Pages

Sunday, April 06, 2014

இடம் பெயரும் பிரக்ஞைவெளி - பிரேதா:பிரேதன்

ஒளி திகைத்தெழும் கனவின் இமைப் புயல் -
மரணம் கலைக்க விழித்தது என் பெயர்-
ஆழங்களுக்குள் மிதக்கும் நிழல்கள் திசைகளின்
        தாபம் ஸ்பர்சிப்பதில்லை
......................................................

இடம் பெயரும் பிரக்ஞைவெளி
 (புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்டமனிதர்களும் ... நாவலிலிருந்து)

- பிரேதா : பிரேதன்

ஆதியிலே வார்த்தை இருந்தது
அந்த வார்த்தை அவளோடு இருந்தது
வார்த்தையை தவிர எதுவுமாக அவள் இல்லை
வார்த்தைக்கு உள்ளும் வெளியும்
அர்த்தமாகவும் அர்த்தமின்மையாகவும்
அவளால் இருக்க முடிந்தது
அந்த வார்த்தை மாம்சமானது
அந்த மாம்சத்தில் என் பிரக்ஞை வாசம் பண்ணியது
எத்தனை முறை எனக்குள் நான் நடந்து
தோற்றுப் புதைவது
என் புதைகுழிகள் மீது அமர்ந்து
திசைதேடிச் சலிக்கின்றன
புதிய யாத்ரீயார்த்தங்கள்
தொடுவானத்தின் மாயாச் சலனத்தில்
இடம் பெயரும் எனது பிரக்ஞைவெளி
என்னை விடுத்து விலகிச் செல்கிறது
விலகல்களைத் தவிர வேறதுவும்
உணராத கணங்கள் எனக்குள் மிஞ்சின
தோற்றம் காட்டிச் சமையும் அரூபங்களில் புகுந்து
வெளிப்பட்டு என்னை நானே துப்பிக்கொண்டது
மிகக் கொடுமைதான்
அப்பட்டமான வலிகள் என்னால் உடைக்கப்பட்டன
அவற்றின் முலைக்காம்புகளின்
ஊசிமுனைத் துவாரத்தின் மீது
ஈயாய் அமர்ந்து ஈரத்தில் கரைந்து
தொலைந்து போயின பழைய காலங்கள்
பிரக்ஞைவெளி
வெற்று
வெறும் வெற்று
வெறுமையைத் தின்று வெறுமையைப் புணர்ந்து
வெறுமை ஈன்று வெறுமையில் நுழைந்து
வெறுமையாய் நின்ற வெற்று
அது வெற்றைத் தவிர வேறெதுவும் இல்லை
ஆதியில் வெற்றுமட்டுமே இருந்தது
வெற்றிடம் பிரார்த்திப்போம்
வெற்றே உனது நாமம் மகிமையடைவதாகுக
அன்றன்றைக்குமான வெற்றிடத்தில்
அன்றன்றைய வெற்றை நிறைத்துவிடும்
பிறவற்றின் வெற்றிடத்தில் நாங்கள் நிரம்புவதென்ன
எங்களின் வெற்றிடத்தையும் பிறவற்றால் நிரப்பு
ஆதி சூன்யமே
நீயே அனைத்துமாக இருக்கிறாய்
நீ அனைத்திலும் இருந்தாய்
அனைத்தும் உன்மூலம் உண்டாயிற்று
உண்டானதெதுவும் உன்மூலமன்றி
உண்டாகவில்லை
உண்டானவைகளோ
உன்னை அறியவில்லை
உனக்கு சொந்தமானவைகளிலே நீ வந்தாய்
உனக்குச் சொந்தமானவைகளோ
உன்னை ஏற்றுக்கொள்ளவில்லை

ஆமென் ...