Pages

Saturday, May 10, 2014

பழம்நீயாகாத ஊர் - பிரம்மராஜன்

பழம்நீயாகாத ஊர் - பிரம்மராஜன்

யாத்ரீகனாயிருந்தும் ஆற்றுப்படுத்துவாரில்லை
நாயகியின் உதட்டுச் சிவப்பினைச் சொன்னால்
அதென்ன அடையாளமோ
மயானக் கரையோரம்
நகைப்பார்கள் எள்ளி
வடக்கா வடமேற்கா
வாழ்தொழிலே காதலென்றால் நம்புவார் யாரிங்கு
உடல் வறண்டு செங்கல் நிறத்தில் சிறுநீர் கழித்து
பருகுநீர் விற்கும் கடை தேடிச்
சஷ்டி அனுஷ்டிக்கும் பேருந்துகளின் சந்தடியில்
புழுதிப் பாங்கோடு
விவரிக்கச் சொன்னார்கள்
காசில்லாதவன் கடவுள் போன்றவன்
கனியே
ஒரு கணம் உன் முகம்
மறுபுறம் உன் பின்புறம்
மோஹநிவாரணி
உனக்கென்ன பைத்தியமா
சகலருக்கும்தான்
எல்லாம் விவரி சொல்லி ஒழி
ஒரு கோடையின் மாலையில்
பசி மறந்தவள் என்னால்
எல்லோரும்தான் உய்விடம் உணவற்றவர்கள்
வேறு எட்டுத் திசையிலும் . . . தந்தையுமானவர்
சொந்த ஊர்?
இந்த ஊரின் பெயரையே அவளுக்கு வைத்திருக்கலாம்
என்னை உந்திக்கொள்கிறேன்
இந்த ஊரை விடுத்து
தென்மேற்கில்