Pages

Monday, January 18, 2021

சரித்திரத்தில் படிந்த நிழல்கள் - தமிழவன் (முதல் மூன்று அதிகாரங்கள்)

 --------------------------------------------------------------------------சரித்திரத்தில் படிந்த நிழல்கள் - தமிழவன்

-------------------------------------------------------------------------
செய் சதியால் அழிந்த இனத்தைக் கதையாக ஆக்க விழைந்தேன் - புதியதாம் ஓர்முறையில் நாவல் எழுதி வெளியிட சீர்பெறு ஐங்கரன் காப்பு.
சொல்வோன் கூற்று
கேளும் சுவாமி, வாசகரே! இந்தச் சரித்திரத்தின் நாயகி அம்மணியாம் பாக்கியத்தாய் பற்றிப் பகர்வேன் கேளும். அவன் இந்த மண்ணில் பிறந்தவளோ, எந்த மண்ணில் பிறந்தவளோ என்று வியக்கும்படியாய் கண்ணை மூடிப் பார்க்கிறாள். தள்ளாவயதில் காலால் கதவைப் பிளக்கிறாள். வயிற்றிலிருந்தும் வார்த்தையிலிருந்தும் பிள்ளைச் செல்வம் பெருமையோடு பெறுகிறாள். பாவி மறதி பாதியில் வந்து மூன்றாவதாய்ப் பிறந்த மகளைப் பறித்துக் கொள்கிறது. கேளும் சுவாமி, வாசகரே! இந்தச் சரித்திரத்தின் நாயகனாம் பச்சைராஜன் ஒற்றைக் கண்ணால் உலகம் எல்லாம் பார்க்கிறான். பச்சை நிறமாய் வாழ்கிறான். என்னே விந்தை என்னே விந்தை!! என்கிறீர் அன்றோ ? இன்னும் கேளும்! சொல்வேன் ஐயா, இன்னும் கேளும்! ஆனால் ஒன்று; பாக்கியத்தாயின் இரண்டாம் மகனோ இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் கவிதை படிப்பதால் இன்று நீர் போய் தெருவில், அரங்கில், ஊரின் புறத்தில், நகரில் எங்கும் கவிதை படிக்கிற யாரையும் ஒப்பிட வேண்டாம். புரிகிறதா? உம்மிடம் இன்னும் ஒன்று பகர்வேன். கேளும்! பாக்கியத்தாய் உப்பிய செய்தியை இங்கே படித்து வானொலிப் பெட்டியோ, தொலைக்காட்சிப் பெட்டியோ அருகில் இருந்தால் யாரோ ஒருவர் தலைவரோ, தலைவியோ, நடிகரோ, குடிமகனோ இதுபோல் இருப்பதாய் ஒப்பிடாதீரும். மாயையில் சிக்கி மாளாதிரும். சொன்னேன், ஒழுங்காய் வாசிக்கக் கருதும். பச்சைராஜனுக்குப் பத்தினியாய் இருவர் சரித்திரத்தில் இருக்கும் செய்திகேட்டு, நாளும் பார்க்கிற. சங்கதி இது என நாட்டில், நகரில், நல்ல மனைகளில் நடக்கும் எர் நிகழ்ச்சியையும் நான் எழுதிவிட்டதாய் கருதிக் கொண்டு வீண் போகாதீர்! ஏனெனில் சால்மன் ரஷ்டி பாக்கிஸ்தான் பற்றிக் கூறியது போல நானும் சொல்வேன். என் இந்தச் சரித்திரம் கதையில் வரும் நாடு தமிழ்நாடல்ல ; தெகிமொலா மக்களும் தமிழ்மக்களல்ல. இரண்டும் இரண்டு நாடுகள். இருவித மக்கள், ஒன்று நிஜத்தில், இன்னொன்று எழுத்தில் என்றும் சொல்ல மாட்டேன். ரஷ்டி சொன்னது போல் இரண்டும் ஒரே தளத்தில் இருப்பதாய் கூட சொல்வேன் ஐயா! இரண்டும் இருக்கின்றன. இரண்டு விதமாய். ஒன்றுக்கருகில் இன்னொன்றாய். மாயம் அல்ல. மந்திரம் அல்ல. இரண்டும் ஒன்றாய் ஆகிப் போக. மிலாராட் பாவிக்கைக் கேட்டால் தெரியும். 'கஷார்' கூட ஒரு மக்கள் கூட்டம் தானே. "மிலாராட் பாவிக் தமிழ்நாடு பற்றியா கூறுகின்றார். கேளுமய்யா வாசகரே! என் குரல் கேட்டு உம் குரலைக் காட்டும். சரித்திர நூலில் கூட சொல்வோன் உண்டோ எனத் தடுமாறுகிறீரோ? சரித்திரத்தில் கூட சொல்வோன் குரலும் கேட்போன் குரலும் உண்டு. சரி சரி! என் குரலில் முதன் முதலில் 'அறிமுகம்' சொல்வேன்; கடவுள் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது போல எழுந்து நின்று படியுங்கள்.
-----------------------------------
* சால்மன் ரட்டியின் Shame என்ற நாவல் * Mllorad Pavle தனர நாவல் KazharDictionary-யில் மறைந்து போன ஒரு இனம் பற்றிக் கூறுகிறார்.

அதிகாரம்1
அறிமுகம்
இச்சரித்திரம் 'தெகிமொலாக்களைப் பற்றியது. எனவே, கற்பனையும் - நிஜமும் '- வேறுபாடில்லாமல் எழுதப்பட்டிருக்கின்றன. சம்பவங்கள் நடந்த ஆண்டுகளைப் பற்றி ஆதாரங்களின் அடிப்படையில் அறிவதை விட யூகங்களின் அடிப்படையில் அறிபவர்களுக்குச் சரித்திரம் மிகத்தெளிவாக விளங்கும். 'தெகிமொலாக்கள்' என்றவுடன் எதிர்காலத்தில் மக்களின் நினைவுகளிலிருந்தும் கூட விரட்டப்பட்டு விடுவோமோ என்று பயந்தபடி இவர்கள் வாழ்ந்த செய்திதான் சரித்திர ஆசிரியர்களின் நினைவில் வரும். எழுதப்பட்ட எல்லா நூல்களிலும் இவர்கள் தங்கள் சரித்திரத்தைப் பற்றியே மீண்டும் மீண்டும் எழுதினார்கள். அப்படித் தங்கள் சரித்திரத்தை எழுதி வைத்துவிட்டு இன்று ஒருவர்கூட இல்லாமல் மறைந்து போன அந்தத் துரதிருஷ்டவசமான வம்சத்தின் பெயர்தான் 'தெகிமொலா'. தெகிமொலா என்ற சொல் இவர்களைக் குறிக்கும் பல பெயர்களில் ஒன்று என்பதுதான் உண்மை . ஐரோப்பியர் கி. பி. பதினான்காம் நூற்றாண்டில் இவர்களைத் 'தமோலிக்கா' என்றும் அதற்கு முன்பு கி.பி. இரண்டில் இவர்களைத் தமரிகே' என்றும் அழைத்தனர். நம்பமுடியாதவற்றை நம்பும் கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் வாழ்ந்து மறைந்த இந்த ஜனங்களிடம் மிகவும் அதிகமாக சூரியனைப் பற்றிய கதைகள் இருந்தன. இன்றும் பிரிட்டிஷ் மியூசியத்தில் மட்டுமே காணப்படும் ஆண்டு குறிக்கப்படாத ஒரு நூலில் இதுபற்றிச் சில குறிப்புகள் உள்ளன.
தெகிமொலாக்களையும் அலைக்கழித்து இவர்கள் வரலாற்றை எழுதியவர்களையும் அலைக்கழித்த ஒரு முக்கிய பிரச்சனை
* இர புவாங்கவாய் என்ற னேர் கூறிய பெயர் என்பதை மிகப் பிற்காலத்தில்
தெகிமொலாக்கள் அறிந்து கொண்டார்.
இவர்களின் தோற்றம் பற்றியது. அட்ரியன் கான்வாலிஸ் இப்பிரச்சனை பற்றியும் செம்பருத்திப் பூக்களின் வகை பற்றியும் நூல் எழுதியிருக்கிறார் (செம்பருத்திப் பூக்களைப் பற்றி எழுதிய நாலினளவு, தெகிமொலாக்களைப் பற்றி எழுதிய நூல் அவருக்குப் புகழைத் தரவில்லை .) பிற்காலத்தில் அட்ரியனை மிகவும் தூஷித்து நூல்கள் வெளியிடப்பட்டன. அதாவது தெகிமொலாக்களுக்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு இது நடந்தது. அட்ரியன், இம்மக்கள் கைபர் கணவாய் வழி வந்தவர்கள் என்றார். ஆனால் இம்மக்களின் ஆதிவாசி கடவுளர்களைக் கண்டு வெறுப்புற்றுக் கிறிஸ்துவத்தைத் தழுவிய முதல் நபரும் மூவாயிரம் இரண்டடிப் பாடல்களை மிக கடினமானதும் சதுரம் சதுரமாக எழுதப்படுவதுமான ஒரு யாப்பில் பாடியவருமான குட்டி கிருஷ்ண பாகவதர் என்பவர் (இவரது கிறிஸ்தவ பெயர் ஜான்சாமுவேல் வெஸ்லி) தெகிமொலாக்கள் பைபிளில் வரும் மோஸஸின் பரம்பரையினர் எனப் பிடிவாதமாக ஒரு கருத்தைத்தான் சாகும்வரை கொண்டிருந்தார். ஏதேனும் ஒரு விநோதத்தைப் பற்றி மட்டும் இங்குக் கூறுவதென்றால் இவர்களின் பெயர் வைக்கும் முறையைப் பற்றிக் கூறலாம். ஆனால், துரதிருஷ்டவசமாகப் பெயர் வைப்பு முறையின் ரகசியத்தை இவர்களின் இறுதி வரலாற்றாசிரியன் கூட வெளியிடவில்லை . இவர்களைப் பற்றிய இன்னொரு ஆச்சரியமான விஷயம், தெற்குத்திசைக்கும் இவர்களுக்கும் உள்ள சம்பந்தம், இவர்களின் நாடு தெற்குப்பக்கத்தில் இருந்தது. எனவே இவர்களின் மொழியில் தெற்குப் பக்கத்தைச் சார்ந்தது எதுவும் அழகுடையதாக விளக்கப்பட்டது. தெற்குப் பக்கத்தைச் சார்ந்த காற்றைச் சுகமானது என்றனர். தெற்குப் பக்கத்தில் தலை வைத்துப் படுப்பது நல்லது என்றனர். செத்தபின் ஆவி தெற்குப் பக்கத்தில் போனால் அது சிறப்பானது என்றனர். அதுபோல் தெற்கு வாசல் வைத்து வீடு கட்டுவதையும், தெற்குத்
-----------------------------
* இவர் தெதிமொலா வரலாற்றில் 'கல்தெஞ்சன் என்று கூறப்பட்ட எல்வின் பிரிஸ்ட்லி கான்வாலிசின் மூன்று தலைமுறைகளுக்குப் பிந்திய தலைமுறையினா எனவும் இவரது காலம் கி.பி. 1849 முதல் 1896 வரை என்றும் கூறப்படுகிறது.
--------------------
திசையில் பல்லி சப்தம் எழுப்புவதையும், தெற்கில் நட்சத்திரம் எரிவதையும் புகழ்ந்து சொல்லும் பழக்கம் இவர்களிடம்
தெகிமொலாக்கள் இன்றைக்கு இல்லாவிட்டாலும் இவர்களின் விநோதமான வாழ்வும் வம்ச சரித்திரமும் இன்று வாழ்பவர்களுக்கு ஓராயிரம் நூல்களிலிருந்து கிடைக்கும் ஆச்சரியத்தை ஒரே நேரத்தில் அள்ளி வழங்கும் ஆற்றல் பெற்றவையாகும். நூல்களில் சொல்லப்பட்டது போல் வாழ முயன்று துன்புற்றுக் கொண்டிருக்கும் நாம் இந்தப் பாத்திரங்களின் மூலம் எவ்வளவோ பாடங்களைப் படிக்க முடியும் | இந்த நல்ல நோக்கத்தை மனத்தில் கொண்டு, பல புத்தகங்களையும் ஆதாரங்களையும் கேள்விஞானத்தையும் பயன்படுத்திக் கதைபோல் எழுதப்பட்டது தான் பல சம்பவங்களைக் கொண்ட இந்தத் தெகிமொலா சரித்திரம்.
சரித்திரத்தில் படிந்த நிழல்கள்
அத்தியாயம் 2
பாக்கியத்தாய் சரித்திரம் : தோற்றம்
நிஜத்திலும் பொய்யிலும் ஒரே நேரத்தில் வாழ்ந்தவள் பாக்கியத்தாய்.
அவள் ஒரு நீண்ட பரம்பரையின் பிரதிநிதி. அந்த நீண்ட பரம்பரையின் வரலாறு தெகிமொலாக்களின் முதல் தலைவனிடமிருந்து ஆரம்பிக்கிறது. முதல் தலைவனின் வழிவந்த பல தலைமுறைகள் அதன் விசித்திரங்களோடும் துக்கங்களோடும் வாழ்ந்து மறைந்தன. அந்தப் பல தலைமுறைகளின் இறுதிக்கட்டத்தில் புகழ் பெற்று விளங்கியவள் பாக்கியத்தாய்.
மூன்று பேரைப் பெற்றும் கூட கன்னியாகவே கருதப்படும் பாக்கியத்தாய் தெகிமொலாக்களின் சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்றாள். சரித்திரத்தில் அவள் இடம் பெற்றதற்கு அவளுக்கு இமை மூடியபடியே பார்க்கமுடியும் என்பதும் ஒரு காரணம், அவளது இரு பிள்ளைகளில் ஒருவன் அவள் வயிற்றிலிருந்தும் இன்னொருவன் அவள் வார்த்தையிலிருந்தும் பிறந்தான். வயிற்றிலிருந்து பிறந்த முதல் குழந்தையைச் சொல்லப்படாத சாபம் ஒன்றிலிருந்து தப்பவைக்க அதன் முகத்தைக் கூடப் பார்க்காமல் தாதிப் பெண்களிடம் ரகசியமாகக் கொடுத்து வளர்க்கச் சொன்னாள். பின்பு அந்தச்சாபம் தீர்ந்ததென்று ஏடுகளும் காலக்கணிப்புகளும் தெரிவித்தபோது குழந்தையைப் பார்க்க ஓடிவந்த அவளுக்கு நாட்டுப்புற இலக்கியங்களை நன்கு பயின்றிருந்த தாதியர்கள் இப்படிச் சொன்னார்கள். "அம்மா தாயே! நீ பெற்றது குழந்தையை அல்ல. நீ பெற்றது என்ன தெரியுமா, அதோ கிடக்கிறதே அந்த அம்மிக்கல்லைத் தான்". அதைக் கேட்ட பாக்கியத்தாய் விசனத்தோடு திரும்பினாலும் அந்த அம்மிக்கல்லைப் பார்த்தவாறேதான் திரும்பினாள். நாடோடிக் கதைகளால் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்த மக்களுக்கு உண்மையைக் கூறி நம்பவைக்க முடியும் என்று பாக்கியத்தாய்க்குத் தோன்றவில்லை. பின் அமைதியாக நாட்களைக்கழித்தாள் அவள். இவ்விரு மைந்தர்களோடு மூன்றாவது ஒரு மகள் பிறந்தது நினைவில்லாமல் போகும்படி அவளைப் பெற்ற நிமிடத்திலிருந்து பாக்கியத்தாயை மிகப்பெரிய ஒரு மறதி பீடித்தது. இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன. நேரடியாக சாதிக்க முடியாதவற்றைத் தந்திரங்களின் வழி சாதிக்கும் மரபு ராஜவம்சத்தில் இருந்ததால் பாக்கியத்தாய் அதைக் கடைப்பிடிக்க எண்ணினாள். தனது நம்பிக்கைக்குரிய படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமானை ஒரு நாள் அழைத்து முதல் மகனைப் பார்க்க வருவதாகச் சொல்லி அனுப்பினாள். வேலைக்காரிகளால் குடிசையில் ஏழைச் சிறுவனாக வளர்க்கப்பட்ட ராணியின் மகனைப் பார்த்து விவரம் கூற வந்த படைத்தளபதியின் நிழலுக்குள் க்ஷண நேரத்தில் மறைந்து போனான் ஒரு வயதாக இருந்த அம்மிக்குழவி என்று அழைக்கப்பட்ட மகன். அவனுக்கு 'மலையின் மீது ஒளி' என்றும் ஒரு பெயர் இருந்தது. 'மலையின் மீது ஒளி 'பிறப்பிலேயே பெற்றிருந்த மந்திர ஆற்றலால் தன் நிழலுக்குள்ளேயே புகுந்து மறைந்து போனான் என்று படைத்தலைவன் தலைதாழ்த்தியபடி ராணியிடம் வந்து சொன்னான். அந்த நேரத்தில் பாக்கியத்தாய் தனக்கு நேர்ந்த கதியை எண்ணி பெருங்குரல் எடுத்து அழுதாள். அன்றிலிருந்து அந்த மகனை அவள் பார்க்காதபடி விதி பார்த்துக் கொண்டது. அப்போது ஒருநாள் புளிய மரங்களில் காற்று ஓயாது சுழன்றடித்த ஒரு மாலை நேரத்தில் பாக்கியத்தாய் தனது மகா புகழ்பெற்ற கனவு ஒன்றைக் காணும் பெரும் துயிலில் ஆழ்ந்தாள். (அக்கனவு ஆயிரத்து பத்து வரிகளில் 'ராட்சச ஒலி' என்று அழைக்கப்படும் கர்ண கடூர ஒலி நயமுள்ள யாப்பில் பின்னர் எழுதப்பட்டது. அதன் முக்கியத்துவம் யாதெனில் அந்நூலை ஒரேநேரத்தில் முதலிலிருந்தும் இறுதியிலிருந்தும் படிக்க முடியும்.)

ராணியை அக்கனவு உண்மைக்கும் பொய்க்கும் நடுவில் பயணம் செய்ய வைத்தது. ராணி கண்ட கனவில் ஒரு குரங்கு வந்தது. அது பற்றிய பல விவரங்கள் இருந்தன. அவ்விவரங்கள் எல்லாம் இன்று கவனம் செலுத்தி எழுதப்படவோ, வருங்காலத் தலை முறைகளுக்குப் பாதுகாக்கப்படவோ உரிய அந்தஸ்து படைத்தவை அல்ல எனலாம். கனவு கண்டபின் வழக்கம்போல் பாக்கியத்தாய் கண்களை மூடியபடியே துயிலிலிருந்து எழுந்தாள். அப்போது சூரியன் கிழக்கில் உதித்தது. பல்துலக்கியைக் கொண்டு வர அவள் பணிப் பெண்களுக்கு ஆணையிட்டாள். அவர்கள் ராணிக்காகப் புதிய பல்துலக்கியைக் கொண்டுவந்து கொடுத்தனர். அவள் அதைக் கண்ணை மூடிய படியே எடுத்தாள். இப்படிக் கண்மூடியபடி பல்துலக்கியை எடுக்கும் காட்சி பணிப்பெண்களுக்குப் பழகிப் போன ஒன்றுதான் என்றாலும் புதிதாய் யாரேனும் அதனைப் பார்த்தால் பயந்து போவார்கள். ஏனெனில் ராணி கண்ணை மூடியபடியே பார்க்கிறாள் என்பதை முதலில் யாரும் நம்பமாட்டார்கள். பின்பு பணிப்பெண்கள், ராணி பல்துலக்கும்போது அரச பரம்பரை வழக்கப்படி பாக்கியத்தாயின் பூர்வீகத்தை விளக்கும் நாடோடிக் கதைகளைத் தமக்குள் பேசிய படியிருந்தார்கள். அப்படிக் கூறப்பட்ட நாடோடிக் கதைகளில் ஒன்று கீழ்வருமாறு:
"மரங்களைப் போல் பச்சைநிறமும் ஒற்றைக் கண்ணும் கொண்ட ராஜன் ஒருவன் தனது பெருமையான ராணிகள் பதினாயிரம் பேருடன் இல்லறம் புரிந்து வந்தான். அந்த ராணிகள் அத்தனை பேரும் எறும்பு போன்ற சிறிய தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் மனித ராசிதான். அவனுக்குப் பதினாயிரம் ராணிகள் இருந்தாலும் பேர் சொல்ல ஒரு குழந்தையில்லை. இதனைப் பற்றி யோசித்த ராஜன் பல இரவுகளைக் கவலையோடு கழித்தான். அத்தகைய இரவுகளில் குளிர்ந்தவானத்தைப் பார்த்தும், நகர்காவலர்கள் மிகுந்த தூக்கத்தோடு நகரைக் காத்ததைப் பார்த்தும் ஆறுதல்
அடைந்தான். ஆனால் எறும்பு ராணிகள் வேறு விதமாகச் சிந்தித்தார்கள். அரசனின் உடலில் உள்ள பச்சை நிறம்தான் தங்கள் வயிற்றில் கரு தங்காததற்குக் காரணம் என்று எண்ணினார்கள். அதன்பிறகு வேகமாகச் செயல்பட ஆரம்பித்தனர். அந்தப் பதினாயிரம் ராணிகளும் ஒன்றாய் கூடினர். ரகசியமாகப் புற்றுகளுக்குள் புகுந்து ஆலோசித்தனர். ஆலோசனை முடிந்தபோது அவர்கள் திட்டவட்டமான ஒரு முடிவு தமக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தனர். அவர்கள் முடிவின்படி ராஜனின் உடலிலிருக்கும் பச்சைநிறம் சுரண்டப்பட்டால் குழந்தை பிறக்கும் சாத்தியமுண்டு. நாட்டுப்புறக் காவியங்களில் வரும் ராணிகள் தங்கள் பிரச்சனைகளை நம்பமுடியாத முறையில் எவ்வாறு தீர்த்துக் கொள்வார்களோ, அதுபோல் இந்த ராணிகளும் நம்பமுடியாத முறையில் பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும் என்று நினைத்தனர். ராணிகளின் திட்டம் செயல்படுத்தப்படும் நாளும் வந்தது. அது ஓர் அமாவாசை நாள். அத்தகைய நாட்களில் ஒளி கொஞ்சமும் இல்லாதிருப்பதால் ராஜன் தூங்கி விடுவான். அதனை அறிந்த ராணிகள் அந்த அமாவாசையைத் தேர்ந்தெடுத்து ராஜனைச் சுரண்டினர். ஏற்கனவே உலைக்கூடங்களில் புல் செதுக்கிகள் போன்ற கருவிகள் செய்து அடுக்கப்பட்டிருந்தன. அது அவர்களுக்கு வசதியாகப் போயிற்று. சுரண்டத் தொடங்கிய சற்று நேரத்தில் உடம்பில் ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. ராணிகள் பயந்து போயினர். என்ன செய்வதென்று தெரியாது கைகளைக் பிசைந்தனர். புது ரத்தநெடி வீசியது. கைகளில், விரலிடுக்கில், கால் மூட்டில், தொங்குதசையில், அடிவயிற்றில் என்று ரத்தம் கசிய ஆரம்பித்தது. அப்போது அரசன் ஒரு பெரிய கொட்டாவி விட்டபடி எழுந்து அமர்ந்தான். அசாதாரண உணர்வும் ஆலோசனைகளும் அவ்வப்போது கொண்ட வனாகையால் தன்னை ராணிகள் என்ன செய்கிறார்கள் என்று நொடியில் புரிந்து கொண்டான். புல் செதுக்கி போன்ற கருவிகளுடன் நின்று அலங்கமலங்க விழித்தனர் எறும்பு போன்ற ராணிகள்."அடுத்து நடந்ததைப் பணிப்பெண்கள் இப்படித் தெரிவித்தார்கள்.

"அடுத்ததாக எல்லோரும் எதிர்பார்த்தபடியே இரண்டு விஷயங்கள் நடந்தன. ஒன்று: அரசன் மூலிகைக்கான கொட்டடக்குக் கொண்டு செல்லப்பட்டான். இரண்டு: ஒடு நாளில் பதினாயிரம் ராணிகளின் தலைகளும் விரல் நகக்கால் பப்பட்டன." பணிப்பெண்கள் தொடர்ந்து பச்சைராஜனின் கதையைக் கீழ்வருமாறு கூறி முடிப்பார்கள்
"அதன்பிறகு பச்சைராஜன் பல ஆண்டுகள் தன்னை ஒக்க பச்சை நிறம் கொண்ட காடு மலைகளில் சுற்றித் திரிந்து வந்தான். மலையில் கிடைத்த இலை, தழை, மருந்து, மரப்பட்டை மொட்டுக்கள் முதலியன புண்ணுக்கு மருந்தாயின.

அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒருநாளில் அவன் கண்ட காட்சி அவனை ஆச்சரியப்பட வைத்தது. ஆடுமேய்க்கும் ஓர் இடைக்குலப் பெண் கண்களை மூடியபடியே பாடிக் கொண்டிருந்தாள். அந்தப்பாட்டில், 'என்னை மணந்து கொண்டால் உனக்குப் புத்திர சம்பத்து உண்டாகும்' என்ற அர்த்தம் இருந்தது. அதனைக் கேட்ட ராஜன் இதற்குள் உடல்குணமாகிப் பச்சைநிறம் வந்துவிட்டதால் அந்நிறத்துடன் அப்பெண்ணின் முன்பு போய் நின்றான். அடுத்ததாக அவள் கேட்டதைப் பார்த்து இன்னும் அதிக அதிசயப்பட்டான் பச்சைராஜன். கண்களை மூடியபடியே அப்பெண் அவனிடம், 'பச்சைநிறராஜனே, என்ன வேண்டும்?' என்றாள்.
அரசன், 'கண் மூடியிருந்தாலும் என்னை எப்படிப் பார்க்க முடிகிறது?' என்று கேட்டான். அதற்கு அவள், 'கண்கள் மூடியபடியே உலகைப்பார்க்கும் சக்தி படைத்தவள் நான்' என்றாள். அதனைக் கேட்ட அரசனோ மிகுந்த ஆச்சரியம் கொள்ளலானான். அவன் பெரும் கலவரத்துடன், ஆனால் அவள் அதனை அறியாதவாறு மறைத்து, இத்தனை நாட்களும் அவனை அலைக்கழித்த மனநிலையால் உந்தப்பட்டுத் தனது ஒற்றைக்கண்ணை நன்கு திறந்து ஒரு கேள்வி கேட்டான். 'உனக்குத் தாயாகும் ஆசை ஏன் வந்தது?'
அவன் எதிர்பார்த்தது போலவே அக்கேள்வியால் அவள் மிகவும் பரவசமடைந்தாள்.
'எனக்குத் தெரியும், இந்தக் கேள்வியைக் கேட்பாய் என்று' என்றாள். அதன்பின்பு அவன் எதிர்பாராத அந்தப்பதில் அவளிடமிருந்து வந்தது. 'எனக்குப் பிறக்காது. உனக்குத் தான் பிறக்கும். ஏனெனில் உனக்குத்தானே பச்சைநிறம் உள்ளது. பச்சைநிறம் உள்ள
செடிகள் தானே பூக்கின்றன; காய்க்கின்றன'. அவளது பதில் கேட்டு அவனது மனம் சமாதானம் அடைந்தது. அவனுக்குக் குழந்தை பிறப்பிக்கும் சக்தி உள்ளதை அவள் இப்படி மறைமுகமாய் தெரிவித்தது கண்டு மிகவும் மகிழ்ந்தான். இப்போது இரவுகள் அழகிய மங்கையர்களின் தோற்றம் கொண்டு அவன் கனவில் வந்து நடனமிட்டன. அந்த இரவுகள் ஒவ்வொன்றுக்கும் சொல்ல ஒரு கதை இருந்தது. பதினாயிரம் ராணிகளும் ஒரே குரலில் அவனை மலடன் என்று கூறியதை அந்த இரவுகள் கூறின. அப்போது, அவர்களை அவன் கொன்றதற்குக்கூட எறும்பு ராணிகள் அவனைக் கொல்வதற்குச் சதி செய்தார்கள் என்பதைவிட, அவனை மலடன் என்று இகழ்ந்ததுதான் காரணம் என்ற சிந்தனை அவன் மனதில் வந்து மறைந்தது." இதுதான் 30 வயதான பச்சைராஜன் 20 வயதான, இமை மூடியபடி பார்க்கும் வல்லமை கொண்ட ஒரு பெண்ணை மணந்து ராணியாக்கிய கதை. இது பல ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையாகும்.
ராணி பின்பு பல பல்துலக்கிகளில் தனக்குப்பிடித்த ஒரு துலக்கியை எடுத்து இமைமூடியபடியே பார்த்தாள். ஒவ்வொரு பொருளையும் உள்ளும் புறமும் ஒரே நேரத்தில் பார்க்கும் ஆற்றல் பெற்ற அவள் அதன்பின்பு அங்கிருந்து புறப்பட்டுப் போனதைப் பணிப்பெண்கள் பார்த்து நின்றனர். ராணி தன் கற்பனையில் வந்த பகைவர்களையும் சதிகாரர்களையும் பல்வேறு மொழிகளில் (இது ராணிக்கு அவள் பச்சைராஜனை மணம் முடித்த இரண்டாம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட விசேஷ ஆற்றலாகும்.) சபித்தபடியும் நிந்தித்தபடியும் சென்றாள்.
அதிகாரம் 3
வார்த்தைகளிலிருந்து பிறந்தவன் கதை.
தெகிமொலாக்கள் காலத்தைச் சதுரங்கம் போன்றது என்று கருதினார்கள். சதுரங்கத்தைக் கட்டங்களாகப் பிரிப்பது போல காலத்தைப் பிரித்தார்கள். அதில் மிகவும் கொடுமையான இரண்டு காலங்களை எதிரும் புதிருமாக வைத்து அவர்களது காலச்சதுரங்கத்தை வரைந்தார்கள். அந்த எதிரும் புதிருமான காலங்களில் ஒன்று கோடைகாலம். மற்றது பனிக்காலம். பனிக்காலத்தின் குணங்களைப் பற்றித் தெகிமொலா கலைக்களஞ்சியத்தில் பல குறிப்புக்கள் உள்ளன. அதாவது கோடை காலத்திற்கு எதிர்திசையில் பனிக்காலம் சஞ்சரிப்பதால் பனிக்காலம் கோடைகாலத்தின் குணங்களுக்கு நேர் எதிரான குணங்களைக் கொண்டிருக்கும். எனவே பனிக்காலத்தில் எழுதப்படும் கவிதைகளுக்கு கோடைகாலக் கவிதையின் எதிர்குணம் தானாக வந்து சேர்ந்து விடும். இவ்வாறு பனிக்காலம் கோடை காலத்தாலும், கோடைகாலம் பனிக்காலத்தாலும் தீர்மானிக்கப்பட்டது. இதுபற்றி மேற்சொன்ன கலைக்களஞ்சியம் கூறும்போது "இது சற்று தந்திர பூர்வமானதும் அறிவைச் சோதித்துப் பார்க்குமளவு சிக்கல் நிறைந்தது மாகும்" என்கிறது. இங்கே ஒரு கருத்தை இடைச்செருகலாய் கூறலாம். தெகிமொலாக்களின் மூதாதையர் கூறியபடி பகல் புணர்ச்சிகள் முற்றாய் நிராகரிக்கப்படாததாலும், இரவுப் புணர்ச்சிகளின் போது புணர்ச்சி இலக்கணமும் காலநிலை நியமங்களும் பின்பற்றப்படாததாலும், தொடர்ந்து பிறந்தவர்கள் விசித்திர நினைவுகளுடனும் காலநிலை அற்றவிதமாக வும் பிறந்தனர். அப்படிப் பிறந்தவர்களின் கிரகிப்புத்திறன் குறையவில்லை என்றாலும் ஆச்சரியமற்ற சங்கதிகளைக் கிரகிக்க அவர்கள் மூளைகள் உற்சாகம் காட்டவில்லை என்பதுதான் வாஸ்தவம். (இடைச்செருகல் முற்றும்),
எனவேதான் கலைக்களஞ்சியம் சாதாரண விஷயத்தைக்கூட சிக்கல் நிறைந்ததாக எழுதுகிறது. இப்படிப் பனிக்காலக் குறிப்புக்களை எழுதிய கலைக் களஞ்சியம் அதன் அடிக்குறிப்பில் பதினாறு புராதன நூல்களைப் பற்றியும் பேசியது. அதில் ஒன்றான பதிலில்லாக் கேள்வி' என்ற நூல் முதலும் முடிவும் இல்லாத வகையில், முதல் அத்தியாயமும் கடைசி அத்தியாயமும் செல்லரிக்கப்பட்ட விதமாய்தான் கிடைத்தது. எனவே அந்நூலைப் பற்றிப் பள்ளி மாணவர்களுக்குக் கடவுள் நூல் என்று பக்திமான்கள் அறிமுகப்படுத்தி வந்தார்கள் . அந்நூலின் முக்கிய பகுதி ஒன்று பாக்கியத்தாயின் இரண்டாவது மகனான வார்த்தைகளிலிருந்து பிறந்தவனைப் பற்றி விளக்குகிறது. அச்செய்திகளையும் வேறு செவிவழிச் செய்திகளையும் கீழ்வருமாறு தரலாம். "எதிர்காலம் கணிக்கும் அவர்களின் மூதாதையர்களின் கருத்து கொஞ்சமும் தப்பாமல் கவிஞனாக உருவான ராணியின் இரண்டாம் மகன் தெகிமொலாக்களின் இரண்டகத் தன்மையான நேர் எதிர் பண்புகளின் இடையில் சிக்கித் தவித்தான். இந்தச் சிக்கலில் தலையானதாகக் கருதப்பட்டது அவன் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் பிரசன்னமாவது."
ராணியின் மகன் என்பதால் அவன் கவிதை வாசிக்கும் சபைகளில் எல்லாம், ஜனங்கள் பேராரவாரத்துடன் கூடினர். தெகிமொலா மொழியின் இலக்கியச் சரித்திரத்தில், சிறந்த இலக்கியங்களில் முக்கால்வாசியும் கவிதை இலக்கியம்தான். எனவே அடுப்பு ஊதும்போதும், காலை நேரங்களில் மகிழ்ச்சியுடன் வீதியெங்கும் எதிர் எதிரே அமர்ந்து மலம் கழிக்கும் போதும் கூட கவிதைகள் சொல்லி ஆனந்தப்பட்ட இனமாகத் தெகிமொலாக்களைக் கூறுவார்கள். ஆனால் அவர்களின் கவிதைகளைப் பாராட்டினாலும் சுகாதார விஷயத்தில் ஞானமுள்ளர்கள் எதிர் எதிரே தெருக்களில் அமர்ந்து மலம்கழிக்கும் தெகிமொலாப் பழக்கத்தைக் கண்டித்தனர். இந்தக் காலத்தில் ஒருநாள் தெகிமொலா மொழியில் அவன் எழுதிய கவிதையை ராணியின் மைந்தன் இரு இடங்களில் ஒரே நேரத்தில் நின்று வாசித்தான். ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் நின்று அவன் கவிதை வாசித்ததைக் கண்ட ஜனங்கள் முதலில் தாங்கள் பார்க்கும் ஜால வித்தைகளில் இது ஒன்று என்று நினைத்தாலும் உண்மை தெரிந்தபின் பாக்கியத்தாயின் புதல்வனிடம் தெய்வீக கடாட்சம் இருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கூறித் தத்தம் அலுவல்களைப் பார்க்கப் போனார்கள்.
இன்னொரு விஷயத்திலும் ராணியின் வார்த்தை வழிபிறந்த மைந்தன் தெமொலாக்களின் இரண்டுப்பட்ட மனத்துடன் நடந்து கொண்டான். அவன் பனிக்காலத்தில் ஒரு காலும் கோடைகாலத்தில் இன்னொரு காலும் வைத்துக் காலத்தின் தடைகளைத் தாண்டினான். அதுபோலவே அவன் அரசசபையில் வளர்வதற்குப் பதிலாக ஜனங்களின் சபைகளிலும் அதுபோல் கவிதைப் பிரியர்களான தெகிமொலாக்களின் மனங்களிலும் ஒரே நேரத்தில் இருந்தான். இப்படி இரண்டுபட்ட மனத்தோடும் இரண்டுபட்ட காலத்தோடும் வாழ்ந்த ராணியின் புதல்வன் இன்னொரு சக்தியோடும் சமர்புரிந்தான். அவன் பழமை என்ற இறந்தகாலப் பட்சியின் இழுப்புக்கும், புதுமை என்ற எதிர்காலப் பட்சியின் இழுப்புக்கும் நடுவிலிருந்து போராட வேண்டியவனாயிருந்தான். அவனுடைய சமர் தெகிமொலாக் களின் இன்றைய குறைந்த ஜனத்தொகையினரின் சார்பில் நடந்த சமராகும். பழமைக்கும் புதுமைக்கும் மத்தியில் எப்படி வாழ்வது என்பது அவர்களுக்கும் பிரச்சனையாகவே இருந்தது. அந்தப் பிரச்சனையோடு அலைந்தவன் பலவிதமான இயற்கை மாற்றங்களையும் கண்டான். குளிர்காலத்தில் எங்கிருந்தோ வந்த குயில்கள் தெகிமொலா
நாட்டின் தோட்டங்களிலும் மா, பலா, வாழை புளியமரங்களிலும் அமர்ந்து பாடின. அதேபோல் குளிர்காலம் போய், மழைக்காலம் வந்தபோது இரவுகளில் தவளை தாரத்து வானில் கருமை படர்ந்த மேகத்திற்கிடையில் தெரிந்த ஒன்றிரண்டு நட்சத்திரங்களைப் பார்த்து ஒலியெழுப்பின. கோடையில் ஒரேயடியாகக் காற்றும் புழுதியும் வாக கொண்டேயிருந்தன. கோடைக்குரிய ராஜனைக் கொடும் பாவியாய் கட்டி, விவசாய மக்கள் ஆண்களும் பெண்களும் முறத்தால் அடித்தும் சபித்தபடி நாட்டுப்புறப்பாடல்கள் பாடினார்கள்,
கவிஞன் கண்ட கனவும் மலைமீது
ஒளி'யின் இரண்டாம் பிறப்பும் எப்படிக் காலம் மாறிக்கொண்டிருந்தபோது ஒருநாள் கவிஞனுக்கு ஒரு கனவு வந்தது. கனவில் அவனது
அண்ணனும் பாக்கியத்தாயின் உடலிலிருந்து பிறந்த முதல் மகனுமான 'மலைமீது ஒளி' இரண்டாவது முறை பிறந்தான். பிறந்த வருடத்தைத் திபெத்தியர்களின் ஆண்டு முறைப்படிப் பதிவு செய்திருந்தார்கள். அப்படிக் கனவில் பிறந்த ஆண்டு 'தண்ணீர் புலி ஆண்டின் பதின்மூன்றாம் சுற்று.'
இந்த வருட எண்முறை ஆயிரத்தெழுநூற்று அறுபத் இரண்டைக் குறிக்கும் என்று மத்தியகால வம்சாவளி நால் கூறுகிறது. இந்த ஆண்டை முன்வைத்து இச் சம்பவங்களின் பிற ஆண்டுக் கணக்கைப் பார்ப்பது ஓரளவு நம்பக்கூடியதாக இருந்தது. என்றாலும் குழப்பங்கள் ஏற்படக்கூடிய அபாயம் நிறைய உண்டு என்ற எதிர்பார்ப்புடனேயே இத்தகைய காலக்கணிப்பில் ஈடுபடவேண்டும். மேலும் 'மலை மீது ஒளியின் முதல் ஜனனமே குறிப்பிட்டுப் போத்தக்க பிறப்பு என்றும், திபெத்திய ஆண்டில் நடந்த இரண்டாவதான மன உலகப்பிறப்பு வெறும் ஒரு குறியீட்டுக்குணம் கொண்ட பிறப்பு என்றும் கருதப்பட்டது. நிஜத்துக்கும் குறியீட்டுக்கும் உள்ள உறவு பற்றிய அறிவு இவ்விவரங்களில் வெளிப்பட்டதென்பதால்வோருக்கும் தொகைவையமாகும்.
'அம்மிக் குழவி' என்றும் மலை மீது ஒளி' என்றும், 'ராணியின் உடலிலிருந்து பிறந்தவன்' என்றும் அவரவர் வசதிக்கேற்பவும் அந்தந்த நேரத்திய கோபதாப உணர்ச்சிகளுக்கு ஏற்பவும் அழைக்கப்படும் முதல் மகன் பற்றிய இன்னொரு பிரச்சனையும் இருந்தது. அதாவது அவனது காலம் நாம் பார்க்கும் காலமல்ல. காலத்தை அவன் கட்டுப்படுத்திவிட்டான். 'புராதன வியாகரணம்' என்ற நூலின் முதல் பாகத்தின் இரண்டாம் பிரிவின் நூற்று இருபதாம் சூத்திரத்திற்கான நான்கு உரைகளில் பல்வேறுவிதமாக அவன் காலத்தை கட்டுப்படுத்தும் விதம் விளக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட உரைகளின் சாராம்சம் இதுதான். காலத்தை சீட்டுக்கட்டு போல் முன்னும் பின்னும் செருகி வைக்கலாம். அத்தகைய காலத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட 'மலைமீது ஒளி' யையும் கூட சிட்டுக் கட்டுப்போல் இன்னொருவரின் நினைவுகளுக்குள் செருகி வைக்கமுடியும். அப்படித்தான் 'மலைமீது' ஒளி தனது தம்பியான கவிஞனின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருந்தான். தம்பி தனது நினைவுத்திரையை விரிக்கும்போது மட்டும் மலைமீது ஒளி அந்த நினைவுகளில் தன் வாழ்வை வாழ்ந்தான். அதுபோலவே அம்மிக் குழவியாய் பிறந்தவன் என்றும், ராணியின் வயிற்றில் பிறந்தவன் என்றும், திபெத்தியர்கள் வருஷ விவரப்படி 18 ஆம் நூற்றாண்டில் பிறந்தவன் என்றும் மூன்றுவகையாகக் கருதப்படுபவனான முதல் மகன் இவ்வாறு பல ஜனன விபரங்களைக் கொண்டிருந்தது யாருக்கும் பிரச்சனையாய் இருக்கவில்லை. ஏனெனில் வரலாற்று நாயகர்கள் பலருக்கும் இப்பிரச்சனை இருந்தது. ஓரிருவர் ஒரே நேரத்தில் நான்கு பேருக்குப் பிறந்த செய்திகூட இருந்தது. தெகிமொலாக்கள் இவ்வாறு எதற்கும் கவலைப்படாத அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கையில், தெகிமொலாக்களுக்காக முதன் முதலில் வெளிநாட்டிலிருந்து கிறிஸ்தவ மிஷனரிகள் கொண்டுவந்த அச்சகத்திலிருந்து வெளியிடப்பட்ட முதல் பத்திரிகையின் முதல் இதழில் வெளியான செய்தியில் ஏதோ ஒரு விஷயத்துக்காக 110 பேர் இறந்த குறிப்பு ஒன்று காணப்பட்டது.

அது வரலாற்றாசிரியர் ஒருவர் எங்கோ தெகிமொலாக்களின் பழமையைக் கி.மு.விலிருந்து கி.பிக்கு மாற்றிக் கூறியதற்கென்று பிறகு தெரிந்தது. இப்படி 110பேர் இறந்தது பற்றி தெகிமொலாக்கள் மத்தியில் பெரும் பயபித இருந்ததென்னவோ வாஸ்தவம். ஏனென்றால் மொத்தமிருந்த 999 தெகிமொலாக்களில் 889 பேரே எஞ்சியிருந்தனர். அப்பொழுதுதான் எதற்கும் கவலைப்படாத ராணி தனக்குத் திருமணமாகி 35 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றறிந்தாள். (இது சரித்திரத்தின் காலப்பரிமாணத்தில் ஒரு பெரிய பாய்ச்சல் என்பது உண்மைதான்) அன்று கொடிகளும் மரங்களும் நிறைந்திருந்த நந்தவனத்தின் நடுவில் அமைந்திருந்த மாளிகையில் பாக்கியத்தாய் கண்களை மூடியபடியே, தூரத்தில் மாலை வானத்தில் வெண்பஞ்சு மூட்டைகள் போல் மிதந்து கொண்டிருந்த மேகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படிப்பட்ட நேரத்தில் அவளோடு யாரும் எதுவும் பேசக்கூடாது என்பது அரண்மனையில் எல்லோருக்கும் பழகிப்போன விஷயம். அந்த விதியைத் தன் கணவன் கூட மீறக்கூடாது என்பது பாக்கியத்தாயின் ஆணை. அன்று பாக்கியத்தாயிடம் சொல்வதற்குத் தனக்கு ஒரு ரகசியம் இருக்கிறதென்று அரச உடைகளுடன் தன் அறையிலிருந்து புறப்பட்டுவந்த பச்சைராஜன் அவள் கூர்ந்து மேகத்தைப் பார்ப்பதை அவள் முகம் இருந்த கோணத்திலிருந்து அறிந்து தன்னைச் சபித்துக் கொண்டே திரும்பினான். அப்படித் திரும்புகையில் தனக்குத் தானே கூறுவது போல் "என் ஆடைகளை அவள் ஆணைப்படி கவனமாக நான் உடுத்திக்கொண்டு வந்தும்கூட மேகத்தைப் பார்க்க ஆரம்பித்து விட்டாளே" என்று கூறினான். பின்பு தன் ஆடையைக் கழற்றாமலே அவன் செய்த காரியம் இப்படி எழுதப்பட்டிருக்கிறது. "50 அடிக்கு 25 அடி மேசைமீது வரிசையாக அடுக்கிவைத்திருக்கும் பல தெய்வங்களையும் ஒன்று இருந்த இடத்தில் இன்னொன்றை மாற்றி வைத்துத்
-------
* தெய்வம் மாற்றத் தக்கது என்பது அவர்கள் பழமொழி. தகர நாற்சந்திகளில் இப்பழமொழி செதுக்கப்பட்டிருந்தது.
----------------------------
தன் தத்துவ விளையாட்டை விளையாட ஆரம்பித்தபோது, அரசனுக்கு வயது அறுபத்தைந்து. தன் விளையாட்டில் தெய்வங்கள் உடையும்போது அரசன் ஏற்கனவே திரைமறைவில் நிற்க வைத்திருக்கும் சம்பளத்துக்கான புகழ் மொழியாளர் வழக்கம்போல் 'தெகிமொலாக்களின் தந்தை பச்சை ராஜா வாழ்க என்று இரண்டுமுறை ஓங்கி ஒலித்துவிட்டு அன்றைய தங்கள் வேலை முடிந்ததால் அந்த இடம் விட்டு அகன்றார்."
அரசனும், தெகிமொலாக்களின் தந்தையாகக் கருதப்படுபவனுமான பச்சை நிற ராஜன் பின்பு தன் விளையாட்டை நிறுத்தி இரவு நெடுநேரம் வரை வேறு காரியங்களில் கவனம் செலுத்தினான். இப்படிப் பாக்கியத்தாய்க்கும் பச்சைராஜனுக்கும் நடந்த மனஸ்தாபமும் சண்டைகளும் பலவாகும். அச்சண்டைகளைப் பற்றிய தகவல்கள் பிற்காலத்தில் 1890-இல் தெகிமொலாக்களின் ஆடை அலங்காரங்களைப் பற்றி அறியவந்திருந்த துய்மா என்ற பிரஞ்சுக்காரர் எழுதிய விசித்திரமான மனிதர்களும் அவர்களைப் பற்றிய பரம்பரைக் கதைகளும்' என்ற நூலின் கடைசி அத்தியாயத்தில் உண்டு. அந்தக் கடைசி அத்தியாயம் 1893-இல் பிரஞ்சுபாஷையில் வந்திருந்த நூலில் மட்டும் உள்ளது. 1901-இல் வெளிவந்த ஆங்கில மொழிபெயர்ப்பில் அது இல்லை . 1893 இல் வந்த நூலின் கடைசி அத்தியாயம் முடிந்தபின் ஒரு பின் இணைப்பு காணப்படுகிறது. அதில் 'பச்சை ராஜனும் பாக்கியமேரியும் சந்தித்த கதை என்று ஒரு கதை காணப்படுகிறது. அந்தக்கதை இருவரின் சண்டையைப் பற்றிக் கூறாமல் சந்திப்பைப் பற்றிக் கூறுகிறது. முதல் 54 பக்கங்கள் இல்லாத அந்த நூல் பிரான்ஸ் நாட்டு 'பிபிளியோதீக் நேஷனேல், எத்யுனிவர்சிட்டெயரில் உள்ளது. அந்நூல் இணைப்பில் உள்ள கதையின் சாராம்சம் வருமாறு.
* பாக்கியமேரி என்பது பாக்கியத்தாய் தான். ஏடு எடுத்து எழுதியவரின் கிறிஸ்தவப்பற்றால் மேரியாகியிருக்கக் கூடும்.
ஒற்றைக்கன் ராஜன் பாணியைச் சந்தித்த கதை வேறு விதமானது. அதாவது ராணி ஓர் வீராங்கனையாக அங்குச் சித்தரிக்கப்படுகிறாள். அவ்வீராங்கனை ஒருநாள் திடிரென அரசனின் காவல்மிக்க சயன அறையில் வாளுடன் நிற்கிறாள். அரசன் வேறு வழியின்றி அவளிடம் தன் உயிரை எடுத்துக் கொள் என்று தலைதாழ்த்தி நிற்கிறான். கண்களை மூடிக்கொண்டே பார்க்கும் பழக்கம் கொண்ட அவள் அவனது உயிரை எடுப்பதற்குப் பதில் தனது உயிரை அவனிடம் கொடுத்துவிட்டதாக கூறுகிறாள். இங்கு ஒரு பிரச்சனை வருகிறது. உயிரை எடுக்க வருகிறவன் உயிரைக் கொடுக்க எப்படிக் சிமரென முன்வருகிறாள். இதற்கு இரண்டு வித பதில்கள் தரப்படுகின்றன. ஒரு பதில் அவளது குரு இட்ட சாபம் அவனைக் கண்டதும் தீர்ந்தது என்பது, இரண்டாம் பதில் புத்தகப்பதிப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே புரியும் 'விஷயமாகும். அதாவது அக்கதையின் ஏட்டில் செதிலரித்த பகுதியில்தான் அந்தக் காரணம் எழுதப்பட்டிருக்கிறது என்பது. பாக்கியத்தாயும் பச்சை நிற ராஜனும் சந்தித்தது பற்றிய இந்த இரண்டாவது கதை ஒரு கற்பனைக்கதை என்ற எண்ணம் சில சரித்திர ஆசிரியர்களிடம் இருந்தது. வேறுசிலர், பாக்கியத்தாய் 'இடைச்சியாக இருந்தவள் என்ற கதையின் இன்னொரு 'பாடம்' தான் இது என்று அபிப்பிராயம் கொண்டிருந்தனர். கற்பனையாக இருந்தாலும், 'பாடமாக இருந்தாலும் இது தெகிமொலாக்களின் மனங்களில் புகுந்து அவர்களின் மனத்தின் ஒரு பகுதியாகிவிட்ட கதை என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை .
தமிழவன்
அத்தியாயம் 4
காலத்தின் காய்கள் நகர்த்தப்பட்டன. பட்சிகள், பூமியின் ரகசிய அறைகளிலிருந்து புதிய ஜீவகளையுடன் வந்தது போல பறந்து வந்தன. மரங்கள் எல்லாம் பூத்து இதழ்கள் சிந்தின. அவை மரங்களின் அடிப்பகுதியில் உதிர்ந்து பூமியைப் பூ மெத்தையாக்கின. ஒரு நாள் பாக்கியத்தாயின் இரண்டாம் மகனான கவிஞன் காலை வேளையில் கதிரவன் கிரணங்களைப் பனிநீரில் அள்ளி இறைத்துக் கொண்டு வருகையில் இலை ஒன்றினிடையில் புதிதாய் தோன்றினான். இது அவர்களின் புராதன நூல்கள் கூறியபடி நடந்தது.
அப்படிப் புதிதாய் தோன்றியவன் புதிய ஒரு கனவு கண்டான். அது ஒருபொற்காலக் கனவு. அந்தக்கனவு நிகழ்காலத்தையும் தாண்டி எதிர்காலத்திலும் நிலைக்கவேண்டும் என்பது கவிஞனின் ஆசை. அதனால் கவிஞன் வருத்தங்கள் அதிகமாக குவிந்து விட்ட அக்கால எதார்த்தத்தைப் பார்த்து ஒரு நீண்ட கவிதையைப் படைத்தான். அது பூமியை ஒரு கவிதை வரியால் புரட்டி விடுவோம்' என்று ஆரம்பித்தது. மொத்தம் 376 பத்திகள் ஒவ்வொறு பத்தியும் நான்கு அடிகளும் சமமான சீர்களும் கொண்டவையாகும்.) உள்ள கவிதை அது. அவன் சாவையும் பூமியையும் மலர்களையும் அது போல் அவனது அழியாத கனவுகளையும் கவிதைக்குரிய பொருள்களாய் மாற்றியதும் அன்றுதான். பின்பு, எழுந்து தெரு வழியாக வசந்தத்தின் குயில்கள் கூவுகையில் அவற்றின் கூடு எங்கே என்று மனத்திற்குள் சர்ச்சை செய்தபடி அவன் நடந்தபோது, மாலையில் தன் கவிதைகளைக் கேட்க நகர மண்டபத்தில் கூடும் ஜனங்கள் அவனது நினைவுக்கு வந்தனர். கவிதைகள் சொல்லி, அவர்களின் அறிவையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைக்க விரும்பினான். மீண்டும் வசந்தகால வானத்தைப் பார்த்தபடி சற்றுதூரம் நடந்தபோது தனக்கொரு பெயர் வேண்டுமென்று நினைத்த கவிஞன் தனக்குச் 'சொல்லின் பொருள்' என்று பெயர் சூட்டிக்கொண்டான்.-----------------------