Pages

Tuesday, December 19, 2017

விலை - க.நா.சு, மனுசங்கடா நாங்க மனுசங்கடா - கவிஞர் இன்குலாப்


விலை - க.நா.சு

ஓ! ஓ! ஓ! ஓ!
இவனுக்குத் தேச பக்தி
நிறைய வுண்டு. தேசத்தை
விற்கும்போது
நல்ல விலை போகும்படிப்
பார்த்துக் கொள்வான்
இவனுக்குத் தேச பக்தி
நி-றை-ய வுண்டு.
ஓ! ஓ! ஓ! ஓ!


Thanks Payon
மனுசங்கடா நாங்க மனுசங்கடா - கவிஞர் இன்குலாப்


உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா


எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா - அட
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா


உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்

குளப்பாடி கிணத்துத் தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாய்ச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது

சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க — டேய்


மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா"



ஜீவ காருண்யம் - 1

நகராத சண்டிமாட்டை
நகர்த்த
குச்சியை ஓங்கினான் குப்பன்
அங்கு
சர்ரென்று நின்ற காரிலிருந்து
தோள் வரை தெரியும்
கையொன்று நீண்டது.

தொடைபோல் ஆடும்
தொங்குசதைக் கைகள்

“அடிக்காத மாட்டை
எஸ்.பி.சி.ஏக்கு
போன் பண்ணுவேன்
போலீஸ் வரும்”

அவளைப்போலவே கனத்த சத்தம்
போலீஸ் தடிக்குப் பயந்த குப்பன்
மூன்றாவது மாடாய்
வண்டியை நகர்த்த
ஜீவகாருண்ய ஜெயக்கொடி
நாட்டி
காரும் தூசிப்
படலத்தில் மறைந்தது.



ஜீவ காருண்யம் - 2

கிளி ஜோஸ்ய கிருஷ்ணமூர்த்தி
ஐம்பது ரூபாய் அபராதம் செலுத்தினான்.

“கிளியின் கூண்டு ரொம்பச் சிறுசு
இறக்கையைச் சரியாய் விரிக்க வராது
காற்றோட்டம் சரியாய் இல்லாததால்
மூச்சுத் திணறிச் சாகக் கூடும்”

கூண்டும் போயி ...
கிளியும் போயி
பிளாட்பாரத்தில்
கிருஷ்ணமூர்த்தி
ஒட்டிய வயிற்றோடு
குப்புறக் கிடக்கிறான்.


கவிஞர் இன்குலாப்