Pages

Friday, July 18, 2014

நெய்தல் தேசம் - பிரம்மராஜன்

நெய்தல் தேசம் - பிரம்மராஜன்

நீயும் ஒரு கடல் காக்கையும்
நினைவுகொள்ளும் நெய்தல் தேசம்
எட்டு வைரப் படிமம் கடந்து
தூய வலியால் திகழும் அலுமினியச் சிறகிரண்டு
படபடக்கும் நெஞ்சின் மீதிப்பீதி
கூசும் மின்னொளி இன்றின் உண்மையை
நாளையின் பொய்யைச் சொற்கூடுடைக்கும்
நெடுநல் வாழ்வின் ஓற்றைக் கவிதை
புல்லரிசி உண்போரின் கண் உருளை
சித்திரக் கோட்டில் புரண்டு படுக்கும்
ஒற்றையடிப்பாதை
துணித்த கிளைவெட்டோரப் பிசினில் வழியும்
இலைப் புனல் ஓயும்
வெட்டுக்கிளி நறுக்கிய மதிய கிராமத்தில்
தீ எழுதும் உறக்க மலர்
ஞாபகப் பிரதிகளும் நிலையாடிகளும்
நனைந்த மீதிப் பயணக் குறிப்பும்
நமது அதேயில்
காணி நிலம் எதுவுமே
கனவுடைந்த இடது பாகம்
அவன் விளைந்த இடத்தில் அழிந்த பயிர்
வில்லாளியோ விடுபட்ட அம்போ
காற்றுத்திரட்டும் கற்பனை
மிகவும் ஒன்றுபோல் ஸ்ருதி சேர்க்கிறாள்
பெண்ணுடலை ஓர் யுவதி

... உபாசனை செய்ததுடன் கிரிராஜன் சேகரித்து வைத்திருந்த ஸங்கீத ரத்நாகரம், நாரதீயம் முதலிய நூல்களைப் பயின்று சுருதிகள், பிரக்ருதி விக்ருதி ஸ்வரங்கள், 21 மூர்ச்சனைகள், 72 மேளகர்த்தாக்கள் தசவிகித கமகங்கள், ஜன்ய ராகங்கள் இவற்றின் மர்மங்களைத் தம்முடைய முயற்சினாலேயே

 மூளை அகன்று விசும்பு விரியவேண்டும்
இப்போது இல்லை
சோற்றின் நிஜமாய்க் கவலை
அவர்களின் மழை மதியம் நமதென்றால்
இலைவழிப் பாட்டில் செவியின் ஓவியம் எந்நிறம்
மண்ணும் சதையும் மதிலின் வரட்டியும்
கதிர்ச் சுடரின் கட்டிடக்கலை
மலைகளின் நாடித் துடிப்பை
விரல் தொட்டுணர
ஐம்புலன் தெரியும்.

கூழாங்கல்லின் சந்தோஷம்போல்
காற்று வரத் தொடங்கிய செப்டம்பர்
இன்னும்
மிருகக் கூறுபாடு
மறக்கப்பட்ட சரித்திரம்
விற்பனைக்கான க்ளோஸப்
சொற்களுக்காகப் புறவிருள்
மரமாகும் பயப் பதியம்
உன் விழைவுப் புழுதி நீயாக
பாவம் அந்தப் பட்டாம்பூச்சி
இதுவரை காகிதப் பதுமை
காண்பொருளைத் திறந்து நனவேற்றி
உலர்ந்த அறைகளை ரணமாக்கித்
துகில் திரை விலக்கி
வெப்பநிலையும் கவலையும் ஒரே வாயிலில்
வந்திறங்க
புரியாது தடுமாறும் மனப்பதம்
உஷை  உணராச் சாயுங் கால விரல் ரேகை
பதியும் உன் முகத்திலொரு வயலின் மொழி
எதுவும் உறங்கா இந்நகரின் இரவில்
மாநரகரின் மௌனம் அலறும் குரல்வளை
மாற்றிடம் வெற்றிடமாகாது
மீன்பிடிப்பு ஆபத்தானது திறந்த தோணிகளில்
ஆண்களின் 20 மணி வியர்வை
உயிரிழப்பு அதிகம் வேலைப் பாதுகாப்பில்லை
ஊழின் கரிப்பினை அறிந்திலர் அநேகர்.

இரவென்பது ஒரு பறவை
இரவின் ஆதாரம் ஸ்ருதியே
நள் என்று சொல்லும்
கொன்ற செய்தி கொணர்கிறான்
புகார்களைப் புன்னகையுடன் ஒப்பிட்டு

மகா ஸ்ருதியாகும் காதுகளில் ஓயாத சுத்தியல்
மீண்டும் ஆர்க்க வேண்டும் பாசி வயல்
எவரும் நவிலா ஒன்றை
மொழி மாற்றும் செயல் அது
காற்றின் வடிவூற்று
புயலும் மழையும் கலந்து வரைபெற்ற தெரு
வானத்தின் நினைவோ
கத்திரிப்பூ
வேறெப்படி நூற்பது இப்பனுவலை
இப்பொழுதில்லை மறுநாளில்
முளைத்தெழுக கற்பக விருட்சமே
எல்லாமே காத்திருக்கிறது
மறதியின் இறுதிப் புள்ளிக்காய்
இனியிலும் புல்மிளிரும் ஏரி
நித்திய மதியத்தின் யூரியாப் பிசுபிசுப்பு
மேகச் சிறகொழித்துத் திறந்திருக்கிறது
மாலைக் காதலின் வெளிர் நீலத்தாள்
நீ எழுதும் வேலை குடும்பம் எரிவாயு
தடங்கிப்போன கடிதம்
தினசரிகளின் கவிதை
அராஜகவாதியின் சாம்ராஜ்யம்
தெள்ளிய நீர்
நைட்ரிக் அமிலம்
உடைந்த ஸ்பிரிங்
மாத்திரை பிரிந்த பிளாஸ்டிக் கொப்புளம்
இரட்டைக் குவிமையக் கவிதை
யாருடன் எங்கென்பதும்
பொருட்டல்ல இத்தினம் ஆயினும் இதுவல்ல க்ஷணம்
கேஸட்டில் ஒலிக்கும் ஆத்மாநாமின் குரல்
காட்சிகளின் கோணம் தலைகீழாகப்
புகைப்படச் சாம்பல் காற்றில் அலையும்
காதலின்றிப் புணர்ந்து முப்பால் அறியாது
பிறப்பிக்கும் பூனைச்சாதி நாமல்ல
ஒரு கவலை பல துயரம் விலை மீறும்
இலையரிக்கும் புழுவே
வாழ்க்கையைத் தொங்கித் திருகிப்
பாவங்களைப் புண்ணியமும்
தண்டனையைக் குற்றமும் முயங்க
துருவத் தகராறு புனிதர் ஏசுவும் அறிவார்
துடிக்கும் சொற்களில் ஜடமுயிர்க்கும்
நாம் நாமின் நம்மால் நமதின் சமன்
மேற்கோள் முற்றும்

சமீபிக்கும் அவர்கள் முதுமை இப்போது
நொடிக்கும் அவர் இருக்கை
அவர்கள் பீதியில் தம் நாய்களுக்கு
நஞ்சிட விருப்பம் தெரிவிக்க
வீட்டுச் சாமான்களைக் கால் விலைக்கு விற்று
க்ஷாலைப் போக்குவரத்தின் தலை தெறிப்பை 0 ஆக்க
நாற்பதாண்டுகள் பகிராததை இன்று
க்ஷணத்தில் இரு நூற்றாண்டு வாழ்ந்ததை
வெளியிலிருந்து பூட்டப்பட்ட கதவின் பின்னால்
ஏதும் நடவாததுபோல்
இருவரும் பூர்வகாலத்திலும் அந்நியராய்
குரவர்களின் பறவை உறவு வலையளவு
காதலின் கதகதப்பை எழுத்துப் பிழைகளுடன்
எழுதி அயலார் ஒருவர்
மௌனமே பொருளாய்
மென்மையே வன்ம்மாய்
விற்க முடியாதிருப்பது
உன் இலக்கமிடா எலும்பு

ஒரு கவிதை அறிவை நிர்த்தாட்சண்யமாய்
நிராகரிக்கட்டும்
மனதுடன் உனது லிங்கத்தை
பிணைத்துக் காற்றில் ஊசலாடும் சங்கிலி
பிரண்டு படுக்கும் ஒற்றையடிப் பாதை
வாழ்ந்த வறுமை எலிவலை வெறுமை
கேள்விகள் செய்து தேற்றம் முடித்து
உன்னைப் பார்த்தால் 114 ஆண்டுகள்
வாழ்ந்தவன்போல் அவதி
தப்பிக்க வழிமுறை மரணத்தின் மொழி குறித்து
பதில்கள் சில
கடவுள் கேட்கிறாரா வார இறுதி ஓய்வு இன்னும்
சொல்லற்ற கதை சொல்

ஃபிரான்கோவின் சர்வாதிகாரத்தின்போது காட்டலோனியாவில் பெண்கள் எதிர்கொண்டது இருவகை அடக்குமுறை : காட்டலோனிய மொழியில் எழுதுவது தடைசெய்யப்பட்டது; பெண்களின் அறிவார்த்த செயல்பாடுகள் நிராகரிக்கப்பட்டன. 1976இல் ஃபிரான்கோவின் இறப்புக்குப் பிறகு காட்டலோனியாவில் மௌனமாக்கப்பட்ட 40 வருஷத்து இலக்கியம் இப்போது

உறங்கும் வயல்கள் இருவர் நாம்
மயங்கும் வரப்புகள்
கொக்கோ ஏரிக்காட்டில் பூச்சிக்கனவில்

புத்தாண்டு வாழத்தட்டையில்
நரைக்கும் உன் ஆயுள்
இக்கணத்தில் மெய் பற்ற
கிளைகளில்  சிக்கிய படிமம் தேடத்
தோண்டியகப்பட்டது வெண்கல முகம்
திறந்த வீட்டின் எளிய கனவு
உம் நெற்றியில் எம் பெருவிரல்

கண்ணிமைமேல் கனக்காத முத்தம்போல்
உறங்கியது தெரியாத உறக்கம்

நீரலை முகம் கோண
அறும் ஆறு சலனம்
தன் மெனோபாஸ் பருவத்தை யாரிடம் சொல்லும்
காயும் சூரியன்
துயிலெழுச்சிப் பாடலில் இணையாத இசை
உள்ளங்கையில் அள்ளிய அரிசி
என் நிலக்காட்சி