Pages

Monday, April 28, 2014

என் பெயர் அதீதன் ... - பிரேதா : பிரேதன் (புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்டமனிதர்களும் ... நாவலிலிருந்து)

(புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்டமனிதர்களும் ... நாவலிலிருந்து)

- பிரேதா : பிரேதன்

என் பெயர் அதீதன்-பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்
நான் பிறந்திருக்கலாம் என யூகிக்கிறேன்


என் உயிர் நுண்மக் கூறுகளை நிர்ணயிக்கும்
எத்தனிப்பில்தான் கிரகங்கள் ஒன்றிலிருந்து ஒன்று
விலகி சென்றிருக்கலாமென்றும் நான் எண்ணுகிறேன்
அகச் சிவப்பு கதிர்களைத் தவிர
வேறு எந்தவகை கதிர்கள் என் கனவுகளை
அடையாளம் காணமுடியும்
எதிர்மின் அணுத்துகள்கள்
என்னுடன் கொள்ளும் பிணைப்புகளுக்கு
என் சொற்களே நிரூபணம்
எனது தாபங்கள் எல்லாத் தனிமங்களையும்
கதியக்கம் உள்ளவாக மாற்றுகின்றன
எனது பின்னங்களை விதவிதமாய் ஒன்றிணைத்து
பெருவெளியின் சாயல்களை தோன்றச் செய்வது
என் பாலியல் கற்பனையின் ஒரு கூறு
என் நரம்பு அணுக்களுக்கிடையில் அமைந்த
ஒளியாண்டுகளாலான இடைவெளியை
கடக்கும் எத்தனிப்பில் மட்டும்
நான் பெருவெளியையும் எனது பயிற்சித் தளமாய்
அமைத்துக் கொண்டிருக்கிறேன்


*

எனது நண்பன் ஒருவன் மேலே இருக்கும்
உலகத்தின் மிக மோசமான கவிதை சொல்லி
போதையில் அழுதான்
நான் அவனைப்போல் கவிஞன் இல்லை
என்றாலும் எழுதுவேன்
அவனுக்கு போதை தேவை
எனக்கு விரகம் தேவை
என்றாலும் இருவரும் செய்வது அழுது தீர்ப்பது
அசிங்கம் பிடித்த வாழ்க்கை
நேசிக்கவும் வெறுக்கவும் எதுவுமில்லை
அனைத்தும் அதனதன் இருப்பில்
உன்னதம் கொள்ளும்


பேசிப்பேசிதீர்த்தல் சுகம்
நிர்ணயங்களை கழிப்பறையில் கொட்டு
உறவுகளைச் சிதைத்துக் கொள்ளியிடு
ஒழுக்கம் என்ற சிறுநீர் கோப்பையில் படிந்த
சுண்ணாம்பை வத்திக் குச்சிகள் தீண்டிச்
செல்லட்டும்
வாழ்தல் என்பது வாழ்தல் மட்டுமே
வேறெதுவுமில்லை-எனது சிதைவுகளிலிருந்து
என்று வருவேன்
மனநோய்ப் புலம்பல் நிஜத்தின் பதிவு
எனது நண்பன் என் அறை எண்
மறந்து திரிவான்
அதற்குள் எனது பெரும் படைப்பு
கிரியையின் நுனியில் இருந்து வெடித்துச் சிதற வேண்டும்

பகுதி  :  மூன்று

ஆய்வுக்கூடம்

அறைக்குத் திரும்பிய நாள் முதலாய்
விளக்கேற்றவில்லை
சன்னலோரம் அமர்ந்து புகைக்கவில்லை
நிழலைப் பார்த்து கையெழுத்துப் பிரதி
மழையில் நனைந்து எழத்து கலங்கியிருந்த்து
போதமின்மையில் நான் தொலைந்துபோனேன்
எனது நண்பன் என்றைக்கும்
என்னைத்தேடி வரமாட்டான்
அறைக்குள் இருப்பது அவனுக்கு வெறுப்பு
என் பெரும் படைப்பை எழுதுதல்
மனநோய் பிடித்த என் நிழலை நானே
புணர்வது போன்ற நிகழ்வு
வெறுமையின் கருத்த அக்குளில்
எனது பின்னங்களை விட்டுவிடுதல் நல்லது
இனி நான் எழுதப் போவதில்லை
என் நண்பன் எழுதட்டும்
என் நண்பனின் நண்பன்
பிம்ப மண்டலங்களைச் சிருஷ்டித்துத் தரட்டும்
என் புதைகுழி தோண்டி
என் அழுகலை மீட்க எத்தனை கணங்கள்
நான் என் அறைக்குள்
கையெழுத்துப் பிரதிகளை எரித்துவிட்டு
உட்கார்ந்திருக்கிறேன்.

*

பகுதி  :  நான்கு

பட்டகம்

மருத்துவ கூடத்தில் எனது அறையில்
கிழித்தெறிந்த இந்தத் துண்டுகளை
என்னைப் பார்த்துக் கொண்ட செவிலிப் பெண்
என் அறைக்கு எடுத்துவந்து தந்தாள்
நான் அழுதேன்
என் தலைகோதி தெற்றியில் முத்தமிட்டு
தானும் அழுதபடி அவள் சென்றுவிட்டாள்
இவற்றைப் பதிவு செய்கிறேன்
என் பிரம்மை பெரும்படைப்பின்
சிதைந்த பிரதிகள்.

******************************************************************
https://www.facebook.com/permalink.php?story_fbid=573349376178724&id=100005110006875
பிரேம் பிரேம்
13 hrs ·

‎Wednesday, ‎June ‎15, ‎2016
வெட்டப்பட்ட கைகள்

ஆதியிலே மாம்சம் இருந்தது (1991)- இது ஒரு நாடக-காட்சி நிகழ்வு. இதனை நான் எழுதி உருவாக்கியது தமிழில்தான்.

நாடக நிகழ்வின் ஒரு பகுதி இது.

பின்நவீனத்துவப் பேச்சைத் தொடங்கிவைத்த நானே இந்த வரிகளை எழுதியதை அன்று பின்நவீனம் பேசத் தொடங்கிய நண்பர்களால் ஏற்கமுடியவில்லை.

இன்று தலித் அரசியல் எனது இருப்பாக மாறியதை ஏற்காத நண்பர்கள் போலவே.

அன்று மாலதி அதை மாற்றாமல் காட்சியில் கொண்டுவரச் சொன்னார்.
காட்சியில் வந்தது, அச்சிலும் வந்தது. இன்று அது நினைவில் வந்தது.காண்க தோழர்களே!

ஆதியிலே மாம்சம் இருந்தது (1991)
காட்சி-3
(திரையில் சே குவேராவின் வரைகோட்டுருவம். அதற்குக் கீழே ஒரு உருவம் உட்கார்ந்து கால்களுக்கிடையில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டிருக்கிறது. பின்னிருந்து குரல் ஒலிக்கிறது.)

நான் தண்டிக்கப்பட வேண்டியவன்.
நான் மனிதர்களை நேசித்தேன்.
ஏனெனில் எனது உயிர்வாழ்தலுக்கு ஒரு அர்த்தம் தேவை.
நான் என்னை நேசித்ததால் எல்லோரையும் நேசித்தேன்.
நான் பிறராக என்னை உணர்ந்தேன்.
என்னால் அமைதியாக இருக்கமுடியவில்லை.
சரித்திரம் கொடூரமாக இருந்தது.
கொலை, கொலை, கொலை.
வாழ்தல் என்பது சில உடல்களுக்கும்
மரணம் என்பது மற்ற உடல்களுக்கும் என விதிக்கப்பட்டிருக்கிறது.
பிறக்கும் எல்லா உடல்களும் வாழும் உரிமை உடையவை என்பதும், எந்த உடலுக்கும் மற்றொரு உடலின் மீது அதிகாரத்தை, அடக்குமுறையை, கட்டளையைச் செலுத்தும் உரிமை இல்லை என்பதும் அடிப்படையானவைகள்.
ஆனால் நிகழ்வது என்ன என்று சிந்தித்த பொழுது நான் அமைதியிழந்தேன்.
சரித்திரத்தின் கொடூரம் என்னைத் தாக்கியது.
அடக்கப்படும் எவருக்கும் தன்னை அடக்கும் அனைத்தையும் உடைத்து நொறுக்கும் அத்தனை உரிமையும் உண்டு என்று எண்ணினேன்.
எதன் பெயராலும் எந்த முறையாலும் அடக்குமுறையும் ஒடுக்குதலும் செயல்படக்கூடாது என்று கனவு கண்டேன்.
உடல்கள் சுதந்திரமானவைகளாக, கட்டற்றவைகளாக இயங்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன்.
எனக்கு முன்னே பலபேர் கூறிய முடிவுகள் எனக்கும் கிடைத்தது.
அடக்குமுறை நிறுவனங்களைத் தகர்ப்பது என்பதுதான் அது.
நான் வன்முறையைத் தேர்ந்தெடுத்தேன்.
உடைத்தல், சிதைத்தல் காலத்தின் தேவை.
வன்முறை என்மீது திணிக்கப்பட்டது.
சரித்திரம் என்மீது சுமத்திய கட்டுகளை எவ்வாறு நான் மீறினேன், நான் என்னவாக எப்படி உருவானேன் என்பது வெளிப்படையானது.
சரித்திரத்தால் நான் உருவாக்கப்பட்டேன்.
எனக்கான மொழியை, என் உடலுக்கான மொழியை நான் தேர்வுசெய்துகொண்டேன்.
நிஜத்தில் இது சரித்திரத்தின் அவலம்.
உலகம் முழுவதும் என்னைப்போல இந்த அவலம் சூழ்ந்துகொள்ளும்.
நான் குற்றவாளி.
எனது வாழ்க்கைக்கு வரையறுத்துத் தரப்பட்ட ஒழுங்குகளை மீறினேன்.
எனது இருப்புக்குச் சொல்லப்பட்ட பழைய அர்த்தங்களை மறுத்தேன்.
பலர் சொல்லத்தயங்கும் ஒன்றை நான் சொல்கிறேன்.
உண்மையான புரட்சியாளன் ஒவ்வொருவனும் அடர்த்தியான காதலினால் இயக்கப்படுகிறான்…
எனது காதல், எனது தாபம் இந்த பூமியின் அத்தனை மனிதர்கள் மீதானது.
எனது ஒழுங்கு குலைந்த இந்த தாபம்
சரித்திரத்தின் வரையறைகள் முன் குற்றம்.
நான் குற்றவாளி.
நான் என்னைத் தண்டித்துக்கொள்ள வேண்டும்.
என் உடலை அழித்துக்கொள்வதின் மூலம் சரித்திரத்தின் குறியீடாக என்னால் மாற முடியும்.
எங்கெல்லாம் உடலின் எல்லைகள் மீறப்படுகின்றனவோ, எங்கெல்லாம் மதிப்பீடுகளின் ஒடுக்குமுறையின்றி உடல்கள் இயங்குகின்றனவோ,
எல்லா உடல்களும் தனக்கானவை,
தான் எல்லா உடல்களின் இயக்கத்திலும் இயங்குகிறோம் என்பது உணரப்படுகிறதோ அங்கெல்லாம் நான் பிறக்கிறேன்.
அங்கெல்லாம் உடல்களாக நான் எழுகிறேன்.
இது ஒடுக்குதல் நிறைந்த சரித்திரத்தின் முன் பெரும் குற்றம்தான்.
நீண்ட இடைவெளிகொண்ட இந்தக் கனவை உடைய, மிகச்சிக்கலான எத்தனிப்பை உடைய நான் பைத்தியக்காரன்தான்.
நான் தண்டிக்கப்படவேண்டியவன்.
நான் மன்னிப்புக் கோருகிறேன்.
என் கைகளைத் துண்டித்து அளிக்கிறேன்.
(சேவின் உருவப்படம் பின் திரையில் மங்கி மறைய- நிறைய கைகளின் நிழல்கள் நெளிகின்றன. அவை மங்கி மீண்டும் சேவின் உருவம், மீண்டும் கைகள், சப்தங்கள்.)
இருள்.
மீண்டும் வெளிச்சம்.
ஒரு ஆண் உருவம் பின்புறமாகக் கைகள் கட்டப்பட்டு குளியவைக்கப்பட்டு கனமான தடியினால் தாக்கப்படுகிறது. ரத்தம் தெறிக்கிறது.