகிறார்கள்; படிகளைத் தொட்டுப் பிரிகையில் விடைபெறும் அடையாளமாகக் குளத்தின் அலை, சின்ன மூச்சை விட்டுப்போகிறது. ஆனால், நம்ம ஆள் மட்டும் தன்னைப் பொருட்படுத்தாமல் போகிறான் என்ற அவளது செல்லப் புகாருக்கு அவன் சொல்லும் பதில்:

'அடி கிறுக்கே,
சென்றாலன்றோ விடைபெறவேண்டும்
போனாலன்றோ வரவேண்டும்?
என்னுயிர் என்னிடம்
இல்லாதிருக்கையில்
இருள் ஏது?
உடலுக்கு வாக்கேது?
போக்கேது, வரவேது?
வீட்டிலிருந்தும்
என்னுடன் வருகின்றாய்
வெளியே சென்றாலும்
உன்னுடன் இருக்கிறேன்'

இந்தப் பதிலில் சிணுக்கம் விலகிச் சிரிப்பாகிறது. கவிதையின் மென்னுணர்வும் அதற்கான படிமங்களும் அனுபவமாகப் பதிகின்றன. மதகில் சுழித்துத் தயங்கும் நீரின் நிச்சலன அசைவையோ படிகளில் முட்டிப் பின்னொதுங்கும் அலை வளையத்தையோ பார்க்கும்போது காதலியை அல்லது மனைவியை நினைவில் கொண்டுவராமலிருக்காது இந்தக் கவிதை. இதேபோலக் காதலின் மென்னுணர்வை எழுப்பும் மற்றொரு எழுத்து காலப் படிமம், எஸ். வைதீஸ்வரன் கவிதையில் தென்படுகிறது. 'மலரற்ற தார் ரோடில் விழிக்கு மலராகவும், வெயில் எரிக்கும் வெறும் தரையில் வழியெதிரில் பாவாடை நிழலுக்குள் வெண்முயல்களாகவும்' பெண்ணின் பாதங்கள் மாறித் தெரிவதன் காரணம் வேறென்னவாக இருக்க முடியும்?

முன்னோடிக் கவிஞர்களின் கவிதைக்கான பல பாடுபொருள்களில் காதலும் ஒன்றாக இருந்தது என்பதைக் கடந்து விரிவாக யோசிக்க அதிகம் இல்லை. காதல் பற்றிய அவர்களது மனப் போக்கு வரையறைக்குட்பட்டது. அவர்களது காதல் வானவில்லில் ஓரிரு நிறங்களே இருந்திருக்கின்றன. இந்தக் கவிதைகளில் இடம்பெறும் பெண் உருவமாகப் பெரும்பாலும் மனைவியரே முன்னிருத்தப்பட்டனர் என்று வாதிப்பது சரியாக இருக்கும். இந்தக் கவிதைகளை எழுதிய கட்டங்களில் அவர்கள் மணமானவர்களாகவே இருந்திருக்கக்கூடும். நடுத்தர வர்க்க மதிப்பீடுகளைச் சார்ந்தே அவர்களது அந்தரங்க மனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவிதைகள் பட்டவர்த்தனமாகச் சொல்கின்றன. காதலை ஓர் இனிய மனநிலையாகச் சொல்லும்போதே அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். பெண்மீதான வசீகரம், அவளது அழகு, அவளுக்காகக் காத்திருப்பதன் சுகம், பெண்ணை இழந்துவிடுவதில் நேரும் துக்கம், பிரிவாற்றாமை ஆகிய உணர்வுகளை ஆண் நிலையிலிருந்து சொல்லியிருக்கிறார்கள். ஒருவிதமான லட்சியக் காதல் நிலைதான் (ஜீறீணீtஷீஸீவீநீ றீஷீஸ்மீ) இக்கவிதைகளில் துலங்குகிறது.

பின்னாட்களில் தேவதேவன் எழுதிய கவிதை ஒன்றில் காதலுக்கு நேர்ந்த மாற்றம் பற்றிய சித்தரிப்பு காணப்படுகிறது. நவீனக் காதலின் சூழலையும் அது எதிர்கொள்ளும் சிக்கலையும் நையாண்டி செய்கிறது கவிதை.
'கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்?
ஒரு காப்பி சாப்பிடலாம் வாயேன்'
தேவதேவனால் காதலியைக் காபி சாப்பிட அழைக்கவாவது முடிகிறது. முன்னோடிகளால் அது பற்றி யோசிக்கவாவது முடிந்திருக்குமா என்பது சந்தேகம். காதல் பற்றிய மனநிலையிலும் அக்கவிஞர்கள் கனவான்களாகவே இருக்க விரும்பியிருப்பார்கள்போல.
சி. மணிதான் ஆண்-பெண் விழைவின் புனிதப் பாசாங்குகளைக் கலைத்த முன்னோடிக் கவிஞர். காதலின் முதிர்வில் காமத்தின் வாசனையும் எழுமென்று சுட்டிக்காட்டியவர். காதலுறவின் மென்மையான படிமங்களை உருவாக்கிய அதே சமயத்தில் காமத்தின் வலுவான தருணங்களையும் சி. மணி சித்தரித்தார். மனத்தின் பரிதவிப்பு மட்டுமல்ல; உடலின் வேட்கையும்தான் காதல் என்று அவர் கவிதைகள் ருசுப்படுத்தின. அப்படி நிறுவும் தீவிரத்தில் அவரது காதல் கவிதைகளில் காதலில் அல்லது காமத்தில் ஈடுபடும் மனம் புனையும் நுட்பமான உணர்வுக் கோலங்கள் இல்லாமற்போயின.
காதலையும் காமத்தையும் பகுக்க முடியாத மனோ வேளைகளைக் கவிதையில் நிறுவியவர் பிரமிள். காதலின் தீராத் தாபமும் காமத்தின் மாளாத ஆவேசமும் கொண்ட வரிகளை அவர்தான் எழுதினார். ஆண் நிலையிலிருந்து கற்பிக்கப்பட்ட காதலுணர்வில் பெண்ணின் மனவோட்டத்தை முன்னிருத்தியவர் பிரமிள் என்பது என் கணிப்பு. எடுத்துக்காட்டாக 'ராமன் இழந்த சூர்ப்பநகை' என்னும் கவிதையைக் குறிப்பிடலாம். சனாதனமான பொருளில், அதாவது ஆண்மையப் பார்வையில் சூர்ப்பநகை செய்தது ஆள்மயக்கும் லீலை. பிரமிளின் வரிகளில் இந்தத் தருணம் பெண்ணின் காதலாகவும் காமமாகவும் அவை உதாசீனப்படுத்தப்படும்போது எழும் சீற்றமாகவும் மாறுகிறது. கவிதைத் தலைப்பு என்னுடைய சார்பை வலுப்படுத்துவதாகவும் கருதுகிறேன். கவிதையில் வெளிப்படும் குரல் பெண் தொனியுள்ளது. அவளுக்கு நேரும் மனவோட்டங்களை முன்வைப்பது. ராமனை இழந்த சூர்ப்பநகையின் கூற்று அது. அவள் விரும்பிய தருணம் கைகூடாத ஆற்றாமைதான் கவிதையின் மையம். ஆனால் தலைப்பு 'ராமன் இழந்த சூர்ப்பநகை'. ஆக, இழப்பு பெண்ணுக்கல்ல; ஆணுக்கு. அவன் கடவுளாக இருந்ததுதான் காரணம். அந்தக் கவிதையை இங்கே நினைவு கூரலாம்.
'இருளின்நிற முகக்கதுப்பில்
தணல்கள் சிரித்தன
அவள் ராக்ஷஸப்பாறைகள்
பாகாய் உருகின.
உருகியென்?
அவனோ கடவுள்
ஆடையின் இரவினுள்
உதயத்தை நாடும்
பருவ இருள்
நடையோ
ரடியொவ்வோ
ரடியில்
தசையின்
ஜ்வாலை நடுக்கம்
நடுங்கியென்?
அவனோ, பாவம்
கடவுள்
தழுவ விரியும்
தொடைகள் திரண்டு
பிரிந்துபிரிந்து
இடையே ஓர்
தலைகீழ்க் கருஞ்சுடர்
எரிந்தெரிந்து அழைக்கும்
அழைத்தென்?
அவனோ, த்சொ,
கடவுள்'.

முதல் வாசிப்பில் இக்கவிதையைப் பற்றி எனக்குள் திரண்ட இந்தப் பார்வை காலப் போக்கில் மேலும் செழுமை பெற்றே வந்திருக்கிறது. இன்றுள்ள கருத்துச் சூழலில் கூடுதலாகவும் பொருள்படும் வாய்ப்பும் விரிந்திருக்கிறது என்பது என் அனுமானம்.
n
ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தர்க்கம் மறைந்திருக்கிறது என்ற நம்பிக்கையில் குதர்க்கமான ஒரு வகைப்படுத்தலை இங்கே மேற்கொள்ள விரும்புகிறேன்.
நவீனக் கவிதையின் பின்புலம் நடுத்தரவர்க்க மனோபாவத்திலிருந்தே உருவானது. ஆண்-பெண் உறவு பற்றிய கவிதைக்கான கருத்தமைவுகளும் இந்த மனோபாவத்திலிருந்தே வெளியாகியுள்ளன என்பது இயல்பானது. காதல் அடுத்தவன் பிரச்சினையாக இருக்கும்போது ரசிக்கத் தகுந்த ஒன்றெனவும் தன்னுடையதாக வரும்போது ரகசியமாகக் காப்பாற்ற வேண்டிய பிரமாணம் எனவும் இந்த மனோபாவம் வற்புறுத்துகிறது. எனவே, காதலியின் அடையாளங்களையோ, குறைந்தபட்சம் பெயரையோகூட வெளிப்படுத்துவது அத்துமீறலாகிறது. அதனால் கவிதைப் பெண்கள் பெரும்பான்மையும் மனைவியின் சாயலிலோ நிழலிலோ ஒண்டிக்கொள்கிறார்கள். தமிழில் இன்றளவும் ஆகச் சிறந்த காதல் கவிதைகளை எழுதிய பாரதியின் கண்ணம்மாகூட அவரது மனைவி செல்லம்மாளின் முகமூடியுடன்தான் நமக்கு அறிமுகமாகிறாள்.

பாரதி கவிதைகளை அடிப்படையாக வைத்து அவரது வாழ்க்கையை அவரது வாய்மொழியாகப் பதிவு செய்ய முயன்ற முத்துக்கிருஷ்ணனின் வரலாற்று நூலில் (என்.சி.பி.எச். வெளியீடு) கண்ணம்மா என்பது செல்லம்மாள் அல்லவென்றும் பாரதியின் பிள்ளைப் பிராயத் தோழியென்றும் குறிப்பிட்டிருப்பது ஒப்புக்கொள்ளக்கூடியதாகவே படுகிறது. அச்சில் வெளிவந்த அவரது முதல் கவிதையான 'தனிமை இரக்கம்' காதலும் காமமும் பிணைந்தது. பதினாலரை வயதில் திருமணம் முடித்த இளைஞனுக்குப் பதினெட்டு வயதில் இரு தள அனுபவமும் சாத்தியம். எனினும் மேற்சொன்ன வாழ்க்கை வரலாற்றை வாசித்தது முதல் இதில் காதலின் சொல்லப்படாத ரகசியம் புதைந்திருப்பதாக நம்ப மனம் விரும்புகிறது. பதினான்கு வயது நிறைவுபெறும் முன்பே திருமணம். மறு ஆண்டில் தந்தை மரணம். அதைத் தொடர்ந்து காசிக்குப் போகும் பாரதி மனைவியைப் பிறந்த வீட்டில் விட்டுச் செல்கிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு ஊர் திரும்பிய பின்னர்தான் குல வழக்கப்படி சாந்தி முகூர்த்தம் நடைபெறுகிறது. 'தனிமை இரக்கம்' கவிதை அதற்கு அடுத்த ஆண்டில் (1904) வெளியாகிறது. பிரிவாற்றாமைதான் கவிதையின் கரு. அது மனைவியைப் பிரிந்த நாட்களின் மனவோட்டமாகவே இருக்கலாம். அல்லது மனத்துக்குள் பதிந்துபோன பெண்ணின் நினைவுகூரலாக இருக்கலாம். இரண்டாவதே பொருத்தம் என்று தோன்றுகிறது. அப்படி நம்புவதற்கான ஆதாரங்கள் கவிதைகளிலேயே தென்படுகின்றன.

பாரதியின் காதல் கவிதைகளில் இணைவிழைவின் தவிப்புகளும் குதூகலங்களும் அதிகம். இந்தக் காதலின் அடிவேர்கள் பக்தியிலும் ஆன்மீக விசாரங்களிலும் படர்ந்திருப்பதால் காமத்தின் ஆவேசம் குறைவு. முன்னதை லட்சியக் காதலின் உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த நிலையில் 'பங்கமில்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும்'. அதுவே நிறைவு. இரண்டே இரண்டு கவிதைகளில் மட்டும் காமத்தின் பெருங்கடல் கொந்தளிக்கிறது. அவை 'தனிமை இரக்க'மும் 'எந்த நேரமும் நின் மையல் ஏறுதடி' என்ற வள்ளிப்பாட்டும். இவற்றில் காதல் முற்றிக் காமம் பீறிடுகிற மனச் சஞ்சாரத்தைப் பார்க்கலாம். 'வட்டங்களிட்டும் குளமகலாத தெப்பத்தைப்போல' நிறைவு தேடி அலைந்துகொண்டே இருக்கிறது. இந்த இரண்டு வரம்புகளுக்குள் தமிழின் காதல் கவிதைகளை அடக்கிவிடலாம். காதலியையோ மனைவியையோ கவிதையில் சித்தரிக்கும்போது தமிழ்க் கவிஞர்கள் கனவான்கள்; உடல் துய்ப்பின்போது ஆதிமனவாசிகள்.

இதே அடிப்படையில் கவிதையில் பெண்கள் சித்தரிக்கப்படுவதையும் வகைப்படுத்தலாம். முன்னோடிக் கவிஞர்களின் கவிதைப் பெண்கள் அனைவரும் தேவதைகள். அவர்களது நெருக்கம் இந்தக் கவிஞர்களின் இருப்பையும் படைப்புச் செயலையும் அர்த்தப்படுத்துகிறது. பின்னாளில் இதே பெண்கள் மோகினிகளாக உருமாறுகின்றனர். ஆணை அலைக்கழிக்கும் காரணிகளாகிறார்கள். கலாப்ரியா, விக்ரமாதித்தன் கவிதைகளில் பெண் பெரும்பாலும் தேவதை; சில சமயம் மோகினி. அபூர்வமான தருணங்களில் இரண்டும் சேர்ந்த ஈருடலி.

நவீனத் தமிழ்க் கவிதையாளர்கள் பலரும் இந்த இருவகையான பெண்ணிருப்புச் சார்ந்து காதல் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். அபூர்வமாக ஓரிருவர் மட்டும் இந்த நீரோட்டத்தில் கால் நனையாமல் கடந்து போயிருக்கிறார்கள். சுந்தர ராமசாமி ஓர் உதாரணம். அவரைத் தேவதைகளோ மோகினிகளோ தீண்டவேயில்லை. நூற்றுச் சொச்சம் கவிதைகள் எழுதியிருந்தும் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த ஒரே ஒரு காதல் கவிதை 'பூக்கள் குலுங்கும் கனவு'. மனத்துக்குள்ளிருக்கும் பெண்ணின் மணநாள் தோற்றம் பின்பும் ஆக நினைவுகளை அடுக்குகிறது கவிதை. வாழ்வின் தேனை வண்டைப் போல உறிஞ்சும்படி பெண்ணுக்கு வாழ்த்துக் கூறிவிட்டு ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கிறார் கவிதை சொல்லி. வாழ்வின் 'பாதை முடிவுறும் முன்னே என்றேனும் ஒருநாள் / அந்த இளம் மீசையிடம் என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்லு / உன் கடந்த காலங்களின் பழைய நினைவாய்' என்பது அந்த வேண்டுகோள். இது முன்னாள் காதலின் ஞாபக மிச்சமா, அல்லது ஏதோ பெண்ணுக்குச் சொன்ன பொதுவான நினைவூட்டலா என்னும் சந்தேகம் ஏற்படுகிறது. எனினும் இந்த வரிகளிலுள்ள நெகிழ்ச்சியும் மீசைக்காரக் கணவனிடம் வாழ்ந்து தீரும் முன்பு தன்னைப் பற்றிச் சொல்லக்கோரும் முனைப்பு ஒரு காதலனுடையது என்ற ஊகத்திலும் இதைக் காதல் கவிதை என்று உறுதியாக நம்புகிறேன்.

கிட்டத்தட்ட இதே தருணத்தைச் சித்தரிக்கும் இன்னொரு கவிதை சமயவேல் எழுதிய 'சந்தி'. சுந்தர ராமசாமி கவிதையிலிருந்த சந்தேகச் சாயல் இந்தக் கவிதையில் இல்லை. முன்னாள் காதலியைத் தற்செயலாகச் சந்திக்கும் காதலன். அவன் தன் மனைவியோடு. அவள் தன் கணவனோடு. காதலன் கணவனிடமும் காதலி மனைவியுடனும் பேசிக்கொண்டிருப்பதும் அதன் இடைவேளையில் 'அந்த ஒரேயொரு விஷயம்' மட்டும் தொடப்பட முடியாமல் புதைந்து எழுந்து புதைந்து நழுவிக்கொண்டிருப்பதும் கவிதைக்கான கணங்களாகின்றன. இந்த மென்கண நினைவுகள்தாம் கவிதையின் காலியாகாத களஞ்சியம். அவைதாம் காட்சிப் படிமங்களை உருவாக்குகின்றன. படிமங்களின் பின்னங்களை மெல்ல மெல்ல உருவாக்கிக் கூட்டுப் படிமத்தை மனப் பிம்பமாக நிறுத்திய கவிதை

ஞானக்கூத்தனின் 'பவழமல்லி'.
கதைகேட்கப் போய்விடுவாள் அம்மா, மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா, சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும், சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடும் தூங்கும்.
பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி
கதைமுடிந்து தாய்திரும்பும் வேளைமட்டும்
தெருப்படியில் முழுநிலவில் அந்தநேரம்
தனிமையிலே என் நினைப்புத் தோன்றுமோடி?

நவீன எழுத்துக்களில் மிக நேர்த்தியான காதல் கவிதை இது என்பது என் அபிப்பிராயம். கவிதையில் இடம்பெறும் காட்சி அடுக்குகள், பின்னணி, பாத்திரங்களின் செயல் மூலம் தெரிகிற மனப்போக்குகள், அவற்றுக்கெல்லாம் மையமான ஒரு பெண்ணின் இருப்பு ஆகிய அனைத்தையும் நுட்பமாகச் சித்தரிக்கிறது. கூடவே எல்லாப் பூக்களும் மலர்ந்து ஓய்ந்த பிறகு யார் கவனத்தையும் கவரும் நோக்கமில்லாமல் மலரும் பவழமல்லியின் வாசனை. கவிதையில் வரும் காதலியும் அன்றாடச் செயல்கள் முடிந்த பின்னர்தான் காதலைப் பற்றி யோசிக்க அனுமதிக்கப்படுகிறாள் என்ற மெல்லிய சோகத்தின் வாசனையைப் பவழமல்லி மறைமுகமாக வெளிப்படுத்துகிறது. இன்னொரு கோணத்திலும் இந்தக் கவிதை நவீனமானது. கவிதை ஓர் ஆண் குரலில்தான் வெளிப்படுகிறது. அதிலேயே பெண்ணின் இருப்பும் விளங்கிவிடுகிறது.
n
தொடர்ந்த எதார்த்தமாகவும் வசப்படாத கனவாகவும் கரைந்து கரைந்து காதலை எழுதியவர் கலாப்ரியா. நவீனக் கவிதையில் காதலுக்குப் புதிய வகைமாதிரிகளைச் சிருஷ்டித்தவரும் அவர்தான். காதல் கவிதைகள் எழுதுவதிலிருந்த நடுத்தர வர்க்க சங்கோஜத்தை உதறினார். காதலியின் முகத் திரையை விலக்கி அடையாளத்துடன் வெளிப்படுத்தினார். நவீனக் கவிதையில் 'சசி' என்ற காதல் பாத்திரத்தை நடமாடவிட்டார். ஒரே சமயம் வரமருளும் தேவதையாகவும் அலைக்கழிக்கும் மோகினியாகவும் அவதாரம் கொண்டிருக்கிறாள் சசி.

காதல் பாத்திரத்தைப் பெயர் சொல்லி அறிமுகப்படுத்தியவர் நகுலன் என்பது என் யூகம். நகுலனின் சுசீலாதான் கலாப்ரியாவின் சசிக்கு முன்னுதாரணம் என்பதும் என் எண்ணம். இந்த முன்னுதாரணங்கள் தந்த துணிவில் பிற்காலக் கவிஞர்கள் தாங்கள் காதலிக்கும் பெண்களின் பெயர்களை வெளிப்படையாகச் சொல்லத் தயாரானார்கள். சங்கர ராமசுப்ர மணியனின் கவிதைகளில் அங்கங்கே தட்டுப்படும் வாணி என்ற பெயர் மனப் பெண்ணின் அடையாளம் என்று தோன்றுவதுண்டு. அவ்வளவு தைரியமில்லாதவர்கள் கவிதையின் அடியில் '....க்கு' என்று போடுமளவுக்காவது துணிந்திருந்தார்கள். சில உடல்மொழியின் சாயல்களாலும் தோற்றச் சித்தரிப்பிலும் வெளிப்படுத்தினார்கள். யூமா வாசுகியின் கவிதையொன்றில் பர்தா அணிந்த காதலி தென்படுவதை நினைவுகூரலாம்.

கலாப்ரியாவின் காதல் ஒரு விதத்தில் நாசூக்கானது. அவரது கவிதையுலகில் புகைரூபமாக நடமாடும் சசியைப் பற்றிய சுட்டிக்காட்டல்களில் காதலனின் தாப மனம்தான் பெரும்பாலும் வெளிப்படுகிறது. சசி இந்தக் காதல் சமர்ப்பணங்களைப் பற்றி என்ன கருதியிருப்பார் என்பது கவிஞர் மட்டும் அறிந்த ரகசியம். கலாப்ரியா மட்டுமல்ல, தொண்ணூறுகள்வரை கவிதையில் இயங்கிய எல்லாருக்குமான பொது விதி இது. எல்லாருடைய காதல் பெண்களும் தேவதைகளாகவும் மோகினிகளாகவும் மட்டுமே காட்சியளித்தனர். கவிதையில் சகஜமான பெண்கள் உலாவத் தொடங்கியது புதிய தலைமுறைக் கவிஞர்கள் வருகைக்குப் பின்னரே. இவர்களிடம் பெண்களின் தேவதைத்தனம் செல்லுபடியாகவில்லை. அலைக் கழிக்கிற மோகினிகளும் சாதாரணப் பெண்களும்தாம் இவர்களை வசீகரித்தவர்கள். சங்கோஜமற்றுக் காதலையும் பூடகமாகக் காமத்தையும் முன் தலைமுறை சொன்னது. புதியவர்களிடம் இந்த இடக்கரடக்கல் அவசியமற்றுப் போயிற்று. 'அன்றைக்கு உன் / முலைக்கணவாய் இடைப்பிளவு தொடையாடம்பரம் எங்கும் / என் மத்தகச் சிதறல்கள்' என்றோ 'தொண்டையடைத்த பறவையின் விக்கல்களாகப் பிதுங்கி வருகிறது / உன் விரியோனியின் சமிக்ஞை' என்றோ காதலைத் தீட்டிக் காட்டுவதில் யூமா வாசுகிக்கோ 'காயப்படுத்தியதற்காக உன் முலைகளிடம் / மாறி மாறி மன்னிப்புக்கோரினேன் /பல்தடங்கள் சிரித்தன' என்று எழுத பிரான்சிஸ் கிருபாவுக்கோ மனத் தடையில்லை.

இந்தத் தடையின்மையை வெகுவாகக் கொண்டாடிய கவிஞர் விக்ரமாதித்யன். குறிப்பாகக் காதல் கவிதைகளில் அல்லது ஆண்-பெண் விழைவு சார்ந்த கவிதைகளில் விக்ரமாதித்யன் ஆனந்தக் கூத்தனாகிவிடுகிறார். காதலும் காமமும் சமயங்களில் ஆன்மீகச் சின்னங்களுமாகப் பெண்ணைக் கொண்டாட விரும்புகிறார். ஆனால் அவரது இயல்பான மனநிலை 'சின்ன உருவமானால் கையில் அள்ளிக்கொள், பெரிய வடிவானால் காலில் விழு' என்ற நோக்கில் திரண்டிருப்பதால் அங்கே பெண்கள் வெறும் சுகவர்த்தினிகளாகக் குறைவுபடுத்தப்பட்டு விடுகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
n
பெண்ணுறவை இயற்கைமீதான மோகமாகக் காட்டிய கவிஞர்களாகச் சிலரை வகைப்படுத்தலாம். தேவதேவன், தேவதச்சன், ஆத்மாநாம், 'தனிமொழி' என்ற தலைப்பில் வெளியான கவிதைகளுக்காக பிரம்மராஜன், மனுஷ்யபுத்திரன் ஆகியவர்களை இந்த வரிசையில் அமர்த்த வேண்டும் (வரிசையில் துண்டைப் போட்டுவைக்க ஆசைதான். அவையடக்கம் மறுக்கிறது). தேவதேவனின் 'ஒரு மரத்தைக்கூடக் காணமுடியவில்லை' கவிதையையும் மனுஷ்யபுத்திரனின் 'இழந்த காதல்' என்ற கவிதையையும் மேற்கோளாகத் தருவதன் மூலமே நான் சொல்ல விரும்பும் மனப்பாங்கை முன்வைக்க முடியும். இரு கவிதைகளின் தலைப்பும்கூட இதன் அடையாளமே.

ஒரு மரத்தைக்கூடக் காணமுடியவில்லை
ஒரு மரத்தடி நிழல்போதும்
உன்னை தைரியமாக நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என்மனம் தாங்க மாட்டேனென்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்.
கர்ப்பிணிப் பெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மரநிழலில்
விட்டுப்போக விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலைமுலையாய்க் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையைக்கோதும்
மரம் உனக்குப் பறவைகளை அறிமுகப்படுத்தும்
அந்தப் பறவைகள்
வானத்தையும் தீவுகளையும்.
வானமோ
அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே.
ஒரு மரத்தடி நிழல்தேவை
உன்னை தைரியமாக நிற்கவைத்துவிட்டுப்
போவேன்.

இழந்த காதல்
நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது
மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒர் விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்
ஆயிரம்
இலைநுனிகளால்
வேர்நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம்ததும்பிப்
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்.
n
கொஞ்சம் வேடிக்கையான பார்வையுடனேயே இந்தக் காதல் பயணத்தில் ஈடுபட்டேன். காரியார்த்தமான எல்லைகளுக்குள் சென்றிருப்பதாக இப்போது தோன்றுகிறது. சில பொதுமைகளையும் சில பிரத்தியேகத் தன்மைகளையும் தொகுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால் இவை எல்லாமும் ஆண் நிலையிலிருந்து எழுதப்பட்ட கவிதைகளைச் சார்ந்தவை. ஆணுலகில் கவிதைப் பெண்கள் வாழ்வும் உணர்ச்சியும் தருபவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்; காதல் பித்தேற்றி ஆணைப் புலம்பவிடுகிறார்கள்; இவற்றை ஒட்டியும் மறுத்தும்தான் பெரும்பான்மையான கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. மரபான பொருளில் சொல்வதென்றால் நமது ஆண் கவிஞர்கள் எழுதிக் குவித்திருப்பது கைக்கிளைக் கவிதைகள்தாம். ஒருதலைப் பார்வையிலிருந்து உருவானவைதாம் பெரும்பான்மையும். இதே கருத்தைப் பெண் கவிஞர்களுக்கும் விரிக்கலாம். ஆண் உருவாக்கும் கவிதையுலகில் பெண்ணின் இருப்பு பரவலாக இருப்பது போலப் பெண் உருவாக்கும் உலகில் ஆணின் இருப்பு உண்டா? இல்லை என்பதே பதில்.

பெண் ஓர் ஆணை உணரும் உடன்பாடான அம்சங்கள் குறைவு. கவிதை ஆண்கள் பொதுவாகக் கொடூரர்கள்; காமம் தீர்ந்ததும் விலகிப்போகிற இருகால் விலங்குகள்; பெண்ணின் சுதந்திரத்தை முடக்கும் ஆதிக்கவாதிகள். இது போன்ற படிமங்கள்தாம் அதிகம். சட்டென்று நினைவுக்கு வரும் கவிதையில் ஒன்று மாலதி மைத்ரியின் 'காதல் கடிதம்'. ஐம்பத்தைந்து வயதான தாய் மாமன் பானுவுக்கு எழுதும் கடிதம். 'ஏதாவது துரோகம் பண்ண நெனச்சே / தேவடியா நாயே / ஆள்வச்சுத் தீத்துக்கட்டிடுவேன் / பதில் எழுதவும் / அன்புடன் மாமா' என்பவை கவிதையின் முடிவு வரிகள். இந்தக் கொடூரர்கள்தாம் பெண் கவியுணர்வில் ஆண் அடையாளங்கள். ஒருவேளை ஆண்கள் அப்படித்தான் இருக்கிறார்களா?

காலங்காலமாகப் பெண்கள்மீது சுமத்தப்பட்ட பழியின் வஞ்சினம் மட்டுமே அவர்களிடம் கவிதையாகிறதா? அப்படியானால் நவீன உலகில் சக வாழ்வுக்கான சாத்தியங்கள் இல்லாமல் போகாதா? காதல், காமம் ஆகியவற்றின் மரபான அர்த்தங்கள் சிதறி விழும் நவீன வாழ்க்கையில் பெண்ணின் கவிதை வெளி இன்னும் விரிவானதாகவும் நெகிழ்வானதாகவும் மாற வேண்டியிருக்கிறது. காதல், ஆணுக்கு வாழ்வின் ஒரு பகுதி; பெண்ணுக்கு வாழ்வின் பெரும்பகுதி என்ற சமமற்ற நிலை சீராக்கப்படும்போது கவிதையில் காதலுக்கான சவால்கள் அதிகமாகும். அதுவரை பெண் கவிஞர்களும் கைக்கிளைக் கவிதைகள்தாம் எழுத நேரும். அது கவிதைக்கு நல்லதல்ல; வாழ்க்கைக்கும்.

பெண்ணுணர்வில் ஆணின் இருப்பை வடிவமைப்பதில் கருத்துருவங்கள் கணிசமான பங்கைக் கொண்டிருக்கின்றன. ஆண் தன்னை நிறுவிக்கொள்ளும் களமான காமச் சூழலில் அவனுடைய காதலைவிட அதிகாரம் முனைப்புக் காட்டுகிறது. இந்தத் தருணத்தைப் பெண் கவிஞர்கள் கவிதையாக்கும்போது அவர்களது மொழியும் வெளிப்பாடும் ஆவேசம் கொள்கின்றன. சுகிர்தராணியின் 'இரவு மிருகம்' கவிதையின் நியாயம் இது என்று எண்ணுகிறேன்.

ஆண் சக உயிராகக் கருதப்பட்டுப் பெண் நெகிழும் தருணங்களும் பெண்களால் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை அளவிலும் வீச்சிலும் சொற்பம். மாலதி மைத்ரியின் 'மௌனப்பாதை' ஓர் உதாரணம். இதில் வரும் 'நீ அருகில் இல்லாத சமயங்களிலும் / உன்னுடன்தான் பேசிக்கொண்டிருந்தேன்' என்னும் வரிகள் ஒரு சமத்துவ மனநிலையைக் கொண்டிருக்கின்றன. இந்த வரிகளைக் கட்டுரையின் முதற்பகுதியில் எடுத்துக் காட்டப்பட்ட பிச்சமூர்த்தியின் வரிகளுடன் இணைத்து யோசிக்கலாம். கவிதை ஒரு தொடர் நிகழ்வு என்று பேசுவதற்கான சான்றாக அந்த ஒப்பீடு அமையும்.
கருத்தாக்கத்தின் கனத்தைத் துறந்த இயல்பான தருணங்களில் காதலும் காமமும் ஒரே நிறமாகும் நிஜத்தைச் சொல்வதாக நான் நம்பும் கவிதை குட்டி ரேவதியின் 'என் காமத்தின் துளி'. மெல்லிய ஆதங்கமும் நியாயமான புகாரும் கௌரவமான மன்றாடுதலுமான இதன் கவிதைத் தொனி தமிழில் அபூர்வமானது.

'என் காமத்தை இதுவரை
நீ வருடிப்பார்த்தது கூட இல்லை
அது அணையாது காக்கவேண்டிய
ஒரு சுடரைப்போலத்
தெருவெங்கும் அலைகிறது
பின்புதான் குப்பைகளை எரிக்கும்
நெருப்போடு சேர்கிறது.
..........
வருடிப்பார்த்திருக்கிறாயா என் காமத்தை
ஒரு புதிய காகிதத்தில் எழுத விரும்புவதைப்போலவோ
அல்லது
ஒரு குழந்தையின் விரல்களைப் பற்றும்
ஆர்வத்துடனோ?'
n
காதல் கவிதைகள் மீதான வாசக அங்கீகாரம் ஒரு பொது நிலையைச் சார்ந்தது. காதலர்கள் வேறாக இருந்தாலும் வாசிப்பின்போது வாசகன் உணர்வது தனது காதல் மனத்தையே. காதலைக் கொண்டாடியவனாகவோ காதலால் தண்டிக்கப்பட்டவனாகவோ இருந்தாலும் கூட. ஆக, ஒரு கவிஞன் காதலிப்பது அவனுக்காக மட்டுமல்ல; அவனுக்கு முன்னும் பின்னுமான பலருக்குமாக என்று தோன்றுகிறது. இந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுபவனைப் பற்றிய முகுந்த் நாகராஜனின் கவிதை வரிகளைக் கட்டுரையின் முத்தாய்ப்பாகக் குறிப்பிடலாம்.

லட்சக்கணக்கான ஆண்டுகள்
கோடிக்கணக்கான மனிதர்கள்
சுமந்த காதலை
நான் ஒருவனே சுமக்கும்படி ஆகிவிட்டது (நான் சுமந்த காதல்கள் - அகி)
கவிஞர்கள் பாவம்தான், இல்லையா?

 "