Pages

Saturday, June 04, 2011

E=mc2 - பிரமிள்




E=mc2    

பிரமிள் 


ஒற்றைக் குருட்டு
வெண்விழிப் பரிதி
திசையெங்கும் கதிர்க்கோல்கள்
நீட்டி
வரட்டு வெளியில் வழிதேடி
காலம் காலமாய்
எங்கோ போகிறது.
‘எங்கே?’
என்றார்கள் மாணவர்கள்.
ஒன்பது கோடியே
முப்பதுலெச்சம் மைல்
தூரத்தில்
எங்கோ
ஒரு உலகத்துளியின்
இமாலயப் பிதுக்கத்தில்
இருந்து குரல்கொடுத்து,
நைவேத்தியத்தை
குருக்கள் திருடித் தின்றதினால்
கூடாய் இளைத்துவிட்ட
நெஞ்சைத் தொட்டு
‘இங்கே’ என்றான் சிவன்.
‘அசடு’ என்று
மாணவர்கள் சிரித்தார்கள்.


ஒரு குழந்தை விரல்பயிற்ற
ஐன்ஸ்டீனின் பியானோ
வெளியாய்
எழுந்து விரிகிறது.
மேஜையில் அக்ஷர கணிதத்தின்
சங்கேத நதி!
மனித மனத்தின் மணற்கரையில்
தடுமாறும்
ஒரு பழைய பிரபஞ்ச விருக்ஷம்.
நதி பெருகி
காட்டாறு.
காலமும் வெளியும் ஒருமித்து
ஓடும் ஒற்றை நிழலாறு.
ஒரு புதிய பிரபஞ்சம்.
நேற்று நேற்று என்று
இறந்த யுகங்களில்
என்றோ ஒருநாள் அவிந்த
நக்ஷத்ர கோளங்கள்
ஒளிவேகத்தின்
மந்தகதி தரும் நிதர்சனத்தில்
இன்றும் இருக்கின்றன -
காலமே வெளி!


இன்று கண்டது
நேற்றையது,
இன்றைக்கு நாளைக்கு.
இக்கணத்தின் கரையைத்
தீண்டாத
இப்புதிய புவனத்தின் பிரவாகம்
வேறொரு பரிமாணத்தில்.


விரிந்து
விண்மீன்களிடையே
படர்ந்த நோக்கின்
சிறகு குவிகிறது.
பிரபஞ்சத்தின்
சிறகு குவிந்தால்
அணு.
அணுவைக் கோர்த்த
உள் அணு யாவும்
சக்தியின் சலனம்.
அணுக்கள் குவிந்த
ஜடப்பொருள் யாவும்
சக்தியின் சலனம்.
ஒளியின் கதியை
ஒளியின் கதியால்
பெருக்கிய வேகம்
ஜடத்தைப் புணர்ந்தால்
ஜடமே சக்தி!
மெக்ஸிக்கோவில்
பாலைவெளிச் சாதனை!
1945
ஹிரோஷிமா நாகசாகி.
ஜடமே சக்தி.
கண்ணற்ற
சூர்யப் போலிகள்.
கெக்கலித்து
தொடுவான்வரை சிதறும்
கணநேர நிழல்கள்.
பசித்து
செத்துக் கொண்டிருக்கும்
சிவனின்
கபாலத்துக்
கெக்கலிப்பு.


இசைவெளியின் சிறகுமடிந்து
கருவி ஜடமாகிறது.


பியானோவின் ஸ்ருதிமண்டலம்
வெறிச்சோடிக் கிடக்கிறது.
உலகின் முரட்டு இருளில்
எங்கோ ஒரு குழந்தை அழுகிறது.
ஜன்ஸ்டீனின் கண்ணீர்த்துளியில்
தெறிக்கிறது பரிதி.
ஒரு கணப் பார்வை. 
        
     - பிரமிள்



Thanks to
http://urakkacholven.wordpress.com/2011/03/13/