Pages

Wednesday, September 13, 2023

கோணல் வடிவங்கள் இராஜேந்திர சோழன்

 https://bookday.in/series-10-angular-shapes-rajendra-cholan-synopsis-ramachandra-vaithiyanath/

கோணல் வடிவங்கள்

இராஜேந்திர சோழன்

“அப்படியா சேதி?” பதட்டத்துடன் கேட்ட கிஷ்டன் உழுது கொண்டிருந்த மாடுகளை அயட்டி ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.  “த மங்களலட்சுமி, இந்த மாடுவளை புடிச்சு தவுடு வச்சி தண்ணி காட்டு.  கையோட மொள குச்சில புடிச்சுக் கட்டு” என்ற வேகத்தோடு வெளியேறுகிறான்.

இரண்டு மூன்று தெருக்களைக் கடந்து அத்தெருவை அடைகிறான்.  நடைக்கு அப்பால் பின்புறம் சமையற்கட்டு அடுப்பங்கறை அவள் கூழு துழாவிக் கொண்டிருக்கிறாள்.  “என்னாதே இந்நேரத்துலே” என்று அவள் கேலியாய் சிரிக்கவும், “மயிரு எடுத்துக்கிச்சு” என்று கோபமுறுகிறான்.  அவன் உடம்பை உரசினாள்.  “என்னா கோவம்?”

இவனோ தன்னை மீறி எவனோ நேற்று இரவு வந்ததாக சந்தேகிக்கிறான்.  சீறுகிறான்.  

“என்னாமே ஆரோ எவனோன்ற தெம்புலே பேசறியா?” கறுகினான்.  “கட்டனவனாயிருந்து கேட்டா இப்படி பேசுவயா நீ?” 

“அந்த ஆம்பளக்கி துப்பு இல்லாததுனாலேதான் இந்த அளவுக்கு? இல்லாட்ட இம்மா பதஷ்டமா வெடுக்னு வந்து இந்த வார்த்தய கேப்பியா நீ?  என்னா துணிச்சலு இருக்கணும், ஒருத்தன் பொண்டாட்டிய பார்த்து அந்த மாதிரி ஒரு கேழ்வி கேக்க?”

அவன் அவளை அறைகிறான்.  அவள் சுருண்டு விழுகிறாள்.  திரும்பத் திரும்ப யார் ராத்திரி வந்தது என்கிற அதே கேள்வியை அவன் எழுப்புகிறான்.

“ஏதோ நீயும் தப்பு பண்ணிட்ட, நானும் தப்பு பண்ணிட்டேன்.  போவட்டம்.  இதுவரிக்கும் நம்ப பழக்கமானதுலருந்து ஒம் புருஷன் வர்ரதப் பத்தி எப்பனா எதுனா நான் வாயெத் தெறந்து கேட்டுருப்பனா? ஏதோ கட்னவனாச்சே அதுகூடம் இல்லண்ணா அப்பறம் அவனுக்கு என்னா இருக்குது.  அவனும் கண்டுங் காணாத மாதிரி பெரும்போக்கா போயிருக்கிறானேன்னு நானும் அதப்பத்தி ஒன்னுங்க கேட்டுக்கறதில்ல இல்லியா?”

பேச்சு மீண்டும் ராத்திரி வந்தது யார் என்பது பற்றியே வளர்கிறது.  

“இந்தமாதிரிதான் பேசி ஈசாமயெ கௌப்பாதன்றேன்.  நெசத்த சொல்லிடு.  நாம் பாட்டுனு போயிடறேன்.”

“என்ன நெசத்த?”

“மின்சாமி இங்க வந்தத”.

“சீ, ஒங்கிட்ட ஆரு பேசுவா? வெறிச்சி பேசுவாளா? ஒங்கிட்ட ஒரு தாட்டிதான் சொல்லுவா ஒரு பொம்பள.  நல்ல மாட்டுக்கு ஒரு சொல்லு”.

“அப்ப அவன் இங்க வந்தான்றியா?”

“ஆமா வந்தான். நானும் அவனும் ராவல்லாம் ஒண்ணாதான் படுத்துண்டு கெடந்தோம்.  எங்க போயி பஞ்சாயத்து வச்சிக்கறியோ வச்சிக்கோ போ”.

அடித்து வீழ்த்துகிறான்.  அவிசாரி முண்டை என்று வசை பாடுகிறான்.

பிச்சைப்பாத்திரம்: நாஞ்சில் நாடன் ...

மின்சாமி வீட்டிற்கு செல்கிறான்.  சீட்டாடிக் கொண்டிருந்த அவனை தனியே அழைக்கிறான்.

கிஷ்டன் வழக்கம் போல் நேத்து ராத்திரி எங்கே போயிருந்தேனு பேச்சை துவக்குகிறான்.  மாரியிடம் போகக்கூடாது என்று எச்சரிக்கிறான்.  பேச்சு வலுக்கிறது

“அதயாரு நீ சொல்ல? ஒனக்கு பொண்டாட்டி புள்ளே இல்ல, குடும்பம் இல்ல, அத உட்டுப்புட்டு என்னமோ இன்னூருத்தம் பொண்டாட்டிகிட்டே பேசாதறான்னு நீ என்னமோ கட்டுமானம் பண்றியே?” மின்சாமியும் பாய்கிறான்.  எச்சரிக்கிறான்.

பதில் சொல்லாமல் தோட்டத்துக்குப் போனன்.  மேல் துண்டை எடுத்து கயிற்றில் போட்டான்.  சோமனை அவிழ்த்துப் படலில் போட்டான்.  சொம்பு சொம்பாய் அள்ளி மேலே ஊற்றிக் கொண்டான்.  முதுகைத் திருப்பி அவளுக்கு கொடுத்தான்.  “எங்கிருந்தியா வந்தது இம்மா அழுக்கு.  ரெண்டு நாளைக்கு நான் தேய்க்கலண்ணா இந்த அழுக்கா?” மங்கலலட்சுமி கேட்கிறாள்.

ஒப்புக்கு அள்ளி கட்டாயத்துக்கு கிடித்தான்.  மூலைக்குப் போய் மோட்டு வளையைப் பார்த்தான்.  “என்னாயா என்னுமோ பொண்டாட்டிய பறி குடுத்தவனாட்டம் நீம் பாட்டுனு குந்திக்ன.  நான் குத்துக் கல்லாட்டம் எதுர இருக்க சொல்லவே”

கசடதபற, ஜூலை 1971

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது