Pages

Sunday, April 03, 2016

மச்சம் - யசுனாரி கவபத்தா : காலச்சுவடு 11 ஏப்ரல் - ஜூன் 1995

 Automated google-ocr

WWW.padippakam.com
மச்சம் - யசுனாரி கவபத்தா : காலச்சுவடு 11 ஏப்ரல் - ஜூன் 1995
பல ஜப்பானிய இலக்கியப் பரிசுகளையும், பிரான்ஸிலும் மேற்கு ஜெர்மனியிலும் சில கெளரவ மிக்க விருதுகளையும் பெற்றிருக்கும் யஸுநரி கவபட்டா, மனோதத்துவ ரீதியிலான கதைகள் புனைவதில் வல்லலர். 1968ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்ற இவர், அர்த்தமுள்ள விதத்தில், ஜப்பானிய மனங்களின் ஆழத்தைக் கலை உணர்வுடன் வெளிப்படுத்துபவராகக் கருதப்படுகின்றவர். 'மரணத்தை அழகு செய்வதற்கும், மனிதனை இயற்கையோடும். வெறு மையோடும் ஒருங்கி ணைப்பதற்கும், வாழ் நாள் முழுவதும் அழகைத் தேடி அலைவதாகவும்' தன் முயற்சிகளைச் சொல்கிறார். இவர் கதைகளில் வெளிப்படும், ஆழ்ந்த, மனோதத்துவ ரீதியிலான பெண் மனதின் குண் சித்திரத்தை மேற்கத்திய இலக்கியவாதிகள் பாராட்டுகின்றனர். கவபட்டா, சித்தாந்தங்களை விடவும். தனி மனிதனிடத்தில் அதிக அக்கறை காட்டுபவர்.

 O 

நேற்றிரவு என் கனவில் அந்த மச்சத்தைப் பார்த்தேன். 'மச்சம் என்று நான் எழுதினாலே போதும், எந்த மச்சம் என்று உங்களுக்குப் புரிந்துவிடும். உங்களிடம் எத்தனை தடவை வசவு வாங்கிக் கொடுத்திருக்கிறது எனக்கு! 

"அது ஏற்கனவே அவரை விதை சைஸ்க்கு இருக்கு அதை நிமுண்டிக்கிட்டே இருக்கியே. பாரு, ஒரு நா அது தெறிச்சிடப் போகுது." 

நீங்கள் பலதடவை கேலி செய்திருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது மாதிரியே அது ஒரு பெரிய மச்சம்தான். பெரியது மட்டுமில்லை, புடைத்து அழகாகவும் இருக்கிறது.

குழந்தையாயிருந்தபோதுபடுக்கையில் அதனிடம் கைச்சேட்டை பண்ணிக் கொண்டிருப்பேன். முதன் முதலில் நீங்கள் அதைப் பார்த்தபோது நான்தான் எவ்வளவு வெட்கப்பட்டேன்! -

 அழுதேவிட்டேன். உங்களுக்கானால் ஆச்சரியம். 

"அந்தப் பழக்கத்த விட்டுரும்மா, அதைத் தொட்டுக்கிட்டே இருந்தா அது இன்னும் பெரிசாயிடும்." 

என் அம்மாவும், அப்படித்தான் திட்டுவாள். அப்போது நான் பதிமூன்று வயதே நிரம்பின குழந்தைதான்; பெரியவளானபோது அது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது - அது ஒரு விஷயமேயில்லை என்கிற அளவு என்னோடு தங்கிவிட்ட பழக்கம்.

முதன் முதலாக அதை நீங்கள் பார்த்த சமயத்தில், கல்யாண்மாகியிருந்ததேயொழிய, நான் குழந்தையாய் தானிருந்தேன். உங்களுக்கு ஒரு ஆண்பிள்ளைக்கு, என்னுடைய அப்போதைய கூச்சம் புரியுமா என்ன! 

ஆனால், அது வெறும் கூச்சமில்லை. பயம். அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டேன். திருமணம் என்பதே ஒரு பயங்கரமான விஷயமாய்ப்பட்டது எனக்கு 

என் அந்தரங்கம் வெளிச்சத்துக்கு வந்து விட்டதாய் உணர்ந்தேன். எனக்கே தெளிவில்லாத என் ரகசியங்கள் ஒவ்வொன்றையும் நீங்கள் வெளிக்கொண்டு வந்த மாதிரி; நான் மிகவும் நிர்க்கதியாய் ஆகிவிட்ட மாதிரி உணர்ந்தேன். 

நீங்கள் நிம்மதியாய்த்துங்கிவிடும்போது எனக்குச் சில சமயம் ஆசுவாசமாய் இருக்கும் சிலவேளை மிகவும் தனியாய் இருப்பதாய்த் தோன்றும் எப்போதாவது மச்சத்தை நோக்கிக் கை எழும்பும்போது சுதாரித்துக் கொள்வேன். 

"என் மச்சத்தை இனி மேல் என்னால் தொடவே முடியாது" என்று அம்மாவுக்கு எழுத நினைப்பேன்; அப்படி நினைக்கும் போதே என்.முகம் ரத்தமாய் சிவந்து விடும். 

ஒரு தடவை சொன்னீர்கள்:

"ஒரு மச்சத்துக்குப் போய் ஏன் இப்படி அசட்டுத் தனமா அலட்டிக்கிறே." 

ஆனால், இப்போது தோன்றுகிறது. நீங்கள் மட்டும், என்னுடைய அந்த மோசமான பழக்கத்தைக் கொஞ்சமாவது ரசித்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்! 

அந்த மச்சம் பற்றி நானும் அவ்வளவு ஒன்றும் கவலைப்படவில்லை. எந்தப் பொம்பளைக்குக் கழுத்தில் மச்சம் இருக்கு என்று யாரும் தேடி அலையவில்லை. ஊமையான பெண்ணைக்கூட திறக்கப்படாத அறை மாதிரி சுத்தமாய் இருப்பவள் என்று தான் சொல்வார்கள். ஆனால், ஒரு மச்சம், அது எவ்வளவு தான் பெரியதாய் இருக்கட் டுமே, அதை ஊனம் என்று நிச்சயம் சொல்ல முடியாது. 

இந்தப் பழக்கத்தை நான் விடப்போவதே இல்லை என்று ஏன் நீங்கள் நினைக்க வேண்டும்?

தவிர, அந்தப் பழக்கம் உங்களுக்கு ஏன் இவ்வளவு எரிச்சலூட்ட வேண்டும்? 

"கையை எடுடி" என்று கோபிப்பீர்கள்: நூற்றுக்கணக்கான தடவைகள் திட்டிவிட்டீர்கள் இப்.டி.

"உன் இடது கையைக் கட்டாயம் அங்க கொண்டுபோய் வைக்கணுமா?" - 

ஒரு தடவை ரொம்ப எரிச்சலுடன் கேட்டீர்கள். 

"இடதுகையையா?"நான் அதிர்ந்து போனேன். 

நீங்கள் சொன்னது சரிதான். நான்தான் கவனித்ததில்லையே தவிர, நான் எப்போதுமே இடது கையைத்தான் உபயோகப்படுத்துவேன். 

"மச்சம் உன் வலது தோளிலே இருக்கு, வலது கையாலே நிமிண்டினா என்ன ?" 

"ம்?" - நான் வலது கையால் தொட்டுப் பார்த்தேன். "ம் ஹம்ெ. அசிங்கமாயிருக்கும்."

"இப்ப இருக்கிற அளவு அசிங்கமில்லே." 

"ஆனா இடது கையால தொடுறது தான் வசதியாய் இருக்கு." - - 

"வலது கையே நல்லா எட்டுமே?" 

"ஆனா, கையைப் பின்னால் கூடிக் கொண்டு போகணும்." 

"பின்னால கூடியா!" 

"ஆமா, ஒண்ணு, இடதுகையை தொண்டைக் குழியைச் சேர்த்து இப்படிக் கொண்டு போகணும். இல்லாட்டி வலதுகையைப் பின்னால் கூடிக் கொண்டு போகணும்." 

நானும் நீங்கள் சொல்வதையெல்லாம் உடனே கேட்டு நடக்கும் மனோபாவத்திலிருந்து விலகியிருந்தேன். 

ஆனாலும், உங்களுக்கு பதிலைச் சொல்லி விட்டேனேயொழிய, எனக்கு வேறுமாதிரித் தோன்றியது. என் இடதுகையை முன்னால் கொண்டு வந்து மச்சத்தைத் தொடும்போது நான் உங்களை விலக்குகிற மாதிரி இருக்கிறது என்னை நானே அனைத்துக் கொள்கிற மாதிரி.

இவரிடம் நாம் இரக்கமற்று நடந்து கொள்கிறோம் என்று பட்டது. 

நிதானமாய்க் கேட்டேன் : 

"ஆமா, இடது கையால தொட்டா என்ன, தப்பா?" 

"எந்தக்கைன்னா என்ன. கெட்டபழக்கம் தான்." 

"அதுதான் எனக்கும் தெரியுமே." 

"டாக்டர்ட்டப்போயி அந்தச் சனியனை அறுத்து எறின்னு எத்தன தடவை சொல்லியிருக்கேன்." 

"நான் மாட்டேன். எனக்குக் கூச்சமாய் இருக்கும்." 

"இது ஒரு சாதாரண சமாசாரம்." 

"மச்சத்தை எடுக்கணும்னு யாராவது டாக்டர்கிட்டப் போவாங்களா?" 

"எத்தனையோ பேர் போறாங்க." 

"முஞ்சியில மச்சம் இருந்தா போவாங்க முதுகில இருந்தாப் போவாங்களா? அப்படிப் போனாலும் டாக்டரே சிரிப்பாரு, எம் புருஷனுக்குப் பிடிக்காததுனாலதான் வந்தேன்னு அவருக்கும் தெரிஞ்சுபோகும்." 

"நீ அவர்ட்டச் சொல்ல வேண்டியதுதானே நான் சும்மா அதை நோண்டிக்கிட்டே இருக்கேன்னு." 

"அந்த மச்சத்தைப் பார்க்கக் கூட முடியாது. சின்ன விஷயம்; இதைப் போயி..." 

"நீ அதை நோண்டாம இருந்தா நான் ஒண்ணுமே சொல்லப் போறதில்லை!"

 "நானும் என்ன, வேணும்னா செய்றேன்." 

"ஆனாலும் நீ ரொம்பப்பிடிவாதம் பிடிக்கிற நான் என்ன சொன்னாலும் காதுலயே வாங்குறதில்லே. மாத்திக்கணுங்கிற நெனைப்பே உனக்கு இல்லே!" 

"நானும் எவ்வளவோ முயற்சிபண்ணித்தான் பார்த்தேன். அதைத் தொடாதிருக்கணும்னு கழுத்தமுடற மாதிரி சட்டை போட்டுக்கிட்டேன்!"

 "எவ்வளவு நாளைக்கு ?" 

"சரி, தொட்டாத்தான் என்ன, குடியா முழுகிப்போச்சு?" 

யாரும் பார்த்தால், நான் எதிர்த்துச் சண்டை போடுகிற மாதிரித்தான் தோன்றியிருக்கும்.

 "குடியொண்ணும் முழுகலே, எனக்குப் பிடிக்கலே, அதைச் செய்யாதேன்னுதான் சொல்றேன்...!"

 "ஏன் ஓங்களுக்குப் பிடிக்காமல் போகணும்?"

 "இதுக்கெல்லாம் காரணம் சொல்லணுங்கிற தில்லே. அந்த மச்சத்தை நீ நோண்டியே தீரனும்ங்கிறதும் இல்லே. அது கெட்ட பழக்கம். நீ நிறுததிடனும்னு ஆசைப்படறேன்." 

"நான் ஒண்ணும் நிறுத்தவே மாட்டேன்னு சொல்லல" 

"நீ அதைத் தொடும்போதெல்லாம் முகத்தை விளக்கெண்ணை குடிச்ச மாதிரி வச்சுக்கிற உண்மைலே அதுதான் எனக்குப் பிடிக்கலே." 

நீங்கள் சொன்னது சரிதான்போல. இப்படி நீங்கள் சொன்னது என் மனசைத் தொட்டுவிட்டது. சரியென்று ஆமோதிக்கத் தோன்றியது. "இன்னொரு தடவை நான் தொடுறதைப் பார்த்தா என் கையிலேயே அடிங்க, இல்லாட்டி, சப்புன்னு அறைஞ்சிடுங்க." 

"அது கிடக்கட்டும், ஒரு சின்னப் பழக்கம் ரெண்டு முணு வருஷமா முயற்சி பண்ணியும் ஒன்னால நிறுத்தமுடியலையே. ஒனக்கே சங்கடமாயில்லையா?" 

நான் பதில் சொல்லவில்லை. "உண்மையிலேயே அதுதான் எனக்குப் பிடிக்கலே" என்று நீங்கள் சொன்னதையே யோசித்துக்கொண்டிருந்தேன். இடது கையை தொண்டையைச் சுற்றிப் பின்னால் கொண்டுபோகும்போது நான் எப்படியிருந்திருப்பேன். அசிங்கமாகவும் மிகுந்த வேதனை கலந்தும்தான் என்முகம் இருந்திருக்கும். தனிமை என்றெல்லாம் பெரிய வார்த்தை சொல்லமாட்டேன், பரிதாபமாய், கேவலமாய், தன் சின்னஞ்சிறு ஆத்மாவை தற்காத்துக் கொள்வதைத் தவிர வேறொன்றும் அறியாத பெண்ணைப் போல் நின்றிருப்பேன். என் முகபாவம் நீங்கள் சொன்னது போலவேதான் இருந்திருக்கும். விளக்கெண்ணெய் குடித்த மாதிரி. நமக்கிடையில் இருந்த இடைவெளியை, நான் என்னை முழுமையாக உங்களிடம் ஒப்படைக்க வில்ல்ை என்பதைத்தான் அது காட்டியதா? அப்படி என் மச்சத்தைத் தொட்டு கனவுலகத்தில் ஆழ்ந்துவிடுகிற போது, என் உண்மையான உணர்ச்சிகள் என் முகத்தில் பிரவகித்து விடுகிறதா? என் குழந்தைப் பிராயத்திலிருந்தே நான் இப்படித்தான் செய்து வந்திருக்கிறேனே.ஆனால், உங்களுக்கு ஏற்கனவே என்னிடம் அதிருப்தி இருப்பதால்தான் இந்தச் சின்னப் பழக்கம் இவ்வளவு பெரிசாய்ப் படுகிறது. என்னால் நீங்கள் சந்தோஷப் பட்டிருந்தால் லேசாய்ச் சிரித்துவிட்டு, இதை மறந்தே போயிருப்பீர்கள். 

இப்படி நினைப்பதுதான் மகா பயங்கரமாய் இருந்தது. திடீரென்று, இந்தப் பழக்கத்தை விரும்பி ரசிக்கும் ஆண்களும் இருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியபோது நான் நடுங்கியே விட்டேன். 

என்னிடம் உங்களுக்குள்ள காதலால்தான் இதை முதலில் கவனித்தீர்கள் அதுபற்றி இப்போது கூட எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் இது மாதிரியான சிறு எரிச்சல்கள்தான், பிறகு வளர்ந்து விருட்சமாகி, திருமணத்தின் ஆதாரத்தையே பிளக்கக் கிளம்பி விடுகிறது. ஒரு உண்மையான கணவன்- மனைவிக்கு அடுத்தவரின் பலவீனம் பெரிசாய்த் தெரிவதில்லை, ஆனால் எடுத்ததுக்கெல்லாம் மண்டைய உடைத்துக் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக, அனுசரித்துப் போகிறவர்கள் எல்லாம் உன்னதமான காதலர்கள் என்றோ, அனுசரிக்க முடியாதவர்கள் பரஸ்பரம் அன்பில்லாதவர்கள் என்றோ நான் சொல்லமாட்டேன். 

என் யோசனைக்கு எப்படிப்படுகிறதென்றால் (யோசிப்பதை மட்டும் என்னால் நிறுத்தவே முடியாது!) நீங்கள் இந்தப் பழக்கத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். 

நீங்களோ, என்னை அடிக்க வந்தீர்கள், உதைத்தீர்கள். நான் அழுதேன். ஏன் இப்படி முரட்டுத் தனமாக நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டேன். ஒரு மச்சத்தைத் தொட்டதுக்காக என்னை இந்தப்பாடு படுத்தணுமா என்று கேட்டேன். அதெல்லாம் மேலுக்குத்தான். "இதை எப்படித்தான் நிறுத்தறது?" என்று நடுங்கும் குரலில் கேட்டிர்கள். உங்கள் வேதனை எனக்குப் புரிந்தப்படியால் நீங்கள் நடந்துகொண்ட விதம் குறித்து நான் வருத்தமேதும் படவில்லை.

 "நான் இதை யாரிடமாவது சொன்னால் எனக்கு முரட்டுப் புருஷன் வாய்த்திருக்கிறான் என்று சந்தேகமில்லாமல் நம்பியிருப்பார்கள். ஆனாலும் ஒரு சின்னஞ்சிறு விஷயத்துக்காக நமக்கிடையில் பெரும் மனத் தாங்கல் வந்திருந்த சமயத்தில் நீங்கள் என்னை அடித்தது.எனக்கு உடனடி ஆசுவாசம் தரவே செய்தது. 

"நான் எப்பவுமே அதைத்தொடமாட்டேன் இனி. என் கையை வேணாக் கட்டிப் போட்ருங்க."

நான் என் கைகளை ஒன்றாக்கி உங்கள் நெஞ்சுக்கு நேரே நீட்டினேன். நான் அப்படி நீட்டினது என்னையே, என் சகலத்தையுமே, உங்களிடம் ஒப்படைத்துவிடுவது மாதிரித்தான் இருந்தது. -

நீங்கள் குழம்பின மாதிரித் தோன்றினர்கள். உங்கள் கோபம் உங்களைத் தடுமாறவைத்து உணர்ச்சியின் வீச்சில் அடித்துக்கொண்டு போய்விட்டமாதிரி இருந்தது. பாவாடை நாடாவை எடுத்து என்கைகளைக் கட்டினர்கள். 

கட்டிப்போட்டிருந்த கைகளால், கலைந்த என் தலைமயிரை நான் கோதினபோது நீங்கள் பார்த்த அந்தப் பார்வை எனக்கு எத்தனை சந்தோஷமாய் இருந்தது. இந்தப் பழக்கம் இன்னையோட ஒழிஞ்சுது என்று நினைத்துக்கொண்டேன். மறுபடியும் மச்சத்தைத் தொடுவது மிக அபாயகரமானதுதான். 

ஆனால் பழையபடி அந்தப் பழக்கம் என்னைத் தொற்றிக் கொண்டதுதான், என்மேல் உங்களுக்கிருந்த பிரியம் முழுக்க மறைந்ததற்குக் காரணமா? நீ உன் இஷ்டப்படியே நடந்துக்க. எக்கேடும் கெட்டு ஒழி என்பதை நான் உணரும்படி செய்வதுதான் உங்கள் நோக்கமா? 

அதற்கப்புறம் நான் மச்சத்தை நிமிண்டும் போதெல்லாம் நீங்கள் கவனிக்காததுபோல் இருந்துவிடுவீர்கள் ஏதும் சொல்லவும் மாட்டீர்கள். 

அப்போதுதான் அந்த விநோதம் நிகழ்ந்துவிட்டது. உதையும் வசவும் குணப்படுத்திவிட முடியாத அந்தப் பழக்கம் எப்படிக் காணாமல்போனது. முயற்சிகள் அத்தனையும் பலனளிக்காமல் தோற்றுப்போன வேளையில்அது தானாகவே போய்விட்டது.

"கவனிச்சிங்களா, நான் இப்பல்லாம் மச்சத்தைத் தொடுறதே இல்லே" அப்போதுதான் அந்த விஷயத்தையே கண்டுபிடித்தவள் மாதிரி நான் உங்களிடம் சொன்னேன். நீங்களே, அழுத்தமாக 'உம்' கொட்டி விட்டு அதைப்பற்றி சற்றும் கவலையில்லாதவர் போல் இருந்துவிட்டிகள். அந்தப் பழக்கம் உங்களுக்கு இவ்வளவு சாமான்யமானது என்றால், என்னை ஏன் அவ்வளவு திட்டனும் என்று கேட்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால், இதை இவ்வளவு லேசா நிறுத்திட முடியும்னா, ஏன் முன்னாடியே நிறுத்தியிருக்கக் கூடாது என்று உங்களுக்கும் கேட்கத் தோன்றியிருக்கும். நீங்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. "அந்தப் பழக்கம் ஒரு விஷயமேயில்லை; மருந்தும் இல்லை. விஷமும் இல்லை. அதைத் தொடர்ந்து பண்ணினால்தான் உனக்கு சந்தோஷமென்றால், தாராளமாகச் செய்" என்று சொல்வதாகவே இருந்தது உங்கள் முகபாவம். எனக்கு ஏமாற்றமாய் இருந்தது. 

உங்களைக் கடுப்படிப்பதற்காகவே, உங்கள் கண் முன்னாலேயே 6ा6üा மச்சத்தை உடனே நிமிண்டிடவேண்டும் என்று தோன்றியது. ஆனால், என்ன ஆச்சரியம்! என் கை ஒத்துழைக்க மறுத்தது. 

நான் மறுபடி தனியளாய் உணர்ந்தேன். ஆத்திரம் வந்தது. நீங்கள் இல்லாத சமயத்திலும் அதைத் தொடவேண்டும் என்று நினைத்தேன். ஆனாலும், ஏனோ அது அருவருப்பான கேவலமான சமாச்சாரமாய்த் தோன்றியது. என் கை வர மறுத்தது.

உதட்டை கடித்தபடி தலையைக் குனிந்து கொண்டேன். "ஒன் மச்சத்துக்கு என்ன ஆச்சு" என்று நீங்கள் கேட்பதற்காகக் காத்திருந்தேன். ஆனால், இந்தச் சம்பவத்துக்குப் பிறகு 'மச்சம் என்ற வார்த்தையே நம் சம்பாஷணையில் இடம் பெறமால் போனது. அந்த வார்த்தை மட்டுமல்ல, வேறு சில காரியங்களும் மறைந்து போயின. 

நீங்கள் என்னைத்திட்டின சமயங்களிலெல்லாம் நான் எதுவுமே செய்யாமலிருந்து விட்டேன், என்ன ஒரு உதவாக்கரைப் பெண்பிள்ளை நான்! 

என் வீட்டுக்கு வந்தபோது என் அம்மாவுடன் குளிக்க நேர்ந்தது. 

"நீ முன்னமாதிரி அழகா இல்ல ஸயோகோ, அதுக்குள்ளயும் வயசாயிடுச்சு உனக்கு" என்றாள் அம்மா. 

நான் அதிர்ந்து போனேன். அம்மா வழக்கம் போலவே பறங்கிப் பழமாய், பளபளப்புடன்தான் இருந்தாள். "அந்த மச்சம் கூட எவ்வளவு அழகாயிருக்கும்." அந்த மச்சத்தால் நான் பட்ட கஷ்டத்தை எப்படிச் சொல்வது அம்மாவிடம்? நான் சொன்னேன். 

"டாக்டர்டடப்போனா அந்த மச்சத்தை லேசா எடுத்துடுவாராமே." "டாக்டர்ட்டயா? எதுக்கு? அப்புறம் அந்த இடம் தழும்பால்ல ஆயிடும்." - 

அம்மாதான் எவ்வளவு நிதானமாக, சரளமாக இருக்கிறாள். "நாங்க நெனச்சு நெனச்சு சிரிப்போம். கல்யாணமாயி இவ்வளவு நாள் கழிச்சும் ஸ்யோகோ அந்த மச்சத்தைத் திருகிக் கிட்டுத்தான் இருப்பாள் என்று சொல்லிச் சிரிப்போம்." - "

நான் திருகிக்கிட்டுத்தான் இருந்தேன்." 

"நாங்க நினைச்சது சரித்தான் பின்னே." 

"மோசமான பழக்கம்மா அது. நான் எப்ப அப்படிப் பண்ண ஆரம்பிச்சேன்."

"கொழந்தைகளுக்கு எப்ப மச்சம் உண்டாகுதுன்னு சொல்ல முடியுமா? சில கொழந்தைகளுக்குப் பாரு, மச்சமே இருக்காது." 

"வாஸ்தவம்தான். என் கொழந்தைகளுக்கும் மச்சமே இல்லை." 

"ஆமா, ஆனா கொழந்தைகள் வளர வளர மச்சமும் உண்டாயிடும். அப்புறம் மறையவே செய்யாது. ஒன் மச்சம் அளவு பெரிசாயிருக்காதுதான், உனக்கும் சின்ன வயசிலேயே வந்திருக்கனும்" அம்மா என் தோள்பட்டையைப் பார்த்துச் சிரித்தாள். 

நான் குழந்தையாயிருந்தப்போது அம்மாவும் என் சகோதரிக்கும் அந்த மச்சத்தைத் தொட்டுக் குறுகுறுக்க வைத்தது ஞாபகம் வந்தது. அப்போதெல்லாம் அந்த மச்சம் சிறிய அழகான புள்ளியாய் இருக்கும். பார்க்கப்போனால், எனக்கு இந்தப் பழக்கம் வந்ததற்கே அவர்கள் தான் காரணம். 

படுக்கையில் படுத்து மச்சத்தை நிமிண்டியபடி யோசிக்க ஆரம்பித்தேன். நான் குழந்தையாய் இருந்த போது, இளம்பெண்ணாய் இருந்தபோதெல்லாம் அது எப்படி இருந்தது? 

அந்த மச்சத்தை நான் கடைசியாய்தொட்டு எத்தனை வருஷங்களாயிற்று என்று ஆச்சர்யமாய் இருந்தது. - 

நான் பிறந்த இந்த இடத்தில், என் வீட்டில், உங்களிடமிருந்து தொலைவில் இருக்கும் போது என் இஷ்டப்படி அதைத் தொடமுடியும், யாரும் என்னை இப்போது தடுக்கமுடியாது. 

ஆனால் அது ரஸிக்கவில்லை. மச்சத்தில் என் விரல்பட்டவுடன் துடான கண்ணிர் என் கன்னத்தில் வழிகிறது.

என் இளமையையும் குழந்தைப் பருவதிகதி பற்றித்தான் நினைத்துப் பார்க்க ஆசைப்படுகிறேன். ஆனால்,என் மச்சத்தைத் தொட்டவுடன் என்னால் உங்களை நினைக்க முடிகிறது. 

நான் ஒரு மோசமான மனைவி; எனக்கு உரிய சன்மானம் விவாகரத்துத்தான். என் வீட்டில் என் படுக்கையில் இருக்கும்போதும் உங்கள் ஞாபகம் மட்டும்தான் எனக்கு இருக்கமுடியும் என்று முன்னமே ஏன் தெரியாமல் போனது. 

ஈரமான என் தலையணையில் முகத்தைப் பதித்துக் கொண்டேன் - கனவில் அந்த மச்சம் வந்தது. 

கனவில் வந்த இடம் எது என்று விழித்த பிறகு நினைவில் இல்லை. ஆனால் அங்கே நீங்கள் இருந்தீர்கள். சில பெண்களும் இருந்த மாதிரியிருந்தது. நான் குடித்துக்கொண்டிருந்தேன். ஏதோ ஒன்றுக்காக உங்களிடம் மன்றாடிக் கொண்டிருந்தேன். - 

என் பழக்கம் மறுபடி வந்துவிட்டது. என் இடது கையை வழக்கம் போலவே என் முலைகளில் வைத்து அழுத்தியவாறு என் மச்சத்தைத் தொட்டேன். அது, அந்த மச்சம், நான் திருகும்போது என் கையோடு வந்து விட்டது. வலியே இல்லாமல், உலகத்தில் மிகவும் சகஜமான விஷயம்தான் அது என்கிற மாதிரி, அது பிய்ந்து வந்து என்விரல்களுக்குள் இருந்தது. அவித்த அவரை விதையின் ஸ்பரிசத்தை என் விரல்களின் இடுக்கில் உணர்ந்தேன். வக்கிரம் பிடித்த குழந்தை மாதிரி இருந்தேன். நான் அந்த மச்சத்தை உங்கள் முக்கின் பக்கத்திலிருந்த மச்சத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டினேன். 

என் மச்சத்தை உங்கள் மேல் எறிந்தேன். கத்தினேன். அலறினேன். உங்கள் கையைப் பிடித்து இழுத்தேன். உங்கள் மார்பில் தொங்கிக் கெஞ்சினேன். 

கனவு கலைந்து விழித்தபோது என் தலையணை நனைந்திருந்தது. நான் இன்னமும் அழுது கொண்டிருந்தேன். 

முழுக்க முழுக்க களைப்பாய் உணர்ந்தேன். ரொம்ப லேசாகிவிட்ட மாதிரி - பெரிய சுமையை இறக்கிவைத்து விட்டதுபோல நிம்மதியாய் இருந்தது. அந்த மச்சம் உண்மையிலேயே பிய்ந்து வந்து விட்டதா என்று நினைத்த போது சிரிப்பு வந்து விட்டது. அது இருப்பதைத் தொட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ள ரொம்ப கஷ்டப்பட்டுப் போனேன். 

அந்த மச்சத்தின் கதை இவ்வளவுதான். 

அந்தக் கறுத்த அவரைவிதை இன்னமும் என் விரல்களுக்கிடையில் இருக்கிற மாதிரித் தான் உணர்கிறேன். 

உங்கள் முக்கருகில் இருக்கும் அந்த சிறிய மச்சம் பற்றி நான் அதிகம் யோசித்ததில்லை. பேசினதும் கிடையாது. என்றாலும் அது எப்போதும் என் மனதில் இருந்து வந்திருக்க வேண்டும். என் மச்சத்தை உங்களுடையதில் வைத்து உங்கள் மச்சம் பெரிதாக வீங்கினால் அது எத்தனை பெரிய தமாஷாய் இருந்திருக்கும்! அதேபோல என் மச்சம் பற்றி நீங்களும் கனவு கண்டிருந்தால் நான் எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பேன். 

ஒரு விஷயம் மறந்து போய்விட்டது. "அதுதான் எனக்குப் பிடிக்கலே" என்று சொன்னதும் கூடி என் மேலிருந்த அன்பின் அடையாளம் என்றுதான் நான் நம்பினேன். நான் மச்சத்தைத் தொடும்போது என் மனதின் அசிங்கம் அத்தனையும் வெளியில் வந்துக் கொட்டி விடுவதாய்த்தான் பட்டது. 

என் அம்மாவும் சகோதரிகளும் செல்லம் கொடுத்ததால்தான் இந்தப் பழக்கம் வந்து சேர்ந்தது என்று சொன்னால் போதாதோ? அம்மாவிடம் கேட்டேன். 

"முந்தியெல்லாம் நீகூடத் திட்டுவேல்லம்மா. மச்சத்தை நிமிண்டினா?" 

"ஆமா, கொஞ்சநாள் முந்திக் கூட திட்டினேனே!" 

"ஏன் திட்டினே?" 

"ஏன்னா! கெட்ட பழக்கம், அதுனாலதான்." 

"அந்தப் பழக்கம் எப்படித் தோணுச்சு உனக்கு?" 

"அதுவா"அம்மா தலையை ஆட்டிக் கொண்டாள். 

"அதைப் பார்க்க நல்லாயில்லே." 

"ஆனா, நான் அப்படிப் பண்ணும்போது உனக்கு எப்படி இருந்தது? வருத்தமாவா?அசிங்கமாவா?" 

"அதைப்பத்தி அதிகம் யோசிக்கலே, நீயே அதை விட்டுருவேன்னு நெனச்சேன். துங்கி வழியிற மாதிரி முஞ்சிய வச்சிக்கிட்டு." "உனக்கு எரிச்சலா இருந்துச்சா?" 

"ஆமா, பார்க்கக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு" - - - - - - - 

"அப்ப நீங்க எல்லாரும் என் மச்சத்தைத் தொட்டது கிண்டலுக்குத்தானா?" 

"அப்புறம் வேற எதுக்காம்?" 

அப்படியென்றால் எனக்கு வேண்டியவர்களின் அன்பை ஞாபகப்படுத்திக் கொள்ளும் விதமாய்த் தானே நான் மச்சத்தைத் திருகியிருப்பேன்? இதைத் தான் நான் உங்களுக்குச் சொல்லியாகி வேண்டும். நீங்கள் ஆரம்பம் முதல் கடைசிவரை என் மச்சத்தைத் தவறாய்தானே புரிந்துகொண்டீர்கள்.

 நான் உங்களோடு இருந்தபோது வேறு யாரைப் பற்றியாவது நினைத்திருப்பேனா? வார்த்தையில் சொல்லி விளக்கிவிட முடியாத அன்பின் விளைவுதான் நீங்கள் வெறுத்த அந்தப் பழக்கம் என்பது ஒரு விந்தைதானே! 

என்னுடைய அந்தப் பழக்கம் ஒரு சின்ன விஷயம். அதற்காக நான் சமாதானங்கள் சொல்ல வரவில்லை. 

ஆனால் என்னை, ஒரு மோசமான மனைவியாக்கிய சகலமும் அதிலிருந்து தானே ஆரம்பித்தது? அவையெல்லாமே, எனக்கு உங்களிடமுள்ள காதலை வெளிப்படுத்தும் முயற்சிகள்தானே. அவற்றை நீங்கள் உணர மறுத்ததுதானே இன்றைய இந்த நிலைக்குக் காரணம்? 

இதை எழுதும் போதும், நான் தவறு செய்துவிட்ட ஒரு மோசமான மனைவிதானா என்று என்னுள் சந்தேகம் வரத்தான் செய்கிறது. இருந்தாலும் இதையெல்லாம் நான் உங்களிடம் சொல்லித்தான் ஆகவேண்டும்.

தமிழில்: ஜே. வசந்தன்