தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

மௌனி சிறுகதைகள் - I


நன்றி : மாமல்லன்மௌனி - பிரமிள்

முன் ஒருநாள் நீர் தேடி 
புத்தகப் பாலையின் முள் எழுத்தில்
வழிபிடித்து நடந்தான் அவன்.
தூரத்தே தத்தளித்த 
தரிசனத் திசை தவறி
முள்முள்ளாய்த தைத்தன
தத்துவ நெருஞ்சிகள் .  

பின் ஒரு நாள் தோள்க்கழியில் 
தொங்கிய முன்பின் 
பதநீர் க் குடங்களிடை 
தாகம் தாகம் என தவித்து 
எதிரே தத்தளித்ததை
தொடர்ந்தான் அவன்.
கைக்கெட்டி எட்டாமல் 
அதே தொலை தூரத்தில் 
அவனுடன் நகர்ந்தன இருபுறக் குடங்கள் 

என்றோ ஒருநாள் ,
விஷமமாய் அல்லது அகஸ்மாத்தாய் 
அவன் கைப் பேனாவின் பூனை நகம்
நிலவை பிராண்டியது .
முள் கிழித்த முகத்தில் 
பதநீர் இனிப்புடன் 
உதிரம்கசிய 
அவன் கண்டது என்ன?
அதிசயமாய் எதிரே ஒரு
வெண்தாள் வெளியில்
ஆழ ஓடியது இருள் .
அகாதமா ? ஓரளவுக்கு ஆமாம்

இருளின் எல்லையில் 
எதோ ஒன்றன் 
தொலைத் தூர தத்தளிப்பு .
அவன் மறைந்ததும் 
மறையாமல் அவனுக்காய் 
காத்திருக்கும் அது அவன் தேடிய நீரல்ல -
இடையறாத அவனது தாகம் 
தாகத்துக்குதவாத தாரகையின் பாதரசம் .
புகையற்று   தீயின் நிறமற்று
அழிவற்ற  சுடராய் 
எரியும் தவம்.      
பிரபஞ்ச கானம் – மௌனிPOSTED BY SINGAMANI ⋅ பிப்ரவரி 23, 2011

(நன்றி HTTP://WWW.THOGUPPUKAL.IN/SEARCH/LABEL/மௌனி)அவன் அவ்வூர் வந்து, மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம், மேல் காற்று நாளே ஆயினும், அன்றைய தினம் உலகத்தின் வேண்டா விருந்தினன் போன்று காற்று அலுப்புறச் சலித்து ரகசியப் புக்கிடமாக, மரக்கிளைகளில் போய் ஓடுங்கியது போன்று அமர்ந்திருந்தது.

அடிக்கடி அவன், தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில் நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து, மாசுபட்ட ஏடுகள், அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில், தன் மனப்போக்குக் கொண்டு எழுதுவதால், பளீரெனத் தோன்றுபவை சில, மங்கி மறைதல் கொள்ளுபவை சில. இரண்டுமற்று சில நேரத்தில், எதையோ நினைத்து உருகுவான்.

சிற்சில சமயம், இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனதிற்குச் செல்லும் நேர்பாட்டையைக் கொள்ளும்போது, தன்னை மறந்து அவன் மனம், ஆனந்தம் அடைவதுண்டு. மற்றும் சிற்சில சமயம், தன்னால் கவலைகளைத் தாங்க முடியாது என்று எண்ணும்போது, தன்னைவிடக் காற்று அழுத்தமாகத் தாங்கும் என்று எண்ணித் தன் கவலைகளை காற்றில் விடுவான். ஆனால் சூல் கொண்ட மேகம் மழையை உதிர்ப்பதே போன்று, அவை காற்றில் மிதந்து பிரிந்து, உலகையே கவலைமயமாக்கிவிடும். எட்டாத தூரத்தில் வானில் புதைந்து கேலிக் கண்சிமிட்டும் நட்சத்திரங்களைப் பார்க்கும்போது, அவனது பாழ்பட்ட, பழைய வாழ்க்கை நினைவு எழும் கோபித்து, வானில் அந்த நட்சத்திரங்களைத் தானே வாரி இறைத்தவன் போன்ற உரிமை உணர்ச்சியுடன் அவற்றைப் பிடுங்கி, கடலில் ஆழ்த்த எண்ணுவான். அந்தப் புதிய ஸ்தானத்தில் அவை எவ்வகையாகுமென்ற சந்தேகம் கொண்டவன் போல அண்ணாந்து நோக்குவான். அவையும், அதே ஐயம் கொண்டு விழிப்பது போன்று, அவனுக்குத் தோன்றும்.

அவ்வூரின் குறுகிய வீதிகள், நோக நீண்டு உயர்ந்த வீடுகளைக் கொண்டிருந்தன. மாலை வேளையில், வீடுகளின் மேற்பாகத்திலே சாய்ந்த சூரியக் கிரணங்கள் விழும்போது, ரகசியக் குகைகளின் வாய்போன்று, இருண்ட உள் பாகத்தை வீட்டின் திறந்த வாயில்கள் காட்டி நிற்கும், அது ”வா” வென்ற வாய்த் திறப்பல்ல. உள்ளே சென்றதும் மறைந்துவிடும் எண்ணங்களை விழுங்க நிற்கும் அசட்டு வாய்த் திறப்புப் போன்றுதான் தோற்றமளிக்கும்.

அவன், அந்தரங்கக் குகையில் மறைந்த எண்ணங்களோவெனில், பழுக்க காய்ந்த சூட்டுக் கோலால், எழுதப்பட்டனவே போன்று அடிக்கடி எழுந்தன. மழுங்கி மறைந்திருந்த அந்த நினைவுகளை மிகுந்த அனல் கொண்டு ஜொலித்து எழுச் செய்ய அவனுக்கு ஒரு சிறிய குழந்தையின் அழுகை போதும், ஒரு காகத்தின் கரைதல் போதும். மூன்று வருஷங்களுக்கு முன்னால் அவன் சென்றான்.

காலத்தைக் கையைப் பிடித்து நிறுத்திக் கனிந்த காதலுடன் தழுவினாலும், அது நகர்ந்து சென்று கொண்டேதான் இருக்கும். ஆனாலும் அவன் பிரிந்த நேரம் அவனுக்கு அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. அந்த நிகழ்ச்சி, காலபோக்கில், சலனமடையாது. அவனுக்கு நின்றது நின்றதுதான். அதுமுதல், உலகிலே உலக வாழ்விலே, ஒருவகை வெறுப்பைக் கொண்டான். அப்வெறுப்பே, அவன் உள்ளத்தில் கசிந்த தணலாய் கண்களில் பிரகாசித்து நின்றது. மனது மாறுதலை மிக வேண்டும் நேரத்தில், உலகின் சந்தோஷத்தை விட மனத்தைத் தாக்கும் துக்கம் வேறொன்றுமில்லை என்பதை அவன் உணர்ந்தான்; அவனுக்குச் சந்தோஷமே கிடையாது. வெறுப்புத்தான் அவன் மனதில் நிறைந்திருந்தது.

எட்டி, மேற்கு வெளியில் தெரிந்த சூரியன், சிவந்து இருந்தது. கவியும் மேகம், பற்பல வர்ணச் சித்திரமாக அதைச் சுற்றி அமைந்து, மெழுகி, மெழுகி மாறி மாறிப் பல உருவங்கள் கொண்டது. வாய்விரிந்து நின்ற ஒரு மேகக் குகையின் மேலிருந்து இறங்கிய நீண்ட வெண்மையான தொன்று புகுந்து அதனுடன் கலந்து ஒரு உருக்கொள்ளலாயிற்று. மிக அற்புதமான, உன்னத ஜீவிகளைக் கொண்டு… அப்போது உலகமும் மஞ்சள் நிறத்தில் இன்ப வருத்தமயமாகத் தோன்றிது.

அவள் கண்கள், அடிக்கடி குறி தவறாது பார்வையை அவன்மீது வீசி எறிந்து ஜொலித்தன. மாலை வெளிச்சம் மயங்கியது. அப்போது அவள் உட்சென்று மறைந்துவிட்டாள். அவன் இருந்த வீட்டிற்கு நேர் எதிரே சிறிது தள்ளி நின்ற தன் விட்டினுள் அவள் சென்றுவிட்டாள். அடிக்கடி அவள் இவனைப் பார்ப்பது உண்டு. அதனால், இவன் மனபோக்கு கொஞ்சம் மாறுதல் அடைய இடமேற்பட்டது. அவளது பார்வையால் வாழ்க்கை, நடுவே சிறிது வசீகரம் கொண்டது. உலகத்திலும் சிறு ஒளி உலாவுவதைக் கொஞ்சம் இவன் உணர ஆரம்பித்தான்.

ஒருநாள் காலை, அவன் அரசமரத் துறைக்கு ஸ்நானம் செய்யச்சென்றான். அங்கே, அவள் குளித்துவிட்டுப் புடவை துவைத்துக் கொண்டு இருந்தாள். அவள் இடம்விட்டுச் சென்றபின், ஸ்நானம் செய்ய எண்ணி அரசமரத்தடியில் நின்றிருந்தான். அவளுக்குப்பின் சிறு அலைகள் மிதக்கும் குளத்தின் ஜலப் பரப்பு – எதிர்க்கரையின் ஓரத்தில் நரைத்த நான்கைந்து நாரைகள், ஜலத்தில் தம் சாயலைக் கண்டு குனிந்து நின்றிருந்தன. வானவெளிச்சம், ஜலப் பரப்பின் மேல் படர்ந்து தவித்துக் கொண்டிருந்தது. எதிர்க்கரையில் நின்ற சிறு சிறு மரங்கள், இக்கரையில் நிற்கும் இவளை எட்டித் தொடும் ஆர்வத்தோடு கட்டை விரல்களில் நின்று குனிந்தனவே போன்று சாய்ந்து இருந்தன. மெல்லெனக் காற்று வீசியது. குளத்தில் பூத்திருந்த அல்லிப் பூக்களின் தலைகள் ஆடின – அவன் மனதின் கனம் கொஞ்சம் குறைந்தது.

அவன் தலைக்கு மேலே, சிறிது பின்னால் ஒரு மீன் கொத்திக் குருவி சிறகடித்துக் குனிந்து நோக்கி நின்றது. திடீரென்று ஜலத்தில் விழுந்து, ஒரு மீனைக் கொத்திப் பறந்தது; பக்கத்து மரக்கிளையில் உட்கார்ந்தது. குளத்து மேட்டில், ஒரு குடியானவப் பெண் சாணம் தட்டிக் கொண்டிருந்தாள். அதை, துவைத்துக் கொண்டிருந்த இவள் பார்த்தாள். ”எனக்காகத்தான் அதோ தட்டிக் கொண்டிருப்பது – நன்குலர்ந்த பின், அடுக்கடுக்காக -” என்று அவள் பார்த்ததாக எண்ணிய இவன் நெஞ்சு உலர்ந்தது.

அவன் அவ்வூர் வந்தபின், அவள் பாடிக் கேட்டதில்லை. அவள் பாடியே மூன்று வருஷத்திற்கு மேலிருக்கும். அவள் ஒருதரம் நோய்வாய்ப்பாட்டுக் கிடந்தபோது, அவள் இருதயம் பலவீனப்பட்டு இருப்பதாகச் சொல்லிப் பரிசோதனை செய்த டாக்டர் அவள் பாடுவது கூடாதென்றார். அது முதல், அவள் சங்கீதம் அவளுள்ளே உறைந்து கிடந்தது. அவளுக்கு வீணையிலும் பயிற்சி உண்டு. ஒரு தரம், அவள் வீணைவாசிக்க அவன் கேட்டான். அதன் பிறகு அவளுடைய சங்கீதத்தைப் பற்றியும், பிரபஞ்சத்தைப் பற்றியும்அவன் ”அபிப்பிராயமும் உறுதியாகிவிட்டது” அவள்தான் சங்கீதம்; பிரபஞ்ச கானம் அவளுள் அடைபட்டுவிட்டது” என்று எண்ணலானான். காகத்தின் கரைதலும், குருவிகளின் ஆரவாரமும், மரத்திடைக் காற்றின் ஓலமும் காதுக்கு வெறுப்பாகி விட்டன. அவளுடைய சங்கீதம் வெளிவிளக்கம் கொள்ளாததனால் இயற்கையே ஒருவகையில் குறைவுபட்டது போலவும், வெளியில் மிதப்பது வெறும் வறட்டுச் சப்தம்தான் என்றும் எண்ணலானான்.

அவன் அவ்வூர் வந்து வெகுநாட்கள் சென்றவின் ஒரு ஆடி வெள்ளிக்கிழமையன்று, அவள் வீணை வாசிக்கக் கேட்டான். அவள் வீட்டின் உள்ளே தீபம் எரிந்து கொண்டிருந்தது. முற்றத்தில் பிரகாசமான ஒரு விளக்கு ஏற்றி மாட்டப்பட்டிருந்தது. திறந்த வாயிற்படியின் வழியாக, இருண்ட வீதியின் நடுவே குறுக்காக முற்றத்து வெளிச்சம் படர்ந்து தெரிந்தது. உள்ளே, அவள் தம்பி படித்துக் கொண்டிருந்தான். கூடத்திலிருந்து வீணை மீட்டும் நாதம் கேட்டது. அவள் வாசிக்க ஆரம்பித்தாள். இவன், எதிர்வீட்டுத் திண்ணையில் ஒருபுறமாக இருள் மறைவில் நின்று கேட்டான்.

சுமார் ஒன்றரை மணி நேரம் வாசித்தாள். அவ்வளவு நேரமும் ஒரே வினாடி போலக் கழிந்துவிட்டது. உலகமே குமுறி சங்கீத மயமானதாக நினைத்தான். அவள் வாசித்துக் கொண்டிருக்கும் போதே நடுவில் இவன் மனதில் பளீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. அதை உதற முடியாத ஓர் உண்மையென உணர்ந்தான். அவள் பாட்டின் பாணியும் அதைப் பலப்படுத்தியது. இவன் மனத்தில் ஒருவகைப் பயம் தோன்ற ஆரம்பித்து, உடல் குலுங்கியது. அவள் முடிக்கும் முன்பே தன் இதயம் பிளந்துவிடுமென நினைத்தான். அவள் வாசிப்பதை நிறுத்திவிட மாட்டாளா என்று துடித்துக் கொண்டே கேட்டு நின்றான்.

”ஆம், அவள் பாடுவது கூடாது; டாக்டர் சொல்லியது உண்மையானால் முடிவு நிச்சயம். ஆனால், அவள் முடிவு… பாட்டினாலா அவள் முடிவு? அவர் நினைக்கும் காரணத்தினாலன்று” மனோவேகத்தின் பலனாகப் பிறந்த ஒரு உணர்ச்சி அவன் உள்ளத்தில் ஒரு அற்புதத் தத்துவமாக மாறியது.

அதன் பின்பு, மனக் களங்கமின்றியும் கூடுமானவரையில் தன் சாயையின் சம்பந்தமற்றதுமான ஒருபுற உணர்வைக் கொண்டும் மேலே சிந்தனைகளை எழுப்புவான். அப்படியும் தான் முன் உணர்ந்ததையே மனத்தில் உறுதிப்படுத்திக் கொண்டான் – ”இயற்கை” ஏதோ ஒரு வகையில் குறைவுபட்டது என்ற எண்ணம் – பிரபஞ்ச கானமும், வசீகரமும் திரண்டு அவளாக உருக்கொண்டதனால்தான் அந்தக் குறைவு என்ற நிச்சயம், உறுதிப்பட்டது. நிலவு பூப்பது விரசமாகத் தோன்றியது அவனுக்கு. அந்தியில் ஆந்தைகள் பொந்துவாயில் அலறுவது வெலித்தியாகக் கேட்டது. உலக சப்தங்களே பாழ்பட்டு ஒலித்தன. தன் உன்மத்த மிகுதியில் சுருதி கலைந்த வீணையில் தேர்ச்சி பெற்ற ஒருவன் வாசிக்கும் கானங்கள்தான் இந்தச் சப்தங்கள். சுருதி ஓடி அவளிடம் ஒளிந்து கொண்டு ”இயற்கை” அன்னை அளிக்கக்கூடிய, அளிக்க வேண்டிய இன்பம் பாதிக்குமேல் (சப்த ரூபத்திலும், காட்சி ரூபத்திலும்) அவளிடம் அடங்கி மறைந்து போய்விட்டது. மேலே யோசிக்கும் போது, ”இழந்ததைப் பெற இயற்கைச் சக்தி” முயலுவதையும், தனியாகப் பிரிந்து அவளாக உருக்கொண்ட பிரபஞ்சகானமும், வசீகரமும் வெளியே பரந்துபட முயலுவதையும் யாரால் எவ்வளவு நாள், எப்படித் தடுக்க முடியும்? அவள் முடிவு பாட்டினால்” என்ற எண்ணம் வலுவாக எழுந்து நின்றது. அடிக்கடி அவன் மனது அதனால் மிகுந்த துக்கமடையும்.

சில மாதங்கள் சென்றன. அவனுக்கோ அவன் யோசனைகள்தான்; கணநேரம் நீண்டு, நெங்காலமாயிற்றென்ற எண்ணந்தான்…

அன்று அவள் கலியாணத்தின், மூன்றாம் நாள், அன்று மாலை நலுங்கு நடந்து கொண்டிருந்தது…

சமீப காலத்தில் அவன் வருத்தம் அதிகமாயிற்று. தன்னுள் வருத்தமே தனிப்பட்டு அழுதுகொண்டு இரவில் இருள் வழியே உருவற்று ஊளையிட்டோடியது என்று எண்ணினான் ஓரோர் சமயம். அவள் கலியாணத்தின் முதல்நாள் இரவு அவனால் உறக்கங் கொள்ள முடியவில்லை. உலகில் அவச்சத்தம் இருளோடு கூடி மிதந்தது. இரவின் ஒளியற்ற ஆபாசத் தோற்றம்… அவன் நெடுநேரம் திண்ணைத் தூணில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான்.

அவள் வீட்டின் முன் அறை ஜன்னல் மூடி இருந்தது. பொருந்தாத கதவுகளின் இடைவழியே, உள் வெளிச்சத்தின் சாய்வு ஒளிரேகை தெருவிலும், இவன் திண்ணைச் சுவரிலும் படிந்திருந்தது. இவன் உள்ளத்தையும் அது சிறிது தடவி மனஆறுதலை அளித்தது. ஒருவகை இன்பம் கண்டான். யாரோ குறுக்காக எதிர்வீட்டின் உள்ளே நடப்பதால் அவ்வொளி ரேகை நடுநடுவே மறைந்து தெரிந்து கொண்டிருந்தது. அது இவனுக்கு வெகுபுதுமையாகத் தோன்றியது. அதையே, குறித்து நோக்குவான். ”ஆம்… அவள், நிதானமற்று, உள்ளே உலாவுகிறாள்… அடைபட்டது, வெளியே போக ஆயத்தம் கொள்ளுகிறது…!” மேலே அவனால் யோசிக்க முடியவில்லை. அவன் மனம் துக்கம் அடைந்தது. ஆகாயத்தில், இருட்பாய் விரிப்பின் நடுநடுவே வெளிச்சப்புள்ளி வர்ணந் தீட்டிக் கொண்டது போன்று எண்ணிலா நட்சத்திரங்கள் பிரகாசித்தன. அவை ஆழ்ந்த துக்கத்தில் உதிராது, மடியாது, ஐயமுற்று வினாவி நிற்பவை போன்று தோன்றின இவனுக்கு. ”அவளால், பிரபஞ்ச ஜோதியே, அழகே, குன்றிவிட்டதுதான் உண்மை”. அப்போது துக்க ஓலத்தில் வாடைக் காற்று வீச ஆரம்பித்தது. எட்டிபோகும் நரியின் ஊளை, ஒரே இடத்தில் பதிந்து பரவும் பறைச்சேரி நாய்க் குறைப்பு போன்ற மிகக் கோரமான, சப்தங்கள்தான் இருள் வெளியில் மிதந்தன. அவளிடம் அடைபட்ட உன்னத கானம் வெளியில் படரும் நாளை வேண்டிக் கூவும் பிரலாபிப்புப் போன்றுதான் அந்தச் சப்தங்கள் அவன் காதில் விழுந்தன. தூரத்தில் கிழக்கு அடிவானத்திலிருந்து, புகைந்து மேலோங்கும் முகில் கூட்டம்.

நன்றாக மழை அடித்து நின்றது. தெருவில், உறிஞ்சியது போக மீதி மழை ஜலம் வாய்க்காலாக ஓடியது. மிகுந்தது சிறு சறு ஜலத்திட்டுகளாக நின்றது. ஒருதரம், அவள் ஜன்னலைத் திறந்து மூடினாள். ஒளித்திட்டுக்களாய்த் தோய்ந்து ஜொலித்தது தெரு முழுவதும். சிறு தூரம் விழுவது நின்றபாடில்லை. ஒரு பூனை தெரு நடுவே, குறுக்காக ஓடியபோது, வெளிச்சத்தில் விழுந்து மிதந்து மறைந்தது…

கல்யாணம் மூன்றாம்நாள், நலுங்கு நடந்துகொண்டிருந்தது. கூனிக் குறுகி உட்கார்ந்திருந்த மாப்பிள்ளை எதிரில் வெற்றிலைத் தாம்பாளத்தைக் கையில் ஏந்தி அவர் அதை ஏற்றுக்கொள்வதை எதிர்பார்த்து அவள் நின்றிருந்தாள். அவள் பாட வேண்டுமென்பது அவர் எண்ணம்போலும், சுற்றி இருந்த, மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் இவளைப் பார்த்து ”பாடு பாடு” என்றார்கள். இவளோ முடியாதென்று சொல்வது போன்று மெளனமாக நின்றிருந்தாள். இவள் பாடக்கூடாதென்று எண்ணியே, அவனும் எட்டிய தூணடியில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பெண்கள் எல்லோரும், இவள் மனது நோக ஏதேதோ பேசினர். அவள் மனது வெறுப்படைந்தது. ஒருவகை அலக்ஷ¢யம் அவள் கண்களில் தெரிந்தது. எட்டித் தூணில் சாய்ந்திருந்த அவனை ஒருதரம் பார்த்தாள். இவள் பார்வை, தவறாது, குறி கொண்டு அவனைத் தாக்கியது. அப்போது உச்சிமேட்டிலிருந்து, ஒரு காகம் விகாரமாகக் கரைந்து கொண்டிருந்தது. அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான் இவன். பின்னும் ஒருதரம் இவனை விழித்துப் பார்த்தாள். மதுக்குடித்த தேனீக்களைப் போன்று குறுகுறுவென்றிருந்தன அவன் விழிகள். அவள் உடம்பு ஒரு தரம் மயிர்சிலிர்த்தது. திடீரென்று ”நான் பாடுகிறேன் – கேட்க வேண்டுமா? சரி என்றாள் அவள். இவன் மனதோவெனில், நிம்மதியற்று வெடிக்கும் துக்கத்தில் ஆழ்ந்தது. அவள் விளக்கம் கொண்டு விரிவுபட எண்ணிவிட்டாள் போலும்! அவள் பாட ஆரம்பித்தாள்.

ஆரம்பித்த அவள் கொஞ்சம் கொஞ்சமாக மெய்மறந்தாள். சாஸ்திர வரையறுப்பை அறிந்தும் கட்டுப்பாட்டின் எல்லையை உணர்ந்தும், உடைத்துக் கொண்டு பிரவாகம் போன்று அவள் கானம் வெளிப்பட்டது. அங்கிருந்த யாவரும் மெய்மறந்தனர்.

தலை கிறுகிறுத்து ஒன்றும் புரியாமல் இவன் தூணோடு தூணாகி விட்டான்.

அவள் சங்கீதத்தின் ஆழ்ந்த அறிதற்கரிய ஜீவ உணர்ச்சிக் கற்பனைகள், காதலைவிட ஆறுதல் இறுதி எல்லையைத் தாண்டிப் பரிமாணம் கொண்டன. மேருவைவிட உன்னதமாயும், மரணத்தைவிட மனத்தைப் பிளப்பதாயும், மாதரின் முத்தத்தைவிட ஆவலைத் தூண்டி இழுப்பதாயும் இருந்தன. மேலே, இன்னும் மேலே, போய்க் கொண்டிருந்தன…

அவள் ஒரு மணி நேரம் பாடினாள். அவளுள் அடைபட்ட சங்கீதம் விரிந்து வியாபகம் கொள்ளலாயிற்று. வெளி உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் அடைந்து கொண்டிருந்தது…

இவன் மனப்புத்தகம், பிரிந்து உணர்ச்சி மிகுதியில் படிக்கப்பட்டது. ”காலம்” விறைத்து நின்றுவிட்டது… அந்தியின் மங்கல் வெளிச்சம் மறையுமுன் மஞ்சள் கண்டது. இவன் முகம் ஒளிகொண்டு சவக்களை பெற்றிருந்தது.

கடைசிக் காகக் கூட்டத்தின் ஒருமித்த கரைதல் கூச்சல் கேட்டது. முற்றத்துக் கொட்டகையின் மீது குருவிகள் உட்கார்ந்துகொண்டு ஆரவாரித்தன. இவன் திடீரென்று, வாய்திறந்து ”ஐயோ… அதோ… சங்கீதம், இனிமை, இன்பம் எல்லாம் திறந்த வெளியில், நிறைகிறதே…” என்று கத்தினான், அதே சமயம், அவளும் கீழே சாய்ந்தாள். ”இயற்கை அன்னை” தன் குறையை, நிவர்த்தித்துக் கொண்டாள். இழந்ததை, அணைத்துச் சேர்த்துக் கொண்டாள்… ஆகாயவீதி, அழகு பட்டது. மேக மலை மறைப்பினின்றும் விடுபட்ட பிறைச்சந்திரன் சோபை மிகுந்து பிரகாசித்தது. வெளியே, அவ்வூர் குறுகிய விதியே ஒரு களை கொண்டது.

குளக்கரை, அரசமரத்திலிருந்து, நேர்கிழக்கே, பார்த்தால், வளைந்த வானம் பூமியில் புதைபடும் வரையில், கண்வெளி வீதியை மறைக்க ஒன்றுமில்லை. மேற்கே, ஒரு அடர்ந்த மாந்தோப்பு.

காலை நேரம் வந்தது. மூலைமுடுக்குகளிலும், தோப்பின் இடைவெளிகளிலும், தாமதமாக உலாவி நின்ற மங்கலை ஊர்ந்து துரத்த ஒளிவந்து பரவியது. பல பல மூலைகளிலிருந்து, பக்ஷ¢க் குரல்கள் கேட்டுப் பதிலளித்துக் கொண்டிருந்தன. இரவின் இருளைத் திரட்டி அடிவானத்தில், நெருப்பிடப்பட்டதே போன்று கிழக்கு புகைந்து, சிவந்து, தணல்கண்டது… காலைச் சூரியன் உதித்தான். சிறிது சென்று, வானவெளியை உற்றுநோக்க இயலாதபடி ஒளி மயமாயிற்று. உலகப் பேரிரைச்சல், ஒரு உன்னத சங்கீதமாக ஒலித்தது. மனத்தில் ஒரு திருப்தி – சாந்தி, அவன், வீடு அடைந்தான்.

மாலையில், மேற்கே நோக்கும் போது மரங்களின் இடைவெளி வழியாக பரந்த வயல் வரப்புக்கள் நேர்க்கோடு போல் மறைந்து கொண்டிருந்தன. அவை விரிந்து விரிந்து சென்று அடிவானில் கலக்கும். தூரத்து வரப்புக்களில் வளர்ந்து நின்ற நெட்டைப் பனைமரங்களின் தலைகள் வானை முட்டி மறைவது போன்று தோன்றும். “வாழ்க்கை…? ஒரு உன்னத மனவெழுச்சி..” அவன் பார்த்து நின்றான்.

குளத்துமேட்டு வறட்டிகள் உலர்ந்து அடுக்கப்பட்டு இருந்தன.கொஞ்சதூரம் – மெளனி

POSTED BY SSINGAMANI ⋅ NOVEMBER 7, 2010 ⋅அன்று காலையில் எழுந்தது முதல், அவன் மனது சரியாக இல்லை. கிராமத்தில் தன் தனி வீட்டில் கடந்த ஆறு மாதமாக அவன் நடத்திய வாழ்க்கையில், அவன் மூளைக்கு ஒன்றுமே சாரமாகப்படவில்லை. படித்து முடிந்து, நகரத்தினின்றும் ஊர் சேர்ந்து அங்கேயே இருந்தான். நான்கு மாதத்திற்கு முன்பு, கடைசியாகத், தன் கல்லூரி சிநேகிதி மிஸ். ரோஜாவிற்கு எழுதின கடிதந்தான் அவனுடைய பழைய வாழ்க்கை நினைவின் அறிகுறி போன்றது.

எழுந்தவன் வாயில் திண்ணையில் நின்றுகொண்டு பார்த்தான். கீழிறங்கித் தெருவில் நடந்து சென்று, சிறிது தூரத்தில் அவ்வூர் எல்லையில் ஓடும் வாய்க்கால் கரையில் நின்றுகொண்டு கிழக்கே வெகுதூரம் வரையில் பார்த்தான். அடிவானத்தில் சிறு சிறு மேகங்கள் வெண்மையாகத் திட்டுகள் போன்று அசைவற்று இருந்தன. கண்ணுக்கெட்டிய வரையில், தனித்தனி மரங்கள் தனிப்பட்டே தோன்றின. சிறிய குடிசைகள், அங்குமிங்கும் மரங்களிடையே தெரிந்தன. இரண்டொரு ஆடுமாடுகள் செய்வதறியாது, காலந்தவறி மேய்வது போன்று மேய்ந்து கொண்டிருந்தன. அவன் காலடியின் கீழ், அச்சிறு வாய்க்காலில், தெளிவாக, அடிமணல் தெரிய ஜலம் அரித்தோடிக்கொண்டிருந்தது. ஜலத்தின் மீது உலர்ந்த இலைகள் மிதந்து சிறு சூழலில் சுழன்று, மேலும் கீழுமாக அழுத்தலாக, மெதுவாக, ஜல ஓட்டத்தில் இழுக்கப்பட்டுப் போய்க்கொண்டிருந்தன.

எல்லாம் ஒரே இடத்தில் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. பழையபடியே தான் இவனுக்குத் தோன்றியது. ஆனால், ஆவலாக, இருந்த இடத்தில் காண நினைத்தது, ‘அங்கு இல்லை, எங்கும் காணவில்லை’ என்று எண்ணியது போன்று சலிப்புற்று வீட்டிற்குத் திரும்பி வந்தான். கதவை அடைத்து உட்சென்று சாப்பிட்டான்.

மத்தியானம் சுமார் ஒரு மணி இருக்கும்போது இவன் வீட்டை விட்டுக் கிளம்பினான். தெருக்கோடியில் உள்ள சிவன் கோயிலையும் அவ்வூர் வாய்க்காலையும் கடந்தான். வாய்க்காலைக் கடந்தவன் சிறிது நின்றான். பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான். அச் சிறிய கிராமமும், பிரகாசமான சூரிய வெளிச்சத்தில் தெளிவுற்ற பார்வையைக் கொடுக்கவில்லை. இடிந்த மதிற் சுவரின் இடையே கோவில் பிராகாரத்தில் உள்ள புஷ்பச் செடிகள் தெரிந்தன. வாழ்க்கைத் திரையில் தீட்டப்பட்ட சித்திர உருக் காட்சியையே இவன் மனதில் கொண்டான். சில சில புஷ்பங்கள் கொய்யப்படாமலே ஒரு பசுமைத் தோற்றத்தின் நடு நடுவே இருந்தன. மெய் மறந்த பகட்டுடன், சிறு திட்டு வர்ணப் பூச்சிகளை அத்திரையில் தீட்டினது போன்றுதான் அப் புஷ்பங்கள் பசுமையில் பதிந்திருந்தன. வாய்க்காலில் துணி துவைக்கும் பாறாங்கல்லில் ஒரு சிறு குருவி உட்கார்ந்திருந்தது. அதுவும் திடீரென்று பறந்து அச் செடியில் ”ஏன் – எங்கே -” என்று கத்திக்கொண்டு மறைந்துவிட்டது. ”கொஞ்ச தூரம்-” என்று அப்போதுதான் எண்ணியவன் போன்று தனியே தன் வழி நடக்கலுற்றான்.

மிக உஷ்ணமாகப் பிற்பகல், உலகமே அநேக சப்தங்களிலும், இரைச்சலிலும், நிசப்தத் தோற்றத்தைக் கொண்டது. வெப்பத்தைத் தாங்காது ஆலமரத்தடியில் மாடுகள் தங்கி இருந்தன. கண்களை மூடியவண்ணம் படுத்திருந்தன சில, கண்கள் மூடியே அசை போட்டுக்கொண்டு, அலுப்பில் சமாதானமின்றி, அலைவது போன்று அங்குமிங்கும் நிழலில், சில ஊர்ந்தன. நடு நடுவே, திடீரென்று வானம் கிழிய, ஒன்றிரண்டு மாடுகள் அலறிய சப்தமும், நிசப்தத்தில் மறைந்து போயிற்று. மேலே, மரக்கிளைகளில் பக்ஷிகள், ஆரவாரித்தன. உலக அலுப்பே, குழறி முனகுவது போன்று, அவை இடைவிடாது சிறிது நேரம் கத்தின. அவைகளின் இரைச்சல் திடீரென்று நிற்கும்போது, இடையிடையே சீர் இல்லாமல் பொத்தென்று கீழே விழும் முதிர்ந்த ஆலம் பழங்களின் சப்தம். எவ்வித உலக சப்தமும் பிரபஞ்ச பயங்கர நிசப்தத்தைத்தான் உணர்த்தியது. இவன் போய்க்கொண்டே இருந்தான். கண்ணுக்கெட்டிய தூரத்தில் கானல் சலனத் தோற்றம். வெகு தூரத்திலிருந்து ”ஹோ-ஹொ-ஹொ-ஹொய்-” என்று கேட்டது, மானிடக் குரல். பின்னிருந்து இடைப் பையன்களின் அர்த்தமற்ற கானம். எங்கும் நிசப்தம்தான். அமைதி. இவனுக்கு, மனத்திற்கு இசையாத சாந்தம்.

உலகம் அலுப்பு மயம், களைப்பு மயம். இவன் நடந்துகொண்டுதான் இருந்தான். சூரியன் அன்று வெகு உக்கிரம். ஒருவகை மனப்பளுவும் வருத்தமும் இவன் மனத்தில் குடிகொண்டன. உலகமும் அவற்றைத்தான் தோற்றுவித்தது. முதல் நாள் இரவிலிருந்து கொண்ட மன இருள், இரவில் இருளில் சிறிது ஆறுதல் கொண்டது போன்று இவனை அவ்வளவு துன்புறுத்தவில்லை. பகல் ஒளியிலும் மனத்திருள் மறையாதது இவனால் சகிக்க முடியவில்லை. பொறுக்க முடியவில்லை. உலக இரைச்சலும் பயங்கரத் தனித் தோற்றத்தையே கொடுத்தது. வீட்டினுள் இருக்க முடியாமல், போவதின் பயன் தெரியாமல் வெளி நடந்தவன் இவன்.

இவன் நடந்துகொண்டே சென்றான். சிறிது நேரத்திற்கு முன்பு, வெகு தூரத்தில் கண்ட ஒரு தனி மரம். இவனுக்கு எல்லையைக் கொடுத்தது போன்று; அதனிடம் வந்ததும் அதன் கீழ் சிறிது உட்கார்ந்தான். கையில் கொண்டுவந்த ஒரு குப்பியிலிருந்ததைக் கொஞ்சம் குடித்தான். மேலே கிளையில் உட்கார்ந்திருந்த ஒரு காகம், இவனைச் சந்தேகமாய்த் தலை சாய்த்துப் பார்த்தது. உடனே அது மிக விகாரமாகக் கத்திக்கொண்டு பறந்துவிட்டது. இவன் தலைப்பளு கொஞ்சம் குறையலுற்றது. முகத்தில் இரத்தமேறியது. உலகத்தின் பேரிரைச்சலும் காதில் சப்தித்தது. மிகுந்த உற்சாகம் கொண்டான். நடக்க ஆரம்பித்தான். பின்னிருந்து சந்தேகமான ”எங்கே – எங்கு” கேள்விகள்.

இல்லை இல்லை, கொஞ்ச தூரம், இருட்டுமளவும்” என்று முனகிக்கொண்டே நடந்தான். சூரியன் மேற்கே கீழடி போக வாரம்பித்தான். மெதுவாகச் சிறிது கீழ் சென்றதும், இவன் நிழல் வெகுவாக முன் நீண்டது. காற்று மெல்லென வீச ஆரம்பித்தது. இரண்டொருவர் ஆடு மாடுகளை வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு போயினர். பக்ஷிகள் பகல் வேலை முடிவையும், இரவு ஓய்வு சந்தோஷத்தையும் பாடித் தெரிவித்தன. மரக்கிளையில் இருந்த பக்ஷிக்குக் கும்பலில் சில அங்குமிங்கும் பறந்து திரும்பி வந்து உட்கார்ந்தன. வேலையினால் அலுப்பு, களைப்பு, வேலை முடியும் எண்ணம், ஓய்வில் சந்தோஷம்.

தனிப்பட்ட, கடைசி ஆடும் இடையனால் திரும்ப வீடு ஓட்டிச் செல்லப்பட்டது. அலுப்பு மிகுதியில் காரணமற்றே, இடையன், அதை நையப் புடைத்து நடத்திக்கொண்டு போனான்.

சிறிது சென்று, இவன் நின்றுகொண்ட மறுமுறை குப்பியை வீசி எறிந்தான். பக்கத்துச் சப்பாத்திப் புதரில் அது விழுந்தது. இரண்டொரு வண்ணாத்திப் பூச்சிகளும், ஈசல்களும், மேலே பறந்தன. அவன் நடக்க ஆரம்பித்தான். அவன் சாலையை அடைந்தான். அவன் முகம் மிகச் சிவந்தது. தலை வெகுவாகச் சுழன்றது. மனத்தில் அர்த்தமில்லாத ஆனந்தம் தோன்றி மறைந்தது. அந்தி மங்கல் வெளிச்சமும் மங்கலுற்றது.

கடைசிக் காகமும் பயந்து, தான் தனிப்பட்டதை உணர்ந்து, கரைந்துகொண்டே பறந்து விட்டது. முதல் நக்ஷத்திரம், சிறு ஒளியொன்று தென்பட்டது. கடைசியாகத் தன் இருப்பை நிரூபிப்பது போல இருள் கொஞ்சம் கொஞ்சமாக உலகை மீட்ட ஆரம்பித்தது. அன்று பகலும், பயமின்றி நேரேவும் இரவிற்காக ஒதுங்கி, மிக வருத்தமாக வழிவிட்டுச் சென்றது.

மரங்களிடையே சலசலப்புச் சப்தம் நின்றது – வருத்தமாகத்தான் – ஜன சஞ்சாரம் குறைந்துவிட்டது. பக்கத்துப் பாழடைந்த மண்டபத்திலிருந்து ஆந்தை ஒன்று அலறியது. எதிரொலித்தும் குறைவுபட்டும், அதன் அலறல் நிசப்தமாகாது போன்று, வெகு தூரத்திலிருந்து, மற்றொன்று பிரதி தொனித்தது. எங்கும் வாய்விட்டு அலறும் வருத்தம் சூழ்ந்தது.

அவன் போய்க்கொண்டுதான் இருந்தான். ஆனால் அவன் நடையில் நிதானம் இல்லை. அவன் தள்ளாட ஆரம்பித்தான். சிறிது நிற்பான். திரும்பிப் பார்ப்பான். நடப்பான் சாலை வழியாகவே. அலுப்பு, களைப்பு வருத்தம் அவனால் தாங்க முடியவில்லை. தலையோ சுழன்று சுழன்று தனியே போவதாகத் தோன்றியது.

கொஞ்சம் முன்னால் ஐந்நூறு பேர் போய்க் கொண்டிருப்பதை இவன் இருட்டில் கண்டான். நின்று நின்றும், நடந்துகொண்டும் அர்த்தமற்றுக் கத்திக்கொண்டும் அவர்கள் போனார்கள். பின்னால் இவன் திரும்பிப் பார்த்தான். இரண்டு பிரகாசமான கண்கள் இவனைப் பார்ப்பதாகத் தோன்றியது.

இரவு நன்கு இருண்டது. நக்ஷத்திரங்களில் சிறு ஒளியும் பிரகாசமடைந்து தோன்றியது. இவன் நடந்தான். அவர்களைக் கடந்தபோது, இவன் மிகத் தள்ளாட ஆரம்பித்தான். ஒரு தரம் நிதானிக்க முயன்றும் பயனின்றிக் கீழே விழுந்தான். அவர்கள் இவனைச் சூழ்ந்துகொண்டனர். சாலை ஓரத்தில் இவனைக் கொண்டு கிடத்தினர். நிமிர்த்தி உட்கார வைத்துப் பிடித்துக் கொண்டனர். இவன் கண்கள் சுழன்று சுழன்று, ஒரு பெரிய ஜனக்கூட்டத்தைத்தான் கண்டன. ஏதோ உளறினான். சிறிது சென்று ”அ, ஆ அப்படி இல்லை. இப்படித்தான் போக வேண்டும். அது வந்த வழி, வர வழி, ரோஜா?” என்றவன் கைகளைத் தூக்கி ஏதோ காட்ட முயன்றவன் முடியாமல் கீழே விட்டான். வாய்விட்டு அசட்டு, அலக்ஷிய சிரிப்புச் சிரித்தான். எதை முடியாதென்று உணர்ந்தானோ! அவன் கண்கள் மூடின.

சுற்றி நிற்பவர்களின் மூளையும் சுழன்று கொண்டிருந்தது. ஆனால் அது அவர்களுடைய பழக்கமான சுழலல். அவனை அவர்கள் தெரிந்துகொண்டனர். ”அவ்வூர் அக்கிரகாரத்தில் இருக்கும், பட்டினம் ஐயா அவன்.” அவனைச் சூழ்ந்து நின்று ஒன்றும் புரியாமல் திகைத்தனர். பின்னிருந்து ஒரு வெளிச்சம் தெரிந்தது. சிறிது சென்று மோட்டார் சப்தமும் கேட்டது. அந்த மோட்டார் இவர்களை மெதுவாகக் கடக்கும்போது, அதன் உள்ளிருந்தும ”என்ன?” என்ற கேள்வி வந்தது.

”ஜயா நிதானம் தவறி இருக்காரு” என்று எல்லாருடைய ஒருமித்த குரல் கிளம்பியது. மோட்டார் சென்றுவிட்டது. சிறிது தூரம் வரையில் இவர்கள் பார்வையையும் கூட இழுத்துக்கொண்டுதான் சென்றது. இவர்கள் திரும்பியதும் ”ஐயாவுக்கு மூச்சுப் பேச்சில்லை” என்றான் ஒருவன்.

ஊருக்குள் ஒரு கார் வந்து நின்றது, அந்நேரத்தில் ஏன், என்று அவ்வூரார்களுக்குப் புரியவில்லை. அவ்வூரார் ஒருவனை விசாரித்து இவன் வீட்டடியில் நிறுத்தப்பட்டது. வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. அவ்வூர் பெரிய வீட்டுக்கு, வந்தவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ரோஜா, கருப்பு உடை அணிந்து மிக அழகாகவிருந்தாள். அவளோடு வந்தவன் ஒழுங்காக ஆடை உடுத்தி உன்னதமாகத் தோன்றினான்.

”அந்த வீட்டுக்காரர் எங்கே?” என்றாள் ரோஜா.

”வெளியில் போயிருக்கலாம் – மத்தியானம் முதல் காணவில்லை. எங்கேயாவது பிரயாணம் போயிருக்கலாம் -” என்றார் அப் பெரிய வீட்டுக்காரர்.

”உங்களுக்குத் தெரியாதா?”

”அவனுக்கே, இப்போது அவன் செய்கிறது தெரிகிறதில்லை.”

”இரண்டு மூன்று மாதமாக அவன் ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிறான்” என்றார் அப் பெரிய வீட்டுக்காரர்.

”ஒரு மாதிரியாக! ஏன்?” என்று மெதுவாகக் கேட்டாள் ரோஜா. தன்னைத் தானே கேட்டுக் கொள்வதுபோல்தான் இருந்தது. ”ஏனோ” என்று அவள் திகைக்கச் சொன்னார் வீட்டுக்காரர். ரோஜாவைப் பார்த்து அவளுடன் வந்தவர் ”நாம் இப்போது என்ன செய்வது” என்று கேட்டார்.

”சிறிது இருந்து பார்க்கலாம்” என்றாள்.

”பிறகு?”

”பிறகு” என்றாள் ரோஜா.

சிறிது மெளனமாயிருந்து,

”என் பிரியமான ரோஜா, நீ செய்வது பிடிக்கவில்லை. பள்ளித் தோழன்தான். சிநேகிதத்திற்கும் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு எல்லை உண்டு. என்னவோ, எனக்கு இப்போது உன் காரியமும், அதனால் அவனையும் பிடிக்கவில்லை” என்றான் ரோஜாவுடன் வந்தவன்.

”ஆமாம். எவ்வகைக்கும் ஒவ்வொரு சமயத்தில் எல்லையுண்டு. சரிதான். ஆனால் சில இல்லை – இல்லை அவன் எனக்கு எழுதிய கடிதத்தை உன்னிடம் காட்டினேனோ? அவனுக்கு என் மணம் நடந்தது தெரியாது. தெரிந்து இருக்கலாம். அவனை விட என் கலியாணத்தில் ஆனந்தமடைகிறவர் வேறு ஒருவருமே இல்லை. ‘உன்னை நான் என் கிராமத்தில் காண நினைக்கிறேன்’ என்று எழுதினது சாதாரண மேற்போக்கு உணர்ச்சியினால் அல்ல.”

”சரி, அவன் இங்கேதான் இருக்கிறானா? ஏன் இங்கே இருக்கிறான்? வேலைக்குப் போகவில்லையா?”

”இனிமேல் போகலாம்” என்றாள் ரோஜா.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது அவன் வீடு திறக்கப்பட்டது. அவனைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் உள்ளே கொண்டு போய் அவனைக் கிடத்தினர். இவ்விருவரும் அவன் வீட்டிற்குச் சென்றனர்.

பிரகாசமில்லாத வெளிச்சத்தில் அவனை, மூடின கண்களோடு, பார்த்தாள் ரோஜா. அவள் இது மாதிரி அவனைப் பார்த்தது இதுதான் முதல் தரம். புது மாதிரியே அவன் தோன்றினான். ஒவ்வொரு தடவையும் இவளுக்கு ஒவ்வொரு மாதிரியாகவும் புது மாதிரியாகவும் தோன்றுவான். ஒரே மாதிரியாகத் தோன்றினால் அல்லவோ ஒருக்கால் அவனிடம் ஒருவகை எண்ணம் கொள்ள முடிந்திருக்கும்.

இவ்வகையிலே அவனைப் பார்த்தது, இதுதான் முதல் தரம். முதல் தரத்தின் புதுவகையும், ஒரு மாதிரியாகத்தான் அவளுக்குத் தோன்றியது.

அவன் இருதயம் சிறிது துடித்துக்கொண்டிருந்தது. அவன் வாயினின்றும் மது வாசனை மிக வீசியது. ரோஜா அருகில் நின்றிருந்த அவ்வூர் வாசி ஒருவரைப் பார்த்து ”இவர் குடிப்பதுண்டா” என்று கேட்டாள். ”இவனாவது குடிப்பதாவது! நான் நேருக்கு நேராகக் கண்டாலும், நம்ப மாட்டேன்” என்றார் அவர். ரோஜா கண் மூடிப் படுத்திருந்த தன் சிநேகிதனைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு மெளமனாக நின்றாள்.

”தெரிந்தது. நான் பாராவிட்டாலும் நம்புகிறேன். ஆம், வேறு வழி உனக்கு இல்லை போலும், நண்பா; உன்னை நான் வேறு விதத்திலன்றோ பார்ப்பதாக எண்ணி வந்தேன். ஏன், இப்படிப் பார்ப்பதும் எனக்கு ஆச்சரியமாக இல்லை, அதிசயமாக இல்லை. ஆனால் தாங்க முடியாத வருத்தமாக இருக்கிறதே நண்¡? ஏன் இவ்வகையானாய் என்று எனக்குத் தெரிந்தால், ஏன்-ஏன் இப்படி” என்று மிக உணர்ச்சி பெற்றுச் சொன்ன வார்த்தை திடீரென்று வெளிப்பட்டு நின்றது போன்று நின்றன. அவள் கணவன், அவன் முகத்தையே பார்த்து நின்றிருந்தான். மூடின கண்களோடு இருப்பினும், அவன் அகத் தோற்றம் உன்னதமாகவே தோன்றியது.

ரோஜா தன் கணவனைப் பார்த்தாள். அவனால் இவளை நேரே நோக்க முடியவில்லை. குனிந்தவாறே நின்றிருந்தாள்.

‘அவனைத் திறந்த கண்களோடு பார்க்கக்கூடாது. அவன் பேசும் போதும் முடியாது. ஏன், அவன் ஒருவருக்கும் எட்டாத தூரத்தின், அதிசயம், ஆனந்தம், பயம், அவனையன்றோ, அவனுக்கு எட்டாதது எது? எப்படித் தோன்றுகிறது என்று கேட்க வேண்டும்” என்று தன் கணவனைப் பார்த்துச் சொன்னாள் ரோஜா.

ரோஜா அவன் முகத்தை ஈரத்துணி கொண்டு துடைத்தாள். அவன் கண்கள் சிறிது திறந்தன. எதிரில் இருப்பது நன்றாக விளங்கவில்லை. எட்டியவைகள் கலங்கிய தோற்றம் கொடுத்தன. மனசில் ஒரு பெரிய பளு. தலை சுழலல்.

இந்நிலையில், தன் முன்னால் ஒரு கருப்புத் தோற்றம். கொஞ்சம் கொஞ்சமாக அவன் எண்ணங்கள் கூடலாயின, வேறு வகையில் நிச்சயம் கொள்ளும் முன்பே. ரோஜா தன் எதிரில் நிற்பதை உணர்ந்தான். நம்ப முடியாமல் இருக்கவில்லை. அவன் முதலில் பேசின பேச்சுகள், முணுமுணுப்பில் கேட்காமலே போயின. பிறகு ‘ரோஜா நீதானே. நீ கருப்பில் எவ்வளவு அழகாக உருக்கொள்ளுகிறாய். ஆனால், எதில் நீ நன்றாக இருக்கமாட்டாய்! அதோ அவர்” என்றான்.

”அவர் என் கணவர். என் கலியாணத்தைப் பற்றி உனக்குத் தெரிவிக்கவில்லை” என்றாள் ரோஜா.

”ஏன்-?”

”ஏன்-ஏன் இப்படி இருக்கிறாய்?”

”எனக்குத் தெரியும் ரோஜா-” வார்த்தைகள் சிறிது தடைப்பட்டு மறுபடியும் அவன் பேச ஆரம்பித்தான். ”ரோஜா -” என்று ஆரம்பித்து முடித்துவிட்டான். கண்களை மூடிக் கொண்டான். சிறிது சென்று திறந்தவை இருவரையும் பார்த்தன. ஆனந்தம் அடைந்து பிரகாசமாகத் தோன்றின. திரும்ப மூடிக் கொண்டன.

இன்பமான இளம் வெய்யிலும், உடனே அது மேக மறைப்புண்டு, சிறு மழைத்துளிகளும் போன்று, அவன் மூடிய கண்களினின்றும் கண்ணீர் சொட்ட ஆரம்பித்தது. மறுதரம் மேக மறைப்பு நீங்கி மழைத் துளிகளிலும் வெய்யிலைக் காண நிற்கும் சிறுவர்களே போன்று, இவ்விருவரும் அவன் கண் திறப்பை ஆவலோடு நோக்கி நின்றிருந்தனர். அவன் கண்கள் திறக்கவில்லை. ஆகாயத்தில் வெகு தூரத்தில், இராப் பறக்கும் பறவைக் கூட்டத்திலிருந்து ”கோக்-கோக் கோக்-” என்ற சப்தம் கேட்டது. அவன் விழிப்பில்லாத தூக்கம் ஆரம்பித்தது.

தன் முழு ஒளி பெற்ற கண்களோடு, ரோஜா தன் கணவனைப் பார்த்தாள், அவன் கண்கள் சிறிது ஈரமுற்று இருப்பதைக் கண்டாள். ஆனால், ரோஜா முகத்தில் மிகுந்த சோபை குடிகொண்டிருந்தது அப்போது.

இருவரும் அவ் வீட்டை விட்டு வெளியேறினர். அவ்வூரிலேயே அவ்விரவைக் கழித்தனர். சிறிது இருட்டு இருக்கும்போதே ஊரை விட்டகன்றனர். அந்த ஊர் வாய்க்காலைத் தாண்டுமட்டும் இருவரும் பேசவில்லை. மோட்டார் வாய்க்காலைத் தாண்டும் போது முதல் காகம் கத்தியது. அவ்வூர் பள்ளத்தெருச் சேவலும் கூவியது. கிழக்கு வெளுக்கலுற்றது. அவ்வோடையைத் தாண்டியதும் ரோஜா போய்க் கொண்டிருந்த காரிலிருந்து திரும்பி அவ்வூரை நோக்கினாள். களங்கமில்லாமல் நிசப்தமாக ஓடிய அவ்வோடை நீர் கலங்கித் தத்தளித்துச் சேறால் கலக்கப்பட்டிருந்தது. அவ்வூர் கோயில் மங்கல வெளிச்சத்தில் மறைவு நீங்கி வெளிக்கோட்டுருவம் கொள்ள ஆரம்பித்தது.

எதிரில் மரங்கள் வெளிச்சத் திரையின் முன்பு, கருப்புருவம் கொண்டு தெளிவாயின. வெளிச்சம் கண்ட வெகு தூரத்தை உன்னிப்பாய்க் கவனித்தால் அன்று மிகச் சோதிகொண்டது போன்ற காலைச் சூரியன் உதயமாவதைக் காணக் கண் கூசியது. மேலே அண்ணாந்து பார்க்கும்போதும் ஒரே வெளிச்சத் தோற்றமேயன்றி தனித் தோற்றம் ஒன்றும் காணக் கூடவில்லை. போகப்போக ”ஏதோ” காணப்படும் என்பது போன்ற உணர்ச்சியுடன் ரோஜா சாந்தமானாள். ஆனால், போவதின் எல்லையை மதிக்க முடியாதது கண்டு திகைத்துப் பெருமூச்செறிவது போன்று ஒருதரம் அவள் மார்பு விம்மி நின்றது.

”அவன்தானே, நீஅடிக்கடி சொல்லும் -” என்றான் மோட்டாரை ஓட்டிக்கொண்டிருந்த அவள் கணவன். பதிலில்லை.

”ஆமாம், நாம் ஊருக்குத்தானே” என்றாள் ரோஜா.

(‘அழியாச்சுடர்’ கதைத் தொகுதியிலிருந்து: ஸ்டார் பிரசுரம், சென்னை)உறவு, பந்தம், பாசம்… – மெளனி

POSTED BY SSINGAMANI ⋅ JUNE 23, 2010 ⋅ COMMENTS OFFஇரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும்கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வைக் கொண்டபோது, மனது, குதூகலம் அதிர்ச்சியென மாறலாயிற்று. ஊர் தவறி இறங்கியதென எண்ண முடியாதபடி எதிரே தன்னூர்ப் பெயர்ப்பலகை தன்னை வெறித்து நிற்பதைக் கண்டான். சமீபத்தில் பெரிய அளவில் நிர்மாணித்துக் கட்டப்பட்டிருந்ததால், தான் முன்பு பார்த்ததான எண்ணமே கொள்ள முடியாது தோன்றியதை ஜடமென வெகு நேரம் அவன் கண்டு நிற்கவில்லை. புறக்காட்சியில் மனது ஒருமையில் அனுபவம் கொள்ள, அனுமானம் கொண்டு, திகைப்பு நீங்கச் சிறிதுநேரம் ஆகியது போலும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே, ஊரை விட்டகன்றவன்; வெளியூர் வாசம் செய்து, வசதியில் திரும்பியவன். வசீகரமெனத் தோன்றிய, தன்னூர்ப் பாலிய கால வாழ்க்கையை நினைத்து, தன்னுடைய பிற்கால வாழ்க்கையையும் அங்கே கழிக்கத் திரும்பியவன். வீட்டை அடையும் வழிநெடுக ஒரு புதிய ஊர்ப்பிரவேசம் எனத்தான் அடிக்கடி தோன்ற இருந்தது. பழைய இடங்களில் புது வீடுகள் தோற்றமும், அங்காங்கே வெற்றிடங்களில் சிறுசிறு குடிசைகளும், மேலும் ஒரு பெரிய சினிமாக் கொட்டகை, அநேக ஹோட்டல்கள், எல்லாம் முன்பே இவனுக்கு அறிமுகமானதென, மெளனமாக வரவேற்க நின்றிருந்தன போலும்…தன் வீட்டை அடைந்தான். வீட்டின் முன் அறை ஒன்றை மட்டும் தன் உபயோகத்திற்கென வைத்திருந்து, ஏனைய பாகங்களை வாடகைக்கு விட்டிருந்தான்.

வெகு நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த அறையைச் சுத்தம் செய்வித்து, குடியிருக்க வசதி செய்து, காலைக் காரியங்களை முடித்துக் கொண்டிருக்கும்போது, இவன் வருகையை அறிந்த இரண்டு நண்பர்கள் இவனைப் பார்க்க வந்தனர். திண்ணையில் அவர்களோடு அமர்ந்து கொண்டு தெருவையும் கவனித்தபடிப் பேசிக்கொண்டிருந்தான். தான் இல்லாத கால, ஊர் நடப்புகள் என அநேக விஷயங்களை அவர்கள் சொல்லியும் இவன் கேட்டும் தெரிந்து கொண்டான். தன் தெருவே மாறியிருப்பதையும், ஜன நடமாட்டம் பெருகி இருப்பதையும் கண்டு கொண்டிருந்தான். மனது ஏதோ ஒருவகையில் சஞ்சலம் அடைந்து கொண்டிருந்தது. இரண்டொரு நாள் வாழ்க்கையில், பழக்கத்தில், எல்லாம் சரியாகி விடும் என்ற நினைப்பில் பேசிக்கொண்டிருந்தான். முக்கியமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்களை மறந்தும், ஏதேதோ அது இதை விசாரித்துக் கொண்டிருந்தான். ஒரு நண்பனைப் பார்த்து, ‘…அந்தக் கிழவி செளக்கியமாக இருக்கிறாளா ? ‘ என்று கேட்டபோது அவர்கள் சிரிக்கலாயினர். எதிரே தெருவில் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண், இடுப்பில் ஒரு குழந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். கையைப் பிடித்து நடத்தி அழைத்துப்போன மற்றொரு குழந்தையுடன், தன் வயிற்றிலும் ஒரு சிசுவைச் சுமந்தாளென ஒரு பூரண கர்ப்பிணி என அவள் தோன்றினாள்.

‘…அதோ போகிறாள் பார் நீ கேட்ட கிழவி… ‘ என்று இவன் நண்பன் மேலும் சிரித்தான். இவன் திடுக்கிட்டு என்னவென்றதற்கு ‘நீ கேட்ட பாட்டியின் பேத்தி அவள் இறக்கும்போது இவள் பிறக்கவில்லை என நினைக்கிறேன்… ‘ என்றான். மேலும் ‘நீ ஊரைவிட்டுச் சென்று எவ்வளவு நாளாகிறது, ஏதோ மறந்து போனதுபோல விசாரிக்கிறாயே. வந்த அசதி போலும் ‘ என்று சொன்னான். பிறகு வந்து பார்ப்பதாக அவர்கள் விடைபெற்றுச் சென்றனர்.

சாப்பிட்டு, களைப்பு தீர உறங்கி, இவன் எழும்போது, மாலை நான்கு மணிக்கு மேலாகிவிட்டது. காபி சாப்பிட்டு வெளியே சென்று சுற்றி வரலாமென வீட்டை விட்டுப் புறப்பட்டான். கடைவீதியாகச் சென்று மற்றுமொரு வீதியையும் கடந்து மேற்குச் சந்நிதியை அடையலாம். அதையும் கடந்து கோயில் குறுக்காக ரயிலடியை அடைந்து, சிறிது உட்கார்ந்து, வீடு �

��ிரும்பினால், சாப்பிட்டுப் படுக்க நேரம் ஆகிவிடும் என்று எண்ணிக் கிளம்பினான். கடைவீதிக் கூட்டத்தைச் சாவதானமாக நடந்து கடந்துவிட்டான். மற்றொரு வீதியைக் கடக்கும்போது ஜன நடமாட்டம் குறைந்து விட்டது தெரிந்தது. இவன் மனதில் பழைய கால ஞாபகங்கள் சிறிது சிறிதாகத் தோன்றலாயின. சந்நிதித் தெருவை அடைந்து, ஒரு வீட்டைக் கடக்கும் போது, இவன் மனதில் ஒரு பரபரப்புக் கண்டது. அவ்வீட்டிற்கு இவன் அநேகதரம் தன்னுடைய மிக நெருங்கிய நண்பனுடன் சென்று இருக்கிறான். அவனை ஊரில் சந்திக்கும் ஆர்வமும், அவனோடு சேர்ந்து இப்போது வாழ்க்கை கொள்ளலாம் என்ற எண்ணமும்தான் இவன் ஊர் திரும்ப ஒருவிதக் காரணம். காலையில் அவனைக் காணாததும், ஏனையோரிடம் அவனைப்பற்றி விசாரிக்காததும், வெகு உணர்ச்சியில் தன் தவறென இவனுக்குத் தோன்றியது…

அவ்வூர்க் கோவில் மிகப்பெரியது. சரித்திரப் பிரசித்தி பெற்றது. மகோன்னத தசையில் ஆண்ட சோழ மன்னன் ஒருவனால், வெகு காலம் முன்பு கட்டப்பட்டது.

ஒரு காலத்தில் அவ்வூரே அந்தக் கோவிலைப் பொருத்து நிர்மாணம் ஆனது. ஆனால் இப்போது அகலமான தேரோடும் வீதிகளையும், சந்நிதிகளையும், தெற்கே ஒதுப்புறமாகப் பாழ்படும் ஒரு அமைதியில் விட்டு, தற்போதைய நகரமென்பது வடக்கே வெகுதூரம் வியாபகம் கொண்டிருந்தது. மேற்கு வீதிக்கப்பால் மேற்கே நெடுந்தூரம் அத்துவான வெளியென, தொடுவானம் வரையில் கண்டவெளி வீதியை மறைக்க ஒன்றுமில்லை. மேற்கே சூரியன் மறைய இருந்தான். மறையும் சூரிய ஒளி சந்நிதித் தெரு முழுதும் படர்ந்து கோபுரவாயிலையும் கடந்து கொடிமரம் வரையில் சென்று தெரிந்தது. மாலையில் கோவிலுக்குச் செல்லுபவர்கள் நிழல்கள், அவர்களை முந்திக் கொண்டு கர்ப்பக் கிருஹ இருளில் மறைந்து ஒன்றாவது, ஒரு உன்னதக் காட்சியென மனதில் கொள்ள இருக்கும்.

மேற்கு கோபுரத்தைத் தாண்டி உட்சென்றவன், பக்கத்தில் இருந்த ஒரு சிறு மண்டபத்தில் உட்கார்ந்தான். ஒருபுறம் கோபுரமும், மறுபுறம் ஈசுவர சந்நிதியும் தெரியும். முன்னும் பின்னும், இடிந்துகொண்டிருக்கும் பிரும்மாண்ட மதில்சுவர்களின் பாழ்படும் தோற்றம். கர்ப்பக்கிருஹம் இப்போதே இருள் கொண்டுவிட்டது. சர விளக்குகள் ஏற்றப்பட்டுத் தெரிந்தன. அந்த ஆழ்ந்த மெளன இருள் ஒளி அமைதியில் அருஉரு என எட்டிய லிங்கம் சோபையில் புலனாகித் தெரிந்தது. மதில்சுவர் இடிபாட்டிற்கிடையில் முளைத்து இருக்கும் புற்பூண்டுகளை, காலம் தவறி மேய்ந்து கொண்டிருந்தன, இரண்டொரு ஆடுமாடுகள்; மற்றும் சில, மூடிய கண்களுடன் அசைபோட்டுப் படுத்துக் கிடந்தன. ஒரு அமானுஷ்ய மயான வெளி அமைதி, அறிவிற்கப்பால் உணரும் வகை, ஒரு சங்கேத மெளனப் புதிரென, புறக்காட்சித் தோற்றம் கொடுத்தது.

எதிரே, ஒளிபடர்ந்த தரையில் நீண்டு வளர்ந்து வரும் நிழல்கள், ஒன்றுகூடிப் பிரிந்து சலிக்கும் ஒரு விநோதக் காட்சியில், உட்கார்ந்திருந்த இவன் லயித்திருந்தான் போலும். யாரோ சிலர் கோவிலுள் நுழைகிறார்கள் போலும். நான்கைந்து பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவள், சிறிது தூரத்திலிருந்தே இவனைக் கவனித்து வந்ததில், இவனைத் தெரிந்து கொண்டவள் போன்று, இவனைக் கடக்கும்போது, பார்த்து, ஒரு புன்சிரிப்பில் நின்றாள். இவன் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை உடன் உணர்ந்து, நடந்து, ஏனையோருடன் கூடிக் கோவிலுக்குள் சென்றாள். அவள் தோற்றம், வசீகரம், புன்னகை எல்லாம் கொஞ்சம் தாமதித்தே இவன் மனது கண்டது போன்று அவளைத் தெரிந்துகொள்ள, அவள் போவதையே கவனித்திருந்தான். அவள் ஒரு தரம் திரும்பி இவனைப் பார்த்தாள். மாலை ஒளி அவள் முகத்தில் விழ அவள் வெகு வசீகரமாகத் தோன்றினாள். அவளை யாரென இவன் தெரிந்துகொள்ள முடியவில்லை. கோவிலுள் சென்று அவர்கள் மறை ந்விட்டனர். ஞாபகம் காண, மறதியைத் தேடுவதில் ஜடமென இவன் அவ்விடத்திலேயே வீற்றிருந்தான். எவ்வளவு நேரமென்பது இவனுக்கு நிதானம் இல்லை. உலகு இருள் கொண்டுவிட்டது. உள்ளே சரவிளக்குகள் வெகு சோபையில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. திடாரென மணி ஓசை அதிரக் கேட்டது. கோயில் மாலை பூஜை ஆரம்பமாகியது……

அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். எல்லோருமே நாற்பது வயதைக் கடந்தவர்கள். இவனைக் கடக்கும்போது, அவள் இவனுக்கு வெகு சமீபமாக வந்து நின்று ‘…..யோஜனைகள் இன்னும் முடியவில்லையா…கோவிலுள்ளாவது வந்து இருக்கலாமே….. ‘ என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். இவனுக்கு அவளைத் தெரியவில்லை. மேலும் அவனுக்கு சஞ்சலம் கொடுக்காவகைக்கு எண்ணியவள் போன்று ‘….ஏன் தனியாக ? உங்கள் நண்பர் கூட வரவில்லையா ? ‘ என்றதும், மனதில் ஒரு ஒளி பாய்ந்ததென அவள் யாரெனக் கண்டு கொண்டான். ‘…என்ன கெளரி. உன் மாதிரித் தோன்றியும் நீயென நினைத்துப் பெண்களோடு பேச முடிகிறதா ?…… ‘ என்று சொன்னவன், ஏனையவர்கள் எட்டிக் காத்து நின்று இருப்பதைப் பார்த்து, எழுந்து அவளுடன் நடக்கலானான். ‘…..அங்கே அந்த வீட்டிலேதானே….நான் இன்று காலையில்தான் வந்தேன்….சாப்பிட்டு இரவு வருகிறேன். உன்னிடம் சில விஷயங்கள் பேசித் தெரிந்து கொள்ளவேண்டும்……. ‘ என்றவன் கோபுர வாயிலைத் தாண்டி அவர்களைப் பிரிந்து சென்றான். அவன் பேச்சுகளுக்குக் கெளரி பதில் பேசவில்லை. இருவரும் தத்தம் பழைய வாழ்க்கைச் சிந்தனைகளில் சென்று கொண்டிருந்தனர்.

இவன் வீட்டிற்குப் போகும் வழியில் இரண்டொரு சிநேகிதர்களைச் சந்தித்தான், வெகு அவசரத்திலும்–காலையில் மறந்தது எனத் தோன்றியதை– தன்னுடைய பாலிய நண்பனைப் பற்றி விஜாரித்தான். அவர்கள் சொன்னது இவனுக்கு ஆச்சரியம் கொடுக்க இருந்தது. சில வருஷங்களுக்கு முன்னால் அவன் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு ஊரை விட்டுப்போய் விட்டதாயும் எக்காரணம் என ஒருவருக்கும் தெரியாதெனவும் அவர்கள் சொன்னார்கள்.

சாப்பிட்டு, சீக்கிரமாகவே கெளரி வீட்டிற்குச் செல்லுவதில் தன் மனது ஆர்வம் கொள்ளுகிறது என்பதை, இவன் கண்டுகொள்ளாமலில்லை. பழைய நினைவுகள் வசீகர மெனப்படுவதிலும், சோகமும் கலந்ததென இவனுக்குத் தோன்றியது. ஊரை விட்டோடிய தன் நண்பனுடன் வெகுகாலம் ஒன்றென வாழ்ந்தவள் கெளரி. எவ்வளவோ நாட்கள் அவனுடன் கூடிக் கொண்டு இவன், அவள் வீட்டிற்குப் போய்ப் பேசியிருக்கிறான். அவனை இப்போது பார்க்க முடியாதது வெகுவாக வருத்தமெனத் தோன்றுகிறது.

இவன் கெளரி இருந்த மேல சந்நிதித் தெருவை அடையும்போது, ஊர் அரவம் அடங்கி, அரை இருளில் தெருவே ஒரு தூக்கத்தில் ஆழ்ந்ததெனத் தோற்றம் கொடுத்தது. ஒரு காலத்தில் அத்தெரு முழுவதும் தேவதாஸிகள் இருந்தனர். வழி வழியாக வாழ்ந்து வந்த ஒவ்வொரு குடும்பப் பிரபல தாஸிகள், அவர்களின் இசை நாட்டிய கலைத் தேர்ச்சி, பழைய பெரிய மனிதர்களுடைய ஈடுபாடு…..என அநேக ஞாபகங்களைக் கொண்ட தெரு அது. ஒரு வசீகரம் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் காட்சியை அது இப்போது அளித்துக் கொண்டிருந்தது. யார் யார் இப்போது அங்கு வசிக்கிறார்கள் என்பதற்கில்லை. பழைய வீடுகள் நடுநடுவே பெரிய புது வீடுகளும் இருந்தன. திடுக்கிட எங்கிருந்தோ கேட்ட ஒரு நாயின் குரைப்பு, இவனைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தது. ஒரு சுவான லக்ஷியம் எட்டிய இருளிலும் உருவாகியது போலும்……

கெளரி, தன் வீட்டுச் சிறு திண்ணைத் தூணில் சாய்ந்து நின்றிருந்தாள். பாலிய கால தன் வாழ்க்கை நினைவுகளை எதிர் மாடத்தில் தெரிந்த விளக்கொளியில் கண்டு நின்றாள் போலும். அவள் நிழல் பாதிக்குமேல் பக்கவாட்டில் கீழ் குறட்டுச் சுவரில் ஆடிக் கொண்டிருந்தது. வீட்டு வாயிலை அடைந்தவன் அவள் நிழலைத்தான் முதலில் கண்டான்போல�

�ம். ஒரு பயங்கரம், இனிமையைத் தூண்டி இழுக்கும் பிரமையை அடைந்தான். இவனை, இவன் வந்ததை, கெளரி கவனிக்கவில்லை. ‘….என்ன கெளரி….. ‘ ‘ என்ற சப்தம் கேட்டு இவனைப் பார்த்தாள். எதிரே தீபத்தின் சுடரொளியில் தன் நிருத்தியம் கலைவுபட்டதென, ஒரு இனிய கனவு கலைய இந்த நினைவா என்பதில் இவள் மனம் வருத்தமடைந்து….. ‘உள்ளே போகலாம் ‘ எனச் சொல்லி இவன் தொடர அவள் உட்சென்றாள். கூடத்தில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இவனை உட்காரச் சொல்லி அவளும் சிறிது தூரத்தில் உட்கார்ந்துகொண்டாள். வாயிற் கதவு திறந்தபடியே இருந்தது. சாத்தவில்லை. வாயிற் புரைக்கை விளக்கையும் உள்ளே எடுத்து வரவில்லை.

தன் நண்பனுடன், இவன் அநேகந்தரம் இந்த வீட்டிற்கு வந்து இருக்கிறான். கடந்த காலம் பிளவு கொண்டது எனத் தோன்றாவகைக்கு, நேற்றுக்கூடத்தான் இங்கு வந்ததான எண்ணம் கொடுக்கும் வகைக்கு, அவ்வீடு பழைய நிலைமையிலேயே தோன்ற இருந்தது. ஒரு வகையில், காலையிலிருந்து தன் மனம் கொண்ட சஞ்சலம் சிறிது குறைந்ததென இவனுக்கு தோன்றியது.

அநேக குடும்ப நினைவு ஞாபகங்களுக்கு வசீகரம் கொடுக்க நின்ற இந்த வீட்டில்தான் கெளரி, வழி வழியாக வந்த ஒரு கெளரவ தாஸி குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வந்தவள். தன் வழிக்குப் பின் வாரிசு இல்லாது தன் குடும்பமும் தன்னுடன் முடிவு பெறாது இருக்க, அதன் லக்ஷியத்தின் சாசுவதத்தை இப்போது வாழ்வில் கடைப்பிடிக்கிறாள் போலும். பெண்மையின் சக்தி தோன்ற, அவள், பார்ப்பவர்களுக்கு ஒரு இனிமை, கவர்ச்சி, ஒரு பயங்கரம் தோன்ற இருப்பவள் போல ஒருவரிடமும் ஒட்டாது, வெகு சகஜமாக யாரிடமும் பழகுபவள். சிற்சில சமயங்களில் அவள் நடையுடை பாவனைகளிலும் பேச்சிலும், ஒரு நிச்சயம் தோன்றா பிரமிப்புத் தெரிய இருக்கும்.

உட்கார்ந்து கொண்டவன் சிறிதுநேர மெளனத்திற்குப்பின் ‘…..இன்று காலையில்தான் வந்தேன்…. உன்னைக் கோவிலில் சந்தித்த பிறகு சிறிது நேரம் சென்று கேள்விப்பட்டேன்….. ‘ என்றான். அவள் குறுக்கிட்டு ‘…..என்ன….. ‘ என்றாள். ‘…..உன் சிநேகிதன்….. நம் நண்பன் ஊரை விட்டுப் போனதை உன்னை விட்டு. ‘ எனச்சொல்ல அவளும் சிரிக்கலானாள். ‘…….இல்லை நீங்கள் அதற்கு முன்பே ஊரைவிட்டுப் போய் விட்டார்கள்… ‘ அவள் பேசியது சிரிப்பது இவனுக்கு ஒரு வகையில் திருப்தி அளிப்பதாக இருந்தும் ஏன் என்பது புரியவில்லை.

இவன் ‘….உன்னைக் கேட்கலாம் என வந்தேன்… உன்னைவிட்டு ஊரைவிட்டுப்போன காரணம் ? வெகு வருத்தமாகத் தோன்றுகிறது. சொத்தை எல்லாம் விற்று ஊரை விட்டுப்போனது…. ‘ இவன் பேசுவது இவனுக்கே பொருத்தம் காணாது தட்டுத் தடுமாறியது போன்று இருந்தது. இவன் உதவிக்கென கெளரி பேச்சை ஆரம்பித்தாள். ‘…..எனக்கும் காரணம் தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ள நீங்கள் வந்த காரணமும் தெரியவில்லை…..எதை, எப்படி நான் சொல்லமுடிகிறது ?….. ‘ ‘ என்று சொல்லி அவள் வருத்தத்தை, இவன் தன் சிரிப்பில் கலந்து கொண்டாள். தன் வீட்டை ஒரு தரம் மெளனமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு இவனையும் பார்த்தாள். அவள் அலக்ஷிய பாவத்தை இவனால் ஏற்கமுடியாது. ‘என்ன இருந்தாலும்–தாஸி ‘ என இவன் மனம் எண்ணியது.

சிரித்துக்கொண்டே மேலும் கெளரி பேசலானாள். ‘பழைய கதையை, கனவெனக் கண்ணெதிரில் மடிவதைக் கண்டும், அதில் ஒரு வசீகரம் உங்களுக்குக் காணமுடிகிறது. நடந்தது எல்லாம் கண்முன் அர்த்தம் மாறி இசைவு கொள்ள முடியவில்லை ? நடப்பில் என்ன முழுமை காண இருக்கிறது ? நடந்ததின் சாயையும் நடக்கப்போவதின் நிச்சயமின்மையும் கலந்து புதிராகப்படவில்லையா ? ‘

‘என்ன கெளரி உன் வேதாந்தம், வேடிக்கையாக இருக்கிறதே…. ‘ என்றான்.

‘ஆமாம், நான் ஒரு தாஸிதானே….ஒரு பெண் தானே உங்களுக்கெல்லாம்…. ‘ என்றவள், ‘நீங்கள் சாய்ந்து கொண்டிருக்கும் தூணைக் கேட்டுப் பாருங்க�

�் சொல்லும்…உங்கள் நண்பர் போன காரணம்… ‘ இவன் நண்பன் இந்தத் தூணடியில்தான் உட்கார்ந்து பேசுவது இவனுக்கு ஞாபகம் வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகமடையும் வசீகரம், அவள் வயதைக் குறைத்துக் கொண்டிருந்தது. அவள் பேச்சுகளும் பாவமும், பாலியக் குறுகுறுப்பை அளிப்பதாக இருந்தன.

‘உங்கள் நண்பரைப் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் இப்போது என்னிடம் வந்து கேட்பதில் உங்களைக்கண்டு கொள்ள முடியாதா ? காரணம், நம்பிக்கை கொடுக்காவிடின் என்ன பிரயோஜனம்……அவர் சொத்து சுதந்தரம் எல்லாம் விட்டுப் போய்விட்டார். ஏன், என்னையும் உங்களையும் கூட விட்டுவிட்டுச் சிலர் க்ஷேத்திராடனம் போய் இருக்கிறார் என்று சொல்லவில்லை ? அல்லது எங்கேயோ தாங்கள் க்ஷேத்திராடனத்தின்போது, அவரை, அவரைப் போன்ற ஒருவரைச் சாமியாராகக் கண்டு பேசுமுன் மறைந்த மர்ம மகிமையைக் கூறவில்லையா ? சில நாட்களில் நீங்கள் கேள்விப்படலாம்….அல்லது ஜீவன் முக்தனெனத் தோன்ற, தாடி வளர்த்துக் கொண்டு தமுக்குடன் எட்டிய அடிவானத்தையும், யாராவது தன்னுடன் பேச வருகிறார்களா என்ற ஆசையில் திருட்டுப் பின்னோட்டம் விட்டுக் கொண்டு, கடற்கரையில் அவரைக் கண்டதாகச் சொல்லவில்லையா ? கைகட்டி வாய்புதைத்து வரும் கதாசிரியர்களுக்கு ஞானோபதேசம் செய்ய–பூர்வாசிரமம்–கருகிய காதல்–சாதல் இவைகளைக்–கதாநாயகனாகத் தன்னைக் காணத் தமுக்கடிக்கவில்லை ? அப்படியாக நீங்கள் அவரைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நானும் ஒரு வகையில் கதாநாயகியாயிருப்பேன் அல்லவா….. ? அவருக்குச் சாமி பூதத்தில் நம்பிக்கை இல்லை. நான் எப்போவாவது அவரைத் திடுக்கிடச் சாமி என்று அழைப்பது உண்டு. ரொம்பப் படித்த அறிவாளிதான். கூப்பிட்ட தோஷம் அவரே சாமியாராக ஓடிவிட்டார் போலும்…. ‘ என்னெதிரில் ஆக முடியவில்லையே என்ற வெட்கம் கொண்டு, நான் பார்க்க முடியாது, சாமியாராகத்தான் ஓடியிருக்க வேண்டும்…. ‘ எனச்சொல்லி ‘……நான் சொல்லுவது சரிதானே……. ‘ என்று சிரித்தாள்.

அவள் பேசுவது ஒரு சமயம் வேடிக்கையாகவும், பின்பு பரிகாசமாகவும் இவனுக்குத் தோன்றியது. மேலும் அப்போதைக்குப் புரியாது பின்பு புரியவிருக்க ஏதோ உளதாகியதாகவும் பட்டது. ஆதிநாளிலிருந்து தனக்கு அவளைப்பற்றித் தெரிந்த விதம், எப்படி என எண்ண முடியவில்லை. அவளை அவன் நேராகப் பார்க்காது, அடிக்கடி வீட்டைச் சுற்றிப் பார்வை கொண்டிருந்தான். ஆங்காங்கே ஒளிபடராத இருள்மூலை முடுக்குகளில் பழைய நினைவுகள் ஒன்று கூடிப் புரிந்து கொள்ள முடியாவகையில், சதி ஆலோஜனை செய்து கொண்டிருந்தன போலும். முற்றத்தில் ஒரு முல்லைக்கொடி, பகலில் சூரிய வெப்பம் காட்டாது, பந்தலின் மேலே படர்ந்து இருந்தது. இந்த இரவில், பார்வையில்படாது, மலர்ந்த மலர்களினின்றும் பிரிந்து வரும் மணம் வீடு நிரம்பக் கணிசம் கொள்ளுகிறது. வானின்று நுகர ஊர்ந்துவரும், ஒரு கனிவு இவன் மனதில் படுவது என இது இல்லை.

பேசிய பிறகு ஏன் பேசினோம் என்ற மனக்குறை ஏற்படுவது எல்லோருக்கும் உண்டு. ஆனால் கெளரிக்கு அது மாதிரி தோன்றவே முடியாது. அவள் பேசியது அவள் பேசினதாகவே தோன்றாது சப்தம் கொள்ளுகிறது. பேசும்போது அவள் சரீர ஒரு சிறு நெளிப்பில், தான் பேசியதையே தன்னின்றும் எப்படி உதறிவிடுகிறாள் ? தான் பேசியதைத் தானே கேட்பவள் போன்று இருக்கிறது அவள் முகபாவம். எவ்வகையில், காரியத்தில், எவ்விதப் பொறுப்பையும் சுமக்காமல் உதறி, அவளால் வாழ்க்கை காணமுடிகிறது ?

‘……அல்லது தன்னை விட்டுப் போன தன் மனைவியை தேடிக்காண ஓடியிருப்பாரோ என்னவோ, யாருக்குத் தெரியும் ? ‘ என்று அவள் சொல்லி முடித்தது இவனை யோஜனையினின்றும் கலைத்துத் திடுக்கிட வைத்தது. அவள் அறியாமையை நினைக்க, ஒருபுறம் வேடிக்கையாகவும் இருந்தது. தன்னைப் போலவே தன் நண்பனும் கலியாணம் ஆகாதவனென்பது இவளுக்குத் தெரியவில்லை போலும் ‘

திறந்து இருந்த வாயிற்படியைத் தாண்டி, வெகு சமீபம் வரை வந்தவளை இவன் கவனிக்கவில்லை. ‘….பேச்சுச் சத்தம் கேட்டுப் பார்க்க வந்தேனக்கா ‘ என்று சிரித்துக்கொண்டே, ஒருவள் வெகு நிதானமாக வந்து கூடத்தில் ஒரு பக்கமாக உட்கார்ந்து கொண்டாள். அவளைத் தொடர்ந்து வந்த ஒரு சிறுவனைப் பார்த்துக் கெளரி, ‘தம்பி, ஐயாவுக்குக் காபி, வெற்றிலைபாக்கு, வாங்கி வா….. ‘ என்றவளை ஒன்று வேண்டாமென இவன் தடுத்தும் சோடாவாவது வாங்கி வரச் சொன்னாள். மேலும் இவன் பணம் எடுத்துக்கொடுப்பதைத் தடுத்து ‘…..என்ன ஐயா செய்வது ? அவமானப்படுத்தவா ? விருந்தாளியாக வந்தவரின் அபேக்ஷைகளை நாங்கள் திருப்தி செய்யவேண்டாமா….என்ன அனசூயா நான் சொல்லுவது ‘ என்று வந்தவளைப் பார்த்துக் கேட்டாள். ‘ஆமாம்…..இவர் நம்ப சாஸ்திரபுராணம் படித்ததில்லையோ என்னவோ….. ‘ என்று ஒரு அசட்டுச் சிரிப்புத் தோன்றச் சொன்னாள்.

அன்று இரவு இவன், அவர்களுடன் பேசிவிட்டு வீடு திரும்பும்போது இரவு வெகுநேரம் ஆகிவிட்டது……

மறுநாள் காலையிலிருந்தே இவனுக்குக் கெளரி வீடு செல்லும் ஆவல் தோன்ற ஆரம்பித்தது…..அன்று மாலை சீக்கிரமாகவே அவள் வீட்டிற்குச் சென்றான். நேராக உள் சென்றவன், இரண்டொரு பெண்களுடன் அவள் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தான். இவனையும் கூப்பிட்டு உட்காரச் சொன்னாள். நேற்றுக் கோவிலில் பார்த்தவர்கள் எனவும், அவர்களும் தாஸிகளெனவும் கண்டு கொண்டான். சிறிது நேரம் ஊர் உலகம் பேச்சுகளெனப் பேசினர்.

கெளரி இவனைப் பார்த்துக் கேட்டாள். ‘நேற்றுத்தானே வந்தது…..மனைவி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டுதானே….. ‘ அவள் வசீகரம் மிகக் கடுமையாக இவனைத் தாக்கியது. மனது ஒரு வகையில் குதூகலம் கொண்டது…….

‘நீ நினைப்பது எல்லாம் இப்படித் தவறாக இருக்கிறதே ‘ நானும், அவனும் கல்யாணமே செய்து கொள்ளாதவர்கள்–என்னைப் பற்றித் தெரியாதது இருக்கட்டும். அவனைப்பற்றிக்கூட அவ்வளவு பழகியும் உனக்குத் தெரியாதது சிரிப்பாகத்தான் இருக்கிறது…… ‘ என்று நெருங்கிப் பேசும் வகையில் கூறினான். ஏனையோரின் ஒருமித்த சிரிப்பில், இவள் கலந்து கொள்ளவில்லை. அதன் எதிரொலி என சிறிது சென்று இவள் முகத்தில் புன்சிரிப்புத் தோன்ற, அதிலும் ஒரு கடுமை தொனித்தது போலும். ஆண்களின் தன்மை ஒருவரிடமும் ஒருவிதத்திலும் சரியெனப்படவில்லை. ஆண் பெண் பாகுபாட்டை, உலகே தவறாகக் கண்டு கொண்டிருக்கிறது. உறவு, பந்தம், பாசம், எல்லாமே வியர்த்தமாகத் தோன்றும் வகைக்கு, தர்மமும், சீர்குலைந்து, ஒத்துப் போவதாகக் காண்கின்றனர் போலும். இவள் மனம், யாரை எதற்காக நொந்து கொள்ளுவது என்பது புரியாது தவித்தது.

‘…..எவ்வளவு தவறு. தெரிந்து கொள்ளாதது எவ்வளவு சரியாகவும் இருக்கிறது…. ‘ என்று ஆரம்பித்த கெளரியைத் தடுத்து…… . ‘சரி தவறு எல்லாம் தவறாகவே உனக்கு ஒன்றுதான்…. ‘ என்றான். எல்லோரும் சிரித்தனர். கெளரியின் சிரிப்பு, மேலும் தன்னைப் பற்றிய அவர்கள் எண்ணம் என்னவென்பதும் புரியவில்லை. மேலே யோசிக்க முடியாது கெளரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பைத்தியக்காரச் சதியில் சிக்கித் தவிப்பதான லேசான ஒரு எண்ணம். தன்னை விடுவித்துக் கொள்ள கெளரியை விட்டு வெளிச் செல்லுவதும் மனதுக்குப் பிடித்தமாக இல்லை.

‘…ஐயா… ‘ என்று இவனைக் கூப்பிட்டு அவள் பேச ஆரம்பித்தது ஒரு ஆறுதலாக இருந்தது… ‘ஐயா நான் ஒரு பெண்–அதுவும் ஒரு தாஸிப் பெண். தாஸிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்து இருந்தாலும் பெண்களையும் பற்றித் தெரியுமோ… ? நீங்கள் கல்யாணம் ஆகாதவர்கள். செய்து கொள்ளாதது ஒரு வகையில் சரி. யாரோ, ஒருவன் மனைவி என, யாரோ ஒருவன் மனைவி என உங்களிடம் கற்பிழந்துகொண்டு நிற்க முடியாத வகைக்கு… ‘ என்று சொல்லிச் சிறிது பேச்சை நிறுத்தினது, இவனுக்குத் திடுக்கிட இருந்தது. சிறிது கோபத்தில் ‘என்ன…என்ன சொல்லுகிறாய்–தனக்குப் புரியாது, பிறருக்கும் புரியாத வகைக்கு… ‘ என்றான் இவன். இவன் பேசுவதையே கவனிக்காதவள் போன்று, ‘நாங்கள் பெண்கள்–அதுவும் தாஸிப் பெண்கள். ஒருவிதத்தில் கல்யாணமானவர்கள், மனைவிகள் எனவும் கொள்ளமுடியும். கல்யாணமான ஒருவள், மறதியில் தன் கணவனை எங்கேயோவிட்டு, எங்கும் தேடுவதான பாவனையை என் மனது அடிக்கடி கொள்ளுகிறது ஐயா. ஆண்களால் கலியாணமின்றி வாழமுடியும். பெண்களால் முடிகிறதில்லை. இந்து தர்மம் அப்படித்தானே…. கன்னியென வாழவும் கூடாது…. முடியாது. குமரிக் கன்னியும் ஒருவனை அடைய ஏங்கி, சாசுவதத்தில்தானே, கன்னியெனவாகிறாள்….. மனைவி எனக் கணவனிடம் வாழ்க்கைப்படுவதி, தன் மனத் தூய்மையை, அவனால் எப்போதும் இழக்காமல் இருக்க முடியும் என்று எந்த மனைவியால் நம்பமுடியும் ? தன் புனிதம் தன் கணவனால் பறிபோக, கற்பிழந்தவளாகத் தன்னை அவள் அப்போது கருதமுடியாதா ? ஒருக்கால் உங்களைப் போன்றவர்களால் அவ்வகையில், கணவனாக முடியும் போலும்…. ஆனால் கல்யாணம் செய்துகொள்ளாமல் நிற்கிறீர்களே….. பெண்ணைப் படைத்த ‘அவன் ‘ பெண்மையையும் மறக்கவில்லை….. ‘ என்று சொல்லியவள் ‘என்ன அனசூயா நான் சொல்லுவது ‘ என்று அவள் அசட்டு ஆமோதிப்பைப் பெற நினைத்து அவனைப் பார்த்து சிரித்தாள். ‘உங்கள் நண்பரை அவசியம் கண்டு கொள்ளுங்கள்….. அவர் புரிந்துகொண்டவர் ஒருவள் ‘நாழிகை ஆகவில்லையா அக்கா ‘ ‘ என்று கேட்டாள். ‘ஆமாம் ‘ என்றவள் இவனைப் பார்த்து ‘நீங்களும் வாருங்கள் கோவிலுக்கு….நாழிகை ஆகிவிட்டது ‘ என்றாள் கெளரி.

மாலை சூரியன் மறைய இருக்கிறான். சந்நிதித் தெரு முழுவதும் சூரிய ஒளி பரவி இருந்தது. கோபுரம் தாண்டியும், கொடி மரம் வரையிலும்கூட இவனும் அவர்களுடன் கூடச் சென்றான். முன் நீண்டு சென்ற நிழல்கள் சலித்து ஒன்றைச் சென்று கலந்தும் விலகியும் தெரு வழியே சென்று கொண்டிருந்தன. முன் சென்ற அவர்கள் உட்சென்று மறையும் வரையில் பார்த்து நின்று இருந்தான். அப்பால் கர்ப்பக்கிருஹ சரவிளக்குகள் ஏற்றப்பட்டுத் தெரிந்தன. …உட்சென்று மறைந்தவர்களை இவனால் பார்க்கமுடியவில்லை….. விளக்குகள் கலைந்து, மறைந்து, தெரிந்து கொண்டிருந்தன.

அத்துவான வெளி – மெளனி

POSTED BY SSINGAMANI ⋅ NOVEMBER 7, 2010 ⋅ COMMENTS OFF

தன் வீட்டிலே சும்மாத் தலையோடு வாசல் நடந்துகொண்டு சுகமாக வாழலாம் என எண்ணியவனுக்கு எதிரே வாசலில் பெரிய மரமொன்று பார்வைகொள்ள நிற்கிறது. வாயிற்பக்கம் எப்போதாவது வந்து நின்று போவோர் வருவோர்களைச் சும்மா நின்று கவனிப்புக் கொள்வதில், இந்த மரத்தையும் பார்வையில் பட்டுப்போகுமளவிற்கு வெறித்து நோக்குவது உண்டு. எந்த யுகத்திலிருந்து இது இப்படிக்கு இங்கே ஸ்தலவிருக்ஷமென நிற்கிறது என்பது புரியவில்லை.ஆனந்தமாக அது ஆகாயத்திற்கும் பூமிக்குமாக வளர்ந்து எட்டுத் திக்கையும் நோக்கிப் படர்ந்ததென இருப்பது எதற்காகவென்றும் தெரியவில்லை. தன் வீடு ஒரு திக்கை நோக்கி நிற்பது சரியெனப் புரிந்தாலும் இந்த மரம் எந்தப் பக்கம் பார்த்து நிற்பது என்ற சம்சயம் யோஜனையினால் விடுபட முடியாது இவன் திகைப்பது உண்டு. அந்தமரம் ஒருபோதும் நிசப்தம் கொள்ளாது. எந்நேரமும் பக்ஷிஜாலங்களின் கூக்குரலைக் கொடுத்துக்கொண்டிருப்பது வினோதமாகப்படும். சிற்சில சமயம் ஊரை நாசம்செய்ய வானரங்களும் குடும்ப சகிதம் அதில் குடியேறி, வால்பிடிப்பில் தலைகீழாகத் தொங்கி கிரீச்சிட்டு கத்தி ஆடி அட்டகாசம் செய்யும். அது எச்சாதி மரமென்பதும் தெரியாது. காலையில் மரத்தடியில், மலர்கள் பாய் விரித்தாற்போல் வீதியில் சிதறிக் கிடந்து காட்சியளிக்கும்போது, வாசனை நெடியெனக் காற்றடித்த வாக்கில் உலகில் பரவிக்கொண்டிருக்கும். கும்பல் கும்பலாகப் பிள்ளைகள் அதைப் பொறுக்க வருவதையும் இவன் கவனிப்பது உண்டு.

பின்னிருந்து ‘என்ன சார் ஸௌக்கியமா? பார்த்து ரொம்ப நாளாச்சு’ என்ற குரல் கேட்டதென திரும்பினான். அந்த அந்திவேளையில், தன் நிழல்கூட இவனுக்குத் தெரிய நியாயமில்லை – கண்டு கூப்பிட்டதென நினைக்க. எனினும் சுற்றிச்சுற்றி யாரென இவன் காண அவனும் சுற்றியதுபோன்று ஒருவர் முகம் ஒருவர் பார்க்க இவன் எதிரில் வந்தவன், ‘என்ன ஸார், உங்களைப் பார்ப்போமென்று வந்தால் இப்படி ஊரையெல்லாம் சுற்றுகிறீர்களே’ என்று சிரித்துச் சொல்லிக்கொண்டே ஒருவன் இவன் எதிரில் நிற்பதை உணர்ந்தான். எதிரில் கண்டதும் இவன் மேலே கடந்து போகலானான். அவன் இவனுக்கு மரியாதையாக ஒதுங்கிப் போகிற வழி விட்டு இவனைத் தொடரலானான். அவனை யாரெனப் புரியாததிலும், இப்போது பார்த்ததில் எப்போதோ பார்த்து மறந்ததென எண்னமும் இவனுக்குத் தோன்ற இருந்தது. மேலும் தனக்கு யாரையும் தெரிந்தும் தெரியாததுபோலவும் இருக்க முடியும் என்ற எண்ணமும் இவனுக்குத் தோன்ற இருந்தது. மேலும் தனக்கு யாரையும் தெரிந்தும் தெரியாததுபோலவும் இருக்க முடியும் என்ற எண்ணமும் கொள்ள யோஜனையில் அவன் புரியாவிட்டாலும் சிறிது அவனோடு பேசுவதில் கண்டுகொள்ளமுடியுமெனவும், அவசியமானால் தெரியவில்லை என நம்பவைத்துத்தான் தன் வழியே போகவும் முடியுமென நினைத்து இவனும் ‘ஆமாம் ஸார் . ! ரொம்ப நாளாச்சுப் பார்த்து…’ என்றான்.

‘தெரியாதவர்களும் தெரிந்தவர்களென ஏமாற்றுவது உண்டு ஸார்…நான் அப்படிஇல்லை. நிச்சயமாக உங்களுக்குத் தெரியும்…எனக்குத் தெரியாதவர்களே ஊர் உலகில் இல்லை ஸார்’ என்றது ஒரு விபரீத நியாயமாகப் பட்டது.

‘ஆமாம் ஸார் அப்படி நினைப்பது தவறு’ என்றான் இவன்.

‘இப்போது நீங்களா பேசுகிறீர்கள்-நான்தானே-உங்களைப் பிடித்து நான் பேசாதுபோனால் நீங்கள் தெரிந்தும் தெரியாதது மாதிரித்தானே போவீர்கள்…’ என்று உடம்பை நெளித்துக்கொண்டு கெஞ்சும் பாவனையில் பேசிவந்தது இவனுக்குப் பார்க்க பரிதாபமாக இருந்தது. நிச்சயமாக அவனைத் தெரிய ஞாபகம் கொள்ள நினைத்தான். அவன் அசடுமாதிரி அடிக்கடி சிரித்தது மேலும் இவனுக்கு யோஜனைகள் கொடுத்தன, அவனை யாரெனத் தெரிந்துகொள்ள முடியாதபோது, அவன் சிரிப்பிலிருந்தாவது ஞாபகம் வருகிறதா எனக் கவனித்தவனுக்கு, தன்னுடைய சிநேகிதன் ஒருவன் ஞாபகம் வந்தது. அதுவும் தவறென உணர, அந்நண்பன் எப்போதோ செத்து சுடுகாடடைந்ததும்கூட ஞாபகம் இருந்தது. அவனே இல்லாது அவன் சிரிப்புமட்டும் உலகில் இருந்தால், அவனென இவனை இப்போது எப்படிக் கொள்ள முடியும் என்பதும் புரியவில்லை.

‘ஆமாம்-’ என்றான் இவன். ‘நாலுபேரைத் தெரிந்து பிடித்துவிட்டால் எப்படி ஸார் உங்களைப்போல மறக்க முடிகிறதா…’ என்றான் அவன்.

‘இப்போதெல்லாம் நான் வெளிக் கிளம்புவதில்லை… அதனால்தான்…’ என்று தன் குற்றமுணர்ந்த பேச்சென இவன் பேசினான்.

‘நானும் அப்படித்தான் நினைத்தேன். இந்த ஊர் உலகைச் சுற்றும் நம் கண்ணில் ஸார் படவில்லையே என்று…’ என்றான் அவன்.

பேசிப் பிடித்தது உதறமுடியாது பேசப்பேச பீடிக்கிறதே என இவன் எண்ணலானான். சிறிது பேச்சை நிறுத்தி மௌனமானான்.

உங்களைப் பார்க்க நேர்ந்தது ஏதோ யதேச்சையாக நேர்ந்தது என்று நீங்கள் நினைக்கலாம். உங்களைப் பார்க்கமுடியும் என்ற நம்பிக்கையில் நான் உங்களைப் பிடித்தது எதேச்சையில் இல்லை ஸார். மனுஷாலை நான் சினேகம் கொண்டாடாமல் என்னால் இருக்க முடியாது, உங்களைப்போல என்ன இப்படிப் பேசாது நீங்கள்…’ என்றான் அவன்.

‘ஒரு சிநேகிதர் வீட்டிற்கு…’ என்று ஒரு அறைகுறை முணுமுணுப்பெனக் காற்றிலும் கரையும் போக்கிற்குச் சொல்ல விருந்ததையும் அவன் கேட்டு, ‘என்ன ஸார் உங்கள் சிநேகிதர் என் சிநேகிதர் அல்லவா, போவோம்…’ என்று சொல்லிக்கொண்டே தொடரலானான். பத்து தப்படிக்குள் இவ்வளவு கூச்சலும் முணுமுணுப்புமென்றால் குரைகாலமும் தன்னால் எப்படி வாழ்க்கையைச் சகித்துக்கொள்ள முடியுமென்பதில் மனது விடுபடமுடியாத ஒரு பயம் குடிகொள்ள இருந்தது. எதிரே தோன்ற முடியாவிட்டாலும் அடிமடியில் புகுந்து பேசுவது போன்றிருந்தது பேச்சுக்கள். நினைக்க நினைக்க மனது பீதி அடைந்தது. அவனை மறந்துவிட முடியுமென்பதற்கில்லை. மறக்க வேண்டியதை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டியிருப்பதால் மறப்பதை ஞாபகமெனத்தானே கொள்ள முடிகிறது. அவனைப்பற்றி யோஜிப்பதில் யாரெனத் தெரியவில்லை எனக் கொள்ளுவது தனது முக்கிய காரியமென எல்லாவற்றையும் யோஜிக்கலானான். தெரியவில்லையெனக் கொள்வதிலும், தனக்குத் தெரியாத ஒரு பெரிய மனிதனாக அவன் ஏன் இருக்கமுடியாது. இந்த ஜன்மத்தில் இருக்காமலிருந்தாலும் போன அல்லது எந்தப் பிறவியிலாவது இருக்கலாம். தனக்கு முன்காலத்தில் அநேக பிரமுகர்களின் சம்பந்தம் உண்டு என்பதை எண்ணும்போதும் தெரியாத மறதி எனக்கொண்டு தவறெனவும் கொள்ளமுடியாது, சிரிக்கவும் சிரித்துக்கொண்டிருந்தான். இவனை அவசியம் யாரெனக் கண்டுகொள்ளவேண்டியிருப்பது யோஜனைகளின் அவசியத்தையும், சிக்கல்களையும் தோற்றுவித்தன. அவனை விட்டகல ஒரு யோஜனையும் புரியவில்லை. எதிரே ஒரு கோவில் தெரிய இருந்தது. ஒருவகைக்கு ஆறுதலாகவும் போக்கிடமெனவும் தோன்ற அதையே ஆதாரமென நினைத்து நடந்ததில், அதுவும் எதிரே சமீபமாக வந்து நின்றது.

ஊர்த் தெருவில் நின்ற ஒவ்வொரு வீடாக இவனுக்குக் காட்டி, வசிக்கும் அந்த அந்த மனிதர்களை, தனக்குத் தெரியாதவர்கலை, காணப்போவதாகச் சொல்லி, அவனிடமிருந்து தப்பிக்க வழியாக இவனுக்குச் சொல்லி, அவனிடமிருந்து தப்பிக்க வழியாக இவனுக்குச் சொல்ல முடியவில்லை. ஒருக்கால் மறந்து அவனுக்கு அவன் வீட்டையே காட்ட, அது அவன் வீடாக இருந்து அவன் சிரித்தால் தான் வெட்கமடைய முடியாதா என்ற எண்ணத்திலும் யோஜனையைக் கைவிட இருக்கிரது. நிச்சயமாக அவனைத் தெரிந்து அந்த வீட்டுக்காரன் இல்லை என்பதை தீர்மானித்தால் அல்லது எந்த வீட்டுக்காரனாகவும் இவனெனக் கொள்ளமுடிகிறது. இப்படிக்கான விஷயங்களினின்று விடுபடக் கோவில் மகத்துவம் அதிகமாகிக்கொண்டிருந்தது.

கோவில் சென்று சுற்றுவதில் அவனுக்கு வீடு திரும்ப ஆவல்கொண்டு தன்னைவிட்டுச் செல்லலாம் என்ற உத்தேசத்தை வெகு ஜாக்கிரதையாக அவனுக்குப் புரியாது காட்ட எண்ணி ‘பார்க்க வேண்டியவர் ஒருக்கால் கோவிலில் இருக்கலாம்…அங்கேயே பார்க்க முடியலாம்…’ என முணுமுணுத்துக் கொண்டே கோவிலையடைந்தான். அசட்டு மனிதனென அவமதிப்புக் கொள்ளமுடியவில்லை. அப்படி அவன் நினைவில் தானும் கலந்து தெரிவதால் தனக்கும் அவமானம் தோன்ற இருக்கும். கோவிலில் அவனை அலைக்கடிக்கும் அளவிற்குத் தாமதம் செய்ய உத்தேசித்து, யதோக்தமான தரிசன உத்தேசத்துடன், அர்ச்சனைக்கான பழம் தேங்காய் பாக்கு முதலியன வாங்கிப்போனான் இவன். ஒன்றை மறக்க அதை ஞாபகத்தில் கவனமாக வைத்துக்கொண்டு இருக்கவேண்டியிருப்பதில், எப்படி மறக்க முடிகிறது. இந்த வகையில் சாமியென்ன பூதம் என்ன எல்லாம் ஒரே விதத்தில்தான் சஞ்சலம் கொடுக்க இருக்கின்றன மனிதர்களுக்கு.

தொடருபவனைச் சரிக்கட்ட, கோவில் தரிசனம் செய்துவிட்டு அவரையும் இருந்தால் பார்த்து அழைத்துவருவதாகவும் இவன் சுகமாக இங்கு இருப்பதில் தான் திரும்புகாலில் அவனைச் சேருவதாகவும் சொல்ல நினைத்தவனைத் தடுத்து ‘என்ன ஒற்றுமை போங்கோ ஸார் மனது. நானே சொல்ல விருந்ததை நீங்கள் செய்து காட்ட’ எனச் சொன்னான், தனக்குப் புரிந்ததை. இல்லை, மன ஒற்றுமை அது இது என்பதிலும், இரு உடல் ஒரு எண்ணமோஒ அல்லது ஒரு உடல் இரு எண்ணமோ ஆக ஒன்றிலும் நம்பிக்கை இல்லை என்பதை-காதலைப்பற்றித் தன் எண்ணமும் அநுபவமும் நினைவுக்குவர இவன் உடம்பு கூசிக்குறுகியது வருத்தமாகவும் இருந்தது. கையில் இருந்த சாமான்களை அவன் பிடுங்கியதுகூட இவனுக்குத் தெரியவில்லை. ‘நான் இருக்கும்போது உங்களுக்கு இந்தச் சிரமம் வேண்டாம் ஸார்’ என்று கூவிக்கொண்டே சோழனைப் பிடித்தவனையும் மிஞ்சித் தொடரலானான். தன்னையும் தூக்கிக்கொண்டு அவன் தொலைந்தால், அவனோடு போவதில் தன் பொறுப்பு என்ற தொல்லையின்றியாவது வாழலாமெனவும் நடக்குமெனத் தோன்றவில்லை. இப்படி ஏதாவது எதேச்சையில் புண்ணியம் வருமென்றாலும் அதைத் தூக்கிக்கொண்டு போகத்தன் தொடருகிறான் போலும்.

இரவு அந்நேரம் கோவிலில் கூட்டமே இல்லை. அர்ச்சகரும், கவனிப்பை யார் மேல் கொள்வது என்று புரியாமல் பார்த்து விழித்துக் கொண்டிருந்தார். அவனோ மேல் துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு கைகட்டி கண்மூடி நின்று கொண்டு, தேவாரம் திருவாசகப் பதிகங்களை இரைந்து அழுது கொண்டிருந்தான். அப்படி கேட்கவே அவனுக்கு நாராசமாக ஒலித்தது. அவனைப் பார்ப்பதும்கூட. ஒன்றிற்கும் ஒன்றும் செய்யமுடியாது. அர்ச்சனை முடியும். எங்கேயாவது ஓடி மறைய முடியாதா என்று எண்ணி நின்றான். அர்ச்சனை முடிந்தது. பிரசாதங்களையும் அவனே ஏற்றுக்கொண்டு திரும்புகாலில், யார் யாரைப் பீடிக்க இந்த உலகம் இப்படிச் சீரழிந்து கொண்டிருக்கிறது என்ற புனருத்தாரண விசனத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தான். வெளியே வந்ததும் யார் யாரைத் தொடருகிறது என்பது இல்லாமல் போய்க்கொண்டிருந்தனர். எதிரில் மரம் கண்முன் நிற்க இவன் எங்கேயோ அந்தரத்தில் பறந்து அதன் மேல் உட்காரவோ ஆடவோ முடியாது சுற்றுவது போல இருந்தது மனதிற்கு குஷி கொடுக்க இருந்தது. தனக்கு மட்டும் அவன் தெரிகிறான் என்றும் அவன் தன்னை கண்டுகொள்லமுடியாது எங்கேயாவது சுற்றிக்கொண்டிருக்கும் அவனைத் தான் தெரிந்து கொண்டு ‘என்ன ஸார் ஸௌக்கியமா?’ என்று திடுக்கிடக் கூப்பிடவேண்டுமெனத் தோன்ற தன்க்குத்தானே இவன் சிரித்துக்கொண்டான்.

அவனோடு சுற்றி நான்கு வீதிப் பிரதக்ஷினமும் முடிந்துவிட்டது. மற்றொரு சந்தையும் அவன் கடந்துவிட்டான். அவன் பேசாது மௌனமாகப் போவதும் மனதிற்குப் பிடிக்கவில்லை. தான் இப்படி அவனுக்குத் தோன்றா வகையில் அந்தர்த்தியானமாகியதை அவன் தெரிந்துகொண்டே பேசாது இருந்தால் தன் மதிப்பு எவ்வளவு குறைபடுகிறது என்று எண்ணியவனுக்கு இப்படியே எவ்வளவு காலம் வாழமுடியுமென்பது புரியவில்லை. வெட்கப்படும் வகைக்கு அவனோடு சல்லாபம் கொள்ளவும் தன்னைத் தயாராக்கிக்கொண்டான்.

இரவு நிசி நேரம் தாண்டிவிட்டது. சினிமாப் பார்த்தவர்களும் திருப்தியுடன் வீடடைந்துவிட்டனர். இவனுக்கு வீடடைய வழியில்லை. அவன் வீடு இவனுக்குத் தெரியாது. அவன் வீட்டை நோக்கிப் போகிறான் என எண்ணவும் அவனைக் கண்காணித்து அவனுடன் சுற்றுவதிலேயே திருஷ்டியாக இருந்தான். சும்மா எங்கே எங்கேயோ கண் காணாது படுத்துத் தூங்கியிருந்த நாய்களெல்லாம் தங்கள் இருப்பு மகத்துவத்தைப் பிரபலப்படுத்தக் குரைக்கவும் ஊளையுடவும் ஆரம்பித்தன. நாய்களுக்கும் தெரிவது தனக்குப் புரியவில்லையே என்ற விசனத்தில்கூட சில சமயம் இவன் ஆழ வேண்டியிருந்தது.

முன்பு அவனைப் பார்த்தவுடன் தெரியவில்லை என்பது தெரிந்தவுடன் ‘யார் நீ-’ எனத் தைரியத்தில் அதட்டியோ அல்லது நைஸாகக் குழைந்தோ கேட்டிருக்கலாம். அவனும் என்ன பதில் சொல்லுவது எனப் புரியாது தத்தளிப்பதைத் தெரிந்து கொண்டிருக்கலாம். அதையெல்லாம் இவ்வளவு காலம் கடந்து நினைப்பதில் என்ன பயன் என்றும் இப்படி எப்படிச் சும்மா ஊர் உலகைச் சுற்றுவதில் சுகமடைய முடிகிறது என்றும் எண்ணலானான். ஒருவர் ஒருவர் நிழலென மாறி மாறி பற்றிப் போய்க் கொண்டிருந்தனர்.

தன் நிழலென அவனைப் பார்த்தபோது, மனதில் திடீரென ஒரு யோஜனை தோன்றியது. தான் நினைக்கும்போது நினைத்த காரியம் கைகூடி விளையுமானால், எவ்வளவு சுலபமாக அவனை ஏமாற்றித் தான் விடுபட்டு, வாழமுடியும். இறகு முளைக்கத் தான் பக்ஷிஜாலங்களுடன் கூடி அந்த மரத்தில் கத்திக்கொண்டு இருக்கலாம் என நினைத்துத் துள்ளி நடக்கலானான். என்ன வேடிக்கையென அவன் கூவக் கேட்டுக் கொஞ்சம் நிதானமடைந்தான். அவனாகவே தானும் ஆகிக்கொண்டிருப்பதில்தான் அவன் நிழல் தொடருவதினின்றும் விடுபடமுடியும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது…

எட்டிய வெளியில் ஒரு விளக்கொளி தெரிந்தது. உலகமே எரியத் தோன்றுவதும் எட்டி இப்படிச் சிறு விளக்கெனத் தோற்றம் கொடுத்து இருக்கலாம். ஒரு லக்ஷியக் குறிப்பாகக் கண்டதில் எப்படிப் போகிறோம் என்ற உணர்வே இவனிடமிருந்து அகன்றுவிட்டது. அதையே குறியெனக்கொண்டு ஒரு பைத்தியக்கார நிதானத்தில் போய்க்கொண்டிருந்தான். நெருங்க நெருங்க அது ஒரு மயானம் என்பதும் பிரேதம் எரியும் ஒளிதான் வீசியது எனவும் புரியலாயிற்று. தன் முன் தான், தன் நண்பன் சென்று கொண்டிருப்பதைப் பார்த்துத் திரும்ப வழியும் இருளில் மறைந்துவிட்டது என்பதையும் திரும்பாமலே இவனுக்குத் தெரிய இருந்தது. பொறுப்பற்றுத் தத்தம் தவறுகளுக்குத் தாம் என்பதின்றித் தோன்ற மயானமும் ஒளிக்கொள்ள வெகு பிரகாசமாகக் கண்கூச நன்கு அழகாகப் பிரேதம் எரிந்துகொண்டிருந்தது இவனுக்கு ஒரு வகையில் திருப்தி அளித்துத் தோன்றியது. மேலும் பூரண திருப்திக்கு, என்று தானும் அதாகி மேலும் ஒளி கொடுக்க எரிய வேண்டுமெனவும், அல்லது தான் தவிர எல்லாம் ஒளி கொடுக்க வேண்டுமெனவும், அல்லது தான் தவிர எல்லாம் ஒளி கொடுக்க எரியவேண்டுமென்ற இருவகை யோஜனையில் ஒருமை காண நின்றுவிட்டான். உயிர் நினைவும் மயான நினைவும் ஒன்றுகூடிப் பயம் காணச் சிறிது நேரம் ஆகியது. பக்கத்தில் துணையிருப்பதை எண்ணி அவனை வெகு பிரியமாகப் பார்த்தான். அவன் அங்கு இருப்பதையோ இல்லாததையோகூட கவனிக்கவில்லை.

ஒரே இருள் அத்துவான வெளி. எங்கிருந்தும் பலப்பல பக்ஷிக் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. வானரங்களும் மேலும் பூனைகளும் ஏன் நாய் நரியும்கூட ஆகாயத்திலிருந்தௌ பூமியைநோக்கிச் சப்தித்ததும் கேட்டது…..ஒரு பெரிய மரம் எங்கிருந்து பிரும்மாண்டமாக இந்த சப்தத்தில் இங்கு எதிரே வளர்ந்து நிற்க நேர்ந்தது என்பது தெரியவில்லை. அடிமரம் பார்வைகொள்ளும் போதே பெரிதாகிக் கொண்டிருந்தது. நடுவில் யானையெனப் பெரிய பொந்து ஒன்று தெரிந்தது. ஒரு பெரிய யானை மீது ஏறிக்கொண்டு தலையிலும் பெரிய ஒரு முண்டாக கட்டிக்கொண்டு தட்டுப்படாமல் அந்தத் துவாரத்தில் வழியாகப் பாதாளம்வரையில் ஊர்வலம் செல்லலாமெனத் தோன்றியது. கிளைகள், இலைகள் ஒன்றுமில்லையென, ஒரு கரிய கவிந்த வானம் மேகமெனத் தலையில் பரந்து தெரிய, மொத்தமாக ஒரு பெரிய குடை விரித்ததெனத் தோன்ற இருந்தது. வேறு ஒரு விதமாகவும் அது மரமில்லை என அங்கே அப்படி நின்றிருக்கமுட்யாது என்றும் தோன்றவிருப்பதே அது மரமெனத் தோன்றப்போதுமான அத்தாக்ஷியாக இருந்து நிச்சயமாக மரமெனவே இருந்தது. முதலில் எல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கமுடியும். மயானம், பிணம் எரிதல், எதிரே ஒரு பெரிய மரம், எல்லாம் தெரிய ஒரு அத்துவானவெளி……ஆனால் யோஜிக்க யோஜிக்கவோ……அல்லது பார்க்கப் பார்க்கவோ இதற்கென அதுவும் அதற்கென இதுவுமாக ஒன்றை ஒன்று நிழலெனக் காட்டிக் கொடுக்க இருந்தது. எல்லாம் வேடிக்கை எனவும் ஒன்றிலும் ஒன்றுமில்லை எனவும் இந்த மயானப் பிரேத ஒளியில் தோன்றவும் தோன்றலாயின. மயான ஒளி இருந்தும் அதைப் பொருட்படுத்தாது பயத்தில் கண்கள் தாமாகவே தீக்ஷண்யம் அடைந்தன. பயமடைந்து கால்கள் பூமியில் புதைவு கொண்டன. தலைதெரிய தான் மறைந்தே எல்லாவற்றையும் பார்ப்ப தான உணர்வு கொண்டான்……கொழுந்துவிட்டெரியும் ஜ்வாலையைச் சுற்றி சிறு சிறு கருப்புத்திட்டுகளெனத் தோன்றியவை கூத்தாடிச் சுற்றி சுற்றி கும்மாளம் போட்டுக் குதிப்பதைப் பார்த்தான். இவைகள் சில்லறைப் பிசாசுகள் என்பது நிச்சயமாகியது. அவைகளின் தலை மேலே கருமையாகப் பறவைக் கூட்டங்கள், கரையாமலும் காகமெனத் தோன்றச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. பக்கத்தில் நின்ர அப்பெரிய மரமும் கரைந்து கத்திக்கொண்டு ஆடியது. இந்தக் குட்டிப் பிசாசுகள் எல்லாமுமே தலைகளில் பூச்சூட்டிக் கொண்டிருந்தது தோன்ற நக்ஷத்திரமென மினுக்கும் ஒளிப் பூச்சிச் சுட்டுகளை ஒன்று சேர்த்துக் குல்லாயாகத் தரித்திருந்தன. இவைகளின் ஆட்டத்தைவிட ஒளி கொடுக்க எரியும் பிரேதமும் சேர்ந்து ஆடியதுபோல அவைகளின் நிழலாட்டம் வெகு விநோதமாகத் தெரிந்தது. களைத்ததெனச் சில அடிக்கடி சோர்வு கொண்டு திடீரென கீழே விழுந்து கொண்டு பன்றிகல்லென மேயவும் ஆரம்பித்தன. கண்ட கண்ட நிழல்களைத் தின்று திருப்தியில் உறுவிச் சிரித்தது பயங்கரம் கொடுத்தது. துணையென இப்போது அவனை வேண்டிப் பக்கத்தில் இருப்பதை நினைத்துக்கொண்டு எதிரே பார்த்தான். அவைகளுக்குத் தலைமை தாங்கி அவனும் வெகு குஷியில் குதித்துக் களைக்கும்போது தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு தாளம் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் நாதியற்ற பயத்தை இவன் மனது கடுமையாகக் கொள்ள ஆரம்பித்தது. நிழலைப் பறிகொடுத்து நின்ற பிசாசுகள் திடீரென எகிறிக்குதித்து மரத்தின் மேல் போய் மறைந்தன. மறுபடியும் தொடர, நிழலை அடையவேண்டி இரவிலும் நிழல் கொடுக்க நின்றிருக்கும் மரத்திடை மறைந்தது போலும். மரம் சலசலத்து இலைகளும் இரைந்துபேசியது போலும். மொக்குகள் உதிரக் கீழே விழுமுன் பூவாக மாறிக்கொண்டிருப்பதையும் இவன் கவனித்தான். இந்த மரத்திலிருந்து எப்படி விதவிதமானத் தனித்த சப்தங்கள் வரவிருக்கின்றன என்பதைக் கவனிக்கும்போது அநேக பூனைகளும் குரங்குகளும் மற்றவைகளும் வாலைக் கிளைகளில் சிக்கவைத்துக்கொண்டு தலைகீழாகத் தொங்கி ஆடிக்கொண்டு தவிப்பதைப் பார்க்கமுடிந்தது. வால் விடுபட்டோ அல்லது இழக்கப்பட்டோ மரத்தை விட்டோட பயம் கொண்டு வெகு வேகமாக ஆடியவைகல் ஒன்றை ஒன்று சில சில சமயம் இடித்துக் கட்டிக் கொண்டு சல்லாபித்து சண்டையிட்டு அழுவதும்கூட தெரியக்கேட்டது வாலிழந்து விடுபட்டவைகள் கீழே விழுந்து குட்டிப் பிசாசுகளான மீண்டும் நிழலோடு குதித்து ஆடலாயின.

தன் நண்பனுக்குக் களைப்பு. தூங்குமளவிற்கு உண்டாகிவிட்டது. திடீரென மறைந்தவனை இவன் பக்கத்தில் கண்டான். கீழேயும் விழுந்து புரண்டான். சிறிது ஏமாந்து பார்த்துக்கொண்டிருந்ததில் தன்நிழலை அவன் தின்றுவிட்டது நினைவுவரவே……பீதி. மனதிற்கு ஒரே பீதி. பைத்தியமெனச் சிரிப்பு தன் முகத்தில் கண்டதும் மேலும் பீதி அடைந்தான். உடல் கொண்டிருப்பதும் ஒரு அநாதி வழக்க தோஷத்தின் வாழ்க்கை எனவும் மிக அலுப்புக்கொண்டு விழித்தான்.

காலையில் வீட்டு வாசலில் மரம் நின்றிருந்தது-ஆகாயத்திற்கும் பூமிக்குமாக எட்டு திக்கும் பரவி-எந்நேரமும் சப்தம் கொண்டு வாவென்றழைக்கும் தோற்றத்துடன்-சிறுவர்கள் மலர்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தனர். வீட்டுக்காரர் இன்னும் எழுந்து வீட்டு வாயிலில் நின்று தங்களைப் பார்க்கவில்லை என்பது தெரிந்து மேலே பார்க்காது மேலும் மலர்களை பொறுக்கிச் சென்றனர் சிறுவர்கள்.

சுந்தரி – மெளனி

POSTED BY SSINGAMANI ⋅ JUNE 23, 2010 ⋅ COMMENTS OFF

கோடை மிகக் கடுமையாகக் கண்டுவிட்டது. எழுதுவதற்கு ஆரம்பிக்கும் எவ்வித முயற்சியும் எள்ளளவும் பயனாகாததைப்பற்றி யோசித்தேன். அதற்கு இருவகைக் காரணம் வெகு யுக்தியாகக் கண்டுவிட்டேன். மூளை, மூளையாக இல்லாது, வயல்களைப்போல் கட்டி தட்டிப் போயிருக்கலாம். அல்லது பேனாவின் மசி உறைந்து, எழுத ஓடாதிருக்கலாம். என் எழுதுகோலை எடுத்து இரண்டுதரம் வேகமாக உதறியதில், பேனாவைப்பற்றிய தகராறை ஒருவகையில் தீர்த்துவிட்டேன். ஆனால் என் தலையை உதறிக்கொண்டால், பரிதாபம் ‘ சிரமங்கொண்டு பன்றிக்கு வாரிவிட்டது போல் படியவைத்த எனது அழகான கிராப் தலைமயிர் சிலிர்த்து நிற்குமே என்ற ஒரு பயம் அடைந்தேன். எனினும், அப்படி இப்படி எழுத ஆரம்பித்துவிட்டேன். இப்போதுதான் எழுதுவதன் முட்டாள் தனத்தையும் கஷ்டத்தையும் உணர ஆரம்பிக்கிறேன்.

கடுங்கோடையானதினால் கொஞ்சம் இளகிய என் மூளை நன்றாக உருக்கம்கொண்டு அபார அற்புதக் கற்பனைகளை ஏராளமாகக் கொட்டுகிறது. உருகி வழியும் கற்பனைகளைத் தாறுமாறாக ஓட்டம்கொள்ளாமல் தடை செய்வதில்தான் என் முழுப் பிரயாசையும் செலுத்தவேண்டியிருக்கிறது. எனினும் அநேகர் இப்பிரயாசையில்லாமலே எழுதுவதாக எனக்குப்படுவது, அவர்களிடம் எனக்குப் பொறாமை உண்டாகக் காரணமாகிறது.

நிற்க, நடந்ததைப்பற்றி எழுதுவது என்றாலோ–அது நவீனத்திற்கு அழகன்று என்பதினால்–அது என் மனத்திற்கு இப்போது பிடிக்கவில்லை. நடக்கப்போவதை எழுதினால், அது பவிஷ்யத் புராணமாகிவிடும் என்பதனால், அதுவும் அவ்வளவு நாஸ்உக்கு இல்லை. நடக்கிறதைப்பற்றியே நான் ஒரு கை பார்க்கிறேன்.

கலியில் எது வேண்டுமானாலும் நடக்க முடியும் என்று பண்டைக்காலத்திலேயே எழுதியிருப்பதாக எனக்குக் கேள்வி உண்டு. பழைய காலத்தில் எழுதியிருந்தாலும், எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டாலும், அதில் எனக்கு நல்ல நம்பிக்கை. இக் கலியில் எதுவும் நடக்க முடியுமென்றால், நான் எழுதுவதில் எனக்குக் கொஞ்சங்கூட ஆச்சரியமில்லை. மற்றும் இவ்வகைச் சிந்தனைப்போக்கில் நான் ஒரு விநோதம் கண்டேன். நடக்கிறதை எழுத வேண்டுமானால், உண்மையில் நடக்கிறதையே எழுத வேண்டுமென்பதில்லை. ஏனெனில், இக் கலியில் எதுவும் நடக்க முடியும் என்று சொல்லியிருப்பதன் நிமித்தம், ஏன் எழுதினதெல்லாம் நடக்கிறதாக இருக்கக்கூடாது ? இந்த எண்ணமே என் மனத்திற்குத் தோன்றியதை எழுதத் தைரியமாக மாறுகிறது. ஒருக்கால் நான் எழுதியதுதான் நடக்கிறதாக ஏன் இருக்கக்கூடாது ?

‘பன்னிக் குட்டிக்குப் பதினாறு ‘ என்ற ஒரு பழைய மொழி உண்டு. பன்றிக்குட்டிக்கல்ல–பன்றிபோன்ற குட்டிக்கு, என்று ஒரு தமிழ்ப் பெரியார் அதன் பொருளை எனக்கு விளக்கியிருக்கிறார். பழைய மொழி அவ்வாறாயின், புதுக்காலத்தில், நாகரிகத்தில் தட்டுத் தடையின்றி மேலே போய்க்கொண்டிருக்கும் நமது பெண்மணிகள் விஷயத்தில், அதே மொழி புது மொழியாக எவ்வளவு தூரம் பொருத்தம் கொள்ளுகிறது ‘ மற்றும் பன்றிக் குட்டிக்கே இப்படி என்றால், சுந்தரி மாதிரியான குட்டிக்குப் பதினாறு வயது வந்தால்– ?

சுந்தரி அவளுடைய பதினாறாவது வயதில் ‘மிஸ் சுந்தரியாகப் ‘ பட்டணத்தில் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பதினோராவது வயதில் ஒற்றைத் தலைவலி, இரண்டு கண்களுக்கும் கண்ணாடி போட்டுவிட்டுப் போய்விட்டது. மூக்குக் கண்ணாடியும், சப்பை மூக்கானால், அடிக்கடி நழுவிக் கடிவாளம்போன்று வாய்க்கு இறங்கும் என்பதில்லாது, அவளுடைய கிளி மூக்கின் பேரில் ‘ஜம் ‘மென்று பொருந்தி, அழகுக்கு அழகு செய்து கொண்டிருந்தது. அந்தக் கண்ணாடியுடன் அடிக்கடி அவள் மாலை நேரங்களில், காற்று வாங்கக் கடற்கரையில் உலாவுவது உண்டு.

மதுசூதனன் (இவனுக்கு விபரம் தெரிந்தபின்பே நாகரிகமான பழைய பெயரை இவன் தகப்பனார் வைத்தார் போலும்) அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். இவனை இவன் தோழர்கள் பெயரை குறைத்துப் பிரியமாக ‘மது ‘வென அழைப்பது வழக்கம். இவனும் மாலை வேளையில் ஆரோக்கியத்திற்காக கடற்காற்று வாங்க போவான். இப்படியாக நடந்துவருங்கால், ஒரு நாள் இவ்விருவரும் ஒருவரையொருவர் பார்க்க நேர்ந்தது. சுந்தரி பத்துப் பெண்களின் நடுவில் ஒருவளாக இருந்தும், மதுவின் கண்களிலிருந்து உண்டான காதல் சுந்தரியின் மீதுதான் பார்வையாக விழுந்தது.

‘அவளுக்கு–ம் ? ‘ என்பதை அவன் யோசித்துக் கொண்டு தன் அறையை அடைந்தான். நிச்சயமாக அம்மங்கை, இரவில் தன் மீது விழுந்த காதலில் தவித்து, தன் விடுதி மேன்மாடியில், வேதனையில் உலாவுவாள் என்று எண்ணிக் கொண்டே, தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். மறுநாள்— இப்படியே இருவரும் சந்தித்ததிலிருந்து, இருவருக்கும் பரஸ்பரம் ‘லவ் ‘ விழுந்துவிட்டது.

சுந்தரி கெட்டிக்காரி. நவீன நாவல் கதாநாயகன் ஒருவன், திடாரென ஒருநாள் குறுக்காக வந்து தன்னைக் காதலிப்பான் என்று அவள் எண்ணியிருக்கலாம். மதுவே தன்னுடைய கடற்கரையில் உலவும் முழு ‘டிரஸ்ஸில் ‘ அவளுக்கு ஏன் அப்படியான காதல் நாயகனாகத் தோன்றியிருக்ககூடாது ? மூன்று முழு உடுப்புக்களை முப்பது விதமாக அலங்கரித்து, நங்கையர் முன்னே முந்நூறுதரம் குறுக்காக அவனுக்கு நடக்க தெரியும்.

இருவர் காதலும், சிறிது காலத்திற்குப் பிறகு கலியாணமாக முடிந்தது.

மதுவின் படிப்பு முடிந்தவுடன், அவனுக்கு வேலையும் கிடைத்து விட்டது.

அவனுக்கு முப்பது ரூபாய்ச் சம்பளமானாலும், முதலில் இரண்டு வருஷத்திற்கு ஒரு தரம் ஒரு ரூபாயாக அது ஐம்பது ரூபாயாகும். பிறகு அந்த மாதச் சம்பளம் வருஷத்திற்கு ஒரு விழுக்காடு சேர்ந்து நூறு ரூபாய் ஆகும். மற்றும் நமது மதுவுக்கு ஜாம்பவான் வயது இருந்து, அவனுடைய வேலைக்கும் ‘ரிடையரிங் ‘ காலமும் இல்லாது போனால், அவன் சம்பளம் படிப்படியாய் உயர்ந்து கொண்டே மாதம் ஆயிரம் ரூபாயாகவும் ஆகிவிடக்கூடும் ‘

வேலையானதும் இருவரும் சேர்ந்தே குடித்தனம் செய்தார்கள். அப்போது அவர்கள் என்னவெல்லாமோ மனத்தில் எண்ணியிருந்திருக்கலாம். ‘ஐ.ஸி.எஸ். ‘ ஆத்துக்காரராகத் தனக்கு அகப்படவில்லையே என சுந்தரி ஏங்கியிருக்கலாம். என்னவோ சுந்தரியைத்தான் முதலில் கண்டது மாதிரி வாழ்க்கை இப்போது அவ்வளவு வசீகரமாக இல்லையே என்று ஏக்கமுற்றிருக்கலாம். எனக்கு அதெல்லாம் நிச்சயமாகத் தெரியாது. மற்றும் இவ்விஷயத்தில் என் மனக் கற்பனைகளுக்கு இடம் கொடுக்க எனக்கு இஷ்டமில்லை.

ஆனால், மாலையில் இருவரும் சேர்ந்து ஜோராக வெளியில் ‘வாக்கிங் ‘ போகும்போது எல்லோரும் பார்த்திருக்க முடியும். அவர்கள் அப்போது பேசுவதைக் கவனித்தால், ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு ஒன்றும் புலப்படாது, தெரிந்த சிலருக்கும் புரியாதுதான். அக்காட்சி இயற்கை அளிக்கக்கூடிய எதையும்விட மிகவும் கண் உறுத்தும் காட்சியாகத்தான் தோன்றும்.

அடிக்கடி மதுவுக்கு ஊருக்கூர் வேலை மாற்றம் உண்டு.

எங்கேயாவது, ரயிலடியில், காலில் சிலிப்பரும், மூக்கில் கண்ணாடியும், தலையில் கட்டுக் கனகாம்பரக் பூக்கொத்து நழுவி விழத் தொங்கும் தோரணையிலும், கையில் ஒரு வெள்ளிக் கூஜாவுடனும், ஒரு சுந்தரியையும் அவள் பக்கத்தில் பெட்டியுடன் ஒரு கரப்பான்மீசை ஆணும் நிற்க நீங்கள் கண்டால், நமது தம்பதிகள்தான் வேலை மாற்றப்பட்டு, வேறு ஊருக்குப் போக ரயிலுக்கு காத்திருக்கிறார்கள் என ஊகித்துக் கொள்ளுங்கள்.

ஒரு தரம் நான் அவர்களைத் தஞ்சாவூர் ‘ஜங்ஷ ‘னில் பார்த்தேன். அந்த ரயிலுக்கு நல்ல கூட்டம் காத்திருந்தது. எட்டி நின்ற ஆயிரம் ஆடவர்களும், மது கடற்கரையில் காதல் விழ எப்படிச்

சுந்தரியை முதலில் பார்த்தானோ, அதே பார்வையில், பார்த்து நின்றார்கள். மதுவோ வெனில் அந்த நாகரிக நங்கை தன்னுடைய மனைவி என்பதில் அநேகர் ஐயங்கொள்ளுகிறார்கள் என்பதை அறிந்தவனே போலவும், மற்றும் அதைப் பிறருக்குப் புரியும்படி காட்டுவதில் ஆவல் கொண்டவனே போலவும், அவள் அருகில் வந்து, அடிக்கடி, ‘மை டார்லிங் ‘ போட்டுப் பேசிக்கொண்டிருந்தான். சுந்தரி, சுருங்கிய முகத்துடன், சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்ததுடன் அடிக்கடி அண்ணாந்து கொட்டாவி விட்டுக்கொண்டும், தலையை கையால் அலட்சியமாகக் கோதிக்கொண்டும் இருந்தாள்.

காதல் பூர்த்தி கலியாணம், கலியாணப் பூர்த்தி விவாகரத்து என்று எவ்வளவோ வெகு அழகான கற்பனைகளுக்கும் நான் இப்போது உடன்படத் தயாராக இல்லை.

ஒரு சந்தேகம் யாருக்கும் தோன்றலாம்….எவ்வளவு தடையிருந்தாலும் இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால்… என்ற எண்ணம் எழலாம். ஆமாம் அது அப்பாவைக் கொண்டால், கட்டை குட்டையாக, கறுப்பாக இருக்கும். இருந்தாலும் கரப்பான் மீசையோடும், கிராப்புடனும் முதலில் இருக்காது என்பது நிச்சயம். அம்மாவைக் கொண்டாலோ, ஏன், அதன் அழகிலிருந்து நீங்கள் பார்த்தவுடனே ஊகித்துக் கொண்டுவிடலாமே ‘ மற்றும் அது யாரைக் கொண்டாலும், முதலிலாவது ‘நாகரிக ‘ மற்று, தமிழில்தான் பேச ஆரம்பிக்கும் என்று நான் எண்ணுகிறேன்.

தற்காப்பு மணி: மௌனியின் கதைகளுக்கு இப்போது எவரிடம் காப்புரிமை இருக்கிறதென்று தெரியாது; விற்பனையின் மூலம் மௌனி பெறுவதைவிட இதுபோன்றவற்றின்மூலம் மேலும் சில வாசகர்களைப் பெறக்கூடுமென்ற நம்பிக்கையில் இதை இடுகிறேன்; ஆட்சேபங்களிருப்பின் பின்னூட்டமிடவும், கதையை நீக்கிவிடுகிறேன். இங்கே வந்தபோது கொண்டுவந்த வெகு சில புத்தகங்களுள் ஒன்று.அழியாச்சுடர்-மெளனி

POSTED BY SINGAMANI ⋅ ஜனவரி 27, 2011வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்"

(நன்றி : மணிக்கொடி 1937)வழக்கமாகக் காலையில் அவனைப் பார்க்கப் போவது போல நான் அன்று செல்லவில்லை. உதயத்திலிருந்தே உக்கிரமாக வெய்யில் அடித்தது. தெளிவுற விளங்காத ஒருவித அலுப்பு மேலிட்டதனால் நான் வீட்டை விட்டே வெளிக்------கிளம்பவில்லை. மாலையில் சென்று அவனைப் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி, மிக உஷ்ணமான அன்று பகலை, என் வீட்டிலேயே கழித்தேன்.நேற்று முன்தினம் இது நிகழ்ந்தது. மாலை நாலரை மணி சுமாருக்கு நான் அவன் வீட்டை அடைந்தே.ன். அவன் என் பாலிய சிநேகிதன். நான் சென்றபோது, தன் வீட்டின் முன் அறையில், அவன் வழக்கம்போல் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். திறந்த ஜன்னலுக்கு எதிரே உட்கார்ந்து இருந்த அவன் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக எண்ணித் திடீரென உட்புகச் சிறிது தயங்கினபடியே ரேழியில் நின்றேன். என் பக்கம் பாராமலே, என்னை அவன் உள்ளே அழைத்தது திடுக்கிடத்தான் செய்தது. அவனுடைய அப்போதைத் தோற்றமும் கொஞ்சம் ஆச்சரியமளிப்பதாகவே இருந்தது. உள்ளே ஒரே நாற்காலியும் அதன் அருகில் ஒரு மேஜையும் இருந்தன. மற்றும் எதிரில் வீதிப் பக்கம் ஜன்னல் திறந்திருந்தது.

`காபி சாப்பிட்டாகிவிட்டதா?’ என்று கேட்டுக்-கொண்டே நான் உள்ளே நுழைத்தேன்.

`இல்லை’ என்றான்.

`என்ன?’

`ஆமாம். காலை முதல் இங்கே உட்கார்ந்தபடிதான் இருக்கிறேன் _ யோசனைகள்_’ எனக் கொஞ்சம் சிரித்தபடி கூறினான்.

என் நண்பன் சிரிப்பதை மறந்து விட்டான் என்பதும், எனக்குத் தெரிந்து சமீப காலத்தில் சிரித்ததே இல்லை என்பதும் உண்மை. அப்போது அவன் சிரித்ததும் உணர்ச்சி இழந்த நகைப்பின் ஒலியாகத்தான் கேட்டது. அவன் பேசின தொனியும், என்னைப் பாராது வெளியே வெறித்துப் பார்க்கும் பார்வையும் எனக்கு என்னவோ போல் இருந்தன. மேலே நான் யோசிக்க ஆரம்பிக்குமுன் அவன் பேச ஆரம்பித்தான். அவன் சமீப காலமாக ஒருவித மனிதனாக மாறிவிட்டான்.

`இங்கே வாப்பா; இங்கே இப்படி உட்காரு; எதிரிலே பார்’ என்று சொல்லிக்கொண்டே எழுந்து மேஜையின் மீது அவன் உட்கார்ந்து கொண்டான்; நான் நாற்காலியில் அமர்ந்தேன்.

`நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அதோ அங்கே என்ன தெரிகிறது பார்’ என்றான்.

இலையுதிர்ந்து நின்ற ஒரு பெரிய மரம், பட்ட மரம் போன்ற தோற்றத்தை அளித்துக்கொண்டு எனக்கு எதிரே இருந்தது. வேறு ஒன்றும் திடீரென என் பார்வையில் படவில்லை. தனிப்பட்டு, தலைவிரிகோலத்தில் நின்று, மௌனமாகப் புலம்புவது போன்று அம்மரம் எனக்குத் தோன்றியது. ஆகாயத்தில் பறந்து திடீரென அம்மரக் கிளைகளில் உட்காரும் பட்சிகள், உயிர் நீத்தவையேபோல் கிளைகளில் அமைந்து ஒன்றாகும். அவற்றின் குரல்கள் மரண ஒலியாக விட்டுவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தன. சிறிது சென்று, ஒன்றிரண்டாகப் புத்துயிர் பெற்றுக் கிளைகளை விட்டு ஜிவ்வெனப் பறந்து சென்றன. அதிக நேரம் அம்மரத்தின் தோற்றத்தைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. காலையிலிருந்து உக்கிரமான வெய்யிலில் பாதி மூடிய கண்களுடனும், வெற்று வெளிப்பார்வையுடனும் கண்ட தோற்றங்கள் என் நண்பனுக்கு எவ்வெவ்வகை மனக் கிளர்ச்சிக்குக் காரணமாயினவோ என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.

`என்ன?’ என்று அவன் கேட்டது என்னைத் தூக்கிவாரிப் போடும்படி இருந்தது.

`அதோ, அந்த மரந்தான்’ என்றேன்.

`என்ன? மரமா? சரி’ என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்தபடியே சிறிது குனிந்து அதைப் பார்த்துவிட்டு அவன் பேசலானான்.

`ஆமாம்; அதுதான்; ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடிக் கை விரித்துத் தேடத் துழாவுவதைப் பார்த்தாயா? ஆடி அசைந்து நிற்கிறது அது; ஆட்டம் ஓய்ந்து நிற்கவில்லை..... மெல்லெனக் காற்று மேற்கிலிருந்து அடிக்கும். காதல் முகந்த மேகங்கள், கனத்து மிதந்து வந்து அதன்மேல் தங்கும்...... தாங்காது தளர்ந்து ஆடும்...... விரிக்கப்பட்ட சாமரம் போன்று ஆகாய வீதியை மேகங்களிலிருந்து சுத்தப்படுத்துவதா அது....? அல்லது தளிர்க்கும் பொருட்டு மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது...? எதற்காக...?’

`என்ன நீ பெரிய கவியாகிவிட்டாயே! ஏன் உனக்கு இவ்வளவு வேகமும் வெறுப்பும்.....!’ என்றேன். அவன் பேச்சும் வார்த்தைகளும் எனக்குப் பிடிக்கவில்லை.

`சொல்லுகிறேன் கேள்: நேற்று நேற்று என்று காலத்தைப் பின்கடத்தி மனம் ஒன்பது வருஷத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்திற்குச் சென்று நின்றது. அந்த நிகழ்ச்சியை நினைப்பூட்டிக் கொண்ட பிறகு என் நிலை தடுமாறிப் போய்விட்டது. என்னவெல்லாமோ என் மனம் சொல்ல முடியாத வகையில் அடித்துக்கொள்ளுகிறது. அவ்வளவுதான்...’ எனச் சொல்லி நிறுத்தினான். அவன் கண்கள், காண முடியாத அசரீரியான ஏதோ வஸ்துவைப் பார்க்கத் துடிப்பதுபோல என்றுமில்லாதபடி ஜொலித்தன. என்னிடம் சொல்லுவதற்கு அல்ல என்பதை அவன் பேசும் வகை உணர்த்தியது.

`ஆம், ஒன்பது வருஷத்துக்கு முன்பு நான் கல்லூரி மாணவன். எனக்கு அப்போது வயது பதினெட்டு, அக்கால நிகழ்ச்சி ஒன்றே இன்று காலை முதல் பல்லவியாகப் பலவிதமான கற்பனையில் தோன்றுகிறது. அப்போது நான் பார்ப்பதற்கு எப்படி இருப்பேன் என்பது உனக்கு ஞாபகம் இருக்கலாம்...’

`நன்றாக... நீ...’

`சரி, சரி, என் நீண்ட மூக்கு, முகத்திற்கு வெகு முன்பாக நீண்டு செல்லுபவர்களைத் திருப்பி இழுப்பது போல வளைந்திருக்கும். அதன் கீழ் மெல்லிய உதடுகள் மிருதுவாகப் பளீரென்ற பல் வரிசைகளைப் பிறர் கண்கூசச் சிறிது காண்பிக்கும். அப்போதுதான் நான் கிராப் புதிதாகச் செய்து கொண்டேன். நீண்டு கறுத்துத் தழைத்திருந்த என் கூந்தலைப் பறிகொடுத்ததாகவே பிறர் நினைக்கும்படி, படியாத என் முன் குடுமியை, என் கையால் நான் அடிக்கடி தடவிக்கொள்ளுவேன். குறுகுறுவென்ற கண்களோடு என் அழகிலேயே நான் ஈடுபட்டு மதிப்பும் கொண்டிருந்தேன். அப்போது என்னை அநேகர் பார்த்திருக்கலாம். என்னைப் பற்றிய அவர்களுடைய எண்ணங்களை நான் கண்டுகொள்ளவில்லை. இப்போதோவெனின் நான் பார்ப்பது வறட்டுப் பார்வைதான். என்னுடைய கண்கள் வறண்டவை தாமே! என் அழகு இளமையிலேயே முடிவடைந்து விட்டது போலும். ஆனால், என் வாழ்க்கை இளமையில் முடியவில்லையே. அவளும் என்னைப் பார்த்தது உண்டு.’

`அவள் யார்?’ என்றேன் நான்.

`ஆமாம், அவளும்: சொல்லுவதைக் கேள். நான் கோவிலுக்குப் போய் எத்தனை வருஷமாகிறது? அந்தத் தினத்திற்குப் பின்பு, நேற்று வரையில் நான் கோவிலுக்குப் போனதில்லை. அதற்கு முன் அடிக்கடி போய்க்கொண்டு இருந்தேன். நீயும் என்னோடு வருவதுண்டே. நான் சொல்லும் அன்றிரவிலும் நீ என் பக்கத்தில் இருந்தாய்.

`அது திருவிழா நாள் அல்ல... அவளும் வந்திருந்தாள். அவள் வருவது எனக்குத் தெரியாது. நாம் கோவிலை விட்டு வெளி வந்தபோது உள்ளே போய்க் கொண்டிருந்த அவளை இருவரும் கோவில் வாயிலில் சந்தித்தோம். அவளுக்கு அப்போது வயது பதின்மூன்று இருக்கலாம். அவள் சட்டென்று என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வையைத் திருப்பியது நானாக இருக்கலாம். ஆனால் திரும்பி, உன்னையும் கூட்டிக்கொண்டு அவள் பின்னோடு உள் செல்ல என்னை இழுத்தது எது? எனக்குத் தெரியவில்லை. அப்போதைய சிறு பிள்ளைத்தனமாக இருக்கலாம். காதல், அது, இது என்று காரணம் காட்டாதே. காரணமற்றது என்றாலும் மனக்குறைவு உண்டாகிறது. கர்வந்தான் காரணம் என்று வைத்துக் கொள்.

`அவள் பின்னோடு நான் சென்றேன். அநேகந்தரம் அவளைத் தொடக்கூடிய அளவு அவ்வளவு சமீபம் நான் நெருங்கியதும் உண்டு. என் வாய் அடிக்கடி ஏதோ முணுமுணுத்ததும் உண்டு. அது எதையும் சொல்வதற்கல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.

`ஈசுவர சந்நிதியில் நின்று தலை குனிந்து அவள் தியானத்தில் இருந்தாள். அவளுக்குப் பின் வெகு சமீபத்தில் நான் நின்றிருந்தேன். அவளுடைய கூப்பிய கரங்களின் இடை வழியாகக் கர்ப்பக்கிருகச் சரவிளக்குகள் மங்கி வெகு தூரத்திற்கு அப்பாலே பிரகாசிப்பதாகக் கண்டேன். அவன் கண்கள், விக்கிரகத்திற்குப்பின் சென்று வாழ்க்கையின் ஆரம்ப இறுதி எல்லைகளைத் தாண்டி இன்ப மயத்தைக் கண்டுகளித்தனபோலும்! எவ்வளவு நேரம் அப்படி இருந்தனவோ தெரியாது. `காலம்’ அவள் உருவில், அந்தச் சந்நிதியில் ஓடாமல் சமைந்து நின்றுவிட்டது.

`தியானத்தினின்றும் விடுபட்டு என் பக்கம் அவள் திரும்பிய போது ஒரு பரவசம் கொண்டவனேபோல என்னையும் அறியாதே `உனக்காக நான் எது செய்யவும் காத்து இருக்கிறேன்; எதையும் செய்ய முடியும்’ என்று சொல்லி விட்டேன்! நீயும், அவளுடன் வந்தவர்களும் சிறிது எட்டி நின்றிருந்தீர்கள். உங்கள் காதுகளில் அவ்வார்த்தைகள் விழவில்லை. ஆனால் அவள் காதில் விழுந்தன என்பது நிச்சயம். அவள் சிரித்தாள்.

`அவளுக்கு மட்டுந்தானா நான் சொன்னது கேட்டது என்பதில் எனக்கு அப்போதே சந்தேகம். உள்ளிருந்த விக்கிரகம் எதிர்த் தூணில் ஒன்றி நின்ற யாளி அவையும் கேட்டு நின்றன என்று எண்ணினேன். எதிரே லிங்கத்தைப் பார்த்தபோது கீற்றுக்குமேலே சந்தனப் பொட்டுடன் விபூதி அணிந்த அந்த விக்கிரகம், உருக்கொண்டு புருவஞ் சுழித்துச் சினங்கொண்டது. தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிகமருண்டு பயந்து கோபித்து முகம் சுழித்தது; பின்கால்களில் எழுந்து நின்று பயமூட்டியது. அவளைப் பார்த்தேன். அவள் மறுபக்கம் திரும்பி இருந்தாள். பின்னிய ஜடை பின்தொங்க, மெதுவாகத் தன்னோடு வந்தவர்களுடன் சென்றாள். நான் அவளைச் சிறிது தொடர்ந்து நோக்கி நின்றேன். ஆழ்ந்து அமுங்கிய உலக நிசப்தத்தைக் குலைக்க அவளுடைய சதங்கைகள் ஒலிக்கும் ஒலி அவசியம் போலும்! வந்தவர்களுடன் குதூகலமாகப் பேசி, வார்த்தைகளாடிக்-கொண்டே கால் சதங்கைகள் கணீரென்று ஒலிக்கப்போய் விட்டாள். சந்நிதியின் மௌனம் அவளால் உண்டான சப்தத்தின் எதிரொலியில் சிதைவுற்றது. வௌவால்கள் கிரீச்சிட்டுக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன.’

என் நண்பன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் மனம் ஓடியது. அது கட்டுக்கடங்காமல் சித்திரம் வரைய ஆரம்பித்தது _ கோவில், சந்நிதானம், ஆம். பகலிலும் பறக்கும் வௌவால்கள் பகலென்பதையே அறியாதுதான் கோவிலில் உலாவுகின்றன.

பகல் ஒளி பாதிக்குமேல் உட்புகத் தயங்கும். உள்ளே, இரவின் மங்கிய வெளிச்சத்தில் சிலைகள் ஜீவ களைகொண்டு நிற்கின்றன. ஆழ்ந்த அனுபவத்திலும் அந்தரங்கத்திலும் மௌனமாகக் கொள்ளும் கூடமான பேரின்ப உணர்ச்சியை வளர்க்கச் சிறப்பித்ததுதானா கோவில்? கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அதன் பிரகாசத்தில் நடமாடும் பக்தர்களுக்கும், அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத திகைப்பைக் கொடுக்கும். அச்சந்நிதானம் எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? நாம் சாயைகள்தாமா.....? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?_என்பன போன்ற பிரச்னைகளை என் மனம் எழுப்பியபோது, ஒரு தரம் என் தேகம் முழுவதும் மயிர்க்கூச்செறிந்தது.

என் நண்பனின் பார்வை மகத்தானதாக இருந்தது. ஏதோ ஒரு வகையில், ஒரு ரகசியத்தை உணர்ந்த அவன் பேச்சுக்கள் உன்னதமாக என் காதில் ஒலித்துக்-கொண்டிருந்தன. பேச்சினால் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது என நினைக்கும்போது அவன் சிறிது தயங்கி நிற்பான். அப்போது அவன் கண்கள் பிரகாசத்தோடு ஜொலிக்கும்.

`அவள் சென்றாள், பிராகாரத்தைச் சுற்றிவர. பின்னப்பட்டிருந்த அவள் கூந்தல் மெதுவாக அசைந்து ஆடியது. அவள் நடை அமுத்தலாக அவளை முன் செலுத்தியது. `பின்தொடர் பின்தொடர்’ என என் மனத்தில் மறுக்க முடியாதபடி ஓர் எண்ணம் தோன்றியது. வெளியில் நான் வாய்விட்டுச் சொல்லவில்லை. பிராகார ஆரம்பத்தில் ஒரு வில்வ மரம் இருந்தது. அதன் இலைகளின் ஊடே நிலவு தெளிக்கப்பட்டு வெண்மைத் திட்டுகளாகப் படிந்து தெரிந்தது. `பிரியமானவளே என்னைப் பார்’ என்று மனத்தில் நான் சொல்லிக் கொண்டேன். அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவளும் `பின்தொடர்’ என்று சொல்லுவதைத்தான் அவள் பார்வையில் கண்டேன். ஏதோ ஒரு சப்தம் கேட்டது. அது தலைகீழாகத் தொங்கும் ஒரு வௌவாலின் சப்தம்; காதில் சிரித்து மனத்தில் மரண பயத்தைக் கொடுக்கும் சப்தம். வில்வ மரத்தடியிலிருந்து அவளைத் தொடர்ந்து நோக்கி நின்றேன். பிறகு அவள் பின்தொடரச் சென்றுகொண்டு இருந்தேன்.

`பகல் போன்று நிலவு காய்ந்தது. பின் நீண்டு தொடர்ந்த அவள் நிழலேபோன்று நானும் அவளைத் தொடர்ந்தேன். மூலைத் திருப்பத்திற்குச் சிறிது முன்பு அவள் என்னைப் பார்க்கத் திரும்பினாள். நான் சொன்ன வார்த்தைகளைத் திருப்பிக்கொள்ளும்படிக் கேட்டுக் கெஞ்சுவது போல அவள் பார்வை இருந்தது. அவள் வருத்தத்திலும் வசீகரமாகத் தோன்றினாள். அருகில் நெருங்கிய நான் மறுபடியும் ஒரு தரம் `என்ன வேண்டுமானாலும் உனக்காக_’ என்று ஆரம்பித்தவன் முழுவதும் சொல்லி முடிக்கவில்லை. நான் திரும்பி வேகமாக வந்துவிட்டேன். அவளும் கீழ்ப் பிராகாரத்திற்குச் சென்றுவிட்டாள். வில்வ மரத்தடியில் நின்றிருந்த உன்னை அடைந்தேன். இருவரும் பேசாது வீடு சேர்ந்தோம்.’

அவன் பேச்சைக் கொஞ்சம் நிறுத்தியபோது, `யார் அவள்? எனக்கு ஞாபகமில்லையே?’ என்று கேட்டேன். என்னுடைய கேள்வி அவன் மனத்திலேபடவில்லை. அவன் மேலே பேச ஆரம்பித்தான். எனக்கு ஆத்திரம் மூண்டது.

`அன்று முதல் நான் கோவிலுக்குப் போவதை நிறுத்திவிட்டேன்; எதற்காக நின்றேன் என்பது எனக்குத் தெரியாது. சுபாவமாகத்தான் போவது நின்றுவிட்டது என்று நினைத்தேன்.

`நேற்று இரவு என் மனம் நிம்மதி கொண்டு இருக்கவில்லை. எங்கேயோ அலையத் தொடங்கியது. கோவிலுக்குச் சென்று ஈசுவர தரிசனம் செய்து வரலாமெனப் புறப்பட்டேன். இரவின் நாழிகை கழித்தே சென்றேன். அதிகக் கூட்டமில்லாமல் இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய எண்ணம். பெரிய கோபுர வாயிலைக் கடக்கும்போதே, சுவாமியின் கர்ப்பக்கிருகம் தெரியும்.

`வெகு காலமாக, ஜோதி கொண்டு ஜொலிப்பது போன்று நிசப்தத்தில் தனிமையாக ஒரு பெரிய சுடர் விளக்கு லிங்கத்தருகில் எரிந்து கொண்டிருக்கும். அது திடீரெனச் சிறிது மறைந்து பழையபடியே அமைதியில் தெரிந்தது. யாரோ ஒரு பக்தன் கடவுளை வழிபட உள்ளே சென்றான் போலும். நான் மெதுவாகப் போய்க்-கொண்டிருந்தேன். உலகின் கடைசி மனிதன் வழிபாட்டை முடித்துக் கொண்டு அநந்தத்திலும் உலகின் அவியாத ஒளியை உலகில்விட்டுச் சென்றதுபோலத் தோன்றின அந்தத் தீபத்தின் மறைவும் தோற்றமும். தூண்டப்படாது என்னுள் எரிந்த ஒளி நிமிர்ந்து ஜொலிக்கத்தான் நேற்று இது நிகழ்ந்தது. கோவிலில் நான் நினைத்தபடி ஒருவரும் இல்லாமல் இல்லை.

`அவளுக்கு இப்போது இருபத்திரண்டு வயது இருக்கலாம். நாகரிகப் பாங்கில் அவள் இருந்தாள். அவளை இப்போது கோவிலில் கண்டதும், என் மனம் வேதனை கொண்டது. எதிர்பாராது நேர்ந்த இந்தச் சந்திப்பினால் அவளிடம் நான் ஒருவகை வெறுப்புக் கொள்ளலானேன். அவள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைத்தேன். இப்போது என்னுடைய நாகரிகப் போக்கு எண்ணங்கள் தடுமாறி, மனமாற்றம் கொள்ளும் நிலைமையில் இருப்பதால், அவளுடைய அமுத்தலும் நாகரிக நாசுக்கும் எனக்குச் சிறிது ஆறுதலைக் கொடுத்தன. நான், முன்பு அவள் காது கேட்கச் சொன்னவற்றை நினைத்துக் கொண்டபோது, என்னையே நான் வெறுத்துக் கொள்ளாதபடி, அவள் புதுத் தோற்றம் ஆறுதல் கொடுத்தது. முழு வேகத்தோடு அவளை வெறுத்தேன். ஆனால் அவள் கடவுளின் முன்பு தியானத்தில் நிற்கும்போது தன்னுடைய மேற்பூச்சை அறவே அழித்து விட்டாள். கடவுளின் முன்பு மனிதர்கள் எவ்வளவு எழில் கொள்ள முடிகிறது, எத்தகைய மனக்கிளர்ச்சிக்கு உடன்படுதல் முடிகிறது என்பதை அப்போது நான் உணர்ந்தேன்.

`அவள் தியானத்தின் மகிமை என்னைப் பைத்தியமாக்கிவிட்டது. வெறித்து வெறுமனே நிற்கச் செய்தது; ஓர் இன்ப மயம், ஒரு பரவசம். திரும்பிய அவள் என்னைக் கண்டுகொண்டுவிட்டாள். எதிரில் நின்ற தூணை அவள் சிறிது நேரம் ஊன்றிப் பார்த்தாள். என் வாக்கின் அழியாத சாட்சியாக அமைந்து நின்ற அந்த யாளியும் எழுந்து நின்று கூத்தாடியதைத்தான் நான் பார்த்தேன். மேலே உற்று நோக்கியபோது ஐயோ! மற்றொரு யாளி வெகுண்டு குனிந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. அவள் பார்க்குமிடத்தைப் பார்த்து நின்ற என் மனம் பதைத்துவிட்டது. என்னை நோக்கி ஆணை இடுபவளாகத் தோன்றினாள். அவள் பார்வை என்னை ஊடுருவித் துளைத்துச் சென்றது. ஒருவன், தன் உள்ளூற உறைந்த ரகசியத்தை, ஒரு பைத்தியத்தின் பகற்கனாவில் பாதி சொல்லிவிட்டு மறைவது போல அவள் பார்வை என்னை விட்டு அகன்றது. உணர்ச்சிகள் எண்ணங்களாக மாறுமுன், அவள் சொன்னது என்ன என்பதை மனம் புரிந்து கொள்ளுமுன், அவள் போய்விட்டாள். குனிந்த என் தலை நிமிர்ந்தபோது அவள் மறுபடியும் என் பக்கம் திரும்பியதை நான் பார்த்தேன். ஆழமான இருண்ட சுரங்கத்தினின்றும் இருமணிகள் மின்னுவதுபோல இரு சொட்டுக் கண்ணீர் அவள் கண்களினின்றும் உதிர்ந்தது.

`நான் விதியின் நிழல். என்னிடம் காதலின் முழு வசீகரக் கடுமையை நீ காணப்போகிறாய்.

`அவள் என்ன சொன்னாள்? அவள் என்ன செய்யச் சொன்னாள்? நான் என்ன செய்ய இருக்கிறது? எல்லாம் ஒரு கனவுதானா? அவள் பேசவில்லை. சத்தத்தில் என்ன இருக்கிறது; பேச்சில்? உருவில் _ சீ சீ! எல்லாம் அர்த்தமற்றவை_உண்மையை உணர்த்த முடியாதவை; எல்லாம் இருளடைகின்றன. இறுகிய பிடிப்பிலும் துவண்டு புகை போன்று நழுவுகின்றன. ஆனால் எல்லாம் மாயை என்பதை மட்டும் உணர்த்தாது `மேலே அதோ’ என்று காட்டியும் நாம் பார்த்து அதன் வழியே போகத் தெரிந்துகொள்ளுமுன் மறையவுந்தான் இந்தச் சுட்டு விரல்கள் இருக்கின்றன. இருண்ட வழியில் அடையும் தடுமாற்றத்தில் அகஸ்மாத்தாகத் தாண்டிக் குதித்தாவது சரியான வழியை அடைய மாட்டோமா என்ற நம்பிக்கைதான் நமக்கு இருப்பது.

`அதோ மரத்தைப் பார். அதன் விரிக்கப்பட்ட கோடுகள், அதன் ஒவ்வொரு ஜீவ அணுவும் வான நிறத்தில் கலப்பது தெரியவில்லையா? மெல்லென ஆடும்போது அது வான வெளியில் தேடுகிறது. அது குருட்டுத்தனமாகத்தானே அங்கே தேடுகிறது.....?’

நன்றாக இருட்டிவிட்டது. அவன் வெளியில் வெறித்துப்பார்த்துக் கொண்டு இருக்கும்போது, நான் சொல்லிக் கொள்ளாமலே வெளிக் கிளம்பிவிட்டேன்.

வீதியில் வந்ததும் உயரே உற்று நோக்கினேன். இரவின் வளைந்த வானத்திலே கற்பலகையில் குழந்தைகள் புள்ளியிட்டதுபோல எண்ணிலா நட்சத்திரங்கள் தெரிந்தன. தத்தம் பிரகாசத்தை மினுக்கி மினுக்கி எவ்வளவுதான் கொட்டினும், உருகி மடிந்துபடும் அழிவே கிடையாது போல அவைகள் ஜொலித்தன. மேலே இருப்பதை அறிய முடியாத தளர்ச்சியுடன் ஒரு பெருமூச்செறிந்தேன். நடந்து நடந்து வீட்டை அடைந்தேன்.

இன்று காலையில் அவனை வீட்டில் காணோம். அவன் எங்கே எதற்காகச் சென்றானோ எனக்குத் தெரியாது. அவனுக்குத் தெரியுமோ என்பதும் தெரியாது. எல்லாம் `அவனுக்கு’த் தெரியும் என்ற எண்ணந்தான் _ அவன் என்பது இருந்தால்.ஏன்? -மௌனிPosted on October 24, 2013 by kesavamanihttp://kesavamanitp.wordpress.com/2013/10/24/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%BF/சுசிலா, வக்கீல் ராஜமய்யரின் மூத்த பெண். அவள் சிறு வயதிலிருந்தே அதிக வசீகரத் தோற்றமுடையவளென்று பிரசித்தம். சற்று மாநிறமாயினும், அவள் இரு விழிகளும் அதிக கருமையாகவும், புருவங்கள் செவ்வனே வளைந்து மிகக் கருப்போடியனவாகவும் இருந்தன. “ஏன், ஏன்?” என்ற கேள்விகளை அவள் கண்கள் சதா கேட்பவை போன்று தோன்றும். அதற்குச் சாதகமாக அவள் புருவங்கள் வளைந்து சிற்சில சமயம் கண்களுக்கு மேலே பாதி சுழித்துக்கொள்ளும். அப்போது அவளைப் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமும் அமைதி இன்மையும் ஏற்படும்.

அவளுக்கு பதினான்கு வயது ஆகும்போது, அவளுடைய பார்வையின் ஒளி கொஞ்சம் குறைவுற்றது. பளீரென்று மின்னல்போன்று தாக்காமல், வசீகரச் சோர்வுற்று அவள் கண்கள் வருத்தமுற்ற கேள்விக் குறியாகத் தோன்றின. பழையபடியே பள்ளிக்கூடத்திற்குச் சென்று வந்தாள். அப்போது அவள் எட்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள்.

அவள் வீட்டிற்கு எதிர்வீட்டில் மாதவன் இருந்தான். மாதவன் மிராசுதார் கிருஷ்ணய்யரின் ஒரே புதல்வன். அவன் நல்ல சிவப்பு நிறமும் அழகிய தோற்றமும் உள்ளவன், அவன் முகத்தில் சதா ஆனந்தமும் சுறுசுறுப்பும் குடிகொண்டிருக்கும். அவனும் சுசீலா படித்துவந்த பள்ளிக்கூடத்திலேயே அப்போது பத்தாவது வகுப்பில் படித்து வந்தான். சுசீலாவை இவன் சிறு வயதிலிருந்து பார்த்திருந்தும் அவளோடு பேசியது கிடையாது. தன் வீட்டு மாடியில் சில வேளையில் இவன் உலவும்போது சுசீலாவை அவள் வீட்டுத் திண்ணையில் நிற்கப் பார்த்ததுண்டு.

ஒரு நாள் மாதவன் பள்ளிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். பாதி வழியில் வீடு போய்க்கொண்டிருக்கும் சுசீலாவைக் கண்டான். அவள் அருகில் அவன் நெருங்க நெருங்கத்தான் அவளுக்கு வெகு தூரத்திலிருப்பதாக எண்ணம் ஏறபட்டது அவனுக்கு. அவள் பின்புறத்திலேயே சற்றுத் தள்ளி வந்துகொண்டிருந்தான். “சுசீ, நானும் வீட்டிற்குத்தானே போகிறேன். இருவரும் சேர்ந்து போகலாமே?” என்று திடீரென்று கேட்டான். அவள் திடுக்கிட்டுப் பின்புறம் திரும்பிப் பார்த்தாள். அவள் புருவங்கள் சற்று உயர்ந்து, கண்களும் சிறிது பெரிதாகி, “ஏன், எதற்கு?” என்று வியப்போடு கேட்டது போல் தோன்றின. மாதவன் தன் மனக் கட்டுப்பாட்டை இழந்தவன் போன்று, “சுசீ, நான் உன்னை மறக்கமாட்டேன். நீயும் என்னை மறக்காமல் இருக்கிறாயா?” என்று பொருத்தமில்லாமலே கேட்டான். “என்ன, ஏன்?” என்று அவள் அவனைக் கேட்டதுதான் அவனுக்குத் தெரிந்தது. சிறிது ஆனந்தம் அவன் மனதில் தோன்றி மறைந்தது. மாதவன் “ஏன், ஏதற்கு?” என்று கேள்வி கேட்டுப் பழக்கப்படாதவன். ஆயினும் அன்று அவள் வாயினின்றும் வந்த அச்சொல்லினால் “ஏன் அவள் என்னிடம் இப்படி இருக்கிறாள்” என்று எண்ணலானான். வேறு பேச்சில்லாமலே இருவரும் தத்தம் வீடு போய்ச் சேர்ந்தார்கள். வீடு சேர்ந்ததும் மாதவன் வழியில் நடந்தவைகளை மறந்தவன்போல் ஆனான். பந்தடி மேடையிலிருந்து அவன் விளையாடி விட்டு இரவு வீடு வந்ததும் பழைய மாதவனே போன்றுதான், சாயங்காலம் நடந்த சம்பவம் அர்த்தமற்ற ஒரு நிகழ்ச்சி என்றுதான் இவன் மனதில் பட்டது.

சுசீலாவிற்கு கலியாணம் நிச்சயமாகி அந்த வருஷம் கோடைக்கால விடுமுறைக்குள்ளே நடந்தது. கலியாணம் நடக்கும் போது மாதவன் ஊரிலில்லை. விடுமுறைக்காகத் தன் மாமன் கிராமம் சென்றிருந்தான். அவளுக்குக் கலியாணமான விஷயமும் அவனுக்குத் தெரியாது.

அந்த வருஷம் அவன் பரீஷையில் தேறிவிட்டான். கலாசாலைப் படிப்பிற்காக அவன் மறுவருஷம் பட்டணம் போய்விட்டான். அடிக்கடி மாதவன் ஊருக்கு வருவதும் இல்லை. சுசீலாவைப் பற்றிய எண்ணமே அவனுக்கு இல்லை. அவளை மறந்தவன் போன்றே ஆனான். அந்த வருஷம் கோடை விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது சுசீலா புக்ககம் சென்றிருந்தாள். அவன் தன் வீட்டு மாடியில் மேலும் கீழும் உலாவும்போது சிலசில சமயத்தில் ராஜமய்யரின் வீட்டுத் திண்ணையைப் பார்ப்பான். அங்கு சுசீலாவைப் பார்க்க முடியாததும் அவன் மூளையில் படவில்லை, அதுவும் அர்த்தமில்லாமலும் ஏன் என்று தெரியாமலும் பார்ப்பதுதான்.

மற்றும் இரண்டு வருஷங்கள் சாதாரணமாகவே கழிந்தன. மாதவன் படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருந்தது. விடுமுறைக்காக அவன் ஊர் வந்திருந்த அந்தச் சமயம் சுசீலாவும் தன் தகப்பனார் வீட்டிலிருந்தாள். அப்போது அவளுக்கு ஒரு வயதுக் குழந்தை ஒன்று இருந்தது.

ஒரு நாள் மத்தியானம் மாதவன் தன் வீட்டின் மாடியில் நின்றுகொண்டு இருக்கும்போது எதேச்சையாக ராஜமய்யரின் வீட்டுத் திண்ணைப் பக்கம் பார்த்தான். அச்சமயம் சுசீலா தன் அழும் குழந்தைக்கு, தெருவில் போகும் வண்டியை விளையாட்டுக் காட்டிக்கொண்டு இருந்தாள். அவளையே பார்த்துக்கொண்டு மாதவன் கற்சிலைபோன்று நின்று இருந்தான். “ஏன்?” என்ற கேள்வி எழுந்துவிட்டால் ஒருவன் மூளையை இழந்தவன் போன்றாகிவிடுகிறான். சிறிது நேரம் சென்றவுடன் சுசீலா அவன் நிற்கும் மாடிப்படி பக்கம் பார்த்தாள். அவனை நான்கு வருஷங்களுக்குப் பிறகு அப்பொழுதுதான் அவள் பார்க்கிறாள்.

அப்போது அவனிடம் தோன்றிய மாறுதல் அவள் மனதில் படாமல் இருக்கமுடியாது. ஆனால் அவன் முகத்தில் அவ்வகை மாறுதல் ஏன் என்று மட்டும் அவளுக்குத் தெரியவில்லை.

மாதவனுக்கு அவள் கண்கள் பழையபடி கேள்விக்குறிகளாகத் தோன்றின. சிறிது நேரம் கழிந்து சுசீலா வீட்டினுள் சென்று மறைந்துவிட்டாள். மாதவன் தன் பாதி படித்துவிட்டு பிரித்தபடியே விட்டிருந்த புத்தகத்திடம் செல்லவில்லை. திடீரென்று ஏன் என்ற கேள்வி அவன் மனத்திடையே எழுந்துவிட்டது. சந்தோஷக் களையும் அவள் முகத்தினின்று இழந்தான். மன நிம்மதியும் அதே கணத்தில் அவனைவிட்டு அகன்றது.

அவள் பார்வையின் தத்துவத்தை அவன் அறிந்து கொண்டான் போலும். திடீரென்று ஏற்பட்ட சிந்தனை மாறுதலால் அவன் சந்தோஷத்தையும் மன நிம்மதியையும் இழந்தான் என்று சொல்வது அவ்வளவு சரியல்ல. அவள் பார்வையின் கேள்விக் குறி அவனைத் தாக்கி, அதற்குத் தன் மனத்தில் தனக்குச் சாதகமாக அளித்துக்கொண்ட விடையும், மறுபடியும் மற்றொரு கேள்வியின் ஆரம்பம்தானே?

அதுமுதல் அவன் ஒடுங்கலுற்றான். தேகமும் மெலிந்து இளைக்கலுற்றான். எல்லாவற்றையும் பற்றி யோசிக்கலானான். அவன் யோசனைகளெல்லாம் ஆரம்பித்த இடமான சுசீலா இடத்திலேயே முடிவடைந்து, முற்றிலும் முடியாமல், திரும்பவும் ஆரம்பிப்பது போன்று சலிக்க ஆரம்பித்தன. காலசாலை திறக்க இன்னும் பத்து நாட்களே இருந்தன. ஆனால் சுசீலாவைப் புக்ககத்திற்கு கொண்டுபோய் விடவேண்டிய நாள் வர பதிமூன்று தினங்கள் இருந்தன.

இரண்டொரு நாளில் மாதவனுக்குச் சுரம் கண்டது. அச்சுரம் வரவர அதிகமாகி மூளையைப்பற்றின கடுஞ்சுரமாக மாறியது. சொந்தப் பிரக்ஞையுடன் இருக்கும்போது “ஏன், ஏன்?” என்று மனதில் கேட்டுக் கேட்டு களைப்படைந்து பிரக்ஞையை இழக்கும்போது, சோர்வுற்று சற்று தூங்குவான்.

அப்போது அவன் தன்னையறியாமல் பிதற்றுவான். ஆனால் அவனையும் சுசீலாவையும் பிடித்த நல்ல காலம் அவன் பிதற்றல் பட்டணத்தையும் அவன் படிப்பையும் பற்றியதாகவே இருந்தது.

அவன் கலாசாலை திறக்கும் தினத்துக்கு முதல் நாள் காலையில் எவ்வகை சிகிச்சையும் பயன்படாது இறந்து போனான். சாதாரணமாக இருப்பின் அவன் அன்று பட்டணம் கிளம்பிப்போக வேண்டியவன். அவன் இறக்கும்போதும் தன் ஜீவியத்தை வெறுக்கும் கசப்பின் வேகத்தைச் சற்று உறுதியுடன் எதிர்ப்பவன் போன்று “மூட்டைகளைக் கட்டு, இன்று பட்டணத்துக்குப் புறப்படவேண்டும்” என்று சொல்லித்தான் இறந்தான். அவன் இறந்த பிறகு அவன் பெற்றோர் எவ்வளவோ வாய்விட்டு அலறினார்கள். ஆனால் அவர்களுக்கு மன ஆறுதல் ஏற்படாதென்றுதான் தோன்றியது.

சுசீலா அவன் பிரேதம் சுடுகாட்டிற்குக் கொண்டு போகப்பட்டபோது வீட்டுத் திண்ணையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். மாதவனுடைய பெற்றோர் ஒன்றுக்கு ஒன்று சம்பந்த மற்ற வார்த்தைகளால் ஓலமிட்டது அவளுக்கு வியப்பையே கொடுத்தது. அவள் கண்களும் புருவங்களும் எப்போதையும் போல “ஏன்“ என்பது போலச் சுழித்தன.

அவள் கண்களின் தோற்றம் தன் ஆட்சியை மீறி, பழக்கத்தின் காரணமாகவே மனதில் தோன்றியதைவிட்டு வேறு எதையோ குறிப்பது போலத்தான் அப்போதும் இருந்தது. கண்களின்றும் கன்னம் வழியாக ஓடி, முத்துப்போன்று கீழே விழுந்து சிதைவுற்றுப்போன இரு சொட்டுக் கண்ணீரும் “ஏன்“ என்ற கேள்விக்கும் அகப்படாமலேதான் கீழே சொட்டின.

உள்ளே இருந்து “சுசீ“ என்று அவள் தாயார் கூப்பிட்ட போதும் “ஏன்” என்று தெரியமலேதான் உள்ளே சென்றாள்.

பட்டணத்தில் உயர்தரக் கல்லூரி திறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. மாதவனது மரணத்தைப் பற்றி அறியாத அவன் சிநேகிதர்கள், அவன் ஒரு மாதம் வரையிலும் வராததைப் பற்றி ஆச்சரியம் அடைந்தனர். இவ்வளவு மேன்மை உடைய மாதவன் ஏன் படிப்பை நிறுத்தி விட்டான் என்று கேட்டும் ஒன்றும் புரியாமலும், தெரியாமலும் திகைத்தனர்.

சுசீலாவும் புக்ககம் சென்று கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகிறது. இப்போது ஊரிலிருந்து வந்தது முதல், அவள் கண்கள் என்றுமில்லாத ஒரு மகத்தான சோகம் கலந்த வசீகரத் தோற்றமுடையவையாக ஏன் தோன்றுகின்றன என்று அறிய முடியாமலேயே, அவளைப் பார்க்குங்கால் ஆனந்தமடைந்து கொண்டு இருந்தான் அவள் கணவன்.

நானோவெனில் எல்லாம் தெரிந்தும் ஒன்றும் தோன்றாமல் என் நண்பன் இறந்ததைக் குறித்து மனம் புகைந்து கொண்டிருக்கிறேன்.மணிக்கொடி 1936

மௌனி படைப்புகள், காலச்சுவடு பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2011, பக்கம் 21-25எங்கிருந்தோ வந்தான் - மௌனி

வலையேற்றியது ரா.ரா.கு 30/04/2014

தென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடுதியில், தங்கியிருந்த மாணவர்களில் அநேகர் கோடைவிடுமுறைக்காகத் தத்தம் ஊருக்குசென்றுவிட்டனர். என் பக்கத்து அறையும் காலியாகக் கிடந்தது. அன்று ஒரு நாள்; வரண்ட காற்றோடு வந்தவர் போல ஒருவர், திடீரென என்பக்கத்தறையில் குடிவந்தார்.

அதிகமாக அவரை வெளியில் காணக்கூடவில்லை. சதா தன் அறையிலும், மற்றும் இரவில் வெகுநேரம்கூரையற்ற மேன் மாடியிலும் பொழுது போக்கினார். இரண்டொரு தரம் தற்செயலாக அவரைச் சந்திக்க நேரிட்டபோது, அவர் தோற்றத்தைக் கண்டு, சிறிது பிரமிப்படைந்தேன், சீவிக்கொள்ளாத நீண்ட அவர் முன் குடுமித் தலையும், அகலமான நெற்றியும். மகத்தான மூளை வன்மையின் அறிகுறி போலும். ஊடுருவிக் காது வரையிலும் கருத்து ஓடிய புருவங்களுக்கு வெகு மங்கிக் களைப்புற்ற அவர் கண்கள் பதுங்கியிருந்தன.

மூன்று தினத்திற்கு முன்பு ஓருதரம் அவரை நேருக்கு நேராக ஒரு கணம் சந்தித்தேன். கண்ணிர் வரண்டு சலனமற்று நிற்கும் அவர் கண்கள் திகைப்பும், வருத்தமும் புதைந்து பாழ்பட்ட கேணி போன்று தோன்றின, அவர் நம்மை உற்று நோக்கும்போது, அவரது பார்வை, நம்மை ஊடுருவிப் பிய்த்து, அமைதி யை நம்முன் சிலாகை கொண்டு துருவிப் பார்ப்பதுபோன்ற ஒரு உணர்ச்சி - ஓர் உயர் சக்தி நம்முன் நிற்கும் பயம் - இவைதான் நம் மனதை அலைக்கும்.

மூக்கு நீண்டு வளைந்து இருந்தது. மெல்லிய உதடுகள் சிறிது விலகி இரு வரிசைப் பற்களை, கண் கூச, வெளிக்காட்டின. வாய் சிறிது பிளந்து நிற்கத்தோற்றிய அவன் தாங்க முடியாத பளுவை பெருமூச்செறிந்து, ஆனால் அலக்ஷியமாகத் தாங்கி நிற்பவன்போல் காணப்பட்டான். அவன் அழகின் பாழ்பட்ட வசீகரன்.

நான் சுபாவத்தில் ஓருவரிடமும் அதிகப் பரிச்சயம் வைத்துக்கொள்பபவன் அல்ல. என் தூக்கம் கலைந்த நேரத்தின் பெரும்பான்மையை என் ஆபீஸ் அலுவல்கள் கொண்டுவிடும். என் ஆபீஸ் அலுவல்களின் ஆயாசம் என்னை இரவில் வெகு சீக்கிரம் துயிலில் ஆழ்த்திவிடும். அவன என் பக்கத்தறைக்கு வந்ததிலிருந்து, ஏதோ என்னைச் ஒரு கரு மேகம் படர்ந்து சூழ்ந்ததுபோன்ற உணர்ச்சி என்னைப் பீடித்தது. என் மனம் அவன் உறவை மிக நாடியது. அவன் வந்து சில நாட்களே கழிந்தன. ஆயினும், அவன் சிநேகத்தைப் பெறாத எனக்கு, வெகு நாட்களைப் பயனின்றி வீணாக்கினேன் என்ற எண்ணம் ஏற்படலாயிற்று. இரண்டொருதரம் அவனிடம் பேசத்துணிந்து நெருங்கி, முடியாதது கண்டு திரும்பினேன். அவனோ வெனில், வருவதும் போவதும் இல்லாதவன் போல அருகில் இருந்தும், அசைந்து வெகு தாரத்தில் போய்ப்விடுவான். அவனை அடைய முயலுவது முடியாத காரியமெனத்தான் எனக்குத் தோன்றியது.

மூன்றுநாட்களுக்கு முன் என் ஆபீஸ் அலுவல்களின் அலுப்பு - ஆயாச மிகுதியில், சீக்கிரமாகவே படுக்கச்சென்று தூங்கிவிட்டேன்... நடு இரவில் நான் விழித்துக்கொண்டேன். ஒருக்கால் நான் தூங்காமலேயே விழித்துதான் படுத்திருந்தேனோ என்னவோ. பக்கத்து அறையிலிருந்து, கேட்டதும் கேட்காததுமாக, அடித் தொண்டையிலிருந்து அவன் பாடிக்கொண்டிருந்தான்..... பாட்டும் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்துவிட்டது, அது மறைந்தவிடத்திற்கு என்னையும் இழுத்துச் சென்றதுபோலும்... என்னையே என்னுடைய சவத்தையே - நான் வெகுதூரத்திற்கு அப்பால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நான் உணர்ந்த என் இறப்பு! வருத்தம், ஆத்திரம், ஓரு அருவருப்பு, ஒருங்கு கூடின... ஒரு கேலி நகைப்பு எங்கேயோ கேட்டது.... மறுபடியும் என் சவத்தையே நான் பார்த்துக் கொண்டு ருக்கிறேன். இறப்பு..? இறப்பு...? அடைய ஆவல் கொண்டு, ஒருஸ்வரத்தை எட்டி எட்டிப்பிடிக்க மேலிருந்தும் கீழிலிருந்தும், முயலும் அவன் பாட்டைகேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு சோகமான கீதம்அவன் பாடிக்கொண்டிருந்தான். என் உணர்வை உயர்த்தி, கனவிற்கும், நினைவிற்கும் உள்ள நுண்ணிய எல்லைக் கோட்டை துடைக்கவல்ல அவனுனடய கானம், சாதாரணமானதல்ல. ஆழித் தண்ணீரில் எல்லை பிரித்துக்கோடிட்டது தானோ நம் வாழ்க்கை... ? அசைந்து அசைந்து மிதக்கும் தோணி, (மனம்) எல்லை கடக்க அறியாது கடந்ததுபோலும்! கனவின் கரையைத்' தாண்டி, அவன் பாடிக்கொண்டிருப்பதைத் தான் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் போலும், நான் கனவு கண்டுகொண்டிருந்தேன் என்றால், எப்போது நான் விழிப்படைந்தேன்?... இப்படிப்பட்ட உயர்வகை உணர்ச்சிச் சித்திரங்களையும் உந்நதக்கோவில்களையும் எழுப்ப வல்லது, அவன் கீதம்.அப்போதுதஈன் அவனது திறமையைத் தெரிந்து கொண்டேன்.

சிறிது நேரம் விழித்திருந்த நான், எண்ணக் குவியல்களுக்கு ஆளாகி, விடியுமு மறுஓருதரம் அயர்ந்து விட்டேன். சூரியன் உதித்த பிறகேதான் எழுந்தேன். அன்று காலை எட்டு மணி சுமாருக்கு, காப்பி அருந்தியவுடன், மனதைத் திடப்படுத்திக்டுகொண்டு, அவன் அறைவாயிலை அடைந்தேன்- கதவு சிறிது திறந்து இருந்தது- அதையும் சிறிது ஒதுக்கிக் கொண்டு உள்ளே சென்றேன்

அவன் கண் விழித்துப் படுத்து இருந்தான்.

நான் 'ஐயா, சௌக்கியம்தானே. ஏதாவது என் உதவி தேவையா' என்று கேட்டேன். அவன் சிறிது நேரம் என்னை உற்று நோக்கினான். கனிந்து உள் நோக்கினான். கனிந்து உள் நோக்கி நின்ற பார்வையை வெளிச் செலுத்தினான், 'அவன் சரி தான் ; - நான்தான் - என் மனதுதான் சரியில்லை' என்று நினைத்துக்கொண்டு வெளி வந்தேன்.

அன்றுமாலை நான் ஆபீஸிலிருந்து வந்தபோது அவன் அறை பூட்டியிருந்தது. அவனை விடுதியில் காணவில்லை. 'வெளியே - எங்கே - எதற்காக' என்றெல்லாம் நினைத்து, இரவு படுக்கைக்குச் செல்லு முன்பு மற்றொரு தரம், நான் அவன் அறைப் பக்கம் சென்றேன். அப்போதும் பூட்டப் பட்டுத்தான் இருந்தது.

“போக்குவரவு அற்ற உலக சஞ்சாரி, பூட்டின் திறவுகோல் உன்னிடம்தஈன் இருக்கிறதோ" என்றெண்ணியவாறே பூட்டை இழுத்துப் பார்த்துவிட்டு, என் அறை அடைந்து படுத்துத் தூங்கிவிட்டேன், இது நடந்தது நேற்று இரவு முன் பகுதியில், அன்று நான் நடு இரவிலும் விழித்துக்கொண்டேன், கனவு கண்டு கொண்டிருக்கவில்லை; அரை தூக்க உணர்ச்சியுமல்ல. என்னைத் தடவி பார்த்துக்கொண்டேன். நான் முனங்க வில்லை; சங்கீதமும் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. அடுத்த அறையிலிருந்து முனகல் சப்தம் கேட்டுக்கொண்டிந்தது. நடுவே, அவன் தனக்குத்தானே பேசிக்கொள்வதும் புரியரமல் கேட்டுக்கொண்டிருந்தது, அவனுக்கு உடம்பு சரியில்லை என்று எனக்கு நிச்சயமாகத்தோன்றியது... மறுபடியும் நான் தூங்க ஆரம்பித்தேன்.

காலையில் எழுந்ததும் அவன் அறைக்கு சென்றேன். கொஞ்சம் தயங்கியே உள் நுழைந்தேன். அவன் கண்கள் மூடியிருந்தன; அவன் நெற்றியை என் கையால் தொட்டுப் பார்த்தபோது, சுரம் கடுமையாக அடித்துக்கொண்டிருப்பது கண்டேன், நான் வெளியே சென்று, காப்பி அருந்திவிட்டு, அவனுக்காகவும் ஒரு கோப்பை வாங்கி வந்தேன். உள்ளே சென்றதும், அவன் ஆயாசத்துடன் கண்களைப் புரட்டி என்னைப் பார்த்தான். 'ஐயா உங்களுக்கு சுரம் கடுமையாக அடிக்கிறது' என்று சொல்லி காப்பியை நீட்டினேன். அதை வாங்காது படுத்தபடி, கோப்பை என் கையிலிருக்க, அப்படியே குடித்தான், இவ்வகையில் அவனுக்கு உதவி யளித்தது எனக்கு வருத்தைத்தான் கொடுத்தது.

அறையிலே தனியாக அவன் பக்கத்தில் இருப்பதிலும் மனச் சங்கடம். ஆபிஸுக்குப் போயும் என் மனது நிம்மதி கொள்ளவில்லை. அன்று பிற்பகல் ஓய்வு எடுத்துக்கொண்டு என் விடுதிக்குத் திரும்பினேன். இன்னும் சுரம் தணியவில்லை.

எனக்கு தெரிந்த ஒரு டாக்டரிடம் சென்று அவரைக் கூட்டி வந்தேன். அவன் மௌனமாகப் படுத்திருந்தான். இழுத்த திசையில் செல்லக்கூடிய அவ்வளவு பலவீனம். வைத்தியர், அவனைச் சோதித்து மருந்து கொடுத்து விட்டு, மறுநாளும் சுரம் தணிவடையாவிட்டால்,

பெரிய ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்க லெட்டர் தருவதாக என்னிடம் சொல்லிச் சென்றார். இரண்டொரு தரம், அவன் உற்றாருக்குக் கடிதம் எழுத விலாசம் கேட்டுப் பார்த்தேன். அவன் பேசவில்லை. அவன் கண்களின் தேங்கிய வெற்று வெளிப் பார்வையை அர்த்தப்படுத்த என்னால் முடியவில்லை. மறு நாளாயிற்று, இன்னும் அவனுக்கு சுரம் தணியவில்லை. பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றேன்.

இரண்டு வைத்தியர்கள் பரிசோதித்தனர். நீண்ட நேரம் தங்களுக்கள் வைத்திய பரிபாஷையில் விவாத்திதுக் கொண்டனர், அவர்களது பாவனையும் பேச்சும் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் அதை நான் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஒருவர் என்னிடம் நோயாளியைப் பற்றி விசாரித்தார். நான் சொன்னதைக் கேட்டு ஆச்சரிய மடைந்த அவர், சுற்றத்தாருக்கு எழுதி அழைக்கும்படி கூறினார். வருத்தம் தாங்க முடியவில்லை; அவ்விடம் விட்டு என் அறையை அடைந்தேன். அன்று முற்பகலையும் சிரமப்பட்டுக் கழித்தேன்.

அன்று மத்தியானத்திலிருந்து அவன் பிரக்ஞை தவறிவிட்டான். அன்று சாயந்திரம் நான் அவனைப்பார்க்கச் சென்றபோது சிறிது குணமடைந்தவன்போல, கண் விழித்திருந்தான். தன் ஸ்திதியை உணர்ந்தவன் போன்றே இருந்தான். அப்போது அங்கு வந்த டாக்டர், அவனைப் பார்த்து "உங்கள் நெருங்கியவர்களை வரவழைப்பது நலம். யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள்” என்றார். எங்கள் இருவரையும் மாறி மாறி இரண்டுதரம் பார்த்தான். இருவரையும் பார்த்தான். ஆனால் நிதானமாகக் கண்களை மூடிக்கொண்டு, 'ஒருவருமில்லை - இல்லை - நான் தான் - ஆம்' என்று பதிலளித்தான். களைப்பு மேலிட்டு அயர்ந்தவன் போல இருந்தான்.

டாக்டர் வேறு நோயளிகளைப் பார்க்கச் சென்று விட்டார். நான் சிறிது நின்றேன். நின்றபடி குனிந்து பார்த்தேன். அவன் இனி கண் திறந்து பார்க்கமாட்டான் என்ற ஒரு சிறு சந்தேகம் என் மனத்தைக் கவ்வியது. அங்கு நிற்கவும் என்னால் முடியவில்லை. வெளி வந்தேன். ஒருகணம் அவன் இறந்துவிட்டான் என்று நிச்சயமாகப் பட்டது; ஆனால் அவனைத் தொட்டுப் பார்த்து நிச்சயப்படுத்திக்கொள்ள ஒரு பயம். ஒருக்கால் தொட்டுப் பார்த்தால் சந்தேகம் நிச்சயமாகி, உதறித்தள்ள முடியாது பலப்பட்டு விடுமோ என்ற பயம். அவன் இறக்கவில்லை; சிறிது களைப்பு - நிச்சயம் - சந்தேகம் - நான் அவ்விடம் விட்டு வெளியேறி என் அறையை அடைந்தேன்.

அவன் அறையைத் திறந்து உள் சென்றேன். ‘என்ன பிசகு - ஏன் செல்லக் கூடாது?' அவன் சாமான்களை ஆராய்ந்தேன். (அதிகம் ஒன்றுமில்லை; இரண்டொரு சட்டைகளும், படுக்கையும்தான் இருந்தன.) எல்லாவற்றையும் நன்கு புரட்டிப் பார்த்ததில் படுக்கைத் தலையணையின் கீழ், இரண்டு மூன்று கடிதங்கள் இருந்தன. கடிதங்களை உனறயில் போட்டு தபாலில் சேர்க்கும் நிலையில், மேல் விலாசம் எழுதப்படாமல் இருந்தன. எந்த விலாசத்திற்கு அனுப்புவதென்றுதான் புரியவில்லை. மிகுந்த ஆர்வத்தோடு அவைகளைப் பிரித்துப்' படித்தேன். யாருக்கு எழுதியது என்று தெரிந்தது. ஆனால், அக்கடிதங்களை அனுப்ப முடியாததுதான். ஏன், இவனே ஒருக்கால் நேராகச் செல்வதற்குப் போயிருக்கலாம்.

திடீரென்று என் மனது துக்கமடைந்தது.

சுமார் இரவு எட்டு மணிக்கு நான் மறுபடியும் ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். அங்கு சேர்ந்ததும், அவனைக் கிடத்தியிருந்த இடம் காலியாக இருந்தது. ஒருக்கால் அவனை வேறிடத்திற்கு மாற்றி இருக்கலாம் என நினைத்து அங்கு கண்ட ஒரு நர்ஸ் யுவதியைக் கேட்டேன். அவள் சிறிது திகைத்தாள். பிறகு, "நீங்கள் சென்ற இரண்டொரு நிமிஷத்தில் அவர் இறந்துவிட்டார்” என்றாள். பக்கத்தில் நின்ற டாக்டர், “நீங்கள் இப்போதுதான் வருகிறீர்கள் போலும். சிறிது முன்பு அவரை அடக்கம் செய்தனர்” என்றார்.

'இறந்தகாலம் தன், நிர்மாண வேலையைப் பெரியக்கட்டுக்கோப்பில் செய்து வருகிறது; அவனும் சதக் கணக்கில் சேர்க்கப்பட்டான், சரி தெரிந்தது போதும்' என்றெண்ணிக் கொண்டு அவன் கிடந்த இடத்திற்கு ஒரு பெருமூச்சுடன் விடை பெற்றுக்கொண்டு திரும்பினேன். அவனுடைய கடிதங்கள் என் மேஜையின்மீது பிரித்தபடி கிடக்கின்றன. அவற்றுடன் ஒரு வார லீவு கேட்டு என் ஆபீஸுக்கு எமுதிய கடிதமும் இருச்கிறது.

என் மனதில் நிம்மதியில்லை. கூரையற்ற மேல் மாடிக்குச்சென்று உலாவினேன், ஆகாயத்தை வெகுநேரம், கண்களில் நீர் சுரந்து பார்வை மழுங்கும்வரை உற்று நோக்கினேன். அன்றிரவு பிரகாசமாகவே இருந்தது. ஆனால் சந்திரனால் அல்ல. சந்திரன் இன்னும் புறப்படவில்லை.

யாரோ ஒருவன் தன்னுடைய உன்மத்த மிகுதியில், ஜ்வலிக்கும், விலை கொள்ளா வைரங்களைக் கை நிறைய வாரி வாரி உயர வானத்தில் வீசி இறைத்தான் போலும். ஆயிரக் கணக்காக அவை அங்கேய பதிந்து இன்னும் அவள் காரியத்தை நினைத்து மினுக்கி நகைக்கின்றன.

மெதுவாகக் கூரைகளுக்குமேல் சந்திரன் தெரிய ஆரம்பித்தது. அதன் ஜோதியில் சிறிது மங்கலடைந்தன நக்ஷத்திரங்கள். ஆயினும் அவைகள் மினுக்கிக் கொண்டிருந்தன. என் மனத்தில் தோன்றிய அநேக கேள்விகளைத் தெதளிவுப் படுத்தாமலேயே, சிலசில, சந்திர ஒளியில் மறைய ஆரம்பித்தன. எஞ்சினவை என்னனப் போலவே, சந்தேகத்திலும் சஞ்சலத்திலும் ஈடுபட்டு, பிரகாசம் குன்றி பதிந்திருந்தன. ஆகாய வீதியில் தவழ்ந்து வந்த சிறு சிறு மேகங்களைச் சந்திரன் துரத்திக் கொண்டிருந்தான். நான் கீழே இறங்கி என் அறையை அடைந்தேன்...

வரும்போது இரவு கிட்டத்தட்ட இரண்டு மணியாகி விட்டது; ஆனால் எனக்குத் தூக்கம் வரவில்லை. ஒருக்கால் தூங்கினால் பக்கத்தறையிலிருந்து அவன் பாட்டு கேட்குமோ...?

எனது அறையின் மேற்குப் பார்த்த ஜன்னலிலிருந்து, சாய்வாக, வருத்தத்தில் சந்திரன் எட்டிப் பார்க்கிறான். துரத்தப்பட்ட சிறு மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பயம் நீங்கி ஊர்ந்து வருகின்றன. நகரத்தில் தூக்கம் உலாவு கிறது. எங்கும் நிசப்தம். துல்லிய வெண்ணிலா, வானத்தின் சிறு ஒளி சரிகைகளை மொழுகி மறைத்து வெறிச்சென்று காய்ந்தது. களைப்படைந்த சந்திரன் சலிப்புற்று இருக்க, மேகங்கள் குவிந்தன. உயரமாக வளர்ந்த வீதி வீடுகள் பாழ்பட்டு, உயிரறறு வெளிக் கோட்டுருவங் கொள்ளுகின்றன.

என் கண்களில் ஒரு பாரம் தங்கி இமை கொட்டுகிறது... அவன்... கீதம் ?...

கிழக்குப் பார்த்த என் அறை வாயினின்று, சூரியக்கிரணம் உள்விழுந்து ஓளி கொடுத்தது. உலக இரைச்சலும் ஆரவாரிப்பும், ஆயிரம் வாயினின்றும் வெளிப்பட்டு அலறிக் குமைந்தன. என்னைச் சுற்றிலும் ஒரே வெளிச்சம். என்

எதிரிலுள்ள மேஜையின்மீது கடிகாரம் 8 மணியைக் காட்டுகிறது.

ஒரு அமுக்குப் பிசாசினின்று விடுவிக்கப்பட்டவன் போல் நாற்காலியினின்று எழுந்தேன்... சென்ற சில நாட்களில் கண்டதை நிச்சய வாழ்வின் ஒரு பகுதி என்று நான் எண்ணி இருக்கமாட்டேன். ஆனால் என் மேஜையின் மீது அவனுடைய லெட்டர்களும், என்னுனடய லீவு லெட்டரும் என்னை வெறித்து நோக்கிக் கொண்டிருக்கின்றனவே!

அவனால் எழுதப்பட்ட இரண்டு கடிதங்களைக் காட்டுகிறேன்...(முதல் கடிதம்)

பிரியமுள்ள பத்மா -
உன்னைவிட்டு நான் கடைசியாகப் பிரியும்போது சொல்லிக்கொண்டு வரவில்லை. உனக்கு அது வருத்தமாக இருக்கலாம். நீ தூங்கிக் கொண்டு இருந்தாய். உன்னை எழுப்பாமல் விட்டு வந்தேன்.
ஒரு காலத்தில் நீ அழகிய சிறு பெண்ணாய்இருந்தாய். ஓல்லியாக, உயரமாக இருந்த நீ உன் குதிக்கால் இடிக்க பாவாடை கட்டிக்கொண்டு,கழுத்தில் ஒரு வடம் சங்கிலி அணிந்து சிறியடோலக் காதோடு, உன் முகத்தை தொங்கவிட்டுக் கொண்டு, துவண்டு துவண்டு நடந்து வருவாய்; - என்னோடு பேசுவாய். அப்போது உன்னைப் பார்ப்பது அர்த்தமில்லாத ஆனந்தப்பார்வை. ஆனால், இப்போது, அந்த நினைவு உணர்ச்சி பெற்ற 'வருத்த -சந்தோஷம்.’ 
பிறகு நீ பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்டாய். காதில் தோடு அணிந்து கொண்டாய். இடுப்பில் புடவை. ஆனால், உன் நீண்ட முகம், முன்போல் தான்; முகவாய்க்கட்டை பழையபடியே கழுத்தடியில் இடிக்க, என்னோடு பேசாது நாணிக் கோணிப் போய்க் கொண்டிருந்தாய்.
கடைசியாக, மேல் நோக்கிய உன் முகத்தின் வசீகரத்தை, திறந்த உன் கண்களைப் பார்க்க முடியவில்லை. நீ தூங்குவது போல் இருந்தாய்... ஆயினும் சில சமயம் நீ அப்படியே இறந்து விட்டாயோ எனறு தோன்றுகிறது... நீ இறக்க முடியாது. இறந்தாலும் போயேன்... ஆனால் இப்படி முடியாது - பத்மா - இப்படி உன் பிடிப்பை விட்டுவிட முடியுமா..? நீ இறக்க வில்லை எனறு சில சமயம் எனக்குத் தோன்றுகிறது - பத்மர - நீ இறந்தாயா...? ஏன் இறந்தாய்? - இல்லை - இல்லை 'யார்’ உன் பிடிப்பை இவ்வுலகில் விட்டு, உன்னை இறக்க வைக்க முடியும்? நீ ஒரு போதும் இறக்க முடியரது... 
நம்மூரில் உங்காத்துக்கு மேல் வீட்டில் கூனப்பாட்டி இருந்தாளே தெரியுமா? அவள் செத்துப் போகும்போது நீ சிறு பெண். கொஞ்ச நாள் கழித்து, விளையாட அவாத்து அம்பியைக் கூட்டி வரச் சென்றோம். உனக்கு ஞாபகம் இருக்காது. 'கூனப் பாட்டி எங்கே என்று கேட்டேன், 'காணும்' என்றய். 'பத்மா கூனப் பாட்டி செத்துப் போய் விட்டாள் என்றேன். நீ 'அப்படின்னா! என்றாய். திரும்பப் பார்க்க முடியாது; வரமாட்டாள்' என்று உனக்கு தெரியச் சொன்னேன். குழந்தை நீ. என்ன சொன்னாய் தெரியுமா?
"பொய் சொல்லுகிறாய். பாட்டியைக் காணோம். ஆனால் வருவாள். அதோ பார் - அவள் தடிக்கம்பு இருக்கிறதே. அதை எடுக்க வர மாட்டாளா? எப்போதாவது வருவாள்” என்றாய். ஆமாம் நீ சொல்லியதைதான் இப்போது உண்மையென உணருகிறே.." பத்மா, நாளைக்குச் சொல்லுகிறேன்.

(இரண்டாவது கடிதம்)

பிரியமுள்ள பத்மா,
என் மனது சரியில்லை; சரியில்லை என்றால் காலத்தை வீணில் கழிக்கிறேன் என்பது போலும். ஆனால் ஒன்று சரி. நடந்த காரியத்தின் மதிப்பும், காலத்தின் விசேஷமும், ஒன்றுக்கொன்று பொருந்திக் கலவாமல், தாரதம்மியப்பட்டு, தனியாகத் தோன்றுகிறதே - அதுதான் சரி- தனி தோற்றமும், மதிப்பும், விசேஷமும் ஒன்றுக்கும் கிடையாது. உணர முடியாது. காலம் கழித்தது வீண் என்ற பாவனைக்குக் காரணம் ஆராயும்போது பார்த்தாயா? அர்த்தமற்றவைகளாகத் தானே - கொள்ள முடிகிறது.
உன்னை என் மனதில் அடிப்படையாகக் கொள்வதினாலேதான் என் காலத்தை வீணாக்கினேன் என்ற தோற்றம் போலும். மேலே கொஞ்சம் போகும்போது, வாழ்க்கைப் பயன் உன்னை அனடவதினால் என்று நிச்சயமாக எண்ண முடியவில்லை. 'சீ சீ, ஆதியில் சொல்ல முடியாது எண்ணி இருக்கலாம்; இப்போது முடிந்தது. எண்ணுவது பைத்தியக்காரத்தனம். உனக்குக் கலியாணம் ஆன பிறகு இவ்வெண்ணம் கொள்வது மனதில் விரோத உணர்ச்சியையே வளர்ப்பதாகும். விரோத உணர்ச்சி உண்டாவது..?
காரணமற்ற, கண்ணற்ற காதல்? கடமை -? அப்படி என்றால் என்ன யோசிக்க முடியும; சொல்ல முடியும் ; ஆ, அவைகளை உணரும் போது - சிந்தனைகளை உணர்ச்சி கொள்விக்கும் போது, மூளையையும் மனதையும் அறவே களையும்போது நாம் யார் - எவ்வகைக் கேவலப்பிராணி !
இவைகள் எல்லாமெ அர்த்தமற்ற பேச்சுக்கள்; வளைந்த வானம் எதிரொலிக்காத சப்தங்கள். அதற்கும் மேலே போனால் அர்த்தமற்ற வார்த்தைகள், மிகுந்த ஜீவ உணர்ச்சிகொண்டு, அறிவைக் களைந்து ஞான விரோதம் கொள்ளுகிறது; இவ்வகை வித்தியாசங்களை எங்கு புகுத்துவது? உயிர் இருந்தால் உயிர் கொண்ட மிருகங்கள் - உயர்வகை சிருஷ்டி ஆனந்தம் - ? 
இதுவும் பிசகு போலும், நான் சொல்லுகிறேன் ; நான் ஞான முக்தியை அனடந்தபோது, - நான் சொல்லுகிறேன் ...
உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. உனக்கு அவரை நன்றாகத் தெரியும் ஆனால் அவருக்கு உன்னைத் தெரியாதோ. நேற்று அவர் ஒரு தெரு வழியாக நடந்து போகக் கண்டேன்'. வீதி வரிசை கூடுவதால் அவரைத்' திரும்ப வைக்கவில்லை. நான்தான் அவரை முன் சென்று கடந்து திரும்பிப் பார்த்தேன். 'பத்மா சௌக்கியம்தானே' எனறு அவரைக் கேட்டேன். ஏன் என்னை அவ்வளவு வெறிக்கப் பார்த்தார். பேசாது வருத்தத்துடன் சென்றார். அவர் மனது சரியில்லை. 
நான் கேட்டதும் சரியில்லை என்று தோன்றியது. நான் நினனப்பதே சரியில்லையே. நீயே எனக்குத் தோன்றுவது சரியில்லை என்பாயே ... 
ஏன் நான் சரியாக இருக்க வேண்டும். சரியாக ...?
உனக்குச் சிலசில சமயம் பைத்தியம் உண்டாவது உனக்குத் தெரியுமர? எனக்குத் தெரியும். நீ என்னைப் பற்றித் திடீர் திடீடுரென்று மிகுந்த ஆச்சரியகரமாக, உண்மை தோன்றும்படி வார்த்தைகள் சொல்லும் போது, ஏன், நீ பைத்தியம்தானே ?
எனக்குப் பதிலே தெரிவிக்காதே. செய்தால் மிகுந்த சரி. நீயும் என்னை பைத்தியமென்று எண்ணலாம். உன் மூளைக்குத்தான் எல்லாம் தோன்றுமே.
பத்மா - பத்மா - நீ ஏன் என்னிடம் இப்படி இருக்கிறாய் ...? ஏன் ..? என்னை மிகுந்து தெரிந்து கொண்டதினாலா? பத்மா பைத்தியமே - ஏன் நீ ...? 
இன்று எனக்குத் தலைக்குள் மூளை சுற்றுகிறது. அது தனி உயிர் பெற்றதுபோல் களிக் கூத்தாடுகிறது. ஆனல் என் மனமோ மிகுந்ததுக்கமுற்றிருக்கிறது.

(இடங்களில் புரியாது கிறுக்கியும் கண்ணீரால் கறைபட்டும் இருந்தன. மற்றும் இரண்டொரு லிகிதங்கள் பாதி பாதி எழுதப்பட்டு அதிகக் கோர்வை இல்லாது இருந்தன. ஆனால் மிகுந்த ஜீவ உணரச்சி உள்ளதாயும், பளிச்சென்று மின்வெட்டுப்போன்று இழுத்தும், கடுமையாக இடித்து மடிவது போன்றுந்தான்.) ...

நான் ஏழுநாட்கள் லீவு எழுதிப்போட்டுவிட்டு மறுநாள் அவனூருக்குச் சென்று, அங்கு சில நாட்கள் தங்கி, அவனைப்பற்றி நன்கு விசாரித்து அறிந்தகொண்டு வந்தேன். எங்கிருந்தோ வந்தான் , இறந்தான், இறந்தான்... இவனைப்பற்றி நினைக்கும் பொழுது எல்லாம் இப்படித்தான் தோன்றுகிறது. அவன் வாழ்க்கையே புதிர். அவன் வந்ததும் 'போனதும்' ஒரு புதிர் - முன்னிகழ்ச்சி தெரிந்த பின்பும் அவன் ஒரு புதிர்தான். அவ்வூரை விட்டுத் திரும்பும்போது அதுதான் என் மன நிலை. நாளைக்கு நான் பழையபடி என் ஆபீஸ் செல்லவேண்டும். லீவு முடிவடைந்துவிடும். அவனைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ள, அவன் அவ்வூரை விட்டு வந்த வரலாற்றை மட்டும் சொல்லுகிறேன். அதுவே, போதுமானது... 'பத்மா' என்றதும் கண்களை மூடிக் கொண்டு வியாதியால்' படுத்திருந்தவள் , கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள்.

'அதிகமாகப் பேசாதே. இரண்டு நாள் கழித்தால் பயமில்லை என்று டாக்டர் சொன்னார் என்றார் ’ அவள் தகப்பனார் சேஷய்யர்.

‘இவள் படும்பாட்டைக் காண முடியவில்லையே. ஈசுவரன் ஏன் என்னை இப்படிச் சோதிக்கவேண்டும்.’ என்று கண்களில் நீர் ததும்ப அவள் தாயார்' லக்ஷ்மி அம்மாள் சொன்னது மிக வருத்தமாக இருந்தது. அந்நேர மட்டும் சங்கரனை இமை கொட்டாமல் பார்த்திருந்த பத்மா, சிறிது கண்களை மூடிக்கொண்டாள். பிழியப்பட்டு இரு சொட்டுக் கண்னீர் கன்னத்தில் பாதி ஓடி, காய்ந்து மறைந்தது.

'எல்லாம் சரியாகிவிடும், நாம் செய்வது என்ன இருக்கிறது. எல்லாம் நன்மைக்கே முடியும்’ என்றான் சங்கரன். தான் நின்றுகொண்டிருப்பது. கீழே அவள் படுத்திருப்பது, சுற்றி அவர்கள் நின்றிருப்பது, யாவும் மாயை, சுற்றிச் சூழ்ந்த ஒரு விளங்காத பொருள் என்றே அவன் நினைத்தான்.

'சங்கரா’ என்ற சப்தம் காதில் விழ, லக்ஷ்மி அம்மாளை நோக்கி நின்ற அவன் குனிந்து அவளைப் பார்த்தான். கெஞ்சுதலைப் போன்ற அந்த ஈனஸ்வரம் காதில் விழுந்த போது, யாதிலும் நம்பிக்கையற்று கனடசியாக சிறிது இவனிடம் ஊசலாடிக்கொண்டிருந்த ஓர் உணர்ச்சியைச் சிறிது எழுப்பியது. இவ்வகை உணர்ச்சி அவள் மூலமாகப் பெற்றது அதுவே முதல் தரம். உலகம் என்றால் அவள் ஓருத்தியே என்று பலமுறை அவள் எண்ணியிருக்கிறான்.

ஆள் ஒருவன் விரைத்தெளி விஷயமாகப் பேச வெளிவாசலில் வந்து கூப்பிட, சேஷய்யர் வெளியே சென்றார். பத்மாவின் தாயாரும் சமையலைக் கவனிக்க உள்ளே சென்றாள் - முன் நடைத் தாழ்வாரத்த்தில் கிழப்பாட்டி ஏதோ முணுமுணுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்

"சங்கரா - இறப்பதை அக்கணத்திற்கு முன் உணர்வது உண்னமயாயின், என் வாழ்நாட்க்ள் அநேகமாக முடிவடைந்து விட்டன எனறு படுகிறது எனக்கு. உன்னிடம் எனக்கிருந்த அன்பு, சில வருஷங்களாக அநேகவித மாறுதல்களால் சலிக்க ஆரம்பித்தது. இரண்டொரு மாதமாக, என் வாழ்க்கைக்கு நீ இன்றியமையாதவனாக இருக்கிறாய் என்ற நோக்கத்தைக் கொண்டேன். அறிந்தவற்றை நன்கு நினைக்க முடியவில்லை ; சொல்வதற்குமில்லை. அறிந்தவற்றில் ஆனந்தம் கொள்வதற்குமில்லை ஆனால் இப்போது உன்னிடம் சொல்லுவதில் ஒன்றும் பிசகில்லை”. என்று சொல்லிக்கொண்டே கண்களை மூடிக்கொண்டாள்.

சிறிது சென்று "நான் இறப்பதில் எனக்குக் கொஞ்சமும் வருத்தமில்லை. இளமையில் இறப்பதால், வாழ்க்கையில் முதிர்ந்து பாழ்படாது, என் ஞரபகம்

இளமையாகவே இருக்கும். ஆனால் என் பிறப்பு, வாழ்வு, இறப்பு முதலியவைகளினால் பலருக்குப் பலவிதப் பிடிப்பிற்குக் காரணமானது பற்றி, அவர்கள் வருத்தங்கொள்வதை எப்படித் தடுக்க முடியும்? அதனரல் என் துக்கத்தை எப்படி அகற்ற முடியும் ? ஒருவர் இறக்கும்போது அவர் வாழ்வின் தன்மை அவரோடு மடியுமானால், இறப்பு பிரமாதமாகப் பொருட்படுத்த வேண்டியதொன்றில்லை.”

சங்கரன் தலைகுனிந்தவாறே கேட்டு நின்றான். அவள் ஸ்தூல சரீர இழப்பை அவன் விரும்பவில்லை ... அவளை முன்பு, அவன் ஓருவிதத்தில் இழந்ததையும் அவன் பொருட்படுத்தவில்லை. மனது மாறி நிம்மதியடைந்து விட்டது. ஆனால் அவள் இறப்பினால் எல்லா எண்ணங்களும் ஒருங்குகூடி மனதைப் பிளக்குமென்பதை உணர்ந்தான்.

யோசித்து நின்றிருந்தவன், பத்மா திடீரென்று பாட ஆரம்பித்ததைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனான். உள்ளிருந்த பத்மாவின் தாயார் போட்டது போட்டபடியே ஓடி வந்தாள். வாசலிலிருந்த சேஷப்பய்யர் பாதிப் பேச்சில்

எழுந்து உள்ளே வந்தார். சங்கரன் தலை சுழன்றது ; கண்கள' வெளித் தோற்றங்களைக் கொள்ள மறுத்தன.

“என்ன, என்ன” என்று கேட்டு நின்றார் சேஷப்பய்யர்.

“ஒன்றுமில்லை. சுர வேகம். நீங்கள் போய் டாக்டரை அனழத்து வாருங்கள்” என்றான் சங்கரன்.

அவர் வெளியே போய்விட்டார். லட்சுமி அம்மாள் ஒன்றும் தோன்றாமல், பெண்ணருகில் உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.

"அம்மா நீ உள்ளே போயேன். என் கணவரை அப்பாவிடம் சொல்லி வரச் செய். அம்மா ஒன்றுமில்லை. பயப்படாதே, அழாதே அம்மா. எனக்கு ஒன்றுமில்லை. அவருக்கு என்னை இந்த நிலையில் காணச் சகிக்காது. எனக்கு என்னவோ அவரைப் பார்க்கவேணும்போல் இருக்கிறது. சரி, நீ உள்ளே போ, அழாதே" எனறு சொன்னவள் கடைசி வார்த்தைகளை நோவும் மனது மிக நோக, வெடுக்கென்று சொன்னாள். அவள் தாயார் கண்ணும் கண்ணீருமாக, விம்மிக் கொண்டே உள்ளே சென்றாள்.

பத்மா, நின்றிருந்த சங்கரனை உட்காரச் சொன்னாள். கண்களை மூடிக்கொண்டு விட்டாள்.

அவள் பக்கத்தில் உட்கார்ந்ததும் சங்கரன், 'எனன பத்மா...' எனறான். 'சீ.... சீ நீ யார், பத்மா என்கிறாயே. ஏ சனியனே, என்னை ஏன் பீடித்து இருக்கிறாய், நீ போ’ என்று வேகத்தோடு திமிருவது போல உடம்பை நெளித்து முறித்துக்கொண்டு கண்களைத் திறவாமலே சொன்னாள்.

அவள் வாயினின்று ஜன்னி வேகத்தில் வந்தன வரர்த்தைகள்; மீறி வந்த வேகத்தினாலே, அவ்வார்த்தைகள் அவனை மிகக் குலுக்கி விட்டன. மனது

கலங்கியது; கண்கள் சுழன்றன. அந்த நிலையில் அவள் முகத்தைச் சற்று நோக்கிய போது அவள் மாசற்ற ஆத்மாவை நனகுணர்ந்தான்.

"சங்கரா, நான் என்ன சொன்னேன், சொல்லப் போகிறேன் எனற நிதானம் கிடையாது. வார்த்தைகளால் முடியாதபோது, பேச்சுக்கள் எவ்வளவு பயனற்றது என்பது தெரிகிறதா? ஆனால் அது முற்றிலும் உண்மை அல்ல. இவ்வகையாகப் பேசுவது, ஏன், உன்னை உன் ஜீவிய காலத்தில் வேகமாகத் தாக்காதா ?” என்றள் பத்மா.

'பத்மா சிறிது பேசாமல் இரு. களைப்பு ஏற்படும்' எனறு அவனால் நிதானமாகச் சொல்ல முடியவில்லை. கட்டுக் கடங்காமலே கண்ணீர் உதிர்ந்தன.

அவள் உணர்ந்தவள் போன்று “தான் செய்வதற்கு தானே காரணம் என்ற இடம் கொடுக்கும் மூளை கெட்ட பின், அவர் செய்வதற்கு அவர் பாத்தியமா... நீ இப்போது வருத்தமடைவதற்கு நன் காரணமில்லை. பிறகு, நீ வருத்தம கொள்ளாதே... சங்கரா! ஏன் நீ அழவேண்டும்? எனக்காக ஏன் அழவேண்டும்? எனக்காக ஏன்? எனக்குப் பினனால், வேண்டாம்... வேண்டாம் சங்கரா, வருத்தத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். நான் போகிறேன் திரை அருகில் இருந்தாலும், அப்புறம் என்ன என்று அறியக் கூடவில்லை; நீக்கியும் கண்டு சொல்ல முடியவில்லை. நீ பார்க்கும்போதே மறு பக்கம் போவதை நீ அறிந்து கொள்ள வேண்டின் சிறிது நேரத்தில் தெரிந்துகொள். வருந்தினாலும், கண்ணீர் விட்டாலும் இனி என்னைப் பார்க்க முடியாதவனாகப் போகிறாய். நான் போகும் போது - ” களைப்பு மேலிட்டதினால் சிறிது பேசாது நிறுத்தினாள்.

“சிறிது குனிந்து கேள். பேச முடியவில்லை. கிட்டே - கிட்டே ஆம் சற்று முன் விரும்பிய முகத்தின் கிட்டே. முன்பு நீ, முதுகின் கிட்டே, வெகு தூரத்தில் ஆனால் மிகக் கிட்டே. ஒரு - ஒரு -.” அவள் பேச்சுக்கள் நின்றன. அவள் கண்களின் ஜொலிப்பு கடுமையாயும், விகாரம் கலந்ததாயும் தோன்றியது. கண்களும் மூடின. சங்கரன் அறியாதே உதிர்த்த கண்ணீர், அவள் முகத்தில் சொட்டின. ஏதோ அவள் முகத்தருகில் சொல்ல நினைத்தவன் போன்று தன் முகத்தை வெகு சமீபமாகக் கொணர்ந்தான். சிறிது தயங்கினான். பத்மா, கண்களைப் பாதி திறந்தவள் மறுபடியும் இறுக மூடிக்கொண்டாள். ஒன்றும் தோன்றாமல் தலை நிமிர்ந்தான் சங்கரன். அவன் தன் தொண்டயில் அனடத்த விம்மலை வெளி வராமல் விழுங்கினான்.

'போதும் - போதும்’ என்று ஆரம்பித்தாள் பத்மா. 'போதும்' என்றே முடிவடைந்துவிட்டது அவள் பேச்சு. அவள் முகத்தில் சிறிது ஆனந்தக் குறி- அது மறைந்தது பனழயபடி, சிறிது சென்று அவள் அழுதாள். வாய் விட்டில்லை; தன் ஆத்மா உருகி கண்களின் வழியாக ஓடுவதை தான் விழிக்காது தெரிவித்தாள். திரும்பவும் பழைய படி; முகத்தில் ஒரு சிரிப்பு. தூங்கும் குழந்தை ஆனந்தக் கனாக் கண்டு புன் முறுவல் பூப்பது போன்று... ஏதோ ஒரு வேகம். கடுமையில் மிகத் தணிவு பெற்றது.

கண்கள் மூடின. வாய் எதையோ முணுமுணுத்தது, ஒரு தரம் மார்பு மூச்செரிந்து அசைவற்று நின்றது.

சங்கரன் எழுந்து நின்றான். குனிந்து அவள் காது கேட்கும் வண்ணம், மெதுவாக, 'பத்மா நன்றாகத் தூங்கு, களைப்படைந்தாய். பிறகு பார்க்கிறேன் நன்றாகத் தூங்கு' என்று ஆத்திரத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு, நன்கு வாய் திறக்காமலே சொன்னான். அவன் உடம்பெல்லாம் குலுங்கியது. ஏதோ மனதில் குடிகொள்ள யத்தனித்ததைக் கண்டு நடுங்கினான். நிச்சயத்தைக் கண்டு உணரத் தயங்கிப் பயந்தான். குளறிக்கொண்டு, ஆத்திரமாகக் கையை உதறிக்கொண்டு 'நான் மறுக்கிறேன். நான் மறுக்கிறேன்' என்று முணுமுணுத்துக்கொண்டே வெளியேறினான்.

அவன் மனதில் துக்கம் இல்லை. கண்களும் வரண்டு துக்கம் கடந்த பார்வையைக் கொடுத்தது. வீட்டு வாயிலில் சேஷப்பய்யரையும், டாக்டரையும், கண்டான். 'பத்மா.?' என்றதற்கு 'நன்றாகத் தூங்குகிறாள்’ என்று சொல்லி விட்டு நடந்தான். தன் வீட்டை அடைந்து உள் சென்றவன், மறுநிமிடம் வெளிவந்தான்.

அவன் அவ்வூர் சாலையை அனடந்தபோது, ஊரிலிருந்து அழுகைக் குரல் கேட்டது. ஒன்றும் புரியாது, தனியே தன் வழி நடந்தான்.

பளீரென்ற பகலும் மனதில் இருண்டது, தனிவழிப்போக்கன் போன்று, வாழ்க்கைப் பாதையில் அலுத்துச் சலித்தும், பின்னும் வழிகடத்தவேண்டி, நடந்தான். காலடியும், ஒளி கொள்ளாது, இலேசு படாது, புழுதிப் புகையைக் கண்டது. கேலி செய்து நகைப்பது போன்று மெல்லென, காற்று வீச ஆரம்பித்தது... காலடியினினறு கிளம்பிய ஒழுங்கான இடைவிடா சப்தம் 'பாழ்பட்டு' என்று ஒலித்தது. இலையற்ற கிளைகளில் சமைந்து நின்ற உருவமற்ற காற்று, 'பாழ்பட்டு' எனறு மனமுடைந்து ஒலித்து ஒடி, வீசும் காற்றுடன் கலந்தது. எட்டி நின்றபாழ்மண்டபம் மெளனமாகக் கேட்க அதைத் தாண்டிச்' சென்றது...

எனனுடைய காரியமும் முடிந்துவிட்டது. எனனால் கூடுமானவரையில் சங்கரனைப் பற்றிய வாழ்க்கையை சொல்லிவிட்டேன். இந்நிகழ்ச்சி நான் அறிந்தது, என் மனதை எவ்வகையில் மாற்றிவிட்டது என்று என்னால் சொல்ல இயலவில்லை.

இன்றோடு என் ஒய்வு நாள் முடிகிறது. நாளை முதல் பழையபடி ஆபீஸ் அலுவல்கள்தான். பேனா பிடித்து 'எழுது- எழுது’ என்று எழுத வேண்டும்

என் தலை எழுத்தையா மாற்றி எழுதப்போகிறேன். சீ சீ ! இல்லை. தலை எழுத்துதான் ‘எழுது எழுது’ என்று எழுதுகிறேன், பந்தம் சுற்றும் காற்றாடியின் கீழ் மண்டை வறள, ‘ ‘எழுது- எழுது- தான் ’ .......- தினமணி வருஷமலர் 1937
தட்டச்சு - ரா ரா கு


மனக்கோட்டை - மௌனி

வலையேற்றியது - ரா ரா கு - 19-05-2014

பத்து வருஷங்களுக்கு முன்பு இவன் பட்டிணத்தில் உயர் படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது , இவன் பெற்றோர்கள் இவனுக்கு கலியாணப் பிரயத்தனங்கள் செய்ததுண்டு. ஒவ்வொரு சமயமும் காரணம் காண முடியாத வகையிலே, எதேச்சை குறுக்கீட்டினால் என அவைகள் எல்லாம் தடைபட்டுவிட்டன. அவர்களும் ஒருவர் பின் ஒருவராக மறைந்தனர். தனக்குக் கிடைத்த உயர் உத்தியோகம் ஒன்றையும் உதறிவிட்டு, தன் கிராமத்தில் சொத்து சுதந்திரத்திடையே காலம் கழித்துக்கொண்டிருந்தான். ஒரு பிள்ளை என்பதினாலும், நெருங்கிய உறவினர்கள் என்பதின்றியும் தனியே இருந்து ஒரு நேர்மையான நட்புறவில் ஏனைய கிராமத்தினரிடை மதிப்புகொண்டு வாழ்ந்து வந்தான்

சமீப சில வருஷங்களாக, தன் வாழ்க்கை,குறிப்பற்று,போக்கு புரியாமல், பாதையில் நழுவிச் செல்லுவதான தோற்றம் கொள்ளலானான். எதேச்சையென கொள்ளுவதை மனது மறுக்கிறது. தன்னையும், தன் சூழ்நிலைகளையும் , சம்பவங்களையும். ஒருமை கொள்ள வேண்டியிருக்கிறது. சூழ்நிலைக்களன்களில் ஒன்றி, அனுபவம் கொள்ள மனநிலை விரிவும் மாற்றமும் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. உலக வாழ்க்கையே ஒரு பெரிய சூழ்நிலைத் தோற்றமெனக் கொள்ளவேண்டியிருப்பதில், தன் அறிமுகம் சரியென ஒரு போதும் தெரிய முடிகிறதில்லை என்றும் தெளிந்து கொள்ள, வெறித்து கனவென வாழ்க்கையைக் கண்டு நிற்பதான ஒரு எண்ணமும் இவனுக்கு அடிக்கடி எழுவதுண்டு. மனது வேதனை கொள்ளவதாகிறது, எல்லாம் ஈசுவர சங்கல்பம் என, தன்னை விடுத்துக் கொள்ளும் நம்பிக்கையும் இல்லை. இவன் தோற்றம், நடையுடை பாவனைகள், பேச்சுப் பழக்கங்கள், எல்லாம் சேர்ந்து. ஒரு விநோத விரோத பாவத்தில் கலந்து. இவனைத் தெரியாதவர்களுக்கும்கூட இவனைப் பார்க்குங்கால் , தெரிந்து கொள்ள அவா கொடுப்பதாக இருக்கும். இவ்வகையில், இவன் சிநேகித சித்திபெற்றவன் போலும்.

அடிக்கடி இவன் ஊரைவிட்டு, மாதக் கணக்கில் வெளியூர் போய் வருவது உண்டு. பெரிய பட்டிணங்கள், சிறிய நகரங்கள், க்ஷேத்திரங்கள் மற்றும் பழங்கால சரித்திர சின்னங்கள் என ஒரு வரையறையிலும் அகப்படாது, சித்தன் போக்கெனத் தோன்றும், இவன் பிரயாணங்கள். இதுவரையில் இவ்வகையாக நான்கைந்து தரத்திற்கு மேலாகவே சுற்றியிருக்கிறான். இப்போது, இவன் ஊரை விட்டகன்று நாலைந்து மாதங்களுக்கு மேலாகி விட்டது .திரும்பி பட்டிண மடைந்தவன், ஊரையடையும் ஆவலின்றியே, அங்கு சில நாட்கள் தங்கிப் போகலாமென நினைத்து ஒரு ஹோட்டல் அறையில் தங்கினான்.

தெரிந்த பட்டிணத்தில் , ஊரைச் சுற்றும் அலுவல்கள் இல்லை. எப்போதாவது சிறிது நேரம் , சிறிது தூரம் வெளியே சென்று உலாவி வருவதிலும், ஆங்காங்கே தென்படும் , தன் பழைய சிநேகிதர்களைக் கண்டு சிறிது பேசித் திரும்புவதிலும், பாக்கி அதிக நேரத்தை தன் அறையில் கழிப்பதுமாக இரண்டொரு நாட்கள் சென்றன. ஒரு நாள் மாலை ,ஒரு வீதியோரமாகச் சென்றுகொண்டிருக்கும்போது, பின்னின்று, சிலர் பேசிக்கொண்டு தன்னைக் கடந்து முன் சென்றபோது, அவர்கள் திரும்பி இவனைப்பார்த்தனர். இவனைத் தெரிந்துகொண்டு ஒருவன் ‘என்னப்பா சௌக்கியமா ? - எப்போது’ என்றான். அவர்கள் இவனோடு படித்த நண்பர்கள். மேலும் அவர்கள் தன்னைக் கடக்கும்போது பேசிக்கொண்டு போனதும் தன்னைப் பற்றித்தான் எனவும் இவன் நினைத்தான். ‘-அவன் தானே - இல்லை அவனைப்போல - இல்லை அவனே தான்’ என்பவைகள். ஒவ்வொருவருடைய பேச்சாகவும், ஒருவனுடைய பேச்சாகவும்,மேலும், தானே தன்னைப் பற்றிய சந்தேகத்தில் பேசிக் கொண்டதென, எவ்வகையிலும், அர்த்தம் கொடுக்கும் வகையில் பட்டது, இவனுக்கு வியப்பை கொடுத்தது. இச்சிந்தனைப் போக்குடன் அவர்களோடு சிரித்துப் பேசிக் கொண்டு போனான்.

“உன் சிரிப்புகூட மாறி விட்டது” என்றவன் இவனைப்பற்றி ஒன்றும் கேட்காமலே, தங்களைப்பற்றியும், ஏனைய நண்பர்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். மற்றொருவன், ‘நேற்றுகூட நாங்கள் சங்கரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். உன் நினைவுகூட வந்து , உன்னைப்பற்றியும் பேசினோம்’ உன்னைப்பார்த்தபோது, நீயோவெனக் கூட சந்தேகித்தோம்.சங்கர் இறந்தது உனக்கு தெரியுமோ? -’ என்றான். சந்தேகத்திலும் தான் அவர்களுக்கு உருவாவது இவனுக்கு விநோதமாகப் பட்டது. அவர்களுக்குதான் புரியுமளவுக்குக்கூட, தனக்கு தன்னைப் புரியவில்லை என்ற எண்ணத்துடன், சங்கர் இறந்தது முன்பே தெரியுமா என்பதின்றியே, ‘ஆம் சங்கர் இறந்து விட்டான்-' என தன் மனதிற்குள்ளே இரைந்து சொல்லுவது போன்று சொன்னவன் தன் சிந்தனைப் போக்கிலே போய்க் கொண்டிருந்தான். இவ்விதம் அவர்களுடன் பேசிக்கொண்டு போனால் தன்னை பைத்தியக்காரத்தனமாக தவறாகப் புரிந்து கொள்ளுவார்கள் என சீக்கிரம் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு, தன் விடுதியை அடைந்தான்.

‘ஆம் சங்கர் இறந்து விட்டான்.' இவன் மனது ஒரு தரம் சொல்லிக்கொண்டது. அநேக மாணவர் மத்தியில் இவன் ஒரு மதிப்பில் வீற்றிருக்கும்போது, அவனை அங்கு பார்க்கமுடியாது. கொஞ்சம் எட்டியோ, அல்லது பார்வையில்கூட படமுடியாத வகையில், அவன் அங்கிருப்பது மட்டும் நிச்சயம் . அவசியமானால் பார்வையில் கொள்ளக்கூடிய விதத்தில், அவன் எங்கேயாவது பகற்கனவு கண்டு கொண்டிருப்பான் என இவன் எண்ணுவான். தான், அவன் எண்ணத்தில் எப்போதும் இருக்காமல் இருக்க முடியாது என்பதும் இவன் எண்ணம் போலும். தனியே, இருவரும் சேர்ந்து இருக்கும்போதுகூட, அதிகமாகப் பேசுவது இல்லை. பரந்த வெளியில் சித்திரம் காண இரண்டொரு கரிக்கிறுக்கல் கோடுளெனத் தோன்றும், அவன் வார்த்தைகள். இவன் மனோ விசாலத்தைப் பொருத்து , அதற்கு உருவம் கொடுக்க தன்னைத் தான் பார்பதற்கான தோற்றம் தான், இவன் கொள்ளவான். படிப்பிலும் மற்றும் எவ்விதத்திலும் இவனுக்கு சரிநிகரானவன். எவ்வளவு இனிமையாக துன்புறுத்தும் நினைவுகள் பாலிய கால பழைய நினைவுகள்!

அவனோ சில வருஷங்கள் படித்துவிட்டு, வேறுவிதப்படிப்பிற்கு வடக்கே சென்று விட்டான். போவதற்கு முன்பு இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டதும் ஞாபகம் வந்தது. அவனுடன் வெகுநாட்கள் கடிதத் தொடர்பு கொண்டிருந்தான். கடைசியாக , அவன் எழுதிய லெட்டருக்கும் இவன் பதில் எழுதி இருக்கிறான். அவனுடைய கடைசிக் கடிதம் வெகு தெளிவாக கண்முன் நின்றது... இவன் மனது மிக வருத்தமடைந்தது . அவர்கள் சொல்லுவதுபோல அவனோடு - அவன் இறப்போடு , தன் இருப்புகூட சந்தேகம் கொள்ளவதும் சரியெனத் தோன்றியது. அவன் இறுதிக் கடிதம் .......'உன்னை , என் பெற்றோர்கள் நன்கறிந்தவர்கள். ஏனைய குடும்பத்தினரும்கூட எப்படி எனத்தான் தெரியவில்லை. ஒரு தரம் , நீ என் வீட்டிற்கு வந்து சிறிது நேரம் பேசிப் போனாய். அப்போது அவர்கள் உன்னைப் பார்த்து இருக்கலாம். தெரிந்து கொண்டிருக்கலாம். அச்சிறு சந்திப்பு போதுமா, என்பதில் எனக்கு சந்தேகம். அடிக்கடி உன்னைப்பற்றி நான் அவர்களிடம் பேசியிருக்கிறேன். என் கற்பனையில் பிறந்து , அவர்கள் மனதில் நீ வாழ்வது , எவ்விதமோ தெரியவில்லை. எல்லோருமே, உன்னையும் பற்றி பேசுமளவிற்கு , நீ எங்கள் குடும்பத்தினரிடை ஒருவருரினென்ற தோற்றம் நாங்கள் கொண்டிருக்கிறோம். அடுத்த தடவை நான் ஊருக்குப் போகும்போது உன்னையும் அழைத்து வருவதாகச் சொல்லி இருக்கிறேன்...அப்போது, நீ வந்தபோது என் கடைசித் தங்கை சுமி, உன்னை கதவிடுக்கிலிருந்து பார்த்தது, உனக்குத் தெரிந்து இருக்க முடியாது. அவள் எப்போதாவது உன்னை குறிக்கும்போது, எவ்வளவு நன்றாக, அழகாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் தெரியுமா ? நான் போகும்போது, உனக்குக் காட்டுகிறேன். நீ அவளுடன் பேசி நான் பார்க்க வேண்டும்... என்னையின்றி நீ போக நேர்ந்தாலும், போய் வா . உன்னைப் பார்த்து அவர்கள் தெரிந்துகொள்ள முடியவிட்டாலும் ,நீ சொன்னால் நிச்சயமாக தெரிந்து கொண்டு விடுவார்கள் ..'

அன்றிரவு அவன் தூக்கம் காண, வெகு நேரமாயிற்று.

மறுநாள் காலையில் எழுந்தவுடன், அவன் இல்லாதே, அவர்கள் வீட்டிற்குப் போய் வரலாமெனக்கூட, நினைத்தான். அவன் எழுதியபோது, தனியாகப் போய் வருவதற்கும் , இப்போது அவன் இல்லாமல் போவதற்கும், ஏராள வித்தியாசம் இருக்கிறதென்பதை , அவன் அறியாமலில்லை. அவர்கள் இருந்த வீடும், இப்போது இவன் ஹோட்டலுக்குச் சமீபமாகத் தான் இருந்தது .இப்போது அவர்கள் அங்கு இருக்காமலும் இருக்கலாம் என்றும் தோன்றியது .ஒருக்கால் அவர்கள் இருந்தும், அங்குபோய், தனக்கு அவர்களைத் தெரிந்து, அவர்களுக்கு தன்னை அவர்களுக்குத் தன்னைத் தெரியாவிட்டால், எவ்வகையில் தன்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தமுடியும் என்பதும் சேர்ந்து, அங்குபோகும் எண்ணத்தைக் கைவிட்டான். பட்டிணத்தில், மேலும், தங்கவும் பிடிக்கவில்லை. ஊர்போகும் ஆவலும் இல்லை.

பட்டிணத்திலிருந்து தன்னூர் செல்லும், ரயில் பாதை நடுவில், ஒரு சிற்றூர் இருந்தது. அதனருகில், சரித்திரப் பிரசித்திபெற்ற ஒரு பாழடைந்த மலைக் கோட்டை இருப்பது இவனுக்குத் தெரியும். இதுவரையில், இவன் அதைப் பார்த்தது கிடையாது. இந்த சந்தர்ப்பத்தில் அதன் நினைவு கொண்டு அதைப் பார்க்கலாமென, பட்டிணத்தைவிட்டு காலை வண்டியிலே கிளம்பிவிட்டான்.

இருட்டு நன்றாகக் கண்டுவிட்டது . ரயில் அந்த ஸ்டேஷனை அடையும்போது, மேலும் நாழிகை ஆகிவிட்டது. குறிப்பிட்ட நேரத்தில் வண்டி வந்திருந்தால், மாலை நேரத்திலேயே அடைந்து இருக்க முடியும். அன்று ரயில் , மூன்று மணி நேரம் லேட். அந்த ஸ்டேஷனில் இவனைத் தவிர வேறு யாரும் இறங்கியதாகத் தெரியவில்லை, ஸ்டேஷனே இரண்டொரு சிப்பந்திகளைத் தவிரவும், வெளியே பிரயாணிகளுக்காக் காத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் , நான்கைந்து வண்டிகளையும் தவிர , ஜனசஞ்சாரமற்ற தோற்றம் தான் கொடுத்தது . அவன் பார்க்கப் போகுமிடம் ,இப்போது இருட்டிலும்கூட தெரியும் வகைக்கு , ஸ்டேஷனுக்கு சமீபத்தில்தான் இருந்தது. ஆனால், அவன் அன்றிரவு தங்க, மூன்று மைல்களுக்கப்பால் உள்ள, ஒரு சிறு நகரத்தை அடைய வேண்டிருந்தது . அக்குன்றுக் கோட்டை அடியில் ஒரு பெரிய பட்டிணம் ஒரு காலத்தில் இருந்தது . அது காலத்தில் நாகரீகத்திலும், நகர்ந்தும் , தேய்ந்தும், இப்போது இருக்கிட மடைந்திருக்கலாம். அல்லது மறைந்தே, சிறு குடிசைகளாக, மலையடிவாரத்தில், சிதறித் தோற்றம் கொண்டிருக்கலாம். மேற்கு அடி வானத்தில் மறைய விருக்கும் பிறை சந்திரன், அறையிருட்டைத்தான், அழகுடன் உலகிற்கு அளித்துக் கொண்டிருந்தது. ஆகாயத்தில் தெரிந்த எண்ணிலா நக்ஷத்திரங்கள், மொத்தமாக,சிறு ஒளிகொடுக்க இருந்தன.. ஸ்டேஷனில் இறங்கியவன், சிறிது நேரம் அப்பிராந்தியத்தைச் சுற்றிப் பார்வைகொண்டு, நின்றிருந்தான். மங்கிய ஒளித் திரையில், அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரியும் அநேக மலைக்குன்றுகள் பல ரூபத்தில் பதிந்திருக்கக் கண்டான். தேவாசுர யுத்தத்தில், ஒருவருக்கொருவர், மலைகளைப் பிடுங்கி அடித்துக் கொண்டதில் , சிதறித் தெறித்தனவென, ஆங்காங்கே தோன்றித் தெரிந்தனவே போலும் ,உயிரற்ற அவைகளுக்கு, எல்லையிலா கற்பனையில் ஜீவன் கொடுக்க, இச்சிறு ஒளிபோதும் - மேலே வானத்தில் எண்ணிலா நக்ஷத்திரங்கள் தெரிவதும் கீழே பூமீயில் கண்ணுக் கெட்டிய வரையில் ஆங்காங்கே தெளிக்கப் பட்டுத் தெரியும், சிறு குடிசைகளின் விளக்கொளியும் போதும் போலும். புதைவு கொண்ட அமைதி, விட்டுவிட்டு விம்முதலில் காணும் மெளனக் குமுறலின், ஓலமென எல்லாவற்றையும் பார்த்து, சிறிது நின்றிருந்தான்.

ஒரு வண்டியைப் பிடித்துக்கொண்டு, இதுவரையில் பார்க்காத, ஊர்ப்பயணத்தை, இருள் வழியே இப்போது இவனுக்குப் போக நேர்ந்தது. இது இவனுக்கு, ஒரு அதிசய அனுபவமாக இருக்கவும் அமைந்தது. ரயில் பிரயாணம் தாமதப்படாது இருந்து இருந்தால் , இருட்டுக் காணும் முன்பே ஊரை அடைந்து இருப்பான்.

இருப்பக்கமும் மரங்களுடர்ந்த இருள் சாலையில் வண்டி போகும்போது, இவனுக்கு, வண்டியில் போவதாகவே தோன்றவில்லை. காலதேச விவரணத்தைக் குறிக்க, ஆங்காங்கே சாலையோரத்தில் தெரியும் சிறுகுடிசைக் கடைகளின் விளக்கொளிதான் . சில கடைகளில் , தாமதமாக, இரவில் வெகுநேரம் சென்று சாமான்கள் வாங்கியது போன்றே நிசப்த்தில் இரண்டொருவர் தெரிந்தனர். விடாது, தொடர்ந்து கேட்கும், வண்டி, வண்டிக்காரன் , சப்தத்தை கவனிப்பில் கொள்ளமுடியவில்லை. குருட்டுத் தனமான , மெளனவெளித் தேடுதலாகப்பட்டது இப்பிரயாணம். நடுவீதியில், அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் நாய்கள், வண்டி இடிக்குமளவு விழித்தெழக் காத்து, தீடீரென ஊளையிட்டோடுவது , அடிக்கடி இவனுக்கு அதிர்ச்சி கொடுத்துக்கொண்டிருந்தது. இந்த தெரியாத ஊர்ப்பயணம், இருட்டில், ஒரு விநோத அனுபவமாகத்தான் இவனுக்கு பட்டது.

மறுநாள் காலையில், கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து, எல்லா காரியங்களையும் முடித்துக்கொண்டு, நடுப்பகல் பொழுதிற்கு முன்பே பார்க்கவேண்டியவைகளை பார்த்துவிட்டு திரும்பிவிடலாமென்று, கையில் ஆகாரம் கொண்டு போகாதே கிளம்பினான்.

காலை ஒளியில், சொட்டச்சொட்டக் குளித்து நின்று கண்ணுக்கொட்டிய தூரம் வரையில், அப்பிராந்தியம் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. அது ஒரு மலைப் பிரதேசமல்ல. ஒரு பெரிய பொட்டல், வெட்டவெளிப் பிரதேசம். ஆங்காங்கே, சின்னதும் பெரியதுமாக, அநேக குன்றுகள் சிதறித் தெரிந்தன. எட்டிய வெளி வரையில், கட்டான் தரையும், சிலசில இடங்களில் பசும்புல் பூமி, மரம் மட்டைகள், சிறு புதர்கள் ஆகியவைகளும், ஒன்றுகூடி, ஒரு பிரமிப்பை கொடுக்கும்வகையில் தெரிந்தது. தனித்தனியாக ஆடுமாடுகளும், இரண்டொரு மனிதர்கள், எட்டிய வெளியில் மந்தையென ஆடுமாடுகள் அசைவுத் தோற்றம்... ஆகியவைகள் அகண்ட வெளியில் கரையாது தோன்றியது. ஒவ்வொரு நேர ஒளியிலும், பருவகால வித்தியாசத்திலும், பார்ப்பவர் மனநிலையோடு கலந்து, வேவ்வேறு வகைக்குக்காண, எண்ணிலாச் சாயைக் கொண்டு தோற்றம் கொடுக்க இருந்தது, அப்பிராந்தியம். ஒரு உயரமான குன்றின்மீது, இவன் பார்க்க இருக்கும், கோட்டை தெரிந்தது. அதன் அடிவாரத்தை அடைந்தபோது, அவ்விடம் கொஞ்சம் செழுமையான பூமி எனத்தோன்ற , மர பட்டைகளும் , புதர்களும் மண்டியிருந்தன. மரத்திலிருந்த பக்ஷிகளின் குரல், தூரத்திலிருந்து கும்பலாகப் பறந்து வரும் பறவைகள் தன்னைத் தடவி ஸ்பரிசம் கொடுக்கும் காற்று இலைகளூடே சலசலப்பு கொள்ளுவது , எல்லாமுமே இவனுக்கு ஒரு பாழ் பட்டுக் கொண்டிருக்கும் தோற்றத்தைத் தான் கொடுத்தன. குன்றின் அடிவாரத்திலிருந்து,

கோட்டை கொத்தளங்கள், மாளிகை மாடங்கள், கோவில் கோபுரங்கள் எல்லாம் தெரிந்தன. மேலே ஏறி, சாவகாசமாக, எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, நடுப்பகல் சரிவு கண்டுவிட்டது. களைப்பில் பசிக் கூடதோன்றவில்லை. சிறிது இளைப்பாறி, பிறகு நடக்கலாம், என ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். எதிரே உற்றுநோக்கிக் கொண்டிருந்தான். கோட்டைக் கொத்தளங்கள், எட்டித் தெரியும் குன்றுகள், எல்லாம் எட்டி நகர்ந்து மறையத் துடித்து, கானல் சலனத்தில் தெரிந்தன. இந்தக்கோட்டையை இது வரையில் பார்க்காதவனானாலும், அதைப்பற்றி அநேக விஷயங்களைக் கேட்டும், படித்தும் தெரிந்துகொண்டிருந்தான்.

மறைந்த கோவில் வெங்கலத் தேரையும்,கோட்டைப் பாதாளச் சுரங்க வழிகளையும் , பராபரிச் செய்திகளென, இவன் கேட்டிருக்கிறான். திரேதாயுகத்தில், அதன் ,நிர்மானம் ,ஸ்தல மகிமைப் புராணம், உண்மைக் கூற்றென சரித்திரம், கல்பனைக்கதைகள், முதலிய என்னவெல்லாமோ அதைப்பற்றி புத்தக ரூபமாகப் படித்தும் தெரிந்து கொண்டவன். இப்போதும் தனக்குத் தெரிந்த தெல்லாவற்றையும் நினைக்கும்போது, அபத்தமென, சிரிப்புகூட தோன்றியது. பக்தியில் கோவிலுக்கு வெங்கலத் தேரை வார்த்துவிட்டு, எதிரிகளை முறியடிக்க, விநோதமான குறுக்குப் பாதைகளை, வெகுயுக்தியுடன் கண்ட ஒரு மேதாவி வீரதீர சக்ரவர்த்தி, தொலைவிலே எதிர்க்க வரும் எதிரிகளை முறியடிக்க , அவர்கள் மத்தியில் திடீரெனப் புகவும், பிறகு தோற்றால் திடீரென மறைந்து கோட்டையை அடையவும், அநேக சுரங்கப் பாதைகளை அமைத்தான். ஒரு தரம் அவ்வகை செய்ய தீர்மானித்து, அநேகரை , எட்டிய வெளியில் விரோதிகளெனக்கண்டு அவர்களிடை புகுந்து வீரதீரபராக்கிரம செயல்கள் புரிந்து ,சுரங்க வழியே கோட்டையை அடையும் ஆவலில் தோற்று , மறைய நினைத்தப் போது எல்லாம் மறந்துவிட்டது . அவர்கள் மத்தியிலே அவர்களாகவே ‘ஜே-ஜே' கோஷமிட்டு கோட்டையை அடைந்தான். அவர்களும் மறந்து, தாங்களென மதித்து , இவனையே அரசனாக்கி , கோட்டையை அடைந்து கைகட்டி கட்டளைக்குக் காத்திருந்தனர். அவர்களோடு வெங்கலத் தேரும் ,சுரங்கப் பாதைகளும் மறந்து மறைந்துவிட்டன. இந்திரன் ,பிரும்மஹத்தி தோஷ நிவாரணம்,சுனையில் முழுகி சுவாமி தரிசனத்தில் கண்டது ... தற்போது ஒருவராலும் இந்திரனாக முடியாததினாலும் , பிராயசித்தம் காணும் வகைக்கு , பிரும்மஹத்தி செய்ய முடியாததினாலும் , அதுவும் மறந்துவிட்டது. மறைய பாழடைந்து கொண்டிருக்கிறது. அந்த அரசன் அவன் தகப்பன் அவன் -அவன் மகன் இவன் எனக்கொண்டு, கடல் கடந்து வாணிபம் செய்தது... இமயத்தை வென்றது, பேரவை கூட்டியது , முத்தமிழ் பரிமாறியது. அது இது எல்லாமும், மனப்பிராந்தியில் சரித்திரமாகி ,கல்பனைகளுடன், உண்மையும் மறந்துவிட்டது, மறைந்தும்விட்டது. கோவில்,கோட்டை, குளம் எல்லாமுமே, இவன் பார்வைக்கு,ஒன்றெனத் தோன்ற , இப்பாழ் தோற்றம் இவனெதிரில் மெளனமாக ஏங்கிப் புலம்பி நின்றன. கானல் சலனத்தில் எங்கேயே எட்டிய வெளியையும் நாடிப்போகத் துடித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவு அபத்தமாகப் படுகிறது எல்லாம். ஒரு அல்பசித்திகண்டு, தாங்கமுடியாது, மேலே போக வழிகாணாது,த வித்துக் கொந்தளிக்கும் மனோவியக்திகள் , இவ்வகை வெளிவிளக்க ஆர்ப்பாட்டம் , ஊர் கூட்டும் தமுக்கடி தமாஷா போன்று, எவ்வளவு அபத்தமாகப் படுகிறது. எவ்வித பிரமாண்டத் தோற்றமும் ஒரு அல்பசித்தியின், அல்ப பவிஷாசையின், வெளிக்கமாகத் தானே, தோற்றம் கொள்ளுகிறது. இரவின் அந்தகார இருளைக் காண, ஒரு சிறு ஒளிப்பொறி போன்றாக முடியுமா, இப்பகல் தீவட்டிகளின் ஒளிகாட்ட முயலுதல்கள். எல்லாம் மாறி , மறைய, பாழடையத்தானே தோற்றம் கொள்ளுகிறது. பகல் ஒளியைப் பார்க்க , இவன் கண்கள் கூசின. சிறிது கண்களை மூடினான். யாரோ ஒருவன் ஒரு பெரிய பெட்டியைச் சுமந்து சென்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு,நீ பொட்டிக்குள்ளிருந்தே உன்னைத் தூக்கிக்கொண்டு போனால், சவுகரியமாகுமே என்று சொல்லிக் கொண்டிருந்த போது, எல்லாம் மறைந்தன. ஒரு கேட்காத சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கண்களை உடனே திறந்து பார்த்தான். ஒரு காகம் மேலே மரக்கிளையிலிருந்து கரைந்து கொண்டிருந்தது. மாலை நேரம் கண்டு கொண்டிருந்தது, இவனைத் தூக்கி வாரிப் போடும்படி இருந்தது. நடுப்பகலில் அயர்வுக் கண்டு, தூங்கி மாலையில் விழித்ததென்பது , இவ்வளவு நொடிப்பொழுதில் என்று தோன்றியபோது ,அன்று மாலை தானோ,என்பதும் கூட, இவனால் அனுமானிக்க முடியவில்லை . மழை வருமெனத் தோன்றி ,எழுந்து நகரத்தை நோக்கி வேகமாக நடக்கலானான்.

ஊர் எல்லைக்கு வெளியே இருக்கும் பங்களாக்களைக் கடந்து கொண்டிருக்கும்போது, வேகமாக காற்று கிளம்பி சிறு தூரலாக மழை ஆரம்பமாயிற்று. அருகிலிருந்த ஒரு பங்களா வாயிற் கேட்டடியில் சாரல் படாது இருக்க ,சிறிது ஒதுங்கி நின்றிருந்தான்.காற்றில் மழை கலைந்தால் , கொஞ்சம் காத்திருந்து , நனையாமல் போகலாம் என இவன் நினைத்து, சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது அப்பால் தள்ளி ,உள்ளே நின்ற அப்பங்களா வரண்டா தூணடியில்,இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்று , இவனைக் கூர்ந்து கவனித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் உணர்ந்தான். காற்று ஓய்ந்து,மழை வலுக்க ஆரம்பித்தது . மறு முறை உள் பக்கம் பார்த்தான். அவள் அப்படியே நின்று தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டான். அங்கியிருப்பது ஒருவிதத்திலும் இவனுக்குப் பொருத்தமாகப் படவில்லை . நின்றாலும் நனையத்தான் வேண்டுமெனத் தோன்றியது. இனி நிற்பதும் பிடிக்கவில்லை என, நனைத்துகொண்டே நடக்க எண்ணியவனுக்கு , தன் அருகில் ஒருவன், கையில் குடையுடன் தன்னை உள்ளே அழைத்து வரண்டாவில் வந்து இருக்கும்படி சொன்னதும், இவன் அங்கு நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதும் ,ஒரு கனவு நிகழ்ச்சியைத்தான் கொள்ளும்படிஇருந்தது. வெளியே மப்பு மந்தாரத்திலும் , வெளிச்சம் இருந்தது.பங்களாவுக்குள் , விளக்கு போடுமளவிற்கு இருட்டு கண்டிருந்தது.வாயிற்படி கதவருகில் நின்று நிழலென ,தன்னை அவள் கவனித்தது தெரிந்தது. உடனே ,வாயில் விளக்கும் , உள் வெளிச்சமும் போடப்பட்டவுடன், ஒளி நடுவில் திடுக்கிட்டான், மறுபடியும் வாயில்படி பக்கம் பார்த்தான்.அவள் அங்கு நின்றிக்கவில்லை. உள்ளே சென்றுவிட்டாள்.அந்த பங்களாவுக்குள் ஒரு கார் வந்து நின்றது. அதனின்றும் உயர்ந்த உத்தியோகஸ்தரெனப்படும் ஒருவர் இறங்கி, ஒரு சேவகன் தொடர உள்ளே சென்றார். இவனைக் கடக்கும் போது பார்த்தும் பார்க்காத பாவனையில் மறைந்து விட்டார். அவள் கணவனென்பது இவனுக்குத் தெரிந்துவிட்டது. போகும்,‘தன்னை யார்'என்ன விசேஷமெனக் கேட்டிருந்தால் , அப்போது தன்னை எவ்விதம் அறிமுகப்படுத்தியிருக்க முடியும், என்பது இவனுக்கு விளங்கவில்லை. அவர் தன்னைக் கேட்காது போனதில் ,சிறிது நிம்மதி அடைந்தும் , இனியும் தனக்கு அவ்வகை நேராது இருக்க முடியுமா,எ ன்பது புரியாமலும் கூட , அங்கு விட்டு அகல முடியாமல் ,நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.ஏதோ, ஒரு தவறிய சூழ்நிலையில் சிக்கித்தவிப்பதான எண்ணம் இவன் மனம் கொண்டது.

சிறிது நேரத்தில் ,அவர் உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே வந்தார்......................... ‘மன்னிக்க வேண்டும், ஸார்,கவனிக்கவில்லை.உள்ளே உட்கார்ந்து பேசலாமே...'என்று அவனை அழைத்துப் போகவும் , ஹாலில் நாற்காலியில் ,ஒருவர் முன் ஒருவராக உட்கார்ந்து கொண்டனர். முதலில் கண்ட நிலைக்கு , தற்போது கொஞ்சம் மாறுதலாகத் தோன்றினாலும் , மனது , ஒரே விதமாக இவனுக்கு வேதனை கொடுத்துக் கொண்டிருந்தது. தன்னை யாரென அறிமுகப் படுத்திக் கொள்ள முடியாத ,தன் நிலைமையைத் தான் ,வேதனைகளெனக் கண்டு கொண்டிருந்தான். ஒரு பரிசாகரன் , இரண்டு கப் காப்பி கொணர்ந்து வைக்க ,இருவரும் பருகினர்.அவருக்குப் பின்னால் , தன் பார்வையில் அவள் பட எப்போது வந்தாள் என்பதை இவன் கவனிக்கவில்லை அத்தம்பதிகள் இருவர் முகத்திலும் ,ஒரு சோகக்களை படர்ந்து இருப்பதை, இவன் பார்த்தான் . தான் அவர்களுக்கு யாரெனப்படுகிறோம்,என்பதும் புரியவில்லை.

‘......உங்களுக்கு , எங்களைத் தெரியவில்லை' எனக் கொண்டு ,‘நாங்கள் எப்படி எங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும் , என்பது புரியவில்லை'என்றது இவனுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப் போடும்படி இருந்தது. மேலும் இவன் திகைப்பை நீடிக்கா வண்ணம் தடுப்பதே போன்று ‘உங்களுக்கு ,உங்கள் நண்பன் , சங்கரை நினைவிருக்கிறது, என்று நினைக்கிறேன் என்று சொல்லி சிறிது நிறுத்தினார்'. இவனுக்கு எல்லாமே, ஒரு நொடியில் புரிந்துவிட்டது. அவரிடம் ஒரு மதிப்பும்,கொண்டான்.‘...........ஆமாம் சரிதான்' என்று பேசியதும், இவனுக்கு சரியாகப் பேச ஆரம்பித்தார்.அதற்கு முன், அவர் தன் மனைவியை சிறிது உள்ளே போய் வரச்சொன்னார்.

‘நீங்கள் சங்கர் நண்பர் சேகர் தான் என்று எங்களுக்குத் தெரிகிறது. உங்களுக்கும்,எங்களைத் தெரிகிறது ....ஆனால் ,இக்குடும்ப சம்பவங்கள் சில,உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.....உங்களுக்கும் தெரியவேண்டுமென்ற அவசியமுணர்ந்து,நான் சொல்லுகிறேன்.........’

ஆமாம் சங்கர் இறந்து விட்டான், என்றவன் பேச்சை நிறுத்திக்கொண்டான்.

‘ஆமாம் சங்கர் இறந்துவிட்டான்.....எப்படி என்றும்,உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம் .இருந்தாலும் நான் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமுணர்ந்து சொல்லுகிறேன். உங்கள் துக்கம் மேலும், அதிகமாகலாம் ஆனால் உங்களிடம் சொல்லுவதில் ,என் மனம் சிறிது ஆறுதல் கொள்ளும் .அதற்காக மன்னியுங்கள்’. சிறிது நிறுத்தி மேலும் பேசலானார்.

‘ஆமாம் , ஆயிரம் தடவை , நான் சொல்லி ஆறவேண்டிய துக்கம் அது. சுசிக்கோ, ஓரு தரம்கூட நினைக்க முடியாத, தாங்க முடியாத துக்கம். அவள் இப்போது இங்கில்லை. எங்கள் பிரியம், சங்கரிடம் எவ்வளவு எனத் தெரியவேண்டுமானால், ஒருக்கால் ,அது அவன் உங்களிடம் கொண்ட அளவு, என்று வேணுமானால் சொல்லலாம். ஏதோ விவரமற்று , அர்த்தமற்ற புதிர் போட இவ்வளவு சப்பை கட்டி பேசிக் கொண்டிருப்பதாக நீங்கள் எண்ணமாட்டீர்கள் . நான் சொல்லுவதற்கு ,நிதானம் கொள்ள,தவிப்பின் வெளியீடுதான், இவ்வகை பேச்சின் தடுமாட்டம், மன்னிக்கவேண்டும் ....?’ சிறிது நிறுத்தி மேலும் தொடர்ந்தார்.

‘...சரி சங்கர் இறந்தான். காலம் போனாலும் , அந்த சம்பவம் , மனவெளியில் மாறாது நிலைத்துவிட்டது.அதை மறுக்குமளவுக்கு இருக்கும் வகையில் , மேலும் கடுமையாக பாதிக்க, அத்துக்கம், மாறாது ஸ்திரமென நிலைத்துவிட்டது அவன் இறந்த செய்தித்தந்தி அவன் தகப்பனாருக்கு....அவன் இறுதிக் கடன்களை , அங்கேயே அவர்களே செய்யும்படி,இவர் பதில் தந்தி, வடக்கே, கண்கணாதேசத்தில், ஒரு சுரங்க கம்பெனியில்,ஒரு உயர்பதவி வகித்தவன், பூமிக்கடியில் இரண்டாயிரம் அடி கீழே சுரங்கத்தை பார்வையிடும் போது , ஏதோ விஷம் தீண்டி இறந்தான். மேலே கொண்டு வரும் அளவிற்கு, அவன் உயிர், உடம்பில் தரிக்கவில்லை. அவனைப் பார்ப்பதில் தான் அவன் ஆத்மா சாந்தியடையப் போகிறதா? தகப்பனார் பதில் தந்திதான் அதற்குப் பதில். பிறகு வெகுநாள் கழித்து அவன் சாமான்கள் வந்து சேர்ந்தன.....அவன் இறப்பை மறுக்குமளவுக்கு இல்லை? நீங்கள் இப்போது வந்தீர்கள் .உங்களை இந்த குடும்பத்தில் ஒருவராகத்தான் நாங்கள் கருதிக்கொண்டு இருக்கிறோம்.உங்களைப் பற்றி அவன் சொல்வதிலிருந்து, எங்களுக்கு, நன்றாகத் தெரியும்’......

‘எல்லோரிடமும் அவன் பிரியமாகப் பழகினாலும் அவன் கடைசித் தங்கை சுமியிடம்,அதிகப் பிரியம் போலும். அவன் இறந்தது,அவளை வெகுவாகப் பாதிக்க ஆரம்பித்தது.கடைசியாக, அவன் எழுதிய லெட்டர் அவளுக்குத்தான்... அவன் எப்போது வருகிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் ,நாங்கள் எல்லோரும் அவளைச் சுற்றிச்சூழ்ந்து , அவளைப் படிக்க வொட்டாது செய்து கொண்டிருந்தோம். வெகு நேரமாயிற்று அவளுக்கு அதைப்படித்து முடிக்க. அவள் முகத்தை அப்போது பார்க்கவேண்டும்.! வர்ணிக்கக்கூடாது-முடியாது. படித்து முடித்தவுடன் லெட்டரை என்னிடம்தான் கொடுத்தாள். நான் அதை இரைந்து படித்தது,எல்லோரும் கேட்டது ...... அப்போது எங்களிடம் கண்ட குதூகலத்தில் , வாழ்க்கையே போய்க்கொண்டிருந்தால்... ‘சீக்கிரம் லீவு எடுத்துக் கொண்டு எல்லோரையும் பார்க்க வருவதாகவும் ,வரும்போது, உங்களையும் அநேகமாக ,நிச்சயமாக அழைத்துக் கொண்டு வருவதாயும் ... எழுதியிருந்தது. எல்லோருக்கும் உங்களை நன்றாகத் தெரியும். அவன் வருகை ஆவலில் ,உங்கள் வருகையும் கலந்து ,நாங்கள் வெகு ஆவலாக அந்த நாளை எதிர்பார்க்கும் ஆவல்தான் அது.உலகில் கொடுத்து வைப்பது, கொஞ்சநாள் தான் போலும்... சில நாட்சென்று , அந்த தந்தியும் வந்தது .எங்கள் நிலைமையை அப்போது , நீங்கள் உணர முடியும். அவன் இறப்பு, மறுக்குமளவிற்கு மீறியே போகிறது .அதிர்ந்துபோன, எங்களை துக்கம் பீடிக்க கொஞ்சம் கொஞ்சமாக வந்தது.

உள்ளே சென்றவள் , எப்போது திரும்பிவந்து அவன் பின் நின்றாள் என்பது , இவனுக்குத் தெரியவில்லை. கீழே தொங்கிய தலையுடன் , கேட்டுக்கொண்டிருந்தாள்.

‘....சங்கர் இறந்ததில் சுமி கலியாணப் பிரயத்தினங்கள் தடைப்பட்டது... பிறகு, அவளும் கன்னியாகவே போய் விட்டாள். தன் தமயன் இறப்பை, கொஞ்சநாள் வரையிலும் அவள் மனது ஒப்புக்கொள்ளவில்லை போலும். அவன் வருகையை எதிர்பார்த்து நிற்பவள்போன்று,வெகு வசீகரத் தோற்றம் கொண்டிருந்தாள். ஆயினும் உள்ளே குடிக்கொண்ட ஒரு ஏக்கம், வெளிக்கிளம்பியப்படி, காலத்தை எதிர்பார்த்திருந்ததுபோலும் , அப்போது அவள் தோற்றம் ,வெகு வசீகரமான தோற்றம் ,எங்கள் மனதிற்கு ,ஒரு அச்சத்தை விளைவித்துக் கொண்டிருந்தது.அவள் ஒரு பயங்கரத்தின் கவர்ச்சியாகத்தான் தோன்றினாள். அதிகமாக ஒருவரோடும்,பேசுவதில்லை. ஆனால் பேசாது இருந்தாகவும் சொல்ல முடியாது. வெகு ஆழ்ந்துதொனிக்குமாறு ,அவ்வப்போது,ஏதாவது திடுக்கிடப் பேசுவாள். என்னை ‘அண்ணா -அண்ணா’யென அழைத்து கொஞ்சம் அதிகமாகப் பேசுவாள் . பிறகு சிறிது சிறிதாக, அவள் மனம் ,சஞ்சலிக்க ஆரம்பித்தது. அப்போது அவளைப் பார்க்கும்போது மனதிற்கு வருத்தம் தோன்றுவதில்லை ...பார்த்து , பார்க்க முடியாது ,பெருமூச்சுடன் திரும்பிப்போவதுதான் முடியும்.... அவளும் போய் விட்டாள். அவறைத் தேடி..’ அவர் பேசி முடித்துவிட்டார். இவனைப் பார்த்தும் , எங்கெங்கேயும் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லையற்ற துக்கம் , அவர் நிதானப் பேச்சில் , வெகு தெளிவாகத் தெரிந்தது. சிறிதுநேர மெளனத்தில் , அவர் அவர்களுக்கு அந்த சூழ்நிலையில் தத்தம் எண்ணப்போக்கில் போய்க்கொண்டிருக்க,அவகாசமிருந்தது.

‘நீங்கள் அப்போது வந்து பார்த்திருந்தால் .........’ என்று ஆரம்பித்தவரை , இவன் இடைமறித்து ,

‘அப்படி நேர்ந்து இருக்க முடியாது’- என்று சொன்னான்.

‘என்ன - இப்போது வந்தது போல ,...’ எனத் திடுக்கிட அவர் கேட்டார்.

‘எப்படி முடியும்,இப்போது போல,அப்போது பார்ப்பது..’என்றவன் மேலும்,

‘அப்போது சங்கர் இறந்து விட்டான் . அப்போது எனக்கு ......எவ்வளவு தெரிந்து இருந்தும் அவன் இல்லாது நான் வந்தால் நீங்கள் தெரிந்து கொண்டிருக்க முடியாது .இது தெரியவில்லை உங்களுக்கு -?’என்றான் இவன். வெகு நிதானமாகவே, கொஞ்சம் அதிகமாகவும் பேசியும் விட்டான் . எண்ணங்கள் எங்கெங்கேயோ போய்க் கொண்டிருந்தன.

‘என்ன ’என்றார் அவர்.

‘இப்போது யதேச்சையாகவா , வந்து சேர்ந்தேன்? இல்லை. என் வாழ்க்கை அவன் கற்பனையில் , என்பதில் அவர்களும் கூட இருப்பது, உங்களுக்குத் தெரியவில்லை .இப்போது ? - நான் இருப்பதில் ’- என்றான்.

தெரிவது போன்ற தோற்றம் ,சிறிது கொண்டும், அவன் பார்க்குமிடத்தைப் பார்க்காது,அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்கள். இவன் மனம் தடுமாறுவதாகவும் சிறிது எண்ணமடைந்தார் போலும்......

இவன் சொன்னான், ‘ இதுதான், நான் இப்போது சொல்லுவது. ’ எனச் சொல்லி எழ நினைத்தவன் மறுபடியும் உட்கார்ந்து கொண்டு, ‘நீங்கள் உங்கள் மனைவியை இப்போது பார்க்கவில்லை? அப்படித்தான் - ’ என்றான்.

‘எல்லோரும் காண இருப்பவளை நீங்கள் எப்படி உவமிப்பது -’ என்றார்.

‘என்ன நீங்களா பேசுவது..’ என்று கொஞ்சம் கடுமை தொனிக்க சொன்னவன், மீண்டும், நிதானமாக நீங்கள் உங்கள் மனைவியைப் பார்ப்பது போல நானும் சுமியைப் பார்க்கிறேன் - இப்போது பார்க்கிறேன்........சங்கர் இறக்க முடியும், என் வாழ்க்கையை, என்னை, கனவு காணாது இருக்கமுடியாது, அவன் கனவில் , நனவென வாழ்க்கை கொள்ளும், நான் இருக்குமளவும் அவன்?..........அவனை நாடி அவன் கனவை நாடி சுமி போகமுடியும் என்னைவிட்டு...எப்படி முடியும்? நான் இப்படியாவதை, தவிர்த்து,எப்படி வாழமுடியும்...’

இவன் நிதானமாக எழுந்து , வெளியே சென்று கொண்டிருந்தான். வாயிற்படியைத் தாண்டி , மற்றும் வரண்டாவின் இரண்டு மூன்று படிகளையும் தாண்டி, மேலும் , பங்களா கேட்டையும் தாண்டித்தான் , எதிரே போகும் வீதியை அடைய வேண்டும் . போவதை தடுக்கவோ ,மழையில் நனையாது போக , வசதியளிக்கவோ, இவர்களால் முடியவில்லை . பிரியா விடைக்கொண்டு ,போவதைத்தான் கேட்டைத்தாண்டி வீதியில் பார்வையில் மறையும் வரையில் , பார்த்து நின்றிருந்தனர். துக்கத்திற்கோ , கண்ணீர் துளிகளுக்கோ அப்போது அங்கே இடமில்லை.

காற்று கடுமையாக வீசிக்கொண்டிருந்தது . மழையும் சிறு தூரலாக விட்டபாடில்லை.

- எழுத்து 1963

தட்டச்சு : தீட்சண்யா” இலக்கியம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும். இந்த சாவு வேகத்தினாலான நாற்கரச் சாலையிலிருந்து ஒதுங்கி கிளை பிரிந்து மௌனியின் மனக்கோட்டை சிறுகதைக்குள் தேவாசுர யுத்தத்தில் சிதறிக்கிடக்கும் சிற்பங்களையிடையே காலக் கணிப்பிற்கு அப்பால் ஊடுருவிவி நிற்கிறது. இதற்கு முன்பு இல்லாத கலையை உருவாக்கிவிடும் நனவிலிச் சடங்கின் திருஷ்டியிலிருந்து அப்போது வரை சொல்லப்படாத கதைகளை சிருஷ்டித்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள் கதையாளர்கள் “

- கோணங்கி (கல் குதிரை - முதுவேனிற் கால இதழ் -2014) -

நன்றி றியாஸ் குரானா

காதல் சாலை - மௌனிவலையேற்றியது - ரா ரா கு - 21-05-2014

அன்றைய தினம்

அன்று காலை அவன் மனங்கெட்டுத் திரிந்தான்.

அன்று நடுப்பகல் மேகமூட்டுக்கொண்டு இருண்டு இருந்தது. ஆலமரத்தடியில் சிறிது அவன் படுத்து அயர்ந்தான். தன்னெதிரில் அவள் தொங்கிக்கொண்டு தன்னை அழைப்பதைக்கண்டு மருண்டு எழுந்தான். எதிரில் ஆலமர விழுதுகள் தொங்குவதைப்பார்த்தான். அதைப்பிடித்திழுத்து ஒன்றை வீசி ஆட்டிவிட்டு வழி நடந்தான்.

மாலையில் மேற்கு வானம் மிகுந்த பிரகாசம் அடைந்திருந்தது. சூரியன் மறைந்தான். தன்னை அறியாது நடந்தான். காதல் காதல், எங்கும் காதல்தான், இவன் மனம் உடைந்தது. யோஜனைகள் அற்றன. காலடியினின்றும் மிக வெறுப்புற்றது போன்று பாதை நழுவி நகர்ந்தது. உயிரற்று நடந்தவன் நிற்பதைத்தான் கண்டான். முன்னே தோன்றியது முன் போன்றே இருந்தது. பின் கடந்த வழி விடாமல் சுற்றி இவனைச்சூழ்ந்தது. வேகமாக நடக்கலுற்றான். உடம்பு ஒரு தரம் மிகக் குலுங்கியது. வண்டிச்சோடு, தோன்றுவதினின்று உதறமுடியாது போன்று வெகு ஆழமாகப்பாதையில் பதிந்திருக்கக் கண்டான்.

பொழுது போயிற்று. கடந்த காலம் கதைத் தோற்றம் கொண்டது. நிகழ்வது நிச்சயம் கொள்ளவில்லை. “பிறகு - பிறகு - ?” ஒன்றுமில்லை. பழையபடியேதான் திரும்பத் தோற்றம்.

அவ்வகை அவன் வாழ்ந்தவிதம் எவ்வளவு காலம் - ? உயிர் கொண்டா இறந்தா? ஒரு கணமா அநந்த காலமா ?

இரவு

இரவு கண்டது. உலகை இருள் மூடியது. அன்றிரவு அவனுக்கு சதா இரவாகவே முடிந்தது.

முந்தின தினம்

தன் ஊரைவிட்டு இவன் சாலைவழியே நடந்து வந்தான். வழியில் சிறிது நேரம் களைப்பாற உட்கார்ந்தான். ஒரு கூடைக்காரி, கூடையை கீழே இறக்கி வைத்து சிறிது தூரத்தில் உட்கார்ந்தாள். ஒரு சிறு பறவை, பக்கத்து வரப்பின் மீது பறந்து வந்து உட்கார்ந்தது. கூடைக்காரி தன் முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். முந்தாணியை உதறி மேலே போட்டுக்கொண்டாள். சிறிது நேரம் சென்று நின்றுகொண்டு, அருகாமையைச் சுற்றிச் சுற்றி திரும்பிப்பார்த்தாள். இவன் இருப்பதை அறிந்தவள் அவனை அருகில் அழைத்தாள். அவனைப் பார்த்து, “ ஐயா , இந்தக் கூடையைச் சிறிது தூக்கிவிடுங்கள் ” என்றாள்.

இவன் “ என்ன எதை ?” என்றான்.

“ இதை ஐயா ” என்று இரண்டு கைகளையம் விரித்து நீட்டிக் கீழே இருந்த கூடையைக் காட்டினாள். “வெகு பளுவாக இருக்குமே ? உன் கழுத்தை அமுக்குமே ? உன்னால் தாங்க முடியுமா - ஏன் தூக்கிக்கொண்டு - ” என்றான்.

“ அதற்காகத்தான் ஐயா - உங்களை. ”

“ யார் எங்களையா ? புருஷர்களையா ? கூடைக்காரி ; சரி சரி, என்ன செய்யச் சொல்லுகிறாய் ? ” என்றான்.

“ கூடையைத் தூக்கிவிடுங்கள் ” என்றாள் அவள். கூடையை அவள் தலையில் ஏற்றிவிட்டான். அவள் முகத்தை அருகிலிருந்து பார்த்தான். அவள் தன் இரு கைகளையும் மேலே முழுதும் நீட்டிக் கூடையின் விளிம்பைப் பிடித்துக் கொண்டாள். அவள் கழுத்து சிறிது சிறுத்துப் பெருத்ததை அவன் கண்டான். மார்பும் சுமையைத் தாங்கி கெட்டியானதைக் கண்டான். அவள் முகத்தில் வசீகரமும் நன்றி அளிக்கும் புன்னகையும் தோன்றின. இவன் மிகுந்த வருத்தங்கொண்டான். அவன் நின்ற இடத்தைவிட்டு அகலவில்லை. ஒதுங்கி அவனைத் தாண்டி அவள் சென்றாள்.

சிறிது சென்று, அவன் திரும்பிப் பார்த்தான். ரவிக்கை இல்லாது திறந்த அவள் முதுகைக் கண்டான். திடீரென்று வரப்பில் உட்கார்ந்திருந்த அப்பறவை நடுவே பறந்து எதிர்ப்புறத்து மரக்கிளையில் மறைந்து. இவனுக்குத் தன்னைஅறியாது சிரிப்பு வந்தது ; சிரித்து விட்டான். அந்தப் பறவை “ சீ சீ ” என்று கூவிக்கொண்டே பறந்துவிட்டது.

கொஞ்சம் மேலே நடந்து திரும்பினாள் கூடைக்காரி. சாலைத் திருப்பத்தில் மறைந்து விட்டாள். பக்கத்து ஓடை மதகுக் கட்டையில் உட்கார்ந்தான். மறுபடியும் கூடைக்காரி, தன் பளுவை இறக்க வருவதை எதிர்பார்த்தவன் போன்றிருந்தான். ஆனால் எதிரில் எதிர் மதகுக் கட்டை, வலது புறமும் இடது புறமும், சாலையும், பாழ் அடைந்த அச்சாவடியும் சமீபகாலத்தில் இடிந்தது போன்று முற்றும் பாழ் தோற்றம் கொடுக்கவில்லை.

அலுப்புற்று எழுந்து, நடந்து அவன் பக்கத்து ஊரை அடைந்தான். கீழ்க் கோடியிலிருந்து மேற்கே அவ்வூர்த்தெரு வழியாக மெதுவாக நடந்துகொண்டே போனான். அவன் முன் குறுகிய அவன் நிழல் போய்க்கொண்டிருந்தது.

பின்னிலிருந்து அவ்வக்கிரகாரத்து நாய் குரைத்தது. அவன் திரும்பிப் பார்த்தான். அவ்வூர்ப் பெண்கள் சிலர் இடுப்பில் குடத்துடன் ஜலம் மொள்ள, கோயிற் கிணத்தடிக்குச் சென்று கொண்டிருப்பதைக் கண்டான். “ஏன்? எங்கே ?” என்பது போல் நாய் குரைத்தது.

“ சீ சீ நாயே, நான் அவளைப் பார்க்க - தேட - போகிறேன். ”

குரைப்பு. “ ஏன் ? எங்கே ? ”

“ சீ சீ நாயே ! ஏன் என்கிறாயே - என் காதலி அல்லவா - என் காதல் இருப்பிடம் அல்லவா - எங்கே? தெரிந்தால் ஏன் போகிறேன். ”

“ ஏன் - ? எங்கே ? ”

“ சீ சீ ! நாயே அப்பெண்கள் ஜலமெடுக்க, கிணற்றுக்குப் போவதுபோலவா ? காதல் இதுமாதிரி அல்ல - ”

மறுபடியும் குரைப்பு.

அவனுக்கு மிகுந்த ஆத்திரம் உண்டாயிற்று. பொறுக்காமல், அந்த நாயைத் துரத்தினபோது, நாய் சிரித்துக்கொண்டே “ சரி - சரி ” என்று சந்தேகத்துடன் ஆமோதித்துக் குரைத்துக்கொண்டே ஓடிவிட்டது.

ஜலத்திற்குப் போகும் பெண்களைப் பார்த்தான். அதில் ஒருத்தி கறுப்பு. அவள் இடுப்பில் பித்தளைக் குடம், முகத்தில் மிகுந்த வசீகரம். அப்பெண் குனிந்து குதிகாலில் தண்டின குயவானை இழுத்துவிட்டுக் கொண்டாள். எல்லாப் பெண்களும் எதையோ பேசிக்கொண்டு போனார்கள். புரியாத பேச்சுச் சத்தத்திலும் தனிப்பட்டு ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது. சிரிப்பவளை இவன் பார்த்தான். அவன் முகத் தோற்றமே இவன் மனதில் பதியவில்லை. ஆனால் அவள் சிரிப்பதைத்தான் இவன் கண்டான். பார்த்துக்கொண்டு இருக்கும்போதே எல்லோரும் கோவிலினுள் சென்று மறைந்துவிட்டனர். திரும்பி அவன் அப்பெண்ணுடைய சிரிப்பை எண்ணிக்கொண்டு, அந்த ஊரைக் கடந்து சென்றான்.

அவ்வூரை விட்டதும் அவன் அறுவடையான வயல்கள் வழியாகப் போனான். சிறுசிறு மேகங்கள், உருவை மாற்றிக்கொண்டு கிழக்கு நோக்கி ஊர்ந்து சென்றுகொண்டிருந்தன. சிறு வெண்மை மேகம் ஓன்று சூரியனை மெதுவாக கடக்கும்போது, வயல் வழியாக நிழல் பாய்ந்தோடியது. அறுவடையான வயல்களில் ஒற்றையடிப்பாதை இன்னும் சரியாக ஏற்படவில்லை. நடுநடுவே ஒன்றிரண்டு கெட்டியான கட்டைத்தான் இவன் காலால் மிதிக்கப்பட்ட போது குத்தியது. வயலைவிட்டு அதன் வரப்போடு சிறித் தூரம் சென்றான். நன்கு காயாமல் இருக்கும் வரப்பில், சில சில இடங்களில் இவன் குதிகால் அமுங்கும். “ அப்படியே பாதாளம் வரையில் நான் அமுங்கிப்போனால் - எனக்கு பளு ஜாஸ்தி - பளு இல்லாவிடில் இப்படி அமுங்குவேனா - ”

சில சில இடத்தில் வரப்பில் விதைத்த துவரை வெட்டப்படாமல் இருந்தது. இருபக்கமும் தன்னைவிட உயர்ந்து வளர்ந்து இருக்கும், செடிகளின் இடையே சென்றான். நடுநடுவே இவன் திடுக்கிடும்படி தத்துக்கிளி உயர எழும்பும். திடீரென்று மறுபடியும் மறைந்துவிடும். இப்படியே இவன் ஒரு களத்து மேட்டிற்குச் சென்றான். நடுவில், கதிரடிக்கும் சிறு இடத்தைத் தவிர மற்ற இடத்தில் ஒரே செடி, புல் பூண்டுகள் மண்டி கிடந்தன. சிறு புல் நீல புஷ்பங்கள், மிகுந்து ஒரு இடத்தில் பூத்திருந்தன. அவ்விடம், கண் குளிர்ந்த ஒரே நீலத்தால், சலவை செய்தது போன்றிருந்தது.

போயக்கொண்டிருக்கும் போது ஒரு நெரிஞ்சி முள் இவன் காலில் தைக்கக் கீழே உட்கார்ந்தான். உள்ளங்காலைக் கையால் தடவிக்கொண்டே, இவன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தான், முள் இல்லை ; ஆனால் வலி மட்டும் இருந்ததை இவன் உணர்ந்தான். தனக்கு முன்னால் போடப்பட்டிருந்த பெரிய வைக்கோல்போர், பழுப்பாக வைக்கோல் மாதிரியே தோன்றவில்லை. நன்கு காயாமல் பசுமை கலந்த பழுப்பிலேயே, உயர்ந்து, ஏதோ தோற்றம் கொண்டது. தூரத்தில் இருந்த வேலிக்கால் காட்டாமணக்குச் செடியின் மீது ஒரு குருவி வாலை ஆட்டிக்கொண்டு கத்தியது. அது கத்திக்கொண்டே இறக்கும் போன்று தோன்றியது.

“ சீ சீ ! அவள் போய்விட்டாள் - ” என்றது அக்குருவி. “ யார் ? எங்கே ? ” என்றான் இவன். மிக வெட்கமுற்றுப் பயந்தோடிவிட்டது அக்குருவி, “ குருவியே உனக்கு புத்தியில்லை, ஏன் கத்திக் கத்திச் சாகிறாய் ? - ” என்று வெற்றுக் காட்டாமணக்குச் செடியைப் பார்த்துச் சொன்னான்.

திடீரென்று எழுந்து நடக்கலுற்றான். சிறிது சென்றவுடன் மற்றொரு முள் குத்த இவன் கீழே உட்கார்ந்தான். முள்ளிப் பிடுங்கி எறிந்தான். பக்கத்தில் ஒரு எருக்கஞ்செடி முளைத்திருந்தது. அதன் மலராத மொட்டுக்களை நசுக்கினான். அப்போது உண்டான சிறு சப்தத்தில் கொஞ்சம் ஆனந்தம் அடைந்தான்.

அவள் ஞாபகம் வந்தது ! “ காதலி எங்கே - ஏன் நான் காதல் மணந்தானே புரிந்துகொண்டேன் ? அவளும் என்னைக் காதலித்தாளே ! எங்கே அவள் ? - அவள் எருக்க மொட்டில்தான் இருக்கிறாள். நசுக்கினால் வெளிவருவாள் ” மறுபடியும் மிஞ்சின மொட்டுகளை நசுக்கினான். மொட்டுகள் இல்லை. சப்தமும் இல்லை. அவளையும் காணோம். கோபம் கொண்டான். செடியின் இலைகளைப் பிடித்து வெடுக்கென்று பிடுங்கினான். கைநிறையக் கசங்கின. இலைகள் வந்தன. ஓங்கிக் கீழே அடித்தான். போக எண்ணி எழுந்தான். காட்டாமணக்குச் செடியின் மீது மறுபடியும் அக்குருவி இருந்து கத்தியது. “ சீ சீ அவள் போய்விட்டாள் - ” குனிந்து ஒரு சிறு கல்லை எடுத்து வீசி எறிந்தான். அது பறந்துவிட்டது. இவன் நடந்து போனான்.

சிறிய நகரம் ஒன்றைச் சேர்ந்தான் இவன். சாயங்காலவேளையும் ஆயிற்று.. இவன் அவ்வூர்க் கடைத்தெருவின் வழியாகச் சென்றான். பண்டங்கள் வாங்குபவர்களைக் கண்டான். “ காதல் - காதல் ஏன் இங்கு இருக்க முடியாது ? ” என்று பார்த்துக்கொண்டே, ஒரு முச்சந்தி வந்ததும் நின்றான். காணமுடியாததை “ அதோ - அதோ ” என்பது போலச் சற்றும் முற்றும் தேடிப்பார்த்தான். தன் பின்னால் ஒருவன் நிற்பதைக் கண்டான். அவன் மீசை சற்றுப்பெரிது ; கிராப் தலை சிறிது கோணல் நெற்றிச் சந்தனப் பொட்டு மிகப் பெரியது. எல்லாம் கலந்து அவன் தோற்றம் இவன் மனத்தில் நன்றாகப் பதிந்தது.

“ ஐயா - மிக உயர்ந்த அழகு - சிறு வயது ; நீங்கள் சாதாரணமாக வாருங்கள். மயங்கியே விடுவீர்கள் - காதல் மயக்கம் ஐயா - ரொம்ப அழகு ஐயா - ” என்றான் அவன்.

இவன் “ எங்கே - ? எங்கே - ? போவோம் - ? ” என்றான். அவனோடு கூடச் சென்றான். ஒரு சந்தில், சிறிய மட்டமான வீட்டிற்குள் இருவரும் சென்றனர். உள்ளே, மங்கலாக தீபம் ஒன்று, இருக்கும் ஏழ்மையைப் பார்க்க வெட்கமும், வருத்தமும் அடைவது போன்று எழுந்தும் விழுந்தும் அழுதுகொண்டு எரிந்தது.

கூடத்தில் ஒரு பெண் இருப்பதை இவன் கண்டான். அவள் உட்கார்ந்திருந்தாள். எழுந்து நின்றாள். கோணலாகத் தலையை வாரிக் கொண்டிருந்தாள். புது வறுமையையும், சேர்த்துக் கட்டிக் கொண்டது போல் அவள் முகம் தோன்றியது.

“இவள்தான் கிருஷ்ணவேணி, வெகு அழகு ஸார், எல்லோரும் அப்படித்தான் எண்ணுகிறார்கள் - நீங்களும் கட்டாயம் சொல்லப்போகிறீர்கள் ஸார் - ” என்றான் அவன்.

“ இங்கே - ஆம் அதைத்தானே நான் தேடி அலைகிறேன் - ”

“ சரி ஐயா - இருங்கோ - நான் இதோ வரேன் - ” என்று சொல்லிவிட்டு அவன் வெளியே போய் விட்டான்.

இவனுக்கு காதல் வந்தது ! “ எப்படி - ? எங்கே - ? எதுபோல - ? ” இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவா - இல்லை. மிகுந்து திடீரென்று வாய் பிளக்கவா ? தெரியவில்லை. ஆனால் சமுத்திரக்கரையில் ஒழுங்கு உடைதரித்த வாலிபர்களுக்கு, நாகரிக ஒய்யார நடை மாதர்களைக் கண்டால் வருவது போலவா ? அவ்வகை இல்லை. அது மாதிரி யிருந்தால் இவனுக்குத் தெரிந்து இருக்குமே !

“ காதல் - எங்கே வந்ததா ? கண்டேனா - ”

“ ஆம். காதலை நேருக்கு நேராக ” தீபச் சுடர் சிறிது தூண்டிவிடப்பட்டது. கோபமாகக் கடைசியில் எல்லாவற்றையும் பார்ப்பது போன்றேதான், நிமிர்ந்து ஜ்வலித்து.

அவன் பேசவில்லை. உட்காரவில்லை, தீபத்திற்கும் சுவற்றுக்கும் நடுவே இவனுக்கு நேராக இல்லாமல் நின்று கொண்டிருந்தாள். அவள் நிழல் பாதி கூடத்திலும், இடுப்பிற்கு மேல் எதிர்ச் சுவரிலும் விழுந்து சிறிது சிறிது ஆடிக் கொண்டிருந்தது. அது சுவர் முழுவதும் வியாபித்துத் தலை உச்சி மேடுவரை போய் மறைந்து, பயங்கரத்தோற்றத்தைத் கொடுத்தது. அவள் அத் தீபச் சுடரைப் பார்த்து நின்றிருந்தாள்.

அன்றிரவு, இவன், அங்கு தங்கினான், அவள் இரவெல்லாம் தூங்கவில்லை. அவன் பக்கத்திலே, கண்ணயராமல், விழித்துப்படுத்திருந்தாள். இவன் நடுநடுவே சிறிது விழித்துக்கொண்டான். இரண்டொருதரம் பிதற்றுவது போல் பேசினான்.

“ நாய் சொல்லியது சீ - சீ - அவள் போய்விட்டாள். - ஓடி விட்டாள். காதல் ஏன் ? எங்கே ? சீ - சீ - நாயே காதல் எங்கேயா - ? இருட்டிவிட்டது. காண முடியாதோவென்று பயந்தேன் - ஆனால் இருட்டிலும் அகப்படுமோ காதல் - ? எங்கே ? ஏன் ? ” என்றெல்லாம் பிதற்றினான். அவன் பிதற்றலில் தனக்கு எதாவது புரிகிறதா வென்று அவள் நடுநடுவே சிறிது கவனித்தாள். ஒன்றும் புரியவில்லை, அவனையும் தெரியவில்லை.

விடியுமுன் மறுபடி ஒருதரம் பிதற்றினான். “ அந்தக் குருவி - ‘ஓடிவிட்டாள் ’ என்றது. யார் - ? அது வெட்கம் கொண்டு பறந்து விட்டது. ஓடினால் வெட்கமா ?

காதல் - ? ஏன் - ? எங்கே - ? அவள் எங்கே - அவள் ஓடி விட்டாளா ? இல்லை, நான்தான் ஓடுகிறேன். ஏன் - எதற்கு - காதலா - சீ - சீ இல்லை - அவள் - ராஜீவி - ” அவன் முடித்துவிட்டான். அவளும் கேட்டாள். விடிந்ததும் இவன் எழுந்தான். அவளும் எழுந்தாள். அவனும் வந்தான். அவனும் இவனும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் உள்ளே போய் விட்டாள். வெளிவந்து, தாம்புக் கயிற்றை எடுத்துக்கொண்டு, பின்பக்கம் சென்றாள். சிறிது சென்று, திரும்பி வந்து, குடத்தையும் எடுத்துச் சென்றாள், கொல்லை கிணற்றடிக்கு. இவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் வரவில்லை. வருவது போலும் இல்லை. அவன் கொல்லைப் பக்கம் போனான். இவனும் தொடர்ந்து சென்றான். அவளையும் இவர்கள் பார்த்தனர். குடம், அவள் கால் கீழ் சற்று எட்டி உதைக்கப்பட்டு உருண்டிருந்த கயிறு மேலிருந்து தொங்கியது. இவள் கயிற்றிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தாள். அவள் முகம் மேல்நோக்கி இருந்தது. கண்கள் மூடியிருந்தன, அவள் ஆத்மா முக்தி அடைந்தது. இவன் மனதில் - கால்களும் தேகமும், மெதுவாக ஊஞ்சல் ஆடின. அவள் முகத்தை இவன் பார்த்தான். “ காதலை - ? ” அவளை மறுபடியும் பார்த்தான். அவள் ஆத்மாவை எண்ணினான்.முக்தி அடைந்ததை உணர்ந்தான். போன இரவு நிகழ்ச்சிகளை நினைத்தான். பத்து மாதம் முன்னால் நிகழ்ந்தவைகளை நினைப்பூட்டிக் கொண்டான். ராஜீவியை முதல்தரம் தான் முத்தம் கொடுத்த போது அவள் முகத்தோற்றத்தை (மனதில்) கண்டான். தேவர் போன்று தரையில் தீண்டாது ஆடிக்கொண்டு நிற்பவளுடைய முகத்தை உற்று நோக்கினான். “ காதல் ? ராஜீவியா - இவள் ? - காதல் - இவள் - ” வெளியே விரைந்து ஓடினான்.

ஓடி ஓடி அவ்வூரை விட்டகன்றான். அவன் வழிநடந்தான். “ காதல் - ? எங்கே - எப்படி - ” என்றான். உணர்ந்தானா ? “ அதோ அங்கே - ” என்று ஆகாயத்தை இருகைகளையும் விரித்து நீட்டிக் காட்டினான். விரல்களைக் கெட்டியாக மூடி அசைத்துப் பயமுறுத்தானான். பொழுது நன்றாக விடிந்துவிட்டது. அன்று பொழுதும் போயிற்று. இரவும் வந்தது ; ஆனால் அவனுக்கு மறுபடியும் பொழுது புலரவில்லை.

நேருக்கு நேரே காதலைக் கண்டதே போலும் - கண்டதன் கதி போலும் - காண்பவரின் கதி போலும் -

- மணிக்கொடி, 1936.

தட்டச்சு : ரா ரா குமாபெருங் காவியம் - மௌனி

வலையேற்றியது - ரா ரா கு - 23-05-2014

கிட்டுவின் காரியம் முடிவடைந்துவிட்டது. அவன் எழுத ஆரம்பித்த அந்த “மாபெருங் கவியம்” பூர்த்தியாகி விட்டது. இதற்குப் பிறகு அவனிடம், அவனுடைய இரண்டொரு சிநேகிதர்கள் , ஒரு பெரிய மாறுதலைக் கண்டனர். அதைப்பற்றி அவர்கள் எப்போதாவது இவனிடம் குறிப்பிடும்போது கிட்டு சிறிது சிரித்துக்கொண்டே “ என் வாழ்க்கை ஒரு உன்னத நிழல் ஆட்டம் . ஒளி குன்றியது . என்னுடைய நிழலும் பார்வையினின்றும் மங்கி விட்டது . விலகி நின்று உலகநாடகத்தைப் பார்ப்பதுதான் இப்போது நான் செய்வது ...”

கிட்டுவின் கண்களையும் முகத் தோற்றத்தையும் தவிர்த்து , அவன் சாதாரணமாகத் தெரிபவன்தான் . அவன் கண்கள் இரு ஞானவொளிச் சுடர்போன்று தோன்றும் . அவைகளின் பார்வை ஒரு உன்னத காவியம் . அவன் இழுத்து இழுத்துப் பேசுவதே ஒரு இனிய கீதம்.

வறுமையில் உழன்ற அவன் வாழ்க்கைக்கு ஆறுதலாக அவன் மனைவி குஞ்சுவும், ஆறு வயதுடைய ஒரு பையனும் இருந்தனர் . தன்னுடைய வாழ்க்கையை ஒரு இனிய கனவில் கழிப்பதாகவே கருதி அந்த எண்ணத்தில்தான் அவன் வாழ்ந்து இருக்க முடியும். ஏதோ நடுவில் விதி குறுக்கிட்டு அவனை ஒரு காவிய கர்த்தனாக்கி விட்டது. ஒருக்கால் சிருஷ்டியிலும் வெளி விளக்கத்திலும் அடையும் ஒருகண சாசுவதாம்ச ஆனந்தத்தைக் கொள்ள அவன் மனது விரும்பியதால்தான் இந்தப் புத்தகத்தை அவன் எழுதினான் போலும் .

பிரபஞ்ச வெளியில் கட்டுப்பாடியின்றித் தெரியும் பறவை போன்ற ஞான உணர்வைப் பிடித்துக் கூட்டிலடைத்ததுதான் அக்காவியம். சாசுவதானந்தத்தை வாக்கியத்தில் புதைத்துக் கண்ட களிப்பதில் , கலைஞர்கள் கடவுளுடைய சிருஷ்டி ஆனந்தத்திற்கு ஒப்பானதை உணர்கிறார்கள் போலும். எவ்வகை சிருஷ்டியும் அழிவிற்கு விரைந்து செல்வதாயினும் , அழிவின்றித்தான் அவர்கள் மனதில் அக்கண ஆனந்தம் பதிகிறது.

வாழ்க்கையின் வறுமை அவனை வெறித்து நோக்குகிறது. தான் புத்தகம் எழுதுமளவும் ,ஒன்றும் அவனைத் துன்புறுத்தா வகையில் தூரத்தில் கண்ட வெளியிலேயே அவன் மனம் சஞ்சரித்தது . அது முடிந்தவுடன் பழையபடி உலக வாழ்க்கை அவனைத் தன்னிடம் இழுத்தது . சிற்சில சமயம் அவன் மனது துக்கம் அடையும் . “ கனவிலா உன் வசீகரத்தைக் கண்டேன் . இப்போது விழிப்பின் இருளில் உன் அழகு மறைகிறதோ ? ” எனச் சஞ்சலமடைவான். அப்போது இரவில் தடுமாறித் தடவும் அசாரீயைப் போன்று அவன் எண்ணங்கள் தடுமாற்றம் கொள்ளும் ஆயினும் , என்றுமறியாத ஒரு அமைதியை அவன் மனது கண்டது. அதற்கு ஆதாரம் கொடுப்பது எது என்பதை அவன் ஆராய ஆசை கொள்ளவில்லை . மற்றவைகளைப் போலவே அவன் மன ஆறுதலும் , ஒரு மாயையை அஸ்தி வாரமாகக் கொண்டதாக ஏன் இருக்கக் கூடாது என்ற ஒரு எண்ணம் மட்டும் நிச்சயம் கொள்ளாது அவன் அடிமனத்தில் அமுங்கிக் கிடந்தது போலும் .....

கிட்டுவின் குழந்தை ராமு நான்கைந்து நாளாகக் கடுமையான சுரத்தில் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருந்தான்.......... கிட்டு , ஒரு கடையில் குமாஸ்தாவாக இருபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் இருந்தான் . சம்பளம் வாங்கியதும் , தன் மனைவி கையில் அதைக் கொடுக்கும்போது ஏதோ ஒரு கேவலச் சந்தோஷத்தில் ஆரவாரிப்பதைப் போல அந்த ரூபாய்கள் கலகலவெனச் சப்திக்கும். அவன் மனைவி கண்களில் காலதேவனாலும் கொன்றுவிட முடியாத ஒரு புன்னகையின் வசீகரம் காணும் . இவனுக்கோவெனில் வெறும் வருத்தந்தான் . ஏன் தனது மனது மட்டும் சமாதானம் கொள்ளமுடியவில்லை என்பது ஒரு உருக்கொண்ட பிரச்சனையாகிவிட, அதை அறிய முடியாது திகைப்படைவான் . தன் தலையில் எழுதின வகை......தலை விதியாக்கினவனே போன்று .... ஒரு லேசான சமாதனம் கொள்ளுவான் . இதெல்லாம் இவன் புத்தகம் எழுதுவதற்கு முன்பு . புத்தக வேலை முடிந்தது; குருட்டுத்தனமாக விதி இவனை எவ்வகை உயர் காரியத்தைச் சாதிக்கத் தள்ளியது என்று எண்ணுவது உண்டு. ஆனால், அதினின்று அடைந்த உணர்வு மட்டும் விதிக்கு விலக்கியே, தன் உள்ளக் கிளர்ச்சியின் ஒரு ஆனந்தமெனக் கருதினான் . இதற்காகத்தான் ,ஒருக்கால் கடவுள் , விதிவசப்படாது நிற்க எப்போதும் , சிருஷ்டித்து, அந்த ஆனந்தத்தை அடைகிறான் போலும் !

சாசுவதமற்ற உலக வெளி வெறிப்பும் , அதில் கொண்ட அவன் வெறுப்பும் மழுங்கிக் கொண்டே அநேகமாக மறைந்துவிட்டது. ஆனந்தத்தைக் கொடுக்கத்தான் குழந்தை இராமுவின் இரு விழிகள் இருந்தன. மனச்சங்கடத்தின் எல்லையில் பொருந்தின இரு சுடர் விளக்காகத் தான் அவ்விழிகள் இவனுக்குத் தோற்றம் . கிட்டிய பக்கத்தை கவலைக் கடலாகக் காட்டினாலும் , மறு பக்கத்தை அச்சுடர்கள் கொஞ்சம் காட்டும்போது எல்லைக் கடந்த ஆறுதலின் இன்பசாகர வெளியை, கிட்டுவால் பார்க்க முடிந்தது.

குழந்தை சுரத்தில் சங்கடப்படுவதைப் பார்க்க அவனால் சகிக்க முடியவில்லை. சுரவேகத்தில் ஒளிகொண்ட குழந்தையின் கண்கள் , இவனைப் பயம் கொள்ளும்படி செய்தன. அச்சுறுத்தும்படி . ஆள்காட்டிவிரல் போல அவன் போகும் இடத்தைக் காட்டுவதா அக்கண்களின் பார்வை ? அவனால் அவன் குழந்தையீன் முகத்தைப் பார்க்க முடியவில்லை ........

அன்று இரவு குழந்தைக்குத் தாங்க முடியாத சுரம் . கண்ணயராமல் கிட்டுவும் குஞ்சுவும் அறையில் குழந்தையின் அருகில் உட்கார்ந்து இருந்தனர் . நடுநிசிக்கு அப்பால் குழந்தை கொஞ்சம் கண்களைத் திறந்து ‘ அம்மா ’ என்றான். விழித்துக் கொண்டதும், அவனுக்கு மருந்து கொடுப்பதற்காக குஞ்சு மருந்தைக் கொணரச் சென்றாள். கிட்டு எழுந்து மேஜை அருகில் உள்ள நாற்காலிக்குப் போய் விட்டான். மருந்து கொடுத்ததும் வாய்க் கசப்பை மாற்ற மேஜை மீது இருந்த திராக்ஷைப் பழப் பொட்டலத்திலிருந்து கொஞ்சம் எடுத்து அவனுக்குக் கொடுத்துக் குழந்தையைத் தூங்கச் செய்தாள் . மேஜையருகில் கிட்டுவிற்கு எதிர்ப்புறமாக வந்து நின்றாள். ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்த கிட்டு அவள் வருகையினாலும் திரும்பவில்லை. வெளியே வெகு எட்டிய வெளியே அவன் நோக்கு சென்று கொண்டிருத்தது. ஊர் ஆரவம் நன்றாக அடங்கி நிசப்தமாக இருந்தது. பிறைச் சந்திரன் மேற்கு அடிவானத்தருகில் தேங்குவதைக் கண்டு கொண்டு இருந்தான். ஒரு மங்கிய நிலவில் வீதிகளும் ,வீடுகளும் ,எட்டிய மரங்களும் தெரிந்தன. ஒன்றையும் கவனியாது இயற்கையின் சக்கரம் காலத்தில் சுழன்று கொண்டு இருந்தது. உலகத்தில் மாந்தர்கள் கொள்ளும் மனச் சாயையைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது இப்பிரபஞ்சம் துயின்று கொண்டு இருப்பது கிட்டுவிற்குப் புரியவில்லை. வாழ்க்கையின் இன்ப துன்பம் தன்னுடைய மனத்தில் தான் தோன்றுகிறாதா என்ற ஒரு எண்ணம் கொண்டபோது, ஆறுதலுக்கும்த் தன்னைத்தவிர வேறிடம் தேடுவது மதியீனம் என்பதாக நினைத்தான். உள்ளே அறைப்பக்கம் தலையைத் திருப்பினான். சுவரில் ஆடிய நிழல்கள் இவன் மனதேபோலச் சலித்தன. சிறிய ஒளியில் எதைப் பார்ப்பது என்பதை அறியாதனப்போன்று கண்கள் தாமாகவே குஞ்சுவின் முகத்தை நோக்கின.

மேஜையின்மீது இரு கைகளை ஊன்றி நின்று இருந்தாள் குஞ்சு. அவள் மனது , எண்ணங்கள் சூனியப் பொருளைக் கொண்டதாக இருந்தது. ஒன்றும் தெரியாது விழிப்பதுபோன்று பார்ப்பவளுடைய முகம் சாயை யற்றுத் தோன்றியது. இவன் தன்னைப் பார்ப்பதை அறிந்த குஞ்சு தலையைக் குனிந்துக் கொண்டாள். ஒருக்கால் உருக்கொண்ட உலகத் துக்கம் அவள் கண்களினின்றும் வந்த கண்ணீர் மேஜையின் மீது சொட்டியது.

கிட்டுவால் நிதானமாக ஒன்றையும் செய்ய முடியவில்லை . தன் மனைவியின் எல்லையற்ற வருத்தம் இவனைத் தடுமாறச் செய்தது.

யதேச்சையாக மேஜையைப் பார்த்தபோது திராக்ஷைப் பழப் பொட்டணம் பிரித்தப்படியே இருந்தது. அதை மடித்து வைக்கக் கையில் எடுத்தான். அந்தப் பொட்டணக் காகிதத்ததில் ஏதோ எழுதியிருந்தது. தனக்குத் தெரிந்த எழுத்தாகத் தோன்றியது. யோசிக்க ஒன்றுமில்லாது மனது மிகச் சஞ்சலம் கொள்ளும்போது எவ்வகை அல்பவிஷயத்திலும் புத்தி ஈடுபடுகிறது . கிட்டு நன்றாக அதை உற்றுப் பார்த்தான் . ஆம் அவனுக்கு நன்றாகத் தெரிந்த எழுத்துத்தான் அது. ஒரு கணத்தில் அது தன்னுடைய கையெழுத்தென்பதைத் தெரிந்து கொண்டான். பொட்டணத்திலிருப்பதைக் கீழே மேஜையில் வைத்துவிட்டு அந்தக் காகிதத்தை எடுத்து வந்து தரையில் உட்கார்ந்து படித்தான். இதற்குள் குழந்தை ஏதோ சுரவேகத்தில் உளர அதன் அருகில் குஞ்சு போய்விட்டாள்.

கிட்டு அப்போது அடைந்த மன அதிர்ச்சியில் ஒன்றுமே புரியாதவனானான். தன்னுடைய உன்னதப் புத்தகத்தின் ஏடுகளில் அந்தக் காகிதத் துண்டு ஒன்றென அவன் அறிந்தபோது அவன் உள்ளமே வெடித்தது போன்றாகியது. அக்கணத்திலேயே, தான் அக்காவியம் செய்து முடித்தவுடன் தோன்றிய அந்த ஆனந்தம் அவன் மனத்தில் குடி கொண்டது.

நடந்ததைச் சிறிது நேரத்திலேயே ஊகித்துக் கொண்டான் . தான் எழுதி வைத்திருந்த காகிதங்களைத் தன் குழந்தை கடையில் போட்டு ஏதோ வாங்கிக் கொண்டான் என்பதாகக் கண்டு கொண்டான்.

இதற்குள் குழந்தையின் பக்கத்தில் இருந்த தன்னுடைய மனைவியின் கூப்பிடும் சப்தம் கேட்டு அங்கு சென்றான். கனவில் காண்பதைவிட வெகு விநோதமாகவே தன்னெதிரில் நடப்பவைகள் தெரிந்தன. அவனால் சமாளிக்க முடியாத அதிர்ச்சியை அவன் மூளை அடைந்ததினால் உலகத்தையே தலைகீழாகப் பார்த்தான் என்பது சரியே போலும் .

தன்னுடைய குழந்தை ராமு ஜன்னி வேகத்தில் ஏதோ பிதற்றிக் கொண்டிருநத்தான். இரண்டொரு வார்த்தைகள் புரியும்படியாக , ‘ பம்பரம் ’ ‘அப்பா ’ என்பது போன்று இருந்தது.

காலை ஒளியில் கடைசி நக்ஷத்திரம் மறையும் முன்பே குழந்தை ராமு இறந்துவிட்டான். மற்றுமொரு குருவி கூண்டைவிட்டுப் பறந்தோடிவிட்டது. ஆகாயத்தில் இன்னும் நக்ஷத்திரங்கள் தெரிந்து கொண்டிருந்தன. குழந்தையைப் பார்க்கத் தாயார் வெற்றுத் தொட்டிலை குனிந்து நோக்குவது போன்று, சவமான ராமுவை, குஞ்சு பார்த்து நின்றாள் . அவள் துக்கம் வாயைவிட்டு வரவில்லை. கல்லாகச் சமைந்து , பார்க்கும் பார்வையிலேயே இறந்தவள் போன்று நின்று இருந்தாள், அருகில் கிட்டு வந்தான் . அவனால் அவள் கண்களில் நீர் பெருகுவதைத் தடுக்கமுடியவில்லை. தாங்காத வருத்தத்துடன் தன் மனையானை அணைத்துக் கொண்டான்.

அந்தப் பிரியாத அணைப்பிலே அந்நிலையிலே தாங்கள் தனிச் சரீரம் பெற்றதான உணர்ச்சியைக் கொண்டார்கள் .............

கிட்டுவின் மனத்திலே தன்னுடைய இரு சிருஷ்டிகளை ஒருமிக்கப் பறிகொடுத்ததான எண்ணம் பரிகாசமாகவேபட்டது . எவ்வகை அல்ப மகிழ்ச்சி, இந்த சிருஷ்டியில் கொள்ளும் ஆனந்தம் . உயிர் கொடுக்கப்பட்டவுடனே அவை யாவும் உடனே அழிவிற்குத் தாமே எல்லாம் விரைந்து செல்லுகின்றன. சாசுவதமாகக்க கொள்ள வேண்டின் உணர்வுகளுக்கு விளக்கம் கொள்ளுவது ஏன் ?

தன்னுடைய காவியம் அழிந்ததில் அவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மலரினின்றும் பிரிந்து வதங்கிய இதழைவிட்டுச் சென்ற மணத்தை எங்கும் உணர்ந்தான். எதற்காக மலரையும் மணத்தையும் ‘ அவன் ’ ஒன்று சேர்த்தான். கேவலம் இது தொழில் செய்வதில் கொள்ளும் ஒரு ஆனந்தத்திற்காகவா ? ..........

இப்போது கிட்டுவின் முகத்தில் ஒரு அமைதி குடி கொண்டுவிட்டது . எதிர்பாராத உள்நோக்கு அவன் கண்களில் கண்டது. அவன் பேசும்போது வெளிவராத வார்த்தைகளை வலுக்கட்டாயப் படுத்தி இழுத்துப் பேசுவதுபோல் இருக்கும். தன் மனைவி குஞ்சுவை அவன் கனிந்து பார்க்கும்போது அந்தப் பார்வையையே சாசுவதத் தான் எண்ண முடியும்.

மின்னலைக் கணம் கண்டு குருடானவனாயினும் பிறவிக் குருடானவனாயினும் பிறவிக் குருடனுக்கும் அவனுக்கும் மேலெழுந்தவாரியாக வித்தியாசம் காணக்கூடாத வகையில்தான் தன் வாழ்க்கையை நடத்துகிறான் .

ஆனால், அவன் மளிகைக் கடையில் உட்கார்ந்து கொண்டு , பொட்டணம் மடிக்கத் துண்டுக் காகிதங்களை, ஆட்களுக்கு எடுத்துக் கொடுக்கும்போது, ஏன் அத்துண்டுகளை கண்ணெதிரே வைத்து சிறிது நேரம் உற்று நோக்குகிறான்...... ஆமாம் , அக்காகிதத்திணூடே, அதற்கு வெகு அப்பாலே ஜீவியக் காவியத்தை அவன் கண்கள் பார்க்கின்றன. என்றுமில்லாத ஜோதி அவன் கண்களில் காணுகிறது . சிறிது சென்று ஒரு அசட்டுச் சிரிப்பும் அவன் முகத்தில் படருகிறது. சிருஷ்டியில் கொள்ளும் ஆனந்தம் எத்தகையது என்பது அவனுக்கு அப்போது தெரியும்.- தினமணி மலர் 1937

தட்டச்சு - தீட்சண்யா. ராமாறுதல் - மௌனி

வலையேற்றியது - ரா ரா கு - 25-05-2014

நேற்று மாலையே, அவர்களுக்குத் தந்தி கொடுத்து விட்டான். ஆனால் அக்கம் பக்கத்தில், ஒருவருக்கும் சொல்லவில்லை. ஒருவருக்கும் தெரியவில்லை. காலை ஒன்பது மணி வண்டிக்குத்தான் அவர்கள் வர முடியும். 'யார் வந்தென்ன இப்போது.

நேற்று, எதிர்பார்த்த காரியமே போன்று, மனமும் நன்றாகவே இருந்தது. இரவு நன்றாகத் தூங்கினான். சூரியன் உதயமான பின்பே எழுந்தான். அவளுக்கு மிக அருகிலே, தான் படுத்திருப்பதை உணர்ந்தான். சிறிது ஆனந்தம் கொண்டான். அவள், தன் அருகில் படுத்திருப்பதைப் பார்த்தான். திடுக்கிட்டு, பயந்து எழுந்து வாயிலிற்குச் சென்றான். சிறிது நேரம் திண்ணையில் நின்றுகொண்டு, மேலும் கீழும் பார்த்துவிட்டு, உள் சென்றவன் ரேழியைக் கடக்காமலே, திரும்பி வாயிற்படியில் வழிமறைத்து, வீதியைப் பார்த்து நின்றிருந்தான்.

அவனை எப்படியோ, தாண்டித்தான், அவன் எதிரில் அவள் நின்றாள். அங்குமிங்கும் அசைந்து நின்று தோன்றினாள். அவன் கருவிழிகள், அவளைத் தொடர்வதே போன்று, சலித்து நகர்ந்து, சிற்சில சமயம் கண்களின் மூலையில் சொறுகி மறையும். திரும்பியும் அவளை இழுப்பது போல் விழி நடுவில் பதியும். அவன் மூளையும், யோசனைகளும், உயர்ந்து உயர்ந்து, உருகலுற்றது; அழியலுற்றன.

எல்லை கொள்ளா சாவதானம், சமாதானம், ஒருநிலை வரம்பிற்கு எட்டாமல் இருபுறமும், சிறிது சிறிது மிக அசைந்து, சஞ்சல பிரமை கொடுத்தன. அந்த நிலையில் சமாதானம் கொண்டவன போன்று, சாவதானமாக, வீதியை உற்றுநோக்கி அவன் நின்றான்.

காகம் ஒன்று, எதிர்வீட்டு, முன்கீற்றுச் சார்பில் பறந்து வந்து உட்கார்ந்தது. தத்திதத்திப் பறந்து, மாடிக் கைப்பிடிச் சுவரின்மீது உட்கார்ந்தது. விருந்தினர் வருகையைக் கத்தி அறிவித்தது. ‘ ஆமாம், ஒன்பது மணி ரயிலுக்குத்தான் அவர்கள் வருகிறார்கள் - ’ அது கத்தியது. சிறிது தூரம் பறந்து அந்தத் தென்னை மரத்து மட்டையின் மத்தியில் உட்கார்ந்தது. உடனே பறந்து மறைந்து விட்டது.

மறுபடியும் எதிரில் வீதிதான் .....

வடக்கத்தியான் சவுக்கைக் கட்டை வண்டியை ஓட்டிச் சென்றான். பாரவண்டியின் பளு உழலல்-சுழலும் சக்கரம், இருசுக் கட்டையில் மோதுண்டு சுழல மனமில்லாது ஓலமிட்டழும் சப்தத்தின் சலிப்பு கொம்பு இல்லாத இரண்டு மாடுகள் முன் பூட்டப்பட்டு வண்டியை இழுத்தன . அசட்டை, அலுப்பு, தலை ஆட்டல் வழி நடப்பல்ல. கழுத்தில் மணியற்று, சலங்கையற்று, மாடுகளின் சப்தம் அற்ற பளு இழுப்பின் தலை அசைப்புத்தான், இவன் கண்முன் தோன்றியது. பளுக்கொடுக்கும், அக்கட்டைகளும் பின்னால்தான் இருந்தன. ஆனால், மூக்கணையில் இருபுறமும் கால்கள் தொங்க, கையில் சாட்டை கொண்டு, குறுகிய சிறு துணி இடுப்பில் கட்டி, மாடுகளை ‘ஹை - ஹை’ என்று உதைத்துக் கொண்டிருந்த வண்டிக்காரனின் தோற்றத்தை நடுவில் கண்டான்

“ஏன் இவன் தெரிகிறான். மாடுகளும், அவன் ‘வா’வென்ற தலை அசைப்பும், பளு மிகுந்த காட்டு விறகுகளும் சுழலும் சக்கரமும் போதாதா - அர்த்தம் கொள்ள இவைகள் போதாதா - என் பளுவை யார் ஓட்டுபவன் ? அவனா , அவனா ? எவன் ?

“அவள் உள்ளே கிடக்கிறாள். படர்ந்த பிரபஞ்சத்தின் ஒளிமறைவில் ஒன்றி மறைய ...

“ பளு இழுக்க வாவென்று தலை அசைத்து நடக்கும் மாடுகள் மசையில்லாது சலிப்புற ஊளையிட்டழும் சப்தம். சுழலல் சக்கரம் உதைய குலுங்கிடும் வண்டியே ! எவ்வளவு தூரத்திலிருந்து வருவது ? எவ்வளவு தூரம் எத்தனை பேருக்கு, தத்தம் மனநிலையில் உன் தத்துவத்தை உணரத்தோன்றி ஊர்ந்து வருகிறாய். மறைந்து தொலைந்து போ ! உன் மறைவு, நிகழ்ச்சியைத் தெரிவித்து யோசனை கெடுக்கும் மறைவு , ஆனந்தமே. ”

வீதியில் அசட்டையாக நடதமுபோன அந்த ஆடு, வண்டியினால் மறைக்கப்பட்டு அது கடந்தபின் தோற்றம் கொண்டது, அதைப் பார்த்து நின்றான்.

அவனுக்குப் பசி தோன்றவில்லை.

காய்த்துப்போன தோளில் உறைபட்டு மிருதுவாகத் துவளும், மூங்கிற் கம்பின் இரு முனைகளிலிருந்து இரண்டு மண் குடங்கள் தொங்கின. கத்திக் கத்திக் கொண்டொருவன், குடங்களிடையே, தோன்றி மறைய நடந்தான். அவன் கண் முன்பு தெரிந்தது வெற்றுக் குடம் போன்றிருந்தது. அது தொங்கிய முனைக்குச் சிறிது தூரத்திலேதான், அக்கம்பைத் தோளில் தாங்கி இருந்தான். மெதுவாக, வெகு சமீபத்திலும் பூமியில் பட்டது அமுத்தலில் அசைந்து, அக்குடங்கள் மேலும் கீழும் ஆடின. வெற்றுக்குடமாயினும் சிறிது அதிக ஆட்டத்தில் பூமியில் தட்டி அது உடைபட்டால், பின்தொங்கும் பிறிதொன்றை மேன்நோக்கிக் கவிழ்த்துப் பாழ்படுத்தும் என்பதை உணர்ந்து அதை வெகு உன்னிப்பாய் பார்த்துச் சென்றான். அதை நெருங்குவதே போன்று மிக விரைவாகவும் நடந்தான். பின்னால் பின்னால், வெகு சமீபமாக தன் காலடியிலும் தட்டுப் படாது தொடர்ந்து வரும் அக்குடம் மதிக்கத்தக்கதே வெகு அருமையானதே ! ஆயினும் அவன் பார்வையைக் கொள்ளமுடியவில்லை. சிறிது ஆறுதல்தானே, எதிரில் வெற்றுக்குடம் என்பதில் ! -

அவனுக்குப் பசி தோன்றவில்லை, பதனிக் குடக்காரனும் குடத்திடைத் தோன்றி மறைந்துவிட்டான். “ எதிரில் மறையாது அவள் ஏன் நிற்கிறாள். சிறிது சிறிது மறைவு கொள்கிறாள். ஒதுங்கி மறைவு கொள்ளவில்லையே - ? எதிரில் தோன்றிய வண்ணமே மறைவு கொள்ளவில்லை ! மாறித்தான் தோற்றம் கொள்ளுகிறாள் ! விறகு வண்டி, ஆடு, மனிதன், மாறி மாறித்தான். ஒருவரும் பேசுவது இல்லை. ஒன்றும் சப்தம் செய்யாது ? ஆனால் உணர்ச்சிகள் ஊடுருவித் தோற்றம் கொள்ளுகின்றனவே - காண்பது கனவா ?

ஒரு மனிதன் தெருவில், வீட்டைக் கடந்து சென்றான். இடுப்பில் கட்டியிருந்த பட்டை ‘வார்பெல்ட்’ தெரிய வேண்டி, பளபளப்பு தார்ப்பட்டுச் சட்டையை உள்ளிட்டு, இடுப்பில் வெளுப்புவேட்டி அணிந்திருந்தான். ‘ஸாக்ஸோடு’ போட்டிருந்த அந்த இரண்டேகால் ரூபாய் ‘பூட்ஸ்’ நன்கு வெளித் தெரியவேண்டி, கீழே தொங்கும் வேஷ்டி இரு முனைகளையும் முழங்கால் வரையிலும் தெரிய, இரு கைகளில் பிடித்துக்கொண்டு நடந்தான். அடிக்கடி பக்கங்களைப் பார்த்து, வேகமாக நடந்தான். பச்சை உருமால் ஒன்றை, இடது தோளில் கீழே நழுவி விழும் தோரணையில், அலக்ஷியமாகப் போட்டிருந்தான்.

“ அவன் சிங்கப்பூரிலிருந்து வந்தவன் ! இப்போதுதானோ - ? அவன் பளபளப்புகளும் உடனே மறைந்துதானே போகிறது. அவன் கிடக்கிறான். சீ, சீ எவ்வளவு சிரிப்பு உண்டாகிறது ! ”

“கண்முன் கண்ணாடி அணுப் பூச்சிகள், பறந்து மேலே போகிறதே, அதோ - அதோ ! தென்னை மரத்தின் தலைதானோ - மா மரம் - ? கீழே ! சீ சீ ! அந்த மொட்டை மாடி வீடுதான் நிற்கிறது. மேலே மரங்கள் அப்படித்தானோ ! அந்தக் கருமையான சிறு மேகங்கள் மரங்களின் மேலே தங்கவில்லையா ? அவைகளை விட்டு, நடுவில் நீல நிறத்தைப் பூசி மேலே போகிறது. எதோ எல்லாம் ஒருங்குகூடி ஒருமித்த சதி செய்கின்றன. என்னையும் கூட்டி இழுக்கிறது. மறைகிறது. தோன்றுகிறது - மாயையாக மாறுபட்டுத்தான் போலும்.

“ ஆமாம் - எதிரில் இருக்கிறாளே - நிற்கிறாள், ஆனால் நகருகிறாள். பக்கத்தில் மறையவா - அவள் என் பார்வையில் நகர்ந்து மறையவா - ? மாறுபடவா - இல்லை. பக்கத்தில் இல்லை. மேலும் கீழும் தான். ”

எதிரில் அவ்வீடு. எதிரில் அவ்வீட்டின் தாழ்ந்த சார்ப்பு. மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவர். சுவரின் கீழ் சாளரத் துளைகள். மேலே மரங்களின் தலைகள், இன்னும் மேலே நீலவானத்தில் சிதறிய சிறு மேகங்கள்.

எதிரில் வீதிதான் -

“ பாரவண்டி - பதனிக்குடம். மறைவு காலத்தில் எதிரே அந்த நிற்கும் வீடுதான். அவளும் மறைகிறாள் - எதிரில் பார்த்த அவளும் - நில்லு ! நில்லு !! மறையாதே - சீ சீ, இல்லை - மாறுகிறாள் என மனதில் தானோ - மாறுகிறாள் ! ... மாறுதல்(?) ... மறைவது போன்று பக்கத்தில் ஒதுங்குகிறாளே ... ”

அவன் கண்கள் நேராகத்தான் நின்றன. கருவிழிகள் அவளைத் தொடர்ந்ததே போன்று கண்களின் மூலையில் மறைந்தன. அப்படியே வழி மறைத்து நின்றான். எதிர்பார்த்து நின்றான் - எவ்வளவு நேரம் ? திரும்பி இழுக்க அவன் கருவிழிகள் தோன்ற ...

உள்ளே அவள் கிடந்தாள். எதிரே வீதி ...

இவன் தாயார் வந்தாள். இவன் தகப்பனார் வந்தார். அவர்களும் வந்தனர். ஒன்பது மணி ரயிலில், வேறாகவே வந்தனர். தனித்தனியே தத்தம் எண்ணங்களில் மனமுடைந்து மௌனமாகவே வந்து சேர்ந்தனர். இவன், கருவிழி தோன்ற, எதிர் விழிப்பர்வையில், வழி மறைத்து வாயிற்படியில் நின்றிருந்தான்.

அவனை முன்னடைந்து, அவனைக் கட்டிக் கொண்டாள். “ என் கண்ணே - உனக்கும் இப்படியா ? - ” என்றாள். தழுவிக் கொண்டு அழுதாள்.

சொருகி மறைந்த கருவிழிகள், நடுவில் ஓடிவந்தடைந்தன. அழுகை முன் காணும், அவக்களை அசட்டுச் சிரிப்பை அவன் சிரித்தான். “ எப்படி - ? அவள் மாறினாளா ” - ‘ மறைந்தாளா ’ - என்பதைத்தான் வாய்விட்டுச் சிரித்தான் போலும், தாயாரும் அழுகையை நிறுத்திவிட்டாள். அவன் முகத்தைப் பார்த்தாள், பார்த்தவள் அப்படியே பார்த்து நின்றாள்.

அவர்கள், பக்கத்து வீட்டுப் புறத்திற்குச் சென்று மறைந்து விட்டார்கள். எதிரில் தோன்ற முடியாது வருந்தி, மறைந்து நின்றார்கள். இவன் தாயாரைத் தழுவி அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். படுத்துக்கிடந்த அவளைக் காட்டினான். காலால், சிறிது தொட்டு உதைத்து, எழுப்ப சிரித்தான். இப்படியாக வெகு நேரம் இல்லை. அம்மா, குனிந்து, கீழே அவள் மீது விழுந்து கதறினாள்.

மறைந்த அவர்களும் வந்து, திண்ணையிலும் உள்ளிலும், உட்கார்ந்தனர். மேல் துணியைக் கையில் எடுத்து, அதன் மேல் முகத்தை மறைத்துக்கொண்டு விசாரத் தோற்றத்திலேயே விளங்கினர்.

இவன் அழுதான். சொல்லிச் சொல்லி விடாது அழுதான். என்னவெல்லாமோ சொல்லி அழுதான். ஆனால் கண்டானோ இல்லையோ, மறைந்ததையோ மாறுதல் கொண்டதையோ, சொல்லாமல் அழுதான்.

2அடுத்த வருஷம் தைக் கடைசி வெள்ளிக்கிழமையன்று, தாயார் சுமங்கிலிப் பிரார்த்தனை செய்தாள். சிரத்தையாக பன்னிரண்டு மணிவரையில் ஈரப்புடவையுடன், காரியம் செய்து முடித்தாள். தள்ளாத அந்த வயதிலும் முழுவதும் தானாகவே செய்து வைத்தாள்.

முதல் இலையில் பலகைப் போட்டு, புதுப்புடவை வைத்த பிறகு, எல்லா பெண்டுகளும் உட்கார்ந்தனர். அப்போது அம்மா கண்ணீர் விட்டுத் தேம்ப ஆரம்பித்தாள். வேகமாக அறையினுள் சென்று மறைந்துவிட்டாள். சென்ற வருஷம் ஈன்ற அந்த பசுங்கிடாரிக் கன்றைக் குனிந்து தழுவிக்கொண்டு ரொம்ப அழுதுக்கொண்டிருந்தாள். அவள் ஈரப்புடவையும் காய்ந்து விட்டது. கன்றும் கழுத்தை வளைத்து முகத்தை அவள் முதுகிலே வைத்து சாந்தமாக நின்றது.

சுமங்கலிப் பெண்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அம்மா பந்தி விசாரிக்க உள்ளே வந்தாள் .....

அவன் பட்டினத்தில். தன் ஆபிஸில் வேலை செய்து கொண்டிருந்தான். எதிரே மேஜைமீது விரித்த புஸ்தகத்தில் எழுதிக்கொண்டிருந்தான். எதிரே நோக்கியபோது, ஜன்னல் வழியாக, எட்டி நின்ற ஒரு மரம் தெரிந்தது, அதன் தலை மேல் தங்கி நின்ற ஒரு சிறு மேகமும், மேல் சென்று மறைந்து விட்டது. ஒரு பெரு மூச்செரிந்து, குனிந்து எழுத ஆரம்பித்தான். ‘ தலை எழுத்தையா மாற்றி எழுதப் போகிறேன் - தலை எழுத்தைத்தான் எழுதுகிறேன். ’ என்று எழுதினான்.

எதிரே வீதி. அதை அவன் அப்போது பார்க்கவில்லை.

-மணிக்கொடி 1937

தட்டச்சு - ரா ரா கு

கி அ சச்சிதானந்தம் வெளியிட்டப் பதிப்பிலிருந்து.நினைவுச் சுழல் - மௌனி

வலையேற்றியது - ரா ரா கு - 08-06-2014

அவன் பட்டணம் வந்து சில நாட்கள் ஆகியிருந்தபோதிலும், அன்று மாலைதான் உலாவ வெளிக்கிளம்பினான். அந்தி மங்கல் வெளிச்சத்தில் நிழலின்றி நடந்தவன் பைத்தியக்காரனைப் போல , முன்னும் பின்னும் உன்னிப்பாய்ப் பார்த்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தான். ஒளிந்த இடத்தினின்றும் திடீரென்று வெளிப்பட்டவனாக அவன் தோன்றினான். உலகம் அவனுக்கு வெகு புதுமையாகத் தெரிந்தது.

ஒரு தரம் அவன் தலையை நிமிர்த்தி எதிரே நோக்கியபோது, நான்கைந்து பெண்கள் குதூகலமாகப் பேசிக் கொண்டு எதிரே வருவதைப் பார்த்தான். அவர்களுடைய குதிகால் உயர்ந்த ‘ பூட்ஸ் ’ அவர்கள் மூளையைவிடப் பளபளவென மின்னின. நாகரிகத்தில் நெளியும் அவர்கள் நடையோ வெனில், அவர்கள் தலை வகுடை விடக் கோணலாக அவனுக்குத் தோன்றியது. அந்தப் பெண்களின் ஒருத்தியிடைய கன்னம் குழிந்து சிறிது சிவப்பாக இருந்தது. அதைக் கவனித்த அவனுக்குச் சிரிப்பு வந்தது. தன் விடுதி அறைச் சுவரின் சுண்ணாம்புப் படல் விழுந்த இடம் அவன் நினைவிற்கு வந்ததுபோலும் ! ஏதோ விட்டுவிட்டு, எல்லோரும் குருவிகள் போன்று, உதட்டால் ஒற்றைப்பதத்தில் ஆங்கிலம் பேசிக்கொண்டு போயினர்.

அவர்களில் ஒருத்தி, இவனைக் கண்டதும் சிறிது திடுக்கிட்டவள் போல் சிறிது வாயைத் திறந்தாள். இவன் ஒன்றும் புரியாமலே வேகமாக அவர்களைக் கடந்து தன் அறையை அடைந்தான். கொஞ்சம் கொஞ்சமாக இருட்டுக் கண்டு கொண்டிருந்தது.

உள்ளே சென்றவன் மேஜைமீது இருந்த குப்பியினின்றும் கொஞ்சம் அதிகமாகவே பிராந்தியைப் பருகினான். விரித்துக் கிடந்த தன் படுக்கையின் மீது உட்கார்ந்தான். ..எழுந்து நடந்தான் . மனது மிகக் குழம்பியது.உள் நின்று எழுந்த ஒரு வேகம் உதட்டிலே பேச்சாக மாறியது. “ எதிரே நீ ? ஆமாம், நீதானே, நானும் தான். ” படுக்கையில் உட்கார்ந்துகொண்டு பக்கத்திலிருந்த பிடிலை எடுத்துக் கையால் மீட்டினான். அவன் மனது சொல்லிக்கொண்டிருந்தது, அவன் காதில் விழவில்லை.சோகம் கொண்டு சுற்றி, இருள் சூழ்ந்திருந்தது. பிடிலும் அதைத்தான் தொனித்துக் கொண்டிருந்தது. சிறிது சென்று எதிரே நோக்கியவன் யாரையோ பார்த்ததுபோல் விழித்துக் கொண்டிருந்தான். துக்கமுற்ற அவன் மனது ஏதோ பாடியது. கண்களில் நீர் அருவிக் கொண்டிருந்தது. ஒரு வகைப் பயம் கொண்டு விரல்கள் தடுமாறின. அடிமனத்தில் மூழ்கியது மெல்லிய படலம் போன்று மிதந்து “ இரவான இரவே- நீயா, வரும் சுவடற்று ” என இருளில் முணுமுணுத்தவன் எதிரே கண்டான். தெளிவற்று மங்கல் ஒளியில் அவள் நின்று கொண்டிருந்தாள். அவளுடைய முகம் திடீரென வாய்விட்டு அலறுதலில் கிடைக்கும் ஆறுதலை அவனுக்கு அளித்தது.

“ என்ன சேகரா - எப்போது வந்தாய் ?” என்று அவள் கேட்டபோது இவன் திடுக்கிட்டான்.

“ இல்லை, நான்கு ஐந்து நாளாயிற்று. நீ எங்கே இருக்கிறாய் என்பது தெரியவில்லை. உன்னைப் பார்க்க- ” என்றான்

அவன் அறையைச் சிறிது சுற்றி, இருட்டில் கவனித்ததில் அவன் மேஜையின்மீது இருந்த குப்பியை அவன் கண்டான்.

சிறிது சீற்றத்துடன் , “ சரி, அதோ என்ன ? ” என்றாள்.

“ ஒன்றுமில்லை ” என்று அவன் இழுத்தது ஒரு உளரல் போன்று கேட்டது. “ சரி, அதைக் கொட்டப் போகிறேன். நீ யாரென உனக்குத் தெரிகிறதா ? மாமா இருந்தால் இப்படி இருப்பாயா ? என்று பேசியவளுக்கு மேலே வருத்தத்தினால் பேச முடியவில்லை.

“ இனி இல்லை. இது மட்டும் - ” எனத் தலைகுனிந்து கொண்டே மன்றாடுபவன் போல் சொன்னான்.

சிறிது நேரம் அவ்விடம் பேசாது நின்று கொண்டிருந்தவள் திடீரெனத் திரும்பி, “ சரி, பிறகு பார்க்கிறேன் ” என்று சொல்லி வெளிச்சென்று தன் சிநேகிதிகளுடன் போய்விட்டாள்.

கமலா படித்துக்கொண்டிருந்த கல்லூரி வருட விழாக்கொண்டாட இருந்தது. அன்று தேக்கச்சேரி முடிவடைந்த பின் ஒரு மணிநேரம் சங்கீதம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கல்லூரி மாணவிகளிலே கமலாதான் மிகவும் நன்றாகப் பாடுபவளாகக்

கருதப்பட்டவள். மற்றும், சங்கீதப் பயிற்சிக்காக ஒரு வகுப்பு அக்கல்லூரியில் இருந்ததினால், பாடுவதற்கும் பிடில் வாசிக்கவும் மாணவிகள் நிறைய இருந்தார்கள். அந்த ஒரு மணி அவகாச சங்கீதக் கச்சேரிக்குக் கமலாவைப் பாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மற்றும் கமலாவே பிடில் வாசிக்கத் தெரிந்த ஒரு சிநேகிதியைத் தனக்கு வாசிக்க ஏற்பாடு செய்திருந்தாள்.

முதல் நாள் மாலை சேகரனைக் கண்டது முதல் , ஏதோ காணாமற்போன வஸ்துவைத் தேடி எடுக்க முயற்சிக்கும் ஒரு சிரமம் போன்று, அவள் மனது அடித்துக் கொண்டிருந்தது.அவனைப் பாலிய முதல் தான் அறிந்த விதம் ஒவ்வொன்றையும் கிளறிப் பார்த்தான்.மனத்திற்கு மட்டும் ஒன்றும் புரியவில்லை.

சேகரனுடைய தகப்பனார், கமலாவின் மாமன். அவர் ஒரு சீமானாகத்தான் இருந்தார். அவனுடைய சிறுவயதிலேயே அவர் இறந்துவிட்டார். மற்றும் சேகரனுடைய தாயார் சமீபத்தில், இரண்டு வருஷங்களுக்கு முன்புதான் காலம் சென்றாள். சேகரன் கமலாவிற்கு சுமார் ஏழு அல்லது எட்டு வயது மூத்தவனாக இருக்கலாம். சிறு வயதில் இருவரும் சேர்ந்தே சகோதர சகோதரியாக விளையாடினவர்களானாலும் சமீபமாக அதிகமாகப் பார்த்துக் கொண்டதில்லை.

காலையில் கமலா அவனைப் பார்க்கச் சென்றாள். அவன் அறையில் நுழையும்போது உள்ளிருந்து பிடில் சப்தம் வருவதைக் கேட்டுச் சிறிது வெளியிலேயே நின்றாள்.சிறிது கேட்டும், அவன் வாசித்ததின் மூலமாக, உயர்ந்த சாதகன் என்பதையும், அவன் ஞான நுட்பத்தின் மாதிரியையும் தெரிந்து கொண்டாள். அவள் உள்ளே நுழைந்தவுடன், சேகரன் திடுக்கிட்டான். கமலாவிற்கும் அதிகமாக அங்கிருக்கப் பிடிக்கவில்லை. அவன் இவ்வளவு கேவலமாகக் குடிப்பழக்கத்தை மேற்கொண்டான் என்று நினைக்கும்போது மிகுந்த வருத்தம் கொண்டாள். எவ்வளவோ உன்னதமாக இருக்கவேண்டியவன் எதற்காக இப்படிப்போய்விட்டான் என்பதே அவளுக்குத் தெரியவில்லை. மற்றும் தன் எதிரிலே அவன் அவ்வளவு சஞ்சலம் காட்டிக் கொள்ளுவதும் பிடிக்கவில்லை. எதிரே கண்டவுடன் , எதையாவது பேசவேண்டியவள்போல, “ சேகர், இன்று எங்கள் கல்லூரி வருட விழா... நான் பாடப் போகிறேன் ; நீதான் எனக்கு பிடில் வாசிக்க வேண்டும். தெரியுமா ?” என்றாள்.

அவன் “ சரி ” என்று சொல்லியது இவளுக்குச் சரியாகப்படவில்லை. மற்றும் அதே கணத்தில் தான் எதற்காக அவ்விதம் சொன்னோம் என்ற யோசனை எழ, அவள் சீக்கிரமே அவனைவிட்டு அகன்றாள்.

தேக்கச்சேரி முடிவடைந்து கொண்டிருந்தது. ஐந்து மணி ஆகப்போகிறது. சேகரனைக் காணோம். மிருதங்கக்காரன் வந்துவிட்டான். சேகரன் வரப்போகிறதில்லை என்று எண்ணி, தன் சிநேகிதியையே வாசிக்க ஏற்பாடு செய்தாள் கமலா. ஐந்து மணியிலிருந்து ஆறு மணிவரையிலும் அக்கச்சேரி நடைபெற வேண்டியது என நிகழ்ச்சிக் குறிப்பில் கண்டிருந்தது.

அன்று நல்ல கூட்டம். பட்டணத்தின் பிரமுகர்கள் அநேகமாக எல்லோரும் தம்பதி சகிதம் வந்திருந்தனர். எல்லோரும் வரிசையாகப் போட்டிருந்த ஆசனங்களில் கச்சேரி கேட்க அமர்ந்துவிட்டனர்.

கச்சேரி மேடைமீது வேறு வகையின்றிக் கமலாவின் சிநேகிதி ஏறும் சமயத்தில், சேகரன் வந்துச் சேர்ந்தான். மேடையில் காலியாக இருந்த ஒரு இடத்தை நிரப்பவே வந்தவன் போல் திடீரென்று அங்கே வந்து உட்கார்ந்தான். பிடிலை எடுத்துச் சுருதி சேர்த்துக்கொண்டான்.எட்டியிருந்தும் அவன் வாய் வாசனையைக் கமலா உணர்ந்தாள். கண்களும் அவன் நிலைமையை நன்குணர்த்தின.

கமலா, கச்சேரியை யதோக்தமாகவே செய்ய எண்ணி, முதலில் வர்ணம் பாட ஆரம்பித்தாள். ஒரு கணம் தாமதித்து சேகரன் சேர்ந்தான். இனிமையானதெனினும் திடீரென மிகுந்த இனிமையுடன் “ சரிசரி ” என இரண்டு தரம் அவன் வில்லை இழுத்துச் சேர்த்து வாசிக்க ஆரம்பித்தான். அப்போது சபையோரிடம் ஒருவகைப் பரபரப்புக் காண ஆரம்பித்தது.

அவள் ராக ஆலாபனையை முடித்தவுடன் இவனுக்குவிட்டாள். மூன்று நிமிஷம் வாசித்தான். நன்றாக வாசிக்கிறான் என்பதை உணர்ந்து, சபையோரிடம் தலை ஆட்டம் காணப்பட்டது.

தோடியில் அவள் கீர்த்தனம் எடுத்தபோது ஏதோ வெறிச்சென்று இருந்தது. இவன் பக்கம் கமலா பார்த்தபோது அவன் சும்மா இருப்பதைக் கண்டாள். அவனும் சேர்ந்து வாசிக்க ஆரம்பித்தபோது அந்த மண்டபம் நிரம்பியது மாதிரியாகத் தோன்றியது.

மது மயக்கம் அவன் ரத்தத்திலே கலந்து துடிப்பைக் கொடுத்திருக்கலாம். அவனுடைய மௌனம் கலைந்து சங்கீதமாக விகஸித்திருக்கலாம். எட்டிய ஆசனங்களில் பல வர்ணப் பட்டு வஸ்திரத்தில் பதுமைகள்போன்று சமைந்து இருந்தவர்களை அநேக ஸ்வரச் சித்திரங்களாக அவன் கண்டிருக்கலாம்.

ஆனால் அவன் அப்படி வாசிக்க இவைகள்தானா ? அவனுடைய ஜீவ உள்ளக் கிளர்ச்சியானது சங்கீதபாஷையிலே ஏதோ பேசுவதுபோன்றுதான் கமலா எண்ணினாள். தனக்கு ஏதாவது அது சமாசாரம் சொல்லுகிறதா என்று கவனிக்க அவள் சிறிது நின்றாள். அவன் வாசித்துக்கொண்டிருந்தான். ஆமாம், அது மாதிரி அவன் வாசித்ததே இல்லை.

அறியாது பந்தம் இறுகிக்கொண்டது. கண்டுகொள்ளாதவரையில் நிரடான முடிச்சாகத்தான் இருந்தது. அறிந்து கொண்டு அதன் கிடுக்கில் அமைதியை நாடும்போது நழுவிக்கொண்டது. யாராலும் கூடவரமுடியாத அவ்விடத்தை அடையும் ஆவலைத்தான் சப்தித்தது போன்று, கருணையையும் கடந்த உணர்வுயற்ற சிரிப்பைத் தான் ஒலித்தது அந்த நாதம் - “ ஆம், போகிறேன். உன்னால் முடியாது கடந்து தாண்டி அறிய. ”

மிகைப்பட்டதினால் ஒளிக்கப்பட்டவன் என்ற உணர்வு கொள்ளும் ஒருவகை இனிப்பு- இல்லை எனத் தடித்து நிரூபிக்கும் ஆர்வத்தில் அமைதியற்ற அலைகளைத்தான் அவள் மனத்தில் எழுப்பினான்.

ஹிருதயத்தின் சங்கீத ஒலி சப்தமின்றி வெளி வியாபகம் கொள்ளும் என்ற நினைப்பினால், அதை விடாது பிடித்து விரல் நுனி வழியே பிடில் தந்திகளிலே ஏற்றி நாதரூபமாக்கச் சிரமப்பட்டான். நீல வானத்தை அணுகி மறைந்த சூரிய ஒளியில் சலிக்கும் அநேக வித வர்ண மேகங்களைத்தான் காட்டி நின்றன அவன் பிடித்த ஸ்வர கற்பனைகள். உயரே பறந்து மறைந்தும், காதில் இனிக்கக் கூவும் இன்னிசைப் பறவைகளேபோன்று அவன் கீதம் சபையோர்களைப் பரவசமாக்கியது.

இறந்த காலத்தின் எதிரொலி இடைவிடாது அசரீரியாகக் கூப்பிடுவதாக எண்ணிக் கமலா கவனித்து நின்றாள் . அவள் கண்கள் தளும்பின. பார்வை மங்கிற்று. கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பாலிய நினைவுகளைத் தனக்கு வெகு சமீபமாகக் கண்டான்.

கார்த்திகை மாதத்தில் தன் வீட்டு வாயிலிலிருந்து கிழக்கே கண்ணுக்குத் தெரியும் வரையில் பச்சைப் பசேலென்ற நெற்பயிர்க் கடலின் கொந்தளிப்பு- வெட்டுக் கிளியின் இடைவிடாதச் சப்தம் - வரப்புகளின் நடுவே, பார்வை மறையும் வரையில், திட்டுத்திட்டாகக் குட்டையான கருவேல மரங்கள் படர்ந்து நின்றிருந்தன. எட்டிய சேரிகளின் தூரத் தோற்றம், சாசுவதத்திலே அழுந்தப் புதைந்தன போன்று கண்ணெதிரே நின்றன. ஆகாயம் மேக மறைப்பினால் மந்தமாகத் தோன்றும் - மழை அடிக்கும்போது வீட்டினுள் தன் தாயாரின் குரல், தனக்கு மிகுந்த பிரியமான குஞ்சுப் பாப்பாவின் இனிமையான மழலைச் சொற்கள்...

அர்த்தமற்று இவைகள் மனத்தை இன்பமயமாக்கின. அளவுக்கு மீறிய அதிக இன்பத்திலும், உணர்வு சோர்வு கொள்ள வகையில், கமலா கேட்டு நின்றாள். அவள் கண்களில் பனிப்படலம் போன்று நிச்சயமற்ற நினைவுகளின் ஞாபகம் மிகுந்தது. அவன் கானம் அவளுக்கு ஏதாவது செய்திகொண்டதா ? அவள் கவனித்துக் கொண்டிருந்தாள்.

கல்லூரி சங்கீதப் பயிற்சியாளர் மூக்குக் கண்ணாடியுடனும், சரிகை அங்கவஸ்திரத்துடனும் முன்னே உட்கார்ந்திருந்தார். அவர் அடிக்கடி நழுவி நழுவிக் கீழிறங்குவதுபோல் மூக்கின் மேலே சரிந்த தனது மூக்குக் கண்ணாடி மைலை இழுத்து விட்டுச் சரி பண்ணிக்கொண்டார். ஆனால் நழுவி நகர்ந்து, ஸ்திரமற்று, மேலோங்கிச் சிதறிச் செல்லும் அவரது சிந்தையை அவரால் சரிசெய்துகொள்ள முடியாதவர் போலத்தான் அவர் விழித்துக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதற்குப் பிறகு ராகமாலிகை பாட ஆரம்பித்தாள் கமலா. “ ராகமாலிகை எடுத்திருக்கிறாள் ஸார் !” என வறட்டுத் தவளைபோன்ற குரலில் விழி பிதுங்கும்படி சொல்லக்கூட முடியவில்லை அந்த புரொபஸருக்கு. பாவம் அவர் கைகள் தான் அடிக்கடி கண்ணாடியை நாடின.

சேகரின் உதடுகள் சோர்வு கண்டு பிரிந்தன. அவன் கண்கள் பிரகாசம் அடைந்தன. மிக அழுத்தமாக லயித்துச் சேர்ந்தே வாசித்து வந்தான். இரவின் இருள் வெளியில் பயந்த இரு குழந்தைகளின் மௌனமான பிணைப்புப்போல் இருந்தது அந்தச் சேர்ந்த வாசிப்பு.

நடுவே எதையோ கண்டு திடுக்கிட்டு “ அதோ அதோ” என்று ஒன்று வீரிட்டதுபோன்ற குரல் கேட்டது. சேகரன் மட்டும் வாசித்துக் கொண்டிருந்தான், “ ஆம் நான் போகிறேன். இதோ போகிறேன். எட்டிய தூரமல்ல- யாவராலும் தொடர முடியாத- அங்கே ! ” திருப்பித் திருப்பி இதையே அவன் பிடில் சொல்லிக் கொண்டிருந்தது......

அவன் பிடிலைப் பெட்டியினுள் வைத்து எடுத்துக் கொண்டு சாவதானமாக வெளியேறினான்.

இரவு அவன் அறையை அடைந்தத்தும் அவன் மனது நிதானமின்றிச் சலித்தது. மிச்சம் மீதி குப்பியிலிருந்ததைக் குடித்தான். மனது மிக பீதி அடைந்த நிலையில் உட்கார்ந்தான். மறுபடியும் தன் பிடிலை எடுத்து வைத்துக்கொண்டு வாசித்தான். அலுப்பும் சோகமும் தந்திகளினின்றும் வீறிட்டன. சேகரன் தன்னுடைய பழைய நிலையை அடைய வேண்டினான். அப்படியாயின் தன்னால் எவ்வகை நிலையில் வளர முடியும் என்பதை எண்ணினான். உலகிலே ஒளிக்கப்பட்டவனேபோன்று இருத்தலை மிக வேண்டினான். ஆனால் இப்போது எங்கு ஒளிந்து கொண்டிருக்க முடியும் என்பதுதான் புரியவில்லை. போவதாகத் தோன்றும் இடமோ எல்லையற்றதாக இருந்தது. செய்ததைத் துடைத்து மறைக்கும் வல்லமை இல்லாததினால், தான் செய்த ஒவ்வொரு காரியங்களின் மதியீனத்தையும் கண்டான்.

அன்று இரவு மழை நன்றாக அடித்து நின்றது. அவன், மறுநாள், அதிகாலையிலே எழுந்தான்.

வெளியில் உட்கார்ந்து கத்திக்கொண்டிருந்த அநேகம் பக்ஷிகளை அவன் பார்த்தான். விடுபட்ட நாணினின்றும் அம்பு பறப்பதுபோல் கீச்சிட்டு விர்ரென்று ஆகாயத்தில் எழும்பி மறைந்தன சில. மற்றும் சில, கத்திக் கொண்டே தரையைத் தொடும் வகையில் சிறகு விரித்து இரை தேடப் பறந்தன உலகத்தில் புது ஒளி பரவுவதாகச் சேகரன் நினைத்தான். வீதிகள் மழையினால் சுத்தமாக்கப் பட்டிருந்தன. மேலே வானம் நிர்மலமாகத் தெரிந்தது. சாலை ஓரங்களில் நின்றிருந்த ஒன்றிரண்டு மரங்கள் ஆனந்தக் கண்ணீர் உதிர்ப்பதேபோன்று ஜலத்துளிகளைச் சொட்டி நின்றன. காலைச்சூரியன் உதயமானான். சேகரன் விடுதியை விட்டு வெளியேறினான்.

அன்று சாயந்திரம் கமலா, சேகரனைக் காணவந்தாள். அவன் இருந்த அறை காலியாக இருந்தது.

கல்லூரி விடுதியின் மேல் மாடியில் இரவு வெகு நேரம் வரையில் அவள் தனியாக உட்கார்ந்திருந்தாள். சந்துஷ்டி அற்ற உலகினின்றும் எவ்வளவு தூரம் விலகி நிற்க முடியும் என்று நினைப்புள்ளவைபோல் எண்ணிலா நக்ஷத்திரங்கள் உயரே அமைதியில் பிரகாசித்திருந்தன. எட்டிய மாதா கோவில் மீது நின்ற சிலுவை, ஆன்மாக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் கையை விரித்து ஆசீர்வதிக்கும் பாவனையில் தோன்றியது. ஒரு குடிகாரனுடைய உளறல் சப்தம் தூரத்தில் மறைந்து கேட்டுக்கொண்டிருந்தது. உலகத்தின் சிறுஒளிக்காட்சி நிரம்பிய மனத்தில் தளும்பிய கண்களால் மெழுகப்பட்டது போன்றிருந்தது. ஒன்றும் நன்றாகத் தெளிவுபடாது எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. மனது விரிவாகி எட்டிய வெளியில் சென்றது.

அவள் சிநேகிதி படியேறி வந்து கொண்டிருந்தான். மெதுவாக நெருங்குவது இவளுக்குத் தெரியவில்லை. எங்கேயோ இருந்து, ஒளிந்ததை தேடித் தருவித்து அழைத்ததை, அது மறைந்தும் சஞ்சலம் கொடுப்பதற்குக் காரணம் ?

சேகரன் எங்கு சென்றான் என்பது தெரியாததனாலா இவ்வளவு மனச்சஞ்சலம் ? அல்லது அவனிடம் ஏதாவது ரகசியம் அவளால் பகரப்பட்டதாக நினைத்து அவன் இழப்பில் சஞ்சலமா ?

அவனிடம் என்ன ரகசியம் தன்னால் கொடுக்கப்பட்டது என்பது புரியவில்லை. ஏதோ அது மாதிரியான எண்ணம் அவள் மனத்தில் உண்டானது உண்டு. அவன் மறைந்துவிட்டான் என்பதில் ரகசியமும், வெளிக்காணாது மறைந்தது என்ற எண்ணத்தில் சிறிது மன ஆறுதலும் கொண்டாள். ஆனால் அவன் மறைவு இவளுக்கு ஒரு வகையில் அமைதியைக் கொடுத்தது.

தன் மனத்தில் புரியாது புறம்பாக மறைந்து நின்ற ஒரு உணர்வு எழுப்பப்பட்டதுதான் இவ்வகை மனக்கிளர்ச்சிக்கு ஆதாரம் போலும் ! “ என்ன எண்ணம், அறியாத வகையில் ரகசியமெனக் கருதிய எண்ணம் அவனோடு பகிர்ந்து கொண்டேன் ! வெளியே தெளியத் தோன்ற முடியாதது, உள்ளே இருந்ததா ? இந்தப் புரியாத அமைதியின்மைக்குக் காரணம் ?” தன்னுடைய மனதே பிளவுக் கொண்டு, ஒன்றையொன்று ஒன்றுமில்லாததற்கு பரிகசிப்பதுதானா ? ...

அவளால் யோசிக்க முடியவில்லை. முடியாததையும் உணர முடியவில்லை. வட்டத்தைச் சுற்றிச்சுற்றி, ஆரம்ப இடமே முடிவிடமாகச் சுழன்று விரிவு பட்டு, சிறிது மனவெழுச்சி கொண்டு , பிறிதொரு சுழலில் அகப்பட்டான். அகண்டத்தை பரிணமித்து நிற்கும் சுழற்சிக்கு விரிவுபட அவளுக்கு மூளை வன்மையில்லை. வேகமின்றிக் குழம்பும் சுழலில் அகப்பட்டு, தடுமாற்றத்தில் ஆதிநிலையிலும் அடிப்பட்டு போவதைத்தான் கண்டாள். தன் பெண்மையின் வீழ்ச்சியை நன்கு உணர்ந்துகொண்டாள்.

அவள் சிநேகிதி வெகு சமீபம் வந்துவிட்டாள். அவளைத் தட்டி, “ என்ன கமலா , எவ்வளவு நேரம் மேலே இருக்கிறாய் ? வா , கீழே போகலாம் ” என்று சொல்லிக் கீழே அழைத்துச் சென்றாள்.- மணிக்கொடி 1937

தட்டச்சு : தீட்சண்யா ரா

பிரக்ஞை வெளியில் - மௌனி

வலையேற்றியது - ரா ரா கு - 11-06-2014

‘ அதோ பார் அந்தப் பெண்ணை ’ என்றான் சேகரன்.

‘ பெண்களை ...? ’ என்று திருத்தினான், அவனோடு கூடப் போய்க்கொண்டிருந்த, அவன் நண்பன் கிட்டு சிரித்துக்கொண்டே. இருவரும் மணற்பரப்பைக் கடந்து, சமுத்திரக்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். ஆங்காங்கே, மங்கும் மாலை ஒளியில் வசீகரத்தோற்றம் கொண்டு, அநேகர் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அன்று கடற்கரையில் அதிக கூட்டமில்லை. கொஞ்சதூரத்தில் கடல் அலை மடியும் கரையின் சமீபமாக, மூன்று பெண்கள் அவர்கள் பக்கம் பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்துக்கொண்டே, தன் நண்பன் கிட்டுவுடன் பேசி நடந்துவந்த சேகரன் ‘ எனக்கு பெண்களைப் பார்க்கும் வழக்கம் கிடையாது, அதோ அந்தப் பெண்ணைத்தான் சொல்லுகிறேன் ’ என்று மறுபடியும் சொன்னான். சேகரன், பார்வையில் குறிப்பிட்ட பெண்ணை கிட்டுவால், அம்மூவரில் யார் என்று தெரிந்து கொள்ளமுடியவில்லை. கிராம வாழ்க்கையில் அலுப்படைந்து அதைத் துடைத்துக்கொள்ள, பட்டணத்தில் சில நாட்கள் தங்கிப் போகலாமென்று வந்த சேகரன் பேச்சுகள், அவன் பாலிய சிநேகிதன் கிட்டுவால் கூட, சில சமயம் புரிந்து கொள்ளமுடியவில்லை. மற்றும் சமீப சில நாட்களாக சேகரன் போக்கும் ஒரு விதமாக கிட்டுவிற்குத் தோன்றியது.

‘ யாரைச் சொல்லுகிறாய் ...? வாயிலிருந்து தப்பி ஓடும் பற்களை, வெளியில் விடாது தடுத்து விழுங்குகிறவளையா ... பிச்சல மயிர் தலையிலிருந்து பறந்து போகாது இருக்க இரட்டைப் பின்னலாகத் தெரிவதையா ?’ எனச் சொல்லி நிறுத்தினான் கிட்டு. பேச்சில் கேலி படர பேசினானே ஒழிய, இக்கற்பனைகள் அவர்களை ஆழந்து குறிக்கும் உவமைகளல்லாது ஏதோ மேலெழுந்த வாரியாக, பிறர் கேட்டுச் சிரிக்கவேண்டுமென்பதற்காகத் தான் இருந்தன. மேலும் மற்றுமொரு பெண்ணிடம் இவன் கற்பனைகள் ஓடவில்லையோ, அல்லது அந்த பட்டணச் சோதா மோஸ்தரில் கற்பனைகளைக் காண முடியவில்லையோ, எதினாலோ அவன் பேச்சு நின்றது.

‘ சரி கிட்டு நீ குறிப்பிட்ட பெண்களைக் கண்டு கொண்டுவிட்டேன். அவர்களைச் சொல்லவில்லை, நான் பார்க்கவுமில்லை. அவர்கள் நடுவில் இருக்கிறாளே அவளைப் பார்த்ததும் உனக்குத் தோன்றுவதைச் சொல் ... பட்டண ரீதியில் முடியாவிட்டால். தமிழ்ப்பண்டிதர் பேச்சிலும் கொஞ்ச முயன்று பார் ..........’ என்றான் சேகரன்.

‘ அது முடியாதப்பா ... முடிகிறதா என்று பார்ப்பதற்கும் என்னால் முடியாது. நான் முறையாகத் தமிழ் படிக்க வில்லையே ’ என்றான் சேகரன்.

‘ இந்த வகையிலாவது நீ செய்தது ஒன்று சரி ... இல்லாவிட்டால், எழுத்தாலும் பேச்சாலும் பாயைப் பிராண்டிக்கொண்டிருப்பாய் ! .... நான் எதையோ சொல்லும்போது, நீ எதையோ பேசி என் எண்ணம் போகும் திசையை மாற்றிவிட்டாய். சரி, அது போகட்டும், அதோ அந்தப் பெண்ணைப் பார். உனக்கு என்ன தோன்றுகிறது, உன் உவமைகளும், பேச்சுக்களும் அவளிடம் எவ்வளவு பொருத்தம் காணுகிறது. பார்க்கலாம் ’ என்றான் சேகரன். அப் பெண்ணை உச்சந்தலையிலிருந்து, கால் வரை தடவிய கிட்டுவின் பார்வையில் பட்டது ஒன்றுமில்லை. அவள் தோற்றம், அழகு, வசீகரம் எல்லாம் இவனை ஒரு பிரமிப்பில் ஆழ்த்தியது. அவள் சௌந்தரியம் எதில் அடங்கி, கேட்காது முணுமுணுக்கிறது என்மது தெரியவில்லை. மொத்தத்தில் பார்வையினின்றும் உதறமுடியாது நிற்கும், விடுவிக்க முடியாத ஒரு மௌன ஜீவப் புதிர் போன்று விளங்கினாள். பார்ப்பவர் மனது கொள்ளும் எந்தப் பாவனையையும் ஏற்று நிற்பவள் போன்று இருந்தாள். இவ்வளவு அழகி உலகிலிருக்க முடியுமோ என்று ஜடமாக பிரமித்துப் பார்த்து நின்றான் கிட்டு. அவன் தோளைப் பிடித்துக் குலுக்கி - அவனை உயிர்ப்பிக்க வேண்டிய நிமித்தம் போலும் - சேகரன் சொன்னான் ... இவளைப்போல் பார்த்ததில்லை என அவளைப் பார்த்து பிரமித்து ஜடமாக நிற்கிறாயே ... கற்பனைகளுக்கு இடமாக முடியுமோ எங்கேயோ எப்போதோ கண்டதொன்று, மனத்தடியில் மறந்தும் கிடக்கிறது. அதைத் தேடும் ஆர்வம் கண் விளிம்பில் ஒட்டிக் காத்திறுக்கிறது; இவளைப் பார்க்குங்கால் கண்களில், முகத்தில் பரவி, ‘ இதுதான் ’ .. எனக் களி கொள்ளுகிறது .. எந்த அதிசயமும், பிரமிப்பின்றி ஆனந்தமெனப்படுவது இவ்வகையில்தான் .. எனக்கு புரியும்படி சொல்ல வரவில்லை. அவகாசமும் அவசரப்படுகிறது ’ ... எனப் பேசிய சேகரன், சிறிது மௌனமானான். அவளை ஒரு தரம் பார்த்துவிட்டு... ‘ இவ்வகையில் அவளைப் பார்ப்பதில்தான், அவள் கற்பனை ஊற்றென உன் ஒவ்வொரு ஜீவ நாடியிலும் துடிப்பில் பரவுவாள் ... ‘ எனச் சொல்லி நிறுத்தினான்.

‘ சேகரா, உன் மூளை வன்மையும், உணர்வு வேகமும் எனக்குத் தெரியும், கற்பனைகளில் நீ உணர்ச்சி வசமாவது, உன்னை எங்கு கொண்டு செலுத்துமோ தெரியவில்லை எனக்கு .. ’ என்று கிட்டு கொஞ்சம் வருத்தம் கலந்த குரலில் சொன்னான்.

‘ கிட்டு, நீ சொல்லுவது ஒரு வகையில் சரியெனப்படுகிறது .. சமீப காலமாக, எனக்கு ஒன்றுமே புரிவதில்லை .... சுசீலாவைத்தான் உனக்கு நன்றாகத் தெரியுமே, அவளை மனைவியாக அடைந்தது என் பாக்கியமென்றாலும் தவறியே இவ்வுலகில் பிறந்த அவள், என்னை அடைந்ததும் அவளுக்கு ஒருவித பாக்கியம்தான். அவளை நான் இப்போது பார்க்கும்போது, என்னென்னவோ தோன்றுகிறது .... மனைவியை கணவன் பார்ப்பதில் என்னென்னவோ எல்லையற்று தோன்றவிருக்கிறது. சிறிது காலமாக, என் பிரியம் அவளிடம் அளவு கடந்துவிடுகிறது ... உடனே மனது ஒரு பயம் அடைகிறது... பயம் என்று சொல்வது சரியல்ல. மனதில் ஒரு விநோத பயங்கரம் காணுகிறது. அந்த பயங்கரத்தில், ஒரு வசீகரமும் காண முடிகிறது போலும். கிட்டவும் இழுக்கிறது, எட்டவும் துரத்துகிறது. இது, இப்போது என் மனைவி சுசீலா செய்கிற வேலை...குடும்பக்காரியங்களில் எனக்கு அடிக்கடி அலுப்பும் சலிப்பும் தோன்றுகிறது. இங்கு வந்து சில நாள் தங்கிச் செல்வதில் மனது கொஞ்சம் லேசாகும் என எண்ணித்தான் இங்கு வந்தது...இங்கேயும் பெண்ணைப் பார்க்கும்போது அவளைக் காணும் தோற்றம் கொள்ளுகிறேன்...’ ஒரு வேகத்தில் பத்து தப்படி நடக்குமுன் இவ்வளவையும் பேசிவிட்டான். ஆனால் அதற்கடியிலும் ஒரு நிதானம் தெரிந்தது. சிரித்துக்கொண்டே கிட்டுவைப் பார்த்து, ‘ ஏதோ உளறுகிறேன்-நீ ஒன்றும் நினைத்துக்கொள்ளாதே ... அதோ நடுவில் உட்கார்ந்து இருக்கிறாளே, அவளைத் தான் சொன்னேன். சமீப காலமாக சுசீலாவைப் பார்த்தால் எனக்கு என்னவோ தோன்றுகிறது என்று சொன்னேனே. அதுதான் இவளைப் பார்க்கும்போது கொஞ்சம் தெளிவடைவதுபோல தெரிகிறது. என்ன என்பதுதான் புத்திக்கு புலப்படவில்லை. அதைத்தான் உன்னிடம் சொன்னேன். உனக்கும் நன்றாகப் புரிந்து இருக்கும் ! ... உன்னிடமில்லாமல் வேறு யாரிடமாவது சொன்னால் தவறாகவும், கேவலமாகவும் என்னை நினைப்பார்கள் ... அதோ அவளைப் பார் .. அவள் அழகு எவ்வளவு வசீகரமாக துணிவு கொண்டு தாக்குகிறது. அவள் கலியாணமாகத கன்னிப்பெண். பெண்மை எனப்படுவது அவள்தான் போலும். எவ்வளவு பயங்கர சக்தி பெண்மை என்பது உனக்குத் தெரியுமா ? பெண்ணென்றால் ஒருவனுக்கு மனைவியாகத்தான் வேண்டும். பிருமாண்ட வெளியில் உருக்கொள்ளும் பெண்மையை, சட்டத்திற்குட்பட்ட சிறு கற்பலகையில், மனைவியென சித்திரம் வரைந்து இன்பமடையப் பார்க்கிறான் கணவன். அவளிடம் பெண்மையைப் பார்ப்பதோ, பயம் கொள்ளுவதுதான் ... என்ன கிட்டு, நீ எப்போதாவது உன் மனைவியைக் கண்டு பயம் கொள்ளுவது உண்டோ ’ என்றான், சிரித்துக் கொண்டே சேகரன்.

இவர்கள் பேசிக்கொண்டே அப்பெண்கள் சமீபமாக வந்துவிட்டார்கள். தங்கள் பேச்சு, அவர்கள் காதில் விழுந்து இருக்குமோ என்ற சந்தேகம் கொண்டு திடுக்கிட்டுப் பேச்சை நிறுத்தினர். இசைந்து தொடரொலியெனக் கேட்டு வந்த ஒரு சப்தம், இவர்கள் பேச்சை நிறுத்தியதும், திடீரென மறைந்ததான தோற்றம் கொண்டனர். பேசிக்கொண்டிருந்த அப்பெண்களும், இவர்களைச் சமீபத்தில் கண்டதும் இவர்களைப் போன்றே பேச்சை நிறுத்தினர் போலும் ஒருவர் ஒருவர் தத்தம் பேசியது மற்றவர் காதில் ஒருக்கால் விழுந்து இருக்குமோ, என்ற சந்தேகத்தின் சஞ்சலத்தில், ஒருவரை ஒருவர், ஓரக்கண்ணால், சிறிது புன் சிரிப்பில் மாறி மாறிப் பார்த்துக்கொண்டனர். இருவருக்கு, ஒரேவிதமான உணர்வு பிடிப்பு ஒரே சமயத்தில் உண்டாவதின் நிமித்தமாக, அவர்களிடையே ஒரு சூக்ஷுமமான பிடிப்பு, அவர்களையறியாமலே ஏற்பட்டு விடுகிறதுபோலும். மேலும் அப்பிடிப்பு, பின் சமய சந்தர்ப்ப விசேஷங்களைப் பொருத்து, இறுகவோ நழுவவோ, மற்றும் என்னென்ன விதத்தில் பாதிக்கவோ காத்து நிற்கும் போலும்.

மறுநாள் பகல் ஒரு மணி சுமாருக்கு சேகரன் காப்பி சாப்பிட, ஒரு ஹோட்டலுக்குப் போய்க் கொண்டிருந்தான். அந்த ஹோட்டல் வாயிலில் அப்பெண்ணை யதேச்சையாகச் சந்திக்க நேர்ந்தது. வியப்பில் ஒருவரை ஒருவர் சிறிது பார்த்து நின்றனர். இருவர் முகத்திலும் ஒரு சிரிப்பு படர்ந்தது.

‘அவர்கள் !?’ என்று அப்பெண்ணைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, சேகரன் கேட்டான். அதைத் தொடர்ந்து அவள் ‘ அவர் !? ’ என்று கேட்டுவிட்டு, மேலும் ‘ இது மாலை வேளை அல்ல ; கடற்கரையும் அல்ல ; அவர்களுடன் பேசி பொழுது போக்க ’ என்றாள்.

‘ சரிதான் கொஞ்சம் காப்பி சாப்பிட்டுவிட்டு போகலாமே .. ’ என்றான் சேகரன்.

‘ வேண்டாம் இப்போது ... பிறகு பார்த்துக் கொள்ளலாம்... ’ என்றாள் அப்பெண்.

‘ சரி, சாயங்காலம் பார்த்துக் கொள்ளலாம் ... ? ’ என்றான். தலையை அசைத்துவிட்டு, அப்பெண் ஒரு அவசரத்தில் போய்விட்டாள். அவள் சென்றவுடன், சிறிது நேரம் சேகரன் அவ்விடத்தைவிட்டு அகலாமல் நின்றிருந்தான். ஒரு இன்பக் கனவு கண்டதான ஒரு தோற்றம் கொண்டான்.

அன்று மாலை, சேகரன் மட்டும் தனியாக கடற்கரைப் பக்கம் போக நேர்ந்தது. சிறிது தூரத்திலிருந்து முதல் நாள் உட்கார்ந்து இருந்த இடத்தில் உட்கார்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை, கவனித்தான். அவர்களருகில் நெருங்கியதும் , ‘ வெகு நேரமாகக் காத்து ... ’ என்று ஆரம்பித்தவன், சிறிது தயங்கி ‘வந்து நேரமாகிறதோ ...’ என , மாற்றிக் கேட்டான். அப்பெண்கள் சிறிது திடுக்கிட்டனர். அப்பெண் ‘ வந்து கொஞ்சம் நேரமாகிறது ’ என்றாள். அவர்களுக்குக் கொஞ்சம் தள்ளி இவன் உட்கார்ந்து கொண்டான். அப்பெண் மற்றவர்களைப் பார்த்து, ‘ அவரை, மத்தியானம் டவுனில் சந்திக்க நேரிட்டது’ என்று குரலில் ஒரு பாவமும் தோன்றாவகையில் சொன்னாள். ஒரு கயிறு கொண்டு, இருவரையும் சேர்த்து பிணைத்து போன்று அவ்விரு பெண்களும் இவ்விருவரையும் மாறி மாறிப் பார்த்தனர்.

பானு, சுசீலா, சுமதி இம்மூவரும் வசதியான, மூன்று கௌரவக் குடும்பப் பெண்கள். படிப்பு முடிந்தவுடன், மேற்கொண்டு செய்வ தென்னவென்பது, இவர்களுக்கும் இவர்கள் பெற்றோர்களுக்கும் புரியவில்லை போலும். மாலை நேரத்தில் பொழுது போக்குவதற்காக, கடற்கரை சென்று பேசி காலம் கழிப்பது வழக்கம். சேகரன் இவர்கள் கோஷ்டியில், மாலைப் பேச்சில் கலந்து கொண்டதில் இவர்களுக்குப் பொழுது போவது சிறிது லேசாகியது. சேகரன் பேச்சுகள், கேட்க சுவாரஸ்யமாக இருக்கும். அவன் நல்ல குணமும் இவர்களுக்குப் பிடித்ததாக இருந்தது. அம்மூவருக்கும் இவனிடம், அவர்களை அறியாதே ஒரு பிரியம் ஏற்படலாயிற்று. இக்குறுகிய கால பழக்கத்திலும், அவனை வெகு நாளாகத் தெரிந்த ஒரு நண்பனென அவர்கள் எண்ணலாயினர். இதுவரையிலும், யார் யார், எவர் எவர் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளாமலும், பெயர் என்ன வென்று கேட்டுக்கொள்ளாமலும் தான் பழகி வந்தனர். சந்தித்தவுடன், முதலில் இவ்வகைப் பேச்சிற்கு இடமில்லாது போய்விட்டால், பிறகு கொஞ்சம் பழக்கமானவுடன் இவ்வகையில் கேட்டுக்கொள்ளுவது ஒரு அலௌகீம் தான்.

ஒருநாள் சேகரன் சிறிது பதட்டத்தில் காணப்பட்டான். அப்பெண்களில் சுசீலாவைப் பார்த்து ஏதோ பேச வாயெடுத்தவன், ‘ என்ன சுசீலா ... ... என்றவுடன் திடுக்கிட்டு பேச்சை, எட்டிய வெளியை நோக்கியபடி நிறுத்தினான். இப்பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களும் ஆச்சரியமடைந்தனர்.

கொஞ்சம் பரிகாசமாகச் சிரித்துக்கொண்டே பானு சேகரைப் பாரத்து, ‘ உங்கள் பெயர் என்னவோ ... ’ என்றாள். இவளைப் பார்த்துத் திரும்பிய சேகர், ‘ சேகர் .. அப்பெண்ணின் பெயர் ? ’ என்றான். ‘ நீங்கள் இப்போதுதான் சுசீலா என்று சொல்லிவிட்டு, என்னைக் கேட்கிறீர்களே ’ என்றாள். ‘ இல்லை, எனக்கு இது வரையில் தெரியாது ’ என்றான்.

சிறிது சென்று, ஒரு நிதானத்தில், ‘ நீங்கள் ஊஞ்சல் ஆடுவது உண்டோ, ஊஞ்சல் விளையாட்டுத் தெரியுமோ ? சிறுவயதில், அப்படியாக ஒருவரை ஒருவர் ஊஞ்சலில் வைத்து, நீங்கள் வீசி ஆட்டி விளையாடி இருக்கலாம். வேகத்தில், கிட்டவும் எட்டவும், ஆட்டுபவருக்கு ஊஞ்சலில் இருப்பவர்கள் வந்துபோய்க் கொண்டிருப்பார்கள். கிட்ட ஒருவராகவும், எட்ட ஒருவராகவும் ஊஞ்சலில் இருப்பவர் ஒருவரே தோற்றம் கொடுத்தால், அந்த ஊஞ்சல் விளையாட்டு இன்னும் எவ்வளவு விநோதமாகத் தோன்றும் ? முன்பு நான் ஒரு உருவை வைத்து இருவராகக் கண்டு ஆட்டினேன் போலும் ’ என்று சொல்லி வாய்விட்டுச் சிரித்தது வெகு வசீகரமாக இருந்தது ... ‘

என்னை மன்னித்து விடுங்கள். உங்களிடம் நான் இவ்விதம், இவ்வளவு சீக்கிர பழக்கத்தில், சுவாதீனமாகப் பேசுவதை ... எனக்கு மிகவும் தெரிந்தவள், எனக்கு வெகு பிரியமான ஒருவள் பெயர் சுசீலா. இப்போது உங்கள் பெயரும் சுசீலா என்பதில் ஒரு யதேச்சை பெயர் ஒற்றுமை என்பதில் என்னென்னவோ என் மனது விநோத விதத்தில் எண்ணுகிறது. அதுதான்.

சேகரன் ஊரை விட்டு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகப் போகிறது. வந்த சில நாட்கள் வரையில் கிட்டுவுடன் தங்கி, ஊர் போவதாக அவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பியவன் ஒரு விடுதியில் தங்கிக் காலம் கழித்துக் கொண்டிருந்தான். பட்டணத்தைவிட்டுப் போக அவனுக்கு இன்னும் மனம் வரவில்லைபோலும். ஆனால் சமீபமாக, சில நாளாகவே அவனுக்கு ஊர் ஞாபகம் அடிக்கடி வந்து கொண்டிருந்தது. ‘ அநேகமாக நாளைக்கு ஊருக்குப் போகலாம் ’ என மாலையில் அப்பெண்களிடம் சொல்லுவதும், மறுநாள் மாலையில் அவர்களைக் கடற்கரையில் சந்தித்துப் பேசுவதாகவும் இருந்தான்.

அன்றைய தினம் ‘ இன்று நிச்சயமாக ஊருக்குப் போயிருப்பான் ’ என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களிடையே தன் தோற்றம் திகைப்பைக் கொடுக்கும் என்ற நினைவில் சேகரன் கொஞ்சம் முன் நேரத்திலேயே கடற்கரையை அடையும் ஆவலிலிருந்தான். அவசியம் ஊர் போக வேண்டிய தென்ற எண்ணம் ஒரு பக்கமும், அப்பெண்களிடையே பேசுவதில் காணும் இனபத்தில் இங்கேயே இருக்க நினைப்பது ஒரு பக்கமும் இவனை ஆட்டுவித்து, என்ன செய்வது என்று தோணாது இருந்தான். ஒளிபடராத பிரக்ஞைவெளியில் சேகரன் தடுமாறிக் கொண்டிருந்தான். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் உள்ள எல்லைக்கோடு, பிளவு கொண்டு ஒரு சிறு வெளி விரிவு தெரிவது போலும் அந்நடு வெளியில் நின்று உலக விவகாரங்களைக் கவனித்தான். உலகம் உண்மையெனத் தோன்றுவதற்கு -- வஸ்துக்கள் வாஸ்தவமெனப் படுவதற்கு மாயைப் பூச்சு கொள்ளுமிடம் அதுதான் போலும். தூக்கத்தில் மறையவும், விழிப்பில் மறக்கவும் ......

அன்று பகல்பொழுதை ஏதோ அவஸ்தையில் கழித்து, மாலையில் கடற்கரையை அடைய, கொஞ்சம் முன்நேரத்திலேயே பஸ் ஸ்டாண்டில் சேகரன் நின்றிருந்தான். அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தில், முன்னேறத் தெரியாது இரண்டு பஸ்ஸுகளை விட்டான். தன்னை விட்டு நகர்ந்து செல்லும் அவைகளைப் பார்க்கும்போது உலகமே தன்னைத் தனிமையில் விட்டு, நகர்ந்து போவதாக நினைத்தான். கடற்கரையில் அப்பெண்களையாவது விட்டுச்செல்லாதா என்ற ஏக்கப்பார்வையில், மற்றொரு பஸ்ஸும் போய்விட்டது. இருபக்க மரங்களையோ, அப்பால் நின்று தெரியும் பங்களாக்களையோ, கவனியாதே போன்று, நகர வீதி அகண்டு, நீண்டு குறுகி, கிழக்கு மேற்காக எட்டிய வெளியை அடிவானம் வரையில் சென்று தொட வெகுதூரம் போய்க்கொண்டிருந்தது. வீதி ஓரத்தில் மரங்கள் அப்பாலும் இப்பாலும் பலபல விசித்திரத் தோற்றத்திலும் பலவித நிறத்திலும், மரங்களிடையே, பாதி தெரிந்தும் தெரியாமலும், வீடுகளும், பங்களாக்களும் பார்வையில் பட்டன.

தன்னைப் போன்றே திகைத்து வீதிமரங்களும், வீடுகளும் நகரமுடியாது நின்றிருப்பதை சேகரன் பார்த்தான். லேசாக மரங்கள் காற்றில் அசையும் போது, அதன் தலையிலிருந்து பூக்கள் பொல பொலவென்று உதிருவது வெகு விநோதமாகத் தெரிந்தது. எதிர் பங்களாவிலிருந்து நாய் குரைப்பு சத்தம் கேட்டது. எதிரொலியில் அப் பங்களாவே நாயெனக் குரைப்பது போன்றிருந்தது. எட்டிய தூரத்தில் ஒரு பட்ட சவுக்கு மரம் நட்டுத் தெரிந்தது. அது தன் தலையில் ஓரு கொடியைக் கட்டிக் கொண்டு ‘ பொலிடிகல் ’ குஷியில் கூத்தாடுவது எவ்வளவு அபத்தமாகத் தெரிகிறது ! மேற்கே சூரியன் மறைய விருக்கிறான். உலகமே ஒரு லேசான மஞ்சள் காவித் தோற்றத்தில் ஒரு வரட்டு விரக்தி கொள்ளுகிறது. வெளியடைய முடியாத ஒரு பளு கொடுக்கும் வேகம், சேகரன் மனதிற்கடியில் குமுறிக்கொண்டிருக்கிறது. அவன் முகத்தில் ஒரு கடுமை கண்டும், உதட்டின் விளிம்பில் ஒரு ஏளனப் புன்னகை அருவிக் கொண்டிருந்தது. கோவிலில் தற்கால பக்தர்களின் சிரிப்பில் மாடத்திலிருந்து பார்த்து நிற்கும் ஒரு ஜீவகளை சிலை என, பட்டணப் போக்குகளைப் பார்த்துக் கொண்டு, சேகரன் நின்றிருந்தான்.

பட்டணச் சந்தடிகள் , பொறுமையிழந்த கூக்குரல்கள் போன்று வீதிவழியே, யார் கவனிப்பிலும் படாது, போய்க் கொண்டிருந்தன. மோட்டார்கள் பறந்து சென்று மறைந்தன. தங்களை விட்டுச்சென்ற உயிரைப்பிடிக்க, நடைப்பிணங்களென, அநேகர் கடந்து சென்றனர். மற்றும் சிலர் தங்களை விட்டு, உயிர் ஓடாது இருக்க, அதைப் பிடித்துக்கொண்டு ஓட்டத்திலும் நடையிலும் சென்றனர். உருவங்கள், தெரிந்தும், மறைந்தும் சப்தங்கள் கேட்டும் கேட்காமலும், எல்லா சந்தடிகளும் ஒரு அலங்கோலத்தில் ஒரு புலனாகாத நியதியில் அவதிப் பட்டுச் சிதறித் தெரிந்தன. இந்த உரு, இந்த சத்தம், இந்தப் பெயர், இந்தத் தோற்றம் என்ற இசைவுமுறை நழுவி, தனித்தனியாகக் காணும் புலணுர்வுகளை, மனது ஒப்புக் கொள்ள முடியவில்லை.

எட்டிய வெளியிலிருந்து, சினிமா மெட்டு காதை சுவைக்கத் துளைத்துக் கொண்டிருந்தது. ஒரு டீக்கடைக்காரனுடைய வியாபாரம் விசுவரூபம் கொள்ளமுயலும், நவீன நாகரிக சத்தம் அது. பஸ்ஸுகளைத் தவறவிட்டுக்கொண்டு இவ்வகைப் பார்வையில் அங்கு நின்று கொண்டிருந்தான். உலகமே, ஒரு நஷ்டக்கணக்கில், இவ்வித ஆர்பாட்டங்களில் தேய்ந்து கொண்டு போவதான எண்ணம் தான் அப்போது அவன் கொண்டது. சக்தியை - ஜனசக்தியை - முதலெனக் கொண்டு, ஆரம்பித்த இந்த உலக வியபகாரம் விளைவுகளில் மதிப்பைக் காணக்கூடாத திகைப்பில், நஷ்டத்தில், முதலையே வீண் விரயமாக்கிக் கொண்டு வருகிறது போலும்.

சீக்கிரம் செல்ல நினைத்த சேகரன், சிறிது நேரம் சென்றே கடற்கரையை அடைந்தான். அவர்கள் வழக்கம் போல், அந்த இடத்திலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை, தூரத்திலிருந்தே கவனித்தான். அவன் அவர்களை அணுகியபோது ‘ என்ன சேகர், இன்று ரொம்ப லேட் .. ஊரிலிருந்து நேரே இங்குதானே வருவது ... என்று சிரித்துக் கொண்டே பானு சேகரை வரவேற்றாள். சுசீலா, நிதானத்துடன் ... ‘ இன்று ஊருக்குப் போகவில்லை!? ’ என்றாள். அது கேட்பவருக்குக் கேள்வியாகவும் அதைக் கேட்பவருக்கு ஆச்சரிய விளியாகவும், தோன்றும்படி இருந்தது. ‘ வாவென்று அழைத்து லெட்டர் வந்தாலல்லது எப்படிப் போகிறது ... ’ என்றாள் பானு.

‘ நான் இங்கிருப்பது வீட்டிற்குத் தெரியாது ... ’ என்றான் சேகரன்.

‘ ஓகா, சேகர் கோபித்துக் கொண்டு சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வந்துவிட்டார் ’ என்று சொல்லி, பானு கொஞ்சம் உரக்கச் சிரித்தாள்.

‘ என்ன சுசீலா - பானு சொல்வது பொய்தானே ’ என்று அரை கெஞ்சலுடன் சுசீலாவைப் பார்த்து சேகரன் கேட்டான்.

‘ எனக்கு எப்படித் தெரியும் சேகர் ... நீங்கள் பேசுவது சரியாக இல்லை. நீங்களும் ஏதோபோல் இருக்கிறீர்கள் ’ என்றாள் கொஞ்சம் வருத்ததுடன் சுசீலா.

‘ கொஞ்ச நாளாகவே சேகரன் பேசுவது சுசீலாவுக்கு ஏதோபோல் தோன்றியது. மற்றைய பெண்களுக்கு எப்படியோ, இவளுக்குத் தெரியாது. அவன் பேச்சுகள் சில சமயம் இவளுக்குப் பிடிக்காது. ஒரு அசட்டுத்தனமான ஜாக்கிரதையில், இவர்களுடன் பேசுவது இவளுக்கு அருவருப்பளித்தது. சிற்சில சமயம் அவன் பேச்சுகள், நிதானமாயும், ஆழ்ந்த கருத்துடன் வசீகரமாயும் இருக்கும். இரண்டொரு நாளாக சுசீலாவுடன் பேசும்போது ஒரு ஜாக்கிரதையும் ஒரு தடுமாற்றமும், சேகர் பேச்சில் தெரிந்தது. அது எதனால் என யோசிக்கும்போது, அவனை ஒருவித உணர்ச்சியில் கொள்ள முடியவில்லை. அருவருப்பபு, பயம், வெறுப்பு, பரிதாபம் முதலிய பலவிதமான உணர்ச்சிகளை, மாறி மாறி அவள் மனது கொண்டு யோசனைகளும் சலிக்க ஆரம்பித்தன. சிற்சில சமயம் அவள் மனது துக்கமும் அடையும்.

ஊரையும், மனைவி குழந்தையையும் விட்டு, இப்படி அவன் பட்டணத்தில் காலம் கழிப்பது இப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை. தங்கள் தகப்பனார், தங்களுக்காக கணவன்மார்களைத் தேடிக் கொண்டிருப்பது இவர்களுக்குத் தெரியும். கல்யாணம் ஆகவேண்டிய பெண், தனக்குத் தெரியாத ஒருவனை எண்ணி, அவனுக்காகக் காத்திருப்பது போன்றதா, ஒரு மனைவி தன் கணவன் வருகைக்கு ஏங்கி எதிர்பார்த்து இருப்பது ? கன்னியும் மனைவியுத் வேறெனப்படுவதில், அதுமாதிரி இல்லாவிட்டாலும், இருவரும் பெண் என்பதில், அது போலவும் தோன்றுகிறது. இவன் ஊர் போகாது இருப்பது, இவன் மனைவி இவனுக்காகக் காத்திருப்பது, இதெல்லாம் இவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒரு தவறான காரியத்தைதான், சேகரன் இங்கு இருப்பதில் செய்கிறான். அவனுடன் தாங்கள் பேசுவதும் தவறாகத்தான் தெரிகிறது.... ஒருக்கால் அவன் ஊர் போகாது இருப்பதற்கு தான்தான் காரணமா, என்று சில சமயம் சுசீலா எண்ணுவாள். தன்னெதிரிலும், தன்னுடன் பேசுவதிலும், அவன் ஒரு வகை இன்பம் கண்டு, அதனால்தான் ஊர் போகாது இருக்கிறான்போலும். சுசீலாவினால் தன் மனம் போகும் ரீதியைத் தடுக்கவோ, தன் மனதில் தோன்றி மறையும் எண்ணங்களை நன்கு புரிந்துகொள்ளவோ முடியவில்லை. தத்தி, தன்னைவிட்டுக் குதித்தோடிஉட்கார்ந்து கொள்ளுமிடத்தைத் தெரிந்து கொள்ளுமுன்பே மற்றொரு இடத்திற்குத் தாவிப் போவது போன்றுதான் அவள் மனமும் எண்ணமும் இருந்தன. சேகரன் ஊர் போகாதது, தன்னால், தன் தடுப்பால், என்று அவளால் நேர்முகமாக நினைக்க முடியவில்லை. தான், அவ்விதத்தில் குரூர சித்தம் படைத்தவளாகவோ, கேவல குணமுடையவளாகவோ, கருத முடியவில்லை. ஒரு கணவனை அவன் மனைவியிடமிருந்து பிரிப்பது ஒரு குரூர செய்கையல்லவா ? அதையும் ஒரு பெண் செய்வதென்றால் ? அப்படியாயின் தான் யார், எப்படி ? தான், தன் சுபாவம், குணம் என்பதெல்லாம் என்ன ? தான் அல்லாததென ஒன்று தோன்ற, அதை மறுத்து மாறுதலை கொள்வதில்தானோ இவைகள் ஆகும் ? மாறி மாறித்தானோ, நான் என்னுடைய என்பதெல்லாம் மறுப்பில் மறுதலையாக உண்மையெனத் தோன்றும் ? அவ்வகையானால், இவைகளெல்லாம் ஸ்திரமெனக் கருத முடியுமா ? உண்மையில் இவைகளெல்லாம் என்ன ? சுசீலாவினால் ஒன்றையும் தெளிவுறக் கண்டு கொள்ள முடியவில்லை .. உருவற்று ... இடமற்று - தன் வழியே உலாவும் குணங்கள், நான், சுபாவம் எல்லாமே ஊடுருவத் துளைத்துச் செல்ல குறியென யதேச்சையிலே குறுக்கிடுகிறது பெயர், உருக்கொள்ள ? வெகு விநோதமான எண்ணங்களைக் கொண்டாள் சுசீலா. அவள் ஒரு விநோதப் பெண்தானே ! அவள் மனது வெகுவாக விரிவடைந்தது போலும் ! ...

அவனைவிட்டு, இவர்கள் பிரிந்து செல்லும்போது, பானுவைப் பார்த்து சுசீலா கேட்டாள் : ‘ பானு, அவன் இங்கிருப்பது சரியா, ஊருக்குப் போவது சரியா ? என்ன தோன்றுகிறது உனக்கு ... உனக்கு நன்றாக விளங்குவது போன்று, ஏதோ ஒன்றைச் சொல்லுவாய். வேறு வகையில் அவன் இருப்பது அவனுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்கிறான் என்று சொல்லுவாய். அதிலிருந்தும் கிளைபாதைகளென ‘ தெரிவது, தெரியாதது, ’ நாம் நமக்குத் தெரிந்து தெரியாமல் பொறுப்படைவது .. ‘ பொறுப்பு ’ ... ‘ சரி ’, ‘ தவறு ’ எல்லா வார்த்தைகளுமே என்னவெல்லாமோ அர்த்தம் கொடுக்கும். பேசுவதும் புரிவதும் மறுதலையில் சலிக்க என்னால் பேசமுடியும். ஆனால் உணரும்போது ஜீவியத்தை, உலகப்போக்கை முரண்படும் உண்மைக் கூற்றெனக் கண்டு, அதைச் சொல்லும்போது, மாறுபட்ட அபத்தமாகத்தானே விளக்கமுடிகிறது ....’

சிறிது நிறுத்தி மேலும் பேசலானாள். ‘ சேகரனை நான் ஆணாக நினைத்துப் பழகவில்லை போலும் ... ஆண்கள் ... ஆண்மை என்பதெல்லாம் எனக்கு நன்றாகப் புரிகிறது. நழுவ, புழக்கடை வழியைத் திறந்து வைத்துக்கொண்டு, வாயிலில் நின்று சிறகடித்துக் கொக்கரிக்கும் சேவல்கள் ஆண்கள். ஆண்மையோவெனில் இறகு உரித்த கோழிகள். சேகரனைப் பெண்ணென மதித்துதான் நான் பழகி பேசுகிறேன் போலும் ! ஒரு பெண் பெண்மையின் சக்தியையா ஒரு ஆணிடம் உணரமுடிகிறது ? அதனால்தான், நான் அவனிடம் கொள்ளும் விருப்பும் வெறுப்பும் ? .. அவனுக்கு என் பெயர் கொண்ட ஒரு மனைவி இருக்கிறாள். அவளையா, இவனிடம் நான் பார்ப்பது ? அவள் பெண்மையை, இவன் ஸ்வீகரித்துக் கொண்டுவிட்டானா ? ... என் பிரியமான பானு, நீ என்னைக் கேவலமாகக் கருதமாட்டாய் என்பது எனக்குத் தெரியும். எதையாவது கட்டிக்கொண்டு அழவேண்டுமென மனம் தவிக்கிறது. இப்போது .. ’ என்று பானுவை இறுகத் தழுவிக்கொண்டாள் .. தெரியாதே பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த சுமதி, பேசா மடந்தையென, ஏதோ யோசனையில் ஆழ்ந்தவள் போன்றிருந்தாள்

சேகரன் பேச்சுக்கள் அன்று சரியாக இல்லை. சுசீலா வெகு நேர்த்தியாகவும், கல கலப்புடனும் அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவன் ஊருக்குப் போவதை, இவ்வகையில் பேச்சினால் தடுத்துக் கொண்டிருந்தாள் போலும். ஆணென ஒருவன், எதிரில் சேஷ்டைகளிலும், பேச்சுக்களிலும் எவ்வளவு வெறுப்பை அளிக்கிறான் என்பதை சுசீலா எண்ணிக்கொண்டாள் போலும். ஒரு ஆணுடன் ஒரு பெண், மனைவி என எப்படிக் காலம் தள்ள முடியும் ..... அதில் இன்பமோ ‘ காதல் ’ என்பதான ஒன்றையோ எப்படிக் காண முடியும் .... வெறுப்பை அளிப்பவருடன் கூடப் பழகுவது எவ்வளவு தர்மசங்கடம் ... விடாது தொடர்ந்து, நியாயமான முறையில் வாழ்க்கையை நடத்த, எத்தனை உபாயங்களை தர்மமென காண வேண்டியிருக்கிறது ! தன் எதிரில், காணாது தொலைந்தாலாவது கணவன் வருகைக்கு ஏங்கிக் காத்திருப்பதில் ஒருவகை இன்பம் காணமுடியும்போலும் பெண்களால் ! சேகரன் மனைவி சுசீலாவின் வாழ்க்கையின் ஆதாரமெனத்தான், தன்னை எண்ணிக்கொண்டாள். அவனை ஊரடையாது - தடுப்பதைத்தான், தான் செய்கிறது - செய்வது என்று நினைத்தாள். அவ்வித எண்ணம் சூனிய வெளியில் நின்று கொண்டிருப்பது போன்று தோற்றம் கொண்ட தனக்கும் ஒரு இடமளிப்பதென உணர்ந்தாள். முன்பு தன் மனதிற்கு இசையாத குரூர குணமென்பதையும், தன் மனது ஒரு திருப்தியில் கண்டது, என்பதாகவும் அவளுக்குத் தோன்றியது.

இருட்டு கண்டு விட்டது. உட்கார்ந்து இருந்த அநேகர் எழுந்து போய்விட்டனர். மற்றும் சிலர் எழுந்து போவதற்கும் ஆயத்தமானார்கள். இவர்களும் எழுந்து நடந்து வீதியை அடைந்தனர். அந்த முச்சந்திவீதியைக் கடந்து, எதிர் வீதியில் கொஞ்சம் நடந்த பிறகு, மற்றொரு சந்து குறுக்கிடும்போது, சேகரன் இவர்களை விட்டுப் பிரியவேண்டும். இவர்கள், வீதியைக் குறுக்காகக் கடக்கும்போது, இடது புறத்திலிருந்து ஒரு மோட்டார் சப்தம் கேட்டது. இவனை விட்டு, அவர்கள் பின் திரும்பி நடந்து, ஓரமாக நடை பாதையை அடைந்தனர். வீதி நடுவில் நின்ற சேகரன் முன்பின் போவது தெரியாது, ஒரு திகைப்பில் நடு வீதியில் நின்று விட்டான். வந்து கொண்டிருந்த மோட்டார் எவ்வித லாவகத் திருப்பலிலும், இவனைக் கடந்தபோது சிறிது இவனை உராந்து சென்றதுபோலும். ஒருவருக்கும் தெரியவில்லை என்பதே போன்று மோட்டாரும், நிற்காது சென்று விட்டது. சேகரன் சிறிது தடுமாறி, சமாளிக்க முடியாமல் கீழே சாய்ந்தான். தொடர்ந்து விழும் அவனை ‘ சாவு ’ யாவரையும் விட முன் சென்று பிடித்துக் கொண்டது .... சேகரன் கீழே சாய்ந்தான் ...

கண்ணெதிரில் கீழே விழும் சேகரனை, முன்னடைந்து குனிந்து தடவியபடியே பானு, ‘ ஐயோ நம் சேகர் ... பேச்சு மூச்சில்லையே ... ’ என்று கண்களில் நீர் ததும்பச் சொன்னாள். அருகில் வந்து நின்றிருந்த சுசீலா ‘ நம்ப சேகர் ! ’ என முணுமுணுத்தபடி, பானுவைத் தூக்கி நிறுத்தி ... ‘ வா பானு போகலாம் ... கூட்டம் கூடுமுன் .. ’ என்று சொல்லி நிதானமாக அவளை அழைத்துச் சென்றாள். அவன் இறந்து விட்டான் என்பது சுசீலா மனதிற்கு நிச்சயமாகவே பட்டது. ‘ அநாதையாக நடுத் தெருவில் விட்டுச் செல்லுகிறோமே.. ’ என்ற பானுவின் குரல், வெளிவர முடியாது, தன் மார்பில் அவள் முகத்தைப் புதைத்துச்சென்ற சுசீலாவின் மனதிற்குள் கூச்சல் கொண்டு அமுங்கியது போலும் ! வெகு வருத்ததில், சுமதி, இவர்களைப் பின்தொடர்ந்து நடந்து போனாள்.

ஒரு கணத்தில், தான் நின்ற இடம் மறுபடியும் சூனியமானதென்ற ஒரு உணர்வுயடைந்தாள் சுசீலா. வெற்று வெளியில், உருவற்ற பெயரென சுசீலா நடந்து கொண்டிருந்தாள். கணவனுக்கும் மனைவிக்கும், குறுக்காகத் தடுத்து நின்றதென்பதில், இடம் கொண்டு நின்ற கன்னி சுசீலாவை ‘ மரணம் ’ எட்டித் தள்ளி விட்டது.

ஒரு மனைவிக்கு, சதா தன் கணவன் வருகைக்குக் காத்திருப்பதில் இன்பம் கொடுக்க, அவனைத் தடுத்து நின்றதில் இடம் கொண்ட சுசீலாவை எட்டித் தள்ளியே அந்த இடத்தை ‘ மரணம் ’ பறித்துக்கொண்டு விட்டது. எவ்வளவு அநியாய நியாயமெனப் படுகிறது சேகரன் மரணம். இனி எவ்விடம் தன்னிடமாகக் காண்பது என்ற மனத் தடுமாட்டத்தில் சுசீலா நடந்து கொண்டு போனாள்.

* * *

சில நாட்களாக, இவர்கள் மாலையில் கடற்கரையில் கூடுவது இல்லை. தன் மாடி அறை ஜன்னலடியில் மாலையில் நின்று கொண்டு எட்டிய வெளியை, சுசீலா பார்ப்பதுண்டு. தன் சிந்தனைகளே, ஒரு பளுக் கொடுப்பதென நினைத்தவள் மனம், அப்போது துக்கத்தையும் கொள்ளாது சந்தோஷத்தையும் கொள்ளாது இருந்தது. பெயர் கொண்ட ஒன்று, தன் உருவை, சுமையெனக் களைந்து, பெயரெனத்தான் எட்டிய வெளியில் லேசாக மிதப்பதைப் பார்த்து நிற்பவள் போலும்.சுசீலா வென்ற பெயர், மறுபடி உருக்கொண்டால் யாராக முடியும் ? இருளில், உடலை விட்டகன்ற நிழல், ஒளி கண்டவுடன் சரியெனத்தானா, பிரிந்த தன்னுடல் எனக் கண்டு மறுபடியும் உடலுடன் ஒட்டிக் கொள்ளுகிறது ... ? சுசீலா, பெயரெனத் தன்னைக் களைந்து கண்டதில், சேகரன் மனைவி சுசீலா எனவா மனதில் உருக்கொண்டாள் ... ?

கிராமத்தில் காலை, மாலை வேலைகளை கவனிப்பின்றிக் கைவிட முடியாது. அதிகாலையில் இருட்டுடன் எழுந்து, வாயிற்புறம் சாணம் தெளித்து, பெருக்கி, கோலம் வரையவேண்டும். இரவின் இருளில் தூக்கம் காணாதினாலா, போடும் கோலம் தவறுகிறது. ..... வெளிச்சம் காண இருக்கும் கிழக்கே, வெகு தூரத்தை உன்னிப்பாய்க் கவனிப்பதில், கண்டது ஒன்றுமில்லை. இரவில் பரவியதை, ஒன்று கூட்டிச் சேர்த்துக் கொளுத்த குவித்த இருட்டு, ஒளி கொள்ளுமுன்தான் எவ்வளவு இருட்டு ! கணவனைக் காணமுடியவில்லை. பகல் நீண்டும் இரவு வருகிறது. குழந்தை காலைச் சுற்றி வராது தொட்டிலில் தூங்கும்போதுதான், பகல் நீண்டும் இரவு வருகிறது. அதைத் தடுக்க இரவு குறுக்கிடுகிறது. மாலையில் சூரியன் மறைகிறான். இரவு வந்தவுடன் விளக்கை ஏற்றி, வாயிற் புறையில் வைத்துவிட்டு திண்ணைத் தூண்டியில் நிழலென நிற்கிறாள். மேற்கே சூரியன் மறைந்த விடத்திற்கும் அப்பாலே, பார்க்கிறாள். கண்ணொளி கொண்டும், ஒன்றையும் பார்க்கமுடியவில்லை. கீழிறங்கி, எதிரே தெரியும் கோயில் சுவாமியைத் தரிசித்து விட்டு, விளக்கை எடுத்துக் கொண்டு உள்ளடைகிறாள் சுசீலா .... இரவும் குறுகாது நீண்டு வளருகிறது. அல்லலுறும் மனது தூக்கம் கொண்டாலாவது இன்பக் கனவையாது எதிர் பார்க்கலாம் ..... வேதனைகளின் இன்பம்தான் வாழ்க்கை போலும் !

தானாக வேண்டி, எதிலும் தன்னைக் காண தேடுவது போல கன்னி சுசீலா, மேற்கு பார்த்த தன் மாடி அறை ஜன்னலடியிலிருந்து எட்டிய வெளியை வெறித்துப் பார்ப்பதுண்டு. சேகரன் மனைவி சுசீலாவை மனதில் கண்டதில், அவளாகத் தன்னையும் கண்டு கொண்டுவிட்டாள் போலும் !

தன் கணவன் வருகைக்காக எதிர்பார்த்து ‘ காதல் ’ காண மனைவியாக, கன்னிப் பெண் சுசீலா தன் மாடி ஜன்னலடியில் நின்றிருந்தாள்.

அப்படியாயின், ஒரு வகையில் ‘ காதல் ’ கண்ட பெண் கலியாணமாகாத கைம்பெண் என்ற அபத்தம்தானே !

- சரஸ்வதி, 1960

தட்டச்சு : ரா ரா கு


குடை நிழல் - மௌனி
வலையேற்றியது - 07-07-2014


இரண்டு நாட்களாகக் கோடை வெக்கை மிகக் கடுமையாக இருந்தது. கோடை மழை ஒன்று பெய்வதற்கும் நாளாகிவிட்டது. எனினும் அன்று மாலை அவ்வளவு சீக்கிரமாக மழை வருமென அவன் எதிர்பார்க்கவில்லை.

அன்று மாலையில் சுந்தரம் குடையுடன்தான் வெளியே கிளம்பினான். குருட்டு வெயில் அன்று கடுமையாக இருந்தது. டவுணில் தன் அலுவல்களை முடித்துக்கொண்டு நடையாகவே சென்டிரல் ஸ்டேஷனை அடைந்தான். அங்கே ரயிலில் அவன் தன் நண்பன் ஒருவனைச் சந்திக்க வேண்டி இருந்தது. அவனை  சுந்தரம் சந்திக்க முடியவில்லை. வீடு திரும்ப எதிரிலிலுள்ள ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாண்டை அவன் அடைந்தான். அங்கே அன்று அதிகக் கூட்டம் இல்லை. மழை திடீரென்று ஆரம்பித்தது. மழை ஆரம்பித்ததும் இருந்த சிலரும், அங்குமிங்குமாகச் சிதறிப் போய்விட்டார்கள். மாலை இருட்டு கண்டு கொண்டிருந்தது. வீதி விளக்குகளும் ஏற்றியாகிவிட்டன. அவ்விடத்தில்  தன்னைத்தவிர வேறு யாரும் இல்லையெனத் தெரிந்துகொண்ட போது, திடீரென ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண் அங்கு வந்து சேர்ந்தாள். அவள் எவ்விடமிருந்து வந்தடைந்தாள் என்பதை இவன் கவனிக்கவில்லை. அவள் உடை மழையில் நன்றாக ஊறி நனந்து உடம்போடு உடம்பாக ஒட்டிக்கொண்டிருந்ததைச் சுந்தரம் கவனித்தான்.

காத்திருந்த இவர்களை நாலைந்து பஸ்ஸுகள், தங்காதே தாண்டிச் சென்றுவிட்டன. மற்றும் தங்கிப் போன பஸ்ஸுகளும் இவர்கள் போகவேண்டிய இடத்துப்பஸ்ஸுகள் அல்ல. இருட்டு நன்றாகக் கண்டுவிட்டது. இவர்கள் இருவரும்தான் அங்கு இருந்தவர்கள். வலுத்த மழையும் விடுவதாகத் தெரியவில்லை.

மோட்டார் வருகிறதா என்பதைக் கவனித்துக் கொண்டிருந்த இருவரும், முதலில் ஒருவரை ஒருவர் கவனிக்கவில்லை. பஸ் வரும் என்ற நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கலானார்கள். நேரம் ஆகிக் கொண்டே இருந்தது.  வீதியிலும் ஜன நடமாட்டம் குறைந்துவிட்டது. மோட்டார்கள் மட்டும் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. தன் அருகாமையில் ஒன்றி நின்றிருந்த அப்பெண்ணைச் சுந்தரம் அப்போதுதான் நன்றாகக் கவனித்தான்.

சிறிய அழகான பெண் அவள், அவளுக்கு இருபது வயதுதான் இருக்கலாம். இவன் பார்த்ததைப் பார்த்த அவள் முகம் புன்சிரிப்புக் கொண்டது. அப்போது சுந்தரத்திற்கு என்னவோபோல் இருந்தது. அவனுக்கு மனது அமைதியை இழந்ததான ஒரு எண்ணம். மற்றும், ஒரு வசீகரப்பெண் பக்கத்தில் நின்றிருப்பதில் மனதில் ஒரு குதூகலமும் போலும்.

“ மழை விடாதுபோல் தோன்றுகிறது ” என்றாள் அவள்.

“ ஆமாம், பஸ்ஸும் வராதுபோல் தோன்றுகிறது ” என்றவன் அவளுடன் பேசியது போதாது போன்று “ ஆமாம் நீங்கள் எங்கு போகவேண்டும். ” எனச் சிறிது விட்டுத் தொடர்ந்து கேட்டான்.

“ இப்படி மழை வருமென்று தெரிந்திருந்தால் குடையாவது கொண்டு வந்திருக்கலாம் ” ...... என்றாள் அந்தப் பெண்.

“ தெரியாது தான், முற்கூட்டியே .... ஆமாம் தெரிந்துதான் என்ன ஆகப்போகிறது.... நான் இங்கு உனக்காகக் குடை வைத்துக் காத்திருப்பதும் தெரிந்தால், கொண்டா வரப்போகிறாய், நீ உன் குடையை? ” பேசினதற்குப் பின்தான்  சுந்தரத்திற்கே தான் ஏன் இப்படியாகப்பேசினோம் என்று ஆச்சரியம் கொடுப்பதாயிற்று. அவன் வேற்றுப்பெண்களுடன்  பேசியதே  கிடையாது. மேலும் அவன்  சங்கோஜ சுபாவமும் படைத்தவன். சாதாரணமாக, சுபாவம் சமய சந்தர்ப்ப விசேஷத்தினால் எவ்வெவ்வகையோ மாறுதல் கொள்ளுகிறது போலும். சுந்தரம் மறுபடியும்  சொன்னான். “ பஸ்ஸுக்காகக் காத்திருப்பதில் பிரயோஜனமில்லை .... நான் மவுண்ரோட் போனால், அங்கு ஒருக்கால் எனக்கு பஸ் அகப்படலாம் ... என்னுடைய குடையிருக்கிறது இருவரும் போகலாமே” சிரித்துக்கொண்டு அவள், அவன் பக்கத்தில் பிரித்த குடையின் கீழ் வந்தாள். ஒரு பெண், அதிலும் தனக்குத் தெரியாத ஒரு வசீகரமான ஒரு வாலிபப்பெண், அவளுடன் ஒரு குடையின் கீழாக இருட்டிலும், மழையிலும் செல்வது - ஆம், சுந்தரம் இது கனவில் நடப்பதாக நினைத்தான். ஒரு சமயம் அவன் மனது சொல்லிக்கொள்ளும் - இதில் என்ன தவறு இருக்கிறது? தெரிந்தவர்கள் யாராவது பார்த்தாலல்லவா ஏதாவது நினைக்க இடம் இருக்கும் ?

மின்னல் ஒளி பாயந்த கணத்தில் சுற்றுமுற்றும் கவனித்ததில் கண்ணுக்கெட்டிய வரையிலும், ஒருவரும் படவில்லை ... ஏதாவது நினைத்துக் கொள்ளலாம் ... அந்த நேரத்தில் யார் பார்த்து இவர்களைத் தெரிந்து கொள்ளப் போகிறார்கள் ...!  ஒரு குடையின் கீழ் இருவருமாகச் சேர்ந்து சென்றனர். இருட்டிலும், மழையிலும், முக்கால்வாசி தூரம் போகும் வரையில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. சிற்சில சமயம் இருவரும் மோதிக்கொள்வார்கள். அப்போது சுந்தரம் தன் மனதிற்கு விரும்பிய அதிர்ச்சியைக் கொள்வான். அப் பெண்ணோவெனில் சற்று உரத்து இவனைப் பார்த்துச் சிரிப்பாள்  போன்று காதில் படும். வானம் முழுவதையும் மேகம் நன்றாக மூடிக்கொண்டிருந்தது. காற்றற்று செங்குத்தாகத் தடிமழை பொழிந்து கொண்டிருந்தது. குடையின்றியே இருவரும் நனைந்து கொண்டு போயிருக்கலாம். சாரலில் நனைந்து கொண்டு ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு போகத்தான் இந்தக் குடை உதவியது போலும். இடியும் மின்னலும் மிகக்கடுமையாக இருந்தன.

“ நீங்கள் மவுண்ட் ரோட்டில் எங்கே இருப்பது ?” என்று சுந்தரம் அவளைக் கேட்டான்.

“ ஏன், உங்களுக்குத் தெரியவேண்டியது அவசியமோ ” என்றாள் அவள். யதேச்சையாகப் பட்ட ஒரு பெண்ணுடன் எவ்வளவு தூரம் அவனால் போக முடியும். மவுண்ட்ரோடும் வந்துவிட்டது. வெகுதூரம் தான் போவதை அவன் விரும்பவில்லை போலும். யாராவது ஒரு கௌரவமான குடும்பப் பெண்ணாக இருக்கலாம் ...

“ இல்லை... நான் ” என்று இவன் தயங்கி ஆரம்பித்ததை அப்பெண் மறித்து .... “ நான் உங்களைக் கேட்டது அல்ல. என்னைத்தான், என் மனதைத்தான். நான் சிறிது உங்கள் காதுகேட்க உரத்துக் கேட்டுக்கொண்டேன் ... என்னை யாரென உங்களுக்குத் தெரியவேண்டாம். மவுண்ட்ரோட் வந்துவிட்டது. நான் இப்படியே இச்சந்து வழியாக என் வீட்டிற்குப் போகிறேன் ...” என்று சொல்லி அவனை விட்டு நகர்ந்தாள்.

அவளை வீட்டிற்கு கொண்டு விட்டுப் போவதாகச் சுந்தரம் சொன்னான். அவள் பதில் சொல்லவில்லை. அரவணைப்பிற்கு ஆசைகொண்ட அனாதைக் குழந்தையைப் போல அவள் அவனைப் பார்த்துச் சொன்னாள்.

ஆயினும் அவள் வார்த்தைகளில் பரிதாபம் தொனிக்கவில்லை. “ என் வீடு சமீபத்தில் தான் இருக்கிறது. நான் தனியாகப் போகிறேன். நீங்கள் வரவே வேண்டாம், உங்களை தடுப்பதிலும் நான் உங்கள் எண்ணத்தைத் தடுக்கச்செய்ய முயலவில்லை. ” சிறிது நகர்ந்தவள் தொடர்ந்து பிறகு “ உங்கள் இஷ்டம், வேண்டுமாயின் வந்துவிட்டுப் போங்கள் ... ” முடிக்கு முன்பே அவள் முகத்தில் கொஞ்சம் அலட்சியச் சிரிப்பும் தெரிந்தது.

இந்த ஹோட்டலில் காப்பியாவது சாப்பிடலாம் என்று நுழைந்த இருவரும் ஏதேதோ சாப்பிட்டுவிட்டுப் பசியைத்தணித்துக் கொண்டு சென்றனர். அவள் வீடும் வெகு சமீபத்தில் தான் இருந்தது. சுந்தரம், அவளை அவள் வீட்டில் தவிர வேறெங்கேயும் விடுவதான எண்ணத்தில் இல்லை. இருவர் உடைகளும் நன்றாக நனைந்திருந்தன. தூறல் நின்றுவிட்டது.

ஒரு பெரிய வீட்டின் வாயிற்புறம் வந்தவுடன் அப்பெண் நின்றாள். “ இதுதான் நான் இருக்குமிடம் ” என்றாள். அது வீடாகவே தோன்றவில்லை. தனித்தனி அறைகளில் அநேகர் வசிக்கத்தக்க ஒரு விடுதியாக  அது இருக்கலாம். ஆனால் அந்தப் பக்கத்தில் மாணவிகள் தங்க விடுதி இருப்பதாக, அவன் அறிந்த மட்டில் தெரியவில்லை. சுந்தரம்  அப்போது அவளைப் பார்த்து ...             “ அம்மா நீங்கள் யார் ... என்ன செய்கிறீர்கள் ... இங்கே ” என்று கேட்டான். வாயிற்புறத்து வெளிச்சம் அவன் முகத்தின்மீது விழுந்தது. அவள் முகம் நன்றாக அவனுக்குத் தெரிந்தது. அவள்முகம் குவிய அதில் வசீகரச் சிரிப்பு தென்பட்டது. ரோஜா மொக்குகள் போன்று அவள் உதடுகள் குவிந்து இருந்தன.

அநேக ஆயிரம் விளக்கொளியிலும் , ஆயிரம் விதமான கனவுகள் அவ்விடுதியில் ஒதுக்குப்புறமாக மறைந்து நின்று உட்புகும் அவர்களை விழுங்க இருந்தன போலும். அவனுடன் அவள் உள்ளே செல்ல சிறிது தயங்கினாள். அவள் பார்வையில் மாசு படர்ந்தது.  அங்கேயே, வாயிற்புறத்திலேயே தங்கி, அவனுடன் பேசிப்பேசி வாழ் நாட்களைக் கழிக்க எண்ணியவள் போன்று உட்புகத் தயங்கி நின்றிருந்தாள். ஊதலும் சாரலும் தெருவழியே ஓடிக்கொண்டிருந்தன. ஆயிரம் விநோத விரோத யோசனைகள் அவள்  மனதில் புதைந்து, மறைந்து மாறுபட்டும் அவளுக்கு வாழ்க்கையில் அலுப்புக் கொடுக்கத்தான் ஒன்றாகத் தோன்றின. ஆதரவை அவனிடம் நாடின பார்வை அவள் கண்களினின்றும் விடுபட்டுச் சலித்து எட்டிய வெளியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. எங்கேயோ பார்த்து நின்றுக் கொண்டிருந்தாள். அவளுக்கு இருபது வயதிற்குள்தான் இருக்கும். ஊறிய உடம்பில் ஒட்டிக்கொண்ட ஈரத்துணியில் அடியில் அவள் அங்கங்கள் ஒவ்வொன்றிலும்  கவர்ச்சி தெரிந்தது. அவளுள் பரிசுத்த ஆத்மாதான். அவள் கண்களில் இவ்வளவு தெளிந்த பார்வையை அப்போது கொடுத்தது போலும் ! அவன் எதிரில் அவள் வருத்தத்தில் அவள் நின்றிருந்தாள். வெளிக்காட்ட கூச்சம் கொண்டு அவள் கண்கள் பளிங்கு போன்று பிரகாசம் இழந்து தோன்றின. அவள் முகத்தோற்றமும் ஏதோ விதமாகத் தெரிந்தது.

 அவளைப் பார்க்கும் போதும், புருவஞ்சுழிக்கும் போதும், அவள் பேசாத வார்த்தைகள் அருத்தம் கொள்ள, புருவத்திடைப் புகுந்து கொண்டன போலும், அவ்வித விளங்காத வகைப் பார்வையில், சுந்தரம் தன் மனதிற்கிஷ்டமான எவ்வளவோ அருத்தம் கொண்டான். அவள் சொன்னாள் ... “என்னை இப்போது நீங்கள் வெறுக்கவில்லை ... பின்னாலும் உங்களால் முடியாது ... உங்களிடம் உள்ள என் எண்ணத்தைத் தானே நீங்கள் எப்போதும் என்னிடம் கொள்ள முடியும், பிரதிபலிக்க முடியும். நீங்கள் எனக்குச் செய்த இச்சிறு காரியத்தை ஏன் செய்தோமென மனக்கசப்பின்றி நினைக்க, நான் யார் என்று தெரிந்து கொண்டபின் உங்களால் முடியுமா என்பதை  நீங்கள் இப்போது சொல்ல முடியுமா என்பதை நீங்கள் இப்போது சொல்ல முடியுமா ? பின்னால் தெரிந்து கொள்ளப் போவதை முன் கூட்டி யோசித்து உங்களைப் பதிலளிக்க நான் கேட்கவில்லை. நான் இப்போது உங்களிடம் ஏன் இவ்விதம் பேசுகிறேன் என்பதும்  எனக்குத் தெரியவில்லை. யோசனைகள் யோசிக்கும் போது யோசிக்கப்படுவதென்பதாலேயே மாறுதல் அடைகின்றன. நான் பேசுவது என்னைப் போன்று இல்லை, மீறித்தான் இருக்கிறது .. நீங்கள் யார் என்பதற்கு, எவராக இருந்தால், யாராக இருந்தால் என்ன என்பதின்றி, யார் என்பதற்கு, ஆம் ஆயிரம் தடவை உன் பகற்கனவில் தோன்றிய நான் என்று பதில் கொள்ளும்போது ... என் பிரியமானவனே நீ போய்விடு ... ” அவள் கண்கள் போதைகொண்டு துள்ளி விளையாட வெளியே துள்ளி மறுபடியும் ஜலப்பரப்பின் கீழ் புதையும் வெள்ளி மீன்களாக உட்புதைந்தது அவள் பார்வை. அவள் கண்கள் பார்க்க முடியாத வகையில் ஒளிகொண்டு பிரகாசித்தன. அவள் யோசனைகளையே போன்று அவள் கண்கள் சலித்தன.

‘ எனக்குச் சொல்வதில் ஒன்றுமில்லை ...... உங்களுக்குத் தெரிந்தால் ஒன்றுமில்லையா .... ? உங்களை ஒரு கணத்தில் நான் தெரிந்து கொண்டுவிட்டேன். என்னை நான் என்று சொல்லாமலே அநேக ஆடவர்கள் என்னைத் தெரிந்து கொண்டு விடுகிறார்கள் ! ஆம், என்னை மட்டுமல்ல; எல்லாப் பெண்களையும் கூட ... அப்படித்தான் தெரிந்து கொள்கிறார்கள் போலும். ஆனால் அவர்கள் தெரிந்தவர்கள் என்பதில் எனக்குச் சந்தேகம்தான். உங்களுக்கோ வெனில் என்னைப் பார்த்தவுடன் அதுவும் ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்ள முடியவில்லை. சொன்னாலும் நீங்கள் தெரிந்து அறிந்து கொள்ள முடியுமோ என்பதிலும் எனக்கு  சந்தேகம் தோன்றுகிறது. முடிந்தாலும், உங்களுக்குத் தெரிந்தது உங்களுக்கு நன்மையானதா என்பதில், என் மனது திரும்பித் திரும்பி சந்தேகம் கொள்ளுகிறதே, நான் சொல்லித்தான் ஆகவேண்டுமா ? ’

அவள் பேசியதும் பேசிய வகையும் சுந்தரத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதாக இல்லை. அதிசயமாகவும்  அவள் படவில்லை. மனதிலிருந்து ஒன்று விடுபட்டுப் போனதினால்தான் அவன் அவளை வெறுமனே வெறித்துப் பார்த்து நின்றான் போலும். நேருக்கு நேராக ஒருவருக்கும் சொந்தமற்று,  யாருக்கும் சொந்தமாகும் ஒருத்தியுடன் பேசுவதில் ஆனந்தம் ஒன்றும் இல்லை; அதிர்ச்சியும் இல்லை. தன் இருதயத்திற்கு நேரான குறுக்குப் பாதையில் சென்றடைந்து விட்ட ஏதோ ஒன்று, ஆராய்வதற்கு அவகாசம், அவன் அறிவிற்குக் கொடுக்கவில்லை. பின்னால் ஆயிரம் யோசனைகளுக்கு அடிப்படையாக அவள் எண்ணம் அவன் மனதில் தோன்றலாம். அப்போதோவெனில் எதிரில் நிற்பதைக்கூட அவன் அறிந்தவன்போன்று நின்று இருக்கவில்லை.

“ ஏன் நிற்கிறீர்கள் - வாருங்கள் என் அறைக்குப் போகலாம் .. உங்களைக் கண்டது முதல் என் மனது என்னை வெறுக்க வேதனைக் கொடுக்கிறது. அதில் உள்ள இன்பம் உங்களுக்கு அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை. தன்னை வெறுக்க எண்ணம் கொடுப்பவர்களை வெறுப்பது என்பது, வேறொன்று. உங்களை நான் விரும்புகின்றேன். மனதிற்கு அடியிலிருந்து ஏதோ ஒன்று இப்போது வாழ்க்கையில் இனிமை கொள்ளத் தூண்டுகிறது. உங்களால் உணருகிறேன் என்பதிலா நான் உங்களை வெறுக்காது விரும்புகிறேன் ... ? என்னுடைய காரியங்களிலே நான் சிந்தனைகளைக் கொடுத்தது கிடையாது. யோசித்தால், யோசனைகளின் அடியே ஒரு அதிசயப் பயம் கொண்டிருக்கிறது. அடிப்படையான பயங்கரம் இருக்கிறது போலும். எவற்றையும் யதேச்சையில் கவனிப்பின்றிதான் நான் செய்கிறேன். சரி,  நாம் உள்ளே போவோம். எங்கேயோ என்னைத் தனியாக பேச்சில் தனியாக செல்லவிட்டு விட்டீர்கள். ”

 அவளைப் பின் தொடர்ந்து மாடியில் ஒரு அறைக்குச் சென்றான். அவள் அறையை அடைந்ததும் அவன் மனது கொஞ்சம் நிதானம் அடைந்தது. தனியறையில், தனியாக தான் யார் முன்னிலையில் நிற்கிறோம் என்பது அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. இந்த அனுபவம் அவனுக்குப் புதிது. அவளிடம் அவனுக்கு யாது காரணம் பற்றியோ ஒரு அநுதாபம் தோன்ற ஆரம்பித்தது. அவள் பேச்சும், பேசும் வகையும் அத்தகைய ஒருத்தியினது போன்றுஇல்லை. ஒருக்கால் இவன் இளமையும் புதுமையும், அப்படி நினைக்க ஏதுவாயிற்றோ என்னவோ. அவள் தன் ஈர ஆடைகளைக் களைந்து வேறு உலர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு வந்தாள்.

“ நீங்கள் ஈரத்தில் நிற்கிறீர்களே, ஆடை நான் கொடுக்கிறேன். உங்களுக்குச் சரியாகக்கூட இருக்கும். அணிந்து கொள்ளுகிறீர்களா ? ” அவள் சிரித்துக்கொண்டே கூறினாள். “ ஆமாம், உங்களைப் பெண்ணுடையில் பெண்ணாக்கி என் சிநேகிதியாக என் பக்கத்திலேயே, ஏன் - என் உள்ளேயே வைத்துக்கொள்ள ஆசையாக இருக்கிறது. எவ்வளவு அசட்டுத்தனமாக நான் உங்களை மௌனமாக்கிப் பேசிக்கொண்டே இருப்பேன் தெரியுமா ? பசியே எனக்குத் தெரியாது. வாழ்க்கையும் வெகு சீக்கிரத்தில் இனிமையாக முடிந்ததென என் மனம் நினைக்க உங்களிடம் பேசும் நேரம் நீண்டு கொண்டே போகும் - '

“ வேண்டாம் - பாதகமில்லை எனக்கு -” என்று சொல்ல வாயெடுத்தான் சுந்தரம். அவள் மேலும் கவனியாது பேசிக்கொண்டே போனாள். “ ஆமாம், உங்களை இதற்கு முன்னாலேயே பார்த்து இருக்கிறேன். அநேக நாள் பகற் கனவில் உங்களை எதிர்பார்த்திருக்கிறேன். நீங்கள் வரவில்லை, இப்போது நீங்கள் வேண்டா விருந்தினன் போல வந்திருக்கிறீர்கள். பிடிக்காததை சீக்கிரம் புறக்கணித்துத் தள்ள உபசாரத்தில் தான் முடியும் போலும். ஆமாம் என் பிரியம் உங்களிடம். பிரிவு உபசாரம்தான் உங்களுக்கு நான் செய்கிறேன்... உங்களைப் பிடிக்காது வெளியனுப்பத்தான் என் மனம் உங்களிடம் இவ்வளவு ஆசை கொள்கிறது. ”

“ சரி ஜோன்ஸ் .. மழை விட்டுவிட்டது, நான் போய்வருகிறேன் ... போகட்டுமா...” என்று சொல்லி, ‘சரி நாளை வருகிறேன் ” என்று ஐந்து ரூபாய்களை அவள் மேஜையின் மீது வைத்துவிட்டு வெளியே போய்விட்டான். அவன்  போன பின்பு ஜோன்ஸ்க்கு சிரிப்புத் தாங்கவில்லை. ரூபாய்களை எடுத்துக் கையில் கலகலவென்று குலுக்கிச்  சிரித்துக்கொண்டாள். அது அழுகை சிரிப்பாகத்தான் அந்த ரூபாய்களைப் பார்த்துச் சிரித்தாக இருந்தது.

மறுநாள் இருட்டிக்கொண்டிருக்கும் போது சுந்தரம் ஜோன்ஸ் அறையை அடைந்தான். வாயிற்புறத்தில் உட்புகச் சிறிது தயங்கி நின்று கொண்டிருந்தான். உள்ளேயும் வெளியிலும் பெண்கள் குதூகலத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். ரிக்ஷ்க்காளில் சிலர் ஆடவருடன் வெளிக்கிளம்பிக் கொண்டிருந்தனர். திருநாள் கடைகளை ஆச்சரியத்துடன், அர்த்த மற்று கவனித்து நிற்கும் சிறுபிள்ளையைப் போன்று சிறிது நேரம் சுந்தரம் இவைகளைக் கவனித்து நின்றிருந்தான்.

“ ஏதோ வெளியில் இரைச்சல் கேட்கிறதே ” என்றான் சுந்தரம்.

“ ஆமாம் வெளியுலகு மடியுமட்டும் உள்ளே கேட்கும் கோர சப்தங்கள் அவை. நம்முடைய அணைப்பில் மரணாவஸ்தை கொள்ளும் சப்தங்கள். பாழ்பட்ட வசீகரம் வெளியே உலாவ அவர்களைப் பார்க்கும் போது .. ” அவளால் பேச முடியவில்லை. அவள் கண்களினின்று வழிந்த கண்ணீர் அவன் மார்பை ஈரமாக்கியது. முன்பு அவளுடன் மழையில் நனைந்ததுகூட அவனுக்குத் தோன்றவில்லை. அவள் கண்ணீரால் ஈரம்பட்டதும் அவனை நடுக்கியது. அவள் முகத்தை நிமிர்த்துப் பார்த்தான் . கண்ணீரிலும் அவள் உதடுகள் ரோஜா மொக்காகக் குவிந்து இருந்தன. முகத்திலும் புன்சிரிப்புத் தெரிந்தது.

“ ஏன் அழுகிறாய் ... நான் வருத்தம்தானா உனக்குக் கொடுக்கிறேன் ... என்னால்  உனக்குச் செய்ய முடிவது ஒன்றுமில்லையா ? ”

“ உங்களால் செய்ய முடிந்தது, அதோ அந்த மேஜையின் மீது இருக்கிறது பாருங்கள் .. ஆம், அதைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்க்க முடியும். எப்போதும் நிலைத்து நிற்க, என்னிடம் இல்லாததையா உங்களிடம் நான் எதிர்பார்க்க முடியும் ? என்னுள், என் இனிமை, தனிமையில் துன்புறுத்தாது நிற்கும் நாளைத்தான் நான் நாடுகிறேன். உங்களைப் பெற்று உங்களால் அடையும் ஆனந்தம் நீடிக்கும் போதல்லவா நீங்கள் கொடுத்தது என்று ஆகும்.

“ என்னுள் ஏதோ ஒன்று தூங்கினதைத்தான் தட்டி எழுப்பினீர்கள். நீங்கள் உங்களால் ஒன்று செய்ய முடியாததினால்தான் உங்களிடம் இப்போது நான் பிரியம் கொண்டிருக்கிறேன். எங்கள் பிரியம் காசுக்கு அகப்படும் போது, பிறகு தூக்கி எறியப்படும் சாம்பலாகத்தானே இருக்க முடியும். காசுக்கு அகப்படும் பிரியம் எவ்வளவு மலிவாக இருக்கிறது ! உங்களுடைய அநுதாபம் அடையும் பாக்கியம் பெற்றும் ஏற்கும் வகை தான் நான் புரிந்துகொள்ளவில்லை.” அவள் தன்னை அறிந்து கொள்ளத்தான் இவ்வகையாக அவள் பேச்சில் தடுமாறிக்கொண்டிருந்தாள். சுந்தரமும், தன்னுள் தலைவிரித்தாடும் ஒன்றை சமனம் செய்யப் பாடுபட்டுக் கொண்டு இருந்தான்.

“ ஜோன்ஸ், வெளியே போய் சிறிது உலாவியாவது வரலாம் ... ஏன், எப்படி, இத்தொழிலைக் கொண்டாய் .... ? ” ஏதோ சம்பந்தமற்று அருத்தமற்றுத் தானும் பேசவேண்டும்மென்பதற்காகச் சொன்னது போன்றுதான் இருந்தது, சுந்தரம் கேட்டது.

ஜோன்ஸ் அவனைப் பார்த்தாள். அவன் முகத்தைப் பார்த்தாள். அவள் பார்வையில் கோபம் இல்லை, வருத்தம் இல்லை, ஒருவகை அலட்சியம் தெரிந்தது. அவள் அவனைப் பார்த்த பார்வையில் அவன் கேட்டதில் கேவலமான எண்ணமும் இருந்ததாகத் தெரியவில்லை.

“ ஆமாம், மூன்று சிறிய சகோதரிகளும் வேலையற்ற வயதான தாயார் தகப்பனாரும் முன்னும் பின்னுமாக எப்போதும் ஏழ்மையில் என்னை வெறிக்கும் போதும், வெட்கத்திற்கு மேலே போய், மீறிப் பிச்சையெடுக்கும் வகையில் பசி தெரியாமல் இருந்தாலும் அப்போதுதான் தாங்கள் என் பக்கத்தில் நின்று, நீ ஏன் இப்படியானாய் என்று கேட்க வேண்டும். உங்கள் கேள்வியைத்தான், உங்களைத்தான் நான் பக்கபலமாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. யார் யாரோ என்னவெல்லமோ, கேட்டும், செய்தும் போய்விட்டார்கள், மறைந்து விட்டார்கள். ஆனால் முன்னும் பின்னும் தெரிவதுதான் என் மனதில் மறையவில்லை. நான் மட்டும் சாசுவத்தில் நிற்கப் போகிறேனா ? நான் நிற்குமிடமும் சூனியமாகிறது. நான் இருப்பது, அதுவும் ஒரு பெரிய பொய்தானே. நிற்கும் பொய்யைத் தானே நிஜமெனக் காணப் பக்கத்தில் வருகிறார்கள் - பொய்யை நம்பும் நீயும் இறக்கப் போகிறாய், இறப்பைத் தவிர உலகில் நடக்கிறது எது நிஜம் ? இறப்பில்தான் மனித வாழ்க்கை பூர்த்தியாகிறது. ”

“ அதோ அங்கே பார் பூமியின் கீழ், ஐந்தடிக்குக் கீழ் சிறுபுல் என்மேல் படர்ந்தால், இனிமையான பக்ஷிகள் என்மேல் பாடினால், வெளியுலகம் அப்போது பாழடைந்து மடியும். இரவின் வானக்கூரையில் அநேக நக்ஷத்திரங்கள் தெரியும். என்மேல் மெல்லிய காற்றுத் தடவிச் செல்லும் ... என் இன்பக் கனவுகளைத் தவிர ஒன்றும் என்னைத் தொடர்ந்திடமுடியாது. அப்போது விழிப்பின்றி சதா இன்பக் கனவின் வாழ்க்கைக்கொள்ளும். நான் - எனக்கு எது மெய்யானால் என்ன ? பொய்யானால் என்ன ?

“ நான் எங்கெல்லாமோ சென்று கொண்டிருக்கிறேன். சரி வாருங்கள், வெளியே உலாவி வரலாம் .. இருங்கள், இதோ வருகிறேன் ... ” என்று ஒரு சிறு தலை ஆட்டலுடன் வெளியே சென்றாள். எவ்வளவு அனுபவம் அச் சிறு தலையாட்டுதலில் தெரிகிறது. அவளைப்பற்றி அதிகநேரம், அவன் சிந்தித்து நிற்க இடமில்லாமல் சீக்கிரமே ஜோன்ஸ் திரும்பி வந்துவிட்டாள். இருவருக்கும் உள்ள பிடிப்பு என்ன வென்பது தெரியவில்லை. அவள் நினைவை சுந்தரத்திற்குத் தன் மனதிலிருந்து களைந்து எறிய முடியவில்லை. அவள் நினைவுமட்டும் அவனுக்கு போதவில்லை போலும். அவளைப் பார்க்க அவளிடம் அடிக்கடி வரவேண்டியிருக்கிறது. வெளியே சென்று உலாவித் திரும்ப இரவு வெகு நேரமாகி விட்டது.

மாலை வரையிலும் சுந்தரத்திற்கு அன்று காத்திருக்க முடியவில்லை. மத்தியானமே ஜோன்ஸைக் காண அவள் அறைக்கு அவன் சென்றான். அவளும் அன்று அங்கிருத்தாள். சுந்தரத்தை அவள் அந்த வேளையில் கண்டதில், ஆச்சரியமடைந்தவள் போன்று, ‘ என்ன, நீங்களா இப்போது வருகிறது .. ’ சுந்தரத்தைப் பற்றியும், அவன் குடும்பத்தைப்பற்றியும், கொஞ்சநாள் பழக்கமாயினும் அவள் அறிந்து கொண்டிருந்தாள். கேட்கவேண்டியது என்பது அவசியமே இல்லாமல் நடுநடுவே சுந்தரம் சொல்வதிலிருந்தும் அவளுக்கு அவனைப் பற்றி நன்றாகவே தெரிந்து இருந்தது.

“ ஆமாம் ஜோன்ஸ், நீ இன்னும் இறக்கவில்லையே, இருக்கிறாயா என்று பார்க்கத்தான் வந்தேன் ... ! ” என்று அவன் சிரித்துக்கொண்டே கூறினான். அவனுடைய சிரிப்பு இவளுக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய வேடிக்கைப் பேச்சுகளும் அவளுக்கு ஆத்திரத்தைத்தான் கொடுத்தன. அவனைப் பார்த்து அவள் மிகுந்த துக்கத்தில் சொன்னாள் : “ என் பிரியமானவனே, நான் சொன்னால் நீ சாதாரணமான வகையில் எடுத்துக்கொள்ளலாம் .. என்னை உன்னைப் பற்றிய வரையில் என்னை, நீ இன்னும் அறிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. உன்னையும் நான் சரியாகத் தெரிந்து நடந்து கொள்ளவில்லை என்றும் நினைக்கிறேன். இல்லாவிட்டால் நீ இப்படி எனக்கு வருத்தம் கொடுக்க நடந்து கொள்ளமாட்டாய். தவறியே உன்னைத் தெரிந்து கொண்டுவிட்டேன் போலும். உனக்காகத்தான் நான் காத்திருந்தேன். ஆனால் இப்போது உனக்காக நான் காத்திருக்கவில்லை ... உன் நன்மைக்கு என்பதில் ... என் பிரியமானவனே, நீ கேட்டது சரி, நான் இறக்காதிருப்பது சரியில்லைதான். ஆனால் நான் விரும்பும் வகை என் இறப்பு இருக்க முடியும் என்பதில் இப்போது உன்னைக் கண்டவுடன் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. மறுதளிக்காதே. இனி இங்கு வராதே. என்னைப் பார்த்துவிட்டு விடு. முதலில் உனக்குச் சிரமமாக இருந்தாலும் எல்லாம் காலத்திலும், பழக்கத்திலும் சரியாகிவிடும் ... ”

அவள் உடைகளில் பூக்களும் கொடிகளும் தெரிந்தன. அநேக வண்டுகளும் வண்ணாத்திப் பூச்சிகளும் மொய்த்துக்கொண்டிருந்தன. அவள் அன்று வெகு வசீகரமாக  சுந்தரத்திற்குத் தோன்றினாள். அவள் மனதும் மிகுந்த சமாதானம் அடைந்து இருந்தது போல் தெரிந்தது. அன்று அவள் சிரித்துக்கொண்டும், வெகு உல்லாசமாகவும் சுந்தரத்துடன் பேசிக் கொண்டிருந்தாள்

“ நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன், வெகு விநோதமான இன்பக் கனவு கண்டேன். இப்போது உங்களிடம் சொல்வதற்கான அளவு அது ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் வார்த்தையில் அடைபடாத் போலும், மறந்து மறைந்து விடவும் இல்லை. உங்களை நான் இப்போது பார்ப்பதும் நேற்றைய என் கனவுதான் போலும். ”  அவனை அவன் அனைத்துப் பேசியதெல்லாம் ஞாபகத்தில் நிற்காது மறக்காது விநோதக் கனவாகத்தான் சுந்தரத்திற்கு இன்பம் கொடுத்தது. அவள் தன்னிடம் ‘ காதல் ’ கொண்டவள் என்று சிறிது நினைத்தான். தெரியாததற்கும் அறிய முடியாததற்கும் பெயர் கொடுப்பதினால்  தெரிந்ததெனக் கொள்ளும் மனிதர்கள், பேச்சற்ற பிராணிகளை விடப் பேச்சினால் எவ்வகையில் மேம்பட்டவர்கள் ?

மறுநாள் மாலை சுந்தரம் போனபோது ஜோன்ஸ் அறையில் அவள் இல்லை. மற்றோரு யுவதியை அங்கு சுந்தரம் பார்த்தான். அவளும் பாலியத்தில் வெகு அழகாகத் தோன்றினாள். இவனைக் கண்டு சிரித்துக்கொண்டே “ வாருங்கள், உங்களைத் தான் குறிப்பிட்டாள் என நினைக்கிறேன், ஜோன்ஸ். அவள் அவசர ஜோலியாக வெளியூருக்குப் போக நேர்ந்துவிட்டது. வருவதற்கு இரண்டொரு மாதகாலம் ஆகலாம் என்று உங்களிடம் சொல்லச் சொன்னாள். ஒருக்கால் இவ்வூருக்கு வராமல் இருந்தாலும் இருக்கலாமாம். மற்றும் உங்களிடம் கொடுக்கச் சொன்னாள் ” என்று அவனிடம் ஐந்து ரூபாய்களைக் கொடுத்தாள்.    ‘ நீயே வைத்துக்கொள் ’ என்று வாங்கியவன் அவள் கையிலே கொடுத்தான். அவ்விடத்தை விட்டு அவன் அகலும்போது, இரவு பத்துமணிக்கு மேல் இருக்கும். வாசலில் தூறிக் கொண்டிருந்தது. இன்றைக்கு அவன் குடையைக் கொண்டு வரவில்லை.

- சிவாஜி மலர் 1959
தட்டச்சு - ரா ரா கு.


நினைவுச் சுவடு - மௌனி

வலையேற்றியது - 27-08-2014

அநேகமாக தினம் மாலையில் அரைமணி நேரமாவது கடற்கரையில் உலாவிக் கழிப்பது என் வழக்கம். நேற்று என்னுடைய ஆபிஸ் அலுவல்கள் ஜாஸ்தியாக இருந்ததன் நிமித்தம், சிறிது நேரம் சென்றே வீட்டை அடைந்தேன். நாழிகை ஆகி விட்டாலும் மனது கொஞ்சம் நிம்மதி பெறவேண்டுமென்று வழக்கம் போல் கடற்கரைக்குச் சென்றேன். கடற்கரையில் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டு கண்டு கொண்டிருந்தது. எட்டி மணலில் உட்கார்ந்து பொழுது போக்குபவர்களுடைய வெளிக் கோட்டுருவங்கள் அந்த வேளையில் வசீகரத்தோற்றமாய் எனக்குத் தெரிந்தது. தூரத்தில் பக்க வசத்தில் உட்கார்ந்து எதையோ நோக்குவது போன்று இருந்த ஒருவன் எனக்குத் தெரிந்தவன் எனத்தோன்ற அவனை நெருங்கினேன்.

தனியாக உட்கார்ந்து இருந்த அவன் தன் முழங்காலைக் கட்டிக்கொண்டிருந்தான். சுமார் இருபது வருஷங்களுக்குப்பின் திடீரென்று என்னுடைய கல்லூரி சிநேகிதன் சேகரை அப்போது அங்கே பார்த்தது ஒரு அதிர்ச்சியாய்த் தான் எனக்கு இருந்தது. அவனும் நானும் இருபது வருஷங்களுக்குமுன் பட்டணத்தில் கல்லூரியில் சேர்ந்து படித்தோம். அன்றைக்குப் பார்த்தபடியேதான் நேற்று நான் பார்த்தபோதும் தோன்றினான். அதே முகக்களை, அதே கம்பீரமான பார்வை.

கடல் ஒலித்துக்கொண்டிருந்தது, கட்டுமரங்கள்  எல்லாம் கரை அடைந்துவிட்டன. காலந் தவறி வந்ததென இரண்டொரு கட்டுமரங்கள் வேகமாகக் கரையை நெருங்கி வந்துகொண்டிருந்தன. பாய் விரித்ததொன்று வெகு தூரத்தில் கடல் பரப்பில் தெரிந்தது. அமைதியற்ற தன்மையில் , எட்டி நெளியும் சாந்தமான சிற்றலைகள் கரை கண்டதும் அலைமோத ஆராவாரித்துக்கொண்டிருந்தன. சமுத்திரக் கரையில்  கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கொண்டிருந்தது. அவனோடு உட்கார்ந்து நான் என்ன பேசினேன் என்பது கிடையாது.  எதெல்லாமோ சம்பந்தமற்றுத்தான் நான் பேசினேன்.

படிக்கும்போதே அவன் ஒருவிதமான பையன். எல்லா மாணவர்களுடைய நன்மதிப்பிற்கும் உரியவன். படிப்பில் மிகுந்த கெட்டிக்காரன் என்பதும் உண்மை. எல்லாரிடமும் அவன் நெருங்கிப் பழகி கிடையாதென்றாலும், என்னப்பற்றிய வரையில் அவன் என்னுடைய அந்தரங்க நண்பன்.


“சேகர் எப்போது வந்தாய் - என்ன விசேஷம் - ஊரில் எல்லோரும் சௌக்கியமா - என்ன செய்கிறாய் ...” என்று என்னவெல்லாமோ கேட்டு, ஒரு பதிலில் அவனைப்பற்றிய இருபது வருஷ சமாசாரத்தையும் அறிய முயன்று கொண்டிருந்தேன்.

அவனும் எனக்கு ஏதோ பதிலளித்துக்கொண்டிருந்தான். அவன் பேசுவதற்கு நானும் இடம் கொடுக்கவில்லை. சிறிது சென்று பேச்சு நின்றவுடன் அவன் முகத்தைத்தான் நான் ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் பேச்சில் தனி அடக்கம் தெரிந்தது. வேறு அவன் ஒருவிதத்திலும் கடந்த இருபது வருஷமாக மாறவில்லை என்பதை அவன் முகம் காட்டியது. அதே வளைந்த மூக்கு உயர்ந்த புருவம், மிருதுவான கன்னங்கள். அதே இருபது வயதுக் கல்லூரி மாணவன் சேகர்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த நான் அவன் பக்கம் திரும்பினேன் ! பத்துப் பதினைந்து கஜம் முன்னால் நாலைந்து பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தேன். அவர்களுக்குச் சுமார் இருபது வயதிருக்கலாம். குதூகலமாகப் பேசி வார்த்தையாடிக்கொண்டிருந்த அவர்கள்  ஏதோ கல்லூரி மாணவிகள் போலும். நன்றாக இருட்டிவிட்டது. அனேகமாக எல்லோரும், போய்விட்டனர். ஏனையோரும் எழுந்து புறப்பட ஆயத்தமானர்கள். எங்கள் எதிரே உட்கார்ந்திருந்த அப்பெண்களும் எழுந்தனர். பிறகு நாங்கள் சிறிது நாழிகை பேசிக்கொண்டிருந்தோம். “சரி வா சுந்தரம், நாழிகையாகி விட்டது. கிளம்பலாம்” என்று சொல்லி என்னுடன் அவனும் புறப்பட்டுவிட்டான்.

வீதியில் அதிக கூட்டமில்லை. எங்களுக்கு முன்பு அந்தப் பெண்கள் போய்க் கொண்டிருந்தனர். அவர்களைத் தவிர பார்வையைக் கொள்ள வீதியில் ஒருவரும் இல்லை. ஒரு தெரு அவ்வீதியைக் குறுக்கிட்டது. ஒருத்தியைத் தவிர மற்றப் பெண்கள் அந்தத் தெருவில் திரும்பினர். தனிப்பட்ட அந்தப்பெண் மட்டும் முன் செல்ல நாங்கள் சிறிது பின்னால் சென்று கொண்டிருந்தோம். மற்றும் ஒரு தெருவில் அந்தப்பெண்ணும் திரும்பினாள். அவளோடு அந்தத் தெருவில் அவள் பின்னால் சேகர் திரும்பினான். அவளோடு அந்தத்தெருவில் அவள் பின்னால் சேகர் போனபோதுதான், அவன் அப்பெண்ணைப் பின் தொடர்கிறான் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. நாங்கள் பேசவில்லை. அவள் பின் மெல்லமாகச் சென்றோம்..... சிறிது சென்று அந்தத் தெருவில் உள்ள ஒரு பெரிய வீட்டிற்குள் அப்பெண் மறைந்துவிட்டாள். அருகில் இருந்த ஒரு கடையில் சேகர் நின்றான். ஒருதரம் வெற்றிலை வாங்கிப் போட்டுக் கொண்டான். தன் மனத்தை ஒரு விதத்தில் சமாதானம் செய்து கொள்ளவே அவன் அந்தக் கடை வாயிலில் நின்றான் போலிருந்தது. அவ்வீட்டை அவன் முன்னால் சென்று கடக்கும்போது, அந்த வெளிச்சத்தடியில் அவன் நடை அவன் மனம் போல் கொஞ்சம் தள்ளாட ஆரம்பித்ததாய் எனக்கு ஒரு தோற்றம். அந்த வீட்டை அனேகமாக நாங்கள் கடந்துவிட்டோம் .....

“சேகரா - வரக்கூடாதா...” என்று ஒருஅசரீரியான சப்தம் எங்கள் காதில் விழுந்தது. அந்த வீட்டு வாயிற்புறம் இருட்டாக இருந்தது... எத்தனையோ காலம் மௌனமாக நின்ற அந்த இருட்டு அப்போது ஒரு உணர்ச்சி வேகத்தில் சப்தமாக உருவாகியது போலும்! கனவில் நடப்பவனேபோன்று சேகரன் அவ்வீட்டினுள் நுழைந்தான். என்ன செய்வது என்று தெரியாமல் அவன் பின்னால் நானும் உள்நுழைந்தேன். அந்தக் குரல் அவனுக்குத் தெரிந்தவர்களுடையதா என்றும் அவன் அறிந்தவனா என்பதிலும் சந்தேகம். ஆனால் அது சிறிது முன் உள் நுழைந்த அந்த பெண்ணுடைது அல்ல.  அவ்வளவு குழைந்து  அப்பெண் அவனைக் கூப்பிடுவாள் என்ற எண்ணத்தை என் மனது அப்போது ஏற்க மறுத்தது போலும். ஒருக்கால் அவனே பட்டணம் வந்ததும் அவ்விடத்தில் தங்கியிருந்தால்? அதுவும் இல்லை; உள் நுழைய அவனுக்கு ஏன் அவ்வளவு தயக்கம்? வாயிற்படியை மிதித்ததும் இருட்டிலிருந்த வந்தவள்...“உள்ளே வர என்ன இவ்வளவு தயக்கம்? வீட்டிற்கு வா... உன்னை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் உன் விஷயத்தில் எதிர்பார்ப்பது ஒன்றும் நடக்காதுதான்” என்றாள். சேகரன் மெதுவாய்ச் சிரித்தான். அவள் பேசின குரல் ஒரு மாதிரியாகக் கம்மலாய் இருந்தது. அவள் என்னைக்கவனிக்காதது போலவே அவனை அணைத்துக்கொண்டு உள்ளே சென்றதும் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. உள்ளே நுழையும் முன்பே, எதிரே ஒரு விசாலமான கூடம் பிரகாசமாகத் தெரிந்தது. நடை மிகவும் இருட்டாக இருந்தது. நடையைக் கடந்து வரவேற்புக் கூடத்திற்குச் சென்றபோதுதான் அவளைக் கவனித்தேன். என்னை அப்போதுதான் கவனித்தவள் போன்று அவள் சேகரனைத் தன்  அணைப்பினின்றும் விடுவித்தாள். எதிரே இருந்த ஒரு சோபாவில் அவள் உட்கார்ந்தபோது அவன் பக்கத்திலேயே அவள் அமர்ந்தாள்.

அவள் அரை இருட்டில் சமுத்திரக்கரையி