மரத்தடியில் துயிலும் ஒருவன்
http://poetdevadevan.blogspot.in/2011/03/blog-post_2503.html
புரண்ட விலாவினில்
ஒட்டியிருக்கிற மணல்
பூமியைப் பிரிந்ததால்
தன் உக்கிரமிழந்து தவிக்கிறது
கருணைகொண்ட மரக்கிளைகள்
தன் கந்தல் நிழலின் வெயில் எரிப்பை
ஈடு செய்ய விசிறுகின்றன
வீசிய காற்று
விலா மணலை உலர்த்தி உதிர்க்கிறது
அதேவேளை
உடம்பின் இன்னொரு விலாவை அழுத்துகிறது
உயிருடன் அவனை விழுங்க இயலாத பூமி
ஒட்டியிருக்கிற மணல்
பூமியைப் பிரிந்ததால்
தன் உக்கிரமிழந்து தவிக்கிறது
கருணைகொண்ட மரக்கிளைகள்
தன் கந்தல் நிழலின் வெயில் எரிப்பை
ஈடு செய்ய விசிறுகின்றன
வீசிய காற்று
விலா மணலை உலர்த்தி உதிர்க்கிறது
அதேவேளை
உடம்பின் இன்னொரு விலாவை அழுத்துகிறது
உயிருடன் அவனை விழுங்க இயலாத பூமி
மரத்தடி.காம்(maraththadi.com) –
கவிஞர் தேவதேவன்:கவிஞர் பற்றி:கவிஞர் தேவதேவன் அவர்கள் 05/05/1948 இல் பிறந்தார். இயற்பெயர் : பிச்சுமணி கைவல்யம், ஆசிரியர் பணி. எழுபதுகளின் துவக்கத்தில் எழுத ஆரம்பித்த இவர் இதுவரை 13 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
1) குளித்துக் கரையேறாத கோபியர்கள் (1976)
2) மின்னற்பொழுதே தூரம் (1981)
3) மாற்றப்படாத வீடு (1984)
4) பூமியை உதறியெழுந்த மேகங்கள் (1990)
5) நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் (1991)
6) சின்னஞ்சிறிய சோகம் (1992)
7) நட்சத்திர மீன் (1994)
8) அந்தரத்திலே ஓர் இருக்கை (1995)
9) நார்சிஸஸ் வனம் (1996)
10) புல்வெளியில் ஒரு கல் (1998)
11) விண்ணளவு பூமி (2000)
12) விரும்பியதெல்லாம் (2002)
13) விடிந்தும் விடியாப் பொழுது (2003)
தேவதேவன் கவிதைகள் குறித்து ந.முருகேச பண்டியன் அவர்கள் எழுதிய “நவீனத்திற்குப் பின் கவிதை/ தேவதேவனை முன்வைத்து” என்ற கட்டுரை காலச்சுவடு இதழில் (டிசம்பர் -1999) வெளியானது. அதே கட்டுரை ந.முருகேச பாண்டியன் பிரதிகளின் ஊடே பயணம் என்ற விமரசனக் கட்டுரைத் தொகுப்பு நூலிலும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்ந்தக் கட்டுரையிலிருந்து சில வரிகள் …
தேவ தேவன் வெறுமனே ‘புல்,மரம்,வீடு என பராக்குப் பார்க்கும் மனிதர் அல்ல. இயற்கையின் விசித்திரங்களுள் பயணித்து ஆழமான புரிதல் மூலம் பெற்ற அனுபவச் செறிவைக் கவிதையாக்குவது அவரது வழமையாகும். கவிஞனுக்கும் தத்துவத்திற்கும் எவ்விதமான தொடர்புமில்லை என முழங்குதலே தத்துவமாகிப் போன சூழலில் கவிதை அப்பழுக்கற்றது; தூய பளிங்கு போன்றது; கள்ளங்கபடமற்ற அப்பாவித்தனமானது; குழந்தைமையானது; கருத்தியலையோ தத்துவத்தையோ சுமப்பதற்கு லாயக்கற்றது என்ற கருத்து தேவதேவனுக்கு உண்டு. சுருங்கக் கூறின் பிரக்ஞையில் ததும்பி வழியும் சொற்கள், மின்னற் பொழுதில் பதிவாகும் காட்சியின் உக்கிரம் கவிஞருக்குக் கவிதையாகிறது.
1. Thinnai – கவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும் – தேவதேவன் கவிதைகள்2. Andhimazhai – News Details: தேவதேவன் – கவிதைத் திருவிழா: “தேவதேவன் கவிதைகளில் மொழிரூபம் கொள்வது உணர்ச்சி மயமான அனுபவங்களின் படைப்புலகம். இங்கு உணர்ச்சிகளின் உத்வேகமே அறிவுத்தளத்துடன் முரண்படுபவற்றைக்கூட சமனப்படுத்துகிறது , அனுபவங்களின் மூலங்களைக் கொண்டு சிருஷ்டிக்கப்படும் புதிய பொருளின் படைப்பும் உருவாகிறது . கூறப்படும் விஷயத்தில் செவ்வியல் பண்பும் , சொல்லப்படும் விதத்தில் நவீன புனைவின் குணமும் இணைந்துகொள்கின்றன.தேவதேவனின் தனித்துவத்திற்கு சொல்லாமல் சொல்லும் இடைவெளி நிறைந்த தன்மையும் பலபரிணாமங்களில் விரியும் குறியீட்டுத் தன்மையும் காரணமாகும் ” என்று காலப்ரதீப் சுப்ரமணியன் தேவதேவன் கவிதைகளைப் பற்றி குறிப்பிடுகிறார்.(‘பூமியை உதறி எழுந்தமேகங்கள் ‘ கவிதைத் தொகுப்பின் முன்னுரை)
தூத்துக்குடியில் ஆசிரியராக பணியாற்றும் தேவதேவன் 05/05/1948 அன்று பிறந்தவர். (இயற்பெயர் : பிச்சுமணி கைவல்யம்)
3. P.K. Sivakumar : பூனை – தேவதேவன்:
பூனை
- தேவதேவன்
முதல் அம்சம்
அதன் மெத்தென்ற ஸ்பரிசம்
குழைவு அடிவயிற்றின்
பீதியூட்டும் உயிர் கதகதப்பு
இருவிழிகள் நட்சத்திரங்கள்
பார்க்கும் பார்வையில்
சிதறிஓடும் இருள் எலிகள்
‘நான்! நான்!”என புலிபோல
நட்டுக்குத்தென வால் தூக்கி நடக்கையில்
உருளும் கோட்டமுள்ள சக்கரமென
புழுப்போல
அதன் வயிறசைதல் காணலாம்
கூர் நகங்களுடன் ஒலியெழுப்பாத
சாமர்த்திய நடை இருந்தும்
‘மியாவ்’என்ற சுயப்பிரலாப குரலால்
தன் இரையை தானே ஓட்டிவிடும்
முட்டாள் ஜென்மம்
நூல்கண்டோடும்
திரைச்சீலைகளின் அசையும் நுனியோடும்
விளையாடும் புத்திதான் எனினும்
பறவைகளை பாய்ந்து கவ்வும் குரூரமும் உண்டு
எலியை குதறுகையில்
பகிரங்கப்படும் அதன் கொடும்பல்லையும்
நக்கி நக்கி பாலருந்துகையில்
தெரியவரும் இளகிய நாக்கையும்
ஒரே மண்டைக்குள் வைத்துவிட்டார் கடவுள்
ஞாபகப்படுத்திப்பாருங்கள்
உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள்
இப்பூனையைக் கண்டு பயந்ததைப்போலவே
சினேகிக்கவும் செய்திருக்கிறீர்களல்லவா?
நன்றி: தேவதேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு: தமிழினி வெளியீடு
கூழாங்கற்கள்இந்தக் கூழாங்கற்கள் கண்டு
வியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்
உன்முகம் என
எவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்
” ஐயோ இதைப் போய் ” என
ஏளனம் செய்து ஏமாற்றத்துள்
என்னைச் சரித்துவிட்டாய்
சொல்லொணாத
அந்த மலைவாசஸ்தலத்தின்
அழகையும் ஆனந்தத்தையும்
சொல்லாதோ
இக்கூழாங்கற்கள் உனக்கும் ?
என எண்ணினேன்
இவற்றின் அழகு
மலைகளிலிருந்து குதித்து
பாறைகளூடே ஓடும் அருவிகளால்
இயற்றப்பட்டது
இவற்றின் யெளவனம்
மலைப்பிரதேசத்தின்
அத்தனைச் செல்வங்களாலும்
பராமரிக்கப்பட்டது
இவற்றின் மெளனம்
கானகத்தின் பாடலை
உற்றுக் கேட்பது
மலைப்பிரதேசம்
தன் ஜீவன் முழுசும் கொண்டு
தன் ரசனை அத்தனையும் கொண்டு படைத்த
ஒரு உன்னத சிருஷ்டி
நிறத்தில் தன் மாமிசத்தையும்
பார்வைக்கு மென்மையையும்
ஸ்பரிசத்துக்கு கடினத் தன்மையும் காட்டி
தவம் மேற் கொண்ட நோக்கமென்ன ? என்றால்
தவம் தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்.
குமட்டிக்கொண்டு வருகிறது
வீதியை அசுத்தப்படுத்திவிட்டு
அந்தக் குற்றவுணர்வே இல்லாமல்
ஜம்மென்று வீற்றிருக்கும் இவ்வீடுகளின்
சுத்தமும் நேர்த்தியும் அழகும் படோடபமும் காண்கையில்யாருமறியா இவ்வைகறை இருளில்
முதல் ஒளியாய்
இவ்வீதியைப் பெருக்கிக் கொண்டிருக்கிறான் ஒருவன்
ஒரு கவிஞன் சொல்கிறான் அவன் வேலை பற்றி :
அவன் விடியலை வரைந்து கொண்டிருக்கிறானாம்
அவன் சொல்லை நாம் நம்பித்தான் ஆக வேண்டுமாம்
ஏனெனில் அவன் கவிஞனாம்
வெதுவெதுப்பேறி வியர்த்து நிற்கும் அவன் உடல்
ஒரு குளிர்காற்றின் அலைபட்டுச் சிரிக்கிறது,
தன் ஆதர்ச மனிதனை எண்ணி
ஆயிரமாண்டுகளாய் மணமாகாது
காத்திருந்த கன்னியொருத்தி
பாய்ந்து போய் அவனைத் தழுவிக்
கொத்திக்கொண்டது போல்
1]மாற்றப்படாத வீடுநெருக்கடியுள் நெர்ந்து அனலும்காற்று
என்ன செய்ய
இந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை
பாதிக்கப்படுபவன் நான் மட்டுமே
சைக்கிளில் போய் வருவேன் வெகுதொலைவு தாண்டி
நகர எல்லையிலிருக்கும் என் ஸ்கூலுக்கு
அதனருகே ஒரு வீடும் கட்டிமுடித்துள்ளேன்
குடிவர மறுக்கின்றனர் என் வீட்டார்
ரிக்ஷா செலவே சம்பளத்தில்பாதியாகிவிடும்
என பயமுறுத்துகிறாள் என் மனைவி
உண்மையும்தான் இதற்காகவேதான்
கல்யாணமான உடனே நச்சரித்தேன் சைக்கிள் ஓட்டப்படி என்று.
அவளுக்கு அவள் ஸ்கூள் பக்கம் ஊருக்குள்ளேயே
அப்பாவுக்கு ஆபீஸ் பக்கம்
[வயதான காலத்தில் பஸ் ஏறி இறங்க வேண்டியதில்லை ]
அம்மாவுக்கு கோயில்பக்கம் மேலும் உறவினர்கள்
[வனத்தில் அலைந்தாலும் இனத்தில் அடையவேண்டாமா ?]
தம்பிதங்கைகளுக்கு அவரவர் ஸ்கூல்கள் பக்கம்
எனவேதான்
இந்தவீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை
என்றாலும்
நான் அங்கே ஓரு வீடுகட்டிமுடித்துள்ளேன் .
2]உதயம்
முன் நடக்கும் பெண்ணணங்கின்
நீலவானக் கொண்டையின் கீழ்
நிலப்பூவே மதுரக்
கழுத்தாய் சரிந்த தோள்வரையாம்
என் கண்கள் மட்டுமே தொடு[ம்]வானில்
கைக்குழந்தைமுகம் ஒன்று சிரிக்கிறது எனக்காக
இவ்வுலகம் எனக்காக
3]தீ
வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்
என் பத்தினி இவள் காயப்போட்ட
சிவந்த சேலைபற்றி
எரிந்துகொண்டிருந்தது வேலி
4]வேலிப்பூக்கள்
வேலிப்படலை
திறந்துபோட்டுவந்து
உட்கார்ந்திருப்பேன்
சுதந்திரமாய்
கன்றுவந்து
பன்னீர்பூமேய்கிற
அழகினைபார்த்துக் கொண்டு
நீ வருவாய்
காலியிளம் வெயிலில்
கன்றாக மேய
குளித்து முடித்த
உன் ஈரச்சேலையை
என் வேலிமீதே காயப்போட
காதல்
வேலிமீறும்
பூவாய் தன்னைத்தான்
சிம்மாசனமேறிக் கொலுவிருக்கும்
அவளுக்கும் அவனுக்கும்
குறுக்கே வந்து
மார்புவரை மறைக்கும்
சவக்கல்வேலிக்குமேலே
பூக்கும் ரோஜாத்தொட்டி
கைகள் கண்டால்
முட்களுடன்
5]ஆண் பெண்
ஒரே படுக்கையில்
உடன் படுக்கை கொண்டு
நாம் ஒருவரை ஒருவர்
இழுத்து அணைத்துக் கொள்வதன்
பொருள் என்ன ?
ஆண் பெண் என பிரிந்த
இரட்டைத்தன்மையை மறந்து
இணைய வேட்கும் ஆவேசம்
குழந்தைபசி விழித்து அழ
முலையுடன்
பெண் என நாமம் ஏற்று
என்னை பிரிந்து செல்லும்
ஒருமுனை புரிகிறது
மற்றொரு முனையில்
தனித்து விடப்பட்ட
என் பிரிவின் நோக்கமென்ன ?
சிசு பேணும் முலையவளே
மீண்டும் மீண்டும் வந்து
என்னை ஆலிங்கனிக்கும்
உன்னை விலக்கி
என்னை
தனித்துத் தியானிக்கவைக்கும்
உயிரிீன் நோக்கம்
தனித்து தியானித்திருந்தது
6]மணமாயிற்று
தாழ்பாளிட்ட கதவு திறந்து
திரைச்சீலை
மணிபர்ஸில் வந்து உட்கார்ந்துகொண்டது
மனைவியின் புகைப்படம்
படிப்பறை படுக்கையறையாயிற்று
இவனை சங்கிலியின் ஒருகண்ணியாக்கிவிட
சதி நடக்கும் இடமாயிற்று அது
விடுதலை நோக்கி வாய்திறந்த கதவுகள்
படுக்கையை காவல்காக்கும்
ஊமைகளாகி விட்டன
இடைமறிக்கப்பட்டோ
இடை தளர்ந்தோ
இடை புகுந்ததுதைந்திரிய வீழ்ச்சி
வீழ்ச்சியின் கருவில்
உதித்தது
இன்னொரு முயற்சிக்கு ஓர் மனித உரு
வீழ்ச்சியிலும் முயற்சித்தொடரிலுமே
ஜீவித்துவரும் மனிதகுலம்
ஆழ்ந்து உறங்குகிறது இவனருகே
அவளாக
7]சீட்டாட்டம்
இடையறாத இயக்கத்தின் மடியில்
[உண்பதற்கும் கழிப்பதற்கும் மட்டுமே
இடம் பெயர்ந்தோம் ]
இரவு பகலற்ற விழிப்பில்
ஆறு இதயங்களுக்கிடையே
ஓர் உரையாடல்
அகாலத்திலிருந்து காலத்துக்கு
சீட்டுகளை இறக்கினோம்
காலமோ விலகி எங்கள் விளையாட்டை
கவனித்துக் கொண்டிருந்தது
காபி போட்டுதந்தது
சோறு சாப்பிட அநை¢த்தது
ஆக எங்கள் சீட்டுக்கள் விழுந்தது
வெறுமையின் மீது
காலாதீத பிரமிப்புடன் சீட்டுக்கள்
எங்கள் சொற்களாயின
எனினும் வெல்ல வெல்ல என துடித்தன
ஒவ்வொருவர் கைகளுக்குமாய்
அவை கழன்று விழுந்தவுடன்
எனினும்
என்னை வெல்லு என்று
தோற்று கலையவே துடித்தன.
ஒவ்வொருவரிடமிருந்தும்
அவை கழன்று விழுந்தவுடன்
அப்போது இப்போது என்று
சுட்டமுடியாத ஒருபோது
என்றோ புதைந்து
துயில் கொண்டிருந்த ஒரு விதை
திடேரென்று வளர்ந்து
ஒரு மலர் காம்பை நீட்டியது
அங்கே
சீட்டாடும் அறுவர்
ஆறு இதழ்கள் உடைய ஒரு மலர்.
8]சந்திப்பு
என்னதான் ஆனாலும்
நீ ஒரு சுயம்பு
நான் ஒரு சுயம்பு
உன்போக்கில் நீ
என் போக்கில் நான்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இருபுள்ளிகள்
நம் சந்திப்பு அதாவது
புரிந்துகொள்ளல் அன்பு முதலானவை
எங்கு எப்போது எவ்விதம் கிட்டும் ?
சம எடையுள்ள இரண்டுக்கும்
சம அந்தஸ்து அளிக்கும் நீதியுணர்வில்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இரண்டு புள்ளிகளுக்கு மத்தியில்
தன் செம்மத்திக்காய்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும் புள்ளி
9 ] குடும்பம்
சமூகம் வழங்கும் செளகரியங்களும் குரூரமுமாய்
எனது தந்தை இருந்தார்
மனிதன் வழங்கும் அன்பும் கருணையுமாய்
எனது தாயும் இருந்தார்கள்
எனது தந்தைக்கோர் பெரும் பேர் உண்டு
நியாயவான் நாட்டுக்குழைப்பவன் நல்லவன் என்றெல்லாம்
எனது தாய்க்கும் பேர் உண்டு
பாவம் பைத்தியக்காரி ஒன்றுமறியாதவள்
இத்தோடு இந்தப் புவி முழுக்க வினியோகிக்க
போதுமான பெருந்தன்மை எனும் சரக்கு
எங்கள் வீட்டில் இருந்ததென்னவோ
மறுக்க முடியாத உண்மை
என் தாயிடம் நான் கண்டிருந்தேன்
என் தந்தையின் மூர்க்கங்களை எல்லாம்
எப்போதும் மன்ன்னித்து நிற்பதுபோன்ற ஒரு பெருந்தன்மையை
எனது தந்தையிடம் கண்டிருந்தேன்
எனது தாயின் அறிவீனங்களை எல்லாம்
எப்போதும் சகித்துக் கொண்டு முறுவலிப்பதுபோன்ற
ஒரு பெருந்தன்மையை
ஒருநாள் -இல்லை திடார் திடாரென்று-
தந்தை உதைத்தார் தாயின்மீது எகிறி
தாய் சபித்தாள் தந்தை மீது கதறி
நான் முழித்தேன் பார்வையாளனாய்
யார் நிகழ்த்துகிறார் இந்த நாடகத்தை என
நான் கேட்டேன் எனக்குள் நெளிபவனிடம்
தற்செயலாய் ஒருநாள் சந்தித்தேன்
அந்த நாடக இயக்குநரை
என்னைத்தான் தேடிக் கொண்டிருந்தாராம் அவர்
தன் நாடகத்துக்கு இரு பாடல்களை இயற்றித் தரணுமாம்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவுதற்கோர் டூயட் பாட்டும்
அன்னவர் கீரியும் பாம்புமாயிருக்கையில்
ஒலிப்பதற்கோர் பின்னணிப்பாட்டும்
‘ ‘ கவனம் இப்பாடல்களின் பொருளை
உம் நடிகர்கள் புரிந்துகொண்டால்
உம் நாடகம் அம்பேல் ‘
என்ற எச்சரிக்கையுடன் வழங்கினேன்
எனது இரு பாடல்களை அவரிடம்.
10 ] தொடுதல்
ஒளியின் சிறகுகள் உதைத்து வெளிப்படுகையில்
தெறித்து அறுகிறது தொப்புள் கொடி
தேவதைகளின்கண்களின் மின்னுகின்றன
உடலெனப்படுவதன் கன்னிமையும்
உளமெனப்படுவதன் குழந்தைமையும்
உயிரெனப்படுவதன் ஆனந்தமும்
அனாதியிலிருந்து
ஓடிவரும் குருதி துறுதுறுக்கும்
விரல் தொட்டு
‘அணைகிறது ஒளி ‘
எனப் பதறாதே
விரல் தொடுகையில்
கரியும் சிறகுகளின் வெப்பத்தில்
பெறுகின்றன
கன்னிமை தாய்மையை
குழந்தைமை அறிவை
ஆனந்தம் துக்கத்தை
பதறாதே பொறு விரலை எடுக்காதே
அந்த ஒளி உன் விரல் வழியாக புகுந்து
உன்னுள் இயற்றப்படும் வரை பொறு
அப்புறம் கைவந்துவிடும் அந்தக்கலை
பாதம் பதிக்காமல் உலவுதற்கும்
கைகள் விரியாமல் அணைப்பதற்கும்
விரல்களில்லாமல் தொடுவதற்கும்
இதழ்பதிக்காமல் முத்தமிடுவதற்கும்
சொற்களில்லாமல் பேசுவதற்கும்
இல்லாமலே இருப்பதற்குமான கலை .
ஆற்றோரப் பாறைகளின்மேல்
ஆற்றோரப் பாறைகளின்மேல்
அமர்ந்திருக்கும்
இக் கல் மண்டபங்கள்தாம்
எத்தனை அழகு!
எத்தனை எளிமை!
எத்தனை உறுதி!
எத்தனை தூய்மை!
பூஜை வேண்டாமல்
விக்ரகங்கள் வேண்டாமல்
குழந்தைகள் துளைத்து
கும்மாளாமிட்டுக் கொண்டிருக்கும்
இந்த ஆற்றினைப் பார்த்துக்கொண்டேயிருப்பதற்கோ
அமர்ந்துவிட்டன இக் கல் மண்டபங்கள்
இங்கே நிரந்தரமாய்?
சுற்றுச் சுவர்களில்லாத
அதன் உள்வெளிகளில்
‘உள்ளொன்றும் புறமொன்றுமி’னால்
உருவாகும் துயரேதுமின்றிச்
சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்தினைக்
கண்டு நின்றனரோ புத்தர்?
***** ***** *****
காவல் நிலையம்
விலங்கோடு விலங்காய்க்
குடிகொண்டிருக்கும் வன்முறை
எங்கிருந்து வந்ததென்று
யாருக்காவது தெரியுமா?
தெரியும்.
கையிலகப்பட்ட கைதிமீது
காவலன் ஒருவனிடன்
கண்மண் தெரியாமல் வெளிப்படும்
வன்முறை
எங்கிருந்து வந்ததென்று
யாருக்காவது தெரியுமா?
தெரியும்:
பல்லாண்டுகளாய்
இப் புவியெங்கும்
அன்பு வழுவி
அறம்பிழைத்த காவல்தெய்வத்தின்
மனச் சிதைவிலிருந்து கிளம்பியது.
பார்வையற்ற விழிக்குழிகளிலிருந்து
பீரிட்டுக் கொட்டும் எரிமலைக் குழம்பு.
***** ***** *****
கண்டதும் விண்டதும்
மலையுச்சியேறியவன்
தான் கண்டு கொண்டதை
ஒரு கோயிலென வடித்துவிட்டுக்
கீழிறங்கினான்.
கோயில் சென்றவன்
உதட்டு பிதுக்கலுடன்
கைவிரித்தபடி
கீழிறங்கினான்.
கீழே
ஒரு புல்
அய்யோ,அது
காற்றிலா அப்படித் துடிதுடிக்கிறது?
ஒளியிலா அப்படி மினுமினுக்கிறது?
அங்கே
தலைப்பாகையும்
அரையாடையுமாய்ச்
சுள்ளி விறகு சேகரித்துச்
செல்லும் ஒரு மனிதனை
காதலுடன் கவலையுடனும்
கண்டு கொண்டமையோ அது?
விண்டுரைக்க முடியாத
மெய்மையின் சொற்கள் தாமோ
இந்த மவுனப் பிரமாண்டமும்
பேரியற்கையும்
இந்த மனிதனும்?
***** ***** *****
தாய்வீடு
பாதுகாப்பையே தேடுபவர்கள்
பாதுகாப்பை அடைவதேயில்லை.
பொருளையே தேடுபவர்கள்
அன்பை அடைவதேயில்லை.
இன்பத்தையே விழைபவர்கள்
நிறைவை அடைவதேயில்லை.
ராணுவத்திற்கும் கோரிக்கைகளுக்கும்
பெருஞ்செலவுபுரியும் உலகிலன்றோ
நாம் வாழ்கிறோம்.
நல்லாசனமிட்டபடி
கையில் சீப்புடன்
தன் மகள் சகுந்தலாவின்
தலை ஆய்ந்துகொண்டிருக்கிறாள்
அம்மா.
சிக்கலில்லாத கூந்தலில்
வெகு அமைதியுடன் இழைகிறது சீப்பு.
தாங்கொணாத
ஒரு துயர்க் கதைக்குப் பின்தான்
திடமான ஒரு முடிவுடன்
பேராற்றங்கரையின்
தருநிழல்மீதமர்ந்திருக்கும்
தாய்வீடு திரும்பிவிட்டிருக்கிறாள் சகுந்தலா.
***** ***** *****
தீராப் பெருந் துயர்களின்
முளை எட்டிப் பார்க்கும்
விஷ வித்துக்களையா
கண்டு கொண்டாள் ,சாந்தா,
வேகம் பொறி பரக்க
விளையாட்டுத் திடல் அதிர
ஒருவரை ஒருவர்
முந்தி வந்து கொண்டிருக்கும்
தத்தம் பிள்ளைகளை
அணி மனிதர்களை
ஊக்குவித்துக்கொண்டிருக்கும்
உற்சாக ஆரவாரத்திற்கு நடுவே?
“என் மனதைக் கவிதைகளில் மொழி பெயர்க்கிறேன்”
-கவிஞர் தேவதேவன்
சந்திப்பு: வே.சாவித்திரி
நன்றி: அம்பலம்
மனிதன் தன்னைத்தானே அழகு பார்த்துக் கொள்ளாமல் தன்னைத்தானே கம்பீரப்படுத்திக் கொள்ளாமல் நல்ல கம்பீரமான சமுதாயத்தை உருவாக்கிவிட முடியுமா? ‘தான்’ என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை உங்களுக்கும் உள்ளது. நானும் நீங்களும் போட்டி போடும்போது அது ஓர் உள்ளார்ந்த விஷயமாகிறது.
நார்சிசஸ்வனம் எனும் கவிதை நூலுக்கு இவ்வருட ‘சிற்பி இலக்கிய விருது பெற்றவர் கவிஞர் தேவதேவன். தூத்துக்குடி பள்ளி ஒன்றில் ஆசிரியர். பத்துக் கவிதை நூல்களுக்கு சொந்தக்காரர். இந்த நூற்றாண்டின் இணையற்ற சிறுகதைகள் வரிசையில் தொகுக்கப்பட்ட கதைத் தொகுப்பு நூலில் இவருடைய சிறுகதையும் உண்டு. இயற்கை அழகு சார்ந்த விஷயங்களை தத்துவார்த்த ரீதியில் நுட்பமாய் மொழி இழைகளைப் பின்னிப்பின்னி கவிமாலை தொடுத்து தமிழ் அன்னைக்கு சார்த்தும் அவருடன் ஒரு நேர்காணல்.
தங்களின் இளமைக் காலம் குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்?
ரொம்பவும் வறுமையும் அறியாமையும் உள்ள குடும்பத்தில் பிறந்தேன். இயல்பிலேயே துக்கமுள்ள மனுசனாகவே வாழ்ந்து வந்திருக்கிறேன். இசை, நடனம், ஓவியம் ஆகியவற்றில் இளம் வயதிலிருந்தே நிறைய ஆர்வம். அதில் ஒன்றில் சிறந்தவனாக விளங்க பிறந்த சூழலும், வறுமையும் உதவவில்லை. ரொம்ப சின்னவயதில் படிக்கத் தெரியாத காலத்திலேயே அப்பா மூலமாக-நிறைய புத்தகங்கள் படிக்கப்பட்டு காது வழியே கிரஹித்து முடித்திருந்தேன். மனம் அப்போதிருந்தே ஏதோ உயர்ந்த ஒன்றை நாடி நாடி வர சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடிந்தது. பனிரெண்டு வயதிலேயே நிறைய கவிதைகள் எழுதிப் பார்த்திருக்கிறேன். தனிமையும் துக்கமும் இருக்கிற காலத்தில் அதைச் சொல்ல ஒரு மீடியாவாகக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்தேன். காலப்போக்கில் அது கொஞ்சம் கொஞ்சமாக எனக்கானவையாக ஆயின.
‘துக்கம், துக்கம் என்கிறீர்களே அது எப்படிப்பட்டது? அது உங்களுக்கானதா? இச்சமுதாயத்திற்கானதா?
அது இனம்புரியாமல் ‘மிஸ்டிக்’ ஆகவே இருந்து வருகிறது. என் கவிதைகள் எல்லாம் அவற்றை சொல்வதற்கான முயற்சிகள். எந்த வகையில் அதைச் சொன்னாலும் அத்துக்கம் அதற்குள் அடங்காத விஷயமாகத்தான் உள்ளது. அதனால் இதுதான் இதற்குக் காரணம் என்று என்னாலேயே கற்பிதம் செய்ய முடிவதில்லை. என் கவிதைகள் எல்லாம் படித்து-வெவ்வேறு தளங்களில் என் துக்கத்தைக் கிரஹிக்கும் வாசகனால் அதைக் கண்டுபிடித்து விட முடியும்.
இசை, ஓவியம், நடனத்தில் ஆர்வம் வந்தது எப்படி?
தூத்துக்குடியில் ரொம்ப காலம் முன்பிருந்தே ‘ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப், ஃபோர்ட் ட்ரஸ்ட்’ போன்ற அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டு விழாவின்போதும் பெரிய அளவில் இசை நடன நிகழ்ச்சிகள் நடத்தும். அப்போது பார்வையாளனாக அமர்ந்து இசை, நடனம் கற்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டு அதில் முழுமையாக ஈடுபட முயற்சி செய்தேன். முடியவில்லை. பிறகு பெயிண்டிங்ஸில் ரொம்ப ஈடுபாடு வர அதற்கும் சரியான சூழல் இடம் கொடுக்கவில்லை. பெயிண்டிங்கில் பெரிய பயிற்சி பெற்று வரைந்தாலும் வரைவதற்கு கேன்வாஸ் செய்வது, பணச்செலவு செய்து அதற்கான பொருட்கள் வாங்குவது என்பதெல்லாம் எனக்கு இயலாத காரியம். அதனாலேயே என்னுள் உள்ளூர ஊறும் விஷயத்தை கவிதையாக்கப் புறப்பட்டேன். ஒரு ‘ஒன் சைடு’ தாளில் கூட கவிதை எழுதி விட முடிந்தது பிடித்துப் போனது. ஆரம்ப காலத்தில் நான் தேர்ந்தெடுத்த கவிதைகள் எல்லாம் ‘பெயிண்டிங்’ செய்ய நினைத்த படங்களே!
உங்கள் கவிதைகளில் கலையோட்டமும், கதையோட்டமும், கூடவே அபரிமித பன்மொழிச் செறிவும் தெரிகிறது. அதற்குள் ஏதோ இனம் புரியா சமூகத் தன்மைகளை பொதித்து வைத்துள்ளதாகவும் ஒரு மாயத் தோற்றம். உங்கள் கவி வரிகளில் அப்படியென்ன உள்நோக்கு வைத்துள்ளீர்கள்?
என் வாழ்க்கை அனுபவமே கவிதைக்கு நிகரானது. என் நிமிஷங்கள் எல்லாம் கவித்துவமாக இருக்கிறது. லௌகீக அளவில் இது மிக ஆபத்தானது எனும் எண்ணம்தான் உடன் இருப்பவர்களுக்கு ஏற்படும். ஏற்படுகிறது. அதில் ரொம்பவும் உயிர்த்துடிப்போடு வாழ்கிற வாழ்க்கையும் இருக்கிறது. அதுதான் உண்மையான சந்தோஷம். அதை என் கவித்துவ வாசகர்கள் புரிந்தும் கொள்கிறார்கள். எந்தவிதமான உள்நோக்கமும் என் கவிதைகளுக்குள் இல்லையென்பதே என்னளவில் உண்மை. அதற்கு நிகராக அந்தக் கவிதைகளுக்கு நிகராக இன்னொரு பீடம் இல்லை என்பதே என் அபிப்ராயம். இங்கே நீங்கள் நீங்களாக இருப்பதை விட வேறென்ன பதவியை சுகமாய் அனுபவித்து விட முடியும்? அதைச் சொல்லுவதே என் கவிதைகள் எனலாம்.
‘நார்சிசஸ்வனம்’ உத்தியும் உருவாக்கமும் அமைந்தது எப்படி? அதைப்பற்றியதான விளக்கத்தைக் கொஞ்சம் எங்கள் வாசகர்களுக்குச் சொல்லுங்கள்?
உங்களுக்கே தெரியும் நார்சிசஸ் என்பது தன்னைத்தானே அழகு பார்த்து தான்தான் பெரிய அழகன் என்பதை நினைக்கும் அழகிய சொல் என்று. அது ஒரு மோசமான செயலாகத்தான் பல்வகை நிலைகளிலும் குறிக்கப்பட்டு வந்துள்ளது. கவிஞன் என்பவன் வாழ்க்கையை உணர்ந்தவன்தானா என ஒரு குரோதம் அங்கங்கே ஏற்பட்டும் உள்ளது. ஆனால் அதை வெளிப்படுத்துவதற்குத் தகுதியான ஒரு ‘மெட்டாஃபர்’ வாழ்க்கையிலோ, கதையிலோ, இதே கவிதையிலோ கிடைக்கிறபோது மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்.
நான் என் கவிதைகளில் தனிமனிதனுடைய அழகு-ஒரு மனிதன் தான் மனிதனாக இருப்பதுதான் ‘greatest beauty’-அதுதான் தனிமனிதத்துவம் என்கிறேன். அதைத் தாக்குவதற்கான கருவியாகத்தான் ‘இவர்களெல்லாம் நார்சிஸ்ட்’ என்கிற கருத்தைப் பிரயோகிக்கிறார்கள். என்னைப் பொறுத்த அளவில் இந்தக் கருத்துத் தவறானது. ஏனென்றால் தனிமனிதன் என்ற அளவில் நான் உயர்ந்திருக்கிறேன். ‘நார்சிசஸ்’ எனும் பிரயோகம் இங்கே தவறாகப் பயன்படுவதாக குறைபாடாகத் தெரிந்தது. இதனால் தனிமனிதன் என்பவன் சமூகத்திற்கு எதிரானவன் என்கிற ‘concept’ உருவாகியிருக்கும். இதுவும் தவறானது. தனக்குத் தானே அன்பும், பண்பும், மதிப்பும், மரியாதையும் உள்ளவன்தான் சமூகத்தில் சிறந்த மனிதனாகவும் இருப்பான்; மற்றவரையும் மதித்து நடப்பான். ‘man’ என்பது ஒரு உயர்ந்த ‘ஃபினாமினா.’ எல்லாவற்றுக்கும் அதில்தான் மருந்தும், மருத்துவமும் உள்ளது என்பது என் கருத்து.
அப்போதுதான் ‘நார்சிசஸ்வனம்’ க்ரீக் மித்தாலஜியில் ஒரு புத்தகம் படித்து வந்தபோது அதில் வந்த ‘நார்சிசஸ்’ பற்றின கதை எனக்குள் ஒரு தாக்கத்தை மூட்டியது. நான் நினைத்து சொல்ல வேண்டிய விஷயமெல்லாம் அக்கதை மூலமாகச் சொல்லலாம் எனத் தோன்றியது. அக்கதை இக்கவிதைக்கு ஒரு ‘இன்ட்ரபிரடேஷன்.’ அது வேறு; என் கவிதை வேறு!
அப்படியென்றால் கவிஞன் என்பவன் தன்னைத்தான் அழகு பார்த்துக் கொள்பவன் என்கிற கருத்தையே நீங்களும் வலியுறுத்தினது போல்தானே உள்ளது?
அப்படி இல்லை என்பதுதான் என் நார்சிசஸ். தான் என்பது மனிதன். மனிதன் தன்னைத்தானே அழகு பார்த்துக் கொள்ளாமல் தன்னைத்தானே கம்பீரப்படுத்திக் கொள்ளாமல் நல்ல கம்பீரமான சமுதாயத்தை உருவாக்கிவிட முடியுமா? ‘தான்’ என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை உங்களுக்கும் உள்ளது. நானும் நீங்களும் போட்டி போடும்போது அது ஓர் உள்ளார்ந்த விஷயமாகிறது. அப்போது உங்களுக்குள் இருப்பதும் நான்தான் என்றாகிறது. ‘நார்சிசஸ்’ என்பது புற அழகு சார்ந்த விஷயமாக ‘மித்’தில் இருக்கிறது. என் கவிதையில் அவனை அக அழகு சார்ந்த உயர்ந்த மனிதனாக முடிவான மனிதன் தன்னைத் தானே உணருகிற ஆளாக ஆக்கியுள்ளேன்.
சூழல் குறித்த நிறைந்த அக்கறையுடன் மரம், காற்று, நீர்நிலைகள், பறவைகள் என இயற்கை சார்ந்த விஷயங்களுக்கே தங்கள் கவித்துவம் முக்கியத்துவம் தருகிறதே. என்ன காரணம்?
நான் பிறந்ததிலிருந்தே இயற்கை எனக்கொரு புகலிடம் தந்து வந்துள்ளது. அது சார்ந்து மனவெறுமையையும், மனவளத்தையும் குறிக்கிறார்போல்தான் கவிதைகள் எழுதி வந்திருக்கிறேன். மனவெறுமை, மனவறுமை சொல்லக் கூடிய விஷயமாக இருப்பதனால் மனிதனுக்குள் மனவளத்தை இயற்கை சொல்கிற மாதிரியும், இயற்கை கெடுவதனால் மனவளமும் கெடுப்பது போலவும் சொல்வது என் இயல்பாக ஆகியுள்ளது. நான் எழுதினதில் ‘அகலி’ என்றொரு காவியம். அது ‘சுற்றுச் சூழல்’ பற்றின பிரமாதமான புத்தகம் என்கிறார்கள். நான் ஏதோ சூழல் குறித்து எழுத வேண்டும் என முடிவு செய்துகொண்டு எழுதினதாகவும் சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. அதில் உள்ள விஷயம் எனக்குள் ‘எழுபதுகளிலேயே’ இருந்தவை. மனதில் குறிப்பாக எழுதினதையே பின்னாளில் விரிவாக எழுதினேன். எழுபதில் ‘ஓசோன்’ பிரச்னையே வரவில்லை. இயல்பிலேயே எனக்கு இது அமைந்துவிட்டது. எனக்கு இதில் பெருமையில்லை என்றாலும் கவலைப்படுவதில்லை. ‘ஒரு மரத்தைக் கூட காண முடியவில்லை’ என நான் எழுதுகிறேன் என்றால் ‘நிற்க நிழல் இல்லையே’ என்கிற என் ஏக்கத்தின் வெளிப்பாடு அது. அதனை வைத்தே நான் சூழலில் ஆர்வம் காட்டும் கவிஞன் என முத்திரை குத்த விளைவது பொருத்தமானதும் சரியானதும் அல்ல.
எல்லாம் சரி. எந்தக் கவிஞர்களின் கவிதைகள் உங்களை இப்படியொரு கவிஞராக உருவாக்கம் கொள்ளச் செய்தன? நீங்கள் வடிக்கும் கவி வரிகள் அடிக்கடி தாகூரையே நினைவுபடுத்துகின்றனவே?
உலகம் மெச்சுகிற கவிஞர்களின் கவிதைகளையெல்லாம் படித்தாக வேண்டும் என்கிற தாகம் எனக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. அப்படி என்னை ஈர்த்த கவிஞர்களில் முதலாவதாய் வருபவர் தாகூர். கூடவே ஜேம்ஸ் இல்லியட். ஆங்கிலத்தில் அகடாமிக்கல் அளவில் பிரபலமாகவுள்ள ‘எல்லோரும் படித்தே ஆக வேண்டும்’ எனச் சொல்லப்படுகிற கவிஞர்களின் கவிதைகளையெல்லாம் படித்த பிறகுதான் நானும் ஒரு கவிஞன்தான் என்கிற உறுதி எனக்குக் கிடைத்தது. ஆனால் அவர்களே என் கவிதைகளுக்கு ஆதர்ஷ புருஷர்களல்ல. தாகூர், அல்லது மேலை நாட்டுக் கவிஞர்களின் பாதிப்பு கூட என் கவிதைகளில் இல்லை. என் மொழி தனித்துவம் மிக்கது. தாகூரோ, பெரிய விட்மேனனோ, எலியட்டோ அவர்களுக்கு வேறோர் உலகம் உண்டு. அவர்களின் சொந்த உலகத்தின் மூலமாக அவர்கள் சொல்லுகிற சாராம்சம் என்னுடன் ஒத்துப்போகும். அதனாலேயே அவர்களைப் போன்ற ‘கவிஞன்’ நானும் என உணர்கிறேன். ஆரம்பத்திலும் சரி, இப்போதும் சரி என் கவிதைகள் மரங்களின் மூலமாகப் பேசுகின்றன. யாருமே இப்படிப் பார்த்தது கிடையாது. வாழ்க்கையை வாழ்ந்து என் மொழியையும், ஆழ்ந்த அனுபவத்தையும் பதிவு செய்கிறேன். அவர்களின் பாதிப்பு எனக்கிருந்தால் அவர்களின் மொழியைத்தானே கையாண்டிருக்க முடியும்? அப்படி ஒரு பாதிப்பினால் எழுதுபவர்கள் ‘டயர்டு’ ஆகி காணாமல் போய் விடுவர். இங்கே தாகூர் சொல்லாத பல விஷயங்களை நான் செய்திருக்கிறேன். அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
ஏற்கனவே ஒரு ‘பெரும் தமிழ்க் கவிஞர்’ கொடுத்த பரிசைப் பெற்றுக் கொள்ளாத நீங்கள், இப்போது சிற்பி விருது மட்டும் மனமுவந்து பெறக் காரணம்?
சிற்பி அறக்கட்டளைக்கு ஒரு ‘சின்சியாரிட்டியும்’ ‘கோட்பாடும்’ உள்ளது. இதனை ஆரம்பம் முதலே உணர்ந்து வந்துள்ளேன். அப்துல் ரகுமானுக்குக் கொடுத்தார்கள். பிறகு பழமலய்க்குக் கொடுத்தார்கள். அவர்களின் கவிதைகளின் மேல் எனக்குத் தனிப்பட்ட அளவில் விமர்சனம் உண்டேயொழிய விருது கொடுத்தவர்களின் தேர்வுக் கூர்மையை நான் மதிக்கிறேன். இத்துடன் நான் முன்பே மறுதலித்த கவிப்பரிசை தயவுசெய்து இணைத்துப் பேசாதீர்கள். அதைப்பற்றிப் பேசவும் எனக்கு விருப்பமில்லை.
உங்களுக்கு கவிதைகளின் மூலம் எது நிறைவடைந்துள்ளது? நிறைவாகாதும் உள்ளது?
கவிதை என்பது உயிர்த்துடிப்புடன் வாழ்வதன் வெளிப்பாடு. அதில் நிறைவு, நிறைவில்லை என்பது பிரச்னையில்லை. இப்படித்தான் வாழமுடியும் என எடுத்துக்கொண்டால் அது நிறைவுதான். இப்படியில்லாமல் இருக்கவே இயலாது எனக் குறைப்பட்டு ஏக்கம் கொண்டால் வாழ்க்கையில் அது குறைதான்.
நன்றி: அம்பலம்
1. jeyamohan.in » Blog Archive » தேவதேவனின் வீடு:ஜெயமோகன் எழுதிய ‘ நவீனத்துவத்திற்கு பின் தமிழ் கவிதை: தேவதேவனை முன்வைத்து ‘ என்ற நூலில் இருந்து.
2. The Kavingar Devamagal literary awards – Tamil Poet Devadevan « Tamil News: “தேவமகள் இலக்கிய விருதுக்கு தேர்வான கவிஞர்கள் அறிவிப்பு”
3. என்றால் என்ன: பிடித்த கவிதைகள்:�
சிற்பி இலக்கிய விருது விழா…
நன்றி: அம்பலம்
“சிற்பி அறக்கட்டளை நாவலாசிரியனுக்குப் பரிசு கொடுத்துத்தான் வாழ வேண்டுமா? எத்தனை மாத நாவல்கள்? பத்திரிகைத் தொடர்கதைகள், நூலகங்கள், வார இதழ்கள் எல்லாம் அவர்களுக்கு பட்டுப்பாய் விரித்து வெண்சாமரம் வீசிக் கொழுக்க வைக்கின்றன!”
அவுட்டோர் ஷ§ட்டிங் ஸ்பாட்’ பொள்ளாச்சி, கடந்த வாரம் சனிக்கிழமை மாலை இலக்கிய நகரமாய் மாறியது. மகாத்மா காந்தி மண்டபம் நிறைய பரிச்சயமான-பரிச்சயமற்ற கலை இலக்கியத் தலைகள். கவிஞர் பழமலய்க்கும், கவிஞர் சி.மணிக்கும் கடந்த வருடங்களில் கொடுக்கப்பட்ட ‘சிற்பி’ இலக்கிய விருது இந்த ஆண்டு தேவதேவனின் ‘நார்சிசஸ்வனம்’ என்கிற கவிதைத் தொகுப்புக்கு அளிக்கப்பட்டது. ’2000-ம் ஆண்டில் உலகு பொங்கும் கலைப்படைப்பு ஒன்று தமிழில் உருவாகும்’ என எடுத்த எடுப்பில் பேசிய சிற்பி, மேடையில் வீற்றிருந்த கவிஞர் பாலாவையும், மு.மேத்தாவையும், பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனையும் கவிச் சொற்பொழிவில் அடக்கி நகர்ந்தார். விருது பெறும் கவிஞர் தேவதேவனைப் பற்றி அவர் கூறியது:
”எனக்கு தேவதேவனின் கவிதைகளைப் பற்றி நினைக்கிறபோதெல்லாம் நான் நித்தமும் தொழுகின்ற ராமானுஜரின் நினைவுதான் வருகின்றது. ‘ஆலயப் பிரவேசத்திற்காக’ மேல் கோட்டையிலிருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டு வருகிறேன் என்று சொல்லியபோது துடித்துப் போயினராம் அப்பகுதி மக்கள். அதற்காக அவர் நினைவாக அங்கே ஒரு விக்ரகம் செய்து வைத்து விட்டு வந்தார். அதே போல் தாம் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் ஒரு விக்ரகம். ஸ்ரீரங்கத்தில் ஒரு விக்ரகம். அவை ஒவ்வொன்றும் ‘தமர் உகந்த திருமேனி, தாம் உகந்த திருமேனி, தான் ஆன திருமேனி’ என்று பாடப் பெற்றன. தேவ தேவனுடைய கவிதைகள் ‘தான் ஆன திருமேனியனாகவே’ வளர்ந்து கிளை பரப்பி எனக்குக் காட்சி கொள்கின்றன. இயற்கையொடு அவருக்கிருக்கிற நேசமும் பிணைப்பும் அதனூடேயே ‘தானாக’ மாற்றி விடுகிறது. இயற்கையைப் பாழடிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நாற்சந்தியில் விட்டு நசுக்காமல் அவர் நகர்வதேயில்லை. ‘சிறகு முளைக்கும் முன் கொல்லப்பட்ட பட்டுப் பூச்சிகள் – மாதர் தம் பட்டாடைகள்’ என்று சிறு பூச்சிக்கும் கனிந்துருகும் தானே ஆகிற படைப்புக்களைப் படைக்கிற அவருக்கு விருது கொடுப்பது இந்த விருதுக்கே அரிய பெருமை”.
தலைமையுரையாற்ற வந்த மணிவாசகர் பதிப்பகம் ச.மெய்யப்பனோ தானே விருது பெற்றதுபோல் உணர்ச்சிப் பிழம்பானார். குழந்தை மழலை உதிர்ப்பதுபோல் அவரிடமிருந்து யதார்த்த கானம். ”தேவதேவன் மனைவி அவருடன் வந்திருக்கிறார். அது அவருக்கு அசாத்யப் பாராட்டு. எனக்கு மனைவி வரவில்லை. அதுதான் சொல்றது எதற்கும் ஒரு கொடுப்பினை வேணுமய்யா! ஐயா, கவிஞர் தேவதேவனே உப்பு விளையற பூமியிலிருந்து எழுந்து ஜீவசக்தி கொடுத்திருக்கிறீர்கள். புரிந்தும் புரியாமலும் உழலும் இருண்மை உலகில் பளிச்சென்று அடிக்கும் மின்னலய்யா உங்கள் கவிதைகள். ‘இருள்… இருள்…’ என்று கத்திக் கொண்டிருப்பதில் பலனில்லை. ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வை என்றாரே ஒரு பெரியவர். அதைச் செய்தவர் நீர்தானய்யா!” விருதுக் கவிஞரை அறிமுகப்படுத்த வந்த கவிஞர் பாலா நம் தமிழ்ப் பண்பாடு, இந்தியக் கலாசாரம் முழுமையையும் தம் சொற்பொழிவில் ஏற்றிக் கொண்டார்.
”கல்லும் கல்லும் இருந்தால் அங்கே வெறும் கல்தான் இருக்கும். கூடவே மனம் இருந்தால்தான் நாதம் பிறக்கும். மரம், மரத்துடன் இருந்தால் மரங்கள்தானே இருக்கும்? நாதம் அதிலிருந்து கிடைக்கக் கூடவே மனம் வேண்டும். அப்படித்தான் கவிதை என்பதும். நல்ல கவிதைகள் நல்ல மனம் இருந்தாலே நாதமாக மாறும். அப்படிப்பட்ட கவிதைகள்தான் தேவதேவனின் கவிதைகள். மேற்கு நாட்டு கலை-ஓவியம் பார்தோமென்றால் அதில் ‘பிகாஸோ’ எனும் கையெழுத்து இருக்கும். அதே போல் அங்கெல்லாம் கட்டப்பட்ட புகழ்பெற்ற கட்டிடத்திற்கும், கலைச்சிற்பங்களுக்கெல்லாம் கீழே அதனை படைத்தவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும். இது மேற்கத்தியக் கலை. ஆனால் இங்கே மாமல்லபுரத்துக்கும், தஞ்சைப் பெரிய கோவிலுக்கும், சித்தன்ன வாசல் ஓவியங்களுக்கும் கீழே எந்தப் படைப்பாளியின் கையெழுத்து இடப்பட்டிருக்கிறது? எதுவுமே இல்லை. இதுதான் தமிழ் மரபு. இந்தியக் கலை. இது நமக்கு பெருமையளிக்கும் விஷயமும் ஆகும். இது யார் செய்தது? யார் படைத்தது? என்று கேள்வி எழும் போதெல்லாம் ‘தமிழ் செய்தது’ ‘தமிழன் படைத்தது’ என இறுமாப்புக் கொள்வோம். இதுதான் மேற்கத்தியக் கலைகளுக்கும் இந்தியக் கலைகளுக்குமான வித்தியாசம். இது ‘நான்’ என்பதற்கும் ‘நாம்’ என்பதற்குமான யுத்தம். தமிழ்க் கவிதைகளை அடையாளம் பாட்டின ‘வானம்பாடி’ இப்போது தமிழ்க் கவிஞர்களையும் அழைத்து அறிமுகப்படுத்தி கௌரவப்படுத்துவதில் கவிஞர் படையே பெருமிதம் கொள்ள வேண்டும். இங்கே மனிதர்களெல்லாம் மிருகங்களாகி வருவதைக் காண்கிறோம். ஆனால் மனிதர்களெல்லாம் தேவ தேவர்களாக மாறுவதற்கு யோசித்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார் நம் விருதுக் கவிஞர்’. பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் விருதும் கொடுக்கப்பட்டு எத்தனை புகழ்மாலை சூட்டினாலும், தன் யதார்த்த நிலையிலிருந்து துளியும் பிசகிச் சாயாது ஏற்புரை ஆற்றினார் கவிஞர் தேவதேவன்.
”இங்கே கவிஞர்களுக்கு மதிப்பே இருப்பதில்லை. நவீன தமிழ் இலக்கிய விழாக்களில் எங்களூர்ப் பக்கம் ஐம்பது பேர் வந்தாலே அதிகம். அதில் என் வாசகர்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக என் கவிதை நூல்கள் பத்திருபதை விற்பனைக்கு எடுத்துப் போவேன். அதில் ஒன்றிரண்டு விற்றாலே பெரிய ஆச்சர்யம். பிரபஞ்சம் எப்படி ஓர் ஒழுங்கியலில் இயங்குகிறதோ இச்சமூகம் அப்படி மிக ஒழுங்காக வேண்டும் என்பதே என் கவிதை லயம். அது சார்ந்த அழகியலே என் கவிதை. தவறான அழகியலை உடைப்பதும், சரியான அழகியலை உருவாக்குவதும் ஒரு கவிஞனின் வேலை. அதைச் செய்து கொண்டும் இருக்கிறேன்”. எண்ணி ஒரு மணி நேரத்தில் சகல கவிஞர்களும் தம் பேச்சை முடித்துக் கொள்ள கவிஞர் மு.மேத்தா மட்டும் கிடுக்கிப் பிடி போட்டு ஒரு ஒண்ணரை மணி நேரத்திற்கு தம் வாதத்தை அரங்கிற்குள் வைத்து சலசலப்பை ஏற்படுத்தி விட்டார். அப்படியென்ன வாதம் என்கிறீர்களா? வேறொன்றுமில்லை. சிறந்த நாவலுக்கு அடுத்த ஆண்டு முதல் ‘சிற்பி விருது’ வழங்கப்படும் என்று ஓர் அறிவிப்பை சிற்பி வெளியிட்டு விட்டார். மனிதருக்கு நாவல் மீது கோபமோ; நாவலாசிரியர் மீது கோபமோ (?!) எதுவுமேயில்லையாம். பிறகு?
”நானே ஒரு நாவலாசிரியன்தான். நாவலாசிரியர்கள் நிறையப் பேர் எனக்கு நண்பர்களும் கூட. ஆனால் சிற்பி அறக்கட்டளை நாவலாசிரியனுக்குப் பரிசு கொடுத்துத்தான் வாழ வேண்டுமா? எத்தனை மாத நாவல்கள்? பத்திரிகைத் தொடர்கதைகள், நூலகங்கள், வார இதழ்கள் எல்லாம் அவர்களுக்கு பட்டுப்பாய் விரித்து வெண்சாமரம் வீசிக் கொழுக்க வைக்கின்றன! போதாக் குறைக்கு சாகித்ய அகாதமி போன்ற பெரும் விருதுகள் கூட மிகப் பெரும்பாலும் கவிஞனைத் தீண்டத்தகாதவனாகவே நடத்திப் போகும் நிலையில் சிற்பி நாவலுக்குப் பரிசு தரலாமா? முறையா? அடுக்குமா? அப்படிப் பரிசு கொடுப்பதென்றால் இன்னொரு கவிதைத் தொகுப்புக்குக் கொடுங்கள். அல்லது இதே தேவனுக்குப் பரிசைக் கூட்டிக் கொடுத்து அவன் கம்பீரத்தை உயர்த்துங்கள். இல்லாவிட்டால் சிற்பி அவர்களே உறுதியாகச் சொல்லுகிறேன். நிச்சயமாகச் சொல்லுகிறேன். உங்கள் வீட்டின் முன் பெட்டி படுக்கையோடு வந்து உண்ணாவிரதம் இருப்பேன்.”
மனிதர் கடைசி வரை ‘மைக்’கைப் பிடித்த பிடி விடவில்லை. சிற்பி எழுந்து வந்து ‘நாவலுக்கு பரிசளிப்பு அறிவிப்பு வாபஸ் பெறுவதாக அறிவிக்கும் வரை மனிதர் அதுபற்றியே எக்கச் சக்கமாய்ப் பொரிந்து தள்ள இலக்கியக் கூட்டமே சலசலத்துப் போனது.
”மேத்தா சொல்வது நியாயம்தான். அதற்காக இப்படியா உடும்புப் பிடி பிடித்து மனிதர்களை சோதிப்பது?”
”மேடையிலேயே ஒரு பரிசை அறிவித்துவிட்டு, ஒரு தனி மனிதர் உரத்துக் கூச்சலிட்டார் என்பதற்காக அந்த அறிவிப்பையே வாபஸ் பெறுவது என்ன மரபு? என்ன கலாசாரம்? சிற்பி இப்படிச் செய்யலாமா?” – அப்போதே இப்படிப் பல குரல்கள் அங்கங்கே!
-சாவித்திரி.
நன்றி: அம்பலம்
ஒரு வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை
- தேவதேவன்-
அது தன் நாட்களை
ஒருபோதும் சோம்பலில் கழித்ததில்லை.
ஒரு நாளைக்கூட பொழுதுபோக்கு போன்ற
புலன் துய்த்தலில் செலவிட்டதில்லை.
பொருள், புகழ், அதிகாரங்கள் நோக்கிய
வேட்கை உந்தல்களை அது அறியாதது.
எப்போதாவது தன் துணையுடன்
அன்றி எபபோதும் தன் தம்மையையே
அது பாதுகாத்தபடி அலைந்தது.
அதன் உயிர்ப்பும் சிறகடிப்பும்
இயற்கையின் மர்மங்களனைத்தையும் உணர்ந்த வியப்பும்
அதை விளக்கவியலாத படபடப்புமேயாம்.
ஒரு நாள் என் தோட்டத்தின் ஈரத்தரையில்
உதிர்ந்த மலர்போல அது கிடந்தது.
நல்லடக்கம் செய்யும் சுற்றமோ,
மறைவுக்குக் கண்கலங்கும் உறவுகளோ,
சமூகமோ, தேசமோ இன்றி
அது அனாதையாய் மா¢த்திருந்தது.
நெஞ்சுருகும் பார்வையின் முத்தம்
ஒரு கவிதை
இவைதானோ அதன் மொத்த வாழ்க்கையின்
மர்மமான இலட்சியம் ?
இன்று அது நிறைவேறியதையோ,
எளிய உயிர்கள் நூறுகள் கூடி
ஊர்வலமாய் அதை எடுத்துச் செல்ல முயல்வதையோ,
கண்களில்லாத கால்கள்
அதை மிதித்தபடி செல்வதையோ,
ஒரு பெருக்குமாறு அதைக் குப்பபைகளோடு குப்பையாய்
ஒரு மூலைக்கு ஒதுக்கி விடுவதையோ
எதைப்பற்றியும் கவலையுமில்லாமல்
எல்லாவற்றையும் அதுவே ஒதுக்கிவிட்டதாய்
ஈரமான என் தோட்ட நிலத்தில்
செத்துக்கிடந்தது அது.
நன்றி : கனவு காலாண்டிதழ் (எண் 39/40) திருப்பூர்.
மௌனமாய் ஒரு சம்பவம்.
– தேவதேவன்.
கால்களை இடறிற்று ஒரு பறவை பிணம்.
சுற்றிச் சூழ்ந்த விஷப்புகையாய் வானம்.
கலவர முற்ற பறவைகளாய்
திசையெங்கும் குழம்பி அலையும் காற்று
பீதியூட்டுகிறது மரங்களின் அசைவு
மெல்ல நெருங்குகிறது
சலனமற்றிருந்த ஒரு பூதாகாரம்.
விரைத்து போய்
ஆழ ஆழ மூழ்குகிறேன் நான்
முழுக்க முழுக்க நீரால் நிறைந்த
என் தலைமறைவுப் பிரதேசத்திற்குள்.
என் உள்ளங்கை முத்தாய் ஒளிரும் இது என்ன?
வீணாகிப் போகாத என் இலட்சியமோ?
என் துயர்களை ஆற்றத்
தூதாய் வந்த வெறுங் கனவோ?
என்ன பொழுதிது?
மீண்டும் எட்டிப் பார்கிறேன்:
சலனம் கெட்டித்திருக்கும் இவ்வேளையுள்ளும்
காலம் திகட்டாது
கல்லுக்குள் தேரையான
என் உயிர் பாட்டின் வேதனை.
என் நோய் தீரும் வகை எதுவோ?
இரத்தக் கறைபடிந்த சரித்திரமோ நான்?
இயற்கை புறக்கணித்து வளர்ந்த
அதிமேதாவிக் கொழுந்தோ?
அன்பால் ஈர்க்கப்பட்டு
இன்று இம் மலைப்பிரதேசம் வந்து நிற்கிறேன்.
முடிவுறாத காலச் சங்கிலி
தன் கணத்த பெருமூச்சுடன்
கண்ணுக்கு புலனாகாமல் நிற்கிறதோ,
இப்பள்ளத்தாக்கின் மவுனத்திடம்
ஒரு தற்கொலையை வேண்டி?
எதோ ஒன்று
யாருக்கும் தெரியாமல்
மவுனமாய் நடந்து கொண்டிருக்கிறது.
” கல்லெறிபட்டும்
கலங்காது
தேனையே சொரிகிறது
தேன்கூடு”
- தேவதேவன்
கடப்பாரைப்பாம்பு
==============
சடாரென்று பதுங்க
செம்பருத்தி புதருக்குள் நுழையப்போவதுபோல
பார்வையை அறைந்தது
கடப்பாரையா பாம்பா
தன் அருகிலே கிடந்ததை எடுத்து
பாம்பை அடித்தவன்
அந்தக் கருவியை கும்பிட்டுக் கொண்டாடியே
தன் வாணாளாஇ கழிப்பானோ
கடப்பாரைதான் பாம்பாய் மாறி
புதருக்குள் ஒளிந்துகொள்ள விழைகிறதோ
புதருக்குள்ளிருந்து வெளிப்பட்ட பாம்புதான்
கடப்பாரையாய் மாறி தப்பிக்கிறதா
கள்ளச்சிரிப்புடன் ?
வீதி
==
விடிந்தும் விடியா பொழுதொன்றில்
தெரியாமல் ஓர் அக்ரஹார தெருவழியாய்
நுழைந்துவிட்டேன்
வெறுப்பும் பதற்றமும் பகைக்கோபமுமாய்
துயரமும் பதற்றமும் பாசாங்குகளுமாய்
கொதித்த முகங்கள் கண்டு துணுக்குற்றேன்
என் தவறுக்கு நொந்து உந்தி எடுத்தேன்
ஆனால் அதில் பயனில்லை
இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது அவ்வீதி
மேலும் எல்லா வீதிகளிலும்
அதற்கிணையானதும் அது தொடர்பானதுமான
கொந்தளிப்பை உணர்ந்தேன்
தோணித்துடுப்போ
பெருமழையோ
கம்பீர நெடுங்கழி பெருக்குமாறோ
குனிந்து குனிந்து கறைகள் துடைக்கும்
துடைப்பானோ
தூரிகையோ
வாளோ
என்றெல்லாம்
சித்தரிக்க சித்தரிக்க
தீராத உன்னை
காதல்மிகு உறுதியுடன் கைப்பிடித்தேன்
தொனி
=====
இன்றாவது அந்த மனிதனைப்பற்றி
சிந்திக்க தொடங்கினோமே
அதற்காக நம்மைப் பாராட்டிக் கொள்வோம்
நலம் விசாரிக்கையில்
இருக்கம்-யா என்றொலித்த
அவன் குரலை வாசிக்க மதியற்ற நாம்
கவிதைகளின் தொனி குறித்து
விரிவாக ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருந்தோம்
நாற்காலியில் அமர்ந்தபடியோ
வாகனத்தை ஒருநிமிடம் நிறுத்தி
ஒரு கால் ஊன்றி நின்றபடியோ
அல்லது அவன் குழந்தையோ
நாளையைப்பற்றி
கேட்கப்படும்போதெல்லாம்
பிழைத்துக்கிடந்தால் பார்க்கலாம் என்றான் அவன்
அய்யா என்ற இறைஞ்சல் பாதாளத்தில் இருந்து
தோழர் என்ற பாதாளக்கரண்டியை பற்றியபடி
ஹலோ என்றவாறு அவனை சமீபிக்கையில்
மலர்முகமும் நீட்டிய கையும்
அற அத்ர்ச்சிக்குள்ளாகி பொசுங்கும்படி
அசிங்கமான ஓர் உஷார் நிலைக்கு வந்த அந்த மேலாள்
குரூரமாக அவனை கவிடுகையில்
அவன் என்ன ஆனான் ?
அவன் உயிராசைவேகமன்றோ
பக்கச்சுவரில் உடல் சிராய்க்க
தொற்றிக் கொண்டு தவிக்கிறது இன்று
சாதியம் நாறும் ஒரு த்தத்தின் மூலமா
‘எல்லாரும் அமரர் நிலை எய்தும் நன்முறையை ‘
இந்தியா உலகுக்கு அளிக்க போகிறது ?
எந்த தத்துவத்தில் இருந்து பெற்றது
இன்றைய அவனது வலிமையும்
இதய விரிவும் போராட்டமும் அறிவும்
அச்சத்தால் பீடிக்கப்பட்டு அருவருப்பான
அந்த மேலாளுக்கும் சேர்த்தே
விடுதலை வேண்டி நிற்கும் அந்தபேராளுமை ?
கருணையற்ற மனித உலகுக்கு
கருணையின் பாதையைக் காட்டும் பேரருள் ?
[2004 தமிழினி வெளியீடாக வந்துள்ள தேவதேவனின் 'விடிந்தும் விடியா பொழுது ' என்ற நூலில் இருந்து ]
1 ] நான் அவன் மற்றும் ஒரு மலர்
=======================
புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும்
வெளியில்
சின்னஞ்சிறியதும்
தன்னந்தனியனுமான ஓரு சுடராய்
நான் நிற்கையில்
ஒரு சிறு துடுப்போடு
கடலை அழைத்து வந்துகொண்டிருந்தான் அவன்
மான் துள்ளி திரிந்த ஒரு புல்வெளியில்
ஊர்ந்தது ஒற்றையடிப்பாதையெனும் பாம்பு
ஆ என்று துடித்து விழுந்த மான்
புல்வெளியில் ஒரு வடுவாகியது
அங்கே
பூமியில் கால் பரவாது நடக்கும்
அந்த மனிதன் கையில்
ஒரு மலரைப் பார்த்தேன்
மண் விரல்களில் பூத்து
குருதியின் மணத்தை வீசிக் கொண்டிருந்தது அது .
2.மேகம் தவழும் வான்விழியே
=====================
மேகம் தவழும் வான்விழியே
உன் தனிப்பெரும் வியக்தியை
துக்கம் தீண்டியதெங்கனம் ?
எதற்காக இந்தப் பார்வை
வேறு எதற்காக இந்தச் சலனம் ?
அன்பான ஒரு வார்த்தைக்காகவா ?
ஆறுதலான ஒரு ஸ்பரிசத்திற்காகவா ?
மனம்குளிரும் ஒரு பாராட்டுக்காகவா ?
கவனி
உனக்கு கீழே
அவை
ஒரு நதியென ஓடிக்கொண்டிருக்கின்றன .
3. ஒளியின் முகம்
==========
நான் என் கைவிளக்கை
ஏற்றிக் கொண்டதன் காரணம்
என்னை சுற்றியுள்ளவற்றை
நான் கண்டுகொள்வதற்காகவே
என் முகத்தை உனக்குக் காட்டுவதற்காக அல்ல
அல்ல
நீ என் முகத்தை கண்டுகொள்வதற்காகவும்தான்
என்கிறது ஒளி
4. வரைபடங்கள்
==========
வான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண
வரைபடம் எதற்கு ?
வானமோ
இரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது
5. அழைப்பு
======
கடைசி மத்தாப்பும் உதிர்ந்து
மரணம் என்னை சூழ
உதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி
வானம் என்னை அழைக்கிறது
6. தூரிகை
======
வரைந்து முடித்தாயிற்றா ?
சரி
இனிதூரிகையை
நன்றாக கழுவிவிடு
அதன் மிருதுவான தூவிகளுக்கு
சேதம் விளையாதபடி
வெகு மென்மையாய்
வருடிக் கழுவிவிடு
கவனம்
கழுவப்படாத வர்ணங்கள்
தூரிகையை கெடுத்துவிடும்
சுத்தமாய் கழுவிய
உன் தூரிகையை
அதன் தீட்சண்யமான முனை
பூமியில் புரண்டு
பழுதுபட்டு விடாதபடி
எப்போதும் மேல் நோக்கிய
வெளியில் இருக்க
இப்படிப்போட்டுவை
ஒரு குவளையில்
7. அக்கரை இருள்
============
நதி என்னை அழைத்தபோது
நதி நோக்கி இறங்கிய படிக்கட்டுகளில்
நடை விரிப்பாய் விரிந்திருந்தது
பாறையின்மேலிருந்த
என் அறையின் விளக்கொளி
இருண்டிருந்த அக்கரையிலிருந்தும்
என் நெஞ்சைச் சுண்டும் ஒரு குரல் கேட்டேன்
முளைத்த துயரொன்றை
கைநீட்டிப் போக்கிற்று
இக்கரை நின்றிருந்த தோணி
என் பாத ஸ்பரிசம் கண்ட நதி
அக்கரைக்கும் ஓடி சேதி சொல்ல
நதியின் ஸ்பரிசத்தை ஆராதனையாய் ஏற்றவாறு
தோணியை அடைந்தேன்
நட்சத்திரங்கள் நிறைந்த நதியை
என் துடுப்பு கலக்கவும் திடுக்குற்றேன்
அதுசமயம்
நதிநோக்கி இறங்கிய படிக்கட்டுகளிலில்
நடைவிரிப்பாய் விரிந்திருந்த
என் அறையின் விளக்கொளி
கூப்பிடுவது கேட்டது .
8. சூரியமறைவு பிரதேசம்
=================
உனக்கு சந்தோஷம் தருவது எதுவோ
அதுவே உனக்கு சூரியன்
உதாரணமாக ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
ஒரு பப்பாளிப்பழம்
ஒரு ந்ண்பனின் முகம்
ஒரு டம்ளர் தண்ணீர்
இன்னும்
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்
என சொல்லிக் கொண்டே போகலாம்
ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
அப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லை என்றால்
ஒரு பப்பாளிப்பழம்
அன்றைய பொழுதை இனிமையாக்கவில்லையென்றால்
ஒரு நண்பனின் முகம்
உன் முகத்துக்கு ஒளியேற்றவில்லை என்றால்
ஒரு டம்ளர்தண்ணீர்
உன் தாகம் தணிக்கவில்லை என்றால்
ஒரு கண்ணாடி முன்
நீ புன்னகை கொள்ளா இயலவில்லை என்றால்
காகிதத்தில் பொதிந்த கவிதைகளாய்
உனக்கு உன் வாழ்க்கை
காணப்படாவிட்டால்
உணர்ந்துகொள்
‘நீ இருக்குமிடம் சூரிய மறைவு பிரதேசம் ‘
9] தன்னதனி நிலா
==============
தன்னந்தனி நிலா
எல்லாவற்றிலும் எதிரொளிக்கிறது
அதன் அழகு
தன்னதனி நிலா
தன் அழகை தானே ரசிக்கிறது
நீர் நிலைகளில்
தன்னந்தனி நிலா
தன் தனிமை மறக்கிறது
நீர் நிறை கண்களில்
10. மலை
====
மலை உருகி பெருக்கெடுத்த நதி
மடியுமோ நிரந்தரமாய் ?
அவ்வளவு பெரிய கனலை
வெளிப்படுத்த வல்லதோ
ஒரு சிறு சொல் ?
1] பக்த கோடிகள்
———————
பக்த கோடிகள் புடைசூழ
கால்மேல் கால்போட்டு
கடவுள் நான் என்று
டிக் டிக்கிறது
முக்காலிமேல் ஒரு கடிகாரம்
பக்தகோடிகளுக்கு
ஓவர் டைமும் உபரிவருமானமும்
உயர்குடி வாழ்வும்
அருளுகிறார் கடவுள்
கடவுள் மரிப்பதில்லை
ரிப்பேர்தான் ஆவதுண்டு என்கிறது வேதம்
கடவுள் பழுதானால்
காலநோய்கள் பெருத்துவிடுமாகையால்
கடவுள் பழுது நீங்க
நிரந்தர மடங்களும் ம்டாதிபதிகளும்
அவ்வபோது தோன்றும் மகான்களும்
காலநோய் தீர்க்க கல்விமான்களும்
சதா கடவுள் நாமம் மறவாது பாடிக்கொண்டிருக்க
பக்த கோடி மகாஜனங்களும் உண்டே
இந்தக் கூட்டத்தில் போய்
கவிஞனை தேடுவதென்ன மடமை
அதோபார் உழைத்து ஓடாகி
மரணம் பார்த்து நின்றுகொண்டிருக்கும்
ஒரு மாட்டின்மேல்
மெளன அஞ்சலி செய்துகொண்டிருக்கிறது
ஒரு காகம்
நித்யத்துவத்தை நோக்கி அதன் முகம்
2]கடவுளே
————-
ஒரு புதுக்காற்று ஒன்று
அறைக்குள் சுழன்றடித்திருக்கிறது
ஊதுபத்தி பூமாலைகள் திகைக்க
தன் முதுகின் வெட்டவெளியை காட்டியபடி
திரும்பியிருக்கிறார் காலண்டர் தாளிலுள்ள கடவுள்
கோபமா
சுய மறுப்பா ?
காட்டும் புதிய தரிசனமா ?
வரண்டு இருண்டு விறைத்த முகம் ஒன்று
வந்தது நான்கு ஆணிகள்
மற்றும் சுற்றியலுடன்
3] ஒரு பரிசோதனையும் கவலையும்
———————————————-
கவனத்தை ஈர்க்கும் ஒரே நோக்குடன்
குறுக்கும் மறுக்குமாய் அலைந்துகொண்டிருந்தனர்
தேவதைகள்
பூமியை பரிசோதிக்க மனம்கொண்ட கடவுள்
ஒரு மழையை பெய்துவிட்டு
பின்னாலேயே தேவதைகளை அனுப்பிவைத்தார்
தட்டான்களின் வாலில் கல்லைக்கட்டியும்
நீண்ட நூல்களை கட்டியும் கல்சுமக்க வைத்தும்
சிறகுகளை துண்டித்து பறக்கவிட்டும்
இரண்டு தட்டான்களை ஒரு நூலால் இணைத்தும்
அவை திண்டாடுவதை ரசித்துக் கொண்டிருந்தனர்
மனிதக்குழந்தைகள்
கடவுளும் தேவதைகளின் தலைவனும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்
ஆழ்ந்தகவலையுடன்
3] உருமாற்றம்
————-
அந்த அறையில் மூவர் குடியிருந்தனர்
காட்சி -1
சாந்தியும் சந்துஷ்டியும் காட்டும் புன்னகையுடன்
தியானத்தில் அமர்ந்திருந்தார் புத்தர்
முழுநிர்வாணத்தை நோக்கி
அரை நிர்வாணத்துடன்
ராட்டை சுற்றிக் கொண்டிருந்தார் காந்தி
ரத்தம் சொட்ட தன்னைத்தானே
சிலுவையில் அறைந்து கொண்டிருந்தான்
மரிக்கவும் உயிர்த்தெழவும் அறிந்த மேதை
வெளியே இருந்து ஓர் ஓலக்குரல்
உள்ளே புகுந்தது
அரைக்கணம் தாமதித்திருக்குமா ?
புகுந்த வேகத்தில் வெளியே ஓடிற்று
ஆனால் அந்த அரைக்கணத்தில்
அக்குரல் உருமாறியிருந்தது
சாந்தியும் துக்கமும் நிறைந்த ஒரு குரலாய்
காட்சி 2
நான் உள்ளே புகுந்தபோது
ஒரு காபி கிடையாதா என்றார் புத்தர்
தனது இதயத்தை ஒரு யாசகக் குவளையாய்
குலுக்கினார் யேசு
பட்டினிக்குழந்தைகளுடன்
கைவிடப்பட்ட பெண்ணின்
சீரழிந்த புன்னகையைப்போல
ஒரு புன்னகையை வீசிவிட்டு
ராட்டை சுற்றினார் காந்தி
அதீத துக்கத்தால் என் இதயம் வலித்து எழுந்த குரல்
வேகமாய் குதித்தது ஜன்னல் வழியே வெளியே
வெளியே குதித்த குரல் வீதியெல்லாம் அலைந்து
நாற்றமடிக்கும் ஓர் அவலக்குரலாய் மாறியது
4] இந்தத் தொழில்
————————–
கபடமற்றதோர் அன்புடனும்
அற்புதமானதோர் உடன்படிக்கையோடும்
கடவுளும் சாத்தானும்
கைகுலுக்கிக்கொண்டு நிற்பதைக் கண்டேன்.
கடவுள் முதல்போட
சாத்தான் தொழில் செய்ய
கடவுள் கல்லாவில் இருக்க
சாத்தான் வினியோகத்திலிருக்க
அற்புதம் ஒன்றுகண்டேன்
கவிதை எழுதிக் கொண்டிருக்கையில்
அங்கே
என் சிந்தனை ஒன்றைக் கொடுத்து
படிமம் ஒன்று வாங்கிக் கொண்டிருந்தேனா ?
அல்லது
படிமம் ஒன்றைக் கொடுத்து
சிந்தனை ஒன்றை வாங்கிக் கொண்டிருந்தேனா ?
சேச்சே என்ன கேள்விகள் இவை ?
கடவுளும் சாத்தானும் கைகோத்த கோலத்தை
கண்டதற்கு சாட்சியாய் பாடும் என் இதயம்
அக்கறை கொள்ளாது இந்த தொழில்மீது.
5 ] மாண்புமிகு கடவுளைப்பற்றிய ஒரு கட்டுக்கதை
—————————————————————
கடவுளையும் அனுமதிககதபடி
அந்த அறையை சுதந்தரித்திருந்தார்கள் அவனும் அவளும்
ஆனால் செளகரியமான ஒரு சூக்கும உருவுடன்
கடவுள் இருந்தார் அங்கே ஒரு படைப்பாளியின் ஆசையுடன்
ஒரு பெரும் கச்சடாவாக இருந்தது அவர்கள் பாஷை
அவருக்கு அது புரியவில்லை முழித்தார்
என்றாலும் மேதமை மிக்கவரானதனால்
அந்த நாடகத்தின் சாராம்சத்தை அவர் புரிந்துகொண்டார்
அவர்கள் ஆடைகளை களைந்தபோதுதான்
அவர் கண்களில் ஒளிர்ந்தது ஒரு தெளிவு
ஆனால் அவர்கள் விழிகளில் நின்றெரிந்தது
ஓயாத ஒரு புதிர்
அப்புறம் அவர்களைதழுவியது ஒரு வியப்பு
தத்தம் விழிகள் விரல்கள் இதழ்கள் மற்றும் சதையின்
ஒவ்வொரு மயிர்க்கால்களைக் கொண்டும்
துதியும் வியப்பும் பாராட்டும் சீராட்டும் பெற்றது
கடவுளின் படைப்பு
சந்தோஷமும் வெட்கமும் கிள்ள
முகம் திருப்பிக் கொண்டார் படைப்பாளி
அளவற்ற உற்சாகத்துடன் அங்கிருந்து கிளம்பி
தன் பட்டறைக்குள் நுழைந்தவர் திடுக்கிட்டார்
அங்கே அவரில்லாமலே
தானே இயங்கிக் கொண்டிருந்தது படைப்புத்தொழில்
அன்றுமுதல் கடவுளைக் காணோம்
இதுவே
புதிரான முறையில்
இப்பூமியை விட்டே காணாமல் போன
கடவுளைப் பற்றிய கதை
6 ] விதிகள்
——————-
மகளை ஒரு முழு உருவப் புகைப்படமாக மாற்றி
பைக்குள் வைத்துக் கொண்டு மாப்பிள்ளைதேடும் தந்தை
பழையபடி அப்புகைப்படத்தை
ஒரு பெண்ணாக மாற்றவல்ல மந்திரவாதி ஆவார்.
உற்றத்திலும் சுற்றத்திலும்
ஒரு இதயத்தைக்கூட சந்தித்தறியாத ரசிகன்
அவன் தன் கலைஞனைக் கண்டவுடன்
உயிர்பெருகி சாவான்
வண்ண விகாரங்களும் கர்ண கொடூரங்களூமான
வாழ்க்கையை
வெற்று திரைச்சீலையையும் ஒற்றை வண்ணமும் கொண்டு
எதிர்கொள்ளும் கலைஞன்
உதிரச்சாயம் உள்ளவரையே அவன் வாழ்க்கை
எளியவன் நான் நன்றாகவே அறிவேன்
வரிசையாக நிறுத்தி வைத்தான் நானே கடைசி மனிதன்
முதல்வனை கடவுளை அல்லது மகாத்மாவை
நான் நனறாகவே அறிவேன்
அவரை அடுத்துநிற்கும் பேற்றை நான் பெற்றுள்ளதால்!
எவ்வாறெனில்
பூமி ஒரு கோளம் அதில்
ஒவ்வொரு உண்மையும் ஒரு வட்டம்
இடத்தை அடைக்கும் பொருட்கள் மேலெல்லாம்
தூசியாய் படியும் பரம்பொருள் அது !
அதுமட்டுமென்ன
விதிகளுக்குள் அடங்காது
எல்லாவற்றுக்கும் விதிகளை இயற்றிக் கொண்டிருக்கிறது .
7 ] வெற்றுக்குவளை
—————————
வெற்றுக்குவளையை தந்து சென்றவன்
வந்து பரிமாறுவதற்குள்
என் ஆசைகளால் நிறைத்து விட்டேன் அதனை.
துக்கத்தால் நிறைந்துவிட்டது வாழ்க்கை
காணுமிடமெங்கும் மெளனமாய் நிறைந்திருந்தது
என் குவளையில் பரிமாறப்படாத பொருள்.
என் ஆசைகள் பருகி முடிக்கப்பட்டு
காலியாகி நின்ற குவளையில் பரிமாறப்பட்டு
ததும்பியது அது.
வெற்றுக்குவளையை தந்து சென்றவன்
வந்து பரிமாறியது அது
இப்போது நான் பருகிக் கொண்டிருப்பது .
பருகி முடித்ததும்
மீண்டும் பரிமாற வந்தவன் முகத்தில்
என் முகத்தில் தன் மரணத்தை
கண்டதன் கலக்கம்
***
8 ] பலி
—-
யார் உண்டாக்கிக் கொண்டிருப்பது
நூறு நூறு மின்னல்களால் அறியப்படும்
இவ்வாளின் சுழற்சியை ?
எவருடைய சிந்தனைகள் இவை ?
அன்றைய காலை சூரியனின்
முகத்தில் ஓர் ஏளனப்புன்னகை
9]இறையியல்
—————–
‘ஆண்டவர் முதலில் ஆதாமையும்
அப்புறம் அவனுக்கு துணையாக ஏவாளையும்.. ‘
என்பது ஓர் ஆணாதிக்கப்பொய்
ஆண்கடவுள் ஆதாமையும்
பெண்கடவுள் ஏவாளையும் படைத்தனர்
தத்தமது ஏகாந்தநிலை சலிப்புற்று
ஆதாமும் ஏவாளும் காதலிக்கத் தொடங்கிய
மண்ணின் அழகுகண்டு உண்டான தாபம் உந்த
ஆண்கடவுளும் பெண்கடவுளும் காதலிக்கத்தொடங்கினர்
கடவுளர்கள் ஒரு குழந்தையை கருவுறுவதற்கு முன்
ஓராயிரம் கோடி மக்களை பெற்றிவிட்டனர் ஆதி தம்பதியினர்
துன்பச் சூழலில் இருந்து விடுபட ஆதாமும் ஏவாளும்
தத்தமது கடவுளை நோக்கி திரும்பியபோது
ஆட்சிபீடத்தை சாத்தானுக்கு விட்டுவிட்ட
கடவுள் தம்பதியினர்
கலவியிலிருந்தே இன்னும் விடுபடவில்லை
மீட்சிக்கு இனி எங்கேபோவது ?ஆதாமும் ஏவாளும்
தங்கள் காதலுக்கு முன்னாலுள்ள ஏகாந்த
வானிலிருக்க கூடும் தங்கள் கடவுளர்களின்
சொற்களை தேடிக் கொண்டிருந்தனர்.
வானத்திலிருந்து சொற்கள்
பறவைகளை ஏந்திக் கொண்டதை கண்டனர்
மேகங்களை உருவாக்கி
மழையை பொழிந்ததைக் கண்டனர்
உயிர்காக்கும் உணவாகி தங்கள் இரத்தத்தில்
காலங்காலமாய் துடித்துக் கொண்டிருப்பதையும்
இன்னும்…. அவர்கள் முடிவற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்
வானத்துச் சொற்களின் முடிவற்ற வேலைகளை
10] பட்டறை
————-
என்னை அழைத்துவந்து
என் பெயரை ஏன் கேட்கிறாய் ?
என்னை நீ அழைப்பதற்கு
என் பெயர் உனக்கு தேவைப்படவில்லையே ?
எனக்கு நீ இட்ட பணி
எதுவென நான் அறிவேன்
எனக்குள் வலிக்கிறது
எதனாலென நான் அறியேன்
நெருப்பில் பழுத்த
இரும்புத்துண்டம்போல
என் நெஞ்சே எனக்குத்
துயர் தரும் சேதிகேட்டு
தோள்குலுக்கி ஊர் சிரிக்க
ஒப்புகிறதா உன் உள்ளம் ?
எந்த ஒரு பூவும் மலரவில்லை
இப்போதெல்லாம் என் வதனத்திலிருந்து
மந்திரக்கனி எதுவும் தோன்றவில்லை
ஓர் உள்ளங்கைக்கு நான் பரிமாற .
உன் பிரசன்னம் என்னை சுட்டுருக்குகிறது
உன் சம்மட்டி அடி என் தலைமீது.
அம்ருதக்கடலில் இருந்து
அலை ஓசை கேட்கிறது .
அக்கினிக்கடலில் இருந்து
அலறும் குரல்களும் கேட்கின்றன.
உன் கம்பீரப்பதில் குரலாய்
என் தலைமீது ஒலிக்கிறது
உன் சம்மட்டி அறை ஓசை.
காலிக்குடமாகவா
தங்கத்தோணியாகவா
ஓர் கூர்வாளாகவா
என்னவாக்கிக் கொண்டிருக்கிறாய்
என்னை நீ ?
ஒன்றும் புரியவில்லை.
உணர்வதெல்லாம்
குறைகூற முடியாத
ஓர் வேதனையை மட்டுமே.
1 ] பனைகள்
பனைகளின் தலைகளெங்கும்
பறவைகளின் சிறகுகள்
பச்சைப்பனைகளின் நடுவே
ஒரு மொட்டைப் பனை
மொட்டைப்பனை உச்சியிலே
ஓர் பச்சைக்கிளி
அடங்கிவிட்டது
‘மரணத்தை வெல்வோம் ‘ என்ற கூச்சல்
மரணமும் வாழ்வாகவே விரும்புகிறது
இனி இங்கே நான்
செய்யவேண்டியதுதான் என்ன ?
‘நானே தடைகல் ‘ஆகும்வழியறிந்து
வழிவிடுவதை தவிர ?
பனைகளின் தலைகளெங்கும்
படபடக்கும் சிறகுகள்
பாவம் அவை பூமியில்
மரணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ளன.
2] ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை
ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய்
கர்ப்பிணிபெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்
மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே
ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்
போவேன்
3] பறவைகள் காய்த்த மரம்
ஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி
மேற்கு நோக்கி நடந்த எனது மாலை உலாவினால்
சூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்க முடிந்ததா ?
தோல்வி தந்த சோர்வுடன்
ஓய்வு அறை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன்
ஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்
இன்னொருகாலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்
அன்று பறவைகளாய் காய்த்து
இருட்டில் செய்வதறியாது கத்திக் கொண்டிருந்தது
ஒரு நண்பனைப் போல
சூரியன் என்னை தொட்டு எழுப்பிய காலை
வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய் பரவ
மெய்சிலிர்த்து நின்றது அந்த மரம்
4] தனிமரம்
ஒரு யாத்ரீக வீரன்
சற்றே இளைப்பறும் இடம்
அவனது தர்சனம்
அதைச்சுற்றிவிரிந்திருக்கிறது
ஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்
கால் பொசுக்கும் மணல்
தன் இனத்தைவிட்டு
தூரவிலகி நிற்கிறது அது
தன்னியல்பின்
தடையற்ற வளர்ச்சிக்காக
காற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்
புழுபூச்சிகளும் உள்ளவரை
தனிமை அதற்கில்லை
அது ஏழையல்ல
அது தனக்குள் வைத்திருக்கிறது
ஒரு சோலைவனக்காட்டை
அதுவே தருகிறது
வற்றாத நீர்பெருக்கை
அது நிற்குமிடம்
இல்லை அது இளைப்பறும் இடம்
தனதே தனதான நிழல்
அதன் தர்சனம்
5] பனை
விடு விடென்று கறுத்து உயர வளர்ந்தவள் நீ
எதைக்கண்டு இப்படி சிலிர்த்து கனிந்து நிற்கிறாய் ?
அனைத்தையும் ஊருருவிய பின்னே
ஊடுருவ முடியாத ஒன்றைக் கண்டவுடன்
அதை சிரமேற்கொண்டு கனிந்தனையோ ?
ஒற்றைகாலில் நின்றபடி
உன் தவத்தின் வைரத்தை
என் பார்வையில் அறைந்தபடி நிற்கிறது ஏன் ?
அன்று உன்னால் சமைந்த என் குடிசையுள்
வீற்றிருந்தது அது
பின்பு
இரும்பாலும் சிமென்டாலும் ஆன இல்லத்திலிருந்து
வெளியேறியது அது
கோடரியாலும் வாளாலும் உன்னை வீழ்த்துவோர் முன்
எதிர்ப்பேதும் காட்டாது விழுந்து
நீ நின்ற இடத்தில் அழிக்க முடியாததாய்
நின்றிருந்தது அது .
6] நச்சுமரக்காடு
ஒரு மரம்
அதன் ஆணிவேர் நான்
அதன் பக்கவேர்கள்
என் மதம் என் ஜாதி என் இனம்
என் நாடு என் கொள்கை என் மரபு
இன்னும் நூறு நூறு சிம்புவேர்களை
நான் சொல்ல வேண்டுமா ?
அச்சம்தரும் வலிமையுடன்
அடிமரம்.
ஆயிரமாயிரமாண்டு எனினும்
மனித குலம் அளவுக்கு இளமை
அதன் இருப்பிற்கும் எதிர்காலத்துக்குமான
உத்தரவாதப் பசுமை தழைக்கும்
அதன் கிளைகள்
எந்த புகைப்படத்திலும்
எந்த வரைபடத்திலும்
அடங்க ஆயாசம் கொள்ளும் பின்னல்
எங்கும் காய்த்து குலுங்குகின்றன
தோட்டாக்கள் வெடிகுண்டுகள் அணுஆயுதங்கள்
7] பூக்கும் மரங்களின் ரகசியம்
நீரை நாடும் தேடலே
வேர்கள்
சூழலை எதிர்கொள்ளும் மெளனமே
அடிமரம்
ஒளியை நாடும் விழைவே
கிளைகள்
உதிரும் இலைகளின் பிரிவே
மரணம்
பிறப்பின் புதுமை பசுமையே
தளிர்கள்
அறிந்தேன்: பூக்கும் மரங்களின்
ரகசியம்.
8] புயலில்
புயலில் சரிந்த ஒரு மரத்தை
நிமிர்த்தி நிற்க வைத்துவிட்டேன்
ஒரு நூறு குழந்தைக் கைகளின் உதவியுடன்.
நான் சொன்னேன் குழந்தைகளிடம்
‘ ‘இவ்வாறே நாம் இந்த உலகை காப்பாற்றப்போகிறோம் ‘
எல்லாம் வெகு சுலபம்
புயலில்
தன் வாழ்வுக்காய் அன்றி
தன் உயிருக்க்கு மேலாய் நேசித்த ஒன்றை
வெகு தீவிரத்துடன் சொல்ல முயன்றுகொண்டிருந்தது மரம்
சொல்ல முடியாத வேதனையே அதன் சலனம் .
மாசு இல்லா பாதம் போன்ற வேர்கள் தெரிய
வீழ்ந்து கிடந்தது மரம்
தான் நேசித்ததும் சொல்ல விரும்பியதுமான
ஓரு பேருண்மை முன்
வீழ்ந்து வணங்கியபடி அமைதியாகிவிட்டதா அது ?
பரபரப்பான சாலை ஒன்றின் குறுகே விழுந்து
அது குறிப்பால் உணர்த்தும் பொருள் என்ன ?
சுறுசுறுப்பு மிக்க நம் மக்கள் ஆகா
சற்றும் தாமதிக்காமல் இரவோடு இரவாக
இடைஞ்சலில்லாத போக்குவரத்தை ஏற்படுத்திவிட்டார்கள்
அகோரமாய் கைகால்கள் வெட்டப்பட்டு
சாலையோரமாய் இழுத்து இழுத்துவீசப்பட்டிருந்தது.
அணைக்கட்டுகளை உடைத்து மதகுகளை உடைத்து
கரைகளை உடைத்து
படைப்பின் ஆற்றையும் விழுங்கிவிட்டது
பேராசையின் வெள்ளம்
இயந்திர உலகின் நுரையீரல்களில் இருந்து கிளம்பியது புயல்
விருட்சங்களும் ஒளிக்கம்பங்களும் சரிந்து விழுந்து
இருண்ட ராத்திரி .
முழு மரத்திலிருந்து
முறிந்து விழுந்த கிளையினைப்போல
நானும் என் குழந்தையும்
9] இலையசைவு
விருப்பமோ தீர்மானமோ இன்றி
இலையில் தங்கியிருந்த நீர்
சொட்டு சொட்டாக விழுந்துகொண்டிருந்தது
ஆனால் முடிந்தவுடன் ஒரு விடுதலை
‘அப்பாடா ‘ என மேலெழுந்தது இலை
அது தன்னில் ஒரு புன்னகை ஒளிரத்
தேவையான ஈரத்தை மட்டும் வைத்துக் கொண்டு
ஆமோதிப்போ மறுதலிப்போ அல்லாத
ஒரு தலையசைப்பை மட்டும் செய்வதாய்
அசைந்து கொண்டிருந்தது இங்கும் அங்குமாக
ஒரு நீண்டகிளையின் சிறு உறுப்பு
தான் என ஒரு கணமும்
முழுமுதல் என மறு கணமும்
இங்கும் அங்குமாய் அல்லாது
வேறெங்கும் செல்லாத ஒரு பயணியாய்
என்றும் இருக்கிறதை மட்டும் அறிந்திருந்தது அது .
1. வீடும் வீடும்
========
பாதுகாப்பற்ற ஒரு மலரின் கதகதப்பிற்குள்
பாதுகாப்புடன் இருக்கிறேன்
என்னை ஆசுவாசப்படுத்த முயலும் இந்த வீடு
ஒருகாலத்தில்
என்னை ஓய்வு கொள்ள விடாது
வாட்டி எடுத்த ஓட்டைக் குடிசையிலும்
குளிருக்குப் பற்றாத
அம்மாவின் நைந்தநூல்சேலையிலும்
உருக் கொண்டது
எப்போதும் நம் லட்சியமாக இருக்கும்
இவ்வுலகம் பற்றிய கனவு
நம்மில் ஒருக்காலும் இதுபோல
கருக்கொண்டதில்லை என்பதை நான் அறிவேன்
மலரோடு தன் வேலை முடிந்ததும்
விலகி வெளி உலாவும் கருவண்டைப்போல
நாம் ஒருக்காலும்
இருந்ததில்லை என்பதையும் .
******
2. வீடுகள்
=======
வீதிவலைக் கண்ணிகளோ
இந்த வீடுகள் ?
கல்முகங்கள் சில வீடுகளுக்கு
சினேகத்தை பின் ஒதுக்கி
நாய்க்குரலில் வரவேற்கின்றன அவை
வீதியில் நடந்து செல்லும் மனிதனை
சந்தேகத்தோடும் அச்சத்தோடும்
நோக்குபவை
வீதியில் நடந்து செல்லும்
ஒவ்வொரு முகத்திலும் தன் அன்பனைத் தேடும்
எளிய வீடுகளும் உண்டு
யாத்ரீகனோ தன் வீட்டை
எப்போதும் தன் தோள்மேலே வைத்திருக்கிறான்
மலயுச்சி மீதிருக்கையிலோ
பறவைப்பார்வையில் பிடிக்கப்பட்ட
புகைப்படமொன்றிலோ
இந்த வீடுகள் எல்லாம் கல்லறைகளாய்த்
தோன்றுகின்றன
சிலவேளை எதை நோக்கியும் பயணம் செய்யாததும்
தம் குறிக்கோளை அடைந்ததுமான
சாஸ்வதப் பேரமைதியில் மிதக்கும்
படகுகள் போலவும் தோன்றுகின்றன
******
3. இரண்டுவீடுகள்
===========
மனிதன் கட்டியாகவேண்டியுள்ளது
ஒன்றை பட்டுப்பூச்சியிடமிருந்து
அவன் கற்றுக்கொள்ளவேண்டும்.
மற்றொன்றை
சிட்டுக்குருவியிடமிருந்து.
*****
4. அந்த இசை
==========
மூலைகளில் படிந்த ஒட்டடைகளை நீக்கினேன்
ஒவ்வொரு பொருளையும் தொட்டு
அதனதன் இடத்தில் வைத்தேன்
தூரெடுக்கப்பட்ட கிணறு போலாயிற்று அறை
புனித நீரில் குளித்து
வியர்வை நாற்றமில்லா ஆடை அணிந்து
மாலை உலா கிளம்பியபோது
கேட்கத்தொடங்கிய அந்த இசை
நீடிக்கவில்லை
வழிப்பறிக்கு ஆளானவன் போல திரும்பினேன்
விடியும்வரை
இரவின் மடியில் முகம் புதைத்து அழுதேன்
*****
5. மொட்டைமாடிக்களம்
===================
நான் கட்டினேன் ஒரு வீட்டை
வீடு தனக்குத்தானே கட்டிக் கொண்டது
வானம் வந்து இறங்க விரித்த
தன் மொட்டைமாடிக்களத்தை
*****
6.குருவிக்கூடு
===========
நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டைமாடியை தந்தது வீடு
இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு உயர்ந்து
தன் அன்பை விரித்திருந்தது மரம்
அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது நான் அமர்ந்திருந்த
அந்த மொட்டைமாடி
*****
7. மரத்தின் வடிவம்
==============
சிவந்த பூக்களுடன்
ஜன்னலை உரசும் மரக்கிளை
உன் முத்தம்
கூரைமீதுகுனிந்து
உச்சிமுகர்கிறது உன் அன்பு ஸ்பரிசம்
வாயிலை நோக்கி தாழ்ந்த
கிளை அசைவு உன் அழைப்பு
இமையாத விழிப்புடன்
இடம் பெயராஅத இருப்புநிலையில்
காணுகிறது உன் நித்தியத்துவம்
உன் ஒருபகுதியை வெட்டி வீழ்த்தியே
அக்கூரைமீது
ஒரு மாடிக்கட்டிடத்தை எழுப்பி
முன்னேறினேன்
வெட்டப்பட்டு
இரத்தம் கொட்டும்
உன் மொட்டைவிரல்
மாடிக்கட்டிடத்தை சுட்டியபடி
திடுக்கிட்டு
இனி நான் என்ன செய்வது
என துடித்துக் மொண்டிருக்கையில்
அம்மொட்டை விரலை சுற்றிலும்
வீரிட்டு முளைத்திருந்தன
புதுத்தளிர்கள் .
******
8. உனது வீடு
========-==
நீ இளைப்பாற தேர்ந்தெடுத்த
மரத்தடியா,
ஓயாத வேதனையில் அரற்றும் ஜீவன்
ஓய்வு கொள்ள விரித்த படுக்கையா,
பல்லிகளும் பாச்சான்களும் பாம்புகளும் அண்டும்
பாழ்மண்டபமா,
எது உன்வீடு ?
இவை எல்லாமுமேவா ?
உனது வீட்டில்
உனது பிணத்தை நாடியே
உன்னோடு குடியேறியதுதான்
அந்தபிசாசு என நீ அறிவாயா ?
உனது வீட்டின் இருளை துடைப்பது
சூரியன் இல்லையா ?
சந்திரனும் நட்சத்திர கோடிகளூம் இல்லையா ?
உன் வீட்டை கடந்துசெல்லும்
மேகங்களின் நிழல் உன்னை தீண்டியதில்லையா ?
நீ எப்போது உன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாய் ?
சூரியன் வந்து உன் தலையை தீண்டும்போதா ?
பறவைகள் குரல்கொடுக்க துவங்கும்போதா ?
புறப்பட்டுவிட்டாயா
உனது மக்களை விட்டுவிட்டா ?
அவர்கள் விழிக்கும் முன்
ஒருபுதிய பொக்கிஷத்துடன்
வந்து சேர்ந்துவிடும் எண்ணத்துடனா
அல்லது இந்த துறவேதானா
அந்த அரிய பொக்கிஷம் ?
போய்க் கொண்டிருக்கிறாயா ?
சரி
ஆனால்
எச்சரிக்கையாக இரு
நீ சோர்வுறும் இடமும்
வீழும் இடமுமே
வீடுகள் தோன்றும் இடம்
வீடுகள் வீதிகள் நகரங்கள்
நாடுகள் மற்றும் பூமி
******
9. ஒரு சிறு குருவி
==============
என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?
அங்கிருந்தும்
விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி
சுரேலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்த பெருமிதத்துடன்
நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை
ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்
***
நட்சத்திரமீன் - முன்னுரை
====
தேவதேவன்
இவை கவிதைகள்
ஏனெனில்
இவை உண்மையை பேசுகின்றன
நானல்லாத நான் சாட்சி
இவற்றை நீ உணரும்போது
நீயே சாட்சி
இவற்றை நீ பின்பற்றும்போதோ
வற்புறுத்தும்போதோ
நீ ஒரு பொய்யன் ,துரோகி ,கோழை!
ஏனெனில்
உண்மை உன் விருப்பத்துக்கும் வசதிக்குமாய்
காலத்தின் முளைகளில் கட்டிப்போடப்படுவதற்கு
பணிந்துவிடும் பசுமாடு அல்ல.
அது
நித்யத்துவத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள்
அப்போது கவிதைகள்
தியாகத்தின் இரத்ததில் நனைந்த
போர்வாட்கள்
[நன்றி . நட்சத்திரமீன் 1994 ]
====
1. Tamil | Literature | Unnatham | Devadevam | Play Cards: நமது மூளையின் செயல்பாடுகள்தாம் என்னே..- தேவதேவன்
2. Tamil | Unnatham | Devadevan | Short Story: “அபூர்வமாய் நிகழ்ந்த சம்பவங்கள் அவை – தேவதேவன்”
3. Tamil | Literature | DevaDevan | Short Story: “தோணி – தேவதேவன்”
4. Tamil | Literature | Unnatham | Short Story | Devadevan: “முதற் கணம் – தேவதேவன்”
Tamil | Puthiya Kaatru | Devadevan | Poem
ஆக்கங்கெட்ட கூகைகளும்
கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கும் கோயில்களும்
தன்னைப் பற்றிய மெய்மை
தன் உணர்வுக்குக் கிட்டிய போதெல்லாம் -
மூடமே,
தாங்கொணாத வெவ்விதியே,
குமுறுகின்ற இதயத்தின்
இறுக்கும் கைகளுக்குள்
குலுங்கும் என் நெஞ்சமே,
அதை உன்னை வழிபடச் சொன்னது யார்?
காலத்துக்குத் தக இடம் நகர்ந்து கொள்ளும்
அக்ரஹார உயர்வுகளின் பின்கட்டில்
விடாப்பிடியாய் வளர்ந்து கொண்டிருக்கும்
இரத்த வெறி கொண்ட
அந்த மிருகத்தைக் கண்டதில்லையா?
அதிகார சுகம்
தன்னைக் காத்துக் கொள்வதற்காக
மறைமுகமாகவும் கொள்ளும்
உலகின் அதிபயங்கர கொடூரங்களினின்றும்
மனிதன் எழுந்திருக்கவே முடியாத
கதை இதுவோ?
அதிகாரங்களின்
வல்லுறவு வன்கொலைகளால் மாண்ட
நம் கன்னிப் பெண்களுக்கு
கோயில் கட்டியதால்
எல்லாம் சரியாயிற்றா?
கூகைக்குக் கோயில் கட்டியது,
கூகைத் தனத்தை நகர்த்தி விட்டது,
இல்லையா?
நம் கொந்தளிப்பானது
காளிக்குக் கோயில் கட்டிக்
கும்பிடக் கும்பிட
ஒடுங்கி அடங்கிக் கொண்டது,
இல்லையா?
இன்று என்ன கோயில்களையடா
நாம் கட்டிக் கொண்டிருக்கிறோம்
நம்மிடமுள்ள எவற்றையெல்லாம்
நம்மிடமிருந்து நகர்த்தி, நம்மைக்
கல்லறை சடலங்களாக்கிவிடுவதற்கு?
http://bsubra.wordpress.com/category/vilakku/
கவிஞர் தேவதேவனுக்கு “விளக்கு’ விருது!
சென்னை, டிச. 8: நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய கவிஞர் தேவதேவன் (59) இவ்வாண்டுக்கான “விளக்கு’ விருதைப் பெறுகிறார்.
அமெரிக்கத் தமிழர்களின் கலாசார அமைப்பாகிய “விளக்கு’ கடந்த பத்தாண்டுகளாக ஆண்டுதோறும் சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கெüரவித்து வருகிறது.
ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணமும், பாராட்டுப் பத்திரமும் இவ்விருதில் அடங்கும்.
இம்மாதம் 23 ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் விழாவில் இவ்விருது வழங்கப்பட உள்ளது.
விருது பெற்ற கவிஞர் தேவதேவன் பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்களை எழுதியுள்ளார். தேவதேவன் கதைகள் என்ற ஒரு சிறுகதை நூலும், கவிதை பற்றிய உரையாடல் என்ற கட்டுரை நூலும், அலிபாபாவும் மோர்ஜியானாவும் என்ற நாடக நூலும் எழுதியுள்ளார். தமிழ் சிறுபத்திரிகைகளில் நீண்ட காலமாக எழுதிவரும் கவிஞர் தேவதேவனின் சொந்த ஊர் தூத்துக்குடி.
விளக்கு விருதுக்காக கவிஞர் தேவதேவனைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவில் எழுத்தாளர்கள் திலீப்குமார், லதா ராமகிருஷ்ணன், க்ருஷாங்கினி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
விளக்கு விருது இதற்கு முன்
எழுத்தாளர் சி.சு.செல்லப்பா,
கவிஞர் பிரமிள்,
கோவை ஞானி,
கவிஞர் ஞானக்கூத்தன்,
நகுலன்,
ஹெப்சிபா ஜேசுதாசன்,
பூமணி,
சி.மணி,
பேராசிரியர் ராமானுஜம்,
அம்பை
முதலானோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்ணையில் தேவதேவன் – Thinnai
.... இங்கே பதியப்பட்டது 2008, Authors, Award, Awards, Biosketch, Devadevan, Faces, Kavinjar, Literature, people, Poems, Poets, Prizes, Tamil, Vilakku, Writers | Leave a Comment »