Pages

Wednesday, May 10, 2017

தனிமொழி - பிரம்மராஜன்

தனிமொழி - 1

நேற்றுப் பாலையாய் விரிந்திருந்து
இன்று குறுகிப்போன
நாள்களில்
நீ எண்ணியிருக்க முடியாது
நான் உன் வழித்துணையாய்
வருவேனென்று.
உன் ஸ்நேகத்துக்கு முன்
புற்றென வளர்ந்திருந்தது
நடுமனதில்
தனிமை.
விழிகள் அழுந்த மூடிக்
காதுகள் வைகறைக் காக்கைகளுக்காகக்
காத்திருந்த இரவுகளில்
தேய்ந்து மறையும்
புகை வண்டியொலியில் கலந்தன
உன் நினைவுகள்.

இருந்தும்
விழிக்கும் இரவின் நீளத்தைக் குறைக்கும்
புத்தகங்களைப் போல
இதமிருந்தது அவற்றில்,
விழித்தெழுந்து அழுதது குழந்தை
தான் மறந்த முலைகளுக்காய் வேண்டி
இன்றென்
ஈரம் படர்ந்த விழிகளில்
நீ கலைந்த வெளிச்சம்.

தனிமொழி  - 2 

நீரில் மூழ்கிய கடிகாரங்களென
 சப்தமற்றுப் போயிருந்த காலம்
நான்
உன்னிலிருந்து பிரிந்தவுடன்
கடல் காக்கைகளாய்ச்
சிறகு விரித்துப் பறந்து
ஒலிகளாய்
வெடித்துச்சிதறித்
தன் நீட்சியை நினைவுறுத்தும்
காது மடலைத் தடவியபடி
நான் இனிச்
சிவப்பு நிற டீயின் கசப்பில்
உன்னை மறக்க முயல்வேன்.
நீயும்
காற்றை வெட்டிச் சாய்த்துச்
சுழலும் மின் விசிறியில்
கவனம் கொடுத்துப்
பேனா பிடித்தெழுதி
பஸ் ஏறி
வீடு செல்வாய்
எனினும் இருளுக்கு முன்
நீ போய்ச் சேர வேண்டுமென்று
என் மனம் வேண்டும்

தனிமொழி - 3
உன்னுடன் கழித்த
சாதாரண நிமிடங்கள்கூட
முட்கள் முளைத்த வண்ணக் கற்களென
நினைவின் சதையைக் கிழிக்கின்றன.
மெல்லிய ஸ்வாசங்கள்
புயலின் நினைவுடன்
இரைச்சலிடுகின்றன.
உன் கையில் பூட்டிய
என் விரல்களை அறுத்து
விடுதலை பெற்றும்
மனதில் சொட்டிய குருதித் துளிகள்
வளர்க்கின்றன
முள் மரங்களை.
()

பிரம்மராஜன் / 44