Pages

Tuesday, December 11, 2018

கடலில் ஒரு கலைஞன் - சுந்தர ராமசாமி

கடலில் ஒரு கலைஞன்
சுந்தர ராமசாமி

கடலோரம்
அலை ஓயக்.
காத்திருந்தான்
ஒருவன்.
பின்னர்,
கடலலைகள்
ஓயா நிலை கண்டு,
தன்னுள்,
ஆழக் குழிக்குள்
நுரை கக்கும்
அலைகள்
பல அடக்க
கடலோரம்
காத்திருந்தான் .
நெடுங்காலம்.

நெடுங்காலம்
காத்திருந்தும்
கடலலை ஓயா
நிலை கண்டு,
ஆசை அலை ஓயத்
தவஞ் செய்தான்.

'ஆசை அலை ஓய
காம அலை ஓய
காம அலை ஓய
எண்ண அலை ஓயத்
தவஞ் செய்தான்.

எண்ண அலை ஓய,
தான் எனும்
அகந்தை அலை
அழிந் தொழிய,
அவனும்
செத் தொழிந்து
மறைந்தான்.

கடலலையோ
அன்று போல்
இன்றும்
நான் தான் என

அகங்கரித்து,
நான் நான் என
ஓயாது அரற்றி
நிமிர்ந்தெழுந்து
இருப்பிடம் காட்டி,
தன்னில், தான்
கரைய மறுத்து,
உருண்டு திரண்டு
கரையேற முன்னி,
கரங்கள் ஆயிரமாய் வீசி
படையணிகள் பல வகுத்து
பத்திகள் பலப் பலவாய் விரித்து,
சீறிச் சுருண்டு
கரை பிடிக்க உன்னி,
பள்ளம் பின்னிழுக்க
நேசப் படை நடு வழியில்
பின் திரும்பி மோத
வேகம் இழந்தும்
மனஞ்சோர மறுத்து
நம் பாதம் அணைய
விரைந்து தவழ்ந்தேறி
நீசக் கரை வாங்கும் வாங்கில்
கபோலம் விடலாய்ச் சிதற
சதகோடி முத்தாய்
சிந்திச் சிதறி
தன்னில் தான் கரையும் வேளை
பொசுக் கென வீசும் காற்றின்
முதுகு பிடித்தெப்படியோ ஏறி
குடைந் தெழுந்து
உருண்டு திரண்டு உருவங் கொண்டு
தன் முகங் காட்டத்
துடி துடித்து
வாழத் துடி துடிக்கும்
அலையே,
நீயும் நீரே?

எனினும்,
உன்னில் கரைந்த
உப்போ
வெறும் உப்பே!