Pages

Wednesday, May 07, 2014

பஷீரும் ஜெயாவும் - லஷ்மி மணிவண்ணன்

பஷீரும் ஜெயாவும் - லஷ்மி மணிவண்ணன்

எனது மனைவியின் இருத்தலுக்கு
பயந்து ஜெயா
ஒளிந்து கொண்டாள்
இரண்டரை வருட காலமாய்
அவள் வெளி வருவதே இல்லை
உள் தாழ்ப்பாளிட்டு பூட்டப்பட்டிருந்த
அவளது அறைக்குள்ளிருந்து
வெளிவந்து கொண்டிருந்த அனக்கத்தை
ரயில் பயணங்களின் போதும்
இரவின் மங்கலான மின்வெளிச்சம்
மூண்ட தனிமைகளிலும்
கேட்க முடிந்தது.
தளர்ந்து போயிருக்கும்
மன நோயாளிகளின் நடமாட்டத்தை
ஒத்திருந்தது அவளது அனக்கம்
அணைப்பின் மூர்க்கம் தணிந்து
படுக்கையின் மறுபக்கமாய்
எனது மனைவி முகந்திரும்பி படுத்த பிறகு
மெத்தைக்கடியிலிருந்து சிறு விரல்களாய்
எனது தூக்கமின்மையை கிளறியது
அவளது அனக்கம்
அறைக்குள் ஒரு உருவம்
முளைத்திருப்பதாகப் பயப்படும்
எனது மனைவியை
சமாதானப் படுத்த அதன் பிறகு
நெடுநேரம் ஆகும்.
இப்படி இந்த இரண்டரை வருடத்தில்
ஒன்றிரண்டு முறை நிகழ்ந்து விட்டது
தண்ணீர் விடப்படாத ஒரு குத்துச்
செடியைப் போல்
வாடிப் போய்விட்டது
ஜெயாவின் முகம்
நேற்று ஏதேச்சையாய்
ஜெயாவைப் பார்த்தேன்
அதுவொரு மலையாள ஜெயா
பஷீரைத் தெரியுமா என்று
கேட்டேன்
பஷீரை அவள் அறிந்திருக்கவில்லை
பஷீரை அறியாமல் போனதால்
ஜெயாவுக்கு இழப்பொன்றுமில்லை.


சங்கருக்குக் கதவற்ற வீடு
https://www.facebook.com/437446783064037/photos/a.437479009727481.1073741828.437446783064037/489450847863630/?type=1&fref=nf
லக்ஷ்மி மணிவண்ணன்

சங்கருக்குக் கதவற்ற
வீடாயிருக்கிறது என் வீடு .
பிறருக்கு மூடிக்கொள்ளும்
என் வீட்டின் கதவுகள்
சங்கருக்காகத் திறந்தேயிருக்கின்றன .
மூட இயலாத கதவுகளாய்
என் வீட்டின் கதவுகளை
சங்கர் எப்படி மாற்றினான் என்பது
சங்கருக்குத் தெரியாமலிருக்கலாம்
அல்லது தெரிந்திருக்கலாம்
எனக்கு அதுபற்றி
தெரியவில்லை .

சங்கர் எங்கிருந்து வருகிறான்
என்று அறிய முடியவில்லை .
எனது கதவற்ற வீடு நோக்கி
தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறான் .
சில நேரங்களில்
செல்லும் வழிப்பாதைகளில்
இடையில் இறங்கி
வந்து செல்கிறான் .
சங்கருக்குக் கதவற்ற
என் வீடு நோக்கி
மெனக்கெட்டு சில நேரம்
வந்து செல்கிறான் .

ஒரு இரவில்
திறந்திருக்கும் கதவு வழியே
வீட்டினுள் நுழைந்து பார்த்தேன் .
வீட்டின் நடு அறையில்
டியூப் லயிட் வெளிச்சத்தில்
நீர்ப்பரப்பில்
நிற்கும் படகில்
அமர்ந்திருப்பவனைப்
போன்றிருந்தான் சங்கர் .

ஒரு முறை வேறொரு
சின்ன சங்கர் வந்தான் .
புதிதாய் தொழிலுக்குச் செல்லும்
வேசியின் முகத்தைப் போன்று
உடைந்து அழகாயிருந்தது அவனது முகம் .
உட்கார இயலாத சங்கராய்
அவனிருந்தான் .
நின்றபடியே பேசிவிட்டு
வெளியேறினான் .

சங்கருக்கு
துல்லியமான வயதொன்றும் இல்லை .
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு வயதோடு
வருகிறான் .
ஒரு பகல் வேளையில் வந்து
சென்ற சங்கருக்கு ஐம்பது வயதிருக்கும் .

சங்கரின் தொடுதலில்
உயிர்த்தெழுந்து நெளிகிறது
பெரிய உடலாய்
சங்கருக்குக் கதவற்ற
என் வீடு .

[சங்கருக்குக் கதவற்ற வீடு -கவிதைத் தொகுப்பிலிருந்து -2000]