Pages

Sunday, April 27, 2014

மேல்நோக்கிய பயணம் - பிரமிள்


காவியம் - பிரமிள்

மேல்நோக்கிய பயணம்

தட்டச்சு -       04-04-2014 முதல்  27-04-2014

I.காவிய முகம்

சேற்றில் விழுந்த சொற்கள்
தானியமாயின
புல்தரைமீது பூக்களாயின
சருகுகளாகி
தெருவிலலைந்தன பல
மாளிகையோ
குடிசையோ
என்றெனக்குத் தெரியாத
ஒருபூமித் தளத்திலே
குழந்தைகளாயின
மழலைகளாகி
இதயத்தில் பொழிந்தன
மலிந்தன
மலிந்தவை
புழுதிகளாயின
புயல்களுக்கு துவஜங்களாகி
கண்ணைக் கெடுத்து
காதைக் குடைந்தன
புயல் ஒடுங்க மண்டின
வேறுவேலையற்றுத்தவித்தன.

தவிக்காமல்
காற்றுக்கும எட்டாமல்
கண்ணைக் கெடுக்காமல்
காதைக் குடையாமல்
கனம் இழந்து
குரல் துறந்து
கருணைகொண்ட
ஏதோ ஒன்று மட்டும்
தானியமாயிற்று
இதயத்தில் வேரூன்றி
மனமழலைப்புழுதித்தூளில்
மழைத்துளிகளாய்த்திரண்டது
மேல்நோக்கிப் பொழிந்த்து
வானோடு இலைகோர்த்து
பார்வை கொண்டது
கனிந்து
உயர விடிந்தது.

II. திரை இரைச்சல்

பன்னிரண்டு வருஷங்களாக
குருத்தெலும்பு குறுகுறுத்து
இன்றென் எலும்புக் கூடுநடுங்க
கணுக்கால்கள் வெடித்து
நரைத்து நிலவிய
வெள்ளித் தாடிகளாய்
முளைத்தன இறகுகள்.

கண்ணுற்ற நண்பர்கள்
'டாக்டரைப் போய்ப்பார்
ஆபரேட் பண்ணிக்கொள்'
என்றெனக்கு
ஆலோசனை தந்தனர்.
'இப்போது கணுக்கால்
இனிப் பிளக்கும் தலை;
முடிவில் நீ தூளாவாய்.
இது ஏதோ குஷ்டம்
அல்லது பிளவை
எட்டநில்' என்றனர்
'காலில் முளைத்து
ஆகப்போவதென்ன
சிறகால்?' என்று
சிரித்தனர்
'தோளில் முளைத்தாலாவது
பறக்கலாம், கோவில்
வௌவால்களோடு
வௌவாலாய்த் தொங்கலாம்
பார் இதோ!' என்று சிலர்
முழங் கைகளை
விரித்து விலாவில்
சடபட என்றடித்து
சிறகின் இயற்கையை
விளக்கினர்.
உத்தரத்தில் தலைகீழாய்
தொங்கினர்

'பறக்கிறதென்றால்
இப்படி!' என்று சிலர்
எகிறி எகிறி
குதித்தனர்
பின்பு யாவரும்
மேல் மூச்சு
கீழ்மூச்சு வாங்க
'உரிய இடத்தில்
சிறகு முளைக்க
அரனாரின் அருளுக்கு
அப்ளை பண்ணு.
காதைக் கட்டைவிரல்
கார்க்கால் அடைத்து
கண்மூடிக் கண்கெட்டு
புலனின் பொத்தல்களை
தூர்த்து
வாழாமல் பாழ்பட
வழிபாரு
தோள்பட்டையிலே
தோல் முளைக்கும்
அதுதான் அசல்சிறகு
காலிலா முளைக்கும் சிறகு?
அசிங்கமடா!
ஆபரேட் பண்ணிக்கொள்.
உயிருக்கே ஆபத்து
போ போ!' என்றார்.

மழையின் குரலைமடக்கும்
தவளைகளின் உபதேசம்.
திரும்பும் திசையெங்கும்
திரை இரைச்சல்.
சிஷ்யப் பிறவி
ஈசல் இறகெறும்பை
குருவின் வயிற்றுக்குள்
வசமாக வீசிவந்து
ஒட்டிச் சுருட்டும்
நுனி நாக்குக் கும்பல்கள்
அருவருத்து விலகி
கையெடுத்துக் கும்பிட்டேன்.
இரண்டு கால்களிலும்
சிறகுகள் வெட்கி
குறுகுறுத்து ஒடுங்க
நொண்டி நடந்து அந்த
பிரதேசம் விட்டகன்றேன்.
அன்றிலிருந்து இப்பாதங்கள்
ஓயாது நச்சரிக்கும்
செய்திப் பரப்பில்
ஊர்ந்து அலைவதில்லை.
அவர் இவர் என்று
பிரிந்து பிறாண்டும்
உபதேசி மார்களின்
தத்துவத் தகவல்கள்
அச்சேறி நச்சரிக்க,
நினைவின் கசப்புகள்
வீறாப்புக் கதைபேசி
கட்சிகளின் மீதேறி
எச்சரிக்கைப் பவனிவர,
என் பாதங்கள்
கணம் ஒன்றில் வெளிகண்டு
குருவிகள் ஆயின.

அன்றிலிருந்து இப்பாதங்கள்
ஓயாது கிணுகிணுக்கும்
கோவில் மணிகளின்
உபதேசக் கொசுபாடும்
புராண வெளியினிலே
தவமாய்க் கிடக்கவில்லை.

முழங்கைச் சிறகை
விலாக்கூட்டில் தட்டி
பறந்த புஷ்பக
விமானச் சடசடப்பு
ஒலிக்காத வீதி
ஒன்றுண்டு.
ஒருசில அடிகள்
எகிறிக் குதித்துவிட்டு
"கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்து முன்தோன்றி
உயரப் பறந்தகுடி
நமது குடி" என்று
பல்லிளிக்கும் போஸ்டர்கள்
ஒட்டாத வீதி
ஒன்றுண்டு; அங்கேஎன்
பாதங்கள் பறந்தன.
வெட்ட வெளியோடு
கூட நடித்தன.
துன்மார்க்கன் என்று என்னை
தூஷணைகள் தொடர
முறைதவறி அகம்பிசகா
திசைஒன்றில் நடந்தன.
வெட்டவெளி மேடையிலே
வெட்கத்தின் இருட்டுக்கள்
பகலாகி நிலவின.
மிருகவியல் பரிணாமம்
முறைதவறாத
தோள்பட்டைச் சிறகாக
நளைக்கு முளைக்குமென்று
ஞாபகத்தைப் புள்ளிவைத்த
பேரேட்டுப் பாரங்கள்,
நாளைக்குச் சிறகாகி
ஆளைத் தூக்குமென்று
நம்பிச் சுமந்த
நேற்றைய கற்கள்,
தானே நழுவும்
சுமைகூட வீழாமல்
வரிக்கின்ற ஞாபகங்கள்,
அழுத்தும் பளுவை
மறைக்க மறக்க
உரத்துக் குரைக்கும்
உபதேசங்கள்-
முழுதையும் உதறி
"ஆளைவிடு" என்றகன்றேன்.

III புகை இரும்பு

கிளைநுனியின் இலைக்கண்ணில்
வெய்யிலின் ஒளித்திரவம்,
கண்படலம் நாவின்
தசைத்தகடாய் ஆகிறது.
விழிபேசி நா பார்க்க
கிளைகளிலே மனக்குரல்கள்,
துணுக்குற்று
குரல்சிதற காற்றலற
முதிர்ந்த மர இருளுள்
புதைகிறது கோடரியின்
இரும்புக் கூர்நாவு.
வீசும் புஜத்தில்
எஃகுநீர் வேர்வை-
தசையின் அசைவில்
வேர்வை வெளிநடங்கி
இலையின் அலையோட்டம்.
அருகே வந்த
புதிய தாடிக்
கணவானைத் தொட்டு,
உயிரும் விறகும்
ஊடுருவி எரியும்
சூழலின் இடையறாத்
திகிரியைக் காண்என்றேன்.
என்வியப்பைப் பகிர்ந்து
'பருகு' என்றேன்
'பயித்தியமோ?' என்று
என்னைப் பார்த்தார்
எல்லாம் அறிந்த
பார்வையில் இந்தப்
பையனை அளந்தார்.
உதட்டைப் பிதுக்கினார்
"இமயத்தில் வெள்ளியினால்
ரெடிமேட் அழகிருக்கு,
உயர உயர நடந்தால்
ஆளே கிடையாது
உள்ளம் அடங்கும்" என்றார்;
"உபதேசத் தகவல்" என்றார்;
"முக்திக்கு மனுப்போட
மாடர்ன் மந்திரம்
இந்தா பிடி' என்றார்.
வெட்ட வெளியிலே
நிலவும் பகலைச்
சொல்லாக்கி
கக்கத்தில் அடக்கினார்.
சீமைக் குளிகை ஒன்றை
எடுத்து விழுங்கி
சமாதியில் அடங்கினார்.
பழைய தாடிபோய்
புதியதாடி
முளைத்தென்ன?
அதே தாடையும்
மயிரும் தான்.

காங்கிரீட் மூளைக்குள்
ஆகாசப் பொந்து-
அதையும் அடைக்கிறது
புகை இரும்பு.
ஊரெங்கும் நிழல்மழை.
சொல்பதிந்த பக்கம்
உண்மையை வடிகட்டும்
சல்லடை ஆகிறது.
காற்றில் எங்கும்
வயிற்றுப் பசியை
விழுங்கும் கபந்தப்
புளுகுவாக் குறுதிகள்.
என்றைக்கும் வாராமல்
எதிர்காலத்தே நிலைத்து
பின்வாங்கும் சுவர்க்கங்கள்
சுவரெங்கும்
போஸ்டர் வாதப்
புது மதங்கள்.
சொல்லின் சல்லடைக்கு
தப்பித்த உண்மை
முணுமுணுத்து எழுந்த
ஒரு கணத்தை
அச்சறுத்திக் குரைக்கும்
இருளின் வாய்கள்.
இருந்தும் நிகழும்
அரைகுறை அற்புதங்கள்.
சொல்லுக்குள் பதுங்கிய
பகலின் விதைக் கங்கு
உதயச் செடியாகி
சல்லடைத் திரைகீற
இருளின் பாறைப்பொழுது
அதிர்ந்து பிளக்கும்.
அந்தக் கணமேனும்
இருளின் வாயில்
நாவுநாய் வாலாகி
சுருளும் கணமாகும்.

IV.  வேட்டை

செல்லும் திசை மறைத்து
தழைத்தன சுவர் நிழல்கள்.
அறிமுகமற்ற
இருள்மூலைகள்
போர்முகம் கொண்டன.
வாய்பொந்து காட்டி
கோஷங்களை
உறுமிக் குரைத்தன.
ஒருதிடீர் திருக்காட்சி :
'அதோ சிவன்' என்ற குரல்.
'விடாதே பிடி'
என்றோர் எதிர்க்குரல்.
எதிர்க்குரலுக்கு
துணைக்குரலாக
'பிடி அடி உதை குத்து!'
என்ற கூக்குரல்கள்.
'யாரோ இக் கூட்டம்?'
என்று விசாரித்தால்,
'அரனாரை சிறைபிடித்து
அறுவைச் சிகிச்சைசெய்யும்
சித்தாந்த ,
கட்சிலட்சிய
ஜட்ஜுகள்'
என்றுபதில் வந்தது.
ஜட்ஜுகள், சர்ஜன்கள்
மேலும் சேர்ந்து
குரல்கள் குவிந்து
கைகள்நாய் வாய்களாய்
கவ்விக் கடிக்க
'ஒழிக!ஒழிக!' எனும்
புதுவேத கோஷம்
குரைக்க
தப்பித்தடுமாறி
ஓடுகிறார் சிவனார்.


ஜடையில் கங்கையின்
இமயப் பனிமூச்சு
அனலாய் அடிக்கிறது
நதிநாக்கு வரண்டு அவள்
நீர்கேட்டுத் தவிக்கிறாள்.
அர்த்த நாரிஇவள்
பாரிச வாதத்தில்
பின்னே இழுக்கிறாள்.
ஜடை இருளுள் பிறைகவிழ்ந்து
விவேகப் பித்தம்
கோஷப் புயலில் கலைந்து
புத்தி தெளிந்து
பிழைக்கும் வழிதேட
இடிஒலி எழுப்பிய உடுக்கை
பொத்தல் விழுந்து
'பொத் பொத்' என்றொலிக்க
திரிசூலம் துருப்பிடித்து
கையைக் கடிக்க
மறுகையில் மானின்
கால் எலும்பும்
இன்னொரு கைநெருப்பு
அணைந்து புகைந்து
அரனார் இருமவும்
பின்தொடர்வோர் கல்லடியில்
படம் ஒடுங்கி
பாதிசெத்த பாம்புமாலை
புழுவாகிப் புரள
ஊழித்தீ தீவரண்டு
நெற்றிக்கண் குழிவிழுந்து
திருதிரு எனவிழிக்க
அறந்து பறக்கும் பூணூலை
பொடிமட்டையில் சுருட்டி
பொத்திப் பிடித்தபடி
அரனார் ஓடுகிறார்.
பின் தொடர்ந்து
'கடவுள் ஒழிக!' எனும்
சுலோகக் குரல்எழுப்பி
கடலாய் வருகிறது
கட்சி லட்சிய
ஜட்ஜுக் கும்பல்.
தலைமை வரிசையிலே
'அசல்சிறகு முளைக்க
அரானரை விசாரி'
என்று எனக்கு
அன்று அருளிய
பஞ்சாங்கங்கள்,
இன்று 'ஓய் நாஸ்திகரே
உம் கட்சி எம் கட்சி
ஒழிக கடவுள்!' என
முகமே வாயாகிப்
பிளக்க அலறி
தொடர்ந்து விரட்டுகிறார்.
ஓடித் தெருமுனையில்
கடவுளின் தலையும்
கும்பலும் மறைய
சிரிப்பதா வாந்தி
எடுப்பதா என
என்தலை சுழல
போகும் வழியும்
புரியாது திசைசிதற
நடைபாதை மீது
தடுமாறி உட்கார்ந்தேன்,
உடனே ஏதோ
புதிய சின்னங்களும்
சட்டையிலே
புதிய மடிப்புகளும்
புதிய பொத்தான்களுமாய்
புதிய வர்ணத்தில்
சீருடை அணிந்த
இருவர் ஓடிவந்துஎன்
முதுகில் தம் கைக்கழியால்
ஒருபோடு போட்டனர்
'ஓடு, ஓடு!
ஓடும் உலகத்தில்
நிற்காதே நடக்காதே
உட்கார்ந்து
இருக்காதே கிடக்காதே
ஓடோடு, ஓடு!
ஓடும் உலகத்தில்
ஊரோடு ஓடு!
உலகம் ஒருநாள்
ஓய்ந்து நிற்கும்
அப்போது நில்!
பிறகு தபஸில்
உட்காரும் அப்போது
உட்காரு.
பிறகு உலகு
முழுதும் ஒரு
சமாதி கூடி
யாவரும் கிடப்பர்;
அப்போது நீயும்
கிடக்காமல் முடியாது
இப்போது ஓடு!'
அதுவரை நடந்தநான்
ஓடினேன். ஓட
பாத நரம்புகள்
திமிறின. கணுக்
கால்களுள் சிறகின்
வேர்கள் குமுறின.
மறுகணம் ஓட்டம்
உயரஎழுந்தது
பறந்தது பாதம்.
என்னை ஏற்றி
விரிந்தன சிறகுகள்.
தெருவில் ஓடுவோர்
தலைகள் தரையில்
உருளும் தலைகளாய்
காட்சியின் புதுக்கோணம்
அப்போது கண்டேன்
விளம்பரக் காட்சித்
தெருவின் முகப்புச்
சுவர்களின் பின்புறம்
கிடந்து பெருகும்
சேரியின் அவலம்.
போஸ்டர்கள் செய்திகள்
எதிலும் பதியாத
'பொய்' களின் பெருக்கம்.
உயர எழுந்த
என்னை அண்ணாந்து
பார்த்தது பசியில்
குழிந்த கண்களின்
சிறுநெருஞ்சிப் பரபரப்பு.
திரும்பிய திசையெங்கும்
நேர்நோக்கில் உயிரைத்
தைக்கும் கேள்விகள்.
கெஞ்சலில் கரைந்து
தனிமுகம் இழந்த
ஒருமுகப் பாறை
கூப்பிக் குவிந்து
கேட்டு விரியும்
கைகள் முளைத்த
எலும்பு வயல்.
நரம்பு சில்லிட
தயங்கி எழுந்தது
'பசிக்குது' என்ற
ஒருபெரு மூச்சு.
பசியின் ரகசிய
விசும்பல் கேட்டு
தெருவின் கோஷங்கள்
ஸ்தம்பிதம் ஆயின.
கோஷம் பதுங்கக்
காரணம் கேட்டு
வானமுகட்டைப்
பார்த்த காவலர்
கண்டனர் என்னை.
'தெருவில் ஓடாமல்
சுவரை மீறிப்
பறக்கிறான் இவன்
ஒற்றன், விடாதே!
பிடி அடி உதைகுத்து!'
என்று சீறுடை
காவலர் சீர்கெட்டு
கத்தினர் விசில்களை
ஊதினர். என்வேகம்
மீறிற்று. தூரத்தில்
குரலும் விசிலும்
குழம்பித் தேங்கின.

சிறகுகள் அடங்க
ஊர்முகப்புக் கண்டேன்.
அங்கே அரசின்
விளம்பர விழா.
'புதுயுகமே வருக!' என
வாயைப் பிளக்கும்
கபந்த வளைவுகள்.
போஸ்டர்கள் மீத்
சொற்களுக்கு பல்முளைத்து
மீசைக் குரூரத்தை
இளிப்பால் மழித்த
பரிகாசத் திருவருள்.
கைகுவித்து போஸ்கொடுத்து
ஒண்ணேமுக்கால் ஆளுயரம்
பதிப்பித்த மூஞ்சிகள்.
வர்ணங்கள்
தெருமருங்கே கட்சிச்
சின்னங்கள்-சின்னம்
ஸ்வீட்டு வடிவெடுத்து
விநியோகம் ஆகிறது.

இந்த மிட்டாய்ச்
சின்னம் அன்றி
வேறு வடிவிலோ
வேறு ருசியிலோ
மிட்டாய் இருந்தால்
சட்ட விரோதம்.
சித்தாந்த அபினியின்
இல்லாத எதிர்காலம்-
பாமரச் சிறுநெஞ்சில்
திரைப்படமாய் விரிந்து
வசக்கும் கட்சியின்
அற்புதப் பிரசாதம்.
'நேக்கு நேக்கு' என்று
கைநீட்டிப் பெற்ற
குழந்தைக் கூட்டங்கள்
நக்கிச் சுவைக்க,
நாவில் ருசி
வெற்றுச்சொல் ஆயிற்று.
'கசக்குதே' என்று
கண்டு பிடித்தோர்க்கு
'கசப்பே இனிப்பு' என்ற
கல்வி  கிடைத்தது.
குழந்தைகள் யாவர்க்கும்.
முறைப்பே இனிப்பின்
வியப்பு என முகமும் மாறிற்று.

விழாவின் ஒருபுறத்தில்
பழைய கோவிலா?
கட்சிச் சின்னத்தை
நக்கும் கும்பலுக்கு
கோவிலேன்? கோவிலும்
அசல்கோவில் அல்ல,
கமிஸாரியேட் கலந்த
கூழ்கலைக் கட்டிடம்.
பிள்ளையார் கோவிலில்
பிள்ளையாராக
புரட்சித் தத்துவ
சிந்தாந்தியின் சிலை.
கோபுரமீது
ஓர் ஆயிரம்
நாயன் மார்களின்
வண்ணச் சுதைகள்
ஒருவர் தோளிலே
வெண்ணிறப் பூணூல்.
மீதிப்பேர் தோள்களில்
கறுப்பு நூல் சிவப்புநூல்
கலந்த புது நூல்.
'அறுபத்து மூவர்
ஆயிரவரானது
எப்படி?' என்றேன்
'ஒவ்வொரு சுதையும்
ஒவ்வொரு ஜாதி.
ஆயிரம் உண்டிங்கு
அத்தனை பேரையும்
புதுயுகப் புரட்சியில்
நாயனார் ஆக்கினோம்.
ஜாதியை விடாத
மாபெரும் புரட்சி.
ஆயிரத்து
ஒண்ணா நீ?
ஆபிஸில் போய்
ஆளைக்கேட்டு
கோபுரத்திலே
ஏறப் பார்' என்றார்.
கருப்பு நூல் புது நூல்
அணிந்த ஒருவர்.
'உன்ஜாதி என்ன?' என்று
என்னைச் சூழ்ந்து
கேட்டது ஒருகும்பல்.
குரல்ஒன்று கனைக்க
கும்பல் பிரிந்தது
காணாமல் எனைக்கண்டு
முன்வந்தார் ஓர்
கட்சிலட்சிய ஜட்ஜு
'கோவிலுள் கோவிலுள்'
என்றென்னைச் சுற்றி
வளைத்தது திருக்கும்பல்
கூட்டம் குவிய
கோவிலுள் மட்டும்
வழி விரிய
உள்ளே திரும்பினேன்.
கமிஸாரின் சிலையே
கடவுளாய் நிற்குமென்ற
எதிர்பார்ப்பை ஏய்த்து
நின்றார் சிவனார்.

கர்ப்பக் கிருகத்தில்
ஒருகால் தூக்கி
அகஇருளின் குறியீட்டை
உதைத்து விரட்டும்
ஜடவாதப் புரட்சியின்
மெர்குரி லைட்மினுக்கில்
அசல்தனம் பூராவும்
அப்படியே விளங்க
ஆட்டம் உறைந்து
அசடான கோலம்.
அடுத்த அசைவை
நிகழ்த்தும் கலைஞனின்
வீர்யம் இழந்து
போன வெறும்போஸ்
கையில் சூலத்தின்
மூவிலையைக் காணோம்.
பிடிக்கு அடங்காத
உலக்கைதான் நின்றது.
உற்றுப் பார்த்தேன்,
சூலமே அல்ல.
ஐ.ஸி.பி.எம்.
போல இருந்தது.
நெருப்பு எழுந்தகையின்
விரல் ஒன்றிலிருந்து
ஆடித்தொடங்கியது
ஆயில் டின்.
மானிருந்த கையில்
கைக்கு அடக்கமாய்
கலர்கள் மலிந்ததாய்
கமிஸார் நடித்த
சினிமா விளம்பரம்
உடுக்கை கிழிந்து
ஒலிபெருக்கி ஆயிற்று.
பாம்புகள் கேபிள்கள்;
நெற்றிக் கண்
ஓவென்று திறந்த
எலக்ட்ரானிக் கண்ணாகி
கோவிலில் நடப்பதை
கமிஸாருக்காக
ஒற்றுப் பார்த்தது.

ஜடையிலே பிறைஇப்போ
கட்சிச் சின்னத்தின்
உருவிலே பாதி - ஓர்
குழாய்வேலைப் பாட்டின்
திருவருளால் ஜடைவழியே
புனித குளோரின்
கலந்த கங்கை
புறப்பட்டு ஓடியது.
போனது போக
முகமும் உருவமும்
மொத்தக் கணக்குக்கு
மாறவும் இல்லை.

V.  சர்ஜரி

சித்தாந்த கோதமரின்
தவச்சிரிப்பாய் ஏறம்
இதழோரச் சிறகுகளை,
கொலைக்கருவி தாங்கிய
காட்டாள் கடவுள்
இரவல் வாங்கி,
தர்மச் சக்கரமும்
ஸ்வஸ்திகமும்
சென்றிணைய
நடராஜ வடிவத்தில்
உடல்ரூபச் சக்கரம்.
விபரக் கணக்கில்
வித்யாசம் உண்டு.
இருந்தாலும்
புதிய சிவனல்ல,
கட்சி லட்சிய
ஜட்ஜுகளின்
சித்தாந்த சர்ஜரியில்
ஆபரேட் ஆகி
புதுப்பிக்கப் பட்டஅதே
பழைய பரமசிவம்.
இருந்தாலும்
இதழோரத்தே நிகழும்
அற்புதம் மறையவில்லை.
சித்தாந்தக் கத்திகள்
கபடாக்கள் எதற்கும்
எட்டாமல் நிலவும்
வெட்டவெளிப் புன்னகை.
எளிமையின் சிகரத்தை
எட்டிய குறியீடு
புலைக்கண் பார்வைக்கு
தட்டுப்படாமல்
தப்பித்த ரகஸியம்.
தட்டுப் பட்டாலும்
புன்னகை என்ன
கயிறா திரிக்க?-என்
சிந்தனையைக் கலைத்தது
கனைப்பு ஒன்று.
திரும்பிப் பார்த்தால்
திருவாளர் ஜட்ஜு
'ஆபரேஷன்
ஆச்சா?' என்றார்.
'அறுத்து விடுங்களேன்'
என்று சிரித்தேன்.
சிரிப்புக்கு முறைத்து
என்கண்ணை நேரே
தன்கண் பாராத
பவிஷுப் போஸ்கொடுத்தார்.
'உன்பெயர் எம் பதிவேட்டில்
உட்கார்ந்து நாளாச்சு.
கருணாகரக் காவல்
தொழிலாளர் கூட்டமொன்று
உன்னைப் பிடித்து
தொழுவத்தில் கட்ட
தயாராக இருக்கிறது.
பறக்கமுயன்றாலுன்னை
காக்கை சுடுவதுபோல்
க.கா.தொ. கூட்டத்துத்
தோழர் சுடுவர்
ஜாக்கிரதை' என்றார்.
பழைய நண்பரின்
புதிய குரல்
துருப்பிடித்து ஒலித்தது.
'கருணாகரக் காவல்
தொழிலாளர்
கூட்டமென்றால்
என்ன?' என்றேன்.
'சித்திர வதைசெய்யும்
சிப்பந்திகளுக்கு
சூத்திரமான குறி!
வெளிநாட்டு நிருபருக்கு
விஷயத்தைத் தலைகீழாய்
காட்டும் கலையில்
விளைந்த பெயர்.
அந்தக் கலைக்குழைக்கும்
தொழில்கவிதை'
என்றுரைத்தார்.
கொஞ்சம் நிசப்தம்;
நெட்டுயிர்த்தேன் நான்.
உடனே ஜட்ஜு
'கவிதையின் முதல்மூச்சு.
சிவனார் சேர்ந்தகட்சி
நமது கட்சி' என்று சொல்லி
அவன் நின்றதிசைக்கு
ராணுவ பாணியிலே
அடித்தார் சல்யூட்.
கால்விறைத்தார்
கைவிறைத்தார்
வலது கைமடித்தார்
நெற்றியிலே புறங்கையால்
அடித்தார். அந்த
லட்சணத்தைப் பார்த்து
வாய் பிளந்தேன். அங்கே
பக்தர்கள் யாவரும்
சல்யூட் அடிக்கும்
விபரமும் கண்டேன்.

'பழைய சிவன்  நமது
உருவெளித்
தோற்றமென்றாய்.
புதிய சிவன் இவன்
உருவோ ஜடம்
அடி சல்யூட்'
என்றார் ஜட்ஜு
அவரது ஆணையில்
நாற்புறமும் நின்றோரின்
சல்யூட்கள் தான்
சடசடத்துப் பொழிந்தன.
'உன்சல்யூட் விழவில்லை.
எனவே நீ
அன்றும் நாஸ்திகன்
இன்றும் நாஸ்திகன்.
அன்றைய நாஸ்திகன்
அலையலாம் ஆனால்
இன்றைய நாஸ்திகன்
அழியணும்' என்றார்.
இந்தக் களபேரத்தை
சிவனின் நெற்றிக்கண்
ஒற்றுப் பார்த்தது.
புதிய ஒரு
குரல் கேட்டது.
'தப்பிக்க வேண்டுமென்றால்
கமிஸாரின் கருணைக்கு
மனுப்போட்டுப் பாடு, ஒரு
நவீன தேவாரம்.
உன்னை மன்னித்து
பைல் பைலாக
க.கா.தொ.கூ. க்கள்
கூடி எழுதிடுவர்.
யாவற்றுக்கும்
கமிஸார் ஸீல் விழவும்
கவிதைகள் என ஆகும்.
ஆனால் திசையற்று
நடை போடும் உன்சிறகை
உருவி எடுத்திடுவர்.
உண்மையின் குற்றங்கள்
மலியாமல் காக்க
மார்க்கம் அது.
பின்பு நீ
அவ்வப்போது சில
அரங்கங்களிலே
பறப்பது போல
எகிறிக் குதிக்கும்
புரட்சி யுகக்கவி' -
பேசியது
சிவன் நின்றதிசையின்
யந்திரக் குரல் -
கமிஸாருக்குக் கட்சிகட்டும்
கடவுளின் திருவாக்கு!
'சிறகை உருவி
எடுத்து உதவுங்கள்
அது மீண்டும்
முளைக்கும் இயல்பை
உணர எனக்கு நீர்
உதவியதாகும் - ஆனால்
உண்மையின் இயல்பு
குற்றமா?' என்றேன்
'உன்னுடைய இயல்புக்கு
பிரதி பலனில்லை
உண்மைக்கு எங்கும்
உபயோகம் இல்லை'
என்றார் கடவுள்!
அவர் உதிர்ந்த நவமறையில்
என் இதயத்துள் சிறகதிர்ந்து
கெக்கலிப்பின் கூத்து.

ஜட்ஜின் கண்ணும் என்
கண்ணும் சந்தித்த
அக்கணத்தில் அவருள்ளே
எண்ணில் அடங்காத
இன்பத்தின் கூத்தொன்று,
அவரே உணராஓர்
இருளில் நிகழ
நானே அவரானேன்.
ஜட்ஜு திடுக்கிட்டு
முகந்திருந்தி முகம்திருப்பி
சிவன்கண் எட்டாத
தூண்மறைவில் எனைஅழைத்து
குரல்தாழ்த்திக் கிசுகிசுத்தார்
“நாஸ்திகன் ஆனாலும் உனக்கு
உள் விஷயம் புரிந்திருக்கும்
அந்த பழைய
பரமசிவனாருக்கு
வலப்புறமாக அன்று
சுற்றி வழிபடும்
வளமுறை ஏன்?”

“எனக்குத் தெரியாது”
என்றேன், “எனினும்
ஊகித்துச் சொல்கிறேன்;
ஆநந்தம் பிறப்பது
இதயத்தின் வலத்தேயாம்
ரத்த பிண்ட
ஸ்தூல ஹ்ருதயத்தின்
வலப்புறத்தே தான்
சத்ய சொரூப
நர்த்தன ஹ்ருதயம்
என்று வதந்தி.
அதனையே
இறைவனாகக் காண்கின்ற
குறியீடுதான்
வலத்தை அவனுக்கு
வைத்தபடி சுற்றிவரல்.
அந்த இதயத்தின்
இயல்பை இது
இடத்தே கிடந்து
தன்னதாய் பாவித்து
காலத்தைக் கணக்கிட்டு
எகிறிக் குதிக்கிறது.
இன்பவெளியில்
பறக்க நினைக்கிறது.
அதுதான் பறக்கும்; இது
கடன்பெற்ற இன்பத்தை
அதை இழந்த துன்பத்தை
காலத் திரைத்தூசித்
துகள்களைக் கணக்கிட்டு
களைத்து இறக்கும்.
இதுவும் வதந்தி,
வணக்கம்” என்றேன்.
நகர முயன்றேன்-
மறித்து நிறுத்தி
ஜட்ஜி கர்ஜித்தார்.
“ஹா! அப்படியா?
நமது புரட்சிச்சிவனுக்கு
உதிரம் உண்டு
இதயம் கிடையாது.
இறக்குமதியான பொருள்
'பம்ப்' ஒன்றுண்டு.
இந்த சிவனுக்கு
எதார்த்த இருதயம்
இடப்புறத்துப் 'பம்ப்'
இடத்தை அதற்குவைத்து
அப்பிரதட்சணமாய்
சுற்றுங்கள்.
கைகளைக் குவிப்பது
செயலின்மைக்கு அறிகுறி
சல்யூட்  அடியுங்கள்.
புரட்சியின் புதிய
ஆகமம் இது” என்று
எனக்கன்றி
கூட்டம் எதிலோ
கூறச்செய்த ஒத்திகையாய்
லெக்சர் அடித்தார்.
“என்னுடன் வா உன்
சிறகைப் பிடுங்கி உன்னைச்
சீராக்க வேண்டும்” என்றார்.


VI.கர்ப்பம்

கோவில் மணியை
அடித்தார் ஜட்ஜு
நிலவறை திறந்தது
தரிசனம் தந்தனர்
தடியர்கள் இருவர்.
தரதர என்றென்னை
அதல பாதாள
ஆஸ்பத்திரி ஒன்றுக்குள்
இழுத்துச் சென்றனர்.
அங்கே
அவர்கள் விழிக்க
நானும் வியக்கஎன்
சிறகைக் காணோம்.

கோவிலில் தேடி
நிலவறைப்படிகளில் தேடி
எக்ஸ்ரேயை ஏவிஎன்
உடலுள்ளும் தேடினர்.
போன தடம்விட்டு
சிறகு பறக்குமா?
“காற்றில் உதிர்கிற
பழைய இலைபோல்
அலைந்து அகன்றிருக்கும்.
மீண்டும் முளைக்கலாம்.
அதுவரை ஆளை
சிறைவார்டில் வை”
என்றார் ஜட்ஜு.
சிறகு முளைத்தபின்
வேரோடு சேர்த்திழுத்துப்
பிடுங்கி
ஆராய வேண்டும். இது
ஆகிவரும் உலகத்தை
அழிக்கின்ற
வெட்டுகிளி வர்க்கமா
இடையன் எறும்பா
இறகு முளைத்த
கரப்பானா?
கண்டு பிடித்து
கன்னா பின்னாஎன்று
சிறகு முளைத்து
சிரமம் கொடுக்காத
சமுதாயம் உருவாக
அழிவு மருந்து
ஆயத்தம் வேண்டும்என்று
எதிர்கால வம்புகளை
அளந்தனர்,
தீர்க்க தரிசன
தத்துவ சித்தாந்த
சர்ஜரி படித்தசில
நிபுணர்கள்.

எனக்கு உணவு
செல்லவில்லை
துயிலும் தவறியது.
நரம்புகள் யாவும்
அடிக்கடி சிலிர்த்தன.
துயிலைக் கிழித்தது ஒரு
கதவுச் சிறகு.
நடுஇரவில்
கழுகுகளின் விண்படைபோல்
எனைமேவி
நதியொன்று பாய்ந்தது.
 விழித்து எழுந்தது
சிறு குழந்தை
ஆன உணர்வு.
இருந்த இடமே
மெத்தென் றிருந்தது;
உடல்வாழ்வு மாறியது.
டாக்டர்களோ
‘புரட்சிக்குத் தேவாரம்
பாடு” என்று கத்தினர்.
வக்கரித்து
தந்தமும் நகமும் நீட்டி
கெக்கலித்தனர்
டாக்டர்களுள் ஒருவர்
சித்திரவதையுடன்
சிகிக்சையும் செய்கிற
சிநேகிதரானார்.
திடீரென்று ஒருநாள்
நிலவறை நீக்கிஎன்னை
தெருவுக்குக் கொண்டுவந்தார்.
ஒருவீட்டின் உள்ளே
பழைய ஸ்டைலில்
வெண்பூணூல் தரித்த
மனிதர்களை வரவழைத்து
பந்தி எடுத்து எனைஇருத்தி
இலைபோட்டு அமுதளித்து,
“சாப்பிடு இது
சூத்திரர்களுக்கு
கிடைக்காத கவுரவம்.
உன்னுடன் சாப்பிட்ட
பாவத்தை
பூணூல் மாற்றி
அகற்றி விடுவோம் நாம்.
புதுப்பூணூல் கூட்டம்
அறியாத நுட்பம் இது.
மந்திரங்களிலே
இருக்குது தந்திரம்.
இன்றுனக்கு இவ்வமுதம்
அபூர்வ கவுரவம்.
உனக்காக நாம்செய்யும்
டெம்பரரிப் புரட்சி. நீ
வழிக்கு வந்தால்
அடிக்கடி இந்த
புரட்சி இலைகிடைக்கும்”
என்றார் டாக்டர்.
இதுகேட்டு
“இரைஇலை போட்டு
கவிதைமீன் பிடிக்கும்
ஒரிஜனல் குப்பமா?”
என்று வியந்தேன்.
பொறுமை காட்டி
டாக்டர் சொன்னார்.
“அன்று நீ
கருப்பு நூல் சிவப்பு நூல்
புதுப்பூணூல் கார
சூத்திர ஜட்ஜுக்கு
வலப்புறம் இடப்புறம்
என்றேதோ
விளக்கம் கொடுத்ததை
கோவிலில் உள்ள என்
ஒற்றன் சொல்கிறான்.
ஜட்ஜும் நானும் ஒரு
கலாச்சாரப் புரட்சிப்
பதவித் தலைமைக்கு
போட்டி இடுகிறோம்
உள்கட்சிப் போராட்டம்.
உன் விளக்கம் கேட்டஜட்ஜு
லெக்சர்களில் புதுசுகளாய்
அவிழ்த்து விடுகின்றார்.
எனக்கு நீ ஒரிஜினல்
பூணூலை விளக்கு” என்றார்.
“இதோ பூணூல்கள்
இவர்களைக் கேளுங்கள்”
“இவர்களில், இப்படி
இவர்களில் எத்தனையோ
ரகங்களைக் கேட்டாச்சு,
இரண்டாம் பிறப்பின்
அறிகுறி என்பர்.
உடலாய்ப் பிறந்த பின்
ஆத்மாவாய்ப் பிறந்தோம்
அதைக் குறிக்கும் என்பார்கள்.
நானும் அது அறிவேன்”
என்றார் டாக்டர்.
இரண்டாம் பிறப்புக்கு
இடுப்பிலே கையிலே
கழுத்திலே இல்லாமல்
தோளிலே நூலேன்?
பொருளற்று வரட்டுப்
புதிர் என்று தள்ளாமல்
பிரச்னை ருசிக்க
வியந்து மௌனித்தேன்,
விளக்கம் வெளியாச்சு.
“பிறவிபெற் றுதித்த
கணத்தில் சிசுவின்
உடலைச் சுற்றியுள்ள
தொப்புள் கொடியுமக்கு
தெரியும்...?” என்றேன்.
“சொல் மேலே சொல்லு
சொல்” என்றார் டாக்டர்.
“நான்’ ஆகப்பிறந்து பின்
‘தான்’ ஆகப் பிறப்பது
இக்கணத்து மின்னலின்
தரிசனப் பிழம்பிலே.
அந்த மின்னலே
இதயத்தின் குழந்தைமைக்கு
தொப்புள் கொடியாகும்

ஆனால்
பரம்பரைச் செருக்கை
பவித்ரமாக்கும்
ஜாதிவாதிக்கு
இக்கணம் ஏது?
எனவே -
அவனது தோளில்
பழமை புழுத்து
வழியும் சீழ்நூல்
பூணூல்” என்றேன்.
விளக்கிய முடிவில் என்
வயிறு குமட்டியது.
புரட்சி இலையில்
வாந்தி விழுந்தது.
பிரக்ஞை கழன்றது
விழித்தேன் மீண்டும்
நிலவறைச் சிறையில்.
அன்றிரவே ஜட்ஜு வந்தார்.
க.கா.தொ.கூ.
தோழரும் ஒருவர்
கூடவே வந்து
நோட்டம் விட்டார்.
“டாக்டருக்கு தந்துவிட்டாய்
ஏதோ விளக்கம்.
கூட்டத்தில் அவிழ்க்கிறார்
புதுப்பூணூல் குழுவை
கவிழ்க்கும் கருத்துக்கள.
மறுக்காதே எனக்கு
ஒற்றர்கள் எங்கும் உண்டு.
மேலும் -
அவர்கருத்தில் உன் கவிதை
வாடை அடிக்கிறது.
நாளை உனக்கு
க.கா.தொ.கூ. வின்
சித்திர வதைச்சாலை.
சிறகின் ரகசியம்
அறிவோம் நாம்.
ஜடத்தை மீறி எந்த
ஜாலமும் கிடையாது.
எலும்பு முளைத்து
எழுந்தால் சிறகு!
பார் எங்கள் கட்சியிலே
எத்தனை எலும்புகள்!”
என்றார் ஜட்ஜு.
கட்சி மட்டுமே
பத்திரிகை நடத்தலாம்
என்ற புதுவிதியில்
வெளியான காகிதங்கள்
கட்சிச் சின்னம்
மீசைகள் பற்கள்
கமிஸார் படங்கள்
மேடையின் மீது
கணுக்கால்களிலே
ரெக்கைகள் விறைத்து
உயிரற்று உறைய
போஸ்கள் கொடுத்து
புன்னகைப் பல்லணிந்த
நபர்கள்.
‘கவிஞர்கள் அல்லர் இவர்
கொக்குகள் போலிருக்கு.
ஓடு மீன் ஓடி
உரு மீன் வந்த்தும்
கொத்தி விழுங்குவோர்.
சிறகும் எழ
ஒட்டுவேலை
வெற்று ஜடம்.
மேலும் மெய்ச்சிறகு
எச்சில் இலைக்கு ஆடும்
நாய்வால் அல்ல.
கவிதை எழுத
வாழ்வினூடே
ஓடும் தர்க்கத்தின்
இழையை உணரும்
திறன் வேண்டும்.
அதன் விளைவு
தார்மீக உணர்வாகி
வீர்யத்தின் உலையில்
உருகிப் பிழம்பின்
நிலையை எய்திப்பின்
எழுத்தில் வர வேண்டும்.”
என்றேன் நான்.
க.கா.தொ.கூ.
முறைத்து முகம்சுளித்து
சிந்திக்கத் துவங்கினார்.
“வீர்யமா?
தார்மீகமா?
இன்னொரு ‘ர்’ எழவு
எனன அது?
தர்க்கமா? இதெல்லாம்
எமக்குத் தெரியாது.
வேண்டுமட்டும்
கிடைக்கிறது
வெளிநாட்டு ‘ர்’ ஒன்று
சர்ர்ர்...ரியலிஸம்”
குறுக்கே விழுந்தார்ஜட்ஜு.
“அதாவது அந்த இஸம்
எங்கள் தத்துவத்தை
அனுசரிக்கும் கலைக்கொள்கை.
எங்களுக்குக் கொஞ்சம்
எக்ஸிஸ்டென்ஷிய
லிஸமும் வரும். அந்த
சிவனையே வசக்கி
தொழுவத்தில் கட்டிவிட்டோம்
இவை எல்லாம் என்ன
பிரமாதங்கள்” என்றார்.
எதையோ உளறிவிட்டு
திருதிருவென விழித்த
கருணாகரக் காவல்
தொழிலாளர் இப்போது
கவிதைச் சரம் தொடுத்தார்.
“நாங்கள் நெருப்பர்கள்.
மனிதாபி மானத்தில்
புஷ்பித்த பிம்பங்கள்.
பசியே இல்லாத
பார் ஒன்றைப்
படைத்த தடியர்கள்”
என்றார் பின்பு
“ஒரு திருத்தம் உண்டு.
இறுதி வரி ‘படைத்த
ஓடுகால் மனிதர்கள்’ -
ஊஹூம் சரியில்லை” -
அவர் தயங்க நான்
““படைத்த மடையர்கள்’
என்பதாய் திருத்துமேன்”
என்று கை கொடுக்க
பிரசவ வேதனை
தீர்ந்த திருப்தியில்
“தேவலை! ஆனால்
எங்கள் கவிதைகளை
திருத்த உனக்குஇன்னும்
கார்டு கிடைக்கவில்லை
ஆனாலும் உனக்கு
அடுக்கு மொழி வருகிறது”
என்று சிரித்தார்.
“கட்சித் தலைவர்கள்
பிரிஸ்கிரிப்ஷன் செய்த
கனவுகளை மட்டும் கண்டு
கண்கள் சரியான
கபோதிக் கவிஞரே
வணக்கம் ” என்றேன்.
“அன்றைக்கும் இன்றைக்கும்
ஓயாது நீடிக்கும்
பசியின் தகவலை
திசைகள் அறியாமல்
கருவருக்கும் புலையரே
வணக்கம்” என்றேன்.
“எனினும் ஒருகேள்வி.
கரித்துண்டு ஒன்றுக்கு
சிவப்புக் கலர்தோய்த்து
நெருப்பின் பெயரை
இட்டுவிட்டால் என்னஅது
சுட்டுப் பொசுக்கிடுமோ
இல்லை வெறுமே
சிவப்பாய்க் கிறுக்குமோ
சொல்லும்'” என்றேன்.
‘ஹா,  ஹா! கிறுக்கும்
சிவப்பாய்! ஹா,  ஹா! ”
என்று க.கா.
தொ.கூ. சிரிக்க
“நாளைக் காலை
ஆளை அங்கே
நகர்த்து!” என்று
ஜட்ஜு கத்தினார்.
க.கா.தொ.கூ.
கப்சிப் ஆனார்.
“தரையில் ஊர்ந்து
அலைகின்ற தம்பிகளே,
சிறிது பறந்து விட்டு
தொப் என்று விழுகின்ற
அண்ணாந்தைக் கோழிகளே
வணக்கம்” என்று
வழியனுப்பி வைத்தேன்.


VII.  ஜனனம்

நிகழ்ச்சித் திரை மறைவில்
நிகழும் ரகசியத்தை
சிந்தனை தொடர்ந்து
தீண்டத் தவித்து அதன்
முயற்சிக் கதிர் உருகி
வெளியாய் விலகிற்று.
அழுகையின் விளிம்பில்
பிரக்ஞை பெருகிற்று.
எந்த நிலையில் இக்
கணத்தில் இருந்தாலும்
அக்கணத்தில் அதுமெய்மை,
அடுத்த கணம் என்ற
கனவற்ற பிரக்ஞை,
எதிர்பார்த்து எதிர்பார்த்து
இக்கணத்தை இழக்கும்.
உயிர்ப்புச் செலவின்றி
திரண்டது அகத்தீ,
தீயும்
வைரநூலாகி
மின்னி எழுந்தது.
இருளின் கபாடத்தில்
இடியோசை ஓடிற்று.
இதயத்தில் மௌன
லயத்தில் மிதந்து
கொப்பளித்து
எழுந்தெழுந்து
கூத்தொன்று கூடிற்று.
கடந்த கணங்களின்
ஞாபக மந்தை
இக்கண உணர்வின்
வெறுமையில் பொழிந்தது.
நடு இரவில் என்
மடியிலோர் உயிர்உருவம்.
கன்னங் கரிய
குழந்தை ஒன்று.
என்மடியில் இருந்துஅது
பெரிய விழிஉயர்த்தி
வாய்இதழ் மடித்து
வவ்வவ்வே காட்டியது.
எட்டிஎன் முகத்தை
பிறாண்டியது.
'சித்திரவதை செய்யும்
சின்னஞ்சிற
க.கா.தொ.கூ.
யார் நீ?' என்றேன்.
குழந்தையோ விருட்டென்று
மேஜையின் மேலேறி
காகிதங்களை அள்ளி
அறைஎங்கும் வீசிற்று.
பேனாவை எடுத்து
சுவர்மீது அறைந்துடைத்து
சிதறிய இங்கி
இருளைக் காட்டிற்று.
'கமிஸாரின்
கடைசிப் பட்டாளம்!
விட்டேனா பார் உன்னை!'
என்று எழுந்தேன்.
குழந்தை நிலத்தில்
குதித்து விழுந்தது.
வலித்து அழுதது.
'அச்சச்சோ' என்றேன்.
அணைக்க ஓடினேன்.
பிடியில் வெளியாய்
நழுவிய குழந்தை
எழுந்து ஓடிற்று.
வெளித்தாள் இட்ட
அறைக் கதவு
என்னைவிட்டோடும்
குழந்தையின் கைதீண்டி
பூட்டின் வில்தெறித்து
விலகிவிழக்கண்டேன்.
.குனிந்து எட்டித்
தொட்டுவிடும் தூரத்தில்
குழந்தையின் பாதத்துடிப்பு
ஈர்க்கத் தொடர்ந்தேன்.
வேகம்கூடி
ஓடினேன் தொடர்ந்து.
குழந்தையின் குடுகுடு
கதிமாறாக் குறுநடையோ
எனைமீறி ஓடிற்று.
வெறிச்சோடிக் கிடந்த
நடுஇரவின் கூடம்,
நிலவறைப் படிகள்.
பின்முன் எங்கும்
காவல் முகமற்ற
கணங்கள் வழிதர
குழந்தையின் கைதீண்டி
கதவுகள் மாயத்
திரைகள் போலகல
விடுதலை! வெளியே
குழந்தையைத் தேடிய
திசையெங்கும்
இருள் அழுது
பகலாயிற்று.
பகல் சிரித்து
பார்த்த இடமெங்கும்
சிசுவாயிற்று.
எதிரே வளர்ந்து
ஓடிற்று என் நிழல்.
பசித்த துன்பமும்
கேட்டு வாங்கி உண்டு
பசியகன்ற இன்பமும்
அன்று வேறு
சுகதுக்கம் ஏதுமின்றி
எங்கேஎன் ற்றியாது
நடந்தேன்.
போலிப் பூக்களாய்
வெளிறி எரித்த
நகரின் விளக்குக்
கும்பல்கள் நீங்க
கிராமங்கள் கடந்தேன்.
இரவின்
புதிய மறுமைகள்
கணந்தோறும்
அறுவடை ஆகி
கணந்தோறும் விளையும்
விண்வைரப் பண்ணையில்
சில்லென்று பூத்தன.
வா, வா என்றன.
ஒரு இரவு,
நாய்கள் தொடர்ந்துவிரட்ட
சந்தேகக் கண்கொண்ட
காவலர்கள் சிலர்
வாய்பேசாத என்னை
கைது செய்து விசாரித்து
ஊமைதான் என்று
முடிவு கொண்டனர்.
ஊரெல்லைக்கு அப்பால்
அடித்து விரட்டினர்.
ஓயாத தூரத்து
ஹூங்காரமாக
யாதோ ஒன்றன் கர்ஜனை
சிதறி எதிரொலித்தது
புலன்களை ஊடுருவி
அழைக்க நடந்தேன்,
ஒரு யாமம்.

நான் நின்ற இடம்
கடலோரம்.
கடல்
அலைவரிசை
முன்கொணர்ந்து
தீண்டியதும் என்னூடே
இடியொலி பாய்ந்தது.
கணுக்கால்கள் பிளந்தன.
சிறகுகள் பிறந்தன.
வெட்ட வெளியை
தொட்டுச் சிலிர்த்தன.
கடலின் மேலே
அலையை ஈர்த்துப்
படர்ந்த வெளி
பிறந்த சிறகுகளை
ஊடுருவிற்று.
இரவு ஒரு கோடி
ஒன்பத்து முக்கோடி
நக்ஷ்த்ரத் தேர்களை
அதீத வியூகமாய்
தொடுத்து முடுக்கி
யாத்திரை மேற்கொண்டு
வா, வா என்றது.
என் உயிரின் குருத்து சிரித்தது,
சிறகு படபடத்தது
மின்னி மறைந்தது.
உடன்
ஏதோ என்னை
ஊடுருவிற்று.
பாதங்களிலிருந்து
இடைக்குப் பாய்ந்தெனது
காம உணர்வின்
விருக்ஷ வேர்களை
வீசி அறுத்து
களைந்து எடுத்துயர்த்தி
இதயத்தில் பொறிவிட்ட
சுடர்க்கூத்தில் அவ்வுணர்வை
பொழிந்து நெருப்பாக்கி
கோள உருவெடுத்து
ஒரு மின்னல் சுற்றிற்று.

திசைக்கிளை முழுதும்
இலைத்தீ முகங்கள்
திசைகள் முறிய
வீசின திவ்ய
வெறிகள் வைரச்சிறகுகள்
குரல்வளையின்
ஜடமுடிச்சில்
பதுங்கும்  கபந்தம்
மறுவீச்சில் முடிச்சறுந்து
திசைமுகம் முழுதும்
ஒருமுகமாய் உதிர
பரந்து எழுந்ததது.
என்னறிவைவிட
எண்ணொணாக்
கோடிமுறை
பெரிதான அறிவுவெளி.
உடல் கிழிந்து
திரைச் சேலைகளென
அகன்று உதிர்ந்தது.
உயிர் வெளியின்இக்
கணம் நிலைத்து முழங்கி
திசை எங்கும் பொழிந்தது.
வேறொரு வெளியில்
கீழே அலைந்தது கடல்.
அலை விளிம்பில்
கிடந்தது உதிர்ந்து
ஏதோ ஒரு உடல்.

பொழுதின் வசிய
வலை வெளிமீது
படர்ந்து எரிந்து
பொசுக்கி நீறாக்கி
காலத்தின் அச்சுச்
சாலைச் சரித்திரங்கள்
பாரம்பரியப்
பவித்திர ஞாபகங்கள்
யாவற்றின் மீதும்
பற்றி எரிந்தது
மூலிகைப் பேரொளி.
ஒளியின் நெடியில்
புண் கண்ணாயிற்று.
கண் கருணையின்
ஊற்றாயிற்று.
நேற்றற்று நாளையற்று
நிகழ்கால வினையாக
உயிர்த்தது 'உள்ளல்'
உனக்கும் எனக்கும்
இடையே நிமிர்ந்த
காலங்கள் தலைகவிழ
வாடாத புத்துணர்வின்
மொக்கு முளைத்தது.
காலா காலங்கள்
எத்தனை ஆனாலும்
ஓயாது உணர்வின் இப்
புத்தொளி நரம்பு
ஊடுருவும் பேருறவு.
இதயத்தின் அணுத்தொகுப்பில்
அண்டத்தின் பெருநிகழ்வு.
கணத்தின் மொக்கவிழ்ந்தால்
காலாதீதம்.
புவனத்தின் நிகழ்ச்சித்
திகிரிக்கு மலர்அச்சு.
பிறிதில் பிறனில்
தன்மயமாய் எழுந்து
அசைந்து அசையாது
வீசும் திகிரியின்
நிச்சலனப் புயல்மூச்சு,
எங்கும் உணர்வின்
நீங்காத பெருந்திசைகள்.
பளிங்கு நீர்வெளியில்
ஆநந்தத் தீக்குதிப்பு.
இதயத்தின் துடிப்பு அதில்
பொறிக்கூத்தாய் எழ, அந்த
அணுமயக் கணநடிப்பும்
அண்டத்தின் காலா
தீதமும் ஒன்றை
ஒன்று ஊடுருவி,
ஒரு பொறி எல்லையற்ற
ஒளியிருள் அற்றஒரு
பெருவெளி தோறும்
அணுமய உயிராய்
அதேகணம் உயிர்த்தது.
மொக்கு
அவிழ்ந்து அவிழ்ந்து
துடித்தது;

நிலைத்தது இக்கணம்.
கணத்தின் மொக்கவிழ்ந்தால்
காலாதீதம்.