Pages

Friday, May 23, 2014

மாபெருங் காவியம் - மௌனி

மாபெருங் காவியம்  - மௌனிமௌனி


   கிட்டுவின்  காரியம் முடிவடைந்துவிட்டது. அவன் எழுத ஆரம்பித்த  அந்த  “மாபெருங் கவியம்” பூர்த்தியாகி விட்டது. இதற்குப் பிறகு அவனிடம், அவனுடைய  இரண்டொரு சிநேகிதர்கள் , ஒரு பெரிய மாறுதலைக் கண்டனர். அதைப்பற்றி அவர்கள்  எப்போதாவது இவனிடம் குறிப்பிடும்போது கிட்டு சிறிது சிரித்துக்கொண்டே  “ என் வாழ்க்கை ஒரு உன்னத நிழல் ஆட்டம் . ஒளி  குன்றியது . என்னுடைய நிழலும்  பார்வையினின்றும் மங்கி விட்டது . விலகி நின்று உலகநாடகத்தைப் பார்ப்பதுதான் இப்போது நான் செய்வது ...”

  கிட்டுவின் கண்களையும்  முகத் தோற்றத்தையும் தவிர்த்து , அவன் சாதாரணமாகத் தெரிபவன்தான் . அவன் கண்கள் இரு ஞானவொளிச் சுடர்போன்று தோன்றும் . அவைகளின்  பார்வை  ஒரு உன்னத காவியம் . அவன் இழுத்து இழுத்துப் பேசுவதே ஒரு இனிய கீதம்.

   வறுமையில் உழன்ற அவன் வாழ்க்கைக்கு ஆறுதலாக அவன் மனைவி குஞ்சுவும், ஆறு வயதுடைய ஒரு  பையனும் இருந்தனர் . தன்னுடைய வாழ்க்கையை ஒரு இனிய கனவில் கழிப்பதாகவே கருதி அந்த எண்ணத்தில்தான்  அவன் வாழ்ந்து இருக்க முடியும். ஏதோ நடுவில் விதி குறுக்கிட்டு அவனை ஒரு காவிய கர்த்தனாக்கி விட்டது. ஒருக்கால் சிருஷ்டியிலும் வெளி விளக்கத்திலும் அடையும் ஒருகண சாசுவதாம்ச ஆனந்தத்தைக் கொள்ள அவன்  மனது விரும்பியதால்தான் இந்தப் புத்தகத்தை அவன் எழுதினான் போலும் .

    பிரபஞ்ச வெளியில் கட்டுப்பாடியின்றித் தெரியும் பறவை போன்ற ஞான உணர்வைப் பிடித்துக் கூட்டிலடைத்ததுதான் அக்காவியம். சாசுவதானந்தத்தை  வாக்கியத்தில் புதைத்துக் கண்ட களிப்பதில் , கலைஞர்கள் கடவுளுடைய சிருஷ்டி ஆனந்தத்திற்கு ஒப்பானதை உணர்கிறார்கள் போலும். எவ்வகை சிருஷ்டியும் அழிவிற்கு விரைந்து செல்வதாயினும் , அழிவின்றித்தான் அவர்கள் மனதில் அக்கண ஆனந்தம் பதிகிறது.

    வாழ்க்கையின் வறுமை அவனை வெறித்து நோக்குகிறது. தான் புத்தகம்  எழுதுமளவும் ,ஒன்றும் அவனைத் துன்புறுத்தா வகையில் தூரத்தில் கண்ட வெளியிலேயே  அவன் மனம் சஞ்சரித்தது . அது முடிந்தவுடன் பழையபடி  உலக வாழ்க்கை  அவனைத் தன்னிடம் இழுத்தது . சிற்சில சமயம் அவன் மனது துக்கம் அடையும் . “ கனவிலா  உன் வசீகரத்தைக் கண்டேன் . இப்போது விழிப்பின் இருளில் உன் அழகு மறைகிறதோ ? ” எனச் சஞ்சலமடைவான். அப்போது  இரவில் தடுமாறித் தடவும் அசாரீயைப் போன்று அவன் எண்ணங்கள்  தடுமாற்றம் கொள்ளும் ஆயினும் , என்றுமறியாத ஒரு அமைதியை அவன் மனது கண்டது. அதற்கு ஆதாரம்  கொடுப்பது எது என்பதை அவன் ஆராய ஆசை கொள்ளவில்லை . மற்றவைகளைப் போலவே அவன் மன ஆறுதலும் , ஒரு மாயையை அஸ்தி வாரமாகக் கொண்டதாக ஏன் இருக்கக் கூடாது என்ற ஒரு எண்ணம் மட்டும் நிச்சயம் கொள்ளாது அவன் அடிமனத்தில் அமுங்கிக் கிடந்தது போலும் .....

        கிட்டுவின் குழந்தை ராமு நான்கைந்து நாளாகக் கடுமையான சுரத்தில் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருந்தான்.......... கிட்டு , ஒரு கடையில் குமாஸ்தாவாக இருபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் இருந்தான் . சம்பளம் வாங்கியதும் , தன் மனைவி கையில் அதைக் கொடுக்கும்போது ஏதோ ஒரு கேவலச் சந்தோஷத்தில் ஆரவாரிப்பதைப் போல அந்த ரூபாய்கள் கலகலவெனச் சப்திக்கும். அவன் மனைவி கண்களில்  காலதேவனாலும் கொன்றுவிட முடியாத ஒரு புன்னகையின் வசீகரம் காணும் . இவனுக்கோவெனில் வெறும் வருத்தந்தான் . ஏன் தனது மனது மட்டும் சமாதானம்  கொள்ளமுடியவில்லை என்பது ஒரு உருக்கொண்ட பிரச்சனையாகிவிட, அதை அறிய முடியாது திகைப்படைவான் . தன் தலையில் எழுதின வகை......தலை விதியாக்கினவனே போன்று .... ஒரு லேசான சமாதனம் கொள்ளுவான்  . இதெல்லாம் இவன் புத்தகம் எழுதுவதற்கு முன்பு . புத்தக வேலை முடிந்தது; குருட்டுத்தனமாக விதி இவனை எவ்வகை உயர்  காரியத்தைச் சாதிக்கத் தள்ளியது என்று எண்ணுவது உண்டு. ஆனால், அதினின்று அடைந்த உணர்வு மட்டும் விதிக்கு விலக்கியே, தன் உள்ளக் கிளர்ச்சியின் ஒரு ஆனந்தமெனக் கருதினான் . இதற்காகத்தான் ,ஒருக்கால் கடவுள் , விதிவசப்படாது நிற்க எப்போதும் , சிருஷ்டித்து, அந்த ஆனந்தத்தை அடைகிறான் போலும் !

    சாசுவதமற்ற உலக வெளி வெறிப்பும் , அதில் கொண்ட அவன் வெறுப்பும்  மழுங்கிக் கொண்டே அநேகமாக மறைந்துவிட்டது. ஆனந்தத்தைக் கொடுக்கத்தான் குழந்தை இராமுவின்  இரு விழிகள் இருந்தன. மனச்சங்கடத்தின் எல்லையில்  பொருந்தின  இரு சுடர் விளக்காகத் தான் அவ்விழிகள் இவனுக்குத் தோற்றம் . கிட்டிய பக்கத்தை கவலைக் கடலாகக் காட்டினாலும் , மறு பக்கத்தை அச்சுடர்கள் கொஞ்சம் காட்டும்போது எல்லைக் கடந்த ஆறுதலின் இன்பசாகர வெளியை, கிட்டுவால் பார்க்க முடிந்தது.

     குழந்தை சுரத்தில் சங்கடப்படுவதைப் பார்க்க அவனால் சகிக்க முடியவில்லை. சுரவேகத்தில் ஒளிகொண்ட குழந்தையின் கண்கள் , இவனைப் பயம் கொள்ளும்படி செய்தன. அச்சுறுத்தும்படி . ஆள்காட்டிவிரல் போல அவன் போகும் இடத்தைக் காட்டுவதா அக்கண்களின் பார்வை ? அவனால் அவன் குழந்தையீன் முகத்தைப் பார்க்க முடியவில்லை ........

   அன்று இரவு குழந்தைக்குத் தாங்க முடியாத சுரம் . கண்ணயராமல்  கிட்டுவும்   குஞ்சுவும் அறையில் குழந்தையின் அருகில் உட்கார்ந்து இருந்தனர் . நடுநிசிக்கு அப்பால்  குழந்தை கொஞ்சம் கண்களைத் திறந்து  ‘ அம்மா  ’ என்றான். விழித்துக் கொண்டதும், அவனுக்கு மருந்து கொடுப்பதற்காக குஞ்சு மருந்தைக் கொணரச் சென்றாள். கிட்டு எழுந்து மேஜை அருகில் உள்ள நாற்காலிக்குப் போய் விட்டான். மருந்து கொடுத்ததும் வாய்க் கசப்பை மாற்ற  மேஜை மீது இருந்த திராக்ஷைப் பழப் பொட்டலத்திலிருந்து கொஞ்சம் எடுத்து அவனுக்குக் கொடுத்துக் குழந்தையைத் தூங்கச் செய்தாள் . மேஜையருகில் கிட்டுவிற்கு எதிர்ப்புறமாக வந்து நின்றாள். ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்த கிட்டு அவள் வருகையினாலும் திரும்பவில்லை. வெளியே வெகு எட்டிய வெளியே அவன் நோக்கு சென்று கொண்டிருத்தது. ஊர்  ஆரவம் நன்றாக அடங்கி  நிசப்தமாக இருந்தது. பிறைச் சந்திரன் மேற்கு அடிவானத்தருகில்  தேங்குவதைக் கண்டு கொண்டு இருந்தான். ஒரு மங்கிய நிலவில் வீதிகளும் ,வீடுகளும் ,எட்டிய மரங்களும் தெரிந்தன. ஒன்றையும் கவனியாது இயற்கையின் சக்கரம் காலத்தில் சுழன்று கொண்டு இருந்தது. உலகத்தில் மாந்தர்கள் கொள்ளும் மனச் சாயையைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது இப்பிரபஞ்சம் துயின்று கொண்டு இருப்பது கிட்டுவிற்குப் புரியவில்லை. வாழ்க்கையின் இன்ப துன்பம் தன்னுடைய மனத்தில் தான் தோன்றுகிறாதா என்ற ஒரு எண்ணம் கொண்டபோது, ஆறுதலுக்கும்த் தன்னைத்தவிர வேறிடம் தேடுவது மதியீனம் என்பதாக நினைத்தான். உள்ளே அறைப்பக்கம் தலையைத் திருப்பினான். சுவரில் ஆடிய நிழல்கள் இவன் மனதேபோலச் சலித்தன. சிறிய ஒளியில் எதைப் பார்ப்பது என்பதை அறியாதனப்போன்று கண்கள் தாமாகவே குஞ்சுவின் முகத்தை நோக்கின.

மேஜையின்மீது இரு கைகளை ஊன்றி நின்று இருந்தாள் குஞ்சு. அவள்  மனது , எண்ணங்கள் சூனியப் பொருளைக் கொண்டதாக இருந்தது. ஒன்றும்  தெரியாது விழிப்பதுபோன்று பார்ப்பவளுடைய முகம் சாயை யற்றுத் தோன்றியது. இவன் தன்னைப் பார்ப்பதை அறிந்த குஞ்சு தலையைக் குனிந்துக் கொண்டாள். ஒருக்கால்  உருக்கொண்ட உலகத் துக்கம் அவள் கண்களினின்றும் வந்த கண்ணீர் மேஜையின் மீது சொட்டியது.

  கிட்டுவால் நிதானமாக ஒன்றையும் செய்ய முடியவில்லை . தன் மனைவியின் எல்லையற்ற வருத்தம் இவனைத் தடுமாறச் செய்தது.

    யதேச்சையாக மேஜையைப் பார்த்தபோது திராக்ஷைப் பழப் பொட்டணம் பிரித்தப்படியே இருந்தது. அதை மடித்து வைக்கக் கையில் எடுத்தான். அந்தப் பொட்டணக் காகிதத்ததில் ஏதோ எழுதியிருந்தது. தனக்குத் தெரிந்த  எழுத்தாகத் தோன்றியது. யோசிக்க ஒன்றுமில்லாது மனது மிகச் சஞ்சலம் கொள்ளும்போது எவ்வகை அல்பவிஷயத்திலும் புத்தி ஈடுபடுகிறது . கிட்டு நன்றாக அதை  உற்றுப் பார்த்தான் . ஆம் அவனுக்கு நன்றாகத் தெரிந்த எழுத்துத்தான் அது. ஒரு கணத்தில்  அது தன்னுடைய கையெழுத்தென்பதைத் தெரிந்து கொண்டான். பொட்டணத்திலிருப்பதைக் கீழே மேஜையில் வைத்துவிட்டு அந்தக் காகிதத்தை எடுத்து வந்து தரையில் உட்கார்ந்து படித்தான். இதற்குள் குழந்தை ஏதோ சுரவேகத்தில் உளர அதன் அருகில் குஞ்சு போய்விட்டாள்.

   கிட்டு அப்போது அடைந்த மன அதிர்ச்சியில் ஒன்றுமே புரியாதவனானான். தன்னுடைய உன்னதப் புத்தகத்தின் ஏடுகளில் அந்தக் காகிதத் துண்டு ஒன்றென அவன் அறிந்தபோது அவன் உள்ளமே வெடித்தது போன்றாகியது. அக்கணத்திலேயே, தான் அக்காவியம் செய்து முடித்தவுடன் தோன்றிய அந்த ஆனந்தம் அவன் மனத்தில் குடி கொண்டது.
 
   நடந்ததைச் சிறிது நேரத்திலேயே ஊகித்துக் கொண்டான் . தான் எழுதி  வைத்திருந்த காகிதங்களைத் தன் குழந்தை கடையில் போட்டு ஏதோ வாங்கிக் கொண்டான் என்பதாகக் கண்டு கொண்டான்.

   இதற்குள் குழந்தையின் பக்கத்தில் இருந்த தன்னுடைய மனைவியின் கூப்பிடும் சப்தம் கேட்டு அங்கு சென்றான்.  கனவில்  காண்பதைவிட வெகு விநோதமாகவே தன்னெதிரில்  நடப்பவைகள் தெரிந்தன. அவனால் சமாளிக்க முடியாத அதிர்ச்சியை அவன்  மூளை அடைந்ததினால் உலகத்தையே தலைகீழாகப் பார்த்தான் என்பது சரியே போலும் .

      தன்னுடைய குழந்தை ராமு ஜன்னி வேகத்தில் ஏதோ பிதற்றிக் கொண்டிருநத்தான். இரண்டொரு வார்த்தைகள் புரியும்படியாக , ‘ பம்பரம்  ’  ‘அப்பா ’ என்பது போன்று இருந்தது.

     காலை ஒளியில் கடைசி நக்ஷத்திரம் மறையும் முன்பே குழந்தை ராமு இறந்துவிட்டான். மற்றுமொரு குருவி கூண்டைவிட்டுப் பறந்தோடிவிட்டது. ஆகாயத்தில் இன்னும் நக்ஷத்திரங்கள் தெரிந்து கொண்டிருந்தன. குழந்தையைப் பார்க்கத் தாயார் வெற்றுத் தொட்டிலை குனிந்து நோக்குவது போன்று, சவமான ராமுவை, குஞ்சு பார்த்து நின்றாள் . அவள் துக்கம் வாயைவிட்டு வரவில்லை. கல்லாகச் சமைந்து , பார்க்கும் பார்வையிலேயே இறந்தவள் போன்று நின்று இருந்தாள், அருகில் கிட்டு வந்தான் . அவனால் அவள் கண்களில் நீர் பெருகுவதைத் தடுக்கமுடியவில்லை. தாங்காத வருத்தத்துடன் தன் மனையானை அணைத்துக் கொண்டான்.

 அந்தப் பிரியாத அணைப்பிலே அந்நிலையிலே தாங்கள் தனிச் சரீரம் பெற்றதான உணர்ச்சியைக் கொண்டார்கள் .............

     கிட்டுவின் மனத்திலே தன்னுடைய இரு சிருஸஷ்டிகளை ஒருமிக்கப் பறிகொடுத்ததான எண்ணம் பரிகாசமாகவேபட்டது . எவ்வகை அல்ப மகிழ்ச்சி,  இந்த  சிருஷ்டியில் கொள்ளும் ஆனந்தம் . உயிர் கொடுக்கப்பட்டவுடனே அவை யாவும் உடனே   அழிவிற்குத் தாமே எல்லாம் விரைந்து செல்லுகின்றன. சாசுவதமாகக்க கொள்ள வேண்டின் உணர்வுகளுக்கு விளக்கம் கொள்ளுவது ஏன் ?

       தன்னுடைய காவியம் அழிந்ததில்  அவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மலரினின்றும் பிரிந்து வதங்கிய  இதழைவிட்டுச் சென்ற மணத்தை எங்கும் உணர்ந்தான். எதற்காக மலரையும் மணத்தையும்  ‘ அவன் ’ ஒன்று சேர்த்தான். கேவலம் இது தொழில் செய்வதில் கொள்ளும் ஒரு ஆனந்தத்திற்காகவா ? ..........

  இப்போது கிட்டுவின் முகத்தில் ஒரு அமைதி குடி கொண்டுவிட்டது . எதிர்பாராத உள்நோக்கு அவன் கண்களில் கண்டது. அவன் பேசும்போது வெளிவராத வார்த்தைகளை வலுக்கட்டாயப் படுத்தி இழுத்துப் பேசுவதுபோல் இருக்கும். தன் மனைவி குஞ்சுவை அவன் கனிந்து பார்க்கும்போது அந்தப் பார்வையையே சாசுவதத் தான் எண்ண முடியும்.

  மின்னலைக் கணம் கண்டு குருடானவனாயினும் பிறவிக் குருடானவனாயினும் பிறவிக் குருடனுக்கும் அவனுக்கும் மேலெழுந்தவாரியாக வித்தியாசம் காணக்கூடாத வகையில்தான் தன் வாழ்க்கையை நடத்துகிறான் .

          ஆனால், அவன் மளிகைக் கடையில் உட்கார்ந்து  கொண்டு , பொட்டணம் மடிக்கத் துண்டுக் காகிதங்களை, ஆட்களுக்கு எடுத்துக் கொடுக்கும்போது, ஏன் அத்துண்டுகளை கண்ணெதிரே வைத்து சிறிது நேரம் உற்று நோக்குகிறான்...... ஆமாம் , அக்காகிதத்திணூடே, அதற்கு வெகு அப்பாலே ஜீவியக் காவியத்தை அவன் கண்கள் பார்க்கின்றன. என்றுமில்லாத ஜோதி அவன் கண்களில் காணுகிறது . சிறிது சென்று ஒரு அசட்டுச் சிரிப்பும் அவன் முகத்தில் படருகிறது. சிருஷ்டியில் கொள்ளும் ஆனந்தம் எத்தகையது என்பது அவனுக்கு அப்போது தெரியும்.

 - தினமணி  மலர் 1937


தட்டச்சு - தீட்சண்யா. ரா