Pages

Wednesday, April 20, 2016

நடனத்துக்குப் பின் - அசோகமித்திரன்

Automated google-ocr
www.archive.org

நடனத்துக்குப் பின் - அசோகமித்திரன்

சில்கல்கடா இரயில்வே டிஸ்பன்சரியைத் தாண்டி வாட்டர் டாங்க் இருக்குமிடத்தை அடைந்தால் அங்கு சாலையி லிருந்து பிரிந்து போகும் மண் பாதை ஒன்று கண்ணுக்குத் தெரியும். பாதையின் இருபுறங்களிலும் உள்ள வீடுகள் சிறியதாக ஒட்டுக் கூரையுடையதாக இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் சுற்றுப் புறவெளி விசாலமாக இருந்து, நிறைய மரங்களும் செடிகளும் கட்டுக்கடங்காது அடர்ந்து முளைத்திருக்கும். ஒரு கோணத்தில் வீடுகள் இருப்பதே தெரியாமல் மரங்களும் செடிகளும் நிறைந்து ஒரு காட்டுப் பிரதேசத்தைக் கீறி அமைத்தது போல் அந்தப் பாதை காட்சியளிக்கும். அந்தப் பாதையில்தான் இரயில்வே இன்ஸ்டிடியூட் இருந்தது. நான் பள்ளிக்குப்போய் வரும் போதெல்லாம் அந்த இஸ்டிடியூட்டை ஆர்வத்துடன் பார்ப்பேன்.

அதுவும் ஓர் ஒட்டுக் கூரைக் கட்டிடம்தான். ஆனால் அப் பாதையில் இருந்த வீடுகளைவிடப் பெரிதாக இருக்கும். ஓரளவு செடி கொடிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். பகல் வேளையில் கூட உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரியும், நாங்கள் அப்போது வசித்து வந்த வீட்டில் மின்சார விளக்குக் கிடையாது. அதனாலேயே இந்த இன்ஸ்டிடியூட் எனக்கு அப்பாற்பட்டதோர் தனியுலகமாகத் தோன்றும். நான் என் அப்பாவுடனும்கூட பலமுறை அப்பாதையில் அந்த இன்ஸ்டிடி யூட்டைக் கடந்து சென்றிருக்கிறேன். அப்பர் எப்போதும் அங்கு சென்றதில்லை. நானும் அவரிடம் அதைப் பற்றிக் கேட்ட தில்லை.

எங்கள் ஊரின் இன்னொரு கோடியில் வேறு வீடு மாறி, நாங்களும் மின்சார விளக்குப் பயன்படுத்தத் தொடங்கி, நானே தனியாக ஆங்கில மொழி சினிமாக்களுக்கும் போகக்கூடிய வயது வந்த பிறகுதான் திடீரென்று இந்த இன்ஸ்டிடியூட் சற்றும் எதிர்

________________

அசோகமித்திரன் 15

பாராத விதத்தில் என் அனுபவத்துக்கு உட்பட்டது. அதற்குக் காரணம் கார்டு ரிச்சி மன்னாஸின் மகன் மாரிஸ்.

மாரிஸ் அரைக்கால் டிராயர் போட்டாலும் எனக்கு அவனை என் சம வயது சகாவாக எண்ண முடிந்ததில்லை. டார்ஜான் என்றதோர் அற்புத உருவகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவனே மாரிஸ்தான். 'டார்ஜானின் நியூயார்க் நகர சாகசங்களுக்கு மாரிஸ்தான் என்னை முதலில் அழைத்துச் சென்றான். டார்ஜான் போல அவனே ஆஆஆஆஆ என்று கூவுவான். எங்கள் வீட்டுக்கருகில் இருந்த ஆலமரங்களில் ஏறி ஒரு விழுதிலிருந்து இன்னொன்றுக்கு அனாயாசமாகத் தாவுவான். ஆனால் இப்படிச் செய்யச் சாத்தியம் என்று எனக்குத் தெரிந்ததே அவனால்தான்.

இன்னொரு விஷயத்துக்கும் மாரிஸ் என் அயராத வியப்புக்குக் காரணமாயிருந்தான். நாங்கள் எல்லோரும் தினமும் ஒன்பதரை மணிக்குப் பள்ளிக்கு வேண்டா வெறுப்பாகப் போய்க் கொண்டிருக்கும் போது அவன் மட்டும் மரக்கிளை ஒன்றிலிருந்து தலைகீழாகத் தொங்குவான். எல்லாரும் முன் பக்கம் கையை வீசிப் பம்பரத்தை எறிந்தால் அவன் தலைக்குப் பின்னால் எறிவான். அப்படியும் அது ஒரிடத்தில் நிலைத்துச் சுழலும். நான் அவனைக் கெஞ்சிக் கேட்டு எங்கள் கிரிக்கெட் கோஷ்டிக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் கிரிக்கெட், ஹாக்கி போன்ற திட்ட வட்ட மான விதிகள் கொண்ட ஆட்டங்கள் அவனுக்குக் கைவரவில்லை. அடுத்த நாள் நாங்கள் மீண்டும் ஆலமரத்தின் மீது ஏறி உட்கார்ந்தி ருப்போம். "ஏன் இப்படிச் சட்டைக்காரப்பையனோடு எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கிறாய்?” என்று என்னை நிறையப் பேர் கேட்டு விட்டார்கள். எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது.

மாரிஸுக்கு என்னைத் தவிர வேறு சில நண்பர்களும் இருந்தார்கள். அவன் அவர்களோடு பேசும் மொழி ஆங்கிலம் போலத் தோன்றினாலும் யாருக்கும் புரியாத சங்கேத மொழியாக இருக்கும். அந்தச் சட்டைக்கார ஆங்கிலத்தில் எனக்குத் தெரிந்த சில இலக்கண விதிகள் கூட மீறப்பட்டதை நான் உணர முடிந்தது. ஆனால் அவர்களுக்குள் தீவிரமான தோழமை தோன்ற அவர்கள் பேசிக் கொள்வார்கள். திட்டிக் கொள்வார்கள். ஒரிருமுறை அடித்துக் கொண்டும் பார்த்திருக்கிறேன்.

அவன் இனத்தினரைத் தவிர வேறு யாருக்கும் அளிக்காத சலுகையை மாரிஸ் எனக்கு அளித்தான். அவனுடைய வீட்டிற்கே என்னை அழைத்துப் போவான். அவனுடைய அப்பா, அம்மா,

________________

16 - பறவை வேட்டை | நடனத்துக்குப் பின்

இரு அக்காக்கள், தம்பி, தங்கை, ஸ்பாட்டி என்ற நாய் இவ்வளவு பேர் மத்தியில் நான் மெழுகுப் பொம்மைபோல உட்கார்ந்தி ருப்பேன்.

யுத்தம் தீவிரமடைந்து எங்களுரில் நிறைய வெள்ளைக்கார சோல்ஜர்கள் நடமாட்டம் அதிகரித்தது. மாரிஸ் அவர்களை டாமீஸ் என்று குறிப்பிடுவான். சோல்ஜர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக எங்களுர் ஆங்கிலோ இந்தியக் குடும்பங்களில் வெளிப்படையாகச் சில மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்தன.

மாரிஸின் அம்மாதான் மிகவும் பரபரப்புடன் செயல் பட்டாள். வீட்டுத் துணிப்படுதாக்கள் புதுப்பிக்கப்பட்டன. முன் அறை நாற்காலிகள் புது வண்ணம் பெற்றன. உடைந்து மூலையில் கிடந்த கிராமபோன் சரி செய்யப்பட்டு எப்போதும் கீச் மீச் தடாம் படாம் என்று ஒலிக்கத் தொடங்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக மூத்த பெண்கள் இருவரும் எப்போதும் ஏதோ போட்டோ எடுப்பதற்குத் தயாராக இருப்பதுபோல அலங்கரிக்கப்பட்டு, நடமாடினார்கள். மாரிஸும் திடீர் திடீரென்று காணாமல் போய்க் கொண்டிருந்தான். அவன் அக்காக்களுடனும், சில சோல்ஜர் களுடனும் உயர்ந்த வகுப்பில் ஆங்கில சினிமா பார்த்துவிட்டு வருவான.

எனக்கு எல்லா சோல்ஜர்களும் ஒரே மாதிரிதான் தோன்றி னார்கள். ஆனால் ஒருவன் மட்டும் திரும்பத் திரும்ப மாரிஸ் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருப்பதை அடையாளம் கண்டு கொள்ளமுடிந்தது. மாரிஸின் அம்மா மிகுந்த மகிழ்ச்சியுடன் எனக்கு ஒருநாள் விசேஷமாக மிலிட்டரி காண்டீனிலிருந்து கொண்டு வரப்பட்ட ஹண்ட்லி பாமர் பிஸ்கோத்துக்கள் இரண்டு கொடுத்தாள். லூசிக்குக் கல்யாணம் ஆகப் போகிறது என்றாள். லூசிதான் மாரிஸின் மூத்த அக்கா.

லூசியிடம் காணப்பட்ட மாற்றம் எனக்கு வியப்பாகவும் பயமாகவும் இருந்தது. அவள் ஆங்கிலப் படங்களில் பார்க்கக் கிடைக்கும் பெண்கள் போல மாறியிருந்தாள்.

ஒருநாள் மாலை மாரிஸ் என் வீட்டு முன்னால் நின்று கொண்டு சீட்டியடித்தான். என்னைக் கூப்பிடுவதற்கு அவன் பயன்படுத்தும் முறை அதுதான். நான் பலமுறை அப்படிச் செய்யாதே, என் அம்மா கோபித்துக் கொள்கிறாள் என்று சொல்லிப் பார்த்துவிட்டேன். ஆனால் மாரிஸை மாற்ற முடியவில்லை.

நான் வெளியே வந்தேன்.

________________

அசோகமித்திரன் 17

"இன்று இரவு வருகிறாயா? நான் உன்னை ஒரு பாலுக்கு அழைத்துப் போகிறேன்” என்று மாரிஸ் சொன்னான்.

"எனக்கு பால் என்றால் என்ன என்று தெரியாது. இருந்தாலும் "எப்போ?” என்று கேட்டேன்.

"ராத்திரி.”

és é

இந்தப் பனியிலே ராத்திரி ஆட்டம் எல்லாம் வேண்டாம்.”

"அம்மா, அம்மா, இந்த ஒரே ஒரு தரம் அம்மா. எனக்கு லீவுதானே அம்மா...”

நான் சம்மதம் பெற்று மாலை ஏழு மணிக்குத் தயாராக இருந்தேன். எட்டு மணிக்குத்தான் மாரிஸின் சீட்டிச் சப்தம் கேட்டது.

மாரிஸ் பாண்ட் அணிந்து, டை கட்டி கோட் போட்டுக் கொண்டிருந்தான். அவன் சொன்னதற்காக நானும் என்னுடைய தொளதொள கோட்டைப் போட்டுக் கொண்டேன். ஆனால் என் னிடம் பாண்ட் கிடையாது. அரை டிராயருடன்தான் வருவேன் என்று சொன்னேன். ஒரு சில்க் கைக்குட்டையை என் கழுத்தில் சுற்றிச் சட்டையினுள் செருகினான். அவனுடைய சைக்கிளில் என்னை ஏற்றிக்கொண்டு சாலையின் இருட்டுப் பகுதியாக ஒட்டிச் சென்றான். அப்போதெல்லாம் சைக்கிளில் இரட்டைச் சவாரி எங்கள் ஊரில் அனுமதிக்கப்படவில்லை.

அவன் சென்ற பாதை எனக்குப் பழக்கப்பட்டதாக இருந்தது. "எங்கள் பழைய வீட்டுக்கு இப்படித்தான் போக வேண்டும்” என்றேன். அவன் சில்கல்கூடா டிஸ்பென்சரியை அடைந்தவுடன் மூச்சிரைக்கச் சைக்கிளிலிருந்து இறங்கி விட்டான். அங்கு சாலை ஒரேயடியாக ஏற்றமாக இருக்கும்.

அவன் சைக்கிளைத் தள்ளி வர நாங்கள் வாட்டர் டாங்கைத் தாண்டினோம். "இங்கே எங்கே போகிறாய்?" என்று கேட்டேன்.

"அதோ பார்” என்றான். இருட்டில் அந்தப் பாதையில் தூரத்தில் வண்ண வண்ண விளக்குகள் ஒளி வீசின.

"என்ன அது?”

"இரயில்வே இன்ஸ்டிடியூட். அங்கேதான் பால்.”

ப.வே.-2

________________

18 பறவை வேட்டை | நடனத்துக்குப் பின்

எனக்கு இதயத் துடிப்பு சீறி உயர்ந்தது. நாங்கள் வீடு மாறிய பிறகு இரயில்வே இன்ஸ்டிடியூட் பற்றி நினைக்கவே சந்தர்ப்பம் வந்ததில்லை.

"அங்கே என்ன செய்வார்கள்? சினிமா உண்டா?”

"சினிமா இல்லை. இன்று கிறிஸ்துமஸ் ஈவ், தெரியாது? அதனால் அங்கு இரயில்வே ஒரு பால் நடத்துகிறது.”

"பால் என்றால் என்ன?”

“நிறையப் பேர் வருவார்கள். நிறைய குடிக்க, தின்னக் கிடைக்கும். எல்லாரும் டான்ஸ் ஆடுவார்கள். அதாவது ஜதை ஜதையாக டான்ஸ் ஆடுவார்கள். உள்ளே நுழையவே இரண்டு ரூபாய் டிக்கட் நான் இரண்டு வைத்திருக்கிறேன்.”

"நீயும் ஆடுவியா?”

"ஏன்? ஆமாம்.” - "அப்போ நான் வீட்டுக்குப் போகிறேன்!” "நான் ஆடினால் உனக்கென்ன?” "நீ கெட்டவன்.”

"ஆடுவதற்கும் கெடுவதற்கும் என்ன சம்பந்தம்? சும்மா வா. நிறைய கேக் பேஸ்ட்ரியெல்லாம் இருக்கும். தமாஷாக இருக்கும்.

வா.”

நான் எப்பொழுதோ பகல் பொழுதில் பார்த்ததற்கும் இப்போதைக்கும் இன்ஸ்டிடியூட் அடையாளமே தெரியாத மாதிரி இருந்தது. கண் திரும்பிய இடமெல்லாம் வண்ண விளக்குகள், வண்ணக் காகித தோரணங்கள், பலூன்கள். ஒரு சாதாரண ஒட்டுக் கட்டிடத்தை விசித்திர உலகமாக மாற்றியிருந்தார்கள். பளபள வென்ற பொத்தான்கள் கொண்ட சீருடை அணிந்த வாத்தியக் கோஷ்டி மிக உற்சாகமாக இசை இசைத்துக் கொண்டிருந்தது. அந்த வாத்தியங்கள் நன்றாக பாலிஷ் போடப்பட்டுப் பிரகாசமான வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தன.

இதெல்லாம் என் முதல் பிரமிப்பில் தோன்றி மறைந்து விட்டன. அங்கு குழுமியிருந்த மனிதர்கள்தான் எனக்குக் கணத் துக்குக் கணம் புதுப் பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்த இருபது முப்பது சட்டைக்காரப் பெண்களில் பாதிப்பேர் நான் அறிந்தவர்கள். ஆனால் அப்போது ஒவ்வொருத்தி யும் ஒரு ஆங்கில நடிகை போல இருந்தாள். ஆண்களும் நான் அறிந்தவர்கள்தான். இரயில்வே உடையில் சிரிப்பூட்டும்

________________

அசோகமித்திரன் 19

பொருள்களாக இருப்பார்கள். அன்று டை சூட் அணிந்துகொண்டு சரியான துரைகளாக மாறியிருந்தார்கள். அந்தச் சூழ்நிலையே மொத்தத்தில் ஏதோ ஒரு ஆங்கிலப் படக்காட்சி போல இருந்தது. அவ்வளவு சிரிப்பையும், உற்சாகத்தையும் நான் அதுவரை கண்டதில்லை.

மாரிஸ் எனக்குத் தின்பதற்கு நிறைய கேக், பேஸ்ட்ரி கொண்டு வந்தான். நான் நினைத்துப் பார்த்திராத ஒரு பெரிய கண்ணாடிப் பாத்திரத்தில் விம்டோ கொண்டு வந்தான். இன்று கோலா போல அந்நாளில் விம்டோ. "நீ வேடிக்கை பார்த்துக் கொண்டிரு” என்று சொல்லிவிட்டு அவனும் அந்தக் களிப்புக் கூட்டத்தில் ஒருவனாகக் கலந்து கொண்டான்.

அடுத்த நடனம் ஆரம்பமாயிற்று. பாண்ட்காரர்கள் அவர் களுக்குச் சாத்தியமான முறையில் சங்கீதம் இசைக்க, அங்கு குழுமி யிருந்தவர்கள் ஜதை ஜதையாக அவர்களுக்குச் சாத்திய மான நடனத்தை ஆடினார்கள். கசகசவென உல்லாசப் பேச்சு, க்ளுக் க்ளுக்கென உல்லாசச் சிரிப்பு, புது உடைகளின் உரசல், யாரோ அதற்குள் மிகையாகக் குடித்தவன் ஒரு தனிக் குரலில் ஏதாவது பாட்டின் ஒரடியைப் பாடுவது - அப்போதுதான் மாரிஸின் அக்கா லூசியைப் பார்த்தேன். அவள் அன்று தன்னைப் பலமாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அந்த வெள்ளைக்கார சோல்ஜர் அளவுக்கு மீறி அவளைக் கிசுகிசு மூட்டிய வண்ணம் அவளோடு நடனம் ஆடிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் எல்லாரும் ஒரு மாதிரி தங்கள் ஆட்டத்தைக் குறைத்துக்கொண்டு இந்த சோல்ஜரின் கூத்தைப் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலை வந்தது.

மாரிஸும் ஒரு மூலையிலிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு பெண் இருந்தாள். ஆனால் அந்த நேரத்தில் அவன் அவளை மறந்து அவனுடைய அக்காவைப் பீறி வரும் ஆத்திரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். எல்லாம் ஒரு கணத்துக்குத்தான். பாண்ட் இன்னும் உரக்க ஒலிக்க எல்லாரும் தங்கள் சொந்தக் கேளிக்கையில் ஆழ்ந்து அமிழ்ந்து கொண்டார்கள்.

சிறிது நேரத்தில் எனக்குத் தாங்க முடியாதபடி தூக்கம் வந்தது. அதை முறியடிப்பதற்கு நான் வெளியே வந்தேன். வண்ண விளக்குகளை வெளிப்புறத்தில்தான் தொங்க விட்டிருந்தாலும் உண்மையில் ஹாலின் வெளிச்சம்தான் கதவு ஜன்னல் இருந்த இடங்களில் வெளியே வழிந்து ஒளியூட்டியது.

________________

20 பறவை வேட்டை | நடனத்துக்குப் பின்

நான் சற்று இருட்டாக இருந்த இடத்தை நாடிப் போனேன். அப்போதுதான் கட்டிடத்தின் வெளிப்புறத்திலும் சில ஜதைகள் இருப்பதை உணர்ந்தேன். அந்தக் குறை வெளிச்சத்திலும் ஒரு ஜதையை அடையாளம் கண்டு கொண்டேன். லூசியை அந்த சோல்ஜர் கசக்கிக் கொண்டிருந்தான். அவள் மிகுந்த சந்தோஷத் துடன் அவ்வப்போது சிரிப்பொலி எழுப்பினாள். அவள் அவ்வளவு சந்தோஷமாக இருந்ததை நான் அதற்கு முன் பார்த்ததில்லை. எனக்கும் சந்தோஷமாக இருந்தது. அதே நேரத்தில் மாரிஸ் அங்கு வந்துவிடக்கூடாதே என்ற அச்சமும் தோன்றிற்று.

நட்ட நடு நிசியில் நானும் மாரிஸும் வீடு திரும்பினோம். அவன் லூசியைத் திட்டிய வண்ணம் சைக்கிளை மிதித்தான். எனக்கு அவளிடம் அனுதாபம்தான் அதிகரித்தது.

லூசிக்குக் கல்யாணம் நடந்தது என்றுதான் நினைக்கிறேன். மாரிஸ் என்னை அழைத்துப் போகவில்லை. அந்த சோல்ஜரின் வருகை நின்றுவிட்டது. அவன் யுத்தத்துக்கு அழைக்கப்பட்டு விட்டான். ஆனால் மீண்டும் வந்து லூசியை ஸ்காட்லாண்ட் அழைத்துப் போவான் என்றுதான் சொல்லிக் கொண்டிருந் தார்கள். லூசிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்குள் நான் அந்தக் குடும்பத்திற்கு இன்னும் வேண்டியவனானேன். என்னிடமே பல நாட்கள் லூசி துக்கம் தாளாமல் அழுதிருக்கிறாள். நான் இரவில், இரயில்வே இன்ஸ்டிடியூட்டில், அந்த இரவில் அவள் காணப் பட்ட பரவச நிலையை நினைத்துக் கொள்வேன். அப்படி ஒரு சந்தோஷம் ஒருமுறை அநுபவித்து விட்டால் பிறகு எதுவுமே துக்க மாகத்தான் தோன்றும் என்று எனக்குத் தோன்றிற்று. லூசி வெகு நாட்கள் அந்த சோல்ஜருக்காகக் காத்திருந்தாள். ஆனால் அவன் திரும்பி வரவே இல்லை.

1982