பேப்பர் வெண்மை; மை கருப்பு; இலை மூலம் கட்டவிழ்த்து விடப்படும் நிழல்கள்; இவ்வளவுதான் நண்பா, ஒரு நாவல். ஒரு சிறுகதை, ஒரு கவிதை இவற்றில் எதுவுமே ஒரு கடை முதலாளி எழுதும் வரவு - செலவுப் பேரேடோ, நாம் ஒருவருக்கு ஒருவர் எழுதும் கடிதங்களோ, ரிஜிஸ்டர் கச்சேரி (என்ன கச்சேரியோ)யில் பதிக்கும் தாஸ்தவேஜுகளோ இல்லை! நண்பா, உயிருள்ள மனிதர்கள், அவர்கள் தங்களை எவ்வளவு சுதந்திர சிந்தனைத் துடிப்புமிக்க புத்திஜீவிகள் என்று நினைத்துப் பாவித்துச் செயல் புரிந்தாலும், உனக்கும் எனக்கும் தெரியும்; அவர்கள் திரைக்குப் பின் நின்றுகொண்டு சூத்திரக்காரன் சூத்திரக்கயிறை அசைப்பதற்கு ஏற்பத் துள்ளிக்குதிக்கும் பாவைகள் என்று! ஒவ்வொரு துறையிலும் இது இப்படித்தான். ஆனால், காகித வெண்மையில், மைக்கறுப்பில், கையெழுத வெள்ளைத்தாளில் விரைந்து செல்லும் இவ்வுருவங்கள் நம்மோடு வந்தாலும் நமக்குக் கட்டுப்பட்டவை அல்ல; அவை பாவைகளுமல்ல; நான் அவைகளை நம் தாளத்திற்கேற்பத் துள்ளும் பாவைகளைப் போல் சலிக்கச் செய்யும் சூத்திரதாரிகளுமில்லை. நண்பா, கலை ஒரு பொம்மலாட்டம் இல்லை! _________ நகுலன்