Pages

Wednesday, September 26, 2012


அவனுடைய நாட்கள்-வண்ணநிலவன்



கம்பெனிக்குப் போகும்போதே எதிரே ஆட்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் வேலை இல்லையென்பது தெரிந்து போயிற்று. வெங்கடேஸ்வரா கபே திருப்பத்திலேயே கம்பெனியிலிருந்து ஆட்கள் வந்து கொண்டிருந்ததை அவனும் ஆவுடையும் பார்த்து விட்டார்கள். பேசாமல் அப்படியே வீட்டுக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால் ஆவுடை வீட்டுக்குத் திரும்பவில்லை. அவள் வராவிட்டாலும் பரவாயில்லை. அவனையும் வீட்டுக்குப் போக விட மாட்டாள். சங்கரனுக்கு அம்மா மேல் கோபம் கோபமாக வந்தது.


இன்றைக்கும் வேலை இல்லாமல் ஆட்கள் திரும்புகிறார்கள் என்றதுமே சங்கரனுக்குச்சந்தோஷமாக இருந்தது. ஆனால் ஆவுடைக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. ஏற்கெனவே இந்த வாரத்தில் இரண்டு நாள் வேலை இல்லை. இன்றோடு சேர்த்தால் மூண்று நாளாகிறது. வாரச் சம்பளம் குறைந்துவிடும். சனிக்கிழமை ரேஷன் வாங்க சிட்டை வட்டிக்காரனிடம்தான் போய் நிற்க வேண்டும்.


சங்கரனுக்கு சீக்கிரமாக வீட்டுக்குப் போய் சாப்பாட்டுச் சட்டியை வீட்டில் போட்டு விட்டு நிர்மலா வீட்டுக்குப் போக வேண்டும். இப்படியே திரும்பினால் பதினைந்து நிமிஷத்தில் நிர்மலா வீட்டுக்குப் போய் விடலாம். அங்கே போய் எப்படியும் ஒரு அரை மணி நேரமாவது சிலோன் ரேடியோ கேட்கலாம். முக்கியமாக நிர்மலாவிடம் பேசிக் கொண்டிருக்கலாம். நேற்று ராத்திரி கேபிள் டி.வி.யில் பார்த்த படத்தைப் பற்றிச் சொல்லுவாள். நிர்மலாவுடன் இருந்தால் வீட்டு ஞாபகமே வருவதில்லை. அவளுடன் இருக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. காபி கொடுக்கும்போது அவளுடைய விரல் பட்டால் விவரிக்க முடியாத பரவசம் ஏற்படுகிறது. ராத்திரி வீட்டுக்குத் திரும்பும் போதுதான் நரகத்திற்குப் போகிற மாதிரி இருக்கிறது. அந்த நாள் ஏன் முடிந்ததென்று இருக்கிறது.


தசரா ஆரம்பித்து மூன்று நாட்களாகி விட்டன. எல்லா கோயில்களிலும் தினசரி கச்சேரி நடக்கிறது. தெருவுக்குத் தெரு மைனர் பார்ட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு வெளியூர்களிலிருந்து கும்பம் ஆடுகிறவர்களையும் நையாண்டி மேளங்களையும் கொண்டு வந்திருந்தன. அம்மாதான் ஒன்பது மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தால் திட்டுகிறாள். அதற்காக கண் முழித்து தசரா பார்க்காமல் இருக்க முடியுமா என்ன ?


'எக்கா கம்பெனிக்கா போறீய... ? அதான் வேல இல்லியே, வீட்டுக்குப் போங்கக்கா... எதுக்குப் போட்டு வீணா அலையுதியோ... ? ' என்றாள் பாக்கியம்.


'இல்ல, போர்மேன் அண்ணாச்சியைப் பாக்கணும். அதான் போய்க்கிட்டு இருக்கேன் ' என்றாள் ஆவுடை. பாக்கியம் கொஞ்சம் தள்ளிப் போனதும், 'இவளுகளுக்கு என்ன வந்தது ? நான் எங்கியும் போறேன். ரோட்டுல போறவ பேசாமப் போக வேண்டியதுதான ? இவ கிட்டக் கேட்டுட்டுத்தான் ஒவ்வொண்ணுஞ் செய்யனும் போல இருக்கு ' என்றாள்.


'எதுக்கு அந்த அக்காவப் போட்டுத் திட்டுத ? வீணா அம்புட்டுத் தூரம் எதுக்கு அலையணும் வேலதான் இல்லையே. வீட்டுக்குப் போங்கண்ணு சொல்லுதா. இது ஒரு குத்தமா ? அவளைப் போயி கண்டமானைக்கிப் பேசுதீயே ' என்றான் சங்கரன்.


'இந்தானைக்கு ஒனக்கு ஊர் மேயப் போகணும். கம்பேனி லீவுன்னா ஒனக்குக் கொண்டாட்டம். இப்பிடி தெனசரி வேல இல்லன்னு வீட்டுக்குத் திரும்புதமேன்னு எனக்கு வயித்துல புளியக் கரைக்கி. '


சங்கரன் பேசாமல் தலை குனிந்து நடந்து கொண்டிருந்தான். கோபத்திலும் எரிச்சலிலும் ஆவுடையுடைய நடையின் வேகம் அதிகரித்தது. முணுமுணுத்துக் கொண்டே நடந்தாள். தூத்துக்குடி பஸ் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது.


அப்பா வேலையில்லாமல் வீட்டில் உட்கார்ந்து நாலைந்து வருஷமாகி விட்டது. சங்கரனையும் மூன்று பொம்பளைப் பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு ஆவுடை அநேகம் பாடு பட்டாள். எஸ்.எஸ்.எல்.சி. முடித்ததும் அவனையும் பொட்டு வெடிக் கம்பெனிக்கு தன்னோடு வேலைக்குக் கூட்டிக் கொண்டு போனாள். அவர்களுடைய வாரச் சம்பளத்தில்தான் குடும்பம் ஓடியது.


மாணிக்கம் சலூனில் சங்கரன் தினசரி பேப்பர் படிப்பான். சின்னப் பிள்ளையிலிருந்தே சிந்தாதிரிப்பேட்டை சந்தனுவின் சித்திர வித்யாலயா விளம்பரத்தைப் பத்திரிகைகளில் பார்த்து வருகிறான். சங்கரனுக்குப் பள்ளிக்கூடத்தில் கூட டிராயிங் வராது. ஆனாலும் சந்தனுவின் 'நீங்களும் ஓவியராகலாம் ' விளம்பரத்தைப் பேப்பரில் பார்த்து விட்டு எழுதிப் போட்டான். ஒரு வாரம் கழித்து மெட்ராஸிலிருந்து நீளமான கவர் ஒன்று வந்தது. முதன் முதலாக அவன் பேருக்கு வந்த அந்த கவரைப் பார்த்ததும் ரொம்பச் சந்தோஷமாயிருந்தது. அதை நிர்மலாவிடம் கொண்டு போய்க் காட்டினான். ஓவியம் படிப்பதற்கு எவ்வளவு பீஸ் கட்ட வேண்டும் என்றதும் ஓவியனாகிற ஆசையே போய் விட்டது. ஆனால், ரொம்ப நாள் வரை அந்தக் கவரை அப்படியே கசங்காமல் வைத்திருந்தான்.


இதே போல டிராப்ட்ஸ் மேன் ஆகலாம், விவசாயப் படிப்பை வீட்டிலிருந்தபடியே இலவசமாகக் கற்கலாம் என்றெல்லாம் ரிஷிவந்தியத்திலிருந்து ஒரு டுட்டோரியல் காலேஜ் விளம்பரம் வந்திருந்தது. ரிஷிவந்தியம் என்ற அந்த ஊரின் பெயரே சங்கரனுக்கு ரொம்ப பிடித்திருந்தது. அங்கிருந்தும் விபரங்கள் எல்லாம் வந்தன. வழக்கம் போல அம்ம அதெல்லாம் வேண்டாமென்று சொல்லி விட்டாள்.


ஆவுடை வேகமாகப் போய் கொண்டிருந்தாள். அவள் பின்னால் சங்கரன் இஷ்டமே இல்லாமல் நடந்து கொண்டிருந்தான். கம்பெனி பக்கமிருந்து கிருஷ்ணன் தன் பழைய சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். இவன் தூக்குச் சட்டியுடன் போகிறதைப் பார்த்து ஏதாவது கேட்பான் என்று எதிர்பார்த்தான். நல்ல வேளையாக கிருஷ்ணன் இவனைப் பாராமலேயே போய் விட்டான். கிருஷ்ணன் இவனைக் கடந்து போகும் போது அவனிடமிருந்து மருந்து வாடை அடித்தது. கம்பெனியில் வேலை பார்க்கிறவர்கள் எல்லோருடைய உடம்பிலும் இந்த மருந்து வாடை அடிக்கும். எத்தனை சோப் போட்டுக் குளித்தாலும் அது போகவே போகாது.


கம்பெனியின் நீளமான காம்பவுண்டுச் சுவர் ஆரம்பமாகி விட்டது. சுவர் மீது வரிசையாக மைனாக்கள் உட்கார்ந்திருந்தன. நிர்மலா வீட்டில் கூட முன்பு மைனா இருந்தது. ஈஸ்டருக்கு ஒரு வாரம் இருக்கும் போது ஒரு நாள் காலை கூண்டில் செத்துக் கிடந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. நிர்மலா கூட அவ்வளவாக வருத்தப்படவில்லை. இவன்தான் ரொம்ப வருத்தப் பட்டான். பிறகு வெறும் கூண்டு மட்டும் வெகு நாளைக்கு அவர்கள் வீட்டில் உத்திரக்கட்டையில் தொங்கிக்கொண்டிருந்தது.


'ஏம்மா அதான் வேல இல்லன்னு ஆளுக திரும்பிப் போறாவ இல்ல. அப்பிடியே வீட்டுக்குப் போவ வேண்டியதுதான ? எதுக்கு இம்புட்டுத் தூரம் வீணா வந்து அலையுதியோ ? ' என்றார் வாட்ச்மேன் ஞானமுத்து.


'உள்ள அண்ணாச்சி இருக்காங்களா ? '


'அண்ணாச்சி ஆபீஸ் ரூம்ல இருக்காங்க. எதுக்கு ? '


'அவங்களப் பாக்கணும். '


'அவங்களப் பாத்து என்ன செய்யப் போறீயோ ? குளோரைடு லாரி வந்தாத்தான் வேலயே. '


'ஏதாவது கழிவு கிழிவு கெடந்தா பாக்கலாம்னுதான்... '


'கழிவுதான ? நீங்க கேக்கதுக்கு முந்தியே நேசமணி, அண்ணாச்சி கிட்டக் கேட்டுப் பாத்துட்டா. கழிவெல்லாம் ஒண்ணும் இல்லன்னு அண்ணாச்சி சொல்லிட்டாங்க. இன்னைக்கிச் சாயந்தரத்துக்குள்ள லோடு வந்துருமாம்... நாளைக்கு எப்பிடியும் வேல இருக்கும். போயிட்டு வாங்க. '


பின்னும் ஆவுடை தயங்கி நின்று கொண்டிருந்தாள். ஞானமுத்து தன் ஷெட்டுக்குள் போய் உட்கார்ந்து கொண்டு விட்டார். சங்கரன் தள்ளியே நின்று கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்து விட்டு ஆவுடை நடக்கத் தொடங்கினாள். சங்கரனும் அவள் பின்னால் போனான். இருவரும் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை.


வீட்டுக்கு வந்ததும் ஆவுடை தூக்குச் சட்டியை வைத்து விட்டுப் படுத்து விட்டாள். கொஞ்ச நேரத்திலேயே தூங்க ஆரம்பித்து விட்டாள். தங்கைகள் பள்ளிக்கூடம் போயிருந்தனர். அப்பாவையும் காணவில்லை. அம்மா தூங்கியதும் சங்கரன் புறப்பட்டான். சட்டை வேட்டியெல்லாம் கருமருந்து வாடை அடித்தது. வெயிலில் வந்ததால் அந்த நெடி அதிகமாக இருந்தது. வேறு சட்டை மாற்றலாமென்று கொடியி;ல் கிடந்த சட்டையை எடுத்து மோந்து பார்த்தான். அதிலும் மருந்து வாடை அடித்தது. இத்தனைக்கும் அது துவைத்த சட்டை. வீடு பூராவுமே கருமருந்து வாடை அடிக்கிற மாதிரி இருந்தது. சட்டையை மாற்றாமலேயே நிர்மலா வீட்டுக்குப் புறப்பட்டான்.

சுபமங்களா-நவம்பர்,1995