Pages

Saturday, November 18, 2017

தோற்றங்களின் மயக்கம் : Lakshmi Manivannan : அப்பாவின் வீட்டில் நீர் பாய்ந்து செல்லும் சுற்றுப் புறங்களிலெல்லாம் செடிகள் நிற்கும் "- நாவல் முன்னுரையிலிருந்து ..

Lakshmi Manivannan
3 November 2014 ·



தோற்றங்களின் மயக்கம்

"அப்பாவின் வீட்டில் நீர் பாய்ந்து செல்லும் சுற்றுப்புறங்களிலெல்லாம் செடிகள் நிற்கும் " என்கிற என்னுடைய இந்த நாவலை ;நீளமான கதை என்றோ ,குறு நாவல் என்றோ குறிப்பிடவும் ,முடிவு செய்யவும் ; வாசகர்களுக்கும் ,நவீனத்துவ விமர்சகர்களுக்கும் தோதுப்படுமா என்று தெரியவில்லை .அதற்கான முக லட்சணம் இதில் இல்லை . நவீன விமர்சகர்களுக்குத் தோதுப்படுமா என்பது எனது லட்சியமும் இல்லை .பொதுவாக தமிழ் நாவல்களுக்கு உத்தேசிக்கப்படுகிற கதையோ,தொடர்ச்சியோ ,முடிவோ இதன் பக்கங்களில் உருவாகவில்லை . குறைந்த பட்சமாக எழுத்தாளன் என்கிற வகையில் ,எழுத்தின் போக்கை நிச்சயிக்க என்னால் எடுக்கப்பட்ட முயற்சியையும் இந்த பக்கங்கள் வெளியேற்றிவிட்டன .


கலை வடிவம் பற்றி நிச்சயிக்கப் பட்ட வரையறை கொண்டோருக்கும் ; தற்காலச்சூழலில் விவாதிக்கப்படுகிற கருத்துப்பண்டங்களின் நேரடி விளைவு அப்பட்டமாக எழுத்தில் தெரியவேண்டும் என விரும்புவோருக்கும், ஏதேனும்
விசித்திரமான சாகசங்களை எதிர்நோக்கி வாசிப்போருக்கும் இந்த பக்கங்கள்
மனச்சுணக்கத்தை ஏற்படுத்தக்கூடும் .ஆனால் என்னுடைய வாசகர்களுக்கு இவை முக்கியமான பக்கங்களாக அமையும் என்கிற எண்ணம் எனக்கிருக்கிறது .என்னையும் ,அவர்களையும் குறிப்பிட்ட தொலைவுவரையில் அறிய வாசகர்களுக்கு உதவும் .ஏனெனில் இந்த பக்கங்களை எழுதும்போது நான் அறிந்து கொண்டவை அதற்கு முன்னால் அறியாதவை .

மனம் என்று அறியப்படுகிற ஒன்று,பல முனைகளில் இந்த பக்கங்களை எழுதும்போது துலங்குவதை உணர்ந்தேன் .அந்த முனைகளை எல்லாம் வாசகன் கோர்த்து இணைத்துக்கொள்ள எந்த அளவுக்கு உபயோகப் பட்டிருக்கிறேன் என்பதை இப்போது உணர இயலவில்லை .சேதாரமின்றி வாசகனிடத்திலும் இந்த பக்கங்கள் துலங்கிவிடுமாயின் அது புண்ணியம் .மங்கலாகத் துலங்கினாலும் சிறப்பானதே .

ஏற்கனவே சொல்லபட்ட கதைகளின் தொடர்ச்சியாய் கதைகளை உருவாக்குவது போலவே ;சொல்லப்பட்ட கதைகளைக் கழற்றி , குறிப்பாக சைக்கிளை அதன் உதிரிபாகமாக மாற்றிவிடுவதுபோல;கதையைக் கழற்றும் கதையற்ற கதையை உருவாக்குவதற்கும் இடமுண்டு என்கிற கருத்து எனக்குண்டு .கதை என்கிற ஒன்று ,வாசகனின் மனதில் திரட்சி கொள்வதற்குப் பதிலாக ,பல முனைகளையும் துலங்கச் செய்து ,வாசகன் ; கதை என்கிற சுவாரசியம் நோக்கிச் சரிந்து விடாமல் செய்கிற கதை அல்லது எழுத்து முறையே நான் குறிப்பிடுவது .அதன் மூலம் காப்பியங்கள் மனதில் இயங்கும் முறையை மாற்றியமைத்துக் கொள்ளவோ ,மனதில் அது இயங்கும் முறையிலிருந்து தற்காத்துக் கொள்ளவோ வாய்ப்பு உருவாகிறது .

என்னுடைய இந்த நாவலின் பக்கங்களில் கதாபாத்திரங்களின் திரட்சி கொள்ள இயலாத பண்பு ,எனது மனோபாவத்துடனும் தொடர்புடையது . அகம் , புறம் என்று பகுக்கப்பட்டுள்ள பொதுப்படையான பிரிவுகளில் எனக்கு
எனக்கு நம்பிக்கை இல்லை .புறத்தோற்றங்களின் மீது அகத்தோற்றங்களின்
விந்தைகளும் சாரமும் கவிந்துள்ளன .மிகச் சாதாரணமானவை என்றும்,தினசரி வாழ்வில் மேலோட்டமானவை என்றும் எதிர் கொள்ளப்படும் நிகழ்வுகள் பல ;அசாதாரணமாகவும் .உள்ளடுக்கின் சாரம் செறிந்த பொருக்குகளாகவும் உள்ளன .அகம்,புறம் என்பவை என்னைப் பொறுத்தவரையில் தனித்து எதையும் சுட்டுவதில்லை .பொருள் தருவதுமில்லை .நிகழ்வுகளை முன்னிட்டு அவை மயக்கமடைந்து விடுகின்றன .

கொலை என்கிற நிகழ்வு இந்த நாவலில் பௌதிகமாக நிகழவில்லை . ஆனால் நாவலின் பக்கங்களில் தொடர்ந்து அது நடித்துக்கொண்டிருக்கிறது . நீர்ப்பரப்பில் கொளுத்து வளரும் செடிகளைப் போன்று கொலைக்கான சாத்தியங்கள் குருகுருவேன தளிர்த்துக் கொண்டிருக்கின்றன . கொலைக்கான வடிவங்கள் திட்ட வட்டமாக வரையறை செய்ய இயலாதவை .நுட்பமானவை .ஆனால் ஏகதேசமாக அதன் இருப்பிடம் புலப்படுகிறது .கொலை நிகழ்வதற்கு முன்பே நிகழ்வுக்கான இடம் தயாராகிவிடுகிறது .பிறகு நிகழும் சம்பவம் முக்கியமாகக் கருதப் படவேண்டியதும் அல்ல .முன்பே தனது தகர உள்ளடுக்கில் கொலையை வேண்டி இடம் அதிரத் தொடங்கி விடுகிறது .

பனிப்பள்ளங்களை அறிய இழுத்துச் செல்லப்படும் பிராணிகளைப் போல .கொலையின் வெளிர் நிறத்தை முயன்றிருக்கிறேன் .

கொலை என்பது பௌதீக இருப்பை இழக்கச் செய்யும் நிகழ்வு மட்டுமல்ல , சட்டங்கள் -தண்டனைகள் -அரசு -விளையாட்டு -கலவரம் என்றுள்ள வெளிப்படையான விந்தைத் தோற்றங்களிலும் ,உள்ளுணர்விலும் : இருப்பிற்கான பங்களிப்பை மறுத்துவிடுகிற நிகழ்வுமாகிறது . படிமங்கள்,சித்திரங்கள் ஆகியவை கொலை நிகழ்வதற்கான முலகங்களாக வினையாற்றுகின்றன .படிமங்களை முன்வைத்து அதிகாரம் தனது விளையாட்டைத் தொடங்குகிறது .

மனம் எனும் மையப்பரப்பை விழிப்பற்று இயங்கச் செய்கிற மனம் , காப்பியங்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்திவிடுகிறது.பொதுவாக சொல்லப்படுவதுபோல படைப்பு எழுச்சி ஏதும் இந்த நாவலை எழுதும்போது ஏற்படவில்லை

இந்த நாவலை எழுதும் காலத்தில் சுந்தர ராமசாமி ஊக்கமாகத் திகழ்ந்தார் . எனது இந்த நாவலையும் அவருக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறேன் .சுந்தர ராமசாமிக்கு பிறருடன் செலவு செய்ய காலமிருந்தபோது அதிர்ஷ்டவசமாக அவரது நண்பனாயிருந்தேன் .அவரது நட்பு ,நீண்ட காலம் சிரமப்பட்டு ஒருவர் அறிந்து கொள்ள வேண்டிய அனுபவங்களை எளிதாக்கியது .மிகக் குறுகிய காலத்தில் அனுபவத்தை வசமாக்கியது .புத்தகங்களை தேர்ந்தெடுத்து மட்டுமே படிக்க உதவியது .திரும்பிப் பார்க்கும்போது அவருடனான நட்பின் நினைவுகள் இனிமையாக உள்ளன .

நூல்களில் தெரிவித்து விடாத எதையும் முன்னுரைகளில் தெரிவித்து விட இயலாது என்று கருதுகிற எழுத்தாளர்கள் உண்டு .எனது நூல்களுக்கு எனது முன்னுரைகள் அவசியமாகவே இதுவரையில் இருந்துள்ளன .அந்தந்த நூல்களில் வெளியாகி இருக்கும் முன்னுரைகளுக்கும் அந்த நூல்களுக்குமிடையில் இணைப்பு இருப்பதாகவே கருதுகிறேன் .இந்த நூலும் அவ்வாறே அமைகிறது .

லக்ஷ்மி மணிவண்ணன்
23-12-2001

(" அப்பாவின் வீட்டில் நீர் பாய்ந்து செல்லும் சுற்றுப் புறங்களிலெல்லாம் செடிகள் நிற்கும் "- நாவல் முன்னுரையிலிருந்து ..

அகரம் .பிளாட் எண்: 1,நிர்மலா நகர்,தஞ்சாவூர் -613 007
பக்கம் :160 முதல் பதிப்பு :2001 " )

painting-shin kwangho