Pages

Saturday, August 18, 2018

தோற்காதவன் - எர்னஸ்ட் ஹெமிங்வே - சி. சு. செ ::: எழுத்து

-------
ஹெமிங்வே
'கடலும் கிழவனும்' என்ற தன் குறு நாவலுக்கு நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் எர்னஸ்ட் ஹெமிங்வே, அவரது கட்டுக்கதை உலகம் ஸ்பானிய காளைச் சண்டைக்காரர்கள், மீன் பிடிப்பவர்கள், குஸ்தி, குத்துச்சண்டைக்காரர்கள், சூதாடிகள் போன்ற ஒரு தரத்து மக்கள், சமூக வாழ்வைப் பற்றியதாக பெரிதும் இருக்கும். இலக்கியத்தில் இது குறித்த அவரது சாதனை சிறப்பாக குறிப்பிடப்படுவது. போர்முனை ரிபோர்ட்டராக வேலை பார்த்திருக்கும் அவரது நடை பேச்சுத் தோரணைக்கு ஏற்ப ஒரு நேரடியான தன்மை. வாய்ந்து இன்று ஒரு பாணியாக கருதப்படுகிறது. அவரது காளைச்சண்டை நாவல் “ஸன் ஆல்ஸோ ரைஸஸ்' என்பது. இந்த கதை 'அன்டிஃபீடட்” அவரது சிறந்த கதைகளில் ஒன்று. தமிழக ஜல்லிக்கட்டு நாவலான என் வாடிவாசல்'லை படித்து. வாசகர்களுக்கு இந்த ஸ்பானிய காளைச்சண்டை பற்றிய சிறந்த கதையை அறிமுகப்படுத்த விரும்பி மொழி பெயர்த்திருக்கிறேன், 'எர்னஸ்ட் ஹெமிங்வேயின் சிறு கதைகள்' தொகுப்பிலிருந்து எடுத்தது.
- சி. சு. செ, -

சிறுகதை

தோற்காதவன்
எர்னஸ்ட் ஹெமிங்வே

டான் மிகையல் ரெடனாவின் ஆபீசுக்கு படி ஏறிச் சென்றான் மானுயல் கார்சியா, சூட்கேஸை கீழே வைத்துவிட்டு கதவை தட்டினான், பதில் இல்லை. முன் ஹாலில் நின்றுகொண்டு, மானுயல், யாரோ அறைக்குள் இருப்பதாக உணர்ந்தான். கதவை ஊடுருவி அவன் அதை உணர்ந்தான்.

'ரெடனா,' கவனித்து அவன் அழைத்தான்.

பதிலே இல்லை.

அவன் உள்ளே தான் இருக்கான், சரிதான், - மானுயல் நினைத்தான்.

'ரெடனா,' கூப்பிட்டு அவன் கதவை இடித்தான்

'யாரது ?' ஆபீசிலிருந்து யாரோ கேட்டார்கள்.

'நான் தான், மானலோ,' என்றான் மானுயல்.

 'என்ன வேணும் உனக்கு ?' குரல் கேட்டது.

'எனக்கு வேலை வேணும்' என்றான் மானுயல்.

கதவில் பலதடவை கிளிக்கிட்டது, வீசி திறந்தது. சூட்கேஸை தூக்கிண்டு மானுயல் நுழைந்தான்.

அறையின் எட்டின கோடியில் சிறு சாய் மேஜைக்கு பின்னாடி ஒரு சின்ன ஆள் உட்கார்ந் திருந்தான். அவன் தலைக்கு மேலே மாட்ரிட் செத்த மிருக தோல் - பொம்மை செய்பவர் ஒருவர் அமுக்கி அடைத்த ஒரு காளையின் தலை இருந்தது. சுவர்களில் சட்டம் போட்ட போட்டோக்களும் காளைச் சண்டை சுவரொட்டிகளும் இருந்தன.

அந்த சின்ன ஆசாமி மானுயல்லை பார்த்துண்டே உட்கார்ந்திருந்தான்,

'உன்னை அதுகள் கொன்று போட்டதாகவே நான் நினைத்தேனே' என்றான் அவன்.

மானுயல் தன் விரல் கணுக்களால் சாய்வு மேஜை மீது தட்டினான். அந்த சின்ன மனிதன் சாய்மேஜைக்கு அப்பால் அவனை பார்த்துக் கொண்டே இருந்தான்.

'எத்தனை காரிடா (சண்டை ) இந்த வருஷம் உனக்கு ?' ரெடனா கேட்டான்,

'ஒன்று தான், அவன் பதில் சொன்னான்.

'அந்த ஒன்று தானா?' அந்த சின்ன ஆசாமி கேட்டான்.

'அவ்வளவுதான்.'

பேப்பரில் அதைப்பற்றி படித்தேன்'' என்றான் * ரெடனா. நாற்காலியில் பின் சாய்ந்து மானுயல்லை கூர்ந்து பார்த்தான்.

'திணித்த' காளையை பார்த்தான் மானுயல்.முன்னம் அடிக்கடி அவன் பார்த்திருக்கிறான். அதில் அவனுக்கு குடும்ப அக்கறை உணர்வு ஏற்பட்டது. ஒன்பது வருஷத்துக்கு முன்பு, முன்னுக்கு வந்த தன் சகோதரனை கொன்றது அது. அந்த நாள் மானுல்லுக்கு ஞாபகம் இருந்தது. காளையின் தலை பொருத்தி இருந்த கருவாலி கேடயத்தில் ஒரு பித்தளை தகடு இருந்தது. மானுல்லுக்கு படிக்க முடி யாது, ஆனால் அது தன் சகோதரன் ஞாபகத்துக்கு என்று அவன் பாவித்துக்கொண்டான். ஆமாம், அவன் நல்ல பயலாக இருந்தான்.

தகடு சொன்னது; 'வெரகுவா பிரபுவின் காளை' 'மரிபோஸா' 9 வாராக்களையும் 7 குதிரைகளையும் பார்த்தது. அன்டோனியா கார்றியாவை கொன்றது, நொவில்லரோ, (முன்னுக்கு வந்து சாதிக்க முடியாமல் போனவன்). ஏப்ரல் 27, 1909.

திணித்த காளைத் தலையை அவன் பார்த்துக் கொண்டே இருப்பதை கவனித்தான் ரெடனா.

ஞாயிற்றுக்கிழமைக்கு 'டியூக்' அனுப்பின துகள் எல்லாம் பழி கொண்டாந்துவிடும்,' என்றான் அவன். 'அதுகளின் கால்கள் ரொம்ப மோசம்' கேஃப் (ஹோட்டல் )லே அதைப்பற்றி என்ன பேசிக்கிறார் கள் ? -

'தெரியாது' என்றான் மானுயல். இப்பொத் தான் நான் வந்தேன்'

'ஆமாம்.' என்றான் ரெடனா. 'இன்னும் உன் பையை வைத்துக்கொண்டுதான் இருக்கே.'

பெரிய சாய்மேஜைக்குப் பின் சாய்ந்து கொண்டு அவன் மானுயல்லை பார்த்தான்.

* 'உட்காரு' என்றான் அவன். 'தொப்பியை எடுத்து விடேன்.' மானுயல் உட்கார்ந்தான்; தொப் பியை எடுக்கவும், அவன் முகமே மாறிக் காட்டி' னது. அவன் வெளுத்து தோன்றினான். அவன் தொப்பிக்கு அடியில், துருத்திக் காட்டாதபடி அவன் தலைமேல் தாக்கிக்குத்தி இருந்தபின் னல் அவ னுக்கு ஒரு புது தோற்றம் தந்தது.

'உன்னை பார்க்க நன்றாக இல்லையே' என்றான் ரெடனா.

'இப்பத்தான் ஆசுபத்திரியிலே இருந்து வரேன்'. என்றான் மானுயல்,

'உன் காலையே வெட்டிட்டதாக கேள்விப் பட் டேனே,” என்றான் ரெடனா.

'இல்லை,' என்றான் மானுயல்.' 'அது சரியாகப் போச்சு.'

ரெடனா, சாய்மேஜை முன் சாய்ந்து மானுயல் பக்கம் ஒரு சிகரெட் மரப்பெட்டியை தள்ளினான்.

"சிகரெட் பிடியேன்,'' என்றான் அவன். 'நன்றி '. மானுயல் பற்றவைத்தான்,

* நீ பிடிக்கவில்லை ?' என்றான் அவன் ரெடனாவுக்கு தீக்குச்சியை நீட்டிக்கொண்டே,

'வேண்டாம்,' ரெடனா கையலைத்தான். 'நான் புகைபிடிப்பதே இல்லை.

புகைபிடிக்கும் அவனையே ரெடனா கவனித்தான்,

'ஏதாவது ஒரு உத்யோகம் பார்த்து வேலைக்குப் போகக்கூடாது?' என்றான் அவன்.

"வேலை செய்ய விரும்பவில்லை நான்," என்றான் மானுயல். 'நான் மாடுகளோடே சண்டைபோடு கிறவன்.

'மாடுகளோடு சண்டை போடுகிறவன் எவன் இருக்கிறான் இப்போ ” என்றான் ரெடனா.

'நான் காளைச்சண்டை போடுகிறவன்,' என்றான் மானுயல்.

'ஆமாம். நீ அதிலே இருக்கிறபோது, 'என்றான் ரெடனா.

மானுயல் சிரித்தான். - 

எதுவும் பேசாமல் மானுயல்லையே பார்த்துண்டு இருந்தான் ரெடனா.

'உனக்கு இஷ்டமானால் ஒரு ராத்திரிக்கு ஏற் பாடு செய்கிறேன்,' ரெடனா முன்வந்து சொன்னான்.

'எப்போ' மானுயல் கேட்டான். 'நாளை இரவு.''

'வேறு ஒருவருக்கு பதிலாக நான் இருக்க விரும்பவில்லை' என்றான் மானுயல். அவர்கள் எல்லாம் செத்துப்போனதே இந்த மாதிரி தான். சால்வடார் செத்ததும் அப்படித்தான். தன் விரல் - கணுக்களால் மேஜை மீது தட்டினான்.

'இருக்கிற நிலை இது தான்,' என்றான் ரெடனா,

'அடுத்தவாரம் என்னைப் போடக்கூடாது நீ ? என்றான் மானுயல், -

'உனக்கு சீட்டு விழாது,' என்றான் ரெடனா. 'அவர்கள் கேட்கிறதெல்லாம் லிட்ரி, ருபிட்டோ , லாடோரி. அவர்கள் நல்ல பயல்கள்.'

'எனக்கும் அது கிடைக்கிறதை பார்க்க - வருவார்கள் அவர்கள், என்று மானுயல் நம்பிக்கை யுடன் சொன்னான்.

'இல்லை, வரமாட்டார்கள். நீ யாரு என்கிறதே அவர்களுக்கு தெரியாது.'

'என்னிடம் நல்ல வேலை இருக்கு இன்னும், என்றான் மானுயல்.

'நாளை இரவுக்கு உன்னை போடுகிறேன்,' என்றான் ரெடனா. 'இளம்பயல் ஹெர்னாண்டஸ் கூட வேலை செய்யலாம். இரண்டு நொவில் லோக்களை (பருவத்துக்கு கொஞ்சம் மீறின அல்லது குறைவான வயது காளைகள்)கொல்லலாம்.'

'யாருடைய காளைகள் ?' மானுயல் கேட்டான்.

'எனக்கு தெரியாது. கொட்டத்தில் இருக்கிற சரக்குதான். மிருக வைத்தியர்கள் பகலுக்கு அது மதிக்காததுகளாக இருக்கும்.'

'பதில் ஆளாக நான் இருக்க விரும்பவில்லை,' என்றான் மானுயல்.'

'இந்தா, ஒப்புக்கொள், இல்லை, விட்டு விடு'' என்றான் ரெடனா. காகிதங்களை பார்க்க முன் குனிந்தான். இதற்குமேல் அக்கறை இல்லை அவனுக்கு. ஒரு கணம் மானுயல் அவனிடம் வேண்டிக் கொண்டதும் பழைய நாட்களை அவன் நினைத்துக்கொண்டதும் போய்விட்டது. லாரிட்டாவுக்கு பதில் இவனை போட்டு விடலாம், என்னால் பண சகாயமாக அமர்த்திவிடலாம். மற்றவர்களையும் மலிவாக பிடித்து விடமுடியும். அவனால் கொஞ்சம் இவனுக்கு ஒத்தாசை செய்யலாம் என்று பார்த்தான். அவனுக்கும் ஒரு வாய்ப்பும் கொடுத்திருக்கிறான். இனி அவன் பாடு.'என்ன கிடைக்கும் எனக்கு?' மானுயல் கேட்டான். இன்னமும் அவன் மறுத்துவிடுகிற நினைப்போடேயே விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால், தான் மறுக்க முடியாது என்கிறதும் அவனுக்கு தெரியும்.

ஐம்பது பெஸ்ட்டா (ஸ்பானிய ஃபிராங்க் நாணயம்)' என்றான் ரெடனா. அவன் நினைத்தது ஐந்நூறு. ஆனால் வாய்திறந்ததும் அது . இருநூற்று ஐம்பது என்று சொன்னது.

'வில்லால்ட்டாவுக்கு ஏழாயிரம் கொடுக்கிறாயே நீ ?' என்றான் மானுயல்.

'நீ வில்லால்ட்டா இல்லையே,' என்றான் ரெடனா. 'அது எனக்கு தெரியும்' மானுயல் சொன்னான்.

'அவனுக்கு அடிக்கிறது' என்று ரெடனா விளக்கினான்.

'அது சந்தேகமா” என்றான் மானுயல். எழுந்து நின்றான். 'ரெடனா, முந்நூறாக கொடு!

'சரி, வாங்கிக்கொள்' ரெடனா சம்மதித்தான். ஒரு கடுதாசிக்காக மேஜை டிராயரில் கையிட்டான்.

'இப்போது ஒரு ஐம்பது கிடைக்குமா?1 மானுயல் கேட்டான். - 

'பேஷாக,' என்றான் ரெடனா. தன் பாக்கட் புஸ்தகத்திலிருந்து ஐம்பது பெஸ்ட்டா நோட்டை எடுத்து மேஜைமீது விரித்து வைத்தான்.

மானுயல் அதை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

'குவாட்ரில்லா (காளைச்சண்டை போடுகிற படை) விஷயம் என்ன ? அவன் கேட்டான்.

"இரவு என் கிட்ட வேலை செய்கிற பசங்கள் இருக்கிறார்கள்,'' என்றான் ரெடனா. 'அவர்கள் சரி யான ஆட்கள் தான்.'

'பிகடார்கள் (குதிரை முதுகிலிருந்து காளையை சட்டியால் குத்துபவர்கள்) சமாசாரம் ?' மானுயல் கேட்டான்.

'அதிக ஆள் இல்லை. ரெட்னா ஒப்புக்கொண் டான்.

'ஒரு நல்ல பிக் ('பிகடார்' சுருக்கம்) எனக்கு வேணுமே, மானுயல் சொன்னான்.

'அப்போ அமர்த்திவிடு” என்றான் ரெடனா. 'போய் பிடித்து விடு.'

'இதிலே இருந்தா ?' என்றாள் மானுயல். 'இந்த அறுபது டியுரோவிலே இருந்து (டியுரோ = ஐந்து பெஸ்ட்டா நாணயம்). எந்த குவாட்ரில்லாவுக்கும் நான் பணம் தரப்போகிறதில்லை.'

ரெடனா பேசவே இல்லை, பெரிய மேஜைக்கு அப்பால் மானுயலை பார்த்திருந்தான்,

'ஒரு நல்ல பிக்காவது எனக்கு வேணும் என்கிறது உனக்கு தெரியுமே,'' என்றான் மானுயல்.

ரெடனா எதுவும் பேசவில்லை. தள்ளி இருந்து பார்க்கிற பார்வையாக மானுயல்லை பார்த்தான்.

இது சரியில்லை' என்றான் மானுயல். ரெடனா தன் நாற்காலியில் பின் சாய்ந்து இன்னும் அவனைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தான், எங்கேயோ இருந்து.

'வழக்கமாக உள்ள ‘பிக்குகள் இருக்கிறார்கள்' என்று, தருவதாகச் சொன்னான்.

'எனக்கு தெரியும்' என்றான் . மானுயல், 'உன் வழக்கமான பிக்குகளை எனக்கு தெரியும்.'ரெடனா புன்னகைக்கவில்லை. விஷயம் முடிந்து விட்டதாக மானுவல் அறிந்து கொண்டான். . 'எனக்கு வேண்டியதெல்லாம் ஒரு சீரான இடைநேரம்தான்,' என்று மானுயல் நியாயம் விளக்கி சொன்னான். நான் அங்கே நேரே போகிற போது காளையை குறி பார்க்க சாத்யமாக இருக்கணும் எனக்கு.'

காது கொடுக்காத ஒருவனிடம் அவன் பேசிக் கொண்டிருந்தான்.

'அதிகப்படியாக எதாவது வேணுமானால் போய் அமர்த்து' என்றான் ரெடனா. 'அங்கே வழக்கமான குவாட்ரில்லா (படை) இருக்கும். நீ விரும்புகிற அத்தனை பிக்குகளையும் கொண்டுவா, 'சார் லொட்டா' பத்தரை மணிக்கு முடிந்துவிடும்.'

'ரொம்ப சரி' என்றான் மானுயல். 'நீ அதைப் பற்றி நினைக்கிறது அந்த மாதிரி தான் என்றால்.'

'அந்த மாதிரி தான்,'' என்றான் ரெடனா.

'நாளை இரவு உன்னை பார்க்கிறேன்' என்றான் மானுயல்,

'நான் சரியாக அங்கே இருப்பேன்' என்றான் ரெடனா.

மானுயல் சூட்கேஸை எடுத்துக்கொண்டு வெளியே போனான்.

'கதவை சாத்திவிடு' ரெடனா சொன்னான்.

மானுயல் திரும்பிப் பார்த்தான். ரெடனா ஏதோ கடுதாசிகளை பார்த்தவனாக முன் சாய்ந்து இருந்தான். கிளிக்கிடும்படியாக கதவை, அமுக்கிச் சாத்தினான் மானுயல்.

படி இறங்கி கதவை தாண்டி தெருவின் வெப்ப ஒளிக்குள் சென்றான். தெருவில் உஷ்ணமாக இருந்தது. வெள்ளைக் கட்டிடங்கள் மீது பட்ட வெளிச்சம் கண்களில் பளிச்சென தாக்கி கண்களை உறுத்தியது. இறக்கமான தெருவின் நிழல் பக்கமாகவே 'பியூர்டோ டெல் சோல்'லை நோக்கிச் சென்றான். ஓடுகிற தண்ணீர் மாதிரி நிழல் அடர்ந்தும் குளிர்ந்தும் இருந்தது. ஊடோடும் தெருக்களை கடக்கும்போது வெப்பம் திடுமென வீசி அடிக்கும். தான் கடந்து சென்ற அத்தனை பேரிலும் மானுயல் தனக்கு தெரிந்த யாரையும் பார்க்கவில்லை.

பியூர்டோடெல் சோல்லுக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு கஃபேக்குள் நுழைந்தான்.

கஃபே நிசப்தமாக இருந்தது. ஒரு சிலர் சுவர்ப்பக்க மேஜைகள் மீது உட்கார்ந்திருந்தார்கள். ஒரு மேஜையில் நாலுபேர் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். ஆண்களில் அநேகர் மேஜைமீது தங்கள் மூன் காலி காபி கப்புகளும், மதுக் கோப்பைகளும் இருக்க புகை பிடித்துக்கொண்டு சுவர் ஓரமாக உட்கார்ந்திருந்தார்கள். நீளமான அறை வழியே நடந்து ஒரு சின்ன பின் அறைக்கு சென்றான். மூலையில் ஒருவன் மேஜைமுன் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மானுயல் மேஜைகள் ஒன்றின் முன் உட்கார்ந்தான்,

. ஒரு பரிமாறி நுழைந்து மானுயல் மேஜை அரு கில் நின்றான்.

'ஜூரிட்டோவை பார்த்தாயா ?' மானுயல் அவனை கேட்டான்.

'சாப்பாட்டுக்கு முந்தி அவன் இங்கே இருந் தான்,'' என்றான் பரிமாறி. 'ஐந்து மணிக்கு முன்னாடி திரும்பமாட்டான் அவன்.'

-'கொஞ்சம் காபியும் பாலும் சாதா மதுவும் கொண்டுவா' என்றான் மானுயல்.

ஒரு பெரிய காபி கோப்பையும் மதுக்கோப்பையும் உள்ள ஓரு தட்டுடன் பரிமாறி திரும்பி வந்தான். அவனது இடது கையில் ஒரு பிராந்தி சீசா இருந்தது. சுழற்றி அவைகளை மேஜைமீது வைத்தான். அவன் பின் வந்த ஒரு பையன் நீண்ட பிடி உள்ள பளபளப்பான மூக்குள்ள ஜாடிகளிலிருந்து காப்பியையும் பாலையும் கோப்பைகளில் ஊற்றினான்.

மானுயல் தன் தொப்பியை எடுத்தான். அவன் தலையில் மேலாக குத்தி இருந்த அவனது பின்னலை பரிமாறி கவனித்தான். மானுயல் காப்பி அருகில் உள்ள சின்ன கோப்பையில் பிராந்தியை ஊற்றிக் கொண்டே காப்பி-பையனை பார்த்து கண் சிமிட்டி னான். காப்பி - பையன் மானுயலின் வெளுத்த முகத்தை வியப்புடன் பார்த்தான்.

பரிமாறி, சீசாவை கார்க்கிட்டுக்கொண்டே, 'இங்கே சண்டை போடுகிறீர்களா ?'' என்று கேட்டான்.

'ஆமாம்,'' என்றான் மானுயல். 'நாளைக்கு.'

சீசாவை இடுப்பில் பதித்துப் பிடித்துக் கொண்டே பரிமாறி நின்றான்.

'சார்லி சாப்லின்ஸ்ஸிலேயா ?' அவன் கேட் டான்,

காப்பிப்-பையன் திகைத்து அப்பால் பார்த் தான்.

'இல்லை, சாதாவிலே.'

'சேவ்ஸ்ஸம் ஹெர்னாண்டஸ்ஸம் என்கிறதாக நான் நினைத்தேன், என்றான் பரிமாறி,

'இல்லை, நானும் இன்னொருவரும்.' 'யார்? சேவ்ஸ்ஸா ஹெர்னாண்டஸ்ஸா?? 'ஹெர்னாண்டஸ் என்று நினைக்கிறேன்.' 'சேவ்ள்ஸ்க்கு என்ன ? 'அவன் காயப்பட்டுட்டான்.' 'யார் மூலம் தெரிந்தது உங்களுக்கு ? - 'ரெடனா.'

“ஹெ, லூயி, ' பரிமாறி அடுத்த அறைக்கு கத்தினான். 'சேவ்ஸ்ஸுக்கு "கொகிடா''வாம்.'

சர்க்கரை கட்டிகளின் மேல் காகிதத்தை பிரித்து எறிந்துவிட்டு அவைகளை காப்பிக்குள் போட்டான் மானுயல். கிளறி விட்டான், திதிக்கவும் சூடாகவும், அவன் காலி வயிறு வெதுவெதுப்பாகவும் பிராந்தி யையும் குடித்துத் தீர்த்தான்.

* இன்னொரு கோப்பை இது கொடு,' என்று பரிமாறியை கேட்டான்.

பரிமாறி சீசா கார்க்கை அகற்றி தட்டில் வழிந்து சிதற கோப்பை நிறைய ஊற்றினான். இன்னொரு பரிமாறி மேஜைக்கு முன் வந்திருந்தான். காப்பி-பையன் போய்விட்டான் ,

"சேவ்ஸ்ஸுக்கு படுகாயமா ? இரண்டாவது பரிமாறி மானுயல்லை கேட்டான்,

'எனக்கு தெரியாது,'' என்றான் மானுயல். 'ரெடனா அதை சொல்லவில்லை.'

'அவன் இதுலே எங்கே அக்கறை காட்டப் போகிறான்,'' என்றான் உயரமான பரிமாறி, மானுயல் அவனை இதற்குமுன் பார்த்தது இல்லை. இப் போது தான் அவன் சேர்ந்திருப்பான்."

'இந்த டவுனில் ரெடனா ஆதரவு இருந்தால் நீங்கள் பிழைத்து ஆளாகிவிடுவீர்கள். இல்லை, நீங்கள் பேசாமல் போய் சுட்டுக் கொள்ளலாம்.'

'நீ தான் சொன்னாயே,' உள்ளே வந்திருந்த மற்றொரு பரிமாறி சொன்னான். அப்பவும் நீ சொன்னாய்

'நான் சொன்னேன் என்கிறாயே. நீ சொல்றது சரி தான்.' என்றான் உயரமான பரிமாறி. 'அந்த பறவையைப்பற்றி பேசுகிறபோது நான் என்ன சொல்கிறேன் என்பது எனக்கு தெரியும்.'

'வில்லால்டாவுக்கு என்ன செய்து விட்டான் பாருங்களேன்,'' என்றான் முதல் பரிமாறி.

'அது மட்டும் இல்லை,' என்றான் உயரமான பரி மாறி, மார்சியல் லாலண்டாவுக்கு என்ன செய்து விட்டான் பாருங்களேன், நாசியோனாலுக்கும்.'

“நீ தான் சொல்கிறாயே, பையா, குட்டையான பரிமாறி ஏற்றுச் சொன்னான்.

தன் மேஜைமுன் நின்று பேசும் அவர்களை கவனித்துப் பார்த்தான் மானுயல், தன் இரண்டாவது பிராந்தியையும் அவன் குடித்துவிட்டான். அவர்கள் அவனை மறந்தே விட்டார்கள். அவனைப் பற்றி அக்கறையும் இல்லை, அவர்களுக்கு.

'அந்த ஒட்டகங்கள் கோஷ்டியைத்தான் பாருங்களேன்' என்றான் அந்த உயரமான பரிமாறி. 'இந்தநாசியோனால் நம்பர் இரண்டை எப்போதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?'

போன ஞாயிற்றுக்கிழமை நான் பார்த்தேன், இல்லையா?' என்று முதல் பரிமாறி சொன்னான்.

'அவன் ஒரு ஒட்டகச்சிவிங்கி, குட்டையான பரிமாறி சொன்னான். '

'நான் சொன்னோனா இல்லையா?' என்றான் உயரமான பரிமாறி, 'ரெடனா பசங்கள் அவர்கள்.'

'இதோ பாரு, இன்னொரு கோப்பை கொடு,' என்றான் மானுயல். அவர்கள் பேசியபோது அந்த பரிமாறி தட்டில் சிதறவிட்டிருந்த பிராந்தியை ஊற்றிக் குடித்திருந்தான் அவன்,

முதல் பரிமாறி கோப்பை நிறைய பழக்கப்படி ஊற்றினான். மூவரும் பேசிக்கொண்டே அறையை விட்டு போய்விட்டார்கள்.

தள்ளின மூலையில் தலை பின் பக்கமாய் சுவரில் சாய உள்ளிழுக்கும் மூச்சின்போது லேசான குறட்டையுடன் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான் அந்த மனிதன்.

மானுயல் தன் பிராந்தியை குடித்தான். அவனுக்கும் தூக்கம் வந்தது. டவுனுக்குள் போகப் பார்த்தால் கடும் உஷ்ணம். தவிரவும் செய்வதற்கும் எதுவும் இல்லை. அவன் ஸரீட்டோவை பார்க்க விரும்பினான். அவன் காத்துக்கொண்டு இருக்கிற போது தான் தூங்கப்போகலாம். அங்கே தான் இருக்கிறதா என்று நிச்சயித்துக்கொள்ள மேஜைக்கு அடியில் இருந்த சூட்கேஸை எட்டி உதைத்தான். ஒருவேளை, ஆசனத்துக்கு அடியில் ஒட்டி அதை வைத்தால் நல்லது. குனிந்து அதை உள்ளே தள்ளினான். பிறகு மேஜை முன் சாய்ந்து தூங்கப் போனான்.

அவன் விழித்தபோது யாரோ ஒருவன் அவன் மேஜைமுன் எதிர்ப்பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். இந்தியன் (சிவப்பு இந்தியன்) மாதிரி அழுத்தமான பழுப்பு முகம் உள்ள ஒரு பருமனான ஆள் அவன். கொஞ்ச நேரமாக அவன் அங்கே உட்கார்ந்து இருக்கிறான். பரிமாறியை போகச்சொல்லிவிட்டுபத்திரிகையை படித்துக்கொண்டும் மேஜை மீது தலைவைத்து தூங்கும் மானுயல்லை இடையிடையே கவனித்துக்கொண்டும் உட்கார்ந்திருந்தான். பத்திரிகையை படிக்கிறபோது வார்த்தைகளை உதடுகளால் உருவாக்கிக்கொண்டு சிரமப்பட்டு படித்தான். அது அலுக்கும்போது மானுயல்லை பார்த் தான். அவன் கருப்பு 'கார்டொபா' தொப்பி முன் தணிய நாற்காலியில் பதிந்து உட்கார்ந்திருந்தான்.

மானுயல் நிமிர்ந்து உட்கார்ந்து அவனை பார்த்தான்,

"ஹெல்லோ, ஜூரிட்டோ ,' என்றான் அவன். 'ஹெல்லோ , பையா,' என்றான் பருமனானவன்.

"தூங்கிவிட்டேன்.' தன் உள்ளங்கையால் நெற்றியை மானுயல் தேய்த்துக்கொண்டான்.

'நீயாக இருக்கலாம்னு தான் நினைத்தேன்.' 'எல்லாம் எப்படி இருக்கு?' 'சரியாகத்தான். உன் விஷயம் என்ன ? 'அவ்வளவு சரியாக இல்லை.'

இருவரும் மவுனமாக இருந்தார்கள், பிடார் ஜூரிட்டோ மானுவல்லின் வெளிறிய முகத்தை கவனித்தான். தன் பாக்கெட்டில் பத்திரிகையை வைக்க மடிக்கும் பிகடாரின் படலான கைகளை மானுயல் கூர்ந்து பார்த்தான்,

'உன்கிட்ட ஒரு ஒத்தாசை கேட்கலாம்னு இருக்கிறேன் மனோஸ்' என்றான் மானுயல்.

மனோள்டுரோஸ் ஜூரிட்டோவின் செல்லப் பெயர், அவனது தடித்த கைகளை நினைக்காமல் அவன் அதை காதில் போட்டுக்கொண்டதில்லை. சுய பிக்ஞையுடனே மேஜை மீது அவைகளை வைத்தான்,

''ஒரு கோப்பை குடிக்கலாம்,' என்றான் அவன்.

'நல்லா' என்றான் மானுயல்,

பரிமாறி வந்து, போய், திரும்பிவந்தான். மேஜைமுன் இருந்த இருவரையும் திரும்பிப் பார்த்து விட்டு அவன் போய்விட்டான்.

“என்ன விஷயம் மானலோ ?' கோப்பையை வைத்துக்கொண்டே கேட்டான்.

'நாளை இரவு எனக்காக இரண்டு மாடுகளுக்கு 'பிக்' (குதிரைமீது இருந்து ஈட்டியால் குத்துவாயா) பண்ணுவாயா ?' மேஜைக்கு எதிரே இருந்த ஜூரிட்டோவை பார்த்துக் கேட்டான் மானுயல்.

'ஹுஹும்' என்றான் ஜூரிட்டோ . 'நான் பிக் பண்ணுகிறதில்லை.'

மானுயல் கோப்பையை பார்த்தான். இந்த பதிலை அவன் எதிர்பார்த்தவன் தான். கிடைத்து விட்டது, ஆமாம் கிடைத்து விட்டது,

'மன்னித்துக் கொள் மானலோ, நான் பிக் பண்ணுகிறதில்லை,' ஜூரிட்டோ தன் கைகளை பார்த்துக் கொண்டான்.

''சரி, இருக்கட்டும்', என்றான் மானுயல்.

'ரொம்ப வயதாச்சு எனக்கு'. ஜூரிட்டோ சொன்னான்.

'கேட்டுப் பார்த்தேன்' என்றான் மானுயல். * இரவு மாட்டுச் சண்டை நாளைக்கா?' 'ஆமாம். ஒரு நல்ல பிக் இருந்தால் சமாளித்துடலாம்னு பார்த்தேன்.'

'உனக்கு என்ன கிடைக்கும் ?' 'முந்நூறு பெஸ்ட்டா : 'பிக் செய்கிறதுக்கே அதுக்கு அதிகமாக கிடைக்குமே எனக்கு.'

'தெரியும் எனக்கு' என்றான் மானுயல். 'உன்னை கேட்க எனக்கு வாய் இல்லைதான்.'

'இன்னும் எதுக்கு இதெல்லாம் உனக்கு ?' ஜூரிட்டோ கேட்டான். 'உன் பின்னலை, ஏன் நீ வெட்டி எறிந்து விடக்கூடாது, மானலோ?'

'உனக்கு தெரியாது.' என்றான் மானுயல்.

'கிட்டத்தட்ட என் வயசு ஆச்சே உனக்கு.! ஜூரிட்டோ சொன்னான்.

'எனக்குத் தெரியாது' என்றான். மானுயல். 'செய்யவேண்டி இருக்கு. இதை அமர்த்தி, ஒத்த -: இடைவேளையும் கிடைத்தால் - அது தான் எனக்கு வேண்டியது. நான் இதைவிட முடியவில்லை மனோஸ்.'

"இல்லை, நீ விட்டு விடணும்.'

'ஆமாம், விலகி இருக்கத்தான் முயற்சி பண்ணிப் பார்த்தேன்.'

'உன் மனசு படுவது எனக்குத் தெரியும். ஆனால் இது சரி இல்லை. நீ வெளியேறி விடணும். இறங்கக் கூடாது.'

"இயலாதே. தவிரவும் இப்பல்லாம் திறமாக சமாளிக்கிறேனே.'

ஜூரிட்டோ அவன் முகத்தைப் பார்த்தான். 'ஆசுபத்திரியிலே வேறே இருந்திருக்கிறாய்.' 'குத்துப்பட்டபோது திறமையாக வேலை காட்டி

ஜூரிட்டோ எதுவும் பேசவில்லை. தட்டில் இருந்த 'சாக்னக்' (பிரஞ்சு பிராந்தி)யை கோப்பை யில் ஊற்றினான்.

'அதைவிட நல்ல ஃபெய்னாவை (சண்டை ) பார்த்ததே இல்லைன்னு பத்திரிகைகள் எழுதினதே.'

ஜூரிட்டோ அவனையே பார்த்தான்,

'நான் சுதாரிக்கிறபோது சரியாக இருப்பேன் என்கிறது தான் உனக்கு தெரியுமே.'

'உனக்கு ரொம்ப வயதாச்சு , என்றான் பிகார், . 'இல்லை' என்றான் மானுயல். 'என்னை விட பத்து வயது பெரியவன் நீ,

'என் விஷயம், வேறே.' . 'எனக்கு அவ்வளவு வயதாகவில்லை, என்றான் மானுயல்.

மவுனமாக அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள் -மானுயல் பிகடாரின் முகத்தை கவனித்துக்கொண்டு.

'குத்துப்படுகிறவரை நான் நல்லா வேலை காட்டினேன்' என்றான் மானுயல்.

'என்னை நீ பார்த்து இருக்கணும் மனோஸ்' என்றான் மானுயல் அவனை கடிந்துரைத்து.

'உன்னை பார்க்கவே விரும்பவில்லை நான் என்றான் ஜூரிட்டோ ,

'எனக்கு நடுக்கமாக இருக்கு.' ' நீ என்னை சமீபத்தில் பார்க்கவில்லை.'' 'உன்னை நிறைய பார்த்திருக்கிறேன்'.

ஜூரிட்டோ மானுயல்லை பார்த்தான், அவன் கண்களை தவிர்த்துக் கொண்டு,

'நீ இதை கைகழுவிடணும் மானலோ.'

'முடியாது' என்றான் மானுயல். 'இப்போ நல்லா போகிறேன்னு நான் சொல்கிறேன்.'

கைகள் மேஜைமீது இருக்க ஜூரிட்டோ முன் குனிந்தான்.'கேள், உனக்கு நான் பிக் பண்ணுகிறேன். நாளை இரவு நீ நன்றாக போகவில்லை, வெளியேறி விடுவாய் ! செய்வாயா?' , நிச்சயம்', -

மனச்சடைவு நீங்கி ஜூரிட்டோ பின் சாய்ந் தான்.

நீ வெளியேறித்தான் ஆகணும்,' என்றான் அவன். 'எத்து வேலை வேண்டாம். பின்னலை வெட்டி ஆகணும்.

'நான் வெளியேறவே ஏற்படாது', என்றான் மானுயல். 'என்னை இருந்து பாரு. என்கிட்ட சரக்கு இருக்கு.'

ஜூரிட்டோ எழுந்தான். விவகாரம் செய்து அலுத்து விட்டது அவனுக்கு.

நீ வெளியேறித்தான் ஆகணும்' என்றான் அவன். 'நானே உன் பின்னலை வெட்டி விடுவேன்.'

'இருக்காது, மாட்டாய்,' என்றான் மானுயல்.' 'உனக்கு அதுக்கு வாய்ப்பு கிட்டாது.'

ஜூரிட்டோ பரிமாறியை கூப்பிட்டான்.

* வா போகலாம் என்று அழைத்தான் ஜூரிட்டோ சாப்பாட்டு விடுதிக்கு.

"மானுயல் பெட்டிக்காக ஆசனத்துக்கு அடியில் கையிட்டான். அவனுக்கு மகிழ்ச்சி. ஜூரிட்டோ தனக்கு பிக் பண்ணுவான் என்பது அவனுக்கு தெரியும். இருக்கிறவர்களில் சிறந்தவன் அவன். விஷயம் சுளு வாகி விட்டது.

'சாப்பாட்டு விடுதிக்குப் போய் சாப்பிடலாம் வா' என்றான் ஜூரிட்டோ ,

-"மானுயல் 'சார்லி சாப்லின்ஸ்' முடிவதற்கு ஃபேஷியோடி கெபல்லோவில் காத்து நின்றிருந் தான். ஜூரிட்டோ 'அவன் அருகில் நின்றான். அவர்கள் நின்ற இடம் இருண்டு இருந்தது. மாட்டுச் சண்டை கோதாவுக்கு (வாடிவாசல்) இட்டுச் செல்லும் உயரமான கதவு மூடி இருந்தது. அவர்கள் தலைக்கு மேலே ஒரு கத்தல், பிறகு சிரிப்புக் கூப்பாடு கேட்டது. அப்புறம் நிசப்தம், பேஷியோடி கபெல்லோ பக்கத்து கொட்டங்களின் வாசனையை மானுயல் விரும்பினான். இருட்டில் மணம் நன்றாக இருந்தது. அரீனா (கோதா வட்டம்) விலிருந்து இன்னொரு கூப்பாடு, பிறகு கைதட்டல் . நீடித்த கை தட்டல் தொடர்ந்து கேட்டது.

'இந்த பயல்களை நீ பார்த்திருக்காயா?' இருட் டில் மானுயல் அருகில் பருமனாயும் மங்கலாயும் நின்ற ஜூரிட்டோ கேட்டான்.

''இல்லை' என்றான் மானுயல்.

ரொம்ப வேடிக்கையான பயல்கள், என்றான் ஜூரிட்டோ . இருட்டில் தனக்குள் சிரித்துக் கொண்டான்,

சண்டை மைதானத்துக்கு செல்லும் உயரமான இறுக்கமான இரட்டைக் கதவு வீசித் திறக்கவும் மின்சார விளக்குகளின் கண் கூசும் வெளிச்சத்தில் சுற்று வழி எல்லாம் இருட்டாக இருக்க, பிளாஸா (சண்டை மைதானம்) உயர்ந்து தெரிவதை மானுயல் கண்டான். சண்டை மைதானத்தின் விளிம்பு ஓரமாக ஊர் சுற்றிகள் மாதிரி உடை அணிந்த இருவர் வணங்கியும் ஓடிக்கொண்டும் இருந்தார்கள். அவர்களுக்குப்பின், மணலில் எறியப்பட்ட (தொப்பிகளையும் பிரம்புகளையும் பொறுக்கி இருட்டில் திரும்பபையன். மேலே எறிந்து கொண்டிருந்த, ஒரு ஹோட்டல் பையன் உடை அணிந்த மூன்றாமவன் தொடர்ந்து கொண்டிருந்தான்,

முற்றத்தில் எலக்டிரிக் வெளிச்சம் ஏற்றப் பட்ட து.

'ஏதாவதொரு குதிரை பார்த்து ஏறிக்கொள்கிறேன்; அதுக்கு இடையில் நீ பயல்களை திரட்டு, என்றான் ஐரிட்டோ .

அவர்களுக்குப் பின்னாடி, அரீனாவுக்குள் போய் செத்த காளையை இழுத்துச்செல்ல வரும் கோவேறு கழுதைகளின் கிணுங்கல் சப்தம் கேட்டது. ஆசனங்களுக்கும் பெரிராவுக்கும் (கோதாவைச் சுற்றிய வட்டத்து பலகை அடைப்பு) இடையே நடபாதை யில் நின்று தமாஷ் ஆட்டத்தை பார்த்துக் கொண் டிருந்த 'குவாட்ரில்லா' ஆட்கள் நடந்து வந்து முற் றத்து வெளிச்சத்தில் கோஷ்டியாக பேசி நின்றார்கள். வெண்மையும் ஆரஞ்சுமான சூட் அணிந்த ஒரு நல்ல தோற்ற வாலிபன் மானுயல்லிடம் வந்து புன்னகைத்தான்,

'நான் தான் ஹெர்னாண்ட்ஸ்', என்று சொல்லி கைகொடுக்க முன் வந்தான்.

மானுயல் கைகுலுக்கினான்.

"இன்றிரவு நமக்கு வாய்த்தது யானைகளாக்கும்' என்று பையன் சொன்னான்,

'கொம்பு உள்ள பெரிசுகள் தான்' என்று மானுயல் ஆமோதித்தான்.

'உங்களுக்கு விழுந்தது மகாமோசம்' என்றான் 'ரொம்ப சரி' என்றான் மானுயல். 'பெரிசாக இருக்கிறதுக்கு தக்கபடி ஏழைகளுக்கு நிறைய இறைச்சி.'

'அந்த ஒரு ஆள் எங்கே இருந்து கிடைத்தது.' ஹெர்னாண்டஸ் இளித்தான்.

'அது பழைய ஆள்,' என்றான் மானுயல். 'நீ குவாட் எல்லாவை ஒழுங்குபடுத்தும். எப்படி அமைந்திருக்கு எனக்கு என்று அப்போது தான் தெரியும்.'

* நல்ல பயல்கள் இருக்கான் உங்களுக்கு. என் நான் ஹெர்னாண்டஸ். அவன் ரொம்ப உற்சாகமாக இருந்தான். முந்தி இரண்டு தடவை அவன் இராச் சண்டை போட்டிருக்கிறான். மாட்ரிட்டில் அவனுக்கும் ஆதரவு கிடைக்க ஆரம்பித்து இருந்தது. ஐந்து நிமிஷத்தில் சண்டை ஆரம்பிக்கப் போகிறதில் அவனுக்கு சந்தோஷம்.

' 'பிக்குகள் எங்கே?' மானுயல் கேட்டான்.

கொட்டத்துக்குப் போய் நல்ல குதிரைக்காக அடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஹெர்னாண்டஸ் இளித்துச் சொன்னான்.

சவுக்குகள் கொடுக்க, மணிகள் கிணுகிணுக்க கோவேறு கழுதைகள் வாசல் வழியே அடித்தோடி வந்தன. இளம் காளை மணல் உழுது சால் விட்டு வந்தது,

'காளை போன அப்புறம் 'பாஸியோ'வுக்கு அவர்கள் தயாரானார்கள்.

மானுவல்லும் ஹெர்னாண்டஸ்ஸும் முன் நின்றார்கள். குவாட்ரில்லா' படை வாலிபர்கள் தங்கள் கெட்டியான கேப்களை (உள்புறம் மஞ்சள், வெளிப்பக்கம் லேசான சுத்த செகப்பு நிறமுள்ள, விடைப்பான கெட்டிக்கரை போட்ட காலருடன் கூடிய ஒரு பக்கம் பட்டாலும் மறுபக்கம் நெறுக்கி நெய்த .பிரஞ்சு லன்னாலும் ஆன ஒரு உருவாக்கின் படுதா) புஜங்கள்மீது மடித்துவைத்துக்கொண்டு பின் நின்றார்கள். பின்னால் நான்கு பிகடார்கள் அரை இருட்டான கொரல்லுக்குள் (உள்கொட்டம் எஃகு முனையுள்ள ஈட்டிக்கம்புகளுடன் குதிரை கள் மீது ஏறி இருந்தார்கள்.

'குதிரைகளை பார்க்கக்கூட ரெடனா போதுமான வெளிச்சம் விடாது தான் அதிசயம்,'' என்றான் ஒரு பிகடார்.

'இந்த தோல் உருவங்களை நாம் சரியாக பார்க்காவிட்டாலே சந்தோஷப் படுவோம் என்கிறது அவனுக்கு தெரியும்,'' என்றான் மற்றொரு பிக்,

'நான் ஏறி இருக்கிற இது நிலைக்கவிட மாட்டேன்கிறதே,' என்றான் முதல் பிகடார்.

'இந்தா, அதுகள் குதிரைகள்!' 'சந்தேகமா, குதிரைகளே தான்.'

இருட்டில், தொத்தலான குதிரைகளில் உட் கார்ந்து அவர்கள் பேசினார்கள்.

ஐரிட்டோ எதுவும் பேசவில்லை. அத்தனையி லும் நிதானமான ஒரே குதிரை அவனுக்கு கிடைத்திருந்தது. கொரல்லுக்குள்ளேயே அதை சுற்ற விட்டு நோட்டம் பார்த்திருந்தான். கடிவாளத்துக்கும் குதிமுள்ளுக்கும் அது மசிந்து கொடுத் தது. அதன் வலது கண் பட்டையை எடுத்து விட்டு மண்டைத் தட்டில் காதுகளை இறுக்கி கட்டி இருந்த நூலை வெட்டிவிட்டான். அது நல்ல உரமான குதிரை. கால்களில் நல்ல உரம். அவனுக்கு வேண்டியது எல்லாம் அதுதான். காரிடா (ஜல்லிக் கட்டு) முழுதுக்கும் அது மேலேயே சவாரி செய்ய அவன் உத்தேசித்து இருந்தான். ஏற்கெனவே, அரை- இருட்டில் குதிரைமீது ஏறி, பெரிய மெத்தை இட்ட சேணத்தின் மீது உட்கார்ந்தது முதலே 'பேஸியோ'வுக்காக காத்து மானசீகமாகவே முழு காரிடாவுக்கும் பிக் பண்ணிவிட்டான். அவனுக்கு இருபக்கத்திலும் மற்ற பிகடார்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சை கவனிக்கவே இல்லை அவன்.


இரண்டு மாட்டடார்களும் (காளையுடன் போரிடுபவர்கள்) தங்கள் மூன்று பியோன்களுக்கு (காளைகள் திமில் மீது பாண்டிரில்லாக்கள் என்ற கிடுக்கி ஈட்டிகளை பாய்ச்சி, ஆட்டம் காட்டி மாட்டடார்களுக்கு உதவ அவர்களால் அமர்த்தப்பட்டவர்கள்), முன்னால், அதேமாதிரி தங்கள் இடது புஜங்கள்மீது கேப்கள் மடித்து இருக்க சேர்ந்து நின்றார்கள். தனக்குப் பின் நின்ற மூன்று வாலிபர்களைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தான் மானுயல். அந்த மூவரும் ஹெர்னாண்டஸ் மாதிரி மாட்ரினோக்கள், சுமார் பத்தொன்பது வயது பயல்கள், அவர்களில் ஒரு.வனான மனம் ஆழ்ந்த, ஒதுங்கிநின்ற, முகம் கறுத்த ஜிப்ஸியை அவனுக்கு பிடித்தது. திரும்பினான்,

'உன் பெயர் என்ன பையா? ஜிப்ஸியை கேட் டான் அவன்.

'ஃபியூயன்டிஸ்' ஜிப்ஸி சொன்னான். 'நல்ல பெயர் அது' என்றான் மானுயல். ஜிப்ஸி பல் தெரிய சிரித்தான்.

'காளை வெளியேறினதும் நீ எடுத்துக்கொண்டு போய் கொஞ்சம் ஓட்டம் காட்டு,' என்றான் மானுயல்,

'ஆகட்டும்,' என்றான் ஜிப்ஸி. அவன் முகம்.ஆழ்ந்து இருந்தது. தான் என்ன செய்யணும் என்கிறதைப்பற்றி அவன் நினைக்க ஆரம்பித்தான்.

'இதோ புறப்பட்டாச்சு,' என்றான் மானுயல் ஹெர்னான்டஸ்ஸிடம்.

'சரி, நாமும் போவோம்.' தலை நிமிர்ந்து, வாத்ய முழக்கத்துக்கு வீசியவாறு, வலது கைவீசி அலைக்க வெளியேறி 'ஆர்க்-லைட்'டுகளுக்கு அடியில் மணல் பரப்பின அரீனாவை கடந்து சென்றார்கள், பின்னால் குவாட்ரில்லாக்கள். அதன் பின் குதிரைமீது பிகடார்கள், அதற்கும் பின் சண்டைக்கள பணியாட்களும் கிணுகிணுக்கும் கோவேறு கழுதைகளும், அரீனாவை கடந்து வரிசையிட்டுச் சென்றபோது கூட்டம் ஹெர்னான்டஸ்ஸை கொண்டாடியது. பெருமிதத்துடன், வீசிக்கொண்டு பவனிபோனபோது நேர் எதிரே பார்த்தார்கள்.

பிரசிடெண்டுக்கு முன் அவர்கள் வணங்கினார்கள். ஊர்வலம் பிரிவுகளாக பிரிந்தது. காளைச் சண்டைக்காரர்கள் பெரீராவுக்குப்போய் தங்கள் கனமான மேலங்கிகளை கழற்றி லேசான 'கேப்'களை எடுத்துக்கொண்டார்கள். கோவேறு கழுதைகள் வெளியேறிவிட்டன. பிகடார்கள் தத்தின காலப்பில் கோதாவட்டத்தை சுற்றி வந்து, இருவர், கிட்ட வந்த வாசல் வழியே போய்விட்டார்கள். பணியாட்கள் மணலை சீராக பரப்பினார்கள்.

மானுயல், அவனுக்காக மானேஜராகவும் வாள் வைத்திருப்பவனாகவும் வேலைபார்த்த ரெடனாவின் ஆட்கள் ஒருவனால் ஊற்றப்பட்ட தண்ணீரை குடித்தான், தன் - மானேஜரிடம் பேசிக்கொண்டிருந்ததை விட்டு ஹெர்னாண்டஸ் அவனிடம் வந்தான்.

'உன் கை நல்ல கை, பையா' என்று மானுயல் அவனை பாராட்டினான். - ' என்னை விரும்புகிறார்கள்,' என்றான் ஹெர்னான்டன் மகிழ்ச்சியுடன்

'பாலியோ (அணி வகுப்பு), எப்படி ? ' ரெடனா ஆட்களை மானுயல் கேட்டான்.

'கல்யாணம் மாதிரிதான்,'' என்றான் மானேஜர். 'பிரமாதம், ஜாஸிலிட்டோ , பெல்மாண்டி. மாதிரி இருந்தது நீங்கள் வந்தது.'

ஜூரிட்டோ சவாரி வந்தான். ஒரு தாட்டியான குதிரை சவாரிக்காரன் சிலை மாதிரி, தன் குதிரையை சுழற்றித் திருப்பி, காளை வெளியேறும், கோதாவின் மறுகோடியில் உள்ள டோரில் (உள் சங்கு வாடி)லுக்கு நேராக நிறுத்தினான். 'ஆர்க் லைட் வெளிச்சத்தில் அவனுக்கு விசித்திரமாக இருந்தது. பெரும் தொகைக்கு உஷ்ணமான பிற்பகலில் அவன் பிக் பண்ணி இருக்கிறான். இந்த விளக்கு வெளிச்சவேலை அவனுக்கு பிடிக்கவில்லை, ஆரம்பித்து விட்டால் தேவலை என்று விரும்பினான்,

மானுயல் அவனிடம் சென்றான்.

'பிக் பண்ணிவிடு(ஈட்டியால் குத்திவிடு )மனோஸ், என்றான் அவன், 'எனக்கு அளவாக நிற்க அவனை கிறங்க வைத்து விடு.'

அதெல்லாம் பிக் பண்ணி விடுகிறேன், பையா.' ஐரிட்டோ மணலில் துப்பினான். 'கோதாவை விட்டே எம்பிக் குதிக்கவைக்கிறேன் அவனை.

'அவன் மேலேயே சாய்ந்துவிடு, 'மனோஸ்,' என்றான் மானுயல்.

'சாய்ந்தே விடுகிறேன்,'' என்றான் ஜூரிட்டோ. 'எது தடுக்கப்போகுது?'''இதோ வரப்போகிறான்,'' என்றான் மா னுயல் ,

பாதங்கள் மிதிவளையத்தில் பதிய, மான் தோல் கவசம் அணிந்த தாக்கான கால்கள் குதிரையை கவ்விப் பிடிக்க, இடது கையில் கடிவாளமும் வலது கையில் நீண்ட ஈட்டியுமாக வெளிச்சத்திலிருந்து கண்களை மறைக்க அகலமான தொப்பி கண்ணுக்குக் தழைய, டோரில்லின் தள்ளி இருந்த கதவை கவனித்து உட்கார்ந்து இருந்தான் ஜூரிட்டோ, அவன் குதிரையின் காதுகள் துடித்தன. இடது கையால் அதை ஐரிட்டோ தட்டிக் கொடுத்தான்,

டொரில் சிவப்புக் கதவு வீசித் திறந்தது. ஒரு விநாடி ஐரிட்டோ அரீனாவைத் தாண்டி இருந்த வெறுமையான அந்த நடைபாதைக்குள் கூர்ந்து பார்த்தான். காளை பாய்ந்து வந்தது. விளக்குகள் அடியில் வரவும், நாலு காலிலும் சறுக்கி வருகிற மாதிரி. பிறகு காலப் எடுத்து தாக்கியது. வேகமான தவ்வா ளி போட்டு தடைபடாமல் நகர்ந்தது. இருட்டுத் தொழுவத்திலே இருந்து விடுபட்ட மகிழ்ச்சியுடன் தாக்கிப் பாய்ந்தபோது அகன்ற நாசிகள் வழியாக அது மூச்சு உதறினதைத் தவிர மற்றப்படி அமைதியாக.

முதல் ஆசன வரிசையில் கொஞ்சம் சலிப்படைந்து முழங்காலுக்கு முன் இருந்த சிமிண்டு சுவரில் எழுத முன் குனிந்த “எல்ஹெரால்டோ' பத்திரிகை காளைச்சண்டை விமர்சகர் எழுதினார். 'காம்பெக்னரோ, நீக்ரோ ஒரே ஆர்ப்பாட்டத்துடன் 90 மைல் வேகத்தில் வந்தது ....' '

அடைப்பு பலகை மீது சாய்ந்து காளையை கவனித்து இருந்த மானுயல் தன் கையை அலைத்தான். ஜிப்ஸி தன் கேப் புரள முன் ஓடினான். காளை முழு காலப்பில் சுழன்று தலை தணிய வால் எழும்ப கேப்பை தாக்கியது. ஜிப்ஸி திருகலாக ஓடினான். அவன் தாண்டிப் போகவும் காளை அவனைக் கண்டு, கேப்பை விட்டுவிட்டு ஆளைத் தாக்கியது. ஜிப்ஸி ஒரே ஓட்டமாக பெரிராவின் சிவப்பு வேலிப் பலகையை தாண்டி குதித்துவிட்டான். காளை அடைப்புப் பலகையை கொம்புகளால் அடித்தது. இரண்டு தரம் கொம்பை அலைத்து குத்தி, குருட்டுத்தனமாக பலகையில் மோதி யது.

எல்ஹெரால்டோ ' விமர்சகர் - சிகரெட் கொளுத்தி தீப்பெட்டியை காளையை நோக்கி எறிந்துவிட்டு தன் நோட்புக்கில் எழுதினார். 'பெரி சாகவும் பணம் கொடுக்கும் வாடிக்கைக்காரர்களை திருப்தி செய்யத்தக்க கொம்புகளுடன் காம்பக்னரோ காளைப் போர்க்காரர்கள் அரணையே பிளந்து நுழைகிற போக்கை காட்டியது.'

காளை பலகைவேலியை முட்டுகிறபோது மானுயல் மணலுக்குள் இறங்கினான். கோதா சுற்றுக்கு கால் வழியில் இடதுபக்கம் பெரீராவை ஒட்டி வெள்ளைக் குதிரையை ஜூரிட்டோ நிறுத்தி இருப்பதை ஓரக்கண்ணால் பார்த்தான் அவன். அவனுக்கு முன் நெருங்கி, இருகைகளிலும் விரும்பு மடித்துக் கொண்டு, மானுயல் கேப்பை தூக்கிப் பிடித்து காளையை பார்த்து கூவினான். 'ஹ! ஹ !' காளை திரும்பினது. கேப்பை நோக்கி, பாய்ந்து தாறுமாறாக அது தாக்கின போது பலகை வேலியை உரசினமாதிரி இருந்தது மானுயல் அட்டத்தில் விலகி காளை தாக்கவும் குதிங்காலால் சுழித்து திரும்பி அதன் கொம்புகளுக்கு முன்னால் கேப்பை வீசினான்.வீசி நிறுத்தவும் அதே போல தன் உடலோடு ஒட்டி கேப்பை பிடித்துக்கொண்டு மறுபடியும் காளையை எதிர்த்து நின்றான். காளை மறுபடியும் தாக்கவும் சுழித்துக்கொடுத்தான். அவன் வீசிய ஒவ்வொரு தடவையும் கூட்டம் ஆர்ப்பரித்தது. நாலுதரம் அவன் காளையோடு சுழன்றான், கேப்பை தூக்கிப் பிடித்துக்கொண்டு. அது முழுமூச்சாக அலை அடிச்சாப்லே வந்தது. ஒவ்வொரு தடவையும் காளை மறுபடியும் தாக்க நிகழச் செய்தான். ஐந்தாவது வீச்சில் கேப்பை அவன் இடுப்போடு ஒட்டிப்பிடித்து சுழன்றான். கேப் ஒரு பாலட் நாட்டியக்காரி பாவாடை மாதிரி விசிறினது. ஒரு பெல்ட்மாதிரி காளை தன்னை சுற்றவிட்டான், அடி விலகி நின்றான், வந்து நிலை ஊன்றி வெள்ளைக்குதிரை மீது இருந்த ஜூரீட்டோவுக்கு எதிரே காளையை நிற்கவைத்து. குதிரை காளைக்கு நேராக, காதுகள் முன் விடைத்து, உதடுகள் நடுங்க. கண்களுக்கு மேலாக தொப்பியுடன், ஜூரிட்டோ முப்பட்டை வேல் எஃகு முனை காளையை நோக்க அவன் வலது கையில் ஒரு கோணத்தில் நீளமான வேல்கம்பு முன் நீண்டு இருக்க பாதியில் இறுக்கிப் பிடித்து முன் சாய்ந்து இருந்தான்.

எல் ஹெரால்டோ விமர்சகர் சிகரெட்டை எடுத்துக்கொண்டு காளைமீது கண்பதித்தவாறே எழுதினார். 'மகா வேலைக்காரன் மானலோ ஏற்கத்தக்க வேறோனிக்காக்கள் (கேப் படுதாவைக் காட்டி காளை தன்னை நெருங்கிவரச் செய்து, குத்துப்படாமல் சமாளித்து, வேலை காட்டுவது) தொடர்ச்சியாக வேலைகாட்டினான், பெல்மாண்டி பாணி முத்திரை விழுந்தது. கடைசியில் ரசிகர்களிடம் நல்ல கரகோஷம் வாங்கினான். இனி குதிரைக்காரன் வேலை நடக்கப்போகிறது.'

காளைக்கும் வேல்கம்பு முனைக்கும் உள்ள தூரத்தை அளவிட்டு குதிரைமீது உட்கார்ந்திருந் தான் ஜூரிட்டோம். அவன் பார்க்கையிலேயே, காளை தன்னை சரிப்படுத்திக்கொண்டு குதிரையின் மீது குறியாக பாய்ந்தது. குத்த அது தலையை தணிக்கவும் காளையின் முதுகுக்கு மேலாக விம்மிப் புடைத்த திமில் மீது ஈட்டிமுனையை பாய்ச்சினான் ஜூரிட்டோ , தன் முழுகனத்தையும் சாய்ந்து அந்த வேல் மீது ஏற்றினான். தன் இடது கையில் வெள்ளைக் குதிரையை இழுத்து உயரே கிளப்பினான், அதன் முன் குளம்புகள் உயரே அலைக்க. காளையை மறுபுறம் குத்தித் தள்ளுகிறபோதே குதிரையை பக்கம் வீசித் திருப்பினான். எனவே கொம்புகள் குதிரையின் வயிற்றுக்கு அடியில் குத்தாமல் போய் விட்டன. குதிரை பதறலுடன் கீழே இறங்கியது. அப்போது ஹெர்னாண்டஸ் (பராக்கு காட்டி) காட்டின கேப்பை தாக்கின காளையின் வால் அதன் நெஞ்சில் வீசி அடித்தது ,

கேப்போடேயே காளையை கூட்டிக்கொண்டு ஹெர்னாண்டஸ் அட்டத்தில் ஓடினான், மற்ற பிகடாரை நோக்கி. கேப்பை ஒரு தரம் வீசி அது குதிரைக்கும் சவாரிக்காரனுக்கும் நேர் எதிரே நிற்க வைத்து விட்டு தான் பின்னடித்து விட்டான். குதிரையை பார்க்கவும் காளை பாய்ந்தது. பிகடாரின் ஈட்டி முதுகில் வழுக்கிப்போய் விட்டது. காளையின்பாய்ச்சல் குதிரையை தூக்கிவிடவும் பிகடார் தன் வலது கால் துல்யமாக உயரே எழும்ப சேணத்திலிருந்து ஏற்கெனவே பாதி நழுவிவிட்டான். ஈட்டிக் குறியும் தவறிவிட்டான். தனக்கும் காளைக்கும் இடையே குதிரை இருக்கும்படியாக வலது பக்கமாக விழுந்தான், தாக்கிவிட்டு குத்தப்பட்ட குதிரை, காளை இன்னும் அதை குத்த, கீழே சரிந்தது. பிகடார் குதிரையை தன் பூட்ஸ் காலால் உந்தித் தள்ளி, உதவி வந்து அவனை தூக்கி அப்புறப்படுத்தி நிக்கவைக்க எதிர்பார்த்து தெளிவாக கிடந்தான்.

விழுந்த குதிரையை காளை குத்திக்கொண்டே இருக்க விட்டான் மானுயல்; அவனுக்கு அவசரம் இல்லை. பிகடார் தப்பிச்சுட்டான். தவிரவும் இந்த மாதிரி பிகடாருக்கு அப்போது தான் தெரியும். அடுத்த தடவை கொஞ்சம் அதிகமாக நிலைப்பான். சுத்த சோதா பிக்குகள் ! பெரிராவிலிருந்து கொஞ்சம் தள்ளி, விறைப்பான குதிரையுடன் காத்துக் கொண்டு மணலை கடந்து இருந்த ஜூரிட்டோவை பார்த்தான்.

ஹூ! காளையை கூப்பிட்டான். 'டோமார் !* அதன் கண்களை கவரும்படியாக இரண்டு கையிலும் கேப்பை பிடித்துக் கத்தினான். காளை குதிரை கிட்ட இருந்து பிய்த்துக்கொண்டு கேப்பை தாக்கியது. மானுயல் அட்டத்தில் ஓடி, கேப்பை விரித்துப் பிடித்து, நின்று, குதிக்காலில் சுழன்று காளை ஜூரிட் டோவுக்கு நேராக நிற்க கொண்டுவிட்டான். - -

(அடுத்த ஏட்டில் முடியும்)
சிறுகதை . தோற்காதவன் - எர்னஸ்ட் ஹெமிங்வே
(சென்ற மாத தொடர்ச்சி)

கம்பெக்னரோ, ஹெர்னாண்டஸம் மானலோவும் கேப் வீசி ஆட்டம் காட்ட, ஒரு குதிரையை கொன்று, இரண்டு வாராக்களை வாங்கிக் கொண்டது' என்று எல்ஹெரால்டோ விமர்சகர் எழுதினார். 'ஈட்டி மீது அது அழுத்தியது. தனக்கு குதிரை பிடிக்காது என்பதை தெளிவாக காட்டிக் கொண்டது. சூரன் ஜூரிட்டோ தன் வேல்கம்பால் தன் பழய வேலையை கொஞ்சம் மறுபடியும் உயிர்ப்பித்துக் காட்டினான் ; குறிப்பாக 'ஸ்யர்ட்டி'.

'ஓலி! ஓளி!' அவன் பக்கம் உட்கார்ந்திருந்தவன் கத்தினான். கூட்டத்தின் ஆரவாரத்தில் அந்த கத்தல் அமுங்கிவிட்டது. விமர்சகர் முதுகில் தட்டினான். தனக்கு நேர் கீழே இருந்த ஜூரிட்டோவை கவனித்துக் கொண்டிருந்தார் விமர்சகர். தன் குதிரை மீது இருந்து தள்ளிச் சாய்ந்து தன் கக்கத்து இடுக்கில் 'பிக்' (வேல்கம்பு)கின் முழுநீளமும் ஒரு சீரான கோணத்தில் எடுத்துத் தெரிய, 'பிக்'கை கிட்டத்தட்ட முனையை ஒட்டிப் பிடித்து, தன் முழுபலத்தையும் கொண்டு அழுத்தி காளை குதிரையை குத்த, எகிறி , பாயப் பார்க்க, ஜூரிட்டோ அதுக்கு மேலாக எழும்பி, அதை தடுத்துக்கொண்டு, தடுத்துக்கொண்டு அந்த அழுத்தலிலேயே குதிரையை சுழற்றித் திருப்பினான். ஒருவாறு முடிவில் அதுவும் விடுவிக்கப்பட்டுவிட்டது. குதிரை விடுவிக்கப்பட்டு, காளையும் அப்புறம் போய்விடும் அந்த விநாடியை உணர்ந்த ஜூரிட்டோ தன் எதிர்ப்பின் உருக்குப் பிடியை தளர்த்தினான். தன் மூக்கு நுனியில் ஹெர்னாண்டஸின் கேப்பை உணர்ந்து அது இழுத்து விடுவித்துக் கொண்டபோது 'பிக்கின் முப்பட்டை எஃகு முனை காளையின் திமில் தசை நாரை கீறிக் கிழித்துவிட்டது. காளை கேப்பை குருட்டுத்தனமாக தாக்கியது. பையன் அதை மத்தி கோதாவுக்கு, தள்ளி கொண்டுபோய் விட்டான்,

கூட்டம் ஆர்ப்பரிக்கையில் பிரகாசமான வெளிச்சத்தில் ஹெர்னாண்டஸ் தன் முன் வீசின கேப்பை தாக்கிக் கொண்டிருந்த காளையை பார்த்துக் கொண்டும் குதிரையை தட்டிக் கொடுத்துக் கொண்டும் இருந்தான் ஜூரிட்டோ .

'அதை பார்த்தாயா?' என்று மானுயலை கேட் டான்.

'அதிசயம்' என்றான் மானுயல்.

'அந்த தடவையும் நான் குறி தவறவில்லை' என்றான் அவன் மானுல்லிடம். 'இப்போது பாரு அதை .'

ஓட்டித் திரும்பின ஒரு 'பாஸ்' (கேப்பை கையில் விரித்து தன் உடலோடு நெருக்கிக் காட்டி காளையை அதை நோக்கி வரச் செய்வது) முடிவில், காளை, முழங்கால் மடித்து சரிந்தது. உடனே எழுந்துவிட்டது. ஆனால் மணலைக் கடந்து தள்ளி இருந்து மானுல்லும் ஜரிட்டோவும், காளையின் முதுகில் பீறிட்டு வெளிவரும் ரத்தத்தின் பளபளப்பை பார்த்தார்கள்.

'அந்த தடவையும் நான் குறியாக குத்திவிட்டேன்' என்றான் ஜூரிட்டோ .

'சரியான காளை' என்றான் மானுயல்.

'இன்னொரு குத்துக்கு அவர்கள் என்னை விட்டால் அதை கொலை செய்து விடுவேன்' என்றான் ஜூரிட்டோ .

"அப்புறம் மூன்றாவதை நமக்கு மாற்றி விடுவார்கள்' என்றான் மானுயல்.

'இப்போ பாரு அதை', என்றான் ஜூரிட்டோ .

'சரி, நான் அங்கே போகிறேன்' என்றான் . மானுயல். கோதாவின் மற்றொரு கோடிக்கு ஓடினான். 'மானோ'க்கள் காளையை நோக்கி ஒரு குதிரையை கடிவாளத்தை பிடித்து அதன் கால்களில் கழியால் அடித்து காளைக்கு நேராகக் கொண்டு போக நடத்திச் சென்றார்கள். தலையை தொங்கப் போட்டு நின்ற காளை பாய மனசு முனையாமல் தரையை பிறாண்டிக் கொண்டு நின்றது.

குதிரைமீது உட்கார்ந்தவாறே அதை அந்த இடத்துக்குக் கொண்டுபோன ஜரிட்டோ கூர்ந்து குறும்பார்வை பார்த்தான்.

ஒருவாறு காளை தாக்கியது. குதிரையை பிடித்து வந்தவர்கள் பெரீராவை நோக்கி ஓடினார்கள். குதிரை மீது இருந்த பிகடார் ரொம்ப பின் தள்ளி குத்திவிட்டான், காளை குதிரைக்கு அடியில் போய் விட்டது. அதை தூக்கிவிட்டது. முதுகு கீழே பட எறிந்து விட்டது.

ஜரிட்டோ கவனித்துப் பார்த்தான். சிவப்புச் சட்டை போட்ட மானோக்கள் பிகடாரை விடுவிக்க ஓடினார்கள். கால் ஊன்றி இருந்த பிகார் முனகிக் கொண்டும் கைகளை உதறிக்கொண்டும் இருந்தான். மானுவல்லும் ஹெர்னாண்டஸ்ஸம் 'கேப்'களுடன் தயாராக இருந்தார்கள். காளை, பெரிய காரிக்காளை, தன் முதுகு மேலே ஒரு குதிரையை , அதன் குளம்புகள் ஊசலாட தாங்கி, அதன் கடிவாளம் தன் கொம்புகளில் சிக்கிக் கொண்ட நிலமையில் இருந்தது. தன் முதுகு மேலே ஒரு காரிக்காளையுடன் குட்டைக் கால்களில் தடுமாறியது. தன் கழுத்தை வளைத்து நீட்டி உயர்த்தி, குத்தி, குதிரையை, அட்டத்தில் சரிய தாக்கியது. குதிரையும் சரிந்தது. பிறகு காளை மானுயல் அதன் முன் விரித்த கேப்பை நோக்கி முன் பாய்ந்தது.

இப்போது காளை வேகம் குறைந்து போனதை உணர்ந்தான் மானுயல். அதுக்கு மோசமாக ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அதன் பக்க உடல் பூரா வும் ஓரே ரத்தப் பளபளப்பு தான்.

மானுயல் திரும்ப கேப்பை விசிறினான். அது முன்னேறி, கண்களை விரித்து, அசிங்கமாக கேப்பையே பார்த்து வந்தது. மானுயல் பின் விலகி, தன் கையை உயர்த்தி, 'வெரோனிக்காவுக்காக (உத்தி முறையாக பலவிதமான 'பாஸ்'கள்) தயாராகி கேப்பை இறுக்கிப் பிடித்தான்.

இப்போது காளை அவனுக்கு நேர் எதிரே . ஆமாம், அதன் தலை கொஞ்சம் கீழே தணிகிறது.

வேலை. இன்னும் கீழே போகிறது. அதுதான் ஜூரிட்டோ

மானுயல் கேப்பை சிறகடித்தான். அதோ வருகிறது அது. அவன் அடி விலகி நின்றான். இன்னொரு வெரோனிக்கா வீசிக் காட்டினான். படுமோசமாக அது குறியாக பாயுதே, என்று நினைத்தான். போதுமான அளவுக்கு அது போராடி விட்டது. ஆகவே, அது பார்த்துண்டே இருக்கிறது. இப்போது தாக்குகிறது. அது என்னை குறி வைக்கிறது. ஆனால் நான் எப்பவும் கேப்பைத்தான் கொடுக்கிறேன்.

காளையை பார்த்து அவன் கோப்பை ஆட்டினான். அது அதோ வருகிறது. அவன் அடி விலகினான். அந்த தடவை ரொம்ப மோசமாக வெகுகிட்ட. அவ்வளவு நெருங்கி நான் அதோடு வேலை செய்ய விரும்ப வில்லை .

காளை கடந்து போன போது காளையின் முதுகில் கேப் பட்டுச் சென்றதில் அதன் ஓரங்கள் ரத்தத்தால் நனைந்து இருந்தன.

சரி, சரி, இது தான் கடைசி .

மானுயல், காளைக்கு எதிர் நின்று, அதன் ஒவ்வொரு தாக்குதலின் போதும் கூடவே திரும்பி தன் இருகைகளாலும் கோப்பை காட்டினான். காளை அவனை பார்த்தது. கண்கள் கவனிக்க , கொம்புகள் நேராக முன்னோக்க, காளை அவனையே பார்த்தது, கவனித்தது.

'ஹ ! மானுயல் கத்தினான். "டோரோ'! பின் சாய்ந்து கேப்பை முன்னால் விசிறினான். அதோ வருகிறது அது. அவன் அடி விலகினான். தனக்குப் பின்னால் கேப்பை சுழற்றினான். சுழன்று திரும்பினான். காளை கேப்பின் சுழற்சியை பின் தொடர்ந்தது. 'பாஸ்'ஸினால் நிலைக்கச் செய்யப்பட்டு, கேப்பினால் வசப்படுத்தப்பட்டும் சும்மா நின்றது மானுயல் ஒரு கையால் அதன் மூக்குக்கு நேரே கேப்பை வீசி காளை அசையாமல் நிற்க வைக்கப்பட்டதென காட்டிவிட்டு தள்ளிப்போனான். - கைதட்டலே இல்லை.

மானுயல் மணலை கடந்து பெரீராவை நோக்கிச் சென்றான், ஜூரிட்டோ கோதாவுக்கு வெளியே குதிரை மீது சென்றான். மானுயல் காளைக்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த போதே 'பாண்டிரில் லோக்களை (கிடுக்கிபோல, இரட்டையான , எறியீட்டி போன்ற முனையுடன் கலர் காகிதம் சுற்றின சுமார் இரண்டரை அடி நீள உருட்டித் திரட்டின ஆயுதம்) காளைமீது ஊன்றும் கட்டத்துக்கு மாறுதலை அறிவிக்கும் கொம்பு வாத்தியம் ஊதியாகிவிட்டது. மானுயல் அதை கவனிக்கவில்லை. மானோக்கள் 

இறந்த இரண்டு குதிரைகள் மீதும் கான்வஸ்ஸை விரித்து அவைகளைச் சுற்றி மரத்தூளை தூவிக் கொண்டிருந்தார்கள்.

மானுயல் தண்ணீர் குடிக்க பெரீராவுக்கு வந்தான். ரெடனாவின் ஆள் பளுவான ஒரு ஜாடியை அவனிடம் கொடுத்தான்.

உயரமான ஜிப்ஸி ஃப்யுயன்டிஸ் தூண்டிமுள் முனைகள் துருத்திய, பொடியான சிவப்புக் கம்புகளாலான ஒரு ஜோடி பாண்டிரில் லோக்களை சேர்த்துப் பிடித்து நின்று கொண்டிருந்தான். அவன் மானுயல்லையே பார்த்தான்.

'போய் வேலை செய், என்றான் மானுயல்.

ஜிப்ஸி கெச்சை நடை போட்டுச் சென்றான். மானுயல் ஜாடியை கீழே வைத்துவிட்டு கவனித்தான். தன் கைக்குட்டையால் முகம் துடைத்துக் கொண்டான்.

எல் ஹெரால்டோ விமர்சகர் தன் கால்களுக்கு இடையே கீழே இருந்த சோம்பெயின் சீசாவை எடுத்து, குடித்துவிட்டு பாராவை முடித்தார்.

'வயதான மானலோ கேப்பினால் காட்டின பாந்தம் இல்லாத பாஸ்களுக்கு கை தட்டலே கிடைக்கவில்லை. 'விளையாட்டில் மூன்றாவது கட்டத்துக்குள் நுழைந்தோம்'.

தனியே, கோதா மத்தியில் காளை நின்றது, இன்னும் நிலையாக. உயரமான, தட்டை முதுகுள்ள ஃப்யுயன்டிஸ், இரண்டு சிவப்பு பொடிக் கம்புகளை கைக்கு ஒன்றாக பிடித்துக்கொண்டு, முனை முன் நீண்டு இருக்க, கைகளை விரித்துக்கொண்டு அதை நோக்கி துணிவுடன் நடந்தான். அவனுக்குப் பின் பக்கத்தில் கேப்புடன் ஒரு 'பியோன்' இருந்தான். காளை அவனை கவனித்தது. அதற்கு மேல் நிலைக்க வில்லை .

அசையாமல் நிற்கும் ஃப்யுயன்டிஸை அதன் கண்கள் பார்த்திருந்தன. அவன் பின் சாய்ந்து காளையை கூப்பிட்டான். ஃப்யுயன்டிஸ் இரண்டு பாண்டிரில் லோக்களையும் ஆட்டினான். எஃகு முனைகளின் மீது பட்ட வெளிச்சம் காளையின் கவனத்தை இழுத்தது.

அதன் வால் எழும்பியது. அது பாய்ந்தது.

அது நேரே வந்தது, அந்த மனிதன் மீது குறியாக. பாண்டிரில்லோ முன் நீண்டு இருக்க, பின் சாய்ந்து ஃப்யுயன்டிஸ் அசையாமல் நின்றான். குத்த காளை கழுத்தை தணிக்கவும் ஃப்ளுயன்டிஸ் பின் சாய்ந்தான். அவன் கைகள் ஒன்று சேர்ந்து உயர்ந்து தொட்டுக் கொண்டன. பாண்டிரில்லோ இரண்டும் இரண்டு சிவப்புக் கோடுகளாக கீழிறங்கின. அவன் முன் . சாய்ந்து, முனைகளை காளையின் முதுகில் பாய்ச்சினான். காளையின் கொம்புகளுக்கு மேலாக எட்டிச் சாய்ந்து நடக்குத்தலான இரண்டு குச்சிகளுடன் கால்களை சுழற்றித் திருப்பி, கால்கள் நெருங்கி இருக்க, உடல் ஒரு பக்கம் வளைய காளை கடந்து போக விட்டான்.

'ஓலி !' - கூட்டத்திலிருந்து.

காளை, ஆற்று மீன் மாதிரி துள்ளி , நாலு காலும் தரையிலிருந்து எழும்ப, காட்டுத்தனமாக குத்திக் கொண்டிருந்தது. பாண்டியில்லோக்களின் சிவப்பு வேல் முனைகள் அது குதித்தபோது ஊசலாடின.

மானுயல், பெரீராவில் நின்றுகொண்டு, அது எப்பவும் வலது பக்கமே பார்த்ததை கவனித்தான்.

'அடுத்த ஜதையை வலப்பக்கமாக பாய்ச்சச் சொல்லு என்று புது பாண்டிரில்லோக்களுடன் ஃப்யுயன்டிஸ்ஸை நோக்கி ஓடப் புறப்பட்ட பையனிடம் சொன்னான். அவன் தோள் மீது முரட்டுக்கை விழுந்தது. ஜூரிட்டோ அது.

'எப்படி இருக்கிறாய், பையா?? அவன் கேட்டான். மானுயல் காளையை கவனித்துக் கொண்டிருந்தான்.

தன் உடலின் கனத்தை கைகளால் தாங்கி பெரீராமீது முன் சாய்ந்து நின்றான் ஜூரிட்டோ . மானுயல் அவன் பக்கம் திரும்பினான்.

'நீ சரியாக வேலை செய்கிறாய்' என்றான் ஜூரிட்டோ .

மானுயல் தலை அசைத்தான். அடுத்த மூன்றாவது கட்டம் வரையில் அவனுக்கு வேலை எதுவும் இல்லை. ஜிப்ஸி பாண்டிரில்லோக்களை திறமையாக உபயோகித்தான். வருகிற மூன்றாவது கட்டத்தில் காளை நல்ல தோற்றத்தில் அவனிடம் வரும். அது நல்ல காளை. இதுவரைக்கும் எல்லாம் சுளுவாக இருந்து விட்டது. கடைசியான, கத்தியைக் கொண்டு செய்கிற வேலையைப் பற்றித்தான் அவனுக்கு கவலை. கவலை என்று அவன் உண்மையாக நினைக்கவில்லை. அவன் அதைப்பற்றிக் கூட நினைக்கவே இல்லை. ஆனால் அங்கே நின்றபோது அவனுக்கு ஆழ்ந்த ஐய உணர்ச்சி ஏற்பட்டது. காளையை மசியவைத்து அதை சமாளிக்கத் தக்கதாக ஆக்க சிவப்புத் துணியால் தான் செய்ய வேண்டிய வேலை இதுகளை திட் டம் இட்டுக் கொண்டிருந்தான்.

பாண்டிரில்லோக்களின் சிவப்பு அம்பு முனைகள் அவன் நடக்கும் போது துள்ள, ஒரு 'பால் -ரூம்' நாட்டியக்காரி மாதிரி , குதித்துக் குதித்து ஆத்திரம் ஊட்டும் வகையில் காளையை நோக்கி நடந்தான் ஃப்யுயன்டிஸ். காளை அவனையே கவனித்தது. நிலையாக நிற்கவில்லை. வேட்டைக்குப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் அவனை குறி தப்பாமல் தாக்கி தன் கொம்புகளை அவனுக்குள் நிச்சயமாக பாய்ச்ச ஏதுவாக ரொம்ப நெருங்கி வருகிற வரைக்கும் காத்து நின்றது.

ஃப்யுயன்டிஸ் முன்னேறியதும் காளை பாய்ந் தது. காளை தாக்கவும் ஃப்யுயன்டிஸ் ஒரு கால் வட்டம் குறுக்கோடினான். கடக்கவும், பின் ஓடி, நின்று, முன் பாய்ந்து விரல்களில் எழும்பி கைகளை நேராக நீட்டி காளையின் அகன்ற தோள்பட்டையின் இறுகின தசைநாரில் பாண்டிரில்லோக்களை பாய்ச்சினான். காளை அவனை குறி தவறிவிட்டது,

கூட்டத்துக்கு இதைக் கண்டு ஒரே பூரிப்பு. : இந்த பயல் இன்று ராத்திரி வேலைக்கு அதிகம் நீடிக்க மாட்டான். ரெடனாவின் மனிதன் ஜூரிட் டோவிடம் சொன்னான்.

'நல்ல வேலை செய்கிறான் அவன்,'' என்றான் ஜரிட்டோ .

'அவனை இப்போ கவனி.' கவனித்தார்கள்.

பெரீரா மீது முதுகை சாய்த்துக்கொண்டு ஃப்யுயன்டிஸ் நின்று கொண்டிருந்தான். குவாட் ரில்லாக்களில் இருவர் காளைக்கு பராக்கு காட்ட, மா அடைப்புக்கு மேலாக தாவிப்போக தங்கள் கேட்களுடன் தயாராக அவன் பின் நின்றிருந்தார்கள்.

காளை நாக்கு வெளியே நீள, உடல் இரைக்க ஜிப்ஸியையே கவனித்துக் கொண்டிருந்தது. இப்போ தனக்கு அவன் கிடைத்து விட்டதாக நினைப்பு அதுக்கு அவன் முதுகு செம்பலகை மீது சாய்ந்து இருக்க. ஒரு சின்ன பாய்ச்சல்தான். காளை அவனையே பார்த்தது.

ஜிப்ஸி பின் வந்தான். பாண்டியில்லோக்கள் காளையை நோக்கி இருக்க கைகளை பின் இழுத்தான். காளையை கூப்பிட்டான், ஒரு காலால் தரையில் அறைந்தான். காளை ஏதோ சூதை உணர்ந்தது. அதுக்கு அந்த மனிதன் வேண்டும். முதுகுமேல் இன்னும் குத்து முள்கள் கூடாது. 

ஃப்யுயன்டிஸ் காளையை இன்னும் கொஞ்சம் நெருங்கினான். பின் வளைந்தான். திரும்ப கூப்பிட்டான். கூட்டத்தில் யாரோ எச்சரித்துக் கத்தினார்

'படுமோசமாக நெருங்கி வேலை செய்கிறானே. என்றான் ஜூரிட்டோ .

'கவனியுங்கள் அவனை .' ரெடனாவின் ஆள் சொன்னான்.

பின் சாய்ந்து பாண்டியில்லோக்களால் குதிரையை ஆத்திரப்படுத்திக் கொண்டு, பாதம் இரண்டும் தரையிலிருந்து எழும்ப குதித்தான் ஃப்யுயன்டிஸ், அவன் குதிக்கவும் காளையின் வால் உயர்ந்தது. அது தாக்கியது. ஃப்யுயன்டிஸ் கைகளை நேர் நீட்டியவனாக உடல் முழுக்க முன் வளைய, கால் விரல்களை ஊன்றி தரைக்கு வந்து குத்து முள்களை நேரே பாய்ச்சிவிட்டு வலது கொம்புக்கு தப்பி தன் உடலை சுழற்றித் திருப்பினான்.

காளை ஆளை தவறவிட்டு விட்டதால் அதன் கண்களை கேப்கள் கவரவே பெரீராவைப் போய் மோதியது.

கூட்டத்தின் பாராட்டுக் கைதட்டல் கிடைக்க, ஜிப்ஸி பெரீரா வழியே மானுயல்லை நோக்கி ஓடி வந்தான். கொம்பின் முனை லேசாக பட்ட இடத்தில் அவன் அரையங்கி கிழிபட்டு இருந்தது. அதை பார்ப்போருக்குக் காட்டி அதில் மகிழ்ச்சி அடைந்தான் அவன். கோதாவை ஒருதரம் சுற்றி வந்தான். சிரித்து, அரையங்கியை சுட்டிக் காட்டிக் கொண்டு அவன் போவதை ஜூரிட்டோ பார்த் தான். அவன் சிரித்தான்.

வேறு யாரோ கடைசி ஜதை பாண்டிரில்லோக்களை பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். யாரும் அதை கவனிக்கவே இல்லை.

ரெடனாவின் ஆள் ஒரு முலேட்டா (மாட்டடார் கத்தியால் காளையை குத்தும்போது தன்னை காளையிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள உபயோகிக்கும், மத்தியில் கூரான எஃகு முனை ஆயுதம்; சொருகப் பட்ட ஒரு திரட்டின மரத்தடி பொருத்தப்பட்ட ஒரு இருதய வடிவமுள்ள , கரும்சிவப்பு, சர்ஜ் அல்லது ஃபிளானல் துணியை மடித்துத் தைத்துள்ள கெட்டித்துணி) வுக்குள் ஒரு குத்துக்கம்பை சொருகி அதன் மீது துணியை மடித்து பெரிராவுக்கு மேலாக மானுல்லிடம் தந்தான். தோல் கத்திப் பெட்டியிலிருந்து ஒரு கத்தியை எடுத்து அதன் தோல் தடறைப் பிடித்துக்கொண்டு மரவேலிக்கு மேலாக மானுல்லிடம் கொடுத்தான். அதன் சிவப்புக் கை பிடியை பிடித்து கத்தியை வெளியே உருவினான். தடறு துவண்டு விழுந்தது.

அவன் ஜூரிட்டோவை பார்த்தான். அவனுக்கு வேர்த்துக் கொண்டிருப்பதை பார்த்தான் அந்த பருமனானவன்.

'இப்போ அதை போட்டுத் தள்ளிவிடு பையா, என்றான் ஜூரிட்டோ .

மானுயல் தலை ஆட்டினான். 'வாட்டமாக நிற்கிறது அது' என்றான் ஜூரிட்டோ

'உன் விருப்பத்துக்கு தக்கனே', என்று ரெட்னாவின் ஆள் உறுதி சொன்னான் அவனிடம்.

மானுயல் தலை அசைத்தான்.

கூரைக்கு அடியிலிருந்து கொம்பு வாத்தியக்காரன் கடைசி காட்சிக்கு ஊதினான். மானுயல் கோதாவை கடந்து உயரே இருட்டில் பெட்டிடோ .ஆசனத்தில் பிரசிடெண்ட் இருக்க வேண்டிய இடத்துக்கு நடந்தான்.

முதல் வரிசை ஆசனம் ஒன்றில் இருந்த எல் ஹெரால்டோ விமர்சகர் வெதுவெதுப்பான சேம்பெயினை ஒரு மூச்சு குடித்தார். விளையாட்டு வர்ணனை அப்படியே எழுத தகுதி உள்ளதல்ல என்று அவர் தீர்மானித்து விட்டார். ஆபீசுக்குப் போய் தான் எழுதிக் கொள்ளலாம். என்ன சண்டை இது? சும்மா இரவு ஆட்டம் தானே. எதையாவது விட்டுவிட்டாலும் காலைப் பத்திரிகைகளில் கிடைத்து விடும். இன்னொரு மூச்சு சோம்பெயின் குடித்தார். மாக்ஸிம்'மில் பன்னிரண்டு மணிக்கு அவருக்கு ஒரு சந்திப்பு இருந்தது. இந்த காளைச் சண்டைக்காரர்கள் தான் அப்படிக்கென்ன? விடலைப் பயல்களும் சோதாக்களும். சோதா பயல்கள் கூட்டம். காகித நறுக்கை பைக்குள் வைத்துக் கொண்டார். கோதாவில் தனியேயும் இருண்ட 'பிளாஸா' (சண்டை நடக்கும் இடம்) வில் தான் உயரே பார்க்க முடியாத பெட்டி ஆசனத்தை நோக்கி தன் தொப்பியால் மரியாதை காட்டி நின்ற மானுல்லை பார்த்தார். கோதாவில் தள்ளி குறிப்பற்ற பார்வையுடன் காளை நின்றிருந்தது.

'மிஸ்டர் பிரசிடெண்ட், உலகத்திலேயே சிறந்த அறிவும் மனவிசாலமும் உள்ள பொது மக்களே, உங்களுக்கு இந்த காளையை அர்ப்பணிக்கிறேன்' என்பது தான் மானுயல் சொல்லிக்கொண்டு இருந்தது. அது ஒரு முறையான பேச்சு. அவன் எல்லாம் சொல்லிவிட்டான். இரவுச் சண்டைக்கு இது கொஞ்சம் அதிகம் தான்.

இருட்டில் அவன் குனிந்து வணங்கினான், நிமிர்ந்தான். தன் தோளுக்கு மேலாக தொப்பியை ஆட்டினான். வலது கையில் கத்தியும் இடது கையில் முலேட்டாவுமாக காளையை நோக்கி நடந்தான்.

மானுயல் காளையை நோக்கி நடந்தான். காளை அவனை பார்த்து விட்டது. அதன் கண்கள் சூட் சுயமானவை. அதன் இடது தோளிலிருந்து பாண்டரில்லோக்கள் தொங்கின விதத்தையும் ஜூரிட்டோவின் ஈட்டிக்குத்தால் வெளியேறின ரத்தத்தின் பளபளப்பையும் கவனித்தான். காளையின் கால்கள் ஊன்றி இருந்த விதத்தையும் கவனித்தான். வலது கையில் கத்தியும் இடது கையில் முலேட்டாவுமாக அவன் முன் நடந்தபோது அவன் காளையின் குளம்பு களையே கவனித்தான். தன் கால்களை சரிப்படுத்திக் கொள்ளாமல் காளை பாயமுடியாது. இப்போது கால்கள் குவிய மந்தமாக நின்றிருந்தது.

அதன் குளம்புகளை பார்த்தவாறே மானுயல் அதை நோக்கிச் சென்றான். அதெல்லாம் சரி. அவன் இதை செய்து விடமுடியும். காளை தலை தணிய வைக்க வேலை செய்தாக வேண்டும் அவன் . அப்போ கொம்புகளுக்குத் தப்பி அதை அவன் கொல்ல முடியும். அவன் கத்தியைப் பற்றி நினைக்கவில்லை, காளையை கொல்வதையும்கூட. ஒரு சமயத்தில் அவன் ஒன்றைப்பற்றி தான் சிந்தித்தான். இருந்தாலும் நடக்க இருப்பது அவனுக்கு மன உளைச்சல் தந்தது. காளையின் கால்களையே பார்த்து நடக்கையில் அவன் அடுத்தடுத்து அதன் கண்களையும் ஈரமான மூக்கையும் விரிந்து முன் நீண்டு இருந்த கொம்புகளின் வீச்சையும் கவனித்தான். காளையின் கண்களைச் சுற்றி லேசான வளையங்கள் இருந்தன. அதன் கண்கள் மானுயல்லையே கவனித்தன. வெள்ளை முகத்தோடு உள்ள இந்த சிறு ஆள் தனக்கு கிடைத்துவிடும் என்று அது உணர்ந்தது.

அசையாமல் நின்று கத்தியால் முலேட்டாவின் சிவப்புத் துணியை விரித்துக்கொடுத்து, கத்தி முனையால் துணியை குத்தினான். அவன் இடது கையில் பிடித்திருந்த கத்தி அந்த சிவப்பு ஃபிளானலை ஒரு படகின் பாய் மாதிரி விரித்துக் கொடுத்தது. மானுயல் காளையின் கொம்பு முனைகளை கவனித்தான். அவைகளில் ஒன்று பெரீராமீது படாரிட்டு முட்டியதால் சிம்பு பிளந்து இருந்தது. மற்றது ஒரு காட்டுப் பன்றி முள் மாதிரி கூராக இருந்தது. முலேட்டாவை விரித்துக்கொண்டு இருந்தபோது கொம்பின் அடி மண்டைத் திட்டில் ரத்தக் கறைபட்டு இருப்பதையும் மானுயல் கவனித்தான். இவைகளை அவன் கவனித்தபோது காளையின் குளம்புகளை பார்க்கத் தவறவில்லை. காளை நிலையாக மானுயல்லையே கவனித்து நின்றது.

அது தன்னை பாதுகாத்துக்கிறது, என்று நினைத்தான் மானுயல், தன் சக்தியை காப்பாற்றிக்கிறது. இதிலே இருந்து அதை கிளப்பி அது தலை தணிக்க வைக்கவேண்டும். எப்பவும் தலை தாழச் செய்து விடவேண்டும். ஜூரிட்டோ ஒரு தடவை அதை தலை கவிழ வைத்து விட்டான். ஆனால் அது திரும்ப வந்திருக்கு. நான் அதை கிளப்பிவிட்டால் அதுக்கு ரத்தம் சொட்டும். அது தலைதாழ வைத்துவிடும்.

முலேட்டாவை கையில் பிடித்துக்கொண்டு, வலது கையில் உள்ள கத்தி அதை அவன் முன் விரிக்க, காளையை அழைத்தான்.

காளை அவனை பார்த்தது.

ஆத்திரம் ஊட்டுபவனாக பின் சாய்ந்து விரிந்து படர்ந்த ஃபிளானலை ஆட்டினான்.

காளை முலேட்டாவை பார்த்தது. ஆர்க்-லைட் வெளிச்சத்தில் அது நல்ல சிவப்பாக தெரிந்தது. காளையின் கால்களில் விறைப்பு ஏறினது.

இதோ வருகிறது அது. ஊஷ் ! காளை வரவும் மானுயல் திரும்பினான். முலேட்டாவை உயர்த்தினான். அது காளையின் கொம்புகளுக்கு மேலாக படர்ந்து காளையின் தலையிலிருந்து வால் வரை உரசிச் சென்றது. பாய்ச்சலில் காளை நாலு காலும் மேல் எழும்ப கடந்து போய்விட்டது. மானுயல் அசையவே இல்லை. 'பாஸ்' முடிவில் ஒரு மூலையிலிருந்து வரும் பூனை மாதிரி திரும்பி, மானுல்லுக்கு எதிரே நின்றது.

அது மீண்டும் தாக்க ஆரம்பித்தது. அதன் மந்தம் போய்விட்டது. அதன் கரும் முத்துக்கு கீழே, புது ரத்தம் பளீரிட வழிந்து அதன் கால்களுக்குக் கீழே சொட்டிக்கொண்டிருப்பதை மானுயல் கவனித்தான். முலேட்டாவிலிருந்து கத்தியை உருவி தன் வலது கையில் அவன் பிடித்துக் கொண்டான். இடது கையில் முலேட்டாவை தாழப் பிடித்துக்கொண்டு, இடது பக்கம் சாய்ந்து காளையை கூப்பிட்டான். முலேட்டாவை குறி பார்த்த காளையின் கால்கள் இறுகின. இதோ வருகிறது அது, மானுயல் நினைத்தான். ஓ!

பாய்ந்து வரவும், முலேட்டாவை காளை முன் விசிறிவிட்டு பாதங்களை அழுத்தமாக ஊன்றி அவன் சுழன்றான். அந்த வளைவான வீச்சின் பின் சென்றது கத்தி, விளக்கு வெளிச்சத்தில் ஒரு ஒளிக் கோடாக . 

பாஸ் முடியுவும் காளை மீண்டும் பாய்ந்து வந்தது. இன்னொரு பாஸுக்கு முலேட்டாவை உயர்த்தினான் மானுயல். உயர்த்தின முலேட்டாவுக்கு கீழே அவன் மார்பை ஒட்டி ஊக்கமாக வந்தது காளை. கடகடக்கும் பாண்டிரில்லோ முள் கம்புகளுக்கு தப்ப மானுயல் தலையை பின் சாய்த்தான். சூடேறின் காரி காளையின் உடல் அது போகும் போது அவன் மார்பை தொட்டது.

ரொம்ப மோசமாக நெருங்கி, என்று மானுயல் நினைத்தான். பெரீரா மீது சாய்ந்து இருந்த ஜூரிட்டோ ஜிப்ஸியிடம் அவசரமாக ஏதோ பேசினான். அவன் ஒரு கேப்புடன் மானுல்லை நோக்கி குதி நடை போட்டுச் சென்றான். ஜூரிட்டோ தன் தொப்பியை தழைய இழுத்து விட்டுக் கொண்டு கோதாவுக்குள் தள்ளி மானுல்லை பார்த்தான்.

முலேட்டாவை இடது பக்கம் தணித்துப் பிடித்துக் கொண்டு மானுயல் காளைக்கு எதிர் எதிராக நின்றிருந்தான். காளையின் தலை கீழ் நோக்கி இருக்க காளை முலேட்டாவையே கவனித்தது.

'இந்த வேலையை பெல்மாண்டி செய்திருந்தால் இவர்கள் குதித்திருப்பார்கள்' என்று ரெடனாவின் ஆள் சொன்னான்.

ஜூரிட்டோ எதுவும் சொல்லவில்லை. கோதா மத்தியில் இருந்த மானுயல்லையே கவனித்துக் கொண்டிருந்தான்.

'இந்த ஆளை எங்கே இருந்து நமது முதலாளி பிடித்தாரோ? ரெடனாவின் ஆள் கேட்டான். - 'ஆசுபத்திரிலே இருந்து,' என்றான் ஜூரிட்டோ

'இதோ அங்கேதான் திரும்ப போகப் போகிறான் பாரு. ரெடனாவின் ஆள் சொன்னான்.

ஜூரிட்டோ அவனை எதிர்த்துச் சொன்னான்.

அதுலே கையை முட்டு' என்றான் பெரீராவைக் காட்டிக் கொண்டே.

'சும்மா கேலிக்கு சொன்னேன்.' என்றான் ரெடனாவின் ஆள்.

'பலகையிலே கையை குத்து.'

ரெடனாவின் ஆள் முன் குனிந்து பெரீரா மீது மூன்று தடவை குத்தினான்.

'ஃபெய்னாவை கவனி' என்றான் ஜூரிட்டோ .

கோதா மத்தியில் விளக்குகளுக்கு அடியில் மானுயல் முழுங்காலிட்டு காளைக்கு நேரே நிலைத்திருந்தான். இரண்டு கையாலும் முலேட்டாவை உயர்த்தவும் வால் எழுப்பி காளை பாய்ந்தது.

மானுயல் சுழன்று துல்யமாக விலகினான். காளை மீண்டும் தாக்கவும் முலேட்டாவை அரை வட்டமாக சுழற்றினான். அது காளையை தன் முழங்கால் மடிக்க வைத்தது.

'சரிதான். பெரிய காளைச் சண்டைக்காரன் இந்த ஆளு,' என்றான் ரெடனாவின் ஆள்.

'இல்லை. அவன் இல்லை, என்றான் ஜரிட்டோ .

மானுயல் எழுந்து நின்றான், இடது கையில் முலேட்டாவும், வலது கையில் கத்தியுமாக. இருண்ட பிளாஸாவிலிருந்து எழுந்த பாராட்டுக் கைதட்டலை ஏற்றுக் கொண்டான்.

காளை முட்டிகளை நீட்டி திமில் நிமிர எழுந்து தலை கீழே தணிந்திருக்க காத்து நின்றது. * வேறு இரண்டு குவாட்ரில்லோ படைப்பையன் களிடம் ஜூரிட்டோ ஏதோ பேசினான். மானுயல்லுக்குப் பின் நிற்க அவர்கள் ஓடினார்கள். அவனுக்குப் பின் இப்போது நாலு பேர்கள் இருந்தார்கள். அவன் முலேட்டாவுடன் வந்ததிலிருந்தே ஹெர்னாண்டஸ் தொடர்ந்து இருந்தான். ஃப்யுயன்டிஸ் உடலோடு கேப்பை ஓட்டிப் பிடித்து, உயரமாக, அமைதியுடன், அசமந்தமாக நின்று கொண்டிருந்தான். அந்த இருவரும் வந்து சேர்ந்தார்கள். பக்கத்துக்கு ஒருவராக அவர்களை நிற்கச் சொன்னான் ஹெர்னாண்டஸ். காளைக்கு நேரே மானுயல் தனியே நின்றான்.

கேப்களுடன் உள்ள அவர்களுக்கு பின் போக சமிக்ஞை செய்தான். உஷாராக அவர்கள் பின் போகையில் அவன் முகம் வெளிறியும் வேர்த்தும் இருப்பதை பார்த்தார்கள்.

எவ்வளவு பின் தள்ளி இருக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாதா? காளையை வசமாக நிறுத்தி வைத்து தயார்ப்படுத்தின பிறகு காளையின் கவனத்தை தங்கள் கேப்களால் கவர அவர்கள் விரும்பினார்களா? அது - வேறு இல்லாமலேயே அவன் வாதைப்பட போதுமானது இருக்கிறதே.

நாலு பாதமும் சதுரமாக, முலேட்டாவை பார்த்துக் கொண்டே காளை நின்று கொண்டிருந்தது. மானுயல் தன் இடது கையில் முலேட்டாவை விரித்தான். காளையின் கண்கள் அதையே கவனித்தன். அதன் பாதங்கள் தாங்கிய உடல் கனமாக இருந்தது. அது தலை தணித்து தான் இருந்தது, ஆனால் ரொம்ப தணித்து அல்ல.

மானுவல் அதை நோக்கி முலேட்டாவை உயர்த்தினான். காளை அசையவில்லை. அதன் கண்கள் தான் பார்த்தன.

ஒரே ஈயமலை , என்று மானுயல் நினைத்தான். சச்சதுரமாக நிற்கிறது. அமைப்பாக இருக்கிறது. அது வாங்கிக் கொள்ளும்.

காளைச் சண்டை பாஷையிலேயே தான் அவன் நினைத்தான். சில சமயம் அவனுக்கு ஒரு நினைப்பு வரும் ; ஆனால் குறிப்பிட்ட கொச்சை வார்த்தை ஞாபகத்துக்கு வராது ; அந்த நினைப்பும் உற்றறிய முடியாது போய்விடும். அவன் இயற்கை அறிவும் ஞானமும் தன்னியக்கமாக செயல்பட்டன, அவன் மூளை மெதுவாக வார்த்தைகளில் வேலை செய்தது. காளைகளைப் பற்றி எல்லாம் அவனுக்குத் தெரியும். அவை பற்றி அவன் நினைத்தாக வேண்டியதே இல்லை. அவன் சரியானதையே செய்தான். அவன் கண்கள் பொருள்களை குறித்தன். அவன் உடல் நினைத்துச் செய்வதாக இராமல் அவசியமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டது. அதைப்பற்றி அவன் நினைக்க ஆரம்பித்து விட்டால், அவன் தொலைந்து போய் விடுவான்.

இப்போது, காளைக்கு எதிர் நின்று, அவன் ஒரே சமயத்தில் பல விஷயங்களை உணர்பவனாக இருந்தான். அங்கே இருந்தது கொம்புகள். ஒன்று சிம்பு பிளந்தது, மற்றது வழவறென கூர்மையானது. இடது கொம்பு வசமாக தான் பக்கம் திரும்பி நிலை நிற்கவேண்டிய அவசியம். கிட்டவும் நேராகவும் பாய வேண்டும். முலேட்டாவை தணிக்க வேண்டும். அப்போதுதான் காளை அதையே பார்க்கும். தான் கொம்புகளுக்கு மேலே தாவிப் பாய்ந்து, காளையின் தோள்களின் நடு உச்சிப் பக்கம் முது குக்கு நேர் பின்னால் ஒரு 'ஐந்து - பெஸ்ட்டா ' நாணயம் அளவுக்கு உள்ள இடத்தில் கத்தியை பாய்ச்ச வேண்டும். இதெல்லாம் அவன் செய்ய வேண்டும். அப்புறம் அவன் கொம்புகளுக்கு நடுவில் லிருந்து விடுபட்டு வரவேண்டும். இதெல்லாம் செய் தாக வேண்டும் என்பது அவனுக்கு உணர்வில் இருந்ததுதான். அவன் ஒரே நினைப்பு, வார்த்தைகள்ளில் இருந்தது , ' கார்ட்டோ எ டெரிக்கோ .

கார்ட்டோ எ டெரிக்கோ' என்று நினைத்தான், முலேட்டாவை பிரித்துக்கொண்டு நெருங்கியும் நேராகவும். கார்ட்டோ எ டெரிக்கோ. கத்தியை முலேட்டாவிலிருந்து உருவினான். சிம்பு பிளந்த இடது கொம்பு பக்கமாக தான் வசநிலை எடுத்துக் கொண்டான். உடம்புக்கு குறுக்கே முலேட்டாவை தணித்துக் கொண்டான். கத்தி பிடித்த கை கண் மட்டத்துக்கு குறி பார்த்து, சிலுவைக்குறி இட்டது. கால் விரல்களை எழுப்பி காளையின் தோள்களுக்கு நடுவே எடுப்பான குறி இடத்தில் கத்தியின் அலகை உள் அமிழ்த்தினான்.

கார்ட்டோ எ டெரிக்கோ . அவன் காளை மீது பாய்ந்து விட்டான்.

ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. தான் உயரே போவதாக அவன் உணர்ந்தான். அவன் மேலே போன போது கத்தியை அழுத்தினான். அது அவன் கையிலிருந்து தெறித்துப் போய் விட்டது, அவன் தரையில் விழுந்தான். காளை அவன் மீது. மானுயல் தரையில் கிடந்து வழுக்குகிற தன் பாதங்களால் காளையின் மூக்கை உதைத்துக் கொண்டிருந்தான். உதைக்கிறான், உதைக்கிறான். காளை அவனை விட வில்லை, வெறியில் குறி தவறியது அது. தன் தலையால் அவனை இடித்தது. கொம்புகளை மணலுக்குள் பாய்ச்சினது. ஒரு பந்தை கீழே விழாமல் உயரவே அடிக்கிறவனைப் போல் உதைத்துக் கொண்டு காளை தன்னை குத்திவிடாமல் இருக்க சுதாரித்துக் கொண் டிருந்தான் மானுயல்..

காளையை நோக்கி , உதறப்படும் கேப்களிலிருந்து கிளம்பும் காற்றை தன் முதுகில் உணர்ந்தான் மானுயல். காளை போய்விட்டது. அவனைத் தாண்டி பாய்ந்து போய்விட்டது. கருப்பாக, அதன் அடிவயிறு அவனுக்கு மேலாக போனபோது மிதிக் கக்கூட இல்லை.

மானுயல் எழுந்தான், முலேட்டாவை எடுத்துக் கொண்டான். ஃப்யுயன்டிஸ் கத்தியை அவனிடம் கொடுத்தான். முதுகுப் பட்டை மீது அது பட்ட இடத்தில் வளைந்திருந்தது. முழங்கால் மீது வைத்து மானுயல் அதை நிமிர்த்தினான். காளையை நோக்கி ஓடினான். இறந்து கிடந்த குதிரைகள் ஒன்றின் பக்கத்தில் அது நின்றிருந்தது.


'அங்கே இருந்து அதை கிளப்பி வா,' என்று மானுயல் ஜிப்ஸியை பார்த்து கத்தினான். செத்த குதிரையின் ரத்த நெடியை காளை உணர்ந்துவிட்டது. மூடி இருந்த கான்வாஸ் துணியை தன் கொம்புகளால் கிழித்தது. ஃப்யுயன்டிஸ்ஸின் கேப்பை தாக்கியது, அதன் சிம்பு பிளந்த கொம்பிலிருந்து தொங்கும் கான்வஸ் கிழிசல் துணியுடன் கூட்டம் சிரித்தது.

கோதாவில் அந்த கான்வஸ் கிழிசலை உதறி எறிய காளை தலையை உதறிக்கொண்டே இருந்தது. அதன் பின்னாலிருந்து ஓடிப்போய் ஹெர்னாண்டஸ் கான்வஸின் நுனியை பற்றி லாகவமாக கொம்பி லிருந்து எடுத்து விட்டான்.

ஒரு அரைத்தாக்குதலாக காளை அதை தொடர்ந்தது. பிறகு நின்றுவிட்டது. அது மறுபடியும் தற்காப்பு நிலை எடுத்துக் கொண்டது. கத்தியும் முலேட்டாவுமாக மானுயல் அதை நோக்கி நடந்தான். அதன் முன் மானுயல் முலேட்டாவை விசிறினான். காளை பாயவில்லை.

கத்தியின் பாயும் அலகின் போக்கில் குறி பார்த்துக்கொண்டே மானுயல் காளையை நோக்கி நிலை எடுத்துக் கொண்டான். காளை அசையாமல் நின்றது, கால் செத்துப் போனது மாதிரி, இன்னொரு பாய்ச்சல் இல்லாதபடி. மானுயல் கால் விரல் எழும்ப எஃகு வழியே குறி பார்த்து பாய்ந்தான்.

மறுபடியும் ஒரு அதிர்ச்சி. ஒரு வேகத்தில் தான் பின்னால் தூக்கிச் செல்லப்பட்டு மணலில் பலமாக அறைபடுவதாக அவன் உணர்ந்தான். இந்த தடவை உதைத்துத் தள்ளுவதற்கு வழி இல்லை. காளை அவனுக்கு மேலாக இருந்தது. செத்தவன் மாதிரி மானுயல் கிடந்தான், கைகள் மீது தலை படிய. காளை அவனை மோதியது. அவன் முதுகிலே, மணலிலே, அவன் முகத்திலே மோதியது. மடித்த தன் கைகளுக்கு இடையே கொம்புகள் மணலில் பாய்வதை அவன் உணர்ந்தான். அவன் அடி முதுகில் காளை மோதியது. அதன் முகம் மணலை புரட்டியது. அவன் அங்கியின் கையை குத்தி காளை துணியை கிழித்துவிட்டது. மானுயல் தப்பி விலகிவிட்டான். காளை கேப்களை தொடர்ந்து போய்விட்டது.

மானுயல் எழுந்தான். கத்தியையும் முலேட்டா வையும் எடுத்துக் கொண்டான். கட்டைவிரலால் கத்திமுனையை கூர் பார்த்தான். புதுக் கத்திக்காக பெரீராவை நோக்கி ஓடினான். ரெட்னாவின் ஆள் பெர்ராவின் விளிம்புக்கு மேலாக கத்தியை அவனிடம் கொடுத்தான்.

'முகத்தை துடைத்துக்கொள்,'' என்றான் அவன்.

மானுயல், காளையை நோக்கி திரும்ப ஓடிக் கொண்டே கைக்குட்டையால் சிவந்து போன முகத்தை துடைத்துக் கொண்டான். அவன் ஜரிட்டோவை பார்க்கவே இல்லை. ஜூரிட்டோ எங்கே?

குவாட்ரில்லா ஆட்கள் காளைக்கு அப்பால் நின்று கேப்களுடன் காத்திருந்தார்கள். தாக்குதல் லுக்குப் பிறகு காளை மனமாழ்ந்தும் மந்தமாயும் நின்றது.

முலேட்டாவுடன் மானுவல் அதை நோக்கி நடந்தான். அவன் நின்று அதை ஆட்டினான். காளை பொருட்படுத்தி பதில் கிளப்பவில்லை. காளையின் மூக்குக்கு முன்னாடி வலமும் இடமுமாக மாறி மாறி சென்று பார்த்தான். காளையின் கண்கள் அதையே கவனித்து போகிற பக்கம் கண்களை திருப்பினதே தவிர தாக்கவில்லை. அது மானுல்லுக்காக காத்திருந்தது.

மானுயல் கவலைப்பட்டான். தன் வேலையை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. 'கார்ட்டோ எ டெரிக்கோ' காளையை நெருங்கி வச நிலை எடுத்து நின்றான். தன் உடம்புக்கு முன் முலேட்டாவை குறுக்கே பிடித்துக் கொண்டான், பாய்ந்தான். கத்தியை பாய்ச்சின போது கொம்புக்கு அகப்படாமல் இடது பக்கமாக தன் உடலை தெளிவாக இழுத் துக் கொண்டான். காளை அவனை தாண்டிப் போய் விட்டது. கத்தி மேல் எழும்பி எகிறி , ஆர்க் - லைட் ஒளியில் மின்னிக் கொண்டு சிவப்புப் பிடியுடன் மணலில் விழுந்தது. -

மானுயல் ஓடி அதை எடுத்தான். அது வளைந்து இருந்தது. முட்டியில் வைத்து நேராக்கினான்.

மறுபடியும் நிலைத்து நின்ற காளையை நோக்கி அவன் ஓடிவந்தபோது தன் கேப்புடன் நின்று கொண்டிருந்த ஹெர்னாண்டஸ்ஸை தாண்டிச் சென்றான்.

ஒரே எலும்பு மயம், என்று பையன். ஊக்கும் வகையாக சொன்னான்.

மானுயல் தலை அசைத்தான், முகத்தை துடைத்துக் கொண்டு. திராபை கைக்குட்டையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

அங்கே இருந்தது காளை. பெரீராவை ஒட்டி இருந்தது இப்போது. நாசமாகப் போனது. அது ஒரே எலும்பு மயமாக இருக்கட்டுமே. கத்தி நுழைய இடமே இல்லை என்றும் இருக்கட்டுமே. இல்லாது போனால், தொலையட்டும். அவர்களுக்கு தான் காட்டுவான்.

முலேட்டாவால் ஒரு 'பாஸ்' காட்டிப் பார்த்தான். காளை அசையவில்லை. காளைக்கு முன்னால் னும் பின்னும் முலேட்டாவை வெட்டி இழுத்தான். ஒன்றும் பலிக்கவில்லை.

முலேட்டாவை சுருட்டினான், கத்தியை உருவினான், வசநிலை எடுத்துக் கொண்டு காளைமீது பாய்ந்து குத்தினான். தன் பலம் கொண்டு குத்தியபோது கத்தி வளைவதை அவன் உணர்ந்தான். அது உயரே எகிறியது. முனை மாறிச் சுழன்று போய் கூட்டத்தில் விழுந்தது. கத்தி துள்ளும் போது மானுயல் தள்ளி குதித்து விட்டான்.

இருட்டிலிருந்து எறியப்பட்ட முதல் ஆசன மெத்தைகள் குறி தவறின. அப்புறம் ஒன்று முகத்தில் அடித்தது. கூட்டத்தை நோக்கி இருந்த அவன் திராபை முகத்தில் . அவை வேகமாக வந்து கொண் டிருந்தன. மணலை நோக்கி குறிப்பாக யாரோ ஒரு காலி சோம்பெயின் சீசாவை கிட்ட இருந்து எறிந்தார்கள். மானுயல் பாதத்தில் பட்டது. அவை வந்து கொண்டிருந்த இருட்டு இடத்தையே பார்த்து நின்றிருந்தான். பிறகு ஏதோ 'உஸ்ஸிட்டு வந்தது. அவன் மீது பட்டு கீழே விழுந்தது. மானுயல் குனிந்து அதை எடுத்தான். அது அவன் கத்தி. அதை முட்டியில் வைத்து நிமிர்த்தினான். அதைக் கொண்டு கூட்டத்துக்கு சமிக்ஞை செய்தான்.

'நன்றி , என்றான் அவன். 'உங்களுக்கு நன்றி.

ஓ, வேசி மகனுக ! அயோக்கிய வேசி மகனுக! ஓ! ஓடினபோது ஒரு மெத்தையை உதைத்துத் தள்ளினான்.

அங்கே இருந்தது காளை. எப்பவும் போல. சரி சரி.

அவலட்சண, மட்டரக, வேசி மகனே !'

காளையின் கருப்பான மூக்குக்கு முன்னால் மானுயல் முலேட்டாவை ஆட்டினான்.

எதுவும் பயனில்லை.

நீ மாட்டாய் ரொம்ப சரி. எட்டுப் போட்டு நெருங்கினான். முலேட்டாவின் கூரான முனையால் காளையின் ஈர மூக்கின் மீது குத்தினான்.

காளை அவன் மீது பாய்ந்தது. அவன் பின்னுக்குப் பாய்ந்தபோது ஒரு மெத்தை இடறி தடு மாறினான். கொம்பு தனக்குள் தன் அள்ளையில் பாய்ந்து நுழைவதை அவன் உணர்ந்தான். தன் இரண்டு கைகளாலும் கொம்பை பற்றினான். இறுக் கிப் பிடித்துக் கொண்டே பின்னாலேயே போனான். காளை அவனை கொந்தி எறிந்தது. அவன் விலகி விழுந்தான். அவன் அசையாமல் கிடந்தான். சரியாகப் போச்சு. காளை போய்விட்டது.

இருமிக் கொண்டே, முறிந்து போய், எல்லாம் முடிந்து விட்டதான உணர்ச்சியுடன் அவன் எழுந் தான். வேசி மகனுக !

'கத்தியை கொடு என்னிடம்.' என்று கத்தி னான். 'கொடுங்கள் சாமானை.'

முலேட்டா , கத்தியுடன் ஃபியுயன்டிஸ் வந் தான்.

ஹெர்னாண்டஸ் அவனைச் சுற்றி தன் கையைக் கொடுத்தான்.

'வைத்திய அறைக்கு போங்கள்,' என்றான் அவன். 'அடி முட்டாளாக நடந்துக்காதீர்கள்.''

'போ தள்ளி,' என்றான் மானுயல். 'தள்ளிப் போய்த் தொலை.'

திருகி விடுவித்துக் கொண்டான் அவன். ஹெர் னாண்டஸ் தோள்கசைா குலுக்கிக் கொண்டான். மானுயல் காளையை நோக்கி ஓடினான்.  அங்கே நின்றிருந்தது காளை, ஆழ்ந்தும் உறுதியாக நிலைத்தும்.

இருக்கட்டும், வேசி மகனே! கத்தியை முலேட்டாவிலிருந்து மானுயல் உருவினான். அதே அசைவுடன் குறி பார்த்தான், காளை மீது விழுந்தான். கத்தி நேராக உள்ளே போவதை அவன் உணர்ந்தான். கை பிடி வரைக்கும். நாலு விரலும் கட்டை விரலும் காளைக்குள்ளே . அவன் விரல் கணுக்களில் ரத்தம் சுட்டது. அவன் காளைக்கு மேலே இருந்தான். அவன் அதன் மேல் கிடந்த நிலையிலேயே காளை அவனோடேயே சாய்ந்தது. ஒடுங்கினது போல தோன்றினது. அவன் விடுபட்டு விலகி நின்றான். காளை ஒரு பக்கமாக சரிந்து விடுவதை அவன் பார்த்தான். பிறகு திடீரென நாலுகாலும் உயரே.

பிறகு அவன் ஜனங்களை பார்த்து சமிக்ஞை செய்தான். அவன் கை காளையின் ரத்தத்தால் வெது வெதுப்பாக இருந்தது.

சரி, சரி, வேசி மகன்களா ! அவன் ஏதோ சொல்ல விரும்பினான். ஆனால் அவன் இரும ஆரம்: பித்தான். எரிப்பாகவும் மூச்சடைப்பதாகவும் இருந்தது. கீழே முலேட்டாவைத் தேடினான். மேலே போய் பிரசிடெண்டை வணங்க வேண்டும். தொலை யட்டும் பிரசிடெண்ட்! அவன் கீழே உட்கார்ந்து எதையோ பார்த்து இருந்தான். காளையைத் தான். நாலு காலும் உயரே. அடி நாக்கு வெளியே. அதன் அடி வயிற்றைச் சுற்றியும் கால்களுக்கு அடியிலும் ஏதேதோ ஊர்ந்து கொண்டிருந்தன. மயிர் விலத்தியாக இருந்த இடத்தில் எல்லாம். நாசமாகப் போன காளை ! எல்லாரும் நாசமாகப் போகட்டும் பாதம் - ஊன்றி எழ முயன்றான். இரும ஆரம்பித்தான். இருமிண்டே கீழே உட்கார்ந்தான். யாரோ வந்து அவனை தூக்கினார்கள். கோதாவை கடந்து வைத்திய அறைக்கு தூக்கிச் சென்றார்கள். மணலை கடந்து ஓட்ட நடையில் போனார்கள். எதிரே வந்த கோவேறு கழுதைகளால் வழி தடைபட்டு கதவு அருகில் நின்றார்கள். பிறகு இருண்ட நடைபாதை வழியே, பெருமூச்சுடன் மாடிப்படி ஏறிச் சென்று கீழே கிடத்தினார்கள்.

டாக்டரும் வெள்ளை உடை அணிந்த இருவரும் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அவனை மேஜை மீது படுக்க வைத்தார்கள். அவன் ஷர்ட்டை கத்தரித்தார்கள். மானுயல் அலுத்துப் போயிருந்தான். அவன் நெஞ்சுக்குள் புண்ணாய் வலித்தது. அவன் இரும ஆரம்பித்தான். அவர்கள் எதையோ வாய்க்குநேரே பிடித்தார்கள். ஒவ்வொருவரும் வேலையாக இருந்தார்கள்.

அவன் கண்கள் மீது எலக்டிரிக் விளக்கு வெளிச்சம் பட்டது. அவன் கண்களை மூடிக்கொண் டான்.

மாடி ஏறி யாரோ அழுத்த நடை போட்டு வருவது கேட்டது அவனுக்கு. அதற்கு மேல் அது காதில் விழவில்லை. அப்புறம் தள்ளி ஒரு இரைச்சல் தேட்டது. அது ஜனங்கள் சரி, வேறு யாராவது தன் மற்ற காளையை கொல்ல வேண்டி இருக் கும். அவன் முழு ஷர்ட்டையும் கத்தரித்து எடுத்து விட்டார்கள். டாக்டர் அவனைப் பார்த்து சிரித்தார். அங்கே இருந்தான் ரெடனா.

ஹல்லோ , ரெடனா!' என்றான் மானுயல். அவன் குரலை அவன் கேட்க முடியவில்லை.

ரெடனா அவனைப் பார்த்து சிரித்தான், ஏதோ சொன்னான். மானுயல் அதை கேட்க முடியவில்லை.

ஜூரிட்டோ மேஜை அருகில் நின்றிருந்தான். டாக்டர்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் குனிந்து கொண்டு. அவன் பிகடார் உடையில், தொப்பி மட்டும் இல்லாமல் இருந்தான்.

ஐரிட்டோ ரெடனாவிடம் பேசிக் கொண்டிருந் தான். வெள்ளை உடை அணிந்தவர்களில் ஒருவன் புன்னகைத்து ரெடனாவிடம் கத்தரிக்கோலை கொடுத்தான். ரெடனா அதை ஜூரிட்டோவிடம் தந்தான். ஜூரிட்டோ மானுயல்விடம் ஏதோ சொன்னான். அதை கேட்க முடியவில்லை அவனால்.

நாசமாப்போன ஆபரேஷன் இதுக்கு முன் தான் எத்தனையோ ஆபரேஷன் மேஜைகள் மீது படுத்திருக்கிறான். தான் சாகப் போவதில்லை. தான் சாகப் போவதானால் ஒரு புரோகிதர் இருப்பாரே,

ஜூரிட்டோ அவனிடம் எதோ சொன்னான். கத்தரிக்கோலை பிடித்துக்கொண்டு.

அதேதான். அவர்கள் அவன் 'கொலேட்டாவை வெட்டப் போகிறார்கள். அவன் பின்னலை கத்தரிக்கப் போகிறார்கள்.

மானுயல் ஆபரேஷன் மேஜை மீது எழுந்து உட்கார்ந்தான். டாக்டர் எரிச்சலுடன் பின்னரித்தார். ஒருவர் அவனை பற்றி பிடித்துக்கொண்டார்.

அந்த மாதிரி காரியத்தை நீங்கள் செய்ய முடியாது' என்றான் அவன்.

உடனே, தெளிவாக, ஜூரிட்டோவின் குரல் அவனுக்குக் கேட்டது.

'அது சரி, என்றான் ஜூரிட்டோ . 'நான் செய்ய மாட்டேன். தமாஷ் பண்ணினேன் !''

'நான் நன்றாகத்தான் வேலை செய்தேன், என்றான் மானுயல். 'அதிர்ஷ்ட ம் இல்லை எனக்கு அவ்வளவுதான்!

மானுயல் மீண்டும் படுத்தான். அவன் முகத்தின் மேல் எதையோ வைத்தார்கள், அதெல்லாம் பழக்கமானது தான். பலமாக மூச்சிழுத்தான். தான் ரொம்ப களைத்துப் போனதை உணர்ந்தான். ரொம்ப ரொம்ப களைத்துப் போய். முகத்திலிருந்து அந்த சாமானை எடுத்தார்கள்.

'நான் நன்றாகத்தான் வேலை செய்தேன், 'மானுயல் பலஹீனமாகச் சொன்னான். நான் பிரமாதமாகத்தான் செய்தேன்.''

ரெடனா ஐரிட்டோவை பார்த்துவிட்டு கதவை நோக்கி புறப்பட்டான்.

'நான் அவனோடு இங்கேயே இருக்கப் போகிறேன்,'' என்றான் ஜூரிட்டோ .

ரெடனா தோள்களை குலுக்கிக் கொண்டான்.

மானுயல் கண் திறந்து ஜூரிட்டோவை பார்த்தான்.

'நான் நல்ல வேலை செய்தேன் இல்லையா, மனோஸ்' என்று உறுதிப்படுத்திக் கேட்டான்.

'நிச்சயமாய்,'' என்றான் ஜூரிட்டோ . 'நீ பிரமாதமாகத் தான் செய்தாய்.'

டாக்டரின் துணையாள் மானுல் முகத்தின் மீது ஒன்றை வைத்தான். அவன் ஆழ்ந்து மூச்சிழுத்தான். ஜூரிட்டோ, கவனித்துக் கொண்டே அவதியுடன் நின்றிருந்தான்.
********************************

விசாரணை-தி. சோ. வேணுகோபாலன் 

தத்துவந்தானே? வெங்காயம் ! 
போடா! போ!
மூடியதை மூடிப்
பின் மூடி ?..... முடிவா ?....
உரித்தால் ? மேலும் உரித்தால் ?
கண்ணீர் கொட்டும்
முட்டாளுக்கு உருக்கம்;
மூளை மோதினால்
தலைக்குத் தேங்காய் !
உனக்கும் எனக்கும்
முடிந்தால்
இதயத்துக்கு மருந்து :
அனேகருக்கு
வயிற்றை நிரப்ப
வேகும் கூத்துத்தான் !
வெட்டித்தனமாய்
வேடிக்கையாய்
அட! வீம்புக்குத்தான்
வைத்தாலும்
தோலுரிக்கும் தொல்லையன்றி
வேறென்ன கண்டபயன்?
முட்டி மோதி முடிந்த மட்டும்
பார்த்து
முக்கித் திணறி முடிவில்
சிக்காத சிக்கல் என்று
நடையைக் கட்டும்
வேலை !

தி. சோ. வேணுகோபாலன்
எழுத்து