Pages

Saturday, April 09, 2016

அட்டிகை - மா. அரங்கநாதன்

அட்டிகை - மா. அரங்கநாதன்

படிப்பகம்
காலக்குறி 20 | அக். 98
படிப்பகம்
WWW.padippakam.com

அப்போது பொங்கல் கழிந்து இரண்டு மூன்று நாள்கள் ஆகியிருக்கும். அவன் பக்கத்தூருக்கு ஆற்றைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். அதைக் கடப்பதில் சிரமம் கிடையாது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டால் போதும் பாதி ஆற்றில் காலில் ஏதோ தட்டுப் படுவது,  போல் இருக்கவே, ஒற்றைக் காலில்  நின்று கொண்டே மற்றொன்றால் வெளியே தூக்கிப் பார்த்தால் அது ஒர் அட்டிகை. தங்கமாகத் தான் தெரிந்தது. அதை அப்படியே கையாலெடுத்துக்கொண்டு வருவதைத் தவிர வேறு எதுவும் செய்திருக்க முடியாது. அப்பாவின் காலத்திலிருந்தே தெரிந்த மாணிக்கம் ஆசாரியிடம் அதை எடுத்துக் கொண்டு மறுநாள் கீழுருக்குப் போனான். அவன் இருப்பது ஊரின் மேலப்பகுதி - மேலுர்.

ஆசாரி அதை மிகக் கூர்மையாகப் பரிசோதித்துப் பார்த்தார். தங்கம்தானா இல்லையா என்ற கேள்விக்கே இடங்கொடுக்காமல் குரலை சிறிதாக்கிக் கொண்டு, 'முத்து - இதை வைச்சுக்கிட்டு இருக்கது தப்பு- ரொம்ப கஷ்டத்துக்கு ஆளாக வேண்டி வரும். அதனாலே நீ என்ன செய்றே-எங்க பாத்தியோ அந்த இடத்திலே இதை போட்டுடு அது தான் நல்லது. இந்த ஊருக்கும் அதுதான் நல்லது - இதப் பாத்தியா' என்று அந்த அட்டிகையின் பின் பக்கம் செதுக்கப்பட்டிருந்த கிறுக்கல்களைக் காட்டினார். ஒர் எட்டுக்கால் பூச்சியின் படம் போலத் தான் அவனுக்கு அது தெரிந்தது. கூட்டெழுத்து என்று ஆசாரி விளக்கினார். பேய்ச்சி என அதைப் படித்துக் காட்டினார். பிறகு மேற் கொண்டு எதுவும் பேசாது தான் சொன்னதை நினைவூட்டி அவனை அனுப்பி வைத்தார்.

அந்த நாள்களில் எல்லாம் இராப்பாடி வருவான். அறுவடை அநேகமாக முடிந்திருக்கவேண்டும். நாய்க்குரைப்பை அலட்சியம் செய்து படி வாங்கிச் செல்வான். அவனிடம் அதுபற்றி குறி கேட்கலாமா என்று வெளித்திண்னையில் யோசித்துக் கொண்டிருந்தான். பாட்டுச் சத்தம் கீழத்தெருவில் கேட்டுக் கொண்டிருந்தது. -

தெருப்பக்கம் வந்ததும் அவனது இராப்பாடி பாட்டை நிறுத்தி முத்துக் கருப்பன் வீட்டருகே நின்றான். எதிர் வீட்டு மீனாட்சி அம்மாள் தெரு நடையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். சாதாரணமாக படி எதுவும் இராப்பாடிக்குத் தர மாட்டாள்.

நடு இரவாகவிருந்தாலும் இராப்பாடி ஒரக்கண்ணால் தன்னையே பார்ப்பதாக முத்துக் கருப்பன் நினைத்தான். இராப்பாடியைப் பார்த்து பயந்திருந்த நாள்களெல்லாம் போய்விட்டன. சாதாரணமாக வயதானவர்கள் தாம் குறி கேட்பார்கள். அடுத்த வயலறுப்பு முடிந்து இராப்பாடி வருகையில் குறிகேட்பவர்களில் பெரும்பாலோர் செத்துப் போயிருப்பார்கள். ஆனால் இராப்பாடி செத்துப் போவது குறித்து யாருமே பேசியதில்லை.

சாதாரணமாகப் பேசும் குரல் போலல்லாமல் இராப்பாடி மெதுவாகச் சொன்னான். அது முத்துக் கறுப்பனுக்கு மட்டுமே கேட்டது.

பேச்சி கழுத்துக்குச் சொந்தமானது. வேறு யாரிட்டையும் இருக்கப்படாது - விளாங்காமப் போயிருவா - நாச்சியாரு வீடு பால் பொங்கணும் - அழியக் கூடாது'

இடையே இராப்பாடியின் பின்பாட்டுக்காரன் 'படி போடுங்க' என்று கூவிக் கொண்டிருந்தான். வழக்கமாக அவன் தாயார் தான் நெல் கொண்டு வந்து போடுவாள். அன்று அயர்ந்த துக்கம் முத்துக் கறுப்பன் உள்ளே சென்று அரிசிப்பானையில் கை நுழைத் தான். எதுவோ அவன் கையைத் தடவுவது போலிருந்தது- அட்டிகைதான்.

நாழி நெல்லும் உப்பும் இராப்பாடிக்குத் தர வேண்டும். நெல் சாக்கை இரவில் அவிழ்க்க முடியாது. அரிசியும் இரண்டு சக்கரத்தையும் கொண்டு வந்து தந்தான். சிறிது நேரம் வாசற்படியிலேயே நின்று கொண்டிருக்க- இதையெல்லாம் எதிர்வீட்டு மீனாட்சி அத்தை உறங்காது கவனித்துக் கொண்டிருந்தாள் என்பதை அறியவில்லை. இராப்பாடி போய்விட்டான் என்பதை உறுதி செய்துகொண்டு அந்த அத்தை அவனைப் பார்த்து சத்தம் போடத் தொடங்கினாள்.

'லேய் - நீ மாந்தையனா - இந்த வயசிலே ராப்பாடிக்கிட்ட குறி கேக்கனுமாக்கும் - கொஞ்சமாவது ஒனக்கு இது இருக்கா'

'யத்தே - இண்ணைக்கு உறக்கம் வரல்லே - அவனும் வந்தான் - எப்பவுமா கேக்க போறோம் - சவம் ஏதாம் ஒரு தரம்'

'நல்ல சீருதான் - போய் படு என்று சலித்துக் கொண்டே தெருத்திண்ணையிலே எதுவும் விரித்துக் கொள்ளாமல் தலையைச் சாய்க்கலானாள்.

அன்றிரவு அவன் தூங்கவில்லை. சாதாரணமாக படுத்த உடனேயே தூங்குபவன் உடம்பெல்லாம் சுடுவது போல் இருந்தாலும், சுரம் மாதிரி இல்லை.

அதிகாலையில் அவன் மிதந்துகொண்டிருப்பது போன்ற தோற்றம் காலையில் கண்ட கனவு பலிக்குமாமே - அப்படித்தானிருந்தது. எழுந்த பின்னரும் மிதப்பது போன்றவாறே இருந்தது. குளித்துவிட்டு வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று துண்டை எடுத்துக் கொண்டு கிளம்பியவன். கீழத்தெரு குளத்திற்குச் சென்றே குளித்திருக்கலாம். அவனுக்கு ஏனோ நடக்க வேண்டுமென்று தோன்றியிருந்தது. மெதுவாக யோசனை எதுவும் அதிகமில்லாது ஆற்றிற்கே போனான். ஒரு மைல் துரமிருக்கும். கிராமத்திலிருந்து டவுன் பக்கம் போவதற்கு ஆற்றைக் கடந்து வரப்பு வழி நடந்தால் போதும் ஊரிலுள்ள இரண்டு உத்யோகஸ்தர்கள் - ஒருவர் சினிமா தியேட்டரில் நோட்டிஸ் கொடுப்பவர் - இன்னொருவர் டவுன் பள்ளிக்கூடத்தில் மணியடிப்பவர் - போய் வருதல் இப்பாதையில்தான்.

ஆற்றையொட்டி அதன் படிக்கட்டுகளை ஒட்டியே இருப்பது சிவன் கோவில். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வெள்ளம் அடித்துப் புரட்டிக் கொண்டு வந்தால், யார் தயவுமில்லாமல் சிவலிங்கம் அபிஷேகம் முடித்துக் கொள்ளும். பகல் நேரத்திலேயும் இருள் அடையச் செய்து விடுகிற கோவிலைச் சுற்றியுள்ள மரங்கள். அன்று அங்கே குளிக்க வரப் போகிறோம் என்று அவன் நினைத்தவனல்ல.

வேட்டியை அவிழ்த்து படிக்கட்டில் சுருட்டி வைத்து விட்டு கோவணத்தோடு இறங்கும் போது எதிர்க்கரையில் ஒர் உருவம் - சமுக்காளத்தை தலை மீது போட்டு அதனால் உடம்பு பூராவும் மூடிக் கொண்டிருந்த உருவம் தை மாதத்தில் கூட் வேர்த்து விடுகிறபடி உடம்பை மூடி ஒரு வட புலத்து மனிதன் தோற்றத்தில் நின்றது.

சரி - நின்றால் நின்றுவிட்டு போகட்டும் என்று முத்துக் கறுப்பனால் இருக்க முடியவில்லை. காலையில் வந்து போன கரம் மாதிரி ஒரு வேகம். யாரு உரத்தக் குரலில் கேட்டான். கேட்ட சப்தம் எதிர்கரைக்கு எட்டியிருக்கும். சமுக்காளம் இரண்டு கைகளையும் தூக்கி நின்றது. நயினாரே' என்று பதிலுக்கு அழைத்தது. அந்த காலை வேளையில் உடம்பு குளிர ஆற்றுத் தண்ணீர் பட்டு நிற்கையில் மரங்கள் எதிலும் பறவைகள் அமர்ந்து ஓசை எழுப்ப வில்லை. காலளவு தண்ணீர் என்றாலும் ஒடும் தண்ணீர் அதன் சப்தம் கூட கேட்கவில்லை.

முத்துக் கறுப்பன் அந்தப் பதிலில் - நயினாரே என்ற கூப்பாட்டில் - அந்த நிசப்தத்தை அறிந்தான்.

அது இராப்பாடி அவனைப் பகலில் காண்பதரிது. அவன் முகத்தை யாரும் பார்த்ததில்லை - பார்க்க கூடாது என்றும் சொல்கிறார்கள். இரவு முடிந்த அந்த நாள் காலையில் பெற்ற தரிசனம் வேறு எதையும் நினைக்கவிடாது தடுத்தது. படுத்துக் கிடந்தே குளித்துக் கொண்டிருந்தவன் ஒரே எழும்பலில் நிமிர்ந்து நீரோடும் பகுதியை கடந்து மேட்டில் ஏறி அக்கரையில் அந்த உருவம் பக்கம் போய்ச் சேர்ந்தான்.

சமுக்காளம் மறைத்த பகுதி தவிர உருவத்தின் வேறு உறுப்புகள் ஒளிவு மறைவாகத்தான் தெரிந்தன. தாடையில் தெரிந்த தாடி - கறுப்பாக - அந்த ஆளை அதிக வயதினனாக காட்டவில்லை. ஏதோ முன்னரே ஏற்பாடு செய்த சந்திப்பு போல முத்துக் கறுப்பன் அவன் முன்னால் போய்நின்றான்.

'நயினாரே - ராப்பாடில்லா'

 'என்ன இப்ப இந்தப்பக்கமா'

தூரமாகவிருந்த மலைப் பகுதியைச் சுட்டிக் காட்டி 'நாங்க அந்தப் பக்கம் தான் - நயினாரு நேத்தைக்கு உறங்கினேளா' என்று கேட்டான்.

முத்துக் கறுப்பன் பேசவில்லை.

'நயினாரு தப்பா நினைக்கக் கூடாது. பேச்சு கழுத்துக்குள்ளது வேற யாரிட்டையும் இருக்கப்படாது - சொன்னேனே கேட்டயளா',

இராப்பட்டி சிறிது தள்ளி ஆற்றின் நடுவே ஒரு பகுதியைச் சுட்டிக்காட்ட காட்டிய விரலை மட்டும் முத்துக் கறுப்பன் பார்த்துக் கொண்டிருக்க, நின்ற ஒரு கணத்தில் பெற்ற அதிர்வால் திரும்பி இராப்பாடியை உற்று நோக்கி, ஏதோ அவனுடன் ஒர் இரண்டாயிரம் ஆண்டு காலமாக பழகுபவனாக நினைத்துக் கேட்கிறான். 

'அப்படியுமா நடக்கும்' 

'நயினாரே இங்கதான்'

கிட்டதட்ட முத்துக் கறுப்பன் அந்த அட்டிகையைக் கண்டெடுத்த ஆற்றுப் பகுதியைச் சுட்டிக் கொண்டிருந்தது விரல்.

சிறிது நேரம் எங்கோ இருந்த அவனை நோக்கி ராப்பாடி திரும்பவும் கேட்கிறான். 'நயினாரே - ஒங்களுக்கும் தெரிஞ்சு போச்சா'

அசைவு கூட இல்லாது நின்றிருந்தான். ஒரு பெருமூச்சை வெளியேற்றியவாறு ராப்பாடி 'நானும் இப்படித்தான் ராப்பாடி ஆயினேன் நயினாரே' என்கிறான்.

சொல்லி விட்டு அவன் திரும்பிப் பாராது நடந்தான் - வடக்கே தூரத்தே தெரிந்த மலையடிவார காட்டுப்புதூர் கிராமம் பக்கமாக,

காட்டுப்புதூர் அடிவாரப் பகுதியில் பாம்புகள் அதிகம் என்று முத்துக் கறுப்பன் அறிவான். ஆனால் அவை ராப்பாடியை ஒன்றும் செய்து விடாது. மந்திரங்கள் தெரியும் அவனுக்கு
.
'உன் மேல் ஆணை

என் மேல் ஆணை

திரு நீலகண்டன் மீதானை' 

என்று உச்சரித்து இரு கைகளையும் படரத் தூக்கினால், அவை தலை தாழ்த்தி பின்வாங்கும். 

ராப்பாடி மலையேறி விட்டான். இனி அடுத்த வயலறுப்பின் போது தான் அவனைப் பார்க்க முடியும்.

-முத்துக் கறுப்பன் வீடு திரும்பிய போது ஊர் மூத்தவர் பெத்தாய்ச்சியா பிள்ளை உள்பட நாலைந்து பேர் வெளித் திண்ணையில் உட்கார்ந்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

சுதேசமித்திரன் படிக்கப்பட்டு பொருள் சொல்லப்படுகிறது. சுய ராச்சியம் வருமா வராதா என்ற தர்க்கம் நடக்கிறது. கூர்ந்து கவனித்தால் அது வேண்டுமா - வேண்டாமா என்ற திசையிலும் மாறிச் செல்லும்.

'' டைட்டானிக்' பற்றி ஆனந்த குமாரசாமி
தைத்தானிக் என்ற கப்பல் நீரிலே அமிழ்ந்த பொழுது அதில் உள்ள பல பெண்கள் தமது கணவரைக் கைவிட்டுத் தாம் மாத்திரம் பாதுகாக்கப்படுவதை ஆட்சேபித்தனர். இது தப்பெண்ணத்தினால் ஏற்பட்டதாகலாம்; அல்லது அவர்களுடைய கொள்கை சரியானதாயிருக்கலாம், அது அவர்களுடைய சொந்த விடயம். சில பெண்களை வலாற்காரமாகப் பிரிக்க வேண்டியிருந்தது. காதலின் பயனாக உண்டாகும் வீரம் எங்கும் ஒரே போக்குடையதாகவேயிருக்கும். இந்தியாவில் மாத்திரமன்று எப்பொழுதும் எங்கும் ஒரே வகையிலிருப்பதோடு அது மரணத்தையும்கூடத் தோற்றுவிக்கும் தன்மை வாய்ந்தது
- (சிவானந்த நடனம் என்ற நூலிலிருந்து)
காலக்குறி 22 | அக். 198
படிப்பகம்படிப்பகம்
காலக்குறி 20 | அக். 98
படிப்பகம்
WWW.padippakam.com

கதாநதி-8-மாஅரங்கநாதன்-நவீன-எழுத்து-யோகி

பிரபஞ்சன் 

http://tamil.thehindu.com/general/literature/கதாநதி-8-மாஅரங்கநாதன்-நவீன-எழுத்து-யோகி/article8326931.ece

1932-ல் பிறந்த நாஞ்சில் நாட்டு மண் மணத்துக்கும் மொழிக்கும் சொந்தக்காரர் மா.அரங்கநாதனுக்கு இப்போது வயது 84-தான். அவர் ஞானத்துக்கும் மக்கள் திரள் மேல் அவர் வைத்திருக்கும் வாஞ்சைக்கும் வயது பல்லாயிரம். சில ஆண்டுகளுக்கு முன்னால், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று மா.அரங்கநாதனைக் குறிப்பிட்டிருந்தேன். இப்போது அவருடைய 90 சிறுகதைகளும், இரண்டு நாவல்களும், கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு, ‘மா.அரங்கநாதன் படைப்புகள்' என்ற பெயரில் ‘நற்றினை’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்தப் பெரும் புத்தகத்தை ஒருசேரப் படித்த பிறகு தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாளர், படைப்பாளி அவர் என்று தோன்றுகிறது.

இரண்டு கதைகளைப் பார்த்து விட்டு அவரின் பொதுவெளிக்குச் செல்வோம்.

அவன் ஓடிக் கொண்டிருந்தான். ஓடுவதில் அவன் மகிழ்ச்சி அடைந் திருந்தான்.

அவனுக்குப் பெரியவர் ஒருவரின் முகவரி தரப்பட்டு அவரைச் சந்திப்பது அவனுக்கு நலம் பயக்கும் என்று சொல்லப்பட்டது. அவன் அவரைச் சந்தித்தான். இந்த நாடு இளைஞர்களை நம்பித்தான் இருக்கிறது என்கிறார் அவர். அவன் நடந்து வந்தபோதே அவருக்கு என்னவோ தோன்றியது. ‘ஏன் இத்தனை நாள்? முன்பே ஏன் வரவில்லை’என்று கேட்கவும் எண்ணினார்.

பெரியவருக்கு வயது 60 இருக்கும். விளையாட்டு விஷயங்களில் தன்னை மூழ்கடித்துக் கொண்டவர். அந்த நாட்டின் எல்லாச் செய்தித்தாள்களிலும் அவர் புகைப்படம் வந்திருக்கும். ‘‘நான் என் நாட்டுக்காக என் விளையாட்டுக் கலையை அர்ப்பணித்தவன்” என்று அவர் சொன்னார்.

அவர் அவனுக்கு விளையாட்டுப் பயிற்சி அளித்தார். விடிவதற்கு முன் எழுந்து அவன் ஓடத் தொடங்கினான். நெடுஞ்சாலையில் ஓடும் பழக்கம் கொண்டான். தம்பியைத் தோளில் வைத்துக்கொண்டு ஓடிப் பயிற்சி பெற்றான். பெரியவர் அவன் சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்தார். கொழுப்பற்ற உணவு வகைகள் அவனுக்குத் தரப்பட்டன.

வீடியோவில் உலக வீரர்கள் பற்றி அவனுக்குப் போட்டுக் காட்டப்பட்டது. ஒரு மல்யுத்தப் போட்டியில் வேற்று அணி நாட்டுக்காரன் குத்துவாங்கி மூக்கு நிறைய ரத்தம் வருகையில் பார்த்தவர்களின் சத்தம் - அதோடு இடையே ஒரு பார்வையாளன் முடிந்து விட்ட தனது சிகரெட் துண்டை ஆக்ரோஷத்துடன் கீழே நசுக்கி துவம்சம் செய்தல் -இவ்வகைக் காட்சி களைக் கண்டு முடிக்கையில் அவன் தனக்குள் ஏதோ ஒன்று ஏற்பட்டிருப் பதாக உணர்ந்தான். அன்றிரவு தொலைக்காட்சியில் ‘இந்த நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்’ என்று அவன் அறிமுகப்படுத்தப்பட்டான்.

ஆனால் நெடுஞ்சாலையில் அவன் அதிகாலை ஓட்டம் தொடர்ந்தது. 22 மைல் ஒடி இருக்கிறான். உலக ரிகார்டை அவன் நெடுஞ்சாலையிலேயே முறி யடித்துவிட்டான் என்று பெரியவர் சொல்லி மகிழ்வார். ‘ஒரு மராத்தான் தேறிவிட்டான். இந்த நாடு தலை நிமிரும்’ என்று பத்திரிகை நிருபர்களிடம் சொல்லி மகிழ்ந்தார்.

அவன் பெயர் முத்துக்கருப்பன் அடுத்த ஒலிம்பிக் வீரன் என்று பத்திரிகைகள் எழுதின அன்றுதான் அதிகாரபூர்வமாக ஒலிபரப்பாக இருந்தது. கையில் சுருட்டுடன் பெரியவர் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார்.

பேட்டி தொடங்கியது.

‘‘நீங்கள் போட்டியிடும் வீரராக-ஒலிப்பிக்கில் கலந்துகொண்டால் மகிழ்ச்சிதானே?’’

‘‘எனக்கு ஓடுவதில் ரெம்பவும் மகிழ்ச்சி!’’

‘‘நமது நாட்டுக்குப் பெருமை தேடித் தருவீர்கள் அல்லவா?’’

‘‘ஓடுவது ரொம்பவும் நன்றாக இருக்கிறது…’’

‘‘போன ஒலிம்பிக்கில் வென்ற வீரர் பற்றி உங்கள் கருத்து?’’

‘‘ஓடுபவர்கள் எல்லோருமே மகிழ்ச்சி அடைவார்கள்.’’

‘‘நமது நாடு விளையாட்டில் முன் னேறுமா..?’’

அவன் பேசாதிருந்தான். பெரியவர் தலை குனிந்திருந்தார்.

அவன் மீண்டும் சொன்னான்:

‘‘எனக்கு ஓட மட்டுமே தெரியும். அதிலே எனக்குக் கிடைப்பதுதான் நான் ஓடுவதற்குக் காரணம். நான் எனக்காகவே ஓடுகிறேன். ஓட்டத்தின் சிறப்புத்தான் அதன் காரணம். நான் பொய் சொல்ல முடியாது. எனக்கு வேறேதுவும் தெரியாது.’’

பெரியவர் சுருட்டைக் கீழே போட்டு நசுக்கித் தள்ளினார்.

பேட்டி முடிந்தது.

பெரியவர் காரின் கதவைத் திறந்தார்.

அவன் வெகு தூரத்துக்கு அப்பால் இருந்த குன்றுகளைப் பார்த்தவாறே அவரிடம் கெஞ்சலுடன் கூறினான்.

‘‘இந்த அருமையான நிலவில் ஓட முடிந்தால் எப்படி இருக்கும் என்கிறீர்கள்?’’

‘‘நன்றாக இருக்கும். வேண்டுமானால் நீ இப்பவே ஓடு. அந்தக் குன்றின் உச்சிக்கே போய் அங்கிருந்து கீழே குதித்துச் செத்துத் தொலை…’’

இக்கதையின் தலைப்பு ‘சித்தி’. ஓடுபவனாகிய அவன், தன்னை ஓட்டத் தில் இனம் காண்கிறான். ஓட்டம் வேறு அவன் வேறல்ல. ஓட்டத்துக்குள் அவனும்; அவனுக்குள் ஓட்டமும் இருக்கும்போது, ஓட்டம் அவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவே அவன் சித்தம். ஓட்டத்தை மட்டுமே அவன் அறிவான். அவன், அவனுக்காகவே ஓடுகிறான். ‘சித்தத்தைச் சிவன்பால் வைத்தல்’ என்பார்கள் சைவர்கள். அவன் ஓட்டத்தில் வைத்தான். விஷயம் எதுவானால் என்ன? தன்னையே அர்ப் பணிப்பு செய்கிறவனுக்குக் கற்பூரம், ஆரத்தி, மாலை மரியாதை என்னத் துக்கு? பெரியவர், கரடிக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கிறார். யானையை ஸ்டூலின் மேல் நிற்கச் சொல்கிறார். மனசுக்குள் காடுள்ள மிருகத்தை யார்தான் பழக்க முடியும்? இதுதான் பிரச்சினை.

குழந்தைகள் விளையாட்டை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு குழந்தை ‘‘கைப் பொம்மைக்கு ஜுரம்; ஐயோ, டாக்டர் என் குழந்தையைப் பாருங்களேன்” என்று சொல்லும். இன் னொரு குழந்தை டாக்டராக இருந்து மருந்து எழுதிக் கொடுக்கும். பொம்மை யின் தாயான குழந்தையின் முகத்தைப் பார்த்திருக்கிறீ்ர்களா? சோகம் வடியும். இதுதான் ‘சித்தி’. தானே அதுவாக ஆதல். வீரன் என்பவனுக்குத்தான் வில்லும் அம்பும் தேவை. சுத்த வீரனுக்கு அது தேவை இல்லை.

மா.அரங்கநாதன் நம்மை யோசிக்கச் சொல்கிறார். அவர் கதையில் பல பாத்திரங்கள் நட்சத்திரத்தை, வானத் தைப் பார்த்துக்கொண்டு அப்படியே நிலைகுத்தி இருப்பார்கள்.

அந்தச் சுற்றுலாக் குழுவுக்கு 20 பேர்தான் என்று முதலில் தீர்மானம். 21 நல்ல நம்பர் என்பது குழுத் தலைவரின் எண் கணித நம்பிக்கை. முத்துக்கருப்பன் இணைக்கப்படுகிறார். சமதரையில் நடந்து படிக்கட்டுகளில் கீழே வந்தால் அந்தக் கோயில். அம்மன் சந்நிதியில் கூட்டம். ஒரு மூதாட்டி ‘நாராயணி’ என்று பக்கத்து வீட்டுக்காரியைக் கூப்பிடுவது போல அம்மையை அழைத்து அரற்றுகிறாள். இறைவி பக்கத்து வீட்டுக்காரிதான். எல்லோரும் பேசிக்கொண்டு, அம்மனில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கத்தில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு சில பெண்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இடை இடையே ‘அம்மே அம்மே’என்று ஒரு சத்தம். அது அப்பெண்கள் போடும் சத்தம் இல்லை. அடிக்கடி கேட்கும் சத்தம். வேறு எங்கிருந்தோ வேறுவகை உச்சரிப்புடன் அதே சத்தம். அந்த ஒலியை தான் எப்போதுமே கேட்டுக் கொண்டிருப்பதாக முத்துக்கருப்பன் நினைவுகூர்ந்தார்.

அவன் நினைவு பின்னோக்கிச் செல்கிறது. ஒரு தொன்னூறு ரூபாய் விவகாரம் அது. எங்கிருந்து கிடைக்கும்? அப்பாவின் பாக்கெட்டில் இருந்துதான்.

சின்ன அறை. அப்பா கட்டிலின் மேலும் அம்மா தரையில் பாய் விரித்தும் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவன் பணம் எடுத்துக்கொள்கிறான். பணத்தோடு கடிதம் ஒன்றும் கைக்கு வருகிறது. அதை மீண்டும் பையில் வைக்கத் திரும்புகிறான். அவன் கால்பட்டு பெரிய இரும்பு கம்பி சாய்ந்தது. அதன் கீழே அம்மா படுத்திருந்தாள். திருடன் வேலை என்று போலீஸ் எழுதியது.

முத்துக்கருப்பனுக்கு அவன் இப்போது லட்சாதிபதி - மீண்டும் அந்த ‘அம்மே’ என்ற சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. தாமதம் செய்ததால், சுற்றுலாக் குழு போய்விட்டிருந்தது. ஏழு மைல் விடுதிக்கு. நடக்கத் தொடங்குகிறான் முத்துக்கருப்பன். அவன் சென்று சேர்ந்த இடம் போலீஸ் கமிஷனர் ஆபீஸாக இருந்தது.

இந்தியத்தத்துவத்தோடு நவீன கதை சொல்லியாக உருவானவர் மா.அரங்கநாதன். தத்துவம் அவரது கதைகளில் துருத்திக்கொண்டு இருப்ப தில்லை. கால் இடித்துக்கொண்டால், ‘ஐயோ கடவுளே…’ என்கிற சாதாரண மனிதர்களின் எழுத்தாளர் அவர். புதுமைபித்தனின் இன்றைய நவீன, சுயமான பதிப்பு. ‘காக்கைச் சிறகினிலே என்றவுடன் கண்ணபிரானிடம்தானே வந்துசேர வேண்டியிருக்கிறது’ என் கிறார் மா.அரங்கநாதன் பாரதி நினைவுகளோடு.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தமிழ் எழுத்தாளர் மா.அரங்கநாதன்.