Pages

Sunday, September 19, 2021

 

ஒரு மனுஷகுமாரனின் சிலுவைப்பாடுகள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
'இதுவரை சுமந்தது என் சிலுவை,
இனிமேல் இது உங்கள் சிலுவை'!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(சற்றொப்ப 12 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்விது):
நவீன தமிழ்க்கவிஞர்களில் குறிப்பிடத்தக்க ஒரு
முக்கிய ஆளுமை ஜெ.பிரான்சிஸ் கிருபா.
இளம் சாதனையாளர்களுக்கான சுந்தர ராமசாமி
இலக்கியவிருது,'கன்னி' நாவலுக்கான விகடன்பரிசு
முதலியவற்றையும் பெற்றவர். இந்த ஆண்டு நவீன
தமிழ்க்கவிதையின் பிரதிநிதியாக சாகித்திய அகாதமி கவிதை வாசிப்பிற்குத் தெரிவு செய்யப்பட்டவர்.
விகடனில் வெளிவந்த அவரது 'மல்லிகைக் கிழமைகள்'விகடன் பிரசுரமாகவும் நூலுருப் பெற்றது. சென்னை புத்தகவிழாத் தருணத்தில் 'தமிழினி' விளம்பர பேனரிலும்அவர் வீற்றிருந்ததுண்டு. வெளிவர உள்ள 'வெண்ணிலா கபடிக்குழு' திரைப்பட வாயிலாகப் பாடலாசிரியராக அவதரித்ததும் உண்டு.
சமீபத்தில் ஒரு சந்தேகப் புகாரின் பேரில் காவல்
நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
நண்பனின் அறை என இரவில் அடையாளந் தெரியாமல் மற்றொரு அறையைத் தட்ட நேர்ந்தது மட்டுமே அவரது பிசகு. இந்நவீன பொற்கைப் பாண்டியன் கதையில் அடுத்து நடந்ததென்ன?
இதோ நேரடி வாக்குமூலமாக எனக்கவரே எழுதியனுப்பிய மடல்:
"இந்த சம்பவம் நடந்த இரவே அவர்களை நான் மன்னித்து விட்டேன் (இது தான் கிருபா). இடதுகாலைத் தரையில் ஊன்ற முடியாமல், நான் தடுமாறியதைக் கண்ட அறைநண்பன் துடித்துவிட்டான். அவன் கொடுத்த தகவல்படி
தொலைக்காட்சி ஊடகங்கள் ஓடோடி வந்து என் உடல்
காயங்களைப் பதிவு செய்தன. மனக்காயங்கள் பற்றி
விவரிக்கவில்லை. உங்களிடமும் அதை விவரிக்க
முடியவில்லை (அது நூறுபக்கப் பதிவு) நடந்ததை
எழுதுகிறேன்.
நண்பரைத் தேடி எம்ஜிஆர் நகர் சென்றேன். மதியம் ஒரு கவிதையை மற்றொரு நண்பனிடம் ஒப்படைத்தேன். ஈழத்துயரத்தைப் பற்றிய கவிதை அது என்பதால் ஓர் எழவுவவீட்டுக்குச் செல்லும் மனநிலையில்தான் நான் இருந்தேன். நண்பனின் அறையைக் கண்டடைவதில் சில பின்னடைவுகள். நண்பனின் அறைபோலிருந்த ஓர்அறையைத் தட்டி விசாரித்ததும் அவர்கள் கலவரம் அடைந்து விட்டார்கள் போலும்.
நான் மன்னிப்புக் கேட்டுவிட்டு நண்பனின் அறையைத்
தேடி நடக்கும் போதே, ஆட்டோவில் ஏற்றிக் காவல்
நிலையத்துக்கு இழுத்துச் சென்றார்கள். நான்
கவலைப்படாமல் ஒத்துழைத்தேன். ஏனெனில் என்மீது
குற்றம் ஏதுமில்லை என்ற நம்பிக்கை. நான் தேடிவந்த
நண்பனுக்குத் தகவல் சொல்ல என்னிடம் என் அலைபேசிஇருக்கிறது என்ற இயல்பு வழியிலேயே நான் என்னைப் பற்றிச் சொன்னேன்:
"என் அலைபேசியில் இருக்கும் எண்களில் ஏதாவது
ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள், அவர்கள் என்னைப் பற்றி உங்களுக்கு விபரம் சொல்வார்கள்" என்றேன். காவல்நிலைய வாசலிலேயே அலைபேசியைப் பறித்துக்கொண்டார்கள்.இது ஒன்றும் வன்கொடுமை அல்ல என்ற
எண்ணத்துடன் நிலையத்துக்குள் சென்றேன்.
அவர்கள் நடத்தையில் சிறுமை கூடியபோது நான் பேச
முயன்றேன்:
"ஒரு மனிதனைக் கைது பண்ணினால் முதலில் மூன்று கடமைகள் காவலர்க்குண்டு" என்றேன். முகத்தில் மிதித்தார்கள். " சார் இது முறையல்ல" என்று மீண்டும்'முறையிட்டபோது தகாத வார்த்தைகளைப்
பிரயோகித்தார்கள்(தேவடியாப்பையா). என்னால்
பொறுத்துக் கொள்ளமுடியாமல் நான் திமிறினேன்.
சுவரோடு பிணைக்கப்பட்ட சங்கிலி விலங்கில் பூட்டி
உதைக்கத் தொடங்கினார்கள். வேலையில் இருந்தவர்களும், வேலை முடிந்து போகிறவர்களும் என ஏழெட்டுப்பேர் கால் பந்தாடுவைது போல் வேடிக்கையாய் சித்திரவதைப்படுத்தினார்கள் 'சார்' என்ற வார்த்தையை வலி தாளாமல் 'ஐயா' என்று மாற்றியதும் வதை குறைந்தது.
(ஆம்! காவல்துறை அகராதியைப் பொறுத்தவரை 'சார்'
என்றால் மரியாதைக் குறைவான விளிதான். ஆனால்
சார் என்பதை விரித்து நோக்கினால் ஆங்கிலத்தில் அதற்கென்ன பொருளோ அதையே அவர்கள் 'ஐயா' என்பதற்குத் தமிழில் மடைமாற்றி வைத்துள்ளனர்.
அதாவது அவர்கள் எவர்களுக்கு, ஏவல்துறையாகப்
பணியாற்றுகின்றனரோ அவர்கள் சந்நிதியில்
தெண்டனிட்டுப் பரிபூர்ண சரணாகதி அடையும் விளியே 'ஐயா' எனும் விளி!)
என்னை எதிர்பார்த்திருந்த நண்பன் என்னைக் காணாமல் என் அலைபேசியில் தொடர்புகொள்ள எடுத்துப் பேசிய காவலர் விவரம் சொல்ல ஓடோடி வந்தென்னை விடுவித்தனர். மறுநாள் காலை ஊடகங்கள், செய்தி வெளியீட்டகம், என்னை விடுவித்த நண்பர் வரை மிரட்டியிருக்கிறார்கள். அவர் நலன் கருதியும் என் உடல் நலமின்மை கருதியும் மூன்றுநாள் மௌனமாக இருந்து விட்டேன்.
இதுவரை சுமந்தது என் சிலுவை. இனிமேல் இது உங்கள் சிலுவை. " - பிரான்சிஸ் கிருபா
3/1/2009 அன்று இதுகுறித்து தமுஎச பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வனுக்குக் கிருபா அஞ்சலிட்டுள்ளார். அவர் அமைப்பு ரீதியாகக் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க முயல்வாரெனநம்புகின்றேன். ஒரு சகபயணியாக இது குறித்து நம்முடைய வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்வோமாக. இதன் பின்னர் தம் இருப்பிடத்திலிருந்தும் உடனுறைந்த நண்பரோடும் உடனடியாக வெளியேற்றப்பட்ட நிலையில் ஒரு சக பாடலாசிரியருடன் மனம் நொந்த நிலையிலவர் குடந்தைக்கு வந்தார். ஒரு தங்கும்விடுதியில் தங்கவைத்து என் ஞானமகன் சுபாசுசந்திரபோசு தான் (அவருக்குக் கண்ணகன் எனப் பெயர் சூட்டியவருங் கிருபாதான்) ஒரு வாரமாக அவரை மிகுந்த அக்கறையுடன் சிரமங்களுடனும் பராமரித்தார். நண்பர் அ.மார்க்ஸ் தான் உரிய மருத்துவ சிகிச்சை அளித்துக் கவனித்தார். மேற்கொண்டு உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப் போதியஅளவில் ஒத்துழைக்கலை
என்பதே அமா கவலையுடன் குறிப்பிடும் தரப்பாகும்.
(அது தான் கிருபா அப்போதே அவர்களை
மன்னித்தாயிற்றே) Bharathi Marx
('வெட்ட வெளி' - பொதிகைச்சித்தர் பக்கங்கள் -
5.'சிலுவைப்பாடுகளும் வலியோடு முறியும் மின்னல்களும்' - மணல்வீடு மணல்வீடு
கண்ணகன் கதைமுடிவும், கிருபா கதைமுடிவும் ஒருப்போலத்தான்:
"இவங்கெல்லாம் இப்படித்தான்... காத்தைப் போல,
மழையைப் போல,வெயிலைப்போல வருவாங்க, இந்த
உலகத்துக்குக் கொடையளித்துவிட்டுப் போயிடுவாங்க. 'தமிழினி' வசந்தகுமார்.
"சிறு உணவுமட்டுமே போதும் எனும்படி வாழ்ந்த மிக
எளிமையான மனிதர்"என்பார் தேவதேவன். அதுதான்
பிரச்சினையே அந்தச் சிறுஉணவையும் குடியின்
தருணங்களில் மறுதலித்தார். அதனை அவரை
உண்பிக்க அவரோடு மல்லுக்கட்டி இருக்கிறோம் நானுங் கண்ணகனும். இருவருமே அவர்களை மீட்டெடுக்க நீண்ட கரங்களைப் பொருட்படுத்தவில்லை.
"மோசமாக உடல்நிலை பாதிப்படைந்திருந்த சமயத்தில் அவரைக் காப்பாற்றக் கவின்மலரும் நண்பர்களும் பட்டபாடு சொல்லற்கரிது. ஆயினும் மீண்டுவந்தார். அவரை ஏந்திக்கொள்ளப் பலகரங்கள் மனமுவந்து நீண்டன. அவர் பிடிகொடுக்கவில்லை. 'சற்றே கவனங்கொள் நண்பனே' எனும் பணிந்த மன்றாடலுக்கும் அவர் செவிசாய்க்கவில்லை." -
இதே கதைதான் கண்ணகனைக் காக்க விஜயராஜ்
பட்டபாடுகளும் இப்படித்தான் முடிந்துபோயின.
'படைப்பு'க் குழும வாணாட் புரவலராகப் படைப்பாளிகளைத் தத்தெடுக்க முனைந்தபோது முதலாவதாகக் கிருபாவையே தெரிவு செய்தது. Ramesh Predan. ஓவியக்கவிஞர் அமுதபாரதி என்றது தொடரலாயிற்று.
இவ்வாறெல்லாம் வாணாட்காலத்தில் உடுக்கை இழந்தவன் கைபோல உற்றுழி உதவி உறுதுணை
புரிந்த அனைவரும் கிருபாவின் உடலைக் கொணரந்தே இறுதிமரியாதை செலுத்திய Binny Moses
நண்பர்களுக்கும் எம்மனோர் நெஞ்சார்ந்த நன்றி.