Pages

Saturday, April 30, 2016

கார்னிவல் - பி.எஸ். ராமையா

-> 255
கார்னிவல்
பி.எஸ். ராமையா
https://archive.org/download/orr-12398_Carnival/orr-12398_Carnival.pdf
Automated Google-Ocr
ஸ்ரீமதி வனஜா சொல்லுகிறாள்:

என்னுடைய சந்தோஷத்திற்கும் திருப்திக்கும் எல்லைகாட்ட முடியாது. அவ்வளவு சந்தோஷத்துடன் வீணையைக் கையிலெடுத்தேன். அவர் வந்து என் அருகில், நான் உட்கார்ந்திருந்த ஸோபாவுக்கு அருகில் நின்று கொண்டு சொன்னார். அவர் கையில் ஒரு கண்ணாடி டம்ளர். அதில் பனிக்கட்டி போட்ட குளிர்ந்த பானம். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி அனுபவித்துக் கொண் டிருந்தார். என் அருகில் வந்தவுடன் டம்ளரிலிருந்து ஒரு வாய் அருந்தினார். பிறகு குனிந்து என் புடவை முந்தானையை இழுத்து அதனால் வாயைத் துடைத்துக் கொண்டார். அப்போது அவருடைய முகத்தைப் பார்த்தேன்.

அவர் அருந்திய பானத்தை விட, என் முந்தானையில் தான் அவர் அதிக இன்பத்தைக் கண்டார் என்பதை அவர் முகம் காண் பித்தது. அவர் முகத்திலே அவர் அருந்திய பானத்தின் களைகள். முகம் சிவந்து வியர்வை அரும்பிக் கொண்டிருந்தது. அங்கே பானத்தின் போதை நன்றாகத் தெரிந்தது.

ஆனால் அவர் கண்களிலிருந்த களை வேறு விதமானது. அங்கு அவருடைய உள்ளத்தில் நிறைந்திருந்த இன்னொரு விதமான போதையின் ஒளியைக் கண்டேன். என் முந்தானையை அவர் பற்றிய போதும், அதைக் கொண்டு நாசூக்காக அவரது உதடுகளைத் துடைத்துக் கொண்டபோதும், அவர் கண்களில் என்னால் விவரிக்க முடியாத ஒரு வித ஆனந்தத்தையும், மயக்கத் தையும் கண்டேன்.

அவர் ரொம்ப இனிமையாகக் குனிந்து, என் கன்னத்தில் அவர் ஸ்வாசம் படும்படி நின்று கொண்டு, “வனி” கொஞ்சம் வீணை வாசியேன் என்று கொஞ்சுதலாகக் கேட்டார்.

அவர் என்னைப் பலவிதமாகக் கூப்பிடுவார். 'வனஜாr என்று அவர் கூப்பிட்டால் அதற்கு ஒரு அர்த்தம். அப்போது அவருடைய நெஞ்சம் இன்னும் என் மயக்கத்தில் சரியாக
மணிக்கொடி இதழ்தொகுப்பு

256 -> மணிக்கொடி
லயிக்கவில்லையென்று சொல்லலாம். பிறகு கொஞ்சம் கொஞ்ச மாக அந்தப் பதம் குறுகும். வனஜா வனஜி என்றெல்லாம் மாறிக் கடைசியாக வனி என்று ஆகிவிடும். இதுதான் அவருடைய உள்ளத்தில், என் மேலெழும் பிரேமையின் உச்ச ஸ்தாயியைக் குறிக்கும் ஸ்வர ஸ்தானம் என்று எனக்குத் தெரியும்.

என்னுடைய சந்தோஷத்திற்கும், திருப்திக்கும் எல்லை காட்ட முடியாது. இப்படிப்பட்ட ஒரு சீமான் என்னுடைய தாசனாக, என் தாசித் திறமைக்குக் கொடுக்கப்பட்ட ஒரு நற்சாட்சிப் பத்திரமாக அகப்பட்டிருக்கும்போது, என் காலிலிருந்து உதிரும் சிறு துளியை எடுத்துத் தன் கண்களில் ஒத்திக் கொள்வதையே ஒரு ஸ்வர்க்கபோக அனுபவமாக மதிக்குமளவு அவர் என் மேல் மயங்கி நிற்கும்போது, அந்த உண்மையைப் பூரணமாகப் புரிந்து கொண்ட எனக்கு சந்தோஷமும் பெருமையுணர்ச்சியும் இல்லாமலிருக்குமா?

ரொம்ப கர்வத்துடனும், பரம திருப்தியுடனும் வீணையைக் கையிலெடுத்தேன்.

சாதாரணமாகவே வீணையை மீட்டியவுடன் என் மனம் கட்டுப்பாட்டை மீறிவிடும். அதென்னவோ என்னால் விளக்கமாகச் சொல்ல முடியவில்லை. வீணையின் தந்திகளைச் சுருதிகூட்டி ஒரு தடவை மீட்டி விட்டவுடன், அந்த நாதத்திற்கு என் சரீரத்தில் எங்கேயோ ஒரு எதிரொலி எழும்புவதாக உணருகிறேன். நான் மீட்டியது வீணையின் தந்திகளை யன்று, என் சொந்த நரம்புகளையே நான் மீட்டிக் கொண்டேன் என்றுதான் தோன்றுகிறது. அப்படித் துடிக்கிறது என் உடலும், உள்ளமும் ஏக காலத்தில். என் இதயம் பொங்கி எழுகிறது. என்னால் தாங்க முடியாத ஒரு இனிய உணர்ச்சி எழுந்து என்னை வதைக்கிறது.

அப்படிப்பட்ட எனக்கு அந்தச் சமயத்தில், என்னுடைய பெருமையுணர்ச்சியுடனும், அளவிலடங்காத சந்தோஷத்துடனும் வீணையை மீட்டியவுடன், என் நிலைமை சகிக்க முடியாததாக ஆகி விட்டது. என்னால் அந்த ஆனந்தத்தின் அளவைத் தாங்க முடிய வில்லை. விவரிக்க முடியாத ஒரு வேதனையாகத் தானிருந்தது அது.

வீணையை மீட்டினேன், ரொம்ப நிதானமாக அவருக்கு ரொம்ப பிரியமான அந்தப் பியாகடைக் கீர்த்தனத்தை ஆரம்பித்தேன். என்னையும் மறந்து அந்த சுருதியில் கலந்து வாய்விட்டுப் பாடினேன்.

பல்லவியை முடித்தேன். அதுபல்லவியெடுக்க ஆரம்பித்தேன். சட்டென்று நின்று விட்டன, என் விரல்கள். என் உடல் ஒரு தரம்

இதழ் தொகுப்பு - ** 257
குலுங்கியது. என்னுடைய அந்த மயக்க நிலை திடீரென்று கலைந்து விட்டது.

காரணம், எங்கள் வீட்டு வாசலில் யாரோ சிலர் உரக்கப் பேசி உஷ்ணத்துடன் வாதமிட்டுப் போட்ட கூச்சல்தான். ரொம்பக் கர்ண கடுரமான பாஷையில், மிக மிகக் கடுரமான ஸ்வரத்தில் யாரோ கீழே கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் கூச்சல் என் சங்கீதத்தை ஒரே வினாடியில் குலைத்து நொறுக்கி விட்டது.

அவர் என் பக்கத்தில் கையில் டம்ளருடன் நின்றிருந்தார். அந்த பானத்தின் போதையும், அவருக்கு என் மீதிருந்த பிரேமையின் மயக்கமும், அவற்றோடு அந்த சங்கீதத்தின் செல்வாக்கும் சேர, அவர் செயலற்றுத் தன் சக்தியையெல்லாம் பறி கொடுத்து விட்டுத் துடிக்கும் ஒரு ஊமைக் குழந்தை போலத் துடித்துக் கொண்டு நின்றிருந்தார்.

கீழேயிருந்து வந்த கூச்சலினால் அவருடைய அந்த ஜாக்ர ஸ்வப்பனமும் கலைந்து விட்டது. அதுவரை அவருடைய முகத்தில் தாண்டவமாடிய மிருதுபாவம், குழைவு எல்லாம் எங்கோ சென்று மறைந்து விட்டது. முகம் சிவந்தது. எதிரில் ஒரு மேஜை மேல் வரவேற்பளித்துக் கொண்டு கிடந்த அவருடைய கைப்பிரம்பை எடுத்துக் கொண்டு மடமடவென்று மாடிப்படிகளுக்கு ஓடினார்.

கீழேயிருந்து வந்த கூச்சல் ஒரு கடுமையான சச்சரவையும், சில முரடர்களையும் என் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது. அப்படிப்பட்ட ஒரு கூட்டத்திற்குள் அவர் தனியாகப் போய் அகப் பட்டுக் கொள்ளப் போகிறாரே என்ற பீதி எழுந்து என்னை நடுங்கச் செய்தது. பயத்துடன் ஒடித் தாழ்வாரத்திலிருந்து பார்த்தேன்.

அவர் ஒரு மான் கூட்டத்தில் புகுந்த புலி போலப் பாய்ந்து கையிலிருந்த பிரம்பைச் சுழற்றிச் சுழற்றி வீசினார். ''தடிப் பயல்களா என்னடா கூச்சல் இங்கே? ஒடிப் போங்கள் நாய்களா! மரியாதையுடன் போகிறீர்களா, போலீஸ்காரனைக் கூப்பிடட்டுமா?" என்று சீறிக் கொண்டே வலசாரி இடசாரியாகப் பிரம்பை உபயோகித்தார்.

என்ன ஆச்சரியம்! கீழேயிருந்தவர்கள் நாலைந்து தடியர்கள். ஒவ்வொருவனும் தனியாக நின்றால் அவரைப் போலப் பத்துப் பெயர்களை அடித்துத் தூளாக்கி விடுவான். இருந்தும் அந்த ஐந்து பேர்களும் சேர்ந்து கூட அவரை எதிர்க்கத் துணியவில்லை. அவர் பாட்டில் பளிர் பளிரென்று பிரம்பினால் அவர்களை அடித்துத் துரத்தினார். அவர்கள், 'இல்லே சாமீ. இதோ போயிடறோம், சாமீ!
ம.இ.தொ – 17
மணிக்கொடி 

258 --> மணிக்கொடி
பாருங்க, சாமீ. நாளெல்லாம் ஒழைச்ச கூலியை வாங்கிக்கிட்டு அவன் குடுக்க மாட்டேங்கறான், சாமீ. ஆளுக்குக் கொஞ்சம் கள்ளை வாங்கி ஊத்திப் போட்டுப் போங்கடாங்கறான், எசமான்' என்று ஆளுக்கொரு வாக்கியமாகக் கூவிக் கொண்டு அங்கிருந்து கலைந்து ஒட முயன்றார்கள்.

என் மனம் சிந்திக்க முயன்றது. இவருக்கு இவ்வளவு தைரியத்தையும், அவர்களிடத்தில் அவ்வளவு பயத்தையும் எழுப்புவதற்குக் காரணம் எது? அவர்கள் எல்லோரும் கோழைகளா? பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே. பின் ஏன் பயப்பட்டார்கள்? எங்கள் வீட்டு வாசலில் நின்று அப்படிக் கூச்சல் போட்டு அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றத்தை அவர்கள் உணர்ந்து கொண்டு அதனால் அப்படிப் பயப்பட்டார்களா? அல்லது இவர்தான் தன் வீட்டு வாசலில் வந்து பிறர் தொல்லை கொடுத்தால், அதைத் தடுக்கத் தனக்குள்ள உரிமையை உணர்ந்து, அந்தப் பலத்தின் நினைவோடு அவர்களை அப்படி விரட்டத் துணிந்தாரா? எனக்கு விளங்கவில்லை.

வெற்றிப் பிரதாபத்துடன் அவர் மாடிக்கு வந்து சேர்ந்தார். வந்தவர் கையிலிருந்த பிரம்பை மறுபடி மேஜையின் மேல் எறிந்து விட்டு, தன்னுடைய அந்த தீரச் செய்கையின் முழு அர்த்தத்தையும் நான் அறிந்து அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறவர் போல, ''தடிப்பயல்கள் குடித்து விட்டுக் கூச்சல் போட்டுக் குட்டிச் சுவரடித்து விட்டான்கள். இங்கே யிருப்பது யாரென்று தெரியாது போலிருக்கிறது! கட்டி வைத்துத் தோலை உரித்து விடுவேன்!" என்று மேல் மூச்சுடன் பேசி விட்டு, நான் முதலில் உட்கார்ந்திருந்த ஸோபாவில் போய்ச் சாய்ந்தார்.

நான் பேசவில்லை. அவசரம் அவசரமாகக் கண்ணாடி டம்ளரில் பானத்தை ஊற்றி அதில் ஒரு ஐஸ்துண்டை அலம்பிப் போட்டேன். மெளனமாக எடுத்துக் கொண்டு போய் அவர் முன் நீட்டினேன். இனிமையாகப் புன்னகை செய்து அதை வாங்கிக் கொண்டு, ஆவலுடன் என் கையைப் பற்றி இழுத்துத் தன்னருகில் இருத்தி மற்றக் கையால் அனைத்துக் கொண்டு, வனஜா' என்றார்.

செல்வம்; ஏராளமான செல்வம். நான் திரும்புமிடத்தி லெல்லாம் அதன் ஆட்சியைக் காணும்படி கொண்டு வந்து என் முன்னால் இறைத்துக் கொண்டிருந்தார். நல்ல வாலிபம், அழகில் மன்மதன் அல்லவானாலும் எந்த ஸ்திரியும் அவரைக் கணவனாக அடைந்து பெருமை கொள்ளாமலிருக்க முடியாது. அப்படிப்பட்ட

இதழ் தொகுப்பு ** 259
வடிவம், நல்ல அந்தஸ்து, ஊரில். வீட்டு மைனர். இவ்வளவுடன் அப்போதுதான் அவருடைய தைரியத்திற்கும் பலத்திற்கும் ஒரு மாதிரிப் பார்த்தேன்.

இதைக் காட்டிலும் அதிகமாக ஒரு பெண் என்ன எதிர் பார்க்க முடியும்? அதிலும் என் போன்ற ஒரு தாசி! அவர் என் மணாளனாக வந்து வாய்த்தது என் சொந்த பாக்கியத்தினாலல்ல, என் முன்னோர் யாரோ செய்து வைத்த புண்ணியத்தின் பலன்தான் என்று நான் நம்பினேன்.

அவருடைய அணைப்பில் என் வேசிக் குணம் முழுவதையும் மறந்து கேவலம் ஒரு சாதாரண மனிதப் பெண்ணாகச் சோர்ந்து கிடந்தேன்.
கையிலிருந்த பானத்தை அவர் ஒரே மடக்கில் குடித்துவிட்டு டம்ளரைக் கீழே உருட்டி விட்டார். இப்போது அவர் என் முந்தானையைத் தொடவில்லை. தன் சட்டைப் பையிலிருந்த கைக் குட்டையை எடுத்து வாயைத் துடைத்துக் கொண்டார். திடீரென்று நினைத்துக் கொண்டவர் போல என் பக்கம் திரும்பி, 'வனஜா வா கார்னிவல் ஷோவுக்குப் போய் வருவோம். அந்த தடியர்களால் மனசு என்னவோ போல் ஆகிவிட்டது. நம்முடைய சுக சங்கீதத்தில் கரகரப்புத் தட்டிவிட்டது. புறப்படு, போகலாம்,' என்றார்.

என் எஜமானச் சந்தோஷம் தானே என் லட்சியம்! அவருடைய 'நான் எவ்வளவுக் கெவ்வளவு திருப்தி யடைகிறதோ அவ்வளவுக் கவ்வளவு எனக்குத்தானே லாபம்!

'இதோ வந்தேன்' என்று சொல்லி அவர் பிடியிலிருந்து விடுபட்டுக் குதித்துக் கொண்டு ஒடினேன். ஐந்தே நிமிஷம். அவர் மோட்டாரை ஒட்டினார். நான் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன்.

2

"கிங்ஸ் கார்னிவல் ஷோவில் அன்று சொல்ல முடியாத கூட்டம் தினசரி கேளிக்கைகளுடன் அன்று விசேஷமாக ஏதோ விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனவாம். அதோடு அன்று முதல் நவராத்திரிப் பண்டிகை விடுமுறை நாட்கள் ஆரம்பம். ஆகையால் ஏராளமான ஜனங்கள் ஆண்களும் பெண்களுமாக வந்து கூடியிருந்தனர். விதம் விதமாக உடைகளுடுத்து, கண்ணைப் பறிக்கும் வர்ண விபரீதங்களுடன் ஒரு புது உலகமாகக் காணப்பட்டது அந்த இடம்.
மணிக்கொடி இதழ்தொகுப்பு

260 -> மணிக்கொடி
உள்ளே நுழைந்தவுடன் செவிடுபடச் செய்யும் ஜோஜோ என்ற இரைச்சல் எழுந்து என்னைச் சூழ்ந்து கொண்டது. அதில் மெய் மறந்து கூத்தடித்துக் கொண்டிருந்த ஒரு மனிதக் கூட்டம் கண் முன் எழுந்தது.

ராட்டினங்கள், தினுசு தினுசானவை. குதிரைகளும், நாற்காலிகளும் ஆசனமாகக் கொண்டது ஒன்று. ஆகாய விமானங்களால் ஆக்கப்பட்டது ஒன்று. கப்பல்கள் போன்று அமைக்கப்பட்ட ஆசனங்களுடன் ஒன்று. நம் வீட்டு மாவரைக்கும் இயந்திரம் போலச் சுழன்று வந்தது ஒன்று. எல்லாவற்றிலும் ஆட்கள் ஆண்களும் பெண்களும் அவற்றின் சுழற்சியால் எழும் மயக்கத்துடன் சத்தமிட்டுச் சிரித்து அவர்கள் போடும் கூச்சல்கள்.

மற்றொரு பக்கம் சூதாடும் கடைகள் வளையம் உருட்டுமிடம். பந்து எறிந்து பந்தயம் வைக்கும் இடம். குலுக்கிப் போட்டு நம்பரெடுத்துப் பரிசு கொடுக்குமிடம். இன்னுமெத்தனையோ.

இன்னொரு பக்கம் ஒரு அரை நிர்வாணப் பெண்ணின் கோர நாட்டியம். அதற்காக ஒரு தினுசான வாத்தியம். பக்கத்தில் ஒரு கோமாளி, வாயில் ஒரு நீண்ட குழாயை வைத்துக் கொண்டு, வாருங்கள், வந்து பாருங்கள் என்று கூவிக் கொண்டிருந்தான். அடுத்தாற்போல ஒரு ஜாலவித்தைக்காரன் கூடாரம்.

எங்கும் ஒரே இரைச்சல். ஒன்றுடன் ஒன்று சுருதி கலவாத பல தினுசான பேதங்களுடன் கூச்சல்கள். இவ்வளவுக்கும் மேல் ஒரு ராட்டினத்தின் புறத்திலிருந்த ஒரு நீராவி யந்திரத்தினுதவியால் சில குழாய்கள் கூவிக் கொண்டிருந்தன. ரயில் வண்டி எஞ்சின் கூவுகிறதே, அது போல. பல தினுசு எஞ்சின்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்வரத்தில் கூவுவது போலிருந்தது. அந்த ஸ்வர பேதங்களைக் கட்டுப்படுத்தி வெள்ளைக்காரர்களின் பாண்டு வாத்தியம் போல அமைக்க முயன்றிருந்தது தெரிந்தது. அந்த பாண்டு வாத்திய கோஷம் அந்த உலகத்திலிருந்த கூச்சல்கள் எல்லா வற்றிற்கும் மேல் எழுந்து காதையடைத்துக் கொண்டிருந்தது.

என்னுடைய வீணா சங்கீதத்தைக் கலைத்த அந்த முரட்டு மனிதர்களின் கூச்சல், அவ்வளவுக்கும் மத்தியில் என் காதில் தொனிப்பது போலிருந்தது. அவர்கள் கூச்சலுக்கும், அங்கே கேட்ட கூச்சல்களுக்கும். ஏதோ வித்தியாச மிருந்ததாகத் தோன்றியது, எனக்கு இங்கே கேட்ட சப்தம் ஒவ்வொன்றும் அந்த இரவின் நியாயமான நிசப்தத்தைக் கலைக்க எழும் அபகரங்களாக ஒலித்தன. ஆனால் அந்த முரடர்களின் குரல்?
|

இதழ் தொகுப்பு ** 261
அந்த சப்தத்தைத் தாங்க மாட்டாமல், சகிக்காமல், அப்படிச் சீறிப் பாய்ந்த அவர், இங்கு தமக்குச் சொந்தமான, இயற்கையான ஒரு உலகத்தில் நுழைந்தவர் போலக் காணப்பட்டார்.

அவருடைய முகத்தில் அவருடைய உற்சாகத்தின், கோலாகல உணர்ச்சியின் வெறிக் களை தோன்றியது. ஒரு குழந்தை போல, பொறுப்பற்ற யுவன் போல அவர் அங்கிருந்த விளையாட்டுகளில் கலந்து கொண்டார். என்னையும் அதில் ஈடுபடும்படி வற்புறுத்தாமல் வற்புறுத்திக் கூடவே இழுத்துக் கொண்டிருந்தார்.

இருந்தும் என் மனம் கலங்கிப் போய்விட்டது. அதன் சுருதி கலைந்து விட்டது. மறுபடி அதைக் கூட்ட என்னால் இயல வில்லை.

இரவு பன்னிரண்டரை மணி சுமாருக்கு நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். அவருடைய முகம் அவ்வளவு நேரம் அடித்த கூத்தின் களையுடன், சோபையுடன் திகழ்ந்தது. அவருடைய கண்களில், நான் இரவின் ஆரம்பத்தில் முதன் முதலாகக் கண்ட அதே பிரகாசத்தைக் கண்டேன். அவ்வளவுக்கும் மேல் அவர் என்னிடம் கொண்டிருந்த மோக வெறியின் ஒளி எனக்கு நன்றாகப் புலனாயிற்று.

3
எங்கள் வீடு - என் வீடு தான்; அவர் என் வசத்தில் - அல்லது நான் அவர் உடைமையாக இருக்கும் வரையில் அது எங்கள் வீடு தானே! - நகரத்தின் மத்தியில் இருக்கிறது. காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை அங்கு ஜனநடமாட்டம் கசகசவென் றிருப்பது சகஜம். அதற்கு மேலும், இரவு முழுவதும் ஒய்வேயின்றி யாராவது ஒன்றிருவர் நடமாடிக் கொண்டே யிருப்பார்கள், எங்கள் வீதிகளில். *

மோட்டார், டிராம் ரோட்டிலிருந்து பிரிந்து, ஒரு குறுக்குச் சந்தில் நுழைந்தது. நாங்கள் நேரே டிராம் ரோட்டிலேயே இன்னும் கொஞ்ச தூரம் போய் இடது கைப்புறம் திரும்பியிருந்தால் எங்கள் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்து விடலாம். ஆனால் இவர் இஷ்டம் அது. குறுக்குச் சந்து வழியாக நுழைந்தார். அந்தச் சந்தில் போய் வலதுபுறம் திரும்பி இன்னொரு பெரிய சந்து வழியாகப் போய் இடது பக்கம் திரும்பினால் ஒரு பெரிய தெரு. அதோடு நேர் வடக்கே போய் மறுபடி ஒரு சந்தில் திரும்பி வெளியேறினால் எங்கள் வீடு இருக்கும் தெரு.
மணிக்கோடி இதழ்தொகுப்பு

262 -> மணிக்கொடி
ரொம்ப நிதானமாகத்தான் மோட்டாரை ஒட்டினார். அவர் மனம் அந்தக் கார்னிவல் விளையாட்டுகளால் நிறைந்திருந்தது - ஆனால் சலிப்படைந்து விடவில்லை என்று தெரிந்து கொண் டேன். இரண்டொரு தடவை வணி', 'வனஜீ என்று அருமையாக அழைத்ததைத் தவிர அவர் வழியெல்லாம் வேறெதுவும் பேசவேயில்லை.

வண்டி பெரிய தெரு வழியாக ஒடிக் கடைசிச் சந்தில் திரும்பியது. கொஞ்சதூரம் போயிருக்கும். எதிரில் ஒரு சிறிய ஜனக் கூட்டம் நின்று வழியை யடைத்துக் கொண்டிருந்தது. மோட்டார் ஹார்னை விடாமல் அமுக்கிக் கொண்டே யிருந்தார், அவர் அப்பா என்ன கர்ண கடுரமான தொனி அந்த சப்தத்தை அங்கே முன்னால் கூட்டத்தில் நின்றவர்களில் யாருமே கேட்கவில்லையென்று தோன்றியது. யாரும் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் என் மனதில் எழுந்த எண்ணம் என்ன தெரியுமா?

இவர் தன்னுடைய பணப் பெருமையை மோட்டார் ஹார்ன் மூலம் அவர்கள் காதருகில் போய் ஊதுவது போல இருந்தது. அவர்கள், 'உன்னைப் பார்த்து ஆச்சரியமடையவோ, அல்லது பிரமிப்பும் பொறாமையும் கொள்ளவோ எங்களுக்கு இப்போது சாவகாசமில்லை என்று அலட்சியமாக நிற்பது போலவும் இருந்தது.

ஆத்திரத்துடன், கோபத்துடன் மோட்டாரிலிருந்து கீழே குதித்தார், அவர் ரொம்ப தடயுடலாக, "என்னடா இது, ரோட்டை அடைத்துக் கொண்டு...' என்று கூவிக்கொண்டே கூட்டத்தை நெருங்கினார்.

எனக்குப் பயமாக இருந்தது. இரவு முன்னேரத்தில் அந்த முரடர்கள் தங்கள் தவறையும், இவருடைய உரிமையையும் உணர்ந்து ஒதுங்கி ஓடி விட்டது போல, இந்தக் கூட்டத்தினரும் ஒதுங்கி விடுவார்களா? 'உன் மோட்டார் போக இந்தச் சந்தில் உரிமையுண்டானால் இப்படி இங்கே கூடி நிற்க எங்களுக்கும் உரிமை உண்டு என்று அவர்கள் சொல்லி இவர் மேல் திரும்பி விட்டால்? பயத்தால் என் உடல் நடுங்கியது.நல்ல வேளையாக அப்படி யொன்றும் நடக்கவில்லை. 

கூட்டத்திலிருந்தவர்கள், இவர் மோட்டாரை விட்டு இறங்கியதைக் கண்டவுடன், இந்தப் பக்கம் திரும்பி இவரை வந்து சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு நடுவில், ஒரு பெண், என் வயது தானிருக்கும் - பதினெட்டு அல்லது இருபது தலைமயிர் ஜடை

இதழ் தொகுப்பு ** 263
கலைந்து ஒரு பகுதி முகத்தின் புறம் அலங்கோலமாகத் தொங்க நின்றிருந்தாள் மற்றொரு பகுதி இன்னும் பின்னலாகவே யிருந்தது. அதன் மேல் அவள் சூட்டியிருந்த புஷ்பச் செண்டு பிரிந்து அவருடைய வலது காதின் பின்புறமாகத் தொங்கிக் கொண்டிருந்தது.

நிறத்தில் கருப்பு. அவள் கூட்டத்தின் நடுவில் எனக்குக் கொஞ்சம் தூரத்திலிருந்தாள். எங்கள் மோட்டார் விளக்குகளின் வெளிச்சமும், சற்று தூரத்திலிருந்த வீதி விளக்கின் வெளிச்சமும் அவள் மேல் சரியாக விழாதபடி ஜனங்கள் சுற்றி நின்றிருந்ததனால் சரியாகத் தெரியவில்லை.

சாதாரணமான ஒரு புடவைதான் கட்டியிருந்தாள். காதிலும் மூக்கிலும் கண்ணாடியை வைரமாக நினைத்துச் செய்த சில நகைகளனிந்திருந்தாள். கழுத்திலும் ஒரு மஞ்சள் நிறக் கண்ணாடி மணி மாலை. அவளுடைய உருவம், இளமையில் ஊட்டமின்மை யாலோ, வேறு காரணத்தாலோ சூம்பிப் போனது போல இருந்தது.

அவளுடைய தோற்றம் - அவள் நின்ற நிலை - அவள் தன்னை மறந்து அங்கு கூடியிருந்த எல்லோருடனும் சண்டை பிடிக்கத் தயாராக இருப்பவளது போலிருந்தது.

கூட்டத்துடன் முன்னேறி வந்த அந்தப் பெண், 'பாருங்கசாமி, இந்த மனுசன் எட்டணாக் கொடுக்கறேனென்று சொல்லி என்னோடே பேசிட்டு, இப்போ பாருங்க சாமி கொடுக்க மாட்டேங்கறான். ஆம்புளையைப் பாரு து' என்று வாயிலிருந்த எச்சில் தெறிக்க அந்த மனிதன் பக்கம் பார்த்துக் கூவினாள்.
அதற்கு மேல் அவள் பேசியதையெல்லாம். என் வாய் கூசுகிறது. அவளும் என்னுடைய ஒரு சகோதரி. ஆம்; ஒரு வேசிதான்!

நான் ஒரு மாளிகையில் வீணை முதலிய அலங்காரங்களுடன் தொழில் நடத்துகிறேன். செல்வந்தர்கள், மைனர்கள் என்னிடம் தாமாக வந்து தங்கள் செல்வத்தைக் கொட்டிக் கொடுத்துச் சுகத்தைத் தேட முயலுகிறார்கள். அவள் அங்கே அந்தக் குறுகிய சந்தில் ஒரு திண்ணையின் மறைவில் நின்று உயிரைப் பிடித்து நிறுத்த முயலுகிறாள். அவளைத் தேடி வருபவர்கள் அவளுக்கு முடிவில் நியாயமான கூலியைக் கூடக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டுப் போய்விட முயலுகிறார்கள்.

அவளுடைய கட்சியைக் கேட்டு விட்டு அவர், 'ஏண்டா தடிப் பயலே என்னடா இது?' என்று அவளால் குற்றம் சாட்டப்பட்ட மனிதனை அதட்டினார்.

மணிக்கொடி இதழ்தொகுப்பு

264 -> மணிக்கொடி
அவ்வளவு பேர்களுக்கும் மத்தியில் அவ்வாறு அவமான மடைந்த அந்த மனிதன் முகத்தைப் பார்த்தேன். அவன் அதை யெல்லாம் பொருட்படுத்தவில்லையென்று தோன்றியது. நிமிர்ந்து நின்று பேசினான்.
"யாரடி கொடுக்கறேன்னான், ஓம் மூஞ்சிக்கு எட்டணா” என்றான்.

இவர் அவனை அடிக்கப் போகிறார் என்று நினைத்தேன். அடிக்கவில்லை. 'சீ, நாயே! அவள் பணத்தைக் கொடு என்று கையை ஓங்கி அதட்டினார்.
அவன் ஜே.பியில் கையை வைத்தான். அதற்குள் அவர் கேட்டார். 'என்ன கச்சடா இது நடு ரோட்டிலே கழுதைகள்! போலீஸ்காரனைக் கூப்பிட்டு இரண்டு பேரையும் ஸ்டேஷனுக்குக் கொண்டு போகச் சொல்லுகிறேன், பார் என்றார்.

அந்தப் பெண் ரொம்ப பயத்துடன், 'சாமி வயித்துப் பொழைப்பு சாமி என்றாள் கெஞ்சும் குரலில்.

உடனே அவர் அந்த மனிதனைப் பார்த்து, நையாண்டியாக, 'ஏண்டா அவதான் வயித்துப் பொழைப்புக்கு இங்கே நிற்கிறாள். நீயேண்டா வந்தே?' என்று சொல்லி விட்டுத் தனது புத்திசாலித் தனமான அந்தக் கேள்வியைக் கூட்டத்திலிருந்த மற்றவர்கள் எப்படி ரஸித்தார்கள் என்று ஆராய்வது போலச் சுற்றிப் பார்த்தார்.

அதைக் கேட்டுக் கூட்டத்திலிருந்த மற்ற யாவரும் கொல்லென்று சிரித்தார்கள். என் உடல் குன்றியது.

அதற்குள் கூட்டத்தின் மறுகோடியிலிருந்து ஒரு குரல் கேட்டது. 'போலீஸ் என்ற வார்த்தை. அவ்வளவுதான். அந்தப் பெண்ணினால் குற்றம் சாட்டப்பட்ட மனிதன் ஜே.பியிலிருந்து ஒரு நாணயத்தை எடுத்து அவளிடம் எறிந்துவிட்டு அங்கிருந்து நழுவி விட்டான். அந்தப் பெண்ணும் அவசரம் அவசரமாக அதைப் பொறுக்கிக் கொண்டு அங்கிருந்து நழுவினாள். கூட்டத்திலிருந்த மற்றவர்களும் அவசரமில்லாமலே கலைந்து பிரிந்தார்கள்.

அவர் வெற்றியின் அறிகுறியுடன் மோட்டாருக்குத் திரும்பி னார். மோட்டாரில் உட்கார்ந்து கொண்டு புறப்படப் போகும் சமயத்தில் எதிரிலிருந்து வந்த இரண்டு போலீஸ்காரர்கள் மரியாதை யுடன் பக்கத்தில் வந்து நின்று கொண்டு, 'என்ன ஸார் அது?" என்று கேட்டார்கள்.

அவர், 'என்னவோ சோதாப் பையல்கள் தகராறு. இந்த விபசாரி நாய்களை யெல்லாம் பிடித்துப் புளியம் விளாறினால்

இதழ் தொகுப்பு ** 265
அடித்து ஊரை விட்டுத் துரத்த வேண்டும்! என்று பொதுப்படையாகச் சொல்லி விட்டு மோட்டாரை விட்டார்.

4.
மணி இரண்டடிக்கப் போகிறது. அவர் இன்னும் உறங்க வில்லை. வீட்டிற்கு வந்தவுடன் அவர் மறுபடி தனது பானத்தைத் தொடங்கி விட்டார். “எங்கே வனி வீணையை யெடுத்து அந்தக் கீர்த்தனத்தைப் பூராவாகப் பாடு. சைத்தான்கள் மனசு என்னவோ போல ஆகி விட்டது' என்றார்.

அவர் என் எஜமானரல்லவா? நான் தாசிதானே என்னுடைய உணர்ச்சிகள் எதுவானாலென்ன? என்னுடைய இன்ப துன்பங்களின் வித்தியாசம் அவருக்குத் தெரியாமலிருப்பதுதானே என் தொழில்? முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு வீணையை எடுத்துச் சுருதி கூட்டினேன்.

இப்போது வீணையின் அந்த இனிய ஒலி என் உள்ளத்தில் படவில்லை. இரண்டுக்குமிடையில் ஏதோ ஒரு பெரிய பாறை எழுந்து நின்று கொண்டது போல இருந்தது. இயந்திரம் போல விரல்கள் ஸ்வரங்களை அளந்து விட்டன. கிராமபோன் இசைத் தட்டைப் போலத் தொண்டை பாடியது. அவ்வளவுதான். எனக்கும் அந்த சங்கீதத்திற்கும் எவ்வித ஒட்டுதலும் ஏற்படவில்லை.

மணி இரண்டடித்தது. அதுவரை ஒன்றன் பின்னொன்றாகக் கீர்த்தனங்களைப் பாடிக் கொண்டே யிருந்தேன். அவர் பானத்தைப் பருகிக் கொண்டே என்னை நிமிர்ந்து பார்ப்பதும், சங்கீதத்தை அனுபவிப்பதுமாக இருந்தார். என் முகத்தில் அதே புன்னகை, மங்காமல் குறையாமல் விளையாடிக் கொண்டேயிருந்தது. 'அடி ராrஸி என்று நானே என்னைச் சொல்லிக் கொண்டேன்.

'தூங்கலாமா?' என்றார். திடுக்கிட்டு விழித்தவள் போல, 'என் துரை களைத்துப் போய் விட்டார் என்று கொஞ்சிக் கொண்டே, வீணையைக் கீழே வைத்தேன். அவரைச் சயனத்தில் விட்டு விட்டு ஏதோ ஜோலிகளைக் கவனிப்பவள் போல அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தேன், கொஞ்ச நேரம்.

அவர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அரை நாழிகை கழித்து அவர் கண்ணயர்ந்து விட்டார். அதுவரை ரொம்ப சிரமத்துடன் ஒரு சித்திரவதையை அனுபவிப்பவள் போலத் துடித்துக் கொண்டிருந் தவள் ஒரு விடுதலைப் பெருமூச்சு விட்டேன். என் மனம் ஒரு
ಳ್ಗಿ

266 ->
எரிமலையைப் போலக் கொதித்துக் கொண்டிருந்தது. என்னால் அந்தத் துன்பத்தைத் தாங்க முடியவில்லை. வீட்டிற்குள்ளிருப்பது மூச்சடைப்பது போலிருந்தது.

கால் மெட்டிகள் சப்தம் செய்துவிடாதபடி ஜாக்கிரதையாக நடந்து முன் பக்கத் தாழ்வாரத்திற்குப் போய் நின்றேன். என்னை மீறிக் கண்கள் ஆகாயத்தின் புறம் திரும்பின. நிர்மலமான வான வீதியில் மினுமினுத்துக் கொண்டிருந்த நட்சத்திரக் கூட்டங்களுடன் என் கண்கள் பேசின. என் நெஞ்சம் அவற்றிடம் எதையோ கேட்டுப் பதிலை எதிர் பார்ப்பது போலத் தவித்தன.

தானாகக் கீழே விதிப் பக்கம் குனிந்து பார்த்தேன். அதோ அந்த மூலையில், தெரு முடியுமிடத்தில் அந்த முனிஸிபல் விளக்கினடியில் என் பார்வை சென்று லயித்தது.

என் உடல் ஏன் அப்படிக் குலுங்கியது? அங்கே நான் கண்ட காட்சி என் நாவில் அவ்வளவு கசப்பை ஏன் எழுப்பியது? - அங்கே அந்த முனிசிபல் விளக்கடியில் அந்தப் பெண் - ஆம், அதே பெண் வரும் வழியில் அந்தச் சந்தில் வயிற்றுப் பிழைப்புக் காக நின்றிருந்ததாகச் சொன்னாளே, அந்தப் பெண் - நின்றிருந்தாள். அவளுடைய கூந்தல் சீர்படுத்தப்பட்டிருந்தது. அவளுடைய முகத்தில் புதிதாக அப்பிய பெளடர் தெரிந்தது, அவ்வளவு துரத்திலும். அவளணிந்திருந்த புஷ்பச் செண்டு ஒய்யாரம் காட்டியது.

நான் முதலில் பார்த்தபோது அவள் தனியாகத்தான் நின்றிருந்தாள். அடுத்த நிமிஷம் யாரோ ஒருவன் அவளிடம் வந்து நின்று பேசினான். அவள் கையை நீட்டினாள். வெள்ளி நாணயங்கள் இரண்டு மோதிய கலீரென்ற சப்தம் என் காதில் விழுந்தது.

உள்ளே அவர் தூக்கத்தில் புரண்ட போது, விழித்துக் கொண்டு விட்டார் போலிருக்கிறது. 'வனீ’ என்று கூப்பிட்டார். "இதோ வந்தேன்” என்று பதில் சொல்லித் திரும்பினேன்.

ஆனால், ஐயோ! அந்த வார்த்தையிலிருந்த அந்தக் கசப்பு அவருடைய மோக வெறியின் உச்ச ஸ்தாயியைக் காட்டும் ஸ்வர ஸ்தானமான அந்த வார்த்தையிலிருந்த அந்தக் கசப்பை நான் எப்படி வார்த்தைகளால் சொல்ல முடியும்!

இருபது வருஷமாகியும் அன்று என் நெஞ்சில் நிரம்பிய அந்தக் கசப்பு இன்னும் மாறவில்லையே.

– 1936