Pages

Tuesday, May 13, 2014

தனிமையின் நெடுவழி - க.மோகனரங்கன்

தனிமையின் நெடுவழி - க.மோகனரங்கன்

யுகங்கள் வேண்டாம்
ஊழிக்கூத்து
நாழிகளில்
சுவாதீனத்திற்கும்
பிறழ்விற்குமிடையே
கால் மாற்றியபடி கலைஞன்
நேசம் கற்பித்தவளுக்கு
காதிலொன்றை வெட்டிக் கொடுத்தவன்
கட்டுப் போட்ட முகத்தோடு
காட்சிக்கு இருக்கிறான்
சுய சித்திரத்தில்
வர்ணங்களின் இசையை
பார்க்கத் தெரியாதெனது
குருட்டுக் காதுகளினருகே
தயங்கி நின்ற
சவரக் கத்தி முனையில்
கடந்தே னென்
சித்ததிற்கும் செயலுக்குமான
தொலையாய் பாழ்வெளியை.

பாடல் பெறும் ஸ்தனங்கள்

பசியெனப்
பரிதவித்த வேளைக்கு
மறுதலிப்பின்றி சுரந்த
அமிர்த தாரைகள்
எவர் கை பழகவோ
இறுக முடிச்சிடப்பட்டது
காம்புகளின்
பால்ருசி பற்றிய
ஆற்ற முடியாத ஞாபகங்களோடு
விரல் சுவைக்கும்
சவலைப் பிள்ளைக்கு
ஞானமும் சித்திக்கவில்லை
பின்னும்
சுடரும் நினைவின்
கரிய பக்கங்களில்
கலையுமொரு திருமுறை
எழுத்து எதுவும் பெறாமலேயே