Pages

Monday, October 10, 2016

இரவில் பாரிஸ், நுண்கலைக்கல்லூரி - ழாக் ப்ரெவெர்

இரவில் பாரிஸ் - ழாக் ப்ரெவெர்

 (மொ.பெ. வெ.ஸ்ரீராம்)
-க்ரியா அலியான்ஸ் ஃபிரான்சேஸ், சென்னை

இரவில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று தீக்குச்சிகள்
முதலாவது உன் முகத்தை முழுமையாகப் பார்க்க
இரண்டாவது உன் கண்களைக் காண
கடைசியாக உன் இதழ்களைப் பார்க்க
பின் சுற்றிலும் இருள் இதையெல்லாம் நினைத்துப் பார்க்க
என் கரங்களில் உன்னை இறுக்கியவாறு.

நுண்கலைக்கல்லூரி 

பின்னிய ஓலைப் பெட்டியொன்றிலிருந்து
ஒரு சிறிய காகித உருண்டையைத்
தேர்ந்தெடுக்கிறார் தந்தை
கையலம்பும் தொட்டியில்
அதைத் தூக்கி எறிகிறார்
திகைத்திருக்கும் அவர் குழந்தைகள் முன்னால்
அப்போது எழுகிறது
பல வண்ணங்களில் பெரிய ஜப்பானிய மலர்
அக்கணமே உருவான அல்லி
குழந்தைகள் அமைதியடைகின்றன
வியப்பில் ஆழ்ந்து
இனி ஒருபோதும் அவர்கள் நினைவில்
இந்த மலர் வாட முடியாது
இந்தத் திடீர் மலர்
அவர்களுக்கென்றே
அக்கணமே
அவர்கள் முன்னால்