Pages

Sunday, December 01, 2019

சிதறியபடி ரூபங்கள் - தமிழவன்



1. சிதறியபடி ரூபங்கள் - தமிழவன்

மதியத்தை நெருங்கிய நேரம்தான். வெயில், உடலில் புகுந்திருந்த குளிரை இதமாய் தடவிக் கொடுத்துக்கொண் டிருந்தது. மரங்களும் வீடுகளும் தென்னை ஓலைகளின் பளிச்சிடலும் கார்களும் வாகனங்களும் தந்திக் கம்பிகள் ஊடாகத் தெரிந்தன. நேராக ஊடுருவிச் செல்லும் மின்சாரக் கம்பிகளும் எங்கோ போய்க் கொண்டிருந்தன. பாதை ஒன்று நேராகப் போனது. அது 'ட' போல் வளைகையில் இன்னொரு பாதை வந்து தொட்டது. ஒரு வாகனம் இந்தப் பாதைகளை எல்லாம் கடந்து சென்றது. வேறு பல வாகனங்கள் அம்புக் குறிகளைப் பார்த்து வளைந்து போய் இன்னொரு திசையில் சென்று கொண் டிருந்தன. 

அது என்ன மொழி என்று புரியவில்லை. ஜனங்கள் அந்தக் கடுமையான மொழியைச் சிரித்தபடி பேசினார் கள். பெரும்பாலும் பாம்பு போல் அதன் வரிவடிவும் கிடைக்கோட்டில் வளைந்து நெளிந்து காட்சி தந்தது. என் வாகனத்தின் பின்புறம் அப்பிக் கொண்டிருந்த நபர் இன்னொரு தேசத்திலிருந்து வந்தவர். நடந்து கொண்டி ருந்த மக்கள் கிளர்ச்சி பற்றி ஒரு மணி நேரத்திற்கு முன் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கும் வேறு தேச அரசிய லுக்குமுள்ள தொடர்பு பற்றிச் சொன்னார். அவரது நாட்டிலும் உள்ள அந்த அந்நிய மொழி இந்த தேசத்தின் மொழிபோல் புரியாததும் பாம்புபோல் ஊர்ந்து செல்லும் 

தன்மை கொண்டதும் தான் என்றார். ஒரு நாள் அந்தப் பாம்பு போன்ற மொழி நகர்ந்தது என்றும், அந்த மொழியின் பாம்பு வடிவத்திலிருந்து இரண்டு துளி விஷம் வெளிப்பட்டதைத் தன் சகா கண்டான் என்றும் சொன்ன போது எனக்கும் அந்நிய மொழிகளின் பாம்பு போன்ற நகர்தல் பற்றிய தெளிவு உண்டாகியிருந்தது. 

'ட' வளைவின் பிரதான பகுதியை என் சிறுவாகனம் கடந்து இன்னொரு வளைவின் ஆரம்பத்தைத் தொட்டது. நான் தரையில் கோடுகள் உண்டா , அம்புக் குறிகள் உண்டா, மஞ்சள் வெள்ளை ரேகைகள் உண்டா என்று ஆராய்கையில் பின்னால் இருந்து எருமைமாடு பேசுவது போல் விசில் கேட்டது. நான் அதிர்ந்து நின்றேன். பிற வாகனங்கள் வட்டமடித்தும், ஓரம் நகர்ந்தும், மெல்லவும் வேகம் கூட்டியும் சென்று கொண்டிருந்த போது போலீஸ் துறையைச் சார்ந்த இருவர் ஒரு பெரிய வாகனத் தில் வந்து என்னை மடக்கினர். 

மஞ்சள் கோடுகள் தரையில் உள்ளதைச் சுட்டினேன். ஒருவன் என் சட்டையைப் பற்றி இழுத்தான். நான் என் வாகனத்துடன் நகர்ந்து அவன் பின்னால் சென்றேன். உரத்த குரலில் பேசினான். நான் புன்னகைத்தேன். அவனது மொழியின் ரகசிய எண்களைக் கேட்டான். நான் தெரியாது என்றேன். அந்நியனா என்றான். ஆம் என்றேன். இந்த ஊர் விதிகள்...என்றான். தெரியாது என்றேன். வாகனத்தின் எண்ணைக் குறித்தான். சிவப்பும் பச்சையும் நிறம் பூசிய அட்டையைக் கொடுத்து அந்தத் தேசத்தின் சிவப்புப் பச்சை நிறம் பூசிய கட்டிடத் தின் நீதிபதியை மறு நாள் சந்திக்கக் கூறினான். முடியாது என்று சொல்லலாமா என்று யோசித்தபோது என் வாகனத்துடன் வந்த என் நண்பர் முகம் கடுகடுப்பாக இருந்ததைக் கவனித்தேன். நான் பின் மௌனமானேன். வந்த அவ்விருவரும் போலீஸ் வாகனத்தில் புறப்பட்டனர். அவ்வாகனம் குதிரை போல் துள்ளித் துள்ளிப் புறப்பட்டது.பின்னால் இருந்த போலீஸ்காரன் ஒற்றைக்கண்ணன் என்பதை அப்போதுதான் கண்டேன். மின்னலென மறையும் நேரத்தில் அவன் கண்ணடித்தான். அது எதற்கு என்று இன்று தான் புரிகிறது. நான் பின்பு வளைவுகளைக் கவனமாகக் கடந்தேன். சிவப்பும் கறுப்புமாக கோடு களால் அலங்கரிக்கப்பட்ட பள்ளத்தில் இருந்த கட்டிடத் திற்கு வந்தேன். அங்குப் பல உடைந்த லாரிகளை அடுக்கியிருந்தார்கள். அருகில் ஒரு போர்டு மாட்டியிருந்தார்கள். புல்வெளியில் ஒரு தார் டப்பாவிலிருந்து தார் வடிந்து அந்த வெயிலில் உருகிக் கொண்டிருந்தது. என் வாகனத் தைக் கருநீல வர்ணக் கோடுகளுக்கிடையில் நிறுத்தினேன். என் வாகனத்துடன் ஒட்டியபடி இருந்த நண்பர் முகத்தைப் பார்த்தேன். சட்டம் ஒழுங்கைக் கவனித்து வரும் நபர்கள் அவரது நாட்டிலும் எருமை போல் பேசும் கருவியை வைத்திருப்பதையும் ஒற்றைக் கண்ணர்கள் நிறைந்திருப்பதையும் சொன்னார். பின்பு நான் போலீஸ் கொடுத்த அட்டையைப் படித்தேன். அதில் அன்றே சென்று சிவப்பு வெள்ளைக் கட்டிடத்தில் நீதிபதியைப் பார்க்க வேண்டுமென்றும் பார்க்காத பட்சத்தில் வேட்டை நாய் போல் நான் கல்லாலடித்துக் கொல்லப் படுவேனென்றும் அடையாளக் குறிகளால் சுட்டப்பட்டி ருந்தது. அட்டையைக் கவனித்த நண்பரைப் பார்த்தேன். கல்லால் அடிபடுவது பெரிதல்ல என்பது போல் பார்த் தார். நான் அவர் கருத்துடன் உடன்பட முடியாமல் இருப்பதைச் சொன்னேன். அன்றே நீதிபதியைப் பார்த்துவிட வேண்டும் என்றேன். அப்படியாயின் மறு நாள் என்னைச் சந்திப்பதாய்க் கூறிய நண்பர் நகரின் பிரதான சாலையில் போகும் ஊர்தி நிலையத்துக்குக் கிளம்பினார். 

என் வாகனம் அதன் பாட்டில் உறுமியது. என் வாகனத்தின் வேகக் கருவியைத் திருகிவிட்டு நேர் எதிர்த் திசையில் புறப்பட்டேன். இடையில் இரு இடங்களில் 
'யு' வளைவுகளில் வளைந்தேன். அதன்பின் மூன்று இடங் களில் சிவப்பு நிறம் கண்டு பயந்தவர்களுடன் நானும் பயந்து வாகனத்தை இயக்கும் இயக்கியை நிறுத்தினேன். சூரியன் இப்போதும் இதமாக உடலில் உறைத்துக்கொண் டிருந்தது. ஒரு பெரிய மரம் அடங்கிய பழைய காலக் கட்டிடத்தைக் கண்டதும் வாகனத்தை இடதுபுறமாய் வளைத்துக் காம்பவுண்டுக்குள் நுழைந்தேன். ஒரே ஒரு போலீஸ்காரன் நின்றான். அவனிடம் அட்டையைக் காட்டினேன். அவன் கையால் எதிர் திசையில் ஒரு மாடிப் படியைச் சுட்டினான். அதன் பின் போலீஸ்காரன் குனிந்து அவனது காலில் இருக்கும் புண்ணைச் சொறிந்து இன்பம் காண நான் மிகக் கவனமாக அவன் கண்களை ஆராய்ந்து பார்த்தேன். கண்ணடிக்கவில்லை அவன். ஓடுகள் அங்கு மிங்கும் சிதறிக் கிடந்த மாடிப்படிகளில் ஏறினேன். ஜனங்கள் பலப்பல குரல்களில் பேசிக்கொண்டே கீழும் மேலும் இறங்கவும் ஏறவும் செய்தனர். அட்டை எண்ணைப் பார்த்தேன். பின் சரியாக எண் பிரகாரம் ஓர் அறைமுன் சென்றேன். அங்குப் பலர் ஜன்னல் கம்பி களில் தொத்தியபடி இருந்தனர். பெரும்பாலும் எல் லோரும் மஞ்சள் சட்டை அணிந்திருந்தனர். ஒரு போலீஸ் காரன் பல மஞ்சள் சட்டைகளைத் தள்ளினான். ஒருவனை முகத்தில் குத்தினான். குத்து வாங்கிய மஞ்சள் சட்டை எதிர்க்கவில்லை. ஒரு நூறு பேராவது அந்த அறையை மொய்த்திருந்தனர். உள்ளிருந்து எலும்பு மனிதன் ஒருவன் வெளியே வந்தான், உடனே அவனைச் சிலர் மொய்த்தனர். அவன் அவர்களை இழுத்துக் கொண்டே வெளிவாசலுக்குப் போனான். நானும் அவனைத் தொடர்ந்தேன். அவன் கண் அடித்தான். பலர் கையில் ரூபாய்களை வைத்து அழுத்தினர். நானும் எனது அட்டையைக் கொடுத்துக் கையில் ரூபாயை வைத்தேன். எல்லோரிடமும் சிரித்தபடியே அவன் இருந்தான். அதற்கு மிக அன்பானவனாய் அவன் இருந்தது தான் காரண என்றனர் சிலர். நீதிபதி வந்து விடுவார் என்ற செய்தியையும் முதன் முதலில் எனக்குச் சொன்னவன் அவன் தான். 

ஜன்னல் கம்பி ஒன்றில் பிடித்துத் தொங்கிக் கொண் டிருக்க வேண்டும் என்றும் பெயர் அழைக்கப்பட்டவுடன் தாவி உள் நுழைந்துவிட்டால் நீதிபதியின் தண்டனை கிடைத்துவிடும் என்றும் கூறினார்கள். எனக்கு ஆசுவாசம் வந்தது. பலர் தண்டனை முடிந்ததும் போய்விடலாமே என்று காத்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் ஆன பிறகு புரிந்து கொண்டேன்; அவர்கள் அத்தனை பேரும் எருமைமாடு போல் பேசும் விசிலால் நிறுத்தி அட்டை கொடுக்கப்பட்டவர்கள் என்று. அவர்களில் ஒருவன் அந்நியன் என்பதைக் கண்டு அவனருகில் சென்றேன். அவன் முதலில் அழுதான். தான் தவறு செய்யவில்லை என்றும் ஏன் அட்டை கொடுக்கப்பட்டான் என்றும் விசனத்தோடு கேட்டான். நான், அப்படித்தான் என்றேன். என் பதில் அவனைத் திருப்திப்படுத்தியிருக்க வேண்டும். கண்ணீரைத் துடைத்தபடி ஒரு ஜன்னல் கம்பியில் ஏறித் தொத்திக் கொண்டான். அந்தக் கும்பலில் நோட்டம் விட்டபோது என்னைப்போல் மஞ்சள் சட்டை போடாதவர்கள் ஒரு சிலரே இருந்தோம். மஞ்சள் சட்டைக்காரன் ஒருவனை அழைத்தனர். அப்போ திருந்து எல்லோரும் அழைக்கப்படும் குரலைக் கவனித் தனர். இடையிடையே பல பெயர்கள் அழைக்கப்பட்டன. ஒருவன் தனது காதுகளைப் பறி கொடுத்து நீதி மன்றத் திலிருந்து புறப்பட்டதாய் சொன்னார்கள். எனக்கு முகத்தில் பயம் பரவியது. நீதிபதி, காதுகளை வெட்ட எப்படி உரிமை உள்ளவர் என்பது எனக்குத் தெளிவாக வில்லை. வேறு சிலர் முகம் கறுத்து வெளியேறினர். அவர்கள் சாட்டை அடிக்கு உட்பட்டிருக்கலாம் என்றார் கள். இடையில் ஏதோவொரு பெயர் அழைக்கப்பட்டது. நான் என் பெயரை நினைத்துக் கூட்டத்தில் நுழைந்தேன். நெரிசலில் புகுந்து பாதி செல்கையில் அது என் பெயரா என்று கேட்டவுடன் வாசலில் நின்ற எலும்பு மனிதன் புன்னகையுடன் 'இல்லை' என்றான். இன்று இரவுக்குள் தண்டனை பெற்றுவிட வேண்டும் என எல்லோரும் கூறிக் கொண்டனர். நாளை நாடு தழுவிய மரண தண்டனை விதிக்கப்படும் என்று வதந்தி என்றும் கூறினார்கள். எனக்கு ஏதும் புரியவில்லை. வந்தபோதிருந்த உற்சாகம் எனக்கு இப்போது இல்லை. எனக்குத் தண்டனை என்ன என்று யோசித்தபோது என் குற்றம் பெரிதல்ல என்று எண்ணிக் கொண்டேன். என்றாலும் காது போகும் தண்டனை இந்த நூற்றாண்டிலும் இருப்பதை நினைத்துத் துணுக்குற்றேன். 

'ஜாப் அப் கப்'- காதுகள் நீளமான ஒருவன் வந்து அழைத்தான். தன் பெயரைக் கேட்டு ஒரு மஞ்சள் சட்டை உள்ளே நுழைந்தான். மிக விரைவில் அவன் வெளியே வந்தபோது தன் நகங்களை வெட்டி சுத்தம் செய்து அனுப்பினர் என்றான். பல மஞ்சள் சட்டைகள் அவ மானம், அவமானம் என்று முகம் சுளித்தனர். அது எப்படி அவமானமாகும், சுகாதார நிபுணர்கள் பரிந் துரை செய்யும் காரியமாயிற்றே என ஒருவனிடம் கேட்க அவன் அந்த ஊரில் அவமானகரமான விஷயங்கள் பல பிற ஊர்களில் அப்படி இல்லை என்றான். பலர் வாசலை நெருக்கினர். அப்போது ஒருவன் ஜன்னல் கம்பி யிலிருந்து கீழே விழுந்தான். மீண்டும் குரங்குபோல் ஏறி கடலையைத் தின்னலானான். தரை எங்கும் வெற்றி லையைத் துப்பிப் போட்டிருந்தனர். ஒரு போலீஸ்காரன் வாசலருகில் நின்ற மரத்தருகே வந்தான். பலர் அவனைக் குழும, அவன் கண்ணடித்தான். அவன் கையில் ஒரு கத்தை நோட்டுக்கள் புகுந்தன. அவன் கண்ணடித்த படியே நீதிபதியின் அறைக்குள் நுழைந்தான். இப்போது அழைத்த பெயரும் என்னுடையதல்ல. என் பொறுமை எல்லை மீறியதால் தலைவலிக்க ஆரம்பித்தது. ஏதேனும் காபியோ சிகரெட்டோ வாங்க அந்த இடத்திலிருந்து போக முடியாது. காரணம், அந்த நேரத்தில் பாவி நீதிபதி என் பெயரை அழைத்து விட்டால் நான் சிறைத் தண்ட னைக்கு ஆளாக்கப்படுவேன். மஞ்சள் சட்டைக்காரர்கள் வழக்கமாய் வந்து தண்டனை பெறுவார்கள். அதனால் வரும்போதே கடலை, சிகரெட் முதலியவற்றைக் கொண்டு வந்தனர். வெயில் அந்த அறை வாசலில் அடிக்கவில்லை. குளிர் உடலிலிருந்து வெளியேறியது. வெயில் , இருந்தால் இதமாக இருக்கும். இன்னொருவனை நீதிபதி அழைத் தார். அது என் பெயரா என்று கவனித்தேன். இல்லை. எனக்குத் தலைவலி கூடியது. நெற்றிப்பொட்டை நெருக்கினேன்; பல்லைக் கடித்துக் கொண்டேன். எந்த நேரமும் என் பெயரை நீதிபதி அழைக்கலாம். காத் திருப்பது ஒன்றுதான் வழி. வேறு எந்த வழியும் இல்லாத படி உள்ள ஒரே வழி. இந்தத் தேசத்தின் இந்தவித விநோத சட்டம் எனக்கு அறவே பிடிக்கவில்லை. 

'ராம்குமார்'. 

இது என் பெயர் இல்லை என்று சொல்லிக்கொண் டேன். நீதிபதி என் பெயரை அழைப்பதில்லை என்று 

முடிவெடுத்துள்ளாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் இந்த இடத்தைவிட்டு நான் நகர முடியாது. இந்த இடத்தில் நான் செத்து விழ வேண்டும். எனக்கு அலுப்பாகவும் ஆயாசமாகவும் இருந்தது. 

மீண்டும் ஏதோ ஒரு பெயர். எனக்கு என் பெயர் போல் கேட்டது. நெரிசலைத் தள்ளிக்கொண்டு முன்னேறினேன். கதவருகில் இருந்த ஒருவன் உள்ளே புகுந்து நீதிபதியை வணங்கியது கண்டு பின் என் இடத்திற்கு வந்தேன். என் பெயர் இல்லை. கம்பிகளில் தொத்திக்கொண்டிருந்த போது எனக்கொரு புதிய சந்தேகம் வந்தது. ஏன் என் விசித்திரமான பெயரை இவர்கள் முதலிலேயே அழைத் திருக்கக்கூடாது? இப்போது பல பெயர்கள் காதில் விழாதது போலவே அதுவும் காதில் விழாது போயிருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்படியென்றால் எனக்கு மரண தண்டனை நாளை கிடைக்குமா? எனக்கு எங்கோ தொடை நரம்புகள் சுண்டி இழுத்தது போல் இருந்தன. இப்போதும் கூட்டத்தினரின் அருவருப்பும் எரிச்சலும் அதிகமாகிக் கொண்டிருந்தன. எல்லோரும் அந்த இடத் தில் குழுமி இப்போது சரியாக ஆறுமணி நேரமாகி விட்டது. என் சிறுநீர் உபாதை வேறு தொந்தரவு தந்தது. என் பெயரை நீதிபதி அடுத்து அழைத்துவிட்டால் எவ் வளவு திருப்தியாக இருக்கும். என் இன்னொரு மனசு என்னிடம் கேட்டது. உன் பெயரை அழைக்கவில்லை என்று உனக்கு உறுதியாகத் தெரியுமா? இனம் தெரியாத உணர்வில் கிடந்து வதைப்பட்டேன். 

இன்னொருவன் ஜன்னல் கம்பிகளிலிருந்து கழன்று பொத்தென்று விழுந்தான். அப்போது நேரம் மாலையாகி விட்டது. தங்கள் மனைவி பிள்ளைகளை பார்க்க விரும் பிய மஞ்சள் சட்டைகள் கோபம் கொண்டிருந்தார்கள். வாசலில் ஒரு போலீஸ்காரன் நெருக்கியடித்த கும்பலைத் தனது கைத்தடியால் ஓங்கி அடித்தான். ஷேவ் செய்ய முடியாதபடி அகன்ற முகம் கொண்ட ஒரு மஞ்சள் சட்டை யின் தலையிலிருந்து இரத்தம் பொங்கி வழிந்தது. சிரித் தான் அவன். இடையில் அழைத்த பெயரை உன்னிப் பாகக் கேட்டபடி பின் போலீஸ்காரனைக் காறித் துப்பி னான். கைத்தடியால் போலீஸ்காரன் மீண்டும் ஒருமுறை அடித்தான். அதன் பிறகு மஞ்சள் சட்டை துப்பவில்லை. அது கூடாது என்பதால் அல்ல. அது தனக்கு வசதியான நிலைமையை அன்று தராது என்பதால்தான். 

எனக்கு ஏது செய்வது என்று புரியவில்லை. அப்படியே தலைப்பொட்டைப் பிடித்தபடி அமர்ந்திருந்தேன். என் பெயரை அழைத்தார்களா என்று யாரிடம் சேட்பது? அவர் களின் மொழி கொஞ்சமும் எனக்குத் தெரிந்திருக் கவே இல்லை. எதற்கும் ஒரே ஒரு காரியம் செய்யலாம். இனி உள்ள பெயர்களை அதிசிரத்தையாய் கேட்க வேண்டும். அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அழைக்கப் படும் பெயர்களின் சப்தத்தை வாங்கிக்கொண்டேன். 

கொஞ்ச நேரத்தில் மீண்டும் கவனம் பிசகியதை உணர்ந் தேன். அந்த மாதிரி பிசகியிருந்த நேரத்தில் என் பெயரை அழைத்து விட்டிருந்தால்? 

லேசாக சைகை மூலம் ஒருவனிடம் கேட்டேன். அவன் ஒரு கிழிந்த மஞ்சள் சட்டை . அவன் கால் புண்ணை ஈ பாதி தின்று தீர்த்திருந்தது. மீதியையும் சற்று நேரத்தில் தீர்த்துவிடும். 

* என் பெயரை அழைத்தார்களா' 'என்ன பெயர்?' 'பாக்குவின்ஸ்ப் ' 

அவன் உரக்கக் கத்திச் சிரித்தான். ஏ கேளுங்கப்பா, இங்க ஒருத்தன் பெயர் 'பாக்குவின்ஸ்ப்' 'பாக்குவின்ஸ்ப்' என்றான். எல்லோரும் என்னை அருவருப்பாகப் பார்த் தார்கள். 'பாக்குவின்ஸ்ப்!' எல்லோர் இதழ்க்கடைகளும் கேலியாகச் சுழன்றன. இலேசாக இருட்டத் தொடங்கி யிருந்தது. எங்கே இரவு நேரத்தில் தேசத்தில் நீதி பரிபா லனம் நடக்காமல் போய் விடுமோ என்று நினைக்கும் ஊர் அது. எனவே நீதிபதி இரவு இருப்பார். என் மூத்திரக் காய்கள் இறுகிக் கொண்டிருந்தன. நெற்றிப் பொட்டு வலி இப்போது இல்லை. மூத்திரக்காய் வலியும் நெற்றிப் பொட்டு வலியும் சேர்ந்து உடல் உணர்வுகள் மரத்துப் போயிருந்தன. 

அந்த நேரத்தில் எலும்பு மனிதன் உள்ளிருந்து கூவினான். 

'பாக்கு இனி சுப்பு...' 

ஓ என்று எல்லோரும் சிரித்தனர். நான் அவனிடம் திருத்தமாகக் கேட்டேன். 'பாக்குவின்ஸ்ப்' தானே! 'இல்லை, பாக்கு இனி சுப்பு!' திருத்தமாகவே அவன் சொன்னான். நான் என் பெயராகத்தான் இருக்கும் என்று யூகித்து உள் நுழைந்தேன். நான் சுண்ணாம்புச் சுவரில் வெடிப்பு ஏற்பட்டுள்ள அறையைப் பார்த்தேன் . நீதிபதி எங்கோ பார்த்துக் கொட்டாவி விட்டார்,



நீதிபதி முன்பு போய் நிற்கையில் என் சட்டை ஒருபுறம் நன்றாகக் கிழிந்து தொங்கியிருந்தது. நேரம் ஆக ஆக, கூட்டம் நிலைகொள்ளாமல் தவித்தது. பெயர்களை வாசிக்க வாசிக்கக் கூட்டம் கூடிக்கொண்டேயிருந்தது தான் எப்படி என்று புரியவில்லை. 

என்னை இப்போது நீதிபதி நேராய்ப் பார்த்தார் . அந்தக் கணம் என் கால்சட்டை வழி ஏதோ சூடாக உணர்ந்தேன். நீதிபதிக்கு முன்பாகம் ஒரு பெஞ்சில் பேப்பர்களாக அடுக்கப்பட்டிருந்தது. நீதிபதி இருமருங்கிலும் நின்றிருந்தவர்களைக் காலால் அடிக்கடி மிதித்துக் கொண்டிருந்தார். மஞ்சள் சட்டைக்காரன் ஒருவன் நீதிபதியின் மூக்கில் ஒரு கிள்ளு கிள்ளினான், நீதிபதி சிணுங்கினார். வேறு ஒரு கண்ணில்லாதவன் நீதிபதிக்கு அருகில் காதில் ஏதோ கூறினான். நீதிபதி என்னைப் பார்த்தார். 'நீ பத்துத் தோப்புக்கரணம் போடு' என்றார். நான் தோப்புக்கரணம் போட்டு முடித்தபோது மணி இரவு 11-30, என் உபாதை தீர்ந்து விட்டது. என் சிறுநீர் தரையெங்கும் பரவியிருந்தது. நீதிபதியின் அறையில் பரவியிருந்த சகதியிலும் நாற்றத்திலும் என் சிறுநீர் வெளித்தெரிய வாய்ப்பில்லை. நான் தோப்புக்கரணம் போட்டு நாளைய மரண தண்டனைக்குத் தப்பி வாசலை நெருங்குகையில் ஒருவன், 'பாக்கு இனி சுப்பு' என்றான். எல்லோரும் கொல்லென்று சிரிக்கையில் இன்னொருவன் தொங்கிக் கொண்டு இருந்த என் கிழிந்த சட்டையைக் கீறி ஜன்னலில் தொங்கிக்கொண்டு இருந்த ஒரு மஞ்சள் சட்டையிடம் வீசினான் 

சட்டையில்லாத நான் மறுநாளைய மரண தண்டனைக்குத் தப்பிய சந்தோஷத்தில் என் வாகனத்தின் அருகில் வந்து அதை இயக்கியபோது காம்பவுண்டு அருகில் நின்ற மூக்கில்லாத ஒருவனைக் கண்டு இப்படியும் மனித ரூபங்கள் சிதைய முடியுமா என்று பயந்தேன். !