Pages

Sunday, December 05, 2021

சிறுமைக் கதை - கு.அழகிரிசாமி

 https://archive.org/details/orr-10611_Sirumaikkathai

சிறுமைக் கதை -  கு.அழகிரிசாமி

+++++++++++++++++++++++++++++

நான் பி.ஏ.பாஸ் பண்ணியிருக்கிறேன். இதை நான் பெருமை யாகக் கூறவில்லை என்பதை இப்பொழுது நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். அதனால் முழுக்கப் படியுங்கள். 

எனக்கு குமாஸ்தா உத்தியோகம். என்னுடைய காரியாலயம் துறை முகத்தின் அருகே! வீடு சைதாப்பேட்டையில். அன்றாடம் மின்சார ரயில் பிரயாணம். வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்கு முக்கால் மைல். அதேபோல் இறங்கும் ஸ்டேஷனிலிருந்து ஆபீஸ் முக்கால் மைல். தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலேயே இந்த ஜீவயாத்திரை செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் ஒரு 'புரமோஷனையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

--அப்புறம், எனக்கு ஒரு மனைவியும் இரண்டு பையன்களும் இருக்கிறார்கள். 

எனக்குப் புதிதாக வந்த மேலதிகாரி-அவர் வந்தும் மூன்று வருஷங்களாகிவிட்டன-மிகவும் கண்டிப்பானவர். வேலைகளைக் குறித்த காலத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும். ஆபீசுக்கு ஒரு நிமிஷம்கூடதாமதமாக வரக்கூடாது: கல்யாணம், கருமாதி என்று லீவு போடவும் கூடாது. தலைவலி, காய்ச்சலுக்குங்கூட அவர் லீவு தரமாட்டார். இந்தத் தலைவலியும் காய்ச்சலும் லீவுக்காகவே 

கண்டுபிடிக்கப்படும் காரணங்கள் என்று சொல்லிச் சாதிப்பார். ஆரம்பத்தில் இதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. அப்போது எனக்கு என்ன ஆத்திரம் என்றால், அவரே எந்த வேலையையும் குறித்த காலத்தில் செய்து முடிப்பதில்லை. ஆபீசுக்கு ஒருமணி தாமதமாக வந்து ஒருமணிமுன்னதாகவே போய்விடவும் தயங்குவதில்லை. அது மட்டுமல்ல, லீவு போடாமலே அவர் மாதத்திற்குச் சராசரி நான்கு நாட்கள் ஆபீசுக்கு வரமாட்டார். இதை ஒரு நாள் ஆத்திரம் தாங்காமல் என்னுடைய சக குமாஸ்தாவிடம் சொல்லிவிட்டேன். அவரும் அதிகாரியின் அநியாயங்களை என்னைப் போல் ஆத்திரத்துடன் கண்டனம் செய்தார். 'இவன் விளங்க மாட்டான் ஸார்' என்று பேசினார். ஆனால் அதன் பலன் என்ன? ஒன்றுமில்லை என்றாலும் பரவாயில்லை. நானும் சக குமாஸ்தாவும் ரகசியமாகப் பேசிக் கொண்டது மறுநாளே அதிகாரிக்குத் தெரிந்துவிட்டது. 'எப்படி இது அவருக்குத் தெரிந்திருக்க முடியும்?' என்று சக குமாஸ்தாவைக் கேட்கலாம் என்றால், அவர் அன்று ஆபீசுக்கு வரவில்லை . மூன்று நாட்கள் லீவு கேட்டு வாங்கிக்கொண்டு மாமல்லபுரத்திற்கு உல்லாசப்பிரயாணம் போய்விட்டார் என்று அறியலானேன். அவருக்கு அதிகாரி லீவு எப்படிக் கொடுத்தார்? அதுவும் உல்லாசப்பிரயாணத்திற்கு எனக்கு மர்மமாக இருந்தது. கடைசியில், என் ரகசியக் கண்டனங்களை விலையாகக் கொடுத்துத்தான் அவர் மூன்று நாள் லீவு வாங்கியிருக் கிறார் என்று சில நாட்களுக்குப் பிறகு தெரிந்தது. அவரோ கடவுள் சத்தியமாக தாம் சொல்லவே இல்லை என்று சாதித்தார். அப்புறம் அவரை என்ன செய்வது? பேசாமல் விதியை நொந்து கொண்டு, அதிகாரியின் அடக்கு முறைக்கு நான் குனிந்து கொடுக்கும்படி ஆகிவிட்டது. 

இரண்டரை வருஷங்களாகவே அவர் அடக்குமுறையைக் கடுமையாக்கிக் கொண்டு வந்தார். நான் சொல்லாததைக்கூடச் சொன்னதாக அதிகாரி குற்றஞ்சாட்டினார். 

“அப்படிச் சொல்லவில்லை” என்று சத்தியம் செய்தேன். அவர் அதை நம்பினாரோ நம்பவில்லையோ, ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஏற்றுக் கொண்டுவிட்டால் எனக்கு உரிய காலத்தில் முறைப்படி புரமோஷன்' கொடுக்க வேண்டும்; எனக்கு ஜூனியராக இருக்கும் அவருடைய சுயஜாதிக்காரனான குமாஸ்தாவுக்குப் பிரமோஷன் கொடுக்க வேறு நியாயம் கிடைக்க முடியாமல் போய்விடும். எனக்கு நெஞ்சு பற்றி எரிந்தது. என் நிலையைக் கண்டு அனுதாபம் காட்டும் சகாக்களிடம் நான் வாயையே திறக்கவில்லை. ஒரு அனுபவம் போதாதா? எல்லோருமே ஐந்தாம் படையாக இருக்கமாட்டார்கள்தான். ஆனால் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்று முன்கூட்டியே எப்படித் தெரியும்? 

ஒரு சக குமாஸ்தா? - அவர் தட்ழுெத்தாளருங்கூட - அதிகாரியின் அக்கிரமதர்பாரை மனக்கொதிப்போடு விவரித்து," இந்த ஆபீசில் வேலை பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, நான் ஜெயிலுக்கே போனாலும் சரி, இன்னொரு தடவை என்னைக் கேவலமாகப் பேசினால் எட்டி அறைவதாக இருக்கிறேன்” என்றார். இதைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. 

“அப்படி எதுவும் செய்துவிடாதீர்கள். ரொம்பத்தப்பு” என்று நான் அடக்கியும் அவர் கோபம் அடங்கவில்லை . எரிமலை ஒரு நாள் வெடித்தே தீரும் என்று எனக்குத் தோன்றிவிட்டது. அந்த நாளை எதிர்பார்த்துக்கொண்டும் இருந்தேன். 

சரியாக நான்குநாட்கள்தான் கழிந்தன. ஐந்தாம் நாள் அந்தத் தட்டெழுத்தாளர் செய்த காரியம் காட்டுத் தீப்போல் ஆபீஸ் முழுவதும் பரவிவிட்டது. செய்தியைக் கேள்விப்பட்டதுமே எனக்குத் திரும்பவும் தூக்கிவாரிப் போட்டது. அவர் டைப் அடித்த பிரதிகளில் மூன்றாவது கடைசிப் பிரதியில் பழைய கார்பன் காகிதத்தை உபயோகித்ததன் காரணமாக இரண்டு இடங்களில் 

இரண்டு எழுத்துக்கள் தெளிவாக விழவில்லை என்பதற்காக அதிகாரி மானக்கேடான வார்த்தைகளால் அவரைத் திட்ட, அவரும் தாம் செய்யத் தகாத பெருங்குற்றம் செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டு ஒரு பெரிய காகிதம் நிறைய மன்னிப்பு எழுதிக் கொடுத்தாராம். அப்போது அவர் அதிகாரியின் காலில் விழுந்து கெஞ்சியதாகக் கூட இரண்டொருவர் சொன்னார்கள். 

'ஜெயிலுக்கே போகத் துணிந்த ஒரு ஆசாமி செய்கிற காரியமா இது?” என்று அவரைக் கேட்க நினைத்தேன். என்ன பிரயோசனம்? 'என் நிலையில் நீர் இருந்தால் இப்படிக் கேட்க மாட்டீர்', என்று அவர் என்னை மடக்கியிருப்பார். அது உண்மைதானே என்று நானும் பேசாமல் வந்திருப்பேன். 

எனக்கு நம்பிக்கையே இழந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் நான் யாருடைய அனுதாபத்திற்கு அல்லது அன்புக்குப் பாத்திரமாக முடியும்? மனசுக்குள்ளாகக்கூட அதிகாரியைத் திட்டுவது அர்த்த மில்லாத காரியமாய்ப்பட்டது. ஒவ்வொருவனுமே கடப்படும் போது, தான் மட்டுந்தான் கஷ்டத்துக்கு உள்ளாகியிருப்பதுபோல் திட்டுவதும் ஆத்திரப்படுவதும் பைத்தியக்காரத் தனமல்லவா? ஊருக்கெல்லாம் ஒன்று; எனக்கு மட்டும் வேறொன்றா?

இப்படியாக பி.ஏ. படித்த நான் வேலை செய்து கொண்டு வரும்போது, இந்த இரண்டரை வருஷகாலத்தில் அவர் என் மீது எத்தனையோ குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவற்றைச் சித்திர புத்திரன் மாதிரிப்பலமாகப் பதிவு செய்துவிட்டார் - நியாயத்தீர்ப்பு நாளில் எடுத்து மேஜை மேல் வைப்பதற்கு. 

ஆபீசுக்குப் பத்து நிமிஷம் 'லேட்', இருபது நிமிஷம் 'லேட்' என்று ஐந்தாறு குற்றச்சாட்டுக்கள். இவை உண்மையாக இருந்தபடியால் நானும் மன்னிப்பு எழுதிக் கொடுத்தேன். வாடகை இருபது ரூபாய் அதிகமாக இருந்தும் வசதிகள் குறைவாக இருந்துங்கூட நான் ஆபீசுக்கு மூன்று மைல் தூரத்துக்குள்ளாகவே ஒரு வீட்டைவாடகைக்குப் பிடித்து, சைதாப்பேட்டையிலிருந்து குடிபெயர்ந்து வந்தேன். ஆபீஸ்யாத்திரா மார்க்கத்தைப் பாதியாகக் குறைத்துவிட்டேன். 

நான் வேலையில் சரியாக கவனம் செலுத்துவதில்லை என்றும் குறித்த காலத்தில் முடிப்பதிலலை என்றும் அபாண்டமாக அவர் சாட்டிய குற்றச்சாட்டையும் வேறு வழியின்றி ஏற்று இனிமேல் அப்படிச் செய்யவில்லை' என்று வாக்குறுதி கொடுத்து, முன் செய்த தவற்றை மன்னிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டேன். 

“எழுத்து மூலம் கேட்கப்பட்ட விஷயத்திற்கு எழுத்து மூலம் பதில் கொடுக்க வேண்டும்” என்று அவர் உத்தரவிட்டார். நானும் கீழ்ப்படிந்தேன். 

பொறுப்பில்லாமல் நான் அடிக்கடி லீவு போடுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு, அதற்கு நான் மன்னிப்புக் கேட்கும்படி உத்தரவாக வில்லை. எச்சரிக்கை செய்வதோடு அதிகாரி நிறுத்திக்கொண்டார். 

இத்தனை குற்றச்சாட்டுக்கள் பைலில் இருக்கும்போது, நான் புரமோஷனை எங்கே எதிர்பார்க்கமுடியும்? எனக்குப் புரமோஷன் வேண்டாம். உள்ள வேலைக்கு ஆபத்தில்லாமல் நீடித்து இருந்தால் போதும் என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கத் தொடங்கி விட்டேன். 

என் பிரார்த்தனை தானாக நிறைவேறியதா, அல்லது ஆண்டவன் நிறைவேற்றினாரா என்று நாஸ்திக - ஆஸ்திகக் கூட்டங்கள் வாதிட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் அதிகாரியே நிறைவேற்றிவிட்டார். அவருடைய ஜாதிக்காரனுக்கு, என் ஜுனியருக்கு, புரமோஷன் கொடுத்து விட்டார். என் தலைமீது உட்காருவதுபோல் அவன் வந்து உட்கார்ந்தான். அந்த நிமிஷத்தி லிருந்து என் சகாக்கள், அதிகாரிக்குச் செலுத்தும் மரியாதையை அவனுக்கும் சேர்த்துச் செலுத்தத் தொடங்கி விட்டார்கள்.“நமக்குப் புரமோஷன் கொடுக்காதது இவன் தப்பா? அதிகாரி சொன்னபடி இவன் வந்து உட்கார்ந்திருக்கிறான். கழுதையாக இருந்தாலும் மேலே உள்ளவனுக்குக் கீழே உள்ளவன் மரியாதை செலுத்த வேண்டியது தானே! இவன் இல்லாவிட்டால் இன்னொரு கழுதை! அவ்வளவுதானே? எந்த ராஜா பட்டத்திற்கு வந்தாலும் நமக்குப் பல்லாக்குத் தூக்கும் உத்தியோகம்தானே, ஸார்” என்று என் சகாக்கள் சொன்னதை எல்லாம் மறுக்க முடியவில்லை. 

சுயஜாதிக்காரனுக்கு வேலை கொடுத்து விட்டதோடு என்மீது அடக்குமுறையைப்பிரயோகிப்பதை அவர் நிறுத்திவிடுவார் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்தேன். அதுதான் நடக்கவில்லை. ஒருவனை ஒருதடவை இம்சை பண்ணி ருசி கண்டுவிட்டால், அப்புறம் அதை நிறுத்த மனம் வருமோ? என்னைக் குற்றஞ்சாட்டு வதில் அதிகாரிக்குள்ள ஆசை,அடங்காத ஒரு வெறிபோலவும், ஒரு லாகிரிப் பழக்கம் போலவும், தீர்க்க முடியாத ஒரு மனக்கோளாறு போலவும் ஆகிவிட்டது. 

இப்போது என்னுடைய இந்தச் சிறுமைக்கதையின் முடிவுக்கு வருகிறேன். இது என் கதைக்குத்தான் முடிவே ஒழிய, என் சிறுமைக்கு முடிவல்ல. 

நான் ஆபீசுக்கு அருகே - அதாவது மூன்று மைல் தூரத்தில் - புதுவீடு பிடித்துக் குடியேறியது என் நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது. எவ்வளவுதான் காலாகாலத்தில் வீட்டை விட்டுக் கிளம்பினாலும், குறித்த காலத்தில் பஸ் வரும் என்றோ , வந்தாலும் இடம் கிடைக்கும் என்றோ சொல்ல முடியாது. முன்பு மின்சார ரயில் வண்டியில் வந்து போகும்போது இந்தப் பிரச்னை  இல்லாமல் இருந்தது. இப்பொழுது இந்தப் பிரச்னையே பெரிதாகி விட்டது. சாப்பிட்டும் சாப்பிடாமலும் நான் பஸ்ஸுக்கு ஓடி வருவதும், இடம் கிடைக்காமல் மனக்கலவரத்தோடு பிரமை பிடித்தவன்போல் அங்கும் இங்கும் அல்லாடுவதும், சம்பளம் வாங்கிய புதிதில் டாக்ஸியை அமர்த்திக் கொண்டு ஆபீசுக்கு ஓடுவதும் சகஜமாகி விட்டன. 

புது வீட்டினால் இந்தப் பிரச்னை ஏற்பட்டது கூடப் பெரிதில்லை. எதிர்பாராத விதமாக என் மூத்த பையனுக்கு உடல்நலமும் கெட்டது. காற்றும் வெளிச்சமும் இல்லாத அந்த ஒண்டுக் குடித் தனத்தில், ஏகப்பட்ட குடித்தனங் களுக்கு மத்தியில் நாங்கள் நெருக்குண்டு நசுக்குண்டு வாழ்ந்தோம். அதனாலோ, எதனாலோ அவன் படுத்த படுக்கையாகிவிட்டான். காலையில் டாக்டரிடம் அழைத்துக்கொண்டு போனால் நேரமாகிவிடும் என்று மாலையில் அழைத்துக்கொண்டு போய்ச் சமாளித்து வந்தேன். இந்த நிலையில் என் மனைவியும் ஒருநாள் திடீரென்று ஜுரமாகப் படுத்துவிட்டாள். எடுத்த எடுப்பிலேயே 104 டிகிரி. மாலை வரையில் தள்ளிப்போடமுடியாது என்று காலையிலேயே டாக்டரிடம் கொண்டு போனேன். அப்புறம் அவளை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தேன். பையனுக்கும் மருந்து ஆகாரமும் கொடுத்துவிட்டு, இரண்டாவது பையனைப் பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டாம் என்று சொல்லி,"அம்மாவையும் அண்ணனையும் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொள்ளவேண்டும். எங்கேயும் விளையாடப் போய்விடக்கூடாது. சாயங்காலம் வேலைக்காரி வருவாள்.பாத்திரங்களை எடுத்துத் தேய்க்கப் போடு. துணிகளையும் துவைத்துப் போட்டுவிடச் சொல். நேற்றும் அவள் வரவில்லை. அதனால் இன்று துவைத்துக் காயப் போடா விட்டால் ரொம்பக் கஷ்டம். நாளைக் காலையில் வந்து துவைப்பதாகச் சொல்வாள். அது கூடாது, இன்றைக்கே துவைத்துப் போடவேண்டும் என்று 

நான் கண்டிப்பாகச் சொன்னதாகச் சொல்,” என்றெல்லாம் கூறிவிட்டு ஆபீசுக்குப் புறப்பட்டேன். அரைமணி நேரத்திற்கு மேல் லேட் நான் ஓட்டமும் நடையுமாகப் போகும்போது என் குடல் அலைமோதியது எனக்கே தெரிந்தது. 

பஸ்ஸுக்கு நின்றேன். ஒரே கூட்டம். கியூ வரிசையெல்லாம் அங்கே கிடையாது. பஸ் உடனே வரவில்லை. அங்கேயே தரையில் கால் பாவாமல் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு திரிந்தேன். என்னைப் போல் பஸ்ஸுக்காக நிற்கும் கூட்டத்துடன், நிழலுக்கு ஒதுங்கியிருந்த சில ஆசாமிகளையும் அங்கே பார்த்தேன். ஒரு ரிக்ஷாக்காரன். அதில் அவனே கால் நீட்டி உட்கார்ந்து எப்பொழுதோ நடந்த ஒரு பஸ் விபத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான் தன் சிநேகிதனுக்கு. ஒரு கீரைக்காரி கூடையை இறக்கி வைத்துவிட்டு அமைதியாக வெற்றிலை போட்டுக் கொண்டும், கதையைக் கேட்டுக் கொண்டும் இருந்தாள். மரவேலைத் தொழிலாளிகள் இருவர் பைகளில் தங்கள் கருவி களைப் போட்டுக்கொண்டு பீடி குடித்துக் கொண்டிருந்தார்கள். “இந்த பஸ்ஸும் கிடைக்கல்லேன்னா, இன்று வேலைக்கு மட்டம் போடவேண்டியது,” என்று ஒருவன் மற்றொருவனுக்கு அலட்சிய மாகச் சொல்லிவிட்டு பீடிப்புகையை இழுத்து ஊதினான். 

பத்து நிமிஷங்கள் கழித்து பஸ் வந்தது.எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறினார்கள். நானும் எப்படியோ ஏறி இடம் பிடித்துவிட்டேன். ஆபீஸில் நுழையும்போது, ஒரு மணி நேரத்திற்கு மேலேயே லேட். இன்று வேலைக்கே ஆபத்து வரக்கூடும்' என்று மனசில் ஒரே பீதி. திடீரென்று தெய்வாதீனமாக ஒரு யோசனை தோன்றியது. இன்று லீவு கேட்டால், லேட் என்ற பிரச்னைக்கு இடமில்லை' என்று நினைத்துக்கொண்டு நேரே ஆபீஸரை நோக்கிச்சென்றேன். 

அவர் அன்று, அதுவும் அந்த நேரத்தில் ஆபீஸில் இருந்தார். என்னை ஏறிட்டுப் பார்த்தார். “என்ன விஷயம்? இனிமேல் எக்ஸ்கியூஸே கிடையாது” என்று கடுமையாகச் சொன்னார். பற்களை இறுகக் கடித்துக்கொண்டு பேசினார். 

“ஸார், வீட்டிலே என் மனைவிக்கு 104 டிகிரி ஜூரம். பையனும் வேறே பத்து நாட்களாகப் படுத்திருக்கிறான்..'' 

“இந்த ராமாயணமெல்லாம் தேவையில்லை." 

“உண்மையாகத்தான் சொல்கிறேன்” என்று சொல்லி மருந்து வாங்கடாக்டர் எழுதிக் கொடுத்திருந்த சீட்டையும் காட்டினேன். அவர் அதைத் திரும்பியே பார்க்காததால் மேஜைமேல் வைத்தேன். ஏதோ அசிங்கத்தை எடுத்து எறிவதுபோல இரண்டு நுனி விரல்களால் சீட்டை எடுத்து என்னைப் பார்த்து வீசினார். அது பறந்து கீழே விழுந்ததும் எடுத்துவைத்துக்கொண்டேன்.

"மூன்று நாள் லீவு வேண்டும், ஸார்” என்று கும்பிட்டேன். 

“அந்தப் பேச்சே கிடையாது. எவனோ ஒரு ஒன்றரையணா டாக்டர் எழுதிக்கொடுத்ததை வைத்து லீவு வாங்கி விடலாம் என்ற துணிச்சலினால்தான் இவ்வளவு நேரம் கழித்து வந்தீரோ? நீர் போகலாம். அரைநாள் 'ஆப்ஸென்ட்' போட்டிருக்கிறேன். மத்தியானம் வந்து 'எக்ஸ்பிளனேஷன்' எழுதிக் கொடுத்துவிட்டு வேலை செய்யலாம். போம்” என்று சொல்லி ஆள்காட்டி விரலால் வழியையும் காட்டினார். 

அன்று அவருடைய முகத்தில் முஷ்டியால் குத்தவேண்டும், இல்லை யென்றால் அவர் காலில் விழவேண்டும் என்று நினைத்தேன். அவரோ விரட்டிக்கொண்டே இருந்தார். வெளியே வந்துவிட்டேன். 'என்ன ஆனாலும் சரி, மத்தியானம் இரண்டு மணிக்கு ஆபீசுக்குப்போய், எழுதிக் கொடுக்க வேண்டியதை எழுதிக் கொடுப்போம். இப்பொழுது வீட்டுக்கு போவோம்' என்று ஒரு பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்கு வந்துவிட்டேன். சமையல் வேலையைக் கவனித்தேன். நானும் சாப்பிட்டு, மனைவிக்கும் பையனுக்கும் கஞ்சி கொடுத்தேன். முன் ஜாக்கிரதையாக ஒரு மணிக்கே ஆபீசுக்குப் புறப்பட்டு விட்டேன். அப்போது இரண்டாவது பையனிடம் காலையில் சொன்னதையே திரும்பவும் சொல்லி, வேலைக்காரிவந்தால் துணி துவைக்கச்சொல்ல வேண்டும் என்பதையும் ஞாபகப்படுத்திவிட்டு பஸ்ஸைப் பிடிக்க நடந்தேன். அப்பொழுது கூட்டமில்லாத நேரம். ஒன்றரை மணிக்கே ஆபீசுக்கு வந்து என் சகாக்கள் சிலரிடம் - அவர்களுடைய அனுதாபமோ, நடிப்போகால் காசுக்குப்பிரயோஜனமில்லை என்று தெரிந்திருந்துங் கூட- என் நிலையைச் சொன்னேன். “வேறே எங்காவது வேலை கிடைத்தால் போய்விடலாம்” என்று வாய்தவறிக் கூறிவிட்டேன். ஒரு சகா சிரித்தார். “என்ன இருந்தாலும் இது தெரிந்த பிசாசு. தெரியாத பிசாசிடம் வேலைக்குப் போவானேன்? அது எப்படி இருக்குமோ?” என்றார். 

அன்று அதிகாரி சொன்னபடியெல்லாம் மன்னிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு வேலை செய்ய உட்கார்ந்தேன். 

சாயங்காலம் ஐந்து மணி அடித்ததும் எல்லோருடனும் நாற்காலியை விட்டு எழுந்தேன். ஆபீஸ்வாசலில் 'க்யூ' வரிசை உண்டு. எனவே சிரமமில்லாமல் பஸ் ஏறி வந்தேன். கடைக்குப் போய் மருந்துகளையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழையும்போது மணி ஐந்தேமுக்கால் ஆகிவிட்டது. மனைவியும் மகனும் படுத்திருந் தார்கள். அவளுக்கு ஜூரம் எவ்வளவோ தணிந்திருந்தது. மருந்து களைக் கலக்கிக் கொடுத்துவிட்டுச் சின்ன பையனைப் பார்த்து, "வேலைக்காரி துணி துவைத்துப் போட்டாளா?” என்று கேட்டேன்.

“அவள் வரவே இல்லையப்பா,” என்றான் பையன். 

“அடி பாவி!” என்று சொன்னதும் என் உடம்பெல்லாம் தீப்பரவியது போல் கோபத்தால் கொதித்தது. நெருக்கடியான நேரத்தில் இப்படி இரண்டு நாட்களாக அவள் வராமல் இருந்தால், பாத்திரங்களைத் தேய்ப்பது யார்? துணி துவைப்பது யார்? வீட்டைப் பெருக்குவது யார்? அத்தனையையும் நான் செய்துவிட்டு ஆபீசுக்கு குறித்த காலத்தில் போவது எப்படி? 

என் கோபமும் ஆத்திரமும் தணியும்போது என் நிலையை எண்ணி அழுவோமா என்றிருந்தது. 

ஏற்கெனவே சில தடவைகள் அவள் இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் இரண்டு நாள் மூன்றுநாள் வேலைக்கு வராது இருந்திருக்கிறாள். அப்பொழுது கண்டித்ததற்கு என்னென்னவோ சால்ஜாப்புச் சொன்னாள். அதிகமாகக் கண்டித்தால் அவள் வேலையிலிருந்து நின்று விடுவாள், பதிலுக்கு வரும் வேலைக் காரியும் இப்படித்தான் இருப்பாள் என்று அவளை நயமும் பயமுமாகவே என் மனைவியும் நானும் கண்டித்தோம். இப்போது எனக்கு இருந்த கோபத்தில், 'இனி அவள் முகத்தில் விழிக்கவே கூடாது. நாம் என்ன கஷ்டப்பட்டாலும் சரி, சம்பள பாக்கியை விட்டெறிந்து அவளை விரட்டிவிடவேண்டும்' என்று முடிவு செய்து விட்டேன். 

நானே எழுந்து போய் அவசரமான தேவைகளுக்கு வேண்டிய துணிகளைத் துவைத்துக் காயப்போட்டேன். பாத்திரங்களையும் தேய்த்து வைத்தேன். வீட்டுக் காரியங்கள் எல்லாம் முடிந்தன. படுத்தால் தூக்கம் வரவில்லை. கிராமத்தில் நான் சௌகரியமாக வளர்ந்ததையும், கல்லூரியில் சந்தோஷமாகக் கழித்த நாட்களையும், அப்பொழுது கட்டிய மனக் கோட்டைகளையும், என் கல்விச் செலவுக்காக என் பெற்றோர்கள் பூர்வீக நிலச் சொத்துக்கள் சிலவற்றை விற்ற தியாகத்தையும் ஊரில் நான்தான் முதல் பட்டதாரி என்று என்னை அத்தனை பேரும் அருமை பெருமையோடு நடத்தியதையும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த நினைவு மறைந்து, தூக்கம் வரும்வரை என் கண்கள் நீர் கொட்டிக்கொண்டே இருந்தன. நனைந்த தலையணையைப் புரட்டிப்போட்டு படுத்தேன். 

மறுநாள் விடிந்தது. மனைவியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது வாசலில் வேலைக்காரியின் குரல் கேட்டது. வேறு யாரோ ஒருத்தியுடன் சிரித்துப் பேசிக்கொண்டே வந்தாள். பிறகு வெற்றிலையைத் துப்பினாள் தன் சிநேகிதியை அனுப்பிவிட்டுச் சாவதானமாக உள்ளே வந்தாள். அவள் வந்ததும் வராததுமாக முகத்தில் அறைந்தது போல்,“ஏன் நீ இரண்டு நாளாய் வரவில்லை? அதை முதலில் சொல்” என்று இரைந்தேன். 

அவள் என்னை ஒருமாதிரி கூர்ந்து பார்த்தாள். உற்சாகமாக வந்தவள் மீது நான் கோபமாக எரிந்து விழுந்தது அவளுக்குக் கோபத்தை உண்டுபண்ணிவிட்டது என்பது தெளிவாகத்தெரிந்தது. 

“ஏன் வரவில்லை ?” என்று திரும்பவும் கேட்டேன். 

“என் பிள்ளைக்கு உடம்பு சரியில்லை.” 

“பிள்ளைக்கு உடம்பு சரி இல்லையா? எப்போது கேட்டாலும் இப்படியே சொல்லியே நினைத்த நேரத்திலே வேலைக்கு மட்டம் போடலாம் என்று நினைத்துக் கொண்டாயா? நீ சம்பளம் வாங்குகிறாயா, இல்லை; இனாமாய் வேலை செய்கிறாயா?” என்று கேட்டேன். 

“ஐயே, ஏன் இப்படிக் கூச்சல் போடுறே?” என்று மெட்ராஸ் பாஷையில் எகத்தாளமாகக் கேட்டாள். 

“நான் கூச்சல் போடுகிறேன்; நீ மரியாதையாகப் பேசுகிறாய்...! நீ வேலைக்கு வராத நாட்களுக்கெல்லாம் சம்பளம் கொடுத்தேன் பார், அதற்கு நீ இப்படிப் பேச வேண்டியதுதான். வேலை செய்கிறாளாம் வேலை, கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம்? வாயிலே உண்மை வர வேண்டாம்?” என்று நான் சொல்லி வாய் மூடவில்லை . 

“தா, நீ பேசிக்கினே போறியே! இன்னா சம்பளத்தை நீ குடுத்துப்புட்டேஇஷ்டமானாவேலைக்குவச்சிக்கோ;கஷ்டமானா போகச் சொல்லேன்.” 

என் மனைவி பயந்துபோய் விழித்துப் பார்த்தாள். 

வேலைக்காரி தொடர்ந்து பேசினாள். “காலங்கார்த்தாலே மனுஷன் இன்னா கூச்சல் போடுறாரு! வேற ஆளை வச்சிக்கோ யேன். நானா வேணாம்னு சொல்றேன்? இப்பவே சம்பளத்தைக் கணக்குப் பார்த்துக் குடுத்துடு. ஒரு நிமிசம் நான் இங்கே நிக்கமாட்டேன்..ஆமா...” 

என் மனைவி அந்த ஜூரத்திலும் பலஹீனத்திலும் தன் சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி, “துலுக்காணம்! ஏன் இப்படிப் பேசுறே?” என்று அவளைச் சமாதானப் படுத்த முயன்றாள். 

“நீ சும்மா இரும்மா. வேலை பார்த்தது போதும். என் புள்ளை பெரிசா, உன் வேலை பெரிசா?” என்று சொல்லிவிட்டு அங்கே நிற்காமல் போய்விட்டாள். போனவள் திரும்பி வரவில்லை

“இப்படிப் பேசிட்டீங்களே, ஏன்?” என்று என்னைக் கேட்டாள் மனைவி. 

“இப்படிப் பேசாமல் அவள் காலில் விழணும்னு சொல்றியா?” என்று ஆத்திரத்தோடு கேட்டேன். அப்புறம் தொடர்ந்து பேசினால், வேலைக்காரியைக் கோபித்தது என் முட்டாள்தனம் என்று நானே ஒப்புக் கொண்டாக வேண்டிய நிலை வரும் என்று தெரியும். அதனால் அங்கிருந்து எழுந்துவிட்டேன். 

சமையல் வேலையும் மற்ற வீட்டுக்காரியங்களும் என் ஞாபகத்திற்கு வந்தன. அத்தனையையும் நான்தான் செய்யவேண்டும், அப்புறம் சாப்பிட்டோ சாப்பிடாமலோ ஆபீசுக்கு ஓடவேண்டும், இன்னும் 'லேட்' என்றால் வேலை நிச்சயம் போய்விடும் என்று தோன்றவே, பதற்றம் அப்பொழுதே- ஏழு மணிக்கே - ஆரம்பமாகி விட்டது. 

சிறிது நேரத்தில் காய்கறி வண்டியை நோக்கித் தெருவுக்கு வந்தேன். 

எதிர்வரிசையில் இரண்டு வீடுகள் தள்ளியிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் வேலைக்காரி தனியாகக் கால் நீட்டி உட்கார்ந்து வெற்றிலைபாக்குப் போட்டுக்கொண்டிருந்தாள். என்னையும் பார்த்தாள். பார்த்ததும் காலை மடக்கவில்லை. சம்பளம் வாங்கிக் கொண்டு போகத்தான் அங்கே காத்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு காய்கறிகளோடு வீட்டுக்குவந்தேன். 

என் பக்கத்துப் போர்ஷனில் குடியிருப்பவர், அது வரையிலும் என்னோடு பேசியே அறியாதவர்,“ எல்லா வேலைக்காரிங்களும் இப்படித்தான் இருக்கிறாங்க. திமிர் ஜாஸ்தியாயிட்டது. அவங்களை விட்டா வேறே கதி இல்லேன்னு தெரிஞ்சிக்கிட்டாங்க. அவங்களுக்கு ஏத்தமாதிரி காலமும் இருக்கு," என்றார். 

எனக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை. நமக்கு ஏற்றமாதிரி ஒரு காலம் என்றாவது வருமா என்றுதான் யோசித்தேன். 

ஒரு வேலைக்காரி, ஒரு கீரைக்காரி, ஒரு மரவேலைக்காரன், ஒரு ரிக்ஷாக்காரன்... இவர்கள் பட்டினியே கிடக்கட்டுமே.... இவர்களைப் போல் நானும் மனிதனாக வாழ ஒரு காலம் வருமா? 

“ஒருநாள் நாம்ப வேலைக்குப் போகலேன்னா ஆபீஸிலே சும்மா விட்டுடவாங்களா, ஸார்?” என்று அவர் கேட்டார். 

“காலிலே விழுந்தாலும் மன்னிக்க மாட்டேங்கிறான் சும்மா விடுறதாவது?” என்றேன். 

“என்ன பண்றது? இந்த வேலைக்குன்னே நாம்ப படிச்சோம். இந்த வேலைக்குன்னே பாஸ் பண்ணினோம். குடுமியைக் கொண்டுபோய் இன்னொருத்தன் கிட்டே, குடுத்திட்டப்புறம் யோசிச்சு என்ன பிரயோஜனம்?” என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அவர் உள்ளே போனார். 

உண்மைதான். இந்த நிலைக்கு என்னை ஆளாக்கிக் கொள்ள நான் எத்தனை வருஷங்கள் படிக்க வேண்டியிருந்தது! என் பெற்றோர்கள் நிலத்தை விற்றுச் செலவழித்த பணம்தான் எவ்வளவு! 

ஒரு மணி நேரத்திற்குள்ளேயே, சம்பளப்பாக்கியை வாங்கிக் கொண்டு போகக் கெடுபிடியோடு வந்து நின்றாள் வேலைக்காரி. என் மனைவி மறுமுறையும் கெஞ்சிப்பார்த்தாள். நானும் தடுத்துச் சொல்லாமல் இருந்தேன். 

ஒன்றுமே நடக்கவில்லை. 

பாக்கியைக் கணக்குப் பார்த்துக்கொடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இல்லாமல் போய்விட்டது