Pages

Sunday, August 17, 2014

சாரோனின் சாம்பல் இறகு - கோணங்கி

சாரோனின் சாம்பல் இறகு - கோணங்கி

அதிலும் எல்லையில்லாத இருளிலிருந்து நீளும் சாரோனின் இறகுக்குள்ளிருந்து  வெளிவந்த நாடோடி ஸ்திரீகள் பாசிபடர்ந்திருந்தனர். கைத்தடியால் தட்டி பூமியின் வழிகளை அறிந்துகொண்ட குருடர்களாய் இருந்தார்கள்.  விழி வெண்மை காணா இருட்டில் பதிந்த ஸ்திரீயின் கண்கள் எதைத் தேடுகின்றன. காலடித் தடம் தவறி நடந்த பாசிபடர்ந்த நாடோடி ஸ்திரீகள் சப்தங்களின் மிக மெல்லிய அழைப்பை ஏற்று நடந்தார்கள். நாக்குப் பூச்சிகள் கால்களை முத்தமிட்டன. தாது வருஷப் பஞ்சம் பீடித்த நிலங்கள் மூச்சுவிடும் சப்தத்தை கேட்டு அழுதார்கள். ஸ்திரீயின் கால்களிலிருந்து பிளந்து சென்ற பூமி எரிந்தது. உலர்ந்து வந்த மணலிடம் சென்று “வெப்புநோயில் வாட வேண்டாம் மணலே” என சாரோனின் இறகு கொண்டு ஸ்பரிசித்தார்கள். பிச்சைக்காரிகளின் தொடுதலில் சலனமடைந்த  கூழாங்கற்களும் மணலும் ரத்தம் கசிந்து தானியமாயின. ஒவ்வொரு மணலையும் தொட, இறகின் ஒளி வீச்சில் உயிரப்படைந்த மணல் ஸ்திரீகளின் காலடி ஓசைகளை நேசிக்க முடிந்த சாரோன் கிராமத்தின் முரடர்களைத் தேடி வந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு மணலில் துணுக்குற வைக்கும் பாலைவனம் முணுமுணுக்கிறது. இன்னொரு மணலைப் பிழிந்து ஈரத்தை எடுக்க முடிந்ததா அவர்களால். பிரிவுகளாகிறது எங்கும். ஒவ்வொரு கணத்திலும் சரிந்து வந்த மணலில் இருந்து தனித்தனியாக பிரிக்கப்பட்ட தனித்தனியானவர்களின் தனிமைகளுக்கிடையில் விரியும் மௌனத்திலிருந்து ஆழ்ந்து படியும் இருள் விரிந்து பரவுகிறது. கண் தெரியாத பிச்சைக்காரிகளின் பாடல் இருளால் துளையிடப்பட்டு கனத்து அதிர்கிறது. அந்தப் பாடலின் வெறிபிடித்த நேசத்திலிருந்து தகப்பன் எலும்புகள் ஏக்கத்தால் விரிவது சாரோன் கிராமத்தின் எல்லா இடங்களிலும் பரவும். பாசி படர்ந்த வெண்கலக் கண்களின் அடர்ந்த சோகத்தை யாரும் தாங்கிக்கொள்ள முடியுமா. மூர்க்கமாகப் பிணைக்கப்பட்ட ரத்தத்திற்குள் சுருண்ட இருள் நீண்டு ஆத்மார்த்தத்தின் நரம்புகள் அதிர்ந்து ஓடிப்பரவுகிறது இரவின் மூலைகளில். தாவீதின் பாரம்பரிய மரபுரிமைகளில் பாட்டன் ரோசேப்பின் எலும்புகள் தகப்பனின் சம்மட்டி அடிகளில் உடைந்து ரத்தம் கொட்டி பூமி கழுவப்படுவதை கண்டு வந்தவர்கள் சாரோன்வாசிகள். கரடு முரடான பூமி கழுவப்படுவதை கண்டு வந்தவர்கள் சாரோன்வாசிகள். கரடு முரடான காட்டாளின் தடங்களைப் பின்தொடர்ந்து போகாத மூத்த குமாரன் தாவீது தகப்பனை கை நீட்டி அடித்து விரட்ட நேர்ந்ததை சாரோன் கிராமம் பார்த்து வருவது புதிதில்லை; தாவீதும் தகப்பனும் சேர்ந்து விடுவார்கள் என திரும்பவும் மறந்துவிட்டார்கள் அவர்களை.

தகப்பனின் ஒரே  சொத்தான பழைய துருப்பிடித்த ரெங்கூன் பெட்டியும்  கொடியும் கொடியில் கிடந்த உடுப்புகளும் பெட்டிக்குள் இருக்கும் பழைய வீட்டின் சாவிகளும், பழுப்படைந்த வுல்காத்தா பைபிளும் களிம்பேறிய வெண்கல ஸ்திரீகளின் பாடல்களும் தான் அகற்றப்பட்டன. அங்கிருந்த பெயர் தெரியாத காட்டுப்பறவையின் தடித்த இறகுகளும் மைகூடும் சேர்த்தே தூக்கி எறியப்பட்டபின் எத்தனையோ விதத்தில் புரண்டு கிடந்த  வெளிறிய காகிதங்களில்  இருந்த வீச்செழுத்துக்களால் காட்டு இறகுப்பேனா பதிந்த சொற்றொடர்களும் மகனுக்காக எழுதப்பட்டு மை உலர்ந்து போகாத நேசங்களும்  தான் தாறுமாறாய் இடம் பெயர்ந்து விட்டன. அவற்றை எல்லாம் இனி  ஒன்று சேர்க்க முடியாது. காட்டு இறகு வைத்திருந்த பாரம்பரிய வலிமையான வார்த்தைகளை இனி யார் கொடுப்பார்கள்; இற்று ஒடிந்த வார்த்தைகளுக்காக யாரும் வருந்தவில்லை. தகப்பனின் ரேகை பதிந்த பழுப்புக்காகிதங்களில் சாரோன் கிராமத்தின் எல்லா நாட்களில் இருந்த தீராத இசைவும் விருப்பங்களும் பதியப்பட்டுள்ளன. பழுப்புக்காகிதங்கள்தான் சாரோன் கிராமத்தின் அபூர்வமான பொருட்கள். துருப்பிடித்த சாவிகளுக்குத் தெரியும். ஒவ்வொரு இரவும் எப்படி இருந்ததென்று. திறந்து பார்க்கவே முடியாமல் போன பக்கங்களை யார் மூடிவிட்டார்கள் என்று தெரியவேவில்லை. ஆனால் இளையவன் மரியான் தகப்பன் பெட்டியை திறந்து யாருக்கும் தெரியாமல் அந்தக் காட்டுப் பறவையின் இறகுகளில் ஒன்றை திருடி அதன் ஸ்பரிசத்தில் வந்த வெளிறிய கனவுகளில் சாரோன் கிராமத்தின் நி களங்கமான  இரவு ஒன்றை தன்னோடு எப்போதுமே வைத்திருந்தான். அந்தக்காட்டு இறகுக்குள் பதிந்த பிரக்ஞையில் தகப்பனின் தான்தோன்றியான தடங்கள் இருந்தன. அவனால் எட்டமுடியாத கோடுகளும் அதிர்ந்தபடி இருந்தன. தன் உடம்போடு இணைந்துப் பறந்துசென்றான் மரியான். பறவையின்இறகு கொண்ட மரியான் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து திரிந்தான் காட்டில். அவனால் தாவீதின் செயலைப் புரிந்துகொள்ள முடியவில்லை.தகப்பனை அடித்து விரட்டி விட்டானே தாவீது. மரியான் திரும்பிய பக்கமெல்லாம் தகப்பனின் இறகு எழுதிய துயரங்களை வாசித்தான். எழுதப்படாத வெளிகளில் தகப்பன்  எழுதிச்சென்ற ரகஸியங்கள்  காற்றின் மிக  மெல்லிய ஸ்ரிசங்களாக இருந்தன. மரியான் உதடுகள் மெல்லிய காற்றை வாசித்து உலர்ந்துவிட்டன. தகப்பன் வெளியேறிப்போனபின் சாரோனில் இருந்து பறந்து சென்றான் மரியானும். பெருநகரின் பாதையை அடைந்தான் மரியான். வழி நெடுக இருந்த மரங்கள் சொன்னது தகப்பனின் சொறதொடர்களில், “தாவீதின் கோபத்திற்காக மரியான் நீ அவனை வஞ்சியாமல் இரு” என்பதுதான். மரங்களின் முணுமுணுப்புகளுக்கிடையே தகப்பன் உருவம் தோன்றி மங்கலான கண்களால் பார்த்துக் கொண்டிருப்பதை அவனும் பார்த்துக்கொண்டிருந்தான்.

 சாரோனிலிருந்து பாரம்பரிய அடையாளங்கள் மெதுவாக அரிக்கப்படுவதை தகப்பன் வெளியேறிப் போனபோது அவரின் சுவடுகளும் அரிக்கப்பட்டதை காணாமல்போன கூரைவீடாகப் பார்த்துக்கொண்டிருந்தான் மரியான். சகோதரனிடத்தில் தாவீது என்றுமே பிரியமாக நடந்துகொண்டதில்லை. தகப்பனை  அடித்துத் துரத்தியபின் மரியான் அழுததை துவேசமாக்கினான் தாவீது. காணாமல் போன தகப்பன் இதை உணர்வார். வேறு யாருக்குத் தாவீதைத் தெரியும். பூர்வீகத்தில் அப்படி முரட்டு சுபாவிகள் இருந்தார்கள். அவர்கள் போடாத சண்டையேயில்லை. தாவீதிடத்தில் தகப்பனுக்கிருந்த அலாதியான பிரியத்தை சாரோனிலிருந்த சிலர் உணராமலில்லை. அவர்களும் முரட்டு சுபாவமுடையவர்கள்தானே வெறிபிடித்தமாதிரி ரத்தம் கொட்டித்தான் சண்டையிட்டார்கள்.

பாரம்பரிய மரபுரிமை மீது செங்கல்லும், சிமெண்டும் இரும்புக்கம்பிகளும் பின்னலிட்டு வளர்ந்தன. பெரிய உத்யோகஸ்தனாகிவிட்டான் தாவீது. டைனிங்ஹாலும் தனித்தனி அறைகளிலிருந்த தனிமையிலிருந்து மண்டிய வெறுமைக்குள் எப்போதாவது பூர்வீகவாசம் எட்டிப் பார்க்குமா? பூர்வீக வாசத்தில் பிறந்த தாவீதும் மரியானும் முரட்டு நிலத்தின் நிறத்திலேயே இருந்ததை கிராமத்தில் சொன்னார்கள். அவற்றை எல்லாம் ஏன் மறந்தார்கள். காங்கரீட் சுவர்கள் நெருங்கி வந்தன. தான் தோன்றியான செடிகளை வெட்டி வீட்டைச் சுற்றி முற்கம்பி வேலியடைத்தான் தாவீது. இரவில் வந்து பாட சில் வண்டுகள் வரவே இல்லை அங்கு. பூர்வீக வீட்டின் கீறலில் இருந்த ஒவ்வொரு பூச்சிகளின் அதிசயமான குரலையும் சிமெண்ட் பாலினால் அடைத்து விட்டான் தாவீது. சாரோனிலிருந்த ஏதேச்சையான வாழ்க்கையை குறுந்திரைக்குள் இருந்து வந்த கார்ட்டூன் வீரர்கள் இடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். பிரபல முகங்கள் குறுந்திரைக்குள் இருந்து வெளிவந்து வரவேற்பறைகளைக் கட்டிவந்தார்கள். சக அதிகாரிகளோடு அங்கு வந்தான் தாவீது. வரவேற்பரையில் இருந்த தகப்பனை பின் கட்டு வழியாக அனுப்பி வைத்தான். மனைவியும் பிள்ளைகளும் வாசனைத் திரவியங்களுக்காக வேட்கையோடு குறுந்திரை முன் அமர்ந்திருந்த போது, குறுந்திரையைத் தூக்கி வெளிவந்த அமெச்சூர் நடிகர்கள் அவர்களுக்கான புதிய வாசனைகளை  பொருட்களாக மாற்றிக்கொடுத்து விட்டு திரும்பும் போது வீட்டில் உள்ளவர்களையும் எந்திரங்களுக்குள் அழைத்துச் சென்றார்கள். அந்த எந்திரங்கள் உற்பத்தி செய்து குவித்த பண்டங்களில் போய் ஒட்டிக் கொண்டார்கள் பிள்ளைகள். தினந்தினம் திரையைத் தூக்கி குதித்து வந்த அமெச்சூர் நடிகர்கள் ஒவ்வொரு வீட்டின் தனித்தனி இயல்புகளையும் எடுத்துச் சென்றார்கள். அடையாளங்கள் காணாமல் போயிருந்தன எங்கும். ஏற்கனவே தொலைத்தவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். மாறிப்போன எல்லாருமே  நெடுந்தூரம் ஓடிப் பின்னால் திரும்பிப் பார்க்கிறார்கள். எப்போதாவதுதான் பழையசாரோன் கிராமத்தின் வீடமைப்புகளின் ஜன்னல் வழியே வந்த வெளிச்சத்தை உணரநேரும்; அதன் ஸ்பரிசம் இழந்தவர்களுக்கு பௌதீக அபலாசைக்களில் வெறி தொற்றிவிடும். முன்னோர் வாழ்ந்த மனோகதியில் அமைக்கப்பட்ட சாரோன்தெருக்களில் எப்படி நடந்து வந்தோர்களோ அப்படி நடமாட முடியாமல் போகும். இறந்தவர்களின் பழுப்புநிறப் புகைப்படங்களுக்குக் கீழ் மின் மினி நினைவாஞ்சலி செய்யும் கண்சிமிட்டி. கண்ணாடிச் சட்டமிடப்பட்ட சமத்காரங்களுக்கு என்றுமே இடம் தராத எளிய அந்த மனோ நிலைகளை எங்கு தவறவிட்டார்கள் என தேடிப்பார்க்க வேண்டியதிருக்கும்.  ஒரு கடப்பாரைக்கு மட்டுமே வேலை இருந்தது; அந்த எளிய வீட்டின் உள் ஸ்பரிசங்களில் இருந்த பூர்வீகங்களோடு செம்மண்ணின் கதகதப்பும் காணாமல் போன போது அங்கிருந்த பெயர் தெரியாத செடிகளிடம் அதன் இலைகளில் ஒட்டியிருந்த சுவர் மண்ணில் மட்டில் தாவீதின் அடையாளம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.

தகப்பன் அரூபத்தின் மீது விழுந்த சிறு தூசியை துடைத்து விடுவதில்தான் ஒவ்வொரு காலத்தின் முன் வைக்கப்பட்ட பாரம்பரியமாக வந்த ஏற்பாடாக இருக்கக்கூடும். நகரப் பெருஞ்சுவர்கள் உறிஞ்சி எடுத்துக்கொண்டு கிராமப் புறத்தின் எத்தனையோ உயிர்கள் முகம் தெரியாமல் போன பாதையில் தன் தகப்பனைத் தேடிப்போனான் மரியான். அந்தப்  பெருஞ்சுவரில் போஸ்டராக ஒட்டப்பட்டிருந்தான் மரியான். போவோர் வருவோர் முகத்தில் தகப்பன் அடையாளம் தேடி அடையாளம் இழந்து கொண்டிருந்தான். ஒட்டப்பட்ட இடத்திலிருந்து அசைய முடியவில்லை அவனால். காணாமல் போன முதியவர்கள் எத்தனையோ பேர்  மரியானைக் கடந்து போகிறார்கள். முதியோர்களின் காடுகளாய் இருந்தது நகரம். அந்த முதியவர்கள் எங்கே போகிறார்கள்; திறந்த கதவு வழியே காணாமல் போகிறார்கள்; முதியோர்களின் காடுகளாய் இருந்தது நகரம். அந்த முதியவர்கள் எங்கே போகிறார்கள்; ஜன்னலைத் திறந்து மறைகிறார்கள்; புதைகிறார்கள் கீழே; பக்கம் பக்கமாய் ஒதுங்கித் திரும்புகிறார்கள்; கண்ணில் படாதவாறு எதிரே வருகிறார்கள். கண்ணுக்குள் சிறு புள்ளியாய் இருண்டு மறைவார்கள்; விழுவார்கள் மேலே கண்களில் வரையும் கரு வளையம்; பைத்தியம் ஆவதற்கு முன்பிருக்கும் தனிமையில் உழல்கிறார்கள்; பேச மறுக்கிறார்கள்; தேடிப்போனால் காணாமல் மறைகிறார்கள்; முகம் சுழித்த தாவீதின் அபிநயங்களின் ஆயிரம்  பிரதிகள் மரியான் போன நகரத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன; சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன; பெரிய பெரிய காகிதங்களாக மாற்றி அவனுக்கு எதிரே உள்ள சுவரில் அவர்களும் ஒட்டப்பட்டுள்ளனர். போஸ்டர் கண்களாய் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. எதிரெதிர் சுவர்களில் தகப்பனும் மகனும் ஒட்டப்பட்டு ஒருவரையொருவர் விபரீதமாகப் பார்த்தபடி அடையாளம் தெரியாதவர்களாக அவர்களுக்கு அவர்களே மாறிக்கொண்டிருப்பார்கள். வெளிறிய போஸ்டர்கள் கிழிகின்றன. கதவுகளாய் மூடப்பட்ட முகங்களைத் தட்டித்தட்டி மறைகிறார்கள் அவர்கள். பனியிலும் குளிரிலும் இருளுக்குள் மறைத்த துன்பங்களை யாருக்கும் தெரியாமல் தனியே போர்த்திக்கொள்கிறார்கள். எல்லாப் பொது இடங்களிலும் அனாதைகளாக இருள் போர்வை மூடி இழுத்துச் செல்லப்படுவார்கள்.

தெருவில் வரும் எல்லோருக்கும் தெரியாமல் மெதுவாக உரசி நகரும் தகப்பனின் கால்கள்; அவர் பாதங்கள் அகலமாகி கால்களை எடுத்து வைக்க முடியாமல் வளையும் கால்கள்; நகங்கள் சுருண்ட விரல்களிடையில் கீரல் கீரலாய் நிலம் தெரிகிறது; விரல்கள் காளான்களாகி குமிழ் விட்டு உடல் முழுவதிலும் முளைக்கும் காளான்கள்; நகரும் மரங்களாகி அசையும் காளான் மனிதர்கள் துயரங்களைப் புதைப்பதற்கு இரவெல்லாம் தோண்டிக் கொண்டிருந்த குழிகளில் மல்லாந்து கிடக்கிறார்கள். வினாடியில் உறைந்தவர்கள் சூரியோதயத்துடன் வெறிச்சென்று கிடப்பதை கூட்டம் பார்த்தபடி விலகி நகரும். அடையாளம் தெரியாத உடல் மெதுவாகக் கரைகிறது. அண்ணாந்த தாடிக்குள் வாய்ப்பிழந்த சிரிப்பின் மேல் பைத்தியத்தைப் போல் சிரித்துக்கொண்டு ஆடும் சூரியன். மெல்ல மெல்ல கதிர்கள் குளிர்ந்து மழையாகும்; மின்னல் வெட்டில் அணைந்த விளக்குகள், அறுந்த மின்கம்பியில் தடுக்கி விழுந்த கருப்பு உடல்; இருட்டில் சரிந்து சீறிவரும் மழை, ஓடுகளில் சத்தத்துடன் விழுகிறது. ஓட்டுத் தகரத்திலிருந்து ஓசையுடன் கீழ்நோக்கி விழும் மழைநீர் அண்ணாந்த நெற்றியில் முகத்தில் தாடியில் திறந்த வாயில் விழுந்து ஆயிரம் திசைகளாகப் பிரிந்து ஓடும் இருட்டு நீர். இருளும் மழையும் குளிர்ந்த உடலை மூடி இருக்கிறது. மண்ணாலும் மழையாலும் கழுவப்பட்ட உடலை இருட்டு நீர் நகர்த்திச் செல்லும் ந்திகளுக்கோ கடலுக்கோ அங்கே தண்ணீரின் இருண்ட ஆழங்களில் அவர்கள் புதையக்கூடும்.

நீங்கள் தர மறுக்கும் எதையும், அவர்கள் கொண்டு செல்கிறார்கள். திரும்பியும் தெருக்களில் நடந்து வருகிறார்கள்; திரும்பித்திரும்பி திரும்புகிறார்கள்; நகரும் தெருக்கள் தானே திரும்பி நகர்கின்றன; சாவும் இருளும் திருப்பத்தில் நின்றிருக்கும் அவர்களுக்காகக் காத்திருக்கும் இருள் தெருவில் படர்ந்து சாவின் விரல்கள் நீண்டு வருகின்றன; அவர்களைத் தொடுவதற்காய். தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் நினைவுகள் அற்ற வெறிபிடித்த பாதையில் தெருவில் அழுத்தமடைந்த ரத்தம் சாவு வேகத்தில் நசிவு வேகத்தில் ஓடுகிறவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் உறையும். கழுத்தைத் திருகும் பார்வைக்கு முன்னே அர்த்தம் அர்த்தமின்மைகளின் கிறுக்கல்களாக சுழன்று சுழன்று பைத்தியம் பிடித்துக் கிறுக்கப்படுகிற நிழல் கோடுகளாய் அசைந்தசைந்து சாவின் கேலிச் சித்திரங்களாய் சுவரில் ஆடுகின்றன சிரிப்புச் சாவுகள்; முகங்களாய் நகரும் பெரும் திறளான மௌன நிழல்கள் பூமியின் மறுபக்கம் மறைகிறார்கள். காணாமல்போன தலைகள் சூரியோதயத்துடன் நீண்டு வருகின்றன திரும்பவும். வந்த வழியே நீண்டு தலைகீழாக திரும்புகின்றன பொருட்களில் ஒட்டிக்கொண்டவர்கள் உருவங்களை இழந்து நிழல்களாகிறார்கள்; பெயர்களிலும் பொருட்களிலும் ஒட்டாதவர்கள் நிழல்களாகவும் இருவேறாகிறார்கள்; உருவங்களைத் துரத்தும் நிழல்கள் தனித்தனியாய் பிரிந்து ஓடுகின்றன; எதிரே மோதிக்கொண்டு நிழல்கள் திரும்பவும் எட்டிப்பார்க்கின்றன. சாரோன் கிராமத்திலிருந்து வெளியே மறைந்தவர்கள் மௌன நிழல்களாகத் திரும்பி வருகிறார்கள். சாரோன் வாசிகளுக்கு எல்லாம் தெரிந்திருக்கவேண்டும். நிஜஉருவங்களைத் தேடி அங்கு வருவார்கள். இழந்ததை எல்லாம் அடைவதற்காக வேண்டி சாரோன்கிராமத்தில் மறைந்திருக்கும் பழைய ஆகிருதிகளைத் தேடி திரும்பி வருகிறார்கள். வேகமாக மாறிவிட்ட தாவீதின் வேலியடித்த வீட்டுக்கிள் இருந்த குறுந்திரையைத் தூக்கிக்கொண்டுசந்தடி செய்யாமல் வந்த நிழல்கள் சாரோன்தெருக்களுக்கு வந்து எல்லோரையும் குறுந்திரைக்குள் அழைத்துக் கொண்டு போகிறார்கள்.. காணாமல்போன எல்லாருமே குறுந்திரையிலிருந்து இறங்கி நிழல்களாக அலைகிறார்கள். இரவானதும் கூட்டம் கூட்டமாய் நிழல்கள் வெளியேறி வந்து சாரோன் கிராமத்தின் அடையாளங்களை எடுத்துக்கொண்டு மறைகிறார்கள். எல்லோருமே மறையும் நிழல்களால் வசீகரிக்கப்பட்டு காணாமல் மறைகிறார்கள். எல்லோரையும் அந்த நீல வசீகரத்திரைகள் நிழல்களாக மாற்றி வந்தன. குறுந்திரையில் கண் சிமிட்டும் எலக்ட்ரான் மின்மினி கிருஸ்த்மஸ் இரவுக்குள் வந்து அபூர்வமாய் மிதக்கும் பனித்துகள்களை எடுத்துச்சென்று திரைக்குள்ளிருந்து வருமாறு செய்து கொண்டிருந்தன. வெளியில் இருந்த எல்லாப் பனிப் பூக்களும் திரைக்குள் உதிர்ந்து வெளியே வந்து விழுந்தன. சதுரத் திரையிலிருந்தே  எல்லாம் தோன்ற எல்லோரும் எதிரே அமர்ந்து பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்த கட்டுண்ட நிலையில் எல்லாவற்றையும் பலியிட்டு வந்தான் தாவீது. ஏனோ, கிருஸ்த்மஸ்ஸிற்காக காட்டில் மலரும் கருப்பு டியூலிப் மலரை திரைகளால் வெளியிட முடியவில்லை. சாரோனின் இறகுக்குள் மறைந்திருந்து கருப்பு ட்யூலிப் ஸ்திரீகளின் கண்களை மறைக்கின்றன. பிச்சைக்காரிகளின் கண்மலர்கள் ஏன் பார்க்கத் தவறின. எது எப்படி மாறி விட்டாலும் டிசம்பர் மாத குளிர் மாறிவிடுவதில்லை. ஈஸ்டர் பண்டிகையில் வரும் பழமையான கனவுகள் சாரோன் வாசிகளை ஆட்கொண்டிருந்தன. அவர்கள் கனவுகளில் தோன்றி வரும் அந்தக்கண் தெரியாத இரு பிச்சைக்காரிகளை ஒவ்வோரு காலமும் பார்த்து வருகிறார்கள். கையில் பழங்கால சாலோமோன் சீயோன் வனத்தில் அமைத்துத்தந்த சுரமண்டலத்தில் தம்புரு இசைக்கருவியுடன் கந்தல் பொட்டணங்களை தோளில் சுமந்தபடி தம்புருவின் உயிர் சுருதி பனிநரம்பாக அதிரும். அந்த ஒற்றை நரம்பின் பாதையில் சாரோன் கிராமத்தை நோக்கி வர கனவு பலிப்பதாகவே இருக்கும்.கண் தெரியாத பிச்சைக்காரிகளை எதிர்பார்த்து கைதழுவக் காத்திருக்கும் சாரோன்வாசிகளுக்கு அது தெரியும்; மனிதர்களால் வாழ முடியாத துயரங்களின் ஆழத்திலிருந்து கால் நடையாகவே தேசாந்திரங்களை க் கடந்து வருகிறார்கள். அந்த நாடோடிகளின் பாதைகள் சொன்ன துயரங்களை தம்புருவில் கேட்டு காணாமல் போன பழம் பாடலை மெதுவாக முணுமுணுத்துக்கொண்டே ஊர் ஊராக பிச்சை வாங்கி நடையாக நடந்து வருகிறார்கள். சாரோன் கிராமத்திலிருந்த மூதாட்டிகளுக்கும் விருட்சங்களுக்கும் அவர்களைத் தெரியும். மரபான அந்தப் பாடல் வருவதற்கு முன் காற்றில் தோன்றும்  மாற்றத்திலும் ஏற்ற இறக்கங்களிலும் அந்தப் பாழடைந்த சகோதரிகளின் உருவம் தோன்றிவிடும்.. எங்கிருந்து வருகிறார்கள் இத்தனை ஆவலுடன். சாரோன் கிராமத்திலிருக்கும் மனிதர்களுக்கான இருப்பை நிச்சயப்படுத்துவதற்கான சொற்றோடர்களை வெகு ஆழத்தில் முணுமுணுக்கிறார்கள். வேறு எந்த இசையாலும் இவ்வளவு ஆழத்தில் மனித துக்கத்தை  வாசிக்க முடிந்திருக்கிறதா? தொடப்படாத பல உலகங்களை தன்னோடு கொண்டு வரும் ஏழையான அந்த கண் தெரியாதவர்களே வரும் உலகங்களுக்கான இசையை தர முடியும் போலும். இழந்த ஸ்பரிசங்களை எல்லாம் தம்புருவிலிருந்து எடுத்துத் தர முடியுமா? சாதாரண மூங்கில் களியில்  இணைக்கப்பட்ட ஓட்டை விழுந்த பிச்சைப் பாத்திரத்தில் தூண்டில் நரம்பு இப்படி அதிர்கிறது.  பிச்சைப் பாத்திரத்தின் இசையை சாதாரண முகச் சுழிப்பால் தள்ளிவிட முடியுமா? எந்த மேதாவிலாசத்திலிருக்கும் இசை மேதையின் சமத்காரங்கள் வென்று விடும்? வயல் மீனின் தூண்டில் நரம்பில் சரிந்து வந்த மின் கண்களின் ஆழங்களில் பிச்சைக்காரர்கள் மறைவார்கள். ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாத சகோதரிகள் மனிதர்களை பார்ப்பதற்காக காடோ செடியாகக் கால்தட்டி விழுந்து எழுந்து தட்டழிந்து திரியக்கூடும்? ஒவ்வொரு முகத்தையும் தொட்டுப்பார்த்து திரும்பி வந்து விட்டோம் என்பார்கள். அவர்கள் தங்களுக்காக எதையும் சாரோன் வாசிகளிடம் வேண்டி நிற்கவில்லை.

 அன்பினாலும் துன்பத்தினாலும் மனித அடையாளங்களாலும் அவர்களின் விரல் பற்றி அந்த பாடல்களுக்காக நன்றி சொன்ன சாரோன் கிராமத்து ராஜாவான நம் தகப்பன் குனிந்து அவர்களின் காதுகளில் ரகசியமாய் “எங்கிருந்து வருகிறீர்கள். எங்கெல்லாம் அலைந்து வருகிறீர்கள். என் குமாரர்களைத் தழுவுங்கள். அவன் தாவீது இவன் மரியான் இந்த எளிய கூரைகளின் சார்பாக உங்கள் கதவுகளைத் தொடுகிறேன் ” அவர்களை அணைத்துக்கொண்டபோது அவர் கரடுமுரடான குரலும் நடுங்கியது. தகப்பன் தாவீதிடத்தில் மெதுவாகச் சொன்னான். “என் தாவீது நம்முடைய விருச்சங்களைப் பார். அதன் பசுந்தண்டுகளில் அழகைத் தொடுவதற்கு வேண்டி  ஒவ்வொரு ஈஸ்டரிலும் கண் தெரியாத சகோதரிகள் விருட்சங்களையும் மனிதரையும் பார்க்க வருகிறார்கள். நம்முடைய பாதைகளை எல்லாம் பனியானது மூடும்போது இந்த சகோதரிகள் நம்மிடத்தில் வந்து சேர்ந்தார்களே! உன் தாயானவள் உன் கண் திறப்பதற்கு முன் இந்த சகோதரிகளை அழைத்து வந்து உன் அருகில் இருக்கச் செய்தாள். சகோதரன் மரியானின் கரங்கள் அவர்களைத் தொட்டதால் இசையாக இருக்கிறான். நமது விருந்தினர்களாக எப்போதுமே வருகிறார்கள்” என்றதும் எல்லோரும் கண் தெரியாத பிச்சைக்காரிகளை வீடுவீடாய் அழைத்துக்கொண்டு போய் விருந்தளித்தார்கள். சாரோன்தோட்டத்தில் உள்ள எல்லா இலைகளுக்கும் அவர்களைத் தெரிந்திருக்கவேண்டும். அந்த விருட்சங்கள் தோன்றியது முதலாய் அவர்கள் சாரோன் தோட்டத்திற்கு வருகிறார்கள். தாவீதால் தூக்கி எறியப்பட்ட வுல்காத்தாவின் பழுதடைந்த பைபிள் கதைகளின் நினைவுக்கு முன்பிருந்தே இந்த சாரோன் தோட்டம் இருந்து வருகிறது.  பைபிள் கதைகளின் காவி முப்புற விளிம்புகள் திறந்து காவிநிறக்கதைகள் ஒளிர்வுகொள்ளும். முடிவற்ற தாள் சுருள் வட்டமான கதையாக அடுக்கப்பட்டது. ஏனோ ஒவ்வொரு தாளிலும் விளிம்பில் காவிநிறக்கோடுகொள்ளும். மெல்லிய வரியே கதையாக இருக்கூடும் ஒவ்வொருவர் கண்ணுக்குள் காவிக்கோடுகள் வளைந்து பைபிள் கதைகளின் மறைமுகப் பரப்பைத் திறக்கின்றன. அந்த முப்புற காவி நிறத் தோட்டத்திற்கு அப்பால் முதல்முதலில் கள்ளிக்காடுகளையும் கரடுமுரடான  பரம்புகளையிம் கடந்து வந்த இந்த கண் தெரியாத சகோதரிகளாலும் அவர்களின் இசையாலுமே சாரோன் தோட்டம் பிறந்திருக்கவேண்டும். யாராலும் அனுப்பி வைக்கப்படாத  குருடர்களை  தான்தோன்றியான விருட்சங்களுக்குத் தெரியும். கண் தெரியாத ஸ்திரீகளின் தனிமையான  பாதைகள் தம்புருவில் முளைத்த நரம்பினால் ஆன கண் வழியே யாராலும் உட்புக முடியாத சாரோனின் தோட்டத்திற்கு எல்லாப் பாதை வழியாகவும் இவர்கள் நடந்து போகிறார்கள். இருளால் மூடப்பட்ட பிச்சைக்காரிகள் தன் துன்பத்தையெல்லாம் விரல்களுக்கு நகர்த்தி தொடுஉணர்வினால் உண்டாகும் கண்ணீரின் நிழல்களில் வாழ்கிறார்கள். அதிலிருந்த யார்தான் தப்பிவந்தார்கள். வெண்ணிறமான கண்ணீரில் பிம்பங்கள் அசைகின்றன. நரம்புகள் வெதுவெதுக்கின்றன. கண்தெரியாதோரின் கண்ணீரின் இளஞ்சூட்டினை யார் தாங்க முடியும்.

அதன் இசையில் கழுவப்பட்ட காற்று ஆதரவின்றி அலைக்கழிவதேன்? சாரோன் தோட்டத்திற்குள் எத்தனையோ இலைகளாக இருந்தான் தாவீது. அவன் தாயானவள் இலைமறைவுகளில் விட்ட கண்ணீரில் மறைந்த போனாள். தாயாரைத் தேடித்தான் தாவீது தோட்டத்தின் எல்லா விருட்சங்களிலும் இலையாக மாறியிருக்கிறான். எத்தனை எத்தனையோ விதங்களில் வெளிவந்து இலைகளிடம் ரகஸியமாய் முணுமுணுக்கிறார்கள் அவர்கள். விரல்களால் தொட்டுப் பார்த்து இலைகளிடம் ரகஸியமாய் அழுகிறார்கள்; இனியொருமுறை சந்திப்போமா எது நிச்சயிக்கப்பட்டது. எல்லாமே நிச்சயமின்மையிலிருந்து வருகிறது. திரும்பி வரும்போது தாவீதின் கோடாளிகள் தகப்பனைச் சாய்த்து விடுமானால் சாரோன் ராஜாவும் தோட்டமும் மறைந்து போவார்கள்தானே. இதே இடத்தில் திரும்பி வரும்போது எனக்காகக் காத்திருப்பீர்களாவென்று இலைகளிடம் கேட்கிறார்கள். சதாவும் மாறிக்கொண்டே வந்த இலைகள் அகன்று விரிந்தன. அவர்கள் தொடும்போதே வெகு கூச்சமடைந்து சுருண்டு பின் விரிந்து கொள்ளும். <தட்டச்சு:தீட்சண்யா ரா>கண் தெரியாத ஸ்திரீகளைக் கண்ட  கணத்திலேயே அந்த நிகழ்வு சுருண்டு உலர்ந்து விடும். அந்த நிமிஷமே பலவும் காணாமல் போய்விட்டன. சருகாகித் துணுக்குற்று விழுகின்றன. சருகுத்தோட்டத்திற்குள் போன பிச்சைக்காரிகளுக்காகவும் அவர்கள் கொண்டுவந்த நேயத்திற்காகவும் அந்த இலைகள் வாடி உலர்ந்து உயிர்விட்டு மறைக்கின்றன.  உயிரை அர்ப்பணித்து விட்ட இலைக் கூட்டங்களுக்கிடையே கண் தெரியாத சகோதரிகள் தம்புருவில்  விரல் வைத்து நடுக்கத்துடன் பாடும் ஆழமான காலங்களுக்கு முந்திய பாடலில்  சருகுகளில் உருளும் மனிதர்கள் தீர்க்க முடியாத துயரங்களால் உருண்டு நகர்ந்து வருகிறார்கள். இலைகளால் ஆன நரம்பின் உச்சியிலிருந்து  அகப்பட்டுத் துடிக்கும் மீன்  இறங்கி அதிர்கிறது. சருகுக்குள் துள்ளி வீழ்ந்த மீன் ஒரு திரட்சியான கனியாகிறது. இசையினால் அது கனிந்து கரடுமுரடான மனிதரையும் கரைத்துவிடும். அவர்களின் மிகமெல்லிய அசைவில் துணுக்குறவைக்கும்  துயரங்களுக்காக எப்போதுமே நடமாட்டத்தினால் நிலை குலைந்துபோன மனிதர்கள் மரங்களின் அருகாகவேயிருந்தார்கள். துயரங்களை வேண்டி துயரமாகப் பிறந்த ஒவ்வொரு குழந்தையுமே பிறந்த கணமே தீர்க்கவே முடியாத தவிப்பில் வீழ்ந்து விடும் ஒரு மீனைப்போல. தாவீதின் துயரம்தான் என்ன ? அவன் தகப்பனை விரட்டிவிட்டு சாரோன் தோட்டத்தில்  எப்படி இருந்தான். கண் தெரியாத சகோதிரிகள் இந்த வருஷம் பனியோடும் குளிரோடும் பாழ் விழுந்த முகத்துடன் கையில் தம்புருவுடன் வந்து சேர்கிறார்கள். துடைக்க முடியாத மெளனமும் இருளும் பரவியிருக்கிறது. கண் தெரியாதவர்கள் தன் விரல்களால் அவற்றைத் துடைத்து தாங்கள் இருந்துகொண்டிருக்கும் அந்தகார இருளிலிருந்து கைநீட்டி அவர்களை விரல்களால் நடுக்கத்துடன் ஸ்பரிசிக்கிறார்கள். துடைக்கத் துடைக்க இருள் வந்து விடுகிறது. சேர்ந்திருக்கும் இருளில் விரல் நீட்டி தம்புருவின் ஒற்றை நரம்பை தொடுகிறார்கள். அவர்கள் விரல் பட்டு உயிர்ப்படைத்த எல்லா நிலங்களும்  சாரோன் கிராமத்தைச் சுற்றி இருக்கிறது.

சாரோன் கிராமத்தின் அதே முரட்டு ராஜாவான தாவீது குனிந்து அந்த  கண் தெரியாத பிச்சைக்காரிகளுடன் விரல்களால் பேசுகிறான். தன் தகப்பனை போல பிளந்த உதடுகள் முணுமுணுக்கின்றன. தகப்பனின் மண் விரல்களுக்குள் மறைந்து போன தான்தோன்றியான காட்டுச் செடிகளின் சோகத்தை யாரும் இசைக்க முடியாது போல அவன் கண்கள் ஏங்குகின்றன.  அந்த அபூர்வமான தம்புருவிலிருந்து மரியானையும் காட்டுப் பறவையின் உருவத்தையும் எட்டிய தூரத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறான் தாவீது. மெல்லிய படலம் விரிந்து நடுங்கி மறைகிறது . பனியில்  இலைகள் குளிர்ந்து கொண்டிருக்கும்போது சாதாரண பிச்சைத்தகரத்தில் நரம்புகள் அதிரும்போது காணாமல் போன காட்டுச் செடிகளும் அபூர்வ தோட்டமும்; வரக்கூடுமென நம்ப முடியுமா? <தட்டச்சு:தீட்சண்யா ரா>
                                                                                                                        புரட்டாசி
                                                                                                                       யுவ வருஷம்
தட்டச்சு : ரா ரா கு, தீட்சண்யா ரா
நன்றி : உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை - கோணங்கியின் சிறுகதைத் தொகுப்பு - நூல்-அகம் வெளியீடு.




சலூன் நாற்காலியில் சுழன்றபடி  |  saloon natkaliyil sulandrapadi  |  

சலூன் நாற்காலியில் சுழன்றபடி

By  கோணங்கி
வகை :  சிறுகதைகள்
விலை : Rs. 400.00      
கோணங்கி அவர்கள் எழுதியது. இங்கே முதல் 70 கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
      எரிந்த கற்கள் காகங்களாகி பறக்க வளைந்திருக்கிறது கழுதைப் பாறை. எல்லா வேடங்களையும் கற்று நடித்தவன். இறுதி காலத்தில் தனிமையை அடைய முடியாமல் ஒப்பனை மேஜைகள் எல்லாம் வண்ணத்திற்றல்களும்  கரும் புருவங்களும் மை குடித்த விழி வனைவுகளும் டப்பிகளும் வாசனாதி தைலங்களும்  திரு மஞ்சண அறைப் பெண்களும் எண்ணைக் காப்பிட்ட ஸ்திரிபார்ட்களும் ஓடும் உடும்பை பிடித்து கஞ்சிராவில் பூட்டி அதிர்ந்த ஜாருகமங்களில் கட்டுகதைகள் எரிய சிவப்பு ஏல விளக்கின் உப்பு வெளிர் நீலம்  மற்றும் கரிய வெளிர் கோடுகளும் தைலச் சக்கை பூசிய பெண் கதா பாத்திரங்களால் வீசப்பட்ட கத்திகள் கேட்ட புனைவின் குருதியால் வொல்வதற்கு நிறையவே இருக்கும் கதைகள் நிசப்த்தில் தன் கண்களை போன்ற மீன் நீலத்தில் குரலெடுத்து சொல்ல விரைகறான். ....
clip