Pages

Wednesday, June 15, 2011

பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல். என் பாதம் பதித்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.
*
(1973)

ஸ்கூட்டரில் வந்த தோழர்
கால்நடைக்காரன் என்னை,
குறி, பார்த்து வந்தது
அவரது ஸ்கூட்டர்.
தோழர் அவர் எனக்கல்ல. எனவே
நின்றபடி ஓடும்
எஞ்ஜினுடன் ஓடவிட்டார்
இயங்கு இயல் வாதத்தை-
’நீ பூர்ஷ்வா
உன் அப்பன் பூர்ஷ்வா
உன் பாட்டன் முப்பாட்டன்
உன் பரம்பரை
பூராவும் பூர்ஷ்வா
பூ ஊ ஊ ஊர்ஷ் வாஹ்!’ என்றார்.
’நீ?’ என்றேன்.
’நானா?’ என்று
பிரேக்கை ரிலீஸ் பண்ணி
‘நான் ஒரு லெப்ட்…’ என்று
பள்ளத்தே பாய்ந்த
முன்சில்லைத் தூக்கி
‘டிஸ்ட்’ என்று எம்பினார்.
‘டூ’…என்றார் ‘டா’ என்றார்.
பறந்தார் ஸ்கூட்டரில்.
பள்ளம் பார்த்துப் பாதை பிடித்து
நடந்தேன் நான்.
*
(1986)