Pages

Friday, April 29, 2016

இடைவெளி - சம்பத் 1 - Idaiveli A novel in Tamil by S. Sampath - 1

 Automated Google-Ocr + half an hour proofing work for 45 to 50 days
மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைவெளி - சம்பத்
Idaiveli A novel in Tamil by S. Sampath
Copyright: S. Sampath
First Edition: June 1984
Published by
Cre - A: 268 Royapettah High Road Madras 600 014
Phone: 8405 86
Printed at Annam Printers Madras 600 014

சமர்ப்பணம் :
அம்மாவுக்கு

இந்த நாவல் சாவு என்கிற பிரச்சினையை மையமாகக் கொண்டிருக்கிறது. எப்போதும் அடிப்படை விஷயங்களில் உழல்பவன் நான். என் எழுத்துகளில் சாதாரணமாக இந்த ஒரு நிலையைக் காணலாம் என்றே நினைக்கிறேன். ஆனால் இதைப்பற்றியெல்லாம் காலம்தான் கூற வேண்டும்.
  
சாவு என்னைப் பிரச்சினையாக ஈர்த்தவிதம் இவ்வாறாக அமைகிறது. கடைசி பட்சத்தில் எல்லாம் போய் விடுகிறது எல்லாமேதானே! இதற்கு என்ன செய்வது! இந்த ஒரு எண்ணம் என்னை ரொம்பவும் சின்ன வயதிலேயே தொற்றியிருக்க வேண்டும். இதுநாள்வரை விடவில்லை. பெரிய தற்கொலைத்தனமான எண்ணமாக இருப்பினும் கடைசியில் என் அனுபவத்திற்கு எட்டியவரை எனக்கு ஒரு மகத்தான உண்மையை இது உணர்த்திவிட்டது என்றே நம்புகிறேன். 
  
நான் பல டாக்டர்களையும் மருத்துவ மாணவர்களையும் சந்தித்து, இதுபற்றிப் பேசி விவாதித்து சில விஷயங்களை அறிந்துகொள்ள யத்தனித்த போதெல்லாம் தோல்வி அடைந்தேன். அவர்கள் எல்லோரும், அவர்கள் புஸ்தக எல்லைகளில் நிற்கிறார்கள். நான் இதை ஒரு குற்றமாகக் கண்டு குறைகூற விழையவில்லை. இம்மாதிரியான பெரிய விஷயங்களில் கற்பனை வளமற்று இருக்கிறார்களே என்று வருத்தமாக இருக்கிறது. ஆனால் மருத்துவத்திற்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமுமற்ற நிலையில் எனக்கு இவ்வாறெல்லாம் தோன்ற, மருத்துவத்தில் இருப்பவனுக்கு நட்சத்திரங்களைப்பற்றி ஒரு அனுமானம், ஊகம் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்? இயற்கையில், நிஜமாகவே, பலவித ஆச்சர்யங்கள் புதைந்து கிடக்கத்தான் செய்கின்றன. 

ஒருவிதமாகப் பார்க்கும்போது, இது ஒரு ஆன்மாவின், ஒரு கைதேர்ந்த அறிவின் சத்திய சோதனையாக மிளிர்கிறது. இன்னுெரு விதமாகப் பார்க்கும்போது, விவரிக்க முடியாத சிக்கல்களைக் கொண்ட பிரபஞ்சம், ஏதோ ஒரு கனிவில், மனிதனிடம் காட்டும் ஞானப் பிச்சையாகத்தான் இம்மாதிரியான எண்ண ஒட்டங்களைக் கற்பிதம் செய்ய முடிகிறது. 

இந்நாவல் தெறிகள் காலாண்டு இதழில் வெளியானது. வெளியிட்ட உமாபதிக்கு நன்றி.

எஸ். சம்பத்


தினகரனை ரொம்பவும் வாட்டிய ஒரு விஷயம் ஆண்-பெண் உறவு என்பது எல்லோரும் முன்னமே அறிந்ததுதான்; அதில் அவர் எவ்வளவு தூரத்திற்கு ஈர்த்துக்கொள்ளப் பட்டாரோ அதைவிடப் பன்மடங்கு அதிக் சக்தியுடன் அவரை ஒரு பிரச்சினை ஆட்கொண்டது - அதுதான் சாவு. சொல்லப்போனால் இந்த இரு அகோர உண்மைகளிலும் அவர் ‘ஸி-ஸா’ ஆடிக்கொண்டிருந்தார். சாவு கடைசி பட்ச உண்மை என்பது எவ்வளவு நிஜமோ அவ்வளவுக்கு வாழ்க்கையையும், உயிர் இயக்கத்தையும் கடைசிபட்ச உண்மையாக அவர் கண்டார். சமுதாயமே சிந்துவெளி அமுத்தலாகப் போய்விடட்டுமே; மீண்டும் எங்கோ அது முளைக்கத்தானே செய்கிறது! தழைக்கத்தானே செய்கிறது; வாஸ்தவம்தான். ஆனால் எப்போதும்போல் சாவு நிச்சயம் என்று ஆனபின் வாழ்வுதான் முக்கியம், உயிர்தான் முக்கியம் என்கிற ஒரு அரைவேக்காடான பொருள் சித்தாந்தத் தத்துவத்தில் சரண் அடைய அவர் ஆசைப்படவில்லை. ஆசைப்படவில்லை என்றும் சொல்லிவிட முடியாது. சில விதங்களில் பொருள் தத்துவார்த்த சித்தாந்திகளுக்கெல்லாம், தாத்தா'வாக அவர் தன்னை உணர்வதுண்டு. ஆனால் இந்த உணர்வு, ஆண்-பெண் உறவு விஷயத்தில் இனிமேல் நீடிக்காதோ என்பதை ஒருவித லஜ்ஜையுடன் அவர் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. நாற்பது வயதிற்குள் தலை எல்லாம் ‘பொல்'லென்று நரைத்துவிட்டது. மார்புக்குச் சற்று மேலே எப்போதும் ஒரு கனம். இதோடு சாவு, வாழ்வு, பிரபஞ்சம், காதல், இப்படியெல்லாம் அடிக்கடி சிந்திப்பதினாலோ என்னவோ தலை சுற்றல் வேறு வந்து கொண்டிருந்தது. ஸ்டாலின் தானே அது? - தனிமனிதன் செத்தால் பரிதாபம், பல்லாயிரம் செத்தால் புள்ளிவிபரம் என்று சொன்னது? இந்த வார்த்தைகளின் கடைசிபட்சமான சாராம்சம் எப்ப்டி வேண்டுமானலும் இருந்து போகட்டும் - ஸ்டாலினே, யாரோ! யாராயிருந்தாலென்ன, அப்படிச்சொன்னவன் 'தன்வரை’யில் அதைப்பற்றிப் பெரிதும் சிந்தித்திருக்கிறான் என்பதுவரை உண்மை. இதுதான் முக்கியமும்கூட இவ்விதத்தில், இப்படிப் பார்க்கும்போது, தினகரனும் யோசனை மிக்கவர் . வாழ்வையும் காதலையும் எவ்வளவு தூரத்திற்குப் படித்து, யோசித்து, செயல்பட்டு அனுபவித்திருக்கிருரோ அதே அளவுக்கு சாவைப்பற்றியும் அவர் சிந்தித்திருக்கிறார். டால்ஸ்டாய், தாஸ்தோயெவ்ஸ்கி, ஷேக்ஸ்பியர் இன்னும் சாவைப்பற்றிச் சொல்லேன்' என்று கேட்ட அந்தப் பையனைக்கொண்ட உபநிஷத் வரை எல்லாம் படித்தாயிற்று. எல்லோருக்கும் சாவு பெப்பே சொல்லிவிட்டிருந்தது. தினகரனுக்கு தாஸ்தாயெவ்ஸ்கியை ரொம்பப் பிடிக்கும். காரணம், அவர் ஏசு கிறிஸ்துவை, ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது, கடைசிபட்சமாக அசைக்கமுடியாத அளவுக்கு ஓர் கண்டன விமர்சனம் பண்ணப்போயிருக்கிறார். இது தினகரனுக்கு ரொம்பவும் முக்கியமாகப்பட்டது. ஏசுவை தினகரனுக்குப் பிடிக்கும். ஆனால் எண்ண ரூபமான எதையுமே எதிர் கொள்ளத்தானே வேண்டும்? (இப்படிப் பார்க்கும்போது நம்முடைய வேதங்களும் உபநிஷத்துகளும் இந்தமாதிரியான பரிசீலனைக்கு இன்னமும் உட்படவில்லை) சாவின் வாயிலேயே சென்று திரும்பியவர் எனும்விதத்தில் தாஸ்தாயெவ்ஸ்கி சாவையும்பற்றி ஏதாவது முடிவார்த்தமாக நிச்சயமாகச் சொல்லுவார் என்று தினகரன் எதிர்பார்த்தார். ஆனல் தாஸ்தாயெல்ஸ்கி பல நாவல்களிலும் சாவைப்பற்றிப் பேசியிருந்தாலும், அவரால் சாவைப் பற்றித் திட்டவட்டமாக ஒன்றும் சொல்ல முடியவில்லை. காரணம், அவரால் சிந்திக்க முடியவில்லை என்பதல்ல; ஒரு சட்டம், இன்னொரு உயிரை எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்று அவர் சாவை ஒரு சமுதாயப் பிர்ச்சினையாகக் கண்டு அதில் முழுத் தீவிரத்துடன் பிரவேசித்துவிட்டதுதான் அதற்குக் காரணம் என்று நினைத்தார்.

தாஸ்தாயெவ்ஸ்கியைப் படித்ததினாலோ என்னவோ, சாதாரணமாகப் பேப்பரைத் திறந்தால் ஏதேனும் கொலை வழக்கு வந்திருக்கிறதா என்று பார்க்கத் தவறமாட்டார், தினகரன். முக்கியமாக வேலையிலிருந்து ஓய்வுபெற்ற ஒரு நீதிபதி தன்னுடைய மூன்று பெண்களைக் கொலைசெய்து வீட்டின் பின்புறம் புதைத்து தூக்குமேடைக்குப் போனது அவரை ரொம்பவும் பாதித்திருந்தது. தினகரன்கூட ஒரு காலகட்டத்தில் தற்கொலைபற்றி  தீவிரமாகச் சிந்தித்தவர்தான். காரணம், கல்பனா என்கிற பெண் விஷயம்தான். பலவிதங்களிலும் கல்பனா இவரை ஒப்புக் கொள்ளத்தான் செய்தாள். இருந்தும் இவர் காட்டிய தீவிரம் அவளுக்குக் கடைசிவரை வேடிக்கையாகத்தான் இருந்தது. அது எப்படி வேண்டுமானலும் போகட்டும். ஆனல் துணிந்து மொட்டை மாடியை அடைந்து குதிக்க நின்றவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை எப்பெயரிட்டு அழைப்பது; எங்கோ தாம் சாவையும் கடந்துவிட்டதாகத் திண்ணமாகப்பட்டதினால்தான் அவ்ர் தற்கொலை முயற்சியைக் கைவிட்டார். அன்று அவர் மொட்டை மாடியில் நின்றபோது ஒரே ஒரு கணத்திற்கு, தன்னைக் கீழே, அதலபதாளத் தரையில் பிணமாகக் கண்டார். அப்போது, அந்த நிலையில் சுற்றிலும் ஒரு மெளனம் தேங்கியிருந்தது. குலுங்கக் குலுங்க அழுது, தன்னை முற்றிலும் காலியாக்கிக்கொண்ட பிற்கு மூளையில், உடம்பில், எங்கெல்லாமோ குடிகொண்டிருந்த நிசப்தத்தை அவரால் எப்போதும் நினைவுகூர முடிந்தது. கடைசியில், எல்லாவற்றையும தாண்டி ஓர் நிசப்தம் நிலவுகிறது. இந்த நிசப்தத்தைத்தான் அவர் ரொம்ப நாட்களுக்கு சாவு' என்று நம்பிக்கொண்டிருந் தார். ஆனால் நிச்சயமாக அப்போது அவர் தரிசித்த நிசப்தம் சாவுக்கும் அப்பாற்பட்டது என்று அவருக்குப் பின்னர் தோன்றக் காரணம் இருந்தது. இதற்கெல்லாம் என்ன நிரூபணங்களா கொடுக்க முடியும்?

அதற்கு வருமுன் இன்னொரு விஷயமும் இங்கு சொல்லிவிட வேண்டியதாய் இருக்கிறது. அன்று இவர் அங்கு நின்ற போது, பால் பொங்குவதுபோல், தரை அவர் நின்ற விளிம்புவரை பொங்கி மேல்வருவதுபோல் ஓர் துல்லியமான காட்சியைக் கண்டார். அதுதான் உயிரின் முறையீடு: மனிதனுக்கு எல்லையற்றதே போன்ற ஒரு வீம்பு சாத்தியமே எனினும் சாவைக் கடக்கிறேன் என்று சாவைத் தழவப் போகும்போது உயிர் அவனிடம் - அவன் வீம்பினிடம் - கொஞ்சம் கீழிறங்கிக் கெஞ்சுகிறது. தனித்து நின்று, தன் இயக்கத்தில்... சொல்வது புரிகிறதா? தனித்து நின்று, அதன் இயக்கத்தில், அதனில் ஒரு முறையீட்டைத் காண முடிகிறது. இது அவரைப் பெரும் அதிசயத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ‘இது என்னடா கூத்து தினகரன்' என்று அவர் வாய்விட்டும் சில முறைகள் சொல்வியிருக் கிறார்.

இப்போது, அந்த நிசப்தத்தை சாவுக்கும் அப்பாற்பட்டது என்று அவர் கணித்ததின் முக்கியமான காரணத்திற்குவிருவோம்.

* அன்று மிருகக்காட்சிசாலையில் ஏற்பட்ட அனுபவத்திற்குப் பிறகு இரண்டு முறை, அவள் - பத்மா - இவருடைய பெற்றோர்களைப் பற்றிக் கேட்டு விட்டாள். அவளைக் கடிந்து கொண்டு அப்பால் போகும்படி பணித்தும் அவள் கேளாமல் போக "ஓங்க ஒப்புரொட்டி..." என்னவோ சொல்லி, திட்டி, துரத்திப் பேயாகக் கூச்சலிட்டார். இங்கும், பெசன்ட் நகரில், இந்தத் தம்பதிகளை எல்லோரும் ஒரு விதமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் இருவருமே இதைப்ப்ற்றி லட்சியம் செய்ய வில்லை. “பிராமிஸ்  பண்ணிவிட்டு பொறுக்கி, கல்பனா கிட்டே போனியேடா' என்று வெளிப்படையாகவே திட்டினாள். சிலசமயங்களில் இந்தமாதிரி நிலைமைகளில் குழந்தைகள் விக்கித்து நின்றிவிடும். அதைத் தாங்க மாட்டாமல் அவர் அவளை நையப் புடைக்க, கையில் அகப்பட்டதை எடுத்து அவள் இவர்மேல் வீசுவாள். பிரளயமே ஏற்பட்டுப் பிரிந்துவிடுவார்களோ என்று அக்கம் பக்கத்தில் நினைத்துக்கொண்டிருக்க, மறுநாள் தினகரன் காப்பி போட்டு குழந்தைகளையும் அவளையும் எழுப்புவார். அவர்களிடையே சமரசம் வந்துவிடும்.

தினகரனும், பத்மாவும் ரொம்பவும் வெறுத்து, ரொம்பவும் பிரியப்பட்டு என வாழ்ந்து வந்தார்கள். இதற்கு இடையில், அவருடைய படைப்புகளும், சிந்தனையும் வேறு என்பதைக் கூடியசீக்கிரமே பத்மா உணரத் தொடங்கி விட்டாள்; அவள் அவரைப் புரிந்துகொண்டவிதத்தில் ஒரு நாள் இவ்வாறு அரற்றினாள் குமார் கடன்காரா - ஐயயோ நான் என்ன பண்ணுவேன்-ஈஸ்வரா-அப்பன் ஒண்ணு பைத்தியமாய் நிற்கிறது போதாதா- கழிச்சல்ல போறவனே பாட புஸ்தகத்தைப் படிடான்னு - டீ. எச். லாரென்ஸ் புஸ்தகத்தை எடுக்கிறானே' -
_______________________________________________________________________________
*சாமியார் ஜூவுக்குப் போகிறார் . கணயாழி மார்ச் ஏப்ரல் 1971
_______________________________________________________________________________

 இவர் மீண்டும் அவளிடம் "படிச்சா என்ன" என்று கிளம்பினார். ஆமாம், ஒம்பது வயசுலே என்ன `டி.எச். லாரென்ஸ் புரிஞ்சுடப்போறது, ஆங்கிலம் கொஞ்சம் விருத்தி அடையும், படிச்சுட்டுப் போகட்டுமே என்று தினகரன் நினைத்தார். மீண்டும் இவ்விஷயத்தில் அவர்களிடையே கைகலப்பு. கடைசியில் பத்மா அன்றிரவு சொன்னாள், "புஸ்தகங்கள் ரொம்பவும் ஆபத்தான விஷயம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.'

'ஏன் இப்படிச் சொல்றே' என்றார் அவர், அவளில் இயங்கிக்கொண்டே. பத்மாவில் இயங்கறதுன்னா, அது சொர்க்கம்தான். அது என்னவோ அந்த மார்பும், பருமனும் திகட்டவே மாட்டேன் என்கிறது; "நீ ரொம்பவும் கெட்டிக்காரன். ஓரளவுக்கு உன் பெற்றோர்கள் உன்னைக் கெடுத்துவிட்டார்க்ள். ஓரளவுக்கு நீயே புஸ்தகங்களால் உன்னை கெடுத்துக்கொண்டாய், நீ பேசறது எங்கிருந்தோ புஸ்தகங்களிலிருந்து கடன் வாங்கினதுதான்” என்றாள்.

“இது கூடவா" என்று கேட்டுக்கொண்டே அவர் அவளில் அமிழ்ந்தார். அவரை
அவருடைய கனத்துடன  மேலெழுப்பி சற்றே இருவரும் ஊஞ்சலாட, அவள் சொன்னாள் "ஆமாம், இதிலும் உன்னிடம் என்னென்னவா நியதிகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறாய் - இருந்தும் இவ்விஷயத்திலே நிச்சயமாகவே - நீ ரொம்பவும் ஒசத்தி' பத்மா இந்த விஷயத்தில் அவரை ரொம்பவும் ரொம்பவும் மதித்தாள் “ எப்போதும், ஏன் இருபத்திநாலு மணி நேரம்கூட ஊறுகாயாட்டமா உன்னால் இதில் ஊறிண்டு இருக்க முடியும்டா” என்றாள். சிரித்தாள். உள்ளுக்குள், முலையில், வயிற்றில், துடைகளில், கிரஹித்துக்கொண்ட கண்களில் அவர் அந்தச் சிரிப்பைப் பார்த்துச் சற்றே பய மடைந்தார்.

அவர் ஒப்புக்கொண்டார். எங்கோ நாமெல்லோரும் பாதிக்கப்பட்டவர்கள்தாம். கண்டதாலும், கேட்டதாலும், படித்ததாலும்தான் இல்லாததை, எதைக் கற்பிதம் செய்து விட முடியும்? எல்லா முக்கியமான எண்ண ஓட்டங்களும்  நாம் மதிப்புக் கொடுத்தே ஆகவேண்டும். ஆனால்

(14)

ரொம்பப் பெரிய விஷயங்களில் சமூகம் கண்மூடித்தனமாகவே இருந்திருக்கிறதுந தாஸ்தாயெவ்ஸ்கி ஒருவிதத்தில் ஏசு கிறிஸ்துவை கடைசிபட்சமான ஒருசில கேள்விகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார் என்பது எவ்வளவு பேர்களுக்குத் தெரியும்? எவ்வளவு பேர்கள் இதை ஒப்புக்கொள்ளத் தயாராய் இருக்கிறார்கள்? அவரே சொன்னதுபோல், ‘த கிரான்ட் இன்க்விஸிட்டரில்’ கேட்கப்பட்டதுபோல், எவ்வளவு பேர்களுக்குப் பெரிய விஷயங்களில், உதாரணமாக சுதந்திரம், விடுதலை போன்ற விஷயங்களில் நாட்டம் இருந்திருக்கிறது? இருக்கிறது? எங்கோ வைகறை போன்று அவருக்கு ஒரு விஷயம் பத்மாவின் அந்தப் பேச்சில் புலப்பட்ட்து. சிந்திக்கும் ஆண்களைக் கண்டு பெண்கள் பயப்படுகிறார்கள் என்பதே அது. அதிகமாகச் சிந்திக்க வேண்டாம் என்று பெரும்பாலோர் இருந்துவிடுவதை ஒரு பெண்மைத் தன்மை என்றே வைத்துக்கொள்ளலாம் என்று அவருக்குப்பட்டது. பிரபஞ்ச அளவில், அதீத அருப எண்ண விளையாட்டுகள், தேடல்கள் ஆண்களின் உலகமென அன்று அவர் கணித்தார். உதாரணமாக, பெண்கள் ஒரு ஈன்ஸ்டீன் எல்லைக்கு எண்ணத்தை ஓட்ட முடியாது என்று அவர் நினைத்தார். ஆனால் சொல்லவில்லை. யார் அவளோடு மோதுவது? அப்பளக் குழவியை எடுத்துக்கொண்டு வருவாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையிலிருந்தே மொட்டை பாடியில் நின்ற அந்த நாளை ஏனோ அவர் மனம் பின்ன ஆரம்பித்துவிட்டது. என்ன விஷயம் - என்ன விஷயம் என்று பத்மா தொணப்ப ஆரம்பித்துவிட்டாள். முன்பெல்லாம் என்றால் 'ஏதோ புஸ்தகம் - பித்து - நினைச்சு மண்டையைப் பிச்சுக்கறது' என்று சும்மா இருந்து விடுவாள். ஆனல் இப்பொழுதெல்லாம் அவளை சந்தேகப் பேய் அரிக்க ஆரம்பித்திருந்தது.

“யார் அது-இனிமேல் இல்லேன்னேளே-யார் அது- சொல்லுங்களேன்”

“கல்பனா". முதல்தரமாக அவர் அவளிடம் சொன்னர்.

அவள் பிழியப் பிழிய அழ ஆரம்பித்துவிட்டாள். இவர் அவளுடைய அழுகையை லட்சியம்செய்யவில்லை. உடம்பில், மனத்தில், அறிவில் ஏற்பட்ட நிசப்தத்தின் பெயர் என்ன?

குளிக்கும்போது “வேறென்ன - சாவுதான்” சாப்பிடும் போது (பத்மா இன்னமும் அழுதுகொண்டிருந்தாள்) “இல்லே அது அப்படியில்லை - அது அந்த நிசப்தம் சாவை விட்ப் பெரியது."

மணி பன்னிரெண்டுக்கு முதன்முதலாக தலைக்கு ரத்தம் ஏறுவதை உண்ர்ந்தார். அவருடைய காலையில்ஆரம்பித்த அவளுடைய அழுகை இன்னமும் ஒய்ந்திருக்கவில்லை. அவளிடம் போய் பத்மா என்றார், அவள் அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை. அழுதுகொண்டே' இருந்தாள். ‘பத்மா' என்றார் மீண்டும் அவர். 'நீ இப்பொழுது அழுகையை நிறுத்தலைன்னா நான் உன்னே விட்டுப்போய்விடுவேன்'  என்றார்.

"ஏன் எனக்கு என்ன குறைச்சல்?' 'உனக்கு ஒரு குறைச்சலும் இல்லை - உன்னை நான் நேசிக்கிறேன்' என்றார், பிறகு வீட்டின் முன் அறைக்குத் திரும்பிவிட்டார். "அது என்ன? அது என்னவாக இருக்கக்கூடும்? ம்? அந்த மெளனம் சாவுக்கும் மேலே ஏதோ ஒன்று என்றால் சாவு என்பதென்ன?' தூங்கிவிட்டார் தினகரன். அவர் மீண்டும் எழுந்துகொண்டபோது பகல் மூன்று மணியிருக்கும். காப்பி வந்தது. அவளுடைய முகம் உப்பியிருந்தது., காப்பி சாப்பிட்டுக்கொண்டே வராந்தாவில் வந்து நின்றார், ஜனவரி மாதம் வெயிலில் இளநீரின் வழுக்கையின் கனம் இருந்தது. வெயில், இளநீர் வழுக்கை போன்று தான் எங்கும் வியாபித்திருந்த்து. துண்டை எடுத்துக் கொண்டு, கடல் பக்கம் குளிக்கப்போனார். இப்போது அவரை ஒரு புதுக் கவலை தோற்றிக்கொண்டிருந்தது. அன்று, அந்த மொட்டை மாடியில் அனுபவித்ததை கொஞ்ச நாளாகவே மனம் உளப்பிக் கொண்டிருந்தது.

இங்கு மதராஸில் ஒரு தோல் ஏற்றுமதி செய்யும் கம்பெனியில் அவருக்கு வேலை. நேரத்தைப் பணமாக்கப் பறந்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் இவர் பலசமயம் மொட்டை மாடிச் சிந்தனை வயப்பட்டு நின்றதை எல்லோரும் வெறுத்தனர். இவ்ருடைய இந்த திடீர் நிலைகளைப் புயன்படுத்திக்கொண்டு சிலர் முன்னேறப் பார்த்தனர். திடீர் திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்பவர் போல் அவர் காணப்பட்டார். டில்லியில் போன்று இங்கும் பெரிய அதிகாரி அவரைக் கூப்பிட்டனுப்பினர்.

16


"படிச்சிருக்கே - விஷயங்கள் தெரிஞ்சவனாக இருக்கே -இப்ப என்ன திடீர்னு இப்படி' என்றார் அவர், அவருக்கும் தினகரன் வயதுதான் இருக்கும். குள்ளமாக, வேகமாக நடப்பவராக, மூக்குக் கண்குடி போட்டுக்கொண்டு வழுக்கைத் தலையுடன், இரைந்த தொண்டைகொண்டவராக இருந்தார் அவர். அவர் சொன்னார்: "முதலில் உன்னைப் பார்த்து பயந்தேன். என்னைவிடப் படித்தவன் நீ. மேலும் என்ன மாதிரியான ஆஜானுபாகுவான உடல் உன்னுடையது! மேலும் எதிலும் நீ மெதுவாக செயல்படுவதை, அது உன்னுடைய அசைக்க முடியாத கவனத்தைக் காட்டுகிறது என்றே நினைத்தேன். இருந்தும் எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை, நீ அடிப்படையில் உழலும் ஒரு தத்துவப் பித்து என்று கண்டுபிடிக்க - நான் சொல்வது சரிதானே?"

"முற்றிலும் சரி.”

'வருந்துவதற்குரிய விஷயம். ரொம்பவும் வருத்தத்திற்கு உரிய விஷயம். யார் இந்தக் காலங்களில் அடிப்படை விஷயங்களில் கிடந்து உழல்கிறார்கள்? உனக்குத் தெரியுமா? அது நம்முடைய சாபக்கேடு......எதற்குச் சொல்கிறேன் என்றால் நான் பேனா சேர்ப்பவன். உனக்குத் தெரியுமா - (தினகரனிடம் பேனாவைக் காட்டி) இந்த கான்டினென்ட்டல் பேனாவை ஒருவரிடம் பார்த்தேன். அவர் அந்தப் பேனாவை இருபது வருடமாக வைத்திருப்பதாகச் சொன்னார். அந்த்ப் பேனாவின் உடல்வாகைவிட 'நிப்' என்னை ரொம்பவும் வசீகரித்தது. பதினைந்து வருடம் குறையாத அளவுக்கு 'நிப் தேயாமலிருக்கும் என்று பொருள்பட நிப்பிலேயே எழுதியிருந்தார்கள். நான் உடனே அந்த கம்பெனிக்கு ஒரு கடிதம் போட்டேன்; அந்தமாதிரியான பேனா உடனே மூன்று வெவ்வேறு கலர் களில் வி. பி. பி.யில் அனுப்பிவைக்கும்படி.”

'அவர், அந்த தொழிற்சாலையின் வர்த்தக அதிகாரி என்ன சொன்னர் - நான் என்ன சொல்கிறேன் என்றால் அவர் என்ன திரும்ப எழுதினர் - தெரியுமா? அவர்கள் அந்த மாதிரியான் பேனாவும் நிப்பும் தயாரிப்பதைவிட்டுப் பனிரெண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டதாம். உனக்குக் காரணம் தெரியுமா தினகரன். ஒன்றரை ரூபாய்க்குப் பேனா வந்துவிட்டது. யார் இருபது ரூபாய்க்குமேல் கொடுத்து பேனா வாங்குவார்கள் ஒன்றரை ரூபாய் பேனா ஒரு வருடம் உழைக்கும் என்று வைத்துக்கொள்வோம், இருபது வருடங்கள் ஒரு பேனா உழைக்கும் என்று யார் காத்திருப்பார்கள். இங்கு முழு உண்மை இதுதான். என்று அவர் சுண்டு விரலால் மேஜைமேல் தட்டினார். பிறகு தொடர்ந்தார். 'இப்போது ஜனங்களுக்கு இருபது வருஷம் முன்னால் பார்க்கமுடியவில்லை. நீ போய் அடிப்படைகளில் உழல்கிறாயே?”

"எனக்கும் தெரியும்' என்றார் தினகரன், 'ஏன் பூட்சுகளை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்களேன். அதிகமாக உழைக்கக்கூடிய பூட்சுகளை இப்போது எங்கே தயாரிக்கிறார்கள்?' என்றார் அவர்,

"நிச்சயமாக - இதனால் நாம் அறிவது என்ன?”

“ஆனால் அப்படி எங்கே இருந்துவிட முடிகிறது ' மூளை ஒன்று இருக்கிறதே. அது எதையேனும் போட்டுக் குழப்பிக்கொண்டுதானே இருக்கிறது' என்றார், பிறகு 'சார் எனக்கு கொஞ்ச நாட்களுக்கு ஏதாவது சிறிய லேசான வேலையாகக் கொடுங்களேன்' என்றார்,

"உனக்கென்று நான் லேசாக எப்படி வேலையை உண்டாக்க முடியும்; அப்புறம் உன் வேலைகளை யார் செய்வார்கள்?'

'நானே செய்கிறேன்.முக்கியமானதை ஆடிட்டர் கவனித்துக்கொள்வார். எனக்கு வேலை வேண்டும். ஆனால் எக்கச்சக்கமாக முன்னேற்றம் எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை, அதே சமயத்தில் நான் உங்களுக்கு உபயோகமாய் இருப்பேன்' என்றார்,

"இப்ப என்னே என்ன செய்யச் சொல்கிறாய்?"

 "என்னைத் தோல்களைக் கட்டும் பகுதியில் போடுங்கள்.”

"தோல்களைக் கட்டும் பகுதியிலா? அவருடைய முகம் ஆச்சர்யத்தால் விரிந்தது. சாரதி. எஸ். எஸ். எல. சி தான் பாஸ் செய்திருக்கிறான்  எப்படியோ கஷ்டப்பட்டு, தோல் கட்டும் பகுதியிலிருந்து அலுவலக நிர்மாணப் பகுதிக்கு வரப்பார்க்கிறான் நீ என்னடான்னா......புரிகிறது..... புரிகிறது. இப்பத்தான் வந்திருக்கோம். உடம்பும் மனசும் சரியில்லை. அதுக்குள்ளே விடுமுறை கேட்டால் நன்னாயிருக்காதுன்னு நினைக்கிறாய்... சரி, சரி; யாராவது அதிலே லீவு எடுத்துக்கிட்டேயிருப்பான். போட்டுக்கலாம். எவ்வளவு நாட்கள் இருக்கிறாய்'

“நான் இரண்டு மாசம் அதில் இருக்கிறேன்?”

 “என்னது?"

:இரண்டு மாசம் - மூன்று மாசம் கொடுத்தால்கூட சம்மதம்.'

“நீ ஹாஸ்யமாகப் பேசுகிறாய். அது எப்படி சாத்தியமாகும்?
:
"நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். நான் எனக்கு உள்ள வேலையை வீட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய் கொஞ்சம் பார்க்கிறேன்."

அது இல்லை விஷயம் தினகரன். சில சின்ன விஷயங்கள்கூட உனக்குப் புரிவதில்லை. நீ போய் தோல் கட்டும் பிரிவில் மூன்று மாதம் உட்கார்ந்தால் ஆபீசில் உன்னை யாரும் மதிக்கமாட்டார்கள், மேலும் அங்கு வேலை செய்பவன் எல்லாம் உன்னைப் போட்டியாளானாக மதிப்பான். உன்னை நிம்மதியாக இருக்க விடமாட்டான்."

"நான் எப்படியோ சமாளிச்சுக்கறேன்.”

அதிகாரி தோளைக் குலுக்கினார். வருத்தமான ஒரு புன்னகை அவரிடம் தோன்றியது. “நீ ஒரு விதமான ஆள்” என்றார்.

அவர் சொன்னது ரொம்பவும் சரியாகப்போயிறறு, தோல் கட்டும் இடத்தில் அவருக்கு நிம்மதியில்லை. ஆனால், அவர்களுக்குப் போட்டியாக வரவில்லை என்று அவர்களுக்கு உணர்த்திவிட்டால் அவர் தன்பாட்டுக்குத் தோல் அளவை இயந்திரத்தில் பதிவாக்கி, இப்போது அவரை வாட்டிக்கொண்டிருக்கும்  பிரச்சினைபற்றி சிந்திக்கலாம்.

•    •     •


மத்தியானம்வரை குளித்தவர்கள் சென்றுவிட்டிருந்தனர். இனி, மாலை இருட்டுமுன் நாலிலிருந்து ஐந்தரைவரை - சிலபேர்கள் வந்து உட்கார்ந்துபோக நேரமிருந்தது. தூரத்தே திருவல்லிக்கேணி பக்கம் நாலைந்து கப்பல்கள் நின்றுகொண்டிருந்தன. அவைகள், நிஜமாகப் பார்க்கப் போனால் எண்ணூர் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் என்று கணித்தார்.- கடற்கரையில் அதிகமாகக் கூட்டம் இல்லை. அத்தனை இளநீர் இளசு வெயிலிலும் கொஞ்சம் கூடக் காற்று இல்லை. பேசாது உடுப்புகள் அவ்வளவையும் கழற்றிப் போட்டு, ஜட்டியுடன் அலை வீசும் மணலில் ‘பொதேலென்று’ விழுந்தார். நேரம் செல்லச் செல்ல உடம்பில் சூரிய உஷ்ணம் உறைக்க ஆரம்பித்தது. உடம்புக்கு அது இதமாக் இருந்தது. தூக்கம் வரும்போல் இருந்தது. சிந்தனா சக்திக்கும் தூக்கம் வரும் போன்ற மயக்க நிலைக்கும். ஏதோ சம்பந்தம் இருக்கும் என்றே நம்பினார். ஒன்பதாம் வகுப்பில் அவர் ரசாயனப பிரிவு எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டும். எட்டாம் வகுப்பில் ரசாயனத்தில் அவர் நல்ல மார்க்குகள் வாங்காததால் ரசாயனப்பிரிவு கிடைக்காது, கலைப் பிரிவுதான் கிடைக்கும் என்பது தனக்கு விதியாகிப் போனதை நினைவுகூர்ந்தார். 'ஏன் அது நினைவுக்கு வருகிறது? 'இல்லே தினகரன், நீ இப்போது சாவு முதலியவைகளைப்பற்றி சிந்திக்கறாயோனோ என்றைக்குமே அழியாத ஏதோ ஒரு உண்மையை நீ உலகுக்கு சொல்லப் போறாயோனோ....அதனால்தான் அதைப் பற்றி எல்லாம் சிந்திக்கறே' என்று சொல்லிக்கொண்டார். சிரிப்பு வந்தது. அது போன்றே, அதிகாரி சொன்னது போல், அடிப்படைகளில் விழுந்து எம்.ஏ.  வகுப்பில் ‘தொழில்களின் அளவு' என்கிற விஷயத்தில் உளறிக்கொட்டியதில் அடைந்த அவமானத்தை நினவுகூர்ந்தார். எவனெல்லாமோ யோசித்திருக்கிறான். அவனுக்கு எல்லாம் பெப்பே காட்டிக் கொக்கரித்த சாவு என்கிற சித்தாந்தம் உனக்கு மட்டும் தங்கத் தாம்பாளத்தில் தன்னை இருத்திக் கொண்டு காண்பித்துக்கொள்ளப் போகிறது.

கேள்வி : ‘மேலும் சாவைப்பற்றி நீ என்ன அறிய விரும்புகிறாய்?’ இந்த எண்ணம் எழுந்ததும் தினகரன் தன்னைக் கெட்டித்துக்கொண்டார்.

பதில் : ஏன், விரிவான அதைப்பற்றிப் பலவிதங்களிலும் நிர்ணயப்படுத்தும் சில வாக்கியங்கள் கிடைத்தால் போதும்; அவ்வளவே.

கேள்வி : அப்படி இதுவரை ஒன்று உருவாக்கப்படவில்லை என்று நீ ஏன் நினைக்கிறாய்?

பதில் : ஏன் என்றால் என்னால் ஒன்றை - யாருமே இன்றுவரை நினைத்துப் பார்த்திருக்க முடியாத ஒன்றை - கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை இப்போது ஏற்படுகிறது.'

இதை, அந்தக் கடற்கரையில் அலைகள் அவர் உடம்பைத் தழுவப் படுத்துக் கொண்டிருந்தபோது, வாய்விட்டுச் சொல்லிவிட்டார். கூடவே, இந்தமாதிரியான எண்ணம் ஏற்படக் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது.
ஏனென்றால் அன்று நான் அனுபவித்த மெளனம் சாவுக்கும் அப்பாற்பட்டது என்பதினால்தான்.
"பின் சாவு என்றால் என்ன?'

அவருக்கு அப்போது அந்நிலையில், எப்போது நினைத்தாலும் மயிர்க்கூச்சல் எடுக்கும் ஒரு திண்ணமான அபிப்பிராயம் கிடைக்கும் என்று பட்டது. அது அநேகமாக சாவு எப்படி சம்பவிக்கிறது என்பதைச் சார்ந்ததாக இருக்கும் என்று பட்டது. மேலும் சாவு அநேக விதங்களில் சம்பவிப்பதாகக் கூறினாலும் அதற்கெல்லாம் ஆதாரமான சாத்தியக்கூறு அல்லது நடைமுறை ஒன்றாகவே இருக்கும் என்று பட்டது. வானத்தில் இருட்டோடு கூடிய முதல் வெளிச்சம் போன்று இந்த எண்ணம் அவரிடம் ஏற்பட்ட உடன் அவர் நிமிர்ந்தார். வெளிச்சம் அவர் கண்களைக் கூச வைத்தது. தயிர் சிலுப்பப்படுவதுபோல், மண்டையை இந்த இருபத்தைந்து வருட காலம், ஏதேதோ சிலுப்பியது கடைசியில் எதையோ இனங்காணப் போகிறது என்றுபட ஆரம்பித்ததும் அவர் முகம் பேயறைந்தது போலாயிற்று. சாயையாகத் தன்னை ஏதோ பூசிப் போவதாக உணர்ந்தார். பெரிய கொட்டாவி ஒன்று அவரிடமிருந்து எழும்பியது. ஏனோ கடல் அரித்த மணலை வெகுநேரம் பர்ர்த்துக்கொண்டிருந்தார். பவுடர் கணக்காக ஆகியிருந்தது மணல். அதைக் கைகளால் வருடினார். ஏனோ, அதோடு பல்லாயிரக் கணக்கான வருடங்களின் சம்பந்தம் உண்டு எனவும், இருந்தும் தன் இனத்தைவிடப் பன்மடங்கு சக்தி கொண்டது அது, எனவும் நினைத்தார். அவருக்கு கோபுரம் கட்ட வேண்டும் போலிருந்தது. முழங்காலால் குத்திட்ட வாட்டத்தில் உட்கார்ந்து கோபுரம் அமைக்க ஆரம்பித்தார். யாராவது தன்னைப்பார்த்து ஏதாவது நினைத்துக்கொண்டு விட்டால் என்கிற அச்சமற்று குழந்தை போன்று (குமார் கூட பீச்சில் கோபுரம் கட்டுவதை விட்டுவிட்டான்) மணலை இரு கைகளாலும் வாரி வாரி சேர்த்துக் குமித்துக் கோபுரம் கட்டினார். அவ்வளவு மணலும் ஒரு சக்தியுடன் இறுகிப் போவதில் வியந்தார்.

அலைகளைக் கால்களால் கிழித்துக்கொண்டு ஒடி எம்பிப் பாய்ந்து நீந்த ஆரம்பித்தார். நீந்தி ஒரு பர்லாங்கு தூரம் சென்று சற்ற் நேரம் கட்டை போன்று மிதக்க யத்தனித்தார். வெகு தொலைவில் பெசன்ட் நகருக்குப் பின்னல் சூரியன் மேற்கே, பம்பாய்க்கும் அப்பால், துரிதமாக ஓட ஆரம்பித்திருந்தான். மணலில் அவர் எதிர்பார்த்த மாலை உலாவுவோர் வர ஆரம்பித்திருப்பது தெரிந்தது. "அமுங்' என்று மூழ்கி, தண்ணீருக்குள்ளேயே சென்று, கொஞ்ச துரத்தில் மீண்டும் தலையை எடுத்தார். அந் நிலையில் மணலில் படுத்திருந்தபோது மெளனம் சாவுக்கும் அப்பாற்பட்டது என்பதோடு வேறு என்னமோ நினைத்தோமே? ஊஹூம்....அது மறந்துவிட்டது. அவருடைய அறிவு சற்றே ஸ்தம்பித்தது. அவர் எவ்வளவோ முயற்சிச்செய்து பார்த்தார். மறந்தது ஞாபகம் வரவில்லை. தத்தளித்தார் அவர் நீந்திக்கொண்டே இருந்தார்._ உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்தார். என்னவாக இருக்கும். ஊஹூம் மறந்தே போச்சு...ஒரு நான்கு நாட்களுக்குமுன் என்ன சாப்பிட்டோம் கதையாக அது மறந்து போச்சு: ஆனால் ஒரு பர்முடேஷன் காம்பினேஷன்' போட்டுப்பார்த்தால் சாப்பிட்டது எது என்பது அடிபட்டுப் போகும். ஆனல் இந்த விவகாரம் அப்படி இல்லையே. சொரேல்'னு அப்படியே பல்டி அடித்துத் திரும்பி, கரை வந்து சேர்த்தார். வாய் குளிரால் மெல்ல உதறிக்கொண்டிருந்தது.

துண்டால் துவட்டிக் கொள்ளும்போது ஞாபகம் வந்து:
சாவு பல விதங்களில் சம்பவித்தாலும், அதற்கு மூலகாரணiம் ஒன்றாகவே இருக்கவேண்டும். இதை இது நாள் வரை யாரும் சொல்லவில்லை.