Pages

Monday, December 16, 2019

ரிஷிமூலம், ஜே. கே., மௌனி, ஜாய்ஸின் 'யுலிஸிஸ்', டால்ஸ்டாய், ராபர்ட் ம்யுஸில்,சுந்தர ராமசாமி - பிரேமிள் ::::: பேட்டி கா. சு:

பிரேமிள்
பேட்டி கண்டவர் : காலப்ரதீப் சுப்ரமணியன் (மீறல் பிரமிள் சிறப்பிதழ்)
காலப்ரதீப் சுப்ரமணியன்: சம்பிரதாயமான ஒரு கேள்வியுடன் ஆரம்பிக்கலாமா? உங்கள் எழுத்தியக்கத்தின் ‘ரிஷிமூலங்கள்' எவை? 

பிரேமிள்: நதி மூலம் ரிஷிமூலம் கேட்கக்கூடாது என்பார்கள். ஏனென்றால் அவை ரொம்பவும் எளிமையாக இருந்து விடலாம் பிரம்மாண்டமான கங்கையின் நதிமூலமான கங்கோத்ரியில் ஒரு சொட்டு நீர் தான் அவ்வப்போது ஜனிக்கிறது. இதை ஞாபகத்தில் வைத்து என் பதிலைப் பார்க்க வேண்டும்... என் தாயாரின் மூதாதைகளிடையே ஆசுகவிகள் இருந்திருக்கின்றனர். தாயார் கூட, எழுதப் படிக்கத் தெரிந்திருக்காவிட்டாலும் நுட்பமான ரசனையும் கவியுணர்வும் கொண்டவர். அவர் பேசும்போதும் சரி சண்டையிடும் போதும் சரி, சில வேளைகளில் அவர் சொல்கிறவை அசாதாரணமாக இருக்கும். இயற்கை, செடிகள், பிராணிகள் மீது அவருக்கிருந்த வாஞ்சைகூட ஒரு கவியுள்ளத்தினைத்தான் காட்டுகிறது. கடுமையான வறுமை, என் ஐந்து வயதிலிருந்து அவ்வப்போது தகப்பனாரால் கைவிடப்பட்ட நிலை, அயலகத்துப் பூசகர்களின் நிலப்பறிப்புகள், நாளாந்த வன்முறைகளுக்கு இலக்காக்கும் சூழல் -- இவை யாவற்றினூடேயும் என் தாயாரின் இந்த ஆழ்ந்த குணாதிசயங்கள் என்னைச் சூழ்ந்து நீடித் திருக்கின்றன. தகப்பனார் கோணத்திலிருந்து இத்தகைய ஆழங்கள் எதுவும் கிடைத்ததில்லை. அவரால் மிகவும் வருத்தப்பட்ட என் தாயின் நிராதரவு தான் என் உணர் வுலகத்தினை நெய்திருக்கிறது என்றும், நிராதரவாக நிற்கும் சீரிய - மதிப்பீடுகளைப் பாதுகாக்க முனையும் என் எழுத் தியக்கத்துக்கு இது ஒரு மனோதத்துவ ரிஷிமூலம் ஆகலாம் என்றும் தோன்றுகிறது.

கா. சு: மிகவும் ஆழமும் கருத்துச்செறிவும் கொண்ட கவிதைகளை எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் கவிதை எழுதும்படி தூண்டிய ஆரம்ப உந்துதல்கள் எவை?

பிரேமிள்: உயர் நிலைப்பள்ளியில் எனக்கு வயது சுமார் பதினைந்து இருக்கும்போது, தமிழாசிரியர் பெ. பொ. சிவசேகரம், எங்கள் கிளாஸிற்கு விசித்திரமான 'ஹோம் ஒர்க்' ஒன்று கொடுத்தார். அப்போது பிரபலமாக இருந்த குழந்தைக்கவிஞர் 'அழ. வள்ளியப்பா' எழுதிய 'பூந்தோட்டம்' என்ற கவிதையைப் படித்து ரசித்துக் காட்டினார். (பெ.பொ. சிவசேகரம் 'திருக்கோணமலைக்கவிராயர்' என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர் என்பதை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். மரபு மாடலில்தான்.] ‘பூந்தோட்டம்' குழந்தைகளுக்கான மரபு மாடல் - இதே போல் எங்கள் ராமகிருஷ்ண மிஷன் ஸ்கூலுக்கு எதிரில் இருந்த பெரிய மைதானத்தைப் பற்றி ஒவ்வொருவரும் கவிதைகள் எழுதிவரவேண்டும் என்பது 'ஹோம் ஒர்க்'. இதை நான் எளிதாக நிறைவேற்றியதுடன் ஒரு வரியும் எழுதவராமல் தவித்த வேறு சில நண்பர்களுக்கும் தனியாக எழுதித் தந்து தங்கள் கவிதை களாக ஆசிரியரிடம் தரும்படி கொடுத்திருக்கிறேன். (இவர்களுள் இப்போது சி. சிவசேகரம் என்ற பெயரில் நீங்கள் காணக்கூடிய அன்பர் அடங்கவில்லை. - அதே கிளாஸில் அவர் இருந்தார் எனினும்.] ‘விளையாட்டு மைதானம்' என்ற இந்த கவிதைதான் முதன் முதலில் நான் எழுதியது. அதுவரை இயற்கையாகவே ஓவியத்திறன் கொண்டவன் நான் என்பதுதான் கணிப்பு. இந்தக் கவிதையுடன் என் புதிய திறன் ஒன்றை நானே கண்டுபிடித் திருக்கிறேன். கவிதையின் எதுகை மோனைச் சொற்களை முதலே தீர்மானித்துவிட்டு இட்டு நிரப்பும் நண்பர் ஒருவரும் கிளாஸில் இருந்தார். அவருக்கு நான் எழுதும் இயல்பான முறை வராததால் என்னை ஒரு விசித்திரப்பிறவியாக எடுத்துக் கொள்வார். ஹோம் ஒர்க்கை படித்த பெ. பொ. சிவசேகரம் தமது கிளாஸில் குட்டி பூதங்கள் நிரம்பியிருப்பதாக கிளாஸியிலேயே சொன்ன போது என்னிடம் கவிதை வாங்கி ஹோம் ஒர்க் பண்ணினவர்கள் என்ன நினைத்தார்களோ. அவர்களுக்கு தலைவலி தீர்ந்தது - எனக்கு பிரசவ வேதனைகள் ஆரம்பித்தன - எனலாம், நாலைந்து வருஷங்களுக்குள் 'எழுத்து' வில், 1960-ல் என் கட்டுரை வந்தபோது என் சீனியர் மாணவர்கள் அதை நான் எழுதியிருக்க முடியாது என்று பெ.பொ. சிவசேகரத்திடம் கூறியதும், அவர் அதை மறுத்து, "எந்தப் புற்றில் எந்த பாம்பு இருக்கோ?" என்றதும் என் காதுக்கு வந்திருக்கின்றன. இந்த ஆரம்பம் எனது கவிதையின் வடிவம் சம்பந்தப்பட்ட மட்டுக்குத்தான். அனுபவத்தின் ஆழமும் வாழ்வைப் பற்றிய விசாரணைகளுமாக என் கவிதைகள் பொருள் ரீதியான மலர்ச்சி பெற மேலும் ஐந்து ஆண்டுகள் ஆயின. அதுவரை என் ஆரம்பகால எழுத்துக்களில் மரபின் பிரதிபலிப்புகள் தான் அதிகம். இருந்தும் அதில் கூட ஒருவித புதுமைத்தொனி இருந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அந்தக் காலகட்டத்துக் கவிதைகளை நான் பாதுகாக்கவில்லை. கா.சு: உங்களுடைய படைப்பு மனோநிலை பற்றி கூறமுடியுமா? படைக்கும் போது உங்கள் மன நிலை என்ன? பிரேமிள்: படைக்கும் போது ஒரு ஒழுங்கமைப்பை நிறைவேற்றும் நோக்கம்தான் என்னால் உணரக்கூடிய என் மனோநிலை. கூடவே சிருஷ்டிகரமான, ஆழ்ந்த கருத்துக்கள் தோன்றும் நிலை. இது தான் படைப்பியக்கத்தின் முக்கியமான களம். ஆனால் இப்படி கருத்துக்கள் பளீரெனப் பிறக்கும் போது என் மனோநிலை என் அவதானத்துக்கு உட்படுவதில்லை. மீண்டும், இவ்விதம் தோன்றுகிற கருத்துக்களை ஒரு ஒருமைப் பாட்டுக்குள் ஒழுங்கமைக்கும் இயக்கமாக மனம் செயல்படும். இதெல்லாம் திருப்திகரமாக நிறைவேறிவிட்டால், முடிவாக ஒருவிதமான சுதந்திர உணர்வு பிறக்கிறது.

கா.சு: எழுத்து மூலம் உண்மையை அடைதல் என்பது பற்றி உங்கள் பார்வை என்ன?

பிரேமிள்: உண்மையை அடைவதற்கு ஒரே வழி மௌனம் தான். எல்லா மார்க்கங்களும் அகந்தையின் பரிபூர்ணமான அடக்கத்தை - ஒடுக்கத்தைத்தான் இந்த மௌனத்துக்கு முக்கியமான ஆதாரமாக்குகின்றன. மௌனத்தை இந்திய தியான முறைகள் வெளிப்படையாக வலியுறுத்தலாம். கிறித்துவ தியானமுறை மௌனம் பற்றி ஒன்றும் குறிப்பிடாதிருக்கலாம். ஆனால் அகந்தையின் ஒடுக்கம் பற்றி எல்லா மார்க்கங்களும் ஒருமித்த பார்வையை வெளிப்படுத்துகின்றன. சரி, எழுதுவது இந்த அகந்தையின் ஒடுக்கத்தைச் சாதித்து விடுமா? ஒண்ணரைக் கவிதையை எழுதி அதை அச்சில் வரப் பார்த்துவிட்ட கவிஞர்களுக்கு அகந்தை எகிறிக் குதிப்பதுதான் தெரிகிறது. பெரிய கவிஞர்களையோ எழுத்தாளர்களையோ எடுத்துக் கொண்டால், அவர்களிடமும் பலரிடத்தில் அகந்தை நாசூக்காகக் கொலு வீற்றிருக்கக் காணலாம். எனவே கவிதை மூலம், எழுத்து மூலம் உண்மையை அடைதல் என்பது எனக்கு அபத்தமான கூற்றாகவே தோன்றுகிறது. ஆனால் எழுதும் போது, நேர்மையும், மன ஓர்மையும் உள்ள ஒருவன் தனது எழுத்தின் மூலம் வெளிப்படுகிறவற்றை - அதாவது தன்னை - அவதானிக்க ஒரு சாத்தியம் உண்டு. மனதின் களேபரமான ஓட்டத்தைச் சீராக்கும் வேலைக்குக் கூட எழுதுதல் ஒரு சாதனமாகும். (ஒவ்வொருவரும் காலையில் சில பக்கங்கள் எதையாவது எழுதி வருவது அன்றாட மனோவாழ்வைத் தெளிவுபடுத்த உதவும்.) இருந்தும் உண்மைத் தேட்டத்தைப் பொறுத்தவரை இது எல்லாம் வெறும் அ, ஆ, தான்; மிக மேலோட்டமான பயிற்சிதான்.

கா.சு: படிப்பதன் மூலம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியுமா? உண்மையை அறிய படிப்பதும் பிறர் உரையைக் கேட்பதும் உதவுமா?

பிரேமிள்: கிருஷ்ண மூர்த்தியிடம் “உங்கள் உடல் மறைந்தபிறகு உங்கள் பிரக்ஞை என்னவாகும்” என்று கேட்ட போது, 'அது அப்படியே போய்விடும். ஆனால் நீங்கள் நான் சொன்ன வற்றுடன் தொடர்பு கொண்டிருந்தால், ஒரு வேளை நீங்கள் அந்தப் பிரக்ஞையுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்," என்று சொன்னதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகப் பிரச்னைக்குரிய நுட்பமான விஷயம்; வெறுமனே இன்டலக்சுவல் லெவலில் மட்டும் தீர்மானித்து முடிவு கட்ட முடியாதது. Teachings என்று அவர் சொன்னபோது, தாம் சொன்ன வார்த்தைகளையும் பதிவு செய்யப்பட்ட பேச்சுக்களையும் மட்டும் சொன்னதாக நான் கருதவில்லை . Teaching என்றது, ஒரு Level of understanding என்று நினைக்கிறேன். நீங்கள் இந்தப் புரிதலுக்கு வரும்போது, அந்தப் பிரம்மாண்டமான பிரக்ஞையுடன் தொடர்பு கொள்ளலாம் என்றே சொல்கிறார். அந்தப் பிரக்ஞை , ஜே. கே. என்ற மனிதரினுள் இருந்த பர்ஸனலான பிரக்ஞையா என்பது அடுத்த கேள்வி. நிச்சயமாக, அப்படியென்றால் அதற்கு அர்த்தமே கிடையாது. எனவே, அது எல்லோருக்குள்ளும் இருக்கிற ஒரு அகண்டமான பிரக்ஞையாக இருக்கவேண்டும். அப்படியானால், ஜே.கே.யின் Teachings மூலம் மட்டும்தான் அதனுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்பது அடுத்த கேள்வியாகிறது. அதன் மூலம் மட்டுமே முடியும் என்பது அர்த்தமற்ற ஒன்றாகும். ஆகவே Teaching என்பதை விட understanding என்பதைத்தான் அவர் அர்த்த ப்படுத்தியிருக்க வேண்டும். புரிதல் என்பது நமக்குள் ஏற்படவேண்டிய ஒரு பிரக்ஞைநிலை. இது கூட இருக்கிற இன்னும் ஆழ்ந்த ஒரு பிரக்ஞைநிலைக்கு நம்மை இழுத்துச் செல்லும். இம்மாதிரி விசாரணைகளில் ஈடுபட்டால் தான், இந்த மாதிரிப் பிரச்னைகள் துலக்கம் பெறும். உங்கள் கேள்விக்கு இது சரியான பதிலா தெரியவில்லை. உங்கள் வார்த்தைகளை எடுத்துப் பதில் சொல்வதென்றால் 'படிப்பு' என்பது புத்தகப் படிப்பு மட்டுமா என்பதை ஆராய வேண்டும். அநுபவமும் படிப்புதான். வாழ்க்கை என்பது எதிர்பாராத தன்மைகளைக் கொண்டது. எனவே எதிர்பார்ப்புகள் அற்ற உள்ளமே வாழ்வுடன் தொடர்பு கொள்ள லாயக்கானது எனலாமா? கா.சு: பூசகர்களின் நிலப்பறிப்பு உங்கள் ஆரம்பகால விமர்சனங்களைத் தீர்மானிக்கவில்லை. பிராமணர்களாக தங்களைக் கணிப்பவர்களைப்பற்றி அப்போது 'எழுத்து' (1959-1971) வில் நிறைய பாராட்டுதலாக விமர்சித்திருக்கிறீர்கள். இதன் பின்னணியை விரிவாகச் சொல்லுங்கள். பிரேமிள்: என் தாயாருக்கு இரண்டு தங்கைகள். பெற்றோரை இழந்த மூன்று பெண்களும் மூன்று திசைகளில் சுவீகரிக்கப் பட்டார்கள். முதல் தங்கை கொழும்புவில் ஒரு பெரிய பணக்கார . உறவினரால், அங்கே தாம் வேலைக்காரி போல் நடத்தப்பட்டதைச் சகிக்க முடியாமல் வளர்ந்த இவர், பெரியவரானதும் அங்கே பியூனாக இருந்த சார்ளிஸ் உடவத்த என்ற சிங்களவரை காதல் திருமணம் புரிந்து, வீட்டை விட்டு ரகசியமாக வெளியேறி, ஒரு 'சிங்களத்தி'யாகவே மாறினார். சார்ளிஸ் உடவத்த என்ற பெயரை, என் 'லங்காபுரி ராஜா'வில் நான் உபயோகித்திருக்கிறேன். ஆனால் உண்மையான உடவத்தைக்கும் என் கதையில் வரும் உடவத்தைக்கும் இடையில் பாத்திர வேறுபாடு உண்டு. ஞானாம்பிகையாகப் பிறந்து ஞானவதியாக மாறிய என் சின்னம்மா, அவரது ஐந்து குழந்தைகள், தகப்பனார் உடவத்த யாவரிடமும் 'தமிழன் கெட்டவன்' என்ற சிங்கள இனவாதப் பார்வை இருப்பதை உணர்ந்திருக்கிறேன். நான் 'எழுத்து'வில் எழுதுமளவு முதிர்ந்த பருவத்தில் இவர்களைத்தேடிக் கண்டுபிடித்துப் பழகியபோது, என்னை விதிவிலக்கான 'நல்ல' தமிழன் என்றும் ஆகவே சிங்களவனாகுவதற்குத் தகுதியானவன் என்றும் அவர்கள் முடிவுகட்டியது கூட உண்டு. இதை நான் உணர்ந்த பிறகு தொடர்பு விட்டுப்போய்விட்டது. ஏனெனில், உணர்வின் அடிப்படையில் நான் வெறும் மனிதன் மட்டுமே. இதற்கு முன்பே, அதாவது 'எழுத்து'வில் எழுதுமுன்பே 1957 வாக்கில் நான் தேடிக் கண்டு பிடித்தது ஆச்சிமுத்து என்ற என் தாயாரின் கடைசித் தங்கையின் குடும்பத்தை, (என் தாயாரின் பெயர் அன்னலட்சுமி, மூவருள் முதலாமவர்.) என் தாயார் தமது 29வது வயதில் ஒரே மகனான என்னைப் பெற்றார் என்றால், இந்த கடைசித்தங்கை தமது 15 அல்லது 16 வயதில் ஒரே மகனான என் ஒன்றுவிட்ட அண்ணன் தம்பிராஜாவைப் பெற்று விதவையாகி மகனுடன் சிதம்பரத்தில் வாழ்ந்து வந்தார். தம்பிராஜா தமிழை முறையாகக் கற்ற சைவசித்தாந்தப் புலவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளர்களுள் ஒருவருமாக இருக்கும்போது இந்தத் தொடர்பு ஏற்பட்டது. இதற்கும் மேல் இவர், மறைமலை அடிகளின் பக்தரும் தனித்தமிழ்வாதியும் தீவிர பிராமண எதிர்ப்பாளரும் கூட. ஏற்கெனவே எனக்கிருந்த பழந்தமிழறிவுக்கு இவருடைய தொடர்பு ஊட்டம் தந்தாலும் இவருடைய பிராமண எதிர்ப்பை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. பின்னாடி நான் 'எழுத்து'வில் எழுதிய கட்டுரைகளில் அவர் தமது வகுப்பாகக் கருதிய தமிழ்ப் பண்டிதர்களின் பார்வைகளை நிராகரித்த என் பார்வை அவருக்கு என் மீது விரோத பாவத்தை ஏற்படுத்திவிட்டது. பின்பு, நான் சிதம்பரத்தில் மௌனியுடன் பழகுவதைக்கண்டு, "நீ ரொம்பவும்தான் பிராமணர்களுடன் பழகுகிறாய், மிகவும் ஜாக்ரதையாக அவர்களுடன் பழகு. மற்றவர்களைத் தங்கள் தேவைக்காகப் பயன்படுத்திவிட்டு, பிறகு குப்பைக்கூடையில் போடுவதுதான் அவர்களுடைய முறை. நீ சின்னவன். போகப் போகத் தெரிந்து கொள்வாய் " என்று நீண்ட உபதேசம் செய்தார். எனக்கு இது வேப்பங்காயாகத்தான் கசந்தது. இயற்கையாகவே என் மனம் மனிதப் பிரிவினையின் எல்லைகளை மீறி இருந்தமைதான் இதன் காரணம். எங்கள் குடும்பத்தை ஓரளவுக்கு பொருளாதார ரீதியில் பூசகர்கள் நிர்மூலமாக்கியும்கூட அவர்களைத் தனிமனிதர்களாகத்தான் நான் கணித்திருக்கிறேன். என்பார்வை எப்போதுமே, ஒரு தனி மனிதனை அவனது வகுப்புடன் ஈடுபடுத்தாமல், அவனது பேச்சுக்கும் செயலுக்கும் அவனையே பொறுப்பாகக் கொள்ளும் பார்வை ஆகும். அவன் திறனாளி என்றிருந்தாலும் இது பொருந்தும், எனவே 'எழுத்து'வில் நான் எந்த 'பிராமண' வகுப்பினரையும் பாராட்டி விமர்சிக்கவில்லை மேலே குறிப்பிட்ட என் மனப்பின்னணியில் இந்த வேலைக்கு இடமில்லை. தனித்தனி எழுத்தாளர்களைத்தான் விமர்சித்தேன், இது பற்றி அப்போதும் சரி இப்போதும் சரி, ஒரே பார்வைதான். 

கா.சு: இருந்தும் 1970க்களில் ஆரம்பித்து உங்கள் எழுத்தினால், தங்களைப் பிராமண வகுப்பினர் என்று கருதும் எழுத்தாளர்கள், பாதகமாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லவா? இதன் அடிப்படையில் உங்களை அவர்கள் பிராமண எதிர்ப்பாளர் என்கிறார்களே? 

பிரேமிள்: தங்களை மனித வர்க்கத்திலிருந்து பிரித்து உயரவைத்துக்கொள்வதற்காக ஒரு வகுப்பில், ஒரு கட்சியில், ஒரு வர்க்கத்தில் தங்களைத் தாங்களே பிரக்ஞாபூர்வமாக ஈடுபடுத்திக்கொள்கிறவர்கள், தங்கள் மனித தனித்துவத்தைக் குழுமனோபாவத்துக்காக பலியிட்டு விட்டவர்கள். இதனை விபர பூர்வமாகவும் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்துக் களில் அடையாளம் காட்டியும், எழுத்துக்கு அப்பால் அவர்கள் கொண்டிருந்த மனோபாவங்களை நோப் பழக்கத்தில் அறிந்ததை, முன்வைத்தும் எழுதியிருக்கிறேன். இதனை நான் செய்திருப்பது போல் தமிழில் வேறு எவரும் செய்ததில்லை. இவ்விதம் நான் எழுத முற்பட்டபோது, எழுத்துக் களத்தில் இயங்கிய ஒரு கௌரவத்தன்மையை வேண்டுமென்றே துறந்திருக்கிறேன். 

கா. சு: முந்திய கேள்வியையே வேறுவிதமாக மீண்டும் கேட்கிறேன். படைப்பையும் படைப்பாளியையும் வித்யாசப் படுத்துகிறீர்கள்; ஆனால் படைப்பாளியாகிய தனிமனிதனிடம் உள்ள குறைபாடுகளை - குறிப்பாக மௌனி போன்றவர்களிடம் உள்ள ஜாதீயக்குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறீர்கள். இதன் தேவை எனன? கொஞ்சம் விரிவாகவே விளக்குங்கள். 

பிரேமிள்: ஜாதீயம், மிகச்சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியைப் பெற்றுள்ளவர்களிடம் செயல்படுகிறபோது, அது அவர்களது அத்திவாரத்தை குழுரீதியான tribal mentality ஆக்குகிறது என்பதைத்தான் நான் சுட்டிக்காட்டுகிறேன். எனக்கு அவர்களை நேர்முகமாகத் தெரியும் என்பதுதான் இதற்கு ஆதாரமே தவிர, அவர்களது எழுத்தை விமர்சிப்பதற்காக நான் இதைச் சொல்ல வில்லை. அதாவது இதை வைத்து அவர்கள் எழுத்தைப் பார்க்கமுடியாது. மௌனி சம்பந்தமாக நான் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கியிருக்கிறேன். அது இன்றுவரை பலருடைய விஷயத்திலும் சரியாகவே செயல்பட்டிருக்கிறது. எனவே அந்தச் சித்தாந்தம் சரியென்றே எனக்குத்தோன்றுகிறது. அதாவது, இனக்குழுவாதப்பார்வை [tribal mentality] உள்ள ஒருவர், எவ்வளவு பெரிய திறனாளியாக இருந்தாலும், போகப்போக அந்தத் திறனை இந்த இனக்குழுப் பார்வை அரித்து ஓட்டை போட்டுவிடும். இனக்குழுப் பார்வையை வெளிப்படுத்துவதுதான் கலை என்கிற பேத்தல்கூட உண்டு. அந்த அளவுக்கு இவ்வினக்குழுப்பார்வை இங்கே கலைத்துறையில் செயல் படுகிறது. அப்படி அது செயல்படக்கூடாது, கலையே அதனால் பாழ்பட்டுவிடும்; அத்தகைய சூழ்நிலையில் கலைஞன் என்ற பகுதி வளர்ச்சி பெறாது; இந்த இனக்குழுப்பார்வை (இதை ஜாதீயப்பார்வை என்று கூடச் சொல்லலாம், ஆனால் இனக்குழுப்பார்வை என்று சொல்வதுதான் விஞ்ஞான பூர்வமான முறையாகும்] கலை சம்பந்தப்பட்ட யுனிவர்சலான பார்வையை மழுப்பிவிடும்; கலாரீதியான உணர்வு என்பது, எல்லாவிதமான மனத்தடைகளையும் சமூகரீதியான தடுப்புக்களையும் வேலிகளையும், தேசங்கள் மொழிகள் சம்பந்தமான எல்லைகளையும், நம்பிக்கைகளையும் தாண்டி, மனிதனை மனிதன் தொற்றக்கூடிய தன்மையுள்ள ஒரு வீர்யம்; இதை இனக்குழுப்பார்வை மழுங்கடிக்கிறது. இதுதான் என்னுடைய பார்வையின் அத்திவாரம். இந்தப் பார்வைக்கு, செயல்பாட்டு ரீதியான ஆதாரங்கள், என்னுடைய அனுபவத்தில் எவ்விதம் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதற்குத்தான் இத்தகையவர்களைப் பற்றி நான் எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இவர்களைப்பற்றி நேரில் தெரிந்த விஷயங்களை முன் வைக்க வேண்டிவருகிறது. இது துரதிர்ஷ்டகரமான விஷயம். ஏனெனில், எனக்கு இன்றைக்கும் அவர்களைப் பற்றிய ஞாபகங்கள் பலவிதத்திலும் மிக இனிமையானவை. என்றாலும் இந்த விஷயத்தைச் செய்தே ஆக வேண்டிய கடமையின் அடிப்படையில் தான் செய்கிறேன். இதில் எவ்விதமான பர்ஸனல் நோக்கமும் கிடையாது. மேலும், கலை மற்றும் பிற எழுத்தாளர்கள் சம்பந்தமான அடிப்படைச் சித்தாந்தங்களில் அபிப்ராயங்களில் எனக்கும் மௌனிக்கும் ஒரு வேறுபாடும் கிடையாது. ஒரு அடிப்படையை எடுத்துக்கொள்வோம். ஒரு கலைப்படைப்புக்கு objective ஆன ஒரு beautv இருக்கிறது. அந்த அழகை உணர்ந்து அனுபவிப்பது வாசகனுடைய கடமை என்பது மௌனியின் கொள்கை. இதுவேதான் என்னுடைய கொள்கையும். இதை என்னுடைய விமர்சனங்களில் கண்டு சிலாகித்தவர் மௌனி. என் விமர்சனங்களுக்கு அடியில் இப்படி ஒரு சித்தாந்தம் உள்ளதை உணர்ந்து இந்த அளவுக்கு என்னை வாசித்தவர்கள் என்று நான் வேறு யாரைச் சொல்வது? யேசுதாசனைச் சொல்லலாம். ஒரு கலைப்படைப்புக்கு தன்னளவில் அழகு ரீதியாகவோ முழுமை ரீதியாகவோ ஒரு தன்னிலை உண்டு . It exists by Itself. இந்த objectivity யை வாசகன் உணர வேண்டும், இது வாசகனிடமிருந்து கலைப் படைப்பு எதிர்பார்க்கிற கடமை. இதை வலியுறுத்துவதுதான் என்னுடைய விமர்சனம். இதை அறிந்துகொண்ட மௌனி, உண்மையில் செல்லப்பா, வெங்கட் சாமிநாதன் போன்றவர் களிடமிருந்து வேறுபட்ட நிலையில்தான் இதை அநுசரிக்கிறார். என்னுடைய பார்வையும் அவருடைய பார்வையும் ஒன்றாகிறது. இது ரொம்பப் பேருக்கு புரியாத, தெரியக்கூட வராத விஷயம். க.நா.சு., வெ.சா., நகுலன் போன்றோர் இந்த அளவுக்குப்போய் என் கட்டுரைகளைப் படித்திருக்கிறார்களா, விமர்சனத்தைக் கடைப்பிடித்திருக்கிறார்களா அல்லது ஒரு கலைப்படைப்பை அணுகியிருக்கிறார்களா என்பதே கேள்விக்குரியது. அவர்களுக்கு இது எட்டியதே கிடையாது. ஆக, மிக அடிப்படையான விஷயங்களில் மௌனிக்கும் எனக்கும் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. ஆனால் அவருடைய இனக்குழுப் பார்வையின் மூர்க்கம்தான் - அந்த ஒரே ஒரு விஷயம்தான் - அவருக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு. இந்த வேறுபாடு என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமானது. ஏனெனில், அவரையே தொடர்ந்து ஒரு கலைஞனாக இயங்கவிடாமல் வெறும் இனக் குழுவாதியாகவே தேய வைத்தது அவருடைய அந்தப் பார்வை என்பது தான் என் குற்றச்சாட்டின் மிக முக்கியமான அங்கம். இதே விஷயம் தொடர்ந்து மற்ற socalled கலைஞர்களிடம் கூடச் செயல் பட்டிருக்கிறது. முத்துசாமி தொடர்ந்து ஒரு எழுத்தியலாளராக மலராததற்கு காரணம், அவரிடம் இதே இனக்குழுப் பார்வை ஏதோ ஒருவகையில் செயல்பட்டதுதான். இதை நான் அங்கங்கே மிகச் சுற்றி வளைத்துச் சொல்லியிருந்தாலும், அவர் கலைஞராக, எழுத்தியலாளராக வளரக்கூடிய சக்திகள் இருந்தும் அவை மலர்ச்சி பெறாமல் போனதற்கு, என்னால் வேறு காரணங்களைக் காணமுடியவில்லை. இதே விஷயத்தை சுந்தர ராமசாமிக்கும் பொருத்திப்பார்க்க வேண்டியிருக்கிறது. அவர் வளர்ந்து வரக் கூடிய நிலையில் திடீரென்று 'ஜே. ஜே. சில குறிப்புக'ளை எழுதியதன் மூலம் தன்னை ஒரு இனக்குழுவாதியாகத் தான் மிகவும் தந்திரமான விதத்தில் வெளிப்படுத்திக்கொண்டார். அதை எவ்வளவு தந்திரமாக அவர் செய்தாலும் அது எனக்கு வெளிப்படையாகத் தென்பட்டது என்ற அளவில் அதை நான் பகிரங்கப்படுத்தியிருக்கிறேன். இதை அதுவரை வேறு யாருமே செய்யவில்லை என்பதையும் காணலாம். இதற்கு அப்புறம் அவர் எழுதிய எதிலும், அவர் எழுத்தின் இயற்கையான - குறிப்பிட்ட வகைப் பரிகாசத்தொனி, கவித்துவமான சித்து வேலைப்பாடு - இவை எதுவுமே இல்லை என்பதைக் காணலாம். காலச்சுவட்டில் அவர் எழுதியது, அவர் செய்த மொழி பெயர்ப்புகள், கவிதைகள், எதிலுமே இவை இல்லாமல் போய் அவை வெறும் வரண்ட படைப்புகளாகிவிட்டன. இதற்கு அந்த இனக்குழுப்பார்வை அவரைச் சாப்பிட்டுவிட்டமைதான் காரணம் என்பது என்னுடைய அபிப்ராயம். ஆகவே என்னுடைய பார்வை, கலையின் ஆழ்ந்த எல்லைகளை, தன்மைகளைப் பாதுகாப்பது தானே தவிர, இந்தக் குறிப்பிட்டவர்களைப் பற்றி பெர்சனலாகப் பேசுவதோ, அவர்களிடம் எனக்கு ஏதோ பகைமை இருக்கிறது என்பதோ அல்ல. என் விமர்சனத்தால் அம்பலப்பட்டுவிடாமலிருக்கவே இவர்கள் 'பகைமை' என்கிறார்கள், எனது எழுத்துக்களை நுட்பமாகப் படித்து அதனைப் பிறநாட்டு இயக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து - இதை உலகத்தளங்களிலும் செயல்படுத்தி - சமூக சரித்திரங்கள் அரசியல் சரித்திரங்கள் இவற்றோடு சேர்த்துப் பார்த்தால்தான் நான் செய்த வேலையின் நியாயம் புரியும். இது மிகவும் சீரியஸான ஒரு விஷயம். 

கா. சு: கவிதையில் உள்ள கவர்ச்சி எது

பிரேமிள்: நீங்கள் கேட்கிற கேள்விக்கு அடியில் வேறொரு விஷயம் ஒளிந்திருக்கிறது என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. அதாவது, இன்றைக்குச் சிலர் என்னுடைய கவிதையில் கவர்ச்சித் தன்மை இருக்கிறது என்று சொல்கிறார்கள். இங்கே கவர்ச்சி என்ற வார்த்தையை, 'கிளாமர்' என்ற ரீதியில் அவர்கள் உபயோகிப்பதாகத்தான் தெரிகிறது. மேலும் இவர்கள் இதை அறுதியிட்டு இந்தவிதமாகத்தான் நாங்கள் இதைச் சொல்கிறோம் என்பதற்காக, ஒரு கவர்ச்சிச் சினிமா நடிகையோடு என்னுடைய கவிதையைச் சம்பந்தப்படுத்தி அந்தவிதமான கவர்ச்சி என்னுடைய கவிதையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த விஷயமாக முதலில் என்னுடைய பதிலைச் சொல்லிவிட்டுப் பின் நீங்கள் கருதக்கூடியதற்கு வரலாம். அவர்கள் சொல்கிறமாதிரி பார்த்தால், கவர்ச்சி என்பது ஒரு குறைபாடான, மலிவான, மிக எளிதாக உருவாக்கப்படக்கூடிய விஷயம் என்றெல்லாம் ஆகிவிடும், இந்தவிதமான தன்மை எதற்கும் அப்பாற்பட்டது தான் கவிதை. எவ்விதக் கவர்ச்சிக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆழ்ந்த காந்த சக்தி கவிதையின் அமைப்பில் அதன் வீரியத்தில் இருப்பதை ஒரு உணர்வுள்ள வாசகன் நிச்சயம் உணர்வான். நீங்கள் கவிதையில் கவர்ச்சி எது என்று கேட்டால் இந்த சக்தியை வீரியத்தைத்தான், நான் சொல்வேன். வார்த்தைகள் சம்பந்தப்பட்ட மாயாஜாலம், வாசகனுடைய உள்ளத்தை மிக ஆழ்ந்த, மிக உயர்ந்த, உன்னதமான நிலைமைகளுக்குத் திடீரென்று ஏற்றிச் செல்கிறது என்ற அடிப்படையில், இதுதான் கவிதையின் கவர்ச்சி என்று சொல்லலாம். ஆனால் கிளாமருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. கிளாமர் என்பது, மிகவும் அசிங்கமான விஷயத்தை மிகவும் பகட்டாக மாற்றுவது. அதாவது செக்ஸுக்கு கிளாமர் அதிகம் தேவைப்படுகிறது. ஏனெனில் செக்ஸ் என்பது partialy scatological ஆன ஒரு சமாச்சாரம். செக்ஸ் உறுப்புகளெல்லாம் பாதிக்குப் பாதி கழிவு உறுப்புக்கள். ஆகவே இந்தக் கழிவு உறுப்பு என்ற பிரக்ஞையி லிருந்து, கழிவுத்தன்மை இல்லாத ஒரு பகட்டுத் தன்மைக்கு மாற்றுவதற்குத்தான் கிளாமர் தேவைப்படுகிறது. எனவே கவர்ச்சி என்ற வார்த்தையை கிளாமர் என்று செக்ஸ் சம்பந்தமாகப் பயன்படுத்துவது போல், கவிதைக்குப் பொருத்த முடியுமா என்று யோசித்துப்பாருங்கள். இது மிகவும் அபத்தமான விஷயம். கவிதை இன்டலக்சுவலான அதிர்ச்சியை ஏற்படுத்துகிற ஒரு வெளியீடு. இன்டலக்சுவலாக மட்டுமல்ல, ஆழ்ந்த தேடல் சமாச்சாரங்களில் கூட ஒரு அதிர்ச்சியைக் கவிதையால் ஏற்படுத்த முடியும்.

கா. சு: 'இளைஞர்களைக் கெடுக்கும்' விஷயங்களை - அதாவது செக்ஸ் சார்ந்த விஷயங்களை - பெருவாரிப் பத்திரிகைகளிலும் சரி சிறு பத்திரிகைகளிலும் சரி, பயன்படுத்தப் படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரேமிள் : இளைஞர்கள் யார்? இவர்களைக் கெடுப்பது என்றால் என்ன காரியம்? உதாரணமாக செக்ஸ் சம்பந்தமான போர்னோகிராபி நூல்களுக்கும், சினிமாக்களுக்கும், மேடைக் காட்சிகளுக்கும் சென்சார் இல்லாத சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளில், இந்தச் சரக்குகளுக்கு இளைஞர்கள் அல்ல, மிகவும் முதியோர்கள் தான் வாடிக்கையாளர்கள். அந்தச் சமூகங்களில் இளைஞர்களின் செக்ஸ் உணர்வுகளுக்கு செக்ஸ் உறவுகளே வடிகால்களாகின்றன. முதுமையில் இந்த உறவுக்குரிய உடலின் கருவிகளும் கவர்ச்சியும் குறைகின்றன. அப்போதுகூட பழக்க தோஷமும் மனப்பீடிப்பும் தளர்வதில்லை. இதன் விளைவாகவே முதுமைக்கும் போர்னோகிராபிக்கும் அங்கே தொடர்பு ஏற்படுகிறது. இங்கே பிரச்னையின் மையம் வயது அல்ல, பழக்கமும் மனப்பீடிப்பும்தான். இவ்விரண்டையும் நாம் கேவலம் ஒரு சாதனத்தின் மூலம் உருவாக்கிவிட முடியுமா? நீங்கள் பத்திரிகை சாதனம் போன்ற ஒன்றை இவ்விடத்தில் கருதலாம். ஆனால் இதிகாசம், புராணம் ஆகியவை கூட இது விஷயத்தில் ஒரு சாதனம்தான். சாதனம் செய்வது ஐம்பது சதவிகித வேலையை என்றால், மீதியை சாதனத்துக்கு இலக்கானவனின் மனம் செய்கிறது. கோவலன், கண்ணகியைப் பிரிந்திருந்ததைச் சிலப்பதிகாரம் குறிப்பிட்டால், அதற்கு இலக்கான ஒரு உள்ளம் கண்ணகியின் கற்பு நிலையில் பிரமிப்படையும். இன்னொரு உள்ளம், அவள் ஏதும் தவறான பாதையில் போயிருக்கலாம் என்ற 'வக்ரமான பார்வை'யில் இறங்கும். கம்பனின் சீதை - ராவணன் விஷயத்திலும், இதே இருவகை எதிரொலிகளை இருவேறு உள்ளங்கள் ஏற்படுத்திக் கொள்ளும். எனவே, 'கெடுத்தல்' என்பது அர்த்தமற்றதாகிறது. 'கெடுபடக்கூடிய' மனோபாவம் எந்த ஒரு சாதனத்தின் மூலமும் கெட்டே தீரும். பெருவாரிப்பத்திரிகைகளை அன்றி, மகாபாரதத்தைப் படிப்பதனால் இந்த மனோபாவம் கெடாமல் நின்றுவிடாது. அங்கே கணவர்களின்றி பரபுருஷர்கள் மூலம் திருதராஷ்ட்ர பாண்டு விதுரர்கள் பிறந்ததிலிருந்து ஐந்து தேவர்களுக்கு ஒரே தாயிடம் பிறந்த பாண்டவர்கள் ஒரே மனைவியை வைத்திருந்தது வரை ஏகப்பட்ட கெடுபாடுகள் உள்ளன. பார்க்கப்போனால் அன்று இத்தகைய கெடுபாடுகளுக்கு எத்தனைபேர் வாடிக்கையாளர்களாக இருந்தார்களோ, அதே வகையில் அதே அளவில் தான் இன்றும் ஒரு வாடிக்கை பெருவாரிப் பத்திரிகைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் ஒன்று - குறிப்பாக தமிழகத்தின் பெருவாரிப் பத்திரிகைகளில் ஒரு மெல்லிய காமார்த்த ம் (soft pornography) பயன்படுத்தப்படுகிறது. விஷயம் இலைமறைகாயாக்கப் படுகிறது. இந்தத் தந்திரத்தில் கைதேர்ந்தவர்களே இன்றைய பெருவாரிக் சுதையாளர்களாக பெருவாரிப் பத்திரிகைகளில் அங்கீகரிக்கப் படுகின்றனர் ஏனெனில் பத்திரிகைகளின் விற்பனைக்கு இலக்கு இளைஞர்கள் அல்லர் - முதியோர்களும் பெற்றோரும் நிறைந்த குடும்பங்கள் தாம். அவர்களே இந்தப்பத்திரிகைகளுக்கு வாடிக்கையாளர்கள். புராண இதிகாசங்களின் கதையம்சங்களை, அவற்றின் இலக்கிய பூர்விகத்திலிருந்து கீழிறக்கப்பட்ட கடைத்தர வடிவுகளில் அனுபவிப்பவர்களும் அவர்களே. எனவே இளைஞர்கள் எங்கே, கெடுப்பது எங்கே? 

கா.சு: நீங்கள் சொல்வதைப்பார்த்தால் எழுத்தில் ஆபாஸத்தை அறுதியிடுவது இயலாததாகிறதே! படிப்பவர்களின் மனோபாவம் இன்னது என்றும் பார்க்க வேண்டியிருக்கிறதே! 

பிரேமிள்: பிரசுர சாதனத்தின் தளத்துக்கு வந்துவிட்டதுமே அதன் களத்தில் நீடிப்பதற்காக ஒவ்வொரு எழுது கருவிக்காரர்களும் (பெருவாரி, சிறுவாரிப் பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரும்] தமது பிரசுர சாதனத்துக்குரிய கட்சியில் சேர்ந்துகொண்டு ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொள்கிறார்களே தவிர, ஒரு பிரச்னையின் பல்வேறு கோணங்களையும் பார்ப்பதில்லை. இது இன்று உறுதியடைந்துவிட்ட நிலமை. இடதுசாரிகளும் பார்ப்பனசாரிகளும் இதில் கல்லுளி மங்கனீயத்தைஎட்டி விட்டனர். தங்களைச் சிறுபத்திரிகைத் துறையில் தக்க வைத்துக்கொள்வதுக்காகவே இத்தகைய பிரச்னைகளில் ஒரு கட்சிக் கொள்கைத்தனமான பார்வையை வெளியிடுகிறார்கள் சிறுபத்திரிகை சார்ந்த பலர். எழுத்தில் ஆபாசம் இருக்கிறது என்பதைவிட இன்ன எழுத்துப் படைப்பு இலக்கியமா அல்லவா என்பதுதான் எனது அக்கறை. எழுத்தில் ஆபாசம் என்பது ஒரு இலக்கியப் படைப்பின் தராதரத்தினை அறுதியிடும் அளவுகோல் அல்ல. டால்ஸ்டாயின் அன்னாகரேனின்' நாவலில், கணவன் கரேனின்னும் காதலன் வுரோன்ஸ்கியும் ஒரே சமயத்தில் தன்னுடன் உறவு கொள்வதாக அன்னா கனவு காண்கிறாள். இலக்கிய அளவுகோலின்படி, இது பாத்திரத்தினது மனோநிலைக்கொந்தளிப்பினைக் காட்டுவதாகும். படிப்பவனின் மனோநிலை மோசமாக இருந்தால், அவன் பாத்திரத்தின் கொந்தளிப்பாக அல்லாமல் வெறும் காமவக்ரமாக இதையே காண இடமுண்டு. இத்தகையவன் இலக்கியம் பண்ண'க் கிளம்பி, அவனுக்கு அடப்பக்காரர்களும் சேர்ந்து விட்டால் பிரச்னையைச் சந்திக்க உறுதியான, தெளிவான, விபர பூர்வமான விமர்சனத்தினால் தான் முடியும். அப்போது இது ஆபாசமா இல்லையா என்பதைவிட இது இலக்கியமா இல்லையா என்ற பார்வையே தீர்ப்பை வழங்கும். 

கா.சு ஜேம்ஸ் ஜாய்ஸ் கூடப் போகாத அளவுக்கு, டால்ஸ்டாய் போய் எழுதியிருக்கிறாரே? 

பிரேமிள் : டால்ஸ்டாய் ஓரிருவரிகளில் சித்தரித்ததை ஒரு உதாரணமாகத்தான் குறிப்பிட்டேன். ஏனெனில் அவர் இங்கே உள்ள வைதீக மனோபாவம் கொண்டவர்களால் கூடக் கொண்டாடப்படுகிறவர். ஜேம்ஸ் ஜாய்ஸின் 'யுலிஸிஸ்' சமாசாரம் அப்படி அல்ல. வாயில் விரலை வைத்துச் சப்பிக் கொண்டிருக்கும் இலக்கிய உலகப் பாப்பாகூட, லா. ச. ராமாம்ருதத்தின் பல்வேறு முற்காலத்திய படைப்புகளில் 'யுலிஸிஸ்'-ன் நனவோடை உத்தி இருப்பதைச் சொல்வதுக்காக வாயிலிருந்து விரலை எடுக்கும். [லா.ச.ரா.வின் தற்காலத்திய படைப்புகள் வெறும் லொடலொடாக்கள் என்பதையும் இதே பாப்பா சொல்லிவிட்டே மீண்டும் வாயில் விரலை வைக்கும்.) இதே லா.ச.ரா., 'இந்தியன் எக்ஸ்பிரஸ்'ஸிற்குக் கொடுத்த பேட்டியில், அவரது நனவோடை உத்தியின் மூலகர்த்தா ஜாய்ஸ்தானே என்பதுக்கு பதில் தரும்போது, ஜாஸ்ஸின் 'யுலிஸிஸ்' ஒரு ஊத்தைப்புத்தகம் என்று உளறி இருக்கிறார். 1971-72 வாக்கில் சென்னையில் தெருவில் வைத்து எனக்கும் மௌனிக்கும் முன்னிலையில் நாங்களிருவரும் பிரமிக்கும்படி லா.ச.ரா.வை ஆலிங்கனம் செய்த வெங்கட்சாமிநாதனிடம் நீங்கள் போய் “யுலிஸிஸ் ஒரு ஊத்தைப் புத்தகம்" என்று சொல்லிப்பாருங்கள். ஆலிங்கனம் கிடைக்கிறதா பாத தீக்ஷை கிடைக்கிறதா என்று! லா.ச.ரா.வும் வெ.சா.வும் 'யூ ஆர் ஏ பிராமின், ஐ ஆம் எ பிராமின்!' என்றுதான் ஆலிங்கனம் செய்கிறார்கள். இலக்கிய அடிப்படையில் அல்ல - அதுவும் இன்றைய லா.சா.ரா.வின் எழுத்து அடிப்படையில் ஆலிங்கனத்துக்கு இடமில்லை. இருந்தும் 'பிராமின்' என்று வரும்போது இலக்கிய அடிப்படை எல்லாம் இவர்களுக்கு சுண்டைக்காய்! 

காசு; எவரேனும் சரி, ஜாய்ஸின் 'யுலிஸிஸ்'ஸை ஊத்தைப் புத்தகம் என்று சொல்ல இடமுண்டா? 

பிரேமிள் : சுமார் 15 வருஷங்களாக உழைத்து எழுதப்பட்ட நாவல் 'யுலிஸிஸ்', இதில் வரும் இரட்டை நாயகர்கள் - ஐரிஷ்காரன் ஸ்டீபன் டிடாலஸ், யூதன் லியோப்பால்ட் புளூம். யூதர்கள் மீது அங்கங்கே காட்டப்படும் வெறுப்பை டிடாலஸ் எதிர்ப்பது நாவலின் ஒரு முக்கிய பரிமாணம். இந்த நாவலின் இந்தப் பரிமாணத்தை அறிந்திருந்தும், இது எழுதி முடிக்கப்பட வேண்டும் என்பதுக்காகத் தமது படைப்பியக்கத்தையே இரண்டாம் பட்சமாக்கி, ஜாய்ஸ் குடும்பத்துக்காகப் பணம் திரட்டிய அமெரிக்கக்கவி எஸ்ரா பவுண்ட், ஒரு யூத விரோதி. இது விஷயமாக ஹிட்லரையும் முசோலினியையும் ரோமன் ரேடியோவிலேயே ஆதரித்து, அமெரிக்காவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததுக்காக அமெரிக்க அரசால் கைது செய்யப் பட்டவர் பவுண்ட். அதாவது தமது அரசியல் பார்வைக்கே மாறான ஒரு பொருளம்சத்தினை இலக்கியப் பார்வை மூலம் சுண்டு பணிந்து அதன் வெளியீட்டுக்கும் உதவிய உந்நதப் பண்பு இது. நமது வறட்டு குரைப்பு மண்டலங்களில் இல்லாத பண்பு இது. இலக்கிய தர்சனத்தைப் பொறுத்தவரை ஜாய்ஸின் நாவலில் வெளிப்படும் மனிதாயத்துக்கு பவுண்ட் பணிந்திருக் கிறார். நாவலின் முதல் பிரசுரம் 1922-ல் பாரீஸில் - பிரசுரகர்த்தாக்கள் ஷேக்ஸ்பியர் அன்ட் கம்பனி. பிரசுரமான பிரதிகள் ஆயிரம் மட்டுமே. இவற்றுள் பிரிட்டன் சென்ற பிரதிகள், கிறித்துவ சபையினதும் அவர்களைப் போன்ற பிரிட்டிஷ் லா.சா.ரா. க்களினதும் எதிர்ப்பின் விளைவாகக் கைப்பற்றப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. காரணம் 'ஊத்தைப் புத்தகம்'. ஆரம்பத்திலிருந்தே நனவோடை உத்தியில் எழுதப் பட்ட இந்த நாவலில், புலன்களின் வழி மனம் கிரகிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் மொழி வடிவு பெறுகிறது. இதை விநாடிக் கணக்குக்கே நாவலின் இறுதியில் கொண்டு வருகிறார் ஜாய்ஸ். இவ்விதம் எழுதுகிற ஒரு சவாலை ஏற்றுக்கொண்டால், புலனுக்குப்படுகிறவையும் மனதில் பிறப்பவையும் தேர்வு முறைகளைத்தாண்டி வெளியீடு பெற்றாக வேண்டும். இந்தச் சவாலை ஏற்று அதனை பிரமிக்கும் படியாக ஜாய்ஸ் நிறை வேற்றியுள்ளார். கடற்கரையில் காணப்பட்ட பிணம், ஓடி விளையாடும் நாய், மரணம், கழிவறைக் காட்சி, திடீர் காம நினைவு, சோகம், பரிவு, ஆழ்ந்த பின்னலான சிந்தனை என்று எல்லாமே மொழியினுள் புத்துயிர் பெறுகின்றன. மேலோட்ட மான விஷயாம்சத்தின்படி பார்த்தால், மதச் சடங்குகளைப் பற்றிய கிண்டலும், மனித உறவுகளை சம்பிரதாயங்களுக்கு அப்பால் நிகழும் நிதர்சனங்களாகக் காட்டும் பிரிவுகளும் இங்கே குறிப்பிடப்பட வேண்டியவை, லியோபால்ட், பாடகியான தனது மனைவிக்கு உள்ள ஷோ பேர்வழிக் காதலனுக்குப் பதிலாக கவியுள்ளம் கொண்ட ஸ்டீபனைக் காதலனாக்க முயற்சிப்பதும், மனைவி மால்லி சுயமைதுனம் செய்வதும் நாவல் 'ஊத்தை' என்று பிரிட்டிஷ் அரசாங்கமே சீல் வைக்க வைத்தவை. லா ச.ரா. ஏன் சொல்லமாட்டார்? 

கா.சு. இவ்வளவு தூரத்துக்குப் போகும் நூலை சி.சு. செல்லப்பா போன்ற ஒருவர் குறிப்பிட்டு வந்தது ஆச்சரியமாக இருக்கிறது 

பிரேமிள் : சி. சு. செ. மூல நூல்களைப் படிக்காமல் அவைபற்றிய விமர்சனங்களை மட்டும் படித்துவிட்டு எழுதுவதாக க. நா. சு. குற்றம் சாட்டி இருக்கிறார். பார்க்கப்போனால் செல்லப்பா என்ன, வெ. சா. கூட 'யுலிஸிஸ்'ஸைப் படித்தவர்தாமா என்பது என் சந்தேகம். உயர்வாக விமர்சகர்களால் குறிப்பிடப் படுகிறவற்றிலிருந்தே இவர்கள் தங்கள் பார்வைகளை உருவாக்கி இருக்க முடியும். எனினும் இது என் சந்தேகம் மட்டுமே. பார்க்கப் போனால், ஆழமில்லாத வாசகர்களுக்கு 'யுலிஸிஸ்'ஸின் பக்கங்கள் அடைபட்ட கதவுகள் தாம். தமிழ் 'இலக்கிய' எழுத்தாளர்களிடையிலே ஆழமான வாசகர் ஒருவரை இனித்தான் நான் சந்திக்கவேண்டும். 

கா. சு: ராபர்ட் ம்யுஸில் எழுதிய The Man Without Quality நாவலை மௌனி மிகவும் சிலாகித்திருக்கிறார். இதற்கு ஏதாவது காரணம் உண்டா? இதற்கும் ஜாய்ஸின் யுலிஸிஸுக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றியும் கூறமுடியுமா?

 பிரேமிள்: Robert Musil இன் அந்த நாவலை நான் இப்போது தான் படித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் படித்து முடிக்க வில்லை. அதை மௌனி சிலாகித்ததற்குக் காரணம், அதை எழுதிய ராபர்ட் மூஸில் ஒரு மிக உயர்ந்த கலைஞர் என்பது தான். புதுமைப்பித்தனைப் பற்றி மௌனி விமர்சிக்கிறபோது, அவரிடம் ஐரனி இருக்கிறது, ஐரனி ஒன்றும் உயர்ந்த கலையின் குணாதிசயம் அல்ல என்று கூறியுள்ளார். இதை நான் 'மௌனியும் மவ்னியும்' என்ற 'மீறல்' கட்டுரையில் விமர்சித்திருக்கிறேன். Man Without Qualities படித்தீர்களானால், ஐரனி அதன் உச்சத்துக்குப்போயிருப்பதைக் காணலாம். தலைப்பே ஐரானிக் கலானது. புத்தகம் முழுவதிலுமே ஐரனியின் நீட்சியையும், அபூர்வமான ஒரு உச்சஸ்தாயியில் அது போய்க்கொண்டிருப் பதையும் காணலாம். இந்த ஐரனியை உணராமல் மௌனி, ஐரனி பற்றி இப்படிச்சொன்னாரா என்று நினைத்துப் பார்த்தால், ஆச்சரியமாக இருக்கிறது. மௌனி உயிரோடு இப்போது இருந்தால் இவ்விஷயத்தைச் சர்ச்சித்திருக்கலாமே என்ற அளவுக்கு, இது விஷயத்தில் எனக்கு ஆர்வமேற்படுகிறது. மூஸிலின் நாவலில் ஐரனி மட்டுமல்ல, தொழில் நுட்பரீதியில் அவர் செய்கிற பின்னலும் அவதானங்களும் சில அடிப்படை விஷயங்களிலிருந்து மனிதன் விலகுகிற சமயங்களில் செய்யும் கிண்டலும் எக்காளமும், ரொம்ப அபூர்வமானவை. மௌனி இந்நாவலை ரசித்தார் என்றால், ஒரு கலைஞனால் இன்னொரு கலைஞனை அடையாளம் காணமுடிந்தது என்பதுதான். இதில் வேறு விசேஷ காரணமிருப்பதாக எனக்குத்தோன்றவில்லை. * இந்த நாவலையும் ஜேம்ஸ் ஜாஸ்ஸின் யுலிஸிசையும் ஒப்பிடுவது மிகவும் சிரமமான காரியம். ஏனென்றால், மூஸில் ஜெர்மன் மொழியில் எழுதியிருக்கிறார் என்பது ஒரு காரணம். அம்மொழியில் எவ்விதமான மாஜிக்குகளோடு அவர் படைத்திருக் - கிறார் என்பதை நான் நிச்சயிக்கமுடியாது. ஆங்கில மொழியெர்ப்பு மிக அற்புதமாக இருப்பதால், அவர் மிகப் பெரிய குளோபல் மெஜிஷியன் என்பதையும், மிக அபூர்வமான அவதானங்களை வார்த்தைகளுக்குள் கொண்டுவரக் கூடியவர் என்பதையும் என்னால் காணமுடிகிறது. இந்த அபூர்வமான அவதானம், மொழியின் பின்னலான - அதேசமயம் ஐரானிக் கலான - வெளியீடாக மூஸிலிடம் நிறைவேறுகிறது. ஜாய்ஸின் சாதனை முற்றிலும் வேறுவிதமானது. அவரது எழுத்திலும் ஐரனி இருந்தாலும், ஒருவனை மனிதனாக மட்டுமே பார்த்து அம்மனிதனுடைய முழு மன ஓட்டத்தையும் ஒரு 48 மணி நேரத்துக்குள் அவன் செய்கிற எல்லாக்காரியங்களையும் - செக்ஸ், வெளிக்குப்போதல், சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர் வினைகாட்டுதல், உணவு, பறவைகளுக்கு உணவு போடுதல், மிருகங்களையும் பிறரையும் அவதானித்தல், பிற நிகழ்ச்சிகள் - இந்தமாதிரி எல்லா விதமாகவும் அந்த மனிதனை அப்படியே சித்தரித்திருக்கிறார். இப்படி, அப்படியே சித்தரிப்பது, - சைக்கலாஜிகலான விஷயங்களைப் போட்டோ பிடிக்கக் கூடியவிதமான - ஒரு detachment என்ற அடிப்படையில், ஜாய்ஸின் சிகரம் மூஸிலினால் எட்டமுடியாததாகவே எனக்குத் தோன்றுகிறது. மூஸிலிடம் detachment இல்லை . அவர் ஏதோ ஒன்றைச் சொல்ல வந்து, அப்படிச் சொல்ல வருகிறபோதே,'. அதைக்கூட விமர்சிப்பவராகிவிடுகிறார். உதாரணமாக இன்றைய - மனிதன் குவாலிடீஸ் இல்லாத மனிதன் என்று சொல்பவராக . ஜாய்ஸ் இல்லை. இன்றைய மனிதனும் மனிதன் தான் என்று சொல்கிறவராக ஜாய்ஸ் படைப்பை நிறைவேற்றுகிறார். இன்றைய மனிதன், Man Without Qualities என்று மூஸில் தன் படைப்பு பூராவுமே சொல்கிறார். குவாலிட்டி என்றால் என்ன என்று சொல்லிவிட்டு, அதற்கு உதாரணங்களைக் காட்டுகிறார். ஆஸ்ட்ரியா என்ற அவருடைய தேசத்தின் பிரதிபிம்பமாக, காகேனியா என்கிற கற்பனாரீதியான ஒரு சின்ன நாட்டை உருவாக்குகிறார். அதை குவாலிடி உள்ள நாடாக அவர் காட்டுகிறபோதுகூட, அதிருப்தியிலிருந்து விளைகிற ஒரு ஐரனியைத்தான் கற்பனாரீதியான அவ்வுலகத்தில் பிரயோகித்துப் பார்க்கிறார். தவிர அதிலே உள்ளவர்கள் மனிதர்கள், அவர்களது உணர்ச்சிகள் மதிக்கப்பட வேண்டியவை, அவர்களது பார்வை களில் ஒவ்வொருகணமும் ஒரு உயிர் ஓடிக் கொண்டிருக்கும், அதிலிருந்து தான் மற்றவர்களை கணிக்கிறார்கள், அப்போது பல்வேறு பிரதிபலிப்புகள் ஏற்படும் என்ற நுட்பமான [ஜாய்ஸினுடைய] பார்வை மூஸிலிடம் கிடையாது. வார்த்தை களினால் உருவாகக்கூடிய ஒரு மேஜிக் ஒரு Labyrinth என்றே அவரது நூல் நிற்கிறது. இதில் தான் மூஸில் சாதனை காட்டியிருக் கிறார் என்று சொல்லலாம். இப்படி இதை விமர்சித்தால், ஜாய்ஸினுடைய detachmentஐ Godly அதாவது the detachment of the Creator என்றுதான் சொல்லவேண்டும். பாத்திரங்களிலிருந்து விலகி நிற்கிறவன் தான் creator என்று ஜாய்ஸ்ஸே சொல்லியிருக் கிறார். இப்படி, எழுதுகிற ஒருவனை The Creator, God himself என்ற லெவலில் நிறுத்தி அவர் குறிப்பிடுகிறபோதே, தன்னளவில் அந்த லட்சியத்தை நிறைவேற்றியிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். இந்த அளவு detachment மூஸிலிடம் இல்லை . அவரிடம் ஓங்கியிருப்பது, இன்று மதிப்பீடுகள் யாவும் குலைந்து விட்டன என்பது சம்பந்தமான ஒரு ஆழ்ந்த பரிகாசமயமான கசப்பு. இந்தக்கசப்பு, அவர் எது மதிப்பீடு என்று நினைக்கிறாரோ அதற்குள் கூட ஊடுருவி விடுகிறது. மௌனிக்கும் இந்தக்கசப்பு இருந்தது என்று சொல்லலாம். மௌனி ஒரு பூசக எழுத்தாளர். [பிராமண எழுத்தாளர், பூசக வாக்கம் என்றெல்லாம் சொல் கிறார்கள். பூசக எழுத்தாளர் என்று சொல்லலாமா என்பதில் எனக்கு அவ்வளவு தெளிவில்லை. என்றாலும் சிலர் மேற்படி சொல்கிறபோது எனக்கு : இவ்விதம் சொல்லலாம் என்று தோன்றுகிறது.) --பூசக வர்க்கத்தை வைத்து அவர் எழுதிய கதைகள் .. எதுவுமே அந்த இனக்குழுவை உயர்த்திச் சொல்வதாகவோ, இம்மாதிரித்தான் வாழவேண்டும் என்று சொல்கிறதாகவோ தோன்றவில்லை. இதற்கு 'சாவில் பிறந்த சிருஷ்டி' மிகச் சிறந்த உதாரணம். அதில் வருகிற சுப்பையர் - முதலிய பாத்திரங்கள் எல்லோரும், அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தாம். அவர்களை ஒன்றும் அவர் மிக ஐடியலானவர் களாகவோ, நிறைவு பெற்றவர்களாகவோ சித்தரிக்கவில்லை. அவர்களது கீழான நிலையைத்தான் கொடுக்கிறார். ஆகவே அங்கே இந்தக் கசப்பு செயல்படுகிறது. இந்தக் கசப்பை மூஸிலிடமும் காணலாம். இதற்காகத்தான் மௌனி அவரை ரசித்தாரா என்றும் சந்தேகிக்கலாம். ஆனால் அதற்கு நமக்கு ஆதாரம் கிடைக்கக்கூடிய நிலை இல்லை. ஏனெனில் மௌனி நம்மிடையே இல்லை! 

கா. சு: நீங்கள் ஜாய்ஸின் யுலிஸிஸ்ஐயும் மியூஸிலின் மான் விதவுட் குவாலிட்டீஸ் ஐயும் ஒப்பிட்டிருக்கிறீர்கள். இரண்டில் எது அதிக தரம் வாய்ந்தது என்ற ஒப்பீடாக இதைக் கொள்ளக் கூடுமா? 

பிரேமிள்: இலக்கிய சாதனையின் சிகரங்களிடையே ஏற்றத்தாழ்வு கிடையாது. என்னுடைய ஒப்பீடு கையாளப்பட்ட மனித அம்சங்களைப்பற்றியது மட்டுமே. இதை நான் தெளிவாகச் செய்யவில்லை என்று உங்கள் இந்தக் கேள்வி அபாயச்சமிக்ஞை தருகிறது. எனவே, நான் நுட்ப விபரங்கள் ஓரிரண்டை எடுத்துக் காட்டுகிறேன். 'மான் விதவுட் குவாலிட்டீஸ்' (தரமற்ற மனிதன் ] என்ற ராபர்ட் மியூஸிலின் நாவலும் ஜேம்ஸ் ஜாய்ஸ்ஸின் யுலிஸிஸ் நாவலும் முறையே, ஏறத்தாழ சமகாலத்திய ஐரோப்பிய ஜெர்மன், பிரிட்டிஷ் ஐரிஷ் மனிதர்களைப் பற்றியது. இந்த வேறுபாடு இருந்தும் இருவருடைய உலகமும், கலாச்சாரத் தளத்தில் கிறிஸ்துவ மேலைத்தேய அடிப்படையில் ஒன்று. பிரச்னை இந்தப்பின்னணி அல்ல. இந்தப்பின்னணியின் மேலைத்தேய நவீன மதிப்பீடுகளினது குணவக்ரம்தான் பிரச்னை. குணவக்ரம் மியூஸின் நாவலில் முன்னணிக்குக் கொண்டுவரப்படுகிறது. நவீனத்துவத்தின் குணவக்ரம் தனி மனிதன் மூலம் தரமற்ற மனோபாவமாகச் சித்திரம் பெறுகிறது மியூஸிலிடம், கிறிஸ்துவப் பின்னணியை மியூஸில் ஆதர்சிக்கவில்லை, விமர்சிக்கிறார். - அவரது பின்னணி ஜெர்மன் புரோட்டஸ்தாந்த கலாச்சாரப் பின்னணியாகும். இதனுடன் ஜெர்மன் ராணுவ ராஜரீக மேல்கட்டுமானத்தின் பின்னணியைத் தமது பாத்திர வக்ரத்துக்குத் தருகிறார். இந்தப் பின்னணி களையும் தமது பாத்திரத்தையும் ஒரேவீச்சில் ஐரனிக்கு உட்படுத்துகிறார். இந்த விபரத்துக்கு ஏற்கெனவே 'மான் விதவுட் கேரக்டர்' என்ற சிறிய டயரிக் கட்டுரையில் ஒரு ஆதாரத்தைத் தந்திருக்கிறார் மியூஸில், இதில் மிகக் கட்டுப்பாட்டுடன், அதாவது ராணுவத்தனம் என்று சொல்லக்கூடிய கடுமையுடன், வளர்க்கப்பட்ட தமது பால்யகாலத் தோழனை சித்தரித்துள்ளார். இவன் கேரக்டர் எதுவும், குணாம்சம் எதுவும் அற்றவனாக வளர்ந்ததை மியூஸில் சித்தரிக்கிறார். இவனைப் போலன்றி, பெற்றோரின் கெடுபிடிகள் இல்லாத ஒரு சுதந்திரத்துடன் வளர்ந்தவர் மியூஸில். கடுமையாக வளர்க்கப்பட்ட நண்பன், குணாம்சங்களற்றவனாக வளர்ந்ததை அனுதாபம் கொண்ட பரிகாசத்துடன் சித்தரிக்கிறார் மியூஸில், அவன் ஒன்றைச் சொல்வான் இன்னொன்றைச் செய்வான். இதுதான் அவனது குணமின்மையின் முக்யமான அம்சம். உண்மையில் நவீன சமூகத்தின் வெற்றிகரமான நடுத்தரவர்க்கத்தினனாகவே அவன் பின்னாடி ஆகிறான். மியூஸிலை நாம் இவனுடன் ஒப்பிட்டால், உந்நதமான இலக்கியவாதியாக பரிணமித்த இவர், வறுமையிலேயே இறுதிவரை வாழ்ந்து மறைந்திருக்கிறார். இந்த ஒப்பீடு, நவீன அமைப்பில் குணாம்சங்களற்றவர்களே வாழ முடியும் என்பதை நிரூபிக்கிறது. மான் விதவுட் கேரக்டரில் இதையே கட்டுரைப்பாணியில் சொல்ல முன்வரும் மியூஸில், மான் விதவுட் குவாலிட்டீஸ்'இல் இந்த மனிதனுடைய பல்வேறு பெர்சனாலிட்டி விபரங்களையும் பல்வேறு சமூகக்களங்களில் நிறுத்தி சித்தரித்துள்ளார். இந்த மனிதனுடைய நோக்கம் என்ன: சுய திருப்தி, தியாக உணர்வு இன்மை, லாபத்துக்காக மதிப்பீடுகளை வக்ரப் படுத்துதல், நேர்மையற்ற சாமர்த்தியம்... இத்தியாதி. ஆனால் இவை நாவலின் பெறுபேறுகள், பச்சையாக ஆசிரிய கூற்றில் வராதவை. இனி ஜாய்ஸிற்கு வருவோம். ஜாய்ஸின் முக்யமான இரண்டு பாத்திரங்களுள் ஒருவன் கவியுள்ளம் கொண்டவன். ஐரிஷ் கத்தோலிக்கப் பின்னணி கொண்ட அவனுடைய ஆதர்சம், அவனைச் சார்ந்த வேறு மூத்த பாத்திரங்களினுடையதைப் போன்று, ஐரிஷ் விடுதலை இயக்கவாதிகளுக்கு சார்பானது. பிரிட்டிஷ் முடியரசுக்கு பாதகமானது. இவற்றைவிட கத்தோலிக்க பூசக மரபுகளுக்கு வைரம் பாய்ந்த எதிர்ப்பைத் தருவது. அதே சமயத்தில் செயல் ரீதியான ஆன்மவியலை ஆதர்சிக்கவும் நாடுகிறது இந்தக் கவியுள்ளம். இந்த அடிப்படையில் யேசு என்ற உந்நத நிகழ்ச்சியை அவ்வுள்ளம் ஆதர்சிக்கவே செய்கிறது. இவை முழுவதையும் எடுத்தால் இந்தக் கவியுள்ளம் தசையும் உதிரமும் கொண்ட, பலவீனங்களின் தொகுதியான இயற்கை நிலையைத் தாண்டிய லட்சிய சொரூபம் என உணரலாம். இருந்தும் இந்த சொரூபத்தை மிகமிக சாமர்த்தியமாக ஜாய்ஸ் மனிதத் தளத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் என்பது என் அபிப்ராயம். இத்தகைய சாதனை ஒன்றை நவீன இலக்கிய சிகரம் எதுவும் இவ்வளவு பிரமாதமாக சித்தரிக்கவில்லை. பார்க்கப்போனால் இந்த ' கவியுள்ளம் கொண்ட பாத்திரம்தான் யுலிஸிஸ்ஸில் ஜாய்ஸ் தமக்குத்தாமே உருவாக்கிய சவால். இந்த சவாலை வெற்றிகரமாக ஜாய்ஸ் சந்தித்திருக்கிறார். இந்த கவியுள்ளத்தின் இந்த லட்சியார்த்தங் களும் லட்சியங்களை நிதர்சன உலகில் நிறுத்துவதால் விளையும் சிந்தனாரூபமான மன அவசங்களும் ஒருபுறம், மறுபுறம் லட்சியத்தன்மைகளினால் அன்றி, தனது ஆண்குழந்தையின் மரணத்தால் ஏற்பட்ட ஆறாத இதயவேதனையுடன் சித்தரிக்கப் படுகிற யூதப் பின்னணி கொண்ட பாத்திரம். இது மானுட சித்திரம். உண்மையில் எந்த மத்திய தரத்திய எழுத்தாளனாலும் வெற்றிகரமாகச் சித்தரிக்கப்படக்கூடிய பாத்திரம். ஆனால் ஜாய்ஸ் இவனைக் கூட லகுவாகச் சித்தரிக்கக் கூடிய விதத்தில் எடுத்தாளவில்லை. டால்ஸ்டாய் போன்ற ஒரு மேதை கூட சறுக்கக் கூடிய ஒரு சகதிப்பாறையில் அனாயாசமாக இவனை ஒரு மனித சிகரத்துக்குக் கொண்டு செல்கிறார் ஜாய்ஸ். இப்படிக் கொண்டு செல்வதுக்கு நவீன மதிப்பீட்டுக்களத்தின் மனிதாயப் பண்புகளை ஜாய்ஸ் ஆவாகனிக்கிறார். பச்சையாகச் சொன்னால் - தன்னைப் போலவே குழந்தையின் மரணத்தினால் வேதனையில் மூழ்கியிருக்கும் தனது மனைவி, [இவள் ஒரு நட்சத்திரப் பாடகி] ஒரு தரங்கெட்ட மனிதனுடன் உறவு கொண்டிருப்பது யூதபாத்திரத்துக்கு அருவருப்பாக இருக்கிறது. அந்த தரங்கெட்டவனுக்குப் பதிலாக, கவியுள்ளம் கொண்ட லட்சிய சொரூபமான பாத்திரத்துடன் தனது மனைவியை உறவுபடுத்த முயற்சிக்கிறான் கணவன். இது இலக்கியக் கோணத்தில் அபாயகரமான முயற்சி. ஆனால் தமது ஆளுமையின் அனாயாசமான வீச்சின் மூலம் இதை - உந்நதமாகச் சித்தரித்துள்ளார் ஜாய்ஸ். இங்கே, மரபான பின்னணிகளை உதறி, நவீனத்வம் கொண்ட உள்ளத்துடன் மனிதார்த்தத்தின் வழியில் தரமின்மைக்கு எதிராக கவியுள்ளத்தை ஆதர்சிக்கும் சாதனை நிறைவேறுகிறது. நவீனப் : பின்னணியையே மனிதார்த்தத்துக்கும் லட்சியார்த்தத்துக்கும் உபகரணமாக்கு கிறார் ஜாய்ஸ். இது அபாரமானது. இங்கே இதை மேலும் அழுத்தவேண்டும். தனது மனைவிக்கு உறவாக உள்ளவன் தரங்கெட்டவன். ஆனால் வசதி படைத்தவன். தனது மனைவிக்கு உறவாக இருக்க வேண்டும் என கணவன் - விரும்புகிறவன் கவியுள்ளம் கொண்டவன் ஆனால் வறுமையில் உழல்பவன். இவ்விடத்தில் நவீனத்துவத்தின் லாபநோக்கங்களை .. ஜாய்ஸ் ' நிராகரிக்கிறார் என்பதையும், அத்தகைய எதிர்மறைத்தன்மையை அன்றி, உறவுரீதியான நவீனத்தன்மையை மட்டும் அதுவும் தராதர அடிப்படையில் ஆதர்சிக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். இத்தகைய அபாயகரமான சவால் எதையும் மியூஸில் மேற்கொள்ளவில்லை. இவ்விதம் ஒப்பிடும்போது, மியூஸிலைவிட ஜாய்ஸின் சாதனைக்கு உள்பலம் . அதிகம் என்றே காண முடிகிறது. இலக்கிய சாதனையையும் மீறிய ஒன்று, இது என்றே நாம் கருத வேண்டும். 

'கா. சு: தின மணி சுடர் பேட்டியில், சுந்தர ராமசாமி, ஏதோ உலக நாவல் ஒன்றைத் தாம் எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே? 

பிரேமிள்: இது ஒரு வெருட்டல். அதாவது - யாரோ ஒரு பறையன் ஞானியாகி விட்டான். எங்கோ ஒரு தெருவோரத்தில் நிஷ்டையில் உட்கார்ந்திருக்கிறான். நான் தரிசித்த இந்தியாவில் இது எப்பவுமே சம்பவிக்கக் கூடிய ஒரு வியப்பு! மும்முடி வரம் பாலயோகிக்கு நிறையக் கூட்டம் சேர்ந்தது. அவர் உணவு, நித்திரை எதுவுமே இல்லாமல் நிஷ்டையில் மூழ்கியிருந்த ஒரு மகான். ஆனால் அவர் பிராமணரல்லர், மிகவும் கீழ்க்குலத்தைச் சார்ந்தவர். அதாவது கொத்தடிமையாக இருந்த ஒருவர் என்று சொல்கிறார்கள், சரி, இப்படி ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். நான் ஒரு பூசக வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்று வைத்துக் கொள்வோம். பூசக வர்க்கம் என்று இப்போது சுயவிளம்பரமாக சிலர் உபயோகிக்கும் வார்த்தையைத்தான் நான் இங்கே திரும்பச் சொல்கிறேன். இதில் உள்ளவர்கள் தங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது, எதற்கு?-- ஞானத்தை அடைவதற்கு என்பார்கள். 'ஞானத்தை அடைவதற்கு எவர்க்கும் அதிகாரம் இல்லை. ஆனால் ஞானத்தை அடைவதற்கு அத்திவாரமான சில சாஸ்திரங்கள், சில நூல்கள், சில ஸ்மிருதிகள் ஆகியவற்றைக் கற்பதற்கும் - குருவினிடம் போயிருந்து கேட்பதற்கும் - தங்களுக்குத்தான் - அதிகாரம் இருக்கிறது - ஆகவே அதிலிருந்து பிறக்கக்கூடிய ஞானத்துக்கும் தங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்பதைச் சொல்லாமலே சொல்கிறார்கள். ஆனால் ஆத்ம - ஞானத்தையும் காணோம், ஒரு மண்ணையும் காணோம். எனக்கு * ஏழு வயசில் பூணூல் போட்டாகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். பூணூல் போட்டாலே இரு பிறப்பாளனாகி விட்டேன் - இரண்டாவது பிறவி எடுத்து விட்டேன், ஆத்ம ஞானம் கிடைத்துவிட்டது என்பது தான் அர்த்தம். உண்மை யிலேயே ஞானம் கிடைத்த சந்தர்ப்பத்தில் யாரும் பூணூல் போடுவதில்லை. பூணூல் போடுவது ஒரு ஜாதீயச் சடங்கு. இது மிக அபத்தமான விஷயம். உலகில் எங்குமேயில்லாத மிக முட்டாள் தனமான விஷயம். பூணூல் போட்டால் துவிஜனன் ஆகிவிடுகிறான் என்பது மிகப் பெரிய புரளி, உலகத்திலே எங்கேயுமே இந்த மாதிரி ஒருபுரளி கிடையாது. சரி, எனக்கு ஆத்மஞானம் வரவில்லை. ஆனால் அதற்குத் தகுதியுள்ள ஒரு பூசகக் குடும்பத்தில் உள்ளவன். இப்போ நான் என்ன பண்ணனும்? “நான் தபஸ் பண்ணிண்டிருக்கேன்பா, பிரம்மஞானம் வந்துடும்பா ஏனென்றால் எங்களுக்குத்தான் அதிகாரம் இருக்கு. பிரபஞ்சம் என் சுண்டுவிரலாயிடும். அதாவது இந்த முழுநட்சத்திரங்கள், அகண்டம் எல்லாமே என் சுண்டுவிரல் மோதிரமாயிடும்'' என்று நான் சொல்லணும். இப்படிப்பட்ட ஒரு பார்வையினுடைய - பிரகடனத்தினுடைய - நீட்சிதான், சுந்தரராமசாமி இன்றைக்கு உலக நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதும், 

கா. சு : சுந்தரராமசாமி தமது 'ஜே. ஜே. சில குறிப்புகள்' பலருடைய ஆலோசனைகளின் பேரில் எழுதப்பட்டது என்று அதே பேட்டியில் சொல்கிறார். தமது 'காலச்சுவடு' பத்திரிகையைத் தாம் உண்மையாக எடிட் செய்திருந்தால் அவற்றுள் சில விஷயங்களே வெளியாகியிருக்கும் என்றும், இப்போதுள்ள பலருடைய பார்வையும் வெளிவரட்டும் என்றுதான் பலதையும் சேர்த்துள்ளதாகவும் சொல்லியிருக்கிறார். இவை பற்றி உங்கள் கருத்தென்ன? 

பிரேமிள்: சுந்தரராமசாமி தமக்குத்தாமே அப்ரூவராகிவிட்டார் என்பதைத்தான் இவை காட்டுகின்றன. முதல் விஷயம், தமது நாவலுக்கு எதிரான விமர்சனங்களுக்கு அவர் சமாதானம் தரும்போது, தாம் நாவலை எழுதும்போது சில நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எழுதியதாகச் சொல்கிறார். இது எந்த உயரிய படைப்பாளியும் செய்யாத விஷயம். பிறருடைய ஆலோசனைகளைக் கேட்டு எழுதுவதென்றால் என்ன? இதை என்ன அர்த்தத்தில் சொல்கிறார் என்பதே புரியாத சமாச்சாரமாக இருக்கிறது. இங்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. 'லொலிதா' நாவலை விளடீமர் நபக்கவ் எழுதி, ஒரு பிரசுர கர்த்தரிடம் கொடுத்தபோது, அவர் 'இதில் ஒரு வயசுக்குவராத சிறுபெண் சம்பந்தமான காமவிகாரத்தை அடிப்படையாக்கி எழுதியிருக்கிறீர்கள். இந்தச் சிறுமிக்குப் பதிலாக ஒரு சிறுவனை உபயோகித்தால் புத்தகம் இன்னும் நன்றாக விற்கும்' என்று சொன்னபோது, நபக்கவ் மிகக் கோபித்துக் கத்தியிருக்கிறார் என்பது அவரது 'Strong Openions' என்ற புத்தகத்தில் பதிவு பெற்றுள்ளது. நபக்கவ் இந்த மாதிரி விஷயங்களுக்காக 'The Arrogant Russian' என்று மேல் நாட்டு இலக்கிய வட்டாரங்களில் குறிக்கப்படுவார். குற்றச்சாட்டாக அல்ல, அட்மிரேஷனோடு என்பதைக் கவனிக்க வேண்டும். இப்படி ஒரு அட்மிரேஷனை உருவாக்கக்கூடிய தனித்தன்மையும், தன்னுடைய பார்வையை வெளியிடுவதில் ஆழ்ந்த வீரியம் சார்ந்த முரட்டுத்தனமும் கொண்டவனைத்தான் நாம் கலைஞன் என்று சொல்கிறோம், கலைஞன், சிருஷ்டிகர்த்தா என்பவை 'Creator' உடன் கடவுளுடன் சம்பந்தப்படுத்தும் வார்த்தைகள். இப்படி ஒரு கடவுள் பிறரது ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு நாவல் எழுதுகிறார் என்பதைக் கேட்கும்போது ரொம்பவும் பரிதாபமாக இருக்கிறது. இதில் ஒன்றுமட்டும் எனக்கு அழகாகத் தெளிவுபடு கிறது. சுந்தரராமசாமி ஒன்றும் முட்டாளல்ல. அவருக்கு என் விமர்சனங்கள் அழகாகத் தெளிவாகப் புரிந்திருக்கும் அவரை வழிபட்டுக் கொண்டிருப்பவர்களை விட அவர் ரொம்பவும் தெளிவாகவே என்னுடைய விமர்சனத்தின் தாக்குதலை அறிந்திருப்பார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு அவருடைய புத்திசாலித்தனத்தின் எல்லா லெவல்களும் ரொம்பவும் பரிச்சயமானவை. மேற்கூறியபடி பிறர் ஆலோசனைகளுக்கேற்ப எழுதினேன் என்று சொன்னது என்னுடைய விமர்சனத்துக்குப் பதிலாகத்தான். "என்னைத் தனியாக எடுத்து வைத்து குத்தம் சொல்லாதே-நான் மாட்டிக் கொண்டு முழிக்கிறேன்- ஒரு பக்கம் கிரியா ராமகிருஷ்ணன் ஒண்ணு சொல்றான். இந்தப் பக்கம் என் பொண்டாட்டி வேறே ஒண்ணு சொல்றா! என் உறவுக்கார துக்ளக்' பரந்தாமன் வேறே ஒன்னை வந்து சொல்லிப்புட்டுப் போறார்" என்று பிறர் மீது பழியைப் போடுகிறார், ரொம்ப 'புத்திசாலித்தனமாக'. அவர் சொன்னதை விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிக்குரிய கருத்தாக எடுத்துக் கொள்வோம். விமர்சனரீதியில் சில கேள்விகளை எழுப்புவோம். நீங்கங்ள் எவருடைய ஆலோசனைகளைக் கேட்டு எழுதினீர்கள்? நாவலின் எந்தெந்தப் பகுதி எந்தெந்த நபர்களின் ஆலோசனை கேட்டு எந்தப்பட்டது? இவர்கள் பகிரங்கத்தில் தெரிய வந்தவர்களா? [மாமன், அத்திம்பேர், பொண்டாட்டி என்றால் அவர்களுடைய இன்டலக்சுவல் தகுதி நமக்குத் தெரியாதே! கிரியா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் என்றால் நமக்குத்தெரியவரும்.) எனவே நமது விமர்சனம் அந்தப் பகுதிகளைப் பொருத்தவரை அவர்கள் மீதுதான் விமர்சனமாக வரவேண்டும், இப்படி ஒரு விசித்திரமான நிலமை விமர்சனத்துக்கே ஏற்பட்டுவிடும். எனவே இதை எல்லாம் புரிந்து கொண்டுதான் அப்படி சொல்கிறாரா என்பதே எனக்குப் புரியவில்லை. இப்படி ஒன்றை ஒரு இலக்கியக்கருத்தாக ஒரு இலக்கியவாதி சொல்கிறார் இதை ஏற்றுக்கொள்கிறது நமது சூழல். ரொம்ப ஆச்சர்யமானதாகவும் ஆபாசமானதாகவும் தோன்றுகிறது இது எனக்கு! 
.....
“““““““““““““““““““““““““