Pages

Saturday, January 28, 2012

தில்லைவெளி - நகுலன்


தில்லைவெளி - நகுலன்



அவன் அதே தெருவில்தான் இருந்தான். அவரும். அவன் பென்ஷன் பெற்ற பிறகு தனது 60 ஆவது வயதில் தொடங்கி (இப்பொழுது அவன் 68 ஆவது வயதிலும்) தான் செய்து கொண்டிருந்த வேலையை ஒரு ட்யூட்டோரியல் காலேஜில் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். 9 .30 ல் இருந்து 12 .30 வரை வேலை. பிறகு காலம் அவன் கையில். அது ஒரு சௌகரியமான ஏற்பாடாகவே அவனுக்குத் தோன்றியது. நடுவில் செல்லப்பா எழுதிய "வெள்ளை" என்ற கதை அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வரும். போலவே "வாழ்க்கையில் காதல்" என்ற கதையில் அவர் படைப்புத் தொழில் குறித்து சிருஷ்டி பரமாக எழுதியது. அவன் பிரக்ஞையில் அடிக்கடி தோன்றி மறைந்து தோன்றி மறைந்த வண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இதெல்லாம் இருந்தும் நடுவில் நடுவில் வாழ்க்கைக் கசப்பை மறக்கப் பிராந்திக் கசப்பும் வேண்டித்தான் இருந்தது. எல்லாமே அப்படித்தான். ஆனால் இதையெல்லாம் பின்தள்ளி அவர் உருவம் விசுவரூபமாக அவன் மனதில் என்றுமே உருக்கொண்டு உருக்கொண்டு அவனைக் கவனித்துக் கொண்டே இருந்தது.


இப்பொழுதெல்லாம் அவன் வேலை செய்யும் ஸ்தாபனத்தில் திரும்பி வரும்பொழுது அவர் வீட்டைப் பார்த்துகொண்டு வருவான். வீடு காலியாகப் பூட்டப்பட்டிருந்தது. உள்ளில் சுவர்கள் பச்சை வண்ணம். நடுஅறையில் ஒரு சாய்வு நாற்காலி. வருபவர்களுக்கு ஒரு ஸெட்டி. எதிரில் ஒரு டி.வி. மனைவியை இழந்த பிறகு அவரும் தனிமையை உணர்ந்திருக்கவேண்டும். அவன் மனம் இதே தடத்தில் சென்று கொண்டிருந்தது. இன்று அவர் வீட்டில் சாய்வு நாற்காலி, ஸெட்டி, டி.வி. கார் இல்லை. ஏன், அவரே இல்லை. இல்லை? அவ்வீடு என்றுமே திகம்பரமாகத் தில்லை வெளியாக இருந்தது.


அவரைப் பற்றியே மனம் சுற்றிச் சுற்றி வந்தது. ஒரு நாள் அவனை வழக்கம் போல் கைதட்டிக் கூப்பிட்டார். போனான். கேட்டார். "உனக்கு எவ்வளல்வு பென்ஷன்?" சொன்னான். மறுபடியும் கேட்டார். "என்ன சொல்கிறாய்? இவ்வளவுதானா? D .A . உண்டென்பது தெரியாதா? ". அவன் ஒன்றும் சொல்லவில்லை. சொன்னார். "உன்னை எனக்குத் தெரியும். நீ ஒரு சண்டைக் கோழியாக மாறவேண்டும் என்று நான் சொல்லவில்லை. அரசாங்கத்திற்கு இதைப்பற்றி எழுதினால் கிடைக்கும். எழுது. சும்மா இருந்து விடாதே". அவன் தலையை அசைத்து விட்டு திரும்பி விட்டான். அடுத்த நாள் தன் கைத்தடியை தாங்கிக்கொண்டு அவன் அறை ஜன்னல் முன்வந்து நின்றார். கேட்டார். "எழுதினாயா?". அவன் பேசவில்லை. மறுபடியும் சொன்னார். "நீ இவ்வாறு இருந்தால் போதாது. என்னுடன் வா" என்றார். அவன் போனான். கடிதத்தை எழுதச் சொன்னார். எழுதினான். அவரே ஒரு போஸ்ட் கவரைக் கொடுத்துத் தபால் பெட்டியில் போடச் சொன்னார். போட்டான். இரண்டு வாரம் கழித்து மறுபடியும் கைத்தடியைத் தாங்கிக்கொண்டு அவன் அறை ஜன்னல் முன் நின்றார். அவன் அவரை உள்ளே வரச் சொல்லி நாற்காலியில் உட்காரச் சொன்னான். உட்கார்ந்தார். கேட்டார். "பதில் வந்ததா?". "சாதகமாகவே வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட இலகாவிற்குப் பழைய பாக்கியுடன் D .A . கொடுக்க உத்தரவு சென்றுவிட்டது". மறுபடியும் கேட்டார். "அங்கு சென்று விசாரித்தாயா?". அவன் பேசவில்லை. அவர் பேசினார். "நீ இப்படி இருந்தால் போதாது. குறிப்பிட்ட இலகாவிற்குச் சென்று விசாரி" என்று சொல்லி விட்டுச் சென்றார். அதை அவன் செய்த பிறகுதான் அவனுக்கு அந்த அனுகூலம் கிடைத்தது. அவர் சொன்ன வேறு ஒரு விஷயமும் அவனுக்கு ஞாபகம் வந்தது. "இதோ பார். உனக்கு ஒன்றும் தெரியாது. இந்த உலகம் ஒரு மாதிரியானது. எந்த விஷயத்திலும் கடைசி வரை ஊர்ஜிதமாக இருந்து நாம்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும். உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்த உலகம் ஒரு மாதிரியானது".


அவரை அவன் முற்றிலும் புரிந்து கொண்டு விட்டான் என்று சொல்ல முடியாது. அவர் ஒரு உயர்ந்த உத்தியோகத்திலிருந்து பென்ஷன் பெற்றுத் தனியாகத்தான் வீட்டில் இருந்தார். அவருக்குச் சொந்த மக்கள் இருந்தார்கள் என்றாலும், அடிக்கடி அவனிடம் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், நம்பிக்கையுடன் சமயோசிதமாகச் சிந்திக்க நீ என்னைப் பழக்கிக் கொள்ளவேண்டும் என்பார்.


இன்னும் அவன் வழக்கம்போல் வீடு திரும்புகையில் அந்த காலி வீட்டைப் பார்த்துக் கொண்டுதான் வந்தான். இது இப்பொழுதெல்லாம் ஒரு அர்த்தம் நிறைந்த பழக்கமாகி விட்டது. மறுபடியும், மறுபடியும் அவர் நினைவு அவனைச் சூழ்ந்தது. உடல் இடம் கொடுத்த வரையில் அவர் வீட்டிலிருந்து சற்றே தொலைவிலிருந்த கோவிலுக்கு அங்கு சேர்கிற வரை "ஹரே கிருஷ்ணா. கிருஷ்ண ஹரே "என்று ஓங்கிய குரலில் சப்தித்துக் கொண்டே போவார். அதே மாதிரி அவர் வீடு திரும்புகையில், வீடு எட்டும்வரை இதைச் செய்வார். ஒரு முறை அவன் அவரிடம் கேட்கவும் செய்தான். "ஏன் இவ்வாறு தெருவெல்லாம் கேட்க கிருஷ்ண கோஷம் செய்துகொண்டு போகிறீர்கள் ?"சொன்னார், "உனக்கு ஒன்றும் தெரியாது. பல முறைகளில் இந்தப் பழக்கத்தால் அனுபவபூர்வமாக எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. நீ சாது என்றாலும் நீயும் இந்த தலைமுறையைச் சார்ந்தவனாதலால் இதெல்லாம் உனக்குப் புரியாது" என்றார். அவனும் அவரை முழுவதும் புரிந்துகொண்டான் என்று சொல்லமுடியாது. ஒரு முறை அவன் வீட்டில் யாருமில்லை. அன்று வீட்டு வேலைக்காரி வரவில்லை. (அவருக்கு அவன் தனியானவன் என்றதால் ஒருவித அனுதாபம் இருந்தது) அவன் வீட்டின் முன் தளத்தில் இருந்தான். சாப்பிடும் இடத்திலிருந்து ஒரு ஓசை கேட்டது. சென்று பார்த்தான் தரையில் ஒரு நீண்ட சாரைப் பாம்பு அவனைக் கண்டதும் ஓடிவிட்டது. இருநாட்கள் அந்தப் பக்கம் அவன் போகாமலே இருந்தான். மூன்றாவது நாள் அவரிடம் சென்றான். சொன்னான். சொன்னார், "ஒரு ஐந்து ரூபாய் கொடு, நான் வழக்கம்போல் கோவிலில் ஒரு நாக பூஜை செய்கிறேன்" என்றார். அவன் அவரைப் பார்த்தான். அவர் அவனைப் பார்த்துச் சொன்னார். "நான் உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். கேட்கிறாயா?" என்றார். அவன் தலையை அசைத்தான். "எங்கள் பூர்வீகத்தில் ஒரு கிழவர் இருந்தார். ஒரு வகையில் சித்திகள் பெற்றவர். பாம்புக் கடியால் மரித்தவரை உயிர் பிழைப்பிக்க வல்லவர். இது அவர் குருவிடமிருந்து படித்தது. ஆனால் அந்தக் குரு அவர் அதைப் பிரயோகித்தால் அவர் மரணம் அடைவார் என்றும் சொல்லியிருந்தார். பிறகு அவர் நெருங்கிய உறவில் ஒரு இளைஞன் பாம்புக்கடியால் இறந்து விட்டான். அவன் பெற்றோர்கள் அவன் சடலத்தை அவர் முன்கிடத்தி அவனுக்கு உயிர்ப் பிச்சை அளிக்குமாறு கெஞ்சினார்கள். அவர் சிறிது நேரம் பேசாமலிருந்து விட்டு ஒரு பிடி அரிசியைக் கொண்டுவரச் சொல்லி அதைத் தரையில் வாரி இறைத்தார். உடன் ஒரு பட்டாளம் எறும்புகள் அங்கிருந்து சென்று திரும்பி வர கடித்த பாம்பும் வந்தது . எறும்புகள் சுற்றி வளைத்த அப்பாம்பு தன் தலையை தரையில் அடித்துக் கொண்டு செத்தது. அந்த இளைஞனும் தூக்கத்தில்லிருந்து எழுந்தவன் மாதிரி உயிர் பெற்றான்." இதைச் சொல்லிவிட்டு அவர் சிறிது நேரம் பேசாமல் இருந்து விட்டுப் பின், "ஒரு வாரம் கழித்து அந்தக் கிழவரும் இறந்தார்". அவன் பேசாமல் இருந்தான்.


அவர் மறுபடியும் சொன்னார். "இதிலெல்லாம் உனக்கு நம்பிக்கை வராது. ஆனால் எனக்கு அப்படியில்லை." இதைப் போலவே அவரிடமிருந்து உலக வாழ்வைப்பற்றி, அதீத அனுபவங்களைப் பற்றி அவன் பலவற்றைத் தெரிந்துகொண்டான்.ஒரு நாள் மாலை அவரைப் பார்க்க வேண்டும்போல் தோன்றவே அங்கு சென்றான். ஒரு சிலர் இருந்தார்கள் மௌனபூர்வமாக.

கேட்டான் "அவர் இருக்கிறாரா?"


"நேற்று மாலை உங்கள் சிநேகிதர் அவர் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது திடீரென்று காலமாகி விட்டார்."


அவன் திரும்பி விட்டான். இப்பொழுதும் அவன் அத் தெரு வழியில் போகும் பொழுதெல்லாம் அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டுதான் சென்றான். ஆனால் அதைக் காலி வீடு என்று அவனால் நம்பமுடியவில்லை.

தட்டச்சு உதவி: ரமேஷ் கல்யாண்
http://aamadavan.wordpress.com/2013/07/05/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA/.நகுலன் என்றொரு இலக்கியப் புதிர்-ஆ மாதவன்
05
வெள்ளி
ஜூலை 2013
Posted by பாலா.ஆர் in Uncategorized ≈ பின்னூட்டமொன்றை இடுக
நினைவோடை

    இம்மாதம் 18_ஆம் தேதி இரவு பதினோரு மணியளவில், நகுலன் எனும், அற்புத, அதிசய, அபூர்வ, குண நலம் கொண்ட தமிழ் எழுத்தாளன். திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். 85 வயதில்_இடையே ஏறத்தாழ ஒரு பத்தாண்டு காலம். அவர் இந்த நிஜ உலகில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். திட நினைவில்லாத தடுமாற்ற உணர்வு நிலை. ‘‘நீங்கள் தானே மாதவன்? நான் நாஞ்சில் நாடனுடன்தான் பேசிக் கொண்டிருந்ததாக நினைத்தேன்… சுந்தரராமசாமி இப்பொழுதெல்லாம் வருவதே இல்லை… பார்த்து நாளாயிற்று…’’ இப்படியாக

கவிதா சண்முக சுப்பையா, நீல.பத்மநாபன், இருவரும் இங்கே அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்திலுள்ளவர்கள். இதில் அவருக்கு நெருக்கமான சுப்பையா காலமாகிவிட்டார். மரணம் பற்றி, திருமணம் பற்றி, இல்லறம் பற்றி, தாயன்பு பற்றி, சகோதர பந்தங்கள் பற்றியெல்லாம், அதீதமான_அழுத்தமான, அற்புதமான தத்துவ தீர்மானங்களை வகுத்திருந்தார், இந்த பிரம்மசாரி!

தமிழில் கவிதைகள் எழுதினார். ஆங்கிலத்திலும் அந்த அளவில் வீச்சோடு தீட்சணமாக கவிதை நூற்கள் படைத்த இவர், கதைகளிலும் நாவல்களிலும்தான் பெரும்பான்மை பெற்றிருந்தார் எனலாம். க.நா.சு., கு.ப.ராஷகோபாலன், ந. முத்துசாமி என்றெல்லாம் பழகிய வட்டமும், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன் என்றிவ்வாறு நட்பு தொடர்பும் பெற்றிருந்தாலும் யாரையும் முன் மாதிரியாகவோ, ஏற்றி வைத்து ஒப்புக் காட்டவோ செய்யாத பண்பு நலம் நகுலனுடையது!

Image

‘நினைவுப்பாதை’ தொட்டு ஆறேழு முழு நாவல்களும், ‘கோட்ஸ்டாண்டு கவிதைகள்’ என்ற வேறு நான்கு கவிதைத் தொகுதிகளுமாக தமிழுக்கு படையல் தந்துள்ள நகுலன், தமிழின் பெரும்பான்மை வாசகர்கள் அறியாத தத்துவமுறுக்கின் பிரம்மஞானி. பெரிய எழுத்துச் சிற்பிகளின் தலைமை பீடக்காரர். தேர்ந்த விமர்சகர் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நுட்பமான வாசிப்புச் செறிவு கொண்டவர். நான் எனது ‘கிருஷ்ணப்பருந்து’ நாவலை முன்னுரைக்காக அவர் முன் வைத்தபோது_ எழுதிய நானே அறியாத ஒருவித நீரோட்ட உணர்வைச் சுட்டிக் காட்டி எனது பலத்தையும் பலவீனத்தையும் பகுத்துக் காட்டி… ‘அஹ்ஹா…’ என்று, அவருக்கே உரித்தான அந்த ‘மாஸ்டர் பீஸ்’ சிரிப்பைக் காணிக்கை ஆக்கினார்.

கதைகள் வடித்திடும் அவரது விதேக விசித்திரங்களில், சுசீலா, நவீனன், கேசவமாதவன், எஸ்.நாயர் போன்ற ‘கோட்டுப் பாத்திரங்கள்’ அதிகமாக உலவினர். அனேகமாக, அவரது படைப்புகள், சுய சிந்தனைகளின் திரட்சிப் பாதை வழியாகவே பயணம் செய்தன. இந்த வறட்சி, ‘பைங்கிளி’ கதை பழகிய தமிழ் வாசகனுக்கு எட்டாத, புரியாத அறியாமையாகப்பட்டது.

இனி அவரது விசித்திரமான கதைத் தலைப்போடு (ஒரு ராத்தல் இறைச்சி.) ஆரம்பமாகும் ஒரு கதையின் துவக்கம், அவரது உண்மை உலகைக் காட்டுவதாக, தத்ரூபமாக அமைந்திருப்பதைப் பார்ப்போம்: ‘‘என் பெயர் நவீனன். சென்ற 25 வருஷங்களாக எழுதி வருகிறேன். நான் எழுதியது ஒன்றாவது பிரசுரமாகவில்லை. அப்படிச் சொல்வதுகூட பிசகு. சுமார் 15 கதை, குறுநாவல், கவிதை, பிரசுரமாகியிருக்கும். இவற்றில் 13_க்கு ஒரு வித சன்மானமும் கிடைக்கவில்லை. 14_ஆவது கதைக்கு வந்த செக்கை கமிஷன் கழித்து கையில் கிடைத்தது 4ரூ.25.பைசா… நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவர் பெயர் சுசீலா. அவளுக்குக் கல்யாணம் நடந்தது. இப்பொழுது அவள் என் தாயார். இதை நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இருந்தாலும் கல்யாணம் நடைபெறுவதும் குழந்தை பெறுவதும் சர்வசாதாரண நிகழ்ச்சிகள் என்பதும் எனக்குத் தெரியாததில்லை… நான் கடந்த ஐந்து வருஷமாக ஒரு நாய் வளர்த்து வந்தேன். அது ஒரு நாட்டு நாய். மங்கின செங்கல் வர்ணம். வளையாத காதுகள், குள்ளமும் இல்லை உயரமுமில்லை. நல்ல முரட்டுத் தேகம். அதற்கு நான் ராஜி என்று பெயர் வைத்திருந்தேன். அதற்கு இப்பொழுது வயோதிகம் தட்டி விட்டது. இருந்தாலும், அது என்னிடம் அன்பாக இருந்தது. சில நாட்கள் நான் அதனுடன் பேசுவேன்…’’ …நகுலனின் ஒட்டுமொத்தமான _ அவரே குறிப்பிடுவது போல பத்துப் பதினைந்து படைப்புகளின் உள்படிமான உணர்த்தல்களுக்கு எடுத்துக் காட்டு …. இவை. நகுலன், உரக்க மந்திர உச்சாடனம் செய்யாத வால்மீகம் மூடி வளர்ந்த தத்துவஞானி. வாய்வீரம் பேசாத வாள் வீச்சுக்காரன். மணம் உள்பொதிந்த விடிகாலையின் பாதிவிரிந்த மலர். அவரது அந்தரங்கமே அவரது கவிதைகள், கதைகள், நிஜவாழ்வின் ஈரவிறகுகள் போன்ற குமைவுகளை படிமங்களாகக் கொண்டு அவர் இலக்கியம் படைத்தார்.

‘இன்னார் போல் அவர்…’ என்று எடுத்துக் காட்டிட முடியாத அந்தத் தத்துவப் பேழை. இங்கே 85 ஆவது வயதின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்து மலையாள மயானத்தில் அடங்கிப் போய் விட்டது. வருங்கால அறிவு உலகம் நகுலனின் உத்வேக உணர்வுகளை மனதிலேற்றிக் கொண்டால், தமிழ் இலக்கிய உலகம் விழிப்பில் பார்வைத் தெளிவு கொள்ளும் என்பது உண்மை!

நன்றி : தீராநதி

பதிவேற்றியவர்: பாலா.ஆர்