Pages

Monday, January 20, 2020

பிறழ்வு - அஜாதசத்ரு

காலச்சுவடு 14 - ஜூன் 1996

www.padippakam.com 

பிறழ்வு 

அஜாதசத்ரு 

அது வேறு காலமாயிருந்தது. தட்டாரப் பூச்சிகள் தெருவில் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தன. மலை முழுதும் தும்பைப்பூ செடிகள் நெருக்கமாய் பூத்திருந்தன. ஈரத் தரையில் இரயில் வண்டி பூச்சிகள் நகர்ந்துகொண்டே இருந்தன. ஆவாரங்காய்ச்சி மரங்களின் ரேடியோப் பூக்களில் அணில்கள் குதித்துத் திரிந்தன. மலையில் இன்னும் ஓடைகள் வற்றவில்லை. சேரிப் பெண்கள் புற்றுக்களில் ஊதி ஊதி ஈசல் பிடித்துக் கொண்டிருந்தனர். ஒழுகுகிற பள்ளிகூடங்கள் விடுமுறையாய் இருந்தன. மழை பெய்த மறுநாளைக்காய் ஓடைகள சேர்ந்த குறுமணலில் பிள்ளைகள் கூழாங்கற்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் எல்லாம் ஆலமரத்தடியில் கூடினார்கள். இந்த சமயங்களில் அவர்களுக்கு எத்தனையோ விளையாட்டுகள் இருந்தன. முள் செடியில் உட்கார்ந்திருக்கும் தட்டானை மெதுவாய்ப் பிடித்து 'கல்லை தூக்கு, கருப்பட்டி தாரேன்' என்கிற விளையாட்டு, வீதிகளில் வழிந்தோடும் மழைநீரில் பாத்திகட்டி விளையாடுவது அல்லது சாக்கடையில் மீன் பிடித்து விளையாடுவது என பல இருந்தன. அவர்கள் கைகளில் எல்லாம் சிரங்கு வெடித்தன. என்றாலும் அவர்கள் மழை நீரில் விளையாடிய வண்ணமே இருந்தனர். தும்பைப்பூ செடியைப் பிடுங்கிக் கொண்டு வண்ணத்துப் பூச்சிகளை விரட்டிக் கொண்டு திரிந்தனர். வண்ணத்துப் பூச்சிகள் தும்பைப்பூ செடிகளில் தாவித் தாவி பிள்ளைகளுக்கு கிடைக்காமல் பறந்த வண்ணமிருந்தன. “ஏ பிள்ளைகளே போங்க, போங்க போய் தெருவில் விளையாடுங்க. எங்களை பிடிக்க முடியாது. வீணா அலையாதீங்க. போங்க" என சொல்லியபடியே பிள்ளைகளின் கைகளில் சிக்காமல் ஓடி ஓடிப் போயின. எவ்வளவு நல்ல நாட்களாக இருந்தன அப்போது. அக்காள்காரி தம்பி பையலுக்கு பூச்சாண்டி வேஷம் போல ஒட்டிவைத்த வெண்டைக்காய் காம்புகளில் ஏற்படும் குளுமைப்போல, அம்மா அரிசி களைவாளே அப்போது சிமெண்ட் தரையில் கன்னம் புதைக்கையில் ஏற்படும் சில்லிப்பை போல எவ்வளவு குளுமையான நாட்கள். அப்போதுதான் சரவணப் பொய்கையில் முதல்படி வரைக்கும் தண்ணீர் நிரம்பிவிடும். பச்சை நெடி வீசுகின்ற தண்ணீரில் மீன்குஞ்சுகள் வந்து சேர்ந்துவிடும். அப்பா தாமரைக் கொடி நிறைந்த பொய்கையில் கைகளை வீசி வீசி ஆனந்தமாய் நீந்திக் குளிப்பார். பிறகு ஈர வேட்டியை தலைக்கு நேரே வௌவால் மாதிரி காயப்போட்டுக் கொண்டு கிரி சுற்ற கிளம்பி விடுவார். அவர் வேட்டியின் நிழலில் நான் நடந்துகொண்டே வருவேன். தினமும் அவர் கொண்டுவரும் தானியங்களைப் பொறுக்கிக் கொண்டு போவதற்கு நிறைய மயில் கூட்டங்களும் குரங்குகளும் காத்திருந்தன. தானியங்களை வீசி வீசி அவைகள் தின்பதைக் கண்டு கைகளைத் தட்டித் தட்டி சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பார். அவைகளுக்கு மட்டுமின்றி எதிர்படுகின்ற எல்லோருக்குமே தன் கையில் உள்ளதை எதிர்கைக்கு மாற்றி சந்தோஷமடைகின்ற மனதைக் கொண்டிருந்தார் அவர். எவ்வளவு அற்புதமான மனிதர். அவரிடம் எவ்வளவோ ரகசியங்கள் இருந்தன. தன் செல்லப் பையனோடு அவர் எத்தனையோ வயல் வரப்புகள் எல்லாம் சுற்றித் திரிந்திருக்கிறார். என்னை தோள்மீது சுமந்தபடி தன் மத்தியதர காலத்தின் தொலைந்து போனவைகளைத் தேடி எங்கெல்லாமோ அலைந்து திரிந்திருக்கிறார். மலைக்குப் பின்னாடி வளர்ந்திருந்த ஏராளமான நித்திய கல்யாணி செடிகளுக்குள்ளும், நந்தியா வட்டைக்குள்ளும் அவர் தன் உலகத்தைத் தேடிய வண்ணம் அமர்ந்திருப்பார். அவருக்குப் பிரியமான மயில் கள் எல்லாம் அவர் கைதட்டலைக் கேட்டு ஓடி வந்து தானியங்களைப் பொறுக்கிக் கொண்டு சென்றன. வீட்டுக்கு வந்ததும் அவர் வேறு மனிதராகிப் போவார். அதுவரை பிடித்திருந்த கையை உதறிவிட்டு நேரே நடக்கத் தொடங்கி விடுவார். அம்மாவிடமிருந்து அவருக்கு எப்போதுமே நல்லவிதமானவைகள் கிடைக்கவில்லை. அவர் வெளியே வந்து உரல்மீது உட்கார்ந்து கொள்வார். பத்மாசனம் போட்டபடி தெருவையே கலவரமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு சந்நியாசியைப் போல் அவர் அப்படி உட்கார்ந்திருப்பது பரிதாபமாக இருக்கும். எவ்வளவு பெரிய மனிதர் அவர். அவருக்கு என்ன தேடுதலோ, அவர் கண்கள் பைத்தியக்காரக் கண்கள். அம்மா சொல்வாள்: "அப்பனைப் போலவே பிள்ளைக்கும் கிறுக்குதனம் பிடிச்ச கண்ணு. எவ்ளோ பெரிய கண்ணு, அப்பனோட இந்த கிறுக்கு கண்ணு ". 

தெரு வழியாக பஸ் ஓட்டிக்கொண்டு போகும் பிள்ளைகள் அப்பாவைப் பார்த்ததும் "வணக்கம்" என்று வணங்கியபடி சென்றன, சில சமயம் கிட்டவந்து "ஐயா, சௌக்யமா” என்று விசாரிக்கும். எல்லாவற்றுக்கும் பதில் பேசாமல் அமர்ந்தபடி உட்கார்ந்திருப்பார். என்றாலும் பிள்ளைகள் அவருக்கு சலாம் சொல்லியபடியே பஸ் ஓட்டிக்கொண்டு போவார்கள். 

டவுன் பஸ் எத்தனையோ ஊர்களைக் கடந்து போயிற்று. காடு மலை வனாந்திரம் எல்லாம் தாண்டிப் போயிற்று. கண்டக்டர் பையன் கிழித்த காகிதச் சீட்டு காற்றில் பறக்கிறது. பிள்ளைகள் கூக்குரலிட்டுக் கொண்டே வண்டியை மலைப்பக்கம் ஓட்டிக்கொண்டு போனார்கள். பிள்ளைகளின் உற்சாகக் குரல் கேட்டதுமே மஞ்சனத்தி மரத்தில் அமர்ந்திருந்த சிவப்புத்தலை கிளிகள் எல்லாம் 'கீக்கீ' என உரக்கக் கூவின. மலையில் தான் எத்தனை வகையான செடிகள் இருந்தன. எத்தனை வகையான பூக்கள் நிறைந்திருந்தன. எவ்வளவு பூச்சிகளை பிள்ளைகள் கண்டு பயந்து போயிருந்தன. அடர்ந்த புதர்களுக்கிடையே பச்சைப் பாம்புகள் பிள்ளைகளின் கண்களைக் கொத்திக் கொண்டு போகக் காத்திருந்தன. பிள்ளைகளின் கண்கள்தான் எவ்வளவு பளபளப்பு. சில்வண்டுகளைப் போல. பச்சைப் பாம்புகள் கண்களைக் கொத்திக் கொண்டு பறந்து போய்விடுமாம். பிள்ளைகள் பயந்து கண்களைப் பொத்திக் கொண்டன. 

அடர்ந்து வளர்ந்திருந்த ஏராளமான இராவணன் மீசை புதர்களுக்குள் பிள்ளைகள் ஒளிந்து விளையாடின. கூட ஒளியும் அந்த முஸ்லீம் பையனின் மேனியிலிருந்து அத்தர் வாசம் மணக்கிறது. அந்த சின்னப் பையன் எவ்வளவு சிவப்பு. அவன் மேனியிலிருந்து மயக்க வைக்கிற அந்த வாசம் வந்து கொண்டிருக்கிறது. அவன் பெயர் காதர் பாட்சா. அந்த பையன் தொட்டதும் கூச்சப்பட்டுக் கொண்டே வெட்கப்பட்டுப் போவான். பொம்பிளை பிள்ளைகள் அந்த சின்னப் பையனைச் செல்லமாய் வைத்துக் கொண்டன. அவன் 'அவுட்' ஆவதே கிடையாது. அவனைத் தன்னோடு இருத்திக் கொள்ள பிள்ளைகள் ரொம்பப் பிரியப்பட்டன. பிள்ளைகள் எல்லாம் ரொம்ப சந்தோஷமாய் விளையாடிய வண்ணமிருந்தன. 

வேறு சில பையன்கள் இருந்தார்கள். பெரிய பையன்கள். அவர்கள் புரட்சிகாரர்கள். சாவடியில் காசு வைத்து குண்டு விளையாடுவார்கள். அவர்களுக்குத்தான் பம்பரம் முடிந்து கிட்டி ஆரம்பிக்கும் காலமெல்லாம் தெரிந்திருக்கும். கையில் கவட்டையோடு அணில்களை அடித்து சுட்டுத் தின்பார்கள். பிள்ளைகளின் விளை யாட்டில் ஒன்றுக்கிருந்து விடுவார்கள். பிள்ளைகளின் பம்பரங்களையெல்லாம் ஆக்கல் வைத்து உடைப்பார்கள். குமரிப் பெண்கள் எப்படி ஈடங்காகிறார்கள் என்பது பற்றி அறிந்து வைத்திருப்பார்கள். பொம்பிளைகள் கொல்லைக்குப் போகும் இடமெல்லாம் ஒளிந்திருந்து பார்ப்பார்கள். அவர்களைக் கண்டால் பிள்ளைகள் எல்லாம் பயந்து போகுங்கள். ஆனால் அவர்கள் அக்காள்காரி வாய்க்குப் பயப்பட்டுத்தான் இருந்தார்கள். அக்காள் இருக்கும்போது அவர்கள் வாலாட்டியதில்லை. அவள்தான் ரொம்ப பெரிய மனுஷி மாதிரி எல்லாம் பேசுவாள். 

-. வாசற்படியிலிருந்து அக்காள்காரி கூப்பிட்டுக் கொண்டே இருப்பாள். ''தம்பி பையலே சாப்பிட வாடா. பசிக்கலையா?'' பசியாத பிள்ளை அக்காள்காரி கண்ணுக்கு அகப்படாமல் ஓடிப்போகும். இருட்டிப்போன பின்னாடி பிள்ளைகள் எல்லாம் மாட்டு வண்டிக்கடியில் கூடி உட்கார்ந்து கதை பேசின. அக்காள்காரி கையை வீசி வீசி சித்திரக் குள்ளர்களை பற்றிக் கதை பேசுவாள். அவளுக்குத்தான் விக்ரமாதித்ய மகாராஜா காட்டுக்குப் போன கதைகள் எல்லாம் தெரிந்திருக்கும். அவள் எங்கிருந்துதான் அவ்வளவு கதைகளைக் கற்றுக் கொண்டாளோ. அவள் கதை சொல்லும்போது பிள்ளைகள் எல்லாம் கவனமாய் பயத்துடன் வாய் பிளந்தபடி கதை கேட்டன. அப்பொழுது அவள்தான் ராணி. யாரும் குறுக்கே பேசக் கூடாது. அவள் கதை சொல்லி ஓய்ந்த பிறகு தூங்கிப் போன தம்பியைக் கைத்தாங்கலாய்க் கூட்டிப் போவாள். 

0 0 0 

தளர்ந்து நடக்கிறான் தண்டோராக்காரன். தப்பட்டை ஒலிக்குக் கூக்குரலிட்டுக் கொண்டே ஓடிவரும் குழந்தைகளின் உற்சாகக் குரலின்றித் தனியாளாய் திரும்புகிறான். அவன் போட்டுக் கொண்டிருக்கின்ற பூமாலையின் வாசமும் பூசியிருக்கிற சந்தனமும், கொண்டு வந்த சேதியும் தெரு நெடுக சிதறிக் கிடக்கிறது. திரியாட்டக்காரர்களும் கோமாளி வேசக்காரர்களும் ஆட மறந்துபோன தெரு வெறிச்சோடிப் போயிருக்கிறது. பெட்ரோமாக்ஸ் லைட் வைத்த சோன்பப்டி வண்டிக் காரனோ, ஓமப்பொடி வண்டிக்காரனோ வருவதில்லை. ஏத்தலக்கா இறக்கலக்கா விளையாடிய நுகத்தடி வெறுமனே அசைகிறது. மை இருட்டு. தார் ஒழுகினாற் போல் இருள் முட்டிய மரக்கிளைகளில் கோழிகள் ஏறி அடைந்திருக்கின்றன. கொட்டத்தில் மாடுகள் அசைக்கும் சங்கிலியின் நுனியிலிருந்து இருள் சேர்ந்து போய் கிடக்கிறது. யாரோ இருட்டில் நாயை தடியால் விளாசும் சத்தமும், அதற்குபின் நாய் அரற்றிக்கொண்டே ஓடும் சத்தமும் கேட்டது. பின் ரணவலியேறிய நாயின் குரலும் மெல்ல இருட்டுக்குள் தொலைந்து போனது. அக்காள்காரி முலை வீட்டிற்குள்ளிருந்தபடியே இருட்டிற்குள்ளிருந்து அம்மா வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதே போல் ஒரு இருட்டு வேளைதான் அக்காள் சமைந்த நாளாய் இருந்தது. அதற்குப் பிறகு அவள் "பூப்பறிக்க வருகிறோம்" விளையாடப் போகவே இல்லை. பிள்ளைகள் மத்தியில் ராணிபோல் இருந்து கதை சொல்வாளே அது வெலலாம் கூட நின்றுபோய்விட்டது. அவள் மூலை வீட் டிற்குள் இருந்தபடியே கிழிந்த தாவணியைத் தடவியபடி மௌனமாய் உட்கார்ந்திருப்பாள். அவளுக்கும் எனக்கும் பிரியமான அந்த மனிதர் இறந்து போயிருந்தார். மலைக்குப் பின்னாடி அவர் நேசித்திருந்த நூற்றுக்கணக்கான மயில்கள் எல்லாம் வேறெங்கோ பறந்து போய்விட்டன. குண்டு மலையின் குகைப் பொந்திலிருந்து கொம்பு முளைத்த கூகை கூவுகிறது 'கக்கும் கக்கும்' என்று. அதன் அரற்றல் சந்தடியற்ற இருட்டுத் தெருவழியே பயமுறுத்துகிறது. காக்கைக் கூட்டங்கள் விரட்டியடித்த ஒற்றைக் கூலக பொந்தில் இருந்தபடியே தனிமையை 'கக்கூம் கக்கூம்' என்று கூவித் தவிக்கிறது. அக்காள்காரி பயந்தபடி இருக்கிறாள். அவளுக்கு சமைந்த நாளிலிருந்து எத்தனை இரகசியங்களோ. ஒற்றைக் கூகையைப்போல் அவளின் இருட்டு. தம்பி பையலை மடியில் கிடத்தியபடி முலை வீட்டில் கசிந்து கொண்டிருப்பாள். 

அவளின் சேடிப் பெண்கள் எல்லாம் இராட்டு நூற்கும் கம்பெனிக்கு வேலைக்குப் போய் விட்டார்கள். பூப்பறிக்க வருகிறோம் விளையாடிய பிள்ளைகள் எல்லாம் தூக்குச் சட்டியை தூக்கியபடி சித்தாள் வேலைக்குக் கிளம்பி விட்டார்கள். பிள்ளைகளுக்குப் பிரியமான அந்த துலுக்கப் பையன் இப்போது கீழவாசல் ஜவுளிக்கடை வாசலில், கிழிந்த கைலியும் குல்லாவும் அணிந்தபடி நின்று கொண்டிருப்பான். 'வாங்கம்மா, வாங்கக்கா, உள்ளே வாங்க, வந்து பாருங்க' என்று கூறியபடி சலாம் செய்வான். அல்லது வாடிக்கைகாரர்களின் செருப்புக்கு டோக்கன் தருவான். அவன் மேனியில் அத்தர் மணக்கவில்லை . காலர்களில் படிந்த அழுக்கு காற்றில் பறந்து கற்றாழை வீசும். மாதம் ஒண்ணாந் தேதி அவனுடைய வாப்பா ஜவுளிக்கடை சேட்டிற்கு ஒரு சலாம் கூறி சம்பளத்தை வாங்கிப் போவார். 

தாலியறுத்த அம்மா மட்டும் குமரியான அக்காளை வீட்டிலிருக்கச் சொல்லிவிட்டு தினம் அறுப்புக்குப் போய் வருவாள். கூலி நெல்லை உலையில் போட்டு தம்பிப் பையலின் பசி அமர்த்த அக்காள்காரி தெருவையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். இப்பொழுதே இந்த இருட்டிற்குள்ளிருந்து அம்மா வந்துவிடமாட்டாளா, இப்பொழுதே இதனுள்ளிருந்து செத்துப் போன ஆயான் வந்துவிட மாட்டாரா, பிள்ளைகள் எல்லாம் தெரு விளக்கடியில் உட்கார்ந்துகொண்டு "அக்கக்கா கிணுக்கிணி" விளையாட கால்களோடு கால்களைப் பின்னிக்கொள்ள மாட்டார்களா, அக்காள்காரி கைகளை வீசி சித்திரக் குள்ளர்களைப் பற்றிய கதைகளைச் சொல்ல மாட்டாளா, இப்பொழுதே இந்த கறுப்புக்குள்ளிருந்து செத்துப்போன அம்மாச்சி வந்துவிட மாட்டாளா, அவளுடைய எட்டுப் பிள்ளைகளும் எங்களுக்கு மாமன்களாக வந்துவிட மாட்டார்களா, எல்லாம் மாறி இது அழிந்து போகக் கூடாதா, இப்படியே, இப்படியேவா இல்லை எல்லாமே இப்பொழுதே மாறிவிடக் கூடாதா என்றெல்லாம் கூடிக் கூடி நினைப்பெழ சாட்சியாய் இருக்கிறது இந்த இருட்டு. 
Picasso