Pages

Tuesday, August 26, 2014

திரிகுண சங்கீதம் - பிரம்மராஜன்

திரிகுண சங்கீதம் - பிரம்மராஜன்

நீங்கள் நீங்கிய நாளில் தொடங்கிய
தும்புருவனின் குரல் நிற்பதாயில்லை
நித்திய அசுரச் சுருதியின் ரீங்கரிப்பு
நனைக்க வேண்டிய பாலையின் பரப்புகளை
நினைத்தும்
அவன் திரிகுண சங்கீதம்
நுரைத்து
பொங்கிக் குமுறுகிறது
மஹா சக்தி கோபமும் விரோதமும் தணிய
கதக் நாட்டியக்காரியைப் போன்றோ
ஒத்துக் கலைஞனைப் போன்றோ
கிராமத்து ராட்டினக் குடை எனவோ
அவன் பிரவாகிக்கிறான் தன் கானத்தை
மகிஷன்
செருக்கழிந்தாலும்
குடல் மாலைகள் சூடியும் கூட
குரோதம் கொப்புளிக்கிறது
அகிலமும் அண்டங்களும்
விசை கூடித் தரிகெட
அந்நியப் பிரபஞ்சமொன்றில் உரசிவிடலாம் அபாயம்
களிம்பும் பழுப்பும் லட்சணமான விக்ரகங்கள்
நாசிகளில் குருதித் தாரை
சிறிய பறவைக்கென்ன தோன்றும்
பயத்தில் பீதியில்
இப்பொழுது அவன் குரலைப்
பெண்ணுடையதென்றோ
ஆணுடையதென்றோ
சொல்லவியலாது.