Pages

Wednesday, May 07, 2014

வெக்கை - லஷ்மி மணிவண்ணன்

வெக்கை - லஷ்மி மணிவண்ணன்

நீர்க்கடுப்பின் உக்கிரத்தில்
கழிப்பறைக்குள் பதுங்கி போய் உட்கார்ந்திருந்தேன்
சில பத்து நிமிடங்கள்
ஒரு முயல் குட்டி போல
வலியின் கதவிடுக்கில் மாட்டிப் பிதுங்கியது
குறி.
கதவுகள் மாறமாற அசைந்தன
தாழ்ப்பாள்கள் போடப்பட்டு பட்டு
அறுந்து உதிர்ந்தன.
சன்னல்கள் மொத்தமாய் இறுகின.
நட்சத்திரங்கள் உருகி கொல்லப்பட்டு
கண்ணிமை மூடும்போது கனத்தது.
மெதுவாய் அறையைத் திறந்து
வராண்டாவுக்கு வந்தேன்.
தெருவில் விறைத்திருந்த டியூப் லைட்டில்
மண்டி உறைந்து கிடந்தது
கசக்கும் மௌனம்.
ஆவியாய் சுற்றியலைந்து
வெளிச்சம் பூசிய இருள்.
எலக்ட்ரிக் கம்பிகளில் தொங்கிக் கொண்டிருந்தன
மனிதர்களின் அசைவுகளோடு கூடிய
காங்க்ரீட் வீடுகள்
தூக்கம் வராத ஒருத்தனின் படுக்கையில்
வியர்வை
பச்சை இரத்தமாய்
பிசுபிசுத்துக் கொண்டிருக்கலாம்.
காம்பவுண்டுக்குள் வேர்பிடிக்க முடியாத
கறித் தேங்காய்க்கான தென்னைகள்
கட்டிப் போட்ட நாய்களாக ஊர்ந்தன.
இருளின் இடுக்கில் திரும்பத்திரும்ப
தோன்றி மறையும் ஒரு பெண்
ஏதோவொரு பொருள்தான் என அறிந்தும்
தொடர்ந்து ஏமாற்றினாள்
புதிதாய் முளைக்கும் ஓரத்து வீடுகளின்
மொட்டை மாடி அறைகளின் இருள்
பிளந்து கிடக்கிறது
எரிந்து போன பெரிய கல்லறையென.
எனக்கு அவளின் ஞாபகம்
சுய இன்பத்துக்குப் பிந்திய வெறுமையாய்
இரண்டு காங்கரீட் வீடுகளுக்கு
ஊடே இருளைத் தாண்டிய
தூரத்தில் வெளிச்சத்தில் நின்ற தெரு விளக்கு
ஆறுதலாயிருந்த போது
தரையில் கிடந்த குறியில்
ஒல்லியான ஒரு நீளகம்பியோடு வெளியேறியது
அதிக சொட்டுகளுடன்
கொஞ்சம் சிறுநீர்.