Pages

Thursday, March 22, 2018

படித்துறை சொல்லும் கதை ரவீந்திரநாத் டாகுர் (தமிழில்- த.நா.குமாரஸ்வாமி) & குளத்தங்கரை அரசமரம்’ (1915) என்ற வ.வே.ஸு.ஐயரின் (முதல்?) தமிழ்ச் சிறுகதை,

குளத்தங்கரை அரசமரம்’ (1915) என்ற வ.வே.ஸு.ஐயரின் (முதல்?) தமிழ்ச் சிறுகதை, முன் பதிவுகளில் ஆங்கிலத்திலும் தமிழ்மொழிபெயர்ப்பிலும் தந்த தாகூர் கதையின் (1886/1914) தழுவல்தான் என்று சொல்லப்படுகிறது.நீங்களே ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக 3 பிரதிகளும் தரப்பட்டுள்ளன.குளத்தங்கரை அரசமரம் (1915) 

வ.வே.ஸு. ஐயர்

----------
பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என்மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன் ! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்கிறீர்கள். ஆனால் நான் சொல்லுகிறதிலே எள்ளளவேணும் பொய்யில்லை. நான் பழைய நாளத்தது மரம்- பொய் சொல்லக் கத்தவில்லை. இப்போ தொண்ணூறு நூ று வருஷமிருக்கும். உங்கள் கொள்ளு பாட்டிகளின் பாட்டிகளெல்லாம் நம்ம குளத்துங்கரைக்குத்தான் குடமுங் கையுமாக வருவார்கள். சில பேர் குழந்தைகளையுங் கூட கூட்டி வருவார்கள். பட்டு பட்டாயிருக்கும் குழந்தைகள். அதுகளை கரையில் விட்டுவிட்டுப் புடவைகளை அழுக்குப் போகத் தோய்த்து, மஞ்சள் பூசிக்கொண்டு அழகாக ஸ்நானம் பண்ணுவார்கள். குழந்தைகளெல்லாம் ராஜகோபாலன் போலத் தவுந்துகொண்டு மல்லிகைச் செடியண்டே போய் மல்லிகை மொக்குகளை பார்த்து சிரிக்கும். அந்தக் காலத்திலே ஒரு பவள மல்லிகைச் செடி, முத்து முத்தாய்ப் பூப் பூத்துக் கொண்டு அந்த ஓரத்திலிருந்தது.

குளத்தங்கரையெல்லாம் கம் என்று மணம் வீசும். இப்பொழுது ஆதரிப்பாரில்லாமல் பட்டுப்போய்விட்டது. கொஞ்சம் பெரிய குழந்தைகள் அதன்அதன் புஷ்பங்களை பொறுக்கி ஆசையுடன் மோந்து பார்க்கும்...ஆ! அந்த நாளையெல்லாம் நினைத்தால் ஆசையாயிருக்கிறது! ஆனால் இப்போது நான் உங்களுக்கு அந்தக் காலத்துக் கதை ஒன்றும் சொல்லுவதாக இல்லை. மனசு சந்தோஷமாயிருக்கும்போது சொல்லுகிறேன். ஏழெட்டு நாளாய் எனக்கு ருக்மிணியின் ஞாபகமாகவே இருக்கிறது. பதினஞ்சு வருஷமாச்சு. ஆனால் எனக்கு நேற்று போலிருக்கிறது. உங்களில் ஒருவருக்கும் ருக்மிணியைத் தெரியாது. பார்த்தால் சுவர்ண விக்கிரகம் போலிருப்பாள் குழந்தை. அவளுடைய சிரிச்ச முகத்தை நினைச்சால் அவளே எதிரில் வந்து நிற்பது போலிருக்கிறது எனக்கு. அவள் நெத்தியின் அழகை இன்னைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். நல்ல உயரமாக இருப்பாள். அவள் கையும் காலும் தாமரைத் தண்டுகள் மாதிரி நீளமாயிருக்கும். அவள் சரீரமோ மல்லிகைப் புஷ்பம் போல் மிருதுவாக இருக்கும். ஆனால் அவள் அழகெல்லாம் கண்ணிலேதான். என்ன விசாலம்! என்ன தெளிவு! என்ன அறிவு! களங்கமற்ற நீல ஆகாசம் ஞாபகத்துக்கு வரும். அவள் கண்களை பார்த்ததும் நீலோற்பலம் நிறைஞ்ச நிர்மலமான நீரோடையைப் போலிருக்கும். பார்வையிலுந்தான் எத்தனை அன்பு! எத்தனை பரிவு! ஸோமவார அமாவசைகளில் பரமாத்மாவைப் பூஷிக்கிறதற்காக என்னைப் பிரதஜிணம் செய்வாள். அப்போது அவள் என்னைப் பார்க்கும் பார்வையிலிருக்கும் அன்பை என்னவென்று சொல்லுவேன்! என்னுடைய காய்ந்துபோன கப்புகளுங்கூட அவளுடைய பிரேமையான பார்வை பட்டதும் துளிர்த்துவிடுமே! ஐயோ, என் ருக்மிணித் தங்கமே! எப்போ காண்பேன் இனிமேல் உன்னைப் போலக் குழந்தைகள்? அவள் குழந்தைப் பருவம் முதல், அவளுடைய கடைசி நாள் வரையில், இங்கே வராத நாளே கிடையாது. அஞ்சாறு வயஸின் போதெல்லாம் ஸதா ஸர்வ காலமும் இங்கேயேதான் விளையாடிக்கொண்டிருப்பாள். அவளைப் பார்த்ததும் வாரியெடுத்து முத்தங் கொடுக்க வேணுமென்று நினையாதவர் இல்லை. எத்தனை அவசரமான காரியமிருந்தாலும் சரி, நம்ம வேணுகோபால் சாஸ்திரி இருந்தாரே, அவர் காலமே ஸ்நாநஞ் செய்துவிட்டு, குழந்தை கை நிறைய மல்லிகைப் பூப்பறித்துக் கொடுத்துவிட்டுத்தான் போவார். நம்ர் மாடு கன்றுகள் கூட, எத்தனை முரடாக இருந்தாலும் சரி, அவளைக்கண்டதும் உடனே முரட்டுத்தனத்தையெல்லாம் விட்டுவிட்டு, அவளுடைய சிறிய கைகளால் தடவிக் கொடுக்க வேணுமென்று அவள் பக்கத்திலேயே போய்க் காத்துக் கொண்டிருக்கும். குழந்தைகள் என்றால் எனக்கு எப்பொழுதுமே ஆசை. அனால் அவள் வந்துவிட்டால் போதும், மெய் மறந்து போய்விடுவேன். அவள் பேரில் துளி வெயில் படக்கூடாது. அவள் கொஞ்சம் ஒதுங்கியிருந்தால்கூட என் கைகளை நீட்டி அவளுக்கு குடை பிடிப்பேன். என்னுடைய நாதனான சூரியனுடைய முகத்தை காலமே ஆசை பயபக்தியோடு தரிசனம் செய்தானதும் எனக்குக் குழந்தை ருக்மிணியின் ஞாபகம் வந்துவிடும். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டேயிருப்பேன். அவள் வந்ததும் எனக்குள் அடங்காத ஆனந்தம் பிறந்துவிடும். குழந்தைகளுக்குள் பேதம் பாராட்டக்கூடாதுதான். ஆனால் மற்ற யார் வந்தாலும் எனக்கு அவள் வருகிறது போல் இருப்பதில்லை. நான் மாத்திரமா? ஊரில் உள்ள மற்ற குழந்தைகள்கூட அவள் வந்த பிறகுதான் பூரணமான ஆனந்தத்துடன் விளையாடும். அவள்தான் அவர்களுக்குள்ளே ராணி. அத்தனை காந்த சக்தியிலிருந்து அவளிடத்தில். அப்போதெல்லாம் அவள் அப்பா காமேசுவரையர் நல்ல ஸ்திதியில் இருக்கிறார். குழந்தை பேரில் அவருக்கு மிகுந்த பிரேமை. அவளுக்குச் செய்வதற்கு என்றால் அவருக்கு சலிக்கிறதே இல்லை. கடை வீதியில் பட்டுத்தினுசுகள் புதுசாக வந்திருப்பது ஏதாவது பார்த்தால் நம்ம ருக்மிணி அணிந்துகொண்டால் அழகாக இருக்கும்' என்று உடனே வாங்கி வந்துவிடுவார். முதல் தரமான வைரமும் சிவப்பும் இழைத்து அவளுக்கு நிறைய நகைகள் செய்திருந்தார். அவளுக்குப் பத்து வயசாயிருந்தபோது கோலாட்ட ஜோத்ரைக்கு என்று ஒரு பாவாடையும் தாவணியும் வாங்கியிருந்தார். அந்த நிலாவுக்கும் அவளுடைய அலங்காரத்திற்கும் அவளுடைய அழகுக்கும் என்ன ஏர்வை! கண்கொள்ளா காட்சியாயிருந்தது எனக்கு! அவள் குரலைப்பற்றி உங்களுக்குச் சொல்ல மறந்து போய்விட்டேன். குயில் என்னத்துக்கு ஆச்சு! தங்கக் கம்பிபோல் இழையும் அவள் சாரீரம். இன்னைக்கெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாலும் சலிக்காது. ஜோத்ராக்களின் போதுதான் அவள் பாட்டை நான் கேட்டிருக்கிறேன். இப்போது நினைச்சாலுங்கூட அவளுடைய குரல் அதே இனிமையுடன் நயத்துடன் என் மனசில் கேட்கிறது. அவளுக்கு வயசாக ஆக, அவளுடைய அன்பு வளர்ந்த அழகை என்ன என்று சொல்லுவேன்? குழந்தையாக இருக்கும்போதே யாரிடத்திலும் ஒட்டுதலாக இருப்பாள். இந்தக் குணம் நாளுக்கு நாள் விருத்தியாய்க் கொண்டே வந்தது. தோழிகள் வேறு, தான் வேறு என்கிற எண்ணமே அவளுக்கு இராது. ஏழை வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, பணக்காரர் வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் சரி, அவளுக்கு எல்லா தோழிகள் பேரிலும் ஒரே பயந்தான். இன்னும் பார்க்கப்போனால் ஏழைக் குழந்தைகள் பேரில் மற்றவர்கள் பேரில் விட அதிக பாசம் காட்டுவாள். பிச்சைக்காரர்கள் வந்தால் கை நிறைய அரிசி கொண்டு வந்து போடுவாள். கண் பொட்டையான பிச்சைக்காரர்களைப் பார்க்கும் போது அவளை அறியாமலேயே அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகுவதை பார்த்திருக்கிறேன்! அவர்களுக்கு மற்றவர்களுக்குப் போடுவதை விட அதிகமாகவே போடுவாள். இப்படி அளவு கடந்த தயையும் இரக்கமும் அவளுக்கு இருந்ததனால்தான் அவளை நினைக்கும்போதெல்லாம் எனக்கு கடினமான கோடைக்குப் பிறகு நல்ல மழை பெய்யும்போது உண்டாகுமே, அந்த நிரதிசயமான ஆனந்தம் உண்டாகிறது. இவ்விதம் கண்ணுக்குக் கண்ணாய் நான் பாவித்து வந்த என் அருமைக் குழந்தையின் கதி இப்படியா போகணும்! நான் பாவி வெச்ச ஆசை பழுதாய் போகனுமா! பிரும்ம தேவனுக்குக் கொஞ்சங்கூடக் கண்ணில்லாமல் போய்விட்டதே! ஆனால் பிரும்மதேவன் என்ன பண்ணுவான், மனுஷாள் செய்யும் அக்கிரமத்துக்கு? ருக்மிணிக்கு பன்னிரண்டு வயசானதும் அவள் அப்பா அவளை நம்ர் மணியம் 

ராமசுவாமி ஐயர் குமாரன் நாகராஜனுக்கு கன்னிகாதானமாகக் கொடுத்தார். கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. தோழிப் பொங்கலன்னிக்கும், ஊர்கோலத்தன்னிக்கும் அவள் வருவதைப் பார்த்தேன். கண்பட்டுவிடும், அத்தனை அழகாயிருந்தது. அவள் தோழிகளுக்கு மத்தியில் இருந்ததை பார்க்கும்போது, மின்னற் கொடிகளெல்லாம் சேவித்து நிற்க மின்னரசு ஜொலிக்குமே அந்த மாதிரியேதான் இருந்தது. காமேசுவரையர் ருக்மிணிக்கு கல்யாணப் பந்தலில் நிறைய சீரும் செனத்தியும் செய்திருந்தார். ருக்மிணியின் மாமியாருக்கும் மாமனாருக்கும் ரொம்ப திருப்தியாயிருந்தது. கல்யாணத்துக்குப் பிறகு மாமியார் அவளை அடிக்கடி அழைச்சுக் கொண்டுபோய் அகத்திலேயே வைச்சுக் கொள்ளுவாள். ஆசையோடு அவளுக்கு தலை பிண்ணிப் பூச்சூட்டுவாள். தன் பந்துக்களைப் பார்க்கப் போகும்போது அவளை அழைச்சுக் கொண்டு போகாமல் போகவே மாட்டாள். இப்படி சகல விதமாகவும் ஜானகி (அதுதான் ருக்மிணி மாமியார் பேர்) தனக்கு ருக்மிணியின் பேரிலுள்ள அபிமானத்தை காட்டி வந்தாள். மாப்பிள்ளை நாகராஜனும் நல்ல புத்திசாலி. அவனும்ருக்மிணியின் பேரில் மிகவும் பிரியமாய் இருப்பான். கிராமத்தில்அவர்கள் இருவருந்தான் ரூபத்திலும் புத்தியிலும் செலவத்திலும் சரியானஇணை என்று நினைக்காதவர், பேசிக்கொள்ளாதவர் கிடையாது. இப்படி என்று வருஷ காலம் சென்றது. அந்த ணு வருஷத்துக்குள் எத்தனை மாறுபாடுகள்! காமேசுவரையருக்குக் கையிளைச்சு போய்விட்டது. ரொக்க வேஷியையெல்லாம், ஏதோ அருபத்து நாட்டுக் கம்பெனியாம், அதில் வட்டிக்குப் போட்டிருந்தார். நம்ர் பணம் நாலுகோடி ரூபாயையும் முழுங்கிவிட்டு அது ஏப்பம் விட்டுவிடவே, காமேசுவரையர் ஒரு நாளில் ஸர்வ ஏழையாய்ப் போய்விட்டார். ருக்மிணியின் தாயார் மீனாட்சியம்மாள் உடம்பிலிருந்த நகைகள்தான் அவருக்கு மிச்சம். பூர்வீக சொத்தான வீட்டையும் நிலங்களையும் வித்துதான் அவர் கொடுக்க வேண்டிய கடன்களைதத் தீர்க்க வேண்டியதாயிருந்தது. இப்போ குப்புசாமி ஐயர் இருக்காரே வாய்க் காங்கரையோரத்திலே, அந்த வீட்டில் வந்து அவர் குடியிருக்கலானார். மீனாட்சியும் பார்க்கிறதுக்கு மஹாலட்சுமி மாதிரி இருப்பாள். அவளுடைய சாந்தத்துக்கு எல்லையே இல்லை. எத்தனை பெரிய கஷ்டம் வந்துவிட்டதே, இருந்தாலும் அவள் மனம் கொஞ்சமேனும் இடியவில்லை. ஏதோ இத்தனை நாள் சுகமாக வாழ்ந்தோம். யாரைக் கேட்டுக் கொண்டு ஸ்வாமி கொடுத்தார்! அவர் கொடுத்ததை அவரே எடுத்துக்கொண்டு விட்டார். இதனாலே என்ன இப்போ? அவாளும் ருக்மிணியும் ஆயுஸோடு இருக்கிறவரையில் எனக்கு குறைச்சலுமில்லை. இந்த தை மாஸத்திலே ருக்மிணிக்கு சாந்தி முகூர்த்தம் பண்ணிப் புக்காத்துக்கு அனுப்பிவிட்டால் அப்புறம் எங்களுக்கு நிர்விசாரம். கஞ்சியோ கூழோ சாப்பிட்டுக்கொண்டு வழக்கம் போல் பகவத்தியானம் பண்ணிக்கொண்டே எங்கள் காலத்¬க் கழித்து விடுகிறோம்'' என்று சொல்லுவாள். ஐயோ பாவம், நடக்கப் போகிற சங்கதியை அவள் எப்படி அறிஞ்சிருப்பாள்? காமேசுவரையர் ஐவேஷியில் கொஞ்சமேனும் தேறாது என்று ஏற்பட்டதும் ராமசுவாமி ஐயருக்கு அவருடனிருந்த சிநேகம் குளிர் ஆரம்பித்துவிட்டது. இதற்கு முன்னெல்லாம் அவர் காமேசுவரையர் அகத்துக்கு அடிக்கடி வருவார். வழியில் அவரைக்கண்டால் பத்து நிமிஷம்பேசாமல் போகவே மாட்டார். இப்பொழுதோ காமேசுவரையர் தூர வருகிறதை கண்டுவிட்டால், ஏதோ, அவசர காரியமாகப் போகிறதுபோல இன்னொரு பக்கம் திரும்பி வேகமாக போய்விடுவார். இப்படி செய்பவர், அவர் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டார் என்று நான் சொல்லாமலேநீங்கள் நினைத்துக்கொண்டுவிடுவீர்கள். அவர் சம்சாரம் ஜானகியும் அதே மாதிரி மீனாட்சியம்மாளிடம் நெறுங்குவதை நிறுத்திவிட்டாள் ஆனால் இதையெல்லாம் மீனாட்சியம்மாளும் காமேசுவரையரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. செல்வமுள்ளபோது உறவு கொண்டாடுகிறது; அது போய்விட்டபோது வேத்து மனுஷாள்போல போய்விடுகிறது- இதெல்லாம் ஒரு சிநேகிதத்தோடு சேர்த்தியா? ஆனால்அவர்கள் ருக்மிணி விஷயத்திலுங்கூட வேத்துமை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அறுபத்துநாட்டு உடைகிறதற்கு முந்தி சில மாதங்களாக ஜானகி பிரதி வெள்ளிக்கிழமையும் சாப்பிட்டானதும், ருக்மிணியை அழைத்துக்கொண்டுவரும்படி வேலைக்காரியை அனுப்பிவிடுவாள். அன்னைக்கு, அவளுக்குத் தலைப்பின்னி, மை சாந்திட்டு, சிங்காரிச்சு, அகிலாண்டேசுவரி கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போய்த் தரிசனம் பண்ணிவிட்டு, அன்னைக்கு ராத்திரி முழுவதும் தங்கள் அகத்திலேயே வைத்துக்கொண்டிருந்து அடுத்தநாள் காலமேதான் அவளை அகத்துக்கு அனுப்புவாள். ஆனால், அறுபத்துநாட்டில் போனது போனதுதான் என்று ஏற்பட்டுவிட்டபிறகு வந்து முதல் வெள்ளிக்கிழமையன்னைக்கே, எனக்கு ஆத்தில் இன்னைக்கு ரொம்ப வேலையாக இருக்கும்' என்பாள். அடுத்த வெள்ளிக்கிழமை முதல் அவ்விதம் சொல்லியனுப்புவதைக்கூட நிறுத்திவிட்டாள். இது மீனாட்சிக்கும் காமேசுவரையருக்கும் மிகுந்த துக்கத்தை தந்தது. ருக்மிணியும், நம்மை இவ்வளவு இளக்காரம் செய்கிறாள் பார்த்தாயா! நம்ப மாமியார் கூட, என்று மிகவும் வருத்தப்பட்டாள். இப்படி கொஞ்ச நாளாச்சு. ஊரெல்லாம் குசு குசு'என்று பேசிக்கொண்டிருப்பார்கள். எல்லா ரகசியங்களும் குளத்தங்கரையிலேதான். அரைவார்த்தையும் குறை வார்த்தையுமாகத்தான் என் காதில் விழுமேயோழிய முட்ட முழுக்க ஒரு பேச்சும் எனக்கு எட்டாது. ஊரிலே இப்படி எப்போதும் இருந்ததில்லை.எனக்கு மனசு குருகுருத்துக் கொண்டேயிருந்தது. ஏதோ கெடுதலுக்குத்தான் இத்தனை ரகசியம் வந்திருக்கிறது என்று எனக்கு அப்பொழுதே தோன்றிவிட்டது. ஆனால் யாருக்கு என்று மாத்திரம் தெரியவில்லை. கடைசியாக அப்படியும் இப்படியுமாய், அத்தையும் இத்தையும் கூட்டிச் சேர்த்துப் பார்க்கப் பார்க்க, கொஞ்சங் கொஞ்சமாய் சமாசாரம் என் மனசுக்கு அத்துபடியாச்சு. ராமசாமி ஐயரும் ஜானகியும் ருக்மிணியை வாழாதே பண்ணிவிட்டு நாகராஜனுக்கு வேறு கல்யாணம் செய்து வைக்க நிச்சயித்து விட்டார்கள்! என்ன பண்ணுவேன்! என் மனசு இடிஞ்சி போய்விட்டது. குழந்தை ருக்மமிணியைத் தள்ளி வைக்கத் துணியுமா மனுஷாளுக்கு? அடிப்பாவி! உன்னைப் போலே அதுவும் ஒரு பெண்ணில்லையா! என்ன பண்ணித்து அது உன்னை! அதை கண்ணாலே பார்த்தால் கல்லும் இரங்குமே! கல்லையும்விட அழுத்தமா உன் நெஞ்சு! காமேசுவரையருக்கும் மீனாட்சிக்கும் முகத்தில் ஈ ஆடாது. எனக்கே இப்படி இருந்தபோது, பெத்த தாயார் தகப்பனாருக்கு கேட்கனுமா? இனிமேல் நாகராஜனைப்பற்றி ஏதாவது நம்பிக்கை வைத்தால்தான் உண்டு! அவன் பட்டணத்தில் படித்துக்கொண்டிருந்தான். மார்கழி பிறந்துவிட்டது. அவன் வருகிற நாளை எண்ணிக்கொண்டே இருந்தேன். கடைசியாக வந்து சேர்ந்தான். வந்த அன்னைக்குக் காலமே அவன் முகத்தில் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தது. சந்தோஷம் மாறி வேறாகிவிட்டது. தாயார் தகப்பனார் அவன் மனத்தைக் கலைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாளுக்கு நாள் முகத்தில் கலக்கம் 

அதிகரித்துக்கொண்டே வந்தது. கரைப்பார் கரைச்சால் கல்லுங்கரையும் என்பார்கள். அவன் கலங்கின முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வயித்திலே பகீர் என்னும். இனிமேல் ஏது? இந்த ஆசை இருந்தது. அதுவும் போய்விட்டது. ருக்மிணியின் கெதி அதோகெதிதான் என்று நினைத்துவிட்டேன். தை பிறந்தது. வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஏதோ கிழக்கத்தி பெண்ணாம். தகப்பனாருக்கு நாலு லட்ச ரூபாய்க்கு பூஸ்திதியாம். பிள்ளை கிடையாதாம். இந்த பெண்ணைத் தவிர காலக்கிரமத்தில் இன்னும் ஒரே ஒரு பெண்தானாம். ராமசாமி ஐயர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் சொத்து சேர்ந்து விடுமாம். இதெல்லாம் எனக்கு கர்ணகடூரமாக இருக்கும். ஆனால் என்ன செய்கிறது? தலைவிதியே என்று கேட்டுக்கொண்டிருப்பேன். இந்தப் பேச்சுப் புறப்பட்டது முதல், மீனாட்சி 

பகலில் வெளியிலேயே வருவதில்லை. சூரியோதையத்துக்கு முன்னேயே குளத்துக்கு வந்து ஸ்நாநம் செய்துவிட்டு தீர்த்தம் எடுத்துக்கொண்டு போய்விடுவாள். அவள் முகத்தைப் பார்த்தால் கண்ட்ராவியாயிருக்கும். சரியான தூக்கமேது? சாப்பாடேது? ஓஹோவென்று வாழ்ந்துவிட்டு, இந்த கதிக்கு ஆளானோமே என்கிற ஏக்கம் அவள் அழகை அழித்துவிட்டது. வீடு வாசல் போய்விட்டதே என்றாவது , நகை நட்டெல்லாம் போய், வெறும் உரிசல் தாலியை மாத்திரம் கட்டிக்கொண்டிருக்கும்படியாகிவிட்டதே என்றாவது அவள் வருத்தப்படவில்லை. கிளிபோல் குழந்தை அகத்திலிருக்க , ஜானகி அதன் பேரில் கொஞ்சம் கூட இரக்கம் வைக்காமல் கண்ணுக்கெதிராகவே பிள்ளைக்கு வேறு விவாகம் பண்ணிவைக்க நினைத்துவிட்டாள் பார்த்தயா என்னும் ஏக்கந்தான் அவளுக்கு இரவு பகலெல்லாம். அவள் முகத்தைப் பார்த்தால் ஜானகிக்குக் கூட மனசு உருகிப் போய்விடும். ஆனால் ராணி, அவளெங்கே பார்ப்பாள்! அப்போதெல்லாம் ருக்மிணி எப்படி இருந்தாளோ, என்ன நினைத்தாளோ, எனக்கொண்ணுந்தெரியாது. அறியாக்குழந்தை அது என்ன நினைத்திருக்குமோ! ஒரு வேளை, மாமியார் நம்மை கட்டோடே கெடுத்துவிடமாட்டாள் என்று நினைத்தாளோ? அல்லது மாமியார் என்னநினைத்தாலும், நாகராஜன் சம்மதிக்கமாட்டான் என்று நினைத்தாளோ

இன்னும் முட்ட முழுக்க ஐந்து வருஷமாகவில்லையே அவர்களிருவரும் ஜோடியாய் நம்ம குளக்கரையில் விளையாடி! கல்யாணமான பிறகுங் கூட ஒருவருக்குந் தெரியாமல் எத்தனை தடவை பார்த்துப் பழைய நாள் போலவே அன்பும் ஆதரவுமாக நாகராஜன் அவளோடு பேசியிருக்கிறான்!அவன் கைவிடமாட்டான் என்றேதான் ருக்மிணி நினைத்திருப்பாள். ஆனால் நாளாக ஆக நாகராஜனுடைய கல்யாணப் பேச்சு முத்திக்கொண்டே வந்தது. நாகராஜனுடைய மனதில் மாத்திரம் இன்னது இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. பட்டணத்திலிருந்து வந்த அன்று, மாமனாரையும் மாமியாரையும் நமஸ்காரம் செய்வதற்காக அகத்துக்கு வந்தானே அவ்வளவுதான். பிறகு ருக்மிணியை அவன் ஸ்மரித்தான் என்பதற்கு எள்ளளவுகூட அடையாளமில்லை. ஆனால் முகத்தை விட்டு முதனாள் போன உல்லாஸக்குறி மறுபடியும் திரும்பி வரவேயில்லை. யாருடனும் பேசாமல் எப்பொழுதும் சுளித்த முகமாகவேயிருப்பான். கடைசியாக, நாள் வைத்தாகிவிட்டது. பெண் அகத்துக்காரர் வந்து லக்கினப் பத்திரிக்கையையும் வாசித்துவிட்டுபோய்விட்டார்கள், ஐயோ! அன்னைக்கு மேளச் சத்தத்தைக் கேட்க என் பஞ்சப் பிராணனும் துடித்தது. காமேஸ்வரையருக்கு எப்படியிருந்திருக்குமோ? மீனாட்சி மனசு எப்படி துடித்ததோ? ருக்மிணி எப்படி சகித்தாளோ? எல்லாம் ஈசுவரனுக்குதான் தெரியும். நாகராஜனுக்குக்கூடத் துளி இரக்கம் பச்சாத்தாபமில்லாமற் போய்விட்டது பார்த்தாயா என்று நான் அழாத நாள் கிடையாது. சில வேளைகளில், இப்படியெல்லாம் பண்ணினால் இவன் மாத்திரம் நன்றாக இருப்பானோ என்று கூடச் சொல்லிவிடுவேன்.... இப்படி என் மனசு தளும்பி தத்தளித்துக் கொண்டிருக்கிறபோது, ஒரு நாள் வயித்திலே பால் வார்த்தார்போல ஒரு சங்கதி என் காதில் விழுந்தது. நாகராஜனோடு கூட படித்துக்கொண்டிந்தவனாம் ஸ்ரீநிவாசன் என்ற ஒரு பையன். அவன் நாகராஜனை பார்க்கறதற்கென்று வந்தான். அவர்களுக்கெல்லாம் ரகசியமாகப் பேச இடம் வேறெங்கே ? நம்ம குளத்தங்கரைதானே? ஒரு நாள் சாயங்காலம் ஏழெட்டு மணிக்கு எல்லோரும் போய்விட்ட பிறகு இவர்கள் இரண்டு பேரும் இங்கே வந்தார்கள். ஸ்ரீநிவாசன் ரொம்ப நல்லவன். அவன் ஊர் ஐம்பது அறுபது கல்லுக்கந்தண்டை இருக்கிறது. நாகராஜன், பெண்ணிருக்க, பெண் கல்யாணம் பண்ணிக்கொள்ள போகிறான் என்று யாரோ அவனுக்கு எழுதிவிட்டார்களாக்கும். உடனே தபால் வண்டி மாதிரி ஓடிவந்துவிட்டான். குளத்தங்கரைக்கு வந்ததும், தான் கேள்விப்பட்டதைச் சொல்லி அதெல்லாம் வாஷ்தவந்தானா என்று அவன் நாகராஜனைக் கேட்டான். நாகராஜனும், அம்மாவும் அப்பாவும் சேர்ந்து நிச்சயம் செய்துவிட்டபோது நான் மாட்டேன் என்று சொன்னால் தான் தீரப்போகிறதா? தவிர, பெண்ணும் லட்சணமாக இருக்கிறதாம். அவள் தகப்பனார் லட்ச ரூபாய் ஆஸ்தி அவள் பேருக்கு எழுதி இருக்கிறாராம். அவருக்குப் பிற்காலத்தில் இன்னொரு லட்ச ரூபாய் சொத்து சேருமாம். இப்படி, தானே வருகிற ஸ்ரீதேவியை எதற்கு வேண்டாமென்று சொல்லுகிறது?'' என்று சொன்னான். இந்த வார்த்தையெல்லாம் சொல்லும் போது ஸ்ரீநிவாசன் முகம் போன போக்கை என்ன என்று சொல்வது? நாகராஜன் நிறுத்தினதும் அரைமணி தேசகாலம் ஸ்ரீநிவாசன் அவனுக்கு எத்தனை லட்சந்தான் வரட்டுமே, ஒரு பெண் பாவத்தைக் கட்டிக் கொள்ளலாமா? கல்யாணப் பந்தலில் மந்திர ரூபமாகச் செய்த பிரமாணத்தையெல்லாம் அழித்துவிடலாமா?'' என்று நானாவிதமாய்த் தர்மத்தையும் நியாயத்தையும் எடுத்துச் சொல்லி, கல்லுங்கரையும் படியாக ருக்மிணிக்காக பரிஞ்சு பேசினான். அவன் நன்றாக இருக்க வேணும், க்ஷேமமாக இருக்கவேணும், ஒரு குறைவுமில்லாமல் வாழ வேணும் என்று நிமிஷத்துக்கு நிமிஷம் நான் வாழ்த்திக்கொண்டே இருந்தேன். ஆனால் அவன் பேசினதும் நாகராஜன் அவனைப் பார்த்து , ஸ்ரீநிவாசா, உன்னிடம் இதுவரை சொன்னதெல்லாம் விளையாட்டாக்கும். நான் காசுக்காக இவ்வளவு அற்பமாக போய்விடுவேன் என்று நினைக்கிறாயா? நான் யாருக்கும் தெரியாமல் வைத்துக்கொண்டிருக்க வேணும் என்றிருந்தேன். ஆனால் எப்போ இவ்வளவு தூரம் பேசிவிட்டோமோ, இனிமேல் உனக்குதெரியாமல் வைக்கிறதில் காரியமில்லை, என்று நினைத்துவிட்டேன். ஆனால் ஒன்று மாத்திரம்; இதை நீ யாருக்கும் சொல்லக்கூடாது. இவர்களெல்லாம் ஆரியத் தன்மையை விட்டு மிலேச்சத்தனமாய் நடக்க உத்தேசித்திருக்கிறபடியால், இவர்களை நன்றாக அவமானம் செய்துவிட வேண்டியது என்று நிச்சயித்துவிட்டேன். நான்எத்தனை மறுத்தும் அம்மாவும் அப்பாவும் ஒரே பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆகையால் மன்னார் கோவிலுக்கே போகிறேன். அங்கே போயும் மாட்டேனென்றே சொல்லுவேன். ஆனால் கட்டாயப்படுத்தத்தான் போகிறார்கள். முகூர்த்தப் பந்தலிலும் உட்காருவேன். ஆனால் என்ன இருந்தாலும் திருமாங்கல்யத்தில் நான்தானே முடிச்சு போடவேணும்? வேறு ஒருவரும் போட முடியாதே. அந்தச் சமயத்தில் கண்டிப்பாக மாட்டேனென்று சொல்லிவிடப் போகிறேன். எல்லோரும் இஞ்சித்தின்ற குரங்கு போலே விழிக்கட்டும். ருக்மிணியைத் தொட்ட கையினாலே இன்னொரு பெண்ணையும் நான் தொடுவேன் என்றிருக்கிறாயா?'' என்று சொல்லி முடித்தான். ஆனால் நீ விவாகத்துக்கென்று போகுங்காலத்தில், ருக்மிணி, அவள் அப்பா அம்மா மனதெல்லாம் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தாயா?'' என்று ஸ்ரீநிவாசன் கேட்டான். அதற்கு நாகராஜன், யோசித்தேன்; ஆனால் எல்லாம் போய்விட்டதென்று அவர்கள் நிராசையாய்த் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் , திடீரென நான் ஓடிவந்து மாமியார் மாமனாரை வணங்கி, துயரப்படாதீர்கள்! என் ருக்மிணியை நான் ஒரு நாளும் கைவிடமாட்டேன்! பணத்தாசை பிடித்தவர்களையெல்லாம் மணப்பந்தலில் மானபங்கம் செய்துவிட்டு இங்கே வந்துவிட்டேன்' என்று நான் சொல்லுங்காலத்தில் அவர்களுக்கு எத்தனை ஆனந்தமாக இருக்கும்! அதைப்பார்த்து அனுபவிக்க விரும்புகிறேன்'' என்றான். அந்த நாள் வரையில் அவர்கள் மனசு எப்படி அடித்துக்கொண்டிருக்கும்? நினைத்துப்பார்'' என்றான் ஸ்ரீநிவாசன். அதற்கு நாகராஜன், இன்னும் ஐந்து நாளில்லை; இன்று வெள்ளிக் கிழமை. ஞாயிற்று கிழமை இவ்விடமிருந்து எல்லோரும் புறப்படப்போகிறோம். அடுத்த நாள் முகூர்த்தம் அன்றைக்கே புறப்பட்டு அடுத்தநாள் காலையில் இங்கே திரும்பிவிடுவேன். இத்தனை நாள் பொறுக்க மாட்டார்களா? என்றான். என்னவோ அப்பா, எனக்கு இது சரியில்லை என்று தோன்றுகிறது'' என்று ஸ்ரீநிவாசன் பேசிக் கொண்டிருக்கும் போதே இருவரும் நகர ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு மேலே ஒன்றும் கேட்கவில்லை. அன்னைக்கு ராத்திரியெல்லாம் எனக்கு தூக்கமே வரவில்லை. பார்த்தாயா, நாகராஜனை வையக்கூட வைதேனே பாவி, அவனைப்போல ஸத்புத்திரன் உண்டா உலகத்திலே' என்று சொல்லிக் கொண்டேன். இனிமேல் பயமில்லை; அஞ்சு நாளென்ன, பத்து நாளென்ன? நாகராஜன் பிடிவாதக்காரன்; சொன்னபடியே செய்துவிடுவான். ருக்மிணிக்கு இனிமேல் ஒரு குறைச்சலுமில்லை' என்று பூரித்துப் போய்விட்டேன்.

ஞாயிற்றுக் கிழமை; இவர்களெல்லாம் மன்னார் கோவிலுக்குப் புறப்படுகிறார்களென்று ஊரெல்லாம் அல்லோல கல்லோலப் பட்டது. ராமஸ்வாமி ஐயரையும் ஜானகியையும் வையாதவர்கள் கிடையாது ஆனால் அவர்களை கூப்பிட்டு நல்ல புத்தி சொல்வதற்கு மாத்திரம் ஒருவரும் இல்லை. அப்படியே யாரேனும் சொன்னாலும் அவர்கள் கட்டுப்படுபவர்களும் இல்லை. அவர்கள் புறப்படுகிற அன்னைக்கு ஊரிலிருந்து கண்ணாலே பார்த்தால் இன்னுங்கொஞ்சம் வயித்தெரிச்சல்தான் அதிகமாகுமென்று நினைத்து, காமேசுவரையரும் மீனாட்சியும் சனிக்கிழமை மத்தியானமே புறப்பட்டு மணப்பாறைக்குப் போய்விட்டார்கள். அகத்தில் ருக்மிணிக்கு அவள் அத்தை சுப்புலட்சுமி அம்மாள்தான் துணை. சனிக்கிழமை ராத்திரியாச்சு. றுரடங்க ஆரம்பித்துவிட்டது. ஒன்பது ஒன்பதரை மணி இருக்கும். நாகராஜன் தனியாக குளத்தங்கரைக்கு வந்தான். வந்து வேப்பமரத்தடியில் உட்கார்ந்துகொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். சில நாழிக்கெல்லாம் தூரத்தில் ஒரு பெண் உருவம் தென்பட்டது. அது குளத்தங் கரைப்பக்கம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அடிக்கொருதடவை பின் பக்கம் திரும்பி பார்த்துக்கொண்டே வந்தது. கடைசியாக நாகராஜன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தில் வந்து நிற்கும்போதுதான் அது ருக்மிணி என்று நான் அறிந்து கொண்டேன். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் உடனே தெளிஞ்சுக் கொண்டு என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று கண்ணைத் துடைத்துக்கொண்டு உன்னிப்பாய் கவனிக்கலானேன். ஐந்து நிமிஷம் வரையில் நாகராஜன் கவனிக்கவேயில்லை. ஆழ்ந்த யோசனையில் இருந்தான். ருக்மிணி அசைவற்று அப்படியே நின்று கொண்டிருந்தாள். எதேச்சையாய் நாகராஜன் தலையை தூக்கினான். ருக்மிணியைப் பார்த்தான். பார்த்ததும் அவனும் திடுக்கிட்டுப் போய்விட்டான். ஆனால் உடனே நிதானித்துக்கொண்டு, ருக்மிணி, இத்தனை நாழிகைக்கு மேலே தனியாக இங்கே வரலாமா நீ?'' என்று கேட்டான். நீங்கள் இருக்கிற இடத்தில் தனியாக நான் இருக்க வேண்டிய நாள் வரவில்லையே '' என்று பதில் சொல்லிவிட்டு ருக்மிணி நின்றாள். இரண்டு ன்று நிமிஷத்துக்கு ஒரு வரும் வாய்திறக்கவில்லை. இரண்டு பேர் மனதும் குழம்பிக் கொண்டிருந்தது. ஆனால் எப்படி ஆரம்பிக்கிறது, என்ன பேசுகிறது என்று அவர்களுக்கு ஒன்றுந்தெரியவில்லை. கடைசியில் நாகராஜன், இந்த வேளையில் நாம் இங்கே இருப்பது தெரிந்தால் ஊரில் ஏதாவது சொல்லுவார்கள்; வா, அகத்துக்கு போய்விடலாம் என்றான். அதற்கு ருக்மிணி, உங்களிடத்தில் சில வார்த்தைகள் சொல்ல உத்தரவு கொடுக்க வேணும்'' என்றாள். சொல்லேன்'' என்று நாகராஜன் சொல்ல, ருக்மிணி பேசலானாள்: எனக்கு உங்களிடத்தில் என்ன சொல்லுகிறது என்று தெரியவில்லை. இந்த ணு மாசமாய் மனசு படுகிறபாடு அந்த அகிலாண்டேசுவரிக்குத்தான் தெரியுமே யொழிய மனுஷாளுக்கு தெரியது நீங்கள் பட்டணத்திலேயிருந்து வந்தவுடன் என் கலக்கமெல்லாம் போய்விடும் என்றிருந்தேன். மாமாவும் மாமியும் என்ன செய்தாலும் நீங்கள் என்னைக் கை விடமாட்டீர்கள் என்று நம்பியிருந்தேன். ஆனால் நீங்களும் என்னைக் கைவிட்டுவிட்டால் அப்புறம் எதை நம்பிக்கொண்டு நான் வாழ்வேன்? வேலியே பயிரைஅழித்துவிட ஆரம்பித்தால், பயிரின் கதி என்னவாகும்? இது வரையில் நடந்ததெல்லாம் என் மனசை உடைத்துவிட்டது . நீங்கள் அதைச் சேர்த்து வைத்தால்தான் உண்டு, இல்லையானால் என் ஆயுசு இவ்வளவுதான்; அதில் சந்தேகமில்லை.'' இந்த வார்த்தையைப் பேசும்போது ருக்மிணியின் கண்களில் ஜலம் வந்துவிட்டது. அத்தோடு நின்றுவிட்டாள். நாகராஜன் பேசவில்லை. ருக்மிணியும் சில நாழி வரைக்கும் பார்த்துவிட்டு, நாளைக்குப் பயணம் வைத்திருக்காப் போலிருக்கிறதே; நீங்கள் போகத்தானே போகிறீர்கள்?'' என்று கேட்டாள். கொஞ்ச நாழி யோசித்துவிட்டு நாகராஜன், ஆமாம், போகலாம் என்றுதான் இருக்கிறேன்'' என்றான். அப்படி அவன் சொன்னதும் ருக்மிணிக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு துக்கம் வந்துவிட்டது. உடம்பு கிடு கிடு என்று நடுங்கியது. கண்ணில் ஜலம் தளும்பிவிட்டது. ஆனால் பல்லைக் கடித்துக்கொண்டு அதையெல்லாம் வெளியே காட்டிக்கொள்ளாமல் அப்படியானால் நீங்கள் என்னை கைவிட்டு விட்டீர்கள்தானே ?'' என்று கேட்டாள். அதற்கு நாகராஜன், உன்னை நான் கைவிடுவேனா ருக்மிணி? ஒரு நாளும் விடமாட்டேன். ஆனால் அம்மா அப்பாவைத் திருப்தி பண்ணி வைக்க வேண்டியதும் கடமைதானே? ஆனால் நீ கவலைப்படாதே, உன்னை ஒரு நாளும் தள்ளிவிட மாட்டேன்'' என்றான். ருக்மிணிக்குப் பொறுக்கவில்லை. நீங்கள் மறுவிவாகம் பண்ணிக்கொண்டுவிடுகிறது. நான் கவலைப்படாமல் இருக்கிறது. என்னை ஒரு நாளும் கைவிடமாட்டீர்கள். ஆனால் அம்மா அப்பா சொல்லுகிறதை இது விஷயத்தில் தட்டமாட்டீர்கள். நான் சொல்லக்கூடியது இனிமேல் என்ன இருக்கு? என் கதி இத்தனைதானாக்கும்''என்று சொல்லிக்கொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

நாகராஜன் ஒன்றும் பேசவில்லை. கல்யாணத்தை நிறுத்திவிடுகிறேன்' என்கிற ஒரு வார்த்தையைத் தவிர வேறே எந்த வார்த்தையை சொன்னால் தான் ருக்மிணியின் மனதைத் தேற்றலாம் ? அந்த வார்த்தையை இப்போது சொல்லவோ அவனுக்கு சம்மதமில்லை. ஆகையால் அவன் வாயால் ஒண்ணும் பேசாமல் தன் மனதிலுள்ள அன்பையும் ஆதரவையும் சமிக்கினையால் மாத்திரம் காட்டினான். அவள் கையைத் தன்னுடைய கைகளால் வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மிருதுவாய்ப் பிடித்தான். குழந்தையைத் தட்டிக் கொடுத்துத் தேத்துவது போல், முதுகில் ஆதரவோடு தடவினான். அப்பொழுது அவள் தலைமயிர் அவன் கையில் பட்டது. உடனே திடுக்கிட்டுப் போய், என்ன ருக்மிணி, தலை சடையாய்ப் போய்விட்டதே; இப்படித்தானா பண்ணிக்கொள்கிறது? உன்னை இந்த அலங்கோலத்தில் பார்க்க என் மனசு சகிக்கவில்லையே! எங்கே உன் முகத்தைப் பார்ப்போம்! ஐயோ, கண்ணெல்லாம் செக்கச் செவேர் என்று சிவந்து போயிருக்கிறதே! முகத்தின் ஒளியெல்லாம் போய்விட்டதே ! என் கண்ணே, இப்படி இருக்காதே. உன்னை நான் கைவிடமாட்டேன் என்று சத்தியமாய் நம்பு. உன் மனசில் கொஞ்சங்கூட அதைரியப்படாதே. என் ஹிருதய பூர்வமாகச் சொல்லுகிறேன், எனக்கு பொறுக்கவில்லை உன்னை இந்த ஸ்திதியில் பார்க்க. சின்ன வயது முதல் நாமிருந்த அன்னியோன்யத்தை மறந்துவிட்டேன் என்று கனவில் கூட நீ நினையாதே. வா, போகலாம், நாழிகையாகிவிட்டது, இனிமேல் நாம் இங்கே இருக்கக்கூடாது'' என்று சொல்லி முடித்தான். ருக்மிணி எழுந்திருக்கவில்லை. ஏக்கம் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். அதைப் பார்த்ததும் நாகராஜனுக்குக் கண்ணில் ஜலம் ததும்பிவிட்டது. அந்தச் சமயத்தில் தன் மனதிலுள்ள ரகசியத்தைச் சொல்லித்தான் விடலாமே என்று அவன் புத்தியில் தோன்றியது போலிருந்தது. சொல்லித்தான் வைத்தானா பாவி! ஆனால் அவனுக்கு அவனுடைய விளையாட்டுதான் பெரிதாய்பட்டது. ஆகையினாலே அதை மாத்திரம் அவன் வாய்விடவில்லை. ஆனால் அவனுக்குத்தான் எப்படித் தெரியும் இப்படியெல்லாம் வரும் என்று? அத்தனை வயசாகி எனக்கே தெரியவில்லையே. அந்த சமயத்திலே, எங்கே தெரிந்திருக்கப்போகிறது குழந்தைக்கு? அப்படி நினைத்துபோய் உட்கார்ந்திருந்த ருக்மிணியை நாகராஜன் மெல்லப் பூத்தாப்போல் தூக்கி மார்போடே அணைத்துக்கொண்டு, என்ன, ஒன்றும் பேசமாட்டேன் என்கிறாயே ருக்மிணி; நான் என்ன செய்யட்டும்?''என்று கருணையோடு இரங்கி சொன்னான். ருக்மிணி தலை நிமிர்ந்து அவனை ஏரிட்டு பார்த்தாள். அந்த பார்வையின் குறிப்பை உங்களுக்கு எப்படிச் சொல்வேன்? பிரவாகத்தில் அகப்பட்டுக் கை அலுத்துப்போய் ஆத்தோடு போகிற ஒருவனுக்கு, தூரத்தில் கட்டை ஒன்று மிதந்து போவது போல் தென்பட, அவனும் பதை பதைத்துக் கொண்டு ஆசையும் ஆவலுமாய் அதன் பக்கம் நீந்திக்கொண்டு போய் அப்பா, பிழைத்தோமடான்னு சொல்லிக்கொண்டு அதைப் போய்த் தொடும்போது, ஐயோ பாவம், அது கட்டையாக இராமல், வெறும் குப்பை செத்தையாக இருந்துவிட்டால் அவன் மனசு எப்படி விண்டுவிடும், அவன் முகம் எப்படியாகிவிடும், அப்படி இருந்தது ருக்மிணியின் முகமும், அந்த முகத்தில் 

பிரதிபலித்துக்காட்டிய அவள் மனசும். எல்லையில்லாத துன்பம், எல்லையில்லாத கஷ்டம், அந்தப் பார்வையில் இருந்தது. அதைக் கண்டும் நாகராஜன் மௌனமாக இருப்பதைப் பார்த்து ருக்மிணி மெல்ல ஒதுங்கிக் கொண்டு, நான் சொல்லக்கூடியது இனிமேல் ஒன்னுமில்லை. மன்னார்கோவிலுக்குப் போகிறதில்லை என்கிற வார்த்தையை நீங்கள் எனக்கு சொல்லமாட்டேன் என்கிறீர்கள்; இன்றோடு என் தலைவிதி முடிந்தது. நீங்கள் எப்போது என்னை இவ்விதம் விடத்துணிந்தீர்களோ, நான் இனிமேல் எதைநம்பிக்கொண்டு யாருக்காக, உயிரை வைத்துக்கொண்டிருப்பது? உங்கள் மீது எனக்கு வருத்தமில்லை. ளுங்கள் மனது இந்தக் காரியத்துக்குச் சம்மதியாது. என்னுடைய விதிவசம், என் அப்பா அம்மாவுடைய கஷ்டம், உங்களை இப்படியெல்லாம் செய்யசொல்லுகிறது. இனிமேல் ருக்மிணி என்று ஒருத்தி இருந்தாள். அவள் நம் பேரில் எல்லையில்லாத அன்பு வைத்திருந்தாள், பிராணனை விடுகிறபோது கூட நம்மையே நினைத்துக் கொண்டுதான் பிராணனை விட்டாளென்று எப்பொழுதாவது நினைத்துக்கொள்ளுங்கள். இதுதான் நான் உங்களிடம் கடைசியாகக் கேட்டுக்கொள்வது'' என்று சொல்லிக்கொண்டு நாகராஜன் காலில் விழுந்து, காலை கெட்டியாய் பிடித்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.

நாகராஜன் உடனே அவளை தரையிலிருந்து தூக்கியெடுத்து, பைத்தியமே, அப்படி ஒன்றும் பண்ணிவிடாதே, நீ போய்விட்டால் என் ஆவியே போய்விடும். அப்புறம் யார் யாரை நினைக்கிறது? மழைத்தூற்றல் போடுகிறது. வானமெல்லாம் கறுகும்மென்றாகிவிட்டது. இன்னும் சற்று போனால் சந்தரத்தாரையாய்க் கொட்டும் போலிருக்கிறது; வா அகத்துக்கு போகலாம்'' என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு ரெண்டடி எடுத்துவைத்தான். ஆகாயத்தில் சந்திரன், நட்சத்திரம், ஒன்றும் தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் ஒரே அந்தகாரம். சித்தைக்கொருதரம் மேகத்தை வாளால் வெட்டுகிறது போலே மின்னல் கொடிகள் ஜொலிக்கும். ஆனால் அடுத்த நிமிஷம் முன்னிலும் அதிகமான காடாந்தகாரமாகிவிடும். பூமியெல்லாம் கிடுகிடுவென்று நடுங்க ஆகாயத்தையே பிளந்துவிடும்போலே இடிஇடிக்கும். காற்று ஒன்று சண்டமாருதம்போல அடித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் மழை பெய்து கொண்டிருநத இரைச்சல் அதிகமாகவே நெருங்கிக் கொண்டு வந்தது. இந்தப் பிரளய காலத்தைப் போல இருந்த அரவத்தில் ருக்மிணியும் நாகராஜனும் பேசிக்கொண்டு போன வார்த்தைகள் என் காதில் சரிவரப்படவில்லை. அவர்களும் அகத்துப்பக்கம் வேகமாக சென்றுகொண்டிருந்தார்கள். ஒரு மின்னல் மின்னும்போது, ருக்மிணி வீட்டுக்கு போக மனமில்லாமல் பின்வாங்குவதும், ஆனால் நாகராஜன் தடுத்து முன்னால் அழைத்துச் செல்வதும் மாத்திரம் கண்ணுக்கு தென்பட்டது. அவர்கள் வார்த்தையும் ஒண்ணும் ரெண்டுமாகத்தான் என் காதில் பட்டது. .....பிராணன் நிற்காது....அம்மாவுடைய ஹிருதயம் திருப்தி.....வெள்ளிக்கிழமை காலமே.....ஸ்திரீகளின். ....உடைந்து விடும்..... சொல்லாதே..... கொடுத்துவைத்ததுதானே.....அந்தப் பெண்ணையாவது நன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.....மனப்பூர்த்தியாக வாழ்த்துகிறேன்.....அன்றைக்கு தெரிந்து கொள்வாய்.....கடைசி நமஸ்காரம்... வரையில் பொறுத்துக்கொள்.....'' இந்த வார்த்தைகள்தான் இடி முழக்கத்திலும், காற்றின் அமலையிலும், மழை இரைச்சலிலும் எனக்கு கேட்டது. மழை தாரை தாரையாகக் கொட்ட ஆரம்பித்துவிட்டது. ருக்மிணியும் நாகராஜனும் மறைந்து போய்விட்டார்கள். ஆச்சு, அடுத்த நாள் காலமே விடிந்தது. மழை நின்றுவிட்டது. ஆனால் ஆகாயத்திலே தெளிவு வரவில்லை.மேகங்களின் கருக்கல் வாங்கவில்லை. காற்று, ஸமாதானஞ் செய்ய மனுஷாள் இல்லாத குழந்தைபோல, ஓயாமல் கதறிக் கொண்டேயிருந்தது. என் மனசிலும் குழப்பம் சொல்லி முடியாது . எப்படி நிதானித்துக் கொண்டாலும் மனசுக்குச் சமாதானம் வரவில்லை. என்னடா இது, என்னைக்கும் இல்லாத துக்கம் இன்னைக்கு மனசில் அடைத்துக்கொண்டு வருகிறது? காரணம் ஒண்ணும் தெரியவில்லையே' என்று நான் எனக்குள் யோசித்துக்கொண்டேயிருக்கும்போது மீனா, என்னடியம்மா, இங்கே ஒரு புடவை மிதக்கிறது!'' என்று கத்தினாள்.

உடனே பதட்டம் பதட்டமாய், அந்த பக்கம் திரும்பினேன். குளத்திலே குளித்துக் கொண்டிருந்த பெண்களெல்லோரும் அப்படியே திரும்பிப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு காதோடு காதாக ரகசியம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு பஞ்சப்பிராணணும் போய்விட்டது. புடவையைப் பார்த்தால் காமாக்ஷியம்மாள் புடவை போல் இருந்தது. சரி, அம்மா, அப்பா தலையிலே கல்லை தூக்கிப் போட்டுவிட்டு ருக்மிணிதான் மறுபடியும் வந்து குளத்திலே விழுந்துவிட்டாள் என்று நினைத்தேன் அதுதான் தெரியும். அப்படியே ர்ச்சை போட்டுவிட்டேன். அப்புறம் சித்த நாழி கழித்து எனக்குப் பிரக்கினை வந்தது. அதற்குள்ளே குளத்தங்கரையெல்லாம் கும்பலாய்க் கூடிப் போய்விட்டது. ஜானகியையும் ராமசுவாமி ஐயரையும் வையாதவர் இல்லை. இனிமேல் வைதாலென்ன,வையாதெ போனாலென்ன? ஊரின் சோபையையும் தாயார் தகப்பனார் ஷீவனையும், என்னுடைய சந்தோஷத்தையும் எல்லாம் ஒண்ணாய் சேர்த்துக் கட்டிக்கொண்டு ஒரு நிமிஷத்தில் பறந்துபோய்விட்டாளே என் ருக்மிணி. கீழே, அந்த மல்லிகைக்கொடி ஓரத்திலேதான் அவளை விட்டிருந்தார்கள். எத்தனை தடவை அந்த மல்லிகை மொக்குகளைப் பறித்திருக்கிறாள். அவள் பொன்னான கையாலே! குளத்தங்கரையெல்லாம், அவள் குழந்தையாயிருக்கிற போது அவள் பாதம் படாத இடம் ஏது, அவள் தொடாத மரமேது, செடியேது! ஐயோ, நினைக்க மனம் குமுறுகிறது. அந்த அழகான கைகள், அந்த அழகிய பாதங்கள், எல்லாம் துவண்டு, தோஞ்சு போய்விட்டன. ஆனால் அவள் முகத்தின் களை மாத்திரம் மாறவே இல்லை. பழையதுக்கக் குறிப்பெல்லாம் போய் முகத்தில் ஒருவித அத்தியாச்சரியமான சாந்தம் வியாபித்திருந்தது! இதையெல்லாம் கொஞ்சந்தான் கவனிக்கப் போது இருந்தது. அதற்குள்ளே, நாகராஜன் வ'றான், நாகராஜன் வ'றான், என்ற ஆரவாரம் கூட்டத்தில் பிறந்தது. ஆமாம், நிசந்தான், அவன்தான் தலைகால் தெரியாமல் பதைக்கப் பதைக்க ஓடி வந்துகொண்டிருந்தான். வந்துவிட்டான். மல்லிகை செடியண்டை வந்ததும், கும்பலையாவது, கும்பலில் இருந்த தாயார் தகப்பனாரையாவது கவனிக்காமல், ருக்மிணி, என்ன பண்ணிவிட்டாய் ருக்மிணி!''என்று கதறிக்கொண்டு கீழே மரம் போல் சாய்ந்துவிட்டான். கூட்டத்தில் சத்தம், கப் பென்று அடங்கிப் போய்விட்டது. எல்லோரும் நாகராஜனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ரொம்ப நாழி வரைக்கும் அவன் தரையில் ர்ச்கை போட்டே கிடந்தான். ராமசுவாமி ஐயர் பயந்து போய் அவன் முகத்திலே ஜலத்தைத் தெளித்து விசிறியால் விசிறிக்கொண்டிருக்கையில் அவனுக்குக் கடைசியாய் பிரக்கினை வந்தது. கண்ணை முழித்தான். ஆனால் தகப்பனாரிடத்தி லே ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ருக்மிணியின் உயிரற்ற சரீரத்தை பார்த்து, என்னுடைய எண்ணமத்தையும் பாழாக்கிவிட்டு ஜூலியத் மாதிரி பறந்தோடிபோய்விட்டாயே ருக்மிணி! ஸ்ரீநிவாசன் சொன்னது சரியாய் போய்விட்டதே! பாவி என்னால்தான் நீ உயிரை விட்டாய், நான்தான் உன்னைக் கொலைசெய்த பாதகன்! நேற்று நான் உன்னிடம் ரகஸ்யம் முழுவதையும் சொல்லியிருந்தால் இந்த கதி நமக்கு இன்று வந்திருக்காதே! குஸும ஸத்ருசம் ......ஸத்ய: பாதி ப்ரணயி ஹ்ரதயம்'' * என்கிற ஆழமான வாக்கியத்தை வேடிக்கையாக மாத்திரந்தான் படித்தேனேயொழிய அதன் சத்தியத்தை நான் உணரவில்லையே! இனிமேல் எனக்கென்ன இருக்கிறது? ருக்மிணி நீயோ அவசரப்பட்டு என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாய். எனக்கு இனிமேல் சம்சார வாழ்க்கை வேண்டாம். இதோ சன்னியாசம் வாங்கிக் கொள்ளுகிறேன்!'' என்று சொல்லிக்கொண்டே யாரும் தடுப்பதற்கு முந்தி தான் உடுத்தியிருந்த வேஷ்டியையும் உத்திரீயத்தையும் அப்படியே தாராய் கிழித்து விட்டான். அவன் தாயார் தகப்பனார் ஒருவரும் வாய் பேசவில்லை. நாகராஜனும் அவர்கள் திடுக்கிட்டதிலிருந்து சுதாரிச்சுக் கொள்ளுகிறதற்குள்ளே அவர்கள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு யாருடனும் பேசாமல் கௌபீனதாரியாய்ப் புறப்பட்டுப் போய்விட்டேன். இப்படி முடிந்தது என் ருக்மிணியின் கதை! என் அருமைக் குழந்தைகளே! பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்கு கொண்டுவந்து விடும் என்று யாரால் சொல்லமுடியும்

குளத்தங்கரை அரசமரம் - the Peepul Tree near Tank (A Short Story). பாக்கியலக்ஷ்மி அம்மாள். விவேகபோதினி, செப்டம்பர், அக்டோபர் 1915. 

மங்கையர்கரசியின் காதல் முதலிய கதைகள். வ.வே.ஸு.ஐயர். கம்ப நிலையம், புதுச்சேரி. 1917.

----------------










Kaala Subramaniam added 9 new photos.


15 hrs





‘குளத்தங்கரை அரசமரம்’ (1915) என்ற வ.வே.ஸு.ஐயரின் (முதல்?) தமிழ்ச் சிறுகதை, இந்த தாகூர் கதையின் (1886/1914) தழுவல்தான் என்று சொல்லப்படுகிறது.-----------------------------------------

படித்துறை சொல்லும் கதை

ரவீந்திரநாத் டாகுர்

(தமிழில்- த.நா.குமாரஸ்வாமி)

------------------------------------------------
நடந்த ஸம்பவங்கள் எங்கேயாவது கல்லின்மேல் பதிவதுண்டோ என்று நீங்கள் வினவும் பட்சத்தில், மாந்தர் மறந்துபோன அந்தக் கதைகளை என்னுடைய கற்படிகள் உங்களுக்கு எடுத்துச்சொல்லும். பழைய வரலாறுகளைக் கேட்க விரும்புவீர்களானால் இதோ இந்தப் படிக்கட்டில் உட்கார்ந்துகொள்ளுங்கள். கீழே உருண்டுசெல்லும் ஜலராசியின் இனிய ஓசையைக் கூர்ந்து கேளுங்கள். வெகுநாட்களுக்கு முன்பு தோன்றி மறைந்துபோன அதிசயங்கள் உங்கள் செவிகளில் படும்.

முந்தி நிகழ்ந்த ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது : இதுபோன்ற ஒரு தினம்; ஐப்பசி மாதம் பிறக்க இன்னும் இரண்டே நாட்கள் இருந்தன. விடியற்காலை மிருதுவான குளிர்ந்த காற்று வீசி, நித்திரையிலிருந்து விழித்தவர்க்கு மலர்ச்சியைத் தந்தது. மரத்தளிர்கள் மாருதத்தின் ஸ்பர்சம் பட்டுச் சிலிர்த்து அசைந்தன. பூர்ணப் பிரவாஹமாக ஓடும் கங்கை. என்னுடைய நான்கு படிகள் மட்டுமே நீர்மட்டத்திற்குமேல் தலையைக் காட்டின. ஆறும் கரையும் அடிக்கடி ஒன்றாய்க் கூடும் விந்தை. நதிதீரத்தின் அருகிலுள்ள மாந்தோப்பு வரையில் கங்கையின் நீர் பரவிவிட்டது. அதோ தெரிகின்றனவே, ஆற்றின் வளைவில் மூன்று பழைய சூளை மேடுகள், அவை அப்பொழுது ஜலத்திற்கு மேல் சிறிதளவே எட்டிப் பார்த்தன. கரையிலிருந்து நதியைத்தொடும் வேலமரங்களின் வேர்களில் வலைஞர் தங்கள் படகுகளைக் கட்டி வைப்பார்கள். காலை வரும் பெருக்கில் அவை தளும்பி மிதந்துகொண்டே இருக்கும். இளமையின் வேகத்தைப் போலவே நதியின் வெள்ளமும் கட்டிற்கு அடங்காமல் இரு கரையும் வழிந்து சென்றது.

அச் செக்குகளில் கங்கையில் என் இருக்

சரத்காலமானதால் நீர் நிரம்பி ஓடும் ஆற்றில் படிந்த ரவியின் கிரணங்கள், சண்பக மலரின் பசும் பொன்னிறங் கொண்டு விளங்கின. கதிரவன் விடும் ஒளி அவ்வித வர்ணத்துடன் திகழ்வதை வேறு எந்தக் காலத்திலும் காணமுடி யாது. ஆற்றுத் திடர்களில் நாணற்செடிகளிடையே சூரிய வெளிச்சம் பாய்ந்தது. இங்கொன்று அங்கொன்றாக நாணற் பூப் பூத்திருந்ததே தவிர இன்னும் நன்றாகப் பூ எடுக்கவில்லை.

ராம ராம' என்று பகவானை ஸ்மரித்துவிட்டு, வலைஞர் படகுகளை அவிழ்த்தனர். ஒளியைப் பருகப் பட்சி இனங்கள் இறகு விரித்து நீல விசும்பிடைப் பறந்து சென்றன. தோணிகள், தம் வெள்ளைப் பாய்மரச் சீலைகள் காற்றினால் உப்ப நதியில் புறப்பட்டன. அவை ஆடி அசைந்து செல்வது ஹம்ஸங்களின் நினைவை மூட்டியது; ஆனால் படகுகளின் சீலையிறகுகள் மட்டும் மேலே விரிந்து இருந்தன.

புரோஹிதர், தமது நியமப்படி மடிஸஞ்சி, பூஜைப் பேழை, இவற்றுடன் ஸ்நாநம் செய்யத் துறைக்கு வந்தாகிவிட்டது. பெண்டிரும் இரண்டொருவர், குடமும் கையுமாய் நீர்மொள்ள வந்தனர்.

இதெல்லாம் வெகுநாளைய சமாசாரம் அல்ல. உங்களுக்கு அதிக நாட்களாகிவிட்டதாகத் தோன்றும்; ஆனால் எனக்கோ, இது நேற்று நடந்தது போலவே இருக்கிறது. என்னுடைய வாழ்நாளெல்லாம், இந்த நதியோடுகூட விளையாடுவதிலேயே கழிகிறது. என் வரைக்கும், நான் கால வரம்பைக் கடந்துவிட்ட மாதிரிதான். பகலில் என் பிரதிபிம்பமும் இரவில் என் சாயையும் நதிநீரில் விழுந்து எங்கோ மறைந்து விடுகின்றன! இவ்வற்புதத்தை நான் பார்க்காத நாளே இல்லை. என்னுடைய கல்வடிவிற்கு முதுமை வந்துவிட்டபோதிலும் என் ஹ்ருதயத்தில் மட்டும் ஓர் அழியா இளமை திகழ்கிறது. பல ஆண்டுகளின் கலவரமான நினைவுகள் பாசியாக என்னை மூடியிருப்பினும், என் மீது மட்டும் சூரியகிரணம் பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அகஸ்மாத்தாகச் சில கவனங்கள் என்னை விட்டு அகலாமல் இருக்கின்றன. கங்கையின் ஓதம் படாத என் படிகளின் இடுக்குகளில் முளைத்திருக்கும் கொடிகளும் குத்துச் செடிகளுமே என்னுடைய பழைமைக்கு அத்தாட்சிகளாகும். அந்த நினைவுகளோடு என்னைப் பிணைத்து, என் ஜீவியதசையைப் புதுமையாகவும் பச்சென்றும் விளங்கும்படி அவை செய்கின்றன. கங்காதேவி படிப்படியாக என்னிடமிருந்து விலகிக்கொண்டே போகிறாள். நானும் ஒவ்வோர் அடியாக ஜீர்ணதசைக்கு வந்துவிட்டேன்!

நீராடிவிட்டு 'வவ்வவ்வவ்' என்று குளிரினால் உடல் நடுங்க நாமாவளியை உச்சரித்துக்கொண்டே அதோ வீடு திரும்புகிறாரே சக்ரவர்த்தி குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர், அவருடைய அம்மாவைப் பெற்ற தாய், 'இவ்வளவூண்டுபெண்ணாயிருக்கும்போது எனக்குத் தெரியும். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது : அவள் நித்தியம் ஆற்று நீரில் இலையினால் பண்ணின படகை விட்டு வேடிக்கை பார்ப்பது வழக்கம். எனக்கு இடதுபுறமாக இருக்கும் மேட்டில் தடைப்பட்டு அந்த இலைப்படகு சுழன்று சுழன்று நீரின் வேகத்தில் அடித்துக்கொண்டு போகப்படும். இதையே அந்தப் பெண் கண் கொட்டாமல் கவனிப்பாள். எனக்குத் தான் காலம் ஓர் எண்ணிக்கையில்லையே! பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அச்சிறுமி பெரியவளாகி தன் பெண் குழந்தையுடன் ஜலம் கொண்டுபோக ஆற்றுக்கு வந்தாள். அவளுடன் வரும் பாலிகைகள் ஒருவர் மீது ஒருவர் நீரை வாரி இறைத்துக் கூச்சலிடும்போது சிறியவளாயிருந்த அந்தப் பெரிய மனுஷி அவர்களை அதட்டுவாள். முன்னே அவள் இலைப்படகை மிதக்கவிட்டு விளையாடினது அப்பொழுது என் நினைவிற்கு வரும். அவ்வளவு பழைய ஆத்மா நான்!

நான் எதைச் சொல்ல எண்ணினேனோ அந்தக் கதை சீக்கிரம் வரமாட்டேனென்கிறதே? ஏதேதோ வம்பளக்கிறேனே? ஒன்றை எடுக்கும்போது வேறொரு நினைவின் ஓட்டம் அதை இழுத்துச் சென்றுவிடுகிறது. அதைப் பிடித்துவைக்க முடியவில்லையே? இரண்டொரு விஷயம் அந்த இலைப்படகை யொத்துத் தப்பித்தவறி என் மனத்திடைச் சிக்கிவிடுகிறது. அந்தக் கதையின் பீடிகை என்னைச் சுற்றிச் சுற்றி மூழ்கியும் வெளித்தோன்றியும் அலை கிறது. படகைப்போலவே கதையும் சின்னதுதான் ; அதில் பிரமாதமானதொன்றும் இல்லை ; ஸரள பாவமுடைய அச் சிறுமி, இரு மலர்களை ஏந்திய தன் படகு நீரில் மூழ்குவ தைப் பார்த்து எப்படிப் பெருமூச்சுவிட்டுத் தன் வீட்டிற் குச் சென்றாளோ, அதேமாதிரி நீங்கள் இக்கதையைக் கேட்டதும் பெருமூச்சு விடுவீர்கள்; அதில் ஸந்தேஹமில்லை.

1

எதிரே தெரியும் கோயிலுக்கருகில் நான் சொல்லுகிற ஸமயம் கோஸ்வாமி வீட்டாரின் மாட்டுக்கொட்டில் இருந் தது. அது இருந்ததன் அடையாளத்தை அங்குள்ள குட்டிச்சுவர் காட்டுகிறது. கோஸ்வாமிகள் இங்கு வந்து குடியேறுவதற்கு முன்பு அந்த இடத்தில் ஒரு பெரிய வேல மரம் உண்டு. அதனருகில் ஓர் ஓலைக் குடிசையும் இருந்தது.

இன்று என்னுடைய உடலில் ஊடுருவிப் பிரவேசித்து என்னை இன்னும் அழிவிற்கு ஆளாக்கும் இந்தப் பிரம் மாண்டமான அரசமரம் அப்பொழுது மிகச் சிறிய செடி. அது செந்தளிர்கள் விட்டு என்மீது ஸதா அசைந்து கொண்டேயிருக்கும். நல்ல வெயில் வேளையில் என் மடிமீது அதன் நிழல் வந்து விளையாடும். அதன் மெல்லிய வேர்கள் ஒரு சிறுபிள்ளையின் விரல்களைப்போன்றே என் சரீரத்தில் குருகுருக்கும். அதன் இலை ஒன்றை யாராவது கிள்ளி னால் எனக்குக் கண்ணீர் வந்துவிடும். எனக்கு இப் பொழுது வயது அதிகமாகிவிட்டாலும், நான் சொல்லுகிற ஸமயம் என் உடல் பலமாகத்தான் இருந்தது. இன்றோ பத்து இடங்களில் தேய்ந்து வளைந்து கூன் விழுந்து போய் விட்டேன். எத்தனையோ இடங்களில் பாளம் பாளமாக என் சரீரம் வெடித்துவிட்டது. அந்த வெடிப்புக்கள் குளிர் காலங்களில் 'கும்' என்று இருக்கும். அவற்றில் எத்தனை தவளைகள் சுகநித்திரை செய்ய இடம் தேடிக்கொள்கின் றன தெரியுமா? எனது இடது பாரிசத்துச் செங்கற் கட் டிடம் சற்றுக் கலகலத்து விட்டது. அந்த வங்குகளில் நாகணவாய்ப் புள்ளினங்கள் கணக்கில்லாமல் குஞ்சு பொரித் திருக்கின்றன. பொழுது புலர்ந்ததோ இல்லையோ, அந்தப் பொந்துகளிலிருந்து எல்லாப் பறவைகளுக்கும் முன்னராக வானம்பாடி கிளம்பி ஆகாயத்தில் மறைந்து சீழ்க்கை அடிக்க ஆரம்பித்துவிடும்; அதனுடன் குஸ் மா துறைக்கு வரும் வேளையும் நெருங்கிவிட்டதென்று நான் கண்டுகொள்வேன்.

நான் சொல்லுகிற பெண்ணை அவளுடன் வரும் தோழி மார்கள், ''குஸ்மாஎன்று அழைப்பார்கள். அதனால் தான் அவள் பெயர் எனக்குத் தெரியலாயிற்று. ஜலத்தில் குஸ்மாவின் சாயை விழும்போதெல்லாம், 'இந்தப் பிரதிபிம்பம் இப்படியே என் ஹ்ருதயத்தில் பதிந்துவிடக் கூடாதா? இதைக் கல்லில் இருத்திவிட முடியாதா?' என்றெல்லாம் ஆவல் கொள்வேன். என்ன அசட்டு எண்ணங் கள்! நான் பார்த்தவற்றுள் எதுதான் நிலையாக நின்றது? பாதசரங்கள் கலீரென்று ஒலிக்கத் தன் கால்களை என்மீது அவள் வைக்கும்போது என் மேல் வளரும் புற்பூண்டுகள் கூடப் புளகமுறும்.

அவளுடன் வரும் சிறுமிகளும் அவளைப்போலவேதான் விளையாடுவார்கள்; வேடிக்கையாகப் பேசுவார்கள்; சிரிப்பார்கள். ஆனாலும் அவளுக்கு இணை ஆகமாட்டார்கள் மற்றப் பெண்கள். அவளிடத்தில் தான் எனக்குப் பற்றுதல்! அவள் ஸாது, மிகவும் நல்ல பெண் என்று நான் சொல்ல வரவில்லை. அவளும் விஷமக்காரிதான். மற்றவர்களெல்லோரும் அவளை, “அடி குஸி, ராட்சஸிஎன்று கேலி செய்வார்கள். அதற்கு உடனே அவள் வெட்டெனப் பதில் தருவாள். அவளுடைய தாய், “குஸுமி'' என்று அவளைச் செல்லமாக அழைப்பது வழக்கம். அவளுக்கு வேளை ஸமயம் என்பதே இல்லை; ஸதா ஆற்றில் துளைந்துகொண்டிருப்பாள். அவளுடைய ஹ்ருதயத்திற்கும் இதோ செல்லும் நீரோட்டத்திற்கும் ஒருவித ஒற்றுமை இருந்தது. அதற்கேற்றாற்போல ஜலம் என்றால் அவளுக்குப் பிராணன்!

அப்புறம் கொஞ்சநாள்வரை குஸுமாவை நான் காணவில்லை. புவனியும், ஸ்வர்ணாவும் மட்டும் துறைக்கு வந்து கண்ணீர் உகுப்பார்கள். எதற்காகவென்று எனக்குத் தெரியவில்லை. அன்பார்ந்த ஸகியை விட்டுப் பிரிந்ததனாலா?- அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து குஸுமா புக்ககம் போய்விட்டதாக ஏற்பட்டது. அந்த ஊரில் ஆறு என்பதே இல்லையாம். மனுஷ்யர், வீடு, வாசல் எல்லாம் புதியவையாம். ஆஹா! ஜலத்தில் பிறந்த தாமரையை நிலத்தில் கொண்டுபோய் வளர்த்தால்?

3

ஒருவாறு நானும் குஸுமாவை மறந்துபோகலானேன். ஒரு வருஷம் ஆயிற்று. துறைக்கு வரும் பெண்கள் அவளைப் பற்றியே பிரஸ்தாபிப்பதில்லை. கடைசியாக, ஒருநாள் ஸாயங்காலம் சட்டென்று மிகப் பரிசயமான யாருடைய காலடியோ என் மார்பில் பட்டது. எனக்குச் சிலிர்த்தது. குஸ்மா வந்துவிட்டாளா? ஆம்! அவளுடைய பாதஸ்பர்சமே. ஆனால் அவளுடைய சதங்கை ஏன் சப்திக்க வில்லை? அவள் பாதங்கள் இழைக்கும் மதுரநாதம் எங்கே? குஸ்மாவின் மெல்லடியும் அந்தச் சதங்கையின் ஓசையும் என்னுடைய ஒவ்வோர் அணுவிலும் பதிந்து அழியாத ஒரு ஞாபகத்தை மூட்டியிருக்கின்றன. அதை அனுபவித்த பிறகு எனக்கு ஜலத்தின் குளிர்ந்த ஸ்பர்சமும், மதுரகல்லோலமும் பிடிக்கவில்லை. கரையிலுள்ள மாமரத் தளிர்களின் சல சலப்பு, காற்று வாக்கில் 'ஐயோ, ஐயோ' என்று ஓலமிடு வது போல் இருந்தது. இது என்ன பிரமை!

குஸுமா விதவையாகிவிட்டாள். அவளுடைய புருஷன் வெளியூரில் எங்கோ பெரிய உத்தியோகஸ்தனா யிருந்தானாம். அவனுடன் அவள் கூடிக் குலாவினதெல்லாம் இரண்டே நாள்தான்; அப்புறம் அவள் தன் கணவனைப் பார்க்கவே இல்லையாம். கடித மூலமாகப் புருஷன் இறந்து போன செய்தி தெரிந்ததாம். எட்டு வயதான இச் சிறு பெண்மலர், பாவம், நெற்றியிலுள்ள குங்குமத்தை அழித்து விட்டு மாங்கல்யம் இழந்தவளாய்த் தன் பிறந்தகத்திற்கே - இந்த நதிக்கரைக்கே- வந்துவிட்டாள். அவளுக்கு இப்போது தேறுதல் சொல்ல அந்தத் தோழிகள் எவருமே இல்லை. புவனி, ஸ்வர்ணா யாவரும் புக்ககம் போய்விட்டனர். சரத் மட்டும் இருந்தாள். அவளுக்கும் தை மாதம் கல்யாணம்; சீக்கிரம் புக்ககம் போய்விடுவாள். இனிமேல் குஸுமா தனியாகத்தான் இருக்கவேண்டும்.

அது கிடக்கட்டும். அவள் இப்போது தலையில் கையை வைத்துக்கொண்டு என் மடி மீது உட்கார்ந்துகொண்டாள். நதியின் சிறு வெள்ளலை கைகொட்டி, ''குஸி, ராட்சஸி'' என்று பழையபடி விளையாட்டிற்கு அழைப்பதுபோல் இருந்தது அவளுக்கு. குஸ்மாவினுடைய தீராத்துயர் அந்தச் சஞ்சல ஸ்வபாவமுடைய அலைப்பிள்ளைகளுக்கு எப்படித் தெரியப்போகிறது? ஒரே இடத்தில் அசைவற்றிருக்கும் இயல்புடைய நான் இந்தத் துக்கத்தைக் கண்டு சகிக்க வேண்டியிருக்கிறதே! அவைகளோ எதையும் பொருட்படுத்தாமல் வேடிக்கை மீதே கவனமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

3

மழைத்தொடக்கத்தில் இருந்தாற்போலிருந்து கங்கையின் ஜலம் கபகபவென்று ஒவ்வொரு படியாக ஏறிற்று. குஸுமாவும் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே மதமத வென்று வளர்ந்து அழகிய யுவதியாக மாறிவிட்டாள். ஆனால் அவளுடைய எளிய உடையும் வேதனையுற்ற வதனமும் அவள் யௌவனத்தின் வனப்பை மறைக்க முயன்றன. குஸுமா பெரியவளாகிவிட்டதை யாராவது கவனித்தார்களா? - விதவையைப் பற்றி யாருக்குக் கவலை? ஸதா அவளைப் பார்ப்பதனாலேயோ என்னவோ அவளிடத்தில் ஒரு வித்தியாஸமும் எனக்குத் தெரியவில்லை. அவளுடைய கால்களில் பாதசரம் இல்லாது போனாலும் அதனுடைய ஓசை மட்டும் என் செவிக்குக் கேட்டது. பழைய நினைவுகள் மாறுவதென்றால் லேசா? பத்து வருஷ காலம் இப்படியே ஸ்வப்னம் போல் பறந்து சென்றது அந்த ஊரார் யாருக்குமே தெரியாது. இன்றைக்கு உங்களை எப்படி உயிருடன் உண்மையாகப் பார்க்கிறேனோ, அவ்விதமே அவளையும் ஒரு நாள் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இன்றைத் தினம் போலவே நான் சொல்லுகிற ஸமயத்தில் ஒரு நாள் வந்தது. இன்று திகழும் இயற்கையின் அழகை நீங்கள் பார்த்து அனுபவிப்பது போலவே உங்களுடைய பாட்டிமார்களும், அதிகாலையில் இளஞ் சூரியன் மதுரமான கிரணங்களைப் பொழிவதைக் கண்டு களித்தனர். அப்பொழுது யுவதிகளாயிருந்த அவர்கள், குடங்களில் நீர் கொண்டு, ‘கோம்டாஎன்னும் முக்காட்டைச் சரியாக இழுத்து முகத்தை மூடியவண்ணம் மேடும் பள்ளமுமான கிராமப் பாதையில் வேடிக்கையாக ஸம்பாஷித்துக்கொண்டு வருகையில் தங்கள் வயிற்றில் நீங்கள் எல்லோரும் உதிப்பீர்களென்று கனவிலாவது எண்ணியிருப்பார்களா? உங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியப்போகிறது? என் கண்ணெதிரே, ஒரு காலத் தில் உயிர்பெற்றிருந்த அந்தச் சித்திரங்கள் வந்து நிற்கின்றன. அவர்களும் ஒரு ஸமயம் பல சுக துக்கங்களை அனுபவித்து வாழ்க்கைப் போரில் ஈடுபட்டிருந்தனர். முன் அவர்கள் கண்டு மகிழ்ந்த ஓர் அழகிய சரத் கால தினம், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பொலிவுடன் விளங்கப்போவதை அவர்கள் எங்ஙனம் அறிவார்கள்?

அதே மாதிரி ஸமயம். காலைப்பொழுதில் வாடைக்காற்றுக் கொஞ்சங் கொஞ்சமாக அடிக்க ஆரம்பித்தது. நன்றாக அலர்ந்து உதிரும் வேலம் பூக்கள் காற்றில் பறந்து வந்து என்னுடைய படிகள் மீது குவிந்தன. முத்துப் போன்ற பனித்துளிகள் என் மீது படிந்திருந்தன. அன்று எங்கிருந்தோ தங்கச்சாயலாக, விசாலமான நெற்றிக்கட்டையுடைய. பால ஸந்யாஸி ஒருவர் எனக்கு நேராகவுள்ள சிவாலயத்தில் வந்து தங்கினார். ஸ்வாமிகள் வந்த ஸமாசாரம் ஊர் முழுதும் எட்டிவிட்டது. துறைக்கு வந்த பெண்மணிகள் குடங்களை வைத்துவிட்டு அவரை ஸேவிக்க ஆலயத்தை நோக்கிச் சென்றனர்.

கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு யதி, அதுவும் மஹாதேஜஸ்வி என்றால் கேட்கவும் வேண்டுமா? நெருக்கம் அதிகமானாலும் யாரையும் அவர் கடிந்துகொள்வதில்லை. அவர் குழந்தைகளைக் கண்டால் கொஞ்சுவார். ஸம்ஸார சுக துக்கங்களைப் பற்றிப் பெண்டுகளை விசாரித்ததனால் அவர்கள் அவர்பால் அதிக சிரத்தை செலுத்தலாயினர். புருஷர்களும் ஏராளமாக வர ஆரம்பித்தனர். நவீன ஸந்யாஸி சில தினங்கள் பகவத் கீதைக்கு வியாக்கியானம் பண்ணி உபந்யாஸம் நிகழ்த்துவார். அவருடைய வாயினின்று வரும் பாகவதக் கதைகளின் புதிய தாத்பர்யத்தைப் பண்டிதர்களும் பாமரர்களும் மெய்ம்மறந்து கேட்பார்கள். அவர் செய்யும் சாஸ்திர புராண ஆராய்ச்சிக்கோ அளவில்லை. பலர் அவரிடம் உபதேசம் பெற்று இகபர பயத்தைப் போக்கிக்கொண்டனர். தீராத வியாதிகளுக்கு அவரிடம் சிலர் மருந்து யாசித்தனர். ஆஹா! என்ன வசீகரமான தோற்றம் அவருடையது! ஒருவேளை ஈசுவரனே இந்தக் கோயிலில் ஆவிர்ப்பவித்திருக்கிறானோ? - இம்மாதிரியான ஸந்தேகம் எனக்கு ஏற்பட்டது.

தினந்தோறும் உஷக்காலத்தில் அந்தத் தபஸ்வி, துறையை அடைந்து நதியில் தீர்த்தமாடி இடுப்பளவு ஜலத்தில் நின்றுகொண்டு, எதிரே சுக்ர நகட்சத்திரம் ஆகாய நுதலில் ஜ்வலிக்க, கம்பீர த்வனியில் ஸந்த்யா வந்தனம் செய்வார். அப்பொழுது நான் தன்மயமாகி அதையே சிரவணம் செய்வேன். என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது. வானம் ரத்த வர்ணமாக மாறிவிடும். மேக விளிம்புகளில் அச்செந்நிறம் மறைந்து எப்பொழுது வெளுக்குமோ எனக்குத் தெரியாது. வான், நதி, திக்கு, கரை யாவும் இந்த வர்ணமாயையில் லயித்து விளங்கும். அம் மஹாபுருஷரின் மந்திர சக்தியினாலோ, இம்மாதிரி இந்திர ஜாலம் இயற்கையில் தோன்றுகிறது? நிசி யென்னும் அரக்கர் ஆட்சி சிதைந்து போவது அவர் விடும் அர்க்கியத்தின் மகிமையினாலோ? ஞாயிறு கோவைப்பழம் போல் ஆகாயத்தில் கிளம்பியது. இயற்கையின் படம் முற்றும் புதுமையாக மாறிக்கொண்டே வந்தது. அம்மஹா புருஷரும் ஸ்நாநம் செய்துவிட்டு, தீக்கொழுந்தெனத் தூய்மையை நாற்றிசையும் வீசிக்கொண்டே ஆலயத்தை நோக்கி நடந்தார்.

4

அந்த மாதம் இப்படியே கழிந்துவிட்டது. பங்குனி மாதத்தில் ஒரு சூரிய கிரஹணம் வந்தது. புண்ணிய ஸ்நாநம் செய்ய ஜனங்கள் நதிக்கரையில் கூடினர். இதுவே அயலூரார் அனைவரும் ஸந்யாஸியைத் தரிசிக்க ஏற்ற ஸந்தர்ப்பமாக இருந்தது. வேலந் தோப்பினுள் கடைகள் விழுந்தன. அந்தத் தடவை குஸுமாவின் புக்ககத்துப் பெண்டிரும் வந்திருந்தனர். அன்று என்னுடைய கடைசிப் படியில் உட்கார்ந்தவண்ணம் இளம் துறவி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். தொலைவிலிருந்து அவரைச் சுட்டிக்காட்டி ஒரு பெண் தாழ்ந்த குரலில் மற்றவளிடம், ''அடி, இவர் நம் குஸுமாவின் புருஷனைப்போலே இல்லை?'' என்று கேட்டாள்.

மற்றவள் முக்காட்டைச் சற்று விலக்கி அதன், இடுக்கு வழியாக அவரைப் பார்த்துவிட்டு, ''ஆமாண்டீ, நம்ம சட்டர்ஜீ அகத்துப் பிள்ளை தான்!'' என்றாள். இன்னும் ஒருத்தி, ''அடியம்மா! அதே ஜாடை; அதே கண்; மூக்குக் கூடவா அப்படியே இருக்கவேணும்!'' என்றாள். வேறொருத்தி ஸந்யாஸியின் மீது அவ்வளவாகக் கவனம் செலுத்தாதவள், ''நம் குஸுமிக்கு இனிமேல் ஏதடி நல்லகாலம் பிறக்கப் போகிறது? செத்தவனாவது திரும்பி வருகிறதாவது!... இதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம். அவ்வளவு பாக்கியம் அவள் பண்ணியிருந்தால் இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?'' என்று பெருமூச்சுடன் மொழிந்தாள்.

அப்பொழுது அங்கே இருந்த ஒருத்தி, " மாமி, குஸுமி அகமுடையானுக்குத் தாடையில் இவ்வளவு மயிர் இல்லை. உயரங் கூட இவ்வளவு இல்லை. இவர் வேறு யாரோ!”' என்றாள். இவர்களுடைய ஸம்சயங்கள் ஒருவாறு நீங்கின. அதற்கு மேல் வம்பளப்பும் ஓடவில்லை.

கிராமத்தில் குழந்தை முதல் கிழம் உட்பட எல்லோரும் ஸ்வாமிகளை ஸேவித்தாகிவிட்டது. குஸுமா ஒருத்திதான் பாக்கி. அவள் இன்னும் இந்த மஹானை வந்து தரிசிக்கவில்லை. புருஷன் இறந்த துயரினால் அவள் இங்கு வரவில்லையா? ஒரு வேளை புக்ககத்து நாத்திமார் எதிரில் தான் வரக்கூடாது என்று இருக்கிறாளா?

5

ஒரு நாள் சாயந்திரம். அன்று பெளர்ணமி திதி. அவளுக்கு என் மீது நினைவு வந்துவிட்டாற்போல் இருக்கிறது. துறையில் அப்பொழுது ஈ காக்கை இல்லை. 'ரிங்ரிங்' என்று சிள்வண்டுகளின் இறகு கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆலயத்தில் மணி அடித்து அப்போதுதான் ஓய்ந்தது. அதனுடைய ஒலி அலை நதி நீரின் மேல் பரவித் தூரத்தில் மங்கலாகத் தெரியும் வனரேகையுடன் கலந்துவிட்டது. ஸ்வர்ணத் தகடு போல் வட்ட மதியும் முளைத்தது. நதியில் பூர்ணப் பிரவாஹம். காற்றே இல்லையென்று சொல்லலாம். அந்த வேளை, மரம் செடிகள் கூட எதையோ உற்றுக் கவனிப்பது போல் அசைவற்று நின்றன. எதிரே, அகன்ற ஆற்றின் மணல் திடர் மீதும், தோப்பு, கோயில், சிகரம் இவற்றின்மேலும் நிலவின் வெள்ளிச் சலாகை, நிழலும் ஒளியும் கலந்த ஒரு மாயக்காட்சியைத் தீட்டியது. இருளானது ஒளிக்குப் பயந்து, வெகு தூரத்தில், பனந்தோப்பினுள் போய்ப் பதுங்கிக்கொண்டது, ஏழிலைப்பாலை விருட்சத்தின் கொப்புகளில் வெளவால்கள் 'கிர்ர் கீச்' என்று அரற்றித் தலைகீழாக ஊசலாடின. வயல்களிடையே நரிகளின் ஊளை கொஞ்சங் கொஞ்சமாக அடங்கிவந்தது.

கோயில் மண்டபத்தைவிட்டு ஸந்யாஸி மெல்ல எழுந்து வெளியே வந்தார். கால்களை அலம்பிக்கொள்ளத் துறையில் இரண்டு படிகள் இறங்கும்போது, கீழ்ப்படியில் ஒரு யுவதி வீற்றிருப்பதைப் பார்த்துத் திரும்பிப் போக யத்தனித்தார். அதே க்ஷணம் குஸுமா, முகத்தில் சந்திரிகை பிரதிபலிக்க நிமிர்ந்து ஸந்யாஸியை நோக்கினாள். அவரை அவள் பார்ப்பது இதுவே முதல் தடவை. அவள் தலையிலிருந்த முட்டாக்குப் பின்புறமாக நழுவி விழுந்துவிட்டது. இருவருடைய கண்களும் சந்தித்தன. ஒருவரை யொருவர் எங்கோ கண்டிருப்பது போல அவர்களுக்குத் தோன்றியது. ஒரு வேளை முன் பிறப்பில் அது நேர்ந்திருக்குமோ?...

அதே ஸமயம் அவர்களுடைய தலைக்கு நேராக ஆந்தை 'கிக்' என்று ஒற்றைச்சொல் கூவிச் சென்றது. குஸுமாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. தன் ஸ்மரணை வந்து முட்டாக்கைச் சரிப்படுத்திக்கொண்டு எழுந்து யௌவன ஸந்யாஸியின் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்தாள்.

ஸந்யாஸி அவளை ஆசீர்வதித்து, ''உன் பெயர் என்ன, தாயே?'' என்று கேட்டார்.

''
குஸுமா'' என்றாள் அவள்.

அன்று அவ்வளவோடு பேச்சு நின்றுவிட்டது. குஸஸுமாவின் வீடு துறைக்கு வெகு ஸமீபத்தில்தான். அவள் மெல்லத் தன் வீட்டை அடைந்தாள். இரவு முழுதும் ஸந்யாஸி என்னுடைய படியின் மீதே உட்கார்ந்திருந்தார். என்னென்ன எண்ணங்கள் அவர் மனத்திடைச் சுழன்றனவோ யாருக்குத் தெரியும்? அவருடைய கண்கள் இமையோடு இமை மூடவில்லை. பூர்ணசந்திரன் மேற்குவானில் தாழ்ந்து, அவருடைய நிழலுருவம் என்மீது விழும்போதுதான் ஸந்யாஸி எழுந்து ஆலயத்திற்குச் சென்றார்.

மறுதினம் முதற்கொண்டு குஸுமா தவறாமல் வந்து ஸந்யாஸியைத் தரிசித்துவிட்டுப் போவாள். அவர் சொல்லும் புண்ணியக் கதைகளைக் கோயிலிலுள்ள ஒரு தூணின் மறைவிலிருந்து கேட்டு இன்புறுவாள். ஸந்யாஸி தம் காலைக் கடன்களை முடித்துவிட்டுக் குஸுமாவை அருகில் அழைத்து அவளுக்கு ஸத்உபதேசம் செய்வார். ஆனால் அவையெல்லாம் அவளுக்குப் புரிந்திருக்குமா? குருவின் ஆக்ஞைப்படி ஊக்கமாக மட்டும் நடந்துவந்தாள். சிவபூஜைக்காகப் பனிமலர் கொய்வது, புனிதமான கங்கை நீரினால் கோயிலை மெழுகி இழை கோலமிடுவது போன்ற ஸேவைகளை அவள் செய்யத் தவறுவதில்லை. ஆனாலும் இவற்றால் அவள் மனத்திற்குச் சாந்தி ஏற்பட்டதா? ஸந்யாஸியின் உபதேச மொழிகளை, என் மடி மீது இருந்துதான் அவள் ஆராய்ந்து பார்ப்பாள். இதனால் அவளுடைய அகக்கண் விசாலமாயிற்று. அவள் முகம் அடிக்கடி பிரகாச மடைவதிலிருந்து காணுதற்கரிய உண்மைகளை அவள் காண்பது போல எனக்குத் தோன்றும். முன்பு அவளுடைய முகலாவண்யத்தை மங்கச் செய்த அந்தக் கவலைக் குறிகளெல்லாம் இப்பொழுது எங்கே? விடியற்காலையிலே பக்தி நிரம்பிய உள்ளத்துடன் ஸந்யாஸிக்குத் தொண்டு செய்யும்போது தேவனுக்கே உரியவளாகத் தோன்றுவாள், அந்தப் பாவை. சொல்லுக்கடங்காத ஒரு தெய்விக அம்சம் அவள் எல்லா அவயவங்களிலும் படர்ந்து ஒளிரும்.

6

சீதகால முடிவு. வாடைக்காற்று மாறி, வஸந்த ருதுவின் வரவை அறிவிப்பதுபோலத் தென்றல் அடிக்கடி உலாவிச் சென்றது. பனி விழுவதும் நின்றுவிட்டது. பருவ மாறுதலினால் மக்களிடையே புத்துணர்ச்சி மூண்டது. படகோட்டிகள் தங்கள் தொழிலையும் மறந்து தெம்மாங்கு பாடுவதில் காலங்கழித்தனர். கவையிலிருந்து கிளைக்குத் தத்தித் தத்திச் சிறு புள்ளினம் பேருவகையுடன் ஒன்றையொன்று கூவி யழைத்தன. இம்மாதிரியாகத் தெரியாமலே மாறியது கால மும். இளவேனிலின் உஷ்ணக்காற்றுப் படவே என் பாறை ஹ்ருதயத்திலும் இளமையின் உணர்ச்சி உண்டாயிற்று. என் மீது முளைத்திருக்கும் செடி கொடிகளும் இந்தப் பூரிப்பினால் செழிக்க ஆரம்பித்தன. ஆஹா! இந்த வஸந்த ருதுவின் கவர்ச்சிதான் என்னே! சின்னச் சின்னப் பூக்கள் பசும்புல் மீது பதித்தாற் போல் விளங்கின. ஆனால் இத்தகைய அழகான காலத்தில் குஸுமா ஏனோ இங்கே வருவதில்லை? கொஞ்ச நாளாகவே அவளைக் கோயிலில் காணவில்லை; ஸந்யாஸியிடமும் வருவதில்லை. அவளுக்கு என்ன...? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் வெறும் மட்டிக் கல்தானே!

சில தினங்களுக்குப் பின் குஸுமாவும் நவீன தபஸ்வியும் என்னுடைய படி மீது ஒரு மாலை வேளை ஸந்திக்க நேரிட்டது. குஸுமா தலை குனிந்தவாறு, ''நீர் என்னைக் கூப்பிட்டீராமே?'' என்றாள். ''ஆமாம், தாயே, நீ ஏன் முன்போல் என்னெதிரே வருவதில்லை? உன் பார்வையிலில்லாமல் கோயில் பாழடைந்து கிடக்கிறதே! உன்னுடைய விரல்கள் தொடுக்கும் மாலை இல்லாது என் பூஜை குறையாக நின்றுவிடுகிறது. இது ஏன், அம்மணி?'' என்றார் ஸந்யாஸி.

அதற்குக் குஸுமாவினிடமிருந்து பதிலே வரவில்லை.

''
உனக்கு என்ன மனக்கிலேசம்? அதை என்னிடம் சொல்லு.''

குஸுமா முகத்தைச் சற்று நிமிர்த்தி, “ஸ்வாமீ, அடியாள் மஹா பாபிஷ்டி. அதனாலேயே இந்த மாதிரி...'' என்று அரைகுறையாக வார்த்தையை நிறுத்திவிட்டாள்.

ஸந்யாஸி மிகவும் வாத்ஸல்யத்துடன், ''குஸுமா, உன் மனஸை ஏதோ கலவரம் வருத்துகிறது. இது நன்றாகத் தெரிகிறதே!'' என்றார்.

குஸுமாவுக்குத் 'திக்' என்று வாரிப்போட்டது. ஒரு வேளை, ஸந்யாஸி தன் அந்தரங்க விஷயத்தை ஊகித்துக்கொண்டார் என்று எண்ணினாளோ? - அவள் கண் இதழ்களில் நீர் துளித்தது. முகத்தை மேலாடையினால் மூடிக் கொண்டு ஸந்யாஸியின் பாதங்களைக் கெட்டியாகப் பிடித்தபடி விம்மி அழலானாள்.

ஸந்யாஸி சற்று விலகி நின்றார். ''அம்மா, உன்னை வாட்டும் வேதனையை என்னிடம் பயப்படாமல் சொல்லு. உனக்கு நிச்சிந்தையைத் தரும் மார்க்கத்தை நான் காட்டுகிறேன்,'' என்றார் அந்த மஹான். குஸுமா பக்தியின் ஆர்வத்துடன் பேச ஆரம்பித்தாள். ஆனால் தன் மனக்குறையை முற்றும் வெளிக்கூற முடியாதவாறு இடை யிடையே என்னவோ ஒன்று அவளைத் தடைசெய்தது. ''உங்கள் ஆதேசத்தின்படியே நான் சொல்ல முயல்கிறேன். ஆனால் என் மனஸை விட்டு அந்த ஒரு விஷயம் மாத்திரம் வர மறுக்கிறது. நான் எப்படி வெள்ளையாகச் சொல்லுவேன்? ...தாங்கள் தீர்க்கதரிசி; அதைத் தாங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்... ஸ்வாமீ, நான் ஒருவரைத் தெய்வம் போலவே பாவித்து என் மனஸில் பூஜை செய்துவந்தேன். அதனால் உண்டான ஆனந்தமே என் ஹ்ருதயத்தில் பூரணமாகக் குடிகொண்டது. ஒரு நாள் கனவில் - அதைச் சொல்ல என் வாய் கூசுகிறது - என்னுடைய ஹ்ருதயவாஸியான அந்தப் புருஷருடன் நான் ஒரு மகிழ மரத்தினடியில் பிரேம ஸம்பாஷணையில் ஈடுபட்டிருப்பதுபோல் கண்டேன். அது அஸம்பாவிதம் என்று எனக்கு அப்பொழுது தோன்றவில்லை. நான் கண்டது என்னவோ கனவுதான் - ஏன் எனக்கு அம்மாதிரித் தோன்றவேண்டும்?... கனாக் கலைந்தது. ஆனால் அதன் மயக்கம் மட்டும் இன்னும் என் மனஸைவிட்டு நீங்கினபாடில்லை. விதவையான நான் இந்த மாதிரி பிரமைகொள்வது பாபமல்லவா?... மறு தினம் என் காதலனைப் பிரத்யட்சத்தில் கண்டேன்; என்றும் பார்ப்பதுபோலவே பார்த்தேன். அதற்கப்புறமே நான் அவர் கண்களுக்குத் தென்படாமல் இருக்க உத்தேசித்தேன். கனவில் தோன்றியவை யாவும் இன்னும் என் கண் முன்னே உயிர்பெற்று நிற்கின்றன. என் பாப எண்ணங்கள் அவரை அணுகவொட்டாமல் நான் அந்தப் பரிசுத்த ஆத்மாவிடமிருந்து விலகி நின்றேன். என் பாழும் மனம் மட்டும் அதை மறக்கவில்லையே. இந்த வேதனையே என்னை உருக்குலைக்கிறது. என் வாழ்வு பாழாகிவிட்டது. ஐயோ...!''

அவள் கண்ணீர் உதிர்த்து இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது, ஸந்யாஸி தனது இடதுகாலினால் படியை அழுத்தினதை எனது கல் உள்ளமும் உணர்ந்தது. அவர் எதற்காக அங்ஙனம் செய்தார்? - தம் மனத்தில் எழுந்த கிளர்ச்சியை அடக்கவோ?...

குஸுமா பேசி முடித்ததும் ஸந்யாஸி, ''கனவில் நீ கண்ட மனுஷ்யர் யார்?'' என்றார். அப்பொழுது கைகளைக் கூப்பியவண்ணம் குஸுமா மிகவும் கஷ்டத்துடன், ''அவர் யாரென்று சொல்லவேண்டுமா?'' என்றாள்.

"
ஆமாம்.''

''
ஸ்வாமி, என்னை மன்னிக்கவேண்டும். அந்தப் புருஷர் நீரே!'' - அவள் வார்த்தைகள் அவள் காதிலேயே விழுந்தனவோ இல்லையோ, குஸுமா மூர்ச்சையாகி என் கடினமான மடி மீது சாய்ந்தாள். ஸந்யாஸி கற்சிலைபோல் திடுக்குற்று நின்றார். பிரக்ஞை வந்ததும் குஸுமா எழுந்து உட்கார்ந்தாள். அப்பொழுது அந்த அதிசய ஸந்யாஸி, ''அம்மா, நீ இதுவரை என்னுடைய உபதேசங்களைச் சரிவரப் பரிபாலித்து வந்திருக்கிறாய். இன்னும் ஒருதரமும் என் ஆதேசத்தின்படி நீ நடக்கவேண்டும். இன்றே நான் இவ்விடத்தை விட்டுச் செல்லுகிறேன். என்னை நீ மறந்துவிடவேண்டும். ஸத்யம் பண்ணு; இதுவே என் கடைசி உபதேசம்!'' என்றார் மிகவும் உருக்கமாய். குஸுமா ஸந்யாஸியின் முகத்தை ஒரு தரம் நன்றாகப் பார்த்துவிட்டுத் தன் இச்சை பூர்த்தியானதும், நிதானமாகவே, ''தேவரீர் அப்படியே. உமது கட்டளைப்படி..'' என்று கூறி நீண்ட பெருமூச்சுவிட்டு அவரை வணங்கினாள்.

ஸந்யாஸி, “ஆனால் நான் போகிறேன்,'' என்றார். மேலே ஒன்றும் கூறாமல் குஸுமா அவருடைய பாததூளியைச் சிரமேற் கொண்டாள். அந்த மஹான் அப்பொழுதே அவ்விடத்தை விட்டு அகன்றார்.

''
அவருடைய சொற்படியே நான் நடப்பேன், நடப்பேன். நான் அவரை மறந்துவிடவேண்டும்...'' என்று சித்தப்பிரமை பிடித்தவள் போலச் சொல்லிக்கொண்டே விசையாக இழுத்துச்செல்லும் ஆற்று நீரில் இறங்கிவிட்டாள் குஸுமா. அவளுக்குச் சிறு வயது தொட்டு இன்பத்தைத் தந்த இந்தக் கங்கையா அவள் சாந்தியைக் கோரி வரும்போது இடங்கொடுத்து ஆதரிக்க மறுப்பாள்! அம்புலியும் அஸ்தமித்துவிட்டது. அச்சத்தைத் தரும்படி இருந்தது அந்தகாரம். அவள் ஜலத்தில் மூழ்கின சப்தங் கூடக் கேட்கவில்லை. தன் குழந்தை மீது கங்கைத் தாய்க்கு எவ்வளவு அன்பு! - காற்று என்னைப்போல் இதற்குச் சாட்சியாகி ஸகிக்கமுடியாத வேதனையுடன் உச் உச்' என்று அலறிற்று. நட்சத்திர தீபங்கள் அவள் போனதும் ஒவ்வொன்றாக அணைந்துபோய் வானம் வெறிச்சென்று இருந்தது. சிறு பிராயத்திலிருந்து என் மேல் குதித்து ஓடி விளையாடின அந்த மாசற்ற குஸுமம் கடைசியாக இந்த வேடிக்கையைக் காட்டிவிட்டு என் மடியிலிருந்து எங்கேயோ நழுவிவிட்டது!

------------------

மால்கோஷ் (வங்காளச் சிறுகதைகள்), த.நா.குமாரஸ்வாமி (மொ.பெ.), அல்லயன்ஸ் கம்பெனி. 1941

Ghater Katha (or Rajpathar Katha). 1886. (The Ghat's Story/The River Stairs/ The Bathing Ghats Tale. 1914 Modern Review)

குளத்தங்கரை அரசமரம், வவேசு அய்யர். 1915 விவேகபோதினி. 1971 மங்கையர்க்கரசியின் காதல்



-.