Pages

Monday, July 11, 2011

யூமா வாசுகி – கவிதை, மோஹினி - பிரமிள், பிரபஞ்ச கானம் – மௌனி, The Widow's Lament in Springtime - William Carlos Williams

மோஹினி
 - பிரமிள்

‘உனக்கே
உனக்கு நான்’ என
சப்தித்த நின் பார்வைகள்
உன் முகம் நீங்கி
எட்டாத நிலவாயிற்று.
வக்கரித்துத் தரையில்
இலைப்பார்வை பரப்பிற்று.

வழிதொறும்
நிழல் வலைக் கண்ணிகள்
திசை தடுமாற்றும் ஓர்
ஆயிரம் வடுக்கள்.
வேதனை வேர் நரம்பெழுந்து
மூடியது கானகம்.
எதிரே
தலைமயிர் விரித்து
நிலவொளி தரித்து
கொலு வீற்றிருந்தாள்
உன் நிழல்.
என் மன விகற்பத்தின்
வெண் இருள்
நிழலை வளைத்து
துளி வேல்கள் ஏந்தின
கருநீல முட்கள்.
உயரத்தே ஒரு கணம்
பார்வையைப்
பறிகொடுத்து
ஊளையிட்டது நிலவு.
அது கணம்
வெண்நிழல் அழைத்தது.
அணுக
அவளை என்
பாதங்கள் துணிந்து
அணுகக் கருநீல
வேல் நுனிகளில் என்
உதிரத்தின் மலர்ச் செம்மை.
முட்கள்
மொக்க விழ்கின்றன.
விரிகிறது
இதழ் வேளை.
ஊன்றி எடுத்த என்
பாதத்தில் ஊறி
உதிரத்தில் ஒலித்ததுவோ
நிலவின் விஷ ஊளை.

நாநுனி தவித்து
துளியளவு தீண்டி
பதிவுகள் தொடர
திசையறும்
வெண் இருளில்
ரகஸியக் கிணறு.
அதில் எரிகிறது
ஈரநெருப்பு.
குனிந்து பறந்து
கீழ்நோக்கி எழுகிறேன்.
தத்தளித்து
தாகம் தணித்த
நீர்வெளி
பாறையாய் இறுகி
என் புதைவை
சிறையிடுகிறது
கல்பீடம் ஆகிறது.

நிலவின் ஊளை வெளிறி
பலிசிந்தி வீழ
அவளது தந்தங்கள்
வெறிக்கின்றன.

ஓ! என்
பணிவுகளை உறிஞ்சும்
பலி பீடமடி நீ!

பசிதணிந்து
பசிகொண்டு
பாறை தளர்ந்து
தசை வெளியாய்
தத்தளித்து
பசியேற்றி
அசைகிற சுழலே,
இன்று கொட்டும்
இருளின் தமுக்கில்
நம் இருவர் தசைகளில்
தீராத
தினவுகள் அடியே!
Thanks to
http://ariyavai.blogspot.com

யூமா வாசுகி – கவிதை



இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து
அகாலத்தில் அறையடைந்திருக்கிறேன்.
அறைக்குள் அடிவைத்ததுமே தெரிந்துவிட்டது,
சந்தேகமில்லாமல் உறுதிப்படுத்தியது விளக்கு வெளிச்சம்.
சிறு மாற்றமுமில்லை – எப்படி விட்டுச்சென்றேனோ அப்படியே
சற்றும் பிசகாமல் இருந்தன எல்லாம்.
தரைத்தூசுப் படலத்தில் தடம் பதிக்காமல்
நீ நுழைந்து சென்றிருக்கிறாய்.
உன் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்கள் இல்லை
உன் மணம் இல்லை – உடனே படும்படி
உன் கடிதமெதுவும் காணவில்லை ஆயினும்
உன் வருகையை நான் உணர்கிறேன்
எனக்கான செய்தியை அனைத்து
உடுப்புகளின் பைகளிலும் தேடுகிறேன்
அயர்ச்சியினூடாக உன் வேடிக்கையை ரசித்து
புத்தகங்களுக்கும் பெட்டியிலும் துழாவுகிறேன்
தலையணை உறைக்குள், பாயின் அடியில்,
போர்வை மடிப்பில், ஏமாற்றம்.
குப்பைக் கூடையைக் கொட்டிக் கவிழ்த்து
கசங்கிக் கிடந்த தாள்களைப் பிரிக்கிறேன்

ஒரு எழுத்தும் உன்னுடையதாயில்லை – ரகசிய
பென்சில் கிறுக்கல்கள் ஏதுமற்றிருக்கிறது
புதிதாய் வெள்ளையடிக்கப்பட்ட சுவர்.
உன் விளையாட்டை விளங்கிக்கொள்ள வேண்டி
பல தடவைகள் சோதித்தாகிவிட்டது
சொற்ப பொருள்களையும்.
புதிர் அவிழ்க்கும் பிரயத்தனம் சோர்ந்தது பயனற்று.
கடைசியாக கண்ணாடியின் பின்புறம் பார்த்து
விளக்கணைத்துச் சாய்கிறேன்
ஒருக்கால் நீ வந்திருக்கவில்லையோ?
பிரமைதானோ?
இந்த அறையின் இருட்டு நிசப்தம்
இன்றவள் வந்தாள் என்றொலிக்கிறதே
நீ வந்திருந்தால் வழக்கம்போல
அறை கொஞ்சம் ஒழுங்குபட்டிருக்கும்.
புரளும்போது கைபட்டுத் தண்ணீர் சாடி விழுகிறது.
பாயில் பரவுகிறது நீரின் குளிர்மை.
காலையில் நான் புறப்படுகையில்
காலியாகத்தானிருந்தது சாடி.
நனைகிறேன்.


The Widow's Lament in Springtime


William Carlos Williams

Sorrow is my own yard
where the new grass
flames as it has flamed
often before but not
with the cold fire
that closes round me this year.
Thirtyfive years
I lived with my husband.
The plumtree is white today
with masses of flowers.
Masses of flowers
load the cherry branches
and color some bushes
yellow and some red
but the grief in my heart
is stronger than they
for though they were my joy
formerly, today I notice them
and turn away forgetting.
Today my son told me
that in the meadows,
at the edge of the heavy woods
in the distance, he saw
trees of white flowers.
I feel that I would like
to go there
and fall into those flowers
and sink into the marsh near them.

William Carlos Williams

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பிரபஞ்ச கானம் – மௌனி


அவன் அவ்வூர் வந்து, மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம், மேல் காற்று நாளே ஆயினும், அன்றைய தினம் உலகத்தின் வேண்டா விருந்தினன் போன்று காற்று அலுப்புறச் சலித்து ரகசியப் புக்கிடமாக, மரக்கிளைகளில் போய் ஓடுங்கியது போன்று அமர்ந்திருந்தது.
அடிக்கடி அவன், தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில் நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து, மாசுபட்ட ஏடுகள், அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில், தன் மனப்போக்குக் கொண்டு எழுதுவதால், பளீரெனத் தோன்றுபவை சில, மங்கி மறைதல் கொள்ளுபவை சில. இரண்டுமற்று சில நேரத்தில், எதையோ நினைத்து உருகுவான்.
சிற்சில சமயம், இயற்கையின் விநோதமான அழகுத் தோற்றங்கள் மனதிற்குச் செல்லும் நேர்பாட்டையைக் கொள்ளும்போது, தன்னை மறந்து அவன் மனம், ஆனந்தம் அடைவதுண்டு. மற்றும் சிற்சில சமயம், தன்னால் கவலைகளைத் தாங்க முடியாது என்று எண்ணும்போது, தன்னைவிடக் காற்று அழுத்தமாகத் தாங்கும் என்று எண்ணித் தன் கவலைகளை காற்றில் விடுவான். ஆனால் சூல் கொண்ட மேகம் மழையை உதிர்ப்பதே போன்று, அவை காற்றில் மிதந்து பிரிந்து, உலகையே கவலைமயமாக்கிவிடும். எட்டாத தூரத்தில் வானில் புதைந்து கேலிக் கண்சிமிட்டும் நட்சத்திரங்களைப் பார்க்கும்போது, அவனது பாழ்பட்ட, பழைய வாழ்க்கை நினைவு எழும் கோபித்து, வானில் அந்த நட்சத்திரங்களைத் தானே வாரி இறைத்தவன் போன்ற உரிமை உணர்ச்சியுடன் அவற்றைப் பிடுங்கி, கடலில் ஆழ்த்த எண்ணுவான். அந்தப் புதிய ஸ்தானத்தில் அவை எவ்வகையாகுமென்ற சந்தேகம் கொண்டவன் போல அண்ணாந்து நோக்குவான். அவையும், அதே ஐயம் கொண்டு விழிப்பது போன்று, அவனுக்குத் தோன்றும்.
அவ்வூரின் குறுகிய வீதிகள், நோக நீண்டு உயர்ந்த வீடுகளைக் கொண்டிருந்தன. மாலை வேளையில், வீடுகளின் மேற்பாகத்திலே சாய்ந்த சூரியக் கிரணங்கள் விழும்போது, ரகசியக் குகைகளின் வாய்போன்று, இருண்ட உள் பாகத்தை வீட்டின் திறந்த வாயில்கள் காட்டி நிற்கும், அது ”வா” வென்ற வாய்த் திறப்பல்ல. உள்ளே சென்றதும் மறைந்துவிடும் எண்ணங்களை விழுங்க நிற்கும் அசட்டு வாய்த் திறப்புப் போன்றுதான் தோற்றமளிக்கும்.
அவன், அந்தரங்கக் குகையில் மறைந்த எண்ணங்களோவெனில், பழுக்க காய்ந்த சூட்டுக் கோலால், எழுதப்பட்டனவே போன்று அடிக்கடி எழுந்தன. மழுங்கி மறைந்திருந்த அந்த நினைவுகளை மிகுந்த அனல் கொண்டு ஜொலித்து எழுச் செய்ய அவனுக்கு ஒரு சிறிய குழந்தையின் அழுகை போதும், ஒரு காகத்தின் கரைதல் போதும். மூன்று வருஷங்களுக்கு முன்னால் அவன் சென்றான்.
காலத்தைக் கையைப் பிடித்து நிறுத்திக் கனிந்த காதலுடன் தழுவினாலும், அது நகர்ந்து சென்று கொண்டேதான் இருக்கும். ஆனாலும் அவன் பிரிந்த நேரம் அவனுக்கு அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. அந்த நிகழ்ச்சி, காலபோக்கில், சலனமடையாது. அவனுக்கு நின்றது நின்றதுதான். அதுமுதல், உலகிலே உலக வாழ்விலே, ஒருவகை வெறுப்பைக் கொண்டான். அப்வெறுப்பே, அவன் உள்ளத்தில் கசிந்த தணலாய் கண்களில் பிரகாசித்து நின்றது. மனது மாறுதலை மிக வேண்டும் நேரத்தில், உலகின் சந்தோஷத்தை விட மனத்தைத் தாக்கும் துக்கம் வேறொன்றுமில்லை என்பதை அவன் உணர்ந்தான்; அவனுக்குச் சந்தோஷமே கிடையாது. வெறுப்புத்தான் அவன் மனதில் நிறைந்திருந்தது.
எட்டி, மேற்கு வெளியில் தெரிந்த சூரியன், சிவந்து இருந்தது. கவியும் மேகம், பற்பல வர்ணச் சித்திரமாக அதைச் சுற்றி அமைந்து, மெழுகி, மெழுகி மாறி மாறிப் பல உருவங்கள் கொண்டது. வாய்விரிந்து நின்ற ஒரு மேகக் குகையின் மேலிருந்து இறங்கிய நீண்ட வெண்மையான தொன்று புகுந்து அதனுடன் கலந்து ஒரு உருக்கொள்ளலாயிற்று. மிக அற்புதமான, உன்னத ஜீவிகளைக் கொண்டு… அப்போது உலகமும் மஞ்சள் நிறத்தில் இன்ப வருத்தமயமாகத் தோன்றிது.
அவள் கண்கள், அடிக்கடி குறி தவறாது பார்வையை அவன்மீது வீசி எறிந்து ஜொலித்தன. மாலை வெளிச்சம் மயங்கியது. அப்போது அவள் உட்சென்று மறைந்துவிட்டாள். அவன் இருந்த வீட்டிற்கு நேர் எதிரே சிறிது தள்ளி நின்ற தன் விட்டினுள் அவள் சென்றுவிட்டாள். அடிக்கடி அவள் இவனைப் பார்ப்பது உண்டு. அதனால், இவன் மனபோக்கு கொஞ்சம் மாறுதல் அடைய இடமேற்பட்டது. அவளது பார்வையால் வாழ்க்கை, நடுவே சிறிது வசீகரம் கொண்டது. உலகத்திலும் சிறு ஒளி உலாவுவதைக் கொஞ்சம் இவன் உணர ஆரம்பித்தான்.
ஒருநாள் காலை, அவன் அரசமரத் துறைக்கு ஸ்நானம் செய்யச்சென்றான். அங்கே, அவள் குளித்துவிட்டுப் புடவை துவைத்துக் கொண்டு இருந்தாள். அவள் இடம்விட்டுச் சென்றபின், ஸ்நானம் செய்ய எண்ணி அரசமரத்தடியில் நின்றிருந்தான். அவளுக்குப்பின் சிறு அலைகள் மிதக்கும் குளத்தின் ஜலப் பரப்பு – எதிர்க்கரையின் ஓரத்தில் நரைத்த நான்கைந்து நாரைகள், ஜலத்தில் தம் சாயலைக் கண்டு குனிந்து நின்றிருந்தன. வானவெளிச்சம், ஜலப் பரப்பின் மேல் படர்ந்து தவித்துக் கொண்டிருந்தது. எதிர்க்கரையில் நின்ற சிறு சிறு மரங்கள், இக்கரையில் நிற்கும் இவளை எட்டித் தொடும் ஆர்வத்தோடு கட்டை விரல்களில் நின்று குனிந்தனவே போன்று சாய்ந்து இருந்தன. மெல்லெனக் காற்று வீசியது. குளத்தில் பூத்திருந்த அல்லிப் பூக்களின் தலைகள் ஆடின – அவன் மனதின் கனம் கொஞ்சம் குறைந்தது.
அவன் தலைக்கு மேலே, சிறிது பின்னால் ஒரு மீன் கொத்திக் குருவி சிறகடித்துக் குனிந்து நோக்கி நின்றது. திடீரென்று ஜலத்தில் விழுந்து, ஒரு மீனைக் கொத்திப் பறந்தது; பக்கத்து மரக்கிளையில் உட்கார்ந்தது. குளத்து மேட்டில், ஒரு குடியானவப் பெண் சாணம் தட்டிக் கொண்டிருந்தாள். அதை, துவைத்துக் கொண்டிருந்த இவள் பார்த்தாள். ”எனக்காகத்தான் அதோ தட்டிக் கொண்டிருப்பது – நன்குலர்ந்த பின், அடுக்கடுக்காக -” என்று அவள் பார்த்ததாக எண்ணிய இவன் நெஞ்சு உலர்ந்தது.
அவன் அவ்வூர் வந்தபின், அவள் பாடிக் கேட்டதில்லை. அவள் பாடியே மூன்று வருஷத்திற்கு மேலிருக்கும். அவள் ஒருதரம் நோய்வாய்ப்பாட்டுக் கிடந்தபோது, அவள் இருதயம் பலவீனப்பட்டு இருப்பதாகச் சொல்லிப் பரிசோதனை செய்த டாக்டர் அவள் பாடுவது கூடாதென்றார். அது முதல், அவள் சங்கீதம் அவளுள்ளே உறைந்து கிடந்தது. அவளுக்கு வீணையிலும் பயிற்சி உண்டு. ஒரு தரம், அவள் வீணைவாசிக்க அவன் கேட்டான். அதன் பிறகு அவளுடைய சங்கீதத்தைப் பற்றியும், பிரபஞ்சத்தைப் பற்றியும்அவன் ”அபிப்பிராயமும் உறுதியாகிவிட்டது” அவள்தான் சங்கீதம்; பிரபஞ்ச கானம் அவளுள் அடைபட்டுவிட்டது” என்று எண்ணலானான். காகத்தின் கரைதலும், குருவிகளின் ஆரவாரமும், மரத்திடைக் காற்றின் ஓலமும் காதுக்கு வெறுப்பாகி விட்டன. அவளுடைய சங்கீதம் வெளிவிளக்கம் கொள்ளாததனால் இயற்கையே ஒருவகையில் குறைவுபட்டது போலவும், வெளியில் மிதப்பது வெறும் வறட்டுச் சப்தம்தான் என்றும் எண்ணலானான்.
அவன் அவ்வூர் வந்து வெகுநாட்கள் சென்றவின் ஒரு ஆடி வெள்ளிக்கிழமையன்று, அவள் வீணை வாசிக்கக் கேட்டான். அவள் வீட்டின் உள்ளே தீபம் எரிந்து கொண்டிருந்தது. முற்றத்தில் பிரகாசமான ஒரு விளக்கு ஏற்றி மாட்டப்பட்டிருந்தது. திறந்த வாயிற்படியின் வழியாக, இருண்ட வீதியின் நடுவே குறுக்காக முற்றத்து வெளிச்சம் படர்ந்து தெரிந்தது. உள்ளே, அவள் தம்பி படித்துக் கொண்டிருந்தான். கூடத்திலிருந்து வீணை மீட்டும் நாதம் கேட்டது. அவள் வாசிக்க ஆரம்பித்தாள். இவன், எதிர்வீட்டுத் திண்ணையில் ஒருபுறமாக இருள் மறைவில் நின்று கேட்டான்.
சுமார் ஒன்றரை மணி நேரம் வாசித்தாள். அவ்வளவு நேரமும் ஒரே வினாடி போலக் கழிந்துவிட்டது. உலகமே குமுறி சங்கீத மயமானதாக நினைத்தான். அவள் வாசித்துக் கொண்டிருக்கும் போதே நடுவில் இவன் மனதில் பளீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. அதை உதற முடியாத ஓர் உண்மையென உணர்ந்தான். அவள் பாட்டின் பாணியும் அதைப் பலப்படுத்தியது. இவன் மனத்தில் ஒருவகைப் பயம் தோன்ற ஆரம்பித்து, உடல் குலுங்கியது. அவள் முடிக்கும் முன்பே தன் இதயம் பிளந்துவிடுமென நினைத்தான். அவள் வாசிப்பதை நிறுத்திவிட மாட்டாளா என்று துடித்துக் கொண்டே கேட்டு நின்றான்.
”ஆம், அவள் பாடுவது கூடாது; டாக்டர் சொல்லியது உண்மையானால் முடிவு நிச்சயம். ஆனால், அவள் முடிவு… பாட்டினாலா அவள் முடிவு? அவர் நினைக்கும் காரணத்தினாலன்று” மனோவேகத்தின் பலனாகப் பிறந்த ஒரு உணர்ச்சி அவன் உள்ளத்தில் ஒரு அற்புதத் தத்துவமாக மாறியது.
அதன் பின்பு, மனக் களங்கமின்றியும் கூடுமானவரையில் தன் சாயையின் சம்பந்தமற்றதுமான ஒருபுற உணர்வைக் கொண்டும் மேலே சிந்தனைகளை எழுப்புவான். அப்படியும் தான் முன் உணர்ந்ததையே மனத்தில் உறுதிப்படுத்திக் கொண்டான் – ”இயற்கை” ஏதோ ஒரு வகையில் குறைவுபட்டது என்ற எண்ணம் – பிரபஞ்ச கானமும், வசீகரமும் திரண்டு அவளாக உருக்கொண்டதனால்தான் அந்தக் குறைவு என்ற நிச்சயம், உறுதிப்பட்டது. நிலவு பூப்பது விரசமாகத் தோன்றியது அவனுக்கு. அந்தியில் ஆந்தைகள் பொந்துவாயில் அலறுவது வெலித்தியாகக் கேட்டது. உலக சப்தங்களே பாழ்பட்டு ஒலித்தன. தன் உன்மத்த மிகுதியில் சுருதி கலைந்த வீணையில் தேர்ச்சி பெற்ற ஒருவன் வாசிக்கும் கானங்கள்தான் இந்தச் சப்தங்கள். சுருதி ஓடி அவளிடம் ஒளிந்து கொண்டு ”இயற்கை” அன்னை அளிக்கக்கூடிய, அளிக்க வேண்டிய இன்பம் பாதிக்குமேல் (சப்த ரூபத்திலும், காட்சி ரூபத்திலும்) அவளிடம் அடங்கி மறைந்து போய்விட்டது. மேலே யோசிக்கும் போது, ”இழந்ததைப் பெற இயற்கைச் சக்தி” முயலுவதையும், தனியாகப் பிரிந்து அவளாக உருக்கொண்ட பிரபஞ்சகானமும், வசீகரமும் வெளியே பரந்துபட முயலுவதையும் யாரால் எவ்வளவு நாள், எப்படித் தடுக்க முடியும்? அவள் முடிவு பாட்டினால்” என்ற எண்ணம் வலுவாக எழுந்து நின்றது. அடிக்கடி அவன் மனது அதனால் மிகுந்த துக்கமடையும்.
சில மாதங்கள் சென்றன. அவனுக்கோ அவன் யோசனைகள்தான்; கணநேரம் நீண்டு, நெங்காலமாயிற்றென்ற எண்ணந்தான்…
அன்று அவள் கலியாணத்தின், மூன்றாம் நாள், அன்று மாலை நலுங்கு நடந்து கொண்டிருந்தது…
சமீப காலத்தில் அவன் வருத்தம் அதிகமாயிற்று. தன்னுள் வருத்தமே தனிப்பட்டு அழுதுகொண்டு இரவில் இருள் வழியே உருவற்று ஊளையிட்டோடியது என்று எண்ணினான் ஓரோர் சமயம். அவள் கலியாணத்தின் முதல்நாள் இரவு அவனால் உறக்கங் கொள்ள முடியவில்லை. உலகில் அவச்சத்தம் இருளோடு கூடி மிதந்தது. இரவின் ஒளியற்ற ஆபாசத் தோற்றம்… அவன் நெடுநேரம் திண்ணைத் தூணில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான்.
அவள் வீட்டின் முன் அறை ஜன்னல் மூடி இருந்தது. பொருந்தாத கதவுகளின் இடைவழியே, உள் வெளிச்சத்தின் சாய்வு ஒளிரேகை தெருவிலும், இவன் திண்ணைச் சுவரிலும் படிந்திருந்தது. இவன் உள்ளத்தையும் அது சிறிது தடவி மனஆறுதலை அளித்தது. ஒருவகை இன்பம் கண்டான். யாரோ குறுக்காக எதிர்வீட்டின் உள்ளே நடப்பதால் அவ்வொளி ரேகை நடுநடுவே மறைந்து தெரிந்து கொண்டிருந்தது. அது இவனுக்கு வெகுபுதுமையாகத் தோன்றியது. அதையே, குறித்து நோக்குவான். ”ஆம்… அவள், நிதானமற்று, உள்ளே உலாவுகிறாள்… அடைபட்டது, வெளியே போக ஆயத்தம் கொள்ளுகிறது…!” மேலே அவனால் யோசிக்க முடியவில்லை. அவன் மனம் துக்கம் அடைந்தது. ஆகாயத்தில், இருட்பாய் விரிப்பின் நடுநடுவே வெளிச்சப்புள்ளி வர்ணந் தீட்டிக் கொண்டது போன்று எண்ணிலா நட்சத்திரங்கள் பிரகாசித்தன. அவை ஆழ்ந்த துக்கத்தில் உதிராது, மடியாது, ஐயமுற்று வினாவி நிற்பவை போன்று தோன்றின இவனுக்கு. ”அவளால், பிரபஞ்ச ஜோதியே, அழகே, குன்றிவிட்டதுதான் உண்மை”. அப்போது துக்க ஓலத்தில் வாடைக் காற்று வீச ஆரம்பித்தது. எட்டிபோகும் நரியின் ஊளை, ஒரே இடத்தில் பதிந்து பரவும் பறைச்சேரி நாய்க் குறைப்பு போன்ற மிகக் கோரமான, சப்தங்கள்தான் இருள் வெளியில் மிதந்தன. அவளிடம் அடைபட்ட உன்னத கானம் வெளியில் படரும் நாளை வேண்டிக் கூவும் பிரலாபிப்புப் போன்றுதான் அந்தச் சப்தங்கள் அவன் காதில் விழுந்தன. தூரத்தில் கிழக்கு அடிவானத்திலிருந்து, புகைந்து மேலோங்கும் முகில் கூட்டம்.
நன்றாக மழை அடித்து நின்றது. தெருவில், உறிஞ்சியது போக மீதி மழை ஜலம் வாய்க்காலாக ஓடியது. மிகுந்தது சிறு சறு ஜலத்திட்டுகளாக நின்றது. ஒருதரம், அவள் ஜன்னலைத் திறந்து மூடினாள். ஒளித்திட்டுக்களாய்த் தோய்ந்து ஜொலித்தது தெரு முழுவதும். சிறு தூரம் விழுவது நின்றபாடில்லை. ஒரு பூனை தெரு நடுவே, குறுக்காக ஓடியபோது, வெளிச்சத்தில் விழுந்து மிதந்து மறைந்தது…
கல்யாணம் மூன்றாம்நாள், நலுங்கு நடந்துகொண்டிருந்தது. கூனிக் குறுகி உட்கார்ந்திருந்த மாப்பிள்ளை எதிரில் வெற்றிலைத் தாம்பாளத்தைக் கையில் ஏந்தி அவர் அதை ஏற்றுக்கொள்வதை எதிர்பார்த்து அவள் நின்றிருந்தாள். அவள் பாட வேண்டுமென்பது அவர் எண்ணம்போலும், சுற்றி இருந்த, மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் இவளைப் பார்த்து ”பாடு பாடு” என்றார்கள். இவளோ முடியாதென்று சொல்வது போன்று மெளனமாக நின்றிருந்தாள். இவள் பாடக்கூடாதென்று எண்ணியே, அவனும் எட்டிய தூணடியில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பெண்கள் எல்லோரும், இவள் மனது நோக ஏதேதோ பேசினர். அவள் மனது வெறுப்படைந்தது. ஒருவகை அலக்ஷ¢யம் அவள் கண்களில் தெரிந்தது. எட்டித் தூணில் சாய்ந்திருந்த அவனை ஒருதரம் பார்த்தாள். இவள் பார்வை, தவறாது, குறி கொண்டு அவனைத் தாக்கியது. அப்போது உச்சிமேட்டிலிருந்து, ஒரு காகம் விகாரமாகக் கரைந்து கொண்டிருந்தது. அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான் இவன். பின்னும் ஒருதரம் இவனை விழித்துப் பார்த்தாள். மதுக்குடித்த தேனீக்களைப் போன்று குறுகுறுவென்றிருந்தன அவன் விழிகள். அவள் உடம்பு ஒரு தரம் மயிர்சிலிர்த்தது. திடீரென்று ”நான் பாடுகிறேன் – கேட்க வேண்டுமா? சரி என்றாள் அவள். இவன் மனதோவெனில், நிம்மதியற்று வெடிக்கும் துக்கத்தில் ஆழ்ந்தது. அவள் விளக்கம் கொண்டு விரிவுபட எண்ணிவிட்டாள் போலும்! அவள் பாட ஆரம்பித்தாள்.
ஆரம்பித்த அவள் கொஞ்சம் கொஞ்சமாக மெய்மறந்தாள். சாஸ்திர வரையறுப்பை அறிந்தும் கட்டுப்பாட்டின் எல்லையை உணர்ந்தும், உடைத்துக் கொண்டு பிரவாகம் போன்று அவள் கானம் வெளிப்பட்டது. அங்கிருந்த யாவரும் மெய்மறந்தனர்.
தலை கிறுகிறுத்து ஒன்றும் புரியாமல் இவன் தூணோடு தூணாகி விட்டான்.
அவள் சங்கீதத்தின் ஆழ்ந்த அறிதற்கரிய ஜீவ உணர்ச்சிக் கற்பனைகள், காதலைவிட ஆறுதல் இறுதி எல்லையைத் தாண்டிப் பரிமாணம் கொண்டன. மேருவைவிட உன்னதமாயும், மரணத்தைவிட மனத்தைப் பிளப்பதாயும், மாதரின் முத்தத்தைவிட ஆவலைத் தூண்டி இழுப்பதாயும் இருந்தன. மேலே, இன்னும் மேலே, போய்க் கொண்டிருந்தன…
அவள் ஒரு மணி நேரம் பாடினாள். அவளுள் அடைபட்ட சங்கீதம் விரிந்து வியாபகம் கொள்ளலாயிற்று. வெளி உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் அடைந்து கொண்டிருந்தது…
இவன் மனப்புத்தகம், பிரிந்து உணர்ச்சி மிகுதியில் படிக்கப்பட்டது. ”காலம்” விறைத்து நின்றுவிட்டது… அந்தியின் மங்கல் வெளிச்சம் மறையுமுன் மஞ்சள் கண்டது. இவன் முகம் ஒளிகொண்டு சவக்களை பெற்றிருந்தது.
கடைசிக் காகக் கூட்டத்தின் ஒருமித்த கரைதல் கூச்சல் கேட்டது. முற்றத்துக் கொட்டகையின் மீது குருவிகள் உட்கார்ந்துகொண்டு ஆரவாரித்தன. இவன் திடீரென்று, வாய்திறந்து ”ஐயோ… அதோ… சங்கீதம், இனிமை, இன்பம் எல்லாம் திறந்த வெளியில், நிறைகிறதே…” என்று கத்தினான், அதே சமயம், அவளும் கீழே சாய்ந்தாள். ”இயற்கை அன்னை” தன் குறையை, நிவர்த்தித்துக் கொண்டாள். இழந்ததை, அணைத்துச் சேர்த்துக் கொண்டாள்… ஆகாயவீதி, அழகு பட்டது. மேக மலை மறைப்பினின்றும் விடுபட்ட பிறைச்சந்திரன் சோபை மிகுந்து பிரகாசித்தது. வெளியே, அவ்வூர் குறுகிய விதியே ஒரு களை கொண்டது.
குளக்கரை, அரசமரத்திலிருந்து, நேர்கிழக்கே, பார்த்தால், வளைந்த வானம் பூமியில் புதைபடும் வரையில், கண்வெளி வீதியை மறைக்க ஒன்றுமில்லை. மேற்கே, ஒரு அடர்ந்த மாந்தோப்பு.
காலை நேரம் வந்தது. மூலைமுடுக்குகளிலும், தோப்பின் இடைவெளிகளிலும், தாமதமாக உலாவி நின்ற மங்கலை ஊர்ந்து துரத்த ஒளிவந்து பரவியது. பல பல மூலைகளிலிருந்து, பக்ஷ¢க் குரல்கள் கேட்டுப் பதிலளித்துக் கொண்டிருந்தன. இரவின் இருளைத் திரட்டி அடிவானத்தில், நெருப்பிடப்பட்டதே போன்று கிழக்கு புகைந்து, சிவந்து, தணல்கண்டது… காலைச் சூரியன் உதித்தான். சிறிது சென்று, வானவெளியை உற்றுநோக்க இயலாதபடி ஒளி மயமாயிற்று. உலகப் பேரிரைச்சல், ஒரு உன்னத சங்கீதமாக ஒலித்தது. மனத்தில் ஒரு திருப்தி – சாந்தி, அவன், வீடு அடைந்தான்.
மாலையில், மேற்கே நோக்கும் போது மரங்களின் இடைவெளி வழியாக பரந்த வயல் வரப்புக்கள் நேர்க்கோடு போல் மறைந்து கொண்டிருந்தன. அவை விரிந்து விரிந்து சென்று அடிவானில் கலக்கும். தூரத்து வரப்புக்களில் வளர்ந்து நின்ற நெட்டைப் பனைமரங்களின் தலைகள் வானை முட்டி மறைவது போன்று தோன்றும். “வாழ்க்கை…? ஒரு உன்னத மனவெழுச்சி..” அவன் பார்த்து நின்றான்.
குளத்துமேட்டு வறட்டிகள் உலர்ந்து அடுக்கப்பட்டு இருந்தன.