Pages

Sunday, March 30, 2014

வாக்கு - பிரமிள்

வாக்கு - பிரமிள் 

சரி இது தவறது
என்று உணர்ந்துருகி
அறிவில் தெளிந்ததை
முறை பிசகற்று
வெளியிடும் தவம்
சுய வெளியீடல்ல.
சுயத்தின் எல்லைக்குள்
நில்லாத உயிருக்கு
அதுவே வேரும்
கிளையும் இலையும்
பிராணனும் பிராண
வெளியின் உயிரும்.
சுயத்தை மீறி
உலவும் வெளியில்
உள்ளல் உடன் பூண்டு
சொல்லாயிற்று.
உணர்வில் நான் நீ
இருமைஉருகி
அறிவில் ஒளிர்ந்து
கருவும் உருவும்
பிசகாது பிறந்து
பொருளாயிற்று.
சுயத்தின் சுமை
அற்ற பொருளே
பறக்கும் பரந்து
ஆழ்ந்து நிலைக்கும்.
இதனால் தான் போலும்,
“ சொல்ல வந்ததை
முறையற்று வெளியிட்டால்,
அர்த்தம் மட்டுமல்ல
உயிரும் ஒருவிததில்
சிதையும்” என்றான்
கிரிட்டனிடம் அன்று
பிளேட்டோ.
                                       (வே.மு.பொதியவெற்பனுக்கு)