Pages

Sunday, March 18, 2018

கல்யாணி இருந்த வீடு – எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதை

https://archive.org/download/KalyaniIrundhaVeedu/Kalyani-Irundha-Veedu.pdf

கல்யாணி இருந்த வீடு – எஸ். ராமகிருஷ்ணன் சிறுகதை


பயனற்றது என்று முடிவாகிப் போனது. வெடிப்புகளும் வானமும் தெரியும் அந்த வீட்டின் பின்புறச் சுவர் இடிந்து விழுந்தே போனது.

பல தடவை பேசிய அந்த விஷயம் நொடியில் முடிவாகிப் போனது. இன்னமும் மழைக்காலம் கூட வரவில்லை. காற்று மாறி விட்டது. எல்லையற்ற பெரும் வெளியில் காற்று சுழல்வதைப் பார்க்க முடிகிறது அவளால்.

நேற்றிரவே அப்பா சொல்லிவிட்டார்.

''வீட்டை வித்துட்டேன். ரொம்பவும் கொறஞ்ச விலைக்குத் தான். பழசு பாரு... பேசாம பாண்டியன் நகர் பக்கமா போயிருவோம். வெள்ளிக்கிழமை இடிக்க வருவாங்க. அதுக்கு முன்னே காலி பண்ணணும்.”

அம்மா சத்தமில்லாமல் எப்போதும் போலவே வேலையில் இருந்தாள். சமையல் அறையில் அலையும் குருவியைப் போல அவள் அந்த இருட்டோடு பழகிப் போய் விட்டாள். அப்பா இரவில் வெளியே படுத்துக்கொண்டார். அவருக்குக் கட்டிலை எடுத்துப் போட்டுவிட்டு வரும்போது பார்த்தாள். அப்பாவின் முகம் மாறிப் போய்விட்டது.

"கல்யாணி! தீப்பெட்டி எடுத்துட்டு வாம்மா” அவர் கையில் பீடி இருந்தது. குச்சியைக் கொளுத்தும்போது முகத்தில் மஞ்சள் படர்ந்து மறைந்தது. அவர் பீடி குடிப்பதைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

அப்பாவின் கல்யாண போட்டோ இன்னும் தொங்குகிறது வீட்டில். மஞ்சள் நிறச் சட்டையும், கலைந்து போன விபூதி

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் * 51

________________

குங்குமத்துடன், புதுசான மனைவியுடன் நிற்கும் போட்டோ . அம்மா, சாந்தி அக்காவைப் போன்ற அதேவிதமாக சுருளான தலைமுடியுடன் சாந்தமாக நிற்கிறாள்.

முன்பெல்லாம் அந்த போட்டோவை வைத்து விளையாடு வார்கள். வீடெங்கும் பெண்கள் அப்போது. அப்பாவுக்கு ஏன் ஆண் குழந்தைகளே இல்லை எனத் தெரியவில்லை. அவளைத் தவிரவும் மற்ற நான்குமே பெண்கள்தான். சந்திரா, ராணி இரண்டு பேரும் அப்பாவின் பிம்பங்கள். அம்மாவைப் போல் சாந்தி, பிரபா. கல்யாணிக்கு தான் யாரைப் போல என்று தெரியவில்லை .

அம்மாவின் ஜாடையைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்வார்கள். எப்பவாவது அப்பாவை அந்த போட்டோவோடு ஒப்பிட்டுச் சிரிப்பார்கள். வீட்டின் சுவர்களோடு சேர்ந்து போகும் அந்தச் சிரிப்பு.

வீடு ரொம்பவும் சின்னதாயிருந்தது. சமையல்கட்டைத் தவிர ஓர் அறையும் ஒரு ஹாலும் மட்டுமே உண்டு. வீட்டின் முன்னால் அப்பா சைக்கிள் நிறுத்த ஓர் இடம். அந்த அறைக்குள் எப்போதும் மாறாத மணம் இருக்கும். அது திறந்து வைத்திருந்த பவுடர் டின்னில் இருந்தா அல்லது சோப்பைப் பிரித்து விட்டு வைத்திருக்கும் டப்பாவில் இருந்தா எனத் தெரியவில்லை.

எப்போதுமே அந்த வீடு ஒழுகிக்கொண்டுதான் இருக்கும். மழை பெய்தால் ஒரு வழியாக அடுப்படியில் தண்ணீர் இறங்கும். யாராவது பாத்திரத்தை எடுத்து வைப்பார்கள். பாத்திரத்தில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும். தண்ணீர் நிறைந்து பாத்திரத்தில் வழியும்போது பின்கதவைத் திறந்து, வெளியே ஊற்றுவார்கள்.

கதவில் சாய்ந்திருக்கும் அவளுக்குப் பின்னால் எப்போதாவது அம்மாவின் கை இருக்கும். அம்மாவின் கையை எடுத்து வைத்துக்கொள்வாள். ஈரத்தில் உழன்றதால் குளிர்ந்து போயிருக்கும் விரல்களைப் பிடித்துச் சொடுக்குவாள். அம்மாவிடம் இருந்து சிரிப்பு வரும். கார்த்திகையின்போது, வீட்டில் நிறைய விளக்குகள்... பள்ளியில் இருந்து வரும்போது சங்கில் செய்த விளக்கு வாங்கி வந்திருந்தாள் சந்திரா.

52 எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்

________________

அந்த விளக்கை வாசலுக்கு எதிரில் சந்திராவே பொருத்தி வைத்தாள். அன்றைக்குத்தான் மாமா வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் பிரபா அறைக்குள் போய்விட்டாள். மாமா ரொம்பவும் ஒல்லியாக இருந்தார். அம்மாவின் அதே சாயல் முகத்தில். சிரிக்கும்போது அது முழுவதும் தெரியும். வேஷ்டியும் முழுக்கைச் சட்டையும் போட்டிருப்பார்.

மாமாவோடு வீட்டின் பின்புறம் அவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சந்திரா, பிரபா இரண்டு பேரும் அடுப்படியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அன்றைக்கு வானம் ரொம்பவும் அழகானதாக இருந்தது.

சாப்பிடப் போகும்போது மாமா அம்மாவிடம் சொன்னார்:

''அம்மா உன்னை வீட்டுக்கு வரச் சொன்னா.''

''எதுக்கு ?''

மாமா பேசாமல் இருந்தார். கல்யாணியைத் தவிர அந்த இடத்தில் யாருமில்லை. மாமா தலையை உசும்பிக்கொண்டு சொன்னார்:

''கல்யாணம் பத்திப் பேச...''

''அதுக்கு அவர் இல்ல வரணும். நான் எதுக்கு?'' ''அது இல்லேக்கா. நான் வேற பொண்ணு பாத்திருக்கேன். அம்மாவும் சரின்னு சொல்லிட்டா.''

அம்மா பேசாமல் இருந்தாள். பிறகு கேட்டாள்:

''அப்போ பிரபா?''

இரண்டு பேரும் பேசாமல் இருந்தார்கள். பிரபா அறைக்குள் சுவரை ஒட்டினாற் போல் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள். கல்யாணியும் அவளை ஒட்டினாற்போல் உட்கார்ந்து கொண்டாள். கல்யாணியின் மேல் சாய்ந்து அழுதாள்.

அவள் அழுவதைக் கல்யாணியால் தாங்க முடியவில்லை. அவள் தலையைத் தடவினாள். பிரபா அழுத இடம் சுவரில் தெரிந்தது. பிரபா உடல் குலுங்க அழுதுகொண்டிருந்தாள். மாமாவின் முகம் கதவைத் தள்ளிக்கொண்டு தெரிந்தது.

எஸ். ராமகிருஷ்ண ன் கதைகள் - 53

________________

மாமா ஏதாவது சொல்ல வேண்டும் என நினைத்தார். ஆனால், அவரால் முடியவில்லை. மவுனமாக நின்று கொண்டிருந்தார். சந்திரா பக்கெட்டை ஒட்டி உட்கார்ந்து இருந்தாள். மாமா அந்த அறையை விட்டுப் போகும்போது பிரபா சத்தமாக அழுதாள்.

அவள் பிரியத்தின் விடாத மூச்சு இன்னமும் ஏங்கி விம்மியது. மாமா சாப்பிடாமலே போய்விட்டார். எல்லோரும் அப்படியே இருந்தார்கள். எல்லா விளக்குகளையும் எடுத்து வைத்துவிட்டுத் தான் கல்யாணி படுக்க வந்தாள். அன்றைக்கு வீடு புது ரூபத்தில் இருந்தது. எல்லா அறைகளிலும் மவுனம் நிறைந்து போயிருந்தது. அந்த அறையே ஆள்களற்றுப் போய் இருந்தது.

அந்த இரவில் வீட்டில் எல்லோரும் தூங்கியது போல இருந்தார்கள். நடு இரவுக்குப் பிறகுதான் அப்பா வந்தார். அம்மா கோபப்படாமல் இருந்தாள். அதற்குப் பின் பிரபாவுக்கு ரொம்ப நாட்கள் ஆனபின்பே கல்யாணமானது.

அம்மா சாமான்களை எடுத்து வைக்க ஆரம்பித்திருந்தாள். பரணில் துணி போட்டு மூடியிருந்த சாமான்களைத் தரையில் எடுத்துப் பரப்பியிருந்தார்கள். பித்தளைக் குடங்கள், பானை, சின்னப் பாத்திரங்கள் என நிறைய இருந்தன. கல்யாணி பின்கட்டில் இருந்தவற்றை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். பின்கட்டில் சமையல் கூடத்துக்குள் இது வரை அணையாமல் எரிந்து கொண்டிருந்த அந்த விளக்கை அணைத்தாள்.

எப்போதும் அடுப்புக்குள் ஒட்டிய ஆணியில் அந்த விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அடுப்பை ஒட்டிய அலமாரியில் நிறைய டப்பாக்கள் இருந்தன. எல்லாம் பெரிய அக்காவின் குழந்தைக்குப் பால் பவுடர் வாங்கிய டப்பாக்கள். பல டப்பாக் களில் ஒன்றுமேயில்லை. பெரிய குழந்தை படம் போட்ட டப்பா ஒன்று மட்டும் அவளுக்குத் தெரிந்ததிலிருந்து இன்னமும் இருக்கிறது. அநேகமாக அந்த டப்பாவைத்தான் எல்லோரும் தேடுவார்கள். அதில் ஏதாவது தின்பண்டம் நிச்சயம் இருக்கும். எப்பவாவது யாருக்காவது வாங்கியதில் உதிர்ந்து போன திராட்சைத் துண்டுகள் டப்பாவின் அடியில் ஒட்டிப் போயிருக் கும். அவளுக்கு மட்டும் ஒரு தரம் நிறைய திராட்சைகள் வாங்கித் தந்தார்கள்.

அவளுக்குப் புருவத்தை ஒட்டி அடிபட்டிருந்தது அப்போது. சேகர் என்ற அந்தப் பையன் தள்ளியதில் ஏற்பட்டது.

54  எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்

________________

பள்ளிக்கூடத்தின் விரிந்த பிரேயர் ஹால், போர்டு எல்லாம் அன்றைக்குப் போலவே இப்போதும் நினைவிருந்தது.

''கல்யாணி... பேரை அம்மா வெச்சா...''

"நன்னாத்தான் இருக்கு.” அந்தப் பையன் சில தடவை அருகில் வரும்போது துளசி வாடையடிக்கும். அவனைக் கிள்ளினால் கூட எதுவும் சொல்ல மாட்டான். கோயிலை ஒட்டிய தெப்பத்தில் விளையாடுவார்கள். அன்றைக்கும் விளையாடும் போது அவன் தள்ளியதால்தான் காயம் ஏற்பட்டது. பாசி படர்ந்து போயிருந்தது. சில தண்ணீர்க் கொடிகள் சுற்றிக்கொண்டன காலை. தள்ளிவிட்டு அவன் ஓடிப் போய் விட்டான்.

படுத்திருந்த அவளுக்குத் திராட்சை வாங்கித் தந்தார்கள். இரண்டு நாள்களுக்குப் பிறகு அவள் வீட்டுக்கு அவன் வந்தான்.

''கல்யாணி. கல்யாணி'' மெதுவாகக் கூப்பிட்டான்.

அவள் சிரித்தாள். அவன் அருகில் வந்து அவள் கன்னத்தை, நெற்றியைத் தொட்டான்.

''காய்ச்சலா? அம்மா உள்ளே வந்து எட்டிப் பார்த்துப் போனாள். அவன் உட்கார்ந்தவாறே பேசிக்கொண்டிருந்தான். அவள் டப்பாவில் இருந்து திராட்சையை எடுத்துக் கொடுத்தாள். வாயில் ஒதுக்கிக்கொண்டான். கன்னத்தில் மேடு. அவன் போன பின்பும் அந்த இடத்தைப் பார்க்கும்போது அவன் ஞாபகம் வந்தது. அவனைத் திரும்பப் பார்க்கவேயில்லை அவள்.

சாமான்களை மூட்டை கட்டி வைத்து விட்டு ஓரமாக விரித்து அந்த இரவில் எல்லோரும் படுத்தார்கள். கல்யாணி சுவரை ஒட்டிப் படுத்துக் கொண்டாள். தரை சில்லென்று இருந்தது. ஜன்னலுக்கு வெளியே வானம் தெரிந்தது. அவள் அழ வேண்டும் என விரும்பினாள். முடியாமல் போய் யோசித்தவாறே படுத்துக் கிடந்தாள். ரொம்ப நேரத்துக்குப் பிறகு யாரோ மெதுவாக அழும் சத்தம் கேட்டது. அவள் திரும்பிப் பார்க்காமல் படுத்தே கிடந்தாள். சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் 0 55