D மெக்ஸிகோ .
பொம்மை ராணி - கார்லோஸ் புயன்டஸ்
கார்லோஸ் புயன்டஸ் (பிறப்பு 1929) மெக்ஸிகோவில் பிறந்தவர். அரசு அதிகாரியின் மகனான அவர் பல்வேறு வட, தென் அமெரிக்க தலைநகரங்களில் கல்வி கற்றார். அவர் 1953ல் சட்டக் கல்லூரியை விட்டு வெளியேறியபோது அவருடைய இலக்கிய வாழ்வு ஆரம்பமானது. 1954ல் அவருடைய முதல் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. 1958ல் வெளிவந்த அவருடைய முதல் நாவலான ''காற்று தூயதாய் இருக்கும் இடத்தில்'' மெக்ஸிக புரட்சிக்குப் பிறகு சமூகத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த ஒரு மலையேறும் குழு அவர்களுடைய அதிர்ஷ்டத்தை உருவாக்குவதை சித்தரித்தது. சோதனை ரீதியான நடை வெளிப்படையாக பாஃக்னர், டாஸ் பாஸோஸ் ஆகியோரிட மிருந்து வந்தது. அவருடைய இரண்டாவது நாவல் "நல்ல மனசாட்சி'' 1959 ல் வெளி வந்தது. அது புரட்சிக்குப் பிந்திய மெக்ஸிகோவையும் லட்சிய பூர்வமான இளைஞர்கள் அவர்களுடைய வாழ்க் கையில் முன்னேறும்போது எப்படி அவர்களுடைய லட்சியங்களுக்குத் துரோகம் செய்கிறார்கள் என்பதையும் கையாண்டது. 1962ல் அவருடைய இரண்டு படைப்புகள் வெளி வந்தன. 'ஒளி வட்டம்'' என்ற குறுநாவலில் அடையாளம் என்பது கதைக் கருவின் பகுதியாக அமைந்தது. "அர்ட்டி மியோ குரூஸின் மரணம்" ஒருவேளை அவருடைய மிகப் பிரபலமான நாவல், பிளாஸ் பேக்குகளை பயன்படுத்தி, ஒருவரின் சாவுப் படுக்கையில், அவருடைய புரட்சிகர லட்சியத்தையும், இளமைப் பருவக் காதலையும் நினைவுபடுத்தி காதலற்ற திருமணம், அதிகாரத்திற்கு உயர்ந்த பிறகு அவ ருடைய வாழ்க்கையைச் சித்திரிக்கும் கொடூரம் ஆகியவற்றின் முரண்பாட்டை கூர்மையாக வெளிப் படுத்தியது. 1964ல் வெளிவந்த புயன்டஸின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியான 'குருடர்களின் கதைகள்'' என்பதிலிருந்து இந்தக் கதை எடுக்கப் பட்டுள்ளது. 1967ல் வெளி வந்த ''புனிதத்தலம்'' என்ற நாவல் ("முச்சிலுவை'' தொகுப்பில் சேர்க்கப் பட்டுள்ளது.) தெலிமாச்சஸ் புராணக் கதையின் போலியான நகலாக, எதிர் மறைப் பாலின் ஆடையை அணியும் சதைக் கருவை எடுத்துச் சொல்லியது. 1967ல் 'தோல் மாற்றம்' என்ற நாவல் நான்கு மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தியது. 1969ல் வெளிவந்த ''பிறந்தநாள்'' ஒரு சிறு நாவல். அவருடைய படைப்புகள் சர்வதேச ரீதியாக பிரபலமானவை. அவற்றில் சிலவற்றுக்கு திரைப்பட உரிமையை விற்றுள்ளார். அவரே நிறைய திரைக் கதைகளை எழுதியுள்ளார். மெக்ஸக அடையாளம் குறித்த தேசிய அக்கறை, நவீன வாழ்க்கையில் மெக்ஸிகோவின் கடந்த காலத்தின் பங்கு ஆகிய விஷயங்களை அவர் (முக்கியமாக அவருடைய ஆரம்ப கால படைப்புகளில்) பல மெக்ஸிக எழுத்தாளர்களோடு பகிர்ந்து கொண்டவர்.
191 | கல்குதிரை
அந்தப் கார்டு-அப்பேர்ப்பட்ட விநோதமான கார்டு - அவளுடைய இருப்பை எனக்கு ஞாபகப்படுத்தியதால் நான் போனேன். சிறுபிள்ளைத்தனமான அழகிய கையெழுத்துடன் இணைந்த பூதத்தை என்னிடம் மறு உயிர்ப்பூட்டிய, மறந்து போன புத்தகத்தின் பக்கங்களில் அதை நான் கண்டேன். நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக நான் என்னுடைய புத்தகங்களை வேறு விதமாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். உயர்ந்த அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டதிலிருந்து சில புத்தகங்கள் நீண்ட காலத்திற்கு மேல் படிக்கப்படவில்லை என்ற ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியத்தைச் சந்தித்துக் கொண்டிருந்தேன். நீண்ட காலத்திற்கு முன்பே பக்கங் களின் ஓரங்கள் துளாகி இருந்தன. முதலில் கனவுகளில் கண்டு, பிறகு நாம் போன பாலே நடனத்தின் ஏமாற்றும் யதார்த்தத்தில் சில உடல்களில் பூசப் பட்ட வார்னிலை நினைவு படுத்தும் வகையில் தங்கத்தூசியும் பழுப்பு நிறத்
அந்தப் கார்டு-அப்பேர்ப்பட்ட விநோதமான கார்டு - அவளுடைய இருப்பை எனக்கு ஞாபகப்படுத்தியதால் நான் போனேன். சிறுபிள்ளைத்தனமான அழகிய கையெழுத்துடன் இணைந்த பூதத்தை என்னிடம் மறு உயிர்ப்பூட்டிய, மறந்து போன புத்தகத்தின் பக்கங்களில் அதை நான் கண்டேன். நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக நான் என்னுடைய புத்தகங்களை வேறு விதமாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். உயர்ந்த அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டதிலிருந்து சில புத்தகங்கள் நீண்ட காலத்திற்கு மேல் படிக்கப்படவில்லை என்ற ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியத்தைச் சந்தித்துக் கொண்டிருந்தேன். நீண்ட காலத்திற்கு முன்பே பக்கங் களின் ஓரங்கள் துளாகி இருந்தன. முதலில் கனவுகளில் கண்டு, பிறகு நாம் போன பாலே நடனத்தின் ஏமாற்றும் யதார்த்தத்தில் சில உடல்களில் பூசப் பட்ட வார்னிலை நினைவு படுத்தும் வகையில் தங்கத்தூசியும் பழுப்பு நிறத்
கல்குதிரை / 192
தாள்த் துண்டுகளும் என்னுடைய திறந்த உள்ளங்கையில் விழுந்தது. அது எங்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்து வந்து புத்தகத்திலிருந்து - ஒரு வேளை அநேக குழந்தைகளினுடைய புத்தகத்திலிருந்து வந்தது- அநேகமாக எதிர்ப்புணர்ச்சிக்கு உதாரணமான தொடர்க்கதைகளாக, அவற்றை மேலும் மேலும் கேட்பதற்காக எங்களுடைய மூத்தவர்களின் காலடிகளில் உட்கார எங்களை விரையச் செய்யும்: ஏன்? தங்கள் பெற்றோரிடம் நன்றி உணர்ச்சி, அற்ற குழந்தைகள்; பாயும் குதிரை வீரர்களால் கடத்திச் செல்லப்பட்டு அவமானத்தோடு வீட்டிற்குத் திரும்பி வந்த கன்னிகள்-விருப்பப்பட்டு வீட் டையும் குடும்பத்தையும் துறந்தவர்கள், காலங்கடந்த அடமானத்திற்கு மாற்றாக நிர்க்கதியான குடும்பத்தின் இனிய, நீண்ட காலமாக அதிகத் துன்பம் அனுபவித்து வரும் மகளின் கரத்தைக் கோரும் கிழவர்கள் ...ஏன்? அவர் களுடைய பதில்களை நான் நினைவு கூரவில்லை. கறைபடிந்த பக்கங்களி லிருந்து, அமிலாமியாவின் மிக மோசமான கையெழுத்துடன் கூடிய ஒரு வெள்ளைக் கார்டு பறந்து வந்து விழுந்தது மட்டும் எனக்குத் தெரியும். அமிலாமியா அவளுடைய நல்ல நண்பனை மறக்க மாட்டாள் நான் அதை வரைந்துள்ளதைப் போல இங்கு வந்து என்னைப் பார்க்கவும்.
அந்தக் கார்டின் பின்புறத்தில் உள்ள வரைபடத்தில், குறிப்பிடப்பட்ட X லிருந்து புறப்படும் பாதை, சந்தேகத்திற்கிடமில்லாமல், பரிந்துரைக்கப் பட்ட, அலுப்பூட்டக்கூடிய கல்விக்கு எதிராக கலகம் செய்யும் இள வட்டமாகிய நான், என்னுடைய வகுப்பறை ஒழுங்கை மறந்து விட்டு பலமணி நேரங்களைக் கழிப்பதற்காக உண்மையிலேயே என்னால் எழுதப்படாத புத்தகங்களைப் படித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கக் கூடிய பூங்காப் பெஞ்சிலிருந்து புறப்படுவதாகத் தோன்றும்: அந்தக் கடற் கொள்ளைக்காரர்களின் கப்பல்கள், அந்த ஜாரின் தூதுவர்கள், அந்தப் பெரும் அமெரிக்க நதிகளில் நாள் முழுவதும் மேலும் கீழுமாகப் படகுகளை ஓட்டிச் செல்லும் என்னை விட இளையவர்களான பையன்கள், எல்லாமே என்னுடைய கற்பனையிலிருந்து உதித்தவை என்பதை யார் சந்தேகிக்க முடியும்? அது ஒரு மாயச் சேணத்தின் வெளியுரு என்பதைப் போல அந்தப் பூங்காப் பெஞ்சின் கைப் பிடியைப் பற்றிக் கொண்டிருந்த நான் முதலில், கற்கள் பாவிய தோட்டப் பாதையில் ஓடிவந்து என் பின்னால் நின்ற அந்தச் சிறு பெண்ணின் மெல்லிய காலடியோசையைக் கேட்கவில்லை. அது அமிலாமியா. அவளுடைய குறும்புத் தனம், ஒரு மத்தியானத்தில் மஞ்சள் பூப்பூத்த காட்டுச் செடியின் அருகிலிருந்து ஓடிவந்து, அவளுடைய உதடுகளைப் பிதுக்கி, புருவத்தைச் சுழித்து என் காதை ஸ்பரிசித்திருக்காவிட்டால் அந்தக் குழந்தை எவ்வளவு காலம் எனக்கு மௌனத் துணையாக இருந்து வந்திருக்கும் என்று எனக்குத் தெரியாது.
193 | கல்குதிரை
அவள் என்னுடைய பெயரைக் கேட்டு, அதைமிகத் தீவிரமாக பரிசீலித்த பிறகு, அவளுடையதை ஒரு புன்னகையோடு சொன்னாள், அப்போது வெளிப்படையாக இல்லாவிட்டாலும், ஒத்திகை பார்த்ததாக இல்லாத தன்மையுடன். அவளுடைய பிராயத்தின் சோபையற்ற தன்மைக்கும், நன்கு வளர்க்கப்பட்ட குழந்தைகள் அறிந்திருக்க வேண்டிய முதிர் பிராயத்தினரின் பாவனைக்கும் இடைப்பட்ட ஒரு வகை உணர்வு வெளிப்படுத்தலை, குறிப்பாக அறிமுகம், பிரிவு ஆகிய கண்ணியமான கணங்களுக்கானதை அமிலாமியா அறிந்து கொண்டாள் என்பதை விரைவில் நான் உணர்ந்து கொண்டேன், அறிந்து கொள்ளுதல் என்பதுதான் வார்த்தை என்றால். அமிலாமியாவின் தீவிரத்தன்மை, தெளிவான இயற்கையின் வரப்பிரசாதம், அதே போதில் அவளுடைய உத்வேகம், அதற்கு முரணாக, செயற்கையாகத் தோன்றும். நான் அவளை நினைவுபடுத்திக் கொள்ள விரும்புவேன், மத்தியானத்திற்குப் பிறகு மத்தியானமாக, புகைப்பட வரிசைகளின் தொடர்ச்சியாக, அவற்றின் முழுமையில் முழு அமிலாமியாவைக் கொடுக்கும். நான் அவள் உண்மையிலேயே இருப்பது போலவே அவளைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியவில்லை. அல்லது அவள் எப்படி அசலாக நகர்வாள், ஒளிர்வாள், கேள்வி கேட்டுக் கொண்டு, அவளைச்சுற்றியும் நிரந்தரமாக நோக்கிக்கொண்டு என்பதை நினைவு கூர முடியவில்லை என்பது என்னை ஆச்சரியப்படுத்துவதை நிறுத்த வில்லை. அவளை ஒரு புகைப்பட ஆல்பத்தில் போல, காலத்தில் பொருத்தப் பட்டவளாக நான் நினைவு கூரவேண்டும். அமிலாமியா தூரத்தில், ஒரு இடத்தின் ஒரு புள்ளியில் காட்டுப் புதர்களிலிருந்து மலைச் சமவெளியை நோக்கிச் சரிய, அச் சமவெளியில் நான் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு, வழக்கமாகப் படிக்க: நிழலும் சூரிய ஒளியும் அசையும் ஒரு புள்ளி, மலையின் உயரத்திலிருந்து என்னை நோக்கி அசையும் ஒரு கை, அமிலாமியா மலையிலிருந்து கீழிறங்கும் அவளுடைய பறத்தலில் உறைந்து, அவளுடைய குட்டைப் பாவாடை விரிய, அவளுடைய பூப் போட்ட உள்ளாடை எலாஸ்டிக்கினால் அவளுடைய தொடைகளுடன் இறுகித் தெரிய, அவளுடைய வாய் திறந்து அவளுடைய கண்கள் நீரோட்டமாய் பாயும் காற்றில்பாதி-மூடி இருக்க, குழந்தை மகிழ்ச்சியில் கதறினாள். யூகலிப்டஸ் மரங்களுக்கு அடியில் அமர்ந்திருந்த அமிலாமியா கதறுவதைப்போல பாவனை செய்தாள். ஏனென்றால் நான் அவளிடம் செல்லவேண்டும் என்பதற்காக. அமிலாமியா கையில் ஒரு பூவுடன் குப்புறப்படுத்துக் கிடந்தாள்: அந்த மலரின் இதழ்கள் இந்தத் தோட்டத்தில் மலர்ந்தவை அல்ல என்பதை நான் பின்னால் அறிந்து கொண்டேன், ஆனால் வேறு எங்கோ, ஒரு வேளை அமிலாமியாவின் வீட்டுத் தோட்டத்தில், ஊதாக்கட்டம் போட்ட அவளுடைய மேல்கவுனின் ஒரே பையில் அடிக்கடி அந்த வெள்ளைப் பூக்கள் நிறைந்திருக்கும். அமிலாமியா நான் படிப்பதை கவனித்துக் கொண்டு, பச்சை பெஞ்சின் கம்பிகளை இரண்டு
-க.25
கல்குதிரை | 194
கைகளாலும் பிடித்துக் கொண்டு அவளுடைய சாம்பல் நிற கண்களால் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பாள்: அந்தப்பக்கங்களிலிருந்து பிறந்த உருவங்களை அவள் என் கண்களில் காணமுடியும் என்பதைப்போல, நான் என்ன படித்துக்கொண்டிருக்கிறேன் என்று அவள் எப்போதும் என்னிடம் கேட்டதில்லை என்பதை நான் நினைவு கூர்கிறேன். நான் அவளை இடுப்பைப் பிடித்துத்துக்கி என் தலைக்கு மேலே சுற்றும் போது அமிலாமியா மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டிருப்பாள்; இந்த மெதுவான பறத்தலில் இந்த உலகத்தைப்பற்றி ஒரு புதிய தெளிவை அலள் அடைந்ததாகத் தோன்றும், அமிலாமியா பின்புறமாகத்திரும்பிக்கொண்டு அவளுடைய கையை உயரமாகத் தூக்கி, விரல்கள் எழுச்சி பெற்று அசைய, என்னை நோக்கி குட்பை என்று கையசைப்பாள் அமிலாமியா. அவள் என்னுடைய பெஞ்சைச்சுற்றித் தோன்றுகிற அந்த ஆயிரக்கணக்கான தோற்றங்களில், தலை கீழாகத் தொங்கிக்கொண்டு, அவளுடைய சட்டை பெரும் அலையாய் மேலெழுந்து கொண்டிருக்கும்; கற்பாவலில் கால்களைப் பின்னிக்கொண்டு நாடியைக் கைகளில் தாங்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பாள்; அவளுடைய இடுப்புப் பட்டனை சூரியனுக்குக் காட்டிக் கொண்டு புல்லின் மேல் படுத்திருப்பாள்; மரக்கிளைகளையும் மிருகங்களையும் ஒரு மாக்குச்சியால் மண்ணில் வரைந்து கொண்டு, பெஞ்சின் கம்பிகளை நக்கிக்கொண்டு, இருக்கைக்கு அடியில் மறைந்து கொண்டு, புராதனமான மரக்கிளைகளிலிருந்து ஓடிந்த கொப்புகளை மௌனமாக முறித்துக் கொண்டு, மலைக்கு அப்பால் உள்ள அடிவானத்தை வெறித்துக் கொண்டு, கண்களை மூடி ராகமிழைத்துக்கொண்டு, பறவைகளின், நாய்களின் பூனைகளின், கோழிகளின், குதிரைகளின் குரல்களைப் போல செய்து கொண்டு, எல்லாம் எனக்காக, ஆனால் இதற்கு மாறாக ஒன்றுமில்லை. அது அவள் என்னுடன் இருக்கிற முறை, இவை எல்லாமும் எனக்கு நினைவில் உள்ளன, அதே நேரத்தில் அது அவள் பூங்காவில் தனியே இருக்கிற முறையும். ஆமாம், ஒரு வேளை அவளைப் பற்றிய என்னுடைய நினைவு பின்னமானது. ஏனென்றால், ஒளியின் பிரதிபலிப்பில் ஒருபோதில் கோதுமை நிறமாகவும், இன்னொரு போதில் எரிந்த செஸ்ட்நட் நிறமாகவும் மாறும் மென்மையான கூந்தலைக் கொண்ட வட்டவடிவமான கன்னம் கொண்ட அந்தப் பெண்ணைப் பற்றிய கற்பனை என்னுடைய படிப்புக்கு மாற்றாக அமையும்; அமிலாமியா என்னுடைய வாழ்க்கைக்கு ஆதரவான இன்னொரு விஷயத்தை, என்னுடைய சமாதானமடையாத குழந்தைப் பருவத்திற்கும், என்னுடைய படிப்பினால் என்னுடையதாகியிருந்த நம்பிக்கை பூமியாகிய வெளி உலத்திற்கும் இடையில் பதட்டம் ஏற்படுத்திய அந்த விஷயத்தை எவ்வாறு அந்தக் சணத்தில் நிறுவினாள் என்று இன்றே நான் நினைத்தேன்.
அப்போது அல்ல. அப்போது நான் என்னுடைய புத்தகங்களில் உள்ள பெண்களைப் பற்றிக் கனவு கண்டேன், சாராம்சமான பெண்ணைப்பற்றி
195 / கல்குதிரை
இந்த வார்த்தை என்னைத் தொந்தரவு செய்கிறது--நெக்லஸை ரகசியமாக வாங்குவதற்காக ராணியைப் போன்ற வேடம் போடக்கூடியவளைப்பற்றி, தொல்கதைகளின் கற்பனைப் பிறவிகளைப் பற்றி - பாதி அடையாளம் காணக் கூடியது, பாதி வெள்ளை மார்பு கொண்டது. ஈரவயிறு கொண்ட பல்லிகள் அவர்களுடைய படுக்கையில் இளவரசர்களுக்காகக் காத்திருப்பவர்கள். இவ்வாறு, பார்வைக்குப் புலனாகாதவாறு, நான் என்னுடைய குழந்தைப் பருவத்துணையிடம் புறக்கணிப்பு என்ற நிலையில் இருந்து குழந்தையின் வசீகரத்தையும், தீவிரத்தையும் ஒத்துக் கொள்கிற நிலைக்கு மாறினேன். அங்கிருந்து எனக்குப் பிரயோஜனமற்றதாக மாறிய ஒரு இருப்பை எதிர் பாராமல் ஒதுக்கித் தள்ளுகிற நிலைக்கு மாறினேன். கடைசியாக அவள் என்னை எரிச்சல் படுத்தினாள். பதினான்கு வயதான நான், இன்னும் ஞாபகமாகவோ, பழக்க வாசனையாகவோ மாறாத, சிடந்தகாலமாகவும் அதனுடைய யதார்த்தமும் ஆசமட்டுமே உள்ள ஏழு வயதான அந்தக் குழந்தையால் எரிச்சல்படுத்தப்பட்டேன். நான் என்னை பலஹீனத்தின் வழியில் இழுத்துச் செல்லப்பட அனுமதித்தேன். நாங்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டு அந்தப் புல்வெளியின் ஊடே ஒன்றாக ஓடினோம். ஒன்றாக பைன் மரங்களை உ.லுக்கினோம். அமிலாமியா அவளுடைய மேல் கவுன் பையில் பொறுமையோடு பாதுகாத்த பைன் பழங்களைப் பொறுக்கினோம். நாங்கள்: ஒன்றாக காகிதக் கப்பல்களைச் செய்து, மகிழ்ச்சியாகவும், ஆரவாரத்தோடும் கழிவோடையின் சடைசி எல்லை வரை அவற்றைத் தொடர்ந்தோம். அந்த மத்தியான ஆரவாரக் கூச்சல்களுக்கிடையில் நாங்கள் மலையிலிருந்து உருண்டோம். அதன் அடிவாரத்தில் உருண்டு சேர்ந்தோம். அமிலாமியா என்னுடைய மார்பில், என்னுடைய உதடுகளுக்கிடையில் அவளுடைய கூந்தல், இனிப்புகளால் பிசுபிசுத்த அவளுடைய சிறிய கைகள் என்னுடைய கழுத்தில், நான் கோபத்தோடு அவளுடைய கைகளைத் தூரத் தள்ளி அவளை விழச் செய்தேன். அமிலாமியா காயமடைந்த அவளுடைய முழங்காலையும், கணுக் காலையும் தேய்த்துக் கொண்டு அழுதாள். நான் என்னுடைய பெஞ்சிற்கு வந்தேன். அதற்குப் பிறகு அமிலாமியா போனாள், அடுத்தநாள் அவள் வந்தாள், ஒரு வார்த்தையும் இல்லாமல் காகிதத்தை என்னிடம் கொடுத்தாள், ராகமிழைத்துக்கொண்டு காட்டினினடயே மறைந்து போனாள். அந்தக் கார்டை கிழிப்பதா அல்லது / பண்ணையில் மத்தியானங்கள் | என்ற புத்தகத்தின் பக்கங்களில் வைப்பதா என்று தயங்கினேன். என்னுடைய படிப்போ அமிலாமியாவினால் குழந்தைத்தனமாக மாறிப்போனது. அவள் அந்தப் பூங்காவிற்குத் திரும்பி வரவில்லை. சில நாட்களுக்குப் பிறகு நான் என்னுடைய விடுமுறைக்காகப் போய்விட்டேன். நான் திரும்பியபோது என்னுடைய தயாரிப்புப்பள்ளியின் முதல் ஆண்டு கடமைகளுக்காக அது இருந்தது. அதற்குப் பிறகு நான் அவளைப் பார்க்கவில்லை.
கல்குதிரை / 196
II
விநோதமாக இல்லாமல், வழக்கத்தில் இல்லாததாக இருக்கிற, ஆனால் அதிக உண்மையாக இருப்பதால் அதிக வேதனை தருவதாய் இருக்கிற பிம்பத்தை நான் இப்போது மறுத்து, மறக்கப்பட்ட அந்தப் பூங்காவிற்கு நான் மீண்டும் வந்து அந்தப் பைன், யூகலிப்டஸ் மரக் கூட்டங்களின் முன் நின்று கொண்டு என்னுடைய கற்பனையின் அதீத விரிவுக்குப் போதுமான இடமளிக்கும் வண்ணம் என்னுடைய நினைவு, வலியுறுத்திய பெருக்கத்துடன் சித்தரிச்க அந்தப் புதர் மண்டிய வேலிப்பகுதியின் சிறிய தன்மையை நான் அங்கீகரித்தேன், பார்க்கப்போனால் ஸ்டிரோசோப், உறக்கின்வெரி, மில்டே டி வின்டர் , ஜெனி வியிவ் டி பிராபான்டே ஆகியோர் இங்கு பிறந்து, வாழ்ந்து, இறந்து போயிருக்கிறார்கள்: அங்குமிங்குமாக பழைய புறக்கணிக் கப்பட்ட மரங்கள் நடப்பட்ட, காட்டுச் செடிகள் பின்னிய இரும்புக் கிராதிகளால் சூழ்ந்த, வண்ணப் பூசப்பட்டு மரம் போலத் தோன்றக் கூடிய, என்னுடைய அழகிய உருக்கு இருட்டு பச்சை வண்ணம் பூசப்பட்ட பெஞ்சு எப்போதுமே இருந்ததில்லை அல்லது என்னுடைய ஒழுங்கான, கடந்த காலத்தை பின்நோக்கிய வியப்பின் ஒரு பகுதி என்று என்னை வலிய நம்ப வைக்கக் கூடிய ஒரு காங்கிரீட் பெஞ்சால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தோட்டம். அந்த மலை... பறந்து திரிந்த அமிலாமியா அவளுடைய தினசரி வருகையிலும் போகையிலும் இதில் ஏறியும், இறங்கியும் இருந்தாள் என்றும், நாங்கள் இருவரும் இணைந்து உருண்ட அந்த ஆழமான சரிவு இது என்றும் நான் எவ்வாறு நம்ப முடியும்? என்னுடைய நினைவு உருவாக்கிய உயரங்களையும் ஆழங்களையும் தாண்டாத உயர்த்த மட்டுமே பட்ட திட்டான கருங் குச்சிகள்.
நான் அதை வரைந்துள்ளதைப் போல என்னை இங்கு வந்து பார்க்கவும். எனவே நான் தோட்டத்தைக் கடக்க வேண்டும், மரங்களைப் பின் விட்டு, மூன்று மூன்று படிகளாகத் தாண்டி மலையை விட்டு இறங்கி குறுகிய செஸ்ட் நட் மரத் தோப்பு வழியே சென்று - இங்கேதான், நிச்சயமாக, அந்தக் குழந்தை வெள்ளை நிற இதழ்களைச் சேகரித்து கிறீச்சிடும் பூங்காக் கதவைத் திறந்து, திடீரென நினைவு கூர்ந்து... தெரியும்... தன்னைத் தெருவில் கண்டு, ஒருவனுடைய இளம் பருவத்தின் எல்லா மத்தியானங்களையும் உயர்ந்து, ஒரு மாய மந்திரம் போல, வெள்ளப் பெருக்கான விசில்கள், மணிகள், குரல்சன், விசும்பல்கள், என்ஜின்கள், ரேடியோக்கள், சாபங்கள், ஆகியவற்றை இல்லாமல் ஆக்கி, சூழ்ந்துள்ள நகரத்தின் துடிப்பை அறுப்பதில் அவன் வெற்றி கண்டான். எது உண்மையான காந்தம், மௌனமான தோட்டமா அல்லது காய்ச்சல் பதட்டம் கொண்ட நகரமா?
197 | கல்குதிரை
நான் விளக்கு மாறி எதிர்த்த நடை பாதைக்கு கடப்பதற்காகக் காத்திருந்தேன், போக்குவரத்தை நிறுத்திவைத்திருக்கும் சிவப்பு வண்ண விளக்கை விட்டு என் கண்களை அகற்றாமல், நான் அமிலாவியாவின் தாளைப் பார்த்தேன், எல்லாவற்றிற்கும் மேலாக நான் வாழ்ந்து கொண்டிருக்கும் கணத்தின் உண்மையான காந்தம் அந்த அரைகுறையான வரைபடமே. அதைப்பற்றி நினைப்பதே என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. என்னுடைய பதினான்கு வயதின் இழந்து போன மத்தியானங்களுக்குப் பிறகு நான் ஒழுங்கின் வழிகளை பின்பற்ற நிர்பந்தித்துக் கொண்டேன்; என்னுடைய இருபத்தியொன்பதாவது வயதில், ஒரு டிப்ளமோவைப் பெற்று, ஒரு அலுவலகத்தைச் சொந்தம் கொண்டு நடுத்தரமான வருமானம் உறுதி செய்யப்பட்டு, இன்னும் ஒரு பிரம்மச்சாரியாக, பராமரிக்க குடும்பம்: எதுவும் இல்லாமல், செக்ரட்டரிகளுடன் படுப்பதில் இலேசாக அலுப்புக் கொண்டு எப்போதாவது கிராமப்புறத்திற்கோ அல்லது கடற்கரைக்கோ போவதில் அரிதாக வியப்புக் கொண்டு, என்னுடைய புத்தகங்களால், என்னுடைய பூங்காவால், அமிலாமியாவால் எனக்கு அளிக்கப்பட்டு வந்ததைப் போன்று ஒரு மையக் கவர்ச்சியின் இழப்பை உணர்ந்து கொண்டு இருப்பதாக இப்போது என்னை நான் காண்கிறேன். சாம்பல் நிறமும் தாழ்ந்த கட்டிடங்களும் கொண்ட இந்தப் புற நகர்ப் பகுதியின் தெருவில் நான் நடக்கிறேன். கதவுகளில் வண்ணம் உரிந்த ஒற்றை மாடி வீடுகள் அலுப்பூட்டுமாறு ஒன்றிற்கு அடுத்தாற்போல் ஒன்றாக இருந்தன. அருகாமையிலுள்ள வீடுகளின் பலஹீனமான ஒலிகள் பொது ஒருமையை வெறுமே ஊடுருவ மட்டுமே செய்தன: இங்கே ஒரு கத்திச் சாணை பிடிப்பவனின் கிறீச்சிடுதல், அங்கே ஒரு செருப்பு ரிப்பேர் பார்ப்பவனின் சுத்தியல் ஒலி, அருகாமையிலுள்ள வீடுகளின் குழந்தைகள் ஓய்ந்த தெரு வோரங்களில் விளையாடிக் கொண்டிருந்தன. தெருவில் ஆர்கன் வாசிப்பவரின் இசை, குழந்தைகளின் விளையாட்டு கூச்சல்களுடன் சேர்ந்து என்னுடைய காதுகளை எட்டியது. நான் ஒரு கணம் நின்று உணர்ச்சியோடு அவர்களைக் கவனித்தும், வேகத்தோடு கடந்தும், அமிலாமியா இந்தக் குழத்தைக் கூட்டங்களுக்கு நடுவே இருக்கக் கூடும், அடக்கமில்லாமல் அவளுடைய பூப்போட்ட உள்ளாடையைக் கட்டிக் கொண்டு, ஏதாவது பால்கனியிலிருந்து அவள் முழங்கால்களில் தொங்கிக் கொண்டு, விளையாட்டு அதீதங்களில் இன்னமும் விருப்பத்தோடு அவளுடைய பையில் வெள்ளை இதழ்களை நிரப்பிக் கொண்டு நான் புன்னகைத்தேன். இருபத்திரெண்டு வயதான இளம் பெண், இந்த முகவரியில் இன்னும் வாழ்ந்தாலும், என் னுடைய நினைவுகளைக் கண்டு சிரிப்பாள் அல்லது அந்தத் தோட்டத்தில் கழித்த மத்தியாயங்களை ஒரு வேளை மறந்திருப்பாள் என்று முதன் முறையாக என்னால் கற்பனை செய்ய முடிந்தது.
கல்குதிர ! 198
மற்ற எல்லா வீடுகளோடும் ஒத்ததாக இருந்தது அந்த வீடு. கனமான துழைவுக் கதவு, ஷட்டர்கள் மூடப்பட்ட இரண்டு கிரில் ஜன்னல்கள். ஒரு ஒற்றை மாடி வீட்டின் சிறு தூண்கள் கொண்ட போலியான நவ-புராதன சுற்றுச் சுவர். அநேகமாக அந்த மொட்டை மாடியின் நடை முறைகளை மறைத்துக் கொண்டிருக்கும், கொடிகளில் தொங்கும் துணிகள், தண்ணீர் தொட்டிகள், வேலைக்காரர்களின் குடியிருப்புகள், ஒரு கோழிக் கூடு. நான் அழைப்பு மணியை அழுத்துவதற்கு முன்னால் எந்தவிதமான பிரமையிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அமிலாமியா இன்னும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. அவன் ஏன் ஒரே வீட்டில் பதினைந்து ஆண்டுகள் வசிக்க வேண்டும். அதோடு அவளுடைய வயதை மீறிய சுதந்திரம், தன்மை ஆகியவற்றால் அவள் நன்றாக வளர்க்கப்பட்ட, நல்ல நடத்தை உள்ள ஒரு பெண்ணாகத் தோன்றினாள். இந்தக் குடியிருப்புகள் நளினமானதாக இல்லை; அமிலாமியாவின் பெற்றோர்கள் சந்தேகத்திற்கிடமில்லாமல் இந்த இடத்தை விட்டு காலி செய்து போயிருப்பார்கள். ஆனால் ஒரு வேளை புதிய குடித்தனக்காரர்களுக்கு அவர்கள் எங்கு போயிருக்கிறார்கள் என்று தெரிந்திருக்கக் கூடும்.
நான் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தேன். நான் மீண்டும் அழுத்தினேன். இங்கே இன்னொரு எதிர்பாராத நிகழ்ச்சி; ஒருவரும் வீட்டில் இல்லை. மீண்டும் என்னுடைய இளம் பருவத்துத் தோழியைப் பார்ப்பதற்கான தேவையை நான் உணருவேனா? இல்லை. ஏனென்றால் என்னுடைய இளம் பருவத்தில் உள்ள ஒரு புத்தகத்தை இரண்டாம் முறையாகத் திறந்து தற்செயலாக அமிலாமியாவின் கார்டைக் கண்டு பிடித்துப் பார்ப்பது சாத்தியமல்ல. நான் என்னுடைய அன்றாடக் காரியங்களில் இறங்கி, எதனுடைய முக்கியத்துவம் அதன் விரையும் ஆச்சரியத்தில் பொதிந்திருக்கிறதோ, அந்தக் கணத்தை மறந்து விடுவேன்.
நான் மீண்டும் ஒரு முறை அழுத்தினேன். என்னுடைய காதை கதவில் அழுத்தினேன். நான் ஆச்சரியமடைந்தேன். நான் ஒரு கடுமையான சீரற்ற மூச்சு விடுதலை மறுபக்கத்தில் கேட்க முடிந்தது; சிரமப்பட்டு மூச்சு விடுகிற சத்தம், பழைய புகையிலையின் மூச்சுப் பிடிக்க முடியாத நாற்றத்துடன் கலந்து ஹாலின் சுவர் விரிசல் வழியே வெளியே கசிந்தது.
"குட் ஆப்டர் நான். நீங்கள் சொல்ல முடியுமா?...''
என்னுடைய குரலைக் கேட்ட உடனேயே அந்த ஆள் கனமான நிச்சயமற்ற காலடிகளுடன் தூர நகர்ந்தார், நான் மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினேன், இந்தத் தடவைக் கத்திக் கொண்டு:
"கதவைத் திறங்கள்! என்ன விஷயம்? நான் பேசறது கேக்கலையா?"
199 / கல்குதிரை
ஒரு பதிலுமில்லை. நான் தொடர்ந்து அழைப்பு மணியை அழுத்திக் கொண்டிருந்தேன், எந்த விளைவும் இல்லாமல். சிறு விரிசல்களில் வெறித்துக் கொண்டு, தூரம் எனக்கு ஒரு பார்வையைக் கொடுக்கும் அல்லது ஊடுருவலைக் கூட என்பதுபோல நான் கதவருகில் இருந்து பின்னால் நகர்ந்தேன். அந்தப் பாழாய்ப் போன கதவின் மேல் என்னுடைய கவனம் பூராவும் குவிந்திருக்க நான் தெருவைக் கடந்தேன், பின்பக்கமாக நடந்து. கடூரமான விசில் ஒலியைத் தொடர்ந்த ஒரு துளைக்கக் கூடிய கூச்சல் என்னைத் தக்க நேரத்தில் காத்தது; மோதி, யாருடைய குரல் என்னைக் காத்ததோ அந்த நபரை நான் அடைந்தேன். ஒரு கார் தெருவில் விரைவதையும், என்னுடைய எரிகிற வியர்க்கிற தோலுக்கு குளிர்ந்த ரத்தம் விரையும்போது பாதுகாப்புக் கொடுப்பதை விட அதிகமான ஆதரவு கொடுத்த ஒரு பிடியோடு நான் ஒரு விளக்குக் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை மட்டும் நான் கண்டேன். அமிலாமியாவினுடையதாக இருந்து கொண்டிருந்த, இருந்த, உறுதியாக அவளுடையதாகிய அந்த வீட்டை நான் பார்த்தேன். அங்கு என்னென்ன தொங்கிக் கொண்டிருந்தது என்று எனக்குத் தெரியாது
குட்டைப் பாவாடைகள், பைஜாமாக்கள், பிளவுஸ்கள்- எனக்குத் தெரியாது. மொட்டை மாடியின் வெள்ளைச் சுவரில் ஒரு இரும்புக் கம்பத்திற்கும் ஒரு ஆணிக்கும் நடுவே கட்டப்பட்ட ஒரு நீண்ட கொடியில் துணி பின்களால் மாட்டப்பட்டுக் கிடந்த கஞ்சிப் பசை போடப்பட்ட சிறிய ஊதாக் கட்டம் போட்ட மேல் கவுனை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது.
III
பதிவாளர் அலுவலகத்தில் அந்தச் சொத்து செனார்' ஆர். வால்டிவியா என்பவர் பெயரில் உள்ளது, அவர் வாடகைக்கு விட்டுள்ளார் என்று என்னிடம் கூறினார்கள். யாருக்கு? அது அவர்களுக்குத் தெரியவில்லை. வால்டிவியா யார்? அவர் தன்னை ஒரு வியாபாரி என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார். அவர் எங்கு வாழ்கிறார்? நீங்கள் யார்? அத்த இளம் பெண் அகந்தையுடன் கூடிய ஆர்வத்துடன் என்னைக் கேட்டாள். ஒரு அமைதியான நிச்சயமான தோற்றத்தைக் கொடுக்க என்னால் முடியவில்லை. என்னுடைய நரம்புக்களைப்பைத் தூக்கம் நீக்கவில்லை. வால்டிவியா. நான் பதிவாளர் அலுவலகத்தை விட்டு நீங்கியதும் சூரியன் என்னைத் தாக்கியது. மேகங்களுக்குள் மறைந்த சூரியன் மேகங்களின் வழியாகக் கசிந்து அதன் மூலம் தீவிரமாக-தூண்டிய வெறுப்பை நான் ஈரமான நிழல் செறிந்த பூங்காவிற்குத் திரும்ப வேண்டும் என்ற ஆசையுடன் இணைந்தேன். அது அமிலாமியா அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறாளா, அவர்கள் ஏன் என்னை வீட்
1 செனார் -ஸ்பானிஷ் மொழிபேசும் மனிதனுக்கு உரிய பட்டம்.
கல்குதிரை / 200
டிற்குள் விட மறுத்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆசை மட்டும்தான். ஆனால் என்னை இரவு முழுவதும் முழித்துக் கொண்டிருக்க வைத்த அபத்த எண்ணத்தை நான் ஒதுக்கித் தள்ளுவதே நான் முதலில் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய வேலை. அவள் பூக்களைப் பாதுகாத்து வைத்திருந்த மேல் கவுன் அந்தத் தாழ்வாரத்தில் காய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து. பதினான்கு பதினைந்து வருடங்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்த ஏழு வயதுப் பெண் அந்த வீட்டில் வாழ்கிறாள் என்பதை நான் நம்பிக்கொண்டு...அவள் ஒரு சிறு பெண்ணாக இருக்க வேண்டும். ஆமாம் அமிலாமியா இருபத்தி ரெண்டு வயதில், அதே மாதிரி உடை உடுத்துகிற, அதே மாதிரி இருக்கிற, அதே விளையாட்டுக்களை விளையாடுகிற, அதோடு - யாருக்குத் தெரியும் ஒருவேளை அதே பூங்காவிற்குப் போய்க் கொண்டு இருக்கிற ஒரு பெண்ணுக்குத் தாயாக இருக்க வேண்டும். ஆழ்ந்த சிந்தனையில் நான் மீண்டும் அந்த வீட்டின் கதவின் முன்னால் வந்து விட்டேன். நான் அழைப்பு மணியை அழுத்திவிட்டு கதவின் அடுத்த பக்கத்தில் விசிலடிப்பது போன்ற மூச்சுச் சத்தத்திற்காகக் காத்திருந்தேன். நான் தவறாக நினைத்து விட்டேன். ஐம்பது வயதுக்கு மேல் இருக்க முடியாத ஒரு அம்மாளால் கதவு திறக்கப் பட்டது. ஒரு சால்வையை மூடிக் கொண்டு கறுப்பு ஆடை உடுத்தி கறுப்பு லோ-ஹில் ஷூக்கள் அணிந்து, மேக்கப் போடாமல், கறுப்பும் வெள்ளையும் கலந்த கூந்தலை கொண்டை போட்டுக் கொண்டு, அவள் இளமை என்ற பசப்பலோ அல்லது பிரமையோ எல்லாவற்றையும் கைவிட்டவளாகத் தோன்றினாள்' அவள் இரக்கமற்ற விழிகளால் அநேகமாக கொடூரமாகத் தோன்றியவற்றால் என்னைக் கவனித்தாள்.
''உங்களுக்கு எதாவது வேணுமா?''
"செனார் வால்டிவியா என்னை அனுப்பியிருக்காரு" நான் இருமி, என்னுடைய கையால் என்னுடைய முடியைத் துழாவினேன். நான் என்னுடைய கைப்பெட்டியை என்னுடைய அலுவலகத்திலிருத்து எடுத்து வந்திருக்க வேண்டும். அது இல்லாமல் என்னுடைய பாத்திரத்தை நான் நன்றாக நடிக்க முடியாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
''வால்டிவியா?" அந்த அம்மாள் பதட்டமில்லாமல் ஆர்வமில்லாமல் கேட்டாள்.
"ஆமாம். இந்த வீட்டுச் சொந்தக்காரர்"
ஒரு விஷயம் தெளிவு. அந்த அம்மாள் அவளுடைய முகத்தில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. அவள் அமைதியாக என்னைப் பார்த்தாள்...
201 | கல்குதிரை
"ஓ ஆமாம். இந்த வீட்டுச் சொந்தக்காரர்.''
“ நான் உள்ளே வரலாமா"
மோசமான நகைச்சுவை நாடகங்களில் பயணம் செய்யும் விற்பனையாளன் அவள் முகத்தில் கதவை அறைந்து சாத்தி விடாமல் இருப்பதற்காக கதவுக்கு உள்ளே ஒரு காலை வைத்துக் கொண்டிருப்பதாக நான் நினைத்தேன். நான் அதையே செய்தேன், ஆனால் அந்த அம்மாள் பின்னால் நடந்து அவளுடைய கையசைவால் ஒரு காரேஜாக இருக்கக் கூடிய ஒன்றிற்குள் என்னை வரச் சொல்லி வரவேற்றாள். ஒரு பக்கத்தில் அதனுடைய வண்ணம் மங்கிய ஒரு கண்ணாடிக் கதவு இருந்தது. நான் வாயிற் புறத்தின் மஞ்சள் கற்களைத் தாண்டிக் கதவை நோக்கி நடந்தேன்' சிறிய காலடிகளோடு என்னைப் பின் தொடர்ந்து வந்த அந்த அம்மாளைப் பார்த்துத் திரும்பி நான் மீண்டும் கேட்டேன்:
"இந்த வழியாகவா?''
அவளுடைய வெள்ளைக் கைகளில் ஒரு ஜெபமாலையை வைத்திருந்ததையும் ஓய்வற்று அதை உருட்டிக் கொண்டேயிருந்ததையும் நான் முதன் முறையாகக் கவனித்தேன். என்னுடைய சிறு வயதுக்குப் பிறகு அந்த மாதிரியான பழைய மோஸ்தர் ஜெபமாலைகளில் ஒன்றை நான் பார்த்ததேயில்லை. நான் அதைப் பற்றி விமர்சிக்க எண்ணினேன். ஆனால் அந்த அம்மாள் கடூரமாகவும் திட்டவட்டமாகவும் கதவைத் திறந்த விதம் எந்த விதமான வேண்டாத பேச்சையும் பேசுவதைத் தடுத்தது. நாங்கள் ஒரு நீண்ட குறுகிய அறைக்குள் நுழைந்தோம். அந்த அம்மாள் விரைந்து ஷட்டர்களைத் திறந்தாள். ஆனால் சைனாக் களிமண்ணால் செய்யப்பட்ட சட்டிகளில் வளர்க்கப் பட்ட பல ஆண்டுகள் உயிர்வாழக்கூடிய பெரிய செடிகள் நான்காலும், கடினமான கண்ணாடிப் பானைகளாலும் அந்த அறை நிழல் சூழ்ந்து இருந்தது. அந்த அறையிலிருந்த மற்ற பொருட்கள் உயர்ந்த பின்பக்கத்தை உடைய, பிரம்பால் நேர்த்தியாக்கப்பட்ட பழைய சோபாவும் ஒரு ஆடும் நாற்காலியும் மட்டுமே. ஆனால் அந்தச் செடிகளோ, மேஜை நாற்காலிகளின் குறைவோ என்னுடைய கவனத்தைக் கவரவில்லை.
அந்த அம்மாள் அவள் அந்த ஆடும் நாற்காலியில் உட்காருவதற்கு முன்னால் என்னைச் சோபாவில் உட்காரச் சொன்னாள், எனக்குப் பின்னால் சோபாவின் பிரம்புக் கை மேல் ஒரு திறந்த பத்திரிகை கிடந்தது.
செனார் வால்டிவியா நேரில் வராததற்காக அவருடைய மன்னிப்பைக் கோரச் சொன்னார்.''
-க. 26
கல்குதிரை / 202
அந்த அம்மாள் இமைக்காமல் சாய்வு நாற்காலியில் ஆடிக் கொண்டிருந்தாள். நான் என்னுடைய கடைக் கண் வழியாக அந்த காமிக் புத்தகத்தைச் சிரமப்பட்டுப் பார்த்தேன்.
“அவர் அவருடைய வாழ்த்துக்களை அனுப்பினார். அதோடு...''
நான் அந்த அம்மாளிடமிருந்து ஒரு எதிர்வினையை எதிர்பார்த்து நிறுத்தினேன். அவள் தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தாள். சிவப்புப் பென்சில் கிறுக்கல்கள் அந்தப் பத்திரிக்கையில் நிறைந்து இருந்தது.
"அதோடு இன்னும் சில நாட்களுக்கு உங்களைத் தொந்தரவு செய்வார் என என்னைத் தெரிவிக்கச் சொன்னார்.''
என்னுடைய கண்கள் விரைவாகத் தேடியது.
''வரி செலுத்துவதற்காக இந்த வீட்டின ஒரு புதிய மதிப்பீடு தயாரிக்க வேண்டியிருக்கிறது. அது செய்யப்படவில்லை என்று தோன்றுகிறது...
நீங்கள் இங்கே எப்போதிருந்து வாழ்கிறீர்கள்...''
ஆமாம். சிறு தடிமனான லிப்ஸ்டிக் அந்த நாற்காலிக்கு அடியில் கிடக்கிறது. அந்த அம்மாள் புன்னகைத்தால், அது ஜெபமாலையைத் தடவி மெதுவாக நகரும் கைகளால் மட்டுமே; அவளுடைய அம்சங்களைத் தொந் தரவு செய்யாத ஒரு கிண்டலின் வரையும் ஒளிர்வை ஒரு சணத்திற்கு நான் உணர்ந்தேன். அவள் இன்னும் பதில் சொல்லவில்லை.
''அநேகமாக பதினைந்து ஆண்டுகளாக, அது உண்மை இல்லையா?"
அவள் ஒத்துக் கொள்ளவில்லை. அவள் மறுக்கவும் இல்லை. அந்த வெளுத்த மெலிந்த உதடுகளில் லிப்ஸ்டிக்கின் சுவடே இல்லை.
"நீங்கள், உங்கள் கணவர் அதோடு...''
என்னைத் தொடரச் சொல்லி சவால் விடுபவளைப் போல அவளுடைய பாவனையை மாற்றாமலே என்னை வெறித்துப் பார்த்தாள். அவள் ஜெய மாலையை உருட்டிக் கொண்டு, நான் என்னுடைய முழங்காலில் கைவைத்து முன்னால் குனிந்து ஒரு கணம் மெனமாக அமர்ந்திருந்தோம். நான் எழுந்தேன்,
"நல்லது. அந்தப் பேப்பர்களோடு நான் மத்தியானம் வருகிறேன்...''
அந்த அம்மாள் தலையசைத்துக் கொண்டே மெளனமாக அந்த லிப்ஸ்டிக்கையும், அந்தக் காமிக் புத்தகத்தையும் எடுத்து அவற்றை அவளுடைய சால்வையின் மடிப்புகளுக்குள் மறைத்துக் கொண்டாள்.
203 | கல்குதிரை
IV
அந்தக் காட்சி மாறவில்லை. இந்த மத்தியானத்தில் நான் என்னுடைய நோட்டுப் புத்தகத்தில் பொய்யான எண்களை எழுதிக் கொண்டு மந்தமாக்கப் பட்ட தரைப் பலகைகளின் தரத்தைப் பற்றியும் அந்த வசிக்கும் அறையின் நீளம் பற்றியும் நிறுவுவதில் ஆர்வமிக்கவனாக பாவலா செய்து கொண்டிருக்க, அந்த ஜெபமாலையின் முப்பது ஆண்டுகள் அவள் கைகளின் வழியே முனகிக் கொண்டிருக்க, அந்தப் பெண் ஆடிக் கொண்டிருந்தாள். அந்த வசிக்கும் அறையிலுள்ள சாமான்களின் விவரப் பட்டியல் என்பது போன்ற ஒன்று முடிந்தவுடன் நான் பெரு முக்சு விட்டேன். அந்த வீட்டின் அடுத்த அறைகளுக்குப் போவதற்கு நான் அந்த அம்மாளிடம் அனுமதி கேட்டேன். அந்த அம்மாள் கறுப்பு-அணிந்த அவளுடைய கரங்களை ஆடும் நாற்காலியின் இருக்கையில் பலமாக ஊன்றிக் கொண்டு, அவளுடைய குறுகிய, எலும்பான தோள்களில் சால்வையைச் சரி செய்து கொண்டு எழுந்தாள்.
அவள் தெளிவில்லாத சண்ணாடிக் கதவைத் திறந்தாள். கொஞ்சமே கூடுதலாக மேஜை நாற்காலிகள் உள்ள உணவருந்தும் அறைக்குள் நாங்கள் துழைந்தோம். ஆனால் அலுமினியக் கால்கள் உள்ள மேஜை, நான்கு நிக்கல் மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகள் -ஆகியவை, வசிக்கும் அறை மேஜை நாற்காலிகளிலிருந்து சிறு மாறுதல் கூட உள்ளவையாய் இல்லை. உருக்கு இரும்பு கிரில்கள் உள்ள இன்னொரு ஜன்னலும் மூடிய ஷட்டர்களும் சில நேரங்களில், ஷெல்ப்களோ, பீரோவோ இல்லாத வெற்றுச் சுவரைக் கொண்ட இந்த உணவு அருந்தும் அறைக்கு வெளிச்சம் கொடுக்கும். அந்த மேஜையின் மேல் இருந்த ஒரே பொருள் ஒரு கறுப்புத் திராட்சைக் கொத்து, இரண்டு பீச் பழங்கள், வளையமாக ரீங்கரித்துக் கொண்டிருக்கும் ஈக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பழக் கிண்ணம் மட்டுமே. அந்த அம்மாள் கைகளைக் கட்டிக் கொண்டு அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள். அந்தப் பொருட்களின் ஒழுங்கைக் குலைக்கிற அபாயத்தை நான் எடுத்துக் கொண்டேன்: நான் உண்மையிலேயே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிற எதையும் இந்த அறைகள் எனக்குச் சொல்லாது என்பது வெளிப்படை.
''நாம் மொட்டைமாடிக்குச் செல்ல முடியாதா?'' நான் கேட்டேன். “அதுதான் மொத்தப் பரப்பையும் அளப்பதற்கான சிறந்த வழி என்று நான் நம்புகிறேன்."
அந்த அம்மாள் என்னைப் பார்க்கும் போது அவள் கண்கள் ஒளி கொண்டன அல்லது ஒரு வேளை நிழல் செறிந்த அந்த உணவருந்தும் அறைக்கு எதிரிணையாக அது மட்டும் தான் இருந்தது.
கல்குதிரை / 204
“எதற்காக'' அவள் இறுதியாகச் சொன்னாள் “செனார் ...வால்டிவியாவுக்கு...பரிமாணங்கள் எல்லாம் நன்றாகத் தெரியும்.''
அந்த இடைவெளிகள், அந்த வீட்டுச் சொந்தக்காரரின் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் விட்ட இடைவெளிகள் தான் அந்த அம்மாளை ஏதோ ஒன்று கடைசியில் தொந்தரவு செய்து விட்டது என்பதற்கான முதல் அறிகுறிகள் அந்தத் தொந்தரவே, அவளைப் பாதுகாப்பாக, குறிப்பிட்ட அளவு எதிரணியாகச் சொல்ல அவளைக் கட்டாயப் படுத்தியது.
'எனக்குத் தெரியாது. நான் புன்னகைக்க முயற்சித்தேன். ''ஒரு வேளை மேலிருந்து கீழாகப் போவதையே நான் விரும்புவேன். மற்றபடி...'' என்னுடைய போலிப் புன்னகை வடிந்து விட்டது.
'... கீழிருந்து மேல் இல்லை .''
"நான் காட்டுகிற வழியில் நீங்கள் போக வேண்டும்." அந்த அம்மாள் சொன்னாள், அவளுடைய கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு, வெள்ளிச் சிலுவை அவளுடைய கறுப்பு வயிற்றில் தொங்கிக் கொண்டிருக்க.
பலஹீனமாகச் சிரிப்பதற்கு முன்னால், எவ்வாறு இந்த நிழலில், என்னுடைய பாவனைகள் வீணானவை, குறியீட்டுத் தன்மை கூடக்கொண்டவை அல்ல என்று நினைக்க என்னை நானே கட்டாயப்படுத்திக் கொண் டேன். நான் அந்த நோட்டுப் புத்தகத்தை அட்டையின் மொறமொறப்புச் சத்தத்துடன் திறந்து, அதிக பட்ச சாத்தியமான வேகத்துடன் என்னுடைய குறிப்புகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டு, மேலே பார்க்காமல், இந்த வேலையின் எண்களும், மதிப்பீடுகளும், அவற்றின் கற்பனையும் - என்னுடைய கன்னங்களில் உள்ள லேசான வெட்கமும், என்னுடைய நாக்கின் உணரத்தக்க உலர்தலும் என்னிடம் சொல்லியது - யாரையும் ஏமாற்றுவது அல்ல. அந்த வரைபடத்தாளை அபத்தக் குறிகளாலும் ஸ்குயர் ரூட்களாலும், அல்ஜிப்ரா பார்முலாக்களாலும் நிரப்பிக் கொண்டு, விஷயத்திற்கு வருவதிலிருந்தும், அமிலாமியாவைப் பற்றிக் கேட்பதிலிருந்து, இங்கிருந்து ஒரு திருப்திகரமான பதிலோடு வெளியேறுவதிலிருந்து என்னைத் தடுத்து நிறுத்துகிறது என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். எதுவுமில்லை. அதோடு ஒரு பதிலே எனக்குக் கிடைத்தாலும் இந்தப் பாதையில் உண்மை இருக்கப் போவதில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. என்னுடைய மெலிந்த மௌனமான துணை தெருவில் இரண்டாம் முறை பார்க்கக் கூடிய நபர் அல்ல, கரடு முரடான மேஜை நாற்காலிகளோடு கூடிய அநேகமாக ஆள் வசிக்காத இந்த வீட்டில், கூட்டத்தில் அவள் ஒரு அநாமதேய முகமாக
205 | கல்குதிரை
இல்லாமல் போவாள், அதோடு மர்மக்கதையின் வழக்கமான கதாபாத்திரமாக மாறிப் போவாள். இவ்விதமானது முரண்பாடு, அமிலாமியாவின் நினைவுகள் கற்பனைக்கான என்னுடைய பசியை இன்னொரு தடவை எழுச்சி பெறச் செய்யுமானால் நான் அந்த விளையாட்டின் விதிகளைப் பின்பற்றுவேன், நான் எல்லாவிதத் தோற்றங்களையும் காலியாக்குவேன், என்னுடைய பாதையில் வரக்கூடிய ஜெப இடங்களின் செனோரா' வின் எதிர்பாராத திரைகளின் பின் ஒளிந்திருக்கும் பதிலை- ஒருவேளை எளிமையும் தெளிவும் ஆனது உடனடியானது, வெளிப்படையானது- கண்டு பிடிக்கும் வரை நான் ஓய மாட்டேன். என்னுடைய சம்மதமற்ற ஆம்பிடிரையானிடம் (Amphirtyon) நியாயப்படுத்த முடியாத அளவுக்கு விநோதத் தன்மையை நான் பரிசளிக்கிறேனா? அது அப்படியென்றால் நான் என்னுடைய கண்டுபிடிப்பின் குறுக்கும் நெடுக்குமான தன்மையில் சந்தோஷம் மட்டுமே கொள்ள வேண்டும். அந்த ஈக்கள் சேதமுற்ற பீச்பழத்தின் நுனியை எப்போதாவது கடந்து லேசாக ஒரு கடி கடித்துக் கொண்டு அந்தப் பழப்பாத்திரத்தை இன்னமும் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. என்னுடைய குறிப்புகள் என்பதன் பேரால் நான் இன்னும் நெருங்கிக் குனிந்து கொண்டேன். சிறிய பற்கள் பழத்தின் வெல்வெட் தோலிலும், வெளிர் பழுப்பு நிறமான சதையிலும் அடையாளங்களை விட்டன. நான் செனோராவைப் பார்க்க வில்லை. நான் குறிப்புகள் எடுப்பதாக பாவலா செய்து கொண்டிருந்தேன். பழம் கடிக்கப்பட்டதாகத் தோன்றியது ஆனால் தொடப்படவில்லை. அதை நன்றாகப் பார்ப்பதற்காக நான் என்னுடைய கைகளை மேஜையின் மீது வைத்துக் கொண்டு, தொடாமல் கடிக்கிற செயலைப் பற்றி வருந்துபவன் போல என்னுடைய உதடுகளை நெருக்கமாக வைத்துக் கொண்டு நான் கீழே குனிந்தேன், நான் கீழே பார்த்தேன். நான் இன்னொரு அடையாளத்தை என்னுடைய காலுக்கு அருகில் பார்த்தேன்; இரண்டு டயர்களின் தடம், சைக்கிள் டயர் களைப் போன்று தோன்றியவை, இரண்டு ரப்பர் டயர்களின் தடம் மேஜையின் விளிம்பு வரை வந்து, தடத்தின் அழுத்தம் குறைந்து, பிறகு மேலும் சென்றது, அறையின் நீளத்திற்கு, செனோராவை நோக்கி...
நான் என்னுடைய நோட்புக்கை மூடினேன். "நாம் தொடருவோம், செனோரா.''
நான் அவளை நோக்கித் திரும்பியபோது அவள் நாற்காலியின் பின்னால் அவளுடைய கைகளை வைத்துக் கொண்டு நின்று கொண்டு இருப்பதை நான் காண முடிந்தது. கறுப்பு சிகரெட்டின் புகையை இறுமிக்
2: செனோரா-ஸ்பானிஷ் மொழி பேசக்கூடிய திருமணமான பெண்ணிற் கான பட்டம்.
கல்குதிரை / 206
கொண்டு ஒரு மனிதர் கனத்த தோள்களுடனும் மறைந்த கண்களுடனும் அவளுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார்: அந்தக் கண்கள், வீங்கிய சுருக்கம் விழுந்த இமைகளுக்குப் பின்னால் ஆமையின் கழுத்தைப்போல கனத்து வளைந்து தொங்கிக் கொண்டும் எளிதில் வெளியில் தெரியாததாக என்னுடைய ஒவ்வொரு அசைவையும் பார்க்க முடியாததாகத் தோன்றியது. குறுக்கும் நெடுக்குமான வெட்டுக் காயங்களோடு கூடிய பாதி சிரைக்கப்பட்ட சன்னங்கள் முன் துருத்திக் கொண்டிருந்த கன்ன எலும்புகளிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தன. அவருடைய பச்சையான கைகள் அவருடைய கரங்களுக்குக் கீழே மடிக்கப் பட்டிருந்தன. அவர் ஒரு முரட்டு நீலச் சட்டையை அணிந்திருந்தார். அவருடைய கலைந்த தலைமுடி மிகவும் சுருண்டு சிறு மீன் ஒட்டிய கப்பலின் அடிப்பாகம் போல காட்சியளித்தது. அவர் அசையவில்லை. அவர் உயிர் தரித்திருப்பதற்கான உண்மையான அடையாளம் நான் நுழைவு ஹாலில் ஏற்கனவே தண்ணீர்க் குழாய்களில் கேட்டது போன்ற சிரமமான விசிலடிக்கும் மூச்சு விடுதலே. (ஒவ்வொரு மூச்சு விடுதலும் வெள்ளம் போன்ற சளிக்கும், எரிச்சலுக்கும், அவமரியாதைக்கும் வழி திறந்தது.) கிண்டலாக அவர், ''குட் ஆப்டர் நூன்" என்று முணுமுணுத்தார். நான் எல்லாவற்றையும் மறப்பதற்கு விருப்பமுற்றேன். அந்த மர்மம், அமிலாமியா, வீட்டு மதிப்பீடு, சைக்கிள் தடங்கள். அந்த ஆஸ்த்மாக் கொண்ட கிழட்டுக் கரடியின் பயங்கரத் தோற்றம் ஒரு உடனடியான பின் வாங்கலை நியாயப்படுத்தியது. நான் பதிலுக்கு ''குட் ஆப்டர் நூன்,'' என்றேன். அந்தத் தடவை பிரியா விடை கொடுக்கும் தொனிமாற்றத்தோடு. ஆமையின் முகமூடி ஒரு பயங்கரப் புன்னகையாகக் கரைந்தது: அந்தச் சதையின் ஒவ்வொரு அணுவும் கடினமான ஆனால் கிழியக் கூடிய ரப்பராலும் வண்ணம் தீட்டிய உரியக் கூடிய எண் கொய்த் துணியாலும் செய்யப் பட்டது போல இருந்தது. அந்தக் கரம் நீண்டு என்னை நிறுத்தியது.
"வால்டிவியா நான்கு வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார்,'' அந்த மனிதன் அவனுடைய தொண்டைக்குப் பதிலாக அவனுடைய வயிற்றிலிருந்து வெளிவந்த சோகமான மூச்சடைக்கும் குரலில் சொன்னான்: ஒரு பலஹீனமான. உச்சஸ்தாயிக்குரல்.
அந்த வலிமையான, அநேகமாக வேதனையான இடுக்கிப்பிடிக்கு ஆட்பட்டு நான் பாவலா செய்வதில் பயனில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் என்னைக் கவனித்துக் கொண்டிருந்த அந்த மெழுகு, ரப்பர் முகங்கள் ஒன்றும் சொல்லவில்லை. அந்த ஒரே காரணத்தினால், எல்லாவற்றிற்கும் மேலாக, கடைசியாக ஒரு தடவை பாவலா செய்வதாக, ''அமிலாமியா...'' என்று நான் சொன்னபோது எனக்கு நானே பேசிக்கொள்வது போல பாவலாச் செய்தேன்.
207 / கல்குதிரை
ஆமாம்; யாரும் இனிமேல் பாவலாச் செய்ய வேண்டியதில்லை. தோளைத் தொட்டுக் கொண்டிருக்கும் மெழுகுக் கையை எடுக்க எழுவதற்கு முன்னால் என்னுடைய கரத்தை இறுகப் பிடித்த முஷ்டி ஒரு கணத்திற்கே அது தன்னுடைய பலத்தை உறுதி செய்தது, உடனடியாக அந்த இறுகல் தளர்ந்தது, பிறகு அது விலகியது பலஹீனமாசு நடுங்கிக்கொண்டு: செனோரா முதன்முறையாக குழப்பம் கொண்டு ஒரு கலைக்கப்பட்ட பறவையின் கண்களால் என்னைப் பார்த்து, அவளுடைய அம்சங்களின் இறுகிய திகைப்பை மாற்றாத வறண்டதுக்கத்தோடு விசும்பினாள்.
திடீரென்று என்னுடைய கற்பனையின் பூதத்தில் தோன்றிய இரண்டு தனிமையான, கைவிடப்பட்ட, காயமுற்ற முதியவர்கள், கைகுலுக்கலினால் அவர்களை அரிதாகவே ஆறுதல்படுத்திக் கொள்ள முடியும். என்பது என்னை வெட்கத்தால் நிரப்பியது. நான் பங்கிட்டுக் கொள்வதற்கு இன்னமும் உரிமை இல்லாத எதோ ஒன்றால் இந்த வாழ்க்கையிலிருந்து வனவாசம் புரிகிற இரண்டு மனித ஜீவன்களின் அந்தரங்கத்தையும் இரகசியத்தையும் குலைப்பதற்கு என்னுடைய விநோதத் தன்மை என்னை இந்த வெற்று உணவருந்தும் அறைக்குள் கொண்டு வந்தது, நான் என்னை எப்போதும் இதை விடக் கீழானவனாகக் கருதியது இல்லை. ஒருபோதும் இவ்வளவு சிக்கலான வகையில் வார்த்தைகள் என்னை தோற்கடித்தது இல்லை: என்னுடைய எந்தப் பயனையும் வீணானது: நான் அவர்களை அணுகலாமா, நான் அவர்களைத் தொடலாமா, நான் அழையா விருந்தாளியாக நுழைந்ததற்காக மன்னிக்கும்படி அவர்களை வேண்டலாமா? நான் என்னுடைய நோட்டுப்புத்தகத்தை என் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு, என்னுடைய துப்பறியும் கதையின் யூகங்களை மறதிக்குத் தள்ளினேன் : காமிக் புக், லிப்ஸ்டிக், லேசாக கடிக்கப்பட்ட பழம், சைக்கிள் தடங்கள், ஊதாக் கட்டம் போட்ட மேல் கவுன்... நான் அமைதியாக வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன். கனத்த கண் இமைகளுக்குப் பின்னிருந்து அந்த முதியவர் என்னைக் கவனித்திருக்க வேண்டும். கடினமூச்சுடன் கூடிய குரல் கேட்டது:
''அவளை உங்களுக்குத் தெரியுமா?''
அந்தக் கடந்தகாலம், அவர்கள் தினந்தோறும் அவ்வளவு இயக்கையாக உபயோகப்படுத்தி வருவது, என்னுடைய பிரமைகளை அழித்தது. பதில் உள்ளது. உங்களுக்கு அவளைத் தெரியுமா? எல்லளவு வருடமாக? எவ்வளவு வருடமாக இந்த உலகம் அமிலாமியா இல்லாமல் வாழ்ந்து வருகிறது. என்னுடைய மறதியினால் கொல்லப்பட்டு, நேற்றே துயரமிக்சு, வீர்யமற்ற நினைவால் மீட்கப்பட்டு, எப்போதும் தனிமையிலிருக்கும் தோட்டத்தின் மகிழ்ச்சியில் திகைப்பதை அந்த தீவிர மிக்க சாம்பல் விழிகள் எப்போது
கல்குதிரை / 208
நிறுத்தின? எப்போது அந்த உதடுகள் நிறுத்தின? எரிச்சலில் பிதுங்கவோ அல்லது சடங்கான தீவிரத் தன்மையோடு மெலிதாக மூடவோ செய்வதை, நான் இப்போது உணர்கிறேன், அதனால் அமிலாமியா வாழ்கையின் பொருட்களையும், நிகழ்ச்சிகளையும் விரைந்து மறைபவை என்று ஒரு வேளை அவளின் உள்ளுணர்வால் உணர்ந்ததை, கண்டுபிடித்து, புனிதப்படுத்தியிருக்க வேண்டும்.
"ஆமாம். நாங்கள் அந்தப் பூங்காவில் ஒன்றாக விளையாடினோம். நீண்டகாலத்திற்கு முன்பு.''
"அவளுக்கு என்ன வயதிருக்கும்?'' அந்த முதியவர் கேட்டார், அவருடைய குரல் இன்னும் மங்கியது .
''அவளுக்கு ஏழு வயதிருக்கும். ஏழுக்கு அதிகமில்லை .'' தேடும் கைகளோடு, அந்த அம்மாளின் குரல் உயர்ந்தது:
அவள் எப்படி இருந்தாள் செனார்? அவள் எப்படி இருந்தாள் என்று தயவு செய்து சொல்லுங்கள் எங்களுக்கு.''
நான் என் கண்களை மூடினேன்.
"அமிலாமியா என்னுடைய நினைவும் கூட அவள் தொட்ட, கொண்டு வந்த, பூங்காவில் கண்டுபிடித்த பொருட்களோடு அவளை என்னால் ஒப்பீடு செய்ய முடியும். ஆமாம் நான் இப்போது அவளைப் பார்க்கிறேன் மலையிலிருந்து கீழிறங்கிக்கொண்டிருப்பதை, இல்லை. அது அறுத்த வயலின் தாள் கூட்டம் கொண்ட ஒரு உயர்ந்த இடம் மட்டுமே என்பது உண்மை அல்ல. அது புல்வெளி கொண்ட ஒரு மலை. அமிலாமியா வருவதும் போவதும். ஒரு பாதைத்தடத்தை உண்டுபண்ணி விட்டது. அவள் கீழே வருவதற்கு முன்னால் மேலிருந்து எனக்கு கையசைப்பாள் இசையோடு, ஆமாம், நான் பார்த்த இசை, நான் முகர்ந்த ஓவியம், நான் கேட்டருசிகள், நான் தொட்ட வாசனைகள்... என்னுடைய சித்த பிரமை...'' அவர்கள் என்னைக் கேட்கிறார்களா?
அவள் கையசைத்துக் கொண்டு வருவாள், வெள்ளை உடை அணிந்து ஊதாக்கட்டம் போட்ட மேல் கவுனோடு... மொட்டை மாடியில் நீங்கள்
தொங்கவிட்டிருப்பது...''
அவர்கள் என் கையைப் பிடித்தார்கள். நான் இன்னும் என் கண்ணைத் திறக்கவில்லை.
" அவள் எப்படி இருந்தாள் செனார்?''
''அவளுடைய கண்கள் சாம்பல் நிறம் அவளுடைய கூந்தலின் நிறம் பிரதிபலிப்புக்கும், மரங்களின் நிழலுக்கும் மாறும்...''
209 | கல்குதிரை
அவர்கள் என்னை மெதுவாக இட்டுச் சென்றார்கள், அவர்கள் இருவரும்; நான் அந்த மனிதனின் சிரமப்பட்ட மூச்சைக் கேட்டேன், ஜெபமாலையிலுள்ள சிலுவை அந்த அம்மாளின் உடலில் மோதியது. -
''தயவு செய்து எங்களுக்குச் சொல்லுங்கள்...''
"அவள் ஓடும் போது காற்று அவளுடைய கண்களில் கண்ணீரைக் கொண்டு வரும்; அவள் என்னுடைய பெஞ்சை அடையும் போது அவளுடைய கன்னங்கள் ஆனந்தக் ஓண்ணீரால் வெள்ளியாய் மின்னும்."
நான் என்னுடைய கண்களைத்திறக்கவில்லை. நாங்கள் இப்போது மேல்மாடிக்குப் போகிறோம். இரண்டு, ஐந்து, எட்டு, ஒன்பது, பன்னிரெண்டு படிகள் . நான்கு கைகள் என்னுடைய உடலுக்கு வழி காட்டின.
"அவள் எப்படி இருந்தாள், அவள் எப்படி இருந்தாள்?"
அவள் யூகலிப்டஸிற்கு அடியில் உட்கார்ந்து கிளைகளால் மாலைகள் பின்னினாள். கதறுவதாக பாவலா செய்வாள். ஏனென்றால் நான் என் னுடைய படிப்பை விட்டு விட்டு அவளிடம் போக வேண்டும் என்பதற்காக...''
கதவுக் கீல்கள் கிறீச்சிட்டன. வாசனை எல்லாவற்றிற்கும் மேலிட்டது. அது மற்றப் புலன்களை வாங்கிக் கொண்டது, என்னுடைய சித்தப் பிரமை யின் சிம்மாசனத்தில் ஒரு மஞ்சள் மொகலாயனைப் போல அது அதனுடைய இருக்கையை எடுத்துக் கொண்டது; ஒரு சவப் பெட்டியைப் போல கனத்து இருந்தது, ஒரு வழுக்கும் பட்டின் வழுக்கலைப் போல மெல்ல வழுக்கிக் கொண்டு நுழைந்தது, துருக்கியச் செங்கோலைப் போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது, கனிமத்தாதின் ஆழமான தொலைந்த நரம்பைப் போல தெளிவில்லாமல் இருந்தது, ஒரு அழிந்து போன நட்சத்திரத்தைப் போல பிரகாசமாக இருந்தது. அந்தக் கைகள் என்னை மேலும் பிடிக்கவில்லை. விசும்பலை விட முதியவர்களின் நடுங்கலே என்னைச் சூழ்ந்து இருந்தது. மெதுவாக நான் என் கண்களைத் திறந்தேன்: முதலில் என் விழிப்படலத்தின் நடுங்கும் நீர் வழியாக, பிறகு என்னுடைய இமைகளின் வலை வழியாக, அறை நறுமணங்களின் அளவற்ற மோதலில் மூச்சுத் திணறி, இணக்கமற்ற, உறைந்த, அநேகமாக சதை-போன்ற இதழ்களை வெளிப் படுத்தியது: பூக்களின் பிரசன்னம் வலிமை வாய்ந்ததாய் இருந்தது. அவர்கள் இங்கே உயிருள்ள சதையின் தரத்தைக் கருதும் படியாக மல்லிகையின் இனிமை, லில்லிக்களின் நோய் உணர்வு, வெள்ளைப் பூக்கள் கொண்ட ட்யூப் ரோஸ் செடியின் சமாதி, கார்டினியா பூஞ்செடியின் கோவில். வேகமாகப் படபடக்கும்
--க.27
கல்குதிரை / 210
மெழுகுவர்த்திகளின் ஒளிரும் மெழுகு உதடுகளால் ஒளியூட்டப்பட்டு அந்தச் சிறிய, ஜன்னலற்ற படுக்கையறை மெழுகின் ஒளி வட்டத்தோடும் ஈரமான மலர்களோடும் என்னுடைய அடிவயிற்றைத் தாக்கியது. அங்கிருந்து, வாழ்க்கையின் சூரிய வட்டத்திலிருந்து, மெழுகு வர்த்திகளுக்கும் மேலாக சிதறிய பூக்களுக்கு ஊடாக உபயோகப் படுத்தப்பட்ட பொம்மைகளின் குவியலை நான் மீட்கவும் பார்வை கொள்ளவும் செய்தேன்: வண்ண வளையங்கள், சுருங்கிய பலூன்கள், உலர்ந்து கண்ணாடி போன்று தெரியும் செர்ரிப் பழங்கள், மெலிந்த திமில்களைக் கொண்ட மரக் குதிரைகள், ஸ்கூட்டர், குருடான கூந்தலற்ற பொம்மைகள், அவற்றின் மரப் பொடியைச் சிந்தும் கரடிகள், காற்றுப் போன ஆயில்-துணி வாத்துக்கள், பூச்சி கடித்த நாய்கள், பிய்ந்து போன குதி கயிறுகள், காய்ந்து போன மிட்டாய்களைக் கொண்ட கண்ணாடி பாட்டில்கள், பிய்ந்துபோன ஷுக்கள், மூன்று சக்கர சைக்கிள் (மூன்று சக்கரங்கள்? இல்லை இரண்டு, சைக்கிளைப் போல அல்ல கீழே இரண்டு சமமான சக்கரங்கள்) சிறிது உல்லன், தோல் எக்கள்; என்னை நோக்கி, என்னுடைய கைக்கெட்டும் தூரத்தில், தாள்ப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நீலப் பெட்டிகளால் அந்தச் சிறு சவப் பெட்டி செய்யப் பட்டிருந்தது. இந்தத் தடவை பூக்கள் வாழ்க்கை அளவிலானவை, கார்னேஷன்கள், சூரிய காந்திகள், பாப்பீகள், டியூலிப்கள், ஆனால் மற்றவை போல சாவுக்கானவை. இவ்வளவும் ஆன்மா சாந்தியடைவதற்கான இந்த இறுதிச் சடங்குச் சூழலில் ஒரு பகுதியாக ஏற்படுத்தப்பட்டு, வெள்ளி முலாம் பூசப் பட்ட சவப் பெட்டியின் உள்ளே, கரும் பட்டுத் துணிகளுக்கு நடுவே, வெள்ளை சாட்டின் தலையணையின் மேல், அந்த அசைவற்ற அமைதியான முகம் வேஸ் துணியால் மூடப்பட்டு, ரோஜா நிற சாயத்தால் அலங்கரிக்கப் பட்டு, கண் இமைகள் லேசாக பென்சிலால் தீட்டப்பட்டு, உதடுகள் மூடி, உண்மையான அடர்த்தியான கண் இமைகளோடு, அவை கன்னங்களில், பூங்காவில் இருந்த நாட்களின் ஆரோக்கியத்தோடு கூடிய நளினமான நிழலை விழச் செய்தன. தீவிரமான சிவப்பு உதடுகள், நான் விளையாட வருவதற்காக அமிலாமியா பரவலாவாகச் செய்வது போல கோபத்தில் பிதுங்கியதைப் போல இருந்தது. கைகள் மார்பின் மீது சேர்க்கப்பட்டிருந்தன. ஒரு சிறு ஜெபமாலை, தாயினுடையதை ஒத்தது, அந்த அட்டைக் கழுத்தை நசுக்கிக் கொண்டிருந்தது. சிறிய வெள்ளைக் கோடித் துணி அந்தத் தூய, 4 பருவம் அடைவதற்கு முந்திய பணிவான உடலின் மேல். முதியவர்கள், விசும்பி, முழங்காலிட்டார்கள்.
நான் என்னுடைய தோழியின் பீங்கான் முகத்தில் என் விரல்களை ஓட விட்டேன். இந்தச் சாவின் ராஜ சபையின் படோ டோபத்தில் தலைமை
211 / கல்குதிரை
ஏற்றிருக்கும் பொம்மை ராணியின் வண்ணம் தீட்டப் பட்ட அம்சங்களின் குளிர்ந்து போன தன்மையை நான் உணர்ந்தேன். பீங்கான், அட்டை, பருத்தி அமிலாமியா அவளுடைய நல்ல நண்பனை மறக்க மாட்டாள் நான் அதை வரைந்துள்ளதைப் போல என்னனை இங்கு வந்து பார்க்கவும்.
நான் அந்தப் போலிப் பிணத்திடமிருந்து என்னுடைய கையை பின்னிழுத்துக் கொண்டேன். அந்த பொம்மையின் தோலைத் தொட்ட இடங்களில் என்னுடைய விரல் ரேகைகள் பதிந்திருந்தன.
மெழுகுவர்த்திப் புகையும் அந்த அறையின் லில்லி பூக்களின் இனிய நெடியும் என் வயிற்றில் குடியேறிப் பிரட்ட ஆரம்பித்தது. அமிலாமியாவின் சமாதியை விட்டுத் திரும்பினேன். அந்த அம்மாளின் கை என் கரத்தைத் தொட்டது. அவளுடைய மிருக வெறித்தல் கொண்ட கண்கள் அவளுடைய அமைதியான நடுங்காத குரலுக்குச் சம்பந்தமுடையனவாய் இல்லை.
''இனிமேல் வராதீர்கள் செனார். நீங்கள் அவளை உண்மையிலேயே நேசித்தால் மீண்டும் வராதீர்கள்"
நான் அமிலாமியாவின் அம்மாவின் கையைத் தொட்டேன. என்னுடைய நோய் கண்ட கண் வழியாக அந்த முதியவர் அவருடைய முழங் கால்களுக்கு நடுவில் முகத்தை புதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் அறையை விட்டு வெளியே படிக்கட்டுக்கு வந்து, வசிக்கும் அறைக்கு வந்து முற்றத்திற்கு வந்து, தெருவிற்கு வந்தேன்.
V
ஒரு வருடம் ஆகாவிட்டாலும், ஒன்பது அல்லது பத்து மாதங்கள் கடந்தன. அந்த உருவ வழிபாட்டு நினைவு என்னைப் பயமுறுத்தவில்லை. அந்த மலர்களின் வாசனையையும் அந்த கல் பொம்மையின் உருவத்தையும் நான் மறந்து விட்டேன், உண்மையான அமிலாமியா என்னுடைய நினைவுக்குத் திரும்பி விட்டாள், நான் திருப்தி அடையாவிட்டாலும். மீண்டும் மனநிலை சரியானதாக உணர்ந்தேன்; அந்தப் பூங்கா, அந்த வாழும் குழந்தை, என் இளவட்ட படிப்பின் நேரங்கள், ஒரு நோய் வாய்ப்பட்ட சடங்கா சாரத்தின் பேய்களின் மேல் வெற்றி கொண்டு விட்டது. வாழ்வின் பிம்பம் அதிகச் சக்தி வாய்ந்தது. சாவின் கேலிச் சித்திரத்தை வெற்றி கொண்டவளான என்னுடைய உண்மையான அமிலாமியாவுடன் நான் எப்போதும் வாழ்வேன்.
ஒரு வருடம் ஆகாவிட்டாலும், ஒன்பது அல்லது பத்து மாதங்கள் கடந்தன. அந்த உருவ வழிபாட்டு நினைவு என்னைப் பயமுறுத்தவில்லை. அந்த மலர்களின் வாசனையையும் அந்த கல் பொம்மையின் உருவத்தையும் நான் மறந்து விட்டேன், உண்மையான அமிலாமியா என்னுடைய நினைவுக்குத் திரும்பி விட்டாள், நான் திருப்தி அடையாவிட்டாலும். மீண்டும் மனநிலை சரியானதாக உணர்ந்தேன்; அந்தப் பூங்கா, அந்த வாழும் குழந்தை, என் இளவட்ட படிப்பின் நேரங்கள், ஒரு நோய் வாய்ப்பட்ட சடங்கா சாரத்தின் பேய்களின் மேல் வெற்றி கொண்டு விட்டது. வாழ்வின் பிம்பம் அதிகச் சக்தி வாய்ந்தது. சாவின் கேலிச் சித்திரத்தை வெற்றி கொண்டவளான என்னுடைய உண்மையான அமிலாமியாவுடன் நான் எப்போதும் வாழ்வேன்.
கல்குதிரை / 212
ஒரு நாள் நான் அந்த போலியான மதிப்பீட்டு விவரங்களை எழுதி வைத்த வரைபடத்துடன் கூடிய நோட்டுப் புத்தகத்தை மீண்டும் பார்ப்பதற்கு துணிவு கொண்டேன். அதன் பக்கங்களிலிருந்து, மீண்டும் ஒருமுறை, பயங்கரமான குழந்தைத் தனமான மோசமான கையெழுத்துடன், பூங்காவிலிருந்து அவளுடைய வீட்டிற்குச் செல்வதற்குரிய வரை படத்துடன் கூடிய அமிலாமியாவின் கார்டு கீழே விழுந்தது. நான் புன்னகைத்து அதை எடுத்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் பரிசை அந்த எளிய முதியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் நினைத்துக் கொண்டு, நான் அதன் ஓரங்களில் ஒன்றைக் கடித்தேன்.
விசில் அடித்துக் கொண்டே நான் என் சட்டையை அணிந்து டையை முடிச்சுப் போட்டேன். ஏன் அவர்களைப் போய்ப் பார்த்து அந்தக் குழந்தையின் கையெழுத்தோடு கூடிய இந்தத் தாளை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது?
நான் அந்த ஒற்றை மாடி வீட்டை நெருங்கியபோது ஓடினேன். மழை பெரிய தனித்தனியான துளிகளாக விழ ஆரம்பித்தது. புழுதியில் அதன் வேர் களைக் கொண்டு வாழும் எல்லாவற்றின் வளத்தையும் செழிக்கச் செய்வதாகத் தோன்றிய ஒரு ஈரக் கிருபையின் மணத்தை பூமியிலிருந்து திடீரென்று மாயமாக அந்த மழைத்துளிகள் கொண்டு வந்தன.
நான் மணியை ஒலித்தேன் . மழை அதிகரித்தது, நான் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்தேன். ஒரு கூறிய குரல் கத்தியது, ''நான் போகிறேன்.'' நித்திய ஜெபமாலையுடன் கூடிய அந்த அம்மாளின் உருவம் எனக்காக கதவைத்திறப்பதற்காக நான். காத்திருந்தேன். நான் என்னுடைய உள் சட்டைக் காலரை மேலே தூக்கிவிட்டுக்கொண்டேன். என்னுடைய ஆடைகள், என்னுடைய உடல், கூட, மழையில் வேறுவித மணம் வீசியது, கதவு திறந்தது.
. ''உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன அதிசயமாக நீங்கள் வந்திருக் கிறீர்கள்?''
அங்கஹீனமான பெண் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, ஒரு கையை கதவுக்கைப்பிடியில் வைத்துக் கொண்டு, என்னை நோக்கி விளக்கிச் சொல்ல முடியாத கைத்த புன்னகை புரிந்தாள். அவள் மார்பில் உள்ள துருத்தல் அவளுடைய ஆடையை அவளுடைய உடலின் மேல் ஒரு திரையாக மாற்றியிருந்தது. ஒரு துண்டு வெள்ளைத் துணி அவளுடைய நீலக்கட்டம் போட்ட மேல் கவுனுக்கு ஒரு சரசத்தன்மையைக் கொடுத்திருந்தது. அந்தச் சிறிய பெண் அவளுடைய மேல் கவுன் பையிலிருந்து ஒரு சிகிரெட்
213 | கல்குதிரை
பெட்டியை எடுத்து வேகமாக ஒரு சிகிரெட்டைப் பற்ற வைத்தாள், ஆரஞ்சு வண்ணம் பூசிய உதடுகளால் அதைக் கறைப் படுத்திக்கொண்டு. புகை அந்த சாம்பல் கண்களைக் குறுக்கியது. அவளுடைய தாமிர, கோதுமை நிற, நிரந்தரமாக அலைபாயும் கூந்தலை அவள் சரி செய்து கொண்டாள். அவள் எப்போதும் என்னை, தனிமையான. கேள்வி கேட்கும், நம்பிக்கையான - ஆனால் அதேநேரத்தில் பயந்த - உணர்வோடு பார்த்தாள்.
"இல்லை கார்லோஸ், போய் விடுங்கள். திரும்பிவராதீர்கள்.''
வீட்டிலிருந்து அதே கணத்தில் அந்த முதியவரின் மூச்சுத்திணறும் மூச்சு விடுதல், நெருங்கி, நெருங்கி வந்து கொண்டிருப்பதை நான் கேட்டேன்.
''நீ எங்கேயிருக்கிறாய்? நீ கதவைத்திறக்க வேண்டியதில்லை என உனக்குத் தெரியாதா? உள்ளே போ! குட்டிச் சாத்தானே! உன்னை மீண்டும் அடிக்க வேண்டுமா?''
மழைத்தண்ணீர் என்னுடைய நெற்றியில் வழிந்து, என்னுடைய கன்னங்களின் மேல் வழிந்து, என்னுடைய வாய்க்குள் வழிந்தது. அந்தச் சிறிய பயந்த கைகள் காமிக் புத்தகத்தை நனைந்த கற்களில் நழுவவிட்டன.