Pages

என். டி. ராஜ்குமார்: கவிதைகள்

ND Rajkumar
1 hr ‎Sunday, ‎October ‎15, ‎2017·


அத்தாழம் - எ. ஐயப்பன்

இன்றைய அத்தாழம் இது கொண்டாகலாம்
இந்த அத்தாழத்தின் ருசியோடு உறங்குகின்றன எனது குழந்தைகள்
அரை வயிறோடு அவளும் நானும்...
இறந்தவனின்
போஸ்ட் மார்ட்டமும் சடங்குகளும் இந்நேரம் முடிந்திருக்கும்
மூடுகின்ற கண்ணிமைகளோடு அதை
நினைக்க முயலுகின்றேன்
ரத்தத்தில் மிதித்து நின்ற ஆள்க் கூட்டம்.....
உயிர் வாழ்கின்றவர்களுக்கு
வாய்க்கரிசி போட்டுச் சென்றவன் -
எ. ஐயப்பன்
(நான் சந்தித்த உண்மையான கலகக் கவிஞன் இவர்தான்)
மலையாளக் கவிஞன். தாய் மொழி தமிழ்

ரோஸ் ஆன்றா
6 hrs ·

நவீன கவிதை வரிசை - 123
------------------------------------------

உலகஅரங்கில் இப்போது நீ 
கேட்கும் பாடல்
உனக்கான பாடல் அல்ல
அது சக்கிலியனைப் போல் பறையனைப் போல்
நாசுவனைப் போல் காணிக்காரனைப் போல்
சவுட்டி இறுக்கி ஊருக்கு வெளியே
ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.


உன் வாழ்க்கையொரு, கரைபுரண்டோடும்
உனது பாடல்களை, பறையொலியை, மகுடத்தை
உறுமியை எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு
நாம் மரம் செடிகொடி மிருகங்கள்
அவர்கள் கேட்டு கண்விழிக்கும் படியாக்கு

சுடலைமாடன் கோவில்கள், இசக்கியம்மன் கோவில்களில்
உச்சிமாகாளி நீலி சூலி கருப்பாயி கோவில்களில்
நம்மில் சிலபேர் கட்டிவைத்திருக்கும்
பெருந்தெய்வங்களின் கோவில்களில்
காலையிலும் மாலையிலும் போட்டு முழக்கு
நரம்புமண்டலங்கள்
முறுக்கேறித்துள்ளும் வண்ணமாக்கு
உலகஅரங்கை அதிரவை
இப்போது நீ கேட்கும்பாட்டு
நம்மக்கள் பாட்டல்ல.
_________________
என்.டி.ராஜ்குமார்
ND Rajkumar
17 mins
உதிர்ந்துவிழ ஒரு பூவுமில்லை
பறந்து செல்ல ஒரு பட்சியுமில்லை
மூர்க்கத்துடன் பார்க்கும் தடாகம்
தாகமெடுத்தவனுக்கு
தண்ணீர் தர காத்து நிற்கின்றது
எனது விருபத்தைக்
கட்டிப்பிடித்துக் கொண்டு
அழுதும் சிரித்தும் பாவனை செய்த அழகே
பார்த்துக் கொண்டிருக்கிறேன் உன்னை
என் காதலே ப்ரியமே
கழுகன் கொத்தித் தின்று கொண்டிருக்கிறது
அடிவயிறை

-எ. ஐயப்பன்  (மொழியாக்கம்  - என்.டி.ராஜ்குமார்)
மலையாள கலகக் கவிஞன் எ ஐயப்பனின் நினைவு நாளில் .இது அஞ்சலி அல்ல
புகைப்படம்
கிருஷ்ண கோபால்

LikeShow More Reactions
Comment

NTRajkumar








http://www.peddai.blogspot.in/2005/09/blog-post_28.html

ஒருபோது, நெருக்கமான, ஒரு சகோதரனின் பிணைப்புப்போல தழுவின என்.டி.ரா வின் கவிதைகள். அவை ஊட்டிய உணர்வுகளை ஆணிடமிருந்து வந்த 'தாய்மை' நெகிழ்ச்சியை என, பழைய பதிவொன்றில் இவரது கவிதைகள் பற்றிய மனப்பதிவை எழுதவேண்டுமென எழுதியிருந்தாலும், எழுதிவைத்துள்ள குறிப்புகளைத் தேடி அதை எப்போதாவது பதியலாம். இப்போதைக்கு 'ரத்த சந்தனப் பாவை' தொகுப்பிலிருந்து சில கவிதைகள்.
 


இந்த ஓலைச்சுவடியை நாமல்லாத மற்றவர்கள்
படிக்க நேரிடுமானால்
தலைசுற்றும் நெஞ்சு படபடக்கும்
வெப்புறாளம் வந்து கண்மயங்கும்
மூளை கலங்கும்
படித்ததெல்லாம் வலுவற்றுப்போகும் என்று
இப்போது
என் எழுத்துக்களில் நான் வாதைகளை
ஏவி விட்டிருக்கிறேன்.
~
முள்மூளையால் ஒளிந்து அடித்ததில்
புண்ணாகிப்போன என்னுள்
படமெடுத்தாடும் மூர்க்கம்
மூளையைச் சொறிந்து புண்ணைப் பெரிதாக்க

கொப்பளிக்கும் ரத்தத்தின் வெப்பம் தின்று
புடைத்து நிற்கும் நரம்புகளில்
பொலபொலவென முளைக்குமென் இரட்டைநாக்குகள்
நேரம் பார்த்து நிற்கும் தீயெனச் சுழன்று

கழிவிரக்கம்பேசி எவரின் அன்பையும்
பிச்சைவாங்க மனமின்றி

ஓலைத்தும்பின் நிழலுருவிலும்
உன்துடை நடுங்க வைக்குமென் ஞாபகம்

ஆனாலும் நீ கண்டுகொள்ள முடியாதபடி
உன்னையும் யென்னையும் சுற்றியிருக்கும்
ஏதெனுமொரு புற்றுக்குள்
பதுங்கியிருக்கும் சீற்றத்துடன்
அடி வாங்கிய நல்லபாம்பு.
******
கடவுளை நான் கட்டவிழ்த்தபோது
அவனில் ஒட்டிக்கொண்டிருந்த
லட்சக்கணக்கான மனிதர்கள்
அம்மணத்தோடு ஓடிப்போய்
தற்கொலை செய்துகொண்டார்கள்
தப்பிவந்த சிலர் இந்த சாவுக்கு
யார் காரணமெனக் கேட்டபோது
எங்களைப் பார்த்து ஆள்காட்டியது விரல்
மல்லுக்கு வந்த மாமிசச்சாமியின்
வெட்டி எறியப்பட்ட விரல் இருந்த இடத்தில்
நவீன ஆயுதம் ஒன்று முளைத்திருந்தது
கடவுள் இருந்த இடம் லட்சணம் கெட்டிருந்தது
-*****
மாவிலையில் அகப்பை செய்து
ஊட்டித்தந்த கூவரகில்
கதை சொல்லும் மாயமரத்தை
நட்டுவைத்தாள் படுகிழவி
பூ உதிர்த்து வளர்ந்த பேனாவை
ஒருமுறை திறந்து பார்த்தபோது
அதற்குள் ஆழமாய் இறங்கியிருந்தது ஆணிவேர்
அதன்முனைகொண்டழுத்தி எழுத முனைந்தபோது
பாட்டியின் சேலையை உடுத்திக்கொண்டொரு
வாயாடித் தத்தை கொறித்துக்கொண்டிருந்தது
பழங்கனிகளை
அதன் விதைகளையெடுத்து
வரிவரியாய் நட்டுவைத்தேன்
அதுவழியாய் பன்முகம்கொண்டு நடக்கிறாளிந்த
பாசாங்கில்லா கிழவி
-*****

சிரசில் எதையோ சிலாகித்துக்கொண்டே

குறிபார்த்தடிக்குமென் மாந்ரீகக் கிழவியைப்போல்
பளிச்செனச் சொல்லிவிடுகிறேன் கண்ணில்பட்டதை

சொல்லித்தெரிவதா சொல்லில் உதிக்கும் சூட்சுமம்

கொழுந்து விட்டெரியும் தீயினுள்ளே
நீலப்புடவை கட்டி புணர்ந்தாடுகிறாள்

நெருப்பு மங்கை
****************
ஒரு முத்தம் கேட்டு கெஞ்சுகிறேன் நான்
குழந்தையின் மலம் துடைத்தெறிகிறாள் மனைவி

ஒரு முத்தம்கேட்டு அலைகிறேன் நான்
குழந்தையின் மூத்திரத்துணியை கழுவிப்போடத் தருகிறாள்
மனைவி

ஒரு முத்தம் கேட்டு புலம்புகிறேன் நான்
குழந்தையை உறங்கவிடாத நாயின் வள்வள்ளை
திட்டித்தீர்க்கிறாள் மனைவி
ஒரு முத்தம் கேட்டு சண்டையிடுகிறேன் நான்
பால்குடிக்கும் குழந்தையின் மார்பை மறைக்கிறாள் மனைவி

ஒரு முத்தம் கேட்டு கறங்குகிறேன் நான்
கொசுக்கள் அண்டாமலிருக்க வலைபோட்டு மூடுகிறாள் மனைவி

அடிவயிர் கிழிசல் காய்ந்தபின்னும்
பச்சை உடம்புக்காரி பதறுகிறாள் என்னைப் பார்த்து

எரிகிற உடலின் மனவிளி நிராகரிக்கப்படுகையில்
புணர்ச்சி பழகிய பேருடலில் விந்து முட்டி நிற்கிறது

எனது மிருகங்களின் கூரேறிய குறிகளை
மிகப்பக்குவமாய் வெட்டிச்சாய்த்தும்

மூளையின் பின்னால் பதுங்கியிருக்கிறதொரு
கலவரமனம்.
***********~

நண்பனாக தோழனாக அண்ணனாகயிருந்த
இரவுநிலா ஏனிப்படி ஆனது

யாருக்கு வந்ததிந்த மனநோய் யாரிடமிருந்து தொற்றியது
இரவுநிலவே இரவுநிலவே ஏனிப்படி சதிக்கிறாய்?

நட்சத்திரங்களோடு பூக்களோடு இலைகளோடு
நீரோடு நிலத்தோடு மரத்தோடு என்னோடு

சுவாரசியமாய் பேசிக்கொண்டிருந்த இரவின் நிலவுவாயில்
எப்படி வந்ததிந்த கரை உடைந்த ரத்தவெள்ளம்

ரணம் எனக்குப் பயமில்லாத ஒன்று

பழைய இரவும் சுகமானதே

சுழிநேரம் என் காலைப் பிடித்திழுக்க
குருதி வெள்ளத்தில் மூழ்கி மூச்சுத்திணறி

எனது வாழ்க்கையின் பாதி
பிணங்களாய் மிதக்கிறபோது

எனது இரவு மென்கரளை தின்னத் தயாராகிவிட்டது

மூதாதைகள் மறைந்திருக்கும்

கண்ணுக்குத் தெரியாத அந்த ஆல விருட்சத்திலிருந்து
பறந்துவந்த ஒரு கருங்காக்கை

எனது சுடலையின் தலைமாட்டில் வந்திருந்து
கரைந்து விளிக்கிறது

நான் புறப்படுகிறேன்
உனது இதயத்தில் வெளிச்சம் விழும்பரை
எனது பூக்களின் தலைகளைத் திருகி எறிந்து கொணடிரு நண்பா
******~

நானொரு குழந்தையாகி செல்ல மனைவியின்
கர்ப்பக் கவிதைக்குள் உருண்டோடிக்கொண்டிருந்தேன்
மருத்துவச்சி சொன்னாள் படுசுட்டியென்று
குறித்தநேரத்திற்குமுன்பாகவே பனிக்குடத்தை
கால்கொண்டு மிதித்து
தலைகீழாக வந்து குதித்தேன்
உயிர்குளிர முலை தந்தாள்
ஆனந்தம் பேரானந்தம் பரமானந்தம்
சொல்ல முடியா என்னவோ ஒன்று
முடியவில்லை எழுதியது பாதியில் நிற்கிறது
பேனாவை புத்தகத்திற்குள் வைத்தபடி
குட்டிபோடு மயிலிறகேயென சொல்லிவிட்டு
வயிறு பசித்து முலைதேடும் குழந்தையின் சிறுவாயருகில்
பால் பொங்க நின்றேன் நானொரு முலையாய்.
~***********
சாகக்கிடந்தாள் அம்மா
மருத்துவர் சொன்னார் கர்ப்பப்பாத்திரத்தை
எடுத்துவிடவேண்டுமென்று.

எனது முதல் வீடு இடிந்து தலைகுப்புற வந்து விழுந்த
வேற்றுலக அதிர்ச்சி

எனது மூப்பனின் சுடலையிலிருந்தொரு ஜோதி
ஒரு முட்டையின் வடிவில் பறந்து சென்று

இளமையை வாரிக்குடித்த மயக்கத்தில்
ஒரு தீக்கொழுந்தைப்போல் நின்றுகொண்டிருந்த
அம்மாவின் வயிற்றில் சென்றது கிளிக்குஞ்சாகிக் கொண்டது.

மண்ணெடுத்துச் சுட்டுப்பொடித்து அரித்துத் தின்றாளவள்
மண்வாசனை முதலில் வந்தப்பிக்கொண்டதப்படி.

மாடன் கோவில் திருநீறை மடியில் கட்டிவைத்து அள்ளித்தின்ன
நானந்த சாம்பல் கிண்ணத்தில் பாதுகாப்பாய் மிதந்தேன்.

பாம்புகள் புணருமொரு பௌர்ணமி நாளில்
மணக்கும் மரவள்ளிக்கிழங்கைப்போல் பூமியில் வந்திறங்கிய

என்னுடலில் ஒட்டிக்கொண்டிருந்த அழுக்கை
தெற்றிப்பூ, கஸ்தூரி மஞ்சள், சிறுபயறு பொடித்துத் தேய்த்து

குளிப்பாட்டி முலைப்பால் தந்து உறங்க வைத்த அம்மா
குடல்புண்ணில் வயிறு நொந்து ஏங்கி அழுகிறபோது

முண்டு மொருவீடு இடிந்தென் தலையில் வீழுமோவென
மூப்பனின் குரலில் அழுகிறது கிளிநெஞ்சு.
~*(*************
இப்பமெல்லாம் பழைய சூரியனா உதிக்குது
பழைய மழையா பெய்யிது

பேரு தெரியாத்த பூச்சிகளொக்க
புதுசு புதுசா மொளைக்குது

ஒலகம் போகுது இந்தப் போக்குல

இதுல என்னடான்னா ஏதோ ஒரு நீக்கம்புல போவான்
எழுதிவச்சுட்டு செத்தானாம்

காது இவ்வளவு அகலம் மூக்கு இவ்வளவு பெரிசு
கைகாலு நீளம் கவுட்டைக்க எடையில கெடக்குறது
எல்லாத்தையும்

இப்பம் கொஞ்சம் தலதெறிச்சு போறவனுக வந்து
மலைய விட்டு தாளோட்டு குடிய மாத்துங்குறானுக

பொறம்போக்குல சாய்ப்பு கெட்டுனா
அவுத்துட்டு ஓடுங்குறானுக

படிச்ச புள்ளையளுக்கு சர்க்கார்
உத்தியோகம் கொடுக்கமாட்டங்குறானுக

எங்க குட்டிச்சாத்தானப்போல
உருண்டோடுகிற பழைய மேகமே

நீ விடுகிற இடிகளெல்லாம்
இவனுகளுக்கத் தலையிலபோய் விழாதா.
~***************
எங்களது முரட்டுத்தனமான பூமி
உங்களுக்குக் கரடுமுரடாக இருக்கலாம்

ஒரு நிம்மதி என்னவென்றால்
எங்களது உலகத்தில் நாங்களேயெல்லாமும்

ஒருநாள் ஒருநேரம் ஒருநொடிப்பொழுதில்
என்னவெல்லாமோ நடக்கிறதிங்கு

இரவுத்தொழில் செய்கிறோம்
அப்படியென்றால் பகலில் நாங்கள்
செய்யமாட்டோம் என்று பொருளல்ல

தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும்
கூட்டிவிடுவதிலிருந்து

பல் முளைக்காத குழந்தை பால் குடிக்க வருகையில்
முலை கொண்டழுத்தி மூச்சுத் திணறடித்து

கொல்வதுவரை.
~***********
பண்டுபண்டொரு காலமிருந்தது
சின்னச்செடியைப் பறிக்கமுயன்றால்கூட
கதிர்கம்பெடுத்து அடிக்க வருவாளாம் காட்டுக்கிழவி

பட்சி பறவைகள் படுக்க மடிகொடுத்து நிற்கும் மரம்

அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கும் கருடக்கொடி

விஷம் முறிக்க வளரும் வேர் பறிக்க

மரம் செடி கொடிகளிடம்
உத்தரவு கேட்டு நிற்பான் மூப்பன்

கொடுங்காற்றாய் வரும் மந்திரமூர்த்தி

ஒரு வேர் பிழுதால்
ஐந்து மரம் செடி கொடிகளை நட்டுவைக்கச் சொல்லி
பயமுறுத்திச் செல்வான்

புராதனமக்களின் தெய்வங்கள்
மரம் செடி கொடிகளாய் வளர்வதுண்டு

எந்தக் கிளை அல்லது கொடி சாபமிட்டதோ

மலைகளைச் சுரண்டித் தின்னும் மானங்கெட்ட ராச்சியத்தில்
காய்ந்த சுள்ளிகளாய் நீண்டு குத்துகிறது
சூரியக் கம்புகள்.
~



அம்மாவிற்கு உளுந்துவடை ரொம்பப் புடிக்கும்

நான் விடியற்காலையில் எழுந்து குடிக்கும் முதல் கோப்பை
சாராயத்தைப்போல
ரசித்து ருசித்துத் தின்பாள்

மேலும்
எந்த அவசியத்திற்கு வைத்திருக்கும் பணமானாலும் சரிதான்
கடன் வாங்கியேனும்
கேட்ட உடனே யெடுத்துத்தரும் ஒற்றை ரூபாவில்கூட
அவளின் அதீத அன்பு நிறைந்திருக்கும்

பிறகு
அம்மாயில்லாத வாழ்வை நினைத்தால்கூட
நீரின்றி துடிக்குமெனது மீன்குஞ்சு

இருப்பினும் நான் தாயில்லா பிள்ளையானால் என்ன செய்வேன்

உழைக்காமல் மக்குப்பிடித்துப்போன உடலை
கட்டாயப்படுத்தி கூலிவேலைக்கு அழைத்துச் சென்றுவருகிறேன்

கொஞ்சமிருந்து ஓய்வெடுக்கும் சுக்குக்காப்பிக் கடையில்
சூடு மணக்க வடைபோடுகிறான் தொழிலாளி

ஒரு குழந்தையைப்போல
வாங்கித்தாடவென
அடம்பிடிக்கிறது அம்மாவின் நினைவு

போன மாதமே பாதுகாத்து வைத்திருக்குமிந்த
நூறுரூபாய் நோட்டை
சில்லறையாக்க மனமின்றி
தினமும் கடந்துசெல்கிறானிந்த அம்மாவின் செல்வம்.
-



நோயுற்ற எல்லாவற்றிற்கும் மருந்து கொடுக்கிறான் மூப்பன்

எல்லோரும் பயன்படுத்திப்போட்ட சொத்தையான சொல்லுக்கு
அடர்த்தியான வாக்கைப் பயன்படுத்துகிறேன்

அப்பனின் மருந்துப் பெட்டிக்கள் மூளையெனும் வார்த்தை
சிரச்சோறாக வந்து சமைகிறது

சொற்கள் ஒவ்வொன்றும் கவிதைக்கிளிகளாக மாறி
காட்டின் மௌனத்தினிடையே சிலம்பி மறைந்தொரு
தவத்தைப் பரப்புகிறது

நானும் ஒரு கண்தெரியாதவனைப்போல
மிக சூசகமாகவும் கவனமாகவும் அடியெடுத்து வைக்கிறேன்

எனது உயிரெழுத்தின் குறுக்கே யந்த காட்டாளனின் புராதன நதி
ஓடிக் கொண்டிருக்கிறது.
ஓதி எறிந்த சொற்கள் - என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு
By ந. முத்து மோகன்



ந. முத்து மோகன் (மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், குருநானக் ஆய்வு மையம்)



கவிஞர் என். டி. ராஜ்குமார் குமரி மாவட்டக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் வார்ப்பு. இந்த நூலின் முகப்பில் சொல்லப்பட்டிருப்பதைப் போல ஒரு மாந்திரிகப் குடும்பத்தில் பிறந்தவர். கவிஞனைப் புலவன் என்றும் பாணன் என்றும் சொல்லும் மரபைத் தாண்டி, ஒரு மந்திரவாதி என்று சொல்லுவதற்கான முகாந்திரங்களை ஏற்படுத்தியவர் என். டி. ராஜ்குமார். அற்புதமான குரல் வளம் கொண்ட பாடகர், நாடக நடிகர் என பலவகை ஆற்றல்கள் கொண்டவர். 1997 ல் இவரது முதல் கவிதை நூலான ‘‘தெறி’’ வெளி வந்த போது அந்த நூலுக்கு நான் அணிந்துரை எழுதினேன். 13 ஆண்டுகளில் ஒடக்கு, ரத்த சந்தணப் பாவை, காட்டாளன், கல் விளக்குகள் போன்ற கவிதைத் தொகுப்புகள் மலையாளத்திலிருந்து இரண்டு கவிதை நூல்கள் மொழிபெயர்ப்பு. வலைய தளங்களில் சுற்றித் திரியும் வேளைகளில் இவரது கவிதைகளை ஆங்கில மொழிபெயர்ப்பில் கண்டிருக்கிறேன். இவரது பல கவிதைகள் மலையாளத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. இதே 13 ஆண்டுகளில் கலை இலக்கியப் பெருமன்ற நண்பர்களோடு சில சச்சரவுகள், தலித் கவிதை, காலச்சுவடு பத்திரிக்கை என இவரது பயணங்கள். இன்னும் பல புதிய பயணங்களை இவர் மேற்கொள்ளுவாராக இருக்கலாம். இடையிடையே அவ்வப்போது நான் இவரைச் சந்தித்து வந்துள்ளேன். பழக்க வழக்கங்களில் கோபதாபங்கள் குறைந்துள்ளன. பழைய அன்பு, தோழமை மாறவில்லை.

பதநீரில் பொங்கும் நிலா வெளிச்சம் எனும் இக்கவிதைகள் நவீனச் சூழலில் வாழும் ஒரு பழங்குடி மனிதனின், ஒரு காணிக்காரனின் காதல் கவிதைகள். அவரது முதல் கவிதை சொல்லுகிறது:

‘‘கருநாகத்தின்
சுழி முனையில்
வல்லயத்தின் கூர்மையுடன்
மணிச் சதங்கை அதிர
உக்கிரதாண்டவமாடிக் கொண்டிருக்கிறது
அட்டகாசமான
நம் காதல்’’

பலர் நிறைந்த அரங்கின் நடுவிலும் அவளது பார்வை,
‘‘எலுமிச்சைப் பழமாக உருண்டோடி வந்தென்னை
அரவமெனத் தீண்டி நின்றதாக’’த் தெரிவிக்கிறார். சாதாரணமாக வாசித்தாலே இந்த வரிகளுக்கு ஒரு கவிதைப் பொருண்மை கிடைக்கிறது. பலர் கூடிய சபையில், மற்றவர்களுக்குத் தெரியாமல், அவள் பார்க்கும் பார்வையை எலுமிச்சம் பழம் அனக்கமின்றி உருண்டோடி வருவதாக உருவகிக்கிறார். ஆனால் இவ்வரிகளுக்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. பெரிய புலையனின் மகளை சிறிய புலையன் விரும்புகிறான். சிறிய புலையனை அந்தஸ்தில் குறைந்தவன் எனக் கருதும் பெரிய புலையன் இருவரும் நெருங்குவதை தடுக்கிறான். சிறிய புலையன் எலுமிச்சைப் பழ உருவெடுத்து ஒரு தட்டில் அமர்ந்து பெரிய புலையனின் மகளை நெருங்கி விடுகிறான். அவள் எலுமிச்சையை எடுத்து முகர்ந்து பார்க்க சிறிய புலையன் பாம்பு உருவெடுத்து அவளைத் தீண்டி விடுகிறான். காதல் பலித்துவிட்டது.

பத்து பதினைந்து வரிகள் எழுதுவதற்குள்ளாகவே இவரது கவிதைக்கு ஒரு கதைப் பண்பு கிடைத்து விடுகிறது. பத்து பதினைந்து வரிகளுக்குள்ளாகவே இரவது கவிதை மொழி ஒரு குறியீட்டு உலகத்திற்குள் நுழைந்து விடுகிறது. பத்து பதினைந்து வரிகளுக்குள்ளாகவே இவர் தன்னை ஒத்த ஒரு பழைய மந்திரவாதியைக்-காதலியை ‘‘ஜடாமுடிக்குள் ஒளித்து வைக்கும் பழைய மந்திரவாதியைக் - கண்டடைந்து விடுகிறார். கருநாகம், வல்லயம், அரவம், பித்தன், பிறை வடிவு, ஜடாமுடி போன்ற சொற்கள் வந்து விழுகின்றன - மந்திரம் ஓதி எறிந்த சொற்கள்.

என். டி. ராஜ்குமாரின் கவிதைச் சொற்களை ஓதி எறியப்பட்ட சொற்கள் என்று சொல்லும் போது இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. தமிழில் வேதம் என்பதற்கு ‘‘ஓத்து’’ என்ற பெயருண்டு. ஓதி எறியப்பட்ட சொற்கள் தாம் ஓத்துக்கள்.

அவரது காதலைப் பற்றிக் கூடுதலாக மேலும் சில தகவல்களைத் தருகிறார். அது குரு / சிஷ்யை உறவில் தோன்றிய காதல் போலத் தோன்றுகிறது.

‘‘தாமதமாக ஓடி வந்த கறுப்பு நதி’’

‘‘சூசகமாய் உள்நுழைந்தென்னை ஆட்டிடும் பாம்பே’’

‘‘குற்றம் ஒன்றும் இல்லையென்று விளையாடு பாம்பே’’ இந்த வரிகளிலிருந்து இவரது காதல் குறித்த சில அத்தியாவசியமான தகவல்களை வாசகர்கள் திரட்டிக் கொள்ள முடியும்.

காதலில் பித்தனாய் இவர் அலைவது ‘‘மலைத்தெய்வம் மறுபோதைக்காய் அலைந்து திரிவதை’’ப் போல இவருக்கே காட்சியளிக்கிறது.

கவிஞரது பழங்குடி மனதில் புதைந்து கிடக்கும் பழங்கதைகள் சிலவற்றை நம்மால் உடனடியாக அர்த்தப்படுத்த இயலவில்லை.

‘‘நல்ல மிளகு போன்ற கருத்த முத்துக்களை
பத்திரகாளியின் உடல் காமத்திலிருந்து
ருத்திரதாண்டவத்தால் பு+தக்கண்டன்
நக்கியெடுக்க’’

பத்திரகாளியின் உடலில் துளிர்க்கும் காம வேர்வையை பூதக்கண்டன் ருத்திரதாண்டவமாடி நக்கியெடுத்தான் என்ற காட்சி நமக்குள் விரிகிறது. அந்த வரிகளுக்குப் பின்னாலும் ஒரு கதை உள்ளது. பயங்கரமான கோடை நாட்களில் ஊர்மக்களுக்கெல்லாம் அம்மை நோய் கண்டுவிட்டது. தன்மக்களைக் காப்பாற்ற பத்திரகாளி எல்லோருடைய உடல் வெப்பத்தையும் தான் ஏற்றுக்கொண்டாள். அவளது. உடலெங்கும் நல்லமிளகுகள் போல அம்மை நோயின் பொக்களங்கள். அவளது துன்பத்தைப் பொறுக்காத பூதக்கண்டன் அந்த பொக்களங்களை தன் நாவால் நக்கி எடுத்தான். இந்த பழங்கதையைத் தான் இப்போது கவிஞர் வேறொரு செய்தியைச் சொல்லுவதற்குப் பயன்படுத்துகிறார். கவிஞன் பழம்புராணங்களை எத்தனைச் சுதந்திரமாக எடுத்தாளுகிறான் என்ற வியப்பு தோன்றுகிறது. ‘‘என் கவிதை பீ அள்ளச் செல்லட்டும்’’ என்று 13 ஆண்டுகளுக்கு முன்பு என். டி. ராஜ்குமார் எழுதியது எனக்கு நினைவிலிருக்கிறது. அன்று, நவீனத்துவ இலக்கிய விமர்சனம் சப்த பிரமாணத்திலிருந்து தன் கவிதை ஊற்றெடுக்கிறது என்று கதைத்துக் கொண்டிருந்தது. அதற்கு மாற்றுக்குரலாகத்தான் பீ அள்ளச் செல்லும் கவிதை குறித்து ராஜ்குமார் எழுதினார். இப்போது பத்திரகாளியின் உடல் காமத்தை பூதக்கண்டன் நக்கியெடுக்க என எழுதுகிறார். நக்கியெடுக்க என்ற சொல் வெறும் சொல்லாக இல்லை. அது பௌதீகத் தன்மையுடன் ஒலிக்கிறது. தேகப் பிரமாணம் பற்றியது அது. என் நண்பனின் போர்க்குணம் குறையவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இப்போதும்

‘‘வெப்பம் தாளாது வெடித்துச் சிதறுகின்றன இவரது கவிதைகள்’’.

‘‘எப்பொழுது பார்த்தாலும்

எனக்குப் பிடித்தது போலவே வந்து நிற்கின்றாய்’’ என்று தொடங்குகிறது ஒரு கவிதை. மறுவரியிலேயே ‘‘தலைவிரிக்கோலம் பாலப்பூவின் வசீகரம்’’ என்கிறார். பாலப்பூ என்பது பேய்களுக்குப் பிடித்தது. தலைவிரிக்கோலத்தில் பேய் போல வந்து நிற்கிறாய், அது தான் எனக்குப் பிடித்த கோலம் என்கிறார். இவரது காதல் பேய்க்காதல்.

‘‘பலவேசமெடுத்தென்னை விழுங்க வந்த பேயை
பிரபாவத்தோடு நானெடுத்து விழுங்கி
பேயாட்டம் ஆடுகிறேன்’’

தமிழும் கவிதையும் காதலும் என். டி. ராஜ்குமாரின் கவிதைகளில் அடித்தளம் நோக்கிப் பாய்கின்றன. சென்ற ஆண்டு ஒருநாள் மதுரையில் பேசும்போது, எழுத்தாளர் கோணங்கி. நமது காலத்திய எழுத்தில், ‘‘திணைகளின் எழுச்சி’’ என்ற மிகப் பெரிய சம்பவம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். ராஜ்குமாரின் கவிதைகள் ஆரம்பத்திலிருந்தே திணைகளின் எழுச்சியைக் குறித்து நிற்பவை. பின்னை நவீனத்துவச் சிந்தனை இதற்கு வேறுபாடுகளின் அரசியல் என்று பெயரிடுமாக இருக்கலாம். ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டுக் கிடந்த திணைகள் இற்றை நாட்களில் தமது சொந்தச் சொற்களுடன், சொந்த அழகியல்களுடன் முன்னுக்கு வருகின்றன. சமூக உடலின் அடியாழம், காயம் புதைந்த நனவிலி என அவை பயணிப்பதால் கோபங்களும் வெறுப்புகளும் இயலாமைகளும் அராஜகம் சுமந்து வெளிப்படுகின்றன. பலவேளைகளில் அவை சமூக அடக்குமுறைகளால் மிகைநிர்ணயம் செய்யப்பட்ட குறியீடடு மொழியில் வெளிப்படுகின்றன. நனவு மனத்தின், சமூக மனத்தின் குண்டாந்தடிகள் இன்னும் உயிர்ப்புடன், சந்தர்ப்பம் தேடிக் காத்திருப்பதை அவை அறியும்.

நனவிலி, அராஜகக் குறியீட்டு உலகம் என்று நான் கூறுவதால், ராஜ்குமாரின் கவிதைகள் அதன் சமூக உள்ளடக்கத்தை எவ்வகையிலும் இழந்து விடவில்லை. மாறாக, குறிப்பிட்ட ஒரு சமூகப் பிரச்சினைதான் இவரது காதலையும் கவிதையையும் பேயாட்டம் போடச் செய்கின்றது. காதலர்களுக்கிடையில் ஒரு வழிமறிச்சான், ஒரு கண்ணாடி மதில் குறுக்கே நிற்பதாக எழுகிறார். ‘‘பொழுதுகளையெல்லாம் கொடும் பறவைகளின் சிறகுகள் மறைத்து கொண்டிருப்பதாய்ச்’’ சொல்லுகிறார். வழிமறிச்சான் என்பது குமரி மாவட்டத்தில் சாதித் தடைகள், சாதியும் மதமும் கொடும் பறவைகளின் சிறகுகளாய் இவர்களது பொழுதுகளையெல்லாம் மறைத்துக் கொண்டிருப்பதாய் எழுதுகிறார். ஆலயம் / கோவில், குருசு மாலை / குத்து விளக்கு, சிலுவை மரம் / நந்தி என்ற எதிர்வுகள் இவரது கவிதைகளுக்குள் வந்து விழுகின்றன. குமரி மாவட்டத்தல் கிறித்தவத்தின் வரலாறு முரண்பட்ட பண்புகளைக் கொண்டது. அது விடுதலைச் செய்தியை மட்டும் தான் கொண்டு வந்தது என்று ஒற்றை வரியில் கூறி முடித்துவிட முடியாது. அவற்றைக் கவிஞர் நினைவுக்கு கொண்டு வருகிறார். சிலுவை மரமே இப்போது வழிமறிச்சானாக மாறிவிட்ட நிலையைச் சுட்டிக்காட்டுகிறார்.

‘‘இரு கரைகளையும் இணைத்தபடி

நடுவிலொரு கருப்பு நதி’’யாகப் பாயும் இவர்களது காதலின் மீது ‘‘துரோகிகள் வாளெடுத்து வீசு’’கிறார்கள். ‘‘பனஞ்சோலைகளுக்கிடையில் இவர் நடுநிசியாய் நிற்கிறார்’’. ‘‘பித்தனாய்ப் பிறை சூடி அலைகிறார்’’.

இப்போது, கவிஞர் முன்பு பயன்படுத்திய பழம் குறியீடுகளெல்லாம் மீண்டும் நினைவுக்கு வருகின்றன. பித்தன், பிறை, ஜடாமுடி, கங்கை, பத்திரகாளி ஆகியவற்றை மீண்டும் வாசித்துப் பார்க்க நேரிடுகிறது. ஆதிசிவன் என்ற அந்தப் பழங்குடிக் கடவுள் ஏன் பித்தனானான்? ஏன் மௌனியானான்? கங்கையையும் பிறையையும் ஏன் ஜடாமுடிக்குள் மறைத்து வைத்தான்? ஏன் உடல் தடதடக்கத் தாண்டவமாடினான்? அவன் ஏன் விஷமுண்டான்? இந்தப் பழம் புராணக் குறியீடுகளெல்லாம் எப்போது தோன்றின? ஏன் தோன்றின? இப்போது கவிஞனுக்கு எதிர்ப்பட்டது போன்ற வழிமாறிச்சான்கள் அந்த ஆதிசிவனுக்கும் எதிர்ப்பட்டிருக்குமோ? அப்படித்தான் கவிஞர் கருதுகிறார்.

‘‘என்னைப் போலவே
ஆலகால விஷம் குடித்து
கால்மாற்றி ஆடிய நீலகண்டனோ
தீண்டப்படாதவனாய்
புறந்தள்ளப்பட்டுக் கிடக்கின்றான்’’

ஆதிசிவன் என்ற பழம் புராண மாந்திரிகக் குறியீடு இக்கவிதைகளினுள் மறுவாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. திடீரென. இக்கவிதைகள் காதலைப் பற்றியவை அல்ல, வழிமறிச்சான்களைப் பற்றியவை என்ற உணர்வு தோன்றுகிறது. தீட்டு என்ற மிகப் பெரும் சமூக முரணைச் சந்தித்ததாலேயே அன்று அந்த ஆதிசிவனும் பித்தனானானா? சடாமுடி வளர்த்தானா? தாண்டவமாடி தன் அவமதிப்புகளைத் தேய்ததுக் கொண்டானா? ஆலகால விஷம் அருந்தினானா? என்ற கேள்விகள் எழுகின்றன. கவிஞர் ராஜ்குமாரின் ஆதிசிவன் குறித்த வாசிப்புகளுக்கு முன்னால் வேதாந்த சித்தாந்தப் பொருண்மைகளெல்லம் வெளிறிப்போய் விடுகின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புராணக் குறியீடுகளை கணிதவியல் துல்லியத்தோடு கவிஞரால் பொருள்கொள்ள முடிந்திருக்கிறது. ஒரு பழைய மந்திரவாதியும் கால இடைவெளியைக் கடந்து கவிதை உலகில் சந்தித்துக் கொண்டபோது இது சாத்தியப்பட்டிருக்கிறது. நனவிலி மனத்தின் அராஜகக் குறியீடுகள் எங்கே, எப்படித் தோற்றம் பெருகின்றன என்ற பழைய ரகசியம் நமக்குத் தெரிய வருகிறது.

இந்தியத் தத்துவங்கள் பலவற்றின் அடியாழத்தில் தேகமும் காமமும் உள்ளன. என் ஆதித்தாயும் கை எங்கே, கால் எங்கே எனத் தெரியாமல், வலம் எங்கே, இடம் எங்கே எனப் புரியாமல், தம்மை மறந்து (ஆணவம், அகங்காரம் இழந்து), புனிதமும் தீட்டும் துறந்து ஆடிய லீலைகளினின்றும் விளையாட்டுகளினின்றும் தான் இவ் உலகம் பிறப்பெடுத்தது. நனவு மனத்தின் ஒடுக்கும் ஒழுங்குகளெல்லாம் கட்டுடைந்து சிதறிச் சூன்ய சமத்துவமானது நனவிலிகளின் சங்கமத்தில் தான். அந்த ஆதி முதல் சமத்துவம் குறித்த ஏக்கம் எமது தத்துவங்களில் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. ஈராயிரம் வருட இந்தியத் தத்துவங்களால் மூடிமறைக்கப்பட்ட அந்தப் பூர்வ உண்மையை அதன் சொந்த வடிவில் ராஜ்குமாரால் கையகப்படுத்த முடிந்திருக்கிறது.

‘‘பதனீரின் மணம்’’

‘‘தந்திரம் நிறைந்த மரச்சீனிக் கிழங்கின் மணம்’’

‘‘பதனீரில் அவித்தெடுத்த மரச்சீனிக் கிழங்கு’’

ஆண் விந்து ரகசியம் அவிழ்ந்து இந்தக் கவிதை நூல் முழுவதும் பரசியமாய்க் கலந்து நிற்பதைக் கண்டுகொள்ள முடியும். அதனாலேயே இந்நூல் பெண்ணியவாதிகளின் விமர்சனத்திற்கும் ஆளாக நேரிடலாம்.2.9.2010
*************************************************************************************

எழுத்தாளர்: என்.டி.ராஜ்குமார்


தாய்ப் பிரிவு: புது எழுத்து


பிரிவு: ஜனவரி07


வெளியிடப்பட்டது: 07 மே 2010


http://www.keetru.com/index.php/2010-05-07-09-25-04/07/8339-2010-05-07-12-03-23


1. வெள்ளைச்சுவரில்


கரிக்கட்டையால் வரைந்த மரங்களை அழித்தபோது

கலைந்த பறவைகள்

எனது சொப்பனத்தில் வந்து உட்கார்ந்து கொண்டன



கனவில் பெய்த மழையில்

நனையாமல் வந்த நான்

தூங்காமல் தூங்கிக் கொண்டிருந்தபோது



இசக்கியம்மையின் கதைப்பாடலை

பாடிக் கொண்டாடிக் கொண்டிருந்தன


மண் ரேடியோ குத்தவைத்திருக்கும் புளியமரம்


சிரட்டைகளையும் நுங்குவண்டிகளையும்

தொலைத்த நான்


கதைகளையும் விளையாட்டுகளையும்

போட்டு வைத்திருந்த ஓலைப்பெட்டியைத் தேடியபோது


அம்மா சொன்னாள்

"காக்கா" கொண்டு போச்சு



2. நாகலிங்க பூவிற்குள் பூலிங்கமும்


பூலிங்கத்திற்குள் நாகலிங்கமும்


வரைந்து கொண்டிருந்த பரமனை

பூப்பந்து முலையது செருக்கு முலையாகி

எழுந்து தாக்கியது

மேலும்

சந்ராயோகத்தில்

சரமழை உதிர்த்து பூங்கிணர் திறக்க

காதளவு கண்ணுடையாளும்

உளிமுனைக் கூத்தாடியும்

கோலங்கள் பல செய்து

புணர்ந்து தீர்த்தனர்

*******************8888888888888888888888888888888888888
என். டி. ராஜ்குமார் கவிதைகள்


http://yathrigan-yathra.blogspot.in/2009/04/blog-post_09.html



லேட்டி பொன்னுமக்கா

முன்வாசல் வழியா போகக்கூடாதுட்டீ...

அயித்தம் பாப்பாங்க

நம்ம பொழப்பே பொறவாசல் பொறப்புட்டீ.

ஏமாத்திம்மா..... அடியேன் வந்திருக்கேன்

கும்பிகாந்துகு ஏதெங்கிலும் தரக்கூடாதா

கஞ்சி வெள்ளமும் ஒரு துண்டு கருப்பட்டியும்

கிட்டியாலே போதும்

மனசுவெச்சு ஏமாத்தியம்மா எச்சிச் சோத்துல வெள்ளம் ஊத்தி

கொண்டு தட்டுவா

விரிச்ச முந்தியில தண்டிணியெல்லாம் ஒழுகிவிழ

கிட்டிய சோத்த அரிச்சுத் தின்போம்.

சட்டிப்பான கழுவணுமெங்கிலும்

எல்லாத்துக்கும் வாற வழியதுதான்

ஏமான் வீட்டிலயிருந்தாரெங்கி

ஏமாத்தியோ பெண்டுபிள்ளையோ

சத்தமிட்டு சிரிக்கப்பிடாது.

ஏமான தொடப்பிடாது

தண்ணிகொண்டு கொடுக்கணுமெங்கிகூட

கொடுத்துட்டு ஓடிப்போய் சொவரு பக்கம் மறஞ்சி நிக்கணும்

அன்யோன்யமா நெருங்கி நின்னு பேசக்கூட வரப்பிடாது

எப்படி இந்த ஏமாத்திமாரெல்லாம் ஏமாம்மார

கெட்டி ஆளுதோன்னு தோணும்.

செலச் சமயம் காட்டுக்கு ஆனமேய்க்க போறயேமான்

வெளுப்பிலபோய் அந்தியில வரும்

இத அறிஞ்சி வச்சிகிட்டுதான்

ஏமாத்திக ஆசைய தீத்துவைக்க

ஆரங்கிலும் வருவானுக.


நம்ம பௌப்பு


பிச்சயெடுத்திட்டு கண்டும் காணாம போறது


நமக்கு அறியாதுண்ணு ஏமாத்தி நெனப்பா.


நம்மளும் உரியாடாத போய்கிட்டு


நாலஞ்சி தெவசம் கழிச்சி பிச்சயெடுக்க வாறப்ப


ஏமாத்திய பாத்து மொகக்குறி சொல்லுறது


அம்மையிட மொகத்துல ஒரு கலக்கம் தெரியுதல்லோ


மனசின்ற அகத்து ஒரு வல்லாத்த சலனம் ஒண்டல்லோ


ஏமான் அறியாத அம்மைக்கும் வேறொருத்தனுக்கும் ஒரு


தொடர்பு ஒண்டல்லோ


பாவமல்லா எந்நாலுமிதொரு பாவமாணு


தொஸமில்லா எந்நாலுமிதொரு தொஸமாணு


அம்மைக்கு பகவதி தொணையொண்டு


கொளவி குறி சொல்லி முடிக்க


ஆருட்டையும் இதப்பத்தி மிண்டப்பிடாது


என்று சொல்லிவிட்டு


சூடுசோறும் கறியும் கொடுத்து


புதுத்துணியும் கொடுத்தனுப்புவா ஏமாத்தி


இப்படியே ஆறும் இருவர் பசியும்.





தம்பிய பெத்தெடுத்த பச்ச ஒடம்போடு கெடக்க


வயிறு நெறய கள்ளும் மோந்திக்கிட்டு


வாய் நெறய விளித்துக்கொண்டே


நல்லமொளகு, கொடமஞ்ச, நால்பா மரப்பட்ட.


ராமச்சம்வேரு,


ஒணங்கிபோன காட்டு நெல்லிக்காயிட்டு


கொதிக்க வைத்த வென்னீரில் துணியை முக்கி


அடிவயிற்றில் ஒத்தடமிட்டுக் கொடுத்துவிட்டு


ஒடக்கு எடுக்கும் அப்பா


அம்மாவின் கூந்தலுக்கு


( எழுத்தாளர் ரவிக்குமார் அவர்கள் தொகுத்த ராஜ்குமார் அவர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பு ( கல் விளக்குகள் ). காலச்சுவடு பதிப்பக வெளியீடு.)


சமகால மலையாளக் கவிதைகள் - என்.டி ராஜ்குமார் (1)


http://www.inmmai.com/2014/02/1_15.html



பள்ளிக்கூடம் - பினும் பள்ளிப்பாடு



பள்ளிக்கூடத்தில் நாங்கள்

குடியிருந்திருக்கிறோம்

சில சமயங்களில் மட்டும்

கல்வி அபயமாகியிருக்கிறது


அந்திசாயும் நேரத்தில்

ஏதோ ஒரு வகுப்பறையில் இருந்து ஒலிக்கின்ற

சந்தியாநாமத்தை கேட்டு நான்

நரகவேதனைப் பட்டிருக்கிறேன்



இருட்டுக்குள் இருக்கும்

கஞ்சிப் பானையில்

புத்தகம் மூழ்கிக் கிடக்கையில்



இடிமுழக்கத்தோடு வரும் காற்று

எங்கள் விளக்கொளியை

விரட்டியடித்திருக்கிறது



ஒருமுறை மின்னலின்

ஒளிக்கற்றை பளிச்சிட்டதில்


எங்களுக்கொரு

குடும்ப்ப் புகைப்படம் இருக்கிறது


பழங்கதைகளை

போர்த்திக் கொண்டிருக்கும் பாட்டன்


வாத்தியார் தேர்ந்தெடுத்த

திறமையுள்ளவனின் மேஜையில்

பகலைத் தேடித் தேடி

அலுத்துப் போயிருக்கையில்


தண்ணீரில் மூழ்கிய வயலோர வீடு

ஒரு கழுதையை போல

தலை குனிந்திருந்தது






படித்த சூத்திரன்


சாலையை கடந்து செல்கையில்

திண்ணையில் இருந்தபடி நான்

மாய்ந்து போயிருக்கிறேன்


சத்துணவு சமைத்துக் கொண்டிருக்கும் அம்மையின்

வியர்த்த குடிசைக்குள்


அவர்கள் இருந்து களிக்கும் குலாம்பரிசின்

ராணியை வெட்டி சரிக்கிற போது


பப்பாளியும் பலாவும் இட்டு விரவிய

சளித்துப் போன கறி வந்து விழுகிறது


ரேஷன் கஞ்சியில்

இப்போது நான் படித்த பள்ளிக்கூடத்தின்

ஜன்னல் திட்டில் இருந்து

மலம் கழிக்கையில்’



அது விழுந்த தண்ணீருக்குள் இருந்தும்

அலம்பிக் கொண்டிருக்கிறது ஒரு பள்ளிக்கூடம்


****************************************************************

ரோஸ் ஆன்றா

55 mins ·

நவீன கவிதை வரிசை - 116

------------------------------------------

அவள் எனக்குப் பசி தீர்த்தவள்

நீ காமம் தீர்த்தவள்

எருமைபோல வளர்ந்தநான்

அவளுக்குக் குழந்தை

எனக்கு என்னைப் போலல்லாத

ஒரு பிள்ளை வேண்டும்

பற்றியெரிகிற தீயை

புணர்ந்து அணைக்கிற அன்பு மனைவியே

ஓங்கிய கையை நிறுத்திவிடு

மூச்சுத் திணறுகிறது

சூசகமாய் ஒருவார்த்தை சொல்

சோற்றில் விஷம் வைத்து

என் அம்மாவைக் கொன்று விடுகிறேன்.

_________________




என்.டி.ராஜ்குமார்





நவீன கவிதை வரிசை - 118


------------------------------------------


இன்று அல்லது இப்போது அல்லது இந்த நொடியில்


ஏதேனும் ஒன்றிங்கு நிகழப்போகிறது
சமூகத் துரோகியென்றோ
அனாதைப் பிணமென்றோ தூக்கியெறிய
அவர்கள் எங்களை
மிகக் கடினமாகவோ அல்லது ஒரு
சுண்டெலியைப்போலவோ நசுக்கக்கூடும்
அல்லது நாங்களொரு
பயங்கரமான கொலையாளியாக மாறவேண்டும்
ஏனெனில்
எதற்கும் துணிந்துவிட்ட நாங்களிந்த நாட்டில்
நிம்மதியாக வாழ வேண்டியிருக்கிறது.
_________________
என்.டி.ராஜ்குமார்




ரோஸ் ஆன்றா


நவீன கவிதை வரிசை - 119


------------------------------------------


நீ குழந்தைக்கவிதை எழுத முற்படுகிறாய் ஆனால்

குழந்தையாக முடியவில்லை

உனது மைகுப்பியில் மரங்களின் ஆணிவேர்களைக்

காணவில்லை

உனது நோட்டுப்புத்தகத்தில்காடுவளரவில்லை


உனது கனவுகளில் தொட்டம்வளரவில்லை


உனது சாமிகள்கோவில்கட்டிவிளையாடவில்லை

உனது இரவுகளில்தேவதைகள்மிதந்துவரவில்லை

உனது நடுச்சாமத்தில்பேய்களோநாய்களோஊளையிடவில்லை

உனதுதாழிக்குள் விடுகதைகளையோபழமொழிகளையோ

போட்டுவைக்கவில்லை


உனது மனமுதுகில் பூதங்கள்தொற்றிக்கொள்ளவுமில்லை


முருங்கைமரம் வளரவுமில்லை


எனதம்மை கர்ப்பிணியாகப்போகிறாளாம்


கதைகைதையாய் காரணம்சொல்லி


பூமிக்குள் இறங்கிச்சென்றமூப்பத்தி பறந்துவருகிறாள்


இடைச்சிறுத்த வெட்டுவாளியாய்.


_________________






என்.டி.ராஜ்குமார்




நவீன கவிதை வரிசை - 121
------------------------------------------

குருவாயூரில் ஒரு கருங்குயில்
பாடச் சென்றது
அதன் நிறம் பிடிக்காமல்
ஓட்டியடித்தன கல்த்தூண்கள்
குரலுக்கேது நிறமெனக் கேட்டொரு
கம்பீர நாட்டையிலிருந்து கண்ணீர் ஒழுகி
வரலாறை மூழ்கடித்தது
அதில் மூச்சுத்திணறிக் கொண்டிருந்ததொரு
புராதன ஓடம்
முப்புரிச் செவிகள் வர்ணம் பார்க்கின்றன
பாம்பெனக் கிடைக்கும் கல்மெத்தையில்
பாடிக் களிக்கின்றன பல்லிகள் எலிகள்
பாச்சாக்கள் வௌவால்கள்
அதன் ஏகாந்தம் கலையாமலிருக்க
அசையாமல் கிடக்கிறான் அனந்தன்
பொதுவிலின்னும் உதிக்க மறுக்கிறது
அனந்தபுரிகோட்டைச் சூரியன்.
_________________
என்.டி.ராஜ்குமார்

ரோஸ் ஆன்றா
8 hrs ·
நவீன கவிதை வரிசை - 122
------------------------------------------
பேருந்து நெரிசலில் பிடித்த முலைகளை
திருடித் தின்கிறதென் அறைக்குள் பூனை
சுயமாய் சுகம் தர இடையும் பின்னஞ்சதைகளுமெல்லாம்
மனத்திரை மீதினில் எழுந்ததுமுண்டு பற்பலநேரம்
மனைவியை ஏற்றும் பயணத்திலெல்லாம்
என் முகமிரு பூனைக்கண்ணாய் மாறும்
ஆடையைத் திருத்தி விடுவதற்கு
எடுத்து வைக்கும் அடிகள் வரையில்
எழுந்துநிற்குமென ஆணவம் பெரிதென
இயம்பிடுவேன் பகல் வேளையிலும்
என் ஆண்மையில் உன்னைப் புழுவெனத் தைத்து
இரையென உண்டு சுகித்திடுவேன்
தோணியில் துடுப்பினை இறக்கியே நானந்த
அக்கரை செல்ல முயல்கையிலே
புலிமுலையால் எனை அடித்து வீழ்த்தி
இடுப்புக்குக்கீழே முகம் புதைக்கவைத்து
பாலும் தெளிந்ததேனும் தந்தெனை
உடைத்து நொறுக்கிய ஆங்காரி நீ.
_________________
என்.டி.ராஜ்குமார்
நவீன கவிதை வரிசை - 120
------------------------------------------
எங்கள் வீடொரு எலி வீடு. வந்த
பெண்கள் அதில் இருக்கால் எலிகள்
ஆதியிலே திருமணமாகி
இல்லத்திற்கு வந்த எலியொன்று
காவடியெடுத்தாடியதைப் பார்த்து
புதிதாக வந்த எலிகளும் துள்ளிக் குதித்தாடின.
தங்கள் ஊரிலும் பெய்கின்ற பீமழையில்
சந்தனம் மனக்குதென்று
வீட்டுக் கிழவியை கொல்வதற்கு
எலிகள் குசுகுசுத்து
தின்பண்டங்களிலும் மலம் கழித்துவைக்க
உண்டவர்களெல்லாம் நோய் பிடித்து
மாறி மாறிக் கடித்துக்கொண்டனர்
எலிநோய் வந்துசெத்தும் போயினர்
எங்கள் வீடொரு எலி வீடாய் மாறியது
சுரண்டிச் சுவரில் வளையெடுத்த எலிகள்
உடமையாளர்களின் மூளையை திருகியெடுத்து
கறம்பிக் கொண்டிருந்தன
இடிந்து பொடிந்து ஆட்டம் காணும்
எங்கள் வீடொரு எலி வீடாய் மாற
தெய்வ புண்ணியமோ
செய்த பாவமோ
எல்லா எலிகளுக்கும்
எலிக் குஞ்சுகள் பிறந்தன.
_________________
என்.டி.ராஜ்குமார்

நவீன கவிதை வரிசை - 125
------------------------------------------
நீ ஒரு அழகிய பன்றியாய்
எனக்குள் உறுமிக் கொண்டிருந்தாய்
நமது அற்புதமான உறுமல்களிலிருந்து
நீ கசியத்துவங்கியதால்
நாம் ஒருவரை ஒருவர்
உரசிக் கொண்டோம்
அப்படி
நம் இருவருக்குள்ளிருந்தும்
ஒரு பன்றிக்குட்டி பிறந்தது
பிறகு ஒரு
பன்றிப் பிடிப்பவன் வந்து
உனது கழுத்தில் சுருக்கிட்டு பிடித்தபோது
மூஞ்சியெடுத்து அவனது
குதிரை முகத்தை அடித்து
நொறுக்குவாய் என நினைத்தேன்
நீயோ ஒரு சுவாரசியமான கொலைநிகழ
ஒத்துக்கொண்டு
கால்களையும் கைகளையும் உயர்த்தி
மல்லாக்கப்படுத்துக் கொண்டாய்
நான்கு பக்கங்களும் இறுகக் கட்டப்பட்டது
இப்பொழுது நானும் பன்றிக்குட்டியும்
மூச்சுத்திணறியபடி ஓடிக்கொண்டிருந்தோம்
ஆளற்ற ஒரு கூட்டம் துரத்திக் கொண்டிருக்கிறது.
________________
என்.டி.ராஜ்குமார்
http://www.firstpost.com/long-reads/rich-legacy-3868399.html

I  worked in the postal department for 14 years of my life and was ousted from my job following a plot that sought to make an issue out of my caste. Currently, I teach Carnatic music at a few schools and people’s homes. Some people, even now, cheat me of my pay. Earlier, I was teaching Silambam, modern children’s plays and folk songs. I also know Adivarmam a little, a craft that will fetch not even 5 paisa today.
It was my father who introduced me to the habit of reading. Ancient poetry, bhaktipoetry, manuscripts of mantrikam (sorcery) and vaithiyam (medicine) that are entirely in the traditional poetry format, mansucripts on silambam, Ayya Vaikuntasami’s Akilathirattu especially Saatu Neettolai, and Dravidian literature — all of these formed the foundation and continue to lend strength to my own writing. I sing because of my father as well. I grew up listening to him sing about our ancestral deity as well as saatu neetolai.
My Tamil poetry works include Theri, Odukku, Kaattaalan, Rattha Sandana Paavai, Sottu Sottaai Vazhigiradhu Sevvaralipookkal, Kalvilakkugal, Garudakkodi. I have also acted, penned lyrics for five songs and sung a song in the 2012 sociopolitcal satire Tamil film Madhubana Kadai.
From Malayalam, I translated the works of one of the masters of modern poetry, A Iyyappan as well as the prolific contemporary poet Pavithran Theekkuni. I have also translated the works of ‘Poikayil Appachan’, who was a priest with great social conscience and was chosen many times to become a bishop but was insulted by other priests of the church as he was a Dalit (Pulaya). Protesting the the church and the pastors that did not allow him to become a bishop — as well as the bishop who stood by the caste atrocities against him — he ditched the robe. Further, he studied the Bible through the Dalit perspective and sought to bring the oppressed across the world together and worked until his last days for their upliftment.
I do not translate works that are already in Tamil or just about anything. I cherrypick works that are new to Tamil to translate.
***
தெரச்சிமீன் வாலெடுத்துச் சுழற்றும் அப்பன்
மான்கொம்பெடுத்து அப்பனுக்க அப்பன் வீசிய
அடவு முறையைச் சொல்லித்தருவான்.
அப்பனுக்கு அப்பனுக்க அப்பன்
ஆடுகளத்தில் மல்லுபிடிப்பான்.
முன்ன்ங்காலைத் தூக்கி  முட்ட வரும்
வெள்ளைக்கிடாவின்
கழுத்தைக் கடித்தெடுத்துவீசிய கடுவாப்புலி
கம்புகளால் அம்புகள் செய்து
படைநடத்திய கதைகளைச் சொல்லுவான்.
இன்னமும் மிஞ்சியிருக்கிறது
இந்த போர்க்குணமும் மானமும்.
எங்களுக்கு சொல்லித்தர அடவும்
தகுதியுமில்லாத துரோணா.
மீன்முள் வாளெடுத்து
ஆமைத்தோடு கேடயம் செய்து
செறுத்தடிக்கும்
ஆயுதம் பிடிக்கத் தெரியாதவன் நீ.*
Father, who could pick up a pomfret
by the tail and twirl it, taught us,
wielding antelope horns,
the silent, rhythmic steps by which
Father’s father used to throw his spear.
Father’s father’s father was a renowned
wrestler in the playing field.
Father told us stories of how
a ferocious tiger that had once
bitten off the neck of a white ram
that had raised its forelegs to come
charging at him fashioned arrows
from canes and ran a whole army.
This combative spirit and honour
still survive in our midst.
Drona, you don’t have the skill
or ability to teach us those moves,
nor do you know how
to brandish a fishbone sword,
make an armour out of tortoise shell
and bear arms that beat back
and vanquish the enemy.
நண்பனை அவனது அம்மா
பைத்தியக்காரப் பயலென்று கொஞ்சுவாள்
வேறுசிலர் மெண்டல் என்பார்கள்.
இதில் எது சரி என்கிற கத்திமுனையிலிருந்துகொண்டு
நானும் அவனும் மதிப்பிற்குரிய மரணத்தை
விதவிதமாக நிகழ்த்திக்கொண்டிருப்போம் அல்லது
தனித்தனியாக செய்துகொண்டிருப்போம்.
சிரிக்கும் ரோஜா இதழ்களில்
பூச்சிகொல்லி மருந்தை ஊற்றிவிட்டபடி.
சிறுபிராயத்தில் சுடலைவரை ஓடிக்களித்த
நுங்குவண்டியில் சென்றிருந்தால்
இதற்கு முன்னால் ஊர்போய் சேர்ந்திருக்கலாம்.
நரிகள் ஊளையிடும் பன்ங்காட்டுக்குள்
வேதாளச் சிறகசைத்து ஆந்தைகள் தள்ளியிடும்
பழங்கள் தின்றாவது நகர்ந்திருக்கலாம்.
மெர்குரி விளக்குகளில் மஞ்சள் எச்சங்களில்
புதைந்து தவிக்கும்
நகர்ப்புறப் பேருந்து வெளிச்சத்தில் நானோ
மஞ்சளாகி
மஞ்சளாகிப் போன நண்பனை
மஞ்சள் வண்டியில் ஏற்றி ஊர்கடத்திவிட்டொரு
மஞ்சள் கொலை செய்ய முனைந்தபோது
அடையாளங்களும் பயணப்பாதைகளும் அல்லது
குறிப்புகளும் அவனை பாதியில் இறக்கிவிட்டுச் செல்ல
தப்புதப்பாய் ஓடிப்போன பைத்தியமும்
நானும்
பிரம்மையெனும் ஒலைத்தும்பில் ஒரு பனித்துளியைப்
போலத் தொங்கிக்கொண்டிருந்தோம்.
*
“Crazy boy,” my friend’s mother
called him fondly. To a few
others, he was just ‘mental’.
Which of the two was right?
Living on that razor’s edge
of a question, he and I staged
many kinds of honouorable deaths,
or we performed them separately,
each to his own, pouring insecticide
on rose petals in bloom.. .
Had we travelled on the cart laden
with palm fruit, the same one that we had
as children happily run
behind all the way
to the cremation ground,
we might have reached home sooner.
We could have moved on,
subsisting on the fruit pushed down
by owls flapping their ghoulish wings
inside the palmgrove
where the jackals howled all night.
When, after having turned yellow
under the glow of city buses
helplessly buried
in the yellow residue of mercury lamps,
I pushed my friend, yellow by then,
into a yellow van and smuggled him
to a distant town to attempt a yellow murder,
the landmarks and the pathways
(or markers) let him out
halfway along the route.
Then the lunatic who made
his erratic getaway and I
were suspended like a dewdrop
on the frond of illusion.
Both poems were translated by N Kalyan Raman from untitled Tamil poems by ND Rajkumar
N Kalyan Raman is a Chennai-based translator of contemporary Tamil fiction and poetry into English. He has published nine volumes of Tamil fiction in translation, with two more books forthcoming in the near future. He has also translated over 200 poems by leading contemporary Tamil poets, published in journals and anthologies in India and abroad. He also regularly contributes essays, reviews and articles on literature, culture and public policy. In February 2017, he received the prestigious Pudumaipithan award for the year 2015, given by Vilakku, for his contribution to Tamil literature through his translations.