Pages

Sunday, December 17, 2017

வலி - பாமா

வலி

பாமா | சிறுகதைகள்

http://www.sirukathaigal.com/குடும்பம்/வலி/#more-5954
கண்ணாங்குடில அன்னைக்கு ஒரு துடியாகிப் போச்சு. ஒத்தச் சனம் வேல வெட்டிக்குப் போகல. ஒரு கெழடு கெட்ட போயிருந்தாலே ஊச்சனம் பூராம் ஒன்னாக் கெடந்து ஒப்பாரி வைக்கும். இப்பச் செத்துருக்கது, கொஞ்ச வயசுப் பிள்ள. அதப் பத்திப் பேசாத ஆளு இல்ல. செத்துப் போன பூரணிக்கு மிஞ்சி மிஞ்சிப் போனா முப்பது வயசுக்குள்ளாதான் இருக்கும். கலியாணம் முடுச்சு ஒரு ஏழெட்டு வருசம் ஆகிப்போச்சு. பிள்ளையே இல்ல. அவளும் என்னென்னமோ வைத்தியமெல்லாம் செஞ்சு பாத்தா. ஒன்னும் ஜெனிக்கல. நல்லாத்தான் இருந்தா. இப்பிடித் திடீர்னு செத்துட்டாங்குங்றாக. அவா எப்பிடிச் செத்தான்னு ஆளாளுக்கு அவுகளுக்குத் தெருஞ்சத கூடக் கொறச்சு சலிக்காமெச் சொல்லிக்கிட்டு இருந்தாக.”பிள்ள உண்டாகனும்னு எங்குட்டெங்குட்டோ போயி மருந்து வாங்கிச் சாப்புட்டுக்கிட்டு இருந்தாள்ள… போன வாரத்துல யாரோ சொன்னாகன்னு மேற்க என்னமோ குருவிக்காரம்பட்டின்னு ஒரு ஊர்ல போயி எவங்கிட்டயோ என்னமோ ஒரு லேகியம் வாங்கியாந்து சாப்புட்டாளாம். அதுல ஆரம்பிச்சுதுதான். அன்னைலருந்து வாயால வகுத்தால போயிக்கெடந்துருக்கா. மூனே நாளுதான். போயிட்டா.”

“ரத்தரத்தமா வாந்தி எடுத்துல செத்துருக்கா.”"இல்ல. வெளிக்குப் போற எடத்துலருந்து ரத்தமா ஊத்துச்சாம். வகுத்து வலில துடுச்சுப் போனாளாம் துடுச்சு.”"அப்பிடி இல்லையாம். பிள்ள இல்லாத கவலைல என்னத்தையோ குடுச்சுட்டாளாம். வெளிய தெரியக்கூடாதுன்னு இப்பிடிச் சொல்லிக்கிட்டு இருக்காக”. ரொம்பா ரகசியமா கிட்டத்துல நெருங்கி வந்து அருளாயி சொன்னா.”சே. நீயி ஓம்பாட்டுக்கு என்னத்தையுஞ் சொல்லிக்கிட்டுத் திரியாத அருளாயி. அப்பிடிச் சாகுறவள்னா இத்தன வருசத்துல செத்துருக்க மாட்டாளா என்ன? அவா புருசன் அவள ப+வோ, பொன்னோன்னு அப்பிடித் தாங்குவான். அப்பிடி இருக்கைல தற்கொல செய்யனும்னு எவளாவது நெனப்பாளா? எல்லாம் அந்த மருந்து செஞ்ச வேலதான். அதுல சந்தேகமே இல்ல||. கருப்பாயி திட்டவட்டமாச் சொன்னா.

“இப்ப பிள்ளையில்லாட்டா என்ன கெட்டுப் போச்சு? பிள்ள பெத்தவளுகல்லாம் என்னத்த வாரிக்கெட்டிக்கிட்டாளுக? அநியாயமா உசுரப் போக்கடுச்சுட்டாளே… பாதகத்தி மகா …சாக வேண்டிய வயசா?”.ஆளாளுக்குப் பேசிக்கிட்டு இருக்கும்போதே பக்கத்து ஊர்ல இருந்து சொந்தக்காரங்கள்ளாம் கூட்டமா வந்து ஒருத்தர ஒருத்தரு கட்டிப் புடுச்சுக்கிட்டு ஒப்பாரிய ஆரம்புச்சுட்டாங்க. அம்புட்டுத்தான். அடுத்து ஒரு அரமணி நேரத்துக்கு அவுகளோட ஒப்பாரிச் சத்தம் ஓயல. அவுகவுகளுக்குத் தெருஞ்ச ஒப்பாரிப் பாட்டுகள உருக்கமாப் பாடுனாக. அந்தச் சத்தத்தக் கேக்கவும் அம்புட்டுப் பேரும் கப்புச் சிப்புன்னு ஆகிட்டாக. பயங்கரமான சோகம். அந்தப் பாட்டு அம்புட்டுப் பேரோட மனசயும் புழுஞ்சு எடுத்துருச்சு. அழாத கண்ணுலருந்து கூட கண்ணீரு பொங்கி வழுஞ்சது. கண்ணுகளத் தொடச்சுக்குட்டு மூக்கச் சீந்திச் சீந்திப் போட்டாக.”சரி, சரி ஆம்பளைகள்ளாம் கொஞ்சம் எந்துருச்சு அப்பால போங்க. பொணத்தக் குளுப்பாட்ட வேண்டாமா? குளுப்பாட்டி வச்சுட்டா பொறகு மனம் போல அழுதுட்டு போயிப் பெதைக்கலாம்”. அஞ்சலப் பாட்டி அதட்டலாச் சொன்னா.

அம்பட்டு நேரமும் அழுதுக்கிட்டு இருந்தவுக அம்புட்டுப் பேரும் சொல்லி வச்சது கணக்கா ஒடனே அழுகய நிப்பாட்டுனாக. ஆம்பளைக எந்துருச்சுப் போயி பந்தலுக்கடில போட்டுருந்த பெஞ்சுக, நாற்காலிகள்ள எடம் புடுச்சு உக்காந்துட்டாக. பந்தக்காலுகளப் புடுச்சு வெளாண்டுக்குட்டு இருந்த சின்னஞ்சிறுசுகள்ளாம் என்னமோ நடக்கப் போகுதுன்னு வீட்டுக்குள்ள ஓடியாந்தாக. அவுகளப் பூராம் பொம்பளைக வெளிய போச் சொல்லி தொரத்தி உட்டாக. ஒன்னும் புரியாமெ மறுபடியும் வெளிய ஓடிப் போயி வெளாட்டுகளத் தொயந்து வெளாண்டாங்க. பிள்ளைக எடைல ஏதாவது சத்தம் போட்டா, அவுகள ஆம்பளைக அரட்டி உட்டாக. பொணத்தக் குளுப்பாட்டி, புதுச்சீலையக் கட்டி வாசலுல வச்சுருந்த பெஞ்சு கெடத்தி வச்சாக. பொம்பளைக சுத்தி உக்காந்து ப+ரணியோட அரும பெருமைகளப் பத்திப் பேசிக்கிட்டுருந்தாக. ஊடால யாராச்சும் து~;டி கேட்டு வந்து அழுகைல மட்டும் பேச்ச நிப்பாட்டிட்டு ஒன்னாச் சேந்து ஒப்பாரி வச்சுக்கிட்டாக.

பெணத்த எடுக்க சாயங்காலம் ஆகும்னு சொல்லிக்கிட்டாக. பூரணியோட கூடப் பெறந்த அண்ணங்காரன் எங்கயோ தூரந்தொலவட்டுல இருக்கானாம். அவம் பொறப்புட்டு வந்துசேர எப்பிடியும் சாயங்காலம் ஆகுமாம். அவெ வந்தப் பெறகுதான் எடுப்பாக. மீதிப் பேரெலாம் ஒவ்வொருத்தரா வந்துக்கிட்டே இருந்தாக. நேரமாக ஆக கூட்டம் அதிகமாகிட்டே இருந்துச்சு. திடீர் திடீர்னு ஒப்பாரிகளும், ஊடால பேச்சுகளுமா நேரம் போயிட்டுருந்துச்சு.பூரணியோட புருசக்காரன் பித்து புடுச்சது கணக்கா குனுஞ்ச தல நிமுராம உக்காந்திருந்தான். தோளுல கெடந்த துண்ட வச்சு அப்பப்ப கண்ண தொடச்சுக்குட்டான். அவனப் பாக்கைல பரிதாவமா இருந்துச்சு. பாவம்! இனி ஒத்தைல கெடப்பான். பூரணியொட அய்யன் ஒரு அப்ராணி! துக்கந் தாங்கமாட்டாமெ வெளித்திண்ணைல உக்காந்தவந்தான். மலங்க மலங்க முழுச்சுக்கிட்டு இருந்தான். அவுகம்ம பார்வதி நெஞ்சாங்கொலைலயும் வகுத்தலயும் அடுச்சுக்குட்டு கதறிக்கிட்டு கெடந்தா. பெத்த வகுறுல்ல! பூரணியோட தாய்மாமன் கணேசந்தான் அம்பட்டுக் காரியத்தையும் எடுத்துப் போட்டு செஞ்சுக்கிட்டு இருந்தான். அவுக வழக்கப்படி பாட கட்டி அதுல பிரேதத்த வச்சுத் தூக்கிட்டுப் போயி இடுகாட்டுல பெதைப்பாக. வீட்டுக்கு மேற்க நாலஞ்சு பேரு பாட கட்டிக்கிட்டு இருந்தாக. அவுகளச் சுத்தி பத்து சின்னப்பெயல்க வேடிக்க பாத்துக்கிட்டு நின்னாக. பெணத்த எடுத்துகிட்டு போகைல மேளம் அடிக்கிறதுக்காக மேளக்காரனுக மேளத்த நெருப்புல காட்டி சூடேத்திக்கிட்டு இருந்தாக. ஊரு நாட்டாமெ செய்ய வேண்டிய சடங்கு முறைகளப் பத்தி அப்பைக்கப்ப ஞாவகப் படுத்திக்கிட்டு இருந்தாரு. சாமிக்கண்ணு தாத்தா பூரணியோட அய்யங்கிட்ட சத்தமாச் சொன்னாரு.

“என்ன மாடசாமி, இப்பிடி இடுஞ்சு போயி உக்காந்து என்ன செய்ய? ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவுக திருப்பி வரவா போறாக? மண்ட நரச்சுப் போன நம்மள்ளாம் கெடக்கைல சின்னஞ்சிறுசு: வாழ வேண்டிய வயசுவ போயிருச்சே… என்ன செய்ய? நம்ம என்ன செய்ய முடியும், என்ன கணேசா, செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சுட்டியாடா? வாங்க வேண்டியதெல்லாம் வாங்கியாந்தி;ட்டியாடா,”.”செஞ்சுக்கிட்டே இருக்கேன் தாத்தா. ஏறக்கொறைய எல்லாம் முடுஞ்சது. நாலு மணிக்கெல்லாம் எடுத்துரலாம் தாத்தா”.”கோழிக்குஞ்செல்லாம் ரெடியாடா?”.”கோழிக்குஞ்சா? அதெதுக்கு தாத்தா? கோழி வாங்கனும்னு ஒருத்தரும் எங்கிட்ட சொல்லலையே தாத்தா.”

“சொல்லலையா? ஏலேய், பிள்ளையில்லாத சின்னப்பொண்ணு செத்துருக்கு. கோழிக்குஞ்சு இல்லாம எப்பிடிடா பெதைக்கிறது? இந்தக்காலத்து பெயல்களுக்கு இதெல்லாம் எங்க தெரியப் போகுது? தெரியாட்டி நாலு பெரியாளுககிட்ட கலந்து பேசிச் செய்யனும். அதுவுமில்ல. நானு இப்ப ஒங்கிட்ட கேட்டது நல்லதாப் போச்சு. இங்க வாடா. நாஞ்சொல்லப்போறத நல்லாக் கேட்டுக்கோ. அதுபடி எல்லா ஏற்பாட்டையும் செய்யுடா.”"சரி, சொல்லு தாத்தா” கணேசன் தாத்தாகிட்டத்துல வந்து உக்காந்தான்.”நம்ம வழக்கப்படி சனிக்கிழம பொணம் உழுந்தா பொணத்த இடுகாட்டுக்குதத் தூக்கிட்டுப் போகைல வீட்டுலருந்து இடுகாடு வரைல ஒருத்தரு கடுகு அள்ளித் தெளுச்சுக்கிட்டே போகனும்டா.”"அதெதுக்கு தாத்தா?”.

“எதுக்கா? ஊடால நாயித்துக்கெழம வருதுலடா. சனிக்கெழம பெதச்ச பொணத்தோட ஆவி தொணப்பொணம் கேட்டு எந்துருச்சு ஊருக்குள்ள வரும்டா. அப்பிடி வரைல அது வழில தெளுச்சுக்குற கடுகப் பூராம் பெறக்கிட்டுத்தான் ஊருக்குள்ள வரனும். அப்பிடி அது அம்புட்டுக் கடுகையும் பெறக்கிட்டு ஊருக்குள்ள வாரதுக்குள்ள நேரமாகிப்போகும். நேரமாகிப் போகவும் திருப்பி இடுகாட்டுக்கே போயிரும்டா. விடுஞ்சப் பெறகு ஊருக்குள்ள வராது. அப்ப ஊருக்குள்ள இன்னொரு பொணம் உழுகாதுல்ல. அதுக்குத்தான். இது நானு சின்னப் பிள்ளையா இருந்த காலத்துல இருந்தே இருக்குடா.”

வேறொரு சமயமா இருந்துருந்தா கணேசன் தாத்தாகிட்ட ஒரு பெரிய வாக்குவாதமே செஞ்சுருப்பான். இப்ப மனசு இருந்த நெலமைல அவனால எதையும் பேச முடியல. அமைதியா அவருட்ட கேட்டான்,

“சரி தாத்தா. ஒரு ரெண்டு கிலோ கடுகு வாங்கியாரச் சொல்லிடுறேன். பெறகென்னமோ கோழிக்குஞ்சி வேணுமின்னு சொன்னியே. அதெதுக்கு?”.

“ஆமாடா கலியாணம் முடுச்சு சின்னவயசுலயே பிள்ள இல்லாமெச் செத்துப்போனா அந்த ஆவிக்கு பிள்ள ஏக்கம் இருக்கும். அந்த ஏக்கத்துல ராத்திரி எந்துருச்சு பிள்ள தேடி ஊருக்குள்ள வந்துரும். அப்பிடி வந்தா ஊருக்குள்ள இன்னொரு பொணம் உழுந்துரும்ல. அதுனால என்ன செய்வாகன்னா பொணத்த பாடைல வச்சுத் தூக்குறதுக்கு முன்ன ஒரு கோழிக்குஞ்சிய அந்தப் பாடைல ஒரு ஓரத்துல கட்டி உட்டுறனும். பெறகு பொணத்தப் பெதைக்கைல கூட அந்தப் பாடைல ஒரு ஓரத்துல கட்டி உட்டுறனும். பெறகு பொணத்தப் பெதைக்கைல கூட அந்தக் குஞ்சியையும் போட்டுப் பெதச்சிறனும்டா. இதெல்லாம் தலமொறத் தலமொறையா ஊருக்குள்ள செஞ்சுக்கிட்டு வார வழமைக. நீயும் போயி ஒரு கோழிக்குஞ்சி வாங்கியாந்திருடா. நாட்டுக் கோழியாப் பாத்து வாங்கு”.

சாமிக்கண்ணு தாத்தா சொன்னது மாதிரியே கணேசன் எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சான். கோழிக்குஞ்சிய வாங்கிட்டு வந்து அவனோட வீட்டுத் திருணைல கட்டிப் போட்டான். அவனோட நாலு வயசு மகன் பால்பாண்டிக்கு அந்தக் கோழிக்குஞ்சியப் பாத்து ரொம்பாச் சந்தோசமா இருந்துச்சு. அதுக்குப் பக்கத்துலயே உக்காந்துக்குட்டு இருந்தான். அதுக்கு கொஞ்சம் அரிசிய அள்ளிப் போட்டுட்டு அது கொத்தித் திங்கிறதப் பாத்து சந்தோசப்பட்டுக்கிட்டான். ஒரு சின்னக் கிண்ணத்துல தண்ணியுங் கொண்டாந்து அது வச்சான். அந்தக கோழியும் இன்னங் கொஞ்ச நேரத்துல சாகப் போறம்னு தெரியாம திரு திருன்னு முழுச்சுக்கிட்டு அரிசியப் பெறக்கிட்டு இருந்துச்சு. எடைல என்னமோ எடுக்க வீட்டுக்கு வந்த கணேசன் மகனப் பாத்துட்டு,

“ஏலேய் பாண்டி, குஞ்சியக் கிஞ்சிய அவுத்து உட்டுறாதடா. பெறகு புடிக்க முடியாது. நீயி எதுக்குடா இங்னக்குள்ளயே காவக் கெடக்குற? எந்துருச்சு அம்மைட்டப் போடா”. சொல்லிட்டு அவனத் தூக்கிக் கொண்டுபோயி அவுகம்மைட்ட உட்டுட்டு வேற வேலைகளக் கவனிக்கப் போயிட்டான்.

பால்பாண்டிக்கு அவுகம்மைட்ட இருக்க முடியல. அந்தக் கோழிக் குஞ்சியவே நெனச்சுக்கிட்டு இருந்தான். வீட்டுக்குப் போயி அத அவுத்துக் கொண்டு வந்து கைல வச்சிக்கிரலாம்னு எந்துருச்சான். ஆனா அவுகம்மை அவன உடல.

“ஏமா, நானு அந்தக் கோழிக் குஞ்சிய கவுத்தப் புடுச்சு இங்க கூட்டியாரட்டுமாம?”

“சும்மா கெடடா. இருக்குற வேதனைல இவந் தொல்ல வேற தாங்கமுடியல. போயி அந்தப் பிள்ளைகளோட வெளாடு. வீட்டுக்குப் போகாத. தெருஞ்சதா?”

சரின்னு தலையாட்டிட்டு பந்தலுக்கடில வெளாண்டுக்கிட்டு இருந்த மத்த பிள்ளைகளோட போயிச் சேந்துக்கிட்டான்.

அந்தா இந்தான்னு சாயந்தரம் ஆகிப்போச்சு. சனங்களும் அழுது, அழுது ஓஞ்சு போனாக. பார்வதிக்கு தொண்டையே கட்டிப் போச்சு. ப+ரணியோட அண்ணன் குமாரு கடைசியா வந்து சேந்தான். அவெ வரவும் தங்கச்சி மேல உழுந்து அழுத அழுகையப் பாத்துட்டு அம்புட்டுச் சனமும் மறுபடியும் கதறிக் கதறி அழுதாக. பொணத்தத் தூக்கிப் பாடைல வைக்கும்போது ஊரெ கதறுச்சு. ப+ரணியோட புருசனும் துக்கந்தாங்கமாட்டாமெ கதறிக் கதறி அழுதான். அவுகம்மெ பாடைக்குப் பின்னால தலவிரி கோலமா கத்திக்கிட்டே ஓடுனா.

“நாம்பெத்த மகளே…. போக வேண்டிய வயசுல நாங்கெடக்கேனெ… ஏ உசுரு போயிருக்கக் கூடாதா… வாழ வேண்டிய வயசுல உன்னைய வாரிக் குடுக்கனே… வாய்க்கு வாய் ஏமா ஏமான்னு வளைய வளைய வருவியேடி… நாம்பெத்த ராசாத்தி… என்னையும் சட்டுன்னு எடுத்துட்டு போயிருடி… ஏந்தங்கமே… ஏங் கடவுளே…”. சொல்லிக்கிட்டே தலைல தலைல அடுச்சுக்கிட்டு அழுதா.

நாலஞ்சு பொம்பளைக பின்னால போயி அவளப் புடுச்சு இழுத்துக்கிட்டு வந்தாக. அவுக வழக்கப்படி பொம்பளைக இடுகாட்டுக்குப் போகக்கூடாது. பால்பாண்டிய அவுகய்யா தூக்கிக்கிட்டுப் போனாரு. முனியாண்டி பாடைக்குப் பின்னால கடுக அள்ளித் தெளுச்சுக்கிட்டே போனாரு. பாடைல ஒரு ஓரத்துல காலு ரெண்டையும் கட்டித் தொங்கிக்கிட்டு இருந்த கோழிக்குஞ்சி இங்குட்டு அங்கிட்டும் ஆடிக்கிட்டு கியா கியான்னு கத்திக்கிட்டே போச்சு. அதப் பாத்த பால்பாண்டிக்கு ரொம்பா வருத்தமா இருந்துச்சு. அத அவுத்துக் குடுத்தா கைல எடுத்துக்குட்டுப் போகலாம்னு நெனச்சான். ஆனா அவுகய்யா அழுதுக்கிட்டு வாரதப் பாத்துட்டு அவங்கிட்ட எதுவும் கேக்கல. ஊர்ச் சனமே அழுதுக்கிட்டு இருந்தாலும் அவனுக்கு அந்தக் குஞ்சி அழுகுறதுதான் கவலையா இருந்துச்சு. தலகீழா தொங்கிக்கிட்டு இருந்த அதையே பாத்துக்கிட்டுப் போனான்.

இடுகாடு வந்ததும் ஏற்கனவே வெட்டியான் வெட்டி வச்சிருந்த குழிக்குள்ள பொணத்த எறக்குனாக. குழிக்குள்ள நின்ன வெட்டியான் பொணத்த சரியா உள்ள வச்சான். மேல நின்னவுக அவங்கிட்ட இப்பிடி வை, அப்பிடி வைன்னு ஆளாளுக்குக் கோளாறு சொல்லிக்கிட்டு இருந்தாக. கடைசியா மொகத்தப் பாத்துக்கங்கன்னு சொல்லவும் ஆளாளுக்கு எட்டிப் பாத்தாங்க. கணேசனும் எட்டிப்பாத்துட்டு அழுதான். பால்பாண்டி கோழிக்குஞ்சையே பாத்துக்கிட்டு இருந்தான். சாமிக்கண்ணு தர்தா வெட்டியானப் பாத்து, கடைசி ஒருதடவ காதுல, கழுத்துல, ம{க்குல எதுனாச்சும் கெடக்குதான்னு பாத்துட்டு மூடுறான்னு சொன்னாரு. வெட்டியானும் பாத்துட்டு,

“ஒன்னுமில்ல சாமி, கழுத்துல ஒரு கருப்பு மணிதாங் கெடக்குது. அத எடுக்கவா?”ன்னு கேட்டாரு.

“அடிதன்னத்துக்குடா? கெடந்துட்டு போகுது உட்டுறு. சரி, மண்ணள்ளிப் போடு||. சொல்லிட்டு மொதல்ல மூனுதடவ அவரு கைட்ட மண்ணள்ளிப் போட்டுட்டு வந்தாரு. அடுத்தடுத்து மத்தவுக போட்டுட்டு வந்தாக. கடைசில வெட்டியான் மண்ணப் போட்டு குழிய மூடுனான். மூடுனப் பெறகு பாடைல டெந்த மாலைகள எடுத்து சமாதிமேல போட்டாக. அப்பத்தான் பாடைல கெட்டிக்கெடந்த கோழக்குஞ்சப் பாத்தாக. சாமிக்கண்ணு தாத்தா வெட்டியானச் சத்தம் போட்டாரு.

“ஏண்டா, குழிய மூடமுன்ன குஞ்சிய வச்சு மூடனும்னு தெரியாதாடா? இனி மூடுன குழியத் தெறக்கலாமாடா? என்னடா வேல பாக்குற? இத்தன வருசம் வெட்டியானா இருக்க. இருந்து என்ன பெரயோசனம்? சரி, சரி. மேலாக்க குழியத் தோண்டுனான்.

குஞ்சிய பாடைல இருந்து அவுக்கவும் சத்தம்போட்டு குஞ்சி கத்துச்சு. பால்பாண்டிக்கு அதப் பாத்து ரொம்பாப் பாவமா இருந்துச்சு. வெட்டியான் குஞ்சிய உசுரோட குழிக்குள்ள போட்டு பெதைக்கவும் குஞ்சி கியாக்கியான்னு பரிதாபமா அலறுச்சு. பால்பாண்டி கண்ணு கலங்குச்சு. எல்லாரும் அழுகைய நிறுத்திட்டு வீடுகளுக்குக் கௌம்புனாக. பால்பாண்டிமட்டும் அழுதுக்கிட்டெ வீட்டுக்கு வந்தான்.

may 2008