Pages

Thursday, July 28, 2016

ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’ : கற்றது கவிதைகளால் மனதிலாகும் உலகு | பகுதி 4 : ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’ - எம்.டி.முத்துக்குமாரசாமி


கற்றது கவிதைகளால் மனதிலாகும் உலகு | பகுதி 4
எம்.டி.முத்துக்குமாரசாமி


Poetry/prose/etc.,. © M.D.Muthukumaraswamy

Sunday, January 6, 2013



ஞானக்கூத்தன் (அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016)


ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’ .....

.................

கவிதைகளையோ கவிஞர்களையோ பட்டியலிடுவது எனக்கு ஒப்புதலில்லாத ஒன்று. இவரை விட அவர் சிறந்தவர் என்றபடிமுறையை இலக்கியத்திலும் நிறுவுவதற்காக பட்டியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பட்டியலிடும் காரியத்தினை நான்செய்வதாக இல்லை.


கவிதையின் உள் இயங்கு தளத்தினை அறிய நான் அதிகமும் நம்புவது கவிதையில் இயங்கும் கவிக்குரல்களை அல்லதுகவிதைப் பிரதிகளுக்குள் கவிஞர்கள் தங்களுடையதாய் ஏற்று பேசும் குரல்களை அவற்றின் பாவனைகளை.காட்சிப்படிமமாய் கவிதை வடிவம் பெறுமாயின் அதிலுள்ள பார்வையினை அது தொகுக்கும் தகவல்களை. ஒரேஉள்ளீட்டினை பாடுபொருளாய்க் கொண்டு பலர் எழுதியிருக்கின்ற கவிதைகளை ஒப்பிட்டுப்படிப்பதும் கவிதையின் உள்இயங்கு தளத்தினை தெளிவாகக் காட்டும் என்பது என் துணிபு. மேலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் கவிஞர்கள் தங்கள்வாழும் காலம் சார்ந்து என்ன நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார்கள், எடுக்கிறார்கள் என்பதினையும் ஒப்பீடு காண்பித்துக்கொடுத்துவிடும்.


ஆகச்சிறந்த எளிமையை நோக்கி நகர்வதாகவே என் எழுத்து இப்போதெல்லாம் இருக்கிறது. வாசிப்பையும் வாசிப்பிற்கானபல தள சாத்தியப்பாடுகளையும் ஆலோசனைகளாக, முடிந்த முடிவுகளாக அல்ல சொல்லவே நான் விருப்பப்படுகிறேன்.


---------------------------------------------






ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’ என்ற கவிதையில் வரும் மேடைப் பேச்சாளர் இப்போதைய கவிதைகளில்காணக்கிடைக்கிறாரா என்று தேடிப்பார்த்தேன். கவிதையின் எதிர்ப்பு வடிவங்களுள் ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’, ‘சினிமாச் சோழர்’, ‘மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்’, ‘ஆகஸ்ட் 15’, ஆகிய கவிதைகள் நுட்பமாக நவீனமான எதிர்ப்புகவிதையின் வடிவத்தினை கட்டமைத்தவை. இவற்றில் ‘காலவழுவமைதி’யும் ‘மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்’ கவிதையும்பேச்சு முறைகளை போலி செய்து பெரும் மக்கள் எழுச்சிகளான திராவிட இயக்கமும், இந்திய விடுதலைப் போராட்டமும்பொய்த்துப்போன வெற்று பேச்சுக்களாகிவிட்டன என்பதை பூடகமின்றி சொல்லின என்றால் ‘ஆகஸ்ட் 15’ இந்திய விடுதலைப்போராட்டத்தின் கனவு பொய்த்ததையும் அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தினையும் ஆழமாகப் பதிவு செய்தது; ‘சினிமாச் சோழர்’திராவிட இயக்கத்தின் கனவு பொய்க்கும் திசையை நோக்கி நகர்வதை காட்சிப்படுத்திக் காட்டியது. தமிழ் சமூக வரலாற்றில்நடந்த மூன்று பெரிய மக்கள் எழுச்சிகளான பக்தி இயக்கம், இந்திய விடுதலைப் போராட்டம், திராவிட இயக்கம் மூன்றுமேவர்க்கபேதமொழித்த, ஆண்-பெண் சமநிலை எய்திய, சாதி ஒழிந்த சமூகத்தினை லட்சிய இலக்காக முன் வைத்தவை.அவைகளுக்கான தேவை தமிழ் சமூகத்திற்குள் தீராத் தாகமாய் இருந்தபடியால்தான் அவை பெரிய மக்கள் திரட்சிஇயக்கங்களாக உருப்பெற்றன. மூன்று மக்கள் பேரியக்கங்களுமே பெரும் சாதனைகள் பல நிகழ்த்தியிருந்தாலும் அவைஉறுதி அளித்த லட்சிய சமூகத்தினை உருவாக்குவதில் தோல்வியடைந்துவிட்டன. பக்தி இயக்கம் வெற்றுக் கலைவடிவங்களாகவும் கடவுளுடன் பேரம் பேசுகிற கொடுக்கல் வாங்கல் சடங்குகளாகளாகவும் இன்று எஞ்சியிருக்கிறது.திராவிட இயக்கம் சினிமாவும், தொலைக்காட்சியும் உருவாக்கிய மெய்நிகர் உலகில் அமிழ்ந்து போய் பெருந்திரள்பண்பாடுக்கென்று விழுமியங்களும் சமூக ஒத்திசைவும் இல்லாத குடிமைப் பொதுவெளியாய் நிற்கிறது. இந்திய விடுதலைப்போராட்டத்தின் மதிப்பீடுகள் தமிழ்ப் பொதுவெளியில் வெளி வேஷங்களாகவும் பொய்மைகளாகவும் மாறிஓரங்கட்டப்பட்டுவிட்டன. இந்தச் சூழலின் மனசாட்சியின் குரலாக, லட்சியங்களையும் உள்ளார்ந்த ஆன்மீகத்தையும்காதலுக்கான சாத்தியப்பாடுகளையும் இழந்துவிட்ட நவீன கவிதைகளை நாம் ஞானக்கூத்தனிடமே வடிவம் பெறுவதை நாம்வாசிக்கிறோம். அவ்வடிவங்களின் தொற்றுதலும் நீட்சியும் ஆத்மாநாமிடம் தீவிரம் பெறுகின்றன. ஞானக்கூத்தனைஅவருடைய நகைச்சுவை காப்பாற்றியது, ஆத்மாநாமுக்கு நகைச்சுவை செறிவாகாதது அவர் கரணம் தப்பிவிடக்காரணங்களுள் ஒன்று..


பிரமிளின் அரசியல் பிரக்ஞை விழிப்பு கண்டது 1980களில்தான். ஈழத் தமிழ் பிரச்சினையும், மௌனி, சுந்தரராமசாமி,ஞானக்கூத்தன், வெங்கட் சாமிநாதன் ஆகியோருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து மோதல்களுமே பிரமிளின் சமூக அரசியல்பார்வையினைக் கூர்மைப்படுத்தின. பிரமிளே மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் தமிழ் சமூகத்திற்கு அளித்த விலைமதிப்பில்லா பண்பாட்டு பங்களிப்புகளைதுல்லியப்படுத்தும் வழிகாட்டி ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். ஜே.கிருஷ்ணமூர்த்தியும் தந்தை பெரியாரும் இணைந்ததத்துவார்த்த அரசியல் நோக்குகொண்ட பகுத்தறிவின்பாற்பட்ட, தன் விடுதலையை சமூக விடுதலையோடுஇணைத்துக்கொண்ட தனி நபர்களைக் கொண்ட குடிமைச் சமூகத்தை உருவாக்கும் என்று பிரமிள் கருதியதாக நாம்இன்றைக்கு வாசிக்கலாம். மகத்தான கவி ஒருவரின் மகத்தான கனவு அது. ஆனால் கருத்தியல்/ அரசியல் கனவுகளினால்படைப்புகள் ஆக்கம் பெறுவதில்லை என்றும் அவர் உறுதியாக நம்பினார். ஆகையால் ‘அதிரடிக் கவிதைகள்’, ‘ஸ்கூட்டரில்வந்த தோழர்’ போன்ற உதிரிக்கவிதைகளின் உள்ளடக்கம் தவிர்த்து எதிர்ப்பு கவிதை வடிவத்திற்கு பெரிய பங்களிப்புகள்எதுவும் அவர் செய்யவில்லை.


‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’, ‘அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை’ ஆகியதிருநாவுக்கரசரின் வெளிப்படையான பிரகடன வடிவங்களே தமிழ்க் கவிதையின் நீண்ட வரலாற்றில் எதிர்ப்பு வடிவங்கள்.தமிழ் இலக்கியத்தில் எதிர்ப்பு வடிவங்களை உருவாக்குவது மிகவும் கடினமான காரியம் அதிலும் கவிதையில் எதிர்ப்புவடிவங்களை உருவாக்குவது இன்னும் கடினமான காரியமாகும். அனுபவத்தை சீராக வடிவமைக்கும் இசையமதிபொருந்திய கவிதை அரசின் ரகசிய மறு அதிகார வடிவமே என்றுதான் மேற்கத்திய விமர்சகர்கள் கோல்ரிட்ஜிலிருந்துஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் வரை, கதேயிலிருந்து அமெரிக்க புது விமர்சகர்கள் வரை சொல்கிறார்கள். இந்திய மரபுகளிலும் கவிதைஅரசின் அங்கம்தான். மேற்கத்திய மரபிலோ வெகு எளிதாக பாலியல் வெளிப்பாடுகளை மதத்தின் புனிதங்களோடுஎதிரிணைவு செய்யும்போது எதிர்ப்பு வடிவங்களை எளிதாக உருவாக்கிவிடலாம் ஆனால் இந்திய மரபிலோ கோவில்சிற்பங்களிலேயே பாலியல் வெளிப்பாடுகள் இருக்கின்றன. புனிதங்களும் பாலியலின் சகல வெளிப்பாடுகளும் கலவையானகலைகளாக மரபாக்கம் பெற்றுவிட்ட நம் சரித்திரத்தில் எதிர்ப்பின் கவிதை வடிவம் என்ன? ஜூலியா கிறிஸ்தவா ஃபிரெஞ்சுகவிதை மரபில் அனுபவத்தை வடிவமைக்கின்ற கவிதை என்ற கருத்தினைத் துறந்து மொழி நிகழ்வே கவிதை அதனுள் தாய் -சேயின் கூவல் கொஞ்சு மொழியினை அடையாளம் கண்டால் கவிதையின் புரட்சிகர மொழியினை அடையாளம் காணலாம்என்கிறார். ஒரு வகையில் பேச்சு மொழியினை கவிதைக்குள் கொண்டு வருவதும் அக்காரியத்தினை செய்யக்கூடும். பேச்சுமொழியினை பகடியாகக் கொண்டு வருதல் அதன் நல்ல தொடக்கம்.


கவிதைக்குள் பகடியையும் நகைச்சுவையையும் கையாள்தல் எளிதில் சாதிக்கக்கூடியதுமில்லை. பகடியில் இழை தப்பினால்அர்த்தம் சீரழியும். பேச்சு மொழியின் காலம் பிணைத்த தன்மை காலம் கடந்து நிற்கவேண்டிய கவிதையை எழுதவிழைபவனுக்கு உறுதுணையாகாது; அதன் குழுத்தன்மையும் பிராந்தியத்தன்மையும் எளிதில் வெறுப்பு அரசியலுக்குஉரமாகும். பேச்சின் தொனிகளை கவிதைக்குள் பாவனை காட்ட வைப்பதில் எதிர்ப்பின் கவிதை வடிவத்தை மொழிநிகழ்வாகவே நிகழ்த்திக்காட்டுவதே உசிதமாகும் இதையே ஞானக்கூத்தனின் மூன்று கவிதைகளும் சாதித்தன. அவற்றினைகீழே தருகிறேன். மீதிக் கவிதைகளை அவருடைய தளத்தில் வாசிக்கலாம்.






காலவழுவமைதி


“தலைவரார்களேங்…
தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.
தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”
‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’
“வளமான தாமிழர்கள் வாட லாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்”
‘இன்னுமிருவர்பேச இருக்கிறார்கள்
அமைதி… அமைதி…


மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்


எழுந்ததும் கனைத்தார்; மெல்ல
சொற்பொழி வாற்றலானார்:
வழுக்கையைச் சொறிந்தவாறு
‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;
மேசையின் விரிப்பைச் சுண்டி
‘வையத்து நாட்டில்’ என்றார்;
வேட்டியை இறுக்கிக் கொண்டு
‘விடுதலை தவறி’ என்றார்;
பெண்களை நோட்டம் விட்டு
‘பாழ்பட்டு நின்ற’ என்றார்;
புறப்பட்டு நான் போகச்சே
‘பாரத தேசம்’ என்றார்;
‘வாழ்விக்க வந்த’ என்னும்
எஞ்சிய பாட்டைத் தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள

சினிமாச்சோழர்


“தகர்த்திடுக மாற்றரசர்கோட்டை வீரத்
தமிழர்படை பகைக்குடலை மாலையாக்க
குகைப்புலிகள் சினந்தெழந்து வகுத்த யூகம்
குலத்தமிழர் அணியென்றே ஊது சங்கு”
மிகக்கனன்று சோழர்குலத் திலகம் பேசி
முடித்தஉடன் அரண்மனைக்குள் இருட்டு சூழச்
சிகரெட்டைப் பற்றவைத்தார் பக்காச் சோழர்.
சூட்டிங்கு முடிந்தால் பின் என்ன செய்வார்?


ஞானக்கூத்தனின் ‘காலவழுவமைதி’ கவிதையில் வரும் பேச்சாளரை நான் வேறு கவிஞர்களின் படைப்புகளிலும் தேடினேன்என்று சொன்னேனில்லையா அவரை நான் சபரிநாதனின் கவிதையில் கண்டுபிடித்தேன். சபரிநாதனின் கவிதையில் அவர்தூக்கம்போட்டுக்கொண்டிருந்தார்.


சபரி நாதனின் கவிதை


உயர்திரு சண்முகசுந்தரம்



ஷ்…..சத்தம் போடாதீர்கள்
சண்முகசுந்தரம் தூங்கிக்கொண்டிருக்கிறார்
எதையோ சொல்ல வந்து மறந்தது போல ஏறியிறங்குகிற தொப்பை சீராக
கரைவேட்டி தொடைகளுக்கிடையே கசங்கியிருக்க
மயிரடர்ந்த வலதுகை ஆட்காட்டிவிரல் நகம் பிட்டத்தை சொறிகிறது
மீசை மறைவில் அவரது வாய் மூடியுள்ளதைப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு
சண்முகசுந்தரம் தனது இருபத்தியோராவது வயதில் அரசியலில் குதித்தார்
மொட்டைமாடிலிருந்து தவறி விழுந்த ரப்பர் பந்தைப் போல
பந்து கணந்தோறும் அதிகரிக்கும் வேகத்துடன் பாய்கிறது
துமிகள் தெறிக்க ஈரத்தரையில் மோதி எழும்புகிறது அப்படியே
ஒரு கண்ணாடி சன்னலை உடைத்துவிட்டு சில்லுகளோடு மீண்டும்
குதிக்கிறது நடுரோட்டிலிருந்து
காற்றில் எம்புகிறது தூக்கியெறிந்து விளையாடப்படும் குழந்தையென
சண்முகசுந்தரம் பதறியடித்து எழுந்துகொண்டார்
வேலைக்காரனின் தாயாரை ஒரு கெட்டவார்த்தையால் திட்டியபின்
மினுங்கும் சந்தனநிறச் சட்டையின் கைப்பட்டையை மடித்துக்
கொண்டே படியிறங்குகிறார்
வாசலையொட்டியோடும் மூடப்பட்ட சாக்கடையின் முனையில்
வாளித்தண்ணீரை இறைத்தபடியிருந்தனர் குட்டித் தம்பிகள் சிலர்
எண்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றவரின் கார்
புறப்பட்டுவிட்டது
முக்குத் திரும்பும்போதுதான் கைக்குட்டையை எடுக்க மறந்து போனது
ஞாபகம் வந்தது
உயர்திரு சண்முகசுந்தரத்துக்கு
ஒரு பலத்த கைதட்டல்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

https://www.facebook.com/arul.selvan.35762/posts/1266948383315553
 . எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது
- - - - - - — - - — - - - - — - - - — - -
ஞானக்கூத்தனின் இந்தக்கவிதையை நான் படித்தது “நாற்றங்கால்” எனும் கவிதைத்தொகுப்பில். எனக்கு அப்போது பதினாறு பதினேழு வயதிருக்கும். தீவிர நம்பிக்கையாளனாக இருந்து இறை எனும் தர்க்க நிலைபாட்டைப் பற்றி இயல்பாக ஐயங்கள் வரும் வயது. அறிவியலின் ஆச்சரியப் படுத்தும் முன்தோற்றங்கள் கடந்து அதன் உள்ளுறை ஒத்திசைவு மெல்லப் புரியும் வயது. பற்றி நிற்க பல மெய்யியல் சட்டகங்கள் புகைபோலப் புலப்பட்டும் எதுவும் உறுதியாக நிலைநிற்காத தடுமாற்றங்கள் அறியும் வயது. எல்லோரும் பதற்றங்களோடு உடல் உணர்வுகளைக் கடக்கும் வயது.


எதை எடுத்துக் கூறுவது
- - - - — - - — - - - - -

எதை எடுத்துக் கூறுவது நீஙகள்
இடமொன்றைத்
தெரிவிக்க வேண்டுமென்றால்

ஆலமரம் ஒன்றுண்டு
அதற்கு நேரே
கிளைவிட்டுப் போகிறதில் தெற்கு நோக்கிப்
போகுமொன்றில் தொடர்ந்து செல்லக்
கிட்டும் என்போம்

கோலை நட்டுக் கட்டாத அச்சுத் தேர்க்கு
மேற்காகப் பிரிகின்ற தெருவில்
என்போம்

தோப்புகளின் தலைவிளிம்பு பொக்கைப் போரை
ஆனதற்குப் பக்கத்தில்
உள்ள தென்போம்.

இன்ன பொருள் இத்திசையில் அதற்குப் பக்கம்
இஃதிருக்கப் பாரென்று சொல்லக் கூடும்
எதை எடுத்து நான்கூற கேட்கப்பட்டால்
எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது




அந்த “நாற்றங்கால்” தொகுதியில் எனக்கு நினைவில் எப்போதும் நிற்பது
“எதை எடுத்து நான்கூற கேட்கப்பட்டால்
எல்லாமும் அழல் தின்னக் கொள்ளும் போது”

எனும் வரிகள்தாம். இவ்விரு வரிகளைத் தவிர்த்தால், இக்கவிதை அதன் ஒவ்வொரு வரியிலும் துல்லியமான பொருண்மையான காட்சிப் புலச் சுட்டுகளை அடுக்கி அதை ஒழுங்கான தர்க்கத்தில் கோர்த்தெடுத்துச் செல்கிறது.

புலனறிப் பொருண்மையுலகு. அதை அறிய நாம் சேர்க்கும் கோட்பாட்டுச் சட்டகங்கள். அச்சட்டகங்களின் உட்தர்க்கம். அவை வழிகூறாக வெளிப்படும் முற்றுண்மைகள். அவை தரும் ஓரு நிலைப்பாட்டு உறுதி. புற அக வாழ்வின் இருத்தலை சமனப் படுத்தி இசைவித்து நம் அன்றாட உலகின் இயல் வாழ்க்கையின் நடப்புக் காட்சி. கவிதை தன் கடைசி இரு வரிகளில் அனைத்தையும் சிதைத்துச் சுக்குநூறாக்குகிறது. எல்லாமும் அழல்தின்னக் கொள்ளும் போது எனும் ஊழிப் பேரழிவின் பின் என்ன நிலை மிஞ்சும். எங்கும் விரிந்து பரந்த அந்த அர்த்தப் பாழியுள் உறை பொருள்தான் என்ன? பாழ் என்பது இழிநோக்காக பாழ் என்ற பொருளில் நான் சொல்லவில்லை. ஏதுமற்ற ஒரு அன்மைத் தன்மையைச் சொல்கிறேன். அந்த அமானுடப் பெருவளியில் சொல் என்றும் பொருள் என்றும் ஏதுமற்ற விரிபுலத்தில் மிதக்கும் கவிதை இது. சதாகாலமும் ஓயாமல் மனம் கோர்த்துக்கொண்டிருக்கும் தர்க்கப் பின்னல்களை இக்கவிதை அறுத்தரிந்து முழுவதுமாக என்னை விடுவித்தது . அதன் முடிவில் தோன்றிய அப்பாழ்வெளி என்றும் என்னை விட்டு அகலவில்லை.

ஞானக்கூத்தனை பல நோக்குகளிலும் காணக்கூடிய கட்டுரைகள் எழுதலாம். இன்னும் ஒன்றை மட்டும் இங்கே சொல்லிவிடுகிறேன்.
அவருடைய இறையியல்தான் என்ன?

வந்தனம் என்றான் ஒருவன்
இளங்காலைக் கதிரைக் கண்டு
நன்றென்றான் ஒருவன் இரவில்
முகிழ்கிற நிலவைக் கண்டு

அவன் நின்றான் கால்கள் ஊன்றி
ஒரு போதில் வருதல் மற்றப்
போதிலே மறைதல் என்னும்
இயல் பில்லா முகிலைப் பார்த்து.

தோன்றி அகல்கின்ற பொருண்மை. ஆனால் கதிரும் நிலவும் ஒழுங்கான வலம் கொண்டவை. சீர்கொண்ட இயல்நின்றவை. முகிலோ எங்கும் எக்கணமும் சிதைந்து பரவும் ஒழுங்கிலிப் போராட்டம். உருவழிந்த நிலைத்தகவு. அதில் நிற்கின்றான் அவன். காலூன்றி. நிலையாக. இம்மனம் கண்ட ஓர் இறையியல் வீச்சு அவர்கவிதைகளில் தொடர்ந்தே வந்துள்ளது.

சென்ற நூற்றாண்டு தமிழ் படைப்பியக்கத்தில் சிறுகதையும் கவிதையும் தான் முதலில் நவீனத்துவத்தைத் தொட்டன. கடந்தன. ஞானக்கூத்தனை தமிழின் ஆகச் சிறந்த அங்கதக் கவிதைகள், பகடிக்கவிதைகள் நிறைய எழுதியவர் என்று சிலர் அறிமுகப்படுத்துகிறார்கள். அனைத்துக்கவிதைகளிலும் அங்கதத்தினூடே இழைபோலப் பின்னிய ஒரு கசப்புடன் எழுதியவர் என்கிறார்கள். அக்கால வழக்குப்படி அபத்தக் கவிதைவின் உச்சம் தொட்டவர் என்கிறார்கள். அவரை இப்படியெல்லாம் படிக்கலாம். இவையனைத்துக்கும் அப்பால் அவர் கவிதைகள் அடுக்காக வைக்கும் பொருண்மைக் காட்சிகள் நமக்குக் காட்டி நம்மை ஏமாற்றும் ஒரு மாயவிளையாட்டு என்றே நான் உணர்கிறேன். அப்பால் ஓர் ஆழத்தில் அவர் சொல்லாமல் சொல்லிச்சென்ற இறையியலும் மெய்யியலும் மட்டுமே எனை ஈர்க்கின்றன. தமிழின் நவீனக்கவிதை மரபில் அவர் யாருடைய வழியில் வருவதாகக் கருதலாம்? என்னைப் பொருத்தவரை அங்கதத்திலும் ,நன்கு அறிந்தே இலக்கணம் மீறிய மொழி விளையாட்டிலும், அலட்சியமாக வீசிச்செல்லும் மெய்யியல் குறும்பார்வைகளிலும் அவர் சி.மணியின் வழியே வந்தவர் என்றே கொள்ளலாம். இவ்விருவரைத்தவிர இவையனைத்தும் அமைந்த மற்றொரு தமிழ்க்கவிஞரை நான் காணவில்லை. கடந்த கால் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகள் எனக்கு அறிமுகமும் இல்லை என்பதையும் கூறவேண்டும்.

பகடியாக எழுதுபவர் அல்லர் அவர். கசப்போடும் எழுதவில்லை. அவர் நிலையை வெளிப்படையாக அவர் சொற்களில் உரத்துக்கூறாவிட்டாலும் அவரது கவிதைகள் விட்டுச் செல்வது மெய்யியல் சட்டகத்தில் ஒரு ஐயவாத மனச்சார்புதான். அவரது இறைகுறித்தான மத நம்பிக்கைகள் எல்லாம் அவரில் ஒரு பகுதி. ஆனால் கவிதை என்பது மனிதன் தன் தர்க்கபூர்வ வெளித்தோற்றப்படுத்தல்கள், நியாயப்படுத்தல்கள், ஒப்புக்கொடுத்தல்களைக் கடந்தே படைக்கப் படுகிறது. உள்ளிருந்து ஊறிஎழுந்து வெளிப்பாய்கிறது. அனைத்துக் கலைகளின் இயல்பே அதுதான். அதற்காகவே கலைகளின் நம் இடை இருப்பும்.

கவிதை,ஓவியம், இலக்கியம் எனக் கலைகளின் பரப்புமுழுவதும் நீக்கப்படும் கல்விச்சூழல் நம்முடையது. சமச்சீர்க்கல்வியில் அறிவியல் போதாது கணிதம் போதாது என்று குமுறும் நம் மக்கள் கவிதை போதாது சிற்பம் போதாது என்று கேட்பதில்லை. பத்து ஞானக்கூத்தன் கவிதைகளையாவது படிக்காமல் வளரும் ஒரு தமிழ்க்குழந்தை என்னவாக உருவாகமுடியும்? ஞானக்கூத்தன் ஒரு உதாரணம்தான். புதுமைப்பித்தனில் தொடங்கி பிச்சமூர்த்தியில் தொடங்கி ஒரு பெரும் நவீன இலக்கியப் பரப்பே தமிழில் உண்டு. இன்றைய நவ உலகில் அறிவியலும் பொறியியலும் தன்னால் வளரும். கலையும் மொழியும் மெய்யியலும் அற்ற ஒரு கல்வி எதையும் எதிர்காலத்தில் நிறை செய்ய இயலாது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஞானக்கூத்தன் மறைவுக்கு அஞ்சலி
------------------------------------------------------
தீபம் இதழில் 1973 ஆரம்ப மாதங்களின் இதழ் ஒன்றில் நான் படித்த ஞானக்கூத்தனின் முதல் கவிதை இது.
(தலைப்பற்ற கவிதை)
தெருக்களில் திரிந்தேன்
வானக்
காட்டிலே காலைப்போதின்
குழப்பத்தில் சிக்கிக்கொண்டேன்
நான் நின்றால்
தானும் நின்று
நான் சென்றால்
தானும் மேலே
தொடர்கிற நிலவைப் பார்த்தேன்
வானத்தில் வர்ணக்கோலம்
விசிறிடத்
திகைத்த மீனைப்
போய்க் கொத்தும் பறவை போல
ஒரு கேள்வி மனசுக்குள்ளே
என்னடா செய்வாய் தம்பி
பெரியவன் ஆன பின்பு
என்றொரு கேள்வி கேட்டார்
இளமையில் சிலபே ரேன்னை.
அன்று நான் அதற்குச் சொன்ன
பதிலொன்றும் நினைவில் இல்லை
இன்று நான் என்ன சொல்வேன்
அதைக் கேட்க அவர்கள் இல்லை. - ஞானக்கூத்தன்
இதிலிருந்துதான் ஞானக்கூத்தன் அறிமுகம். நான் அப்போது கோவையில் பட்டப்படிப்பில் நுழைந்திருந்த முதலாண்டு. இரவு பகல் குழப்பம் இருந்தாலும், அன்று விசித்திரமாக யாப்பமைதியுடன் விநோதமாகத் தென்பட்ட கவிதை என்பதால் தொடந்து இது ஞாபகத்தில் இருந்தது.
இதற்குப் பிறகு அடுத்ததடுத்த ஒரு தீபம் இதழில் ‘சூரியனுக்குப் பின்பக்கம்’ என்ற ஒரு கவிதை. இந்தக் கவிதை பின்பு வந்த எந்தத் தொகுப்பிலும் இல்லை என்றே நினைக்கிறேன். ‘சூரியனுக்குப் பின்பக்கம்’ என்ற பெயரில் ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்தபோதும் இந்தக் கவிதை அதில் இருந்ததில்லை. கவிதைத் தலைப்பை மட்டும் புத்தகத்தலைப்பாக்கியதோடு சரி.
சம்பந்தமற்று தர்க்கப்பொறுத்தமற்று இருந்தாலும் (எனவேதான் சேர்க்கவில்லை போலும். தலைப்பை மட்டும் மறுபடியும் ஒரு அபத்தத் தன்மைக்காக சேர்த்தார் போலும்) இதுவும் ஒரு விசித்திர விநோதக் கவிதைதான்.
சூரியனுக்குப் பின்பக்கம்
-----------------------------------
யாரைப் பார்க்க உனக்காசை?
என்றால் உடனே
நான் சொல்வேன் :
அனைத்தும் வல்ல இராட்சதரை.
எதனால் என்றால்
அவரில் சிலரைக்
கனாப் பொழுதில்
அவர்கள் தொகையால்
எண்ணற்று
ஒன்றாய்க் கூடி
சூரியனைப் பாறை கொண்டு தூளாக்கிக்
கையால் இழுக்கும் வண்டிகளில்
அடுக்கிக் கொண்டு சென்றார்கள்
எதற்காம் இந்தப் பாளங்கள் என்றேன்
சொன்னான் ஓரரக்கன்
இன்றைக் கெங்கள் உணவுக்கு.
உடம்பும் பொலிவும் ஒருசேரச்
சோரும் அந்தச் சூரியனை
அள்ளிக் கொண்டு பலர் சென்றார்
நெல்லைத் தூக்கும் எறும்பைப்போல்
யாரைப் பார்க்க உனக்காசை?
என்றால் சொல்வேன் :
இராட்சதரை.
எதனால் என்றால் சூரியனை
யார் இடித்தார் உணவுக்கு? - ஞானக்கூத்தன்.
முன்றில் பெரிய அளவில் 80களின் தொடக்கத்தில் நடத்திய இலக்கியக்கூட்டத்தில்தான் மேடையில் இருந்த ஞானக்கூத்தனை, அழகியசிங்கரிடம் கேட்டு, முதன்முதலில் பார்த்தது. பின்பு பல கூட்டங்களில் மட்டும் பார்த்தும் பேச்சைக் கேட்டுமிருக்கிறேன். அவரைக் கடுமையாக விமர்சித்துப் பிரமிள் எழுதிய கட்டுரைகளை லயத்திலும் லயம் வெளியீடுகளிலும் கொண்டுவந்திருக்கிறேன். நேரில் நெருங்கிப் பேசிப் பழகியதில்லை.
ஞானக்கூத்தன் மறைவுக்கு எனது அஞ்சலிகள்.
பிரமிள் ஃபைலில் இருந்த புகைப்படங்களில் இருந்து....
முதல் 3 படங்களில் மௌனி, சிதம்பரசுப்ரமணியன், பிரமிள், சச்சிதானந்தம். அடுத்தவற்றில் பிரமிள், சச்சிதானந்தம், மற்ற ஒருவர் (முதலிலும் இடையிலும்? இருவர்? - இவரை அடையாளம் தெரிந்தோர் கூறவும்) கடைசியில் பிரமிள் ஆகியோருடன் ஞானக்கூத்தன்.