Pages

ஆத்மாநாம் கவிதைகள்


http://www.tamilvu.org/library/l9301/html/l9301cnt.htm
ஆத்மாநாம்
18-01-1951 -  06-07-1984
ஆத்மாநாம் எழுதிய அனைத்து கவிதைகளும்  வலையேற்றப்பட்டுள்ளது.
பக்க எண் 13 முதல் 262 வரை.


ஆத்மாநாம் கவிதைகள்

அழிவு

என்னை அழித்தாலும்
என் எழுத்தை அழிக்க இயலாது
என் எழுத்தை அழித்தாலும்
அதன் சப்தத்தை அழிக்க இயலாது
என் சப்தத்தை அழித்தாலும்
அதன் எதிரொலியை அழிக்க இயலாது
என் எதிரொலியை அழித்தாலும்
அதன் உலகத்தை அழிக்க இயலாது
என் உலகத்தை அழித்தாலும்
அதன் நட்சத்திரக் கூட்டங்களை அழிக்க இயலாது
என் நட்சத்திரக் கூட்டங்களை அழித்தாலும்
அதன் ஒழுங்கை அழிக்க இயலாது
என் ஒழுங்கை அழித்தாலும்
அதன் உள்ளழகை அழிக்க இயலாது
என் உள்ளழகை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
என்னை அழித்தாலும்
என்னை அழிக்க இயலாது
அழிப்பது இயல்பு

தோன்றுதல் இயற்கை



ஓவியம் : ஆதிமூலம்
உன் நினைவுகள்

எனினும் நான்
உற்றுப் பார்த்தேன்
கூர் வைரக் கற்கள்
சிதறும் ஒளிக் கற்றைகளை
வீசும் விளக்கை

அப்பொழுதேனும்
துடிக்கும் மனத்தின்
பிணைப்பினின்று மீள

முடியாது
இவ்விதம்தொடர்ந்திருக்க முடியாது என்று
நிற்கும் தரையின்
பரிமாணங்களைச் செதுக்கிய
ஓவியத்திற்குச் செல்வேன்
பழகிவிட்ட ஓவியமும்
கைவிடும்

உதிர முடியாத
காகிதப் பூக்கள்
வண்ணம் இழக்கும்

மெல்லிய ஒலியுடன்
நாடி நரம்புகளைத்
தொற்றிக் கொண்டு
சிறிது நேரம்
மூச்சளிக்கும் இசை

எழுத்துக் கூட்டங்களுக்கும்
தொடர்வேன்
ஏதேனும் ஒரு மூலையில்
உன் நினைவுகள்

என் அறையில்
நான் முடங்கிக் கிடக்கையில்
எப்பொழுதேனும்
அந்த உயிரிழந்த பஸ்ஸரை
அழுத்திச் சென்றுவிட்டாயோ
என்று மன மதிரும்

பின்னர்
உயிர்த்திருக்கும்
புட்களுடன்
தேடிக்கொண்டிருப்பேன்
அலையும் நினைவுகளில்
நன்றி: ஆத்மாநாம் படைப்புகள் (காலச்சுவடு பதிப்பகம் 2002)

நினைவு

இருதயத்தின் நரம்புகளைத்
துண்டு துண்டாக்கி
எலும்புக் கூடுகளை
ஒன்றாய் அடுக்கி
சிதைக்குத் தீயிட்டுத்
திரும்பினேன்
திரும்பிப் பார்த்தேன்
ஒரு புகைப்படம்
கிழித்து எறிந்தேன்
மிச்சம் உள்ள நினைவுகளையெல்லாம்
கடலில் கரைத்துவிட்டேன்
இனித் தெளிவென்று நினைத்து
கட்டிலில் கவிழ்ந்தேன்
நீ வந்தாய்
எல்லாமே புதிதாகத் தெரிந்தது
அங்கே
நானுமில்லை
நீயுமில்லை
இரண்டு நிழல்கள்
பேசிக்கொண்டிருக்கின்றன
அவற்றின் மெல்லிய குரலின்
கேஸட் பதிவே இது
அந்த மொழிக்கு வார்த்தைகள் கிடையாது
தாறுமாறான வாக்கியங்களின்
ஒலிச்சிதறல்
எண்ணிக்கையற்ற எழுத்துக்கள் மட்டும்
எங்கிருந்தோ வந்துகொண்டேயிருக்கின்றன
நிச்சயம் இது கனவு.
சிச்சிப்படியா
இங்கே கேஸட் நிறைவுறுகிறது
பக்கத்து அறையில்
செய்திகள் ஒலிக்கின்றன

என்றொரு அமைப்பு

இந்தப் பேனா ஒரு ஓவியம் வரையக்கூடும்
             ஒருகட்டிட வரைபடத்தையும்
             ஒரு சாலை விவரக் குறிப்பையும்
             ஒரு பெண்ணுக்குக் காதல் கடிதத்தையும்
             ஒருஅலுவலகத்தின் ஆணைகளையும்

இவை யாவும் இப்பொழுதைக்கு இல்லை
ஒரே ஒரு கவிதையை மட்டுமே எழுதும்
தலைப்பு தானே உருவாகும்
எலும்புகளைப் பற்றி ஆய்வு செய்தவனுக்கு
ஒன்று துல்லியமாய்த் தெரிந்தது
எலும்புகளும் நம்மைப் போலவே வாழ்கின்றன
வீடுகளில் பொட்டல் காடுகளில் வயல்வரப்புகளில்
அவைகளுக்கும்
அரசர்களும் மந்திரிகளும் போர் வீரர்களும்
என்றொரு அமைப்பு


திருஷ்டி

பானைத்தலை சாய்த்து
புல் பிதுங்கும் கைகளோடு
சட்டைப் பொத்தான் வெடிக்க
தொப்பையில் புல் தெரிய தனியாய்
யாருன்னைத் தூக்கில் போட்டார்
சணற் கயிற்றால் கட்டிப் போட்டு
உன் காற்சட்டை தருவேன்
சென்றுன் எதிரியைத் தேடு

மறுபரிசீலனை

நான் எதனையுமே மறுபரிசீலனைக்கே விட்டுவிடுகிறேன்
நான் படித்த புத்தகங்கள் என்னைக் கேலி செய்கின்றன
நீ பழைய மனிதன்தான் என்கிறது ஒரு புத்தகம்
புதிய மனிதன்தான் என்கிறது இன்னொரு புத்தகம்
நான் மனிதன்தானா என்று சோதித்துக்கொள்ளும்
நிர்ப்பந்தங்கள்
தொண்டையில் சிக்கிக்கொண்ட மீனின் முள்ளென
பச்சைப் புல்வெளியிடை சிக்கிக்கொண்ட கரும்பாம்பு
வெறுமனே சும்மா இருக்க முடியாத பேனா
சிதறிப்பறக்கும் பிணந்தின்னிக் கழுகுகள்
எங்கோ கேட்கும் கூக்குரல்
துணிக்கயிற்றில் தொங்கும் குரல்வளைகள்
தூங்குபவர்களையும் தூங்குவது போல் நடிப்பவர்களையும்
எழுப்பும் வார்த்தைக் கூட்டங்கள்
புறப்பட்டாகிவிட்டது கருப்புப் படை

ஏரி

புதிய தாய்த் தோன்றிக்
காத் திருந்தது ஒரு ஏரி
எனக் காய்

கூர்மையான பக்கங் களைக்கொண்ட
பற்கள் தாறுமா றாய்ச்
சிதறிக் காத்தன
ஏரியை
அதன் விளையாட்டு ஓரங்களில்

வானம் தன் முக அலங்காரம்
சிரத்தையாய்ச் செய்து கொண்டிருந்தது

தூக்கணாங் குருவிகள் போற் சில புட்கள்
இங்கு மங்கும் விரைந்து கொண்டிருந்தன

செங்கற்கள் ஆகாத சில மண் சதுரங்கள்
ரயில்களின் போக்குவரத்தை
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன

ஏனோ நான் மட்டும்
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்


ஒரு குதிரைச் சவாரி

நரம்பியலாளர் வாகனம் ஓட்ட
பின்னால் நான் அமர
வாகனத்தின் சத்தம்
அவரை ஒன்றும் செய்யவில்லை
படபடத்துக்கொண்டிருக்கும்
மூளையின் மேல் நான்
சீராய்ச் சாலையில் செல்கிறது
அவர் ஓட்டம்
சிவப்பு நட்சத்திரங்களைக்
கடந்து வாகனத்தை நிறுத்தும் அவர்
சாலையிலேயே நான்
காப்பியை வேகமாய் உறிஞ்சுகிறார்
நானோ மெல்லத் துளித்துளியாக
வீட்டை அடைந்துவிட்டோம்
படிக்கட்டுகளைத்
தாவிக் கடக்கிறார்
படிக்கட்டுகளை
இன்னும் எண்ணிக்கொண்டிருக்கும் நான்

காரணம்

எதிர்த்து வரும்
அலைகளுடன் நான் பேசுவதில்லை
எனக்குத் தெரியும் அதன் குணம்
பேசாமல்
வழிவிட்டு ஒதுங்கிவிடுவேன்
நமக்கு ஏன் ஆபத்து என்று
மற்றொரு நாள்
அமைதியாய் இருக்கையில்
பலங்கொண்ட மட்டும்
வீசியெறிவேன் கற்பாறைகளை
அவை மிதந்து செல்லும்
எனக்குப் படகாக



சுதந்திரம் 

எனது சுதந்திரம்
அரசாலோ தனி நபராலோ
பறிக்கப்படு மெனில்
அது என் சுதந்திரம் இல்லை
அவர்களின் சுதந்திரம்தான்
உனக்கொரு அறை
உனக்கொரு கட்டிலுண்டு
உனக்கொரு மேஜையுண்டு
உனக்குள்ளே ஒரே உரிமை
சிந்திப்பது மட்டும்தான்
மலைகளைப் பார்
மரங்களைப் பார்
பூச்செடிகளைப் பார்
ஜீவநதிகளைப் பார்
பரந்த கடலைப் பார்
இதமூட்டும்
கடற்கரையைப் பார்
எவ்வளவு இல்லை நீ பார்க்க
ஏன் அக்கசடர்களைக் குறித்து
வருந்துகிறாய்
குமுறுகிறாய்
எழுத்துக் கூட்டங்களைச் சேர்க்கிறாய்
உன் வேலை
உன் உணவு
உன் வேலைக்கு போய்வரச் சுதந்திரம்
இவற்றுக்கு மேல்
வேறென்ன வேண்டும்
சாப்பிடு தூங்கு மலங்கழி
வேலைக்குப் போ
உன் மீது ஆசை இருந்தால்
குறுக்கிடாதே.



எதாவது செய்

எதாவது செய் எதாவது செய்
உன் சகோதரன் பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள்.
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்றுச் செய்யத் தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும் வீரியமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்.........."

Thanks http://www.aganazhigai.com/2012/11/blog-post_6790.html



ஓவிய உலகம்

ஓவியம் உலகை அடக்கும்
உலகம் ஓவியத்தை அடக்கும்
ஓவியன் தன்னை அடக்கி
உலகை ஓவியத்துக்குள் ஒடுக்குவான்

உயிர் மூச்சை வண்ணக் கலவையாக்கி
செங்குருதி வியர்வை கலக்கி
                ஒரு முகம்
                ஒரு ஜாடி
                ஒரு காட்சி

காம அவஸ்தைகள் மனப் போராட்டங்கள்
ஒடுக்கப்பட்ட உயிர்களின் ஓலோலம்
எல்லாம் ஒவ்வொன்றாய் சட்டமாகும்

உலகம் அடங்கிவிட்டது
ஆர்ப்பரிக்கும் ஓவியன்
ஓவியம் தோற்றுவிட்டது
கூச்சலிடும் விமர்சகன்

தொடரும் போட்டியில்

முகம் புரியா முகங்கள்



தலைப்புகள் தானே வரும்

நினைத்து
வெகு காலமாகிவிட்டது
போல் இருக்கிறது
உன்னை
எனக்குள் இருக்கும்
மூளைச் செதில்களைத் தின்றுவிட்டு
எங்கே பதுங்கி இருந்தாய்

எப்போதுமே நேரெதிராய்
புரிந்துகொள்ளும் சுபாவமெனக்கு
என்பதைத்
தெரிந்துகொண்டதாலா

குசலங்களை விட்டுவிட்டு
விஷயத்திற்கு வருவோம்

நாம் கடைசியாய்ச் சந்தித்தபோது
இயக்கங்கள் பற்றி
பேசியதாய் நினைவு
இப்பொழுது தெரிகிறதா
இருப்பது ஒரே இயக்கம் என்று
சந்திப்போம்

நினைத்து
வெகு காலமாகிவிட்டது
போல் இருக்கிறது


ஸ்னேகம்

தரையோடு பறக்கும்
வண்ணாத்திப் பூச்சிகள்
மண்ணுடன் ஸ்னேகம் கொள்கிறது
மண்
தீக்குழம்புடன் ஸ்னேகம் கொள்கிறது
தீக்குழம்பு
உயிரணுக்களுடன் ஸ்னேகம் கொள்கிறது
உயிரணுக்கள்
மண்ணுடன் காதல் கொள்கின்றன
மண்ணுடன் கலந்த உயிரணுக்களுடன்
மண்ணுடன் ஸ்னேகம் கொண்ட
வண்ணாத்திப் பூச்சிகள்
உறவு கொள்கின்றன
வாழ்க்கை இனிமையாய்
வண்ணாத்திப் பூச்சிகளுடன்
தாவிப் பறக்கின்றன
எந்தக் குறிப்பிட்ட திசையையும்
பின்பற்றாது
வண்ணாத்திப் பூச்சிகள்
வாழ்க்கையை நடத்துகின்றன
எனினும்
எந்தத் தரையோடு பறக்கும்
வண்ணாத்திப் பூச்சியின் திசையும்
பின்பற்றாது
வண்ணாத்திப் பூச்சிகள்
வாழ்க்கையை நடத்துகின்றன
எனினும்
எந்தத் தரையோடு பறக்கும்
வண்ணாத்திப் பூச்சியின் திசையும்
அதற்கு மட்டும் தெரிந்திருக்கிறது
நான் ஒரு வரியை
இயல்பாய்க் கொண்டு செல்கின்றேன்
அது நிச்சயமானதொரு திசையைத்
தேர்வு செய்கிறது
தரையோடு பறக்கும்
வண்ணாத்திப் பூச்சிகள்
மண்ணுடன் ஸ்னேகம் கொள்கின்றன
நான் உங்களுடன் பேசுகிறேன்

அவரவர் பாட்டுக்கு

எல்லோரும் அவரவர் பாட்டுக்கு
ஒன்றுக்கிருந்துகொண்டிருந்தார்கள்
நான் நுழைந்ததும்
அவையிலே அமைதி
நான் கேட்டேன்
ஏன் நிறுத்திவிட்டீர்கள்
அவரவர் போதனைக்கேற்ப
திரும்பிப் பார்த்தேன்
எல்லாம் உன்னால்தான்
உற்றுப் பார்த்தேன்
கேட்டது ஒரு குரல்
ஒன்றும் விளங்கவில்லை
குப்புற விழுந்து பார்த்தேன்
எல்லாம்
நின்ற நிலையிலேயே
அரங்கேறிக்கொண்டிருந்தது
தாவிக் குதித்தேன்
பாதாள சாக்கடை வறண்டிருந்தது
எங்கும் நில நடுக்கம்
மெல்ல எட்டிப் பார்த்தேன்
இரண்டு கையளவு
ஒற்றைச் சூரியகாந்திப்பூ

ஆத்மாநாம் படைப்புகள் 43
இழுப்பறைகள் கொண்ட மேஜை

அது உறுதியாகத் தரையில் இருப்பது போல்தான் படுகிறது
நான் பறந்துகொண்டும் தத்திக்கொண்டும் இருக்கிறேன்
எங்கிருந்தோ கிடைத்த புத்தகங்களையும் பொருட்களையும்
மேஜைமேல் அடுக்கிக்கொண்டே போகிறேன்
நானும் களைந்துகொண்டேயிருக்கிறேன்
குதித்துவிடுவான் ஒன்றுமேயில்லை என்ற ஆவலான
குரல் கேட்கிறது
புத்தகங்களையும் பொருட்களையும் கொஞ்சம்
கொஞ்சமாய் வீழ்த்துகிறேன்
சிரித்துக்கொண்டே தப்பித்துவிட்ட சிரிப்பொலி கேட்கிறது
உருவம் புலப்படுவது போல் இருக்கிறது
அடுத்து நான் விழ வேண்டும்
துணிகள் ஏராளமாய்க் கொண்ட இழுப்பறை ஒரு பக்கம்
ஆவலான சிரிப்பொலி மறுபக்கம்
நான் வீழ்ந்தேன் நடுக்கடலுக்குள்
எழுந்தேன்

* ஜோஸப் ப்ராட்ஸ்கியின் When I Embraced These Shoulders என்ற கவிதையை நான் மொழிபெயர்த்து அது ழ - 19 (அக்-1981) இதழில் வெளிவந்தது. அக்கவிதையின் 18வது வரியிலிருந்து இந்தத் தலைப்பை ஆத்மாநாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார், இந்தக் கவிதை ழ - 20 (பிப். 1982) இதழில் வெளிவந்தது.

ஒரு கொடி ஒரு படகு, , ,

கொடியொன்றைக் கொடுத்தார் ஒருவர்
சின்னக் காகிதத்தால் ஆனது
பாதி நீலம் பாதி பச்சை
நட்ட நடுவிலே ஒரு நட்சத்திரம்
அழகாய் இருந்தது
ஒன்றை ஸ்டாம்பு ஆல்பத்திலும்
இன்னொன்றைச் சட்டையிலும் குத்திக்கொண்டேன்
சந்தோஷமாய்க் கடற்கரையோரம் நடந்தேன்
மறுபுறக் கட்டிடம் ஒன்றிலிருந்து
ஒருவர் வந்தார்
என்ன கொடி இது ஏது இது வினாத்தொடுத்தார்
ஒருவர் கொடுத்தார்
அழகாய் இருந்தது
அணிந்துகொண்டேன் என்றேன்
யார் எனக் கேட்டுத் தொடர்பு கொண்டு
கொடியைப் பிடுங்கிக்கொண்டார்
சிலர் அருகில் வந்து
படகு ஒன்று தயாரித்துள்ளோம்
நீங்கள் வர வேண்டும் என்றனர்
கடலில் படகில் குழந்தைகள்தான் செல்ல வேண்டும்
அதுதான் பொருத்தம் என்று கூறி
குழந்தைகளுக்கு மிட்டாய் தந்து
கையசைத்தேன்
வீட்டிற்கு வந்தபொழுது
உடன் செல்ல வேண்டிய நண்பர்
முன்னேமேயே புறப்பட்டுவிட்டிருந்தார்
எங்கும் பழகிய முகங்கள்



கனவு

என்னுடைய கனவுகளை
உடனே அங்கீகரித்து விடுங்கள்
வாழ்ந்து விட்டுப்போனேன்
என்ற நிம்மதியாவது இருக்கும்
ஏன் இந்த ஒளிவு மறைவு விளையாட்டு
நம் முகங்கள்
நேருக்கு நேர் நோக்கும்போது
ஒளி
பளிச்சிடுகிறது
நீங்கள்தான் அது
நான் பார்க்கிறேன்
உங்கள் வாழ்க்கையை
அதன் ஆபாசக் கடலுக்குள்
உங்களைத் தேடுவது
சிரமமாக இருக்கிறது
அழகில்
நீங்கள் இல்லவே இல்லை
உங்கள் கனவு உலகத்தைக் காண்கிறேன்
அந்த கோடிக்கணக்கான
ஆசைகளுள்
ஒன்றில்கூட நியாயம் இல்லை
தினந்தோறும் ஒரு கனவு
அக் கனவுக்குள் ஒரு கனவு
உங்களைத் தேடுவது சிரமமென்று
நான் ஒரு கனவு காணத்தொடங்கினேன்
உடனே அங்கீகரித்து விடுங்கள்



இசை/ஓசை

வயலினில்
ஒரு நாணாய்
என்னை போடுங்கள்

அப்பொழுதேனும்
ஒலிக்கிறேனா
எனப்பார்ப்போம்

அவ்வளவு துல்லியமாக
அவ்வளவு மெல்லியதாக
அவ்வளவு கூர்மையாக

எல்லா நாண்களுடனும்
ஒன்று சேர்ந்து
ஒலித்தப்படி

உள் ஆழத்தில்
ஒலியின்
ஆளரவமற்ற
இடத்தில்
மிக மிக மெலிதாய்
ஒரு எதிரொலி கேட்கிறது
கூர்ந்து கேட்டால்

அதே துல்லியம்
அதே மென்மை
அதே கூர்மை

தரிசனம்

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்
ஆயினும்
மனதினிலே ஓர் நிம்மதி

எழுதுங்கள்



எப்படி எழுத வேண்டும் என்று
நான் கூறவில்லை
உங்கள் வரிகளில்
எந்த விபரீதமும் நிகழ்வதில்லை
வெற்று வெளிகளில்
உலவும் மோனப் புத்தர்கள்
உலகம் எக்கேடாவது போகட்டும்
காலத்தின் இழுவையில் ரீங்காரிக்கின்றேன்
எனப் பார்வையின் விளிம்பில் இருக்கிறார்கள்
உலகப் பாறாங்கல்லில் நசுங்கியவன் முனகலின்
தொலை தூர எதிரொலி கூடக் கேட்கவில்லை
வார்த்தைகளின் சப்தங்கள்
அதற்குள்ளேயே மடிந்து விடுகின்றன
எழுதுங்கள்

பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும்




முத்தம்

முத்தம் கொடுங்கள்
பரபரத்து
நீங்கள்
முன்னேறிக்கொண்டிருக்கையில்
உங்கள் நண்பி வந்தால்
எந்தக் தயக்கமும் இன்றி
இறுகக் கட்டித் தழுவி
இதமாக
தொடர்ந்து
நீண்டதாக
முத்தம் கொடுங்கள்
உங்களைப் பார்த்து
மற்றவர்களும்
அவரவர்
நண்பிகளுக்கு முத்தம் கொடுக்கட்டும்
விடுதலையின் சின்னம் முத்தம்
முத்தம் கொடுத்ததும்
மறந்துவிட்டு
சங்கமமாகிவிடுவீர்கள்
பஸ் நிலையத்தில்
ரயிலடியில்
நூலகத்தில்
நெரிசற்பூங்காக்களில்
விற்பனை அங்காடிகளில்
வீடு சிறுத்து
நகர் பெருத்த
சந்தடி மிகுந்த தெருக்களில்
முத்தம் ஒன்றுதான் ஒரே வழி

கைவிடாதீர்கள் முத்தத்தை
உங்கள் அன்பைத் தெரிவிக்க
ஸாகஸத்தைத் தெரிவிக்க
இருக்கும் சில நொடிகளில்
உங்கள் இருப்பை நிரூபிக்க

முத்தத்தை விட
சிறந்ததோர் சாதனம்
கிடைப்பதரிது
ஆரம்பித்துவிடுங்கள்
முத்த அலுவலை
இன்றே
இப்பொழுதே
இக்கணமே
உம் சீக்கிரம்
உங்கள் அடுத்த காதலி
காத்திருக்கிறாள்
முன்னேறுங்கள்
கிறிஸ்து பிறந்து
இரண்டாயிரம் வருடங்கள் கழித்து
இருபத்தியோறாம் நூற்றாண்டை
நெருங்கிக்கொண்டிருக்கிறோம்
ஆபாச உடலசைவுகளை ஒழித்து
சுத்தமாக
முத்தம்
முத்தத்தோடு முத்தம்
என்று
முத்த சகாப்தத்தைத்

துவங்குங்கள்




காட்சி





முதலில்
நீதான் என்னைக்
கண்டுகொண்டாய்
எனக்குத் தெரியாது
மனிதர்களைப் பார்த்தவண்ணம்
முன்னே வந்துகொண்டிருந்தேன்
உயிருடைய ஒரு முகத்துடன்
பளிச்சிட்டுத் திரும்பினாய்
பின்னர் நடந்தவைக்கெல்லாம்
நான் பொறுப்பல்ல
எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய்
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க
காட்சிகள் மாற மாற
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம்.

வீழ்ச்சி நிலை ஒன்று

அறிவு எதற்கு
பொருள் எதற்கு
அனுபவங்கள் எதற்கு
காலம் வெளி
ஒன்று இரண்டு
எனத்
தேடித் தேடித் தேடித்
தெளிவின்மையில்
ஒரு சுகங்கண்டு
மருண்டு
அதுவேயாகி
காண்போரைச் சினந்து
ஏன்
ஆர்ப்பரிக்கும் கடலலைகள்
நகைக்க
சிறுமீன்கள் நம்முடனே
மௌன மொழி பேச

ஒரு புளியமரம்

ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று
தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோது
நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா
திடுக்கிட்டேன் அப்புளியமரம் கண்டு
நினைவிருக்கிறதா அன்றொரு நாள்
நீ புளியம்பழங்கள் பொறுக்க வந்தபோது
என் தமக்கையின் மடியில் அயர்ந்துபோனாய்
அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே
உன் முகத்தில் உடலில் எங்கும்

வா எப்படியும் என் மடிக்கு


வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு
(இரண்டாம் பதிப்பு)*
வகுப்புக்கு வந்த எலும்புக்கூடுகள்
இன்று
படித்துப் பட்டம் பெற்று
டாக்டர் பட்டமும் பெற்று
ஆட்சி புரியத் துவங்கின
வேலை செய்யும்
எல்லா எலும்புக்கூடுகளும்
கலகலத்து
மினுமினுக்கி
சிலுசிலுக்கி
சந்தோஷமாய் இருப்பதாய்
பாவனை செய்தன
புதிதாய்ப் பிறந்த எலும்புக்கூடுகள்
வகுப்புகளுக்கு
டிபன் பாக்ஸ் எடுத்துச் செல்வது
தவிர்ந்துவிட்டது
வாத்தியார் எலும்புக்கூடுகள்
புதிய புதிய
புத்திசாலியான
ஓட்டுப் போடக்கூடிய
எலும்புக்கூடுகளை
உருவாக்கி மகிழ்ந்தன
பெரும்பாலும்
ரத்தம் சுண்டிய
கரப்பான்களும்
ஒட்டுப் பூச்சிகளும்
ஏலக்காய்ச் செடிகளைக்
கெட்டியாய்ப் பற்றிக்கொண்ட
வெளிறிப்போன பல்லிகளும்
இன்னும் சில
ஜீவராசிகளும்
கூட்டணிகள் அமைத்துப்
போராடத் தயாராயின
அதற்குள் எலும்புக்கூடுகள்
ஓட்டுச் சீட்டைக்
கையில்
தயாராய் வைத்துக்கொண்டன

* இதே தலைப்பில் ஞானக்கூத்தனின் கவிதை ‘அன்று வேறு கிழமை’தொகுதியில் இடம் பெற்றுள்ளது. எனவே ஆத்மாநாம் தனது கவிதையை இரண்டாம் பதிப்புஎன்று பெயரிட்டிருக்கிறார்.

என் ரோஜாப் பதியன்கள்
என்னுடைய இரண்டு ரோஜாப் பதியன்களை
இன்று மாலை சந்திக்கப் போகிறேன்
நான் வருவது அதற்குத் தெரியும்
மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள்
பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவது
எனக்குப் புரிகிறது
நான் மெல்லப் படியேறி வருகிறேன்
தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றன
புன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன்
செருப்பைக் கழற்றி முகம் கழுவி
பூத்துவாலையால் துடைத்துக்கொண்டு
கண்ணாடியால் எனைப் பார்த்து
வெளி வருகிறேன்
ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்தி
என் ரோஜாப் பதியன்களுக்கு ஊற்றுகிறேன்
நான் ஊற்றும் நீரைவிட
நான்தான் முக்கியமதற்கு
மெல்ல என்னைக் கேட்கின்றன
என்ன செய்தாய் இன்று என
உன்னைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன் என
பொய் சொல்ல மனமின்றி
செய்த காரியங்களைச் சொன்னேன்
அதனை நினைத்துக் கொண்ட கணத்தைச் சொன்னேன்
சிரித்தபடி காலை பார்ப்போம்
போய்த் தூங்கு என்றன
மீண்டும் ஒரு முறை அவற்றைப் பார்த்தேன்
கதவைச் சாற்றி படுக்கையில் சாய்ந்தேன்
காலை வருவதை எண்ணியபடி

ஓவிய உலகம்

ஓவியம் உலகை அடக்கும்
உலகம் ஓவியத்தை அடக்கும்
ஓவியன் தன்னை அடக்கி
உலகை ஓவியத்துக்குள் ஒடுக்குவான்

உயிர் மூச்சை வண்ணக் கலவையாக்கி
செங்குருதி வியர்வை கலக்கி
                ஒரு முகம்
                ஒரு ஜாடி
                ஒரு காட்சி

காம அவஸ்தைகள் மனப் போராட்டங்கள்
ஒடுக்கப்பட்ட உயிர்களின் ஓலோலம்
எல்லாம் ஒவ்வொன்றாய் சட்டமாகும்

உலகம் அடங்கிவிட்டது
ஆர்ப்பரிக்கும் ஓவியன்
ஓவியம் தோற்றுவிட்டது
கூச்சலிடும் விமர்சகன்

தொடரும் போட்டியில்
முகம் புரியா முகங்கள்


அவள்

பத்து மாதங்களுக்குள்
மீண்டும்
ஒன்றுக்கிருக்கத் தடை
எதனால் வீழ்ந்தார்களோ
மறுபடியும் அதே வேறு பெயரில்
நல்ல வேளை நான் வீட்டிலேயே
இருந்துவிட்டேன்
ஆனால் திடீரென்று
சாலைகளில்
அழுத்தமான வண்ணத்தில்
இருக்கும் அவை
கட்டணம் அதே பத்துக் காசுகள்
அதே வீரய்யாவோ வெங்கய்யாவோ
உள் நுழைந்தேன்
கால் வைத்த இடமெங்கும்
நீக்கமற நிறைந்த அழுக்கும் வாசனையும்
உடன் வெளியேறினேன்
காக்கி நிக்கர்காரன்
பத்துக் காசு என்றான்
இந்த அசுத்தத்திற்குள்
என்னால் போக இயலவில்லை
உனக்கெதற்குப் பத்துக் காசு என்றேன்
அந்தக் கணக்கெல்லாம் இங்கே செல்லாது
உள்ளே போனால் கட்டணம் என்றான்
நான் கோபத்துடன் மறுத்தேன்
அதற்குள்
தொப்பியுடன் இரண்டு காக்கிகள்
யாரைய்யா இங்கே தகராறு செய்வது
அரசாங்கக் கழிப்பிடத்திற்கெதிராய்
அவசர மாற்றப் புதுச்சட்டத்தின் கீழ்
உள்ளே தள்ளு இவனை
ஒன்றுக்கு வெளியே நான் உள்ளே
சரித்திரம் தலைகீழானாலும் மீண்டும் தலைகீழாகும்

அவசரம்

அந்த நகரத்தில்
இருவர் கூடினால் கூட்டம்
நால்வர் கூடினால் பொதுக்கூட்டம்

சாலையில் கூட்டமாய்ச் செல்லக் கூடாது
வீட்டுக்குள் யாரும் நடக்கலாம்
ஒவ்வொரு வீடும்
தார்ச்சாலையால் இணைக்கப்பட்டிருக்கும்

மறைவிடங்கள் அங்கில்லை
குளிப்பவர்கள் கூட்டங்கூட்டமாய்க்
குளிக்க வேண்டும்
தண்ணீர் கிடைக்கும் நள்ளிரவில் மட்டும்

சிகரெட் பிடிக்கவும் அங்கு தடை
ஆஷ்ட்ரேயை அதிகாரி பார்த்தால்
அவரை நகரத்தின் சகாராவுக்கு அனுப்புவார்
அங்கே ஏற்கனவே உள்ளவரோடு சேர்ந்து
அதனைப் பசுமையாக்க வேண்டும்

நகரத்தில் தள்ளிப்போடாத அவசரம்
உள் நாட்டு மனத் தெளிவு
நகரத்தின் மக்களுக்குக் கிடைக்கும் ஒரே டானிக்
கடுமையான உழைப்பு

பத்திரிகைகளில் விளம்பரங்கள் இல்லை
அதை வாங்கு இதை வாங்கு என்று
மலிவாக ஏராளமாகக் கிடைத்தது
நகரத் தலைவரின் பொன் மொழிகள்

எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள்
மந்திரிகள் அவரைப் புகழ்ந்தார்கள்
அரசாங்க அதிகாரிகள் புகழ்ந்தார்கள்

மக்கள் சுபிட்சமாய் இருந்தனர்

அவசரமாய் அவ்வப்போது ஒன்றுக்கிருந்து


உன்னுள் நிறையும் உலகம்

புதியதாய்
ஒவ்வொன்றும்
அக்கணத்தின்
உண்மைகள் கொண்டதாய்
உள்ள
உலகை நீ காணட்டும்
அதன்
ஆழ்ந்த இசையில்
மயங்கி நிற்கட்டும்


இதோ ஒரு கவிதை

இதோ ஒரு கவிதை இப்போது இவ்வறையில் பேசிக்கொண்டிருக்கும்நானும் நீங்களும் நாமிருவரும் என்றால் கோபம் கொள்ளும் இவ்வறை ரகசியங்கள் பதிவுசெய்து நடுவில் நமக்கு மட்டும் கேட்கும் குரல் அது, நம் குரல் தான் ஏன் எப்படி கேட்காதீர்கள்விளக்கினால் புரியாது விளக்கினால் தெளியாது இன்னும் யுகங்கள் பல இங்கிருப்பினும்யுகத்திற்கு எத்தனை பூஜ்யங்கள் எனப் பாட்டனுக்குத்தான் தெரியும் பின்னர் எங்கிருப்பேன் எப்படியும் சிலர் இப்படி இருப்பார்கள் என நம்பிக்கை இதுவா கவிதை என்ன இருக்கிறதுஇதில் எதையும் தேடாமல் சும்மா படியுங்கள் உங்கள் மூக்குக் கண்ணாடிகளை உடைக்கும்வார்த்தைகள் இதோ கழற்றி எறியுங்கள் சீக்கிரம் அப்போதுதான் தெரியும் தூக்கில்தொங்கும் தமிழ் வாத்யார் தொடரும் இன்னும் வரும் நாளை நமதே.

இது ஆண்கள் கழிவிடம்
பக்கத்தில் பெண்கள் கழிவிடம்
நகரத்தில் நாற்சந்திகளில்
படத்துடன் கட்டிடங்கள்
துப்புரவாளர் வீரய்யன்
எட்டு முதல் ஐந்து வரை
கட்டிய நகரச் சபைக்குப்
பத்துக் காசு வருமானம்
சுத்தமாய் நின்று எதிர்ச் சுவரில்
மூத்திரம் இருங்கள்

இப்போது போதுமிது
மீண்டும் பார்ப்போம்
உங்கள் கண்கள் காதுகள் சிவக்க


கேள்விக்குறி

மழை பொழிய வேண்டுமென்று
எழுத்தில்
மழை பொழிய வேண்டுமென்று
மையைக் கொஞ்சம் நனையவிட்டேன்
வெளிர்ப் பச்சை நிறத்தில்
காகிதத்தில் பரவியது
வர்ணத்தில் மழை பொழிந்துகொண்டிருந்தது
ஒரு பகுதியில்
நீலத்தைத் தெளித்தேன்
இன்னொரு புறத்தில் கறுப்பை உதறினேன்
மற்றும் ஓர் புறத்தில் சிகப்பை
வண்ண வண்ணமாய்
மழை பொழிந்துகொண்டிருந்தது
அப்பொழுது
ஒரு பொருள்
குறுக்கே வந்தது
மழை அப்பொருளின் வண்ணமாயிற்று
மாறிவரும் மழையின் முதல் வண்ணம்
என்ன என்று
ஒரு கணம் நிதானித்தேன்
வர்ணமற்று
மழை பொழிந்துகொண்டிருந்தது
வர்ணங்களற்ற அம்மழை
குளிர்ச்சியாய் இருந்தது
தொடர்ந்து அம்மழை
மனத்தில் பெய்துகொண்டேயிருந்தது
வெளியே
வண்ண வண்ணமாய் மழை
ஒவ்வொரு கணமும் நிதானித்துக்கொண்டிருந்தேன்
உள்ளும் புறமும் அற்ற ஒரு பொருள்
உருவாக்கம் கொண்டது


இரண்டு கவிதைகள்

நூலக மேசைக்கருகில்
ஒருவர் புத்தகம்
படித்துக்கொண்டிருக்கிறார்
அவர் படிப்பது வேறு புத்தகம்
நீங்கள் படிப்பது வேறு புத்தகம்
ஒரு நாள்
நீங்கள் இருவருமே
ஏன் எல்லோருமே
ஒரே ஒரு புத்தகத்தைத்தான் படிக்கப்
போகிறீர்கள்
அது உங்கள் புத்தகம்தான்

    தாள்கள் படபடக்க
    எழுத்துக்கள் வார்த்தைகளாகி
    வார்த்தைகள் வாக்கியங்களாகிப்
    பொருள் கிடைத்தது
    பொருள் கிடைத்தவுடன்
    உலகம் நாசமாகி
    புதியதாய்த் தெரிந்தது ஒரு உலகம்
    பொருள் கிடைத்ததோ ஒருகணம்தான்
    அந்தக் கணமும் கைநழுவிப் போகப்
    பார்த்த பழைய உலகத்தையே
    மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்
    தாள்கள் படபடக்க

சாதனை

சாதித்திருக்கிறாயா நீ
என்றது ஒரு கேள்வி
என்னிடம் இப்பொழுது
பதில் இல்லை
என் உடல் மரித்த பின்
எழும் கல்தூண்
முன் கேள்


2083 ஆகஸ்ட் 11

என் கவிதை ஒன்று
இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில்
கிடைத்தது
கடற்கரையில்
நானும் ஞானக்கூத்தனும்
பேசிக்கொண்டிருந்தோம்
சுண்டல் வாங்கிப் பிரித்தால்
காகிதத்தில் ஒரு கோடு
ஆத்மாநாம் எனும் வாசகங்கள்
கவிதை ஆரம்பம்
ஆச்சர்யத்துடன்
ஞானக்கூத்தனைக் கேட்டேன்
இன்னும் இங்கேவா இருக்கிறோம்
அவர்
சூளைச் செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது
என்றார்
என்ன இது வினோதம்
இருந்த இடத்திலேயே இருப்பது
என்றேன்
இருப்பதை உணர்வதே வாழ்க்கை
என்றார்
நகுலன் எங்கே என்றேன்
நவீனன் இறந்த மறுநாளே இறந்துவிட்டார்
என்றார்
உங்கள் சமீபத்திய கவிதை என்றேன்
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள
என்றார்
நன்றி என்றேன்
அப்பொழுதுதான்
ஒரு அணுகுண்டு வெடித்த
சப்தம் கேட்டது
இருவரும்
அகதிகள் முகாமிற்குத் திரும்பினோம்

அன்பு

அன்பு என்பதே
காண அரிதான உலகில்
கொடூரம் அளப்பரியதாக உளது
ஊசி ஏறிய அவள் கைவிரலில்
ரத்தம் கசிகிறது
துண்டித்த ஊசி துடித்துக்கொண்டிருக்கிறது
மேலாளன் வருகிறான் அவன்
வணிகப் பேச்சோடு
சிகித்ஸைக்கு வேண்டிய அன்பு கூடவா இல்லை
துணிகள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன
மனிதன்
நிர்வாணமாய்த் திரிகிறான்
நகரமெங்கும்
அன்பைத் தேடி
பயத்துடன்

விடு*

இந்த மரங்களுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னை எரித்துவிடு
இந்த மலர்களுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னைப் புதைத்துவிடு
இம்மனிதர்களுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னை வாழ விடு
இச்சிட்டுக் குருவிகளுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னைப் பறக்க விடு

*இந்தக் கவிதையை 1981ஆம் ஆண்டு தர்மபுரியில் இருந்து ஹோகேனக்கல்நீர்வீழ்ச்சிக்கு பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஆத்மாநாம் எழுதினார்.

கவிதை தலைப்பிடப்படாதது

இந்தக் கவிதை
எப்படி முடியும்
எங்கு முடியும்
என்று தெரியாது

திட்டமிட்டு முடியாது
என்றெனக்குத் தெரியும்
இது முடியும்போது
இருக்கும் (இருந்தால்) நான்
ஆரம்பத்தில் இருந்தவன்தானா

ஏன் இந்தக் கேள்வி
யாரை நோக்கி

இன்றிரவு உணவருந்தும்
நம்பிக்கையில் இங்கிருப்பேன்

இப்படியும் ஓர் நம்பிக்கை

இருந்த நேற்று
எனக்கிருண்ட கணங்கள்

அவற்றின் தவளைக் குரல்கள்
கேட்கும் அடிக்கடி
அதனை ஒதுக்கத் தெரியாமல்
தவிக்கையில்

நிகழ்ச்சியின் சப்தங்கள்
செவிப்பறை கிழிக்கும்

நாளை ஓர் ஒளிக்கடலாய்
கண்ணைப் பறிக்கும்

இருதயம்

இதோ இதோ என்று துடிக்கும்




இன்னும்

புறாக்கள் பறந்து போகும்
கழுத்திலே வைரத்தோடு
கிளிகளும் விரட்டிச் செல்லும்
காதலின் மோகத்தோடு
காக்கைகள் கரைந்து செல்லும்
தானியம் தேடிக்கொண்டு
குருவிகள் கிளுகிளுப்பூட்டும்
கிளைகளில் தவழ்ந்துகொண்டு
பாசிக் கறை படர்ந்த
தாமரைக் குளத்து நீரில்
நீளக்கால் மெல்ல அளையும்
கரை நிழல் கீழமர்ந்து
பழங்களைக் கடித்துத் தின்ற
அணில்களும் அவ்வப்போது
கேள்விகள் கேட்டாற்போலத்
தலைகளைத் தூக்கிக் காட்டும்
சிவனருள் பூசாரி
குடத்தில் நீரெடுப்பார்
மந்திரம் சொல்லும் வாயால்
தம்மையே நொந்துகொண்டு
கற்புடைப் பெண்டிர்கூட்டம்
அக்கரைக் கற்கள் மீது
ஊர்க்கதை பேசிக்கொண்டு
துணிகளைத் துவைத்துச் செல்லும்
வயல்களுக்கப்பால் இருந்த
சூரியன் மேலே சென்றான்
எருமைகள் ஓட்டிச் சென்ற
சிறுவனின் தலையில் வீழ்ந்தான்

மறுபடி மறுபடி

சொல்லச் சொல்லச்
சொற்கள் மயங்கும்
எழுத எழுத
எழுத்து இறக்கும்
குழம்பும் மனத்தில்
எழுத்தும் சொல்லும்
குப்பை மேட்டில்
கிடக்கும் பொருட்கள்
வரிகள் ஆகும்
வார்த்தைகள் எல்லாம்
விளக்கும் தத்துவம்
தான் என்ன
காற்றில் இருக்கும்
வார்த்தைகள் எல்லாம்
காதில் சொல்லும்
ரகசியம் என்ன
குருவை சிஷ்யன்
மறுபடி மறுபடி
குருவின் உதட்டில்
மறுபடி மறுபடி
சிஷ்யன் மறைந்தான்

குருவாய் மாறி

விடியலில் ஒரு கவிதை

அந்த மாபெரும்
பனிக்கட்டியின்
ஒரு முனையை
உடைத்தாகிவிட்டது
நண்பர்காள் நாம் அதனை
முழுவதும் உடைக்க வேண்டும்
உலகத்தின்
மிக உயர்ந்த புள்ளி
எவரெஸ்டில் இருப்பினும்
நமக்குத் தேவையான அளவு
சமவெளியை
நாம்தானே உருவாக்க வேண்டும்
நமக்குள் எதற்கு
உருகிக்கொண்டிருந்தும்
திடமாய் உள்ள பனிக்கட்டி
அதன் இரு முனையில்
நாம் இருந்தாலும்
நம் உருவம் நிழலாய்
ஏன் இருக்க வேண்டும்
ஒரு முனையை நான் உடைக்க
மறுமுனையை நீங்கள் உடையுங்கள்
சமவெளியில்
உறுதியாய்க் கைகுலுக்கி
உட்பரிமாற்றம் துவக்குவோம்
அமைதிப்பறவை
சிறகடித்துப் பறக்கட்டும்
நம் பார்வை
நேருக்கு நேர் சந்தித்து
மகிழ்ச்சி பரவட்டும்
சொல்லத் தகுமோ

இதுதான் வாழ்க்கை என

இயக்க விதி

என் மனம்
ஓர் கண்ணாடி
வண்ணங்கள் அற்ற

ஒலி
ஒளி
அசையும் அசையாப்
பொருட்கள்
வெளி
உள் மற்றும் அகண்ட

கருத்துக்கள்
கேட்ட மற்றும் படித்த
காலம்
எப்புறமும் பறந்த

அனைத்தும்

உட்சென்று
வெளியேறும்
இரு பக்கமும்
இருக்கும் போல் தோன்றி
ஒரே பக்கமாய்
இயங்கும்

அற்புதம்

இந்நிலையில்
இக்கண்ணாடி
இவ்வுலகெங்கும்
ஒன்றெனின்
அக்கண்ணாடி
பல கூறு ஆன
ஒன்று போலும்





விடுதலை

கண்ணாடிச் சிறைக்குள்
கண்ணாடிச் சிறை
அக்கண்ணாடிச் சிறைக்குள்
நான்

அக்கண்ணாடிச் சிறையைத்
திறந்து
வெளி வர முயல்கிறேன்

திறக்கும் வழியே இல்லை

எரிச்சலுற்று
உடைத்து வர
நினைக்கிறேன்
உள் மனப் போருக்குப் பின்
முயற்சியை விடுத்து
சும்மா இருக்க முடிவெடுக்கிறேன்

கண்மூடித் திறக்குமுன்
கண்ணாடிச் சிறையைக் காணோம்
எங்கும் முன்பிருந்த அதே ஒளி


செடி

சாக்கடை நீரில் வளர்ந்த
ஒரு எலுமிச்சைச் செடி
போல் நான்
அளிக்கும் கனிகள்
பெரிதாகவும் புளிப்புடனும்
தானிருக்கும்
கொஞ்சம் சர்க்கரையைச்
சேர்த்து அருந்தினால்

நல்ல பானகம் அல்லவோ

நிஜம்

நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமே நிஜமோ நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்

நிஜம் நிஜம் நிஜம்

முடிவில்

ஒரு பழைய துருப்பிடித்த
இரும்புப் பெட்டிக்குள்
என்னை
இருத்தி
ஒரு உறுதியான பூட்டால் பூட்டி
மூன்று நாட்கள்
மூன்று மணிகள்
மூன்று நிமிடங்கள்
மூன்று கணங்கள்
முடிவில் அழைத்தாலும்
நான்
இருந்தபடியே
துருப்பிடிக்காத இரும்புச்சத்தோடு
வெளி வருவேன்
மேலும் (?)
அமைதியோடு



ஆத்மாநாமின் பின்வரும் கவிதை ‘நான் இல்லை’ என்றே முடிகிறது:


நான் இருக்கிறேன்
நான் இருக்கிறேன் என்பது
தெரியாமலே இருக்கிறேன்.

நான் இருப்பதைத்
தெரிந்துகொண்டபோது
நானும்நானும் இருந்தோம்.

உண்மையான நானும்
உண்மை போன்ற நானும்
பேசிப்பேசி
உண்மை போன்ற நானாய்
நானாகிவிட்டேன்.

உண்மையான நான்
அவ்வப்போது ஆவேன்
உண்மை போன்ற நான்
மறைந்திருக்கையில்

உண்மை போன்ற நான்
இல்லவேயில்லை என்று
உண்மையான நான் சொல்லும்
சரி என்று
உண்மை போன்ற நான்
ஆமோதிக்கும்.

இதனைக் கவனித்த நான்
உண்மையான நானும் இல்லை
உண்மை போன்ற நானும் இல்லை.

நான் மட்டும் இருக்கிறேன்
என்றுணர்ந்தேன்.
நான் மட்டும் இருக்கையில்
அமைதியாய் இருந்தது.

அமைதியாய் இருப்பதை
உணர்ந்ததும்
நான் வேறு ஆகி விட்டேன்.
நானும் வேறான நானும் பொய்.

நான் இல்லை.


http://mdmuthukumaraswamy.blogspot.in/2013/01/9.html

பதில்

குற்றுகர முற்றுகரச் சந்திகளை
சீர்சீர் ஆய்ப் பிரித்து
தளை தளையாய் அடித்து
ஒரு ஒற்றை வைத்து
சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் மை நிரப்பி
எழுத்துக்களை உருவாக்கி
பொருளைச் சேர்த்து
வார்த்தைகள் ஆய்ச் சேர்த்து
ஒவ்வொரு வாக்கியத்திற்கும்
கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து
ஏதாவது சொல்லியாக வேண்டும்
நமக்கேன் வம்பு



ஆத்மாநாம்

ஒரு நிஜக்கதை

ஒரு நாள் இரவு
நிர்மலமான வானத்தின்
நட்சத்திரங்களை
எண்ண ஆரம்பித்தேன்
ஒரு மாபெரும் மனிதனாகி
எவரும் முயலாத
வேள்வியைத் துவங்கினேன்
எண்ணி எண்ணி எண்ணி
ணிண்எ ணிண்எ ணிண்எ
ண்எணி ண்எணி ண்எணி
சுத்த சரியாய் இருக்கையில்
திடீரென்று எங்கிருந்தோ
ஒரு நட்சத்திரம் வந்தது
அதையும் சேர்த்தேன்
மீண்டும் ஒன்று
இப்படியாக
ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
வந்துகொண்டேயிருந்தன
ஓய்ந்தனாய் ஓய்ந்தனாகி ஓய்ந்தனானேன்
நான் குறித்து வைத்திருந்த
அந்த எண்ணிக்கைச் சீட்டை
கிழித்து எறிந்தேன்
நிர்மல வானத்தில் நட்சத்திரங்கள்
கண் சிமிட்டி
தம்மையே சிமிட்டிக்கொண்டன
நான் என் மூலையில் சுருண்டிருந்தேன்
இடமொன்று வேண்டும்

இடமொன்று வேண்டும்
உட்காருவதற்கு
இந்த நகரம் எரிந்து
அஸ்தியான பின்
மூன்றாம் கட்டத்திலோ
நான்காம் கட்டத்திலோ
மீண்டும் மக்கள் உயிர்த்துத்
தேடத் தொடங்குவர்
இடமொன்றை எங்கேனும்

ஒரு நாள் இதற்கு
மதிப்புண்டாகும்

உயிர்த்து பரபரப்புடன்
செயல்படும் இந்த இடம்
செயலிழந்து அழிந்து
மீண்டும் உயிர்த்துக்கொண்டிருக்கும்
இந்த இடம்
ஒன்றுக்கிருக்க மலம் கழிக்க
உட்கார்ந்து சாப்பிட
இடம் இல்லை என்றாலும்
வேண்டும் ஒரு இடம்
உட்காருவதற்கு
அப்போது
பற்றிக்கொண்ட நகரத்தின் தீ
நெருங்கி வரும்
புழுதிப்புயல் கிளம்பி
என்னை மூழ்கடிக்கும்
தணல் சூழ்ந்து வரினும்
எழ மாட்டேன்
கிடைக்குமா ஒரு இடம்
உட்காருவதற்கு
சரித்திரத்தின் புதைமணலில்
நான் அமிழ
காலக்கணக்கில்
உயிர் கிடைக்கும் எனக்கு
வழக்கம் போல்
இடமொன்று வேண்டும்
உட்காருவதற்கு

5/3/10

சும்மாவுக்காக ஒரு கவிதை



உங்கள் நண்பரை சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர் நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களை சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும் போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள்



நன்றி : காலப் பறவை



5/3/10

சுற்றி

அரச மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
வேப்ப மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை ஒருவன்
எந்த மரத்தை சுற்றி
பிறந்த பிள்ளை இவன்
ஏதேனும் தறுதலை மரமாக இருக்குமோ?





நன்றி : காலப் பறவை



5/3/10


என் கடவுள் பிரசங்கத்தில்
சாத்தான் குரல் ஒலிக்கிறது
புழுக்கள் நெளிந்தாலும்
நான் உயிருடனே இருக்கிறேன்
யாரோ திட்டுகிறார்கள்
நான் கடந்து போகிறேன்
கடவுளைப் போல




--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/





காலப் பறவை



5/3/10

இரவில் பேய்கள்


குருட்டுக் கண்களைத்
திறந்து பார்த்தால்
இருட்டுதான்
பிரகாசமாய்த் தெரிகிறது.
செவிட்டுச் செவிகளைக்
கூராக்கி முயற்சித்தால்
நிசப்தம்தான்
கூச்சலாய்க் கேட்கிறது
நுகராத நாசியை
நுழைத்துப் பார்த்தால்
சாக்கடை மணம்
சுகந்தமாய் இருக்கிறது.
உருமாறிப் போனவன்
உடல் மாறி
மனம் மாறிய பின்.






--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி







5/4/10


சில எதிர்கால நிஜங்கள்
அரிசி மூட்டையிலிருந்து சிதறிய
அரிசி மணிகள் போல்
தப்பி தவறி திசை தடுமாறி ஓடி வந்த
சின்னஞ்சிறு சிற்றெறும்பு போல்
மொசைக் தரையில் தவறிப்போன
ஒற்றை குண்டூசி போல்
இவற்றைப் போல் இன்னும்
ஆயிரக்கணக்கான போல்கள்

நன்றி : காலப் பறவை



5/4/10


பழக்கம்
எனக்கு கிடைத்த சதுரத்தில்
நடை பழகிக்கொண்டிருக்கிறேன்
கால்கள் வலுவேறின
நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று
என் நடப்பைத்
தெரிந்துகொண்ட சில மாக்கள்
விளம்பினர்
ரோட்டிலேயே நடக்க முடியவில்லை
ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம்
நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா
என் கால்கள்
என் நடை
என் சதுரம்
நன்றி : காலப் பறவை



5/4/10


ஐயோ
சொன்னால் மறுக்கிறார்கள்
எழுதினால் நிராகிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்


5/4/10

ஒரு தலைப்பிடாத கவிதையாய்

வாழ்க்கை
ஒரு நாள் இரண்டு நாள் என
தொடர்ந்து நாட்களை எண்ணினேன்
காலையை தொடர்ந்து மாலை
இரவாகும் காலப் புணர்ச்சியில்
பிரமித்து நின்றேன்
கடற்கரையில்


நன்றி : காலப் பறவை
5/4/10

அற்புதமாய் புலர்ந்த காலை
நீள நிழல்கள்
நீலத்தில் கோலமிட
வண்ணக்கலவயாய் உலகம்
எங்கும் விரிந்து கெட்டியாய் தரை
என் காலடியில்
நிஜம் புதைந்து கிடக்க




காலப் பறவை



5/4/10

தும்பி

எனது ஹெலிகாப்ட்டரை
பறக்க விட்டேன்
எங்கும் தும்பிகள்
எனது தும்பிகளை
பறக்க விட்டேன்
எங்கும் வெடிகுண்டு விமானங்கள்
எனது வெடிகுண்டு விமானங்களை
பறக்க விட்டேன்
எங்கும் அமைதி
எனது அமைதியை
பறக்க விட்டேன்
எங்கும் தாங்கவொண்ணா விபரீதம்




நன்றி : காலப் பறவை


5/4/10

களைதல்

என்னை களைந்தேன்
என் உடல் இருந்தது
என் உடலை களைந்தேன்
நான் இருந்தது
நானை களைந்தேன்
வெற்றிடத்துச்
சூனிய வெளி இருந்தது
சூனிய வெளியை களைந்தேன்
ஒன்றுமே இல்லை

எட்டி நடக்கும் கைகள்

இன்றைக்கு என்ன செய்வது
என்று கேள்வி கேட்டுச்
செல்லும் மக்களில் ஒருவர்

கூட்டத்தில் எங்கே செல்கிறார்

காலும் கையும் அவர்
பிறந்த வீட்டுச் சொத்து
தலையும் வயிறும் அவர்
வளர்ந்த வீட்டுச் சொத்து

அவர் எங்கே செல்கிறார்
தலையில் கை வைத்தபடி

தலைமேல் இருப்பது அவர் கையல்ல
வளர்ந்த வீட்டுக் கை

எங்கே செல்கிறார் அவர

ஓகோ ஓட்டளிப்பதற்கு
பிறந்த நாட்டுக் கடமையாற்றுவதற்கு

ஓ இன்னுமொரு கை அவர் முதுகில்
தள்ளுகிறதே
அது எந்தக் கை

நாட்டின் அதிகாரத்தின் கை
நாயகக் கடமை செய்ய
பலாத்காரம் செய்யும் கை

அவர் எங்கே செல்கிறார்
எங்கே அவர் செல்கிறார்

நடப்பது அவர் கையல்ல
எட்டி உதைக்கும் கையை
காலால் அவர் கைகள்


பின் அவன் ஒப்பீடு செய்யவில்லை - பெர்டோல்ட் ப்ரெக்ட்

பின் அவன் ஒப்பீடு செய்யவில்லை அவர்களை
மற்றவர்களுடன்
தன்னையோ
மற்றொருவருடன், ஆனால்,
தன்னையே அச்சுறுத்த இயலாத் தூசியாக
உடன் உருமாறுவதாய்
அச்சுறுத்தினான். பின்
அனைத்துப்
பின் நிகழ்வுகளுக்கும், நடத்தினான்
ஏதோ ஒத்துப்போனது போல ஒப்பந்தம் ஒன்றை
நிறைவேற்றுவதென. அழிந்தது
அவன் உள் ஆழத்தில்
எல்லா ஆசைகளும்.
ஒவ்வொரு அசைவிலும்
அவன் தனக்குத்தானே செய்யக் கூடாதெனக்
கண்டித்துக்கொண்டான்
அவனது எண்ணங்களும் உணர்ச்சிகளும் சுருக்கிக்கொண்டு
மறைந்தன,
விளக்கவுரை தவிர
அவன் தட்டிக்கழித்த வெற்றுக்காகிதம் போல்

ஜெர்மன் மூலம் : பெர்டோல்ட் ப்ரெக்ட
பெங்குவின் வெளியிட்டுள்ள Poetry of
the Commited Individual என்ற தொகுப்பிலிருந்து
(கவனம் இதழ் 7 மார்ச் 1982
ஆசிரியர் ஞானக்கூத்தன்)


















TWO POEMS OF ATHMANAAM


atmanam
http://madhuram.org/
Alms

Become a beggar
Ask for alms
Beseech,beg – Louder !
Not as far as the street corner
Your voice should cross the Infinite space
The food for your hunger
Is not in  few  grains of rice
You have nothing –
Except few square bricks.
There is no one , to even  offer you alms
Except Yourself

It’s not me saying all this
It’s You.

Reason

The waves that come crashing towards me
I do not talk to them
I just get out of their way
Not wanting to confront.
Yet on another day
when everything remains quiet
I would hurl huge rocks at them ,as far as I can.
They would float
As my boat
(Translated by Karthik)


20 hrs ·
Tuesday, ‎July ‎7, ‎2015






ஆத்மாநாம் சில குறிப்புகள்

அழகியசிங்கர்

1984 ஆம் ஆண்டு ஜøலை 6ஆம் தேதி ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அந்தச் செய்தியைக் கேட்டு அவருடைய நெருங்கிய நண்பர்களான ஞானக்கூத்தன், காளி-தாஸ், ஆர் ராஜகோபாலன், எஸ் வைத்தியநாதன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன் அடைந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.


ஆத்மாநாம் ழ என்ற பத்திரிகையை ஆரம்பித்தாலும், சில இதழ்களுக்குப் பிறகு அவரால் அந்தப் பத்திரிகையைக் கொண்டு வர முடியவில்லை. ஞானக் கூத்தன், ஆர் ராஜகோபாலன் போன்றவர்கள் தொடர்ந்து கொண்டு வர காரணமாக இருந்தார்கள். ....... என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டபோது, அவரைப் பார்க்கச் சென்ற அவருடைய நெருங்கிய நண்பர்கள் கண்கலங்கி விட்டார்கள். ஆனால் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்த நோயின் தாக்கத்தோடு இருக்கும்போதுதான், நான் ஆத்மாநாமை ஒருமுறை சந்தித்தேன். வைத்தியநாதன் என்ற நண்பருடன்.

நான், வைத்தியநாதன், ஆத்மாநாம் ராயப்பேட்டையில் உள்ள ஆனந்த் வீட்டிற்கு முதலில் சென்றோம். ழ வெளியீடாக வந்த கவிதைத் தொகுதிகளை வாங்கினேன். காகிதத்தில் ஒரு கோடு என்ற ஆத்மானமின் கவிதைத் தொகுதியையும் அவருடைய கையெழுத்தில் வாங்கினேன்.

நாம் சிலசமயம் சிலரைப் பார்க்கும்போது நமக்கு அவர்கள் மீது காரணம் புரியாத பரிதாப உணர்ச்சி ஏற்படும். ஆத்மாநாமைப் பார்க்கும்போதும், எனக்கு அவ்வாறான உணர்வு உண்டாகாமல் இல்லை.

ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் ஆத்மாநாமை நான் சந்திப்பது வழக்கம். அப்போது அவர் கைகளைக் குலுக்கும்போது அவர் கைகள் நடுங்கிக் கொண்டிருக்கும். அதிக போதையால் அவர் கைகள் நடுங்கின்றன என்பதை நான் பின்னால்தான் உணர்ந்தேன்.

இன்னொரு முறை அவர் ழ இதழ்களைக் கையில் வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருப்பார். அதை எல்லோருக்கும் அளித்துக் கொண்டிருப்பார். அப்போதெல்லாம் அவரைப் பார்க்கும்போது எனக்கு அவர் மீது பரிதாப உணர்வு ஏற்பட்ட வண்ணம் இருக்கும். அந்த சமயத்தில் எனக்கு அவர் .......... பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியாது. அவரைப் பற்றி அவர் நண்பர்கள் கூறும்போது. அவருக்கு உடனடியாக புகழ் வர வேண்டுமென்ற எண்ணம் இருந்ததாகக் கூறுவார்கள். இந்தக் காலத்தில் கவிதையை எழுதிவிட்டு அப்படியெல்லாம் புகழ் அடைந்து விட முடியுமா? சினிமாவில் எழுதினால் ஓரளவு எல்லோருடைய கவனத்திற்கும் வரலாம். ஆனால் ஆத்மாநாம் வித்தியாசமானவர்.

கம்பீரமாக காட்சி அளிக்கும் அவர் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பதை யாரால்தான் நம்ப முடியும். அவர் தற்கொலையைப் பற்றி குறிப்பிடும் அவர் நண்பர் ஸ்டெல்லா புரூஸ், தற்கொலை, வன்முறை, விபத்து போன்றவற்றால் மரணத்திற்குள்ளாகிறஆன்மா சில கொடிய தளங்களில் அல்லல்பட்டு அலைந்தாக நேரிடும் என்று சொல்கிறார்.

ஆத்மாநாம் பற்றி அப்படி குறிப்பிட்ட ஸ்டெல்லா புரூஸ் தானும் தற்கொலை செய்து கொண்டதைப் பற்றி என்ன சொல்வது.

ஆத்மாநாம் இரங்கல் கூட்டத்தை ஞானக்கூத்தன் ஏற்பாடு செய்தார்.

ஆத்மாநாம் படத்தை ஆதிமூலம் பிரமாதமான முறையில் வரைந்திருந்தார்.

அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன். ஆத்மாநாம் நண்பர்கள் எல்லோரும் சோகமாய் இருந்தார்கள். சிலர் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்கள்.

ஆத்மாநாம், ஞானக்கூத்தன் பற்றியெல்லாம் மோசமாக விமர்சனம் செய்யும் பிரமிள் அக்கூட்டத்திற்கு வந்திருந்து ஆத்மாநாம் பற்றி பேசியது ஆச்சரியமாக இருந்தது.

ஆத்மாநாமின் ஒரு கவிதையைப் படிக்கும்போது பிரமிள் அழ ஆரம்பித்து விட்டார். வெளியேற்றம் என்பதுதான் அந்தக் கவிதை.

வெளியேற்றம்

சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல
என் உடன்பிறப்புகள்
நான்
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே

பிரமிள் சொன்ன ஒரு விஷயம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ஆத்மாநாம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் உள்ள கணத்தில் ஆத்மாநாம் நினைத்திருந்தால், தன் முடிவை மாற்றிக்கொண்டிருக்க முடியும். அந்தக் கணம் மிக முக்கியமானது.

@@@@@@@@@@@@@@@
நேற்று கடற்கரை சென்றிருந்தோம். திருவல்லிக்கேணி முரளி கஃபே-க்குச் செல்லலாமோ என்றொரு எண்ணம் வந்தவுடனேயே ஆத்மாநாமின் நினைவால் அறுபட்டது. ஸ்டெல்லா புரூஸ் எழுதுகிறார் ("என் நண்பர் ஆத்மாநாம்,” விருட்சம் வெளியீடு): “மனச்சிதைவின் முதல் தாக்குதலுக்கு நான்கு மாதங்களுக்கு முன் ஆத்மாநாமும் நானும் மெரீனா கடற்கரையை நோக்கி நடந்துகொண்டிருந்தோம். பக்கிங்காம் கால்வாயின் பாலத்தைத் தாண்டி வலதுபுற நடைபாதையில் சென்று கொண்டிருந்தோம். தூரத்தில் கடற்கரைச்சாலையில் இருந்து திரும்பி அவள் அவளுடைய பெற்றோர்களுடனும் தங்கைகளோடும் வந்தாள். நாங்கள் அவர்களைப் பார்த்துவிட்டோம். அவர்களும் எங்களைப் பார்த்துவிட்டார்கள். ஆத்மாநாமின் உடல் உயர்ந்து விறைத்தது. அவர்களுடைய தோற்றத்திலும் நிசப்தம். இறுக்கம். நாங்கள் அவர்களையும் அவர்கள் எங்களையும் எதிர்கொண்டு கடந்தோம். ஆத்மாநாம் மௌனமாகவே நடந்துகொண்டிருந்தார். கடற்கரைச்சாலையின் புல்வெளியில் அமர்ந்தோம்.” ... ஆனால் இத்தனை நிதானமாகவா எல்லாம் நடந்தது? இந்த நிகழ்ச்சியை புரூஸ் என்னிடம் சொன்னபோது வாழ்வே அபத்த நாடகீயமுமாக அல்லவா இருந்தது. அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் ஆத்மாநாம் இரு கைகளையும் மேலேயுயர்த்தி வானத்தை நோக்கி ஓவென அலறினார் என்றார் புரூஸ். அந்தச் சந்தர்ப்பம்தான் பின்னால் அவர் மனநிலைப் பாதிப்பின் அறிகுறியாக அமைந்தது என்றும் சொன்னார். நேசித்தவளிடமிருந்து பிரிந்தோம் என்பது புரிபட்ட தருணமோ அது பிளவுண்ட மனதுக்குச் சூசகமாக. இது நடந்த இடம் முரளி கஃபேக்கு முன்னால் என்றும் என்னிடம் கூறிய நினைவு. எனவே அந்த ஓட்டலின் பெயரை நேற்றுச் சொல்லாமலேயே இருந்துவிட்டேன். ஆத்மாநாமும் புதுமைப்பித்தனும் குபராவும் மௌனியும் நிழல்களான உருவெளித்தோற்றத்தில் மெரீனா எப்போதும் எனக்கு. நவீனத்துவ உருவெளித்தோற்றமும்கூட அது.
ஆத்மாநாம் கவிதைகள்
பதிப்புரை

ஆத்மாநாம் கவிதைகளை முழுமைப்படுத்தும் முயற்சியில்தான் 1989 ஆம் ஆண்டு (தன்யா-பிரம்மா வெளியீடாக) ஒரு நூல் கொண்டு வரப்பட்டது, இந்தத் தொகுப்புக்கு முன் (ஆத்மாநாம் கவிதைகள்) ஆத்மாநாம் ‘காகிதத்தில் ஒரு கோடு’ என்ற மிக மெல்லிய ஒரு தொகுதியை வெளியிட்டிருந்தார். ழ வெளியீடாக மே 1981இல் வெளிவந்த அதில் 37 கவிதைகள் இடம்பெற்றன. இதற்குப் பிறகு அவரிடம் ஒரு பெரிய தொகுப்புக்கான கவிதைகள் சேர்ந்திருந்த போதிலும் அந்தக் காலகட்டத்தில் வெளியீட்டு வசதிகள் மிகக் குறைவாக இருந்ததால் ஒரு தேக்கநிலை இருந்தது. ஒரு புத்தகம் அல்லது கவிதைத் தொகுப்பு வெளிவருவது ஒரு கனவு நிறைவேற்றத்திற்கு இணையாகக்கூடக் கருதப்பட்டது. இந்தச் சமயத்தில்தான் ஆத்மாநாம் தனது கவிதைகளின் கையெழுத்துப் பிரதிகளை என்னிடம் தந்து திரு. மீராவின் உதவியுடன் இன்னொரு தொகுப்புக்குமுயற்சி எடுக்கச் சொன்னார். ஆனால் அப்போது மீரா வெளியிட்ட ‘அன்னம் நவகவிஞர் வரிசை’ யில் ஆத்மாநாம் இடம்பெற முடியவில்லை. காரணம் ஏற்கெனவே ஆத்மாநாமுக்கு முதல் தொகுதி வந்துவிட்டிருந்தது. இருப்பினும் தன் அடுத்த தொகுதி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் எனப் பின்பற்றப்பட வேண்டிய குறிப்புகளை ஒரு கடிதத்தில் எழுதி, ஓவியர் கே. முரளிதரனிடமிருந்து சில கோட்டோவியங்களைப் பெற்று எனக்கு அனுப்பிவைக்கவும் செய்தார். அந்தத் தொகுப்புக்கு ஆத்மாநாம் வைத்த பெயர் சில எதிர்கால நிஜங்கள். இதற்கான அட்டை ஓவியத்தையும் திரு. கே. முரளிதரன் செய்து தந்திருந்தார்.

பொதுவாகத் தன் கவிதைகள் வெளிவந்த இதழ்கள் மற்றும் மாதம் போன்ற தகவல்களைப் பதிவு செய்து வைப்பது பற்றி ஆத்மாநாம் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வெளிவந்தவை, வெளியிடப்படாதவை என்று பிரித்து என்னிடம் இரண்டு கோப்புகளைக் கொடுத்திருந்தாரே ஒழிய வெளிவந்த இதழ்கள் பற்றிய குறிப்புகள் அவற்றில் இல்லை. இவை தவிர ஆத்மாநாமின் இறப்புக்குப் பிறகு அவரது அம்பத்தூர் வீட்டிலிருந்து 6 நோட்டுப் புத்தகங்களை நண்பரும் கவிஞருமான திரு. எஸ். வைத்தியநாதன் பத்திரமாக எடுத்து வைத்திருந்து என்னிடம் கொடுத்தார். அந்த இரண்டு கோப்புகளில் இல்லாத பல புதிய கவிதைகள் இந்த நோட்டுப் புத்தகங்களில் காணப்பட்டன. அவ்வாறே சில மொழிபெயர்ப்புகளும். என்றாலும் பிரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போவின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை முழுமை யாக்காது பென்சிலில் எழுதி வைத்திருந்தார் ஆத்மாநாம் - ஒரு வேளை பிறகு சீர்செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இப்படி விட்டிருக்கலாம். மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரை அவர் மொழியாக்கம் செய்தவற்றையும் சிற்றிதழ்களில் வெளியிட்டவற்றையும் பற்றி அவர் கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. சில மொழிபெயர்ப்புகளைப் பற்றிக்கடிதத்தில் குறிப்பிடடிருக்கிறார். ‘எல்சால்வாடாரில் காணாமல் போன நினாவுக்கு’ என்ற லத்தீன் அமெரிக்கக் கவிதையின் மொழி பெயர்ப்பின் கையெழுத்துப் பிரதியும் இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை. கணையாழியில் அது வெளிவந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதைத் தேடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டவில்லை. இது தவிர, மேலும் சில விடுபடல்கள் எனது கவனக்குறைவின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம். என்னிடம் கொடுத்திருந்தது போலவே கையெழுத்துப் பிரதிகளின் ஒரு கோப்பினைத் தன்னிடமும் ஆத்மாநாம் கொடுத்ததாக ஞானக்கூத்தன் கூறினார். அவரிடம் கொடுக்கப்பட்ட கோப்பில் இருந்தவற்றிற்கும் என்னிடம் தரப்பட்டிருந்த கோப்பில் இருந்த கவிதைகளுக்கும் ஏதும் விடுபடல் இருக்கிறதா எனச் சரிபார்த்து, விடுபடல்கள் எதுவுமில்லை என்று எனக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்தார். ஆனால் சின்னச் சின்ன வார்த்தை மாற்றங்கள் - இரண்டு அல்லது மூன்று கவிதைகளில்-இருப்பதாக அவர் எழுதியிருந்தார். நான் கூடுமானவரை என்னிடம் உள்ள கையெழுத்துப் பிரதிகளின் அடிப்படையில்தான் இந்தத் தொகுப்பு நூலைப் பதிப்பித்திருக்கிறேன்.

கடிதங்களைப் பொறுத்தவரை ஆத்மாநாம் சென்னை நண்பர்களுக்கு எதுவும் எழுதியிருக்கவில்லை என்று ஞானக்கூத்தன் மூலமாகவும் கவிஞர் ஆனந்த் மூலமாகவும் அறிந்துகொண்டேன். இதற்குக் காரணம் அவர்கள் வாரம் ஒரு முறையாவது திருவல்லிக்கேணியில் சந்தித்துக்கொண்டதாக இருக்கலாம் என்று ஆனந்தும் ஞானக்கூத்தனும் அபிப்ராயப்பட்டார்கள். எனவேதான் நான் என்னிடமிருந்த கடிதங்களிலிருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து இங்கே சேர்த்திருக்கிறேன்.

நேர்காணல் பதிவு செய்யப்பட்டது வேறு ஒரு விஷயம். கோவை அகில இந்திய வானொலிக்காக அவரை நான் நேர்காணல் செய்ய வேண்டி வந்தது. அதற்காகக் கோவை வந்தவர் ஊட்டிக்கு வருகை தந்தபோது இந்தப் பேட்டியைப் பதிவு செய்தோம். பேட்டியின்போது சுகுமாரன், பிரதிபா ஜெயச்சந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர். எனினும் நான் பதிவு செய்த பேட்டியின் முக்கியத்துவத்தை ஆத்மாநாம் இறந்த பிறகே உணர்ந்தேன். பிறகு அந்தப் பேட்டியுடன் ஆத்மாநாமின் ‘கவிதை பற்றி’ என்ற ஒருநீண்ட கட்டுரையையும் சில வெளிவராத கவிதைகளையும் சேர்த்துச் சிறிய நூலாக வெளியிட்டேன். புத்தக விமர்சனங்களை எழுதுவதிலும் பொறுப்பும் ஈடுபாடும் ஆத்மாநாமுக்கு இருந்தது. விமலாதித்த மாமல்லனின் சிறுகதைத் தொகுப்பிற்கும், ஆனந்தின் இரண்டு சிகரங்களுக்கு இடையேஎன்ற குறுநாவலுக்கும் அவர் எழுதிய மதிப்புரைகள் மீட்சி (மாத இதழாக வெளிவந்த சமயத்தில்) வந்தன.


ழ கவிதை இதழின் ஆசிரியராக இருந்தபோதே அவர் 2083 ஒரு அகால ஏடு என்ற, ஒற்றைத் தாளில் அச்சிடப்பட்ட ஒரு இதழைத் துவக்கினார். இதை அச்சிட அப்போது அவருக்குப்பண வசதி இல்லாததால் தட்டச்சு செய்து பிரதி எடுத்து எல்லோருக்கும் சுற்றுக்கு அனுப்பினார். ஆனால் அந்த அகால ஏடு ஒன்றே ஒன்றுதான் வெளிவந்தது.

வெளியீட்டுக் கால ஒழுங்கில் அன்றி ஆத்மாநாம் கவிதைகள் பதிப்பில் இருந்த வரிசையிலேயே கவிதைகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அது ஏற்கெனவே வெளிவந்த காகிதத்தில் ஒரு கோடு தொகுதியை உள்ளடக்கியது. வெளிவராத கவிதைகளும், பேட்டியும், கட்டுரைகளும், மொழிபெயர்ப்புக் கவிதைகளும், கடிதப்பகுதியும் இந்தப் பதிப்புக்காகப் பிரத்யேகமாய் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

‘யார் அராஜகவாதி?’ என்ற ஒரு நீண்ட கட்டுரைப்புத்தகத்தை ஆத்மாநாம் எழுதுவதற்குத் திட்டமிட்டுக் குறிப்புகள் சேகரிக்கத் தொடங்கியபோதிலும், அதன் எந்த வடிவமுமே எனக்குக் கிடைக்கவில்லை. அவர் செய்ய நினைத்துத் தொடங்கிய வேறுசில ஐரோப்பியக் கவிஞர்களின் கவிதை மொழிபெயர்ப்புகளையும் முடிக்காமலே விட்டுவிட்டார். குறிப்பாக அவருக்குப் பிடித்த அரசியல் நிலைப்பாடு கொண்ட பெர்டோல்ட் ப்ரக்டின் கவிதைத் தேர்வொன்றிற்கு அவர் திட்டம் வைத்திருந்தார். ஆனால் அதில் ஒரு கவிதையை மாத்திரமே மொழிபெயர்த்து முடித்திருந்தார். அந்தோனின் பார்த்துஸெக் என்ற கிழக்கு ஐரோப்பியக் கவிஞரின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை நான் செய்த சமயத்திலேயே அவரும் செய்திருந்தார். அவை வெளியான விவரங்கள் சரியானபடிக்குக் கிடைக்கவில்லை மொழிபெயர்ப்புக்கான கையெழுத்துப் பிரதிகளும் கிடைக்கவில்லை.

இந்தப் பதிப்பு வெளிவரக் காப்புரிமை அனுமதி அளித்த ஆத்மாநாமின் சகோதரர் திரு. ரகுநந்தன் அவர்களுக்கு என்னுடைய பிரத்யேக நன்றிகளைத் தெரிவிக்கவிரும்புகிறேன். ஆத்மாநாமின் கையெழுத்துப் பிரதிகள் குறித்துத் தெளிவுபடுத்திய ஞானக்கூத்தனுக்கும் மற்றும் கடிதங்கள் பற்றிய தகவல்கள் கேட்டபோது உதவிய ஆனந்துக்கும் என் நன்றிகள். புது எழுத்து ஆசிரியர் மனோன்மணி சில முக்கிய விடுபடல்களை உரியநேரத்தில் சுட்டிக்காட்டினார். கணையாழி யில் வெளிவந்த ஆத்மாநாமின் இரண்டு மொழிபெயர்ப்புகளை பிரதி எடுத்து உதவினார் ஸ்ரீநேசன். இந்த இருவரையும் இந்தச் சமயத்தில் நன்றியுடன் நினைக்கிறேன், முக்கியமாக இந்தப் பதிப்பு வருவதற்கு மிக அவசியமான தூண்டுதலாய் இருந்த மனுஷ்ய புத்திரனின் ஆர்வத்தையும்.

பிரம்மராஜன்

வேறொருவராகும் கலை...

ஆத்மாநாமின் கவிதைகள்: ஒரு மறுபார்வை

ஆத்மாநாமின் கவிதைகள் வெளிவந்த காலத்திற்கும் இன்றைக்குமான இடைவெளியில் அவருடன் எழுதிக்கொண்டிருந்த பல கவிஞர்களின் கவிதைகளில் அந்தக்கால கட்டத்திற்குரிய மங்கிய சாயல் படிந்துவிட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் இப்பொழுது படிக்கும்பொழுதும் ஆத்மாநாமின் கவிதைகளில் கிடைக்கக்கூடிய புத்துணர்வினை எந்த ஒரு கூர்ந்த கவிதை வாசகனாலும் மறுக்க முடியாது. அவரது கவிப்பொருள் எல்லைகள் கொண்டதாயிருந்தது என்பது உண்மை. அதிக வகைப்பாடுகளை அவர் முயன்று பார்க்கு முன் அவரது வாழ்வை அவரே முடித்துக்கொண்டுவிட்டார். ஆனால் எழுதப்பட்ட கவிதைகள் யாவும்தொய்வின்றி, செறிவுமிக்கவையாகவே வெளிவந்திருக்கின்றன. அவருடைய கவிதைச் சுயத்திற்கும் அவரது பட்டறிவுச் சுயத்திற்கும் இடையே அதிக வேறுபாடு இருக்கவில்லை என்பதை அவருடன் நெருங்கிப் பழகிய எவருமே சொல்லி விடுவார்கள். இருப்பினும் இன்று அவர் கவிதைகளைப் படிக்கும் பொழுது அவரது பல சுயங்களுக்கிடையில் அவர் உணர்ந்த முரண்பாடுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

2002இல் கவிதைகள் எழுதும் பெரும்பான்மையானோருக்கு “முற்போக்கு” அல்லது “பிற்போக்கு” போன்ற முத்திரைகள் குத்தப்படும் அசௌகரியங்கள் இல்லை. இதை இன்னும் நுண்மையாகச் சொல்வதானால், ஆத்மாநாம் எழுதிய காலத்தில் மேலோங்கியிருந்த தனிநபர் அனுபவ உலகத்திற்கும் பொதுநபர் அனுபவ உலகத்திற்குமிடையிலான பெரும் மோதல்கள் இன்றிருப்பதாகத் தெரியவில்லை. எனினும் சிறப்பாக எழுதப்பட்ட ஒரு கவிதையானது தனிநபர் மற்றும் பொதுநபர் அனுபவ உலகங்களுக்கு அப்பால், சென்றுவிடுகின்றது. அந்த “அப்பாலில்”் உள்ள எல்லையில் நல்ல கவிதைகள் மற்றும் மோசமாக எழுதப்பட்ட கவிதைகள் ஆகிய இரண்டு வகைகள் மாத்திரமே இருக்கின்றன. 70களிலும் 80களிலும் கட்சிக் கருத்துருவங்கள் கவிதை என்ற பெயரில் செண்டிமென்டல் அபத்தங்களாக உற்பத்தி செய்யப்பட்டன. அவற்றுக்கு ஆதரவளித்த விமர்சகர்களும் உற்சாகமாக அவற்றைக் கவிதை என்று கூறிப் புளகாங்கிதமடைந்தார்கள். கவிதையல்லாத அறைகூவல்களுக்கும் கோஷங்களுக்கும் இன்று நேர்ந்துள்ள கதியை கவிதையின் போக்குகளைக் கவனித்துக் கொண்டு வந்திருப்பவர்கள் நன்கு அறிவர்.

ஆத்மாநாம், “கவிதையின் அரசியல்மயமாக்கலைத்”் தகுந்த முறையில் எதிர்கொண்டவர் மட்டுமல்ல; அவரே மிகச் சிறந்த பொதுநபர்

அனுபவ உலகக் கவிதைகளை எழுதியுமிருக்கிறார். கவிதை என்ற பெயரில் பிரச்சார உற்பத்தி செய்தவர்களை அவர் “முற்போக்கு மடையர்கள்”் என்று தனது கவிதையொன்றில் குறிப்பிடுகிறார். ஆத்மார்த்தமான ஒன்றுதலுடன்தான் அவரது பெரும்பான்மைக் கவிதைகள் வெளிப்பட்டிருக்கின்றன:

இந்தச் செருப்பைப் போல்
எத்தனைப் பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனைப் பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்ளுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு

(நன்றி நவிலல்)

அவருடைய தோழமையுணர்வானது வெறும் “காம்ரேட்”் என்றழைப்பதில் மட்டும் நின்றுவிடவில்லை என்பதை வெளியேற்றம் கவிதையைப் படிக்கிறபோது உணர முடியும்.

கவிஞர் என்கிற ஒற்றை அடையாளத்தை அவர் விரும்பியிருக்கமாட்டார். அவர் உயிருடனிருந்தபோது ஒரு இலக்கியவாதி என்று அழைக்கப்படுவதையே விரும்பினார். ஏனெனில் அவர் ழ என்ற கவிதை ஏட்டின் ஆசிரியராக இருந்தார். மொழிபெயர்ப்பாளராக, கட்டுரையாளராக மற்றும் விமர்சகராகவுமிருந்தார். அவர் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த கவிஞர்கள் பெரும்பாலும் தம்மை ஒரு இயக்கத்துடன் பிணைத்துக்கொண்டவர்களாக இருந்தார்கள். நஸீம் ஹிக்மெத், நதன் ஸாக் போன்றோர் எடுத்துக்காட்டுகள். அவருக்கு ஓவியத்திலும் இசையிலும் இருந்த ஈடுபாடு அளவற்றது. சிறந்த எல். பி. ரெக்கார்டுகளின் சேகரிப்பினை அவர் வைத்திருந்தார். ஆனால் அவரது இசை ஈடுபாடு பொத்தாம்பொதுவான குறிப்புகளாகவே கவிதைகளுக்குள் கசிந்து வந்திருக்கின்றது. இசை பற்றிய தனித்துவ அனுபவங்களாக இல்லாமல், தமிழ்நாட்டின் சமகால ஓவியர்களுடன் அவர் கொண்டிருந்த நட்பு குறிப்பிடத்தக்கது.

எல்லாக் கலைகளும் இசையின் நிலையை எய்துவதற்கான யத்தனத்தைச்செய்கின்றன என்று குறிப்பிட்டார் வால்ட்டர் பேட்டர். கலைகளில் ஒரு முத்தி நிலையாக இசையைச் சொல்லலாம். இசையைக் கேட்டால் போதும். வார்த்தையாகவோ வரிவடிவமாகவோ, மொழிபெயர்த்தோ புரியவேண்டிய அவசியமில்லை. சிறந்த கவிதையின் இதயத்தில் ஒருஅரூப நடனமிருக்கிறது என்கிறார்கள் சிலர். கவிதையின் இதயம் ஒரு “நிச்சலன மௌனம்” என்கிறார்கள் வேறு சிலர். இதில் இரண்டாவதாகக் குறிப்பிட்ட விஷயம்தான் ஆத்மாநாமின் கவிதைகளுக்குச் சாலப் பொருந்துகிறது. இந்த நிச்சலன மௌனத்தை நோக்கியே ஆத்மாநாமின் பெரும்பான்மைக் கவிதைகள் யாத்திரை மேற்கொள்கின்றன. அமைதி அமைதி, இசை, ஓசை ஆகிய கவிதைகள் இதற்கு எடுத்துக்காட்டுகள். மேலும் அமைதி, மௌனம், இசை, ஓசை இவற்றுக்குமத்தியில் அர்த்தம் ஒன்றிருக்கிறதா என்கிற கேள்வியும் தேடலும் ஆத்மாநாமுக்கு எழுந்தவண்ணமிருக்கிறது. கேள்விகள் கேட்கப்படாமலே பதில்கள் உண்டாகும் அபத்தம் மற்றும் பொருள் கிடைத்தவுடன் உலகம் நாசமாகும் கலவரம் ஆகியவை இரண்டு கவிதைகளில் பதிவாகி இருக்கின்றன :

தாள்கள் படபடக்க
எழுத்துக்கள் வார்த்தைகளாகி
வார்த்தைகள் வாக்கியங்களாகி
பொருள் கிடைத்தது
பொருள் கிடைத்தவுடன்
உலகம் நாசமாகி
புதியதாய்த் தெரிந்தது ஒரு உலகம்
... ... ...

மேலும் கவிதை தானே எழுதிக்கொண்டுவிடும் ஆடோமாடிக் எழுத்துக்கான விழைவும் இந்தக் கவிதையில் இருப்பதைப் பார்க்கலாம். டாடாயிஸ்டுகளின் ஆடோமாடிக்ரைட்டிங் (Automatic Writing) பற்றித் தீவிர அக்கறை உடையவராயிருந்தார் ஆத்மாநாம். இவற்றுடன் அவரின் கவிதை உருவாக்கம் பற்றிய கவிதைகளையும் இணைத்துப்படிப்பது நல்லது. பதில் என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம்:

குற்றுகர முற்றுகர சந்திகளை
சீர்சீர் ஆய்ப் பிரித்து
தளை தளையாய் அடித்து
ஒரு ஒற்றை வைத்து
சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் மை நிரப்பி
எழுத்துக்களை உருவாக்கி
பொருளைச் சேர்த்து
வார்த்தைகள் ஆய்ச் செய்து
ஒவ்வொரு வாக்கியத்திற்கும்
கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து
ஏதாவது சொல்லியாக வேண்டும்
நமக்கேன் வம்பு.

கவிதையின் உச்சமே கடைசி வரியில் இருக்கும் கிண்டல்தான். பண்டிதர்களையும், யந்திரத்தனமாய் இடைவெளியேயின்றி எழுதித் தள்ளுபவர்களையும் பற்றியும் எழுதப்பட்டதாய் இதைக் கருதலாம்.

எழுதும் செயலால் எழுத்து மாற்றத்திற்குள்ளாகி ஒரு புதிய பொருள் தோற்றுவிக்கப்படுகிறது என்கிற சம்பிரதாயப் பார்வையிலிருந்து முற்றிலும் விலகிப்புதிதாய்ப் படைக்கப்பட்ட படைப்புக்குள்ளாகிற எழுத்தால் படைத்தவன் மாறிக்கொண்டேயிருக்கிறான் என்ற நூதனப் பார்வையை முன் வைக்கின்றன சில கவிதைகள். மனதின் உள்வயமான இயங்குதளங்கள் குறித்து அதி தீவிர பிரக்ஞை உடையவர்களுக்கே இத்தகைய கவிதைகள் சாத்தியமாகும். மேலும் ஓயாத

இயக்கமிகுந்த வரிகளைக் கொண்ட கவிதைகளை ஆத்மாநாமில் பார்க்கலாம். ஒரு சாதாரண விவரணைக் கவிதைகூட இறுதியில் விவரணை என்ற தளத்தினை மிஞ்சிவிடும் இயக்கம் கொண்டதாயிருக்கிறது. ஆரம்ப நிலையிலிருந்து சகலமும் தலைகீழாகும் தன்மையும் இந்தக் கவிதைகளில் உள்ளன. கோடுகளற்ற ஒரு வெற்றுத் தாளுக்கும் கோடுகளால் நிரப்பப்பட்ட ஒரு தாளுக்குமிடையிலானது போல. அனுபவத்திற்கும் அழகியலுக்கும் இடையிலான எதிர்நிலைகள் இக் கவிதைகளில் கைக்கொள்ளப்பட்டு இறுதியில் சமனப்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடையதைத் தவிர வேறு பல வாழ்க்கைகளை வாழமுடியாவிட்டால் (கற்பனையிலாவது) அவன் தன் சொந்த வாழ்க்கையையே சீராக வாழ முடியாதவனாகிப் போகிறான் என்று பால் வெலேரி ஒரு முறை குறிப்பிட்டார். இதைச் சாத்தியமாக்குவதற்கு ஒரு கவிஞனுக்குத் தேவைப்படுபவை முகமூடிகளாகும். இந்த முகமூடிகளின் தேவையை ஆத்மாநாம் அறிந்திருந்தார். பிறரின் வாழ்க்கைகளை வாழ்ந்துபார்க்கும் படைப்பாளி மனநிலையும் அவரிடம் காணப்படுகிறது, இதை ஜான் கீட்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞர் “நெகடிவ் கேபபிலிட்டி”் (Negative Capability) என்று குறிப்பிட்டார். ஆத்மாநாம் ஓவியன் என்று குறிப்பிடும்போது தன்னையே குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். சில சமயங்களில் அத்யந்த உணர்தலுடன்சக கலைத்துறை ஓவியனைக் குறிப்பிடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்:

ஓவியம் உலகை அடக்கும்
உலகம் ஓவியத்தை அடக்கும்
ஓவியன் தன்னை அடக்கி
உலகை ஓவியத்துக்குள் ஒடுக்குவான்

உயிர் மூச்சை வண்ணக் கலவையாக்கி
செங்குருதி வியர்வை கலக்கி
                    ஒரு முகம்
                    ஒரு ஜாடி
                    ஒரு காட்சி
                    ... ...

(ஓவிய உலகம்)

காளை நான் என்ற கவிதையில் மூக்கணாங்கயிறு பிணைக்கப்பட்ட ஒரு காளையாகவே தன்னை உணர்கிறார். அத்துடன் செடி என்ற கவிதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

உள்வயமான அனுபவத்தின் ஒருமையின் மீது கவிதை தன்னை ஸ்தாபித்துக்கொள்கிறது- அதாவது அனுபவப்படும் பிரக்ஞையின் மீது கவிதை இயங்குகிறது. உரைநடை போன்றவை வெளிவாழ்வின் தொடர் செயல்பாடுகளால் அமைந்த சட்டகத்தின் அடிப்படையில் இயங்குகின்றன. கவிதையின் ‘நான்’ எனும் சுயம் குறித்த தயக்கங்களும் சந்தேகங்களும் நவீன காலத்தில் எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய

அவசியம் உள்ளது. கவிஞன் இந்த வாழ்க்கையிலும் சரி, கவிதையிலும் சரி, இதைஎந்த அளவுக்கு உக்கிரமாக உணர்கிறானோ அந்த அளவுக்கு அந்தச் சுயத்திலிருந்து தப்பித்து “வேறு நபர்களில்” தன்னை நிறைத்துக்கொள்கிறான். எம்பிரிகல் சுயத்தின் (Empirical Self) யதேச்சைத்தன்மையும் தொடர்ச்சியின்மையும் கூட இதற்குக் காரணங்களாகின்றன. இதற்கு மிகப் பொருத்தமான எடுத்துக்காட்டு தோற்றம் என்ற கவிதை:

தோற்றம் சாதாரண விஷயமில்லை
ஒவ்வொருவருக்கும் தோன்றத் தெரிந்திருக்க வேண்டும்
நிஜவாழ்க்கையில் மட்டுமல்ல
கற்பனை வாழ்க்கையிலும்தான்
... ... ... 
ஒரு விஞ்ஞானியாக
ஒரு தத்துவ வாதியாக
ஒரு சிற்பியாக
ஒரு ஓவியனாக
ஒரு கவிஞனாக
ஒரு இசை ரசிகனாக
ஒரு நாடக இயக்கக்காரராக
ஒரு கூத்துக்காரராக
ஒரு நாட்டிய ரசிகராக
ஒரு திரைப்படக்காரராக
இவற்றில் நாம் யார்?
கண்டுபிடிப்பது கஷ்டம்
... ...

பொதுவான வாழ்வியலுக்கும் அழகியலுக்கும் ஒரு முரண் உண்டாவதைஇந்தக் கவிதையிலும் கவனிக்கலாம். ஆனால் கவிதையின் இறுதியில் அது சமன்பட்டு, வேறு பிரச்சினையாக மாறி அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடுகிறது, பட்டியலிடப்பட்டுள்ள முகமூடிகள் அனைத்திலும் சுயம் ஓரளவு கரைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டவுடன், கண்டுபிடிப்புக்குள்ளான சுயமும் கண்டுபிடித்த சுயமும் மாறிப்போய் அடுத்த இயங்கியல்நிலையை எட்டிப் பிடிக்கின்றன.

நாம் நாமா, நாம் அதுவா, அவர்களா அல்லது இவர்களா போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டபொழுதுதான் தனது வரலாற்று நாயகர்களின் வழியாகக் கிடைத்த முகமூடிகளைக்கண்டுபிடித்துக் கொண்டதாய் எஸ்ரா பவுண்ட் எழுதுகிறார்:

இதை இதுவரை எந்த மனிதனும் எழுதத் துணிந்ததில்லை, 
இருப்பினும் நானறிவேன், எவ்வாறு எல்லா உன்னத மனிதர்களின் ஆன்மாக்களும்
சில நேரங்களில் நம்மின் ஊடாய்க் கடந்து செல்கின்றனவென்று மேலும் நாம் அவர்களுடன் உருகி ஒன்றிணைந்துவிட்டோம், மற்றுமவை அவர்களின்
ஆன்மாக்களின்றி வேறில்லை


இவ்வாறே நான் தாந்தேவாக ஆகிறேன் ஒரு கணம் மறுகணம் ஃபிரான்ஸ்வா விலோன், கதைப்பாடல் - பிரபு மற்றும் திருடன்...

(Personae)

பல வேறுபட்ட வழிகளில் வஸ்துகளுக்கும் வார்த்தைகளுக்கு மிடையிலான இடைவெளியை குறைக்க முயன்றுகொண்டுதானிருக்கிறது கவிதை. வார்த்தை யதார்த்தத்தை நேர் சமமாகப் பிரதிபலிக்கக் கூடியது அல்ல என்பதை நாம் யாவருமே அறிவோம். மனிதர்களுக்கும் அவர்களின் இருப்புக்குமிடையில் சுயப் பிரக்ஞை நுழைந்து இடை வெளியை அதிகரித்துவிடுகிறது. இந்த இடைவெளியைக் குறைக்கும் முயற்சிகள் தென்படுகிற கவிதைகள் ஆத்மாநாமிடம்உண்டு:

சொல்ல சொல்ல
சொற்கள் மயங்கும்
எழுத எழுத 
எழுத்து இறக்கும்
எழுத்தும் சொல்லும்

இப்படியான ஒரு சூழ்நிலையில் ‘கண்டுபிடித்துக் கொள்ளப்படும்’
ஒரு வரிகூட அர்த்தம் வாய்ந்ததாக ஆக முடியும்:

குப்பை மேட்டில்
கிடக்கும் பொருட்கள்
வரிகள் ஆகும்

நவீன ஓவியத்திலும் சிற்பத்திலும் “ஃபவுண்ட் ஆப்ஜக்ட்ஸ்” (found objects) என்கிற ஒரு கருத்து உண்டு. யதேச்சையாய்க் கண்டெடுக்கப்படுகிற பொருள்களைச் சிற்பி/ஓவியன் தன் கித்தானிலோ அல்லது சிற்பத்திலோ சேர்த்துவிடும் ஒரு வழக்கமுண்டு. அப்படி எடுத்துச் செருகப்படும், பிரயோகிக்கப்படும் வஸ்துகளுக்கும் ஒரு எல்லை உண்டு. அப்படிப்பட்டதொரு யதேச்சைத் தன்மையைக் கவிதையில் ஆத்மாநாம் கோருகிறாரோ மேற்காட்டப்பட்ட வரிகளில்?

எமர்ஜென்ஸி காலத்தில் எழுதப்பட்ட கவிதைகளைப் பற்றியும்தனி மனித சுதந்திரம் பறிக்கப்படும் நேரத்தில் கவிஞன் எதிர்வினை தர வேண்டிய அவசியங்களைப் பற்றியும் வேலி, சுதந்திரம் உள்ளிட்ட பல கவிதைகள் பேசுகின்றன.

கடவுள் கொள்கை என்ற ஒன்று இருப்பது போல மேலோட்டமாகத் தோன்றினாலும்(தரிசனம்) ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளில் அதை மறுத்தே பேசுகிறார். காரணம்ஆத்மாநாமைப் பொறுத்தவரை கடவுளின் இடத்தை/மதத்தின் இடத்தை இன்று நிறைந்துக்கொண்டிருப்பது கவிதை. மதத்தின் இடத்தைக் கவிதை எடுத்துக்கொண்டுவிடும் என்று மேத்யூ ஆர்நால்ட் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதானித்ததை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். இருபதாம் நூற்றாண்டு அமெரிக்கக் கவிஞரான வாலஸ் ஸ்டீவென்ஸ் குறிப்பிட்டார்:

“After one has abandoned a belief in God, poetry is the essence which takes its place as life’s redemption.”

தன்னை அறிதல் என்ற பயணத்தின் இறுதியில் ஒரு சூன்ய நிலையைச் சந்திக்கிறார் ஆத்மாநாம். எனினும் இந்த சூன்யநிலையைச்சந்தித்த பின்னும் அவர் கவிதைகள் தொடரத்தான் செய்கின்றன. இந்த “இன்மை”யை அவர் இருத்தலியலின் வழியாகச் சென்றடையவில்லை, அவர் எழுதிய காலத்தில் மிகவும்பிரபலமான மோஸ்தராக இருத்தலியல் இருந்தபோதிலும். இந்தப் பயணத்தினூடாகப் பல “நான்”களின் முகமூடிகளைக் களைந்து செல்கிறார்:

என்னைக் களைந்தேன்
என் உடல் இருந்தது
என் உடலைக் களைந்தேன்
நான் இருந்தது
நானைக் களைந்தேன்
வெற்றிடத்துச்
சூனிய வெளி இருந்தது
சூனிய வெளியைக் களைந்தேன்
ஒன்றுமே இல்லை

(களைதல்)

டி. எஸ் எலியட்டின் வரிகளை இங்கு மேற்காட்டுவது பொருந்தும்:

தன்னை வேறு யாரோ ஒருவரென்று பாசாங்கு செய்யும் சுயத்திலிருந்து
நான் விடுதலையடைந்திருக்கிறேன். 
மேலும் எவர் ஒருவராகவும் நான் ஆகாதபோது
நான் வாழத் தொடங்குகிறேன்

யதார்த்தம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்றும், நிறுத்தலேயின்றி உருமாற்றிக்கொண்டும், துன்பப்பட்டுக்கொண்டும், பிற உலகங்களின் மீது தனது பதிவுகளைவிட்டுச் சென்றபடியுமிருப்பது மானுட பிரக்ஞை மாத்திரமே என்று நவீன ஜெர்மானியக்கவிஞரான காட்ஃபிரைட் பென் (Gottfried Ben) குறிப்பிட்டார். இதுவும் ஒரு விதபுராதன உள்ளுணர்வுக்குத் திரும்பும் நிலைதான் என்று புரிந்து கொள்ளலாம். யதார்த்தத்தினை மறுத்து உள்வயமான யாத்திரையை ஒரு தனிநபர் மேற்கொள்வதற்குக் காரணம் புற உலகிலிருந்துஅவர் அந்நியமாவதுதான். (கூடுதல் தகவல்களுக்கு எரிக் ஃபிராம் எழுதிய நூல்கள் உதவும். )

“யதார்த்தம் முழுமுற்றாய்ப் பரிவர்த்தனை செய்ய முடியாதது. அது எதையும் ஒத்திருப்பதில்லை. எதையும் குறிப்பதில்லை. எதுவுமே அதை பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது விளக்கமளிக்கவோ செய்ய முடியாது. அதற்குக் கால அளவோ அல்லது இடமோ அல்லது கற்பனை செய்ய முடியக்கூடிய ஒழுங்கோ அன்றி பிரபஞ்சமோ இல்லை... ” என்று பால் வெலேரி சொன்னதையும் இங்கு நினைவு கூர வேண்டும்.

இந்த உலகத்தை முழுமுற்றான நம்பிக்கையின்மையுடன் நோக்குகிற ஒருவனை எந்த ஒரு தார்மீக/ஒழுக்கவியல் அதிகாரத்துவமும் பிணைக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஒழுக்கவியியல் முழுமைகளுக்கு வரையறுக்கப்பட்ட ஒரு நடப்பியலில் அர்த்தமே இல்லை. நடப்பியல் உலகத்தின் ஒழுக்கவியல் மீது வெறுப்போ நிராகரிப்போ

இல்லாமல் எந்த ஒரு கலைஞனும் இருந்ததில்லை. நல்வினைக்கும் தீவினைக்கும் அப்பால் தானிருப்பதாக இருபதாம் நூற்றாண்டுக் கலைஞன் உணர்கிறான். நல்வினைக்கும் தீவினைக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கண்டுபிடிப்பதென்பதே ஒரு நேர்மையற்ற செயல்பாடாகப் பார்க்கிறார் ஆத்மாநாம். இந்தத் தொகுப்பின் தீவிர நாடகவியல் தன்மைகள் மிகுந்த ஒரு கவிதையாகப் போய்யா போ இருக்கிறது.

“நான்”களைக் களைந்து செல்கிற, அப்பாலில் வாழும் ஒரு கலைஞனாக மாத்திரமே ஆத்மாநாம் பார்க்கப்படக் கூடாது. நாளை நமதே என்கிற சற்றே செண்டிமென்டலான தலைப்பு கொண்ட கவிதையையும் இன்னும் பல மனித நேயமிகுந்த கவிதைகளையும் எடுத்துக்காட்டலாம். மலர்களைப் பற்றி மாத்திரம் பாடாமல் உருளைக் கிழங்கைப் பற்றிப் பாட வேண்டுமென்று சொன்னபோது பிரெஞ்சுக் கவிஞர் ரைம்போ (Arthur Rimbaud) இப்படி எழுதினார்:

Above all, rhyme a version
All about potato blight

திருஷ்டிப் பூசணிக்காய்களைப் பற்றியும், சோளக் கொல்லைப் பொம்மைகளைப் பற்றியும் நுணுக்கமான கவிதைகளை எழுதியவர் ஆத்மாநாம். ஆயினும் அவரதுமனித நேயத்தைத் தனியாகவும் கும்பல் வெறுப்பைத் தனியாகவும் வைத்து நாம் ஆராய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு மஹா ஜனம் என்ற கவிதை. டெக்னாலஜியைப் பயன்படுத்தி அதைக் கவிதையின் பொருளாகவே ஆக்கி (டேப் ரெக்கார்டர்)யிருந்த போதிலும் டெக்னாலஜியால் அவர் ஈர்க்கப்படவில்லை என்று தெரிகிறது. தனி மனிதன் மீதான நகரத்தின் ஆக்கிரமிப்பைமுறியடிப்பதற்கு அவர் தரும் ஒரே அற்புத உபாயம் முத்தம். நிஜம் போன்ற கவிதைகள் கணிதவியல் சமன்பாடுகள் அளவுக்குத் தர்க்கம் மிகுந்தவையாக இருப்பதால் இன்னும் சில தசாப்தங்களுக்கு அவை பழையதாகும் அபாயத்திலில்லை. அவரே கூறியிருப்பது போல

உதிரும் மலரின்
கணிதத்தை
என்றாவது
நீங்கள் யோசித்திருந்தால்
மட்டும்
இது புரியும்
இல்லை
என்னோடு எப்போதும்
உறவாடும்
பாறையைக் கேளுங்கள்.

(எங்கோ)

அதை/அவற்றை உணர்வதற்கான சம அலைவுகள் நம்மிடம் இருக்கும் பட்சத்தில்சரி.

10. 7. 2002

தர்மபுரி

பிரம்மராஜன்
http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=61651.0



ஒரு ஆத்மாநாம் கவிதை 2083 ஆகஸ்ட் 11


என் கவிதை ஒன்று
இரண்டாயிரத்து எண்பத்து மூன்றில்
கிடைத்தது
கடற்கரையில்
நானும் ஞானக் கூத்தனும்
பேசிக் கொண்டிருந்தோம்
சுண்டல் வாங்கிப் பிரித்தால்
காகிதத்தில் ஒரு கோடு
ஆத்மாநாம் எனும் வாசகங்கள்
கவிதை ஆரம்பம்
ஆச்சரியத்துடன்
ஞானக் கூத்தனைக் கேட்டேன்
இன்னும் இங்கேவா இருக்கிறோம்
அவர்
சூளைச் செங்கல் குவியலிலே
தனிக் கல் ஒன்று சரிகிறது
என்றார்
என்ன இது வினோதம்
இருந்த இடத்திலேயே இருப்பது
என்றேன்
இருப்பதை உணர்வதே வாழ்க்கை
என்றார்
நகுலன் எங்கே என்றேன்
நவீனன் இறந்த மறுநாளே இறந்து விட்டார்
என்றார்
உங்கள் சமீபத்திய கவிதை என்றேன்
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள
என்றார்
நன்றி என்றேன்
அப்பொழுது தான்
ஒரு அணுகுண்டு வெடித்த
சப்தம் கேட்டது
இருவரும்
அகதிகள் முகாமிற்கு திரும்பினோம்.