Pages

Monday, April 14, 2014



முதுமை - பிரமிள்


காலம் பனித்து விழுந்து
கண்களை மறைக்கிறது
கபாலத்தின் கூரையுள்
ஒட்டியிருந்து
எண்ணவலை பின்னிப்பின்னி
ஓய்கிறது மூளைச் சிலந்தி.
உணர்வின் ஒளிப்பட்டில்
புலனின் வாடைக் காற்று
வாரியிறைத்த பழந்தூசு.
உலகை நோக்கிய
என் விழி வியப்புகள்
உயிரின் இவ் அந்திப்போதில்
திரைகள் தொடர்ந்து வரும்
சவ ஊர்வலமாகிறது.
ஓவ்வொரு திரையிலும்
இழந்த இன்பங்களின்
தலைகீழ் ஆட்டம்
அந்தியை நோக்குகிறேன்.
கதிர்க் கொள்ளிகள் நடுவே
ஏதோ எரிகிறது
ஓன்றுமில்லை
பரிதிப்பிணம்.

இறப்பு

சிறிதில் பெரிதின் பளு
பாழின் இருளைத் தொட்டுன்
நுதலில் இட்ட பொட்டு
பார்வைக் கயிறு அறுந்து
இமையுள் மோதும் குருடு
ஓன்றும் ஏதும் இன்றி
இ;ன்மை நிலவி விரிதல்
வண்டியை விழுங்கும் பாலம்
மஞ்சம் கழித்த பஞ்சு
கூட்டை அழிக்கும் புயல்
புயலில் தவிக்கும் புள்
வாழ்வின் சூழலைத் துறந்து
என்றோ இழந்த வாசக்
காற்றுள் வீழும் ரோஜா
துணியே நைந்து இழையாய்
பஞ்சாய் பருத்தித் திரளாய்
பின்னே திருகும் செய்தி
காற்றை விழுங்கும் சுடர்
சுடரை உறிஞ்சும் திரி
வினையில் விளைவின் விடிவு
விளையா விடிவின் முடிவு
தொடங்காக் கதையின் இறுதி
நிறுத்தப் புள்ளிகளிடையே
அச்சுப் பிழைத்து
அழித்த வசனம்
வெறும்
வெண்தாள்ச் சூன்யம்.

குமிழிகள்

இன்னும்
உடையாத ஒரு
நீர்க்குமிழி
நதியில் ஐPவிக்க
நழுவுகிறது.
கைப்பிடியளவு
கடலாய் இதழ்விரிய
உடைகிறது
மலர்மொக்கு.

கன்னி

ஒரு நூற்றெட்டு
அரிவாள் நிழல்கள் பறக்கும்
அறுவடை வயல்வெளியில்
ஏதோ ஒரு ஆள்நிழல்
மிதிக்க மடங்கி
சிரம் பிழைத்துக் கிடந்து
அறுவடை முடிய
ஆள்நகர
மெல்ல வளைந்தெழுந்து
தனித்து நாணிற்று
ஒரு கதிர், உச்சியில்
ஒரு நெல்,சுற்றிலும்
வரப்பு நிழல் நகரும்
திசை நூல்கள்-
இன்று நிழல் நகரும்
நாளை உதயம்
உனக்கும்
நாணத் திரை நகரும்
உயிர் முதிரும், உன்
கூந்தலின் உமி நீக்கி
வேடித்தெழும் வெண்முகம்
ஓரு அணுத் தான்யத்தின்
பகிரங்கம்


வண்ணத்துபூச்சியும் கடலும்

சமுத்திரக் கூரையின்
பூந் தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி
வேளைசரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்த்து அமர்ந்தது.
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.

பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.
என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஓரு பிடி நிலம்.

நன்றி : தட்டச்சு வைகறை மாசி 09, 2007