ஒரு வருடம் சென்றது - சா. கந்தசாமி
[நான்கு எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு நூலாகிய ‘கோணல்கள் ’ மூலம் பரவலான இலக்கிய ரசிகர்களின் கவனத்துக்கு வந்த சா. கந்தசாமி மாயவரத்தில் பிறந்தவர் (23-7-1940). தற்போது சென்னைத் துறைமுகத்தில் பணி புரிகிறார். இலக்கிய வட்டாரங்களில் பெரிதும் மதிக்கப்படும் ‘கசடதபற’ இலக்கிய இதழில் இவர் பெரும் பொறுப்பு வகித்தவர். தொழிற்சாலை ஒன்று நிறுவுவதற்காகச் சிறிய வனம் ஒன்று அழிக்கப்படுவது பற்றிய ‘சாயா வனம்’ (1969) என்ற நாவல் இவருடைய முக்கியமான நூல். ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ (சிறுகதைகள், 1974), ‘அவன் ஆனது’ (நாவல், 1981) ஆகியவை நூல் வடிவில் வந்துள்ள இவருடைய பிற படைப்புகள். படைப்பிலக்கியம் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.]
ஒரு கையில் இடுப்பிலிருந்து நழுவும் கால்சட்டையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் சிலேட்டை விலாவோடு அணைத்தவாறு வகுப்புக்குள் நுழைந்தான் ராஜா.
நான்காம் வகுப்பு இன்னும் நிறையவில்லை. இரண்டொரு மாணவர்கள் அவசர அவசரமாக வீட்டுப்பாடம் எழுதிக் கொண் டிருந்தார்கள். இந்த அவசரம் ராஜாவுக்கில்லை. வீட்டுப் பாடத்தை அச்சடித்தாற் போல எழுதிக்கொண்டு வந்துவிட்டான்.
மணியடித்துப் பிரேயர் முடிந்த பின் வகுப்புத் தொடங்கும். அதற்கு இன்னும் நேரமிருந்தது. ராஜா வகுப்பின் நடுவில் நின்று அப்படியும் இப்படியும் பார்த்தான். பிறகு சற்றே குனிந்து சிலேட் டைப் பலகைக்குக் கீழே வைத்துவிட்டு, நழுவும் சட்டையை இழுத்துக் கட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டான்.
அவன் மேல்சட்டை கால்சட்டை எல்லாம் காக்கி. அதைத்தான் எப்போதும் போட்டுக்கொண் டிருப்பான். ராணுவத்தில் கொடுக்கப்படும் காக்கி அது. பிரித்துச் சிறியதாகச் சட்டை தைத்ததின் அடையாளங்கள் எப்போதும் அதில் தெரியும்! சண்டை வந்தால் சக மாணவர்கள் அவனிடம் அதைச் சொல்லிப் பரிகாசம் செய்வார்கள். அவர்கள் குரல் ஓங்க ஓங்க அவனுக்கு ஆத்திரம் வரும்; கோபம் வந்தால் முகம் வீங்கும்.வலப்பக்கத்திலிருந்து இடப் பக்கத்துக்கு வாய் கோணக் கோண இழுக்கும்.ஏற்கனவே அவன் தெற்றுவாய்.இப்போது சுத்தமாக ஒரு வார்த்தையும் வராது.
"தெத்துவாயா"என்றுதான் சார் கூப்பிடுவார்.
சாருக்கும் அவனுக்கும் ஒரு ராசி,கெட்ட ராசி, ஒருத்தரை ஒருத்தருக்குப் பிடிக்காது. ஆசிரியரைப் பார்க்கும் போதெல்லாம் தன் தகப்பனாரைப் பார்ப்பது போல இருக்கும் அவனுக்கு. உறுமு வான். 'சாரைக் கொன்னு போடணும். நாற்காலியிலே முள்ளு வைக்கணும். நல்ல கருவேல முள்ளா,சப்பாத்தி முள்ளா கொண்டாந்து வைக்கணும்.' என்று சொல்லிக் கொள்ளுவான்.இம் மாதிரியான சந்தர்ப்பங்களில் அவன் நடத்தை விபரீதமாக மாறும்.
சிலேட்டை எடுத்துத் தரையில் அடிப்பான்.பக்கத்தில் இருக்கிற வன் தொடையில் நறுக்கென்று கிள்ளுவான். திடீரென்று பாய்ந்து ஒரு மாணவன் முகத்தில் பிராண்டுவான். சற்றைக்கெல்லாம் வகுப்பில் கலவரம் மூளும். மாணவர்களும் மாணவிகளும் பயந்து மூலைக் கொருவராக ஓடுவார்கள்.
ஆசிரியர் பாய்ந்து வந்து ராஜா காதைப் பிடித்து முறுக்கி அடிப் பார். கன்னத்தில் கிள்ளுவார். பிரம்பு பளீர் பளீரென்று தலையிலும் முதுகிலும் பாயும். அவனோ வலியையும் துயரத்தையும் பொறுத்துக் கொண்டு மௌனமாக இருப்பான். உடல் அப்படியும் இப்படியும் நெளியும். ஆனால் கண்களிருந்து ஒரு சொட்டு நீரும் பெருகாது. அதைப் பார்த்ததும் சாருக்குக் கோபம் வரும். "பாரு,கொறப்பய அழறானா?" என்று பல்லைக் கடித்துக்கொண்டு தலையைப் பிடித்து மடாரென்று சுவற்றில் மோதுவார்.
இரண்டு மாதங்களாக ராஜா அடியும் உதையும் வாங்கிக்கொண்டு வருகிறான். அவன் நினைவெல்லாம் மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புக்கு வந்ததிலிருந்துதான் தொடங்குகிறது.மற்றதையெல்லாம் அவன் மறந்துவிட்டான். ஓரோர் சமயம் கீழ் வகுப்புப் பிள்ளை களைப் பார்க்கும்போது,அந்த வகுப்பெல்லம் தான் படிக்கவில்லை போலும் என்ற உணர்வு தோன்றும்.
நான்காம் வகுப்புக்கு வந்ததுமே அவனுக்கு அடி விழுந்தது. பிரேயருக்கு நிற்கையில் பின்னாலிருந்து யாரோ நெறுக்கினார்கள். வரிசை திடீரென்று உடைந்தது. நான்கு பேர் 'கேர்ள்ஸ்'மீது போய் விழுந்தார்கள். பெண்கள் 'ஓ'வென்று கத்தினார்கள். ஆனால், உடைந்த வரிசை மறுகணத்திலேயே ஒன்றாகக் கூடியது. காலைச் சாய்த்து வைத்து நின்றுகொண் டிருந்த எம்.ராமானுஜத்தின் சட்டை யைப் பிடித்து,'சரியா நில்லு' என்றான் ராஜா.அப்போதுதான் தலையில் ஓர் அடி விழுந்தது.தலை வேகமாகப் பின்னுக்குப் போவது மாதிரி இருந்தது. காது, கண், நெஞ்சு - எல்லாம் பற்றி எரிந்தன. காகை இருகப் பொத்தினான். பிரேயர் வரிசை, டீச்சர், பள்ளிக்கூடம், பிள்ளையார் கோவில் அவனைச் சூழ்ந்த ஒவ்வொன்றும் கிர்கிர்ரென்று வேகமாகச் சுற்றின.
ஆசிரியர் கையைப் பிடித்திழுத்து, "ஒழுங்கா நில்லு" என்று உறுமினார். அந்தக் குரல் தன் அப்பாவின் குரல் மாதிரியே இருந்தது. அவனுக்கு நெஞ்சு அடைத்தது.
எல்லா மாணவர்களும் அவனுக்கு இடம் விட்டு ஒதுங்கினார்கள். இரண்டு பேர் மூன்று பேர் நிற்கவேண்டிய இடத்தில் அவன் ஒடுங்கி நின்றான். கீச்சுக் குரலில் நான்கு பெண்கள், "உலகெல்லாம் உணர்ந்து" - என்ற பாட்டை இழுத்து இழுத்துப் பாடினார்கள். தலைமையாசிரியர் ராமசாமி ஐயர் சிறு பிரசங்கம் செய்தார்.
பிரேயர் முடிந்தது; அவன் வரிசை நகர்ந்தது. வகுப்புக்குள் காலடி வைத்ததுமே மாணவர்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடி இடம் பிடித்துக்கொண்டார்கள். ஆனணால் ராஜாவோ எல்லாருக்கும் வழிவிட்டுக் கடைசியாகப் போய்ச் சுற்றுமுற்றும் பார்த்தான். முன் வரிசைகள் நான்கு நிறைந்துவிட்டன. ஆனாலும் மூன்றாவது வரிசை யில் அவனுக்கொரு இடம் வைத்துக்கொண்டு சங்கரன், "ராஜா, இங்க வா!" என்று அழைத்தான். அந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டுப் பின்னால் போய் உட்கார்ந்தான் ராஜா.
பிரேயரில் வாங்கிய அடியில் தலையும் காதும் இன்னும் எரிந்து கொண்டிருந்தன. காதை மெல்ல இழுத்துத் தடவிவிட்டுக் கொண் டான். அப்பா அடிக்கும்போதெல்லாம் அம்மா இப்படித்தான் செய் வாள் என்ற நினைப்பு வந்தது.
"ரொம்ப வலிக்குதாடா, ராஜா?" சங்கரன் அவன் அருகே வந்து குனிந்து கேட்டான்.
"இல்லே."
"அப்பவே பிடிச்சு காதைத் தடவிக்கிட்டே இருக்கிறியே!"
ராஜா, சங்கரனைக் கூர்ந்து பார்த்தான்.
"சார் வராங்க" என்று கத்திக்கொண்டு பின்னே இருந்து முன்னே ஓடினார்கள் சிலர். முன்னே இருந்து பின்னே சென்றார்கள் சிலர். சங்கரன் முன்னே போக ஒரு காலை எடுத்து வெத்தான். சார் நீண்ட பிரம்பைக் கதவில் தட்டிக்கொண்டே வகுப்புக்குள் நுழைந்தார். சங்கரன் ராஜாவின் பக்கத்தில் உட்கார்ந்தான். ஆனால், எட்டாம் நாள், "அந்த முரடன்கிட்ட குந்தாதே: என்று சார் அவனைப் பிரித்துக்கொண்டுபோய் முன்வரிசையில் உட்காரவைத்தார்.
"நான் ஒண்ணும் முரடனில்லே; நீதான் முரடன்; முழு முரடன்" என்று முணுமுணுத்தான் ராஜா. "சார் தலையில் சிலேட்டால் படீர் படீரென்று அடிக்கனும், காஞ்சொறி கொண்டாந்து அழ அழ தேய்க்கணும்' என்ற உணர்வு தோன்றியது. பரபரக்கச் சிலேட்டை யெடுத்துப் பெரிதாக ஒரு படம் போட்டான். சாருக்கு இருப்பது மாதிரி சிறிதாக மீசை வைத்தான். மீசை வைத்தவுடனே கோபம் வந்தது. குச்சியால் தலையில் அழுத்தியழுத்திக் குத்தினான். கண் களைத் தோண்டினான். கண்ணை மூடிக் கொண்டு கீர்கீர்ரென்று படம் முழுவதும் கோடுகள் கிழித்தான். குறுக்கும் நெடுக்குமாகக் கோடு கள் விழும்போது மனதில் இன்னொரு காட்சி படர்ந்தது.
வீட்டில்,சாந்தா பக்கத்தில் உட்கார்ந்திருந்தால் அப்பா வீட் டுக்குள் வந்ததும் வராததுமாக,'அந்த முரடங்கிட்டே குந்தாதே அம்மா,இங்கே வா' என்று அவளைத் தூக்கி அணைத்துக் கொள் வார். ராஜா கீழ்க் கண்ணால் தங்கையையும் அவள் கன்னத்தில் குனிந்து முத்தமிடும் தகப்பனாரையும் பார்ப்பான். நெஞ்சில் என் னவோ இடறுவதுபோல் இருக்கும். புத்தகத்தை அப்படியே போட்டுவிட்டு,"அம்மா"என்று உள்ளே ஓடுவாள்.அம்மா அவனை அணைத்துக்கொண்டு கொஞ்சுவாள். அவன் தங்கையை நோக்கிப் 'பழிப்புக்' காட்டுவான்.
ராஜா சிலேட்டைத் திருப்பிப் பார்த்தான். சார் படம் கிறுக்க லில் மறைந்து போய்விட்டது. மனத்தில் ஒருவிதமான சந்தோஷம் தோன்றியது. சிலேட்டை ஒரு குத்துக் குத்திப் பலகைக்கடியில் வைத்துவிட்டு.'சார் நாற்காலியில் ஒரு நாளைக்கு முள்ளு வைக்க ணும்' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு எழுந்தான்.
நாட்கள் போகப் போகத் தன் தனிமையை அவன் அதிகமாக உணர்ந்தான்.அது துக்கத்தைக் கொடுத்தது. தெரியாத கணக்கைச் சொல்லித்தர ஆள் இல்லை; மனக்கணக்குப் போடும்போது சிலேட்டை லேசாகத் திருப்பிக் காட்ட ஆள்இல்லை. அவன் எழுதும் தமிழ்ப் பாடத்தைப் பார்த்தெழுத யாரும் இல்லை. கைகளை முறுக்கிச் சுவரில் குத்தினான் ராஜா.
ஆரம்பிச்சுட்டியா?" என்று பிரம்பைக் காட்டி ஆசிரியர் உறுமி னார். அவன் கண்களைத் தாழ்த்திக் கொண்டான்.
சார் பத்து மனக்கணக்குக் கொடுத்தார்.அவனுக்கு எட்டுத் தப்பு. அவன்தான் வகுப்பிலேயே ரொம்ப தப்புப் போட்டான்.
ஆசிரியர் அவனைக் கூப்பிட்டு "எத்தனை தப்பு?"என்று வினவினார்.
அவன் "ரெண்டு ரைட்."என்றான்.
சார் ஒரு சிரிப்புச் சிரித்தார்; கை காதைப் பற்றியது.
"எத்தனை தப்பு?"
"ரெண்டு ரைட் சார்."
"யாரைப் பார்த்து எழுதினே?"
"நானே போட்டேன் சார்!"
சார் நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு எழுந்தார்.
"யாரைப் பார்த்துக் காப்பி அடிச்சே?"
"நான் தனியாப் போட்டேன்,சார்."
"எனக்குத் தெரியும்! நிஜத்தைச் சொல்லு."
"நாந்தான் சார் போட்டேன்!"
"ஏலே, மறுபடியும் பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டியா?"
சார் பிரம்பு அவன் கழுத்திலும் தலையிலும் பாய்ந்தது. துள்ளிக் குதித்துக்கொண்டு பின்னுக்கு ஓடினான். அவன் காலடியில் இரண்டு சிலேட்டுக்கள் மிதிபட்டு உடைந்தன. சார் அவன் பின்னே ஓடிச் சட்டையைப் பிடித்து நிறுத்தினார்.
"உண்மையை உன் வாயாலேயே வரவழைக்காட்டா பார்" என்று கூவினார்.
"இன்னமெ ஓடுவியா?"
"......."
"வாயைத் திற!"முட்டிக் காலுக்குக் கீழே பிரம்பு சாடியது.
அவன் நெளிந்தான்.
"ஓடினா உடம்புத் தோலை உறிச்சுப்புடுவேன்."
"....."
"ஓடுவியா?"
"மாட்டேஞ் சார்!"
"கையை நீட்டு....நல்ல.."
உள்ளங்கையை விரிய நீட்டினான் ராஜா.
"முட்டிப் போடு."
அவன் முழங்காலிட்டு அவருக்கு நேரே கையை நீட்டினான். சார் அவனைக் குத்திட்டு நோக்கினார்.
"இப்ப நிஜத்தைச் சொல்லு,அந்த ரெண்டையும் யாரைப் பார்த்துப் போட்டே?"
"நானே போட்டேஞ் சார்!"
"சுவாமிநாதனைப் பாத்துத்தானே?"
"நானே சார்."
"நிஜத்தைச் சொல்லமாட்டே?" பிரம்பு உள்ளங்கையில் குறுக் காகப் பாய்ந்தது.
அவன்,'நான்'என்று ஆரம்பித்தான்.வாய் கோணக் கோண இழுத்தது. அந்த வாக்கியம் முழுதாக வரவில்லை. முகம் வீங்க, மண்டியிட்டபடியே இருந்தான். சார் அடித்துக் களைத்துப் போனார். பிரம்பைப் பின்னால் வீசியெறிந்துவிட்டு, "இரு,உன்னை ஒழிச்சிடுறேன்!" என்று பிடரியைப் பிடித்து அவனைத் தள்ளினார்.
அவன் தப்புச் செய்யும்போதெல்லாம் சிலேட்டைப் பிடுங்கி எறிவார். சலிப்புற்று,"உனக்குப் படிப்பு வராது: மாடு மேய்க்கத் தான் போகணும்"என்கிறபோது,அவன் மௌனமாகத் தலை குனிந்தபடியே நிற்பான். சார் நிமிர்ந்து பார்ப்பார். மனத்தில் திடீரென்று எரிச்சல் மூண்டெழும்: "எதுக்கு நிக்கறே?போய்ஒழி" என்று கத்துவார்.
ஜூலை மாதம் தொடங்கியதிலிருந்து சார் பாடம் நடத்துவது குறைந்துகொண்டே வந்தது.ஒரு நாள்,ஐந்து கணக்குகள் கொடுத்துவிட்டுச் சென்றவர் மறுநாள் திரும்பி வந்தார். எல்லாரும் சிலேட்டை எடுத்துக்கொண்டு கூட்டமாக ஓடினார்கள். ஆனால், சாரோ,புதிதாக ஒன்பது கணக்குகள் கொடுத்தார். "சிலேட்டிலே இடம் இருக்காது சார்!"என்று ஒருவன் கத்தினான்.
"இருக்கிற வரைக்கும் போடு" என்று வேகமாக வெளியே சென்றார்.
ஐந்தாம் வகுப்பில் அவர் படம் போட்டுக்கொண் டிருப்பதாக மூன்றாம் நாள் வி.ஆர்.பாப்பா வந்து சொன்னாள்.அதை யாரும் நம்பவில்லை. "கேர்ல்ஸ்" பக்கத்திலிருந்து வந்த தகவலைப் "பாய்ஸ்" பொருட்படுத்தவில்லை.
ஆனால்,மறுநாளும் மறுநாளும் அதே செய்தி திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. சங்கரனும் வேணுகோபாலனும் ஐந்தாம் வகுப்பு ஜன்னல் பக்கமாகப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். அப்புறம் தான் அது நிஜமென்று ஊர்ஜிதமாயிற்று.சார் படம் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தவுடனே பாடம் எழுதுவதையும் கணக்குப் போடுவதையும் விட்டுவிட்டார்கள்.
ராஜா ஐந்தாம் வகுப்பு ஜன்னல் பக்கமாகச் சென்று பார்த்தான். சார்,மேசைமீது நின்றுகொண்டு உயர்ந்த வெள்ளைச் சுவரில் பெரிதாக மரம் போட்டுக் கொண்டிருந்தார்.மரத்துக்கு அப்பால் இன்னொரு மரம்;சற்றுச் சிறியது.இப்படியேஒரு பத்துநூறு மரங்கள். ஒரு பெரிய வனம்.வனத்தின் ஒரு பக்கத்திலிருந்து பைசன் எருமை உடம்பைக் குலுக்கிக்கொண்டு தலை குனிந்தவாறு சீறிக்கொண்டு வந்தது. ராஜா கண்களைத் தாழ்த்திப் பார்த்தான். அவனுக்குப் படம் ரொம்பப் பிடித்திருந்தது.முதல் முறையாக தன்னுடைய ஆசிரியரைக் கொஞ்சம் சிரத்தையோடு கவனித்தான்.அவர் கை வேகமாக உயர்ந்து தாழ்ந்துகொண் டிருந்தது. பெருங் கிளைகளி லிருந்து சிறு கிளைகளும்,சிறு கிளைகளிலிருந்து தழைகளும் தோன்றின.
இந்த விந்தையைக் காண ராஜா ஒவ்வொரு நாளும் ஐந்தாம் வகுப்பு ஜன்னலோரம் சென்றுகொண் டிருந்தான்.
பல நாட்களுக்குப் பிறகு, ஐந்தாம் வகுப்பு முழுவதும் பெரிய பெரிய படங்கள் வரைந்துவிட்டுச் சார் தன் வகுப்புக்கு வந்தார். வகுப்பு அலங்கோலமாகவும் ஒழுங்கற்றும் இருந்தது. ஆனால், அவர் இதையெல்லாம் கவனிக்கவில்லை.வெள்ளைச் சுவரை அங்குமிங்கும் தொட்டும் தட்டியும் பார்த்தார். திருப்தியாக இருந்தது.
ராஜா உட்காருகிற இடத்துக்கு மேலே பெரிதாகச் சுவரை அடைத்துக்கொண்டு காந்தியின் படத்தை வரைந்தார். பொக்கை வாய்க் காந்தி; அதில் லேசான சிரிப்பு; சற்றே மேல் தூக்கிய கை; அறையில் சிறு துண்டு; இடுப்பிலிருந்து ஒரு கடிகாரம் செயினோடு தொங்கியது. இவ்வளவையும் ரொம்பப் பொறுமையாக மெல்ல மெல்ல வரைந்துகொண்டு வந்தார்.
சார் படம் வரைய ஆரம்பித்தவுடனே வகுப்பில் பாடம் நடப்பது நின்று போயிற்று. மாணவர்கள் அங்குமிங்குமாக உலாவிக்கொண் டிருந்தார்கள். கூச்சல் பொறுக்க முடியாமல் போகும்போது, "வரணுமா?"என்று கத்துவார். இரைச்சல் திடீரென்று அடங்கி அமைதியுறும்.
காந்தியின் படத்தை முடித்துவிட்டு,சார் ஒரு கொடி வரைந்தார். மூவர்ணக்கொடி; காந்தி படத்தைவிடக் கொஞ்சம் சிறியது; ஆனால் உயரமானது. காற்றில் படபடத்துப் பறப்பது மாதிரி ஒரு தோற்றம். கொடியில் முதலில் ஆரஞ்சு;அப்புறம் வெள்ளை,நடுவில் நீல நிறத்தில் சக்கரம். இவையெல்லாம் பூர்த்தியான மூன்று நாள் கழித்து,கொடியின் கீழே பச்சை வர்ணம் தீட்டப்பட்டது.சக்கரம் போடும்போது தலைமையாசிரியர் ராமசாமி ஐயரும் கமலம் டீச்சரும் வந்தார்கள்.
சார் மேசையிலிருந்து கீழே இறங்கினார்.
"சாப்பாட்டுக்குக் கூடப் போகல போல இருக்கே,சந்தானம்?" என்று கேட்டார் தலைமையாசிரியர்.
"ரெண்டு ஆரம் இருக்கு.அதை முடிச்சிட்டுப் போகலாம்னு இருக்கேன்"
தலைமையாசிரியர் திருப்தியுற்றார்."எட்டுப் பள்ளிக்கூடத்தைப் பார்த்துட்டேன்.நமபளதுதான் முதல்லே நிக்குது.இதுக்குக் காரணம் நீங்கதான்.
சார்,கமலம் டீச்சர் பக்கம் சற்றே திரும்பினார்.
"இது என் டியூட்டி சார்"
"சார்,நம்ப கிளாசைத்தான் கவனிக்கிறது இல்லை"என்றாள் கமலம் டீச்சர்.
"எனக்கு எங்கே நேரம் இருக்கு டீச்சர்?"
ராமசாமி ஐயர் தலையசைத்தார்.
"அவருக்கு நேரமே இல்லே அம்மா."
கமலம் டீச்சர் சிரித்துக் கொண்டே படி இறங்கினாள்.
ஒரு நாள், படமெல்லாம் போட்டு முடித்த பிறகு எல்லா மாணவர் களையும் அருகே கூட்டிவைத்துக் கொண்டு, "நமக்குச் சுதந்திரம் வருகுது, தெரியுமா?"என்று கேட்டார் ஆசிரியர். அவர் குரலில் தென்படும் உணர்ச்சி பாவத்தைக் கண்டு எல்லோரும் தலையை அசைத்தார்கள்.
"நமக்குச் சுதந்திரம் பதினைந்தாம் தேதி வருகுது. இதுதான் முதல் சுதந்திரதினக் கொண்டாட்டம். ரொம்ப விமரிசையாக் கொண்டாடணும். ஆளுக்கு ஒரு ரூபா கொண்டாங்க."என்றார் ஆசிரியர்.
அடுத்த நாளிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் பேர்கள் கூடிக் கொண்டே வந்தன. ராஜா ஐந்தாவதாகப் பணம் கொடுத்தான். தெத்துவாய் என்றெழுதிய சார், சட்டென்று அதனை அடித்துவிட்டு ஆர்.ராஜா என்றெழுதினார். பின்னால் ஒருநாள் மாலையில் எல்லா மானவர்களையும் அருகே உட்கார வைத்துக்கொண்டு,"ஆளுக் கொரு கொடி கொண்டு வரவேணும்" என்றார். அதோடுகூடக் கொடியின் நிறங்கள்,அதன் வரிசை,நீள அகலங்களைப் பற்றி விவரித்தார்.உள்ளே இருக்கும் சக்கரத்தின் ஆரங்கள் இருபத்து நான்காக இருக்கவேணும் என்றார்.
"துணிக்கொடி கொண்டாரலாமா சார்?"என்று கேட்டான் சங்கரன்.
ஆசிரியர் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு"இல்லே,காகிதக் கொடிதான்"என்றார்.
வகுப்பை ஜோடிக்கும் வேலை சங்கரனோடு ராஜாவுக்கும் கிடைத்தது.அதை மிகுந்த சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டான். பனை-தென்னங்குருத்துக்கள் வெட்டித் தோரணங்கள் முடைந்து குவித்தான்.பதினான்காம் தேதி மாலை வெகுநேரம் வரையில் அவனுக்கு வேலை இருந்தது.கமலம் டீச்சரோடு சேர்ந்துகொண்டு கலர்க் காகிதங்கள்,ஜிகினாக் காகிதங்கள் எல்லாம் ஒட்டினான்.அவன் வேலை செய்த பரபரப்பையும், சாதுரியத்தையும் கண்ட கமலம் டீச்சர்,"உன் பெயரென்ன?"என்று வினவினாள்.அவன் வேலையில் ஆழ்ந்தபடியே,"ஆர்.ராஜா"என்றான்.
மறுநாள் பொழுது விடிந்தது.ராஜா புத்தாடை அணிந்துகொண்டு மொட மொடக்கும் கொடியைக் கவனமாகத் தூக்கிப் பிடித்தவாறு பள்ளிக்கூடத்தை நோக்கிச் சென்றான். வடக்குத் தெருவைத் தாண்டும்போது வாத்தியார் வருவது தெரிந்தது. அவன் சற்றே பின்வாங்கிக் குறுக்கு வழியில் சென்றான். பள்ளிக்கூடம் பிரமாதமாக இருந்தது. இது தான் படிக்கும் பள்ளிக்கூடந்தானா என்றுகூட ஆச்சரியமுற்றான்.
பெரிய காரிலிருந்து ஒருவர் இறங்கி வந்து மெல்ல கொடியேற்றி னார். கொடி மேலே சென்றதும் தலைமை ஆசிரியர் கயிற்றை அசைத்தார்.ஏற்கனவே கொடியில் முடிந்திருந்த ரோஜா இதழ்கள் சிதறிப் பரவின. எல்லாப் பிள்ளைகளும் உற்சாகமாகக் கைதட்டி னார்கள்.
'தாயின் மனிக்கொடி பாரீர்'என்று கமலம் டீச்சர் உச்ச ஸ்தாயில் பாடினாள். அவள் குரல் கணீரென்று வெகு தூரம் வரை யில் கேட்டது. ராஜா விரலை ஊன்றி எழும்பி நின்று இசையைக் கேட்டான். விழா முடிந்ததும் அவளிடம் ஓடிப்போய்."டீச்சர், உங்க பாட்டு ரொம்ப நல்லா இருந்திச்சு டீச்சர்" என்றான்.
கமலம் டீச்சர் வியப்போடு கண்களைத் தாழ்த்தி அவனைப் பார்த்தாள்.
"நீ எந்த வகுப்பு?"
"ஃபோர்த் பி"
"அடுத்த வாரம் என் கிளாஸ்க்கு வந்துடுவே."
அவனுக்கு அது தெரியாது.மௌனமாக இருந்தான்.ஆனால் அடுத்த வாரம் அவன் சார் மாற்றலாகிப் போனார்.நான்காம் வகுப்பு "பி"."ஏ"யுக்குச் சென்றது. அவன் வகுப்புக்குள் நுழைந்த போது கமலம் டீச்சர் என்னவோ எழுதிக்கொண் டிருந்தாள்.
முதல் இரண்டு நாட்களிலும் டீச்சர் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. மூன்றாம் நாள் வீட்டுப் பாடத்தைக் கொண்டுபோய்க் காட்டியபோது குண்டுகுண்டான எழுத்தைப் பார்த்துவிட்டு நிமிர்ந்த டீச்சர் சற்றுத் தயங்கினாள். நினைவைக் கூட்டினாள்.அப்புறம் புன்சிரிப்புடன், "ராஜாதானே?"என்று கேட்டாள்.
"ஆமாம்.டீச்சர்."
"அன்னிக்கு என் பாட்டைப்பத்திச் சொன்னது நீதானே?"
அவன் தலையசைத்தான்.
டீச்சர் அவன் சிலேட்டை வாங்கி எல்லாருக்கும் காட்டினாள். "கையெழுத்தென்றால், இப்படித்தான் முத்து முத்தா யிருக்கணும். நீங்களும் எழுதுறீங்களே?"என்று பெண்கள் மீது பாய்ந்தாள். அவன் சிலேட்டை வாங்கிக் கொண்டு பின்னால் சென்றபோது,"ராஜா,எங்கே போறே?இங்கே வா!" என்று அழைத்து, முதல் வரிசையில் அவனுக்கு இடம் ஒதுக்கினாள்.
கணக்கில் அவன் தப்புப் போடும்போதெல்லாம்,"இங்க வா ராஜா!"என்று அருகே கூப்பிட்டு,"மத்த பாடமெல்லாம் நல்லா படிக்கிற நீ இதுலே மட்டும் ஏன் தப்புப் பண்ணுறே?" என்று கேட்டு,ஒவ்வொரு கணக்காகச் சொல்லித் தருவாள். சில சமயங் களில் அவனுக்கு அவள் வீட்டிலும் கணக்குப் பாடம் நடை பெறும். மூன்று மாதத்தில் அவனுக்குக் கணக்கில் குறிப்பிடத் தக்க அபிவிருத்தி ஏற்பட்டது. கொடுத்த எட்டுக் கணக்கையும் சரியாகப் போட்டதும் கமலம் டீச்சர் பூரித்துப் போனாள். தலையசைத்துச் சிரித்துக்கொண்டே நூற்றுக்கு நூறு போட்டாள்.
கமலம் டீச்சரோடு சிநேகிதம் கூடக்கூட,அவன் நடத்தையில் மாறுதல் ஏற்பட்டது.இப்போதெல்லாம், சிலேட்டை எடுத்துத் தரையில் அடிப்பதில்லை; பக்கத்தில் இருக்கிறவன் தொடையில் கிள்ளுவதில்லை. வாத்தியார் படம் போட்டுக் கண்ணைத் தோண்டுவ தில்லை. இதற்கெல்லாம் நேரம் இல்லாதவன் போல் கமலம் டீச்சரோடு சுற்றிக்கொண் டிருந்தான் அவன்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன் வீட்டிலிருந்து கமலம் டீச்சருக்குத் தாழம்பூப் போகும். தாழம்பூவைப் பார்த்ததும், "எனக்கு இதுன்னா ஆசைன்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டுக் கொண்டே அவனைத் தன்னோடு அணைத்துக் கொள்வாள். இதமான கதகதப்பில் அவன் மருகிப் போவான். இதற்காகவே தினந்தோறும் டீச்சர் வீட்டிற்குப் போகவேண்டும் போல் இருக்கும் அவனுக்கு.
ஒரு நாள், மாடியில் உட்கார்ந்திருந்தபோது நீண்ட சடையைப் பிரித்துவிட்டுக்கொண்டே கமலம் டீச்சர்,"எனக்குக் கல்யாணம் ஆகப்போவுது" என்றாள்.
அவன் மெல்ல டீச்சரை ஏறிட்டுப் பார்த்தான்.
"அதுக்கு இன்னங் கொஞ்ச நாள் இருக்கு"என்று சொல்லிக் கொண்டே அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவன் ஏதோ நினைத்துக் கொண்டவனாகக் கீழே இறங்கி வீட்டுக்கு ஓடினான். ஆனால் அன்று மாலையே தயங்கித் தயங்கிக்கொண்டு திரும்பி வந்தான். அவன் வருகை கமலத்துக்கு ஆச்சரியம் அளித்தது. வாசலுக்கு வந்து "வா ராஜா"என்று கரம்பற்றி அவனை வரவேற்றாள்.
ஒரு சனிக்கிழமை கமலம் டீச்சர் நிறையப் பூவைத்துத் தலை பின்னிக்கொண்டு பள்ளிக்கூடம் வந்திருந்தாள்.இன்னும் பள்ளிக் கூடம் தொடங்கவில்லை.
தலைமையாசிரியர் ராமசாமி ஐயர் பரபரப்போடு மூன்றாம் வகுப்புக்குச் சென்றார். ஆசியர்களெல்லாம் ஒன்றுகூடித் தணிந்த குரலில் பேசிக்கொண் டிருந்தார்கள். மாணவர்கள் பிரேயருக்குக் கூடியதும் தேசீயக் கொடி அரைக் கம்பத்தில் தாழப் பறந்தது.
ராமசாமி ஐயர் முன்னே வந்து,"மகாத்மா காந்தி நேற்றுக் காலமாகிவிட்டார்.யாரோ சுட்டுக் கொன்றுவிட்டார்கள்"என்றார். அவர் கண்களில் நீர் பெருகியது.பேச முடியவில்லை. துயரத்தோடு பின்னுக்குச் சென்றார்.
ஒரு நிமிடம் ஆழ்ந்த அமைதி நிலவியது.
"வாழ்க நீ எம்மான் காந்தி...." என்று கமலம் டீச்சர் உருக்க மாக மெல்லிய குரலில் பாடினாள். பாட்டு முடிந்ததும் தேசப் பிதா வுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
பள்ளிக்கூடம் இல்லையென்று அறிவிக்கப்பட்டது. ராஜா தயங்கிய வாறு டீச்சரிடம் சென்றான்."கொஞ்சம் இரு"என்று சொல்லிவிட்டு ராமசாமி ஐயரோடு உள்ளே சென்றாள். எட்டு வாத்தியார்களும் தேசத்துக்கு நேர்ந்த துர்ப்பாக்கிய சம்பவத்தைப் பற்றி வெகுநேரம் பேசிவிட்டுக் கலைந்தார்கள்.
கமலம் வெளியே வந்தததும் அவனைப் பார்த்து முறுவலித்தாள்.
வழிநெடுகக் கொடிகள் தாழப் பறந்துகொண் டிருந்தன. திறந்த கடைகளை அவசர அவசரமாக மூடிக்கொண் டிருந்தார்கள். ஹர்த்தால் போலும்.
வீடு போய்ச் சேர்ந்ததும் அவனை மாடிக்கு அழைத்துக்கொண்டு சென்றாள் கமலம் டீச்சர்.
"அடுத்த வாரத்திலிருந்து நான் வேலைக்கு வரமாட்டேன்."
"ஏங்க டீச்சர்?"
"எனக்குக் கல்யாணம்."
"எப்பங்க டீச்சர்?"
"இன்னும் ஒரு மாசம் இருக்கு."
டீச்சர் நாற்காலியிலிருந்து எழுந்து அவனை வெறித்துப் பார்த் தாள்.அவன் வெட்கத்தோடு கண்ணை மூடிக் கொண்டான்.
"இங்கே பாரு ராஜா."
அன்று வெகுநேரத்துக்குப் பிறகு ராஜா வீடு திரும்பினான். அம்மா கோபித்துக் கொண்டாள்;திட்டினாள்.ஆனால்,அவன் பதிலே சொல்லவில்லை. களைப்பாகவும் சோர்வாகவும் இருந்தது. திண்ணையில் போய்ப் படுத்தான்.
ராஜா சேர்ந்தாற்போல ஒரு வாரம் பள்ளிக்கூடம் போகவில்லை. அம்மா அவனைச் சீர்காழிக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டாள்.
அவன் பள்ளிக்கூடம் போனபோது கமலம் இல்லை.
"டீச்சர் புதன்கிழமையே போயிட்டாங்க" என்றான் சங்கரன்.
"உம்...."
"ஒன்னப்பத்தி டீச்சர் என்னை ரெண்டு வாட்டி கேட்டாங்க."
அவன் எரிச்சலோடு "சரி" என்றான்.
சில நாட்கள் சென்றன.வகுப்புப் பிரிந்தது.ஒரு செவிட்டு வாத்தியார் வந்தார்.ராஜா பின்வரிசைக்குச் செண்றான். கணக்கில் மீண்டும் பல தவறுகள் போட்டான்.
முழுப்பரிட்சை வந்தது.ராஜா எல்லோரையும் போலக் காப்பி அடித்தான்.கணக்கில் ஒன்பதாவதாகவந்தான்.
----------------------------
புதிய தமிழ்ச் சிறுகதைகள் ,தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்
நேஷனல் புக் டிரஸ்ட் ,இந்தியா. புது டில்லி. ,198