Pages

Sunday, March 27, 2016

தாத்தாவின் பேனா - கோணங்கி

________________

12 Ο Ο தாத்தாவின் பேனா
 - கோணங்கி
https://siliconshelf.wordpress.com/
தாத்தாவின் பேனா 1.png - konangi_thaatthaavin_penaa.pdf
automated google ocr

ஸ்ரீ ஸ்ரீ பொன்னி அம்மணி அவர்களுக்கு:

வன்ராஜ் மாமாவின் வந்தனங்கள் பல. உன் அம்மாவின் கடிதத்தில் குட்டிக்கதை எழுதியதற்கு பெரீய்ய சபாஷ். உன் முத்து மீனாச்சியின் குட்டிக் கடிதம் மாமாவின் தலையில் குட்டு வைத்து விட்டது. உங்கள் கடிதங்களை பத்திரமாக வைத்துவிட்டேன். எனது நண்பர்களுக்கு காட்டலாமா. மாமாவை திட்டமாட்டியே. சீனா பொம்மை கேட்டு எழுதி யிருந்தாய். பாண்டிபஜாருக்கு நானும் ஜெயபால் மாமாவும் போனோம். ஜெயபால் மாமாவுக்கு சீனா பொம்மைக்காரனைத்தெரியும். ஆறுவாத்து பொம்மைகளை உடனே வாங்கி விட்டார் ஜெயபால் மாமா. ஆறு வேண்டாமே என்றேன். வாத்துகளை தனியே மிதக்கவிடலாமா. கூட்டமாகத் தானே ஆற்றில் மிதக்கின்றன என்றார். ஜெயபால் மாமா ஊரில் பெரீய்ய ஆறு இருக்கிறதாம், ரொம்ப வாத்துக்களும்.

இன்னும் பொம்மைகள் பலப்பல. முயல் பொம்மை பிடிக்குமா. எலி பொம்மை பிடிக்குமா. குருவி பொம்மை பிடிக்குமா. காக்கா பொம்மையும் இருக்கிறது. தோகை விரித்த மயில் பொம்மை. குட்டிமான்களும் கலைமானும் வேண்டுமா. சிப்பி யில் வண்ணம் தீட்டிய கோழிகள் இருக்கின்றன. சிப்பி வாத்துக் கழுத்து நீண்டது. -

நீ கேட்ட ரயில் பொம்மையை தேடினோம். ஒடும் ரயில் பொம்மை கிடைக்காதே. ஜெயபால் மாமா உனக்காக கெலிடாஸ் கோப் ஒன்று வாங்கினார். தயவு செய்து அதை ஏற்றுக் கொள். மயிலை விடவும் நூறு நூறு தோகை உண்டாகும். ஒரு கண் வைத்து பார்க்கலாம். இதைப்பற்றி என்ன சொல்ல...! எல்லாம் நேரில், நிற்க. நீ கேட்ட பேனாவே கிடைத்து விட்டது, டப்பாவுடன். பெட்டியில் துணிக்கடியில் பத்திரமாக இருக்கிறது. அபூர்வ குட்டிப்பேனாவாக்கும். தினமும் அதை எடுத்து பார்த்து விட்டு பெட்டியில் வைத்து முடிவிடுவேன். -

உன் ஸ்கூல் சினேகிதியான முத்துமீனாச்சிக்கு குட்டிப் பேனா வாங்கிவிடவா. வாங்கி விட்டால் மூக்கை உரித்து விட மாட்டாளே அவளுக்குப் பிடித்தவற்றை எழுத உனக்கொன்று வாங்கினால் அவளுக்கும் வேண்டுமே.

அன்று உன்னோடு முத்துமீனாச்சியை பள்ளி செல்லும் பாதையில் பார்த்தேன். சின்ன பாவாடை கட்டி பிரில் வைத்த வெள்ளை சட்டை போட்டிருந்தீர்கள். உங்களுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தேன். போகிறவர் வருகிறவர்களை எல்லாம் பார்த்து அப்பப்பா...! இவ்வளவு கிண்டலா. உன் முத்துமீனாச்சியின் வெடுக்கென்ற வார்த்தையில் கேலி எங்கிருந்து தான் உதிக்கிறதோ. முத்து மீனாச்சி அம்மணிக்கும் சபாஷ் போடுவேன். இப்படி ஜோடி சேர்ந்து விட்டீர்களே. பிரம்மா உங்கள் இருவர் மூக்கையும் ஒரே சமயத்தில் செய்து ஒட்ட வைத்தார். போலும். மற்ற பிள்ளைகள் வகுப்பில் என்ன பாடு படப்போகிறார்களோ, கடவுளே அவர்களை காப்பாற்று.

உன் அம்மா அப்படி இருந்தாள். நானும் அவளும் தாத்தா ஊரில் இருந்த போது எங்கள் பள்ளிக்கூடத்திற்கு ரெண்டு கல் தொலைவு நடந்து படித்தோம். காடும் வழிமறிக்கும். வெள்ளைநிற மண்பாதை வளைந்து வளைந்து சரியும். மரங்கள் இருந்தன. சிறகை கோதிய பறவைகள் இருந்தன. பெயர் தெரியாத செடிகள். செடியில் நின்று உடனே பறக்கும் தட்டான் இருந்தது உன் அம்மா இருக்காளே... தட்டானைப் பிடிக்க மெதுவாக அசைந்து இடுக்கி மாதிரி விரலை வைத்துக் கொண்டு நீளமாய் நீட்டினாள். தட்டானின் நீண்ட வால் இன்னும் நீண்டது. தட்டானுக்குத் தான் எல்லாம் தெரியுமே உடனே ஏமாற்றி விடும். அதன் கருப்பு புள்ளிவைத்த சருகுச் சிறகால் என்னமாய் உயர எழுந்து போனது. கூட்டமாய் மிதக்கிற தட்டான் மேலும் கீழும் வந்து வந்து பாடும். ஆகாய விமானங்களின் வீட்டை விட அதிதொலைவில் இருந்த வீட்டுக்கு தட்டான் பறந்து போனது பள்ளி செல்லும் பாதை நீண்டு செல்லும் சமயத்தில் நினைத்த படி சுருங்கிக் கொள்ளும். நீட்டலாம் பாதையை மடக்கலாம். எங்கள் பாதை அப்படி.

நீங்கள் எப்படிப் போவீர்கள். அதிக நெரிசலான இடத்தில் வளைந்து நெளிந்து போகும் விந்தைத் தெருக்களில் உன் முத்துமீனாச்சியின் குரல் கேட்காத நாளே இராது இல்லையா. அப்படிப் பேச யாருக்கு வரும் என் கூடப்படித்த, பெண் பிள்ளை அப்படி யாருமில்லையே... முத்துமீனாச்சிக்கு வந் தனங்கள் பலப்பல. நிற்க.

உன் அம்மாவிடம் சொல்ல வேண்டாத சேதியும் சொல்ல வேண்டிய சேதியும் பற்றி உனக்கு தெரியுமோ. உன் அம்மாவிடம் குட்டிப்பேனா ஒன்று இருந்தது. அதைத்தான் எவ்வளவு அழகான ஜாமிட்டரி பாக்ஸில் அவள் பத்திரமாக வைத்திருந்தாள். சாத்தூரிலிருந்து தாத்தாதான் குட்டிப் பேனாவை வாங்கி வந்தார் பாப்பாவுக்கு. பேனாவுக்காக அவளோட சண்டை பிடித்தேன் என்று உன் அம்மாவிடம் சொல்லாதே அப்படி, ஒரு பேனாவை உனக்கு வாங்கி இருக்கிறேன் என்றும் சொல்லாதே.

அன்று பேனா வாங்கியதிலிருந்து உன் அம்மாவின் எழுத்துக்கள் உடனே மாறிவிட்டன. தாத்தாவின் வீச்செழுத்தால் கவரப்பட்டாளோ என்னமோ அவளால் தி வரைவது கஷ்டம். உடனே தாத்தா மாதிரி கூட்டெழுத்தில் தி வரைந் தாள். '' வரைந்தால் கீழே இறங்கும் கொம்பில் அதிகமாக பேனாவினால் பட்டை அடிப்பது அவளுக்குப் பிடிக்கும். அன்று முதல் தாத்தா எழுத்தை அவள் தான் எழுதினாள். நாங்கள் எல்லோரும் பிச்சு புடுங்கிவிட்டோம் அவளை. அவள் எழுத்துக்கள் தாத்தாவின் சாயலைப் பெறுவதற்கு என்ன காரணம் என்று யாருக்குமே தெரியாது. -

ஜாமிட்டரி பாக்ஸில் உள்ள கருவிகளை கடித்துக் கடித்து பல் பதிந்தது. பிளாஸ்டிக் ஸ்கேலை கரும்பிக் கரும்பி அதனால் கோடுபோட முடியாமல் போய்விட்டது. டெசி மீட்டரையும் செ.மீட்டரையும் மென்றுமுழுங்கினாள். கோடுகள் அழிந்தன. ஆனால் ஜாமிட்டரி பாக்ஸ்-க்கு அதிசயப் பொருட்கள் வந்து விட்டன. அதே மாதிரி குடும்பித் தாத்தாவின் பீரோவும் அரக்கன்குகை. தாத்தாவின் பீரோவில் இரண்டு கண்ணாடி கிளாஸ் நிறைய உடைந்த பேனாக்களும் இங்கிலாந்து பென் சில்களும் இரண்டு பக்கம் சீவிய காப்பிங் பென்சில்களும் இருந்தன. 


தாத்தா பீரோவை திறக்கும் போது கிர்ர்ர்ர்ர்ர் ரென்ற குகைக் கதவு திறக்கும். இடுப்பில் அரைஞாண் கயிற்றில் தொங்கும் சாவிக் கொத்தில் பீரோ சாவியே மூன்று துவாரங்கள் உள்ளது. பீரோ திறக்கும் போது 'கடக்" கென்ற சத்தம்  துணுக்காக கேட்கும். அப்போது கதவுக்குப்பின்னால் ஒளிந்து பார்த்தால் எல்லாம் தெரியும். பாப்பாவும் தாத்தாவும் குகைக்குள் எட்டிப்பார்த்தார்கள். பாப்பாவின் இமை விரித்த கண் ணில் குகையில் உள்ள பொருட்கள் புலப்பட்டன. பாப்பா இன்னும் தலையை நீட்டினாள். ரெட்டைச் சடை அசைந்தது. தாத்தா வைத்திருந்த ரகஸிய அறைகளை பாப்பாவுக்கு மட்டும் காட்டினார். - -
தாத்தாவிடமிருந்த இரும்புத் துண்டுகள் காதறுந்த ஊசிகள் களிமண் சீசாக்கள் விதவிதமான கத்திகள் உறையில் இருந் தன. பாப்பா அவற்றையெல்லாம் தொட்டுப் பார்க்கலாம். வெளியில் எடுக்கக் கூடாது. தாத்தாவுக்கு அந்தப் பொருட் கள் மேல் இருந்த ஆசை அளவில் அடங்காது. அவர் பீரோ விலிருந்து பேனா மூடி, பேனா கட்டை கிளிப் நிப்பு வெவ்வேறு கலரில் எடுத்து எடுத்துக் காட்டினார். கண்ணாடி கிளாசை வெளியில் எடுத்து வைத்து புதிய பேனா சேர்த்தார். பலநிறம் கொண்ட பேனா உருவாகிவிட்டது. திரும்பவும் எடுத்தவற்றை சரியாக உள்ளனவர் என்று எண்ணிப்பார்த்து விட்டுக் குகையை மூடினார். தாத்தா மடியில் அவரே சேர்த்த பேனா இருக்கிறது. அவரது வீச்செழுத்துக்காக பலர் வந்து காத்திருந்தார்கள் திருணையில்.

பாட்டி தான் வெத்தலை உரலுடன் திருணையில் அமர்ந்து இடித்துக் கொண்டிருந்தாள். பாட்டி முதுகுக்குப் பின்னால் பதுங்கி எட்டிப்பார்த்தேன். -

அடே...அய்யா. பாட்டிகிட்ட கொஞ்சம் போயிலை வாங்கி கொண்டா சாமி... என்று வாஞ்சையாக அழைத்து செய்த தவறுக்கெல்லாம் சேர்த்து இடுப்பைக் கிள்ளி அழவைப்பார். ரத்தம் கன்றிப்போய் கதறி அழுவேன். ராத்திரியில் என் கழுத்தைச் சேர்த்து கட்டித்துங்கும் தாத்தாவின் உடம்பில் வெத்திலை நெடி. -

படுக்கையில் ஒன்றுக்கு இருந்து விடுவான் என்று தொடை யில் கிள்ளி எழுப்புவார். தூக்கச்சடவில் உரல்பக்கம் கூட்டிப் போய் இருக்கவிட்டு இருந்திட்டியாய்யா' என்று கையைப் பிடித்து கொண்டு வந்து தூங்கவைப்பார் தாத்தா. மழைக்காலம் வந்து விட்டால் தாத்தாவிடமிருந்து கதைகள் வரும். கேட்கவே கேட்காத சமயத்தில், தாத்தாவின் அதிசய குகை திறந்து கதை வரும்.

தாத்த எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருப்பார். அவர் கதைகள் யாருக்குத் தெரியும். புராணம் படித்து பாராயணம்பாடி மடங்களில் தீப்பந்தம் ஏற்றிய நாளில் வருஷா வருஷம் தாத்தாவின் புராணக்கதை நடக்கும். எல்லாம் மழை நர்ட் கள். ஈரச் சுவட்டில் நடந்து வந்து வீடு சேர்வார். தாத்தா வின் கருப்பு உடம்பில் நெஞ்சுக்குழியில் முக்ம் புதைத்து தூங் கும் பாப்பாவுக்கு வாயிலிருந்து எச்சில் வடியும். பாப்பாவுக்கு தாத்தாதான் சீவி சடைப்போட்டு ரிப்பன் கட்டி விட்டு பட்டுப்பொம்மையை அலங்கரிப்பது போல் அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பி வைப்பார். பாப்பாவின் செம்பட்டை தலையில் அழகான ஜடை அசையும். அப்போது எல்லாரும் அவளை பொம்மக்கா' என்றார்கள். உடனே ல்... லென்று அழுது விடுவாள், ல்... குரங்கு, பாப்பாவின் 'டோலாக்கு அசையும் பள்ளித் தெருவில் கூடவே போகப் போக பாதையும் | நீண்டு செல்லும்.

o

பாப்பாவுக்குத்தான் தாத்தாவின் கனவுகளைப் பற்றிதெரியும். நெல் அறுப்புச்சமயத்தில் தாத்தாவின் குதியாளம் தாங்காது. இவைக்கோல் போரில் நானும் பாப்பாவும் படுத்தபடி பேசுவோம்.
 -
அப்போது தாத்தாவருவார் இருட்டில் சாவிமணி ஓசையுடன்.தாத்தா இடுப்பிலிருந்து அஞ்சுபைசா அல்வாத்துண்டு சதுரமாய் வெளிவரும். திரிதிரி பொம்பக்கா விளையாட்டில் பாப்பா தான் ஜெயிக்கிறாள். தோற்றுப்போன தாத்தாவுக்கு குட்டு விடுவாள். தாத்தாவின் குடுமியைப் பிடித்து ஆட்டுவாள். 'அய்யோ வலிக்கே...அய்யோ வலிக்கே...என்று தாத்தா கத்துவார். களத்துமேட்டில் ஏகப்பட்ட சிரிப்பு வரும்.

உடனே காளியங்கோயில் சுவர்களுக்குள் ஒளிந்து கொண்டோம். வரட்டா... வரட்டா... என்று தாத்தா வைக்கோல் போருக்குள்ளிருந்து வெளிப்படுவார் வைக்கோல் பூதமாக.

வைக்கோல் போருக்குள் போன தாத்தாவை காணவில்லை. சுற்றி நின்று அழைத்தாலும் வரமாட்டார். ஆனால் தாத்தா செய்து கொடுத்த பேனா மட்டும் கிடைத்தது. தாத்தாவின் பேனாவில் இருந்துதான் குட்டிக்கதை வரும். தாத்தாவே சேர்த்த பேனாவுக்குள்ளிருக்கும் பழைய குகை. உள்ளே கருப்பு மை ஓடுகிற சத்தம் கேட்கிறது. குகைக்குள் என்ன இருக்கிறதென்று கடவுளுக்கே தெரியாது. தாத்தாவின் பேனாவைத்தான் எல்லாரும் வைத்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் உன் அம்மாவிடம் சொல்லாதே. முத்து மீனாச்சிக்கும் குட்டிபேனா வாங்கிவிடுவதென்று உனக்கு கடிதம் எழுதும் போதே கிளி சீட்டை எடுத்து விட்டது. கிளி சொல்கிறது 'முத்துமீனாச்சிக்கு பேனா வாங்கிக்குடு' என்று. உனக்கு சம்மதம்தானே. யார் யாருக்கோ மாமா கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன். சரியாக எழுத்து வரவில்லை. உங்களுக்கு எழுத எழுத கோடு வருகிறது. பேனாவுக்குள்ளிருக்கும் தாத்தாவின் விரல்கள் வெளிப்பட்டு விடும். அதற்காகவே தாத்தா விட்டுச் சென்ற பலநிற கூட்டுப் பேனாவை பத்திரமாக என் ஜேப்பில் வைத்திருக்கிறேன். பேனாவின் அடித்துார்வரை ஆழம் வரை வறண்டுவிட்டது. ஆனாலும் உள்ளே குகைக்குள் செல்லச்செல்ல கடலின் ஓசை கேட்கிறது. புயலின் அசைவு கேட்கிறது. களிமண்ணைப் பிசைந்து பிசைந்து வலித்த கரங்களால் தாத்தா செய்து கொடுத்த பேனாவை தொலைக்க மாட்டேன். உனக்காகவே பத்திர மாக வைத்திருக்கிறேன். அம்மணி கடிதம் போடுங்கள் தாயே. முத்துமீனாச்சிக்கு மீண்டும் வந்தனங்கள் பெண்ணே. உங்கள் கடிதத்தை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன். வேகமாக எழுதிடுவீரே.

தங்கள் அன்புமறவா,
வனராஜ்.

72 0 கோணங்கி - - - கொல்லனின் ஆறு பெண்மக்கள் 0