Pages

Thursday, May 22, 2014

மஹா வாக்கியம் - பிரம்மராஜன்

மஹா வாக்கியம்  - பிரம்மராஜன்

என்ன செய்யலாம்
எழுதப்படாமல் இருக்கிறது
இஷ்டிக்கும் பசலைப் பெண்ணின் திளைத்தல் உச்சம் என
வான் நோக்கி நிமிர்ந்தும் நிரம்பாத பிச்சைப் பாத்திரமாய்
தீராது நோகிறது வலி
தீர்ந்தும் விடுகின்றன நிவாரணிகள்
களஞ்சியத்தின் காலியான வெறுமை
எறும்புகளின் பொருக்கு மணிகளால் நிறைவதில்லை
முத்தத்தின் மகத்துவம் விளங்கவே இல்லை
தீர்ந்தொழியும் முத்தங்களின் எண்ணிக்கை மீறியும்
பெண்ணுக்குள் விண்ணோடு மண்ணும் கண்டார்
தந்திலார் எனக்காகும் தகவுகளை
ஈசனாய்த் தோற்றமெனக்குள் என்ற பாரதியும்
தீர்க்கவில்லை திரிபுகளை
வண்ணத் திகட்டல்கள் கெட்டிப்படு முன்
தீட்டப் பட்டிருக்கவில்லை
மேலும் காதறுந்த ஓவியமே
சபை ஏறும் மறை நாயகக் கருவியின் சுருதி முன்
தளர்ந்து விடுகின்றன தாளங்கள்
காரையைக் காமித்த தலைமுறையில்
கடுகிவிடுகிறது காடும்
வியர்த்தும் விளங்கவில்லை களைத்தல்
வீண் எனினும் சுருண்டுவிடுகிறேன்
விரியும் அர்த்தத்தின் மடியில்.